1991 - 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
23 நிமிட வாசிப்பு

1991 – 2009: ஈழப்போரின் சர்வதேசப் பரிமாணமும் ஆயுதப் போராட்டத்தின் முடிவும் – பகுதி 3

September 11, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

ஆனையிறவு முற்றுகைச் சமர்

ஓயாத அலைகள் மூன்றில் நான்காவது கட்டமாக அமைந்த ஆனையிறவுச் சமரானது வன்னிப் பெருஞ்சமர்கள் எல்லாவற்றுக்கும் சிகரமாக அமைந்தது. இராணுவத்தினரின் ஆனையிறவுப் பெருந்தலத்தின் புவியியல் கட்டமைப்பு, அதன் படைவலு, ஆயுதவலு, அதன் கேந்திர முக்கியத்துவம் ஆகியவற்றை நன்கு பரிசீலனை செய்து ஒரு நுட்பமான தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனையிறவுச் சமர் ஒரு முற்றுகைச் சமராகவே நெறிப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு அமைவாக ஓயாத அலைகள் மூன்றின் மூன்றாம் கட்டம் முடுக்கிவிடப்பட்டது. இத்தாக்குதல் திட்டத்தின் முதற்கட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஆனையிறவின் பாதுகாப்புத் தூண்களாக அதன் தென்கிழக்குப் பிராந்தியத்தில் அமைந்திருந்த படைத்தலங்களைத் தாக்கி அழித்து, அப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டதால் முற்றுகைத் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் நிறைவடைந்தது. அடுத்த கட்டமாக ஆனையிறவின் பலம் பொருந்திய முன்கவசக் கோட்டைகளாக அமைந்திருந்த பரந்தன், உமையாள்புரம், பிரிகேட் படைத்தலங்களைத் தாக்கியழிப்பதுதான் திட்டமாக இருந்தது. இச்சமர்முனைக்கான கட்டளைத் தளபதியாக கேணல் தீபன் நியமிக்கப்பட்டார். 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் நாள் பரந்தன் – உமையாள்புரம் சமர் வெடித்தது. பீரங்கி – மோட்டார் அணிகளின் ஆதரவுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் மாலதி படையணியும் இணைந்த படைத்தொகுதி இந்த முனைகளில் நேராக ஏ-9 வீதியூடாகவும், பக்கவாட்டாக பரந்தன் – முல்லை வீதியூடாகவும் முன்னேறின. பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகிய சமர் அடுத்த நாள் காலை வரை ஓயாது தொடர்ந்தது. இராணுவப் படையணிகளும் தமது நிலையிலிருந்து மூர்க்கமாகப் போரிட்டன.

டிசம்பர் 27ஆம் நாள் மீண்டும் சமர் வெடித்தது. புலிகளின் படையணிகள் மும்முனைகளிலிருந்தும் உமையாள்புரம், பிரிகேட் தலைமையகம் நோக்கி முன்னேறின. 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26ஆம் நாள் பிற்பகல் ஆனையிறவு இறுதிச் சமருக்கான நகர்வு ஆரம்பமானது. உயர்கடலில் இலங்கைக் கடற்படையின் கட்டளைத் தாய்க்கப்பல் வழிநடத்த, 16 ‘டோரா’ பீரங்கிப் படகுகள் கடற்சமரில் களமிறங்கின. இராணுவத்தின் பீரங்கிச் சண்டைப் படகுகள் முன்னேறி தரையிறக்கப் படகுகளைத் தாக்கவிடாதவாறு வியூகம் அமைத்துக் கடற்புலிகளின் தாக்குதல் அணிகள் போரிட்டன.

29ஆம் நாள் அதிகாலை 3 மணிக்கு புலிகளின் படையணிகள் இருமுனைகளில் மூர்க்கமாக மோதி முன்னேறின. புலிப்படையின் வீராவேசத் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத எதிரிப் படைகள் பின்வாங்கிச் சிதறியோடின. செம்பியன்பற்று, மருதங்கேணிப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இத்தாவில் பகுதியில் புலிப்படையின் பலத்தையும் சுடுகலச் சக்தியையும் மனோதிடத்தையும் கணிப்பீடு செய்து பார்க்கவே இந்த ஊடுருவல் தாக்குதல் நடத்தப்பட்டது. புலிகளின் போர்வலுவை மதிப்பீடு செய்துகொண்ட இராணுவம் பெரும் எடுப்பிலான படை நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்டது. விமானங்கள் குண்டு பொழிய, பீரங்கி – மோட்டார் சூட்டாதரவுடன் யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள் சகிதம் பெரும் எடுப்பில் மார்ச் 30ஆம் நாளன்று இராணுவம் மேற்கொண்ட தீவிரமான தாக்குதலுக்கு இம்முறையும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படை முகங்கொடுத்தது. மார்ச் 31ஆம் நாள் யாழ்ப்பாணத்திலிருந்து டாங்கிகள், கவச வாகனங்களுடன் முன்னேறிவந்த எதிரிப் படைகளை கண்டி வீதியில் வைத்து வழிமறித்தனர் சோதியா படையணிப் போராளிகள். பல மணி நேரமாக நடைபெற்ற உக்கிரமான சண்டையின் பின்பு இராணுவப் படையணிகள் பின்வாங்கின. 

