அறிமுகம்
சில அறிஞர்களிடத்திலும் கல்வியாளர்களிடத்திலும் ‘ஈழம்’ என்ற சொற்பதம் இலங்கையின் இருபதாம் நூற்றாண்டின் தனிநாடு இயக்கத்தின் உருவாக்கம் என்ற தவறான கருத்து நிலவிவருகிறது. இந்த ஆய்வுக் கட்டுரை ‘ஈழம்’ என்ற பெயர் இலங்கைத் தீவின் பூர்வீகத் தமிழ்ப் பெயராக இற்றைக்கு முன்னர் 2200 ஆண்டுகள் முதலாக வழக்கிலிருந்து வந்திருப்பதைக் காட்டும் கல்வெட்டு, கல எழுத்துப் பதிவு மற்றும் இலக்கியச் சான்றுகளை முன்வைக்கிறது.
இடுபெயர்த் தொகுதி
இலங்கைத் தீவைக் குறிப்பிடும் ஆதியான மூன்று பெயர்களாவன: 1. லங்கா (இராமாயணம்), 2. தாம்ரபர்ணி (அசோகன் கல்வெட்டு), 3. ஈழம் (திருப்பரங்குன்றம் கல்வெட்டு). இம்மூன்று பெயர்களும் பொது யுகத்திற்கு (கிறிஸ்தாப்த காலத்திற்கு) முற்பட்ட காலத்திலிருந்தே பாவனையிலிருந்து வந்திருக்கின்றன.
இந்த மூன்று பெயர்களிலும் மிகப் பழமையான பெயர் லங்கா என்பதாகும். முண்டா மொழிகளில் லங்கா என்றால் நீரினால் சூழப்பட்ட ஒரு தீவு எனப் பொருள்படும். ஆஸ்திரோ-ஆசியாற்றிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மொழி தென் ஆசியா, தென்கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஆதிகால ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்கள் பேசிய ஒஸ்றிக் மொழிகளிலிருந்து பிறந்ததாகும். இற்றைக்கு ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பனியுகத்தின் இறுதியில், இலங்கை இந்தியாவிலிருந்து தனியான தீவாகப் பிரிந்த சமயம் இலங்கையின் வேடர்களின் ஒரு பகுதியினரின் முன்னோடிகளான ஆஸ்திரோ-ஆசியாற்றிக் மக்களால் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கலாம். லங்கா என்ற பெயருக்கு திராவிட மொழிகளிலோ, இந்தோ-ஆரிய மொழிகளிலோ மூலம் கிடையாது. அதை தமிழ்ப் பெயர் என்பதோ, சிங்களப் பெயர் என்பதோ, சமஸ்கிருதப் பெயர் என்பதோ, பாளி மொழிப் பெயர் என்பதோ வெறும் கற்பனையே. ஏகப்பட்ட முண்டா மொழிச் சொற்கள் திராவிட மொழிகளிலும், சமஸ்கிருதத்திலும் காணப்படுகின்றன. இராமாயணம் எழுதிய வால்மீகி லங்கா என்ற இத்தீவின் முண்டா மொழிப் பெயரை தனது காவியத்தில் எடுத்துக்கொண்டார். தமிழ் மொழியில் லங்கா என்ற பெயர் இலங்கை ஆனது. இலங்கை அரசு 1972ஆம் ஆண்டில் சிலோன் என்றிருந்த முந்திய பெயரை ஸ்ரீலங்கா என மாற்றிக் கொண்டது.
மாமன்னர் அசோகன் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் தனது கல்வெட்டுகளில் இத்தீவகத்தின் பெயரைப் பிராகிருத மொழியில் தாம்ரபர்ணி எனப் பதிவு செய்திருக்கிறார். பாளி மொழியில் இது தம்பபன்னி ஆனது. கிரேக்க ஆசிரியர்கள் இப்பெயரை தாப்ரபேன் எனப் பதிவு செய்திருக்கிறார்கள்.
தாம்ரபர்ணி என்ற இத்தீவின் பெயர் அக்கால மக்களின் அன்றாட வாழ்வில் பழக்கத்தில் இருந்ததோ எனத் தெரியவில்லை. பொ.யு. மூன்றாம் நூற்றாண்டில் இத்தீவிற்கு ஹெலதிவி, சிஹலதிவி என்ற பெயர்கள் நடைமுறையில் இருந்திருக்கின்றன.
