மலையக வாழ்வியலில் விளையாட்டுப் பாடல்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
16 நிமிட வாசிப்பு

மலையக வாழ்வியலில் விளையாட்டுப் பாடல்கள்

August 26, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு இனமும் தம்மை நிலைநிறுத்திக் கொள்வதிலும், தமது பண்பாட்டு வாழ்வியல் கோலங்களை அடையாளப்படுத்திக் கொள்வதிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஓர் இனம் உலகில் வாழ்வதையும், தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதையும் வெளிக்காட்டிக் கொள்வதற்காகப் பல்வேறு வழிமுறைகளைத் தொடர்ச்சியாகக் கையாண்டு வருகின்றது. இதுவே ஒரு சமூகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் பாலமாகவும் திகழ்கிறது. இதன் காரணமாகவே, மனிதனிடம் இயற்கையாகவே அமைந்த கலை வடிவங்களை மக்கள் தங்களின் கருத்துப் பரப்புரைக்கான முதன்மை ஆயுதமாகப் பயன்படுத்தினர். இந்தக் கலை, இலக்கிய வடிவங்கள் மனிதனை ஏனைய மானுடப் பண்பாடுகளோடு இணைத்து, முழு மனித குலத்தையும் ஒருமைப்படுத்தி ஆட்கொள்ளும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன. அந்த வலிமைமிக்க செயல்பாட்டை மனித சமூகத்திற்குக் கூட்டு உழைப்பே பெற்றுக் கொடுத்திருக்கிறது. எந்தவொரு சமூகமும் கூடி வாழ்கின்றபோது, அச்சமூகத்தின் ஒரு நிகழ்வாக ஆடலும் பாடலும் அமைந்துவிடுகின்றன. அவையே பிற்காலத்தில் சீர்மை பெற்ற இலக்கிய வடிவங்களாக மாறிவிடுகின்றன. இவற்றுள் முதன்மை பெற்ற இலக்கிய வடிவங்களாகத் திகழ்ந்து கொண்டிருப்பவையே நாட்டார் இலக்கியங்கள் ஆகும். இந்த நாட்டார் இலக்கியங்களே இன்றைய செவ்வியல் இலக்கியங்கள் அனைத்துக்கும் அடித்தளமாக அமைந்துள்ளன.

“கலையும் விஞ்ஞானமும் சமூக உழைப்பிலிருந்து தோன்றியவை. இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள். இவை இரண்டும் மானிட உழைப்பிலேயே வேர் கொண்டுள்ளன” – ஜார்ஜ் தொம்ஷன்

இதன்படி, மக்கள் இலக்கியங்கள் என்று போற்றப்படுகின்ற நாட்டுப்புற இலக்கியங்கள், இன்றைய மானிடவியல் பண்பாட்டை ஆய்வு செய்வதற்கும் உழைக்கும் வர்க்கத்தின் உன்னதமான வெளிப்பாட்டை ஆராய்வதற்கும் அடித்தளமாக அமைகின்றன. சமூகத்தின் அடித்தள மக்களது வரலாற்றை உள்ளபடி அறிய விரும்பினால், தவிர்க்க முடியாதபடி அம்மக்களின் நாட்டார் இலக்கிய இயலைக் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இன்று சமூகவியல் ஆய்வுகளில் நாட்டாரியலைத் தவிர்த்து ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதபடி, அதன் தாக்கமும் உள்ளடக்கமும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன என்பார் பேராசிரியர் க. அருணாசலம்.