ஏப்ரல் 2ஆம் திகதி ஒரு புதிய தந்திரோபாய நகர்வுடன் தனது அசுர பலத்தைப் பிரயோகித்துப் புலிகளுடன் பொருதியது இராணுவம். ஆனையிறவிலிருந்து ஒரு படைத்தொகுதியும் யாழ்ப்பாணத்திலிருந்து இன்னொரு படைப்பிரிவுமாக ஒரே சமயத்தில் இத்தாவிலில் அமைந்த புலிகளின் வலயத்தை உடைக்க முயன்றன. யுத்த தாங்கிகள், கவச வாகனங்கள் சகிதம் இத்தாவில் வலயத்திற்குள் புகுந்த அரச படையணிகள் புலிப்போராளிகளின் ஒரு பகுதியைச் சுற்றிவளைத்து முற்றுகையிட முனைந்தன. எதிரியின் தந்திரோபாய நகர்வை ஊகித்தறிந்த வீரர்கள், சண்டைகளை நிகழ்த்தி அத்திட்டத்தை முறியடித்தனர்.

ஏப்ரல் 4ஆம் திகதி மீண்டும் இத்தாவிலில் புலிகளின் நிலைகள் மீது ஆக்ரோஷமான தாக்குதல் தொடர்ந்தது. கடைசி முயற்சி போன்று ஆனையிறவு படைமுகாமிலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் படையணிகளை நகர்த்தி, ஒரே நேரத்தில் இத்தாவில் மீது படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. ஆனையிறவிலிருந்து முன்னேறிய பிரதான படையணியை கேணல் விதுஷாவின் தலைமையிலான மாலதி படையணியைச் சேர்ந்த போராளிகள் எதிர்கொண்டு தாக்கினர். ஏப்ரல் 22ஆம் திகதி முற்றுகைச் சமரின் இறுதி நாளன்று ஆனையிறவின் அனைத்துப் பாதைகளையும் அடைத்து மூடி, இயக்கச்சித் தலத்தை நோக்கி புலிப்படை முன்னேறியது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி காலை 9 மணியளவில் ஆனையிறவு மீட்கப்பட்ட வெற்றிச் சின்னமாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. வரலாற்றுப் புகழீட்டிய ஆனையிறவுச் சமரின் ஒருங்கிணைப்புக் கட்டளைத் தளபதி கேணல் பானு, சமர்முனைத் தளபதிகள், போராளிகள் புடைசூழ கொடியை ஏற்றிவைத்தார்.

எவராலும் வெற்றிகொள்ள முடியாத பலம் பெற்றது என அமெரிக்க இராணுவ நிபுணர்களால் கருதப்பட்ட ஆனையிறவுக் கூட்டுப் படைத்தலம் புலிகளிடம் வீழ்ச்சியடைந்தமை விடுதலைப் போரியல் வரலாற்றில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனையிறவில் புலிகள் ஈட்டிய வெற்றியுடன் படைவலு மேலாதிக்கத்தை இலங்கை இராணுவம் இழந்தது. இராணுவச் சமச்சீர் வலுநிலையை புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது.

நோர்வேயின் சமாதான முயற்சி

2000ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நோர்வே சமாதானத் தூதுவர்களுக்கும் மத்தியிலான சந்திப்பு நிகழ்ந்தது. வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அமைந்திருந்த மல்லாவியில் நிகழ்ந்த இச்சந்திப்பில் நோர்வே அரசு சார்பில் நோர்வேயின் விசேட தூதுவர் திரு. எரிக் சூல்கைம், கொழும்புக்கான நோர்வே தூதுவர் திரு. ஜோன் வெஸ்ட்போர்க், நோர்வே வெளிவிவகார அமைச்சின் நிர்வாக அலுவலர் சிறீமதி ஜெர்ஸ்டி ரோம்ஸ்டல் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரபாகரனுக்கு உதவியாக கேணல் சங்கரும், அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. தமிழ்ச்செல்வனும் இச்சந்திப்பில் பங்குபற்றினர்.

தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்குச் சமரசப் பேச்சுகள் மூலம் ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கு புலிகள் இயக்கம் தயாராக இருக்கிறது என நோர்வேத் தூதுவர்களிடம் பிரபாகரன் விளக்கினார். ஆனால் சந்திரிகாவின் அரசாங்கமோ இராணுவ வழிமுறையைக் கையாண்டு யுத்தத்தைத் தீவிரப்படுத்தி, தமிழர் தாயகத்தை அடிமைகொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறது என்பதையும் விளக்கினார். வன்னியிலிருந்து திரும்பிய நோர்வே சமரசக் குழு ஜனாதிபதி சந்திரிகாவைக் கொழும்பில் சந்தித்து பிரபாகரனின் கருத்தையும் நிலைப்பாட்டையும் தெரிவித்த போது, பேச்சுவார்த்தைக்கு முன்பாகப் போர் நெருக்கடியைத் தளர்த்தும் யோசனைக்கு அவர் சாதகமாகப் பதிலளிக்கவில்லை.

‘மனிதாபிமான புரிந்துணர்வு உடன்படிக்கை’ என்ற தலைப்பைக் கொண்ட இந்தத் திட்ட வரைவு ஆவணங்களின் பிரதிகளை இலங்கை அரசாங்கத்திடமும் புலிகள் இயக்கத்திடமும் நோர்வே அரசு கையளித்தது. அந்தத் திட்ட வரைவின் உள்ளடக்கங்கள்:

  1. போர் உபகரணங்கள் அல்லாத பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்படுவதை உறுதிப்படுத்தல்: மடு ஊடான பாதை வழியாகப் பொருட்கள் தாராளமாக அனுப்பப்படுவதற்கு வழிவகை செய்வதுடன், நெடுஞ்சாலையில் – வவுனியாவுக்கு வடக்கே – புதிய பாதை ஒன்றைத் திறந்து, இரு பாதைகள் வழியாகவும் பொருட்களைத் தாமதங்களின்றி அனுமதிக்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்யும். போர்ப் பாவனைக்கு அல்லாத பொருட்கள் வன்னிக்கு அனுப்பப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், அவை சாதாரண பொது மக்களைச் சென்றடைவதையும் புலிகள் இயக்கம் மேற்பார்வை செய்யும்.
  2. பொது மக்களை இலக்கு வைக்கும் தாக்குதல்களைத் தவிர்த்தல்: கொலைகள், குண்டுத் தாக்குதல்கள், நாசவேலைகள், அரசியல் குழுக்களையோ அல்லது தனிநபர்களையோ மிரட்டும் வன்முறைகள் போன்ற அனைத்துச் செயற்பாடுகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையை மீறும் செயல்களாகக் கொள்ளப்படும்.

புரிந்துணர்வு உடன்படிக்கைத் திட்ட வரைவின் யோசனைகளைத் தாங்கள் முழு மனதோடு பரிசீலித்து வருவதாகப் புலிகள் இயக்கம் நோர்வே அரசுக்கு அறிவித்தது. ஆனால் நோர்வேயின் முயற்சிகளுக்குப் பதில் அளிப்பதைச் சந்திரிகா அரசாங்கம் தாமதப்படுத்தியது.

தீச்சுவாலைச் சமர்

புலிகளின் நான்கு மாத காலப் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே யாழ் குடாநாட்டின் தென்முனையிலிருந்த புலிகளின் முன்னரங்கப் போர் அரண்களை நோக்கிப் பாரிய அதிரடிப் படையெடுப்பு ஒன்றை இராணுவத் துருப்புகள் தொடுத்தன. இலங்கையின் முப்படையினரும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட போர்த் திட்டத்தோடு இந்தத் தாக்குதற் படையெடுப்பிற்காகக் குவிக்கப்பட்டிருந்தனர். ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலைப் பொழுதில் இலங்கைத் தரைப்படையின் 52, 53, 55 ஆவது சிறப்புத் தாக்குதல் பிரிவுகளைச் சேர்ந்த 12,000 படையினர் கிளாலி – முகமாலை – நாகர்கோவில் நெடுங்கோட்டில் இருந்த புலிகளின் முன்நிலை அரண்கள் மீது பல்முனைத் தாக்குதலைச் செய்தனர். இராணுவத்தினர் மூர்க்கத்தனமாகப் பாவித்த அந்தப் பிரம்மாண்டமான சுடுகலச் சக்திக்கு ‘தீச்சுவாலை’ என்று பெயரிட்டனர். புலிகளுக்கு எதிராக இலங்கைப் படையினரால் எடுக்கப்பட்ட கடைசிப் படையெடுப்பு இந்தத் தீச்சுவாலை நடவடிக்கை. ஆனால் புலிகள் எதிர் தாக்குதல் நிகழ்த்தி இதனை முறியடித்தனர்.