இலங்கைக்கு சிஹலதிவி (சிஹல தீவு) என்ற பெயர் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. ‘ஹெல’ என்பது ஏற்கனவே வழக்கிலிருந்த இலங்கைத் தீவையும், இலங்கை மக்களையும், அவர்கள் பேசிய மொழியையும் குறிப்பிட உபயோகத்திலிருந்த சொற்பதம். இக்காலத்தில் ‘லங்காவை’ ‘ஸ்ரீலங்கா’ என அழைப்பது போல அன்று ‘ஹெல’ என்ற தீவை ‘ஸ்ரீஹெல’ என அழைத்தார்கள். பாளி மொழியில் ‘ஸ்ரீஹெல’ என்ற சொற்பதம் ‘சீஹெல’, ‘சிஹெல’ ஆயிற்று. பின்னர் ‘சிஹெல’ என்பது ‘சிங்கல’ ஆனது. இந்த மாற்றத்தை உணராத மகாவம்சம் எழுதிய மகாநாமர் ‘சிங்கள’ என்ற பெயர் ஏற்படுவதற்கான காரணமாக அந்த மக்கள் சிங்கத்தின் வழிவந்தவர்கள் என்ற கதையைப் புகுத்தியுள்ளார் என்கிறது இந்த விளக்கம்.
இலங்கையைக் குறிப்பிடும் மற்றைய மூலத் தமிழ்ப் பெயர் ஈழம். இப்பெயர் பொ.யு.மு. இரண்டாம் அல்லது பொ.யு.மு. முதலாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட ‘திருப்பரங்குன்றம் கல்வெட்டில்’ காணப்படுகிறது. இப்பெயர் இன்றுவரை நிலைத்திருக்கிறது. இதற்கான ஆதாரம் இந்த ஆய்வுக் கட்டுரையின் முதன்மைப் பகுதியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஈழம் என்ற பெயரின் மூலம்: சில கோட்பாடுகள்
‘திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகராதி’ (Dravidian Etymological Dictionary – Oxford 1961) என்ற நூலை எழுதிய பேராசிரியர் தோமஸ் பரோ, பேராசிரியர் முரே இமெனெயு ஆகியவர்கள் ‘ஈழம்’ என்பது திராவிட மொழிச் சொற்பதம் என்றும், அதன் மாற்றுச் சொல்லான ‘சீழம்’ என்பதும் இலங்கையில் காணப்படும் கள்ளு வழங்கும் பனை மரங்களைக் குறிப்பிடும் என்றும் பதிவு செய்துள்ளார்கள். கேரள நாட்டில் பனை மரத்திலேறிக் கள்ளெடுப்பவர்கள் ‘ஈழவர்’ என அழைக்கப்படுவது இங்கே குறிப்பிடத்தக்கது.
திராவிட மொழிகளில் ‘ஈழம்’ என்பது செம்பைக் (தாமிரம்) குறிப்பிடும் சொற்பதமாகவும் உள்ளது. பிராகிருத மொழிகளில் ‘தாம்ரபர்ணி’ என்ற பதம் செம்பைக் குறிப்பிடும். இலங்கையில் காணப்படும் செந்நிற மண் இந்நாடு ‘ஈழம்’ என்றும், ‘தாம்ரபர்ணி’ எனவும் அழைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
‘ஈழம்’ என்ற பெயரின் மூலத்தைப் பற்றிய மூன்றாவது கோட்பாட்டை முன்வைத்தவர் யாழ்ப்பாணம் சென்ற் பற்றிக்ஸ் கல்லூரி ஆசிரியரும், 33 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவருமான வண. பிதா எச்.எஸ். டேவிட். அவர் தனது இக்கருத்தை ‘An Etymological and Comparative Lexicon of the Tamil Language’ என்ற நூலில் முன்வைத்திருந்தார் (David, H.S. 1970).
வண. பிதா டேவிட் அவர்கள் கூறிய கருத்தை அவரது மாணவரான டாக்டர் ஜே.ரி. சேவியர் பிரபலப்படுத்தினார். ‘எழு’ என்பது முற்காலத்தில் இலங்கையிலும், இந்தியாவிலும் பேசப்பட்ட ஓர் ஆதிதிராவிட மொழி. தமிழ் மொழி எழு மொழியிலிருந்து பிறந்த ஒரு சேய் மொழியாகும். அந்த ‘எழு’ மொழியின் வரைவடிவம் ‘எழுத்து’ எனப்பட்டது. அம்மொழியை வரையும் பணி ‘எழுது’ ஆனது. இந்தியாவின் தென்புறம் பேசப்பட்ட எழு ‘தெம்மெழு’ எனப்பட்டது. தமிழ் மொழியின் ஆதிப்பெயர் ‘தெமெழு’ தான். சில பிராகிருத மொழிகளில் தமிழ் மொழி இன்றைக்கும் ‘தெமெழு’ என்றே அழைக்கப்படுகிறது. இலங்கையின் சிங்கள மக்கள் தமிழர்களை ‘தெமழா’ என அழைப்பது வரலாற்று உண்மையே.
