பெருந்தோட்டத் தொழில்துறையின் எழுச்சியோடு மேலெழுந்த தொழில்களும், வர்க்கங்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

பெருந்தோட்டத் தொழில்துறையின் எழுச்சியோடு மேலெழுந்த தொழில்களும், வர்க்கங்களும்

August 31, 2026 | Ezhuna

மலையகத் தமிழர்களின் புதிய வரலாற்றை இருபத்தோராம் நூற்றாண்டு அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்ப எழுத வேண்டிய தேவை இன்றியமையாதது ஆகும். இவர்களின் 200 ஆண்டுகால வாழ்வு, இலங்கையின் பெருந்தோட்டங்களில் ஒரு வரலாற்று விபத்தாக நிகழ்ந்திருந்தாலும், இவர்களுக்கென்று ஒரு நெடிய பாரம்பரியம் உண்டு என்பதை மறுக்க முடியாது. இந்த நெடும்பயணத்தில், இவர்கள் நூற்றுக்கணக்கான வன்முறைகளுக்கும், குடியுரிமை பறிப்பு, நிலவுரிமை பறிப்பு உள்ளிட்ட பாகுபாடுகளுக்கும் ஆளாகினர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தங்களால் இவர்களில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். எஞ்சியவர்கள் இலங்கையின் ஏனைய சமூகங்களால் அடிமைக் குடிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆயினும், இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும், இந்த மக்கள் தமது தனித்துவமான மொழி, பண்பாடு, உற்பத்தி முறை, கூட்டு உளவியல் ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றனர். அவ்வகையில், இந்நூற்றாண்டின் கண்ணோட்டத்தில், அவர்களது தனித்துவமான இருப்பை நிலைநிறுத்தும் முகமாக அவர்களுக்கான ஒரு புதிய அரசியல் – பண்பாட்டு அடையாளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் உணரப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு ‘மலையகத் தமிழர்களின் அரசியலும் பண்பாடும்’ எனும் இத்தொடர் எழுதப்படுகின்றது

இந்தியத் தமிழ் தொழிலாளர்களின் இலங்கை வருகையோடு 3,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்த அடர்ந்த கானகங்களில் பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ‘சிலோன் டீ’, லண்டன் சந்தையில் மிகவும் பிரசித்தமானதாக விளங்கியது. ‘தேயிலையின் தங்கப் பள்ளத்தாக்கு’ இங்கு தாபிக்கப்பட்டது. எங்கும் பரந்து விரிந்த கோப்பி, தேயிலை, இறப்பர் தோட்டங்கள் விரிவடைந்தன.

தோட்டத்துறை உற்பத்திகளைத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் ஏற்றுமதி செய்வதற்கு வீதிகளும், புகையிரதப் பாதைகளும் தேவைப்பட்டன. மோட்டார் வாகனத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு இறப்பர் செய்கை அவசியமானதாக இருந்தது. இச்சூழ்நிலையில், முதலாம் உலகப்போருக்கான தயாரிப்புகள் ஜேர்மனியிலும், பிரித்தானியாவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. 1885–1915ஆம் ஆண்டுக்காலம் வரையான காலப்பகுதியில் பெருந்தோட்ட உற்பத்திகள் பாரிய பாய்ச்சலைக் காட்டின.

1885      1915
தேயிலைரூ. 3 மில்லியன்  ரூ. 122 மில்லியன்  
இறப்பர்  ரூ. 1000 மில்லியன்  ரூ. 8.5 மில்லியன்  
தென்னைரூ. 8.5 மில்லியன்       ரூ. 41 மில்லியன்  

1901–1911 காலப்பகுதியில் சனத்தொகை 15% அதிகரித்தது. கொழும்பு மாவட்ட சனத்தொகை 1901ஆம் ஆண்டு 154,000 இலிருந்து 1911ஆம் ஆண்டு 200,000 ஆக அதிகரித்தது. இது 30% அதிகரிப்பாகும். 1911ஆம் ஆண்டுச் சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநகரப் பொருளாதாரம் காலனித்துவப் பொருளாதாரமாகக் காணப்பட்டது. முகவர் இல்லங்கள், வணிக வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், போக்குவரத்து முகவராண்மைகள், ஏற்றுமதி வணிகத்திற்குத் தேவையான அனைத்து உபதொழில்களும் காணப்பட்டன. மேலும், பெருந்தோட்ட உற்பத்திகளைப் பதப்படுத்தும், பொதியிடும் தொழிற்சாலைகள், பொறியியல் வேலைத்தலங்கள், சில்லறைக் கடைகள், சேவை நிலையங்கள், பராமரிப்புத் தொழிலகங்கள் என்பன விரிவடைந்தன.

