முடிவுரை
I
நவீனகால கதிரியக்கக் காலக் கணிப்புகளின்படி (Radiometric Dating Methods) இற்றைக்கு 4,000–3,800 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே (கி.மு. 2033–கி.மு. 1895) கர்நாடக மாநிலத்தின் மாஸ்கி, தமிழகத்தின் பையம்பள்ளி ஆகிய மையங்களிலும், கி.மு. 1600 ஆண்டுகளுக்கு முன்னரிருந்து கர்நாடகத்தின் ஹல்லூர், தடகனஹள்ளி, குமரனஹள்ளி ஆகிய மையங்களிலும் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு ஆரம்பமாகி, அங்கிருந்து தமிழ்நாடு வழியாக கி.மு. 1200 ஆண்டளவில் இலங்கையை வந்தடைந்திருக்கிறது.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் கதிரியக்கக் காலக்கணிப்பு ஆய்வுகள் இன்னும் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை. எனினும், இரும்புக்காலப் பெருங்கற் பண்பாட்டிற்குரிய கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டு, காலக்கணிப்புச் செய்யப்பட்ட முக்கிய மையங்களின் தரவுகள் பின்வருமாறு அமைகின்றன: கந்தரோடை (கி.மு. 1300), ஆனைக்கோட்டை (கி.மு. 915), பொம்பரிப்பு (கி.மு. 900), அநுராதபுரம் (கி.மு. 840) மற்றும் இப்பன்கட்டுவ (கி.மு. 700). இந்தப் பண்பாடு தமிழகத்திலிருந்து இலங்கையை வந்தடைந்ததை மேலே கூறப்பட்ட கலாநிதிகள் விமலா பெக்லி, சி.க. சிற்றம்பலம், பொன்னம்பலம் இரகுபதி, சுதர்ஷன் செனெவிரத்ன போன்ற ஆய்வாளர்களின் ஆய்வுகளிலிருந்து அறிந்திருப்பீர்கள்.
இப்பண்பாடு கடல் மார்க்கமாக இலங்கையை அடைந்தபடியினால் கடற்கரையை அண்டிய மையங்களிலேயே பெருங்கற் பண்பாட்டின் ஆதி ஆரம்பத் திகதிகள் கிடைக்க முடியும். இதன்படி கந்தரோடை கி.மு. 1300 ஆண்டையும், ஆனைக்கோட்டை கி.மு. 915 ஆண்டையும், பொம்பரிப்பு கி.மு. 900 ஆண்டையும் காட்டுகின்றன. இவற்றை ‘மாதிரி’யாக எடுத்துக்கொண்டால் கி.மு. 1200 – கி.மு. 1000 ஆண்டுக் காலத்தில் இரும்புக்காலப் பெருங்கற் பண்பாடு இலங்கையை வந்தடைந்திருக்கிறது எனக் கொள்ளலாம்.
RADIOCARBON DATES FROM MEGALITHIC BURIALS, MASKI, KARNATAKA – 2015
————————————————————————————————————-
Lab code Provenance 14C age (BP) Calibrated date
———————————————————————————————————–
ISGS A2282 MARP-79-B no. 1 2955 ± 15 1222–1117 cal BC
ISGS A2283 MARP-79-B no. 1 3070 ± 20 1407–1276 cal BC
ISGS A3229 MARP-79-B no. 6 3040 ± 20 1389–1225 cal BC
ISGS A3230 MARP-79-B no. 7 3510 ± 20 1895–1756 cal BC
—————————————————————————————————————
Reproduced from Radiocarbon, Vol. 56, 2015, Page 800, University of Arizona.
கர்நாடகத்தின் மாஸ்கியில் பெருங்கற் பண்பாட்டுப் புதையல்களின் கதிரியக்க கரிமத் திகதிகள்.

இந்தியத் தீபகற்பத்தில் பெருங்கற் பண்பாட்டுப் புதையல்களின் கதிரியக்கத் திகதிகள்.

இந்தியத் தீபகற்பத்தின் கதிரியக்கத் திகதிகளை வெளியிட்ட ஆய்வாளர்கள்.