இந்தச் சமரின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் தனது இராணுவ வழிமுறைக் கொள்கையைக் கைவிட வேண்டிய நிலைக்குச் சந்திரிகா அரசாங்கம் தள்ளப்பட்டது. இருந்தபோதும், நோர்வே அரசால் முன்வைக்கப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான நகல் திட்டத்தைச் சாதகமாகப் பரிசீலிக்கவோ அல்லது புலிகளுடன் ஒரு சமரசப் பேச்சுவார்த்தையை நிபந்தனையின்றித் தொடங்கவோ அரசு விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில்தான் மிகப் பாரதூரமான பின்விளைவுகளை ஏற்படுத்திய ஒரு பேரழிவை இலங்கை அரசாங்கம் சந்தித்தது.

கட்டுநாயக்கா விமானப் படைத்தலத் தாக்குதல்

இது 2000ஆம் ஆண்டு யூலை 24 அன்று புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட ஒரு தாக்குதலாகும். கட்டுநாயக்கா விமானப் படைத்தலத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக்கொண்டிருந்த புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்பதும், அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும்பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலை வடிவமைத்தவர்கள் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோராவர்.

  1. 2000 யூலை 23 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு 14 கரும்புலி உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.
  2. 2000 யூலை 23 திங்கட்கிழமை இரவு 9:45 மணியிலிருந்து 11:15 வரை அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
  3. 2000 யூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.
  4. 2000 யூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தலத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.
  5. 2000 யூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடித்தது.

இலங்கை அரசின் கூற்றுப்படி, அழிக்கப்பட்ட விமானங்கள் 14 ஆகும். புலிகளின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ஈழநாதத்தின் கூற்றுப்படி, அழிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 28 ஆகும். சார்பற்ற அறிக்கை ஒன்றில், 26 விமானங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமாக்கப்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.

முற்றிலுமாக அழிக்கப்பட்டவை:

• இரண்டு A-340-300 பயணிகள் விமானங்கள்
• ஒரு A-330-200 பயணிகள் விமானம்
• நான்கு ‘கிபிர்’ போர் விமானங்கள்
• மூன்று K-8 பயிற்சி விமானங்கள்
• இரண்டு MIG-27 ‘ஜெட்’ போர் விமானங்கள்
• இரண்டு Bell 412 உலங்கு வானூர்திகள்
• இரண்டு VVIP 412 உலங்கு வானூர்திகள்
• இரண்டு MI-17 உலங்கு வானூர்திகள்

சேதப்படுத்தப்பட்டவை:

• இரண்டு A-320 பயணிகள் விமானங்கள்
• ஒரு A-340 பயணிகள் விமானம்
• ஒரு Antonov போக்குவரத்து விமானம்
• ஒரு MI-24 உலங்கு வானூர்தி
• ஒரு Bell 412 உலங்கு வானூர்தி
• நான்கு ‘கிபிர்’ போர் விமானங்கள்

இத்தாக்குதலின் மூலம் அரசுக்குச் சொந்தமான சுமார் 375 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சொத்துகள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் புதிய ஆட்சியமைப்பு

2001ஆம் வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு சமரசத் தீர்வு காண்பது, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவது என்பனவே அத்தேர்தல் பிரசாரத்தின் மையக் கருத்துகளாக அமைந்தன. ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தை நிலைநாட்டவும், விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுகளை நடத்தவும் சிங்கள மக்களிடம் ஓர் ஆணையைக் கேட்டது.

தமிழ்த் தேசிய இனச் சிக்கலுக்கு சமரசத் தீர்வு கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான அமோக ஆணையைப் பெற்று அந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்ட, ரணில் விக்ரமசிங்க நாட்டின் புதிய பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அவ்வாறு பதவியேற்றுக் கொண்டவுடன் நோர்வேத் தூதுவர் வெஸ்ட்போர்க்கைச் சந்தித்து, விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுகளில் ஈடுபடுவதற்கான தனது அரசாங்கத்தின் விருப்பத்தைத் தெரிவித்தார். அனுசரணைப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து, தனது அரசுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் பேச்சுகளை நிகழ்த்துவதற்கான முயற்சியை ஆரம்பிக்குமாறு நோர்வே அரசாங்கத்தை வேண்டிக்கொண்டார். அத்தோடு, நோர்வேத் தூதுவர் ஊடாகப் புலிகளின் தலைமைக்கு அனுப்பிவைத்த ஒரு தகவலில், “தமிழ் மக்களின் குறைகளைத் தீர்த்து, அவர்கள் நிம்மதியான வாழ்வுக்கு மீளத் திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தனது அரசாங்கம் விரைந்து மேற்கொள்ளும்” என்று ரணில் தெரிவித்திருந்தார்.

