இலங்கையில் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பத்தினி (கண்ணகி) வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

இலங்கையில் சிங்கள மக்களிடையே காணப்படுகின்ற பத்தினி (கண்ணகி) வழிபாட்டுடன் தொடர்புடைய சடங்குகளும் நிகழ்த்துகலைகளும்

August 28, 2026 | Ezhuna

இலங்கைத் தமிழர்களிடையே கண்ணகி வழிபாடு என்றும் சிங்கள மக்களிடையே பத்தினி வழிபாடு என்றும் வழங்கப்பட்டு வரும் வழிபாடுகளுடன் தொடர்புடைய சடங்குசார் நிகழ்த்து கலைகளில் ஒன்றாகவே ‘கொம்புமுறி’ விளையாட்டு இடம்பெற்று வருகின்றது. இக்கொம்புமுறி விளையாட்டு சமயம், கலை ஆகிய இரு துறைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. இது சிங்களவர்களால் ‘அங்கெலிய’ என்று அழைக்கப்படுகின்றது. இந்நிகழ்வு ஆடி மாதத்தில் அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் நிகழ்த்தப்படுவது வழக்கம். தமிழர்களின் கொம்புமுறிக்கும் சிங்களவர்களின் அங்கெலியவிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பினும் அவை தமக்கிடையே தனித்துவமான பண்புகளையும் கொண்டிருக்கின்றன. இந்த வகையில் கண்ணகி வழிபாட்டிற்கும் அதனுடன் தொடர்புடைய நிகழ்த்து கலையான கொம்புமுறி விளையாட்டுக்கும் இடையிலான தொடர்பினையும், அதன் சமுதாய மானிடவியல் பின்புலத்தினையும், கொம்புமுறி விளையாட்டின் சடங்குசார் நிகழ்த்துகலை முறைமையினையும், தமிழ் – சிங்கள கொம்புமுறி விளையாட்டுகளுக்கு இடையிலான ஒற்றுமை – வேற்றுமைகளையும் ஆராய்வதாக ‘கொம்புமுறி விளையாட்டு: இலங்கையில் கண்ணகி – பத்தினி வழிபாட்டின் எச்சம்’ எனும் இத்தொடர் இடம்பெறுகின்றது.

அறிமுகம்

இலங்கையில் சிங்கள மக்களின் சமய வாழ்வில் பத்தினி வழிபாடு மிக முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கின்றது. சிங்கள மக்கள் பத்தினித் தெய்வத்தினைத் தொற்று நோய்களைத் தீர்க்கும் அதி தேவதையாகக் கொள்கின்றனர். மழைவளம் குன்றிப் பசியும் பிணியும் தோன்றுவதற்கும் அதனால் ஏற்படுகின்ற நோய்களுக்கும் பத்தினியின் சீற்றமே காரணம் என்பதனை மனதிலே கொண்டு, பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதற்காகப் பலவகையான சடங்குகளையும் நிகழ்த்து கலைகளையும் சிங்கள மக்கள் செய்துவருகின்றனர். சிங்களவர்கள் கம்மடுவ, அங்கெலிய, கிரியம்மா தானம், சொக்கறி போன்ற சடங்குகளையும் நிகழ்த்துகலைகளையும் பத்தினி தெய்வத்தினைச் சாந்தி செய்வதன் பொருட்டு பயபக்தியுடன் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கம்மடுவ

