மலையக வீதிப்பாடல் இலக்கியம்: சப்ரகமுவ - தென் மாகாணங்களின் முன்னோடிகள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
18 நிமிட வாசிப்பு

மலையக வீதிப்பாடல் இலக்கியம்: சப்ரகமுவ – தென் மாகாணங்களின் முன்னோடிகள்

June 24, 2026 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

சப்ரகமுவ மாகாணத்திலிருந்தும் சில வீதிப்பாடலாசிரியர்கள் தமது படைப்புகளைத் தந்துள்ளார்கள். குறிப்பாக, கேகாலை மாவட்டத்தின் எட்டியாந்தோட்டைப் பிரதேசத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். இம்மாகாணத்தின் மற்றுமொரு அங்கமான இரத்தினபுரி மாவட்டத்திலும் பெருந்தோட்டப் பொருளாதாரக் கட்டமைப்பு நிலவுவதால், அங்கேயும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இம்மாவட்டத்தில் இவர்களது குடியேற்றம் ஆரம்பமாகியது. “இரத்தினங்களின் நகரம்” எனப் பொருள்படும் வகையில் இரத்தினபுரி என்று அழைக்கப்படும் இம்மாவட்டம், உலகப் புகழ்பெற்ற இரத்தினக்கற்களின் விளைநிலமாகத் திகழ்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இப்பகுதி இரத்தினக்கல் வர்த்தகத்தில் சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருந்தது. போர்த்துக்கேயர்கள் மற்றும் ஒல்லாந்தர்களின் ஆக்கிரமிப்பு முயற்சிகளுக்கு இம்மாவட்டத்தின் இயற்கை வளங்களே முதன்மைக் காரணங்களாக அமைந்தன; பின்னர் இது பிரித்தானியர்களின் முழுமையான நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. தற்போது இப்பிரதேசத்தில் கித்துள் உற்பத்தி, தேயிலை மற்றும் இரப்பர் பெருந்தோட்டத் தொழில்கள் பிரதான வாழ்வாதாரங்களாக உள்ளன. இந்தப் பெருந்தோட்டத் துறையினை மையப்படுத்தியே இந்திய வம்சாவளித் தமிழர்களின் இருப்பு இன்றும் தொடர்கிறது.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் இந்த மாவட்டத்தில் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, 1983ஆம் ஆண்டு நாடு தழுவிய ரீதியில் அரங்கேறிய வன்செயல்களில் அதிகளவு பாதிப்புகளைச் சந்தித்த ஒரு மாவட்டமாக இது அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு வாழும் முஸ்லிம் மக்களும் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதேபோன்று, இந்திய வம்சாவளித் தமிழர்களை இலக்காகக் கொண்டு தோட்டப்பகுதிகளில் பல வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்களைப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளே முன்னின்று நடத்தியதற்கான வரலாற்றுப் பதிவுகள் கவனிக்கத்தக்கவை. வன்முறைச் சம்பவங்களின் வரலாற்றில், 1998ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் 800க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட நிகழ்வு மிக முக்கியமானதாகும். வன்முறைகள் மட்டுமன்றி, பெருந்தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடிகளும் இவர்களின் இயல்பு வாழ்க்கையை அவ்வப்போது சீர்குலைக்கின்றன. அண்மையில் கூட, ஒரு தொழிலாளி தனது வீட்டு வசதிக்காக மேற்கொண்ட கட்டுமானப் பணிகளுக்காக, தோட்ட நிர்வாகமே கூலிப்படையைப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்த சம்பவம் இவர்களின் வாழ்வாதாரப் போராட்டத்திற்குச் சான்றாக அமைகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இயற்கை அனர்த்தங்களின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு பகுதியாக இரத்தினபுரி மாவட்டம் விளங்குகின்றது. குறிப்பாக, மண்சரிவு அபாயமும் தொடர்ச்சியான வெள்ளப்பெருக்கும் இப்பகுதி மக்களின் வருடாந்தப் பிரச்சினைகளாகக் காணப்படுகின்றன. இத்தகைய அனர்த்தச் சூழலில், தோட்டத் தொழிற்துறையைச் சார்ந்த இந்திய வம்சாவளித் தொழிலாளர்கள் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கதாகும். விசாலமான நிலப்பரப்பைக் கொண்ட இம்மாவட்டத்தில், மலையகத் தமிழ் மக்கள் சிதறிய நிலையில் குறைந்த செறிவிலேயே வாழ்கின்றனர்; இத்தகைய வாழ்வியல் சூழல் அவர்களின் இருப்பைச் சிக்கலானதாக்குகின்றது. மேலும், இவர்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கான முன்னெடுப்புகளும் மிகுந்த சவால்கள் நிறைந்ததாகவே தொடர்கின்றன.