இந்தப் புதிய அரசாங்கத்திற்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக, 2001ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒரு மாத கால யுத்த நிறுத்தம் ஒன்றை ஒருதலைப்பட்சமாக அறிவித்த புலிகள் இயக்கம், அதற்குச் சாதகமாகப் பதிலளிக்குமாறு ரணிலின் ஆட்சியிடம் கோரியது.

பரஸ்பரமாக இணங்கப்பட்ட போர் நிறுத்தம்

இருதரப்பும் இணங்கிய ஒரு போர் நிறுத்தம் உருவாக்கப்பட வேண்டிய இன்றியமையாத் தேவையை ஏற்றுக்கொண்ட புலிகளின் தலைமை, ஒழுங்கமைக்கப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றிற்குரிய அதிகாரங்கள், கட்டுப்பாடுகள், வரையறைகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்தது. அத்தோடு, பரஸ்பர இணக்கப்பாட்டுடன் கூடிய போர் நிறுத்தம் ஒன்றை உருவாக்கும் வேலைத்திட்டத்திற்கான தமது தரப்பின் யோசனை வரைவு ஒன்றை அரசாங்கத் தரப்பினரின் பரிசீலனைக்குச் சமர்ப்பிக்க இருப்பதாகவும் நோர்வே தரப்பினரிடம் தெரிவித்தது. மேலும், இரு தரப்பினரும் சேர்ந்து, நோர்வேயின் துணையுடன் ஒரு பொதுப் போர் நிறுத்த ஒழுங்கமைப்பை உருவாக்கும் வரைக்கும், அனைத்துச் சுற்றிவளைப்பு, தேடுதல், கைது மற்றும் கள நடவடிக்கைகளையும் அரசாங்கம் இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்றும் புலிகள் யோசனை தெரிவித்தனர். அத்தோடு, தமிழ் மக்கள் எதிர்கொண்டு நின்ற அநீதியை நீக்குவதிலும் சமத்துவமின்மையை அகற்றுவதிலும் புதிய அரசாங்கம் இதயசுத்தியுடன் இருக்கின்றது என்றால், தென்னிலங்கையில் சிங்களவர்களால் இலகுவில் பெறக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும் இலகுவில் பெறக்கூடியதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் புலிகள் இயக்கம் வாதிட்டது.

புலிகளின் இந்தக் கோரிக்கை பிரதம மந்திரிக்குத் தெரிவிக்கப்பட்டவுடன், பதில் நடவடிக்கை காலம் தாழ்த்தாது எடுக்கப்பட்டது. அனைத்துச் சுற்றிவளைப்புகள், தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளை அரசாங்கம் இடைநிறுத்தம் செய்கிறது என்று நோர்வே தரப்பினர் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு, நோர்வேயின் புரிந்துணர்வு உடன்படிக்கைத் திட்ட வரைவில் உள்ளதன்படி, 2002 ஜனவரி 15ஆம் திகதியில் இருந்து பொருளாதாரத் தடையை நீக்கி, அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழ் பகுதிகளுக்குத் தாராளமாக எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்தது.

சமாதானப் பேச்சுகளின் அங்குரார்ப்பணம்

2002 செப்டம்பர் 16ஆம் திகதி, தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஜொம் தைம்’ என்ற பட்டினத்தில் அமைந்திருந்த ‘அம்பாசிடர் சிற்றி’ என்ற பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் சமாதானப் பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. சர்வதேச ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள், தாய்லாந்து அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் எனப் பெருந்திரளானோர் அங்கு திரண்டிருந்தனர். அமைதி முயற்சி ஒன்றின் மீது உலக சமூகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பையும் நல்லெண்ண உணர்வையும் அந்த விடுதியின் வாசலில் குழுமி நின்றோரின் ஆர்வத்திலும் ஆர்ப்பரிப்பிலும் காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையின் அரச தரப்புப் பிரதிநிதிகளாக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மிலிந்த மொறகொட, ரவூப் ஹக்கீம், பெர்னாட் குணத்திலக்க ஆகியோரும் அவர்களது உதவியாளர்களும் இருந்தனர். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளாக அன்ரன் பாலசிங்கம், புலிகள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் விசுவநாதன் உருத்திரகுமாரன், பொருளாதார அபிவிருத்தி நிபுணர் ஜே. மகேஸ்வரன், புலிகளின் பேச்சுக் குழுச் செயலாளர் அடேல் பாலசிங்கம் ஆகியோர் இருந்தனர்.