மேலும், நாட்டுப்புற மக்களின் நாகரிகத்தோடும் பண்பாட்டோடும் விளையாட்டு இணைந்ததாகும். விளையாட்டு என்பது வெளித்தூண்டல்கள் இன்றி மகிழ்ச்சியூட்டும் செயல்களில் இயற்கையாக ஈடுபடுவதாகும். விளையாட்டை மனமகிழ்ச்சியூட்டும் செயல் என்பர். விளையாட்டு பொழுதுபோக்காக மட்டுமின்றி, உடல்நலம், மனநலம் ஆகியவற்றைப் பேணுவதாகவும் உள்ளது. விளையாட்டில் உடல் செயல்களின்றி உள்ளச் செயல்களும் இடம்பெறுகின்றன. குழந்தைகளின் இயல்புகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. வேலைக்கும் விளையாட்டுக்கும் உள்ள வேற்றுமை, செயல்படுபவனின் மனப்போக்கில் உள்ளது எனலாம். வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கும் களம் என்றும் விளையாட்டைக் கூறுவர். மற்றைய சமூக நிறுவனங்களைப் போல, விளையாட்டும் வரையறுக்க இயலாத மூலத்திலிருந்து தோன்றியதாகும். மனித இன வரலாற்றைக் கூர்ந்து நோக்கின், மனிதன் இன்றைய நிலையை அடைவதற்கு பல்வேறு நிலைகளைக் கடந்து, பல்வேறு காலகட்டங்களில் முன்னேறி வந்துள்ளான். வேட்டையாடிய காலத்திலிருந்து இந்த விளையாட்டும் அவனிடத்தே மிகவும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது. விளையாட்டின் அடிப்படை இயல்பு, விளையாட்டின் பயன், இன்று அது பெற்றிருக்கின்ற செல்வாக்கு என்பவை ஆரம்ப காலங்களில் மலையக மக்களிடத்தில் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றன, அவர்கள் எவ்வாறான விளையாட்டுகளை விளையாடியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டு, கிடைக்கப்பெற்ற பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரையை ஆராய்கிறேன்.

அந்த வகையில், மலையக நாட்டார் இலக்கியம் என்பதும் மக்களது வாழ்வியலையும், அவர்களது உழைப்பு, ஏக்கம், தாக்கம், அவர்களது கனவுகள் என்பவற்றையும் தத்ரூபமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓவியமாகும். ஆங்கிலேயக் காலனித்துவத்தால் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இம்மக்கள், தம் மண் சார்ந்த கலை, இலக்கியங்களையும் தமது துன்ப துயரங்களோடு சுமந்து கொண்டே வந்தனர். அவர்கள் வந்த காலம் முதல் தங்களுடைய உழைப்புக்கு மத்தியிலும், ஓய்வு நேரங்களில் ஆடல், பாடல்களில் ஈடுபட்டு மகிழ்ந்திருந்தனர். இவர்களின் பாடல்களில் மக்களின் இதய ஒலிகளைக் கேட்கலாம். இன்பத்தில் துள்ளி மகிழ்ந்து ஆடிப் பாடி மகிழும் பாங்கினைக் காணலாம். துன்பத்தில் ஆழ்ந்து, அடங்கி, சோர்ந்து போகும் அவலத்தையும் காணலாம். மக்களின் மறைக்கப்பட்ட உள்ளத்தின் பாங்கினை மலையகப் பாடல்கள் அள்ளித் தெளிக்கின்றன. அவற்றிலே மிகவும் அரிதாகக் கிடைக்கின்ற சிறுவர்களின் விளையாட்டுப் பாடல்களைப் பற்றிய ஒரு தேடலாக இக்கட்டுரை அமைந்து விடுகிறது.

விளையாட்டு என்பது காலங்காலமாகத் தலைமுறை தலைமுறையாக மக்களிடத்தே குடிகொள்ளும் மனவளர்ச்சி சார்ந்த வடிவமாகும். மலையகச் சிறுவர்கள் மிக நீண்ட காலமாகத் திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்கள். பள்ளிக்கூட வசதியோ, விளையாட்டு வசதியோ, பாதுகாப்போ இன்றி, லயன் குடியிருப்புகளில் குடும்ப வேலைகளையும், குழந்தைகளைப் பராமரிக்கும் வேலைகளையும் சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலம் செய்து வந்தவர்களாக இருந்தனர். இவர்களை இன்றும் ஏனைய சிறுவர்களோடு ஒப்பிட்டால், மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இவர்களுடைய உடல், உளவியல், போசாக்கு ஆகியவை காணப்படுகின்றன. இவர்களின் உள்ளத்தில் எழுந்த விளையாட்டுப் பாடல்கள் காரணகாரியத் தொடர்பு எதுவும் இன்றிப் பாடப்பட்டவையாகும். பொழுதுபோக்கை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்டு இவை அமைந்துள்ளன. 

