பெரிய எழுத்துப் பொஸ்தகங்களை வாசித்தலும் அவற்றை நாடகங்களாக நிகழ்த்துதலும் தமிழ்ப் பண்பாட்டின் ஓர் அங்கமாக நீண்ட காலம் இடம்பெற்று வருகின்றன. எளிதாக வாசிக்கக்கூடிய வகையில் வழமையான எழுத்துரு அளவிலிருந்து பெரிதாக அச்சிடப்பட்டுள்ள அந்நூல்கள், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அதிகமாக அச்சிடப்பட்டுள்ளன. கிராம சமூகத்தில் சமய, சமூக முக்கியத்துவம் பெற்றவையாக விளங்கிவந்த பெரிய எழுத்துப் பொஸ்தகங்கள் காலமாற்றத்தால் தம் முதன்மையை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினாலும் பண்பாட்டுத் தளத்தில் இன்றும் செல்வாக்கு பெற்றவையாகவே திகழ்கின்றன.
இரு நூற்றாண்டுகள் கடந்து மூன்றாம் நூற்றாண்டின் விடியலில் கால்பதித்துள்ள மலையகத் தமிழரின் பண்பாட்டு வாழ்வில், பெரிய எழுத்துப் பொஸ்தகங்களின் பயில்வு இன்றும் வெவ்வேறு மட்டங்களில் இடம்பெற்று வருகிறது. இந்த நீடித்த இருப்பு, பெரிய எழுத்துப் பொஸ்தகங்களின் பண்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. அவ்வகையில், மலையகத் தமிழரின் வழிபாட்டு மரபில் பெரிய எழுத்துப் பொஸ்தகங்களின் பயில்வை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. கள ஆய்வுத் தகவல்களையும் ஏலவே வெளிவந்துள்ள பதிவுகளையும் முதன்மை ஆதாரமாகக் கொண்டே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனால், இங்கு விவரிக்கப்படும் பெரிய எழுத்துப் பொஸ்தகங்களைவிட வேறு புத்தகங்களும் பயில்வில் இருக்கலாம். அதேவேளை, கள ஆய்வுக்கு உட்படுத்தப்படாத தோட்டங்களில் வேறுபட்ட நடைமுறைகள் பின்பற்றப்படலாம்.

எளிமையான தொடர்களை வாசிக்கக்கூடிய அளவிலான வாசிப்புப் பயிற்சியைப் பெற்றவர்கள், இலகுவாக வாசிப்பதற்காகவே எழுத்துகளைப் பெரிதாக அச்சிடும் வழமை தோன்றியுள்ளது என்பர் (அரசு, 2014: 12). ஆனால், அந்நூல்களின் மறுபதிப்புகளில் எழுத்துகளைப் பெரிதாக அச்சிடும் முறைமை பரவலாகப் பின்பற்றப்படவில்லை. எளிமையான மெட்டுகளினாலான பாடல்களும் உரைநடையும் கலந்து ஆக்கப்பட்டுள்ள அந்நூல்கள் மலினமான தாளில் மிகக் குறைந்த விலையில் ஐதீகப் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளன. இவையும் வாசிப்பு எளிமைக்கான உத்திகளாகவே விளங்குகின்றன. நூலின் புறக்கட்டமைப்பும் எடுத்துரைப்பும் வாசிப்பு எளிமையை மையமிட்டிருந்தாலும் அவை வெறுமனே வாசிப்பு எளிமை என்ற தளத்தை மட்டும் கொண்டவையல்ல. அந்நூல்களின் உருவாக்கமும் பயில்வும் ஆழமான சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தைக் கொண்டுள்ளன.