முதல் கட்டப் பேச்சு

பிரதம அனுசரணையாளரான விடார் ஹெல்கிசன் பேச்சுக் குழுவிற்குத் தலைமை வகித்தார். இரு தரப்புக் குழுத் தலைவர்களும் மற்றைய பிரதிநிதிகளும் பேச்சு மேசையில் ஒருவரை ஒருவர் முகம்கொடுத்து எதிரெதிரே அமர்ந்திருந்தனர். பேச்சுக் குழுப் பிரதிநிதிகளுக்குப் பின்புறமாக, பேச்சுக் குழுக்களுக்கு உதவியாளர்களாக நிபுணர்களும் அரச அதிகாரிகளும் வீற்றிருந்தனர். எரிக் சூல்கைம், ஜோன் வெஸ்ட்போர்க், லீசா கோல்டன், தோமஸ் ஆகியோர் பிரதம அனுசரணையாளருக்கு உதவியாக அவருக்கு அக்கம்பக்கமாக அமர்ந்திருந்தனர். அதிகாரபூர்வமாகப் பேச்சுகளை ஆரம்பித்துவைத்த ஹெல்கிசன், பேச்சுகளின் நடைமுறை பற்றி விளக்கினார். பேச்சுகளின் நெறிமுறை, நிகழ்ச்சி நிரல் தயாரித்தல், தீர்மானங்களைப் பதிவு செய்தல், ஊடகவியலாளர்களைக் கையாளுதல் போன்ற நடைமுறைகள் பற்றி ஹெல்கிசன் முன்வைத்த விளக்கங்களை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட போதும், பேச்சு விதிகளும் நியமங்களும் இறுக்கமாக அமையக்கூடாது என்பதை அன்ரன் பாலசிங்கம் வலியுறுத்தினார். பேச்சுகளுக்கு வரம்புகளிட்டுக் கட்டுப்படுத்தக்கூடாது என்ற அன்ரன் பாலசிங்கத்தின் கருத்தைப் பேராசிரியர் பீரிஸ் ஆதரித்தார். பேச்சு நடைமுறைகள் இறுக்கப்படாமல் நெகிழ்வாக இருந்தால்தான் சுதந்திரமாகக் கருத்தாடுவது சாத்தியம் எனவும் பீரிஸ் கூறினார்.

பேச்சுகளின் அடிப்படையில், தமிழரின் தேசியப் பிரச்சினையை இரு பரிமாணங்களில் அணுகலாம் எனக் கூறப்பட்டது. அதனடிப்படையில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவசரகால ஜீவாதார மற்றும் மனிதாபிமானப் பிரச்சினைகள் ஒருபுறமும், இனநெருக்கடிக்கு மூலமான அடிப்படைப் பிரச்சினைகள் மறுபுறமும் என இரு பரிமாணங்களைக் கொண்ட அணுகுமுறை குறித்து ஆராயப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றியும் இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் பற்றியும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஒரு கூட்டுக் குழுவை நியமிக்கலாம் என அமைச்சர் மிலிந்த மொறகொட யோசனை தெரிவித்தார். ஓர் இடைக்கால நிர்வாக சபையை நிறுவும் அவசியம் பற்றியும் பாலசிங்கத்தினால் கருத்து முன்வைக்கப்பட்டது.

தமிழரின் பிரச்சினைகளைக் கையாள்வதில் இரு துருவங்களில் இருந்தும் அரசாங்கம் முட்டுக்கட்டைகளைச் சந்தித்தது. ஒன்று இலங்கையின் அரசியல் யாப்பு; மற்றையது ஜனாதிபதி ஆட்சி முறை. இவ்வாறாகத் தொடர்ந்த முதலாவது கட்டச் சுற்றுப் பேச்சில் பிரமாதமான சாதனைகள் எதுவும் எட்டப்படவில்லை என்றபோதும், பகை உணர்வு கொண்ட இருதரப்பினரும் கலந்துரையாடிப் பேசி, பழகி, புரிந்துணர்வையும் நல்லுறவையும் வளர்த்துக்கொள்ள இது களம் அமைத்துக் கொடுத்தது எனலாம்.

