மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
25 நிமிட வாசிப்பு

மன்னார்க் கூத்து மரபு: ஈழத்தமிழ்க் கூத்து மரபில் ஒரு புதிய கிளை – பகுதி 2

July 21, 2026 | Ezhuna

ஈழத்து மரபுவழி ஆற்றுகைக் கலைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் உண்டு. தென்மோடி, வடமோடி, சிந்துநடைக் கூத்துகள், வாசாப்பு, இசை நாடகம், பள்ளு, குறவஞ்சி, வசந்தன், மகுடி என அது பன்முகப்பட்டது. இவற்றுள் சில அருகிவிட்டன; சில கால ஓட்டத்துடன் நின்று போராடி நிலைக்கின்றன; சில மாறுகின்றன. காலந்தோறும் ஏற்பட்ட பண்பாட்டு கலப்புகளும், அதனை உருவாக்கிய அரசியல், பொருளாதார, சமூக காரணங்களும் இம்மாற்றங்களுக்கு அடித்தளமாக உள்ளன. இந்த பல்வேறு வகைப்பட்ட ஆற்றுகை வடிவங்கள் தத்தமக்கென அழகியலையும், அமைப்பையும், வெளிப்பாட்டுத் திறனையும் கொண்டுள்ளன; ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும் வளர்ந்துள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்வதும், அவை மாற்றம் பெற்றபோது அது சம்பந்தமாக நடந்த விவாதங்களை அறிவதும், இதன் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபடுபவருக்கும், அதனை மேலும் வளர்த்துச் செல்ல விரும்புவோருக்கும் உதவியாக இருக்கும். இப் பல்வேறு ஆற்றுகை வடிவங்கள் பற்றியும் அவை கல்வி உலகில் ஏற்கப்பட்ட பின்னணிகள் பற்றியும், அதனால் இந்த ஆற்றுகைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் அறிமுகம் செய்வதாக ‘ஈழத்துத் தமிழரின் ஆற்றுகைக் கலைகள் : மரபும் மாற்றமும்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமைந்திருக்கும்.

இந்தக் கட்டுரையில் பின்வரும் விடயங்கள் சுருக்கமாக விவரிக்கப்படுகின்றன:

  1. தமிழ் மரபில் காவியம், கூத்து ஆகியவற்றின் கதைக்கருக்களின் ஊற்றுக்கண்ணான வடமொழி புராண, இதிகாசக் கதைகள்.
  2. மன்னார்க் கூத்துகளுக்கு கதைக்கரு வழங்கிய ஊற்றுக்கண், கத்தோலிக்கக் கதை மரபு.
  3. மன்னார்க் கூத்துகளை எழுதிய புலவர்கள்.
  4. மன்னார்க் கூத்து வகைகள்.
  5. அவை (கூத்துகள்) நிகழ்த்தப்படும் முறை.
  6. மன்னார்க் கூத்து மரபின் தனித்துவங்கள்.

1. தமிழ் மரபில் காவியம், கூத்து ஆகியவற்றின் கதைக்கருக்களின் ஊற்றுக்கண்

பேராசிரியர் வையாபுரி பிள்ளை அவர்கள் ‘தமிழ் இலக்கியத்தில் காவிய காலம்’ என்று ஒரு ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். அதிலே அவர் தமிழில் காவியங்களுக்கான தோற்றம் பற்றிக் கூறுகையில், காவியங்களின் உருவாக்கத்திற்கு அற்புதக் கதைகள் வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

கதைகள் இல்லாமல் காவியம் இல்லை. அதேபோலத்தான் கதைகள் இல்லாமல் கூத்துகள் இல்லை. மிகப் பழைய காலமான சங்ககாலத்தை எடுத்துக் கொண்டால் ஆடல் இருந்திருக்கிறது. ஆனால் கதைகளை ஆடும் கூத்துகள் இருக்கவில்லை. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த ‘சிலப்பதிகாரத்தில்’ கதையைத் தழுவி ஆடும் ஆடல்கள் இருந்திருக்கின்றன. அதைத்தான் மாதவி ஆடி இருக்கிறாள். உதாரணம், பாண்டுரங்கம் என்பது சிவன் முப்புரம் எரித்த கதையாகும். அப்படி அவள் பதினொரு கூத்துகள் ஆடியதாக சிலப்பதிகாரம் கூறும். ஆனால் அதை ஆடியவர் ஒருவர்; பலர் அல்ல. நாம் கூறும் கூத்து பலர் கூடி கதை தழுவி ஆடும் கூத்தாகும். கூத்து என்றாலே கூடி ஆடுதல் என்று ஒரு கருத்தும் உண்டு.

கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னால் வடமொழிப் புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அதன் பாரிய செல்வாக்கைப் பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் காணுகின்றோம். தேவாரம், திருவாசகங்களுக்கும், திவ்வியப் பிரபந்தங்களுக்கும் கதைகளை அளித்து அப்பாடல்களைச் செழுமை பெற வைத்தவை இந்தப் புராண, இதிகாசக் கதைகள்தான். பின்னால் கம்பராமாயணத்திற்கும், கந்தபுராணத்திற்கும், ஏனைய பாடல்களுக்கும், புராணங்களுக்கும் கரு கொடுத்தவை இவைதான். இதில் காணப்பட்ட கதைகளை வைத்துக்கொண்டு கூத்துகளை ஆடுகின்ற நிலைமை பின்னால் சோழர் காலத்தில், மிக விசேடமாக நாயக்கர் காலத்திலே தோன்றுகின்றன. அந்தக் கூத்துகளின் மூல ஊற்று வடமொழி புராண, இதிகாசக் கதைகளே; முக்கியமாக மகாபாரத, இராமாயணக் கதைகளாகும்.

இதிலே வருகின்ற இந்துமதம் சார்ந்த தெய்வங்கள் பிரதானப்படுத்தப்பட்டன. ஒரு வகையில் கூத்துகள் இந்து மதத்தை சாதாரண மக்கள் மத்தியில் பரப்புகின்ற சாதனமாக விளங்கின எனலாம். கூத்துகள் தமக்கென ஓர் அமைப்பையும் ஆற்றுகை முறையையும் பெற்றுவிட்டன.