II
இலங்கையில் பெருங்கற்கால யுகத்திற்குரிய (கி.மு. 1200 – கி.மு. 1000) கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் அச்சுற்றாடலின் தன்மையைப் பொறுத்து தமது வாழ்வாதாரத்தை மேற்கொண்டமையைக் காண முடிகிறது. கடல் வளங்களில் ஆர்வம், வேட்டையாடல், மிருக வளர்ப்பு, விவசாயம் போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்ட படிநிலை வளர்ச்சி இலங்கையில் இரும்பு யுகத்தின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட பிரதேசங்கள் முக்கியமாக வறண்ட வெப்ப வலயப் பிரதேசங்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இரும்புத் தொழில்நுட்பத்தில் நாட்டம் கொண்ட மனிதனின் அறிவு விவசாயத் துறையுடன் இணைந்தபடியினால் விவசாயத் துறை வளர்ச்சியடைந்தது. இதன் விளைவாக அவசியமான பொருளாதாரத்தை அமைக்கும் நோக்கத்துடன் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிக்கப்பட்டன. குடியிருப்புகளை அமைப்பதற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் நீர் முக்கியமானதாகக் கருதப்பட்டது. இரும்பு உபகரணங்களின் உதவியோடு குளங்களை நிர்மாணிப்பதிலும், கால்வாய்களை அமைப்பதிலும் மக்கள் ஊக்கம் கொண்டனர். சிறிய குளங்களை நிர்மாணித்து, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் நவீன தொழில்நுட்ப முறைகளும் கையாளப்பட்டன. இப்பெருங்கற்காலம் உணவு உற்பத்தியின் ஒரு புரட்சிகரமான காலகட்டம் எனலாம்.
இக் காலகட்டத்திற்குரிய பொருளாதார மற்றும் உற்பத்தித் துறைகளை நோக்குமிடத்து சமூக வளர்ச்சி பல படிமுறைகளைக் கொண்டிருந்தது. விசேடமாக இரும்பு உற்பத்தி, விவசாயம், மட்பாண்டக் கைத்தொழில் ஆகிய துறைகள் பொருளாதார ரீதியான சலுகைகளுக்கு உரித்தான உயர்மட்டத்தைச் சார்ந்தவர்களுடைய கைத்தொழில்களாக அமைந்திருந்தன. சில சந்தர்ப்பங்களில் சாதாரண மட்டத்தில் உள்ளவர்களும் மேற்கூறிய உற்பத்திகளில் ஈடுபட்டிருந்திருக்கலாம். இக்கருத்தை ஏற்றுக்கொள்வதாயின் ஈமப்பூமியில் காணப்படும் அடக்கங்கள் பெரும்பாலும் உயர்மட்டத்தைச் சார்ந்தவர்களுடைய அடக்கங்கள் என்றே கருத வேண்டியுள்ளது.
கி.மு. 1200 ஆண்டு முதலான காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஆரம்ப வரலாற்றுக் காலத்தில் வேட்டையாடித் தனது உணவைத் தேடிக்கொள்வதில் ஈடுபட்ட மனிதன் படிப்படியாக முன்னேற்றமடைந்து உணவைத் தயாரிப்பதற்கான வழிவகைகளை அமைத்துக்கொண்டான். விவசாயத்தை மேற்கொண்டு, அதற்கான குளங்களை நிர்மாணிப்பதிலும், நீர்ப்பாசனத்தை வழங்குவதிலும், தமக்கென நிரந்தரமான வதிவிடங்களை நிர்மாணிப்பதிலும் மனிதன் ஈடுபட்டான்.
இக்காலத்தில் மக்கள் சிறு சிறு கிராமங்களிலே செறிந்து வாழ்ந்தனர். இக்கிராமங்களிலே பல்வேறு தொழில்புரியும் குழுக்களும் வாழ்ந்தன. ஆரம்பகாலத்தில் கிராம மக்களிடையே நெருங்கிய ஒற்றுமையும் கூட்டுறவும் இருந்தன. ஈமச்சின்னங்களையும் குளங்களையும் உற்று நோக்கும்போது இவை பல நாட்களாகப் பலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியாலேயே ஆக்கப்பட்டமை தெரிகிறது.
இலங்கையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஈமச்சின்ன மையங்கள் காணப்படும் இடங்களில் மக்கள் குடியிருந்த பகுதிகள் பற்றிய விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. கல்லறைகளையும் தாழிகளையும் அமைப்பதில் கவனம் செலுத்திய மக்கள் ஏன் தமக்கென வசதியான இல்லங்களை அமைக்கவில்லை என்பது புரியவில்லை. ஈமச்சின்னங்களை அமைப்பதில் கைதேர்ந்த இவர்களிடம் அழியாத பொருட்களைக் கொண்டு வதிவிட மனைகளை அமைக்கும் திறன் இருக்கவில்லை என்ற வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது. அநுராதபுர அகழ்வுகளில் வீடுகளைக் கட்டுவதற்கு மரத்தூண்கள் நாட்டப் பயன்படுத்தப்பட்ட குழிகள் மண்ணிலே துளைகளாகக் காணப்படுவதை நோக்குமிடத்து, அக்கால மக்களின் இருப்பிடங்கள் பெரும்பாலும் அழியும் பொருட்களான மரம், மண் போன்றவற்றால் ஆக்கப்பட்டன என அறிய முடிகிறது.