கொழும்பு மாவட்டத்தின் வேலையாள் படையாக 75,000 நபர்கள் காணப்பட்டார்கள். இது மொத்த ஊழியர்களில் 4.4% ஆகக் காணப்பட்டது. 19,000 பொதுத்துறை ஊழியர்களும், 17,000 கைத்தொழில் ஊழியர்களும் காணப்பட்டனர். 17,000 சிறு வணிகர்கள், 17,000 வீட்டு வேலையாட்கள், 5,000 பொதுச்சேவை ஊழியர்கள் காணப்பட்டனர்.

போக்குவரத்துத் தொழில்துறையானது வீதிகள் மற்றும் புகையிரதப் பாதைகள், இயந்திரத் தொழில்துறையோடு தொடர்புடையதாகக் காணப்பட்டன. 1911ஆம் ஆண்டு 700 மைல் ரயில் பாதைகள் போடப்பட்டன. இக்காலப்பகுதியில் 5,800 ஆகக் காணப்பட்ட தொழிலகங்கள் 9,500 ஆக, 64% அதிகரித்தன.

2,800 தொழிலாளர்கள் இயந்திரத் தொழில், இரும்புத் தொழில் புரிந்தும், தச்சுத் தொழில் புரிந்தும் வந்தனர். 1918ஆம் ஆண்டு 4,000 மைல் வீதி அமைக்கப்பட்டிருந்தது. 21,000 ஊழியர்கள் வீதியமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பெருந்தோட்டத் தொழில்துறையின் துரித எழுச்சியின் காரணமாக, வீதியமைப்பதும், துறைமுக நிர்மாணிப்புகளும் வேகமாக வளர்ச்சி அடைந்தன. 1888–1906ஆம் காலப்பகுதியில் துறைமுகங்களும், கப்பல் பராமரிப்புத் திருத்தப்பணிகளும் விரிவடைந்தன.

பெருந்தோட்டத் தொழில்துறையின் இயந்திரப் பராமரிப்புப் பணியில் 1,000 உள்ளூர் ஊழியர்கள் ஈடுபட்டனர். 30 பிரித்தானியப் பொறியியலாளர்கள் பணியாற்றினர். அநேக பிரித்தானியப் பொறியியல் கம்பனிகள் நிறுவப்பட்டன. கொழும்பு கொமர்சியல் கம்பனி, கிழக்கு உற்பத்திக் கம்பனி என்பன அவற்றில் பிரதானமானவை. இக்காலப்பகுதியில் மேலும் பல தொழில்கள் விரிவடைந்தன. சில்லறைக் கடைகள், அச்சுக் கடைகள், சிறு தொழிற்சாலைகள், புடைவைச் சாலைகள் போன்றவை காணப்பட்டன. 1911இல் கொல்லர் 2,300 பேர், தச்சர் 2,800 பேர், மேசன் 1,800 பேர், விற்பனையாளர்கள் 1,600 பேர், புத்தகம் கட்டுவோர் 950 பேர், பொற்கொல்லர்கள் 648 பேர், வாகனமோட்டிகள் 180 பேர் எனக் காணப்பட்டனர்.

ஆரம்பகால உழைப்பாளர்களும் சமூகப் பொருளாதார நிலையும்

பெருந்திரளான பயிற்றப்படாத இந்தியத் தொழிலாளர்கள் 1911 காலப்பகுதியில் துறைமுகங்களிலும், இரயில்வே துறையிலும், பொதுவேலைத் திணைக்களத்திலும் தொழில் புரிந்தனர். சுயாதீனத் தொழில்களில் 17,000 பேர் வீட்டு வேலையாளர்களாகவும், 3,600 பேர் ரிக்சா ஓட்டுநர்களாகவும், 2,300 பேர் வண்டிக்காரர்களாகவும், 1,450 பேர் தையல்காரர்களாகவும், 1,320 பேர் சலவைத் தொழிலாளர்களாகவும், 492 பேர் சிகை அலங்காரத் தொழிலாளர்களாகவும், 320 பேர் பேக்கரிக்காரர்களாகவும், 269 பேர் பாதணி செய்வோராகவும், 235 பேர் இறைச்சி வெட்டும் தொழிலாளர்களாகவும் காணப்பட்டனர். 1904–1911 காலப்பகுதியில் ரொட்டியின் விலை 6 சதத்திலிருந்து 12 சதமாக ஆகியது. இது 100% அதிகரிப்பாகும். அரிசி, சீனி என்பன 17% உயர்வும், மீன், மரக்கறி என்பன 50%–100% உயர்வும் அடைந்தன.

