அண்மைக்காலங்களில் உலகில் பல நாடுகளில் இளைஞர்கள் வீதிகளில் இறங்கி, தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவை உலகளாவிய கவனத்தினை ஈர்த்திருப்பதுடன், ஜனநாயகம், முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அரச-பிரஜைகளுக்கிடையிலான சமூக ஒப்பந்தம் தொடர்பாக எம்மை மீளச் சிந்திக்கச் செய்துள்ளன. பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, பெல்ஜியம், இந்தியா, ஸ்பெயின், பெரு, கென்யா, செர்பியா, கிறீஸ், போர்த்துக்கல், இந்தோனேசியா, மடகஸ்கார் மற்றும் அல்பேனியா போன்ற பல நாடுகளில் இளைஞர்களின் போராட்டத்தினைக் காண முடிகின்றது. இவை நாளாந்தம் வேறுபட்ட வடிவங்களைப் பெற்று வருகின்றன. சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய போராட்டங்கள் வெடிக்கும் என நாம் ஒருபோதும் எண்ணியதில்லை. தங்களை முற்றாகக் கைவிட்டுள்ள முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கோ, அல்லது Naomi Klein, Astra Taylor ஆகியோர் 2006ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் குறிப்பிடும் “முடிவுக்கால பாசிசம்” (End Times Fascism) என வர்ணித்த அரசியலுக்கோ தங்களது எதிர்காலத்தை ஒப்படைக்க இனியும் இளைஞர்கள் தயார் இல்லை என்பதனை இப்போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான Erica Chenoweth, Matthew Cebul என்பவர்களது கூற்றின்படி, ஜென் சி (Gen Z) போராட்டத்தின் எழுச்சி வெளிக்காட்டுவது யாதெனில், அரசியல் முறைமை தம்மை தொடர்ந்தும் ஏமாற்றும்போது அல்லது தோல்வியடையச் செய்யும்போது, இளைஞர்கள் அதனை ஓர் ஓரத்தில் இருந்து தொடர்ந்தும் வேடிக்கை பார்ப்பதற்கு இனியும் தயார் இல்லை என்பதாகும். இப்போராட்டங்கள் வெறுமனே சர்வாதிகாரத்திற்கு எதிரானவை மட்டுமல்ல; இதனுடன் தொடர்புடைய குடும்ப மற்றும் உயர்குழாத்தினரின் அரசியல் ஆதிக்கம், சமச்சீரற்ற வளப்பங்கீடு, வெளிப்படையான மனித உரிமை மீறல்கள், தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றாமை போன்றவற்றுடன், நல்லாட்சியையும் மக்களின் வளமான வாழ்வையும் உறுதிசெய்வதில் ஆட்சியாளர்கள் காட்டும் பொறுப்பற்ற தன்மையும் மெத்தனப் போக்கும் அரசியல் தளத்தில் பல அடிப்படை மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன என்று அவர்கள் வாதிடுகின்றனர். புகழ்பெற்ற Journal of Democracy ஆய்விதழில், ‘ஜென் சி (Gen Z) தலைமுறையினர் ஏன் போராடுகின்றனர்?’ என்ற தலைப்பில் அண்மையில் வெளியான கட்டுரையிலேயே பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சீரழிந்து வரும் கல்வி நிறுவனங்கள், கல்விக்கான அதிகரித்த கட்டணம், குறைந்த வேதனம், அதிகரிக்கும் வேலையின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை, செல்வக்குவிப்பு, எட்ட முடியாத அளவுக்கு உயர்ந்துள்ள வீட்டு வாடகை மற்றும் சொத்துகளின் விலைகள், அரசியல் ஊழல், சர்வாதிகார ஆட்சியின் அழிவுகள், அரசினை அதிகார வர்க்கம் கைப்பற்றியுள்ளமை, இளைஞர்களின் தேவைகளை, கோரிக்கைகளைத் தொடர்ந்தும் புறக்கணித்து வரும் ஆளும் வர்க்கத்தின் மீதான அதிகரித்து வரும் கோபம் போன்ற காரணிகளே இந்தப் போராட்டங்களுக்கு உந்துசக்திகளாக அமைந்துள்ளன. வர்த்தக உயர்குழாமினர் பொருளாதாரச் செயற்பாடுகளையும் செல்வத்தினையும் கட்டுப்படுத்தி வைத்திருப்பது மிக வேகமாக அதிகரித்துவரும் பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணமாகும். இதற்கு 896.4 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்து மதிப்பினைக் கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய செல்வந்தராகத் திகழும் எலன் மஸ்க் போன்ற பிரபல செல்வந்தர்களும் முக்கிய காரணம் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் முன்னணி செல்வந்தரான கௌதம் அதானி குறித்து ஒரு முக்கியமான விடயத்தினை அண்மையில் முன்வைத்தார். மோடி பதவிக்கு வருவதற்கு முன்பு உலக செல்வந்தர் பட்டியலில் 600ஆவது இடத்தில் இருந்த அதானி எவ்வாறு இன்று அப்பட்டியலில் 24ஆவது இடத்தினைப் பிடித்துள்ளார் என்ற கேள்வியினை எழுப்பினார். இந்த உதாரணங்கள் செல்வத்தினையும் வருமானத்தினையும் ஒரு சிலர் மாத்திரம் எவ்வாறு கட்டுப்படுத்துகின்றார்கள் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. ஆகவே இப்போராட்டங்கள் உணர்த்தும் முக்கியமான செய்தி யாதெனில், பொருளாதார நீதி இல்லாமல் ஜனநாயகத்தினைப் பற்றிச் சிந்திக்க முடியாது என்பதாகும்.
