மனிதனுடைய ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையானது பலவகையான நிகழ்வுகளால் ஊடுருவப்பட்ட வலைப்பின்னலாக அமைந்துள்ளது. இந்நிலையில், அதன் பல்வேறு தாக்கங்களை வெளிப்படுத்தும் சமூக நடத்தைகளையும் கலை–இலக்கியங்களையும், அவற்றின் உட்சிக்கல் தன்மைக்கு ஏற்ப களஆய்வுக்கு உட்படுத்தி ஆராய்வது இன்றியமையாததாகும். எனவே, மலையக மக்களின் கலை மற்றும் சமூக அசைவியக்கங்களின் கருத்தாக்கங்களை ஆராய்வதற்கு பல்வேறு கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் நமது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. இந்தக் கோட்பாடுகள் வெவ்வேறான இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவற்றுக்கிடையிலான மாறுபாடுகளைக் காட்டிலும், ஓர் ஆய்வுப் பொருளைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கும் விளக்குவதற்கும் அவை எந்தளவிற்குப் பயன்படுகின்றன என்பதைக் கவனிப்பதே மிக முக்கியமானதாகும்.
உழைக்கும் மக்களாகிய மலையக மக்களின் வாய்மொழி மரபுகளையும் அவற்றின் உள்ளார்ந்த பண்புகளையும் அறிந்துகொள்வதற்கு அவர்களது வாழ்வியல் முறையே முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது. இந்நிலையில், மலையக வாய்மொழிப் பாடல்கள், வழிபாட்டு முறைகள், சமய வழக்காறுகள் மற்றும் சடங்குகள் போன்றவற்றை, அவற்றை உருவாக்கிய மக்களின் வாழ்வியல் பின்னணியுடன் இணைத்துப் புரிந்துகொள்வது எவ்வாறு சாத்தியமாகிறது என்பதைக் கருத்தில் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகின்றது. குறிப்பாக, மலையக மக்களின் வாழ்க்கை முறையில் அம்மன் வழிபாட்டோடு தொடர்புடைய அம்மை நோய் பற்றிய நம்பிக்கைகளையும், அதனுடன் இணைந்துள்ள சடங்காசாரங்களையும் விளக்குவதே இதன் நோக்கமாகும்.
மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்பதால், தென்னிந்தியக் கலை, கலாசாரம் மற்றும் வழிபாட்டு மரபுகள் அவர்களது வாழ்வோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்தவையாகக் காணப்படுகின்றன. அவர்கள் இலங்கைக்கு வந்த காலத்தில் அடர்ந்த காடுகள், நோய்கள், அச்சங்கள் மற்றும் பல்வேறு இன்னல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அம்மனை வழிபடும் முறையைப் பின்பற்றினர். இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறிய பின்னர், அம்மனுக்கு ஆலயங்களை அமைத்து வழிபடும் மரபை தொடர்ந்து பேணிவந்தனர்.
இந்த நிலையில், மாரியம்மன் தம்மீது கொண்ட அன்பும் விருப்பமும் காரணமாகவே அம்மை நோய் தமக்கு ஏற்படுகின்றது என அவர்கள் நம்பினர். எனவே, நோயின் தாக்கத்தால் அவர்கள் மனமுடைந்து போகவில்லை. மாறாக, அம்மனின் அருளாலும் கருணையாலும் இது தமக்கு ஏற்பட்டதாகக் கருதி, முழு நம்பிக்கையுடன் அதனை ஏற்றுக்கொண்டனர். இதனால், அம்மை நோயுடன் தொடர்புடைய நடைமுறைகள் தெய்வீகச் சடங்குகளாகக் கருதப்பட்டு தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.