பல தேவதைகளை அழைத்து மகிழ்விக்கின்ற சடங்குசார் நிகழ்த்துகலையாக கம்மடுவ காணப்படுகின்றது. இச்சடங்கிற்கான தொன்மக் கதைமரபு சிலப்பதிகாரத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகின்றது. சேரமான் மன்னன் தீராத தலைவலியால் வேதனைப்பட்டிருந்த போது, பத்தினி அவன் கனவில் தோன்றினாள். அதன்போது பிராமணர்களை இலங்கைக்கு அனுப்பி அங்கு ஒரு மடுவத்தை அமைத்து வழிபாடு செய்யுமாறு அவள் கேட்டுக்கொண்டாள். அவ்வாறு அமைக்கப்பட்ட மண்டபமே மடுவ, கம்மடுவ எனப்பட்டது. அவ்வாறான கம்மடுவ எனப்பட்ட மண்டபத்திலே நிகழ்த்தப்பட்ட சடங்கே கம்மடுவச் சடங்கு என்று வழங்கப்பட்டது. இதன்போது அரசனின் தீராத தலைவலியும் நீங்கியது என்று ‘மடுப்புறய’ எனும் சடங்கு நூல் குறிப்பிடுகின்றது.1 கம்மடுவச் சடங்கானது, அறுவடைக்குப் பின்னரான காலப்பகுதியில் சிங்கள மக்களால் வருடந்தோறும் நிகழ்த்தப்படுகின்றது. தமது வயல் நிலங்களை அறுவடைக்காலம் வரையும் பாதுகாத்தமைக்காகவும் தம்மைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அமைதியான வாழ்விற்காகவும் வளத்திற்காகவும் இச்சடங்கு மேற்கொள்ளப்படுகின்றது. இச்சடங்கின் போது, ‘பஸ்தின்கோள்முற’ என்ற நூல்கள் படிக்கப்படுகின்றன. இச்சடங்கு நடைபெறுகின்ற இடம் மக்கள் கூடுகின்ற இடமாகவும் கடவுள் வந்து உறையும் இடமாகவும் விளங்குகின்றது. மக்கள் இதனைத் தேவ சபையாகக் கருதுவர். இச்சடங்கினை நிகழ்த்துவிக்கும் கப்புறாளை மக்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான தூதுவராக விளங்குவார். இவர் சொர்க்கத்திலிருந்து கடவுளர்களை வரவழைத்து தேவ சபையில் அமர்த்தி மக்களின் பீடைகளைப் போக்குபவராகவும் கருதப்படுகின்றார்.

அறுவடை முடிவடைந்ததும் ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் பெற்ற குறிப்பிட்டளவு நெல்லைக் குற்றி அரிசியாக்கிச் சமைத்து ‘பத்தினித் தெய்வம்’, ‘தடிமுண்டன் தெய்வம்’, ‘கதிர்காமத் தெய்வம்’, ‘விபீஷன தெய்வம்’, ‘சமன் தெய்வம்’ போன்ற தெய்வங்களுக்குப் படையலாகப் படைப்பர். படையலிட்ட பின்னர் பத்தினித் தெய்வத்துடன் தொடர்புடைய ஆடல்களும் பாடல்களும் இடம்பெறும். பத்தினிஹாமி என்று அழைக்கப்படுகின்ற பெண் வேடமிட்ட பூசாரி கோயிலிலிருந்து பத்தினித் தெய்வத்தின் ஆபரணமான சிலம்பினைக் கையில் எடுத்துக்கொண்டு சபையோர் முன் உருக்கொண்டு ஆடுவார். அதன் பின்னர் தனது கையிலுள்ள சிலம்பினைப் பலிபீடத்தில் வைப்பார். இதனையடுத்து கப்புறாளையும் ஏனையோரும் மத்தளம், உடுக்கு என்பவற்றின் இசைக்கேற்ப ஆடுவர். வாழைக்குற்றியின் மேல் விளக்குகளை ஏற்றி அதனைச் சுற்றிவந்து ஆடுவர். இதன்பின்னர் ‘வாஹல்பாஹே’ என்கின்ற ஆடல் இடம்பெறும். இது ‘வாஹல’ என்ற தெய்வத்தின் பேரில் செய்யப்படுகின்ற சடங்காகும்.