சப்ரகமுவ மாகாண மலையகத் தமிழர்களின் குரல் – (கஹவத்தை, அவுப்பை) வீ.பி. கருப்பையாவின் பாடல்கள்

இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள், அப்பகுதியின் மக்கள் தொகையில் சுமார் இருபது சதவீதத்தினர் என மதிப்பிடப்படுகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த வீதிப்பாடலாசிரியரான வீ.பி. கருப்பையா, 1961 ஆம் ஆண்டில் “தொழிலாளர் தொண்டு கீதம்” என்ற நூலை வெளியிட்டார். ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே இத்தொகுப்பு வெளியானதால், அதற்கு முற்பட்ட காலப்பகுதியின் சமூக அரசியல் சூழலை இது பிரதிபலிக்கிறது.

அவரது பாடல்கள் பிரதானமாக பின்வரும் விடயங்களை மையப்படுத்துகின்றன:

  • வாக்குரிமை மற்றும் பிரஜாவுரிமை பறிப்பு தொடர்பான கவலைகள்.
  • தொழிலாளர்களை அமைப்பாக்குவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு.
  • இந்திய வம்சாவளித் தமிழர்களின் வரலாற்றுப் பங்களிப்பை இராமாயண பூர்வீகத் தொடர்புடன் இணைத்து விளக்குதல்.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள “நாலடி கும்மி” எனும் பாடலின் வரிகள், புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களின் தியாகத்தையும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் கீழ்வருமாறு விவரிக்கின்றன:

“பாரத நாட்டை மறந்து இலங்கையில் 

பாட்டாளி மக்களாய் வந்தவரே

வானர சூரர்களாண்ட மலை நாட்டை

வாழாயமாய் வெட்டி மீண்டவரே

உங்களுக்கே திங்கே சொந்தமிருக்கென்று

ஓட்டு உரிமையுந்தான் பறித்து – இந்த 

நாட்டிலிருந்து கடத்திவிட – என்ன

நாய மிருக்குது கேளுங்களே

வாதாடி வெள்ளையராண்டிடவும் – நல்ல 

வாங்சமு குபலாத் தோன்றிடவும்

மேதாவியாக்கி இன்னாட்டைத் திருத்திடக் 

கூட்டமாய் நம்மையழைத் திடவும்

ஓட்டுப்பதுவு உரிமைகளு – மிந்த

நாட்டிலே சொந்தமிருக்கு தென்று

போட்டு பலனை எடுத்துத் திடமுடந்

தோட்டங்களாக அமைத்திட னென்று

கூட்டி வந்த மலை நாட்டினிலே – நம்மை 

வாட்டி வதைத்த ஆங்கிலேயர்

காட்டிக் கொடுத்து நடந்து விட்டார் – சொந்த 

நாட்டுக்கு ஓட்டம் பிடித்து விட்டார்”