இந்த எழு மொழி சிங்களத்தில் ‘ஹெல’ ஆனது. எழு மொழி பேசப்பட்ட நாடு ‘எழுஅகம்’ (எழு மக்களின் தாயகம்) ஆனது. காலப்போக்கில் ‘எழுஅகம்’, ‘ஈழகம்’ ஆகி பின்னர் ‘ஈழம்’ ஆனது (Xavier, J.T. 1977).
இலங்கையில் பொ.யு.மு. மூன்றாம் நூற்றாண்டில் அநுராதபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்த தமிழ் மன்னன் பாளி ஏடுகளில் (தீபவம்ச, மகாவம்ச) ‘எழு-ஆர’ என்றே குறிப்பிடப்படுகிறான். ஆங்கில மொழிபெயர்ப்புகளில் எழு-ஆர என்ற இரு பதங்களையும் இணைத்து ‘எழார’ (Elara) என எழுதினார்கள். பொருள் புரியாத நம்மவர்கள் அவனை ‘எல்லாளன்’ ஆக்கினார்கள். அது அவனது இயற்பெயர் அல்ல. ‘எழுஆர’ என்றால் எழு மக்களின் அரசன், அல்லது எழு மொழி பேசும் இனத்தைச் சேர்ந்த அரசன் எனப் பொருள்படும். எழு-ஆரன் ஆட்சிபுரிந்த ‘எழு-அகமே’ ஈழகம் – ஈழம்! (Xavier, J.T. 1977).
ஈழவர்
கேரள நாட்டில் பனைமரத்தில் ஏறிக் கள் எடுப்பவர்கள் ஈழவர், ஈழுவர் ஆகிய பெயர்களால் அழைக்கப்பட்டார்கள், சில இடங்களில் இன்றும் அழைக்கப்படுகிறார்கள். தமிழ் நிகண்டு இந்த இரு சொற்களும் ஒரே கருத்துடையனவென்றே கூறுகிறது. கேரள நாட்டிற்கு வெளியே கள் எடுப்பவர்கள் ஈழவர் என அழைக்கப்படுவதில்லை. யாழ்ப்பாணத்தில் கள் எடுப்பவர்கள் பள்ளர் அல்லது நளவராகத்தான் இருப்பர். அவர்கள் ஈழவர் என அழைக்கப்படுவதில்லை. ‘இராவணன் ஓர் ஈழவன்’ எனக் கூறும் போது, இலங்கை அரசன் இராவணன் ஒரு கள் இறக்குபவனாக இருக்க முடியாது. எனவே, ஈழவர் என்ற சொற்பதம் அவர்களை ஈழ நாட்டவர்கள் எனக் கொள்ள வேண்டும். அச்சொல்லைக் கள் எடுப்பவர்களுடன் தொடர்புபடுத்துவது கால வழுவான – கால முரண்பாடான – விதண்டாவாதமான விளக்கம் ஆகும் (Anachronistic Interpretation, Peter Schalk 2004: 182-184).
சான்றுகள் (The Evidence)
1. திருப்பரங்குன்றம் கல்வெட்டு: பொ.யு.மு. 2ஆம் – பொ.யு.மு. 1ஆம் நூற்றாண்டு
‘ஈழம்’ என்ற பெயர் இடம்பெறும் மிகப் பழமையான பதிவு தமிழ்ப் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட திருப்பரங்குன்றம் கல்வெட்டு. தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்திலுள்ள ஒரு குகையில், அங்கே வரிசையாகச் செதுக்கப்பட்டிருக்கும் கல் கட்டில்களுக்கு மேலுள்ள பாறையில் ‘எருக்களத்தூர் ஈழக்-குடும்பிகன் பொலாலயன் ஜைனத் துறவிகளுக்கான அன்பளிப்பு’ என்ற வாசகம் காணப்படுகிறது. இதிலிருந்து ஈழத்திலிருந்து வந்து எருக்களத்தூரில் வாழும் குடும்பத் தலைவன் பொலாலயன் என அறிய முடிகிறது. அவனது பூர்வீகமான ஈழம், இலங்கை என இனம் காணப்பட்டிருக்கிறது (Mahadevan, I. 1966:9; 2003: 390-392; Mahalingam, T.V. 1974: 251-257).

திருப்பரங்குன்றம் குகைக் கல்வெட்டு: ஈழத்திலிருந்து வந்து எருக்களத்தூரில் குடியிருக்கும் குடும்பத்தலைவன் பொலாலயன் ஜைனத் துறவிகளுக்குக் கொடுத்த அன்பளிப்பு. Picture Courtesy: I. Mahadevan 2003: p.390.
