பண்டாரநாயக்கவின் “சமஷ்டி” எண்ணக்கருவுக்கு 100 வயது: மறுத்த தமிழர்களே சமஷ்டிக்காகப் போராடிய வரலாறு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
50 நிமிட வாசிப்பு

பண்டாரநாயக்கவின் “சமஷ்டி” எண்ணக்கருவுக்கு 100 வயது: மறுத்த தமிழர்களே சமஷ்டிக்காகப் போராடிய வரலாறு

September 27, 2026 | Ezhuna

I

1926ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த விரிவுரை, ஒரு தனிமைப்பட்ட உணர்ச்சிவசப் பிரகடனமல்ல. அதற்கு முந்தைய ஆறு வாரங்களில் “சிலோன் மோர்னிங் லீடர்” (The Ceylon Morning Leader) பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளியான ஆறு கட்டுரைகளின் தர்க்கபூர்வமான உச்சக்கட்டமே அந்த யாழ்ப்பாண விரிவுரை.

மே 19ஆம் திகதி தொடக்கம் ஜூன் 30ஆம் திகதி வரை, ஒவ்வொரு வாரமும் ஒரு கட்டுரை வீதம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க எழுதிய அந்த ஆறு கட்டுரைகளும், “சமஷ்டி முறையே இலங்கையின் வெளி உறவுகள் – உள் உறவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு” என்கிற ஒரு மையக் கருத்தை படிப்படியாக நிறுவும் ஓர் அறிவார்ந்த பிரசாரமாக அமைந்திருந்தன.1 இந்த ஆறு கட்டுரைகளையும் யாழ்ப்பாண உரையையும் இணைத்துப் பார்க்கும் போது, பண்டாரநாயக்க சமஷ்டியை ஏன் “ஒரேயொரு தீர்வு” என அறிவித்தார் என்பதற்கான முழுமையான தர்க்கம் நமக்குக் கிடைக்கின்றது.

அந்தச் சமஷ்டிப் பிரகடனம் இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகளை எட்டிவிட்டது.

1926 தொடக்கம் 2026 வரையான இந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் சமஷ்டி எனும் கருத்தாக்கம் இலங்கை அரசியலில் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது, அது ஒரு பரிந்துரையின் வரலாறு மாத்திரமல்ல, அதை முதன்முதலில் முன்மொழிந்தவரே பிற்காலத்தில் அதைக் கைவிட்டு எதிர்த்து நின்றதும், அக்கருத்துருவாக்கம் முற்றிலும் துருவமயப்பட்ட எதிர் நிலைக்கு தள்ளியதும், ஒரு துரோகத்தின் வரலாறாகவும் விரிகின்றது.

இலங்கையில் இன்று சமஷ்டி என்கிற சொல் பொதுவெளியில் பேசவே அச்சப்படுகின்ற சொல்லாக நிலைபெற்றிருக்கிறது.

முதலாவது கட்டுரை: ஒத்துழைப்புக்கும் தனித்துவத்துக்கும் இடையிலான போராட்டம்

1926 மே 19ஆம் திகதி வெளியான முதலாவது கட்டுரையில் பண்டாரநாயக்க ஒரு தத்துவார்த்த அடிப்படையை முன்வைக்கிறார். மனித வரலாற்றில் இரு காரணிகள் தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கின்றன என்கிறார். ஒன்று, ஒத்துழைப்பின் அவசியம். மற்றது, தனிமனிதனின் அல்லது தேசத்தின் தனித்துவத்தைக் காப்பதற்கான வேட்கை. ஈசாப்பின் கட்டுக்கதையில் வரும் குச்சிக் கட்டு உவமையை மேற்கோள் காட்டிய அவர், குடும்பமும் இனக்குழுவும் அரசும் உருவானது ஒத்துழைப்பின் தேவையால் தான் என்றும், ஆனால் அதே நேரம் ஒவ்வொரு தனிமனிதனும் தேசமும் தமது “தனித்துவத்தை”, அதாவது “தேசியத்தை”, காக்க விரும்புகின்றன என்கிறார்.2 இந்த இரு காரணிகளையும் இணைத்துச் சமன்படுத்தும் ஒரே வழிமுறையே கூட்டாட்சி எனும் அமைப்பு முறை எனும் முடிவுக்கு அவர் வந்தார். “இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஒரேயொரு திருப்திகரமான தீர்வு சமஷ்டி முறையே” என்பது அந்த முதல் கட்டுரையின் இறுதி வாக்கியம். பொருளாதார, அரசியல் காரணங்களுக்கு அப்பால், சமஷ்டியை ஒரு தத்துவார்த்த தேவையாக அவர் இங்கு நிறுவியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சிறு நாடுகளின் தலைவிதியும் இலங்கையின் பாதுகாப்பின்மையும்

இரண்டாவது கட்டுரையில் (மே 27) பண்டாரநாயக்க ஒரு கடுமையான யதார்த்தவாதத்தை முன்வைத்தார். சிறு நாடுகள் வரலாற்று ரீதியாக தமது சுதந்திரத்தை காத்துக்கொண்ட நான்கு வழிமுறைகளை அவர் பட்டியலிட்டார். புவியியல் நிலைமை (ஹொலாந்து அணைகள் கட்டி வெள்ளத்தால் பாதுகாத்துக் கொண்டது), சக்திகளின் சமநிலை (சுவிஸ், பெல்ஜியம்), வல்லரசுகளின் உதவி (தென் அமெரிக்க நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் காரணமாக), அல்லது இனத் தொடர்பு. இலங்கையைப் பொறுத்தவரையில் இந்த நான்கு பாதுகாப்புக் காரணிகளில் ஒன்று கூட இல்லை என்பதை அவர் தெளிவாக நிறுவினார்.3 ஐரோப்பாவுக்கும் ஒஸ்திரேலியாவுக்கும் இடையிலான கடல்வழியில் அமைந்த ஒரு முக்கிய துறைமுகமாக இலங்கை இருப்பதால் எந்தக் கடற்படை வல்லரசும் இதை ஒரு வசதியாகவே பார்க்கும் எனவும், பல சமூகங்களாகப் பிரிந்திருக்கும் இலங்கை மக்கள்தொகை ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு எளிதான சந்தர்ப்பமாக அமையும் எனவும் அவர் எச்சரித்தார். சுயமாக தன்னைக் காத்துக்கொள்ளும் நான்கு காரணிகளில் ஒன்று கூட இலங்கைக்கு இல்லாத நிலையில், சுயாட்சி பெற்ற பின்னரும் இலங்கை ஏதோவொரு பெரிய கூட்டமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்க வேண்டும் என்பதே அவரது தர்க்கம். இதுவே அடுத்த மூன்று கட்டுரைகளுக்கான அடிப்படையை அமைத்தது.

மூன்றாவது கட்டுரையில் பண்டாரநாயக்க ஒரு வரலாற்று அவதானிப்பையும் முன்வைத்தார். வெற்றி பெற்ற பேரரசுகள் எல்லாமே இறுதியில் சிதைந்து, அவற்றின் துண்டுகள் மீண்டும் வேறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு இரையாகும் ஒரு சுழற்சியையே உலக வரலாறு காட்டுகின்றது என்றார். “இலங்கை இதற்கு ஒரு சிறந்த உதாரணம். விஜயனின் வெற்றியால் ஓர் அரசாக உருவான இது, பின்னர் தமிழரின் கைக்கு போயிற்று, மீண்டும் சிங்கள மன்னர்களால் மீட்கப்பட்டது, பின் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரிட்டிஷார் எனத் தொடர்ச்சியாக பேரரசுகளின் ஒரு பகுதியாக மாறியது” என அவர் எழுதினார்.4 சுயமாக நீடித்த; சுதந்திரத்தை அடைந்த சிறு நாடுகள் அரிதே எனவும், அவையும் விசேட சூழ்நிலைகளின் காரணமாகவே அதை அடைந்தன எனவும் அவர் குறிப்பிட்டார். சுயாட்சி டொமினியன்களாக பிரிட்டிஷ் பேரரசிலிருந்து விடுபடும் கனடா, ஒஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளையும் அவர் “மரத்திலிருந்து மெதுவாகப் பழுத்து, இறுதியில் தாய் மரத்திலிருந்து பிரிந்து விழும் பழங்களுக்கு” ஒப்பிட்டார். பேரரசுகள் நிரந்தரமாக நீடிக்காது என்பதும், அது நடந்தால் இலங்கை தனியாக நிற்க வேண்டிய நிலைமை வரும் என்பதும் அவரது எச்சரிக்கை.

பிரிட்டிஷ் பேரரசும் இனவாதத்தின் சுவரும்

மூன்றாவது (ஜூன் 2), நான்காவது (ஜூன் 9) கட்டுரைகளில் பிரிட்டிஷ் பொதுநலவாய நாடுகளுடன் கூட்டாட்சி அமைவதற்கான சாத்தியத்தை பண்டாரநாயக்க பரிசீலித்தார். ஆனால் அங்கும் ஒரு கடுமையான தடையை அவர் இனங்காட்டுகிறார். 1923ஆம் ஆண்டு ஏகாதிபத்திய மாநாட்டில் (Imperial Conference) கனடா, ஒஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய டொமினியன்களின் தலைவர்கள் இந்தியர்களுக்கு சம குடியுரிமை வழங்க மறுத்த உரைகளை அவர் விரிவாக மேற்கோள் காட்டினார். தென்னாபிரிக்க பிரதமர் ஜெனரல் ஸ்மட்ஸின் வார்த்தைகளை அவர் நேரடியாக எடுத்தாண்டார்: “மேற்கத்திய நாகரிகத்தை வளர்க்கவே நாங்கள் இங்கு இருக்கின்றோம், கீழைத்தேய நாகரிகத்தை வளர்க்க அல்ல” என்று ஸ்மட்ஸ் கூறியிருந்தார்.5 வெவ்வேறு நாகரிகங்களையும் தரங்களையும் கொண்ட மக்களிடையே எந்தவொரு சமஷ்டியும் சாத்தியமற்றது என்பதே இந்த அனுபவத்திலிருந்து அவர் எடுத்த முடிவு. நிறவெறியின் இந்தச் சுவர் இலங்கையை பிரிட்டிஷ் பொதுநலவாய கூட்டாட்சியிலிருந்து விலக்கி வைத்தது.