உலகில் ஜனநாயகத்தின் நிலை தொடர்பாக 2026ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நான்கு முக்கிய அறிக்கைகளையும் (Freedom House, Varieties of Democracy, International Institute for Democracy and Electoral Assistance – IDEA, Economic Intelligence Unit) நோக்கும் போது, அவை உலகில் ஜனநாயகத்துக்கு எதிராக தீவிர தாக்குதல் இடம்பெற்று வருவதனையே வெளிப்படுத்துகின்றன. இதனை அமெரிக்கா, இந்தியா, இத்தாலி, பிரான்ஸ், பிரித்தானியா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் அவதானிக்க முடிகிறது. பல நாடுகள் சர்வாதிகார ஆட்சியினை நோக்கி வேகமாக நகர்ந்துள்ளமையினை இவ்வறிக்கைகள் காட்டுகின்றன. அதேவேளை, பிரேசில், போலந்து, ஹங்கேரி போன்ற பெரிய நாடுகள் சர்வாதிகாரப் பிடியில் இருந்து ஜனநாயக ஆட்சியினை நோக்கி வேகமாக நகர்வதனையும் இவ்வறிக்கைகள் ஊடாக அவதானிக்க முடிகின்றது. லண்டனை மையமாகக் கொண்டு இயங்கும் Economic Intelligence Unit, 2026ஆம் ஆண்டு ஜனநாயகம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கை, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 167 நாடுகளில், வெறும் 26 நாடுகளையே முழுமையான ஜனநாயக (Full Democracy) நாடுகளாக அடையாளம் கண்டுள்ளது. அந்நாடுகளில் 7.3 விகிதமான மக்களே வாழுகின்றார்கள். மேலும், குறைபாடுள்ள ஜனநாயக ஆட்சி (Flawed Democracy) நிலவும் நாடுகள் என 48 நாடுகளையும் (37.8% மக்கள் வாழுகின்றார்கள்), ஜனநாயக மற்றும் சர்வாதிகாரப் பண்புகள் ஆகிய இரண்டினையும் கொண்ட (Hybrid Regimes) நாடுகளாக 32 நாடுகளையும் அது அடையாளம் கண்டுள்ளது. இவ்வறிக்கை தற்போது உலகில் 61 நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதாகவும் அத்தகைய நாடுகளில் 40.3 விகிதமான மக்கள் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடுகின்றது. ஆகவே, இவ்வறிக்கை சர்வாதிகார ஆட்சியின் அதிகரித்த போக்கினையும் அதிகளவிலான மக்கள் சர்வாதிகார ஆட்சியின் பிடியில் வாழ்வதனையும் எடுத்துக்காட்டுகின்றது. இது ஜனநாயகத்தின் மீதான அச்சுறுத்தலை விளங்கிக் கொள்வதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
ஐரோப்பா, அமெரிக்கா, இலத்தீன் அமெரிக்காவில் உள்ள தீவிர வலதுசாரி அரசாங்கங்களின் தவறான கொள்கைகள் காரணமாக இன்று அப்பிராந்தியங்களில் அரசியல் திரிசங்கு நிலையொன்று உருவாகியுள்ளது. மேலும், தொடர்ச்சியான போர்கள், காலநிலைப் பேரழிவு, சீரழிந்து வரும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றால் மக்களின் எதிர்காலம் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், இளைஞர்கள் தமது அரசியல் அதிருப்தி, எதிர்ப்பினை வெளிக்காட்டுவதற்கு புதிய மொழி, அணுகுமுறை மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி வருவதுடன், அதில் பெயரளவிலான வெற்றியினையும் கண்டுள்ளனர். இப்போராட்டங்களின் பிறிதொரு முக்கிய பண்பு யாதெனில் இவை பெரும்பாலும் வன்முறையற்றதாக, தலைவர் அல்லாத, பன்முகப்படுத்தப்பட்ட போராட்டங்களாகக் காணப்படுகின்றன. இவை டிஜிட்டல் ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுவதுடன், இலட்சக்கணக்கான இளைஞர் யுவதிகளை அணிதிரட்ட அவை பெரும் பங்களிப்பினை செய்து வருகின்றன. வேறுவகையில் கூறுவதாயின், இவற்றின் வெற்றியில் முக்கிய பங்கினை வகிப்பது சமூக ஊடகங்கள் ஆகும். மக்களின் தன்னிச்சையான போராட்டங்கள் கூட்டுச் செயற்பாட்டின் மூலம் வெற்றி தரும் என்பதற்கு அண்மைக்காலப் போராட்டங்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இது குறித்த விரிவான பார்வையினை, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக அச்சகத்தினால் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “சிவில் சமூகச் செயல்பாடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: ஜனநாயகத்திற்கான புதிய நம்பிக்கையா அல்லது பொய்யான விடியலா?” (Civic Activism Unleashed: New Hope or False Dawn for Democracy?) என்ற நூலில் ரிச்சர்ட் யங்ஸ் என்பவர் வெளிப்படுத்தியுள்ளார்.
போராட்டம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட இத்தாலிய நாட்டு இளைஞர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “இந்த ஆளும் வர்க்கம் எனது தலைமுறைக்கு ஏற்படுத்திய மிக மோசமான பாதிப்பு என்னவென்றால், எதிர்காலத்தைக் கற்பனை செய்யும் திறனையும், கனவு காணும் ஆற்றலையும் கூட எங்களிடமிருந்து பறித்துவிட்டமை என்று நான் நினைக்கிறேன்.” இக்கூற்று ஆளும் வர்க்கம் இளைஞர்களின் எதிர்காலத்தினையும் கனவுகளையும் எந்தளவுக்குச் சீரழித்துள்ளது என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் ஆகிய நாடுகளில் நாம் அவதானித்தது போன்று, இளைஞர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஐரோப்பாவிலும் அரசாங்கங்கள் ஊரடங்குச் சட்டங்களை அமுல்படுத்துதல், போராட்டங்களுக்குத் தடை விதித்தல், பொலிஸாரின் கடுமையான அடக்குமுறைகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு அதிகளவில் திரும்பியுள்ளன. இளைஞர்களின் ஜனநாயக உரிமைகள், எதிர்காலம் குறித்த அபிலாசைகளைச் செவிமடுத்து நியாயமான தீர்வினை வழங்காமல், அவர்களை அடக்கி ஒடுக்க வேண்டிய அச்சுறுத்தல்களாகவே இப்போராட்டங்களை அரசாங்கங்கள் பார்க்கின்றன. நடைபெற்று வரும் இளைஞர்களின் எழுச்சிகள் பொருளாதாரக் குறைபாடுகளையும் அதிருப்திகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டவையல்ல. இளைஞர்களைத் தேவையற்றவர்களாகவும், சுமையாகவும் கருதுகின்ற அரசியலின் அறநெறியையும், அரசியல் புறக்கணிப்பினை ஏற்றுக்கொள்ளாமையினையும் இவை எடுத்துக்காட்டுகின்றன.