ஏனைய படைப்பாளர்கள் முன்வைத்த அதே கருப்பொருள் இவரிடமும் தென்பட்டாலும், வீ.பி. கருப்பையாவின் தனித்துவமான அணுகுமுறை மற்றவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. இன்றைய காலகட்டத்திலும் வீட்டு வசதிகள் குறித்த ஏக்கம் தொடர்கின்ற நிலையில், பாடலாசிரியரின் கூர்மையான அவதானிப்பில் உருவான பின்வரும் வரிகள் மிகவும் முக்கியமானவை:

“ஊட்டுங் குழந்தையைத் தொட்டிலிலே – விளை

யாடிடும் பாலரை பட்டியிலே

விட்டுப் பிரிந்து உழைத்தவர்க்கு தங்க

வீடுகில்லையாந் தோழர்களே

நாடு பகைத்திடும் நேரத்திலே – நாமள் 

தேடும் பணத்தை விரயத்திலே

கோடு வளக்குக் குடிகளுக்கு – விட்டு

மோடையராகினோந் தோழர்களே”

பாடலாசிரியர் தனது மனக்குமுறல்களைப் இவ்வாறு பாடல்கள் வழியாகப் பதிவு செய்துள்ள போதிலும், இறுதியாக இறைவனே தங்களைக் காக்க வேண்டும் என்ற தீர்வை முன்வைக்கின்றார். 

“என்ன முடிவு கொடுப்பாரோ இந்த 

ஏழைகள் வாழப் பொறுப்பாரோ

மாலுமரனும் உமையவளும் – லங்கை

மாதாவும் நம்மளைக் காப்பாரோ”

இவ்வரிகளில் விஷ்ணு, சிவன், பார்வதி மீதான நம்பிக்கையும் இலங்கை நாட்டின் மீதான பற்றும் வெளிப்பாடாக உள்ளது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் தாக்கத்தால் காந்தியக் கொள்கைகள் உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக, இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மத்தியில் மகாத்மா காந்தி ஒரு நம்பிக்கைக்குரிய மாமனிதராகப் போற்றப்பட்டார். அந்த வகையில் காந்தியையும் அவரது கொள்கைகளையும் சிறப்பிக்கும் வகையில் அமைந்த பின்வரும் வரிகள் மிகுந்த அவதானத்திற்குரியவை:

“சங்கரனை போலுதித்த எங்கள் மஹான்காந்தி – கை

ராட்டினத்தை யேந்தி – சுய 

ராட்சியத்தை வாங்கி – அந்த

திங்களணிந்தோன் பதத்தை சேர்ந்தனர் வேதாந்தி

அமரர்கள் கொண்டாடுங் காந்தி அஹிமிஜை தந்தாரே மக்கள்

அகந்தனில் நின்றாரே – சிறை

வாசத்திலே இருந்து பயந்தெளியவும் வைத்தாரே”

பாடலாசிரியர் வீ.பி. கருப்பையாவின் படைப்புகளில் தொழிலாளர்களின் உயர்வினைப் பறைசாற்றும் வரிகள் சிறப்பான கவனத்தைப் பெறுகின்றன. அதேநேரம், அப்பாடல்களில் காணப்படும் எழுத்துப்பிழைகள் ஒரு குறைபாடாகவே உற்றுநோக்கப்படுகின்றன. இத்தகைய பிழைகள் பாடலின் பொருளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இவை ஆசிரியரின் கவனக்குறைவால் ஏற்பட்டவையா அல்லது அச்சுக்கோர்ப்பில் நிகழ்ந்த தவறுகளா என்ற ஐயத்தையும் தோற்றுவிக்கின்றன. மேலும், இவரது பாடல்களில் பாரதியாரின் கவிதைச் செல்வாக்கு மேலோங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