2. அநுராதபுரம் அபயகிரி பாறைக் கல்வெட்டு – பொ.யு.மு. 2ஆம் நூற்றாண்டு
அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் காணப்படும் பாறையில் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிற்குரிய பாறைக் கல்வெட்டில் பிராமி எழுத்துகளில் இலக்கம் 94 எனப் பதியப்பட்ட கல்வெட்டில் (Inscriptions of Ceylon No. 94) மூன்று வரிகள் பதியப்பட்டிருக்கின்றன. இதன் முதல் வரி இது:
“ஈழபரதஹி டமேட-சமனெ கரதெ டமேட கஹஸ்பதிகண பசதே”
இதன் பொருள்: “தமிழ்க் குடும்பத்தலைவனது வீட்டு மாடித்தளம் ஈழப் பரதனான சமன் கட்டியது.”
இக்கல்வெட்டை முதன்முதலாக வாசித்த பேரறிஞர் பரணவிதான இக்கல்வெட்டின் முதற் சொல்லை ‘ஈழபரதஹி’ என்பதற்குப் பதிலாக ‘இலுபரதஹி’ என வாசித்துப் பிரசுரித்திருந்தார். இதை விமர்சித்த பேராசிரியர் வேலுப்பிள்ளை, இந்த வாசகத்தின் முதல் பிராமி எழுத்து (ஈ) என்பது மிகத் தெளிவாகக் காணப்பட்ட போதிலும் பரணவிதான இதை வேண்டுமென்றே தவறாக வாசித்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் (Paranavitana, S. 1970: Inscription. 94).

அநுராதபுரம் அபயகிரி விகாரையிலுள்ள கல்வெட்டு: ஈழப் பரதனான குடும்பத் தலைவன் சமன் கட்டிய வீட்டின் மாடித்தளம் (The terrace of the Tamil house-holder Saman of Eela Barata). Picture Courtesy: S. Paranavitana.
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகளில் ‘பரத’ என வரும் பதம் தலைவன் அல்லது பிரபு என்பதற்கு நிகரான ஒரு சொல். குடும்பத் தலைவன் சமன் ஒரு தலைவனாகவோ, அல்லது உயர் குடியினராகவோ இருந்திருக்கலாம்.
3. ‘ஈழம்’ என்ற மட்பாண்ட எழுத்துப் பொறிப்பு

‘(ஈ) ழ’ என்ற தமிழ்ப் பிராமிப் பதிவு.
1992ஆம் ஆண்டில் பூநகரி மண்ணித்தலையில் பேராசிரியர் புஷ்பரட்ணம் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் குழுவினர் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகளில் ‘ஈழ’, ‘ஈல’ என்ற தமிழ்ப் பிராமி வசனங்கள் கொண்ட இரு மட்பாண்டத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை இரண்டும் பொ.யு.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கு உரியதாகக் கணிக்கப்பெற்றன. அக்காலப் பகுதியில் இலங்கைக்கு ‘ஈழம்’ என்ற மாற்றுப் பெயர் உள்ளூரிலே சாதாரண மக்கள் மத்தியில் வழக்கில் இருந்ததை இது எடுத்துக்காட்டுகிறது (புஷ்பரட்ணம், ப. 1993: 39).
4. பட்டினப்பாலையில் ஈழம் – பொ.யு. முதலாம் நூற்றாண்டு
பொ.யு. முதலாம் நூற்றாண்டில், சோழ அரசன் கரிகால் வளவனின் ஆட்சிக் காலத்தில், கவிஞர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் தனது அரசனையும், அவனது கடல்துறை நகரமான காவிரிப் பூம்பட்டினத்தையும் போற்றிப் பாடிய சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், கடல்துறைக்கு ஈழத்திலிருந்து வரும் உணவுப் பொருட்களையும், காழகத்திலிருந்து (கடாரம்) வரும் பண்டங்களையும் புகழ்ந்து “ஈழத்துணவும் காழகத்தாக்கமும்” எனப் பாடுகிறார் (பட்டினப்பாலை 1988: பக். 6).
கரிகால் வளவனது ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டிற்கு ஈழ நாட்டிலிருந்து உணவுப் பொருட்கள் ஏற்றுமதியானதை இச்சங்கப் பாடல் தெரிவிக்கிறது.