அச்சகத் தொழிலில் லிப்கா பிரின்டோ நிறுவனம் மாதம் சராசரி ரூ.20 சம்பளம் வழங்கியது. அரச அச்சகம் மாதச் சம்பளமாக ரூ.30 வழங்கியது. ஏனைய அச்சகங்கள் ரூ.11.50 சம்பளம் வழங்கின. இரயில்வே தொழிற்பட்டறைகளில் 1882–1912 காலப்பகுதியில் பொருத்துநர்களின் சம்பளம் அதிகரித்தது. ஆனால் நாட்கூலி ரூ.1.57 முதல் ரூ.1.30 ஆகக் குறைவடைந்தது. தச்சுத் தொழிலில் ரூ.1.17 இலிருந்து ரூ.1.05 ஆகக் குறைவடைந்தது. தற்காலிகத் தொழிலாளர்களின் வேதனமும் குறைக்கப்பட்டது. ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு துரிதமாக அதிகரித்த அதேவேளை, வேதனங்கள் சடுதியாகக் குறைந்தன. இதன் விளைவாக, 1912ஆம் ஆண்டு இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1897இல் பயிற்றப்படாத இரயில்வே தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக, நாளாந்த வேதனம் 16 சதத்திலிருந்து 50 சதமாக உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1908ஆம் ஆண்டு 4,000 பெண்களும் சிறுமிகளும் பொதுவேலைத் திணைக்களத்தில் கல்லுடைக்கும், வீதியமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 12 முதல் 36 சதம் வரை தினக்கூலியாகப் பெற்றனர். சுதந்திரத் தொழிலாளர்களின் கூலிகள் வேறுபட்டன. 1898இல் வண்டிக்காரர்களுக்கு ஒரு சுமைக்கு 35 சதம் வழங்கப்பட்டது. 1906 ஆம் ஆண்டு வண்டிக்காரர்கள் மாதம் ரூ.12 முதல் ரூ.15 வரை உழைத்தனர். 67,000 வீட்டுப் பணியாளர்கள் இக்காலப்பகுதியில் காணப்பட்டனர். இவர்கள் நாளாந்தம் மிகக் குறைவான கூலிக்கு அமர்த்தப்பட்டனர். இவர்கள் அடிமைகள் போலவே நடத்தப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.3 உணவுடன் கூலியாக வழங்கப்பட்டது. 1911 ஆம் ஆண்டு இது ரூ.5.50 ஆக அதிகரித்தது. இவர்கள் 9–10 மணித்தியாலங்கள் நாளாந்தம் வேலை செய்தனர்.

மாதம் ரூ.3 முதல் ரூ.10 வரை வீட்டு வாடகை செலுத்தினர். சராசரியாகக் குடும்பமொன்றில் 6–8 குழந்தைகள் இருந்தனர். கொழும்பு அச்சகத் தொழிலாளர்கள் 15 × 8 அடி அறைகளில் வாழ்ந்தனர். அவர்களது மனைவிமாரும் குழந்தைகளும் அவர்களோடே வாழ்ந்தனர். சில தொழிலாளர்கள் 5 முதல் 6 மைல்கள் கால்நடையாகவே வேலைக்கு வந்தனர். மாலை வேலை முடிந்து அவ்வாறே சென்றனர். சிலவேளைகளில் மொரட்டுவ போன்ற 15 மைல் தொலைவில் இருந்த இடங்களிலிருந்து கால்நடையாகவே வேலைக்கு வந்தனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் அதிக விடுமுறைகளை எடுத்துக்கொள்வார்கள்.