1921ஆம் ஆண்டு ஏகாதிபத்திய மாநாட்டில் “பேரரசின் ஒற்றுமைக்காக” இந்தியருக்கு சம குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது – தென்னாபிரிக்கா மாத்திரம் எதிர்த்து வாக்களித்தது. ஆனால் 1923 மாநாட்டில் அந்தத் தீர்மானமும் பலனளிக்கவில்லை என்பதை பண்டாரநாயக்க விரிவாக விளக்கினார். கனடா பிரதமர் மெக்கன்சி கிங், தமது ஒன்பது மாகாணங்களில் எட்டில் இந்தியருக்கு எவ்விதக் குறையும் இல்லை என உறுதியளித்த போதும், மிச்ச 1,200 இந்தியரும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தான் வாழ்ந்தனர் என்றும், அங்கு தான் பாகுபாடு இருந்தது என்றும், அதைச் சரிசெய்ய அவரால் இயலவில்லை என்றும் தெரியவந்தது. ஒஸ்திரேலிய பிரதிநிதி பிரூஸ், “புதிய இந்தியர் எவரையும் எங்கள் பிரதேசத்திற்குள் அனுமதிப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, அது எங்கள் அடிப்படைக் கொள்கைகளுக்கே முரணானது” என பகிரங்கமாக அறிவித்தார்.6 இந்தியக் குடியேறிகளுக்கு நேர்ந்தது இந்திய வம்சாவளியினரல்லாத நம்மவருக்கும் நேரும் என்பதே பண்டாரநாயக்கவின் எச்சரிக்கை. “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு சுதந்திர தேசங்களின் கூட்டமைப்பு எனச் சொல்லப்படும் கருத்தாக்கமே ஒரு தவறான புரிதல்” என்று அவர் அதற்குப் பின் தெளிவாக அறிவித்தார். நிற வேறுபாட்டின் அடிப்படையில் டொமினியன்களால் நிராகரிக்கப்படும் ஒரு பேரரசுக்குள் இலங்கை சமஷ்டி அந்தஸ்தைப் பெறுவது சாத்தியமற்றது என்பதே அவரது இறுதி முடிவு. இதனாலேயே அடுத்த கட்டுரையில் அவர் இந்தியா பக்கம் திரும்பினார்.

ஐந்தாவது கட்டுரை: இந்தியாவுடன் சமஷ்டி

இந்த முழுத் தொடரிலும் மிக முக்கியமான, ஆனால் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்ட கட்டுரை, ஐந்தாவது கட்டுரையே (ஜூன் 23). இங்கு பண்டாரநாயக்க இந்தியாவுடன் இணைந்த ஒரு சமஷ்டிக்குள் இலங்கையை இணைப்பதை தீவிரமாக முன்மொழிந்தார். புவியியல் ரீதியாக நாம் இந்தியாவுக்கு மிக நெருக்கமான அண்டை நாடு எனவும், இனரீதியாக சிங்களவர் நேரடியாக இந்திய விஜயனிடமிருந்தும் அவரது கூட்டாளிகளிடமிருந்தும் தோன்றினர் எனவும், சிங்கள மொழி பாலி-சமஸ்கிருத மூலங்களிலிருந்து பிறந்தது எனவும், பௌத்தம் கூட தேவநம்பியதீசன் காலத்தில் அசோகனின் தூதுவர் மகிந்தர் மூலம் இந்தியாவிலிருந்து வந்தது எனவும் அவர் பட்டியலிட்டார். “தமிழ்ச் சமூகத்தை பொறுத்தவரையில், இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு வலியுறுத்த வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு வெளிப்படையானது” என அவர் நேரடியாகவே எழுதினார்.7 சிங்களவருக்கும் தமிழருக்கும் ஒருங்கிணைந்த இந்தியத் தொடர்பே சிறந்தது என்பது அவரது வாதத்தின் மையம். சிங்களவரிடம் காணப்படுகிற இந்திய-விரோதப் போக்கு “பரிச்சயமின்மையால் பிறந்த அறியாமையே தவிர வேறில்லை” என்றும், அந்தப் பாரபட்சம் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆயினும் உடனடியாக இந்தியச் சமஷ்டியில் இணைவதற்கான நடைமுறைச் சிக்கல்களையும் அவர் ஒப்புக்கொண்டார். இந்தியாவே தனது சொந்த உள்நாட்டுப் பிரச்சினைகளை இன்னும் தீர்க்கவில்லை எனவும், இந்தியா சமஷ்டி முறையை ஏற்குமா என்பது கூட உறுதியில்லை எனவும் அவர் எழுதினார். எனவே உடனடியாக இணைக்காமல், அதை நோக்கிய படிப்படியான நெருக்கத்தை அவர் பரிந்துரைத்தார். இந்தியப் பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர் கல்வி கற்பது, இந்திய இலக்கியமும் வரலாறும் பாடசாலைகளில் கற்பிக்கப்படுவது, இலங்கைத் தேசிய காங்கிரஸும் இந்தியத் தேசிய காங்கிரஸும் பிரதிநிதிகளைப் பரிமாறிக்கொள்வது போன்ற நடைமுறை நடவடிக்கைகளை அவர் முன்மொழிந்தார். ஆனாலும் ஒரு கடுமையான எச்சரிக்கையையும் அவர் இணைத்தார்: “இந்தியாவுடனான நெருக்கம் நமது செயல் சுதந்திரத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்துமெனில் அல்லது இந்தியாவுக்கு நாம் எந்த வடிவிலான அடிமைத்தனத்திற்கும் உட்படுத்தப்படுவோமெனில், எந்தச் சூழ்நிலையிலும் அந்த அபாயத்தை நாம் எடுக்கக் கூடாது.” சுதந்திரத்தை இழக்காத ஒரு பரஸ்பர பாதுகாப்பு உடன்படிக்கையாகவே அவர் இந்தியச் சமஷ்டியைக் கற்பனை செய்தார்.

இந்தியச் சமஷ்டிப் பரிந்துரையை பண்டாரநாயக்க முன்வைத்த விதத்திலும் ஒரு நுட்பமான உபாய யுத்தி இருந்தது. இலங்கை பிரிட்டிஷ் பொதுநலவாயதிற்குள் இருக்கும் வரை, நிறப் பாகுபாட்டின் சுவர் இலங்கையை எப்போதும் இரண்டாம் தர அங்கத்தவராகவே வைத்திருக்கும் என்பதை அவர் ஏற்கனவே நிறுவிவிட்டார். ஆனால் இந்தியாவுடன் இணைந்த ஒரு சமஷ்டியில், இனரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒப்பீட்டளவில் சமமான தரப்பினராகவே இலங்கை நிற்கும் என்பதே அவரது கணக்கீடு. “ஒரு தனிமனிதன் ஓர் அரசில் சட்டத்திற்கு உட்பட்டவனாக இருந்தாலும் சுதந்திரமானவனாகவே இருக்கின்றான். அது போலவே ஒரு தேசங்களின் கூட்டமைப்பில் நாமும் இணைந்தால், அது பரஸ்பரப் பாதுகாப்பிற்காகவே தவிர நமது சுதந்திரத்தை தியாகம் செய்வதற்காக அல்ல” என்று அவர் ஐந்தாவது கட்டுரையில் எழுதியிருந்தார். இந்த வாதத்தின் மையம், சமஷ்டி என்பது சுதந்திரத்தை இழப்பதல்ல, மாறாக பாதுகாப்பான சூழலில் அதை பயன்படுத்துவதற்கான வழிமுறை என்பதே.

ஆறாவது கட்டுரை: இடைக்கால ஆணைக்குழு முறை

ஆறாவது, இறுதிக் கட்டுரையில் (ஜூன் 30) பண்டாரநாயக்க ஒரு நடைமுறைச் சிக்கலை எதிர்கொண்டார். இறுதி இலக்காக எந்த வடிவிலான சமஷ்டியைத் தேர்வு செய்தாலும், அதை அடையும் வரையிலான இடைக்காலத்தில் என்ன செய்வது? புரட்சிகர வழிமுறையை (ஆயுதப் போராட்டத்தை) அவர் உடனடியாக நிராகரித்தார். பொது அபிப்பிராயம் மூலம் பிரிட்டிஷாரை வற்புறுத்தும் வழியையும் அவர் நம்பவில்லை. ஏனெனில் “கரையோரச் சிங்களவர், தமிழர், கண்டியர் ஆகிய மூன்று பெரும் சமூகங்களும் தமது அரசியல் கருத்துகளில் நம்பமுடியாத அளவுக்கு வேறுபட்டு நிற்கின்றனர்” என அவர் சுட்டிக்காட்டினார். இந்த உட்பிரிவுகள் இருக்கும் வரை “பொது அபிப்பிராயம்” எனும் சொல்லுக்கே அர்த்தமில்லை என்பது அவரது நிலைப்பாடு.8 எனவே அவர் லீக் ஒப் நேஷன்ஸ் உடன்படிக்கையின் 22வது பிரிவின் கீழ் இலங்கையை ஒரு “A” வகை ஆணைக்குழு நாடாக மாற்றுமாறு பரிந்துரைத்தார். பிரிட்டிஷாரின் வணிக, தொடர்பு நலன்களை பாதுகாத்தபடியே, ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இலங்கையைச் சுயாட்சிக்கு கொண்டு செல்லும் ஓர் அமைப்பு முறையாக அவர் இதை முன்வைத்தார். சர்வதேச மேற்பார்வையின் கீழ் படிப்படியான சுயாட்சி என்பதே அவரது இடைக்காலத் தீர்வு.

மேலும், ஏகாதிபத்திய அறிவுறுத்தலுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கும் இடையிலான இழுபறியையும் அவர் பகுப்பாய்வு செய்தார். ஆறாவது கட்டுரையில், சுயாட்சி பெறுவதற்கான வேறு வழிமுறைகளையும் அவர் நிராகரித்தார். ஆயுதப் புரட்சி வழிமுறையை “எந்தக் காரணத்தாலும் ஒரு கணமும் பரிசீலிக்கக் கூடாத ஒரு விடயம்” என அவர் அறுதியிட்டார். ஐர்லாந்தில் டி வலேரா ஆயுதப் படையின் உதவியுடன் பெற்ற சலுகைகளையும், எகிப்தில் வாள் முனையிலேயே அரசியலமைப்பு பெறப்பட்டதையும் அவர் குறிப்பிட்டாலும், இலங்கைக்கு அது பொருந்தாது என்றார். காந்தியின் செயலற்ற எதிர்ப்பு முறை கூட இந்தியாவில் தோல்வியடைந்தது என்றும், தன்னலம் துறந்து தியாகம் செய்யும் மனநிலை சிலருக்கே இயல்பானது என்றும் அவர் யதார்த்தமாக விமர்சித்தார். பொது அபிப்பிராயம் மூலம் பிரிட்டிஷாரை வற்புறுத்தும் முறையும் மூன்று பெரும் சமூகங்களுக்கிடையிலான பிளவால் பலவீனமடைந்திருந்த நிலையில், லீக் ஒப் நேஷன்ஸ் (League of Nations) ஆணைக்குழு முறையே ஒரே நடைமுறைச் சாத்தியமான பாதை என அவர் முடிவு செய்தார்.