“கழந்திரஞ் செழித்தோங்க உலகைக்கார்த்த வந்தொழிலாளி – அகத்தில்ச்

சிறந்தவந் தொழிலாளி – வருமந் 

தீர்த்த  வந்தொழிலாளி –  நாடு

கவுறுவமாய் வாழுதர்க்குக் காவலந் தொழிலாளி

அஞ்சிக்குனிந்து கெஞ்சி பயந்து நயந்த வந்தொழிலாளி ஞாயந்

தெரிந்தவந் தொழிலாளி – நாட்டை 

அடைந்தவன் தொழிலாளி – பெரிய

ரோட்டு வங்களா கோற்ட்டுக்கச்சேறி போடவந் தொழிலாளி 

ஊட்டுங் குழந்தை வீட்டில் வாட உழைத்தவந் தொழிலாளி காட்டை

அழித்தவந் தொழிலாளி – மேட்டைக் 

கறைத்தவன் தொழிலாளி – போட்ட

வேட்டுவெடி கல்ப்பாறைக்குயிரைக் கொடுத்தவன் தொழிலாளி”

திரைப்படப் பாடல்களின் மெட்டுகளைத் லாவகமாகக் கையாண்டு கருத்துகளைக் கொண்டு செல்லும் பாங்கு இவரிடமும் காணப்படுகிறது. குறிப்பாக, இவரது பாடல் ஒன்று “ஆண்டு வந்த காலம் போச்சுங்கோ” என்ற பாடலின் மெட்டைப் பயன்படுத்தி, மகாத்மா காந்தியின் சேவையைப் புகழுவதோடு, தொழிற்சங்கங்களின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றது. இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க காந்தியச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் இவர், அந்த இயக்கத்தில் தொழிலாளர்கள் இணைய வேண்டியதன் தேவையையும் அதன் முக்கியத்துவத்தையும் தனது வரிகள் மூலம் உரக்கச் சொல்கிறார்.

“ஆங்கில அரசாங்கஞ் செய்த

தீங்கையகற்றத் துணிந்த சங்கம்

ஏங்கிடும் தொழிலாளர் மக்களை

இணைத்ததுந் தொழிலாளர் சங்கம்

எழில் மிகும் பலம் பொருந்தி நமது

குலம் விரிவுறத் திகழும் கட்சியை

விற்கவு மனந்துணிந்திடாதிங்கோ வீணாசையாலே 

வேசம் போட்டு அலைந்திடாதிங்கோ…”

தொழிற்களத்தில் நிலவும் வேலைப்பளு, கடுமையான உழைப்பு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் மட்டுமன்றி, அங்கு தோன்றும் முரண்பாடுகளும் இவரது பாடல்களில் முக்கிய அவதானத்தைப் பெறுகின்றன. போதைப் பழக்கம் குறித்த எச்சரிக்கையை வழங்கி, அதிலிருந்து விலகி வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் போக்கும் இவரது பாடல் ஒன்றில் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, மதுப்பழக்கத்தினால் விளையும் தீய விளைவுகளைத் தொடர்ந்து வலியுறுத்தும்போது,

“கத்திக்கு அஞ்சாத கள்ளு

கழுத்தையறுக்கத் துணிந்த கள்ளு

காமவிரோதக் குரோதக் கள்ளு

கடவுள் நீதியை மறக்குங் கள்ளு

அடக்கமாக நடக்கும் பெண்களைக்

கெடுக்க நினைத்து இழுக்குங் கள்ளு

குடிக்கவுமனம் வைத்திடாதீங்கோ – சாராயங்கள்ளால்

குடும்பமும் அலங்கோலமாகுங்கோ…”

என எடுத்துரைக்கிறார். மேலும்,

“அருந்தவமாயீன் றெடுத்த

சிறந்திடு நம் குழந்தைகளை

அறிவு தருங் கல்வியிலே

அமர்த்த மனமில்லா மலே

ஆசையற்றுக் குடியினாலே 

மோசம் போன குடும்ப மெல்லாம்”

என கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறார். இப்பாட்டின் இறுதியை,

“தேசம் போற போக்கைப் பாருங்கோ – கருப்பையா சொல்லை

சிந்தித்து உணர்ந்து கேளுங்கோ…..”

என நிறைவு செய்கிறார்.