இளைஞர் போராட்டங்களுக்கான காரணங்கள்
இந்த எழுச்சிகளின் மூலம், தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் இளம் தலைமுறையினரிடமிருந்து அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைப் பறித்துவிட்டது என்ற செய்தி வெளிப்படுகின்றது. மேலும், பொருளாதார நிலைபேற்றுத்தன்மை என்ற போர்வையில் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகள் உண்மையில் வர்க்கப் போராட்டத்தினைத் தூண்டியுள்ளன என சிலர் வாதிடுகின்றார்கள். சில பிரஞ்சு ஊடகங்களில் கருத்து வெளியிட்ட இளைஞர்கள் “தற்போதைய அரசாங்கத்தால் எதிர்காலம் குறித்தோ அல்லது நாம் எந்த வகையான உலகத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது குறித்தோ எமக்கு ஒரு தெளிவான வழிகாட்டலை வழங்க முடியவில்லை. இதனால் நாம் முற்றிலும் திசையறியாத நிலையில் நிற்கின்றோம். எதிர்கால உலகிற்காக நாம் தயார்படுத்தப்படவில்லை, ஏனெனில், எந்த உலகத்திற்காக நாம் தயார்படுத்தப்பட்டோமோ அந்த உலகம் இப்போது இல்லாமல் போய்விட்டது” என அங்கலாய்க்கின்றனர்.
சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகக் குறைக்கப்பட்டமை, ஏழை மக்கள் – இனரீதியாக ஒதுக்கப்பட்ட சமூகத்தினரிடையே கீழ்ப்படிதலைத் திணிப்பதற்கான தீவிர கண்காணிப்பு, அவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்தல், பொலிஸ் அடக்குமுறை ஆகியவற்றை அதிகளவில் அரசாங்கங்கள் இன்று நம்புகின்றன. இத்தகைய அரசாங்கங்களின் எழுச்சியும் இளைஞர்களின் போராட்டத்தினைத் தீவிரமடையச் செய்துள்ளது. எவ்வாறாயினும், அடக்குமுறை நிறைந்த இத்தகைய சூழ்நிலையிலும் அரசியல் அறநெறி, அரசியல் விழிப்புணர்வு என்பன மிக வேகமாக இளைஞர்கள் மத்தியில் எழுச்சிபெற்று வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. பொருளாதார நீதி, மனித கௌரவம், தனியார் இலாபத்திற்காக மக்கள் பலியிடப்படுதல், ஜனநாயக வீழ்ச்சி போன்றவற்றினை ஏற்றுக்கொள்ள மறுக்கும் கூட்டு எதிர்ப்புணர்வினையே தற்போதைய போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. வன்முறைப் பாதையினைக் கையில் எடுக்காமல் இளைஞர்கள் அமைதிவழியில் போராட்டம் செய்வது அவர்களின் அரசியல் அறநெறியையும் விழுமியத்தினையும் காட்டுகின்றது.
இன்று இளைஞர்கள் ஜனநாயக உலகத்தை உருவாக்குவதற்கான உந்துசக்தியாக மாறி வருகின்றனர். மாற்று வழிகளைத் தேடும் அவர்கள், கலை சார்ந்த எதிர்ப்புகள், இணையவழிப் பிரசாரங்கள், கதைசொல்லல் போன்றவற்றின் மூலம் பிரஜைகளின் பங்கேற்பிற்கான புதிய வடிவங்களை உருவாக்கி, அரசியல் பங்கேற்பின் விதிமுறைகளையே மாற்றி எழுதி வருகின்றனர். இதனை ரிச்சர்ட் யங்ஸ் போன்றவர்கள் “புதிய சிவில் சமூக செயற்பாட்டுவாதம்” (New Form of Civic Activism) என அழைக்கின்றார்கள். அண்மைக்காலப் போராட்டங்கள், வீதிகளில் அவர்கள் காட்டும் துணிச்சலான பங்கேற்பின் மூலம், ஜனநாயகம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு வழிமுறையாகக் காணப்படுகின்றன.
பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் இளைஞர்கள் பொருளாதார நீதியினைக் கோரி தொழிலாளர்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். இது அண்மைய போராட்டங்களின் முக்கியப் பண்பாகும். ஜெனிவா நகரில், ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அங்குள்ள துறைமுகங்கள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து துறைமுகத் தொழிலாளர்களும் மாணவர்களும் போராடியுள்ளனர். போராட்டக்காரர்கள் தமது நாடு போருக்கு உடந்தையாக இருப்பதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், பாலஸ்தீன மக்களுக்கு நீதிகோரியும் அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ள செர்பியாவில், அரசாங்க ஒப்பந்தங்கள், அரச செலவீனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் மீதான அதிகரித்த அரசியல் தலையீடு ஆகியவை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் முற்றிலும் முதலாளித்துவ எதிர்ப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டவை அல்ல என்பதனையும் நாம் மனங்கொள்ள வேண்டும். இருப்பினும், போராட்ட இயக்கங்கள் நாட்டின் பொதுவளங்களை யார் கட்டுப்படுத்துகிறார்கள், அரசாங்கங்கள் யாருடைய நலன்களுக்காகச் செயற்படுகின்றன, பொருளாதார – அரசியல் அதிகாரம் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பன தொடர்பான கேள்விகளைத் தொடர்ச்சியாக எழுப்புகின்றன.