III
இரும்புக்காலப் பெருங்கற் கலாசாரத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சி வெகு சீக்கிரத்தில் மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்த கட்டமாகிய வரலாற்றுக் காலத்திற்கு இலங்கையை இட்டுச் சென்றது. இக்காலத்தில் ஏற்பட்ட விவசாயம், வணிகம் ஆகியவற்றின் பெருவளர்ச்சியையும், நகரங்கள், துறைமுகப் பட்டினங்கள் ஆகியவற்றின் எழுச்சியையும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. கி.மு. 800ஆம் ஆண்டளவில் அநுராதபுரம் மக்கள் செறிவாக வாழ்ந்த ஒரு ஆரம்பகால நகரமாகிவிட்டிருப்பதை ஏற்கனவே கலாநிதி கொனிங்ஹாமின் அகழ்வு அறிக்கையில் பார்த்தோம். கி.மு. 500ஆம் ஆண்டளவில் கந்தரோடையும், சமகாலத்தில் மகாகமையும் நகரங்களாகிவிட்டன. கி.மு. 700ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்துறை (Davis, C. et al. 2018) ஒரு துறைமுகமாக ஆகிவிட்டிருந்தது. அக்காலப்பகுதியில் சம்புகோளமும் துறைமுகமாகியிருக்கலாம். கி.மு. 700ஆம் ஆண்டு காலத்திலிருந்தே அநுராதபுரத்தில் பிராமி எழுத்துப் பதிவுகள் இருந்ததை கதிரியக்கத் தேதிக்கணிப்பு ஆய்வுகள் காட்டுகின்றன. இவை அனைத்தையும் ஆதாரமாகக் கொண்டு கி.மு. 700ஆம் ஆண்டளவில் இலங்கையில் மையப்படுத்தப்பட்ட அரசாங்கக் கட்டமைப்பு உருவாக்கம் (State Formation) இடம் பெற்றதாகக் கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் அவற்றின் கண்டுபிடிப்புகளும், கி.மு. ஆயிரத்தாண்டின் ஆரம்ப காலத்திலிருந்தே பெருங்கற் பண்பாடும் அதன் முக்கிய அங்கங்களான கறுப்பு-சிவப்பு மட்பாண்டப் பயன்பாடு, இரும்பின் பயன்பாடு, நீர்ப்பாசன விவசாயம், நெல் வளர்ப்பு என்பனவும் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்து இலங்கைத் தீவு முழுவதிலும் பரவலாகப் பயன்பாட்டிலிருந்ததை எடுத்துக்காட்டுகின்றன. தொல்லியல் அகழ்வாய்வுகள் காட்டும் கறுப்பு-சிவப்பு மட்பாண்டமும், அதில் காணப்படும் ஆரம்பகால எழுத்துப் பதிவுகளையும் கொண்ட பெருங்கற் பண்பாட்டின் வருகைக் காலம், இலங்கையின் நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப காலமாகக் கொள்ளப்பட வேண்டும்.
IV
இலங்கையின் சில மூத்த ஆய்வாளர்கள் ‘பெருங்கற் கலாசாரம்’ என்று ஒரு பண்பாடு கிடையாது, தென்னாசியாவில் இந்தியாவின் கங்கைச் சமவெளியிலிருந்து இலங்கையின் ஹம்பாந்தோட்டை வரை பரவியிருப்பது ‘இரும்புக்காலக் கலாசாரம்தான்’ என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள். ‘இரும்புக்காலம்’ அல்லது ‘இரும்பு யுகம்’ என்பது மனித வரலாற்றின் நாகரிக வளர்ச்சியில் – ‘கற்காலம்’, ‘வெண்கலக்காலம்’, ‘இரும்புக்காலம்’ என – ஒரு காலகட்டத்தைக் குறிக்கும் பதம். அக்காலகட்டங்களில் வெவ்வேறு நாடுகளின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான கலாசாரங்களை மக்கள் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, தென்னாசிய இரும்புக்காலக் கலாசாரத்தின் ஓர் அம்சத்தை மட்டும் எடுத்துக்கொண்டால் – ஆதி இரும்புக்கால வடஇந்திய மக்கள் இரும்பின் அறிமுகத்தோடு முதலில் வண்ணப் பூச்சுடைய சாம்பல் மட்பாண்டங்களையும் (Painted Grey Ware), சுமாராக கி.மு. 550ஆம் ஆண்டுக் காலத்திலிருந்து வடக்கின் மெருகூட்டப்பட்ட கறுப்பு மட்பாண்டங்களையும் (Northern Black Polished Ware) பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதே காலகட்டத்தில், ஆதி இரும்புக்காலத்தில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த மக்கள் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். எனவே, வட இந்திய, தென்னிந்திய, இலங்கையின் ஆதி இரும்புக்காலக் கலாசாரங்கள் ஒன்றானவை அல்ல.