யாழ்ப்பாண விரிவுரை: ஆறு கட்டுரைகளின் இறுதி வடிவம்

இந்த ஆறு கட்டுரைகளிலும் விரிவாக்கப்பட்ட தர்க்கங்கள் அனைத்தும் ஒன்று திரண்டு கூர்மைப்பட்ட வடிவமே ஜூலை 17ஆம் திகதி யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் அரங்கில் நிகழ்த்தப்பட்ட விரிவுரை. “அரசியலமைப்பின் திருத்தம் 1928இல் நிகழவிருக்கின்றது, எனவே தற்போதைய தருணத்தின் முக்கியத்துவத்தை முதலில் உணர வேண்டும்” என்று தொடங்கிய அவர், இலங்கையின் பாரம்பரிய ஆட்சி முறைகளையே தனது முதல் வாதமாக முன்வைத்தார். நிந்தகம முறையும் தலையாரி-கம் சபாவ (கிராமிய சபை) முறையும் ஏற்கனவே ஒரு தளர்வான சமஷ்டி மாதிரியிலான அமைப்பாகவே செயற்பட்டதாக அவர் விளக்கினார். ஒவ்வொரு கிராமமும் ஓர் அலகாக இருந்து, கம்சபாவ மூலம் தமது சொந்த விவகாரங்களை நிர்வகித்துக்கொண்டு, அரசனுக்கான பொதுக் கடமையை மாத்திரம் நிறைவேற்றிக்கொண்டிருந்தது எனும் இந்த வரலாற்று வாதம், சமஷ்டி என்பது அந்நிய இறக்குமதியல்ல, இலங்கையின் சொந்தப் பாரம்பரியமே என்கிற கருத்தை நிறுவும் முயற்சியாக அமைந்தது.9 பிரிட்டிஷார் கொண்டுவந்த மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறையானது இலங்கைக்குப் பொருத்தமற்றது என அவர் விமர்சித்தார். அது “ஒரு சுதந்திர நிறுவனத்தின் தோற்றத்தை”க் கொண்டிருந்தாலும், உண்மையில் இன்று வரை “ஓர் அதிகாரத்துவ ஆட்சி முறையே தவிர வேறில்லை” என்று அவர் கூறினார். இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி வடிவத்தைத் தான் அவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அடுத்து, சீர்திருத்தப் போராட்டத்தின் வரலாற்றை அவர் மறு ஆய்வுக்கு உட்படுத்தினார். 1915 கலவரங்கள் வரை பெரிய அளவிலான அரசியல் இயக்கம் தொடங்கவே இல்லை எனவும், சேர் பொன்னம்பலம் இராமநாதனும், அரசியல் மறுசீரமைப்பின் தந்தை என்று விவரிக்கப்பட்ட சேர் பொன்னம்பலம் அருணாசலமும் தேசிய காங்கிரஸ் அமைப்பதில் முன்னிலை வகித்தார்கள் எனவும் அவர் நினைவூட்டினார். தேசிய காங்கிரஸ் தோன்றியபோது அதன் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்ட ஓர் உறுதிமொழி இருந்தது: பேரரசுக்குள் சுயாட்சியே தமது இலக்கு என்பதே அது. ஆயினும் சட்டமன்றத்தில் இன்னும் சில ஆசனங்களை அதிகரிப்பதைத் தவிர வேறெதுவும் அந்தப் போராட்டத்தால் சாதிக்க முடியவில்லை என அவர் விமர்சித்தார். சட்டமன்றம் ஒரு பெயரளவு பிரதிநிதித்துவ அமைப்பாக இருந்தாலும், நடைமுறையில் அது முற்றிலும் பயனற்றதாக இருந்தது எனவும், அதன் விளைவே சிங்கள-தமிழ் பிளவும், கரையோர-கண்டிய பிளவும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இங்கு அவர் ஒரு முக்கியமான வரலாற்று அவதானிப்பையும் முன்வைத்தார். அந்தச் சமூகப் பிளவுகள் “நூறு ஆண்டுகளுக்கு முன் இல்லை” என்றும், அவை “சில லட்சிய உள்நோக்கமுடையவர்களால் உருவாக்கப்பட்டவை” என்றும் அவர் எச்சரித்தார். உண்மையில் தமிழரும், கரையோரச் சிங்களவரும், கண்டியச் சிங்களவரும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் வாழ்ந்தும், ஒருபோதும் ஒன்றிணைந்த போக்கைக் காட்டவில்லை என்றும், தத்தமது மொழி, பழக்கவழக்கம், மதம் ஆகியவற்றைக் காத்துக்கொண்டே வந்திருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். “இந்த வேறுபாடுகள் படிப்படியாக மறைந்துவிடும் என நம்புபவர் ஒரு பெரும் துணிச்சல்காரரே” என்பது அவரது நேரடி வார்த்தைகள். இந்த யதார்த்தவாதமே அவரது சமஷ்டித் தீர்வுக்கான அடித்தளமாக அமைந்தது.

மையப்படுத்தப்பட்ட ஆட்சியின் கணிதச் சிக்கல்

யாழ்ப்பாண விரிவுரையில் பண்டாரநாயக்க முன்வைத்த மிகக் கூர்மையான தர்க்க உளவியல் பகுப்பாய்வு, மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருந்த அமைச்சரவை முறையின் கணிதச் சிக்கலே. சீர்திருத்தப்பட்ட சட்டமன்றம் தனது பிரதமரையும் அமைச்சர்களையும் தேர்வு செய்யும் போது, சபையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட விகிதாசார பிரதிநிதித்துவம் காக்கப்பட்டிருந்தால், அதே விகிதாசாரத்தை அமைச்சரவையிலும் கோரும் நிலைமை தவிர்க்கமுடியாமல் உருவாகும் என அவர் விளக்கினார். “மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறை ஓர் ஒருங்கிணைந்த ஒரே இனக்குழுவை முன்கூட்டியே அனுமானித்துக் கொள்கின்றது. இலங்கையைப் போன்ற முரண்பட்ட சூழ்நிலைகளின் கீழ் ஓர் அரசாங்கம் நடத்தப்படுவது போல வேறெந்த இடத்தையும் தான் அறியேன்” என்று அவர் நேரடியாக அறிவித்தார்.10 இதுவே அவரது முழு விவாதத்தின் மிக நடைமுறைசார்ந்த வாதம். ஓர் ஒற்றை மையத்திலிருந்து ஆளப்படும் அரசில், ஒவ்வொரு நியமனமும், ஒவ்வொரு பட்ஜெட் ஒதுக்கீடும், ஒவ்வொரு கொள்கை முடிவும் சமூக விகிதாசார பேரம் பேசலுக்குள் சிக்கிக்கொள்ளும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்திருந்தார். சமஷ்டி முறையில் அந்தப் பேரம் பேசல் தேவைப்படாது – ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த மாகாணத்தில் சுயமாக நிர்வகித்துக் கொள்ளும், மத்திய சபை வெளியுறவு, பாதுகாப்பு போன்ற சில பொதுவான விடயங்களை மாத்திரம் கையாளும்.

சுவிஸ் மாதிரியும் ஒன்பது மாகாணத் திட்டமும்

மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறையின் தோல்விகளை விரிவாக விளக்கிய பின், பண்டாரநாயக்க சமஷ்டி வடிவை முன்வைத்தார். “சமஷ்டி ஆட்சியில் ஒவ்வொரு அலகும் தன்னளவில் முழுமையான அதிகாரம் கொண்டிருக்கும், ஆயினும் ஒன்றிணைந்து, முழு நாட்டையும் பாதிக்கும் விடயங்களை கலந்தாலோசிக்க ஒன்று அல்லது இரண்டு சட்டமன்றங்களை கொண்டிருக்கும்” என அவர் விளக்கினார். ஐக்கிய அமெரிக்கா, ஒஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, கனடா ஆகிய அனைத்து சுயாட்சி டொமினியன்களும் இதே முறையைப் பின்பற்றுவதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் இலங்கைக்கு மிக நெருக்கமான உதாரணமாக அவர் குறிப்பிட்டது சுவிஸ்நாடே. “ஒரு சிறு நாடாக இருந்தும் மூன்று இனங்கள் – பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலியன் – அங்கு வாழ்கின்றனர். ஆயினும் சுவிஸ்நாட்டில் சமஷ்டி முறை மிகச் சிறப்பாக வெற்றி பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு மாநிலமும் தனது சொந்த விவகாரங்களை நிர்வகிக்கின்றது. ஆனால் வெளியுறவு, வர்த்தகம், பாதுகாப்பு போன்ற பொதுவான, சர்ச்சைக்குரிய விடயங்கள் மாத்திரம் கூட்டமைப்புச் சபையால் கையாளப்படுகின்றன” என அவர் நேரடியாக விளக்கினார்.11 இது குறிப்பிடத்தக்கது – லியோனார்ட் உல்ப் 1938இல் தொழிலாளர் கட்சிக்குச் சமர்ப்பித்த குறிப்பாணையில் இதே சுவிஸ் ஒப்பீட்டைப் பயன்படுத்துவதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, பண்டாரநாயக்க தமது சொந்த யாழ்ப்பாண விரிவுரையிலேயே சுவிஸ் மாதிரியைப் பெயரிட்டுக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், “இலங்கையின் ஒவ்வொரு மாகாணமும் முழுமையான சுயாட்சி பெற வேண்டும். தீவின் விசேட வருவாயைக் கையாள ஒன்று அல்லது இரண்டு சட்டமன்றங்கள் இருக்க வேண்டும்” என்று அவர் தெளிவாக முன்மொழிந்தார். சிறு சமூகங்களுக்கு, குறிப்பாக பயம் நிலவும் வரை, தற்காலிக விசேட பிரதிநிதித்துவ ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், கொழும்பு தமிழர் தொகுதிக்கும் இதே கொள்கை பொருந்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். தீவின் மூன்று பிரதான பிரிவுகளாக கண்டியச் சிங்களவர், கரையோரச் சிங்களவர், தமிழர் ஆகியோரை அவர் அடையாளம் காட்டினார். “எல்லோரையும் முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஓர் அமைப்பு முறையை கண்டுபிடிப்பது கடினம். பிரச்சினை இருக்கின்றது என்பதை அங்கீகரிப்பதிலேயே அவர் திருப்தி அடைவார். இதற்குச் சிறந்ததொரு திட்டம் இருந்தால் அதை யாரேனும் மக்களுக்கு முன் கொண்டுவர வேண்டும் என அவர் நம்பினார்” என்பதே அன்றைய அறிக்கையின் இறுதி வரிகள்.

ஏன் இது தமிழருக்கு முக்கியமானதாக இருந்தது?