எழுதுநர்கள்/ எழுத்தாளர்கள்

பிரதான தோட்டத் தொழில்துறையுடன் அதனையடுத்த உபதொழில்களும், வர்த்தகம், கைத்தொழில், சேவைகளும் விரிவாக்கமடைந்தன. வணிக வங்கிகள், ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனங்கள், வணிக இல்லங்கள், அரச சேவைகளுக்கு எழுத்தாளர்கள் தேவைப்பட்டனர். 1911ஆம் ஆண்டில் அரச பணியில் 5,400 எழுத்தாளர்களும், வணிகத் துறையில் 7,200 எழுத்தாளர்களும், கொழும்பில் 1,650 முறைசாரா எழுத்தாளர்களும் பணிபுரிந்தனர். இவர்கள் ‘வெள்ளைநிற’ வேலையாட்கள் என்று அழைக்கப்பட்டனர். கிராமிய விவசாய வாழ்வைக் கைவிட்டவர்களும் அடிப்படை ஆங்கில அறிவைப் பெற்றவர்களும் ஐரோப்பிய பாணியிலான உடையுடன் கௌரவமிக்க தொழில் புரிந்தனர்.

1911ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 32,000 எழுத்தாளர்களில் 7% ஆனோர் பறங்கி இனத்தவராக இருந்தனர். இவர்கள் எழுத்தாளர் சேவையின் முதுகெலும்புகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் இலங்கையின் புதிய மத்திய தர வர்க்கமாகத் தோற்றம் பெற்றனர். இவர்கள் வட்டியற்ற கடன் பொறியில் சிக்கித் தவித்தனர். கூலி, வேலைநேரம், விடுமுறைகள், மேலதிகக் கொடுப்பனவுகள், ஓய்வூதியம், தொழில் பாதுகாப்பு குறித்து ஆர்வம் காட்டினர். 1893ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பிரதம செயலகப் பிரதம எழுத்தாளர் ரூ.290 மாதச் சம்பளம் பெற்றார். ஏனைய எழுத்தாளர்கள் மாதம் ரூ.60–80 பெற்றனர்.

எனினும், மாதம் வீட்டு வாடகை ரூ.25, வேலையாள் மற்றும் சலவைச் செலவு ரூ.15, சக்தி மற்றும் வெளிச்சச் செலவு ரூ.65, உடை ரூ.10 என மொத்தம் ரூ.115 மாதச் செலவாக மதிப்பிடப்பட்டது. இவர்கள் முதலில் தம்மிடையே நண்பர் கழகங்களைத் தாபித்தனர். 1928ஆம் ஆண்டு அரச எழுத்தாளர்களும், வணிக எழுத்தாளர்களும் தொழிற்சங்க இயக்கங்களை உருவாக்கினர்.

முதலாவது தொழிலாளர் நலச் சட்டம்

இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்களுக்கும் தோட்ட முதலாளிமாருக்கும் இடையேயான ஒப்பந்தங்களை ஒழுங்குபடுத்துவதற்காக 1841ஆம் ஆண்டிலும் 1865ஆம் ஆண்டிலும் கொண்டுவரப்பட்ட இச்சட்டம் முதலாவது தொழிலாளர் நலச் சட்டம் என நம்பப்படுகிறது. இச்சட்டம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலனைப் பேணுவதற்காகவே நிறைவேற்றப்பட்டது. சில சந்தர்ப்பங்களில் வீட்டு வேலையாட்கள் மற்றும் நகர்ப்புறப் பயிற்றப்பட்ட தொழிலாளர்களையும் உள்ளடக்கியது.

1865ஆம் ஆண்டுச் சட்டத்தின்படி ஒரு தொழிலாளி உடன்படிக்கையை மீறுவது குற்றமாகும். கீழ்ப்படியாமை, ஒரு மாத முன்னறிவித்தலின்றி அல்லது காரணமின்றி வெளியேறுவது என்பன தண்டனைக்குரிய குற்றங்களாகக் கொள்ளப்பட்டன. மூன்று மாதச் சிறை அல்லது 50 ரூபாய் தண்டம் இரண்டும் விதிக்கப்பட்டன. ஆனால் முதல் மாதச் சம்பளம் வழங்கப்பட்டால் இரண்டு நாள் முன்னறிவிப்பு போதுமானது.

1872ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களுக்கான மருத்துவத் தேவைகள் கட்டளைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1920ஆம் ஆண்டு கல்விக் கட்டளைச் சட்டமும், 1927ஆம் ஆண்டு குறைந்தபட்சக் கூலிச் சட்டமும் நிறைவேற்றப்பட்டன. இதன் பின்னரே தோட்டத் தொழிலாளர்களின் நலன்கள் சிறிதளவாவது அரசின் கவனத்தை ஈர்த்தன எனலாம்.

