ஆங்கில மூலம்: றொகான் எதிரிசிங்க, மரியோ கோமஸ், வி.ரி. தமிழ்மாறன், அசங்க வெலிக்கல
அரசுக்கட்டமைப்புகள்
அதிகாரப் பகிர்வுக்கு உதவக்கூடிய அரசுக்கட்டமைப்புகளை உருவாக்குதல் 1990க்குப் பிற்பட்ட காலத்து விவாதங்களில் முக்கிய பேசுபொருளாக அமைந்தன. முக்கியமாக இரு நிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் எமது கவனிப்புக்குரியவை:
- இரண்டாம் சபை (Second Chamber) ஒன்றின் தேவை. பிராந்தியங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கக்கூடிய செனற் போன்ற சபையை உருவாக்குதல் பற்றிய விவாதம்.
- அதிகாரமுடைய நீதித்துறையை உருவாக்குதல்.
இவ்விரு நிறுவனங்களில் செனற் நிறுவனத்தின் பயன் குறித்த விவாதத்தை முதலில் நோக்குவோம்.
செனற் சபை
சோல்பரி அரசியல் யாப்பு இருசபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தைக் கொண்டிருந்தது. மேற்சபையான செனற் சபை அந்த யாப்பின்படி என்ன நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. இதனால் அது தோல்வியுற்ற நிறுவனமாகியது. இதன் பின்னர் இலங்கையில் உருவாக்கப்பட்ட ‘Home Grown Constitutions’ எனப்பட்ட யாப்புகள் இரண்டும் ஒரு சபையை மட்டும் உடைய பாராளுமன்றங்களைக் (Uni-cameral Legislature) கொண்டமைந்தன. மேலே குறிப்பிட்டது போன்று சோல்பரி யாப்பின் செனற் சபை தோல்வியுற்ற நிறுவனமாகிய போதும், இலங்கையின் அதிகாரப் பகிர்வு பற்றியும், சமஷ்டி முறை பற்றியும் விவாதிக்கப்பட்ட போது, இரண்டாம் சபையின் பயன் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக பிராந்தியங்களின் பிரதிநிதித்துவத்தை (Regional Representation) வழங்குவதற்கு செனற் என்னும் இரண்டாம் சபை உதவும் எனப் பலரும் கருதினர். மத்திய பாராளுமன்றத்தின் ஓர் உறுப்பாக அமையும் செனற் சபை அதிகாரப் பகிர்வைப் பாதுகாத்தல் (Protection of Devolution of Power), அதிகாரத்தைப் பகிர்தல், தேசிய ஒற்றுமையைப் பேணுதல் என்பனவற்றுக்கு உதவுதல் ஆகிய தேவைகளை நிறைவு செய்யும் எனக் கருதப்பட்டது. இவ்வாறான இரண்டாம் சபையை (Second Chamber) உருவாக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிமுறையை விட, பாராளுமன்ற மந்திரிசபை முறை (Parliamentary Cabinet System) மேலானது எனவும், பாராளுமன்ற மந்திரிசபை முறைக்கு மீண்டும் மாறும்போது செனற் சபையையும் உள்ளடக்கிய இருசபைகள் கொண்ட சட்டசபையை மீண்டும் உருவாக்கலாம் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
நீதித்துறை
இலங்கையில் அரசியல் யாப்பின் மேன்மை (Constitutional Supremacy) என்னும் அரசியல் யாப்புத் தத்துவம் ஏற்கப்படவில்லை. அரசியல் யாப்புவாதம் (Constitutionalism) என்னும் இத்தத்துவம் ஏற்கப்பட்டால், அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்கும் அரசியல் நிறுவனங்களும், அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்களான நபர்களும் (Actors Exercising State Power) அரசியல் யாப்புக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற நிலை உருவாகும். அரசியல் யாப்பு மீறல்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரமுடையதாக நீதித்துறை விளங்கும். ஆனால் இலங்கையின் அரசியல்வாதிகள் அரசியல் யாப்பின் மேன்மை (Supremacy of the Constitution) என்னும் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, சட்ட ஆக்கத்துறையினையும், நிர்வாகத்துறையினையும் நீதி மீளாய்வு (Judicial Review) மூலம் கட்டுப்படுத்தும் முறையிலான அரசியல் யாப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு விருப்பமற்றவர்களாக உள்ளனர்.