இந்த முழு வாதமும் தமிழருக்கு நேரடியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, இது யாழ்ப்பாணத்தில், தமிழ் மாணவர் காங்கிரசின் அழைப்பின் பேரில், தமிழ் அறிஞர் கலாநிதி ஐசக் தம்பையா தலைமையில் நிகழ்த்தப்பட்ட உரை. இரண்டாவதாக, பண்டாரநாயக்க முன்வைத்த தர்க்கம் வெறும் கோட்பாட்டு வாதமல்ல – கரையோரச் சிங்களவர் எண்ணிக்கை மேலாதிக்கத்தால் மற்ற இரு சமூகங்களும் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படும் அபாயத்தை அவர் நேரடியாக எச்சரித்தார். மையப்படுத்தப்பட்ட ஆட்சியில் பெரும்பான்மையின் அடிப்படையில் அமைச்சரவை உருவாகும் போது, ஒவ்வொரு சமூகமும் தமக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்தைக் கோரும் எனவும், இது தொடர்ச்சியான மோதலுக்கே வழிவகுக்கும் எனவும் அவர் தெளிவாக விளக்கினார். சமஷ்டி முறையில் ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக இருந்து தன்னாட்சியுடன் இயங்கும் – இதுவே தமிழருக்கு அவர் வழங்க முயன்ற உறுதிமொழி.

நான்காவதாக, பண்டாரநாயக்கவின் திட்டம் பொருளாதார ரீதியாகவும் தமிழருக்கு ஒரு பாதுகாப்பை உறுதியளித்தது. வளங்கள் குறைந்த மாகாணங்கள் நிர்வாகத்தை நடத்த முடியாத நிலைமை ஏற்படலாம் என்று அரங்கில் இருந்த ஜே.எச்.பி. வீரசிங்கம் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காவிட்டாலும், பொதுவான நிதியை உதவி தேவைப்படும் மாகாணங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளலாம் என்று பண்டாரநாயக்க பதிலளித்திருந்தார். இது இன்றைய மாகாண சபை நிதி ஒதுக்கீட்டு விவாதங்களுக்கு கூட ஒரு முன்னோடி மாதிரியாகப் பார்க்கத்தக்கது. ஐந்தாவதாக, மதம், சாதி போன்ற பிரச்சினைகளையும் அவர் நேரடியாக எதிர்கொண்டார். “மதம் தொடர்பான கேள்வி சட்டமூலத்தால் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல” என அவர் ஒப்புக்கொண்ட போதும், நிதி ஏற்றத்தாழ்வும் கல்வி வாய்ப்புகளும் தான் மிகக் கடுமையான ஆட்சேபனைகள் என ஏற்றுக்கொண்டார். இந்த நேர்மையான ஒப்புதல்களே அவரது வாதத்தை வெறும் பிரசாரமாக இல்லாமல், ஓர் உண்மையான அரசியல் விவாதமாக ஆக்கியது.

மூன்றாவதாக, தமிழரின் தனித்துவ அடையாளத்தை “படிப்படியாக மறைந்துவிடும் ஒரு தற்காலிக கட்டம்” எனப் பார்க்காமல், ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருந்த ஒரு நிரந்தர வரலாற்று உண்மையென அவர் அங்கீகரித்தார். இந்த அங்கீகாரமே, பிற்காலத்தில் அதே பண்டாரநாயக்க முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்க இருந்தார் என்பதோடு ஒப்பிடும் போது, மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. 1926இல் அவர் சொன்ன வார்த்தைகள் 1956இல் அவரே செய்த செயல்களுக்கு முற்றிலும் நேர்மாறானவை. ஆனால் அந்த முரண்பாட்டைக் காண்பதற்கு முன், அன்று யாழ்ப்பாணத்தில் அந்த அரங்கிலிருந்த தமிழ் மக்களே அவரது திட்டத்தை ஏற்காமல் தமது சொந்த ஆட்சேபனைகளை முன்வைத்தார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அதைத் தனியாகப் பார்ப்போம்.

இறுதியாக, யாழ்ப்பாண அரங்கில் நடந்த கேள்வி பதில் நேரமே இந்த முழு உரையின் மிக நேர்மையான தருணம். பண்டாரநாயக்கவின் திட்டத்தைப் பாராட்டியோ எதிர்த்தோ பேசிய ஒவ்வொருவரும் பெயர் குறிப்பிட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இது தமிழர் அன்று இந்த யோசனையை செயலற்று வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவில்லை, மாறாக ஒவ்வொரு கோணத்திலும் தீவிரமாக ஆராய்ந்தார்கள் என்பதற்கான சான்று. அந்த விவாதத்தின் விவரங்களும், அதன் இறுதியில் பெரும்பான்மையான தமிழர் எட்டிய முடிவும் தனியாகப் பார்க்கப்பட வேண்டியவை.

பண்டாரநாயக்கவின் இந்த ஆறு கட்டுரைகளும், யாழ்ப்பாண விரிவுரையும் சேர்ந்து நமக்குக் காட்டுவது என்னவெனில், சமஷ்டி எனும் கோரிக்கை ஒரு தமிழ் அரசியல் தந்திரோபாயமாக அதன்பின் உருவானதல்ல. அது 1926இலேயே, ஓர் இளம் சிங்கள பௌத்த அறிவாளியால், தத்துவார்த்த அடிப்படையிலும், புவிசார் யதார்த்தவாத அடிப்படையிலும், வரலாற்று ஆதாரத்தின் அடிப்படையிலும் விரிவாக நிறுவப்பட்ட ஓர் அரசியல் திட்டமாக இருந்தது. அதை முன்வைத்தவரே பிற்காலத்தில் அதைக் கைவிட்டு எதிர்த்து நின்றார் என்பதும், அதை நிராகரித்த தமிழரே இருபது ஆண்டுகளுக்குள் அதைத் தமது சொந்தக் கட்சியின் பெயராகவே சூடிக்கொண்டார்கள் என்பதும்; இந்த நூற்றாண்டு நீண்ட கதையின் இரு பெரும் முரண்கள்.

II

சிங்களவர் தந்ததும் தமிழர்கள் மறுத்ததும்: தலைகீழாய் மாறிய வரலாறு

1926 ஜூலை 17ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தில் பண்டாரநாயக்கவின் உரை முடிந்தவுடன் நடந்தது ஒரு சாதாரண நன்றி பாராட்டும் நிகழ்வல்ல. “ஓர் உயிர்ப்பான விவாதம் அங்கே நடைபெற்றது” என்று அன்றைய செய்தி நிருபரே பதிவு செய்திருக்கிறார். அந்த விவாதத்தில் பங்கெடுத்த ஒவ்வொரு தமிழ்ப் பார்வையாளரும் பெயர் குறிப்பிட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவே அந்த இரவின் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு. ஏனெனில் பண்டாரநாயக்க முன்வைத்த சமஷ்டித் திட்டத்தை அன்று யாழ்ப்பாண மாணவர் அரங்கிலிருந்த தமிழர் பெரும்பாலும் ஏற்கவில்லை என்பதை அந்தப் பெயர் பட்டியலே நமக்கு நிரூபிக்கின்றது.12 சமஷ்டி என்பது தமிழரால் உருவாக்கப்பட்ட கோரிக்கை அல்ல, மாறாக சிங்கள பௌத்தத் தலைவரால் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை; அதை அங்கிருந்த அந்தத் தமிழர்களே அன்று மறுத்தார்கள் ஆகிய இந்த இரட்டை உண்மையைப் புரிந்துகொள்வதே இந்த நூற்றாண்டு முழுவதும் நீண்ட கதையின் மையம்.

ஆறு பெயர்கள், ஆறு ஆட்சேபனைகள்

முதலில் எழுந்தவர் ஜே.கே. சண்முகம். இலங்கையின் பண்டைய வரலாற்றில் கூட்டாட்சி முறை எப்படிச் செயற்பட்டது என்பதைத் தான் புரிந்துகொள்ளவில்லை என்றும், தவறான எண்ணங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில் அந்த முறை திருப்திகரமாகச் செயற்படுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது வாதத்திற்கு ஆதாரமாக, சேர் பொன்னம்பலம் அருணாசலம் கொழும்பு தொகுதிக்கு போட்டியிட முற்பட்டபோது அவர் நடத்தப்பட்ட விதத்தையும், அரசாங்கச் சபைக்கான துணைத்தலைவர் தேர்தலில் சேர் இராமநாதன் நடத்தப்பட்ட விதத்தையும் அவர் நினைவூட்டினார். சமூக பிரதிநிதித்துவ அமைப்பே ஏற்கனவே பாரபட்சமாக செயற்படும் போது, சமஷ்டி முறை புதிதாக என்ன மாற்றத்தைத் தரும் என்பதே அவரது மறைமுக கேள்வி.

சுப்பையா என்பவர், சமஷ்டி அரசாங்கச் சபைக்குள்ளும் கூட வேறுபாடுகள் தலைதூக்கும் என்று எளிமையாகவும் ஆழமாகவும் சுட்டிக்காட்டினார். ஜூலியஸ் பிலிப்ஸ் என்பவர் ஓர் இனம் மட்டும் மிகுதியாக இருக்கும் மாகாணங்களில் சமஷ்டி முறை நன்றாகச் செயற்படலாம், ஆனால் மேல் மாகாணத்தில் (Western Province) கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உள்ளடக்கிய, பல்லின மக்கள்தொகை கொண்ட பிரதேசத்தை எப்படிக் கையாள்வது என வினவினார். இந்தக் கேள்வி இன்றும் பொருத்தமானதே. கொழும்பு போன்ற பல்லின நகரங்களை எந்த மாகாணத்தில் இணைப்பது என்பது இன்றைய அதிகாரப் பரவலாக்க விவாதங்களிலும் தீராத ஒரு சிக்கலாகவே உள்ளது. ஜே.எச்.பி. விஜயரத்தினம் நிதி வளங்கள் குறைந்த மாகாணங்கள் நிர்வாகத்தை நடத்த முடியாத நிலைமையைச் சுட்டிக்காட்டினார்.

சி. பிலிப்ஸ் என்பவர் இரண்டு கடுமையான கேள்விகளை எழுப்பினார். மதம், சாதி தொடர்பான தகராறுகள் எப்படித் தீர்க்கப்படும்? வட இலங்கையில் இவை குறிப்பாக தீவிரமானவை என்றும், மூன்று பெரும் சமூகங்களுக்கிடையே தகராறு எழுந்தால் யார் அதைத் தீர்மானிப்பார்கள் என்றும், எண்ணிக்கையின் அடிப்படையில் கரையோரச் சிங்களவரே எளிதாக மேலோங்கி விடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார். ஆர். சுப்பிரமணியம் சிறு சமூகங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார். இறுதியாக, பைலி மைல்வாகனம் என்பவர் மிகக் கடுமையான, ஆனால் யதார்த்தமான, ஓர் அறிக்கையை முன்வைத்தார்: “இந்த நிலைமைகளின் கீழ் பிரிட்டிஷாரின் கீழேயே இருப்பது பாதுகாப்பானது” என்று அவர் நேரடியாகக் கூறினார். சுயாட்சியைக் காட்டிலும் பாதுகாப்பான குடியுரிமையையே மக்கள் தேர்வு செய்வர் என்பதே அந்த வாக்கியத்தின் அர்த்தம்.