தமிழ்ப் பண்பாடு காலம் தோறும் பல மதங்களை எதிர்கொண்டு வந்துள்ளது. முக்கியமான மதங்கள் வைதீகம், சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம், கிறிஸ்தவம் என்பன. இவற்றுள் சமணம், பௌத்தம், இஸ்லாம் என்பன நாடகம், கூத்தின் பால் அதிக ஆர்வம் காட்டவில்லை. இந்துமதமும் அதன் இரு பிரிவான சைவம் – வைணவம், கத்தோலிக்கம் ஆகிய மதங்களே கூத்திற்கான கதைக்கருக்களை வழங்கியதுடன், கூத்தைத் தம் மதத்தோடு இணைத்துக்கொண்ட மதங்களுமாகும். இந்தக் கருத்தின் பின்னணியில்தான் மன்னார்க் கூத்து மரபையும் புரிந்துகொள்ள வேண்டும்.

16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதமும் போர்த்துக்கேயரும் இலங்கை மண்ணில் காலடி வைக்கிறார்கள். அவர்கள் வருகையால் எழுந்த ஒரு பண்பாட்டுக் கலப்புப் பற்றி சென்ற கட்டுரையிலே விரிவாகப் பார்த்தோம்.

மன்னார்க் கடற்கரையோரம் கடல் மார்க்கமாகத் தரை தட்டிய போர்த்துக்கேய இராணுவமும் பாதிரிமார்களும் இந்து மதத்தின் ஆணிவேர்கள் புராண, இதிகாசக் கதைகள் என்றும், மக்கள் மத்தியில் அதைப் பிரசாரம் செய்கின்றவை முக்கியமாக கலை மூலமாகப் பிரசாரம் செய்தவை கூத்துகள் என்றும் கண்டுகொண்டார்கள். எனவே அவர்களும் அதே கூத்து வடிவத்தை எடுத்து, தாம் கொணர்ந்த வடிவத்தையும் சேர்த்துக் குழைத்து ஒரு புது நாடக வடிவமாக அளித்தனர்.

2. மன்னார்க் கூத்துகளுக்கு கதைக்கரு வழங்கிய ஊற்றுக்கண் – கத்தோலிக்கக் கதை மரபு

மன்னாரில் எழுந்த இந்தக் கூத்து நாடக வடிவத்திற்கு இந்துமதப் புராண, இதிகாசக் கதைகளைப் போல கிறிஸ்தவக் கதைகள் தேவைப்பட்டன. கிறிஸ்தவ விவிலியத்தில் பல கதைகள் இருந்தன. ஆயினும் நாடகத்தன்மை பொருந்தியனவாக அவை இல்லை. ஆனால் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பிய அடியார்களின் கதை முக்கியமானதாக இருந்தது. அவர்கள் எதிர்கொண்ட துன்பம், வாதை என்பன நாடகத்தன்மை பொருந்தியனவாக, கோபம், துக்கம், பயம், இரக்கம் முதலான நாடக உணர்வுகளைத் தரக்கூடியனவாகக் காணப்பட்டன. எப்படி ‘பெரியபுராணம்’ பின்னாளில் சைவ மதப் பரம்பலுக்கு அடித்தளமாக இருந்ததோ, அதேபோல கத்தோலிக்க மதப் பரம்பலுக்கு சில முக்கிய நூல்கள் அடித்தளமாக இருந்தன. அதன் கதைகள் சிலவே மன்னார்க் கூத்தின் கருப்பொருள்கள் ஆகின. எடுத்துரைப்பு முறைகளும் கூத்துப் புலவர்களைப் பாதித்திருக்கலாம். அவற்றை நோக்குவோம்.

ஒன்று, திருமறை, அதாவது விவிலியம் எனப்படும் பைபிள். இதில் பல கிறிஸ்தவக் கதைகள் இருந்தன. பைபிளில், புனிதர்கள் கத்தோலிக்க மதத்தை வளர்க்கப் பல வேதனைகளை அனுபவித்த ‘வேதசாட்சிகள் வரலாறு’ காணப்படவில்லை. அத்தோடு பைபிள் தமிழில் பின்னாளில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. மொழிபெயர்க்கப்பட்டபின் எழுந்த மன்னார்க் கூத்துகள் பைபிளின் வசனங்களின் தாக்கம் பெற வாய்ப்பிருந்திருக்கக் கூடும்.

இரண்டு, வியாகுலப் பிரசங்கம். இதிலே இயேசு மனிதனாக அவதரித்து பட்ட துயரங்கள் உணர்ச்சிமயமானவை; நாடக ஈர்ப்புத்தன்மை கொண்டவை; மனதை ஈர்த்து உள்ளிழுப்பவை.

மூன்று, சுவிசேச விரித்துரை. இது 1728ஆம் ஆண்டில் எழுதப்பட்டு 1848இல்தான் அச்சுவாகனம் ஏறியிருக்கிறது. சுவிசேச விரித்துரை வழிபாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

நான்கு, ‘புளோஸ் சான்றோரும்’ எனும் அடியார் வரலாறு. புளோஸ் சான்றோர் என்றால் தமிழில் புனிதர்களின் பூக்கள் என்று அர்த்தம்; அதாவது புனிதர் வரலாறு. புளோஸ் சான்றோர் என்பவர்கள் கிறிஸ்தவ மதத்தை ஏற்று, அதனைப் பரப்பும் முயற்சியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, பலவித வாதைகள் பட்டு, மக்களுக்காக, மதத்துக்காக தம் உயிர் நீத்த பெரும் தியாகிகள். ஒரு வகையில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப பல வாதைகள் பட்ட இப்புனிதர்கள் கத்தோலிக்க மக்களால் மிக உயர்நிலையில் வைத்து மதிக்கப்பட்டனர். இந்த அடியார் வரலாற்றில் இருந்துதான் மன்னார்க் கூத்துகளுக்கான அதிகமான கதைக்கருக்கள் எடுக்கப்பட்டன.