நிர்வாகத்துறையின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வலுவற்றதான இலங்கையின் நீதித்துறை விளங்கியது. இதனால் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை அது கட்டுப்படுத்தத் தவறியுள்ளது. அரசியல் யாப்புத் தொடர்பான நீதித் தீர்ப்புகளின் போது (Constitutional Adjudication) நீதிமன்றங்கள் சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் வகையில் செயற்படத் தவறியுள்ளன. கட்டுரையாசிரியர்கள் இது பற்றிக் கூறியிருப்பது கவனிப்புக்குரியது.
“The role of the judiciary will be a contentious issue in any attempt to reconstitute the Sri Lankan state. Many Tamils have been critical of the court’s insensitivity to Tamil aspirations. Yet any power sharing arrangement will require an arbiter of centre – region disputes. A secure power sharing arrangement will also give to the constitution and a stringent amendment process, especially where any alteration of provincial power is contemplated. This will require the courts (or some other credible institution) to play an important role in the new power – sharing arrangement (p. 22)”
மேலே ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ள பந்தியின் சுருக்கம் (எளிமைப்படுத்தப்பட்ட தமிழாக்கம்.)
- அரசுக்கட்டமைப்பை மாற்றும்போது நீதித்துறையின் வகிபாகம் சர்ச்சைக்குரியதாகவே இருந்துவருகிறது. தமிழ் மக்களின் அபிலாசைகளை பரிவுணர்வோடும், நடுநிலையோடும் நீதித்துறை பரிசீலிப்பதில்லை எனப் பல தமிழர்கள் அதிருப்தியை வெளியிட்டு வந்துள்ளனர்.
- அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தும் போது மத்திய அரசாங்கத்திற்கும் பிராந்தியங்களுக்கும் இடையில் பிணக்குகள் (Centre – Region Disputes) தோன்றும். அப்பிணக்குகளைத் தீர்த்து வைக்கும் நடுவர் என்ற நிலையை வகிக்கும் நீதித்துறை அதிகாரம் உடையதாயும், நிர்வாகத்துறையின் தலையீடு இல்லாது நடுநிலையாகச் செயற்படக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
- அரசியல் யாப்பின் மேலாண்மை (Supremacy of the Constitution) என்னும் தத்துவம் ஏற்கப்பட்டால்தான், அதிகாரப்பகிர்வின் ஒழுங்கமைப்பைப் பலமான அடித்தளத்தில் உருவாக்கலாம். அரசியல் யாப்பைத் திருத்துவதை இலகுவாகச் செய்ய முடியாதபடி இறுக்கமான திருத்த விதிகள் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும். குறிப்பாக மாகாணங்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் தொடர்பான திருத்தங்களை இலகுவில் செய்ய முடியாதபடி பாதுகாப்பு விதிகள் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட வேண்டும். அரசியல் யாப்பின் அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகளை விளக்கிக் கூறும் (Interpretation) அதிகாரம் உடையதாய் நீதித்துறை (அல்லது வேறு ஒரு நிறுவனம்) இருத்தல் வேண்டும்.