பண்டாரநாயக்கவின் பதிலும், அதன் வரம்புகளும்

இந்த ஆட்சேபனைகளுக்கு பண்டாரநாயக்க பதிலளித்த விதம் அவரது நேர்மையையும், அதே நேரம் அவரது தீர்வின் வரம்புகளையும் காட்டுகின்றது. மத விவகாரங்களை சட்டமூலத்தால் தீர்க்க முடியாது என அவர் நேரடியாக ஒப்புக்கொண்டார். நிதி ஏற்றத்தாழ்வும் கல்வி வாய்ப்பு வேறுபாடும் தான் பெரிய எதிர்பார்ப்புகள் என ஏற்றுக்கொண்ட அவர், உதவி தேவைப்படும் மாகாணங்களுக்கு பொது நிதியிலிருந்து பகிர்ந்தளிக்கலாம் எனப் பரிந்துரைத்தார். ஆனால் மேல் மாகாணம் போன்ற பல்லினப் பிரதேசங்கள் தொடர்பான கேள்விக்கு அவரால் ஓர் உறுதியான பதில் தர முடியவில்லை. ஏற்கனவே தெரிவித்தபடி, சிறு சமூகங்களுக்கு தற்காலிக விசேட பிரதிநிதித்துவம் என்ற பொதுவான பதிலையே அவர் மீண்டும் கூறினார். ஆனால் அவரது இறுதி வாக்கியமே மிக முக்கியமானது: “எல்லோரையும் முழுமையாகத் திருப்திப்படுத்தும் ஓர் அமைப்பு முறையைக் கண்டுபிடிப்பது கடினம். பிரச்சினை இருக்கின்றது என்பதை அங்கீகரிப்பதுடன் திருப்தி அடைவர்” என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டது.13 வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவரிடம் ஒரு முழுமையான தீர்வு இருக்கவில்லை. அவர் முன்வைத்தது ஒரு கட்டமைப்பே தவிர, ஒவ்வொரு நடைமுறைச் சிக்கலுக்கும் தயார் நிலையிலான பதில்கள் அல்ல.

ஐசக் தம்பையாவின் மலாயா ஆலோசனை

அன்றைய கூட்டத்தில் தலைமை தாங்கிய கலாநிதி ஐசக் தம்பையா தனது இறுதி உரையில் ஒரு நடைமுறை ஆலோசனையை முன்வைத்தார். “பிரிட்டிஷ் மலாயாவே சமஷ்டி முறை நன்றாக இயங்குகிற ஒரே இடம் என்று நான் அறிவேன்” என்று அவர் கூறினார். யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள சிந்தனையாளர் தலைவர்கள் மலாயாவுக்குப் பயணம் செய்து, அங்கு நேரடியாகக் கண்டு, தமது கருத்துகளை வகுத்துக்கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். உரை “வலிமையாக நிகழ்த்தப்பட்டு, நியாயமான முறையில் சிந்திக்கப்பட்டிருந்தது” எனவும், இது பெரும் ஆர்வத்தை உருவாக்கும் எனவும் அவர் பாராட்டினார்.14 ஆயினும் அவரது ஆலோசனையே ஒரு மறைமுகச் செய்தியைத் தாங்கியிருந்தது. கோட்பாட்டளவில் கவர்ச்சிகரமான இந்த யோசனையை நடைமுறையில் பரிசோதிக்காமல் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதே அது. அன்று அரங்கில் இருந்த யாருமே “ஆம், இதை நாம் இப்போதே ஏற்போம்” என்று சொல்லவில்லை என்பதை உணர முடிகிறது.

இந்த ஆறு ஆட்சேபனைகளையும் இன்றைய கண்ணோட்டத்தில் மீள வாசிக்கும் போது, அவை வெறும் பொறுப்பற்ற கருத்துகள் அல்ல, கட்டமைப்பு பற்றிய ஆழமான கேள்விகள் என்பது தெளிவாகின்றது. நிர்வாகத் திறன், நிதிச் சுயசார்பு, பல்லின நகர்ப்புற முகாமை, சிறுபான்மை உரிமைகள் பாதுகாப்பு என இவை ஒவ்வொன்றும் இன்று உலகெங்கும் கூட்டாட்சி முறைகளை வடிவமைக்கும் போது எழும் அதே கேள்விகளே. 1926ஆம் ஆண்டு ஒரு காலனித்துவ சிற்றூரின் மாணவர் அரங்கில் இந்த அளவு நுணுக்கமான அரசியலமைப்பு பகுப்பாய்வு நடந்தேறியது என்பதே வியப்பூட்டும் ஒரு வரலாற்று உண்மை.

யாழ்ப்பாண மாணவர் காங்கிரசின் நிறுவன ரீதியான மறுப்பு

அந்த இரவின் தனிநபர் ஆட்சேபனைகளுக்கு அப்பால், யாழ்ப்பாண மாணவர் காங்கிரசே (பின்னர் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என பெயர் மாற்றப்பட்டது) ஒரு நிறுவன ரீதியான நிலைப்பாட்டை எடுத்தது என்பது இன்றைய வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்கிற முக்கிய கருத்து. பண்டாரநாயக்கவின் சமஷ்டி முன்மொழிவை ஆதரிக்குமாறு பண்டாரநாயக்க விடுத்த வேண்டுகோளை மாணவர் காங்கிரஸ் நிராகரித்தது என இன்றைய ஆய்வுக் கட்டுரைகள் தெளிவாகப் பதிவு செய்கின்றன.15 இந்தியத் தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட, மதச்சார்பற்ற, சாதி ஒழிப்பை நாடிய, முழு சுயராஜ்யத்தை இலக்காகக் கொண்ட அந்த இளம் தமிழ் அறிவுஜீவிகள் இயக்கம், ஒரு பிரிவினைவாத அல்லது இனவாத அமைப்பாக ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக, ஓர் ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற இலங்கைத் தேசியத்தையே அது கனவு கண்டது. அத்தகைய ஓர் இயக்கத்திற்கு, சமூக ரீதியாகப் பிரிக்கப்பட்ட மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமஷ்டித் திட்டம், தேசிய ஒற்றுமைக்கு எதிரான ஒரு படிநிலையாகவே தோன்றியிருக்கக்கூடும். காந்தியையும் நேருவையும் முன்மாதிரியாகக் கொண்ட அந்த இளைஞர் இயக்கம், இந்தியத் தேசிய காங்கிரசைப் போலவே, சமூகப் பிரிவினைகளைக் கடந்த ஒரு பொதுத் தேசியத்தையே விரும்பியது.

முற்போக்குத் தேசியவாதிகள் கட்சியும், ஜேம்ஸ் ரத்னமும், அவரது எதிர்வினையும்

அரங்கில் நேரடியாகப் பேசாவிட்டாலும், பண்டாரநாயக்கவின் மிக நெருக்கமான ஆரம்பகால அரசியல் கூட்டாளியும், அவர் தலைமையிலான அதே கட்சியின் இணை நிறுவனருமான ஜேம்ஸ் தேவதாசன் ரத்னமே தமிழ்த் தரப்பின் மிக ஆழமான, மிக விரிவான எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அதுவும் கட்சிக்குள்ளேயே, பண்டாரநாயக்க தலைமை தாங்கிய ஒரு கூட்டத்திலேயே அவ்வெதிர்ப்பை அவர் வெளிப்படுத்தினார். 1925இல் பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து முற்போக்கு தேசியவாதிகள் கட்சியை (Progressive Nationalist Party) இரத்தினம் நிறுவினார். ஆர்.எஸ்.எஸ். குணவர்தன, சி. பொன்னம்பலம் (கட்சியின் முதலாவது செயலாளர், பின்னர் யாழ்ப்பாண மேயராக பதவி வகித்தவர்), ஏ.ஜே.எம். டி சில்வா, ஏ. டி பொன்சேகா, டி.என்.டபிள்யூ. டி சில்வா, எம்.டி. விஜேசிங்க ஆகியோர் இக்கட்சியின் ஏனைய ஸ்தாபக உறுப்பினர்களாக இருந்தனர். “நமது தேசிய கௌரவத்திற்குப் பொருத்தமான, நடைமுறையில் திருப்திகரமான ஒரு சுயாட்சி வடிவத்தை” அடைவதே தமது இலக்கு என அந்தக் கட்சி தன்னை “இலங்கை இளைஞர்களின் முன்னேற்றக் கட்சி” என அறிவித்துக்கொண்டது.16 இந்தக் கட்சியின் முதலாவது செயலாளரே ஒரு தமிழர் (சி. பொன்னம்பலம்) என்பதும், அவர் பின்னர் யாழ்ப்பாண மேயராக இருந்தார் என்பதும் இன்று பெரும்பாலும் மறக்கப்பட்ட ஒரு விவரம். பண்டாரநாயக்கவின் இளமைக்கால அரசியல் திட்டத்தில் தமிழர் வெறும் பார்வையாளராக இராமல் நிறுவன ரீதியாகவே பங்குகொண்டிருந்தனர் என்பதை இது நிரூபிக்கின்றது.

