தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

தென் ஆசியாவில் தொல்மானிட இனங்கள் – பகுதி 1

September 4, 2026 | Ezhuna

தென் ஆசியாவில் திராவிட மொழிகளைப் பேசும் மக்களின் மூதாதையர்கள் இற்றைக்கு 68,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த மண்ணில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவந்த ஆரம்பகாலப் பேச்சுவழக்குகள் தமிழ் மொழியினதும், மற்றைய திராவிட மொழிகளினதும் உருவாக்கத்திற்கு முக்கிய பங்கினை அளித்திருக்கின்றன. இப்பின்னணியில், தமிழ்மொழி பேசும் மக்களின் மரபணு மூலங்கள், தமிழர் வரலாறு, மொழி, பண்பாடு ஆகியவற்றை அறிவியல் அடிப்படையில் ஒருங்கிணைத்து மீள்பார்வை செய்யும் ஆழமான ஆய்வாக இது அமைகின்றது. தொல்திராவிட மொழி தோற்றம் பெற்ற இடம் சிந்துவெளிதான். அதன் தென் ஆசியப் பரவலுக்கும் பிராந்தியத் திராவிட மொழிகளின் உருவாக்கத்திற்கும் உந்துதலாக இருந்தது வேளாண்மை விவசாயத்தின் பரவலாகும். இந்தக் கோட்பாட்டை நிலவியல், மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல் ஆகிய கற்கைநெறிகளின் துணைகொண்டு ‘திராவிட மக்களின் மரபணு மூலங்களும் தமிழ் மொழியின் படிமுறைத் தோற்றமும்’ எனும் இந்தத் தொடர் நிறுவவுள்ளது. தமிழ் மக்களினதும் தமிழ் மொழியினதும் உருவாக்கம் பற்றிய முக்கியமான அறிவியல் ஆய்வாக இது அமையும்.

1. நிமிர்ந்த மனிதன் – ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) 2. நியண்டதால் மனிதன் – ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் (Neanderthal Man) 3. நவீன மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens)

மனித இனங்களின் படிநிலை வளர்ச்சி (The Evolution of Human Species)

உலகில் தோன்றிய உயிரினங்களின் 380 கோடி (3.8 Billion) ஆண்டுகாலப் பரிணாம வளர்ச்சியில் பல இனங்கள் முற்றாக அழிந்து போக, மற்றும் பல இனங்கள் தாம் வாழ்ந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றியமைத்து இனவிருத்தியடைந்திருக்கின்றன. இவைகளில் தம்மைச் சிறப்பாக மாற்றியமைத்துக் கொண்ட உயிரினங்கள் வம்சாவளியாகப் பெருகிப் பரவி, நீண்டகாலம் வாழ்ந்து, வாழ்நிலத்தில் மேலாண்மை செலுத்தியிருக்கின்றன. அத்தகைய உயிரினங்கள் அனைத்திலும் இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தாம் வாழ்ந்த சூழலைக் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது மனித இனமே.

தொல்லியல், மானிடவியல், மரபணுவியல் ஆதாரங்கள் அனைத்தும், இந்தப் பூவுலக மண்ணில் கால்பதித்து நடந்த மனித இனங்களின் மூதாதையர்கள் அனைவரும் தோற்றம் பெற்றது ஆபிரிக்காக் கண்டத்தில்தான் என்பதை நிரூபித்திருக்கின்றன. மிகப் பரந்த, தனிமைப்படுத்தப்பட்ட, தடைப்படுத்தப்படாத, வனாந்தரங்களையும், பச்சைக்காடுகளையும், காய்ந்த கானகங்களையும், பசும்புற் தரைகளையும், புதர் நிலங்களையும் கொண்ட இந்த இயற்கையான மூலநிலம் பல வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும், மனித இனங்களினதும் பரிணாமத் தோற்றத்திற்கும் விருத்திக்கும் உகந்த இடமாக அமைந்திருக்கிறது.

இற்றைக்கு 7 மில்லியன் (70 லட்சம்) ஆண்டுகளுக்கு முன் ஆபிரிக்காக் கண்டத்தில் தோற்றம் பெற்ற ‘ஹோமினிட்’ (Hominid – மனிதர்களைப் போன்ற) இனங்களால் மற்றைய விலங்குகளைப் போலல்லாது, இரு கால்களில் எழுந்து நின்று தன்னைச் சுற்றிவர உள்ள உலகைப் பார்க்க முடிந்தது. மனிதர்களும், சிம்பன்ஸி, கொரில்லா போன்ற மனிதக் குரங்கு இனங்களும் இந்த ஹோமினிட் குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள் என்பதே விஞ்ஞானிகளின் முடிபு. ஒரு மனிதனிடமிருக்கும் மரபணுக்களின் (DNA) 98.6% சத விழுக்காடான மரபணுக்கள் ஒரு மனிதக் குரங்கிடம் காணப்படுகின்றன.

இந்த ஹோமினிட் இனங்களிலிருந்து 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆஸ்திரோலோபிதிகஸ்’ (Australopithecus) என்ற மந்தி-மனிதனும், இந்த மந்தி-மனிதனின் பரிணாம வளர்ச்சியில் 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஹோமோ ஹபிலிஸ்’ (Homo Habilis) என்ற ஆதி மனிதனும், 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஹோமோ இரக்டஸ்’ (Homo Erectus) எனப்படும் நிமிர்ந்த மானிடனும் தோற்றம் பெற்றார்கள். இந்த ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் மாமிசப் பட்சணிகளாக இருந்தார்கள். கற்களைச் செதுக்கி ஆயுதங்கள் செய்யும் கலையை உருவாக்கினார்கள். நெருப்பை உண்டாக்கி உணவை வேகவைத்து உண்ணக் கற்றுக்கொண்டார்கள். ஆனால், இவர்களால் ஒருவரோடு ஒருவர் பேசும் அளவுக்கு மூளை விருத்தியடையவில்லை. சைகைகள் மூலமும் உறுமல்கள் மூலமும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டார்கள்.