மனித உரிமைகளும் சமத்துவமும்
இலங்கையில் தமிழ்மக்களின் போராட்டம் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சமத்துவத்துக்குமான (Human Rights and Equality) போராட்டம், மனித கௌரவம் சார்ந்த போராட்டம் என்பதை இனத்துவப் பிரச்சினையின் வரலாறு உணர்த்துகிறது. சிங்களம், தமிழ் ஆகிய இருமொழிகளுக்கும் சமத்துவ உரிமைகள் வழங்கப்படாமையே இன்று வரை தொடரும் பிரதான பிரச்சினையாகும். இலங்கை அரசு மதச்சார்பற்ற அரசாக (Secular State) இல்லை. அது பௌத்தத்திற்கு அரசியல் யாப்பில் முதன்மையிடம் (Foremost Place) அளித்துள்ளது என்பது இன்னொரு பிரச்சினை. வெளிப்படையாகப் பேசப்படாத இப்பிரச்சினை சமத்துவம் (Equality) என்ற தத்துவத்துடன் முரண்பாடு உடையது. ஏனென்றால் பௌத்தத்திற்கு முதன்மையிடம் அளிக்கப்படுவதால் அனைத்துச் சமூகங்களுக்கும் சமத்துவமான நடத்துகை இல்லை என்பதே பொருளாகும். வெளிப்பட்டுத் தெரியாமல் மறைந்து நிற்கும் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. குறியீடுகள் (Symbols), தேசியக்கொடி, தேசிய கீதம் என்பனவற்றில் சமத்துவம் இல்லை என்பதைச் சில சமூகங்கள் முக்கியமான பிரச்சினையாகக் கருதுகின்றன. இந்நிலையில் பிராந்தியங்கள் (Regions) தமது அடையாளங்களை முதன்மைப்படுத்தும் குறியீடுகளை வைத்துக் கொள்வதை ஊக்கப்படுத்தி அனுமதிக்க வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது.
தனிநபர் உரிமைகளுக்கும் குழு உரிமைகளுக்கும் இடையிலான சமநிலை (The Balance Between Individual and Group Rights) என்பது இன்னொரு முக்கியமான விடயம். சோல்பரி அரசியல் யாப்பின் பிரிவு 29 குழு உரிமைகளை அங்கீகரித்தது. ஆனால், அந்த யாப்புக்குப் பிந்திய யாப்புகள் இரண்டும் தனிநபர் உரிமைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தன. வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்தல் தொடர்பான விவாதங்கள் இடம்பெற்ற போது, அந்த மாகாணங்களில் உள்ள முஸ்லிம், சிங்களச் சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படும் என்ற அம்சம் சுட்டிக்காட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் தனிநபர் உரிமைகளை மதிப்பதில்லை என்பதும், எதிர்க்கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை மறுத்தலும், தமிழ் அரசியல் சமூகத்தில் அரசியல் பன்மைத்துவத்திற்கு (Political Pluralism) இடம் இல்லை என்பதும் கண்டனங்களாக முன்வைக்கப்பட்டன.
சர்வதேச அளவில் இன்று மனித உரிமைகளின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தப்பட்டு வருவதையும், தனிநபர் உரிமைகளும், குழு உரிமைகளும் (Group Rights) பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான அரசியல் யாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதையும் காணலாம். இப்பின்னணியில் குடியுரிமைகளும் அரசியல் உரிமைகளும் (Civil and Political Rights), பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள், பெண்கள் – சிறுவர் உரிமைகள், சூழலியல் உரிமைகள் என்பன யாவற்றையும் உள்ளடக்கிய முழுமையான அடிப்படை மனித உரிமைகள் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. இலங்கையில் அரசியல் யாப்பின் ஊடான தீர்வு (Constitutional Settlement) அடிப்படை மனித உரிமைகளுக்கு முதன்மை அளிப்பதாக அமைதல் அவசியமானது.
பாலினச் சமத்துவம்
பாலினச் சமத்துவம் (Gender Equality) என்ற விடயத்தில் இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அயல் நாடுகளை விட இலங்கையில் இவ்விடயத்தில் ஒப்பீட்டளவில் ஏற்பட்ட முன்னேற்றம் பாராட்டுக்குரியது. கல்வித்துறையில் பெண்களின் பங்கேற்பு அல்லது சேர்வு வீதம் இலங்கையில் அதிகரித்துள்ளது. அதேபோன்று சுகாதார மருத்துவ வசதிகள் பெண்களுக்கு கூடிய அளவில் கிடைக்கின்றன. ஆயினும் இம்முன்னேற்றங்களுக்குப் பின்னால் மறைக்கப்பட்டுள்ள, கண்ணுக்குப் புலப்படாத பக்கம் ஒன்றும் உள்ளது. பெண்கள் அரசியல் மட்டத்தில் முடிவெடுக்கும் தலைமைப் பதவிகளிலும் கொள்கை வகுத்தலில் பங்கேற்கும் பதவிகளிலும் இல்லை.