இவற்றில் முக்கியமான ஒன்றாக அமைந்த விளையாட்டு இவ்வாறு அமையும்.

சிறுவர்கள் வரிசையாக நின்று அவர்களுடைய இரண்டு கைகளையும் முன்னாள் இருப்பவர்களின் தோளிலே இறுக்கமாக வைத்துக் கொள்வர். முன்னால் இருக்கின்றவர் கோச்சு (புகையிரதம்) சங்கடிப்பதைப் போல சங்கொலித்து சத்தத்தை எழுப்பி இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல, அனைவரும் அவர் பின்னால் செல்வார்கள். காலை, மாலை நேரங்களில் இவ்வாறு நீண்ட லயங்களைச் சுற்றி வந்து இவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பாடல் இவ்வாறு அமையும்.

“சிக்கு புக்கு….

நீலகிரி தொப்பித்தோட்டம்

நாங்க வார கோச்சியில

மிச்சங் கூட்டம்”

இதிலே ஒற்றுமை, ஒழுக்கம், கட்டுப்பாடு அனைத்தும் நிறைந்திருக்கும். வீட்டிலே வெறுமனே பொழுதைப் போக்க முடியாமலும் வீட்டை விட்டு விலகிப்போக முடியாமலும் இருக்கின்ற சிறுவர், சிறுமியர் வயதில் வித்தியாசம் இன்றி, வரிசையாகச் சேர்ந்து பாடுவதும் அந்த வரிசை நீண்டு கிடக்கும் லயத்தை சுற்றிச் சுற்றி வருவதும் நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். இங்கு குறிப்பிடப்படும் ‘நீலகிரி’ எனும் இடம், ‘நானோயா’வைக் குறிப்பதாகச் சிலர் கருதும் அதேவேளையில், அது ‘வட்டக்கொடை’ எனும் ஊரையே குறிப்பதாகப் பிறர் சுட்டிக்காட்டுகின்றனர். தொப்பித்தோட்டம் என்பது ‘அட்டனை’க் குறிக்கும் தமிழ்ப் பெயர். இவ்விரண்டு ஊர்களையும் ஒருங்கிணைத்துப் பாடும் இப்பாடல், மலையக மக்கள் வந்த கோச்சியில் நிலவிய கூட்ட நெரிசலையும் சித்தரிப்பதாக அமைகிறது.

அதேபோல் இன்னொரு விளையாட்டுப் பாடல் இவ்வாறு அமைகிறது.

“பச்சைப் பாம்பு

பவள வெத்தல

மடிச்சி தாரேன்

சுங்கானுக்கூ நெருப்பு தாரேன்

சூரியனே வெயில தா……”

இப்பாடல், பிள்ளைகள் மழைக்காலங்களில் அதிகக் குளிராலும், பாடி ஆடுவதற்கான வசதியின்றியும் அடைபட்டுக் கிடக்கும் லயன் குடியிருப்புகளில் இருந்து வெயில் கேட்டுப் பாடும் அழகிய பாடலாகும். மலையகம் குறிப்பிட்ட காலங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யக்கூடிய பகுதியாகும். இக்காலப்பகுதியில் தொடர் மழை பெய்துகொண்டிருப்பதால், லயத்து வாழ்க்கை மிகப்பெரிய துன்பம் தரக்கூடியதாக இருக்கும். பாடசாலைக்குச் செல்வதும் இடையூறாகும். எனவே, பாடசாலைச் செயற்பாடுகளும் நடைபெறாமல் போகும். இந்நிலையில், பிள்ளைகள் வீட்டுக்குள் கிடந்து பெரும் மனச்சோர்வுக்கு உள்ளாகின்றனர். இக்காலத்தை ரசித்து, வெயில் வேண்டிப் பாடுவது இயல்பாக நடைபெறும் நிகழ்வாகும். எனவே, இக்காலங்களில் வெயிலைக் கண்டால் இவர்களுக்குப் பேரானந்தமாக இருக்கும். வெயில் கேட்டுப் பாடுவது இச்சிறுவர்களுக்கு இயல்பான ஒரு தேவையாக அமைந்துவிடுகிறது.