ஐந்து, வாய்மொழியாக வந்த கத்தோலிக்கக் கதை மரபுகள். என்றீக் எம்பரதோர், ஞானசவுந்தரி நாடகங்கள் இந்த மரபில் வந்தனவாகும்.

கதைக்கருக்கள் கிடைத்ததும் அவற்றை வைத்துக்கொண்டு கூத்துகள் எழுத வேண்டிய நிலைக்கு புலவர்கள் வந்தனர். புதிய கூத்துகள், நாடகங்கள் மன்னாரில் உருவாக ஆரம்பித்தன.

3. மன்னார்க் கூத்துகளை எழுதிய புலவர்கள்

மன்னார் – மாதோட்டம் பல்வேறு சாதிக் குழுமங்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசமாகும். மீன்பிடியும், விவசாயமும், வாணிபமும் அங்கு முக்கிய தொழில்களாக இருந்தாலும், தொழில்சார் பிரிவுகளாகப் பிரிந்த சில சாதிகளும் அங்கே இருந்தன. இவர்கள் அனைவரையும் ஈர்க்க வேண்டிய அல்லது ஒன்று சேர்க்க வேண்டிய மிகச் சிரமான ஒரு பணியைக் கத்தோலிக்க மதத்திற்கு வரலாறு வழங்கியிருந்தது. 

சாதிப் பிரிவினைகள் என்பதும், சாதியில் உயர்வு, தாழ்வு என்பதும் தமிழரிடையே மிக ஆழமாக வேரூன்றிப் போன ஒரு பண்பாடாகும். இந்தச் சாதி என்ற பண்பாட்டை இந்துக் கோயில்கள், சில கோயில் வழிபாடுகள், திருவிழாக்களுக்கான உரிமைகள், கடமைகள் என்பன மேலும் இறுக்கின. சாதி அமைப்பு மாறாமல் அப்படியே இருக்க வைப்பதில் இக்கோயில்களும், கோவில் வழிபாடுகளும், கோவில் உரிமைகளும் மறைமுகமான, ஆனால் ஆழமான பங்கை ஆற்றின.

கத்தோலிக்க மதம் கண்ட பாதை

இந்தப் பிரிவினைகளைக் கடந்து மன்னார் மாதோட்டப் பிரதேசப் பகுதியில் வாழ்ந்த அனைவரையும் ஒன்றாக்கும் முயற்சியில் கத்தோலிக்க மதமும், அதனைப் பரப்ப முன்வந்த கத்தோலிக்கப் பாதிரிமாரும், அவர்களோடு ஊர்ப் புலவர்களும் ஈடுபட்டனர் போல் தெரிகிறது. அவர்களுள் ஒரு பிரிவினரே இந்தக் கூத்து எழுதும் புலவர்கள். கூத்து எழுதும் புலவர்கள் மூன்று வகையினர்:

  1. ஒன்று, இலக்கண இலக்கியம் பயின்றவர்கள்.
  2. இன்னொன்று, இயல்பாகவே பாட்டு எழுதுகின்ற வரகவிகள்.
  3. மூன்றாவது, பட்டறிவோடு, அதாவது கூத்துகளைப் பார்த்து, அதில் பயின்று, அந்த அறிவோடு கூத்துகளை எழுதுபவர்கள்.

இதிலேயே முதல் நிலையில் எழுதுகின்ற கூத்துகள் கரடு முரடான சொற்களையும், விளங்காத சொற்களையும் கொண்டிருக்கும். புலவர்களின் வித்துவத்தன்மை அதில் தெரியும். இதனை நாம் ஒருவகையில் வித்துவப் போட்டி எனப் புரிந்துகொள்ளலாம். இந்தப் புலவர்களுக்குள்ளே ஒரு முக்கியமான புலவர் தான் லோறன்சுப் பிள்ளை அவர்கள்.

லோறன்சுப் பிள்ளையும் அவர் மாணவர்களும்

இவர் ஒரு பெரும் புலவர் ஆவார். இலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றவர். தம்மிடம் கற்ற மாணாக்கருக்கு முறையான இலக்கண இலக்கிய அறிவு ஊட்டியவர். இவரது மாணவர்களாக முக்கியமானவர்களாகப் பின்வருவோர் கூறப்படுகிறார்கள்.

  1. 12 அப்போஸ்தலர்கள் பற்றி 12 நாடகங்கள் எழுதிய மரியானுப் புலவர் முக்கியமானவர். இவர் பரவர் குலத்தைச் சேர்ந்தவர்.
  2. என்றீக் எம்பரதோர், தென்பாங்கு நாடகம், திருச்செல்வர் நாடகம் எழுதிய குருகுல நாட்டுத்தேவர். இவர் பரவர் குலத்தைச் சேர்ந்தவர்.
  3. கோது கப்பித்தான் நாடகம் எழுதிய சந்தியோகுப் புலவர். இவர் கம்மியர் குலத்தினர்.
  4. மரிகருதாள் நாடகம் எழுதிய வெள்ளைப்புலவர். இவர் நாடார் குலத்தினர்.
  5. தைரியராசன் நாடகம் எழுதிய சூசைப் புலவர். இவர் கடையர் குலத்தினர்.

இந்த வகையிலே லோறன்சுப் பிள்ளையவர்கள் பல சமூகத்தவர்க்கும் இலக்கண இலக்கியங்களைக் கற்பித்ததோடு, நாடகமும் எழுதப் பயிற்றுவித்தார் போலத் தெரிகிறது. இதனால் இந்த நாடக வடிவம் ஒரு தனிச் சமூகத்திற்கானதாக அல்லாமல், மன்னாரில் வாழுகின்ற பல்வேறு சமூகங்களையும் சென்றடைந்தது. இதனால் மன்னார் மரபு நாடகச் செயல்பாடு முழு மக்களையும் சென்றடையவும், கூத்து ஆற்றுகை செழுமை பெறவும் வாய்ப்புகள் உண்டாயின.