இவர்கள் விரைவில் ஆபிரிக்கக் கண்டத்தை விட்டு கால்நடையாக வெளியேறி, தலைமுறை தலைமுறையாக இடம்பெயர்ந்து, ஐரோப்பாவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் நிலமார்க்கமாகப் பரவினார்கள்.

ஆபிரிக்காவில் மனித இனங்களின் படிநிலை வளர்ச்சியைக் காட்டும் படம்.

மனிதன்-குரங்கு உள்ளிட்ட உயிரினத் தொகுதிப் (Primates) பிராணிகளிலிருந்து 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதமுன்னோடி (Hominids) இனங்கள் உருவாகின. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ இரக்டஸ் (Homo Erectus) என்ற மனிதனும், 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) என அழைக்கப்படும் நவீன மனிதனும் உருவானார்கள்.

மனித இனப் படிநிலைத் தோற்றம் பற்றிய ஆய்வுகள்

நவீன மனிதர்களுக்கு ‘ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்’ (Homo Sapiens Sapiens) என்ற பெயர் 1758ஆம் ஆண்டில் கார்ல் லின்னியஸ் (Carl Linnaeus 1707-1778) என்ற சுவீடன் நாட்டு உயிரியலாளரால் கொடுக்கப்பட்டது. இலத்தீன் மொழியில் ‘ஹோமோ’ என்பது மனித இனத்தைச் சேர்ந்தவர் என்றும், ‘சேப்பியன்ஸ்’ என்றால் ‘சிந்திக்கத் தெரிந்த மனிதன்’ என்றும் பொருள் தரும். நவீன மனிதன் முந்தைய மனித இனங்களைக் காட்டிலும் பகுத்தறிவு கொண்டவன் ஆதலால் ‘சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்த ‘உயிரியல்’ பெயரை ஏற்றுக்கொண்ட உயிரியல் ஆய்வாளர்கள், இதற்கு முற்பட்ட மனித இனங்களைக் கண்டுபிடித்த போது ‘ஹோமோ சேப்பியன்ஸ் நியண்டதாலென்ஸிஸ்’ (Homo Sapiens Neanderthalensis) என்ற பெயரை 1864ஆம் ஆண்டிலும், ‘ஹோமோ இரக்டஸ்’ (Homo Erectus) என்ற பெயரை 1892ஆம் ஆண்டிலும் வழங்கினார்கள்.

மனித இனங்களின் பரிணாமம் – படிநிலை வளர்ச்சி – பற்றிய முக்கியமான கோட்பாடு 1871இல் சார்ள்ஸ் டார்வின் (Charles Darwin 1809-1882) எழுதிய ‘மனிதனின் வருகை’ (The Descent of Man) என்ற நூலில் கூறப்பட்டது. அவர் ஏற்கனவே ‘உயிரினங்களின் தோற்றம்’ (Origin of Species) என்ற ஆய்வை 1859இல் வெளியிட்டிருந்தார். இந்த ஆய்வுகளில் முக்கியமாக இரு உயிரியல் பரிணாமக் கொள்கைகள் கூறப்படுகின்றன: 1. இயற்கைத் தேர்வு (Theory of Natural Selection) – தாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற முறையில் தங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து, இனப்பெருக்கம் செய்து பெருகிப் பரவுகின்றன. 2. தகுதிவாய்ந்தவை தப்பிப் பிழைக்கின்றன (Survival of the Fittest) – அவ்வாறு சூழலை வெற்றிகண்ட தகைமையாளர்கள் பெருகி, தங்கள் சந்ததியினரைப் பெருக்கி, அவர்களை நெடுங்காலம் வாழச்செய்வார்கள்.

டார்வினின் பரிணாமக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் மேற்கு நாடுகளின் சமயவாதிகளுக்கிடையிலும், அறிவியல் வாதிகளுக்கிடையிலும் நீண்ட விவாதங்களை ஏற்படுத்தியது. அதே சமயம் உயிரியல் ஆய்வுகளுக்கும், தொல்லியல் ஆய்வுகளுக்கும் புதிய உத்வேகம் அளித்தது. அன்றைய அறிவியல் உத்திகளைப் பயன்படுத்திய ஆய்வாளர்கள் தொல்பழங்கால உயிரினங்கள், மனித இனங்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி, வாழ்வியல், உபயோகித்த கருவிகள், பண்டைய நாகரிகங்கள் பற்றிய ஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொண்டார்கள்.

உலகில் மனித இனங்களின் தோற்றத்தைக் காட்டும் மிகப் பழமையான புதைபடிவங்கள் (Fossils) ஆபிரிக்கக் கண்டத்திலேயே காணப்படுகின்றன. கிழக்கு ஆபிரிக்காவிலுள்ள துருக்கானா ஏரி, இடை அவா, ஓல்டுவாய் பள்ளத்தாக்கு, லேடோலி ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான புராதன புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இற்றைக்கு 4 முதல் 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற ஆஸ்திரோலோபிதிகஸ் இன மக்களின் எலும்புக்கூட்டுச் சான்றுகள் இங்கே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

புராதன மனிதப் புதைபடிவங்கள் காணப்படும் துருக்கானா ஏரிக்கரை, தேசிய பூங்கா, கென்யா.

புராதன மனிதப் புதைபடிவங்கள் காணப்படும் இடை ஆவா பள்ளத்தாக்கு, எதியோப்பியா.

மனித இனங்களின் தொட்டில் எனப்படும் ஓல்டுவாய் மலைத்தொடர் பிளவு, தன்சானியா. வயது, பொ.யு.மு. 1,500,000.