1995 – 2000 ஆண்டுக் காலத்தில் அரசியல் யாப்பை வரையும் செயல்முறை இடம்பெற்றது. அப்போது 1997ஆம் ஆண்டு முன்மொழிவுகள் முன்னெடுக்கப்பட்டன. அம்முன்மொழிவுகளில் உள்ளூராட்சி சபைகளில் தெரிவாகும் உறுப்பினர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் பெண்களாக இருக்க வேண்டும் என்ற சிபார்சு முன்மொழியப்பட்டிருந்தது. ஆனால், 2000ஆம் ஆண்டு அரசியல் யாப்பு வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது இந்த ஏற்பாடு நீக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் பெண்ணியக் குழுக்கள் அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்கப்படுதல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன. இலங்கையில் 1931ஆம் ஆண்டில் சர்வசன வாக்குரிமை அறிமுகமானது. ஆயினும், உள்ளூராட்சி, மாகாணசபைகள், தேசியமட்ட பாராளுமன்றம் என்ற அனைத்து மட்டங்களிலும் 5% வீதத்துக்கும் குறைந்த அளவு பிரதிநிதித்துவமே பெண்களுக்கு இருந்துள்ளது. இலங்கை முதலாவது பெண் பிரதமரையும், முதலாவது பெண் ஜனாதிபதியையும் தெரிவு செய்து சாதனை படைத்தது என்று பெருமைப்பட்டாலும், அரசாங்க அதிகார நிறுவனங்களில் பெண்களின் பங்கேற்பு மிகக்குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஏனைய பல விடயங்களில் பாலினச் சமத்துவம் பாராட்டத்தக்க உயர் நிலையில் இருந்தபோதும், அரசியல் அதிகாரம் என்ற விடயத்தில் ஆண் – பெண் சமத்துவம் (Gender Equity) இல்லை என்பது கவனிப்புக்குரியது.
அதிகாரப்பகிர்வு – ஓர் கருத்தாக்க வரைவுசட்டம்: ஆழமான பிறழ்வுகளையுடைய சமூகங்களில் பன்மைத்துவத்தைப் பேணல் (Power Sharing – A Framework: Accommodating Diversity in Deeply Divided Societies)
மேற்குறித்த தலைப்புடைய பகுதியில் கட்டுரையாளர்கள் இலங்கையின் இன்றைய இனத்துவப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கு உதவக்கூடிய ‘ஆழமான பிளவுகளை உடைய சமூகம்’ என்னும் கருத்தாக்கத்தை அறிமுகம் செய்துள்ளனர். இக்கருத்தாக்கத்தை அவர்கள் ஒரு பகுப்பாய்வு வகைமை (Analytical Category) என்றும், அது அரசியல், கோட்பாடு, அரசியல் யாப்புக் கோட்பாடு என்பனவற்றில் பிரயோகிக்கப்படும் ஒரு முக்கிய கருத்தாக்கம் என்றும் கூறுகின்றனர். உலகில் ஆழமான பிளவுகளையுடைய சமூகங்கள் பல உள்ளன என்றும், இலங்கை அந்த வகையான ஆழமான பிளவுகளையுடைய சமூகங்களில் ஒன்றாக மாறியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். பிரித்தானிய காலனிய ஆட்சியில் மாதிரிக் காலனியாக (Model Colony) விளங்கிய இலங்கை ஆழமான பிளவுகளையுடைய சமூகமாகத் தரம் தாழ்ந்தது ஏன்?