கருப்பையாவின் பாடல்கள் தொழிற்சங்கத்தின் மேன்மையை வலியுறுத்தும் கருத்தியல் செழுமை மிக்கவையாகவும், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பனவாகவும் அமைகின்றன. குறிப்பாக, “சித்ரா பருவமதில்” என்ற மெட்டில் அமைந்த “வாருங்கள் தோழர்களே வளமுடங் கூறுவேங் கேளுங்களே” எனத் தொடங்கும் பாடல் குறிப்பிடத்தக்கது. 1961ஆம் ஆண்டு “காவத்தை பியசிரி பிரஸ்” மூலம் வெளியிடப்பட்ட இத்தொகுப்பு, அக்காலத்தில் இருபத்தைந்து சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தமிழியல் ஆய்வுகளில் ‘அரை வாய்மொழிப்பாடல்’ என்ற எண்ணக்கரு முக்கியத்துவம் பெறும் நிலையில், கருப்பையாவின் இந்தப் படைப்புகள் மிகுந்த உன்னிப்புடன் நோக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

தென் மாகாண மலையகத் தமிழர்களின் குரல் – (தெனியாய) எம்.கே. முனியாண்டித் தேவரின் பாடல்கள்

வரலாற்று ரீதியாக மகாத்துறை மற்றும் தெவுந்துறை என வழங்கப்பட்ட மாத்தறை மாவட்டமானது, தொன்மையான காலம் முதற்கொண்டே இந்திய மீனவர்களின் வருகை மற்றும் வணிகத் தொடர்புகளின் ஊடாகத் தமிழர்களுடன் பின்னிப் பிணைந்த ஒரு களமாகத் திகழ்கின்றது. எனினும், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் பின்னரே தோட்டத் தொழிலாளர்கள், நகர சுத்தித் தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் எனப் பல்வேறு தளங்களில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஒரு தனித்துவமான சமூகமாக இங்கு நிலைபெறத் தொடங்கினர்.

மாத்தறை மாவட்டத்தில் தமிழர்கள் பரவலாகச் சிதறி வாழ்ந்தாலும், தெனியாய தேர்தல் தொகுதியிலேயே அவர்கள் ஓரளவுக்குச் செறிவாகக் காணப்படுகின்றனர். குறிப்பாக, இத்தொகுதியிலுள்ள கொட்டப்பொல, பஸ்கொட மற்றும் பிற்றபெத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மட்டுமே இவர்களது இருப்பு ஓரளவு கவனிக்கத்தக்கதாக உள்ளது; இருப்பினும் இது மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதமாகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தென் மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களான காலி மற்றும் அம்பாந்தோட்டையிலும் தமிழர்களின் நிலை மாத்தறை மாவட்டத்தைப் போன்றே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களாக ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மற்றும் கதிர்வேலாயுத சுவாமி ஆலயம் ஆகியன விளங்குகின்றன. இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாழ்வியலை இலக்கிய ரீதியாக அடையாளப்படுத்துவதில் எம்.கே. முனியாண்டித் தேவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த சங்கரலிங்க உபாத்தியாயரின் சீடராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர், ஏ. கருப்பையா தேவரைத் தனது சீடராகக் குறிப்பிட்டுத் தனது பாடல் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

1960ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய செட்டித்தெருவில் அமைந்த சரஸ்வதி பிரஸ்சில் அச்சிடப்பட்டு, பாடலாசிரியரால் நேரடியாக விநியோகிக்கப்பட்ட “தொழிலாளர் நிம்மதி இல்லா வாழ்க்கை” எனும் பாடல் தொகுப்பு 50 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. நான்காவது பாகமாக வெளிவந்துள்ள இத்தொகுப்பு, இதற்கு முன்னதாக மூன்று பாகங்கள் வெளியாகியுள்ளதை உறுதிப்படுத்துகின்றது. எதிர்காலத்தில் இவ்வாசிரியரின் ஏனைய தொகுப்புகளோ அல்லது அவரது மாணாக்கரின் படைப்புகளோ கண்டறியப்பட்டால், மலையக இலக்கியப் பரப்பிற்கு தென் மாகாணம் வழங்கிய காத்திரமான பங்களிப்பினை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும். தற்போதைய நிலையில், தென் மாகாணத்திலிருந்து மலையக இலக்கியத்திற்கு வலுச்சேர்த்தோர் குறித்த வரலாற்றுச் சான்றுகள் மிக அரிதாகவே கிடைக்கப்பெறுகின்றன.