இதன்போது கண்கட்டப்பட்ட நிலையில் மெய்மறந்து வெறிகொண்டவனாக ஆட்டக்காரன் உருக்கொண்டு ஆடுவான். தென்னம்பாளையை ஒரு கையிலும் தீப்பந்தத்தை மற்றையக் கையிலுமாகப் பிடித்துக்கொண்டு அங்குமிங்கும் ஓடியாடிச் சாம்பிராணியைக் காட்டித் தீய ஆவிகளை ஓட்டுவான். இதன் பின்னர் ‘தெவுள்பாகே’ என்னும் நிகழ்வு இடம்பெறும். இந்நிகழ்வில் பத்தினித்தெய்வம் மாங்கனியிலிருந்து பிறந்த வரலாறு செய்து காட்டப்படும். பாண்டிய அரசனின் அரண்மனைத் தோட்டத்தில் விசித்திரமான, விஞ்சிப்பருத்த மாங்கனியொன்று காணப்படும். இதனையறிந்த மன்னன் தனது வீரர்களை அழைத்து, மாங்கனியை அம்பெய்து வீழ்த்துமாறு கட்டளையிடுவான். ஆயினும் பெரிய வில் வீரர்களால்கூட அம்மாங்கனியை வீழ்த்த முடியவில்லை. இறுதியில் இந்திரன் (சக்கரதேவன்) வயோதிப வேடம் தாங்கி அவ்விடத்தே வந்து, மாங்கனியை எய்து வீழ்த்த அனுமதி கேட்பார். வந்திருப்பவர் இந்திரன் என்று தெரியாத சபையோர்கள் அவரைக் கேலியும் கிண்டலும் செய்வர். அதன் பின்னர் ஒருவாறு அவருக்கு மாங்கனியை வீழ்த்த அனுமதி வழங்குவர். வயோதிபரிடம் பாண்டிய மன்னனின் வில்லையும் அம்பினையும் கொடுத்து அதனால் மாங்கனியை எய்து விழுத்தும்படி கூறுவர். அவர் அந்த வில்லை எடுத்து வளைத்து எய்ய முயலுகின்ற போது வில் முறிந்துவிடும். பின்னர் அவர் தனக்குச் சொந்தமான வில்லினாலும் அம்பினாலும் எய்வதாகக் கூறுவார். அவர் மாங்கனியை எய்து வீழ்த்திய பின்னர் அம்மாங்கனி இரண்டாகப் பிளக்கும். பிளவுற்ற அம்மாங்கனியிலிருந்து பத்தினி தெய்வம் தோன்றுவாள். இவ்வாறு இது நடித்துக் காட்டப்படும். கோயிலிலிருந்து கப்புறாளையினால் கொண்டுவரப்பட்ட பித்தளையினாலான அம்பும் வில்லும், மாங்கனியுமே இக்கரணத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இக்கரணத்தின் போது பத்தினியைப் புகழ்கின்ற ‘அம்பவிதமன’ என்னும் கவிகள் இசையோடு பாடப்படும்.

இந்திரன் வயோதிபருக்குரிய வேடமுகத்துடன் தோன்றி தளர்ச்சியால் நடுநடுங்குகின்ற வார்த்தைகளை உரைப்பார். மத்தளம் அடிப்பவனுக்கும் இந்திரனுக்குமிடையே நடைபெறுகின்ற உரையாடல்கள் ஹாஸ்யச் சுவை நிறைந்ததாகக் காணப்படும்.

கம்மடுவச் சடங்கின் இறுதிப்பகுதியில் ‘ராம மரீம’ (இராம வதை) என்ற நிகழ்வு நிகழ்த்திக் காட்டப்படுவதுண்டு. இராமன் என்பவன் தனது மனைவியின் மரணச் சடங்கிற்குத் துணி வாங்க ஒரு வியாபாரியிடம் செல்வான். இராமனுக்குச் சிங்கள மொழி தெரியாததன் காரணத்தினால், இராமனுக்கும் வியாபாரிக்குமிடையே நடைபெறுகின்ற உரையாடல்கள் ஹாஸ்யச் சுவையுடன் ஆபாசம் நிறைந்தனவாகக் காணப்படும். இவர்களுக்கு உதவியாளனாக ஒரு மொழிபெயர்ப்பாளனும் கலந்துகொள்வான். இராமன் பின்னர் வியாபாரியிடம் துணிகளை வாங்கிச் செல்கின்றான். வியாபாரி தனது பொருட்கள் களவு போய்விட்டதை அறிந்து இராமன் மீது சந்தேகம் கொள்கின்றான். இதனை மத்தளத்தின் இசைக்கேற்ப ஆடியபடி தென்னம்பாளை, தேங்காய் என்பவற்றைப் பயன்படுத்தி மந்திரம் சொல்லி உறுதிப்படுத்திக் கொள்வான். பின்னர் வியாபாரி இராமனைத் தேடிச் சென்று அவனை அடித்துக்கொன்று அவனுடைய உடலை அங்கமங்கமாகப் பிய்ப்பான். வியாபாரி தப்பியோட முயலுகின்ற போது காவலாளிகள் சிலர் அவனைக் கைதுசெய்து இறந்த இராமனை மீண்டும் உயிர்ப்பிக்குமாறு வேண்டுகின்றனர். வியாபாரி எவ்வளவு முயன்றும் இராமனை உயிர்ப்பிக்க முடியவில்லை. “இராமா! உன்னுடைய அப்பா வந்துள்ளார்; அம்மா வந்துள்ளார்; சகோதர சகோதரிகள் வந்துள்ளனர்; மைத்துனர் மைத்துனிமார் வந்துள்ளனர் எழுந்திரு” என்று பாடல்களைப் பாடுவான். “இவர்களுக்கும் இராமனுக்கும் நல்ல உறவில்லை, அதனால் இராமன் எழுந்திரான்” என்று மொழிபெயர்ப்பாளன் நகைச்சுவை ததும்பக் கூறுவான். இறுதியிலே பத்தினித் தெய்வத்தை வேண்டிப் பிரார்த்திக்க இராமன் உயிர்பெறுவான்.