கடந்த காலத்தில் இலங்கையில் அடையாள அடிப்படையிலான சமூகக் குழுக்களின் கோரிக்கைகள் (Identity Based Group Claims) முன்வைக்கப்பட்டன. அத்தகைய கோரிக்கைகள் இனத்துவம் (Ethnicity) என்பதில் வேர் கொண்டிருந்தன. அவற்றை அரசாங்கங்களும், அரசியல் தலைவர்களும் முறையாக நெறிப்படுத்தி ஒழுங்கமைப்பதற்கான ஒரு கொள்கை வழிச் சட்டத்தின்படி முகாமை செய்யவில்லை. இதனால், இலங்கையில் இனத்துவ மோதல் அதிகரித்தது.
இலங்கைச் சமூகம் பல்வேறு இன, மொழி, மத வேறுபாடுகளைக் கொண்ட பன்மைத்துவம் உடைய சமூகம். இச்சமூகத்தின் பன்மைத்துவத்தை செயற்கையான முறையில் அழித்துச் சிதைத்து விட்டு, அச்சிதைவுகளின் மீது தேசிய ஐக்கியத்தை கட்டி வளர்க்க முடியாது. பன்மைத்துவ அடையாளங்கள் ஏற்று அங்கீகரிக்கப்படுதல் வேண்டும். சிறுபான்மை இனங்களின் இனத்துவ அடையாளத்தின் (Ethnic Identity) அடிப்படையிலான அரசியல் கோரிக்கைகள் அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காணப்பட்டிருத்தல் வேண்டும். 1948இற்குப் பிற்பட்டக் காலத்தில் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கருத்திற் கொண்டு செயற்படாமல் அம்மக்களின் அரசியல் முனைவுகளை சர்வாதிகார வழிகளில் நசுக்க முயன்றன. இதன் விளைவாக இலங்கை ஆழமான பிளவுகளை உடைய சமூகமாக மாறியது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
அரசியல் யாப்பை வரைதலும் பன்மைத்துவமும்
Constitutional Design and Diversity (அரசியல் யாப்பை வரைதலும் பன்மைத்துவமும்) என்னும் பகுதியில் கட்டுரையாசிரியர்கள் அரசியல் யாப்பு மறுசீரமைப்பு அல்லது சீர்திருத்தம் (Constitutional Reform) ஓர் ஒற்றுமையான கூட்டு முயற்சி எனவும், சில அடிப்படையான நியமங்களை (Norms) ஏற்றுக்கொண்டு அரசியல் வகிபாகம் ஏற்போர் (Political Actors) செயற்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். இலங்கையின் அரசியல் சமூக பன்மைத்துவம் என்ற யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போதுதான் அதிகாரப்பகிர்வு (Power Sharing) தேவையானது என்பதை உணர்ந்து செயற்பட முடியும் என்பது இப்பகுதியில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பை வரைதல் என்பது கூட்டான முடிவெடுத்தல் (Collaborative Decision Making) ஆகும் என்பதும் இப்பகுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது (பக். 23). அதிகாரப் பகிர்வை எப்படிச் செய்தல் வேண்டும் என்பதற்கு உதாரண முன்மாதிரிகள் பல உள்ளன. அவற்றுள் பொருத்தமானவற்றைத் தேர்வு செய்து கொள்ளும் விரிந்த தெரிவுகள் (Broad Options) உள்ளன என்றும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள ஆவணங்கள்
இத்தொகுப்பு நூலில் 80 ஆண்டுகாலத்தில் (1926 – 2006) வெளியான 51 ஆவணங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த 51 ஆவணங்களும் அரசியல் யாப்பு ஆவணங்களாகவும், அரசியல் ஆவணங்களாகவும் (Constitutional and Political Documents) அமைந்துள்ளன. இந்த ஆவணங்கள் யாவும் 37 அத்தியாயங்களின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் சேர்க்கப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்துப் பதிப்பாசிரியர்களின் குறிப்புகள் (Commentaries) தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு அத்தியாயத் தலைப்பும், உள்ளடக்கப்பட்டுள்ள ஆவணங்களின் விடயப்பொருளைச் சுட்டுவதாக அமைந்துள்ளது.