பின்வரும் பாடலை, பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகின்ற போது ஒருவரை ஒருவர் கேலி செய்துகொண்டு, விளையாடிப் பாடி மகிழ்வர்.

“எட்டும் எட்டும் பதினாறு

ஒங்க அப்பன் கோணாறு

ஆத்துக்குப் போனாறு

நண்ட புடிச்சாறு

சுட்டுத் தின்னாறு

சுருங்கிப் போனாறு……”

ஓய்வு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் சேர்ந்து விளையாடுகின்றபோது, ஒருவரை ஒருவர் கேலி செய்வது வழக்கம். இது சிலவேளைகளில் சண்டையாகக்கூட மாறும். ஆனாலும், இவ்வாறு சிறுவர்கள் விளையாட்டாக இப்பாடலின் ஊடாகக் கேலியும் கிண்டலும் செய்து, ஒருவரை ஒருவர் மகிழ்வித்துப் பாடி மகிழ்கின்ற தன்மையால், இவர்களுடைய துன்பம் நிறைந்த வாழ்வு இன்பம் நிறைந்த வாழ்வாக மாறிவிடுகிறது. காலையில் பெற்றோர்கள் அவர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள். பகல் நேரத்தில் தாய், தந்தை வீட்டுக்கு வந்து உணவு சமைத்து, அவர்களுக்கு உணவைக் கொடுத்துவிட்டு மீண்டும் வேலைக்குச் செல்வார்கள். இக்காலப்பகுதியில் வீட்டிலேயே வெறுமனே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்காமல், வீட்டு வேலைகளை எல்லாம் செய்துவிட்டு, கூட்டமாகச் சேர்ந்து ஆடிப் பாடுகின்ற போது, இத்தகைய பாடல்கள் அவர்களுக்கு பெரும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துவிடுகின்றன.

இன்னொரு வாய்மொழிப் பாடல் இடம்பெறும் விளையாட்டு இவ்வாறு அமையும்.

மண்ணை ஓரிடத்தில் குவித்து, இரு கைகளையும் விரல்களுக்கு இடையில் கோர்த்து, அந்த மண் மேட்டைக் கைகளால் அழுத்திப் பிடிக்க வேண்டும். அந்த மண்மேட்டைச் செய்யும் பிள்ளை, அந்த மண் மேட்டுக்குள் குச்சி அல்லது கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு சிறிய பொருளை வைத்து விடுவார். மற்றைய பிள்ளை விரல்களுக்கு இடையில் விரலை விட்டு மண்ணைப் பறிப்பார். பறிக்கும் போது உள்ளே வைத்த பொருள் கிடைக்குமாயின், மண்ணைப் பறித்த பிள்ளை வெற்றி பெறுவார்; இல்லையெனில், கையை வைத்துப் பிடித்த பிள்ளை வெற்றி பெறுவார். கையை அழுத்திப் பிடித்த பிள்ளை, அந்தப் பொருளை எடுக்க விடாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அப்போது பாடப்படும் பாடல் பின்வருமாறு அமையும். 

“கீச்சு மூச்சு தம்பலம்

மியா மியா தம்பலம்

மாச்சி மாச்சி சம்பளம்

மயா மயா தம்பலம்

கண்ண மூடிகிட்டு

கையை வை…” 

மண்மேட்டின் மீது பிள்ளை கை வைக்கும்போது கண்ணை மூடிக்கொண்டுதான் கை வைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்தப் பிள்ளையின் கைக்குள் இருக்கும் பொருளை எடுப்பவர்களுக்கு பொருளை இலகுவாக இருக்கும். எனவே, இது ஒரு வித்தியாசமான விளையாட்டாகும்.