தமிழில் அச்சுப் பண்பாடு பரந்தளவில் பரவலாக்கம் பெற்றபோதே பெரிய எழுத்து நூல்கள் அச்சாக்கம் பெற்றுள்ளன. தமிழ்ச் சூழலில் அச்சுமுறைமை போர்த்துக்கேயர் காலத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 1835ஆம் ஆண்டே சுதேசியர்கள் அச்சினைப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்றனர். சுதேசியர்கள் அச்சுரிமையைப் பெற்றாலும் சுதேசிய மேட்டுக்குடிகளின் ஏகபோக உரிமமாகவே அச்சாக்கம் நீண்ட காலமாக விளங்கி வந்துள்ளது. ஏறக்குறைய 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே அச்சு ஜனநாயகமயப்படத் தொடங்கியுள்ளது. அக்காலத்திலேயே இத்தகைய பெரிய எழுத்து நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. உதாரணமாக, நல்லதங்காள் கதை (1869), தேசிங்குராஜன் கதை (1869), கோவிலன் கதை (1873), மின்னொளியாள் குறம் (1874), சித்திரபுத்திரநாயனார் கதை (1876), திரௌபதி குறம் (1880) போன்ற பெரிய எழுத்து நூல்கள் தொடக்கக் காலத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 20ஆம் நூற்றாண்டின் முதற்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான பெரிய எழுத்து நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.
அச்சுத் தொழில்நுட்பத்தின் பரவலாக்கம் நூல் உற்பத்தியிலும் நுகர்விலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் அதிக பிரதிகள், குறைந்த விலை என்பவற்றால் நூல்களின் பயன்பாட்டு எல்லை விரிவாக்கம் பெற்றது; வாசிப்பு, வாசகர் வட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. அதுவரை காலமும் சமூகத்தின் மேற்தளத்தில் வாழ்ந்த ஒரு குறுகிய வட்டத்தில் மட்டும் தேங்கிக் கிடந்த அறிவுச் சொத்துகள் சாதாரண மக்களை நோக்கி நகரத்தொடங்கின. அந்நகர்வு மொழி இலக்கியங்களின் பண்பிலும் வாசிப்பு முறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தியது. அதன்போது மேட்டுக்குடியினரின் வாசிப்புத் தேவையை நிறைவு செய்யும் வகையில் செவ்வியல் நூல்களைப் பதிப்பித்தல், புதிய நூல்களை உருவாக்குதல், பத்திரிகை-இதழ்களை வெளியிடுதல் என்பவை இடம்பெற்றபோது அதற்குச் சமாந்தரமாகச் சாதாரண மக்களின் வாசிப்புத் தேவையை நிறைவு செய்யும் வகையிலான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பிரதானமானதாகப் பெரிய எழுத்துப் பொஸ்தகங்கள் விளங்கியுள்ளன.
அச்சு சுதேசியமயப்பட்டபோது மேட்டுக்குடியினர் அடித்தட்டு மக்கள் மத்தியில் நிலவிய சமய வழிபாட்டு மரபுகளையும் இலக்கிய வெளிப்பாடுகளையும் நிராகரித்ததோடு அவற்றுக்கு மாறாக தமது வழிபாட்டு மரபுகளையும் இலக்கிய வெளிப்பாடுகளையும் அச்சுவாகனம் ஏற்றி ஆவணப்படுத்த முயன்றனர். இந்நிலையிலேயே அச்சுத் தொழில்நுட்பம் சாதாரண மக்களைச் சென்றடைந்தபோது அவர்கள் மேட்டுக்குடி அச்சுப் பண்பாட்டுக்கு மாறான அச்சுப் பண்பாட்டைக் கட்டியெழுப்பியுள்ளனர். அதனாலேயே செவ்வியல் மரபுக்கு மாறாகச் சாதாரண மக்கள் மத்தியில் தேங்கிக்கிடந்த கதைமரபுகளை அச்சுவாகனம் ஏற்றி, அவற்றை மதச்சடங்குகளின் ஓர் அங்கமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழ் அச்சு வரலாற்றில் ஏற்பட்ட இத்திருப்பமே அக்கதை மரபுகள் பலவற்றுக்கு அழிவற்ற இருப்பைத் தந்தன எனலாம்.
