பன்னெடுங்காலந்தொட்டுக் கோயில்கள் சமூக நிறுவனங்களாக இயங்கி வந்திருக்கின்றன. சமூகத்தைத் தன்னுடன் பிணைத்துக்கொள்ள, மனிதனின் அன்றாட வாழ்வியலுடன் தொடர்புபட்ட விடயங்களான நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகளும் அதனுடன் இணைந்த நிகழ்த்துகலைகளும் கோயில்களினூடாக வளர்த்தெடுக்கப்பட்டன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலே கோயில்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சடங்குகளும் நிகழ்த்துகலைகளும் சமூகத்தினரை ஒன்றுதிரட்டுகின்ற களமாக விளங்கி வந்திருக்கின்றன.
வைகாசிக் குளிர்த்திச் சடங்கு
கண்ணகி அம்மன் ஆலயத்தில் வருடம் ஒருதடவை வைகாசி மாதத்தில் வருகின்ற பூரணையில் இடம்பெறுகின்ற சடங்கு குளிர்த்திச் சடங்காகும். இதனை ‘வைகாசிச் சடங்கு’ என்றும் மக்கள் அழைக்கின்றனர். குளிர்த்தி என்பது கோபத்தைத் தணித்தல் என்று பொருள்படுமென்றும் மதுரையைக் கண்ணகி எரித்தபோது ஏற்பட்ட நெருப்பை அணைத்து ஒரு முடிவுக்குக் கொண்டுவருவது போல் இக்குளிர்த்தி நடைபெறுகின்றதென்றும், கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார்.1 மட்டக்களப்பு மான்மியம் குளிர்ச்சி என்பது குளிர்த்தி ஆகியிருக்கலாம் எனக் கூறுகின்றது.2

மதுரையை எரித்த கண்ணகி கோபம் தாங்காது இடைச்சேரிக்கு வந்தாள். அங்குள்ள ஆயர்கள் அவளைக் குளிர்விக்க நெய், தயிர் முதலானவற்றை அவளின் மார்பில் பூசி வெப்பத்தைத் தணித்துத் தம்மைக் காக்கும்படி வேண்டினர். இவர்களின் வேண்டுகோளின்படி கண்ணகி கோபம் தணிந்து குளிர்ந்து அவர்களை வாழ்த்திச் சென்றாள். அதனை நினைவு கூறுகின்ற வகையிலே குளிர்த்திச் சடங்கு இடம்பெறுகின்றதென்று இலங்கையில் இந்துக்கள் மத்தியிலே தொன்மக் கதையொன்று காணப்படுகின்றது. இதனைப் பின்வரும் குளிர்த்திப் பாடல்வரிகள் உறுதிசெய்கின்றன.
“இப்பா ரிடந்தனில் வந்தாள்
இடைச்சேரி வாழ்விக்க வந்தாள் வந்தாள்
ஒப்பான பாலகர்க் கான அன்பாய்
ஒரு மாபத்தினி வந்தாள்”3
கண்ணகியின் கோபத்தழலில் பிராமணரும் பெண்டிரும் பசுக்களும் அழியக்கூடாது என இளங்கோவடிகள் எழுதியுள்ளார். ஆனால் கண்ணகியம்மன் குளிர்த்திப்பாடல்களில்,
“எச்சேரி வெந்தாலும் இடைச்சேரி வேகாமல்
பச்சேரி வெந்தாலும் பறைச்சேரி வேகாமல்…”4
என்று காணப்படுவதும் மனங்கொள்ளத்தக்கது.
வண்ணான் கூய் அறிவிப்பு
கண்ணகி அம்மன் கோயிலில் குளிர்த்திச் சடங்கிற்காகக் கதவு திறப்பதற்கு முன்னரே ஊர்மக்கள் கூடிச் சகல ஏற்பாடுகளையும் தீர்மானிப்பர். கதவு திறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே இரவில் வண்ணான் கூய் போடுதல் இடம்பெறும். பிரசவமானோர், பூப்படைந்தோர், வீட்டுக்குத் தூரமானோர் ஊரைவிட்டு வெளியேறும்படி கூறிக் கூப்பாடு போடப்படும். அவர்கள் ஊரைவிட்டு வேறிடம் செல்வார்கள். இந்நிகழ்வுடன் புலால் உணவு உண்ணுதலும் விலக்கப்படும். இதனால் ஊரே சுத்தமடையும். ஊர்மக்கள் கூடி ஆலய வளவு தொடக்கம் அயல் முழுவதையும் சுத்தம் செய்வர். வெளியிடங்களில் தங்கியுள்ள சகலருமே கண்ணகை அம்மன் சடங்கு என்றவுடன் ஊர் திரும்பிவிடுவது மரபாகும்.5
கதவு திறத்தல் சடங்கு
வைகாசி மாதப் பூரணையினை அண்டிய குறிப்பிட்ட சில நாட்களின் முன்னர் கண்ணகியம்மன் கோயில்கள் திறக்கப்பட்டுவிடும். மந்திரப் பூசனைகளோடு தேங்காய் உடைத்தலுடன் கதவு திறக்கும் சடங்கு ஆரம்பமாகும். பெரும்பாலான இடங்களில் ஒரு ஞாயிறு இரவு கதவு திறத்தல் இடம்பெறும். சில ஊர்களில் வெள்ளிக்கிழமை இரவும் ஆரம்பமாகும். கதவு திறத்தலுடன் ஒன்பது நாட்கள் அல்லது பதினொரு நாட்கள் இச்சடங்கு நிகழும். சில கிராமங்களில் கதவு திறத்தல் சடங்கிற்கான சோறுகொடுத்தல் தலைமை வண்ணக்கர் வீட்டிலே இடம்பெறும். இதனைச் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கம்மடுவச் சடங்கின் முன்னர் கப்புறாளையின் வீட்டிலே ‘பீ பத்’ கொடுக்கும் சடங்குடன் ஒப்பிட்டு நோக்கமுடியும்.