இன்னொரு விளையாட்டு பின்வருமாறு அமையும். பிள்ளைகள் ஐந்து, ஆறு பேர் வட்டமாக அமர்ந்துகொள்வார்கள். அப்போது ஒவ்வொரு பிள்ளையும் தனது இரு கைகளையும் தரையில் அழுத்தி, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கைகளை அவ்வாறு வைக்கும்போது, அவை மிகவும் அழகான வட்ட வடிவில் அமைந்திருக்கும். அதில் ஒருவர் இப்பாடலைப் பாடி, யார் வெற்றி பெறுகிறார், யார் தோல்வியடைகிறார் என்பதைத் தீர்மானிப்பார்.

“தத்தக்கா புத்தக்கா

தவளம் சோறு

எட்டு எரும

எருமைப் பாலு

தூக்கு மரத்தில 

துணியக் கட்டி 

ஒங்க அப்பன் பேரு என்ன?”

இதற்கு இன்னொரு குழந்தை ‘முருங்கைப் பூ’ என்று பதில் சொல்லும்.

“முருங்கைப் பூவ தின்னாத

முள்ளாந்தன் நீயும் குடிக்காத

பாக்கு வெத்தலை போடாத

பாம்பு கைய படக்குனு எடு”

இதற்கு இன்னொரு குழந்தை ‘எடுக்க மாட்டேன்’ என்று பதில் கூறும்.

“எடுக்காட்டிக் கோழி

கொடுக்கக் கடி

கொண்டலத்தான் வாலக்கடி

தார் தார் வாழைக்காய் 

தைய முட்டி வாழைக்காய் 

பூப்போல கையெடுத்து     

நெத்தியில வச்சுக்கோ”

இவ்விளையாட்டை மாறி மாறிச் செய்துகொண்டு விளையாடுவார்கள். இதில் ஒற்றுமை, மனனம் செய்யும் முறை என்பவற்றை எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கற்றுக்கொள்வார்கள். மலையக வாய்மொழிப் பாடல்களில் இவ்வாறான விளையாட்டுப் பாடல்கள் அதிகம் காணப்பட்டாலும், இன்று அவற்றைத் தேடிப் பெறுவது இலகுவான விடயமல்ல. மலையகப் படைப்பாளர்களிடமும் அச்சமூகத்தாரிடமும் காணப்பட்ட மற்றொரு முக்கியமான குறைபாடு, இத்தகைய பாடல்களைத் தேடிச் சேகரித்து ஆவணப்படுத்துவதில் காட்டிய போதிய கவனமின்மையாகும். மேலும், அவ்வாறு ஆவணப்படுத்திய சிலர் நாட்டைவிட்டுச் சென்றமையாலும், பாரம்பரியப் பாடல்கள் மற்றும் விளையாட்டுப் பாடல்கள் போன்றவற்றைத் தற்காலத்தில் கண்டறிந்து புரிந்துகொள்வதில் பெரும் தடைகள் நிலவுகின்றன.

இன்னொரு விளையாட்டுப் பாடல் இவ்வாறு அமைகிறது.

“அக்கா வீட்டுக்குப் போனேன் 

ஐஸ்பழம் தந்தாங்க 

வேணான்னு வெளிய வந்தேன் 

வேலியெல்லாம் பாம்பு 

பாம்படிக்க கம்பெடுத்தேன் 

கம்பெல்லாம் சேறு 

சேறு கழுவ ஆத்துக்குப் போனேன்

ஆத்தெல்லாம் மீனு 

மீன்பிடிக்க வலையெடுத்தேன்

வலையெல்லாம் ஓட்ட 

ஓட்ட தைக்க ஊசி எடுத்தேன் 

ஊசி எல்லாம் வெள்ளி 

வெள்ளியம்மா வெள்ளி 

வெத்தல பாக்கு கிள்ளி”

இப்பாடலும் மலையகச் சிறுவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற பாடலாக விளங்குகிறது. 