இரும்புக்காலத்தை ஒரு காலப்பகுதியாகவும், அக்காலத்தில் நிகழ்ந்த ஒரு தனிப்பட்ட கலாசாரப் பண்பாட்டை வலியுறுத்தும் முகமாகவும், விமலா பெக்லி போன்ற ஆய்வாளர்கள் ‘இரும்புக்காலப் பெருங்கற் கலாசாரம்’ என்ற வார்த்தையைப் பிரயோகித்தனர். வங்காளப் பேராசிரியர் சுனித்தி குமார் சாட்டர்ஜீ அக்காலத்தைய மற்றொரு கலாசாரத்தை விளக்கும் முகமாக ‘இரும்புக்காலத் தகனக் கிரியை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
எனவே, ‘இரும்புக்காலக் கலாசாரம்’ என்ற பதம் ஒரு பொதுப்படையான தலைப்பே தவிர, ஒரு குறிப்பிட்ட மக்களின் தனித்துவமான கலாசாரப் பண்பாட்டைக் குறிப்பிடும் பதம் எனக் கூற முடியாது.
V
தென்னாசிய வரலாற்றில் இந்தியப் பெருநிலத்திற்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இலங்கைக்கு உள்ளது. தெளிவாக எழுதப்பட்ட ஒரு குலவரலாற்று நூல் இங்கைக்கு உள்ளது. இந்திய வரலாற்றை எழுதும்போது பல தருணங்களில் காலநிர்ணயம் மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம், மகாவம்சம் ஒரு மத-குலவரலாறு மட்டுமே. ஒரு குலம் தனது மதத்தை முன்வைத்து தனக்காக எழுதிக்கொண்ட வரலாறு அது. அதன் பின்னணியில் பௌத்த மதப் பெருமிதங்கள் பேசப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
இலங்கையின் புத்த குருமாரினால் எழுதப்பட்ட மகாவம்ச வரலாற்றில் வலுவான மதச்சார்பும், அற்புதங்களும், உண்மைக்குப் புறம்பான கண்டுபிடிப்புகளும் உட்பொதிந்துள்ளன. உதாரணமாக –
- புத்தபிரான் மூன்று தடவைகள் இலங்கைக்கு வந்தமை.
- கி.மு. 500ஆம் ஆண்டில் விஜயன் தனது 700 சகாக்களுடன் ஒரே பாய்க்கப்பலில் வந்து சேர்ந்தது (அக்காலத்தில் அத்தகைய பெரிய பாய்க்கப்பல் உலகில் எங்குமே இருக்கவில்லை).
- விஜயன் புத்தபிரான் பரிநிர்வாணம் அடைந்த அதே நாளில் (பொதுவாக கி.மு. 483ஆம் ஆண்டு எனக் கணிக்கப்பட்டிருக்கிறது) இலங்கையை வந்தடைந்தது.
- கிழக்கு இந்தியாவிலிருந்த லாலாவிலிருந்து (வங்காளம்) இலங்கை நோக்கிப் புறப்பட்ட விஜயனின் கப்பல், வழியில் மேற்கு இந்தியக் கரையிலிருந்த துறைமுகமான ‘சுப்பாரகா’ துறைமுகத்தில் தங்கி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இலங்கை வந்தடைந்தது.
- விஜயனும் அவனது 700 சகாக்களும் இலங்கையை வந்தடைந்த போது இலங்கையில் மனித இனங்கள் இருக்கவில்லை. இங்கிருந்த இயக்கர் இராட்சத இனத்தவர். நாகர்கள் அமானுஷ்யர்கள். இலங்கையில் காலடி வைத்த முதல் மனித இனத்தவர் விஜயனும் அவனது தோழர்களும் ஆவர். இவர்களின் வம்சாவளியினரே சிங்கள மக்களாவர்.