மன்னார் மாதோட்டப் புலவர் வரலாற்றை எடுத்துப் பார்க்கின்ற பொழுது அது: சாகியம் வழி வந்ததாகவும், குடும்ப வழி வந்ததாகவும், குரு-சிஷ்ய மரபு வழி வந்ததாகவும் காணப்படுகிறது.

நான் இங்கு குறிப்பிட்டது குரு-சிஷ்ய மரபு வழி வந்ததுதான். இந்த மரபுதான் குடும்பத்தையும் சாகியத்தையும் மீறி பொது முறையாகவும், புது நெறியாகவும் எழுந்து மன்னாருக்கான ஒரு பொதுக் கூத்து, அதுவும் கத்தோலிக்கக் கூத்து மரபு உருவாக வழி சமைத்தது எனலாம்.

மன்னார்க் கூத்துகளை தென்பாங்கு, வடபாங்கு, வாசாப்பு என மூன்று முக்கியப் பிரிவினுள் அடக்குவர். வடபாங்கு என்பது யாழ்ப்பாணத் தாக்கம் பெற்றது என்றும், தென்பாங்கு என்பது மன்னாருக்குரியது என்றும், வாசாப்பு என்பது புது வகையான கூத்துத் தன்மை கொண்டு நாடகமாக மாறி இன்னொரு வகையாக மலர்ந்த கூத்து என்றும் நாங்கள் புரிந்துகொள்ளலாம்.

4. மன்னார்க் கூத்து வகைகள்

இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மன்னார் பல இன, சமய, மொழி மரபுகள் சந்திக்கும் ஒரு முக்கியமான பண்பாட்டு வெளி ஆகும். இப்பகுதியின் ஆற்றுகை மரபுகள் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சமூக நினைவுகள், சமய நம்பிக்கைகள், வரலாற்று அனுபவங்கள், மக்களின் கலை அறிவு ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் பண்பாட்டு வெளிப்பாடுகளாக அமைகின்றன. குறிப்பாக மன்னாரில் தமிழ் மக்களிடையே வளர்ந்த கூத்து, நாடகம், வாசாப்பு, பாஸ்கா போன்ற நிகழ்த்தல் வடிவங்கள் மன்னாரில் தனித்துவமான அரங்கேற்ற மரபை உருவாக்கியுள்ளன.

மன்னாரின் ஆற்றுகை மரபுகளைப் புரிந்துகொள்வதற்கு எழுத்து இலக்கிய வகைப்பாடுகளை மட்டும் பயன்படுத்த முடியாது. அங்கு வாழும் மக்களின் நடைமுறை அறிவு, அவர்கள் ஒரு நிகழ்த்தலை எவ்வாறு பெயரிடுகிறார்கள், எவ்வாறு நடத்துகிறார்கள், எந்தச் சமூகச் சூழலில் நிகழ்த்துகிறார்கள் என்பவையே முக்கியமானவை.

மன்னாரின் ஆற்றுகை மரபின் பின்னணி

மன்னாரின் ஆற்றுகை மரபு பல அடுக்குகளைக் கொண்டது. இந்த மரபில் இந்து, கத்தோலிக்க, நாட்டார் நம்பிக்கைகள், காலனித்துவ காலத்தின் தாக்கங்கள், தென்னிந்திய நாடக மரபுகள் ஆகியவை ஒன்றோடொன்று கலந்துள்ளன.

கிராமச் சமூகத்தின் ஆலயத் திருவிழாக்கள், சமய விழாக்கள், சமூகக் கூடல்கள் போன்றவை இந்நிகழ்த்தல்களின் முக்கியமான அரங்குகளாக இருந்தன. ஆற்றுகை என்பது நடிகர்களின் திறமையை மட்டும் வெளிப்படுத்தும் இடமல்ல; ஒரு சமூகத்தின் ஒற்றுமை, நினைவு, நம்பிக்கை ஆகியவற்றை மீண்டும் உருவாக்கும் சடங்கு சார்ந்த செயற்பாடாகவும் இருந்தது.

மன்னார் ஆற்றுகை மரபின் முக்கிய வகைகள்

அ. பாஸ்கா

மன்னாரின் கத்தோலிக்கச் சமூகத்தில் பாஸ்கா முக்கியமான ஆற்றுகை வடிவமாகும். இயேசு கிறிஸ்துவின் பாடுகள், சிலுவைப்பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய கிறிஸ்தவக் கருத்துகளை நாடக வடிவில் வெளிப்படுத்துவது இதன் மையமாகும். இதற்கு அடிநாதம் வியாகுலப் பிரசங்கம். இந்தப் பிரசங்கத்தை எடுத்துரைக்கும் விதம் மிக நாடகத்தன்மை பொருந்தியது. இதை எடுத்துரைக்கும் முறை கட்டுப்பாடாகப் பயிற்றப்பட்டது என அறிகிறோம். எனினும் எடுத்துரைப்பு முறையில் சிற்சில வேறுபாடுகள் உண்டு என்பர் சிலர். 

பாஸ்கா ஒரு சமய நிகழ்வு மட்டுமல்ல. இதில் இசை, பாடல், உடை, ஒப்பனை, நடிப்பு, குழு ஒழுங்கு ஆகியவை இணைந்து ஒரு முழுமையான நிகழ்த்தல் அனுபவத்தை உருவாக்குகின்றன. சமூகத்தின் சமய உணர்வும் கலை வெளிப்பாடும் இதில் ஒன்றிணைகின்றன.

ஆ. நாடகம்

மன்னார் மக்களின் வழக்கில் ‘நாடகம்’ என்பது பொதுவாக இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட இரவுகள் நடைபெறும். இது ஒரு குறிப்பிட்ட கதையை மையமாகக் கொண்டு பாடல், வசனம், நடிப்பு ஆகியவற்றுடன் நடைபெறும். எம்பரதோர், மூவிராசாக்கள் போன்ற கதைகள் சில இடங்களில் நாடக வடிவில் நிகழ்த்தப்பட்டுள்ளன. இங்கு ‘நாடகம்’ என்பது மேலைநாட்டு அரங்கியல் பொருளில் மட்டும் பயன்படுத்தப்படும் சொல் அல்ல; அது மக்களின் உள்ளூர் பயன்பாட்டில் உருவான ஒரு வகைப்பாடாகும்.