5. ஈழத்துப் பூதந்தேவனார் – பொ.யு. முதலாம் நூற்றாண்டு
சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் (பொ.யு.மு. 300 – பொ.யு. 100) ஈழத்துப் பூதந்தேவனாரின் ஏழு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அகநாநூற்றில் மூன்று பாடல்கள் (பாடல் 88, 231, 307), குறுந்தொகையில் மூன்று பாடல்கள், நற்றிணையில் ஒரு பாடல் (பாடல் 366: மூங்கிலிலே குருவி கூடு கட்டியிருப்பது பற்றியது) ஆக ஏழு பாடல்கள் பாடியுள்ளார். இந்தப் புலவர் ஈழ நாட்டிலிருந்து வந்து மதுரையில் தங்கியிருந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து பாடல்களை இயற்றி அரங்கேற்றியமையால் தனது பெயரின் முன்னால் ஈழத்துப் பூதந்தேவனார் எனக் கூறியுள்ளார் என பேராசிரியர் பிள்ளை கருத்துத் தெரிவிக்கிறார் (Pillay, K. 1975: Page 37; Dravidian Encyclopaedia, Vol. 3., p. 767).
6. இலங்கை அரசன்: ஈழத்து-அரையன்
பொ.யு. பத்தாம் நூற்றாண்டில் இடம்பெற்ற வேலூர் போரில் பாராந்தகச் சோழ அரசனை (907-955) எதிர்த்து பாண்டிய மன்னனும், பாண்டியனுக்கு உதவியாக ஈழத்து அரசனும் போரிட்டார்கள். இவன் ஈழநாட்டு அரசன் ஈழத்து அரையன் எனக் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டிருக்கிறான்.
1920ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருப்பாற்கடலிலுள்ள கரபுரேஸ்வர ஆலயத்தின் கருவறையின் (மூலஸ்தானத்தின்) வடக்குச் சுவரிலுள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்த கிருஷ்ணா சாஸ்திரி, பாராந்தகச் சோழனின் சைன்யத்தை எதிர்த்து ஈழத்து-அரையன் படையெடுத்துச் சென்றதைப் பதிவு செய்திருக்கிறார். அவரது ஆசிரியர் குறிப்பில் ஈழத்து-அரையன் என்ற பெயர் இலங்கையின் அரசனைக் குறிப்பிடுவதாகக் கூறியுள்ளார் (Krishna Sastri, 1929: 232).
7. இராஜராஜ சோழன் கல்வெட்டுகளில் ஈழ மண்டலம்
சோழ மன்னன் இராஜராஜன் (பொ.யு. 985-1016) கைப்பற்றி ஆட்சி செய்த பல நாடுகளில் ஈழமும் ஒன்றாகும். மாமல்லபுரக் கடற்கரைக் கோயிலிலும், போலூருக்குச் சமீபத்திலுள்ள திருமலைக் குகையிலும் காணப்படும் இராஜராஜ சோழன் கல்வெட்டுகள் ஜேர்மனிய கல்வெட்டியலாளர் இயுஜின் ஹல்ச் அவர்களால் வாசிக்கப்பட்டு 1890ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘South Indian Inscriptions, Vol. 1, Govt. Press, Madras’ என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இந்த வாசிப்பில் இரு கல்வெட்டுகளில் (I & IV) ‘ஈழ மண்டலம்’ என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஈழ மண்டலம் என்ற பெயர் இலங்கையைக் (Ceylon) குறிப்பிடுவதாக ஹல்ச் பதிவு செய்திருக்கிறார் (Hultzsch, E. 1890: I: 40, IV).
பொ.யு. 993ஆம் ஆண்டில் இலங்கை சோழர்களால் கைப்பற்றப்பட்டு அவர்களின் ஆட்சி மண்டலங்களில் ஒன்றானதைத் தொடர்ந்து இலங்கை ‘ஈழமான மும்முடிச் சோழமண்டலம்’ என அழைக்கப்பட்டது. சோழ அரசன் இராஜராஜனின் மெய்க்கீர்த்திகள் அவன் வென்ற நாடுகளை “எண்திசை புகழ்தர ஈழ மண்டலமும்” எனப் புகழ்ந்துரைக்கின்றன.

தஞ்சாவூர்க் கோயிலில் உள்ள இராஜராஜ சோழன் மெய்க்கீர்த்தி
8. சோழர் காலக் கல்வெட்டுகளில் ஈழம்
பொ.யு. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திர சோழனின் கரண்டைச் சாசனத்தில் “முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலம்” என்றும், முதலாம் இராதிராசன் கல்வெட்டுகளில் “மதுரையும் ஈழமும் கொண்டவன்” என்றும், மூன்றாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்திகளில் “சிங்களவன் தலைமையாற் தென்னீழங் கொள்கவென்னத் திரைகடலை அடைக்கவென்ன” என்றும் குறிப்பிடப்படும் பதங்கள் வழியாக ஈழம் என்னும் பெயர் முழு இலங்கையையும் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்ட பெயர் என்பதை அறிய முடிகிறது.