மேற்கூறிய சம்பவங்களை ஏற்றுக்கொள்ளாத இலங்கையின் வரலாற்றாசிரியர்கள் பலர், இச்சம்பவங்கள் வடஇந்தியாவிலிருந்து பெருந்திரளாக இங்கே வருகை தந்து குடியேறிய மக்களைக் (Exodus of North-Indian Settlers) குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரித்தானிய வரலாற்றாசிரியர்களும், அவர்களைத் தொடர்ந்த இருபதாம் நூற்றாண்டின் இலங்கை ஆசிரியர்களும் இக்கருத்தை அடிநாதமாகக் கொண்டே இலங்கையின் வரலாற்றை அமைத்தார்கள்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் குடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டமை, 34,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நுண்கற்களைப் பயன்படுத்தும் மக்கள் வாழ்ந்தமை, 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி இரும்புக்கால மையங்கள் இலங்கை முழுவதும் கண்டுபிடிக்கப்பட்டமை ஆகிய உண்மைகளை அறிந்திருந்தும், 2005ஆம் ஆண்டில் பென்குயின் நிறுவனம் வெளியிட்ட பிரபலமான பேராசிரியர் கே.எம். டி சில்வாவின் ‘இலங்கையின் வரலாறு’ (A History of Sri Lanka) என்ற நூலின் முதலாவது அத்தியாயம் ‘காலனித்துவவாதிகளும் குடியேறியவர்களும்’ (Colonists and Settlers) என்ற தலைப்பில், இந்தோ-ஆரிய மக்களின் குடியேற்றத்துடன் இலங்கை வரலாறு ஆரம்பிப்பதாகக் கூறுகின்றது.
VI
இலங்கையில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து பெருவாரியான மக்கள் இங்கே வந்து குடியேறியதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை. அவர்கள் அவ்வாறு வந்து குடியேறியிருந்தால் அக்காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ‘வண்ணப் பூச்சுக்கொண்ட சாம்பல் மட்பாண்டமோ’ அல்லது ‘வடஇந்திய மெருகூட்டப்பட்ட கறுப்பு மட்பாண்டமோ’ பரவலாக நாடெங்கும் கிடைத்திருக்கும். இலங்கையின் அகழ்வுகளில் ‘வண்ணப் பூச்சுக்கொண்ட சாம்பல் மட்பாண்டங்கள்’ காணப்படவில்லை. ‘வட இந்திய மெருகூட்டப்பட்ட கறுப்பு மட்பாண்ட’ ஓடுகள் சில யாழ்ப்பாணக் கோட்டை அகழ்விலும், அநுராதபுரம் ASW2 அகழ்விலும், மகாகமையிலும், மாந்தை அகழ்விலும் (ஒரேயொரு கலவோடு) கிடைத்திருக்கின்றன. இவை வர்த்தகம் வழியாக வந்த மட்பாண்டங்களாகும். இதைத் தவிர இம்மட்பாண்டம் இலங்கையில் வேறு எங்குமே காணப்படவில்லை. இதனோடு ஒப்பிடும்போது, கி.மு. 1200 ஆண்டுக்காலம் முதலாக பெருங்கற் பண்பாட்டுக் கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள் இலங்கையெங்கும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கி.மு. 1200 ஆண்டுக் காலத்திலிருந்தே பெருங்கற் பண்பாட்டின் வருகையோடு இரும்பின் பயன்பாடு, நீர்ப்பாசன விவசாயம், நெற்பயிரீடு, கறுப்பு-சிவப்பு மட்பாண்டப் பயன்பாடு ஆகிய அம்சங்களுடன் இலங்கை மக்களின் நாகரிக வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. கி.மு. 800ஆம் ஆண்டுக் காலத்திலேயே – விஜயன் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் கி.மு. 500ஆம் ஆண்டு காலத்திற்கு 300 ஆண்டுகள் முன்னதாகவே – அநுராதபுரம் மையப்படுத்தப்பட்ட அரச கட்டமைப்பைக் கொண்ட ஓர் ஆதிகால நகரமாகிவிட்டதை அகழ்வாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்தே வடஇந்திய வர்த்தகர்கள் இலங்கைக்கு வருகை தந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கந்தரோடையிலும் மாந்தையிலும் காணப்படுகின்றன. அவர்களின் வருகையோடு பிராகிருத மொழியும் இலங்கையை வந்தடைந்திருக்கும். அநுராதபுர அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட மட்பாண்ட ஓடுகளின் பின்னணியை ஆராயும்போது, இவ்வெழுத்து முறை தமிழகத்திலிருந்தே இலங்கைக்குப் பரவியிருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு.