இத்தொகுப்பு நூலிற்கு வழிகாட்டியாக அமையக் கூடிய வகையில் 37 அத்தியாயங்களினதும் தலைப்புகளின் அட்டவணை இக்கட்டுரையின் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு – 1
தொகுப்பு நூலின் அத்தியாயத் தலைப்புகள்
- சமஷ்டிக் கருத்துப் பற்றிய ஆரம்பக்காலக் கருத்துரைகள் 1926–1935
- டொனமூர் அரசியல் யாப்பு (1931)
- லியனார்ட் வூல்வ் அவர்களின் பிரேரணை (1938)
- இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்மொழிவுகள் – இலங்கைத் தேசிய காங்கிரசிற்குச் சமர்ப்பித்த அறிக்கை.
- கெனமன் – வைத்தியலிங்கம் இணைந்து சமஷ்டி அரசியல் யாப்புத் தொடர்பாக முன்வைத்த பிரேரணை.
- மந்திரிசபையின் வரைவு (1944)
- சோல்பரி ஆணைக்குழு அறிக்கை (1945), சோல்பரி அரசியல் யாப்பு (1946–47)
- சோல்பரி அரசியல் யாப்பின் 29ஆம் பிரிவு: சிறுபான்மையினருக்கான பாதுகாப்பு.
- சமஷ்டிக் கருத்தும் சமஷ்டிக் கட்சியும்
- பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை (1957)
- டட்லி சேனநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை (1965)
- சமஷ்டி அரசுக்கான மாதிரி வரைவு (1970)
- வட்டுக்கோட்டைத் தீர்மானம் (1976)
- அமிர்தலிங்கம் ‘ட்ரயல் அட் பார்’ (Trial at Bar) வழக்கு
- மாவட்ட அபிவிருத்தி சபைகள் சட்டம் (1980)
- திம்புக் கோட்பாடுகள் – முன்னரும் பின்னரும் (1983–1987)
- இந்தியாவின் தலையீடு (1987–1988)
- அரசியல் யாப்புக்கான 13ஆவது திருத்தம் (1987)
- மங்கள முனசிங்க முன்மொழிவுகள்
- அரசியல் யாப்புத் திருத்த இயக்கத்தின் சிபார்சுகள் (1994)
- இலங்கை ஒன்றியத்திற்கான அரசியல் யாப்பு வரைவுச் சட்டகம் (1995)
- அரசியல் யாப்பைத் திருத்தும் முயற்சிகள் (1995–2000)
- அரசியல் யாப்பைத் திருத்துதல் தொடர்பாக அரசாங்கத்தின் முன்மொழிவுகள் (1995)
- அரசியல் யாப்பைத் திருத்துதல் தொடர்பாக அரசாங்கத்தின் முன்மொழிவுகள் (1996)
- அரசியல் யாப்பைத் திருத்துதல் தொடர்பாக அரசாங்கத்தின் முன்மொழிவுகள் (1997)
- அரசியல் யாப்பைத் திருத்துதல் தொடர்பாக அரசாங்கத்தின் முன்மொழிவுகள் (2000)
- சிங்கள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை
- ஒஸ்லோ பிரகடனம் (2002)
- தற்காலிக நிர்வாக சபை (2003)
- தற்காலிக நிர்வாக சபை (ISGA) தொடர்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்த முன்மொழிவு (2003)
- விடுதலைப்புலிகள் அமைப்பும் இலங்கை அரசும் இணைந்து வெளியிட்ட பிரகடனம் (2002)
- ஒலுவில் பிரகடனம் (2003)
- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் யாப்புத் திருத்தச் செயல்முறை தொடர்பாக வெளியிட்ட கொள்கை அறிக்கை.
- சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ‘GESERA’ சிபார்சு (2008) (GESERA – Greater South East Autonomous Area Proposal)
- உடன்பாடு அடைதலை அண்மித்தல் (2005–2006)
- வடக்கு – கிழக்கு இணைப்பு: உயர் நீதிமன்றின் நீதித் தீர்ப்பு (2006)
- நிச்சயமற்ற எதிர்காலம் (2006–2008)
- அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுச் செயல்முறை (2006)