ஹோமோ ஹபிலிஸ் இன மனிதர்கள்

உலகின் பல இடங்களில் புராதன மக்கள் வாழ்ந்து சென்றதற்கான அடையாளங்களில், இன்று பெருமளவில் காணப்படுவது அவர்கள் விட்டுச்சென்ற கல்லாயுதங்களாகும். பெரும் பிளவு (The Great Rift) என்பது சிரியாவின் வடபகுதியிலிருந்து கிழக்கு ஆபிரிக்காவில் மத்திய மொசாம்பிக் வரை 6,400 கி.மீ. தூரம் பரந்திருக்கும் பள்ளத்தாக்கு ஆகும் (Gregory, J.W. 1968; Willock, C. 1977). இங்கே பலதரப்பட்ட கல்லாயுதங்கள் காணப்படுகின்றன. கிழக்கு ஆபிரிக்காவில் சுமார் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ ஹபிலிஸ் என்ற இனம்தான் முதன் முதலில் கல்லினால் கருவிகளை உருவாக்கக்கூடிய ஆற்றல் பெற்ற மனித இனமாகும் (Clark, J.G.D. 1969).

இந்த ஹோமோ ஹபிலிஸ் இன மக்கள் உபயோகித்த கற்கருவிகளே மிகப் பழமையான கற்கருவிகளாக காலக்கணிப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வகையான கல்லாயுதங்களை லூயிஸ் லீக்கி (Louis Leakey) என்ற தொல்லியலாளர் 1930ஆம் ஆண்டுகளில் தன்சானியாவின் ஓல்டுவாய் மலைத்தொடர் பிளவில் (Olduvai Gorge In Tanzania) முதன்முதலாகக் கண்டுபிடித்தபடியால், இவ்வகையான கற்கருவிகள் ‘ஓல்டோவன்’ கருவிகள் என அழைக்கப்படலாயின. இக்கருவிகள் கீழைப் பழங்கற்காலத்தில் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து, 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. இவர்களைத் தொடர்ந்து 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமோ இரக்டஸ் இனத்தவர் இவற்றைக் காட்டிலும் தொழில்நுணுக்கம் மிக்க அச்சூலியன் வகைக் கற்கருவிகளை உருவாக்கினார்கள் (Clark, J.G.D. 1969).

ஆபிரிக்காவின் எதியோப்பியாவில் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக ஓல்டோவன், அச்சூலியன் வகைக் கற்கருவிகள் ஹோமோ இரக்டஸ் எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கொண்டு முந்தைய ஓல்டோவன் கற்கருவிகளின் தொழில்நுட்ப முன்னேற்றமே அச்சூலியன் வகைக் கற்கருவிகளின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது (Semow, S. et al. 2020).

ஹோமோ ஹபிலிஸ் மனிதன்

தன்சானியாவில் கண்டெடுக்கப்பட்ட 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஹோமோ ஹபிலிஸ் மனித மண்டை ஓட்டின் மீளுருவாக்கம்.

தன்சானியாவில் 2.6 மில்லியன் ஆண்டுகளுக்க முன்பிருந்து – 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை ஹோமோ ஹபிலிஸ் இன மக்கள் உபயோகித்த ஓல்டோவன் வகைக் கற்கருவிகள்.

ஹோமோ இரக்டஸ் மனிதர்கள்

ஹோமோ இரக்டஸ் என்றால் முதுகெலும்பு நேராக நிமிர்ந்த மனிதன் எனப் பொருள்படும். இற்றைக்கு இரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்ற இன்றைய மனிதர்களின் மூதாதையர்களான (ஹோமினின் இனம்) இம்மனிதர்களின் எலும்புப் படிவங்களும், அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களும் ஆபிரிக்கா, இந்தியா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளில் அதிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Haviland, W.A. et al. 2007: 162).

ஆபிரிக்காவிற்கு வெளியே கண்ட ஒன்றரை மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட இம்மனிதனின் எலும்புப் புதைபடிவங்கள் (Fossils) முதன்முதலாக இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 1891ஆம் ஆண்டில் இயுஜீன் டுபோய் (Eugene Dubois) என்ற ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ‘ஜாவா மனிதன்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. தொடர்ந்து சீனா, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் இம்மனிதனின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன (Roberts, Alice 2011: 122-127). ஜாவாவில் மேற்கொண்ட புதைபடிவுகளின் திகதிக்கணிப்பு ஆய்வுகளின்படி அங்கே இற்றைக்கு முன் 108,000க்கும் 117,000ற்கும் இடைப்பட்ட ஆண்டுக் காலப்பகுதியில் இந்த மனித இனம் முற்றாக அழிந்து போனதாக அறிவிக்கப்பட்டது (Choi, C.Q. 2019).

Homo_erectus

ஹோமோ இரக்டஸ் மனிதனும் அவனது மண்டையோடும்.

இம்மனிதனது மண்டை ஓட்டின் முக்கிய கூறுகள் இவை: 1. தட்டையான மேலோடு (சிறிய மூளையைக் கொண்டது). 2. நெற்றி கிடையாது – புருவத்தையடுத்துப் பரவும் தலைமுடி 3. துருத்திக்கொண்டிருக்கும் புருவ எலும்புகள் 4. தட்டையான நாசி 5. கோணமற்ற முக எலும்பு 6. தட்டையான முகவாய்க்கட்டை 7. துருத்திக்கொண்டிருக்கும் பிடரி எலும்பு.

இம்மனிதர்களின் பரவலைக் குறித்த ஆய்வுகள் அவர்கள் உபயோகித்த கற்கருவிகள் கிடைக்கும் இடங்களைக் கொண்டே கணிக்கப்படுகின்றன. அவர்கள் கருவிகள் செய்ய கற்பாளங்களை உடைத்தும், பெரிய உருண்டைக் கற்களைத் தெரிவு செய்தும், அவற்றை உறுதியான மற்றொரு கல்லினால் சீவி, செதுக்கி – கோடரிகள், பிளக்கும் கருவிகள், சீவும் கருவிகள், துண்டாக்கும் கருவிகள் என்பவற்றை உருவாக்கினார்கள். ஆழ்ந்த சிந்தனையோடும் பொறுமையோடும் உருவாக்கப்பட்ட இக்கருவிகளின் சிறப்பான வடிவமைப்பு, மனிதர்களின் அறிவாற்றலையும் திறமையையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.