- ஒன்று, மட்பாண்டத்தில் எழுத்துகளைப் பதிக்கும் வழக்கம் தமிழகத்திலும் இலங்கையிலும் மட்டுமே காணப்படுகிறது. வடஇந்தியாவில் இப்படி ஒரு வழக்கம் இருந்ததாகத் தொல்லியல் சான்றுகள் கிடையாது.
- இரண்டாவது, கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னர் வடஇந்தியாவில் பிராமி எழுத்துப் பதிவுகள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
மேலும், இலங்கையின் ஆரம்பகாலப் பிராமிக் கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்து வடிவங்கள் தமிழகப் பிராமிக் கல்வெட்டு வடிவங்களை ஒத்திருப்பதை சத்தமங்கல கருணாரத்ன போன்ற ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள் (Karunaratne, S. 1984).
கி.மு. 250ஆம் ஆண்டளவில் இலங்கையை வந்தடைந்த பௌத்த மதத்துடனேயே பாளி மொழி இலங்கையை வந்தடைந்தது. சிங்கள மொழியின் உருவாக்கத்தில் ஹெளு, தமிழ், பிராகிருதம், பாளி ஆகிய மொழிகள் இடம்பெற்ற போதிலும், பெரும்பாலான சொற்பதங்கள் பாளி மொழியிலிருந்தே பெறப்பட்டுள்ளன. ‘சொற்பதங்களை அடிப்படையாகக் கொண்டு அதை ஓர் இந்தோ-ஆரிய மொழி என வகைப்படுத்திய போதிலும், அதன் அடிப்படை இலக்கணமும் கட்டமைப்பு அடித்தளமும் திராவிட மொழிகளினுடையதாகும்’ என்கிறார் பன்மொழி வல்லுநரான ஆய்வாளர் முதலியார் குணவர்த்தன.
“This forced me to the conclusion that the structural foundations of the Sinhalese language are Dravidian while its superstructure, i.e. the vocabulary, is Aryan” (Gunawardhana, W.F. 1924).
உசாத்துணை நூல்கள், சஞ்சிகைகள்
BEGLEY, VIMALA (1965): The Iron Age of South India, Ph. D. Dissertation, University of Pennsylvania, Philadelphia.
BEGLEY, VIMALA (1967): Archaeological Exploration in Northern Ceylon, Expedition Summer 1967, University of Pennsylvania, Philadelphia.
BEGLEY, VIMALA (1973): ‘Protohistoric Material From Sri Lanka (Ceylon) and Indian Contacts’, Ecological Backgrounds of South Asian Prehistory, ed. Kenneth A.R. Kennedy and Gregory Possehl, South Asian Occasional Papers and Thesis, Cornell University, Pp. 190-196.
BEGLEY, VIMALA (1981): Excavations of Iron Age Burials at Pomparippu 1970, Ancient Ceylon, No. 4: 49-95.
BROHIER, R.L. (1934): Ancient Irrigation Works in Ceylon, 3 vols. Survey Department. Colombo.
BRONSON, BENNET (1970): ‘The Excavation at Kantarodai’ Proc. Smithsonian Seminar on Pre and Protohistory of Ceylon, 21st August, Colombo. (unpublished).
CONINGHAM, R.A.E. (1993): Anuradhapura Citadel Archaeological Project: Preliminary results of the excavation of the southern rampart, 1992., South Asian Studies 9: 111-122.
CONINGHAM. (1995a): Monks, Caves and Kings: An Archaeological Assessment of the Nature of Early Buddhism in Sri Lanka, World Archaeology xxvii / 2: 222-242.
CONINGHAM, R.A.E. (1995): ‘The Rise of Cities in Sri Lanka’ in F.R. Allchin: The Archaeology of Early Historic South Asia, Cambridge University Press.
CONINGHAM, ROBIN (1999): Anuradhapura: The British – Sri Lankan Excavations at Anuradhapura Salgaha Watta 2: Volume 1 The Site, Archaeopress, Oxford.
CONINGHAM, ROBIN (2006): Anuradhapura: The British – Sri Lankan Excavations at Anuradhapura Salgaha Watta 2: Volume 2 The Artefacts, Archaeopress, Oxford.
DAVY, J., 1821 (reprinted 1983): An Account of the Interior of Ceylon and of its Inhabitants with Travels in that Island, Tisara Prakasakayo, Dehiwala.
De SILVA, K.M. (2005): A History of Sri Lanka, Penguin Books, India.
De SILVA, RAJA (1970): ‘The work done hitherto on the protohistory of Ceylon’, Pros. Smithsonian Seminar on pre and Proto history of Ceylon, 21 Aug. 1970, Colombo.