பெரும்பாலான பெரிய எழுத்து நூல்கள் புகழேந்திப் புலவர் என்பவரால் எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மக்கள் மத்தியில் காலம்காலமாக நிலவிவந்த கதைமரபுகளை எழுத்தாக்கம் செய்யும் செயற்பாட்டை அவர் செய்திருக்கிறார். இந்நூல்கள் யாவற்றையும் புகழேந்திப் புலவரே எழுதினாரா, அவருடைய ஆக்கங்களால் ஈர்க்கப்பட்டு பின்வந்த நூல்களுக்கும் அப்பெயர் இடப்பட்டதா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. இருப்பினும், எண்ணிக்கை அடிப்படையில் அதிகமான நூல்கள் காணப்படுவதால் அவை அனைத்தையும் புகழேந்திப் புலவரே எழுதியிருக்க வாய்ப்பில்லை எனக் கொள்ளலாம். இந்நூல்களில் விரியும் கதைகள் செவ்வியல் நூல்களில் இடம்பெறாத பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. பெரிய எழுத்து நூல்களில் அதிகமானவை மகாபாரத, இராமாயணக் கதைகளைத் தழுவியவையாகவும் அவற்றில் வரும் பாத்திரங்களின் கதைகளை விவரிப்பவையாகவும் அமைந்துள்ளன.
தொன்மங்களையும் ஐதீகங்களையும் கையாண்டு படைப்பாக்கங்களை மேற்கொள்வது பண்டுதொட்டு உலகம் முழுவதும் நிலவிவருகிறது. அத்தகைய புத்தாக்க முயற்சிகள் மூலத்தொன்மத்தின் கதையைச் சுருக்குதல், மூலத்தொன்மத்தின் யாதாயினும் ஒரு பகுதியை மட்டும் விரித்துரைத்தல், குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சியை அல்லது பாத்திரத்தை முதன்மைப்படுத்தல், சமகாலத் தேவைக்கு ஏற்ப அல்லது ஆசிரியரின் தேவைக்கு ஏற்ப புதிய நிகழ்ச்சிகளையோ பாத்திரங்களையோ மூலத்தொன்மத்துடன் இணைத்தல், குறிப்பிட்ட நிகழ்ச்சியை அல்லது பாத்திரத்தை மூலத்தொன்மத்தின் நோக்கிலிருந்து விலக்கி வேறு கோணத்தில் சித்திரித்தல், மூலத்தொன்மத்தைத் தலைகீழாகக் கவிழ்த்து அதனைக் கேலிக்கும் நகைப்புக்கும் உட்படுத்தல் போன்ற பலவாறு இடம்பெற்று வருகின்றன.
தமிழ்ச் சூழலில் இராமாயண – மகாபாரதத் தொன்மங்களை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான புத்தாக்க முயற்சிகள் செவ்வியல் மரபிலும் நாட்டார் மரபிலும் இடம்பெற்றுள்ளன. அதிலும் அத்தகைய புத்தாக்க வடிவங்கள் நாட்டார் மரபிலேயே அதிகம் வழக்கில் உள்ளன. கதைகளாகவும் கூத்துகளாகவும் வில்லிசையாகவும் உடுக்கடிப் பாடலாகவும் அவை மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்றன. அக்கலைவடிவங்களில் கூறப்படும் செய்திகளுள் பல, மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ இடம்பெறாதவை