முதலாளித்துவம் இளைஞர்களை எதிர்காலத்தின் அடையாளமாகப் பேச்சளவில் கொண்டாடுகிறது. ஆனால், அவர்களுக்கு எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்குத் தேவையான வளங்களை மறுக்கிறது என்ற குற்றச்சாட்டினை இளைஞர்கள் முன்வைக்கின்றனர். மாணவர்கள் முதலாளித்துவத்தை இன்னும் மனிதாபிமானமுள்ளதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தாண்டிச் சென்றுள்ளனர் என்பதே இந்த இளைஞர் எழுச்சிகள் குறித்து அரசாங்கங்கள் அஞ்சுவதற்கான காரணம். ஊழல், நவதாராளவாதச் சிக்கனக் கொள்கைகள், சர்வாதிகாரப் போக்கு, இராணுவவாதம், இனவாதம், செல்வமும் அரசியல் அதிகாரமும் அரசியல் உயர்குழாம் கைகளில் குவிக்கப்படுதல் ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்டுள்ள கொள்ளைக்கும்பல் முதலாளித்துவத்தை, ஐரோப்பாவிலும் ஏனைய நாடுகளிலும் நடைபெறும் போராட்டங்களில் இளைஞர்கள் இன்று சவாலுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களின் மையத்தில் இருப்பவை, சமூகத்தை ஆளப்போகும் ஒழுக்க மற்றும் அரசியல் விழுமியங்கள் எவை, அவை எவ்வாறு எதிர்காலத் தலைமுறைகளின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகின்றன என்பனவாகும்.
போராட்டங்கள் வெளிப்படுத்தும் படிப்பினைகள்
இன்றைய உலகில் இரண்டு முற்றிலும் எதிர்மாறான ஒழுக்க அல்லது அறநெறிக் கண்ணோட்டங்களை அடையாளம் காண முடிகின்றது. ஒன்று ஒற்றுமை, பொருளாதார நீதி, ஜனநாயகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மற்றொன்று பேராசை, இனவெறி, திட்டமிட்ட வன்முறை, போர், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இங்கு பணயம் வைக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் எதிர்காலமாகும்: எதிர்காலத் தலைமுறையினர் மனித கௌரவத்தால் வழிநடத்தப்படும் உலகைப் பெறப்போகிறார்களா அல்லது அதிகாரம் படைத்தவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் உலகை மீட்டெடுக்கப்போகிறார்களா? செல்வமும் அதிகாரமும் கொண்டவர்களைப் பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்கும் ஓர் அரசியல் – பொருளாதார அமைப்பின் ஒழுக்கச் சிதைவே இன்றைய போராட்டங்களுக்கு அடிப்படையாகும் என்றால் அது மிகையாகாது. கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் நிறைந்த இந்த உலகில், செல்வம் என்பது அதிகாரத்தில் உள்ளோர் மற்றும் வியாபாரிகள் பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிப்பதற்கான கேடயமாக மாறியுள்ளது. அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மௌனத்திற்குள் தள்ளப்படுகின்றார்கள். கொடூரத்தையும், வன்மத்தையும் கொண்ட இந்தக் கலாசாரம் தேர்தல் அரசியலிலும் ஊடுருவியுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட இந்தக் கலாசாரத்திற்கு எதிராக, இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். தங்களது கோபத்தை, தங்களது எதிர்காலத்தைப் பறித்த பொருளாதார – அரசியல் சக்திகளுக்கு எதிரான கூட்டு அரசியல் போராட்டமாக அவர்கள் மாற்றி வருகின்றனர். தனிநபர்களே தங்களது துன்பங்களுக்குத் தனிப்பட்ட முறையில் பொறுப்பானவர்கள் என்ற நவதாராளவாதத்தின் பொய்யான கருத்தை இளைஞர்கள் நிராகரிக்கின்றனர். இன்று இளைஞர்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பொதுச் சமூக அநீதிகளுடன் இணைத்துப் பார்க்கின்றனர். தொழிலாளர்கள், ஆசிரியர்கள் போன்ற பல தரப்பினர் தொழிற்சங்கங்களுடன் கூட்டணிகளை உருவாக்குகின்றனர். தங்களது கோபத்தை ஒரு கூட்டு அரசியல் சக்தியாக மாற்றுகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் நமக்கு ஒரு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகின்றன: பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வெகுசன மற்றும் சமூக ஊடகங்கள் இதன் வலிமையான கற்பித்தல் சக்திகளாகச் செயல்படுகின்றன; அவை அறியாமை, கீழ்ப்படிதல், அரசியல் அலட்சியம் ஆகியவற்றை உருவாக்கலாம்; அல்லது சர்வாதிகார அதிகாரத்தை எதிர்ப்பதற்குத் தேவையான விமர்சனச் சிந்தனை மற்றும் கூட்டு அரசியல் ஆற்றல் ஆகியவற்றை வளர்க்கலாம்.
பிரான்சில் நடைபெறும் போராட்டங்களுக்குப் பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப், “நாட்டை வெறுக்கும் மக்கள் நாட்டிற்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். மோசமடைந்து வரும் கல்வி நிறுவனங்கள், சிக்கனக் கொள்கைகள், சமத்துவமின்மை, தங்களது எதிர்காலம் அழிக்கப்படுதல் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் முன்வைக்கும் நியாயமான குறைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பிரான்சில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு ஐரோப்பாவிற்குள் குடியேறுபவர்களே காரணம் என்று ட்ரம்ப் சித்தரித்துள்ளார். மேற்கத்திய நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் புலம்பெயர்ந்தோர் பிரான்சை ஆக்கிரமித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இக்கூற்றினை பாசிச அரசியலின் நச்சுத்தன்மை வாய்ந்த தர்க்கம் எனக் குறிப்பிடலாம்.