லயத்து வாழ்க்கை மிகவும் நெருக்கமான சமூக அமைப்பைக் கொண்டிருந்ததால், ஒருவருக்கு அம்மை நோய் ஏற்பட்டால் அது விரைவாக மற்றவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு இருந்தது. இருப்பினும், அதனை அவர்கள் மருத்துவ ரீதியான நோயாக மட்டும் கருதவில்லை. மாறாக, அதன்மூலம் மாரியம்மன் உடலிலும் உள்ளத்திலும் குடிகொண்டிருப்பதாக நம்பினர்.
அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தனிமைப்படுத்தப்படுவர். அவர்களைச் சுற்றி வேப்பிலை, பொன்னாவரை போன்ற இலைகள் வைக்கப்படும். மஞ்சள் கலந்த நீரே குடிப்பதற்கும் முகம் கழுவுவதற்கும் வழங்கப்படும். மஞ்சளும் வேப்பிலையும் அம்மனுக்கு உகந்தவை என்ற நம்பிக்கை இன்றும் இவர்களிடையே நிலவுகிறது.
நோய் ஏற்பட்ட மூன்றாவது நாளுக்குப் பின்னர் தலைக்கு நீர் ஊற்றும் சடங்கு நடைபெறும். இதில் ஒரு பெரிய குடமும் இரண்டு சிறிய குடங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அதிகாலையில் யாரும் பார்க்காத நேரத்தில் இந்த நீர் தலைக்கு ஊற்றப்படும். பின்னர் சூடம் ஏற்றி இறக்கி, புதிய வேட்டி விரித்து அதில் நோயாளியை அமர வைப்பர். இந்நிகழ்வு மிகுந்த பயபக்தியுடன் மேற்கொள்ளப்படும் ஒரு சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.
ஒருவருக்கு அம்மை நோய் பீடித்திருக்கும் காலப்பகுதியில் வீட்டில் சைவ உணவு மட்டுமே சமைக்கப்படும். “அம்மியில் எந்தப் பொருளும் அரைக்கப்படாது”, “அம்மி தட்டக்கூடாது” என்பது ஒரு முக்கிய நம்பிக்கையாகும். அதேபோல், “எண்ணெய்ச் சட்டி வைக்கக் கூடாது”, “கறி வகைகள் தாளிக்கப்படக் கூடாது” எனும் நம்பிக்கைகளும் காணப்படுகின்றன. வெளிநபர்கள் வீட்டிற்குள் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் விளக்கு வைக்கும் நேரத்திற்கு முன்பாகவே வீடு திரும்ப வேண்டும். இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகள் இன்றளவும் சில இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அம்மை “விளையாடும்” காலத்தில் வாழை இலையிலேயே உணவு பரிமாறப்படும். வீட்டில் பயன்படும் எந்தப் பொருளையும் நோயாளி தொடக்கூடாது. அவரை வேலை செய்ய வைக்கவும் கூடாது. அவருக்குத் தேவையான இளநீரும் ஆனை வாழைப்பழமும் வழங்கப்படும். குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், அயலவர்கள் கூட இந்நடைமுறைகளுக்கு மதிப்பளித்து அதே ஒழுங்குகளைப் பின்பற்றுவார்கள்.
இந்தக் காலப்பகுதியில், அம்மனின் மனமகிழ்ச்சிக்காக மாரியம்மன் தாலாட்டு பாடுவது ஒரு முக்கியமான பண்பாட்டு நடைமுறையாகக் கருதப்படுகிறது. அம்மையின் தீவிரத்திற்கேற்ப இந்தத் தாலாட்டு ஐந்து நாட்கள், ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்கள் வரை பாடப்படும். தாலாட்டைப் பாடுபவர் உடல் மற்றும் மனத் தூய்மையுடன் இருந்து, அம்மை நோயால் பாதிக்கப்பட்டவருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் வகையில் பாடுவார். இதன்போது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சூடம் ஏற்றிக் காட்டி, மாரியம்மனைச் சாந்தப்படுத்தும் வழிபாட்டையும் மேற்கொள்வார்.