இ. வாசாப்பு

வாசாப்பு என்பது மன்னார் கத்தோலிக்கத் தமிழ் மரபின் முக்கியமான நீண்டகால நிகழ்த்தல் வடிவமாகும். இது ஒரு இரவில் நடத்தப்படுவதாகும். வாசாப்புகளில் கதை விரிவாகச் சொல்லப்படும். இதனால் இது ஒரு சமூகக் கூடுகையாகவும், தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் பண்பாட்டு நினைவாகவும் விளங்குகிறது.

வடபாங்கு – தென்பாங்கு மரபு

மன்னார்க் கூத்து மரபில் வடபாங்கு, தென்பாங்கு என்ற வகைப்பாடுகளும் முக்கியமானவை. யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கூத்து மரபை வடபாங்கு என்றும், மன்னார்க் கூத்து மரபை தென்பாங்கு என்றும் கூறும் மரபு இருந்ததாகவும் அறிகிறோம். இவை வெறும் புவியியல் பிரிவுகள் அல்ல; இசை, நடன அசைவு, பாடல் முறை, பாத்திர அமைப்பு, நிகழ்த்தல் பாணி ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடுகளையும் குறிக்கின்றன. ஒரு கூத்து வடபாங்கா அல்லது தென்பாங்கா என்பதை அதன் கதை மட்டும் தீர்மானிப்பதில்லை. அந்தந்தச் சமூகத்தில் அது எவ்வாறு ஆடப்படுகிறது என்பதுதான் முக்கியம் என்பது சிலர் முடிவு.

உள்ளூர் அறிவும் வகைப்பாடும்

மன்னார் ஆற்றுகை மரபின் மிக முக்கியமான அம்சம் மக்களின் சொந்த வகைப்பாட்டு அறிவாகும். கல்விசார் நாடகவியல் வகைப்பாடுகள் ஒரு நிகழ்த்தலை ‘நாடகம்’, ‘கூத்து’, ‘சடங்கு’ என்று பிரிக்கலாம். ஆனால் மன்னார் மக்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் ‘பாஸ்கா’, ‘நாடகம்’, ‘வாசாப்பு’ என்று வேறுபடுத்துகின்றனர். இவ்வகைப்பாடுகள் நிகழ்த்தலின்: கால அளவு, சமயப் பயன்பாடு, நிகழ்த்தல் முறை, சமூகப் பங்கு, பாரம்பரியத் தொடர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் உருவானவை.

மன்னாரின் ஆற்றுகை மரபு என்பது பல நூற்றாண்டுகளாக வளர்ந்துவரும் ஓர் உயிருள்ள மக்கள் கலை மரபாகும். பாஸ்கா, நாடகம், வாசாப்பு, கூத்து மரபுகள் ஆகியவை தனித்தனி கலை வடிவங்கள் மட்டுமல்ல; அவை மன்னார் மக்களின் சமூக நினைவையும் பண்பாட்டு அடையாளத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்த்தல் முறைகளாகும். எனவே மன்னார் ஆற்றுகை மரபை ஆராயும்போது, வெளியிலிருந்து கொண்டுவரப்படும் நாடகவியல் வகைப்பாடுகளை மட்டும் பயன்படுத்தாமல், அந்த மக்களின் சொந்த நிகழ்த்தல் அறிவையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுவே மன்னார் ஆற்றுகை மரபின் உண்மையான தனித்துவத்தை வெளிப்படுத்தும்.

5. அவை (கூத்துகள்) நிகழ்த்தப்படும் முறை

இந்தக் கூத்து நிகழ்த்தும் முறை பற்றி ‘மன்னார் மாதோட்டக் கத்தோலிக்க நாடகங்கள்’ என்னும் நூலிலே அன்புராசா அடிகளார் கூறுவது முக்கியமான குறிப்புகள் ஆகும். நாடகச் செயற்பாடு, அதில் ஈடுபடுவோர், அது உருவாகும் முறை பற்றி அவர் பின்வருமாறு கூறுவார்.

நாடகத்தில் ஈடுபடுவோர்

  1. புலவர்கள்.
  2. அண்ணாவிமார்கள்.
  3. படி ஏற்றுக்காரர், அதாவது ஏடு வாசிப்பவர்.
  4. பிரதிக்கியார், அதாவது நடிகர்களுக்குத் தாய்க் கொப்பியிலிருந்து பிரதி எடுத்துக் கொடுப்பவர்.
  5. நாடகத்தை நடத்துகின்ற சமூகத் தலைவர்.
  6. பிற்பாட்டுச் சேர்ப்பவர்கள்.
  7. பக்கவாத்தியக்காரர்கள்.
  8. சபையோர்.

இதற்கு மேலால் முக்கியமான ஒருவர்: 9. பங்குக்குரு. இந்தப் பங்குக்குரு அனுமதி அளித்தால்தான் அந்த நாடகம் மேடை ஏற்றப்படும். எல்லாவற்றையும் முறையாகத் தயாரித்த பின்னர் இறுதியாக அதனுடைய சூட்சுமக் கயிறு பங்குக்குருவானவர் கையிலே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்தான் அதற்குப் பொறுப்பு. கத்தோலிக்க மதக் கருத்துகளுக்கு எதிரான கருத்துகள் வருகிறதா என்பதைக் கவனிப்பதிலும், வேறு பல விடயங்களைக் கவனிப்பதிலும் அவதானமாகவும், அதிக கவனமாகவும் இருந்திருப்பார் என்று எண்ண வாய்ப்பு உண்டு.