எதிர்ப்புப் போராட்டங்களை உருவாக்கும் சமூகச் சூழ்நிலைகளை மறைத்துவிடுவது, ஒடுக்கப்பட்ட மக்களை எதிரிகளாகச் சித்தரிப்பது, நீதிக்கான கோரிக்கைகளை இனவெறியால் மாற்றீடு செய்வது, நியாயமான போராட்டங்களைப் பாரியளவிலான பொலிஸ் ஒடுக்குமுறைக்கான சாக்குப்போக்காக மாற்றுவது என்பன இதன் வெளிப்பாடுகள் ஆகும். ட்ரம்பின் ஆட்சியின் கீழ், பொதுக்கல்வி மற்றும் உயர்கல்வி மீதான தாக்குதல், எதிர்ப்புக் குரல்களைக் குற்றமாக்குதல், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சிதைத்தல், செல்வத்தையும் அதிகாரத்தையும் ஆளும் வர்க்கத்தின் கைகளில் குவித்தல் ஆகியவை அதிகரித்துவரும் பாசிச அரசியல் ஒழுங்கின் அடிப்படைப் பண்புகளாக மாறியுள்ளன. பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் விமர்சன ரீதியான ஆய்வு மற்றும் ஜனநாயகப் பண்புகளை வளர்க்கும் நிறுவனங்களாக இருப்பதற்குப் பதிலாக, மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும் திராணியைச் சிதைக்கும், அதிகாரத்தினைக் குவிமையப்படுத்துவதனை நியாயப்படுத்தும், அரசியல் அச்சுறுத்தல்கள் மற்றும் அடிபணிதல் என்பவற்றினை பரப்பும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் பொருளாதாரப் பாதுகாப்பினை மாத்திரம் இழக்கவில்லை, மாறாக, முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறையினைக் கடந்து ஒரு எதிர்காலத்தைக் கற்பனை செய்வதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பு, விமர்சன சிந்தனைத் திறன்கள், கூட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றையும் இழந்து வருகின்றனர். இதனை உலகளாவிய போக்கு எனக் குறிப்பிடலாம். இளைஞர்கள் கீழ்ப்படிதலுக்குப் பயிற்றுவிக்கப்படுவதையும், வரலாற்று நினைவாற்றலிலிருந்து அகற்றப்படுவதையும், அநீதியை சமூக வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக சகித்துக்கொள்ளக் கற்பிக்கப்படுவதையும் இன்று பரவலாக அவதானிக்க முடிகிறது. இது பாடசாலை, பல்கலைக்கழகக் கல்வி முறையின் அடிப்படைப் பண்பாக மாறியுள்ளது. சர்வாதிகார ஆட்சியினைச் சவாலுக்கு உட்படுத்த, ஜனநாயக எதிர்ப்புச் சக்தியாகக் கல்வியை மீட்டெடுக்கும் ஆற்றலுள்ள இளைஞர்களே இன்று தேவைப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் இன்னொரு முக்கியமான படிப்பினையையும் கற்றுத்தருகின்றன: பிரஜைகள் மத்தியில் நாகரிகமான நடத்தையை வலியுறுத்துவது, அடையாளபூர்வமான (மேலோட்டமான) நடவடிக்கைகளை அல்லது மாற்றங்களை மேற்கொள்வது அல்லது நிலவும் அதிகாரக் கட்டமைப்புகளை அப்படியே வைத்துக்கொண்டு மக்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சலுகைகளை வழங்குவது ஆகியவற்றின் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஆகவே பொருளாதார நீதி, மனித கௌரவம், ஜனநாயக ஆட்சிக்காக தொடர்ச்சியான போராட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூகங்களை ஒன்றிணைக்கும் ஆற்றலுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் இயக்கங்கள் அவசியமாகின்றன. அரசியல் ரீதியாகத் தாங்கள் ஒதுக்கப்படுவதற்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் இளைஞர்கள் பாராட்டப்பட்டும் அதேவேளையில் இழிவாகவும் பார்க்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் இலட்சியவாதம் கொண்டாடப்படுகிறது. ஆனால் அடிப்படை மாற்றங்களுக்கான அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன, நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன அல்லது அரசின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இதனை போராட்டத்திற்குப் பின்னரான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளில் அவதானிக்க முடியும். இளைஞர் போராட்டங்களுக்குத் தவறான கற்பிதங்களை உருவாக்குவதிலும், அதற்கெதிரான சக்திகளை ஓரணியில் அணிதிரட்டுவதிலும் அரசியல் வர்க்கமும் அவர்களுடன் கைககோர்த்துள்ள முதலாளிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக வெகுசன, டிஜிட்டல் ஊடகங்களை விலைகொடுத்து வாங்கி, அதன் ஊடாக போராட்டத் திசையினை மழுங்கடிக்க, வன்முறையினைத் தூண்ட திட்டமிட்ட வகையில் செயற்படுகின்றனர்.