1833ஆம் ஆண்டு பொது ஊழியர் சேமலாப நிதிச் சங்கம் தாபிக்கப்பட்டது. இது அங்கத்தவர்களின் சம்பளத்தில் 2.5% அங்கத்துவக் கட்டணமாக அறவிட்டது. 1.5% கடன் வழங்கியது. இதன் அங்கத்துவத் தொகை 1883இல் 203 ஆக இருந்தது. 1893இல், அதாவது பத்தாண்டுகளில், 37,000 ஆக அதிகரித்தது.

தோட்டங்களில் தொழிலாளர் பற்றாக்குறை

1901ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இறப்பர் விலை இராத்தல் ஒன்றுக்கு ரூ.2 ஆக இருந்தது. அடுத்த ஐந்தாண்டுகளில் இராத்தல் ஒன்று ரூ.12 ஆக உயர்ந்தது. பாரியளவான இந்தியத் தொழிலாளர்கள் இக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து பர்மாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்று கொண்டிருந்தனர். இந்தியாவில் ஆட்சேர்ப்பு இல்லங்கள் தாபிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

ஆளுநர் 1904 ஆகஸ்ட் 3 அன்று காலனியச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் பொதுச் சாலைகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், இரயில்வே திணைக்களம் உட்பட ஏனைய திணைக்களங்களிலும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டாண்டுகளுக்கு மொத்தமாக ரூ.11,000 வீதம் செலவு மதிப்பிடப்பட்டது. இதில் 25% ஐ பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வழங்க விருப்பம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். இதன்படி 1904 செப்டம்பர் 1ஆம் திகதி திருச்சிராப்பள்ளியில் ‘நேர்மன் ரோசல்’ எனும் தொழில் ஆணையாளரால் முகவரகம் அமைக்கப்பட்டது. இம்முறையில் ஆட்சேர்ப்பானது துண்டு முறை (Ticket System) என அழைக்கப்பட்டது. ஆட்சேர்க்கப்படும் தொழிலாளர்களுக்கு தகரத் துண்டுகளில் இரண்டு இலக்கங்கள் வழங்கப்பட்டன. ஓர் இலக்கம் தொழிலாளர் ஆட்சேர்க்கப்பட்ட மாவட்டத்தைக் குறிப்பிட்டது. இரண்டாம் இலக்கம் தொழிலாளரைக் குறித்தது. இம்முறை குறைந்த செலவில் ஆட்சேர்ப்பதற்கு உதவியாக அமைந்தது. ஆட்சேர்ப்பின் போது கங்காணிமார் முற்பணத்தைச் சேர்த்துக் கொடுத்தனர்.

மேலும், இக்காலப்பகுதியில் மெட்ராஸ் மாகாணத்தில் கடுமையான வறட்சி நிலவியது. மழை பொய்த்துப் போனது. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலகுவாகத் தொழிலாளர்களைக் கவர்வதற்கு 11,000 துண்டுப் பிரசுரங்களை மூன்று மாதங்களில் விநியோகித்தனர்.

தோட்டங்களில் நிலவிய முதலாளிமாரின் இரும்புக்கரம் கொண்ட ஒடுக்குமுறைகள், கங்காணிமாரின் கொடுமைகள், கடன் பொறி போன்ற காரணங்களால் தொழிலாளர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டது. மீறினால் உடன்பாட்டை மீறியதாகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்; சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் தேயிலையும் இறப்பரும் அத்தியாவசியப் பண்டங்களாக மாறின. பிரித்தானியக் குடியேற்றங்களுக்கு தொழிலாளர்களைக் கொண்டு செல்வதைத் தடுக்க ஜேர்மானிய இராணுவம் முயன்றது.