இக்கதைக்கும் பத்தினித் தெய்வத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், செய்யப்படும் கரணத்திற்கும் இதற்கும்கூடத் தொடர்பு கிடையாது என்பார் எதிரிவீர சரச்சந்திரா.2 எனினும் இராமன் என்பவனைக் கோவலனுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும்போது சில புதிர்களுக்கான விடை கிடைக்கப்பெறலாம். எனினும் கோவலனை உயிர்ப்பிக்கின்ற இன்னுமொரு சடங்கும் கம்மடுவவில் ஒருகூறாக இடம்பெறுகின்றது.

கோவலனைச் சிங்கள மக்கள் ‘பாலன்கா’ என்றே அழைக்கின்றனர். பாலன்காவை உயிர்ப்பிக்கின்ற நிகழ்வானது பின்வருமாறு காணப்படுகின்றது.

பத்தினியைத் திருமணம் புரிந்த பாலன்கா சிலகாலங்களின் பின்னர் மாதேவியுடன் (மாதவி) சென்று வாழ்கின்றான். அதன்போது தனது சொத்துகள் அனைத்தையும் மாதேவியிடம் இழந்த பாலன்கா மீண்டும் பத்தினியிடம் வருகின்றான். பின்னர் பத்தினியையும் அழைத்துக்கொண்டு மதுரைக்குச் சென்று அவளது காற்சிலம்பினை விற்க முயலுகின்றான். அங்கு அரசியின் காற்சிலம்பு ஏற்கனவே திருட்டுப்போயிருந்த காரணத்தினால் சிலம்பினை விற்கச் சென்ற பாலன்காவைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து கொலை செய்கின்றனர். இதற்குப் பொற்கொல்லன் ஒருவன் காரணமாக அமைகின்றான். பத்தினி பாலன்காவைத் தேடிச்சென்று அவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பார்த்துப் புலம்புகின்றாள். இறுதியில் இந்திரன் (சக்கரதேவன்) தோன்றிப் பாலன்காவை உயிர்த்தெழச் செய்கின்றார்.

இக்கரணத்தினை நிகழ்த்துவதற்காகத் தென்னோலையினால் ஒரு சிறுகொட்டில் அமைக்கப்பட்டிருக்கும். அதனருகே வாழைக்குற்றிகளும் வேப்பம் கிளைகளும் கட்டப்பட்டிருக்கும். இதன்கீழே பாலன்காவை வெள்ளைத் துணியால் போர்த்திப் படுக்க வைத்திருப்பர். அப்போது வேடமுகமணிந்த கொலை செய்பவன் கையில் வாளுடன் அரங்கிற்கு வருவான். அவனது வேடமுகத்தில் பற்கள் பெரியனவாக வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். அவனது கழுத்திலே சிவப்புநிறமான மாலையை அணிந்திருப்பான். அவன் மத்தளத்தின் தாளத்திற்கமைய வேகமாகவும் பயங்கரமாகவும் ஆடிக்கொண்டு வருவான். இறுதியிலே அவனது வாளால் பாலன்காவைக் கண்டதுண்டமாக வெட்டுவது போன்று பாவனை செய்து அரங்கிலிருந்து மறைவான்.

பத்தினி தனது தோழியான காளியுடன் பாலன்காவைத் தேடிவருவாள். அவர்கள் இருவரும் நளினத்துடன் ஆடியபடி வருவர். அப்போது பயங்கரமான பிசாசொன்று தோன்றி இருவரையும் விழுங்க முயற்சிக்கும். பத்தினி மந்திரத்தைச் சொல்லி அப்பிசாசை அடக்க, அப்பிசாசு பணிந்து பத்தினியின் கால்களில் விழுந்து வணங்கும். இதனைத் தொடர்ந்து காவேரி நதியைக் கடப்பதற்காகத் தோணியோட்டியின் உதவியைப் பத்தினி கேட்பாள். அப்போது தோணியோட்டி மறுப்புத் தெரிவிக்கவே பத்தினி தனது காற்சிலம்பினை எடுத்து வீச, காவேரியாற்றின் நீர் இரண்டாகப் பிரிந்து இடம்கொடுக்கும்.