பிரான்சில் இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறை பெரியளவிலான கவனத்தினை ஈர்த்துள்ளது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மிக மோசமாகக் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட குரல்களை மௌனமாக்க முயலும் சர்வாதிகார நடைமுறைகளை பிரான்ஸ் அரசாங்கம் பின்பற்றுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரான்ஸ் பிரிவு கண்டனம் தெரிவித்துள்ளது. கல்வி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. ஆனால், நீதியைக் கோரி வீதிகளில் இறங்கியவர்களைத் தண்டிப்பதற்கான அரச இயந்திரம் தளர்வின்றி மிக வேகமாகச் செயல்படுகிறது என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்புப் போராட்டங்களை முடக்கும் அரசியலுக்கு செர்பியா ஒரு வலுவான பதிலடியை வழங்கியுள்ளது. மேலோட்டமான சீர்திருத்தங்கள், ஆளுகை மறுசீரமைப்புகள் அல்லது வெற்று வாக்குறுதிகள் மூலம் தங்களை அமைதிப்படுத்த முடியாது என்று மாணவர்கள் தமது உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளனர். ஊழல், சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான தங்களது கோபத்தை நாடு தழுவிய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளனர். இறுதியில், கடந்த அக்டோபர் 25ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில், நீண்டகால வலதுசாரித் தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கின் ஆளும் கட்சியை மாணவர்கள் தோற்கடித்தனர். அவர்கள் தங்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றிய அரசியல் முறைமையில் இன்று ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இது இளைஞர் போராட்டத்தின் வெற்றியினை தேர்தல் முடிவுகள் மூலம் மேலும் உறுதி செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட மாணவர் இயக்கம் 52.7 விகிதமான வாக்குகளையும் ஆளும் தீவிர வலதுசாரிக் கட்சி 39.2 விகிதமான வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளன. மாணவர் இயக்கம் ஆளுங்கட்சியின் ஆதரவுத்தளத்தினை சவாலுக்கு உட்படுத்தி, கூட்டு எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம் சர்வாதிகார ஆட்சியின் பிடியை உடைத்தெறிந்துள்ளது.
நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் தாராளவாத ஜனநாயகமும் அவசியமான ஜனநாயக மறுசீரமைப்பும்
போராட்டங்கள் ஊடாக இளைஞர்கள் தங்களது எதிர்கால அழிவுக்கும், சிக்கனக் கொள்கைகளின் கொடூரத்திற்கும், தங்களது கௌரவம் மற்றும் உரிமைகள் மீதான திட்டமிட்ட தாக்குதல்களுக்கும் எதிராகப் போராடுவதற்கு ஜனநாயக வழிமுறைகளைக் கையில் எடுத்துள்ளனர். தற்போதைய பொருளாதார அநீதிகளுக்கும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கும் பொறுப்பானவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டால், ஜனநாயகத்திற்கு எதிர்காலம் இல்லை என்பதனை அவர்கள் நம்புகிறார்கள். இது ஜனநாயகம், அதுசார்ந்த தத்துவங்கள் மீது இன்றைய இளைஞர்கள் கொண்டிருக்கும் பற்றினைக் காட்டுகின்றது. தாராள ஜனநாயகம் இன்று பாரியதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம். தாராள ஜனநாயகத்தினை அதிகார வர்க்கத்தினரும் பெரும் செல்வந்தர்களும் தமது தனிப்பட்ட நலன்களுக்காகத் துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். ஆகவே, தாராள ஜனநாயகம் மீதான நம்பிக்கை மிக வேகமாக வீழ்ச்சி கண்ட ஒரு காலகட்டத்திலேயே இத்தகைய இளைஞர் போராட்டங்கள் எழுச்சிபெற்று, அவை தாராள ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை மீளக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றன. இது முழுமையான மீட்பு அல்ல, ஆயினும் இதனை நல்லதொரு ஆரம்பமாகக் குறிப்பிட முடியும்.
உலகின் முதல் தரப் பல்கலைக்கழகமாகத் திகழும் MIT பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கடந்த ஆண்டு (2025) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான டெரன் அசெமோக்லு (Daron Acemoglu), தாராளவாத ஜனநாயகத்தை மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று என அண்மையில் வெளியிட்ட “What happened to Liberal Democracy? Remaking a Politics of Shared Prosperity” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்நூலில் இவர் சில முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளார். பல்வேறு நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்ட வேறுபட்ட சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்வதற்கான மிக முக்கியமான கட்டமைப்பாகத் தாராள ஜனநாயகத்தை அவர் கருதுகிறார். மக்கள் தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அமைதியான முறையில் அரசியலில் பங்கேற்கவும், பொருளாதாரச் செழிப்பை உருவாக்கவும் இது வழிவகுக்கிறது என்கிறார். ஆயினும் தாராள ஜனநாயகம் தற்போது ஆழமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் எச்சரிக்கிறார். அனைவருக்கும் பகிரப்பட்ட மற்றும் சமமான பொருளாதாரச் செழிப்பை அல்லது வளர்ச்சியினை வழங்குவதாக அது அளித்த அடிப்படை வாக்குறுதியிலிருந்து விலகிச் சென்றிருப்பதே இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணமாகும் என வாதிடுகின்றார். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல், உயர்குழாத்தினருக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி போன்ற காரணிகள், ஜனநாயக ஆட்சி முறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பெரிதும் பாதித்துள்ளன என்பது இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையிலேயே, தொழிலாளர் வர்க்கத்தை மையப்படுத்திய தாராளவாதம் (Working-Class Liberalism) என்ற எண்ணக்கருவினை இந்நூலில் முன்வைத்துள்ளார். அதாவது, தாராளவாதத்தை முற்றிலுமாகக் கைவிடுவதற்குப் பதிலாக, அதனை மறுசீரமைத்து, புதிய வடிவில் கட்டியெழுப்ப வேண்டும் என்று வாதிடுகிறார். வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சமூக ஒற்றுமையினையும் கூட்டுப் பொறுப்புணர்வையும் வளர்த்தல், பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களின் எதிர்காலப் பயன்பாடு தொடர்பான தீர்மானம் எடுத்தலில் குடிமக்களுக்கும் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்றவற்றினை உறுதி செய்ய தொழிலாளர் வர்க்கத்தினை மையப்படுத்திய தாராளவாதம் உதவும் என்கின்றார். அசெமோக்லுவின் வாதம் இதுவே: தாராளவாத ஜனநாயகத்தை முற்றாக நிராகரிப்பது தீர்வல்ல; மாறாக, அது அனைவருக்கும் பொருளாதார நீதி, பாதுகாப்பு, சமூக நீதி, சமத்துவமான வாய்ப்புகள், அரசியல் பங்கேற்பு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