ரத்தினம் தொடக்கத்தில் பண்டாரநாயக்கவின் தீவிர அபிமானியாகவே இருந்தார். பண்டாரநாயக்க வை.எம்.சி.ஏ-வில் நிகழ்த்திய முதலாவது பொது உரையின் போது, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த ரத்னமே அவரை “இளம் இலங்கையின் நம்பிக்கை” (The hope of young Ceylon) எனப் பாராட்டியிருந்தார். ஆயினும் அதே கட்சிக்குள் விரைவில் ஒரு கடுமையான உடைவு ஏற்பட்டது. இதை ரத்தினமே தமது சொந்த வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்: “விரைவிலேயே நான் பண்டாரநாயக்கவுடன் கருத்து வேறுபாடு கொள்ள ஆரம்பித்தேன். ஏனெனில் முற்போக்குத் தேசியவாதிகள் கட்சியில் பண்டாரநாயக்க ஓர் அடிப்படைக் கொள்கையைச் (இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறைக்காகப் பிரசாரம் செய்வதை) சேர்த்திருந்தார். 1926 மே, ஜூன் மாதங்களில் சமஷ்டிக் கருத்தை உயர்த்திப்பிடித்து அவர் பத்திரிகைகளில் கட்டுரைத் தொடர் எழுதியிருந்தார். நான் அந்த விவாதத்தில் அவருடன் இணைந்து, ஒரு நீண்ட கடிதம் மூலம் அவரை எதிர்த்தேன். இது சிலோன் மோர்னிங் லீடரில் ஜூலை 1926இல் வெளியானது. முற்போக்குத் தேசியவாதிகள் கட்சியின் யாப்பை வரைவு செய்யும் குழுவின் உறுப்பினராக நான் இருந்தேன், ஆனால் சமஷ்டி முறையை எதிர்த்து பொதுவான இலக்கிலிருந்தே நான் மாறுபட்டு நின்றேன். அறிக்கை விவாதிக்கப்பட்ட கூட்டத்தில் எனது கருத்து வேறுபாட்டை, அது கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது என அறிவித்து, தலைவர் பண்டாரநாயக்க ‘ஒழுங்கு மீறல்’ எனத் தள்ளுபடி செய்தார்” என்று இரத்தினம் பதிவு செய்துள்ளார்.17 இந்த ஒரு பத்தியே பண்டாரநாயக்கவின் சமஷ்டிப் பிரசாரத்தின் மறுபக்கத்தை நமக்குக் காட்டுகின்றது. கட்சிக்குள்ளேயே ஒரு தமிழ் உறுப்பினரின் கருத்து வேறுபாட்டை, கட்சித் தலைவரே “அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது” என அறிவித்து ஒழுங்கு விதி மூலம் தடுத்து நிறுத்தினார் என்பது, பண்டாரநாயக்கவின் சமஷ்டி வாதம் எவ்வளவு உறுதியானதாக இருந்தது என்பதையும், அதே நேரம் அவர் உள்கட்சி விமர்சனத்தை எப்படிக் கையாண்டார் என்பதையும் வெளிப்படுத்துகின்றது.

இந்தக் கருத்து வேறுபாடு தனிமைப்பட்ட ஒரு விவகாரமாக நீடிக்கவில்லை. இறுதியில் இருவருக்குமிடையிலான உறவு முற்றிலும் முறிந்தது. அதுவும் சமஷ்டிப் பிரச்சினையால் அல்ல, மாறாக ஒரு தேர்தல் மோதலால். ரத்னத்தின் அரசியல் குருவாக அவர் கருதிய தொழிற்சங்கத் தலைவர் ஏ.ஈ. குணசிங்கவுக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ். குணவர்தனவின் ஆதரவுடன் பண்டாரநாயக்க மருதானை தொகுதியில் போட்டியிட்ட போது, ரத்னத்திற்கு வேறு வழியில்லாமல் போனது. தனது குருவுக்கு விசுவாசமாக இருப்பதைத் தவிர அவருக்கு வேறு தெரிவு இருக்கவில்லை என அவரே பதிவு செய்துள்ளார். இதன் பின் இரு பழைய கூட்டாளிகளும் அரசியல் ரீதியாக நிரந்தரமாகப் பிரிந்தார்கள்.

டொனமூர் ஆணைக்குழுவின் மூன்று காரணங்கள்

1927ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை வடிவமைக்க அனுப்பப்பட்ட டொனமூர் ஆணைக்குழுவின் முன்னும் இதே பாணி நிலைப்பாடே தமிழ் தரப்பிலிருந்து மீண்டும் வெளிப்பட்டது. கண்டி தேசிய சங்கமும் பண்டாரநாயக்கவும் தனித்தனியே சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்த போதும், அந்த ஆணைக்குழு அதனை மூன்று காரணங்களுக்காக நிராகரித்தது. முதலாவது, தமிழர் தரப்பில் எவரும் சமஷ்டியைக் கோரவில்லை. இரண்டாவது, சமஷ்டியை முன்வைத்தவர்கள் ஒரு சிறு கோஷ்டியே. மூன்றாவது, பெரும்பான்மைச் சிங்களத் தலைவர்கள் தேசிய காங்கிரஸ் எனும் பலமான அமைப்பின் மூலம் ஓர் ஒற்றையாட்சி டொமினியன் அந்தஸ்தையே கோரியிருந்தார்கள்.18 இந்த மூன்று காரணங்களில் முதலாவதே மிக முக்கியமானது. சமஷ்டியைக் கோரி ஆணைக்குழு முன் நின்று வாதாடும் வாய்ப்பு தமிழருக்கு இருந்தும், அவர்கள் அதைப் பயன்படுத்தவில்லை. தமக்கு ஏற்கனவே கிடைத்திருந்த அரசியலமைப்புக் கட்டமைப்புக்குள்ளேயே நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தமது அரசியலை அப்போது முன்னெடுத்தார்கள்.

கொழும்பு தமிழர் தொகுதியும் ஒரு மறக்கப்பட்ட விவரமும்

யாழ்ப்பாண உரையில் பண்டாரநாயக்க குறிப்பிட்ட ஒரு சிறிய, ஆனால் முக்கியமான விவரத்தை பின்னாளைய வரலாற்று விமர்சனங்கள் பெரும்பாலும் கவனிக்காமல் விட்டுவிடுகின்றன. கொழும்பு போன்ற பல்லின நகரங்களில் வாழும் தமிழருக்கு விசேட பிரதிநிதித்துவம் தேவைப்படும் என்பதை அவர் ஏற்கனவே 1926இலேயே அங்கீகரித்திருந்தார். “கொழும்பு தமிழர் தொகுதிக்கும் இதே கொள்கையைப் பரிந்துரைப்பேன்” என அவர் நேரடியாகவே கூறியிருந்தார்.19 இது காட்டுவது என்னவெனில், பண்டாரநாயக்கவின் திட்டம் வெறும் புவியியல் மாகாணப் பிரிவினையாக மாத்திரம் இல்லாமல், பல்லின நகர்ப்புற மக்கள்தொகைக்கும் ஏற்ற வகையில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாக இருந்தது. ஜூலியஸ் பிலிப்ஸ் எழுப்பிய மேல் மாகாண கேள்விக்கு இதுவே அவரது பதிலின் மையம். தூய புவியியல் எல்லைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொள்ளாமல், குறிப்பிட்ட தொகுதிகளுக்கு விசேட ஏற்பாடுகள் செய்யும் ஒரு கலப்பு மாதிரியையே அவர் கருதியிருந்தார். ஆயினும் இந்த விவரம் அரங்கில் இருந்தவர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதையே அன்றைய தொடர் கேள்விகள் காட்டுகின்றன.

இன்னும் ஒரு கோணத்தையும் இங்கு கவனிக்க வேண்டும். அரங்கில் பேசிய ஆறு பேரில் ஒருவர் கூட, “இது ஒரு தேவையற்ற யோசனை, இதைப் பற்றி பேசவே வேண்டாம்” எனத் தள்ளிவிடவில்லை. ஒவ்வொருவரும் திட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை (நிர்வாகம், நிதி, மதம், பிரதிநிதித்துவம்) தனித்தனியாக ஆராய்ந்தார்கள். இது ஒரு முதிர்ச்சியடைந்த அரசியல் கலாசாரத்தின் அடையாளம். ஏற்றுக்கொள்வதற்கு முன் ஒவ்வொரு கோணத்திலும் ஒரு திட்டத்தை பரிசீலிக்கும் பழக்கம், 1926ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாணவர் அரங்கில் ஏற்கனவே வேரூன்றியிருந்தது என்பதை இந்த விவாதப் பதிவு நமக்கு நினைவூட்டுகின்றது.

ஏன் தமிழர் ஒரே நாட்டையே விரும்பினார்கள்

1926இல் அன்றைய தமிழ் அரசியல் மனநிலையை புரிந்துகொள்ள, அந்தக் காலகட்டத்தின் பரந்த சூழலை கவனத்தில் கொள்ள வேண்டும். பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்தில் தமிழர் (குறிப்பாக யாழ்ப்பாணத்து வெள்ளாள சாதியினர்) ஆங்கிலக் கல்வியில் முன்னேறி, அரசுத்துறை உத்தியோகங்களில் விகிதாசாரத்திற்கு அதிகமான பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். கொழும்பையே மையமாகக் கொண்ட தேசிய அரசியலில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தார்கள். இந்த நிலையில், மாகாணங்களுக்குள் பிரிந்து செயற்படும் ஒரு சமஷ்டி முறை, கொழும்பு மைய அரசியலில் தமிழருக்கு இருந்த செல்வாக்கைக் குறைத்துவிடும் என்கிற அச்சம் அவர்களிடையே இருந்திருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஓர் ஒற்றையாட்சி இலங்கையில், படிப்பறிவும் நிர்வாகத் திறமையும் கொண்ட தமிழர், விகிதாசாரத்திற்கும் அதிகமான செல்வாக்கைத் தொடர்ந்து செலுத்த முடியும் என்று அவர்கள் நம்பியிருக்கலாம்.

இரண்டாவதாக, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே பைலி மைல்வாகனத்தின் அறிக்கையில் தெளிவாக வெளிப்பட்டது. “பாதுகாப்பாக இருக்க பிரிட்டிஷாரின் கீழேயே இருப்பது நல்லது” எனும் அவரது வார்த்தைகள், சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையினரிடமிருந்து பாதுகாப்பை பிரிட்டிஷாரிடம் தேடிய ஒரு பொதுவான மனநிலையையும் நமக்கு காட்டுகின்றன. சுயாட்சி பெற்ற பின், மாகாண எல்லைகளுக்குள் பெரும்பான்மையினரின் அதிகாரத்திற்கு உட்படுவதைவிட, மத்திய பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் ஒரு பொதுவான சட்டத்திற்கு உட்படுவதே பாதுகாப்பானது என அவர் கருதியிருக்கலாம். மூன்றாவதாக, யாழ்ப்பாண மாணவர் காங்கிரசின் இளைஞர் தலைவர்கள் இந்திய தேசிய இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, ஒருங்கிணைந்த தேசியக் கனவை கொண்டிருந்தார்கள். சமூக அடையாளங்களை அரசியல் அமைப்பின் அடிப்படை அலகுகளாக மாற்றும் எந்தவொரு திட்டமும் அவர்களுக்கு பிற்போக்குத்தனமாகவே தோன்றியிருக்கும்.