இம்மனிதர்கள் ஆபிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் உபயோகித்த கல்லிலான ஒருவகை கைக்கோடரி ‘அச்சூலியன் கைக்கோடரி’ (Acheulean Hand Axe) என அழைக்கப்படுகிறது. பிளக்கக்கூடிய பெரிய கற்பாறைகளைச் சீராகத் தகர்த்து, ஓரங்களைக் கூர்மையாக்கியும், அடியில் அகன்றும் நுனியில் கூர்மையாகவும் செதுக்கப்பட்ட இக்கற்கள், எதியோப்பியா மற்றும் தன்சானியாவின் ஓல்டுவாய் பள்ளத்தாக்கு ஆகிய இடங்களில் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வகையான கற்களை ஆய்வாளர்கள் முதல் தடவையாக வடக்குப் பிரான்ஸில் உள்ள ‘செயின்ற் அச்சூல்’ (Saint-Acheul) என்ற இடத்தில் கண்டெடுத்தபடியால், இதற்கு ‘அச்சூலியன் வகை’ கைக்கோடரி எனப் பெயரிட்டார்கள்.

காய்ந்த குச்சிகளைக் கடைந்து நெருப்பை உண்டாக்கும் ‘ஹோமோ இரக்டஸ்’ மனிதர்கள்.

அச்சூலியன் கைக்கோடரி

ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் பரவி வாழ்ந்த இடங்களில் எல்லாம், சுமார் 1.76 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு முதல் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட பம்பர வடிவக் கல்லாயுதம் ‘அச்சூலியன் கைக்கோடரி’ என்று அழைக்கப்படுகிறது.

அச்சூலியன் கல்லாயுதங்கள் ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, தென் ஆசியா, கிழக்கு ஆசியா நாடுகளில் கீழைப் பழங்கற்காலத்தில் ஹோமோ இரக்டஸ் எலும்பு எச்சங்களுடன் காணப்படுகின்றன. இக்கல்லாயுதங்கள் முன்னர் ஹோமோ ஹபிலிஸ் இனத்தவர் உபயோகித்த புராதன முதிர்ச்சியற்ற ஓல்டோவன் தொழில்நுட்ப (Oldowan Technology) முறையின் முதிர்ச்சியடைந்த தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது. இவ்வகைக் கல்லாயுதங்கள் இற்றைக்கு முன் 160 இலட்சம் (1.6 மில்லியன்) ஆண்டுகள் முதலாக 130,000 ஆண்டுக் காலம்வரை உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

இக்கோடரிகளோடு கண்டெடுக்கப்பட்ட பன்முகக் கோளவடிவம் கொண்ட கருவிகள், வெட்டுக் கத்திகள், செதுக்கும் கருவிகள் அனைத்தும் அச்சூலியன் மரபுக் கருவிகள் என அழைக்கப்பட்டன. இக்கருவிகளின் செய்முறை, செய்திறன், உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இவை ஆரம்பகால அச்சூலியன், இடைக்கால அச்சூலியன், பிற்கால அச்சூலியன் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

வெகுசீராகச் செதுக்கப்பட்ட அச்சூலியன் கைக்கோடரி

ஹோமோ இரக்டஸ் மனிதர்களின் ஆசிய வருகை

இற்றைக்கு இரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் தோற்றம் பெற்ற ஹோமோ இரக்டஸ் வகை மனிதர்கள் காலத்துக்குக் காலம் ஆபிரிக்காவை விட்டு வெளியேறி மேற்கே மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவும், கிழக்கே அரேபியா வழியாகவும் மேற்கு ஆசிய நாடுகளை (சுமேரியா, இலம் – இன்றைய ஈராக், ஈரான் நாடுகள்) அடைந்தார்கள். அங்கிருந்து கைபர் கணவாய், போலன் கணவாய் (Khyber Pass, Bolan Pass) வழியாக இந்தியா-இலங்கையை அடைந்து, பின்னர் அங்கிருந்து கிழக்காசிய நாடுகள் வழியாக சீனா வரை சென்றிருக்கிறார்கள். ஆபிரிக்காவை விட்டு வெளியேறி, தலைமுறை தலைமுறையாக இடம்பெயர்ந்து சீனா சென்றடைய 10,000 முதல் 12,000 ஆண்டுகள் வரை ஆகியிருக்கும் எனக் கணிப்பிடப்படுகிறது.

இப்படம், ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை இடம்பெயர்ந்த ‘ஹோமோ இரக்டஸ்’ (பச்சை), ஐரோப்பாவில் பரவிய ‘நியண்டதால்’ (மஞ்சள்), மற்றும் உலகெங்கும் விரிவடைந்த நவீன மனிதர்களான ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (சிவப்பு) ஆகிய ஆதி மனித இனங்களின் இடப்பெயர்வைச் சித்தரிக்கிறது. ஹோமோ இரக்டஸ், நியண்டதால் ஆகிய ஆதி மனிதர்கள் இடம்பெயர்ந்த காலம் அவர்கள் உபயோகித்த கல்லாயுதங்களின் காலக்கணிப்பைக் கொண்டும், நவீன மனிதன் இடம்பெயர்ந்த காலப் பகுதி அவர்களின் மரபணுவியல் ஆய்வுகளைக் கொண்டும் கணிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புப் படிவங்களுக்கு உரியவர்களும், ஆபிரிக்காவில் தோற்றம் பெற்ற இரக்டஸ் மனிதர்களும் வேறானவர்கள் எனக் கருதப்பட்டது. இக்கருத்திற்கான மற்றுமொரு காரணம் கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் அச்சூலியன் வகைக் கைக்கோடரிகள் காணப்படாமையே ஆகும். ஆனால் 1980களில் ஆபிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான ஹோமோ இரக்டஸ் எலும்புகளும், கிழக்கு ஆசிய எலும்புகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பீட்டாய்வுகளும், இம்மனிதர்கள் ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்த ஒரே இனமக்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன (Anton, S.C. 2003).