போராட்டங்களின் வெற்றியும் தொடர்ச்சியும்
பிரான்சிலும் மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் சில சாதகமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையில் மாற்றம் செய்வதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது. கூட்டு அரசியல் போராட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களைப் பின்வாங்கச் செய்ய முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவில், கடந்த ஜூன் மாதம் எழுச்சிபெற்ற “கரப்பான் பூச்சி” (Cockroach Movement) இயக்கம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தீவிர இந்து தேசியவாத அரசாங்கத்தினை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் பரவலான போராட்டங்களை நடாத்தியது. இப்போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்தவை: கல்வித்துறையில் நிலவும் ஊழல் மோசடிகள், பரீட்சை வினாத்தாள் கசிவு, வேலையின்மை, அதிகரித்த பொருளாதாரச் சுமை, சர்வாதிகாரப் போக்கிலான ஆட்சி போன்றனவாகும். இதனால், கல்வி அமைச்சரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட போராட்டத்தில் இளைஞர்கள் வெற்றி கண்டனர். கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டத்தினை நடாத்தினார்கள். இதனால், இப்போராட்டம் மோடி அரசாங்கத்தின் இயலாமையினை அம்பலப்படுத்தியது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இன்று இப்போராட்டம் புதிய வடிவத்தினைப் பெற்றுள்ளது. அண்மையில் இந்திய தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பில் (Special Intensive Revision – SIR) பின்பற்றப்பட்ட தவறான நடைமுறைகள் மற்றும் அரசியல் நலன்சார்ந்த தலையீடுகள் காரணமாக, சுமார் மூன்று கோடி இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பதிவுப்பட்டியலில் இருந்து திட்டமிட்ட வகையில் வேறுபட்ட காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை எதிர்க்கட்சிகள், புத்திஜீவிகள், சிவில் சமூக அமைப்பினர் உறுதி செய்துள்ளதுடன், அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இந்திய தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் இருந்துள்ளார். ஆகவே அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டம் இன்று தீவிரம் பெற்றுள்ளது. இலட்சக்கணக்கான சிறுபான்மை இன, மதத்தவர்களின் பெயர்கள் திட்டமிட்ட வகையில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் மோடி அரசாங்கத்தின் கொள்கைகளை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிரபல தென்னிந்திய சினிமா நடிகர் பிரகாஷ்ராஜின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில் மோடி அரசாங்கத்தினை எதிர்க்கும் ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடங்குவர். வாக்காளர் பட்டியல் மறுசீரமைப்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளை இளைஞர் போராட்டத்தின் ஊடாக தீவிரமாக விமர்சித்து வரும் நபர்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் கலாநிதி பரக்கலா பிரபாகரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் ஒரு பொருளாதார நிபுணரும் கூட.
இந்த இளைஞர் எழுச்சிகள், நவதாராளவாத முதலாளித்துவமும் அதன் சர்வாதிகார ஆதரவாளர்களும் இனிமேலும் பின்பற்ற முடியாத ஓர் உண்மையை வெளிப்படுத்துகின்றன: அதாவது திட்டமிட்ட சமத்துவமின்மை, இன அல்லது மத அடிப்படையிலான ஆதிக்கம், மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்தல், மனித உயிர்களைப் பயனற்றவையாகக் கருதுதல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை, மேலோட்டமான சீர்திருத்தங்களாலோ அல்லது அமைதியான நடத்தைக்கான வேண்டுகோள்களாலோ அல்லது பொலிஸ் அடக்குமுறைகளாலோ மீட்டெடுக்க முடியாது என்பதாகும். வேறுவகையில் கூறின், உலகில் இன்று இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் வெறுமனே மனிதாபிமானமுள்ள அல்லது பொருளாதார நீதியினை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவத்திற்கான போராட்டம் மட்டுமல்ல; மாறாக, மனித வாழ்க்கையை ஒரு விற்பனைப் பண்டமாகவும், பொதுச் சொத்துகளை தனியார் செல்வம் ஈட்டுவதற்கான மூலங்களாகவும், ஜனநாயகத்தைப் பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரம் இல்லாத வெற்றுச் சடங்காகவும் மாற்றியமைத்துள்ள ஓர் அரசியல் முறைமைக்கு எதிரான போராட்டம் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். பிரெடெரிக் டக்ளஸ் என்பவர் 1857ஆம் ஆண்டு மேற்கிந்திய விடுதலை தொடர்பாக ஆற்றிய உரையில் “போராட்டம் இல்லையென்றால் முன்னேற்றமும் இல்லை” என்று குறிப்பிட்டார். மேலும் “கோரிக்கைகள் முன்வைக்கப்படாவிட்டால் அதிகாரத்தில் இருப்பவர்கள் எதையும் செய்யமாட்டார்கள்” எனவும் “அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை, இனியும் செய்யப்போவதில்லை” எனவும் குறிப்பிட்டார்.
இன்றைய இளைஞர்கள் பாதுகாப்புமயப்படுத்தப்பட்ட, சர்வாதிகார, சரணடைதலை அடிப்படையாகக் கொண்ட அரசியலை நிராகரித்து வருகின்றனர். தீவிரமான ஜனநாயக மறுசீரமைப்புகள் போராடிப் பெறப்பட வேண்டியது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். பேராசை, வன்முறை, ஆதிக்கம் ஆகியவற்றைச் சமூகத்தினை ஆளும் கொள்கைகளாக மாற்றிய அரசியல்வாதிகளிடமிருந்து எதிர்காலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதை போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். செர்பிய மாணவர் எழுச்சி குறித்து வுக் பக்கனோவிக், “ஜனநாயகத்திற்கும் சுதந்திரத்திற்குமான வெற்றி” எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், உலகெங்கிலும் சர்வாதிகார ஆட்சியினை எதிர்கொள்ளும் இளைஞர்களிடம் தற்போது வெளிப்படும் எதிர்ப்புணர்வின் சாராம்சத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:
“மூலதனத்தின் அதிகாரம், சர்வாதிகாரிகளின் தன்னிச்சையான போக்கு, அரசியல்வாதிகளின் ஊழல் நிறைந்த இழிவான சுயநலப் போக்கு ஆகியவற்றின் முன்னால் ஜனநாயகம் பின்வாங்கிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், கீழ்ப்படிதல் என்பது மனிதகுலத்தின் தலைவிதி அல்ல என்பதையும், எந்தவொரு அரசாங்கமும் நிரந்தரமானதல்ல என்பதையும் ஒரு தலைமுறை இப்போராட்டத்தின் ஊடாக நிரூபித்துக் காட்டியுள்ளது.”