9. மாதோட்டம் கல்வெட்டில் ஈழம்

கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள மாதோட்டம் கல்வெட்டு: இல. 1412.
இலங்கையில் மாதோட்டம் நகரிலிருந்து பெறப்பட்ட பதினொராம் நூற்றாண்டிற்குரிய தமிழ்மொழிக் கல்வெட்டைக் கொண்ட ஒரு கற்பலகை கொழும்பு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இக்கல்வெட்டை இந்தியக் கல்வெட்டாய்வாளர் கிருஷ்ண சாஸ்திரி 1920களில் வாசித்தார். இக்கல்வெட்டு தமிழ்நாட்டில் சோழ மண்டலத்திலிருந்த ஒரு நில உரிமையாளர் ஈழத்திலுள்ள திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு வழங்கிய நன்கொடை பற்றிக் கூறுகிறது. கலாநிதி வேலுப்பிள்ளையும் இக்கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார் (Krishna Sastri 1923: No. 1412; Veluppillai, A. 1972: 42-55).
10. பாண்டியர் கல்வெட்டுகளில் ஈழம்
பொ.யு. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் இளைய சகோதரன் வீரபாண்டியன் (1253-1273) ஈழத்தின் மீது படையெடுத்ததனை அவனது மெய்க்கீர்த்தி “சோனாடும் ஈழமுங்கொண்டு, சாவகன் முடியும் முடித்தலையும் கொண்டருளிய வீரபாண்டிய தேவர்க்கு…” எனத் தொடர்கிறது.
அதே போன்று ஈழத்தின் மீது படையெடுத்து ஆங்கே ஆட்சிபுரிந்த சாவக மன்னனை வெற்றி கொண்டதாக கொங்குநாட்டு வீரபாண்டியன் கல்வெட்டில் “கொங்கீழம் கொண்டு கொடுவடுகு கோடழித்து கங்கை இருகரையும் காவிரியும் கொண்டு” எனக் கூறப்படுகிறது (மயூரன், ஆ. 2020).
11. தக்ஷிண கைலாச புராணத்தில் ஈழம்
திருக்கோணேஸ்வரம் ஆலயம் பற்றிய பாரம்பரிய வரலாற்றைக் கூறும் நூல் தக்ஷிணகைலாச புராணம். தென்திசையிலுள்ள கைலாசம் என்ற பொருளில் இப்பெயர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நூலை ஆக்கியோன் யாழ்ப்பாண இராச்சிய அரசனான சிங்கை ஆரியன் (1388-1410) எனக் கூறப்படுகிறது. இந்தச் சிவன் ஆலயம் அமைந்த நாடு ஈழம் என்றும், இங்கே வாழும் ஈழ நாட்டு மக்கள் பற்றிய விவரங்களும் இந்த நூலில் கூறப்படுகிறது (சிதம்பர ஐயர் 1887, இரகுநாத ஐயர் 1942, சுவாமி ஞானப்பிரகாசர் 1940).
12. சேதுபதி பட்டயங்களில் ஈழம்
பொ.யு. 16-20ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தின் இராமநாதபுரம், சிவகங்கா பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள் சேதுபதி அரசர்கள். இரகுநாத திருமலை சேதுபதி அரசரின் (1659-1670) ஆட்சிக் காலத்தில் பொ.யு. 1607ஆம் ஆண்டின் சேதுபதி பட்டயத்தில் “ஈழமும் கொங்கும் யாழ்ப்பாணப் பட்டணமும்” என்ற வரி இடம்பெறுகிறது. இந்த வரி அக்காலத்தில் யாழ்ப்பாணப் பட்டணம் ஈழத்திலிருந்து ஒரு தனியான பகுதி என்பதை எடுத்துக் காட்டுகிறது (Sethupathi Copper Plate Inscriptions in Tamil).

இராமநாதபுரம் சேதுபதி செப்புப் பட்டயம். Source: The New Indian Express 10 April 2025.