பத்தினியும் காளியும் தமது பயணத்தைத் தொடர்வர். வழியில் வந்த இரு சிறுவர்கள் மூலம் பாலன்கா கொலையுண்டதை இருவரும் அறிவர். இருவரும் அவன் இறந்த இடத்திற்குச் சென்று சோகத்துடன் ஒப்பாரிப் பாடலைப் பாடுவர். இப்பாடல்கள் பத்தினிஹெலவில் அமைந்துள்ள பாடல்களாகும். இச்சோகமான பாடலினைக் கேட்ட சக்கரதேவன் (இந்திரன்) பிச்சைக்காரனைப் போன்று வேடமிட்டு அரங்கிற்கு வருவார். அவர் தேவாமிர்தம் கொண்ட குளமொன்றினை உருவாக்கி அக்குளத்திலிருந்து பெற்ற நீரினைத் தெளித்து பாலன்காவை உயிர்பெறச் செய்வார். இத்துடன் இந்நிகழ்வு முடிவடையும். இக்கரணத்தின் போது கப்புறாளை இடையிடையே தோன்றிப் பாடல்களைப் பாடுவதும், அப்பாடல்களுக்கேற்ப மத்தளக்காரன் வாசிக்கப் பாத்திரங்கள் அரங்கில் தோன்றி ஆடுவதும் வழக்கமாகும்.3

கம்மடுவச் சடங்கானது தமிழ்மக்கள் மத்தியிலே நிலவுகின்ற அறுவடைக்குப் பிந்திய வைகாசிச் சடங்கினை ஒத்துள்ளதாகவும், கப்புறாளை கம்மடுவச் சடங்கின் போது பெண் வேடமிட்டுச் சடங்குகளைச் செய்வது போன்று கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டினை நிகழ்த்தும் கட்டாடிகள் பெண் வேடமிட்டுச் சடங்கினை நிகழ்த்துகின்றார்களென்றும் பேராசிரியர் வ. மகேஸ்வரன் குறிப்பிடுகின்றார்.4

கிரியம்மா தானம்

பத்தினித் தெய்வத்தை முன்னிறுத்தி சிங்கள பௌத்தர்களால் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கிய வழிபாட்டு நிகழ்வுகளுள் கிரியம்மா தானமும் ஒன்றாகும். கர்ப்பவதியான தாயொருவருக்கு அவரது பேறுகாலத்திற்குச் சற்று முன்பதாக அவரின் குடும்பத்தார் ஒன்றுகூடி நாணயக் குற்றியொன்றைத் தூய்மையான வெள்ளைத் துணியில் முடிந்து அப்பெண்ணிற்குப் பத்தினியம்மனின் அருளாசியினை வேண்டிக் கையில் கட்டிவிடுவார்கள். கர்ப்பவதியான அப்பெண் எந்தவிதமான பிரச்சினையுமின்றிக் குழந்தையைப் பெறவேண்டும் என்றே இந்நிகழ்வு இடம்பெறுகின்றது. இது ‘பண்டுறு’ (Panduru) என அழைக்கப்படும்.

குழந்தை பிறந்து மூன்று மாதங்களின் பின்னர், குழந்தைப் பேற்றின் போதும் பின்னரும் தாய்க்கும் குழந்தைக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாத காரணத்தினால் பத்தினியம்மனிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக கிரியம்மாவிற்குத் தானம் கொடுக்கின்ற நிகழ்வு இடம்பெறும். இதற்கு ஏழு தாய்மார் அல்லது ஏழின் பெருக்கத்தைக் கொண்ட தாய்மார் வெற்றிலைத்தட்டு வைத்து அழைக்கப்படுவார்கள். இவர்களுள் குறைந்தது ஒரு தாயாவது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும். ஏழு எண் அமைப்பில் தாய்மார் அழைக்கப்படுவது பத்தினியம்மனின் ஒருமல பத்தினி, கரமல பத்தினி, கினி பத்தினி, தெவல் பத்தினி, சமன் பத்தினி, ஐரங்க பத்தினி, சித்த பத்தினி ஆகிய ஏழு வடிவங்களைக் குறிப்பதாக அமைகின்றது.