De SILVA, RAJA (1970-71): ‘Archaeological Excavations at Ibbankattuwa’Annual Report of the Dept. of Archaeological Survey 1970-71, Colombo.
DERANIYAGALA, P.E.P. (1957): Administrative Report of the Archaeological Commissioner for 1956, Archaeological Survey of Ceylon.
DERANIYAGALA, P.E.P. (1958): Administrative Report of the Archaeological Commissioner for 1957, Archaeological Survey of Ceylon.
DERANIYAGALA, S. U. (1972a): Archaeological Explorations in Ceylon, Pt. 2: Kollan Kanatta, Vilpattu, Ancient Ceylon, No. 2: 1-17.
DERANIYAGALA, S.U. (1972b): The Citadel of Anuradhapura: Excavations in the Gedige area, Ancient Ceylon, No. 2: 1-17.
DERANIYAGALA, S.U. (1985): The Prehistory of Sri Lanka: An Outline, in A.R.B. Amerasinghe and S.J.S. Banda, James Rutnam Festschrift 1985: 14-21, UNESCO, Colombo.
DERANIYAGALA, S.U. (1986): Excavations in the Citadel of Anuradhapura: Gedige 1984, A Preliminary Report, Ancient Ceylon 2: 49-169.
DERANIYAGALA, S.U. (1990a): Radiocarbon dating of Early Brahmi Script in Sri Lanka 600-500 B.C., Ancient Ceylon, 11: 148-168.
DERANIYAGALA, S.U. (1990b): The proto and early historic radiocarbon chronology of Sri Lanka, Ancient Ceylon, No. 12: 252-292
DERANIYAGALA, S.U. (1992): The Prehistory of Sri Lanka: An Ecological Perspective, Archaeological Survey Department, Colombo.
DIPAVAMSA (1957-58): Transl. & Ed. Bimala Churn Law, The Historical Journal, No. 7: 1-240.
DIVYAVADANA (1886): ed. E.B. Cowell and R.A. Neil, Cambridge University Press, Cambridge.
GOONATILAKA, SUSANTHA (1981): The Formation of Sri Lankan Culture, Ancient Ceylon, No. 4: 157-174.-33
GUNAWARDHANA, MUDALIYAR W.F. (1924): The Origin of the Sinhalese Language (Text of lecture delivered at Ananda College, Colombo in 1918), Siddhanta Parikshanaya, Colombo
GUNAWARDENE, R.A.L.H. (1982): ‘Social function and political power: a case study of state formation in irrigation society’, in H.J.M. Claessen and P. Skalknik (eds), The Study of the State: 133-154., Mouton, The Hague.
KARUNARATNE, SADDHAMANGALA (1984): The Brahmi Inscriptions of Sri Lanka: Special Volume, Epigraphia Zeylanica VII, Archaeological Survey of Ceylon.
KARUNARATNE, PRIYANTHA PADMALAL (2010): Secondary State Formation During the Early Iron Age on the Island of Sri Lanka, Ph.D. dissertation, University of California, San Diego.
KENNEDY, KENNETH A.R. (1974): The Palaeodemography of Ceylon: The Study of the Biological Continuation of a Population from Prehistoric to Historic Times, Ed. Gosh. pp. 95-112.
KENNEDY, KENNETH, A.R. (1975): The Physical Anthropology of the Megalith-builders of South India and Sri Lanka, ANU Press, Canberra.
KENNEDY, KENNETH A.R. & GREGORY L. POSSEHL (1976): Ecological Backgrounds of South Asian Prehistory, Cornell University.
LUCACS, JOHN R. & KENNEDY, KENNETH A.R. (1981): Biological anthropology of human remains from Pomparippu, Ancient Ceylon, No. 4: 97-132.
MAHAVAMSA (1950): Ed. Wilhelm Geiger, The Government of Ceylon Information Dept., Colombo.
MALONEY, C.T. (1968): The Effect of Early Coastal Sea Traffic on the Development of Civilization in South India, Ph.D. Thesis, University of Pennsylvania, Philadelphia.
MANN, S. (1970): The Marriage of the Stupa and the Megalith, Unpublished M.Sc. dissertation, University of Bradford, Bradford.
MENDIS, G.C. (1943): The Early History of Ceylon, Y.M.C.A. Publishing House, Calcutta.
MOORTI, U.S. (1994): Megalithic Culture of South India, Ganga Kaveri Publishing House, Varanasi.
PARANAVITANA, S. (1967): Sinhalayo, Lake House Investments Ltd., Colombo.