13. பறாளை விநாயகர் பள்ளு
ஒரு நாடகத்தையோ அல்லது கதையையோ அல்லது ஒரு சம்பவத்தையையோ கவிதை வரிகளில் அமைக்கப்படும் பாடல் ‘பள்ளு’ என அழைக்கப்படுகிறது. பொ.யு. 18ஆம் நூற்றாண்டில், ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் (1716-1780) சுழிபுரம் பறாளை விநாயகர் மீது பாடப்பட்டது 130 பாடல்களைக் கொண்ட ‘பறாளை விநாயகர் பள்ளு’. இக்கதையில் வரும் பள்ளனின் இரு மனைவிகளான ஈழ மண்டலப் பள்ளி, சோழ மண்டலப் பள்ளி ஆகிய கதாபாத்திரங்கள் மூலமாக ஈழ மண்டலச் சிறப்பையும், சோழ மண்டலச் சிறப்பையும் புலவர் பாடியுள்ளார். ஈழ மண்டலப் பள்ளி தனது நாட்டின் சிறப்புகளைப் பற்றிப் பாடும் பாடல்களின் இறுதியில் “ஈழ மண்டல நாடெங்கள் நாடே” எனப் பாடி முடிக்கிறார் (பறாளை விநாயகர் பள்ளு 1889)


1889 பதிப்பு
14. ஈழ மண்டல சதகம்
தமிழ் இலக்கியத்தில் ‘சதகம்’ என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி 100 பாடல்களால் பாடப்படும் சிற்றிலக்கிய வகை ஆக்கமாகும். ஈழ மண்டலச் சதகம் ஈழ நாட்டின் (இலங்கை) வரலாற்றையும், சிறப்புகளையும், போற்றிப் பாடும் ஒரு தமிழ்ப் பிரபந்த நூல். ஈழ நாட்டின் பெருமைகள், சைவ சமயத்தின் சிறப்பு, யாழ்ப்பாணத்தின் தனித்துவமான தர்மங்கள், பண்புகள் ஆகியவற்றை இச்சதகம் போற்றிப் பாடுகிறது. இதை மட்டுவில் கணபதிப்பிள்ளை வேற்பிள்ளை (ம.க.வே. பிள்ளைப் புலவர்) 1848ஆம் ஆண்டில் இயற்றியுள்ளார்.

15. இலங்கை தேசிய கீதத்தில் ஈழம்
1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கைக்கு பிரித்தானிய அரசினரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வங்காளக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் (1861-1941) இந்தியாவிற்கும், இலங்கைக்கும் பிரித்தானியர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்கும் என எதிர்பார்த்து ஆங்கிலத்தில் இரு தேசங்களுக்கும் தேசிய கீதங்களை இயற்றியிருந்தார். 1948ஆம் ஆண்டில் தாகூரின் மாணவனான சிறந்த இசைக்கலைஞர் ஆனந்த சமரக்கோன் தாகூரின் கவிதையை இசைக்கேற்றவாறு சிங்களத்தில் மொழிபெயர்த்திருந்தார். இத்தாகூர் கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பை தமிழ்நாட்டின் பிரபல கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை அமைத்திருந்தார். அக்கவிதையில் வரும் ஒரு வரி:
“ஈழ சிரோமணி வாழ்வுறு பூமணி நமோ நமோ தாயே”
“நமோ நமோ மாதா” என ஆரம்பிக்கும் இத்தேசிய கீதத்தின் சிங்கள, தமிழ் வடிவங்கள் இரண்டும் இலங்கை அரசினரால் அங்கீகரிக்கப்பட்டு கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று பாடப்பெற்றன.
1961ஆம் ஆண்டில் சிங்கள தேசிய கீதத்தின் அறிமுகப் பகுதி அதை இயற்றிய ஆனந்த சமரக்கோன் ஒப்புதல் இன்றி மாற்றப்பட்டது. இச்செயல் அவருக்கு ஆற்றொணாத மனத்துயரத்தை ஏற்படுத்தி, 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி அவர் தற்கொலை செய்து கொண்டார் (Hettiarachchi, K. 2001; Sunday Times 2017).
16. ‘தமிழ் ஈழம்’ கருத்தாக்கம் – 20ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி
பிரித்தானியரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், அரசியல் புதுநிலை வளர்ச்சிக் காலங்களில், தமிழ் பேசும் மக்கள் வாழும் இலங்கையின் வடக்குக் கிழக்கு தாயகப் பகுதிகள் ‘தமிழ் ஈழம்’ என அழைக்கப்பட்டன.
1976ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி இலங்கையில் வட்டுக்கோட்டையில் திரு. எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்களது தலைமையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் வருடாந்திர மாநாட்டில் ‘இலங்கை மக்களின் விமோசனத்திற்கு ஒரேவழி சுதந்திரமான தனி-ஈழத்தை நிறுவி தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவதே’ என முடிவெடுக்கப்பட்டது. ‘தமிழ் ஈழம்’ என்ற கருத்தாக்கத்தையோ, ‘ஈழம்’ என்ற பெயரையோ ‘தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்தான் (LTTE) உருவாக்கினார்கள் என்பது வரலாற்றை விளங்கிக்கொள்ளாத தவறான புரிதல் ஆகும்.