இந்நிகழ்விற்காக வீடு, வாசல் போன்றன துப்பரவு செய்யப்பட்டிருக்கும். இந்நிகழ்வு அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெறும். தூய்மையான வெள்ளாடை அணிந்து வீட்டிற்கு வரும் தாய்மார்களைப் பாதங்களைக் கழுவி வரவேற்றுப் பத்தினியம்மனின் சிலையினை வீட்டில் உயரமான இடத்திலே வைத்து வழிபாடு செய்வர். அறையில் அல்லது மண்டபத்தில் பாய் போட்டு அதன்மேல் வெள்ளைத்துணி விரித்து வருகைதந்த தாய்மாரை அமரச் செய்வர். அவர்களின் முன்னால் தலைவாழை இலையிட்டு அதில் ஏழு கட்டி (துண்டு) பால்சோறு, ஏழு பலகாரம், ஏழு வாழைப்பழம், அரிசிமாவும் தேங்காயும் சீனியும் கொண்டு தயாரித்த ஏழு கூழ்க்கட்டி, பணம், உடை, பரிசுப் பொருட்கள், இளநீருடன் கூடிய பழக்கூடை போன்றன வைக்கப்படும். பின்னர் பத்தினியம்மனை வழிபட்டுப் பாடல்கள் இசைக்கப்படும். அப்போது அனைவரும் கைகளில் விளக்குகளை ஏந்தியிருப்பர். கிரியம்மா தானத்தின் போது பத்தினித் தெய்வத்தினை வேண்டிப் பாடப்படும் பாடல் பின்வருமாறு:

“எரதீவெலா உடுகூனே வடின்னே

எரதீ சலுவ கென பவன்சலன்னே

சுத்த அதுவ தெனதன் பிலிகன்னே

சித்த பத்தினி தெவிமே பிலிகன்னே

றுகுணு ரட்டே கிரியம்மா வருன்னே

றுகுணு சத்தர வட்டதிவஸ் பலன்னே

துன்னுமே கிரிதன வரத னொகின்னே

றுகுணு ரட்டின் கிரிபிசவ் வடின்னே”5

அதனைத் தொடர்ந்து தாய்க்கும் குழந்தைக்கும் வாழ்த்துக் கூறப்படும். நிகழ்வு முடிவடைந்ததும் தானங்களைப் பெற்றுக்கொண்ட தாய்மார் தத்தமது வீடுகளை நோக்கிப் புறப்படுவர். அவர்கள் அவரவர் இல்லங்களிற்குச் செல்லும்வரை, கிரியம்மா தானம் இடம்பெற்ற வீட்டார் தமது வீட்டின் முன்நின்று தீப்பந்தம் ஒன்றினைப் பிடித்துக்கொண்டு அவர்களைப் பார்த்துக்கொண்டிருப்பர். தானங்களைப் பெற்றவர்கள் அவரவர் வீடுகளிற்குச் சென்றதும் தீப்பந்தத்தினை நீரினுள் இட்டு அணைப்பர்.6