விளையாட்டு என்பது சிறுவர்களின் உள்ளத்தையும் உடலையும் வலிமைப்படுத்தி, சமநிலையான ஆளுமையை வளர்த்தெடுக்க உதவும் முக்கியமான நிகழ்வாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. இச்சூழ்நிலையில், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் தோட்டங்களில் பாடசாலைகள் இல்லாத காலத்திலும், பாடசாலைகள் உருவான பின்னர் தோட்டப் பாடசாலைகளைத் தோட்ட நிர்வாகமே நடத்திக்கொண்டிருந்த காலப்பகுதியிலும், அப்பிள்ளைகளின் ஆற்றலையும் ஆளுமையையும் வெளிக்கொண்டு வருவதற்கு எந்தவிதமான ஆக்கபூர்வமான முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஆங்கிலேய ஆட்சியோ, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் பொறுப்பேற்ற அரசுகளோ, இப்பிள்ளைகளின் கல்வி, விளையாட்டுத்துறைகளை ஊக்குவிப்பதற்கு எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அரசு பொறுப்பேற்ற பின்னரும், மலையகப் பாடசாலைகளில் விளையாட்டுத்துறை சார்ந்த முழுமையான செயல்பாடுகள் இன்னும் நிறைவேறாத சூழ்நிலையே காணப்படுகிறது. இத்தகைய சூழலில், தங்களின் வாழ்வியல் அனுபவங்கள் தந்த படிப்பினைகளால் அவர்கள் பாடிய இப்பாடல்கள், முழுமையோ ஆழமான கருத்தோ அற்றவையாக இருந்தாலும், அவர்களின் இளமைக்காலம் இத்தகைய மகிழ்ச்சியோடு கழிந்திருக்கிறது என்பதை அறியும்போது மனதிற்கு ஓரளவுக்கு ஆறுதல் கிடைக்கின்றது.

இன்னொரு விளையாட்டு இவ்வாறு இடம்பெறுகிறது. பிள்ளைகள் கூடி விளையாடும்போது, ஒரு பிள்ளையின் கண்களைத் துணியால் கட்டி, அந்தப் பிள்ளையை நான்கு அல்லது ஐந்து முறை சுற்றி விடுவார்கள். பின்னர், அந்தப் பிள்ளை ஏனைய பிள்ளைகளைத் தேடித் தொட்டுவிட்டால், அந்தப் பிள்ளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். அவ்விளையாட்டில் பாடப்படும் பாடல் பின்வருமாறு. 

“கண்ண கன்னம் பூச்சோ

காட்டுத்தலையோ

எத்தனை முட்டை…….”

இதற்கு ஒரு பிள்ளை பின்வருமாறு பதில் சொல்லும்.

“மூணு முட்டை

மூணு முட்டையை சாப்பிட்டு

சிங்கார முட்டை கொண்டு வா”

பிள்ளைகளைச் சுற்றிச் சுற்றித் தேடிப்பிடிக்கும் வரை இப்பாடலைப் பாடி விளையாடுவர். 

“கொலை கொலையா 

முந்திரிக்கா 

நரியும் நரியும் 

சுத்தி வா 

கொள்ளை அடித்தவன் 

எங்கு இருக்கான்…”  

என்ற பாடலின்போது சிறுவர்கள் வட்டமாக அமர்ந்துகொள்வார்கள். அவர்களில் ஒருவர் கையில் ‘குழை’ (மரக்கிளை) ஒன்றைப் பிடித்திருப்பார். அந்தக் குழைப்பிடியுடன் பாடலைப் பாடிக்கொண்டு சுற்றிச் சுற்றி ஓட வேண்டும். ஓடுபவர் அந்தக் குழையை அமர்ந்திருக்கின்ற பிள்ளைகளில் ஒருவரின் பின்னால் வைத்து விடுவார். அந்தக் குழையைத் தனக்குப் பின்னால் வைத்துவிட்டுச் செல்லும் நபரைக் கவனிக்கும் பிள்ளை, குழையை எடுத்துக்கொண்டு குழையைப் போட்ட நபரை விரட்டியடிக்க வேண்டும். அவ்வாறு அவர் அடிபடாமல் ஓடி, வட்டத்தின் நடுவுக்குச் சென்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இவ்வாறு இந்த விளையாட்டை நேரம் செல்வதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.