PARANAVITANA, S. (1981): ‘The Arya Kingdom in Northern Sri Lanka’, The Journal of the Royal Asiatic Society, Ceylon Branch, Vol. VII, Part 2, pp 174-224.
PERERA, FRANK (1974): The Early Buddhist Historiography of Ceylon, Unpublished Ph.D. thesis., Gottingen University, Germany.
PHILLIPS, M. (1873): ‘Tumuli in the Salem District’, Indian Antiquary 2: 223-228.
POSSEHL, G.L. (1994): Radiometric Dates from South Asian Archaeology, An Occasional Publication of the Asia Section, University Museum, University of Pennsylvania, Philadelphia.
POSSEHL, GREGORY L. & GULLAPALLI, PRAVEENA (1999): Radiometric Dates for Megalithic Iron in peninsular India, An Occasional Publication of the Asia Section, University Museum, University of Pennsylvania, Philadelphia.
PREMATILLAKE, LEELANANDA; BANDARANAYAKE, SENAKA; De SILVA, RAJA; DERANIYAGALA, SIRAN U. (Eds.) (2007): History and Archaeology of Sri Lanka: The Art and Archaeology of Sri Lanka, Vol II, The Central Cultural Fund, Ministry of Cultural Affairs, Colombo.
PRICKETT, MARTHA (1980): Excavations at Mantai 1980: Preliminary Report of the Field Director (unpublished).
RAGUPATHY, P. (1987): Early Settlements in Jaffna, Mrs Ragupathy, Madras.
RAJAN, K. (1994): Archaeology of Tamilnadu, Indian Publishing Co. Delhi.
REA, A. (1902): ‘Prehistoric antiquities in Tinnevelly’, in Annual report of the Archaeological Survey of India, 1.2: 111-140.
RISLEY, H.H. (1915): The People of India (2nd Ed.), Thacker, Spink & Co., Calcutta.
SARASIN, P., and SARASIN, F. (1892): Ergebnisse naturwissenschaftlicher Forschungen auf Ceylon: die Weddas von Ceylon und die sie umgebenden Völkerschaften, C.W. Kreidel, Wiesbaden.
SELIGMAN, C.G., and SELIGMAN, B.Z. (1911): The Veddas, Cambridge University Press, Cambridge.
SENARATNE, S.P.F. (1965): Prehistoric Archaeology in Ceylon, Ceylon National Museums Handbook Series, Dept. of National Museums, Ceylon.
SENEVIRATNE, SUDHARSHAN (1984): The Archaeology of the Megalithic – Black and Red Ware Complex in Sri Lanka, Ancient Ceylon, No. 5.,
SENEVIRATNE, S. (1985): The Social Base of Early Buddhism in South India and Sri Lanka (c. 3rd Century B.C. – 3rd Century A.D. ), Ph.D. Dissertation, Jawaharlal Nehru University, New Delhi.
SENEVIRATNE, S. (1985): The Baratas: A Case of Community Integration in Early Historic Sri Lanka, Festschrift 1985: James Thevathasan Rutnam, ed. A.R.B. Amerasinghe, Sri Lanka UNESCO National Commission, Colombo.
SENEVIRATNE, S. (1992): Pre-State Chieftains and Servants of the State: A Case Study of Parumaka, Sri Lanka Journal of Humanities 15: 99-131.
SITRAMPALAM, S.K. (1980): The Megalithic Culture in Sri Lanka, Ph. D. Thesis (Unpublished), University of Poona.
SMITH, ELLOT G. (1927): Essays on the Evolution of Man, 2nd Ed., Oxford Univ. Press.
SRINIVASAN, K.R., and BANERJEE, N.R. (1953): Survey of South Indian Megaliths, Ancient India, 9: 103-115).
THIAGARAJAH, SIVA (2016): Kantarodai Civilization of Ancient Jaffna, Kumaran Book House, Colombo – Chennai.
ZUCKERMAN, S. (2000): ‘The Adichanallur Skulls’, Bulletin of the Madras Government Museum, Government Museum, Chennai.
இரகுபதி, பொ. (1983): பெருங்கற்கால யாழ்ப்பாணம், பாவலர் தெ.அ. துரையப்பாபிள்ளை நினைவுப்பேருரை, மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை
குணவர்தன, பிரியந்த. (2018). இப்பன்கட்டுவ மரபுரிமைகளைப் பார்வையிடுவோம். மத்திய கலாசார நிதியம், கொழும்பு.
புஷ்பரட்ணம், ப. (2017): இலங்கைத் தமிழர் – ஒரு சுருக்க வரலாறு, தமிழ்க் கல்விச் சேவை, சுவிற்சர்லாந்து.