இந்த இளைஞர்களின் கிளர்ச்சி, ஆளும் உயரடுக்கினரும் சர்வாதிகார ஆட்சியாளர்களும் நிராகரிக்கவோ மௌனமாக்கவோ முடியாத ஒரு செய்தியைத் தாங்கி நிற்கிறது. அதாவது முதலாளித்துவ ஒடுக்குமுறையின் இயந்திரத்தைத் தொடர்ந்தும் சகித்துக்கொள்ளக்கூடியதாக மாற்றுவது நமது பணியல்ல; மாறாக, அந்த இயந்திரத்தைத் தகர்த்தெறிந்து, நீதி, சமத்துவம், மனித கௌரவம் ஆகியவை வெற்று வாக்குறுதிகளாக இல்லாமல், ஜனநாயகம் மற்றும் அதன் தத்துவங்கள் வாழ்க்கையின் அடித்தளங்களாக விளங்கும் ஓர் உலகத்திற்காகப் போராடுவதே நமது பணியாகும். இப்போராட்டங்கள் முழுமையான வெற்றியினைத் தர வேண்டுமாக இருந்தால் அவை சர்வதேச அளவிலான ஓர் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். அதன் மூலம் அவற்றின் தாக்கத்தினைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும், ஒற்றுமையின் புதிய வடிவங்களை உருவாக்கவும், கொள்ளையடிக்கும் முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டி, பொருளாதார நீதியினை நிலைநாட்டவும், அதன் ஊடாக ஜனநாயகம் மீண்டும் சுதந்திரமாகச் சுவாசிக்கக்கூடிய ஓர் உலகத்தை உருவாக்குவதற்குத் தேவையான கூட்டு அதிகாரத்தை வளர்த்தெடுக்கவும் முடியும்.
போராட்டங்களின் இலக்கினை அடைதல்
மிக முக்கியமாக, அரசியல் முறைமையில் மற்றும் ஆளுகைக் கட்டமைப்பில் அடிப்படையான மாற்றங்களை வேண்டி இடம்பெறும் போராட்டங்களை மேலோட்டமான சீர்திருத்தங்கள், அரசியல்வாதிகளின் இராஜினாமா, தேர்தல் ஊடான ஆட்சி மாற்றம் என்பவற்றுடன் நிறுத்திவிடக்கூடாது. போராட்டத்திற்குப் பின்னரான ஜனநாயக நிலைமாற்றக் காலகட்டங்களில் தொடர்ச்சியான வன்முறையற்ற மக்கள் அணிதிரட்டல் வெற்றிகரமான ஜனநாயகமயமாக்கலுக்கு அவசியமானது என்பதையே மக்கள் போராட்டங்கள் தொடர்பான பல ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. சர்வாதிகார ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் ஜனநாயக இயக்கங்கள் மிக விரைவாகத் தமது போராட்டங்களை நிறுத்திவிடக்கூடாது. அவ்வாறு நிறுத்தினால் அது அதிகார வர்க்கத்தினர் (பதவியில் இருக்கும் மற்றும் தோல்வியுற்ற) மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல்களைச் சீர்குலைக்கவும், இளைஞர் செயற்பாட்டாளர்களை ஓரங்கட்டவும் வாய்ப்பளிக்கும். ஜென் சி செயற்பாட்டாளர்கள் இவ்விடயத்தில் செர்பிய போராட்ட இயக்கத்திடமிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். செர்பிய இளைஞர்கள் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். தங்களது கோரிக்கைகள் ஆட்சியாளர்களால் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை, தங்களை மௌனிக்கச் செய்ய முடியாது என்பதை உறுதியாக வெளிப்படுத்தும் வகையில், கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தலிலும் அதிகாரத்தினைக் கைப்பற்றி ஜனநாயகப் போராட்டத்திற்கு புதிய உத்வேகத்தினை வழங்கியுள்ளனர். போராட்டங்களின் உண்மையான இலக்கினை அடையும் வரை அவை நிலைநிறுத்தப்பட வேண்டும். அதன் வீரியத்தினைப் பேண வேண்டும். அவ்வாறு அல்லாது, சில மேலோட்டமான சலுகைகள், சீர்திருத்தங்கள், ஏனைய போலி வாக்குறுதிகளுக்காக நிறுத்தப்படுமாயின், அவை ஜனநாயகத்தினையோ அல்லது பொருளாதார நீதியினையோ மீட்டெடுக்க உதவாது. மீண்டுமொரு முறை அத்தகைய போராட்டங்களுக்கு மக்களை அணிதிரட்டுவதும் அவ்வளவு இலகுவான காரியமாக இருக்காது. மீண்டும் போராட்டங்கள் எழுச்சி பெறாதவாறு அவற்றை அடக்கி ஒடுக்க அவசியமான சட்டதிட்டங்களையும் நிறுவனப் பொறிமுறைகளையும் ஆளும் வர்க்கம் மிக நேர்த்தியாகக் கட்டியெழுப்பும் என்பதனைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இலங்கை நல்லதொரு உதாரணமாகத் தென்படுகின்றது.