அச்சூலியன் கைக்கோடரி இ.மு. 1.6 மில்லியன் ஆண்டளவில்தான் ஆபிரிக்க ஹோமோ இரக்டஸ் இனத்தவரால் முதலில் உருவாக்கப்பட்டது. கிழக்கு-தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஹோமோ இரக்டஸ் இனத்தவர் அதற்கு முன்னர் – இ.மு. 2 மில்லியன் ஆண்டளவிலேயே – ஆபிரிக்காவை விட்டு வெளியேறிவிட்டமையால் அச்சூலியன் வகைக் கோடரிகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் அச்சூலியன் மரபுக்குரிய கைக்கோடரி முதன்முறையாக தமிழ்நாட்டிலேயே கண்டெடுக்கப்பட்டது. சென்னைக்குச் சமீபத்திலுள்ள பல்லாவரத்தில் நிலவியல் கூறுகளின் ஆய்வை மேற்கொண்டிருந்த புரூஸ் புட் (Robert Bruce Foote) 1863ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதியன்று கூழாங்கற்களோடு சேர்ந்து மண்ணில் புதைந்து கிடந்த, கூராகச் செதுக்கப்பட்ட, குவாட்ஸ் கல்லினாலான அச்சூலியன் கைக்கோடரியைக் கண்டெடுத்தார் (Foote, R. B. 1868, 1886).

இந்திய உபகண்டத்தில் ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் உபயோகித்த கல்லாயுதங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரம் மற்றும் அத்திரம்பாக்கம், குடியம், கர்நாடகாவின் ஹன்ஸ்கி சமவெளியிலுள்ள இசம்பூர், மத்தியப் பிரதேசத்திலுள்ள பிம்பேத்கா மற்றும் சபர்மதி பள்ளத்தாக்கு, சிக்கிரி, நெவாஸா, யேதுரவாடி சதாப், பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப் ஆகிய இடங்களில் அச்சூலியன் வகைக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் (Homo Heidelbergensis)

மனிதப் பரிமாண படிநிலை வளர்ச்சியின் போது ஹோமோ இரக்டஸ்ஸிற்கும், ஹோமோ சேப்பியன்ஸ்ஸிற்கும் இடைப்பட்ட நிலையில் உருவாகி பிற்காலத்தில் அழிந்து போய்விட்ட ஓர் இனம் ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் (ஹைடெல்பேர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் கொடுக்கப்பட்ட பெயர்). இந்த ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் இனத்திலிருந்தே ஐரோப்பாவின் ஹோமோ நியண்டதாலென்ஸிஸ் மனிதர்களும், நவீன ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களும் உதயமானார்கள் எனக் கருதப்படுகிறது. இற்றைக்கு முன் 600,000 ஆண்டுகளுக்கும் 400,000 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இம்மனிதர்கள் அச்சூலியன் வகைக் கல்லாயுதத் தொழில்நுட்பத்தை அறிந்திருந்தார்கள். இவர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளில் வாழ்ந்தார்கள் என அறியப்படுகிறது.

தமிழகத்தில் இற்றைக்கு ஹோமோ இரக்டஸ் இன மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கான கற்கருவிகள் காணப்படுகின்றனவே தவிர இவர்களின் எலும்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களிடம் பேச்சு வன்மை இருக்கவில்லை. சைகைகளாலும், உறுமல்களாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டார்கள். கல்லினால் செய்யப்பட்ட கைக்கோடரி, வெட்டுக்கத்தி, ஈட்டி ஆகியவை கொண்டு விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடியும், தாவரங்களிலிருந்து உணவு சேகரித்தும் வாழ்க்கை நடத்தினார்கள். உணவு சேகரிப்பதிலேயே அவர்களது வாழ்நாளின் பெரும்பகுதி செலவழிந்திருக்கும். நெருப்பை உண்டாக்கும் அறிவைப் பெற்றிருந்தமையால் வேகவைத்த மாமிச உணவை உட்கொண்டிருப்பார்கள்.

ஐரோப்பாவின் வடபகுதிகளில் வாழ்ந்த ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் கூட்டாக இணைந்து பனியுகத்தின் பெருயானைகளை (Mammoth) உணவிற்காக வேட்டையாடினார்கள் என அறிய முடிகிறது. ஹோமோ இரக்டஸ் இன மக்கள் இற்றைக்கு 140,000 ஆண்டளவில் ஐரோப்பாவில் அழிந்து போனார்கள். 2009ஆம் ஆண்டில் யாவா நாட்டில் நான்டொங் (Ngandong) என்ற இடத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் 117-108,000 ஆண்டுக் காலத்திற்குரிய ஹோமோ இரக்டஸ் உபயோகித்த கற்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே, ஹோமோ இரக்டஸ் மக்களின் இறுதி வதிவிடமாகக் கருதப்படுகிறது (Rizal, Y. et al. 2020).

வட துருவத்திற்குச் சமீபமாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஹோமோ இரக்டஸ் மனிதர்கள் பனியுகப் பெருயானை ஒன்றை வேட்டையாடும் காட்சி (கற்பனை ஓவியம்).