என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு, ஏணி ஏற்றம், புலந்திரன் களவு மாலை, பொன்னுருவி மசக்கை போன்றவற்றில் இடம்பெறும் கர்ணன் பற்றிய செய்திகள் எல்லாம் மகாபாரதத்தில் இடம்பெறாதவையாகும். ஏணி ஏற்றத்தில் பாண்டவர்கள் வனவாசம் சென்ற பின்னர் அர்ச்சுனனின் மனைவி சுபத்திரை அல்லியிடம் அடைக்கலமடைகிறாள். துரியோதனன் சுபத்திரையை அடைய விரும்புகிறான். கர்ணன் அவனைத் தடுக்கிறான். அதனைக் கேட்காத துரியோதனன் சுபத்திரையைக் கவர்ந்துவர அல்லியிடம் செல்கிறான். அல்லி ஒரு மாய ஏணியைச் செய்து அதில் துரியோதனனை வைத்து அஸ்தினாபுரத்துக்கு அனுப்புகிறாள். யாராலும் துரியோதனனைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதியில் கர்ணன் அந்த ஏணியைக் காலால் உதைத்து அதன் பின்னேயே செல்கிறான். ஏணி மதுரைக்குச் செல்கிறது. மதுரை வந்த கர்ணனை அல்லி வரவேற்று உபசரிக்கிறாள். கர்ணன் துரியோதனனின் குற்றத்தை மன்னிக்க வேண்டும் எனக் கேட்க, அவள் மன்னித்து விடுவிக்கிறாள். இக்கதை பாரதத்தில் இல்லாததாகும். அதேபோல் பொன்னுருவி மசக்கையில் பொன்னுருவியை மயக்கிவிட்டு கர்ணன் உறவு கொள்வது பற்றி குறிப்பிடப்படுகின்றது. அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள் பற்றியே ஏராளமான பெரிய எழுத்து நூல்கள் உள்ளன. அவ்வாறே மகாபாரதத்திலோ இராமாயணத்திலோ அதிக முதன்மை பெறாத பாத்திரங்களும் அவற்றில் இடம்பெறாத பாத்திரங்களும் நாட்டார் வழக்காறுகளில் அதிக அழுத்தம் பெற்றுள்ளன. ஜராசந்தன், சிசுபாலன், புலந்திரன், அல்லி போன்ற பல பாத்திரங்கள் பற்றிய கதைமரபுகள் அவ்வகையில் குறிப்பிட்டுக் கூறத்தக்கன.
சீதை, தமயந்தி, நல்லதங்காள், அல்லி, திரௌபதி, பவளக்கொடி எனப் பல பெண்களின் துயரம் நிறைந்த வாழ்வு, அவர்களின் துக்கம், அவர்களின் ஆவேசம், சிந்தனைத் திறம், ஆளுமை, வெற்றி என்பவற்றைப் பல கதைகள் விவரிக்கின்றன. அவற்றில் இடம்பெறும் செய்திகள் சாதாரண மக்கள் மத்தியில் இப்பெண் பாத்திரங்கள் பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கின்றன.
மலையகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வாழ்வியலில் பெரிய எழுத்து நூல்கள் பிரதான இடத்தைப் பெற்றிருந்துள்ளன. இன்று வழிபாடு என்ற தளத்தில் நிலைபெற்றுள்ள இந்நூல்கள் கலை வெளிப்பாட்டுக் கருவியாகவும் கல்வி நூல்களாகவும் பொழுதுபோக்கு வாசிப்பாகவும் துயர், சஞ்சலம் நீக்கும் மருந்தாகவும் விளங்கி வந்துள்ளன.