இரண்டாவது கட்டப் பேச்சுகள்

விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் மத்தியிலான இரண்டாம் கட்டப் பேச்சுகள் 2002 அக்டோபர் 3ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை, தாய்லாந்திலுள்ள பாங்காக் நகரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரபல உல்லாசப் பயணிகள் விடுதியான ‘றோஸ் கார்டனில்’ இடம்பெற்றது. விடுதலைப் புலிகளின் சார்பில் பிரதான பேச்சுக் குழுவின் புதிய பிரதிநிதிகளாக அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மட்டு-அம்பாறை விசேட தளபதியான முரளிதரன் (கருணா) போன்றோர் இணைந்துகொண்டனர். உருத்திரகுமாரனும், கலாநிதி மகேஸ்வரனும் நிபுணத்துவ ஆலோசகர்களாகக் கலந்து கொண்டனர். அரச தரப்புப் பிரதிநிதிகள் குழுவில் மாற்றம் நிகழவில்லை. இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோ, இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்தா கொட்டேகொட, இலங்கை முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அஸீஸ் ஆகியோர் அரச தரப்பு நிபுணத்துவ ஆலோசகர்களாகக் கலந்து கொண்டனர்.

இரண்டாம் கட்டப் பேச்சுகளை ஆரம்பித்து வைத்துப் பேசிய பேராசிரியர் பீரிஸ், பேச்சுகளின் முன்னேற்றம் குறித்து சர்வதேச சமூகம் திருப்தி அடைந்திருப்பதாகவும், சமாதான முயற்சிக்கு உலக நாடுகளின் முழு ஆதரவும் அணிதிரண்டு வருவதாகவும் தெரிவித்தார். சமாதான முன்னெடுப்புகளுக்கு உலகத்தின் நல்லாதரவு இருப்பதால், சமாதான வழிமுறையை மேலும் பலப்படுத்துவது அவசியம் எனவும் கேட்டுக்கொண்டார். அன்றைய முழுநாள் விவாதங்களை அடுத்து, கிழக்கு மாகாணப் பாதுகாப்பு நிலவரம் சம்பந்தமாக இருதரப்பினரின் இணக்கப்பாட்டுடன் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

• இலங்கை கண்காணிப்புக் குழுவின் உள்ளூர் கமிட்டிகளை மீளமைத்து விரிவாக்குதல்.

• மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மேலதிக செயலகங்களை நிறுவுமாறு இலங்கை கண்காணிப்புக் குழுவினரிடம் கோருதல்.

• பாதுகாப்பு நிலவரத்தைச் சீர்செய்யும் நோக்குடன் விடுதலைப் புலிகளின் களத் தளபதிகளுக்கும் அரச படைத் தளபதிகளுக்கும் மத்தியில் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.

• விடுதலைப் புலிகளின் களத் தளபதிகளுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் மத்தியில் அடிக்கடி கலந்துரையாடல்களை ஒழுங்குசெய்தல்.

• உள்ளூர் தகராறுகளைத் தீர்த்து, இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்குடன் சமாதானக் குழுக்களை நியமித்தல்.

அடுத்த இரு நாட்களாக (நவம்பர் முதலாம், இரண்டாம் திகதிகளில்) நடைபெற்ற பேச்சுகளின் போது, இருதரப்புப் பேச்சுக் குழுக்களின் ஆணையின் கீழ் சில முக்கிய விவகாரங்கள் சம்பந்தமாக உப குழுக்களை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் தனித்துச் சுதந்திரமாக இயங்கும் எனினும், அவற்றின் செயற்பாட்டு முன்னேற்ற அறிக்கைகள் சுற்றுப் பேச்சுகளின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டது. நீண்ட நேரமாக நீடித்த விவாதங்களின் பின்பு, மூன்று முக்கிய விவகாரங்கள் தொடர்பான மூன்று குழுக்களை நிறுவுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அவை வருமாறு:

  1. உடனடி மனிதாபிமான, புனர்வாழ்வுத் தேவைகளுக்கான உப குழு
  2. போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையை உருவாக்குவதற்கான உப குழு
  3. அரசியல் விவகார உப குழு

சிரான் எனப்படும் உடனடி மனிதாபிமான, புனர்வாழ்வுத் தேவைக்கான உப குழுவானது (Sub-Committee for Immediate Humanitarian and Rehabilitation Needs – SIHRN), முதற்கட்ட சுற்றுப் பேச்சில் பரிந்துரைக்கப்பட்ட கூட்டுச் செயலணிக்குப் பதிலாக அமைக்கப்பட்டது. இந்த உப குழுவின் செயற்பாடுகள் வருமாறு:

  1. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனிதாபிமான, புனர்வாழ்வுத் தேவைகளை இனம் கண்டு, இத்தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல். இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்தல். மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடிகளை அகற்றுதல் போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
  2. முன்னுரிமை வழங்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி தீர்மானித்தல்.
  3. முன்னுரிமை வழங்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்தப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்வு செய்தல்.

வடக்கு – கிழக்கு புனர்நிர்மாண நிதி (North East Reconstruction Fund – NERF) என்ற நிதியம் மூலமாகப் பெறப்படும் நிதியிலிருந்து உப குழுக்களின் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்படும். சர்வதேசக் கடனுதவி வழங்கும் ஒரு நிறுவனம் இந்த நிதியின் வைப்பகமாக இயங்கும்.