ஐரோப்பாவில் நியண்டதால் மனிதர்கள்

இற்றைக்கு 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியண்டதால் மனிதர்கள் (Homo Sapiens Neanderthalensis) ஐரோப்பாவில் தோற்றம் பெற்றார்கள். இவர்கள் ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்து வந்த ஹோமோ ஹைடெல்பெயென்ஸிஸ் (Homo Heidelbergensis) எனப்படும் ஆதி மனிதர்களின் பரிணாம வளர்ச்சியால் ஐரோப்பாவில் தோற்றம் பெற்றார்கள் எனக் கருதப்படுகிறது (Pinhasi et al. 2011).

இந்த வகை மனிதர்களின் கபால எலும்பு முதல் தடவையாக ஜேர்மனியில் நியாண்டர் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட படியால் இம்மனிதனுக்கு நியண்டதால் மனிதன் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. இந்த எலும்பின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான நியண்டதால் மனிதர்களின் எலும்புகள் ஐரோப்பாவில் எழுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன (Roberts, A. 2009: 220).

நியண்டதால் மனிதர்கள் நெருப்பில் வேகவைத்த உணவை உட்கொள்ளும் காட்சி (கற்பனை ஓவியம்).

இவர்கள் ஹோமோ இரக்டஸ் மனிதர்களைவிட முன்னேறியவர்களாகக் காணப்பட்டார்கள். இவர்கள் கூட்டுக்குடும்பங்களாகக் குகைகளில் வாழ்ந்து, நெருப்பின் பயனை அறிந்து, குகைகளுக்குள் அடுப்பு மூட்டி, வேக வைத்த உணவை உட்கொண்டு, தோலினாலான தைத்த உடைகளை அணிந்து, காட்டுமரப் பட்டைகளிலிருந்து ஒட்டக்கூடிய பசைகொண்டு செய்த மரக்கலன்களில் மத்தியதரைக் கடலில் பயணம் செய்தார்கள் (Roberts, A. 2011). இவர்களிடம் இருந்த மத நம்பிக்கையால் இறந்தவர்களைப் புதைத்து, ஈமச்சடங்குகள் செய்துவந்தார்கள் (Wunn, I. 2000). ஸ்பெயின் நாட்டில் காணப்படும் 65,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்கள் நியண்டதால் மனிதர்களால் வரையப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களுக்கு அடிப்படையான ஒரு பேசும் சக்தி இருந்திருக்கலாம் (Levinson, S.C. 2018).

ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) எனப்படும் நவீன மனிதர்களோடு ஒப்பிடும் போது நியண்டதால் மனிதர்கள் உறுதியான உடற்கட்டும், நீளம் குறைவான அங்கங்களும் கொண்டிருந்தார்கள். இது அவர்கள் வாழ்ந்த குளிர்ப் பிரதேசத்தில், உடல் சூட்டைப் பேணுவதற்கான இயற்கைத் தெரிவால் (Natural Selection) அமைந்த உடலமைப்பாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதைத் தவிர உடல் சூட்டைப் பேணும் கொழுப்புச் சதை மிக்க உடலமைப்பும், உள்வாங்கும் சுவாசக்காற்றைச் சூடாக்குவதற்காக அமைந்த பெரிய நாசியும் குளிர்ப் பிரதேச வாழ்க்கைக்கான உடல் தகவமைப்புகளாகும். அவர்களில் ஆண்கள் ஆகக்கூடியது ஐந்து அடி ஐந்து அங்குல உயரமும் (165 செ.மீ.), பெண்கள் ஐந்து அடி உயரமும் (153 செ.மீ.) கொண்டிருந்தார்கள் (Stringer, C. 1984). அவர்களில் ஆண், பெண் இருவரது கபாலமும் சராசரி 1600 கனசதுர செ.மீ. அளவைக் கொண்டிருந்தது (Holloway, R.L. 1985).

இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவை ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்கள் வந்தடைந்ததாகக் கணிப்பிடப்பட்டிருக்கிறது. 2010ஆம் ஆண்டில் வெளிவந்த நியண்டதால் மனிதர்களின் மரபணு (DNA) ஆய்வில் நியண்டதால் மனிதர்களுக்கும், நவீன மனிதர்களுக்கும் கலப்பிருந்ததாக அறிய முடிகிறது (Sankararaman, S. et al. 2012).

இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் நியண்டதால் மனிதர்களின் இனம் அழிந்து போயிற்று. 2014ஆம் ஆண்டில் ‘நேச்சர்’ (Nature) என்ற ஆங்கில அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வின் அறிக்கையில் – ரஷ்யாவிலிருந்து ஸ்பெயின் வரை 40 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்கக்கரிமத் திகதிக் கணிப்பின்படி (Radiocarbon Dating) – 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நியண்டதால் மனித இனம் ஐரோப்பா எங்கிலும் அழிந்து போய்விட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது (Higham, Tom; et al. 2014). இந்த இனம் அழிந்து போனமைக்குப் பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன:

  1. நவீன மனிதர்களோடு உணவுக்கும் இருப்பிடத்திற்கும் போட்டியிட்டமை.
  2. நவீன மனிதர்களோடு உறவுகொண்டு அவர்கள் இனத்துடன் ஒன்றிப்போனமை.
  3. சில தொற்றுநோய்களை இவர்களால் தாக்குப்பிடிக்க இயலாமல் இருந்தமை.
  4. குறுகிய குடும்பத்திற்குள் தன் இனச்சேர்க்கையால் ஏற்பட்ட இயலாமை நோய்கள்.
  5. அடிக்கடி மாறும் தட்பவெப்ப நிலையைத் தாக்குப்பிடிக்க இயலாமல் அழிந்தமை.