நம்பிக்கைச் சடங்கு

  1. மேடை போடத் தீர்மானித்தல்.
  2. கூத்து எழுதிய புலவரின் சம்மதம் பெறல்.
  3. ஏட்டை அவிழ்த்தல்.
  4. பாத்திரமேற்றல். நாடகக் குழுவின் தீர்மானத்திற்கு ஏற்ப பாத்திரம் வழங்கப்படும்.
  5. பட்டோலை வைபவம். அதாவது அந்தப் பாத்திரங்களுக்கான தேர்வு. 

என்பன இதற்குள் அடங்கும்.

பயிற்சிகள்

பயிற்சி பற்றிக் கூறுகின்ற பொழுது சுவாரஸ்யமான விஷயங்களை அறிகிறோம்.

அ. கூடிப் படித்தல்

புலவர்களால் எழுதப்பட்ட ஓர் ஏட்டைத் தெரிதல். எதனை ஆடப்போகின்றோம் என்று தெரிந்த பின் கூடிப் படிக்கின்ற நிகழ்வு ஆரம்பமாகும். கூடிப் படிப்பது என்பது ஏற்கனவே இந்தக் கூத்து அனுபவம் உள்ளவர்களைக் கூட்டி, அவர்களிடமிருந்து ஆலோசனை பெறுவதும், அவர்களோடு சேர்ந்து பாடல்களைப் பாடிப் பார்ப்பதும் ஆகும்.

ஆ. ஏசார்

இரண்டாவது பகுதியிலே முறையான பயிற்சி ஆரம்பமாகும். அதனை அண்ணாவியார் தலைமையேற்றுச் செய்வார். இது ஏசார் என அழைக்கப்படும்.

இ. கச்சை கட்டல்

இது ஏனைய கூத்துகளின் சலங்கை கட்டுகின்ற வைபவம் போன்று இருக்கும்.

ஈ. ஒத்திகைகள்

அடுத்து ஒத்திகைகள் ஒழுங்காக நடைபெறும்.

உ. ஊர் மறியல்

அதாவது பங்குக்குருவானவர், ஊரெல்லாம் சேர்ந்து அதைச் செய்ய வேண்டும் என்று அழுத்தி, முழு ஊரையும் அதிலே பங்கு கொள்ளச் செய்வது ஆகும். இந்த இடத்தில் கூத்து ஒரு தனிப்பட்ட ஆளுடைய கூத்தாக அல்லது தனிப்பட்ட சமூகத்தின் கூத்தாக அல்லாமல், ஒரு சமூக வைபவமாக மாறுகிறது. ஒரு வகையில் ஒரு கோவில் உற்சவம் அல்லது கோவில் சடங்கு என்பது அவசியமாக எல்லோரும் கூடி, ஒருவர் விடாமல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.

நாடகம் நடைபெறும் மேடை

இந்தக் கூத்துகள் எத்தகைய மேடையிலே நடிக்கப்பட்டன என்பது ஒரு முக்கியமான விஷயமாகும். மன்னாரில் வட்டக் களரியிலே கூத்துகள் ஆடப்பட்டதாகத் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் ஆடல் முறைகள் இருந்ததன் காரணத்தினாலும், கத்தோலிக்க வருகைக்கு முன்னர் கூத்துகள் இருந்தமையினாலும், வட்டக் களரிலே கூத்துகள் ஆடப்பட்டு இருக்கலாம் என்று நாங்கள் ஊகிக்கலாம்.

ஒரு பக்கம் அடைக்கப்பட்ட மேடையும், முப்பக்கம் பார்வையாளர்கள் இருந்து பார்க்கின்ற மேடையும் இருந்ததாகத் தகவல் கிடைக்கின்றது. ஆனால் பின்னாளில் மூன்று பக்கம் அடைக்கப்பட்ட கொட்டகைகளே நாடகம், கூத்து மேடைகளாக மாறிவிட்டன. அங்கு படுதாக்கள், அதாவது திரைகள் தொங்கவிடும் பண்பும், அதன் பின் காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சேலைகள் மேடையில் தொங்கவிடும் முறையும் தோன்றிவிடுகின்றன. வலது பக்கப் படுதாவின் பின்னால் அண்ணாவியாரும் பாட்டுக்காரரும் இருக்க, இடது பக்கப் படுதாவினூடாக நடிகர்கள் வந்து செல்லும் மரபும் உண்டானது. சபரிக்கை என்ற ஓர் இடம் அருகிலே உருவாக்கப்படும். அதுவே ஒப்பனை செய்கின்ற இடம் ஆகும்.

நாடகம் அரங்கேறுமுன் சில சடங்குகள்

நாடகம் அரங்கேற்றும் முன்னர் சில மரபுகள் பேணப்பட்டன என அறிகிறோம்.

  1. பந்தம் கொழுத்தல்.
  2. நாடகத்துக்கு முன் சில உரைகள்.
  3. பெரியோரைக் கௌரவித்தல்.
  4. களரி கட்டுதல்.
  5. திரை பிடித்தல்.
  6. வெள்ளை விரித்தல்.
  7. பந்தலைக் காவல் காத்தல்.

என்ற ஆரம்பச் சடங்குகள் நடந்த பிறகு கூத்துகள் ஆரம்பமாகி நடைபெறும். ஓர் இரவிலும் கூத்துகள் நடைபெறும்; இரண்டு இரவுகளிலும் கூத்துகள் நடைபெறும். ஓர் இரவு நாடகத்தை கூத்து என்றும், இரண்டு இரவு நாடகத்தை நாடகம் என்றும் அழைப்பார்கள் என அறிகிறோம்.

6. மன்னார்க் கூத்து மரபின் தனித்துவங்கள்

மன்னார்க் கூத்து, ஈழத் தமிழர் நிகழ்த்து கலை மரபுகளில் தனித்துவமான ஒரு பிராந்திய வடிவமாகும். இது வெறும் பொழுதுபோக்கு நாடகம் அல்ல; மன்னார் சமூகத்தின் சமய, சமூக, பண்பாட்டு வாழ்வோடு இணைந்த ஒரு கூட்டு நிகழ்த்து கலையாகும்.