பொழுதுபோக்கு, கலை வெளிப்பாடு எனும்போது பல்வேறு கூத்துகள் இப்பெரிய எழுத்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு அரங்கேற்றப்பட்டுள்ளன. தமிழகச் சூழலில் கிராமப்புறக் கோயில் திருவிழாவின் ஓர் அங்கமாகப் பெரிய எழுத்து நூல்களின் நாடகங்களை அரங்கேற்றும் வழமை இன்றும் பரவலாக இடம்பெற்று வருவதோடு கலைக்குழுவினர், பரம்பரை பரம்பரையாகப் பெரிய எழுத்து நூல்களின் நாடகங்களைச் சடங்காகவும் தொழிலாகவும் நிகழ்த்தி வருகின்றனர். மலையகச் சூழலில் கோயில் திருவிழாக்களையொட்டி இத்தகைய நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதாக அறியக்கிடைக்கிறது. இன்றைய நிலையில் காட்மோர் கல்கந்தை தோட்டத்தில் பவளக்கொடி ஆற்றுகை இடம்பெற்று வருவதை சு. தவச்செல்வன், “கலையும் சமூகமும்: மலையகத்தில் பவளக்கொடி நாடக ஆற்றுகை” (2015) என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார். மலையகத்தில் பவளக்கொடி ஆற்றுகை, அந்த ஆற்றுகையினை நிகழ்த்திவரும் அண்ணாவிமார்கள், அக்கலைப் பாரம்பரியம் மலையகத்தில் வழக்கிழந்து வருவதற்கான காரணங்கள் போன்றவற்றை அக்கட்டுரையில் உரையாடியுள்ள தவச்செல்வன், 1980களுக்கு முன்னர் இக்கதை மலையகத்தின் பல இடங்களிலும் பயில்வில் இருந்தமையையும், 1989ஆம் ஆண்டு கல்கந்தை தோட்டத்தில் நல்லதங்காள் கதை நாடகமாக அரங்கேற்றப்பட்ட தகவலையும் தந்துள்ளார் (2015).
வழிபாடு என்ற நிலையில் இன்றும் சித்திரபுத்திரனார் கதை, நல்லதங்காள் கதை, ஏகாதசி மகத்துவம் போன்ற நூல்கள் மலையகத்தில் சடங்கின் அங்கமாக வாசிக்கப்படுகின்றன. இந்த வாசிப்பு அச்சுச் சாதனம் விருத்தி பெற்றதும் தோன்றிய மௌன வாசிப்பாக இன்றி வாய்விட்டு வாசிப்பதாகவும் கூட்டாக வாசிப்பதாகவும் இடம்பெற்று வருகின்றன. தமிழ்ச் சூழலில் அச்சுப் பண்பாட்டின் பரவலாக்கத்தினால் மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடையே தனிமையிலும் மௌனமாகவும் வாசிக்கும் வாசிப்பு முறைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், வெகுசனப் பண்பாட்டின் பெரிய எழுத்து நூல்கள் வாய்விட்டு வாசிப்பதாகவும் கூட்டு வாசிப்பாகவுமே இடம்பெற்று வருகின்றன. அதனால், பெரிய எழுத்து நூல்கள் வாசிப்பு எளிமைக்கான நூல்களாக மட்டுமன்றி மேட்டிமைப் பண்பாட்டுக்கு எதிரான பண்பாட்டு வடிவங்களாகவும் தொழிற்பட்டு வருகின்றன எனக் கொள்ளலாம்.
கிராமியப் பண்பாட்டு மரபில் நல்லதங்காள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. வாய்மொழி மரபிலும் பெரிய எழுத்து மரபிலும் பரவலாக வழக்கில் உள்ள இக்கதையினைக் கதைப்பாடலாக வாசித்து, அக்கதையின் நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டுவதாக மலையகத்தில் நல்லதங்காள் சடங்கு நிகழ்த்தப்பட்டு வருகிறது. இக்கதைப்பாடலானது பக்திக்காகவும் தோட்ட நலனுக்காகவும் நேர்த்திகளை நிவர்த்தி செய்யவும் நம்பிக்கையின் அடிப்படையில் வருடந்தோறும் தவறாமல் நடத்தப்படுகிறது. மாசி மாதக் கடைசியில் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து பதினெட்டு நாட்களாக இச்சடங்கு இடம்பெறுகிறது. அப்புத்தளை பிரதேசத்தில் நல்லதங்காள் சடங்கு குறித்து ஆராய்ந்துள்ள ஆய்வாளர் சர்மிளா தரும் தகவலின்படி, அப்புத்தளை தோட்டத்தில் வாழும் மக்கள் நீண்டகாலமாக நல்லதங்காள் கதைப்பாடலை நடத்திவருவதை அறிய முடிகிறது. அத்தோட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் அதனை முன்னெடுத்து வருகின்றனர். காப்புக்கட்டுதலில் ஆரம்பமாகும் இச்சடங்கு கரகம் பாலித்தல், கம்பம் ஊன்றுதல், விநாயகர் துதி, கதைப்படிப்பும் நிகழ்த்துதலும், படுகளம் போடுதல், கரகம் எடுத்தல், மாவிளக்குப் பூசை, அன்னதானம் என்ற ஒழுங்கில் இடம்பெறுகின்றன. நிகழ்வின் பதினேழாம் நாளே படுகளம் போடுதல் சடங்கு நிகழ்கிறது. இச்சடங்கின்போது அருளாடுபவர்களிடம் மக்கள் தம் குறைகளைக் கூறி ஆசி பெறுவர். அதன்போது எலுமிச்சம்பழமும் விபூதியும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதன்பின்னர் அருளாடியவர்கள் அப்படியே நிலத்தில் வீழ்ந்து மூர்ச்சையற்று கிடப்பர். விடியற்காலையில் அண்ணாவியர் அவர்களை உயிர் எழுப்புவார். இதுவே படுகளம் போடுதல் எனப்படுகின்றது (சர்மிளா: 2018).