டெனிஸோவன் மனிதர்கள் (Denisovans)

ஆசியாவில் கீழைப் பழங்கற்காலத்திலும் மத்திய பழங்கற்காலத்திலும் வாழ்ந்து முற்றிலும் அழிந்துபோன இந்த ஆதி மனித இனத்தவர் பற்றிய முதல் ஆதாரம் 2010இல் கண்டறியப்பட்டது. தெற்கு சைபீரியாவின் அல்தாய் மலைக் குகையில் கிடைத்த ஓர் இளம் பெண்ணின் விரல் எலும்பில் செய்யப்பட்ட ‘மைட்டோகொண்றிய’ மரபணு ஆய்வின் மூலமே இக்கண்டுபிடிப்புச் சாத்தியமானது. இதன் காலம் இ.மு. 50,000க்கும் 30,000க்கும் இடைப்பட்டதாகக் கணிக்கப்பட்டது (Krause, J. et al. 2010: 894-897).

இந்த டெனிஸோவன் பெண்ணின் ‘மைட்டோகொண்றிய’ மரபணுவில் காணப்படும் மரபணுக் குறியீட்டுப் பிறழ்வுப் பேதங்களைக் கணக்கிடும் போது, இந்த இனத்தில் காணப்படும் மரபணுக்களில் 4 விழுக்காடு ஆதி மனித இனங்களிலிருந்து இற்றைக்கு 800,000 ஆண்டுக்கும் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குமிடையே பிரிந்து போனதாகக் கருதவேண்டியுள்ளது (Reich, David 2019: 54). இந்த இனங்கள் ‘ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ்’ எனப்படும் ஆதி மனித இனங்களிலிருந்து பிரிந்து, நியண்டதால்களைத் தொடர்ந்து இ.மு. 470,000–380,000 ஆண்டுகளில் தோற்றம் பெற்றார்கள் (Reich, D. 2019: 67).

டெனிஸோவா குகை. இந்தக் குகையிலிருந்து மேலும் டெனிஸோவன் மனிதர்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டமையால் இக்குகை ‘டெனிஸோவா குகை’ என அழைக்கப்படுகிறது. 

இந்த மனிதர்கள் மரபணு (DNA) ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டவர்களே தவிர, இவர்களின் முழு எலும்புக்கூடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களுக்கு உயிரியல் ரீதியான பெயரும் (ஹோமோ என ஆரம்பிக்கும் பெயர்) இதுவரை வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ஹோமோ டெனிஸோவா (Homo Denisova) என்ற பெயர் வழங்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் (Douglas, M.M & Douglas, J.M. 2016; Reich, D. 2019: 54).

இம்மனிதர்களின் கருமைய மரபணு (Nuclear DNA) ஆய்வுகள், இவர்கள் நியண்டதால் மனிதர்களுக்கு நெருக்கமானவர்கள் எனக் காட்டுகிறது. இந்தக் குகையில் காலத்திற்குக் காலம் நியண்டதால் மனிதர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால் ஒரே சமயத்தில் கூடி வாழ்ந்தார்களோ எனத் தெரியவில்லை. 2019ஆம் ஆண்டில் கிரேக்க தொல்லியல் ஆய்வாளரான கதரினா டூக்கா டெனிஸோவா குகையிலிருந்து பெற்று, கரிமக்கதிர் ஆய்வுக்கு உட்படுத்திய எலும்பு (டெனிஸோவா 2) இ.மு. 195,000–122,700 ஆண்டுகளைக் காட்டியது (Sawyer, S. et al. 2015; Douka, K. 2019). குகையின் கிழக்கிலிருந்து பெறப்பட்ட படிவுகள் இ.மு. 217,000ஆம் ஆண்டைக் காட்டின. குகையிலிருந்து பெறப்பட்ட மற்றைய கருவூலங்கள் டெனிஸோவன் மக்களின் குடியிருப்புகளின் காலத்தை இ.மு. 287,000 +41ஆம் ஆண்டு எனக் காட்டின (Jacobs, Z. et al. 2019).

டெனிஸோவன் மக்களின் குடியிருப்புகள் இதுவரை திபெத்திலுள்ள பைசியா கார்ஸ்ட் குகை (Baishiya Karst Cave), மற்றும் லாவோஸிலுள்ள அன்னமைட் மலைப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. மரபணு ஆய்வுகள் மூலம் அவர்கள் கருமையான தோல், தலை மயிர், கண்கள் கொண்டவர்கள் என்றும், உடலமைப்பில் நியண்டதால் மனிதர்களை ஒத்தவர்கள் என்றும் அறிய முடிகிறது (Sion, V. et al. 2017).

இவர்கள் நியண்டதால் மனிதர்களுடனும், நவீன மனிதர்களுடனும் இனக்கலப்பில் ஈடுபட்டார்கள் எனவும் அறிய முடிகிறது. இன்றைய மெலனேசியர்களில் ஏறக்குறைய 5 விழுக்காடு விகிதத்தினர் இந்த இனக்கலப்பு கொண்டவராவர். மத்திய ஆசியாவிலும், தென்கிழக்காசியத் தீவுகளிலும் குறைந்த விகிதத்தில் இந்த இனக்கலப்புக் காணப்படுகிறது (Reich, D. 2019: 64-63).

மரபணு ஆய்வுகளிலிருந்து உருவாக்கப்பட்ட டெனிஸோவன் மனிதன்

ஹோமோ சேப்பியன்ஸ் எனப்படும் நவீன மனிதன்

உலகில் தோன்றிய மனித இனங்களில் அகில உலகமெல்லாம் பரவியிருக்கும் மனித இனம் ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens Sapiens) என அழைக்கப்படும் நவீன மனித இனமாகும். இலத்தீன் மொழியில் ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ என்றால் ‘அறிவுக் கூர்மையுடைய மனிதன்’ எனப் பொருள்படும். இந்தப் பெயரை சுவீடன் நாட்டைச் சேர்ந்த உயிரினக்கற்கை அறிஞரான கார்ல் லின்னியஸ் (Biologist Carl Linnaeus) 1735ஆம் ஆண்டில், தனது 28வது வயதில் எழுதி வெளியிட்ட ‘இயற்கை ஒழுங்குமுறை’ (Systema Naturae) என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். மனித இனங்களுக்கு ‘ஹோமோ’ என்ற பெயரையும், தாவர இனங்களுக்கு அவற்றின் குடும்ப இனப் பெயரையும் குழுப் பெயரையும் சேர்த்து இலத்தீன் மொழியில் பெயர் கொடுத்தவர் இவர். இவர் மிருக இனக் குடும்பங்களுக்கும், தாவர இனக் குடும்பங்களுக்கும் கொடுத்த பெயர்களே இன்றுவரை விலங்கின, தாவர இனக் கற்கைகளில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