மண்டபம் முகாமும் இலங்கை–இந்திய போக்குவரத்துச் சேவையும்

1914ஆம் ஆண்டு பெப்ரவரி 24 அன்று இலங்கை மற்றும் மதராஸ் ஆளுநர்களால் தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலான கடல்வழிப் படகுச் சேவை அமைக்கப்பட்டது. அதே ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி முதலாவது தொழிலாளர்கள் முகாமுக்கு வந்தனர். மண்டபம் முகாம் நீர்வசதி மற்றும் தடுப்பூசி வசதி அற்றிருந்தது. முகாமுக்கு மத்தியில் இரயில் ஓடியது. எனவே, 1914 ஜூன் மாதம் 240 ஏக்கர் நிலத்தில் தனியான முகாம் அமைக்கப்பட்டது. இலங்கைப் பொதுப்பணித் திணைக்களமும் தமது வேலைகளை முகாமில் தொடங்கியது.

புதிய மண்டபம் முகாமில் 2,200 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கக்கூடிய 15 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியே மலசலகூடங்கள் இருந்தன. குளியலறைகளும் சமையலறைகளும் இருந்தன. எட்டுப் பிரிவுகளில் 1,000 பல்வகைப் பயணிகள் தங்கக்கூடிய வசதிகள் இருந்தன. ஸ்பென்சர் அண்ட் கோ. என்ற மதராஸ் நிறுவனம் அரிசி, மரக்கறிகளை விநியோகித்தது. தகரத் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது.

தனுஷ்கோடியிலிருந்து மாட்டு மந்தைகள் போல் நீராவிப் படகுகளில் தலைமன்னாருக்கு கூலிகள் ஏற்றப்பட்டனர். எனவே, கூலிகள் தம் கிராமங்களுக்குத் திரும்புவதற்கே ஆர்வம் காட்டினர்.

எனினும், மண்டபம் முகாம் அமைக்கப்பட்ட பின்னர் ஓராண்டில் 152,057 கூலிகள் தலைமன்னாருக்குப் பயணமாகினர். முகாமின் நிர்வாகியாக இருந்த  H. கோர்டன் கிறேன், இம்முறைமை பற்றிக் குறிப்பிடும்போது, இது ஒரு முறைசார்ந்த ஆட்சேர்ப்பாகும் என்றும், இங்கே வெளிநாட்டு முகவர்கள் மதுரை மக்களிடமிருந்து ஆட்சேர்ப்பு செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவர்கள் தோட்டங்களில் அடிமைகளாக வேலை செய்வதற்குத் தொழிலாளர்களைத் திரட்டுவதை மாவட்ட வருமான அதிகாரிகளோ உள்ளூர் அதிகாரிகளோ எதிர்க்கவில்லை.

முன்பு, திருநெல்வேலி மாவட்ட அதிகாரி 1904 மார்ச் 31 அன்று ஓர் ஆட்சேபக் கடிதத்தை மதராஸ் அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார். 

குடிவரவு தொழிலாளர்களின் விடயத்தில் தடுப்பு முகாம்கள் நிரந்தரமான ஒன்றாக மாறியது. 1917ஆம் ஆண்டு இத்தடுப்பு முகாமின் அத்தியட்சகரான கலாநிதி வென் லங்சன் பேர்க் அவர்கள், இது மெட்ராஸ் வட்டாரங்களில் முதன்மையான அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

கூலி வணிகத்துக்கு எதிரான இந்திய மக்களின் எதிர்ப்பியக்கம் கிளம்பியது. பல அரசியல்வாதிகள் இலங்கை, மலாயக் குடியேற்றங்களை எதிர்த்தனர். இந்நிலையில், 1916ஆம் ஆண்டு சுவாமிநாதன் என்பவர் இலங்கைக்கு தூதாக வந்தார். இவரை சேர் பொன்னம்பலம் அருணாசலம் அறிமுகப்படுத்தினார். சுவாமிநாதன் ஆற்றிய உரையில், நவீன காலத்தில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக இந்தியர்கள் கூலிகளாகக் கடினமான சூழ்நிலைகளில் வேலைக்குச் சென்றனர். கூலிகள் ஏழைகளாக இருப்பவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், உதவியற்றவர்கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள், முதலாளிகளால் அடக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்டார்.