“மாரி மகமாயி மணி மந்திர சேகரியே
ஆயி உமையவளே ஆதி சிவன் தேவியரே
மாரித்தாய் வள்ளியே மகாராணி வாருமம்மா
மாயன் சகோதரியே மாரிமுத்து வாருமம்மா
ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரிமுத்து
தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா”
“திக்கெல்லாம் போற்றும் எக்காலத் தேவியரே
எக்காலத் தேவியரே திக்கெல்லாம் நின்ற சக்தி
கண்ண புரத்தாளே காரண சௌந்தரியே
காரண சௌந்தரியே நாராயணன் தங்கையரே
நல்லமுத்து மாரியரே நாகக்கன்னி தேவியரே
பார் உலகில் இக்கதையைப் படித்தோர் மிகவாழி
நாரணியார் தன் கதையை நாள்தோறும் வாசிப்போர்
பாரில் புத்திர பாக்கியம் படைத்து மிக வாழ்வாரே
மாரி திருக்கதையை மணமகிழ்ந்து கேட்போரும்
தேவி திருக்கதையை தீர்க்கமாய் கேட்போரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான் பெறுவர்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தான் அடைவர்
ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி
மூங்கில் போல் சுற்ற முசியாமல் வாழ்ந்திருப்பர்”
என இந்த மாரியம்மன் தாலாட்டு நிறைவு பெறுகிறது (இது மிக நீண்ட நெடிய பாடல் என்பதால் முதல் பகுதியும் இறுதிப் பகுதியும் மட்டுமே இங்கு தரப்படுகிறது). இதன்மூலம், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர் அல்லது “அம்மை விளையாடியவர்” எனக் கருதப்படுபவர் படிப்படியாக நலம்பெறுவார் என்று நம்பப்படுகிறது. அதன் பின்னர், அம்மன் ஆலயத்துக்கு தண்ணீர்க் குடம் எடுத்துச் சென்று கோவிலை வலம் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.
இதனைத் தொடர்ந்து நேர்த்திக்கடன்கள் பல்வேறு முறைகளில் நிறைவேற்றப்படுகின்றன. அம்மை விளையாடியவர் ஊர் முழுவதும் சென்று மடிப்பிச்சை எடுப்பார். அவ்வாறு பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு வந்து ஆலயத்தில் வைத்து கஞ்சி காய்ச்சி பக்தர்களுக்கு வழங்குவார். மற்றொரு முறையில், பச்சை அரிசியை ஊறவைத்து இடித்து, அதனுடன் சீனி அல்லது சர்க்கரை கலந்து அம்மனுக்குப் பூஜை செய்து பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள். இவ்வாறான சடங்குகள் அம்மை நோயிலிருந்து குணமடைந்தவர்கள் நிறைவேற்றும் முக்கியமான நேர்த்திக்கடன்களாகக் கருதப்படுகின்றன.
மேலும், அம்மனுக்குக் “கண்ணடக்கம்” வைப்பதாகவும் பக்தர்கள் வேண்டிக்கொள்வர். அம்மன் திருவிழா நடைபெறும் காலத்தில் கரகம் பாலித்தல் சிறப்பாக நடைபெறும். அந்தக் கரகத்தில் மஞ்சளால் அம்மனின் முகம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அம்மன் ஊர்வலமாக வரும்போது, கரகத்தில் உள்ள அம்மனுக்கு கண்ணடக்கம் சாத்தி தாம் எடுத்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர்.