நவீன மனிதர்கள்

மானிடவியல் கற்கை நெறிகளின் படி (Human Anthropology) இற்றைக்கு 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ ஹைடெல்பயென்ஸிஸ் (Homo Heidelbergensis) என்ற ஒருவகை ஆதி மனித இனத்திலிருந்து இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் நவீன மனிதன் உருவானான் எனக் கருதப்பட்டது. ஆனால், 2017ஆம் ஆண்டில் மொறக்கோ நாட்டில், ‘ஜெபெல் ஈர்ஹூட்’ என்ற இடத்திலுள்ள ஒரு குகையில் கண்டெடுத்த கபாலம், இற்றைக்கு 300,000ஆம் ஆண்டுக்குரிய ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் மனிதனுக்கு உரியதாகக் கணிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான ஆபிரிக்க ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் கபாலங்கள் இற்றைக்கு 200,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தைக் காட்டாமையால், இந்த ஒரு கணிப்பீட்டை மட்டும் கொண்டு அதைப் பொதுவாகக் கொள்வது கடினம் என்பது சில ஆய்வாளர்களின் கருத்தாகும். இன்று பெரும்பாலான ஆய்வாளர்கள் இ.மு. 300,000 ஆண்டை ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் மனிதத் தோற்ற ஆண்டாகக் கொள்கிறார்கள்.

ஆபிரிக்காவிலிருந்து இந்த நவீன மனிதன் உலகம் முழுவதும் பரவி, முன்னர் உலகெங்கும் வாழ்ந்த ஆதி மனித இனங்களை அகற்றி, பதிலாக தான் அங்கே இடம் கொண்டான். இம்மனிதன் இற்றைக்கு 65–60,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய உபகண்டத்தை வந்தடைந்தான் என இன்றைய மரபணுவியல் ஆய்வுகள் அறியத்தருகின்றன.

நவீன மனிதனுக்கு உயர்வான, சிக்கலான மூளை இருந்தமையால் அவனிடம் ‘கருத்துநிலைச் சிந்தனை’ (Power of Abstract Thinking) செய்யக்கூடிய ஆற்றல் இருந்தது. இதன் காரணமாக தரமான கருவிகளையும், பண்பாட்டையும், பேசும் மொழியையும் அவனால் உருவாக்க முடிந்தது. இம்மனிதனிடம் உயர்ந்த சமூகச் சமாளிப்புத் திறமை இருந்தபடியால் கூடிவாழும் மனப்பான்மையும், போட்டியிடும் மனப்பான்மையும் கொண்ட பலவகை மக்கள் கூடிவாழும் சிக்கலான சமுதாயத்தில் தனது வாழ்க்கையைச் சுலபமாகக் கொண்டு நடத்த முடிந்தது. தான் வாழ்ந்த சூழலை உணர்ந்து அதை மாற்றியமைக்கும் ஆற்றலும், வல்லமையும் கொண்டிருந்தபடியினால் மனித இனத்தின் வளர்ச்சியைப் பெருக்கி, மொழியியல், இலக்கியம், விஞ்ஞானம், பகுத்தறிவு, தத்துவம், சமயம், புராணம் ஆகிய கற்கை நெறிகளை அவனால் விருத்திசெய்ய முடிந்தது.

இதைத் தொடர்ந்து வரும் பகுதியில் இந்த நவீன மானிடனின் இந்திய-இலங்கை வருகை பற்றி விரிவாகக் கூறப்படுகிறது.

1735இல் கார்ல் லின்னியஸ் வெளியிட்ட ‘இயற்கை ஒழுங்கு முறை’ நூல்.

தொடரும். 



About the Author

சிவ தியாகராஜா

கலாநிதி சிவ தியாகராஜா மருத்துவம், மரபணுவியல், தொல்லியல், வரலாறு ஆகிய கற்கைத் துறைகளில் பட்டங்கள் பெற்று பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து B. Sc பட்டத்தையும், இலங்கைப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்திலிருந்து M.B.B.S பட்டத்தையும், இலண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து Ph. D. பட்டத்தையும் பெற்றவராவார். இது தவிர கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் புகழ் பெற்ற பேராசிரியர் கொலின் ரென்புரூ (Prof. Colin Renfrew) நடத்திய தொல்லியல் பயிற்சிப்பட்டறைகளிலும் பங்கு பெற்றுள்ளார். கலாநிதி சிவ தியாகராஜா கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருபத்து ஆறு நூல்களைப் படைத்திருக்கிறார். இவரது சில ஆய்வு நூல்கள் இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்களிலும் உசாத்துணை நூல்களாகப் (reference books) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவர் எழுதிய ஆய்வு நூல்களில் Peoples and Cultures of Early Sri Lanka, Genetic Origins of the Tamils, Genetic Origins of the Sinhalese People, Kantarodai Civilization of Ancient Jaffna, Archaeological Excavations at the Jaffna Fort, Early Siva Temples of Ancient Lanka, The Tamils of Lanka - A Timeless Heritage ஆகிய ஆங்கில நூல்களும், மருத்துவக் களஞ்சியம், ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள், உலகில் பெரிய இந்துக் கோயில் அங்கோர் வாட், கில்கமேஷ் காவியம், தமிழ் மக்களும் தழுவிய மதங்களும், பௌத்தத்தை வளர்த்த பண்டைய தமிழர்கள் ஆகிய தமிழ் நூல்களும் பிரபலமானவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்