சொக்கறி

சிங்கள மக்கள் மத்தியில் காணப்படும் கிராமியக் கலைகளில் ஒன்றாகச் ‘சொக்கறி’ காணப்படுகின்றது. இக்கூத்துடன் பத்தினி வழிபாடும் கதிர்காமக் கந்தன் வழிபாடும் தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. இக்கூத்து பெரும்பாலும் கண்டிப் பிரதேசத்திலும் அதனை அடுத்த மலைநாட்டுப் பகுதிகளிலும் வன்னிப் பகுதிகளிலுமுள்ள சிங்கள மக்களால் மட்டுமே ஆடப்பட்டு வருகின்றது.7 லக்கல, ஹங்குராங்கெத்த, உடபேராதெனிய, ஹேவாஹட்ட, தலாத்துஓயா போன்ற இடங்கள் சொக்கறி நாடகத்திற்குப் பெயர் பெற்ற இடங்களாகும்.8 இது ‘கின்னரய’ எனப்படுகின்ற சாதியினரால் பெரும்பாலும் ஆடப்பட்டு வருகின்றது. சிங்களப் புதுவருடப் பிறப்பினை ஒட்டியே சொக்கறி ஆடப்படுவது வழக்கம். தொடர்ந்து ஏழு தடவைகள் ஆடிய பின்னர் இக்கூத்து நிறுத்தப்படுகின்றது. பின்னர் அடுத்த வருடப்பிறப்பின் பின்னரே இக்கூத்து ஆடப்படும். சூடு அடிக்கின்ற களமே சொக்கறி ஆடப்படும் அரங்காக அமைகின்றது. இவ்வரங்கு வட்டவடிவமானதாக அமைந்திருக்கும்.9 இவ்வட்ட வடிவமான அரங்கிலே கூத்து நடைபெற, பார்வையாளர்கள் நான்கு புறமும் இருந்து பார்த்து ரசிப்பர். மேடைக்குத் திரைகள் கிடையாது. அரங்கின் ஓரத்தில் தென்னங்குருத்தில் செய்யப்பட்ட கூடானது காணப்படும். இது பத்தினி வணக்கத்திற்கும் கதிர்காமக் கந்தன் வணக்கத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றது. சொக்கறியில் ‘கட்டபெற’ (முடிச்சுப்பறை) என்ற ஒருவகை மேளமே வாசிக்கப்படுகின்றது. இசைக்காகச் சிலவேளைகளில் ‘ஹொறனாவ’ (குழல்) வாசிக்கப்படும்.10 இக்கூத்தில் பாலியல் ரீதியான அங்கதச் சுவையூட்டும் சொற்கள் விரவிக் காணப்படுகின்றன.

காசியைச் சேர்ந்த குருகாமி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டிக்குரு அழகற்றவனாகக் காணப்படுகின்றான். அதனால் இவனைத் திருமணம் செய்ய எந்தப் பெண்ணும் முன்வரவில்லை. இதனை நினைத்துக் கவலை கொண்ட குருகாமி பத்தினித் தெய்வத்திடம் உள்ளம் உருகிப் பிரார்த்தனை செய்கின்றான். இவனின் பிரார்த்தனையினால் மகிழ்ச்சியடைந்த பத்தினித் தெய்வம் இவனது தலையில் ஒரு கிரீடத்தை அணிவிக்க, குருகாமி பேரழகன் ஆகின்றான். பின்னர் இவனுடைய அழகிற்கு நிகரானவளான சொக்கறி அம்மா என்ற பெண்ணை மணம் முடிக்கின்றான். இவர்களுக்குப் ‘பச்சிமீரா’ அல்லது ‘பறையா’ என்று அழைக்கப்படும் ஓர் அடிமை பணிபுரிந்து வருகின்றான். நிரந்தரமாகத் தொழிலொன்று இல்லாத காரணத்தினால், மூவரும் இலங்கைக்கு வரத் தீர்மானிக்கின்றனர். இலங்கை வந்ததும் ‘தம்பாவிட்டை’ என்னும் கிராமத்தில் குடியமர்கின்றனர். இங்கு இவர்கள் வசித்து வரும்பொழுது குருகாமியை நாய் கடித்து விடுகின்றது. அந்த ஊரில் பிரல்யம் வாய்ந்த நாட்டு மருத்துவர் ஒருவர் இவனிற்கு வைத்தியம் செய்ய அழைக்கப்படுகின்றார். இதன்போது வைத்தியருக்கும் சொக்கறி அம்மாவிற்குமிடையே ரகசியத் தொடர்பு ஏற்படுகின்றது. ஒரு நாள் இருவரும் யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு ஓடிவிடுகின்றனர். இதனால் கவலையடைந்த குருகாமி ஊரூராக அலைந்து இறுதியில் கதிர்காமக் கந்தனிடம் வேண்டுகின்றான். கதிர்காமக் கந்தன் சொக்கறி இருக்கின்ற இடத்தைக் கூற, குருகாமி அங்கே சென்று பார்த்தபோது, சொக்கறி ஒரு குழந்தையுடன் இருக்கக் காண்கின்றான். குருகாமியைக் கண்ட சொக்கறி தனது தவறை உணர்ந்து மன்னிப்புக்கோர, குருகாமி சொக்கறியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு ஊரிற்குத் திரும்புகின்றான். இதுவே சொக்கறிக்கூத்தின் முக்கியமான கதையம்சமாகும். எனினும் இக்கதையமைப்பில் இடத்துக்கிடம் சிறு மாற்றங்கள் காணப்படுகின்றன.