உசாத்துணை நூல்கள் – அடிக்குறிப்புகள்
- Burrow,T. & Emeneau,M.B. (1961): A Dravidian Etymological Dictionary, Oxford University Press.
- An Etymological and Comparative Lexicon of the Tamil Language, Jaffna.
- David, H.S. Rev. (1970): An Etymological and Comparative Lexicon of the Tamil Language, Jaffna.
- Xavier, J. T. Dr. (1977): The Land of Letters, Skyline Publications, Trincomalee.
- Schalk, Peter (2004): Īlam<Sīhaļa? An Assessment Of An Argument, Uppsala Universitet.
- Mahadevan, I. (1966): Corpus of the Tamil Brahmi Inscriptions, Seminar on Inscriptions., Madras, p. 9.
- Mahadevan, I. (2003): Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D., Harvard University Press, Cambridge, pages 390-392.
- Mahalingam, T.V. (1974): Early South Indian Palaeography, University of Madras, Madras., pages 251-257.
- Paranavitana, S. (1970): Inscriptions of Ceylon, Vol. I, Dept. of Archaeology, Ceylon, Colombo.
- புஷ்பரட்ணம், பரமு (1993): பூநகரி தொல்பொருளாய்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, திருநெல்வேலி.
- பட்டினப்பாலை (1988): கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
- Pillay, K. (1975): ‘South India and Sri Lanka’, Sir William Meyer Lectures 1958-59, University of Madras, Madras. p. 37.
- Poothan Thevanar in Dravidian Encyclopaedia, Vol. 3., p. 767.
- Krishna Sastri (1929): South Indian Inscriptions, Vol. 3., No. 99, Inscription 232., Archaeological Survey of India, New Delhi.
- Veluppillai, A. (1972): “Inscription from Tirukkētisvaram of Mātōttam, Ceylon Tamil Inscriptions: pages 42-55.
- Hultzsch, Eugen (1890): South Indian Inscriptions, Vol. 1, Govt. Press, Madras.
I. Inscriptions at Māmallapuram, No. 40., p. 63.
IV. Inscriptions at Tirumalai near Polūr, p. 95.
I – Inscriptions at Mamallapuram
No. 40. On the South Base of the Shore Temple.
This Inscription is dated in the twenty-fifth year of Ko-Rajaraja-Rajakesarivarman, alias Raraja-deva. It states that the king ‘built a jewel-like hall at Kandalur’ and then gives a list of the countries, which he is said to have conquered. Among them Vengai-nadu is the well-known country of Vengi; Ganga-padi and Nulambapadi are found on Mr. Rice’s Map of Mysore; Kudamalai-nadu, the western hill-country is Coorg; Kollam is Quilon; Kalingam is the country between the Godavari and Mahanadi rivers; Īla-mandalam is Ceylon; Iratta-padi is the Western Chalukyan empire; and the Seriyas are the Pāndyas. I have been unable to identify Tadigai-padi (Courtesy: 1890 South Indian Inscriptions, Vol. 1, Govt. Press, Madras. page 63, para 1).
17. Krishna Sastri (1923): “No. 1412. On a Slab preserved in the Museum at Colombo”, South Indian Inscriptions 4, page 173.
18. Veluppillai, A. (1972): “Inscription from Tirukkētisvaram of Mātōttam, Ceylon Tamil Inscriptions: pages 42-55.
19. தக்ஷிண கைலாச புராணம் (பதிப்பித்தவர் K. சிதம்பர ஐயர் – 1887), சென்னை.
20. தக்ஷிண கைலாச புராணம் (பதிப்பித்தவர் E.S. இரகுநாத ஐயர் – 1942), யாழ்ப்பாணம்.
21. Fr. Gnanapragasar (1940): A Critical History of Jaffna. Pages 99-102.
22. மயூரன், ஆ. (2020): சிங்கள அரசின் மறுப்புக்கு மறுப்பு: ஈழம் இலங்கையின் பூர்வீகப் பெயர் (தனிக்கட்டுரை).
23. பறாளை விநாயகர் பள்ளு (மறுபதிப்பு 1889): வித்தியாநுபாலன அச்சகம், சென்னை.
24. குமாரஸ்வாமி புலவர் (1938): தமிழ் புலவர் சரித்திரம், சென்னை.
25. Hettiarachchi, Kumudini (4 February 2001): “When words killed a great man”, Sunday Times, 4th February 2001.
26. The Sunday Times (8 May 2017): “Pride and Tragedy”.