முதலாவதாக, மன்னார்க் கூத்தின் முக்கியமான தனித்துவம் அதன் கத்தோலிக்கத் தன்மை ஆகும். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பகுதிகளின் கூத்துகள் பெரும்பாலும் இந்து சமயக் கோவில் மரபுகளுடன் தொடர்புடையவையாக இருந்தபோதிலும், மன்னாரில் கூத்து பெரும்பாலும் கத்தோலிக்கத் தேவாலயப் பின்புலத்தில் வளர்ந்தது. குறிப்பாக வாசாப்பு (வாசிப்பு நாடகம்) போன்ற வடிவங்கள் இயேசுவின் பாடுகள், புனிதர்களின் வரலாறு, விவிலியக் கதைகள் போன்றவற்றை நாடக வடிவில் வெளிப்படுத்தின.

இரண்டாவதாக, இது ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது தொழில் குழுவின் கலை அல்ல. மன்னார் பிரதேசத்தின் பல ஊர்களிலும் பல்வேறு சமூகத்தினராலும் கூத்து நிகழ்த்தப்பட்டது. இதனால் இது சமூகப் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட மக்கள் கலை வடிவமாக விளங்கியது.

மூன்றாவதாக, மன்னார் கூத்து முழு ஊரின் கூட்டு முயற்சியாக அமைந்தது. நடிகர்கள் மட்டுமல்லாமல், பாடல் பயிற்சி, ஆடைத் தயாரிப்பு, மேடை அமைப்பு, செலவுகள், விழா ஏற்பாடுகள் போன்ற அனைத்திலும் ஊர் மக்கள் பங்கெடுத்தனர். ஆகவே கூத்து ஒரு கலை நிகழ்ச்சி மட்டுமல்ல; அது சமூக ஒற்றுமையை உருவாக்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வாக இருந்தது.

நான்காவதாக, பங்குத் தந்தை அல்லது பங்குக்குருவின் வழிகாட்டுதல் மன்னார்க் கூத்து மரபில் முக்கியமான இடம்பெற்றது. தேவாலயத்துடன் தொடர்புடைய நிகழ்வாக இருந்ததால், கதைத்தேர்வு, ஒழுங்கமைப்பு, கால அட்டவணை போன்றவற்றில் குருவின் பங்கு காணப்பட்டது.

ஐந்தாவதாக, மன்னார்க் கூத்து கோவிலை மையமாகக் கொண்ட கலை வடிவமாகத் தோன்றியது. தேவாலயத் திருவிழாக்கள், புனிதர் விழாக்கள் போன்ற சமய நிகழ்வுகளோடு இணைந்து இது வளர்ந்தது. இதனால் இதன் கலை வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் சமய உணர்வு பிரதிபலிக்கிறது.

ஆறாவதாக, மன்னார்க் கூத்தின் மேடை அமைப்பு மற்ற சில கூத்து மரபுகளிலிருந்து வேறுபடுகிறது. மட்டக்களப்பு, வடமராட்சி போன்ற பகுதிகளில் காணப்படும் வட்டக்களரி மரபைப் போல அல்லாமல், மன்னாரில் கூத்து பெரும்பாலும் ஒருபக்கம் அல்லது முப்பக்கம் அடைக்கப்பட்ட மேடைகளிலும், திரை அமைப்புகளுடனும் நிகழ்த்தப்பட்டது. இது மேடை நாடகத் தன்மையை அதிகமாகக் கொண்டிருந்தது.

ஏழாவதாக, மன்னார்க் கத்தோலிக்க நாடக மரபுகள் இலங்கையின் பரந்த நாடக வளர்ச்சியில் தாக்கம் செலுத்தின. குறிப்பாக போர்த்துக்கேயர் காலத்திலிருந்து வந்த கிறிஸ்தவ நாடக மரபுகள் பின்னர் சிங்களப் பகுதிகளிலும் கத்தோலிக்க நாடக வளர்ச்சிக்கு உதவின. எனவே மன்னார் மரபு இலங்கையின் கிறிஸ்தவ நாடகப் பண்பாட்டின் ஒரு முக்கியமான பகுதியாகக் கருதப்படுகிறது.

எட்டாவதாக, மன்னார்க் கூத்து, ஈழத்தின் பிற கூத்து மரபுகளைப் போல முழுமையாக வடமொழி புராண–இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டதல்ல. இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளுக்குப் பதிலாக, கிறிஸ்தவ விவிலியக் கதைகள், புனிதர்களின் வாழ்க்கை, இயேசுவின் பாடுகள் போன்றவை இதன் கதையம்சங்களாக அமைந்தன. இதுவே இதன் மிக முக்கியமான தனித்துவங்களில் ஒன்றாகும்.

மன்னார் மாவட்டத்தில் மிகப்பெரும் செல்வங்களுள் ஒன்று நாடகங்கள் ஆகும். ஒரு நாடகத்தை மேடையேற்றாத ஊரோ, கிராமமோ இருக்க முடியாது என்பார் அன்புராசா அடிகளார். “ஊர் ஊராய்க் கூத்தாடும் ஊரம்மா” என்று ஒரு கவிஞன் மட்டக்களப்பைக் கூறினான். மன்னார்க் கூத்து மரபைப் பார்க்கும் போது, “குக்கிராமங்கள் எல்லாம் கூத்தாடும் ஊரம்மா” என்று சொல்லத் தோன்றுகிறது.

அந்த மரபு இன்றும் வாழும் மரபாக மன்னாரில் தொடர்வதுதான் முக்கியமாகப்படுகிறது. மட்டக்களப்பில் மத நிறுவனம் முன்னிற்காமையும், மன்னாரில் மத நிறுவனம் முன்னின்று கூத்தை நடத்துவதும் குறிப்பிடத்தக்கது. ஏன் மன்னார்க் கத்தோலிக்க மக்களிடையே இந்த நாடகம் தொடர்ச்சியாகவும், பெருவாரியாகவும் இன்றும் இடம்பெற்று வருகிறது என்பது ஆய்வாளர் முன்னுள்ள வினாவாகும். இதற்குப் பல காரணங்களைக் கூறலாம்.