மலையகத் தமிழரின் விசேட தினங்களில் ஒன்றாக இன்று சித்திரா பௌர்ணமி பரவலாக அனுசரிக்கப்படுகின்றது. தாயை இழந்தவர்கள் அன்றைய தினம் விரதமிருந்து அந்தணருக்கு (ஆலய குரு) தானமளித்து வருகின்றனர். இது மலையகத்தில் அண்மைக் காலத்தில் பெருகிவரும் மேல்நிலையாக்கத்தின் ஒரு வெளிப்பாடாகும். முற்காலத்தில் சித்திரா பௌர்ணமி அன்று விரதமிருப்பதும், சித்திரபுத்திரநாயனார் கதை படிப்பதும் கிராமிய நிகழ்வாக பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று குறிப்பிட்ட தோட்டங்களில் மட்டும் இச்சடங்கு இடம்பெற்று வருகிறது. சில தோட்டங்களில் இச்சடங்கு ஊரின் பொது விழாவாகவும் சில தோட்டங்களில் பரம்பரை பரம்பரையாக சிலர் தமது வீடுகளில் மேற்கொள்ளும் நிகழ்வாகவும் இடம்பெறுகின்றது. பால், பழம் முதலியவற்றைப் படைத்து, விரதமிருந்து சித்திரபுத்திரனார் பெரிய எழுத்துப் புத்தகத்தை வாசிப்பர். அச்சடங்கை முன்னெடுக்கும் வீட்டார் அப்புத்தகத்தைப் புனிதமாகப் போற்றுவதோடு சித்திரா பௌர்ணமி அன்று மாத்திரமே அதனை வாசிக்கின்றனர். ஏனைய நாட்களில் அந்நூலினை யாரும் வாசிக்கக் கூடாது என்ற நம்பிக்கை பரவலாக வழக்கில் உண்டு.
மலையகத்தில் வருடந்தோறும் மார்கழி முதலாம் நாள் தொடக்கம் (டிசெம்பர் 16) தை மாத முதலாம் நாள் வரை இராமர் வழிபாடும் இராம பஜனையும் பெரும்பாலான தோட்டங்களில் விமரிசையாக இடம்பெற்று வருகின்றன. இராமர் பஜனையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக ஏகாதசி விரதமும் ஏகாதசி புராணக்கதை படித்தலும் சில தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்கழி ஏகாதசி நாளன்று பஜனைக் குழுவினர் உட்பட ஊரின் சிலரும் விரதமிருப்பதோடு அன்று இரவு விடியும் வரை விசேட பூசைகளும் ஏகாதசி புராணக்கதை (ஏகாதசி மகத்துவம்) படித்தலும் இடம்பெற்று, விடிந்ததும் அன்னதானமிடப்படுவது வழமையாக உள்ளது. அதேவேளை, அன்று சில வீடுகளில் பிரத்தியேகமாகப் பூசை வைத்து, விரதமிருந்து ஏகாதசி மகத்துவம் என்ற நூலினைப் படிப்பர். ரங்கல நிவ் டிவிசனில் இடம்பெறும் இராமர் பஜனையில் தவறாது ஏகாதசி விரதமிருத்தலும் விரத நாளன்று ஏகாதசி மகத்துவம் நூல் படித்தலும் இடம்பெற்று வருகின்றன. விரதமிருப்பவரில் நன்கு வாசிக்கக்கூடிய இரண்டொருவர் மாறிமாறி விடியும் வரை கதையினைப் படிப்பர். ஊரார் சூழயிருந்து அதனைக் கேட்பர். இடைக்கிடை விசேட பூசைகள் இடம்பெறுகின்றன. விடிந்ததும் நல்ல நேரத்துக்கு ஏற்ப விரதத்தை முடித்துக்கொண்டு, ஊராருக்கு அன்னதானமிடுவர்.