மேலும், தற்போதுள்ள நிறுவனங்கள் எவ்வாறு முதலாளித்துவ நலன்களைப் பாதுகாக்கின்றன எனவும் குறிப்பிட்டார். அக்காலத்தில் திருச்சிராப்பள்ளியில் கடமைநிறைவேற்றுத் தொழில் ஆணையாளராகக் கடமையாற்றிய பிரவுன் என்பவர், இச்செய்தியை எந்த ஐரோப்பியப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

இந்திய ஏழைக் கூலித்தொழிலாளர்களின் உழைப்பில்தான் பிரித்தானியப் பேரரசு பிரம்மாண்டமாக உருவானது; ஆனால், அதற்கான எந்த அங்கீகாரமும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. காலனித்துவ ஆட்சியாளர்களால் ஒதுக்கப்பட்டவர்களாகவும், எதிர்கால நம்பிக்கையோ சொந்தக் குரலை உயர்த்தும் வல்லமையோ அற்றவர்களாகவும் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அவர்களுடைய இருப்பு மண்டபத்தில் தொடங்கி, மண்டபத்திலேயே முடிவடையுமாறு நம்பமுடியாத வகையில் பிணைக்கப்பட்டிருந்தது.

‘துண்டு முறை காரணமாகக் கங்காணிமாரின் பின்னால் கூலிகளின் கழுத்து இறுக்கப்பட்டிருந்தது’ என ‘இந்தியன் இமிக்ரன்ட்’ பத்திரிகை எழுதியது.

இந்தியச் சட்டசபையில் உத்தியோகபூர்வமற்ற வகுப்பினரால் அடிக்கடி வினாக்கள் எழுப்பப்பட்டன. கூலி வாணிபத்திற்கு எதிராக இந்திய மக்களின் எதிர்ப்பு வலுவடைந்து வந்தது.

இவ்வேளை, தென்னாபிரிக்காவில் இந்திய சமூகத்தின் போராட்டங்களின் அனுபவங்களோடு வந்த மகாத்மா காந்தி, 1916ஆம் ஆண்டு முதல் கூலி முறை வாணிபத்தையும் கங்காணி முறையையும் கடுமையாக எதிர்த்து, பொதுக்கூட்டங்களில் கருத்துகளை வெளியிட்டார். இதேவேளை, அநேக மகளிர் அமைப்புகள் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த லோர்ட் செம்ஸ்ஃபோர்ட்டுக்கு வெள்ளம் போல் குறிப்புகளை அனுப்பின. இவர்களில் முன்னணி அரசியல்வாதிகளாக இருந்த பண்டிட் மாளவியா, சீனிவாச சாஸ்திரி, பூபேந்திரநாத் பாசு போன்றவர்களும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தனர். இலங்கையிலும் மலாயாவிலும் கங்காணி முறையும் ஒழுங்கமைக்கப்பட்ட கூலி முறையும், கூலிகளை காலனிகளின் குற்றவியல் நீதிமன்றங்களில் தண்டிப்பதற்கு உதவுகின்றன என சேர் தேஜ் பகதூர் சப்ரு குறிப்பிட்டார்.

1917ஆம் ஆண்டு இலங்கை, மலாயா தொழிலாளர் குடியேற்றம் தொடர்பான அறிக்கையை மெட்ராஸ் அரசாங்கம் வெளியிட்டது. இவ்வறிக்கை கங்காணி முறையைக் கடுமையாக விமர்சித்தது.

மேலும், முதலாம் உலகப் போர் தொடங்கியதன் பின்னர், இந்திய அரசாங்கம் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளர் புலப்பெயர்வைத் தடை செய்தது. மெட்ராஸ் அரசாங்கம் பயிற்றப்படாத தொழிலாளர்களின் புலம்பெயர்வைத் தடை செய்தது. இந்திய தேசிய காங்கிரஸும் மகாத்மா காந்தியும் 1919ஆம் ஆண்டு இந்தியத் தொழிலாளர் புலப்பெயர்வை எதிர்த்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இறங்கினர்.



About the Author

பொன் பிரபாகரன்

பொன்.பிரபாகரன், யாழ். பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவப் பட்டம் பெற்றவர். பட்டப்பின் டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், ஊடகவியலில் டிப்ளோமாப் பட்டத்தை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். மேலும், கொழும்பு வணிகப் பள்ளியில் செயற்றிட்ட முகாமைத்துவப் பட்டத்தைப் பெற்றுள்ளார். அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். 'காமன் கூத்து'(மலையக தமிழரின் பண்பாட்டு வகைப்பட்ட அரசியல் பொருண்மிய ஆய்வு), 'உப்பு ரொட்டி' (கவிதைத் தொகுப்பு), 'மலையகத் தமிழரின் சமூகவியலும் அரசியலும்' என்பன இவரது நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்