மன்னார்க் கூத்து மரபு தொடர்ந்தும் மக்கள் மத்தியில் நிலைப்பதற்கான காரணங்கள்

  1. ஒன்று, இதற்கு கத்தோலிக்க மத நிறுவனம் சார்ந்த பங்குத்தந்தை, கத்தோலிக்கக் குருமார், ஆயர் போன்றோர் தரும் ஆதரவும் ஊக்கமும்.
  2. இரண்டு, சமூகமாகத் திரளவும் அதன் இருப்பை வெளிப்படுத்தவும் இது உதவுவது.
  3. மூன்றாவது காரணம், முக்கியமான காரணம், இந்த நாடகம் கூறும் உள்ளடக்கமாகும். இறையடியார் காட்டில் விடப்படுதல், கழுவேற்றப்படுதல், அம்பு எய்தப்படல், தீச்சூளையில் தள்ளப்படுதல், அவயங்கள் வெட்டப்படல், அடித்துக் கொல்லப்படல் போன்ற துன்பியல் காட்சிகள் மக்களின் உணர்வோடு ஒன்றிக்கின்றன.

மனித வாழ்வு இன்றைய சூழலில் மிக மிகத் துன்பகரமானது. பொருளாதார, சமூகச் சுமைகளினால் துன்புறும் மக்களுக்கு துன்புறல், அதனின்று இறையருளால் மீளல் என்பன ஓர் உளவியல் ஆறுதலாகவும் அமைகின்றன. இதனால் ஊர் தோறும், கிராமம் தோறும் கூத்துகள், நாடகங்கள், வாசாப்புகள் மேடையேறுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஈடுபடுகிறார்கள். ஒரு பாரம்பரியம் கடத்தப்படுகிறது.

கூத்து, நாடகம் அல்லது வாசாப்பு போடுகையில் சாதி கலந்து கூத்தாடும், நாடகமாடும் வழக்கம் இன்னும் மன்னாரில் வலிமை பெறவில்லை. சில இடங்களில் இம்மரபு மீறப்பட்டிருப்பினும், பொது ஓட்டம் அதுவல்ல என்பதையும் கள ஆய்வுகள் காட்டுகின்றன என்பதும் மனம் கொள்ளத்தக்கது.

முடிவுரை

மொத்தத்தில், மன்னார்க் கூத்து என்பது:

  1. கத்தோலிக்க சமயப் பின்னணியில் உருவான,
  2. ஊர் முழுவதையும் இணைக்கும்,
  3. தேவாலயத்தை மையமாகக் கொண்ட,
  4. மேடை நாடகத் தன்மை அதிகம் கொண்ட,
  5. ஈழத்தின் ஏனைய கூத்து மரபுகளிலிருந்து வேறுபடும்,
  6. வாழ்வின் சுமையால் அழுந்துகின்ற மனித மனங்களுக்கு மன ஆறுதலை அளிக்கும்

தனித்துவமான ஒரு மக்கள் நிகழ்த்து கலை மரபாகும்.

இது ஈழத் தமிழ் நாடக வரலாற்றில் தனித்துவமான ஒரு கிளையாக மட்டுமல்லாமல், இலங்கையின் பல்சமய நாடக வளர்ச்சியையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான பண்பாட்டு ஆதாரமாகவும் விளங்குகிறது.

மன்னார்க் கூத்து மரபு ஒரு தங்கச்சுரங்கம். அதைத் தோண்டும் முயற்சிகள் 1960களில் ஆரம்பமாகிவிட்டன. ஆயினும் அதன் ஆழம் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. இத்தோண்டலில் பலர் ஈடுபட்டனராயினும், அந்தக் கூத்து மரபினுள் இருந்து வந்த அன்புராசா அடிகளாரின் தோண்டுதல் அரிய பல தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

ஈழத்துக் கூத்து மரபின் தனித்துவமான இன்னொரு வகைக் கூத்து மரபு உண்டு. இது வடமொழி புராண, இதிகாச, கத்தோலிக்க மரபில் வராத மரபு; தமிழ் மரபில் உருவான மரபு. அந்த இன்னொரு வகையான கூத்து முல்லைத்தீவு கோவலன் கூத்து மரபு ஆகும்.



About the Author

சின்னையா மௌனகுரு

சின்னையா மௌனகுரு அவர்கள் இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த பேராசிரியர்; அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குநர், நடிகர், கூத்துக் கலைஞர் என்று பல தளங்களில் இன்றும் இயங்கிவருபவர்.ஈழத்து அரங்கத்துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிலரில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய புகழ்பெற்ற கூத்து நாடகங்கள் மௌனகுருவுக்கு தனியான அடையாளத்தை வழங்கின.

இவர், 20 ஆம் நூற்றாண்டு ஈழத்துத்தமிழ் இலக்கியம் – 1984, சடங்கில் இருந்து நாடகம் வரை – 1985, மௌனகுருவின் மூன்று நாடகங்கள் – 1985, தப்பி வந்த தாடி ஆடு – 1987, பழையதும் புதியதும் நாடகம் அரங்கியல் – 1992, சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும் – 1992, சங்காரம் – ஆற்றுகையும் தாக்கமும் (நாடகம்) – 1993, ஈழத்து தமிழ் நாடக அரங்கு – 1993, கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் – நீலாவணன் – 1994, கலை இலக்கிய கட்டுரைகள் – 1997, சக்தி பிறக்குது – நாடகம் – 1997, பேராசிரியர் எதிர்வீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும் – 1997, ஈழத்து நாடக அரங்கு – 2 ஆம் திருத்திய பதிப்பு – 2004, தமிழ்க் கூத்துக்கலை – வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல் – 2010, கூத்து யாத்திரை – 2021, கூத்தே உன் பன்மை அழகு – 2021 போன்ற பலநூல்களை எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்