மலையகத்தில் ஆரம்பத்தில் நிலவிய நிறுவனம்சாரா கல்வி முறையான லயன் பாடசாலையில் கற்பிக்கப்பட்ட பாட நூல்கள் பற்றி முழுமையான தகவல்கள் எம்மிடம் இல்லை. எழுத்து, வாசிப்பு, கணக்கு என்பன கற்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இங்கு வாசிப்பில் எவை வாசிக்கப்பட்டன என்ற கேள்வியைப் பலரும் எழுப்பவில்லை. ஞானமுத்து அவர்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் முதலிய ஒழுக்கம் சார்ந்த நூல்கள் கற்பிக்கப்பட்டதாகக் கூறுவதோடு எழுத்துகளை வாசிக்க முடியாதவர்களுக்கு மாலை வேளையில் அல்லது விசேட நிகழ்வுகளில் வாசிக்கத் தெரிந்த ஒருவர் புராணங்களை, பண்டைய கதைகளை வாசித்துப் பொருள் கூறுவார் என்றும் கூறுகின்றார் (Gnanamuthu, 1977: 18). இங்கு அவர் எவ்வகையான புராணங்கள் என்று கூறவில்லை. மலையகச் சமய மரபோடு இணைத்து நோக்கும்போது செவ்வியல் புராணங்கள் மலையகத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றதாகத் தெரியவில்லை. எனவே, அங்கு இத்தகைய பெரிய எழுத்து நூல்களே வாசிக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம்.
பெரிய எழுத்து நூல்களில் இடம்பெறும் தொன்மப் பாத்திரங்களில் சாதாரண மக்கள் தம்மை இனங்கண்டுள்ளதுடன் அப்பாத்திரங்களின் துயரங்களில் தம் துயரைக் கண்டுள்ளனர். அத்தோடு அக்கதைகளில் இடம்பெறும் கதைத் தலைவன், தலைவி எல்லாத் துன்பங்களையும் கடந்து பெறும் வெற்றிகள் இவர்களுக்கு ஆறுதலைத் தந்துள்ளன. அதனால் அக்கதைகள் துயர், சஞ்சலம் நீக்கும் மருந்தாகவும் அமைந்திருந்துள்ளன. இன்றும் நல்லதங்காள் சடங்கில் அதன் பாடல்களைப் பாடும்போது பல பெண்கள் அழுது புலம்புகின்றனர். இது நல்லதங்காளில் தம்மை, தம் போன்றவர்களை உணர்வதன் வெளிப்பாடே ஆகும். ஸி.வி. வேலுப்பிள்ளையின் ‘வீடற்றவன்’ நாவலில் வரும் ஒரு காட்சியும் சஞ்சலம் நீக்க பெரிய எழுத்துப் புத்தகம் படித்தல், கேட்டல் இடம்பெறுவதைக் கூறுகின்றது. பெரியசாமி கங்காணி தன்னைத் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப் போகிறார்கள் என்ற அச்சத்தில், சஞ்சலத்தில் இருக்கும்போது அவர்கள் வீட்டுக்கு வரும் பழனி மாமா, “நளச்சக்கரவர்த்தி கதை, விக்கிரமாதித்தன் கதை இவைகளை நெடுநேரம் படிப்பார். பெரியசாமி கங்காணியும் காமாட்சி அம்மாளும் வெகு ஆர்வத்தோடு கதையைக் கேட்டுச் சாந்தியடைவர்…” (வேலுப்பிள்ளை, 1987: 80) இந்தக் குறிப்பு, பெரிய எழுத்து நூல்கள் மன சாந்தியைத் தரும் நூல்களாகவும் விளங்கியமையைக் காட்டுகின்றது.