பிள்ளைகள் உடல் வலிமையையும் மனவலிமையையும் பெற்றவர்களாக வளர்ந்தபோதும், அவர்களுடைய ஆளுமையை இனங்கண்டு, அடுத்தகட்ட வளர்ச்சிப் பாதையில் அவர்களைக் கொண்டு செல்வதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, அப்பிள்ளைகளைத் தொடர்ச்சியாகத் தொழிலாளர்களாக்குவதற்கே பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனென்றால், அக்காலத்தில் பாடசாலைகள் இருக்கவில்லை. அப்படிப் பாடசாலைகள் இருந்தாலும், அவை எழுத்து, வாசிப்புக்கு மட்டுமான தரம் 5 வரையிலான கல்வியை வழங்கும் பாடசாலைகளாகவே இருந்தன. இப்பாடசாலைகளில் பிள்ளைகளை வலுக்கட்டாயமாகக் கொண்டுசேர்ப்பார்கள். சிலர் அவ்வாறு பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புவதற்கு விருப்பமின்றி, வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அவர்களை வீட்டிலேயே வைத்துக்கொள்வார்கள். இதன்மூலம், அப்பிள்ளைகளையும் தோட்டத் தொழிலாளர்களாக மாற்றுவதிலேயே அப்போதைய நிர்வாகமும் சமூகமும் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கின்றன என்பதையும் இங்கு பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

பிள்ளைகளிடத்தில் பிரபல்யம் பெற்ற இன்னொரு விளையாட்டுப் பாடல் இவ்வாறு அமைகிறது.

“சங்கிலி புங்கிலி 

கதவத் தொற 

நான் மாட்டேன் 

வேங்கப்புலி….

சங்கிலி புங்கிலி

கதவத் தொற

நான் மாட்டேன்

வேங்கப்புலி….

பசு மாட்டைக் கண்டீங்களா

ஆமா 

எங்க பசு மாட்டைக் கண்டீங்களா 

ஆமா……”

என்ற பாடலைப் பாடும்போது, பிள்ளைகள் ஐந்து, ஆறு பேர் கொண்ட குழுவாக வட்டமாக நிற்பர். அவர்கள் கைகளை நீட்டி இறுக்கமாகப் பிடித்துக்கொள்வர். ஒருவர் வட்டத்தின் மத்தியில் இருப்பார். பாடல் பாடப்பாட, உள்ளே இருப்பவர் வெளியே செல்லப் போராடுவார். அவர் எவ்வாறு வெளியேற முயல்கிறார் என்பதும், அவரை வட்டத்தில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்துவதும் இவ்விளையாட்டின் அடிப்படையாக அமையும். இது ஓடிப்பிடித்து விளையாடும் விளையாட்டாகவும் அமையும். இவ்வாறு உள்ளே இருப்பவர் எப்படியாவது அந்த வளையத்தை உடைத்துக்கொண்டு வெளியேறிவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால், வட்டத்தில் இருப்பவர்கள் அவரை வெளியேற விடாமல் எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

மலையகப் பகுதிகளில் இவ்வாறான விளையாட்டுப் பாடல்கள் அதிகமாக உள்ளன. அவற்றைத் தொடர்ந்து தேடி ஆவணப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மக்களிடத்தே காணப்படும் இவ்வாறான வாய்மொழி இலக்கியச் செல்வங்கள் வெறுமனே பாடல்களாக மாத்திரம் அன்றி, அவர்களின் வாழ்வியல், வரலாறு என்பவற்றைப் பேசக்கூடியவையாகவும் இருக்கின்றன. 

சான்றாதாரங்கள் 

பக்தவத்சல பாரதி. 2014. இலங்கை–இந்திய மானிடவியல். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

தனஞ்செயன், ஆ. 2012. குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும். பாவை பிரின்டர்ஸ், சென்னை–14.

தனஞ்செயன், ஆ. 2015. விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

வேலுப்பிள்ளை, சி. வி. 1976. மாமன் மகளே. சுதந்திரம் அச்சகம், கொழும்பு.

அருணாச்சலம், க. 1997. இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள். குமரன் புத்தக இல்லம், கொழும்பு–12.



About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்