“தோட்ட நிலவரம் கெட்டு போச்சு

துரைமார்கள் சங்கமே மேலே ஆச்சு – பெரும்

பணக்காரர் கூச்சலே வேடிக்கை யாச்சு

பாட்டாளி மக்களே புலம்பலாச்சு”

எனத் தொடங்கும் பாடலில் முனியாண்டித் தேவர் தோட்ட நிர்வாகத்தின் கெடுபிடித் தன்மைகளையும் வியாபாரிகளால் மக்கள் ஏமாற்றப்படும் நிலைமையையும் எடுத்துரைக்கிறார். இத்தொகுப்பு நூல் ஏனைய பாடல் திரட்டுகளில் இருந்து தனித்து நிற்பதை உணர முடிகிறது. பொதுவாக ஏனைய பாடல்களில் பாடலாசிரியர் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிலையில், இந்தப் பாடலாசிரியர் ஒரு படி மேலே சென்று பாடலை இயற்றியவர் பெயரையும் அதனைப் பாடுபவர் பெயரையும் பதிவு செய்துள்ளார்.

“மனிதனை மனிதன் மேய்க்க லாச்சு

மானமில்லா வார்த்தைகளும் கேக்க லாச்சு – நல்

மதியோடு இயற்றினார் முனியாண்டித் தேவரும்

இசையோடு பாடினார் கணபதிப் பாண்டியரும்…”

முனியாண்டித் தேவரின் படைப்புகளில், வீதிப்பாடகர்கள் தங்கள் வாழ்வின் இறுதிக் காலத்தில் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்படும் பொதுவான இயல்பினைக் காணமுடிகிறது. அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த “அமிர்த யோகம்” திரைப்படப் பாடலின் மெட்டைத் தழுவி, “அடிமையாகி வாடுகின்றோம் ஆண்டவனே – இதை அகற்றித் தானே காக்க வேண்டும் தாண்டவனே” என்று அவர் பாடுகிறார். இதன் மூலம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்களைப் பழனி முருகனும் கதிர்காமக் கந்தனும் காக்க வேண்டுமென அவர் வேண்டுவதை அறியலாம். மேலும், “இந்த உலகினிலே ஒருகொடுமை இதில் – உழைப்பாளிக்கே பெரும்வறுமை” என்ற வரிகளின் வாயிலாக, வர்க்க ரீதியான ஏற்றத்தாழ்வுகளால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை அவர் நுட்பமாகப் புலப்படுத்துகிறார்.

“தமிழரை தமிழர் கெடுத்திடலாமோ” என்று வினா எழுப்பும் பாடல், “மனிதனை மனிதன் சாப்பிடுறாண்டா” என்ற மெட்டில் அமைந்து தொடர்வதை நாம் காணலாம். “அநியாயக் கொள்கை அதிகமாயிருக்குது நாட்டிலே – அந்நிய நாடென்று அடங்கியிருக்கிறோம் வீட்டிலே” எனும் வரிகள், சமூகம் எதிர்கொள்ளும் இன்னல்கள் குறித்த ஆழமான அவதானிப்புகளைப் பதிவு செய்கின்றன. அதேவேளை, “கள்ளங் கபடந் தெரியாதவனே” என்ற மெட்டில் உருவான பாடல், அன்றாட வாழ்வில் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயரங்களை விவரிக்கிறது. இந்தப் பாடல் பெண்களின் அன்றாடச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல், அவற்றுக்கான தீர்வை நோக்கிய முன்னெடுப்புகளையும் உள்ளடக்கி விரிவடைகிறது. 