நாற்பது ஆண்டுகள் கழித்தும் மாறாத நிலைப்பாடு

ரத்தினம் தனது 1926ஆம் ஆண்டு நிலைப்பாட்டிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை என்பதே அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்த வரலாற்று உண்மை. 1969ஆம் ஆண்டு, தமிழரசுக் கட்சி நிறுவப்பட்டு இருபது ஆண்டுகளுக்குப் பின், சி. சுந்தரலிங்கம் “ஈழம்” எனும் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தபோது, அறுபத்து நான்கு வயதான ரத்தினம் அதைப் பகிரங்கமாக கடுமையாக எதிர்த்தார். “எமது சிங்கள சகோதர சகோதரிகள் இனரீதியாக தமிழரைப் போன்றவர்களே, மொழி மாத்திரமே வேறுபாடு” என அவர் எழுதினார். வடக்கு கிழக்கில் உள்ளோர் பொறுமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், “அவர்களுக்கும் மனசாட்சி உண்டு, பெரும்பான்மையினரும் தமது தவறை உணர்வார்கள். காத்திருப்பதால் எதுவும் இழக்கப்படாது. தேசங்களின் ஆயுள் எழுபது வருடங்களோடு முடிவடைவதில்லை” என்றார்.20 “ஈழம்” (Eylom) எனும் ஆங்கிலச் சொல்லையே அவர் ஒரு “மொழியியல் விபரீதம்” எனக் கடுமையாக விமர்சித்தார். அது நீண்ட ‘i’ உடன் “இழம்” எனும் பழைய தமிழ்ச் சொல்லின் தவறான ஒலிபெயர்ப்பே எனவும், “ஈழம்” என்பது உண்மையில் தமிழருக்கு மாத்திரமல்ல, முழு இலங்கைத் தீவுக்குமான பழைய பெயரே எனவும், அதே பொருளில் தமிழுக்கு இணையான எலு (Elu) சொல்லும் வழக்கிலிருந்ததாகவும் அவர் விளக்கினார்.

இதன் அர்த்தம் என்னவெனில், 1926இல் ஒரு சிங்கள பௌத்தத் தலைவர் முன்வைத்த சமஷ்டி திட்டத்தை எதிர்த்த அதே ரத்தினம், 1969இலும் (அதாவது நாற்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னும்) தமிழ் தரப்பிலிருந்தே எழுந்த பிரிவினைவாதக் கோரிக்கையையும் அதே கடுமையுடன் எதிர்த்தார். சமஷ்டியை ஆதரித்தால் மாத்திரமே ஒருவர் “தமிழ் நலன் காப்பவர்” என்றோ, அதை எதிர்த்தால் “தமிழ் துரோகி” என்றோ எளிமைப்படுத்தி பார்க்க முடியாது என்பதை ரத்னத்தின் அறுபது ஆண்டுகால நிலைப்பாடு நிரூபிக்கின்றது. அவர் விரும்பியது சமஷ்டியும் அல்ல, பிரிவினையும் அல்ல. மாறாக இனங்களுக்கிடையிலான பரஸ்பரப் பொறுமையும் படிப்படியான புரிந்துணர்வும் கொண்ட ஓர் ஒருங்கிணைந்த இலங்கையே. “நான் ஒரு கிறிஸ்தவன், ஆனால் கிறிஸ்தவம் ஏகாதிபத்தியத்தின் கருவியாகப் பயன்படுத்தப்படுவதை நான் உறுதியாக எதிர்க்கின்றேன்” என்று 1931இல் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ரத்தினம் தன்னை வரையறுத்துக்கொண்ட விதமே, இனம் – மதம் கடந்த ஒரு மனிதநேயக் கண்ணோட்டத்தை அவர் தனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றியதற்குச் சான்று.

1936ஆம் ஆண்டு ஜி.ஜி. பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட “50-50” கோரிக்கை – சிங்களவருக்கும் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் அரசாங்கச் சபையில் சமமான ஆசன எண்ணிக்கை வழங்கும் திட்டம், சமஷ்டியை விட வேறுபட்ட அணுகுமுறையாக இருந்தாலும், அதன் இயக்கு சக்தி ஒன்றே. எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகத்தில் தமிழர் நிரந்தரமாக சிறுபான்மையாக மாறிவிடும் அபாயத்திற்கு ஓர் அரசியலமைப்பு பாதுகாப்பு தேட வேண்டும் என்பதே அது. அந்தக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 1944-45இல் இலங்கைக்கு விஜயம் செய்த சோல்பரி ஆணைக்குழு முன்னிலையிலும் இதே தேவை மீண்டும் முன்வைக்கப்பட்டது, மீண்டும் புறக்கணிக்கப்பட்டது.21 ஒவ்வொரு தொடர்ச்சியான நிராகரிப்பும், 1926இல் பிரிட்டிஷ் அரசை நம்பியிருந்த தமிழ் அரசியல் மனநிலையை மெல்ல மெல்ல அரித்தது. 1949ஆம் ஆண்டளவில், பிரிட்டிஷார் விடைபெற இருக்கும் நிலையில், அந்த நம்பிக்கைக்குப் பதிலாக ஏதோவொரு அரசியலமைப்பு உத்தரவாதமே தேவை என்கிற உணர்வு தமிழ் தலைமையிடையே உறுதியடைந்திருந்தது.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்: பெரும் திருப்பம்

1926இல் யாழ்ப்பாண அரங்கில் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட அதே யோசனை, 1949 டிசம்பர் 18ஆம் திகதி எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் தோற்றுவிக்கப்பட்ட புதிய தமிழ் அரசியல் கட்சியின் அடையாளமே ஆனது. “இலங்கைத் தமிழரசுக் கட்சி” எனத் தமிழில் பெயரிடப்பட்ட அந்த அமைப்பு, ஆங்கிலத்தில் தன்னை “Federal Party” என அறிவித்துக்கொண்டது. அதாவது “சமஷ்டிக் கட்சி” என்கிற பெயரிலேயே “சமஷ்டி”க் கொள்கையைக் கொண்டிருந்தது. 1951 திருகோணமலை மாநாட்டில் சமஷ்டி அரசியலமைப்புக் கோரிக்கையை தனது பிரதான தீர்மானமாக அந்தக் கட்சி நிறைவேற்றியது.22 இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் யாழ்ப்பாணத்தில் பிலிப்ஸ், விஜயரத்தினம், மைல்வாகனம் ஆகியோர் எழுப்பிய அதே கேள்விகளுக்கு, (அதாவது மேல் மாகாணத்தை எப்படிக் கையாள்வது, நிதி வளம் குறைந்த பகுதிகளை எப்படி நிர்வகிப்பது) இப்போது தமிழ் தலைமையே பதில் தேட வேண்டிய நிலைமை உருவானது. வரலாற்றின் இந்த முரண், 1926ஆம் ஆண்டு வெறுமனே ஒரு கோட்பாட்டு விவாதமாக இருந்த ஒன்று, 1949ஆம் ஆண்டளவில் தமிழருக்கு ஏன் இன்றியமையாததாக மாறியது என்பதைக் கேட்க நம்மை தூண்டுகின்றது.

அந்த இருபத்து மூன்று ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றமே இந்தக் கேள்விக்கான பதில். 1931இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், எண்ணிக்கை அடிப்படையிலான அரசியல் தவிர்க்க முடியாததாகியது. கல்வியிலும் அரசுத்துறை உத்தியோகங்களிலும் தமிழருக்கு இருந்த விகிதாசாரத்திற்கு அதிகமான பிரதிநிதித்துவம், எண்ணிக்கை அடிப்படையிலான ஜனநாயகத்தில் ஒரு நிரந்தரப் பலவீனமாக மாறியது. 1936இல் “50-50” கோரிக்கை (சிங்களவருக்கும் அனைத்துச் சிறுபான்மையினருக்கும் சமமான பிரதிநிதித்துவம்) நிராகரிக்கப்பட்டது. 1944-45இல் சோல்பரி ஆணைக்குழு முன்னும் சிறுபான்மை பாதுகாப்புக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன. இந்த தொடர்ச்சியான அனுபவங்களே, பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து பாதுகாப்பை நம்பியிருந்த 1926ஆம் ஆண்டு தமிழ் மனநிலையை, சுயாட்சி மாகாண அதிகாரத்தையே நம்பும் 1949ஆம் ஆண்டு மனநிலையாக மாற்றின.

எண்ணிக்கை அடிப்படையிலான அமைச்சரவையில் ஏற்படும் விகிதாசார பேரம் பேசல், மையப்படுத்தப்பட்ட ஆட்சி “ஓர் ஒருங்கிணைந்த இனக்குழுவை” முன்கூட்டியே அனுமானித்துக் கொள்வதன் ஆபத்து, ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருந்த சமூக வேறுபாடுகள் படிப்படியாக மறைந்துவிடாது என்கிற எச்சரிக்கை என பண்டாரநாயக்க 1926இல் முன்வைத்த வாதங்கள் ஒவ்வொன்றும், 1956க்குப் பின் கால ஓட்டத்தில் நிஜமாயின. ஆனால் அதற்குள் அந்த வாதங்களை முன்வைத்தவரே அவற்றைக் கைவிட்டுவிட்டிருந்தார், அவற்றை நிராகரித்தவர்களே அவற்றைத் தமது சொந்தக் கட்சியின் கோட்பாடாக ஏற்றுக்கொண்டு நின்றார்கள்.

யாழ்ப்பாண மாணவர் அரங்கில் 1926இல் எழுந்த ஒவ்வொரு குரலும் (சண்முகத்தின் சந்தேகம், பிலிப்ஸின் நடைமுறைக் கேள்வி, மைல்வாகனத்தின் பாதுகாப்புணர்வு) அன்றைய தமிழ் அரசியல் சிந்தனையின் ஓர் உண்மையான குறுக்குவெட்டு. அவர்கள் செயலற்று வெறுமனே கேட்டுக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு கோணத்திலும் தீவிரமாக விசாரித்தார்கள், தமது சொந்த யதார்த்தத்தின் அடிப்படையில் தீர்மானித்தார்கள். அந்தத் தீர்மானம் பிற்காலத்தில் தவறு என நிரூபணமானது என்பது, 1926ஆம் ஆண்டு அவர்கள் எடுத்த முடிவு அவர்களது அன்றைய அனுபவத்திற்குப் பொருந்தாதது என அர்த்தமல்ல. வரலாற்றை நியாயந் தீர்ப்பதைவிட, அதை புரிந்துகொள்வதே அதிக மதிப்புமிக்கது. 1926 யாழ்ப்பாணம் நமக்குக் கற்பிக்கும் பாடம் இதுவே.