சிரான் அமைப்பின் நிர்வாகத் தலைமையகத்தை கிளிநொச்சியிலுள்ள அரசாங்க அதிபர் காரியாலயத்தில் செயற்படுத்துவதென இருதரப்பினரும் இணக்கம் கண்டனர். விடுதலைப் புலிகள் சார்பில் நால்வரும், அரசாங்கத்தின் சார்பில் நால்வருமாக, எட்டு பிரதிநிதிகளைக் கொண்ட நிர்வாக சபை ஒன்றை நியமிக்கவும் முடிவாகியது. இரு தரப்பினரின் பேச்சுக் குழுவில் உள்ள பிரதிநிதி ஒருவர் நிர்வாக சபையில் அந்தந்தத் தரப்புக்குத் தலைமை வகிப்பார். கீழ்க்கண்டோரை சிரான் நிர்வாக சபைக்கு நியமிக்கவெனத் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்:

  • திரு. தமிழ்ச்செல்வன் (அரசியல் துறைப் பொறுப்பாளர்)
  • திரு. பூவண்ணன் (பொறுப்பாளர், தமிழீழ நிர்வாக சேவை) 
  • திரு. வே. பாலகுமாரன் (புலிகளின் மூத்த உறுப்பினர்)
  • திரு. ஜே. மகேஸ்வரன் (பொருளாதார அபிவிருத்தி நிபுணர்)

இலங்கை அரசாங்கத்தவர்: 

  • திரு. பெர்னான்டோ குணத்திலக (பணிப்பாளர் நாயகம், இலங்கை சமாதானச் செயலகம்)
  • திரு. எம்.டி.ஏ. பீரிஸ் (பொருளாதார சீரமைப்பு அமைச்சின் ஆலோசகர்)
  • திரு. எம்.ஐ.எம். ராபீக் (திட்ட அமைச்சின் மேலதிக செயலர், ஒரு முஸ்லிம் பிரதிநிதி)

போர் நெருக்கடியைத் தணித்து, இயல்பு நிலையைத் தோற்றுவிப்பதற்கான உப குழு (Sub-Committee on De-Escalation and Normalization) ஒன்றையும் நிறுவ இருதரப்பினரிடையே இணக்கம் காணப்பட்டது. உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்தல், தனியார் சொத்துரிமைகளை மீளப்பெறுதல் போன்ற விவகாரங்களை இந்த உப குழு கையாளும். இருதரப்பைச் சேர்ந்த தளபதிகளும் உயர் அதிகாரிகளும் இந்த உப குழுவில் அங்கம் வகிப்பர். இருதரப்பினரது பேச்சுக் குழுவில் உள்ள உறுப்பினர் ஒருவர் இக்குழுவில் அவரவர் தரப்பில் அங்கத்துவம் பெறுவர்.

இந்த உப குழுவில் அங்கம் வகிக்கத் தெரிவு செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள் வருமாறு:

  • கேணல் தீபன் (வட பிராந்தியக் கட்டளைத் தளபதி)
  • கருணா (முன்னாள் மட்டு-அம்பாறை விசேட தளபதி)
  • கேணல் ஜெயம் (மன்னார் மாவட்ட விசேட தளபதி)
  • திரு. இளம்பரிதி (யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்)
  • கேணல் பதுமன் (முன்னாள் திருகோணமலை விசேட தளபதி)
  • திரு. திலக் (முன்னாள் திருகோணமலை அரசியல்துறைப் பொறுப்பாளர்)
  • திரு. கௌசல்யன் (முன்னாள் மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர்)

அரச பிரதிநிதிகள்:

  • திரு. ஒஸ்டின் பெர்னான்டோ (செயலர், பாதுகாப்பு அமைச்சு)
  • மேஜர் ஜெனரல் கொட்டேகொட
  • ரியர் அட்மிரல் எஸ்.பி. வீரசேகரா
  • பிரிகேடியர் எஸ்.ஆர். பாலசூர்யா
  • நிமால் லூகே (காவல்துறை உயர் அதிகாரி)
  • கப்டன் கொலிதாக குணதிலகே
  • திரு. திவின்தா காலுபானு
  • திரு. எம்.ஏ. மஜீத் 

ஆரம்பகட்டப் பேச்சுகளின் போது தமிழர் தாயகத்தில் அமைதியையும் இயல்பு நிலையையும் நிலைநாட்டி, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்நிலையை மேம்படுத்துவதற்கு முதன்மை அளிப்பதென இருதரப்பினரும் முடிவு செய்தனர்.

தொடரும். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்