இக்கூத்தின் முக்கிய பாத்திரத்தினை ஏற்கும் குருகாமி பத்தினித் தெய்வத்தையும் கதிர்காமக் கந்தனையும் வணங்குவதுடன் கூத்து ஆரம்பமாகும். பௌத்த மதம் சார்ந்த வழிபாடு இக்கூத்திலே அருகியே காணப்படுகின்றது. குருகாமி சிவனொளிபாத மலைக்குச் சென்று புத்த தேவனின் புனித பாதத்தினை வணங்குவதான காட்சி அண்மைக்காலத்தில் சில இடங்களில் நடைபெறும் கூத்துகளில் காணப்படுகின்றது.11

இதனையொத்த கூத்தொன்று தமிழ் மக்களிடையேயும் காணப்படுகின்றது. அதுவே மகிடிக்கூத்தாகும். சொக்கறியில் ஆண்டிக்குரு இந்தியாவிலிருந்து கடல் கடந்து வந்து பல கஷ்டங்களை எதிர்கொள்கின்றார். மகிடிக்கூத்தில் ஒண்டிப்புலி என்ற குறவர் தலைமகன் மலையாள தேசத்திலிருந்து கடல்கடந்து தன்மனைவி காமாட்சியுடனும் கூட்டத்தாருடனும் மட்டக்களப்பிற்கு வந்து அங்குள்ள மந்திரவாதிகளுடன் பந்தயமிட்டு, பல அனுபவங்களைப் பெற்று இறுதியில் வெற்றியடைகின்றார். மட்டக்களப்பு மந்திரவாதியாக ஒரு பிராமணன் கற்பனை செய்யப்படுகின்றான். ஆண்டிக்குருவிற்கு ஓர் அசட்டு வேலையாள் இருப்பதைப் போல பிராமணனுக்கும் ஓர் அசட்டு உதவியாளன் அமைகின்றான். ஆண்டிக்குரு சொக்கறியில் பகிடி பண்ணப்படுவது போல, மகிடியில் பிராமணன் பகிடி பண்ணப்படுகின்றான். சொக்கறி போல இதுவும் நகையுணர்வும் அங்கதச் சுவையும் நிறைந்த நாடகமே.12

அடிக்குறிப்புகள்

1. Anuradha Seneviratna (2003), Manifestation of Goddess Pattini in Sri Lanka Society, சிலப்பதிகாரப் பண்பாட்டுக்கோலங்கள். இந்து சமய கலாசார அமைச்சு, கொழும்பு, பக். 96.

2. காரை. செ., சுந்தரம்பிள்ளை (1997), சிங்களப் பாரம்பரிய அரங்கு, பூபாலசிங்கம் புத்தகசாலை, கொழும்பு, பக். 53.

3. காரை. செ., சுந்தரம்பிள்ளை, மு. கு. நூ., பக். 55–56.

4. வ., மகேஸ்வரன் (2016), பெரியதும் சிறியதும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, பக். 60–61.

5. கே. என். ஓ., தர்மதாச, எச். எம். எஸ்., துன்தெனிய (1994), சிங்கள தேவபுராணய, அரச அச்சக வெளியீடு, கொழும்பு, பக். 204.

6. மேலது, பக். 204–205.

7. காரை. செ., சுந்தரம்பிள்ளை, மு. கு. நூ., பக். 83–84.

8. சி., மௌனகுரு, மு. கு. நூ., பக். 69.

9. எதிரிவீர சரச்சந்திரா (1967), சிங்கள நாடகக்கலை ஸொக்கறியும் கோலமும், சிந்தனை, பக். 57.

10. மேலது, பக். 57.

11. காரை. செ., சுந்தரம்பிள்ளை, மு. கு. நூ., பக். 87.

12. சி., மௌனகுரு, மு. கு. நூ., பக். 68.



About the Author

கிருபாகரன் கவிதாஞ்சன்

கிருபாகரன் கவிதாஞ்சன் மட்டக்களப்பு மண்ணைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தையும் அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை மாணிப் பட்டத்தையும் பெற்றவர் ஆவார்.

தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முது தத்துவமாணிப் பட்டத்திற்கான ஆய்வாளராக தொடர்ந்தும் தனது கல்விப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். நாட்டுப்புறவியல், நாடகமும் அரங்கியிலும் ஆகிய துறைகளிலும் பல ஆக்கங்களைத் தற்காலத்தில் எழுதி வருகின்றார். என்பதோடு இவர் சிறந்த மேடை நடிகரும் ஆவார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்