எளிமைப்படுத்தப்பட்ட கதைகளை மறுப்பது

இதுவரை நாம் பார்த்த வரலாறானது, இலங்கை அரசியலில் பரவலாக நிலவும் இரு எளிமைப்படுத்தப்பட்ட கதைகளையும் மறுக்கின்றது. முதலாவது கதை: “சமஷ்டி என்பது எப்போதுமே தமிழ் பிரிவினைவாதத்தின் ஒரு வெளிப்பாடே” என்பது. இரண்டாவது கதை: “தமிழர் எப்போதுமே சமஷ்டியை விரும்பினர், சிங்களவர் எப்போதுமே அதை எதிர்த்தனர்” என்கிற புனைவும் ஐதீகமும். இரண்டு கதைகளுமே 1926ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவின் உரையிலும் கட்டுரைகளிலும் மறுக்கப்படுகின்றன. சமஷ்டியை முதன்முதலில் ஆழமான தத்துவார்த்த, வரலாற்று, புவிசார் அடிப்படையில் நிறுவியவர் ஒரு சிங்கள பௌத்த அறிவாளி. அதை நிராகரித்தவர்கள் தமிழ் மாணவர் தலைவர்கள். இந்த வரலாற்று உண்மையை மறைத்து, இரு தரப்பினரும் தமக்கு வசதியான எளிமைப்படுத்தப்பட்ட கதைகளையே பிற்காலத்தில் பிரசாரம் செய்து வந்திருக்கின்றனர்.

1926 யாழ்ப்பாணம் நமக்குக் கற்பிக்கும் இன்னொரு உண்மையான பாடம் வேறு ஒன்று உள்ளது. அரசியல் நிலைப்பாடுகள் நிரந்தரமானவை அல்ல, அவை ஒவ்வொரு தலைமுறையும் தமது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் புதுப்பித்துக்கொள்ளும் ஓர் உயிருள்ள செயல்முறை. 1926இல் யாழ்ப்பாணத்தில் நின்ற தமிழ் மாணவரும், 1949இல் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியை நிறுவிய தலைவரும், 1926இல் யாழ்ப்பாணத்தில் பேசிய பண்டாரநாயக்கவும், 1956இல் சிங்கள மொழி மட்டும் சட்டமூலத்தை நிறைவேற்றிய பிரதமர் பண்டாரநாயக்கவும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக முற்றிலும் மாறுபட்ட அரசியல் தீர்மானங்களை எட்டியவர்கள். அந்த மாற்றத்தை உந்திய வரலாற்றுச் சூழல்களை புரிந்துகொள்வதே, இன்றைய இலங்கை அரசியலைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோல்.

இந்த யாழ்ப்பாண உரையின் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் இந்த ஆண்டு (2026), அந்த மறக்கப்பட்ட விவாதத்தை மீள வாசிக்க ஒரு பொருத்தமான தருணம். ஆறு கடிதங்களும், ஓர் உரையும், ஆறு பெயரிடப்பட்ட ஆட்சேபனைகளும் சேர்ந்து நமக்குக் காட்டுவது இலங்கையின் இனப் பிரச்சினை எத்தனை ஆழமாக வேரூன்றியது, எத்தனை காலமாக அது ஒரு தீர்வை எதிர்நோக்கி நின்றது என்பதையே. அந்தத் தீர்வு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதே இந்த நூற்றாண்டு நீண்ட கதையின் மிகக் கொடுமையான உண்மை.

இறுதியாக, ஒரு நடைமுறை அவதானிப்பையும் இங்கு பதிவு செய்ய வேண்டும். பண்டாரநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கும், அரங்கிலிருந்த தமிழர் எழுப்பிய ஆட்சேபனைகளுக்கும் இடையிலான இடைவெளியே, இன்றுவரை இலங்கை அரசியலமைப்பு விவாதங்களில் தீராமல் நீடிக்கும் அதே இடைவெளி. அதிகாரப் பரவலாக்கம் எந்த அளவு வரை செல்ல வேண்டும், பல்லின நகர்ப்புறங்களை எப்படிக் கையாள்வது, வள ஏற்றத்தாழ்வை எப்படிச் சரிசெய்வது போன்ற கேள்விகளுக்கு 1926இல் முழுமையான பதில் இல்லாதது போலவே, 2026இலும் நூற்றாண்டு  கழிந்தும் முழுமையான ஒருமித்த பதில் இல்லை. ஆனால் வேறுபாடு ஒன்று உண்டு. 1926இல் இந்தக் கேள்விகள் ஒரு கோட்பாட்டுக் கலந்துரையாடலாக மாத்திரம் இருந்தன. 2026இல் அவை மூன்று தசாப்த காலப் போரையும், அதன் விளைவுகளையும் கடந்து வந்த ஒரு தேசத்தின் நிஜமான, தவிர்க்கவியலாத கேள்விகளாக நிற்கின்றன.

இதனை முழுமையாக வாசிக்கும் ஒரு வாசகர், ஒரு கேள்வியை தவிர்க்க முடியாது எழுப்ப முடியும். பண்டாரநாயக்க தமது சொந்த வாதங்களைப் பின்பற்றியிருந்தால், தமிழர் 1926இலேயே அதை ஏற்றிருந்தால், இலங்கையின் அடுத்த நூறு ஆண்டுகள் எப்படி வேறுபட்டிருந்திருக்கும்? இது ஒரு பதிலற்ற கேள்வியே. ஆனால் அந்தக் கேள்வியை எழுப்புவதே இந்த வரலாற்றை மீள்வாசிப்பதை மதிப்பாக்கும். 1926 யாழ்ப்பாணம் நமக்குக் காட்டுவது, சரியான யோசனைகள் சரியான தருணத்தில் ஏற்கப்படாமல் போகலாம் என்பதும், தவறான தருணத்தில் திணிக்கப்படும் சரியான யோசனைகள் கூட மோதலுக்கே வழிவகுக்கலாம் என்பதுமே.

பண்டாரநாயக்கவின் வாதங்களை முழுமையாக நிராகரிக்காமல், அவற்றின் ஒரு பகுதியை மாத்திரம் தமிழர் ஏற்றிருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதும் ஒரு சுவாரசியமான கற்பனை. கொழும்பு தமிழர் தொகுதிக்கான விசேட பிரதிநிதித்துவம், வடக்குக் கிழக்கிற்கான ஒரு தன்னாட்சி மாகாண அலகு, இவை மாத்திரமேனும் அன்றே ஏற்கப்பட்டிருந்தால், பிற்காலத்தின் மொழிக் கொள்கை மோதல்களுக்கு ஒரு வேறுபட்ட பாதை திறந்திருக்கக்கூடும். ஆயினும் இது வெறும் ஊகமே.

அடிக்குறிப்புகள்

  1. S.W.R.D. Bandaranaike, “Federation (A solution for the problems of Ceylon’s external and internal relations),” Letters I–VI, The Ceylon Morning Leader, May 19 – June 30, 1926; reproduced in Centre for Policy Alternatives, Power-sharing in Sri Lanka: Constitutional and Political Documents 1926–2008 (Colombo: CPA), pp. 29–49.
  2. S.W.R.D. Bandaranaike, Letter No. I, “Federation,” The Ceylon Morning Leader, May 19, 1926.
  3. S.W.R.D. Bandaranaike, Letter No. II, “External Federation,” The Ceylon Morning Leader, May 27, 1926.
  4. S.W.R.D. Bandaranaike, Letter No. III, “External Federation,” The Ceylon Morning Leader, June 2, 1926.
  5. S.W.R.D. Bandaranaike, Letter No. IV, “External Federation,” The Ceylon Morning Leader, June 9, 1926, quoting General Smuts’s address to the 1923 Imperial Conference.
  6. S.W.R.D. Bandaranaike, Letter No. IV, “External Federation,” The Ceylon Morning Leader, June 9, 1926, citing the 1923 Imperial Conference proceedings.
  7. S.W.R.D. Bandaranaike, Letter No. V, “External Federation: Federation with India, The League of Nations,” The Ceylon Morning Leader, June 23, 1926.
  8. S.W.R.D. Bandaranaike, Letter No. VI, “Ceylon as a Mandate from the League of Nations,” The Ceylon Morning Leader, June 30, 1926.
  9. “A Federal Govt. For Ceylon – Mr. Bandaranaike Lectures in Jaffna – Various Objections Raised to System,” The Ceylon Morning Leader, Saturday, July 17, 1926; reproduced in Power-sharing in Sri Lanka: Constitutional and Political Documents 1926–2008.
  10. “A Federal Govt. For Ceylon,” The Ceylon Morning Leader, July 17, 1926, “Failings of centralised form”.
  11. “A Federal Govt. For Ceylon,” The Ceylon Morning Leader, July 17, 1926, “The Federal Form” section.
  12. “A Federal Govt. For Ceylon – Mr. Bandaranaike Lectures in Jaffna – Various Objections Raised to System,” The Ceylon Morning Leader, July 17, 1926, “The lecturer catechised” section; reproduced in Power-sharing in Sri Lanka: Constitutional and Political Documents 1926–2008.
  13. “A Federal Govt. For Ceylon,” The Ceylon Morning Leader, July 17, 1926, “Why not under British rule” section.
  14. “A Federal Govt. For Ceylon,” The Ceylon Morning Leader, July 17, 1926, closing remarks by Dr. Isaac Thambyah.
  15. “A century-old discourse on federalism,” The Morning (Colombo), March 21, 2026, citing the Jaffna Students’ Congress’s rejection of Bandaranaike’s federal proposal.
  16. A.R.B. Amerasinghe, “James Thevathasan Rutnam,” in Festschrift 1985 — James Rutnam (Colombo: Sri Lanka National Commission for UNESCO, 1985).
  17. James T. Rutnam, quoted in A.R.B. Amerasinghe, “James Thevathasan Rutnam,” Festschrift 1985 — James Rutnam, p. 5, from Rutnam’s own account in the Tribune.
  18. Neelan Tiruchelvam, “Autonomy and Ethnicity: The Politics of Federalism and Diversity in Sri Lanka” (2000); K.M. de Silva, A History of Sri Lanka (Colombo: Vijitha Yapa, 2005).
  19. “A Federal Govt. For Ceylon,” The Ceylon Morning Leader, July 17, 1926, “The Federal Form” section, final paragraph.
  20. James T. Rutnam, in the Observer, May 15, 1969, quoted in A.R.B. Amerasinghe, “James Thevathasan Rutnam,” Festschrift 1985 — James Rutnam.
  21. K.M. de Silva, A History of Sri Lanka (Colombo: Vijitha Yapa, 2005), pp. 491–510, on the Soulbury Commission and minority representation.
  22. “S.J.V. Chelvanayakam and the Ilankai Thamil Arasuk Katchi,” Daily FT, December 2024.


About the Author

என்.சரவணன்

35 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுவருபவர். எழுத்தாளராக, பத்திரிகையாளராக, அரசியல் - வரலாற்று ஆய்வாளராக, சமூக அரசியல் செயற்பாட்டாளராக அறியப்படுபவர். தேசியவாதம், மாக்சியம், தலித்தியம், பெண்ணியம், வரலாறு, அரசியல் ஆகிய துறைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். மகாவம்சம் தொடர்பான ஆழ்ந்த புலமை உள்ளவர். மகாவம்சத் தொகுதிகளை சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து வருகிறார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்