நாட்டார் மரபில் சாதாரண மனிதர்கள் தமது விருப்பங்கள், தேவைகள் என்பனவற்றையும் அவர்களின் துயர், சஞ்சலம் என்பவற்றுக்கான ஆறுதல்களையும் இதிகாச புராண கதைமரபுகளில் இருந்து பெற்றுக்கொள்வதோடு தமது வாழ்வியல் போக்குகள், தாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்பவற்றையும் தாம் விரும்பும் வாழ்க்கையையும் அந்த இதிகாச புராணத் தொன்மங்களுக்கு ஏற்றி, மூலக்கதையிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். சாதாரண மக்களின் வாழ்வியலோடு இணைந்த இப்பண்புகளாலேயே இற்றைவரை கிராமப்புறங்களில் இவை தொடர்ந்தும் வழக்கில் உள்ளன. ஒருவகையில் பெரிய எழுத்துப் புத்தகமொன்றை நாடகமாக, ஒரு கிராமத்தில் மேடையேற்றும்போது – சடங்கை நிகழ்த்தும்போது அங்குள்ள மனிதர்கள் தம் வாழ்வைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள், வருகின்ற சவால்களைத் தெம்போடு எதிர்கொள்ளத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள், கிராமத்தவரிடையே கூட்டுணர்வை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறார்கள். இவற்றினால் அந்தக் கிராமமே தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது.
தமிழ்நிலத்தின் மிக நீண்ட பண்பாட்டுத் தொடர்ச்சியின் அங்கமாக விளங்கியுள்ள மலையகத் தமிழர்கள், பெருந்தோட்டத் தொழிலின் நிமித்தம் கடல் கடந்து இலங்கை வந்து, இங்கேயே நிலைகுடிகளாகத் தங்கிவிட்ட போதிலும் தம் பூர்வீகப் பண்பாட்டின் தொடர்ச்சியை வெவ்வேறு மட்டங்களில் பின்பற்றியும் காலமாற்றத்துக்கு ஏற்ப தகவமைத்தும் பேணி வருகின்றனர். அதன் ஒரு வெளிப்பாடாக, பெரிய எழுத்துப் பொஸ்தகங்களின் பயில்வு அமைகிறது.
உசாத்துணை மூலங்கள்
அரசு, வீ. (க.ஆ.). (2014). “தமிழ் அச்சுப் பண்பாடு: உருவாக்கம் – வளர்ச்சி – நிலைபேறு.” மாற்றுவெளி ஆய்விதழ், 15. சென்னை: மாற்று.
சர்மிளா, எஸ். (2018). நல்லதங்காள் கதைப்பாடலும் சடங்காசாரங்களும்: அப்புத்தளை பிரதேசத்தை முன்னிறுத்திய கள ஆய்வு. இளங்கலைப் பட்டத்துக்காக பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு (பிரசுரிக்கப்படாதது).
தவச்செல்வன், சு. (2015). படைப்பும் படைப்பாளுமையும். பெருவிரல் வெளியீடு.
வேலுப்பிள்ளை, ஸி.வி. (1987). வீடற்றவன். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
Gnanamuthu, G. A. (1977). Education and the Plantation Workers in Sri Lanka. Colombo: Council of Churches.