“மார்பினில் முத்தையம்மா மாதாவே
நீ இறங்கு
வயிற்றில் முத்தையம்மா மகேஸ்வரி
நீ இறங்கு
துடையினில் முத்தையம்மா தூயவளே
நீ இறங்கு
கணுக்காலில் முத்தையம்மா காமாட்சி
நீ இறங்கு
பாதத்தை அம்மா பாரினில் இறக்கி விடு
பூமியிலே இறக்கி விடு
பெற்றவளே காருமம்மா
பெற்றவளே தாயே பேரரசி மாரிமுத்தே
உற்ற துணை இருந்து
உகந்தமே காருமம்மா
உன்னை விட பூமிதனில்
உறுதித்துணை வேறுமுண்டோ
பக்கத்துணை இருந்து பாதுகாத்து
ரட்சி அம்மா
செக்கச் சிவந்தவளே செங்கண்ணன் தங்கையரே”
அம்மை இறங்குவதற்காக அம்மை போட்ட இடங்களைச் சொல்லி, மாரியை வேண்டும் பாடல் இது. இவ்வாறு மலையக மக்களின் வாய்மொழி மரபுகளிலும் பாடல்களிலும், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு சடங்காச்சாரங்களையும் நம்பிக்கைகளையும் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு பண்பாட்டிலும் நோய் தொடர்பான கருத்துருவாக்கங்கள் பல்வேறு மூலங்களிலிருந்து தோன்றுகின்றன. குறிப்பாக, நோய் குறித்த நம்பிக்கைகள், பண்பாட்டு வழியிலான உடலியல் புரிதல்கள், நோய்க்கான காரண–காரிய விளக்கங்கள், நோய் வகைப்பாடுகள், நோயறிதல் முறைகள், குணப்படுத்தும் வழிமுறைகள், மருந்து மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறன் குறித்த எண்ணக்கருக்கள் உள்ளிட்ட பல்வேறு கூறுகள் பண்பாட்டின் அடித்தளங்களோடு இணைந்தே உருவாகின்றன. இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு சமூகமும் நோயை வரையறை செய்கிறது. அதேபோன்று, அந்த நோயைக் குணப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் சிகிச்சை நடைமுறைகளையும் தமது பண்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துகிறது.
இந்தப் பின்னணியில், மலையக மக்களின் வாழ்வியலில் அம்மை நோய் ஒரு முக்கியமான நோயாகக் கருதப்படுவதோடு, அதனை எதிர்கொள்வதற்கும் குணப்படுத்துவதற்கும் மேற்குறிப்பிட்ட சடங்காச்சார நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நடைமுறைகள் வெறுமனே நோய் நீக்கச் சடங்குகளாக மட்டுமன்றி, அந்த சமூகத்தின் நம்பிக்கைகள், வாழ்வியல் அனுபவங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளாகவும் திகழ்கின்றன.
அதேவேளை, நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களைக் குணப்படுத்தும் பொறுப்பில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் சமூகத்தினரும் மொழி, பண்பாடு, பொருளாதார நிலை போன்ற பல்வேறு காரணிகளால் வேறுபட்டவர்களாக இருந்தபோதிலும், இந்நோயை எதிர்கொள்வதில் ஊர்ப் பெரியவர்கள், பூசாரிகள் மற்றும் ஆலயப் பண்டாரங்களின் வழிகாட்டுதலையே அதிகம் நம்பியுள்ளனர். அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் அம்மை நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சடங்குகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மலையக மக்களின் வாழ்வியல் முறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய நோய்களுள் அம்மை நோய் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக சமூகத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளும், மாரியம்மன் மீது மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவையாகக் காணப்படுகின்றன. நோயிலிருந்து முழுமையான குணமடைதலைப் பெறும் நோக்கில், அவர்கள் பல்வேறு சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். அம்மை நோயை மையமாகக் கொண்டு உருவான இந்நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் சமூக நடைமுறைகள் மலையக மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறுகளுள் ஒன்றாகக் கருதப்பட வேண்டியவையாகும்.
சான்றாதாரங்கள்
1. பக்தவத்சல பாரதி. (2014). இலங்கை–இந்திய மானிடவியல். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
2. தனஞ்செயன், ஆ. (2012). குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும். சென்னை: பாவை பிரின்டர்ஸ்.
3. தனஞ்செயன், ஆ. (2015). விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
4. வேலுப்பிள்ளை, சி.வி. (1976). மாமன் மகளே. கொழும்பு: சுதந்திரம் அச்சகம்.