சித்தர்களின் தத்துவச் சிந்தனைகள் வீதிப்பாடல்களில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, பதினெண் சித்தர்களில் ஒருவரும் பட்டினத்தாரின் சீடருமான பத்திரிகிரியாரின் செல்வாக்கு முனியாண்டித் தேவரின் பாடல்களில் விரவிக்கிடப்பதைக் காணலாம். ஒரு காலத்தில் மன்னராகத் திகழ்ந்து, பின் ஞானம் பெற்றுச் சித்தராக மாறிய பத்திரிகிரியாரின் பாடல்கள் “எக்காலம்?” என்ற வினாவோடு நிறைவுபெறும் இயல்பைக் கொண்டவை. இத்தகைய தனித்துவமான நடையையே முனியாண்டித் தேவரும் தனது படைப்புகளில் கையாண்டுள்ளார். பத்திரிகிரியார் இயற்றிய 232 பாடல்களும் ஈற்றடியில் இக்கேள்வியைச் சுமந்தே நிற்கின்றன. ஈரடிப் பாடல்களாக அமையும் இவற்றிற்குச் சான்றாகப் பின்வரும் வரிகளைக் குறிப்பிடலாம்:

“ஆட்டம் ஒன்றும் இல்லாமல் அசைவுசற்றும் காணாமல்

தேட்டம் அற்ற வான்பொருளைத் தேடுவதும் எக்காலம்?” (215)

“முன்னை வினையால் அறிவுமுற்றாமல் பின்மறைந்தால்

அன்னை தனைத்தேடி அமுதுண்பது எக்காலம்?” (216)

“கள்ளுண்டவர்போல் கனிதரும் ஆனந்தம் அதால்

தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவது எக்காலம்?” (217)

மேற்படி சித்தரின் அணுகுமுறையினை முனியாண்டித் தேவரும் பிரயோகிப்பதைக் காணலாம். 

“ஆகா அடிமைவிட்டு ஆதிக்க மண்ணாடி – நாம்

தாய்நாடு சென்று தார்ப்பிடிப்ப தெக்காலம்?

கடனாகி கவலையாகி காலமெல்லாம் அடிமையாகி

கொடூரமான அடிமை நீங்கி சொந்த ஊர் குடிகொள்வதெக்காலம்?

வஞ்சகர் நாட்டினிலே வறுமையின் வாழ்வை விட்டு – ஆதி

மெய்நாடு சென்று மேலி கொள்வதெக்காலம்?”

தொகையறாவாக இடம்பெற்றுள்ள மேற்கண்ட வரிகள், தாயகத்தின் மீதான ஆழமான ஏக்கத்தையே பிரதானமாக வெளிப்படுத்துகின்றன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான அம்சம் என்னவெனில், “மேலி” என்ற சொல் ஏர் அல்லது கலப்பையைக் குறிப்பதாகும். “மேலி கொள்வதெக்காலம்” என அவர் வெளிப்படுத்தும் தவிப்பு, தற்போதைய தொழில்துறையிலிருந்து விடுபட்டு, மீண்டும் உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற அவரது வேட்கையையும் முனைப்பையும் புலப்படுத்துகிறது.

மலையக வீதிப்பாடலாசிரியர்களில் ஒரு சிலரே தமது படைப்புகளில் “தொகையறா” உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களுள் முனியாண்டித் தேவர் மிகவும் முக்கியமானவர். “நிமிர்ந்து பேசவும் உரிமையில்லை, இவங்க சொன்னதை செய்தும் நலமுமில்லை” என்ற முழக்கத்தின் வாயிலாக, அவர் தனது வர்க்கத்தினருக்கான நீதியைக் கோரி நிற்கிறார். அவரது ஆதங்கத்தைச் சுமந்த பாடலின் வரிகள் பின்வருமாறு அமைகின்றன:

“பரிதாபம் இந்த இலங்கையிலே இது பரிதாபம் – தமிழ்

மனிதரை மனிதன் மேய்த்து வருவதும் பரிதாபம்

துணிவாகப் பேசும் கங்காணி கையில் கம்புங் குடையுமிருக்குது

நடுக்கங்கொண்ட பாவையர் முதுகில் கொழுந்துக் கூடையுமிருக்குது”

இத்தகைய வெளிப்பாடுகள், அன்றைய காலத்துப் பெருந்தோட்ட வாழ்வியலின் அவலங்களையும், தொழிலாளர்கள் மீதான அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறையையும் ஆழமாக விவரிக்கின்றன.

இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களின் துயரநிலை குறித்து இந்திய அரசு காட்டிவரும் பாராமுகத்தை இவரது பாடல்கள் வன்மையாகக் கண்டிக்கின்றன. அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் அரசியல் தலைமைகளுக்கு எதிரான விமர்சனக் கருத்துகளும் இப்பாடல்களில் வலுவாகப் பதிவாகியுள்ளன.

“இந்தியர்கள் இலங்கையிலே ஏங்குகின்றாரே இந்திய

நாட்டு வேந்தன் நேரு சும்மா இருந்துவிட்டாரே”

மேலும், அன்றைய காலத்துத் தலைவர்களான அசீஸ் மற்றும் தொண்டமான் ஆகியோர் மக்களின் உண்மை நிலைமையை முறையாக விளக்கத் தவறிவிட்டனர் என்பதையும், “அசீஸ், தொண்டமானுக்கு உண்மை நிலைமையை விளக்கத் தெரியல” என்று நேரடியாகவே பெயர்களைச் சுட்டிச் சாடுவதை இப்பாடல் வரிகளில் அவதானிக்க முடிகிறது.

இரண்டு வெவ்வேறு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், இவ்விரு பாடலாசிரியர்களும் அந்தந்தப் பகுதிகளுக்கே உரிய தனித்துவமான பாதிப்புகளைத் தாண்டி, மலையக சமூகத்திற்கே பொதுவான பிரச்சினைகளையே தமது படைப்புகளில் முதன்மைப்படுத்தியுள்ளனர். நேரில் கண்ட அனுபவங்களின் வெளிப்பாடாகத் தமது உணர்வுகளைப் பாடல்களாகப் பதிவு செய்துள்ள இவர்களின் முயற்சி, ஆழ்ந்த கவனத்திற்குரிய ஒன்றாகத் திகழ்கிறது. சமகாலத்தைச் சேர்ந்த இவ்விரு படைப்பாளிகளும் தத்தம் மாகாணங்களின் இலக்கிய முன்னெடுப்புகளுக்கு அடிக்கோடிட்ட முன்னோடிகளாக விளங்குவது குறிப்பிடத்தக்கது. மலையக இலக்கிய வரலாற்றில் எதிர்ப்புக் குரல்களைப் பதிவு செய்து, ஒரு புதிய எழுச்சி மிகு இலக்கியப் பரப்பை உருவாக்கியவர்களில் இவ்விரு பாடலாசிரியர்களுக்கும் மிக முக்கிய இடமுண்டு என்பதைத் தெள்ளத்தெளிவாகக் கூறலாம்.

உசாத்துணை நூல்கள்

1. யோகராசா. செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.

2. முத்துலிங்கம் பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.

3. சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.

4. கருப்பையா. வீ.பி. (1961). தொழிலாளர் தொண்டு கீதம். காவத்தை பியசிரி பிரஸ்.

5. முனியாண்டித்தேவர். எம்.கே. (1960). தொழிலாளர் நிம்மதி இல்லா வாழ்க்கை. சரஸ்வதி பிரஸ்.

6. மாணிக்கவாசகர். ஞா. (2017). சித்தர் பாடல்கள். உமா பதிப்பகம்.



About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்