கதவு திறப்பதற்கு முன்னர் கட்டாடியார் என்று அழைக்கப்படுகின்ற பூசகர் தலையில் நீரை வார்த்து ‘மாத்து’ உடுத்தி ஊர் முழுவதும் காவல் செய்வதற்காகப் புனிதத் தீர்த்தத்தினைத் தெளிப்பார். இதன் பின்னரே பூசைப் பொருட்களைத் தட்டில் வைத்து கோயில் திறப்பினையும் அதனுடன் வைத்துப் பூசை செய்வார். சில கிராமங்களில் ஒரே தடவையில் கதவு திறக்காதவிடத்து கட்டாடியார் ஏழு தடவை தலையில் நீரை வார்த்து ஏழு தடவை மாத்து உடுத்திய பின்னரே கதவினைத் திறப்பார் என்று கூறப்படுகின்றது. சில ஊர்களில் கலியாணக்கால் வெட்டி கடல்நீரினைக் கொண்டுவந்து தெளித்த பின்னரே கதவு திறக்கும் வழக்கம் உண்டு.
கல்யாணக்கால் சடங்கு
இச்சடங்கினைக் ‘கல்யாணச் சடங்கு’ என்றும் அழைப்பர். கதவு திறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் மதியம், இரவு எனச் சடங்குகள் நடைபெறும். திருக்குளிர்த்திக்கு முன்னர் கல்யாணக்கால் சடங்கு இடம்பெறுவது வழக்கமாகும். கட்டாடியார் பெண்ணைப் போல் சேலை உடுத்தி முக்காடிட்டு பறைமேளம் ஒலிக்க, பெண்களின் குரவை ஒலிக்க, ‘அரோகரா’ சத்தத்துடன் கல்யாணக்கால் வெட்டும் இடத்திற்குச் செல்வார்.6 முன்பே பார்த்துத் தீர்மானித்த மரத்தடியிலே மடை வைத்துப் பூசை செய்யப்படும். கல்யாணக்காலிற்கு அநேகமாக பூவரசு மரமே தெரிவு செய்யப்படும். அதன் பின்னர் அம்மரம் கட்டாடியாரால் வெட்டப்படும். கல்யாணக்காலினை வெட்டிக்கொண்டு திரும்பும்போது கட்டாடியார் உருவேறிய நிலையிலேயே ஓட்டமாகக் கோயிலுக்குள் செல்வார்.

வெட்டிக் கொண்டுவரப்பட்ட கல்யாணக்கால் மூலஸ்தானத்திற்கு முன்னே உள்ள கல்யாண மண்டபத்திலே நடுவே இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையின் மீது நடப்பட்டு அழகான சேலைகளினால் அலங்கரிக்கப்பட்டு பெண் போன்ற தோற்றம் தருகின்ற வகையிலே அமைக்கப்பட்டிருக்கும். இதனைக் கண்ணகியம்மனாகப் பாவித்து கோவலனுக்குத் திருமணம் செய்விக்கப்படும். கட்டாடியாரே கோவலனாக வேடமிட்டு கல்யாணக்காலிற்குத் தாலியைக் கட்டுவார். இதன்போது கல்யாண ஏடு படித்தலும் இடம்பெறும். பூசை நேரங்களின் போது திருநீறு, தீர்த்தத்துடன் வெற்றிலை, பாக்கும் கல்யாணப் பலகாரமும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
கும்பச் சடங்கு
கலியாணக்காலிற்கு முன்னர் பூரணக்கும்பமும் மடையும் வைக்கப்படும். இதற்காக நெல் குவியலாகக் கொட்டப்பட்டு அதற்கு மேலேதான் பூரணக்கும்பம் வைக்கப்படும். இது வெற்றிலை, பாக்கு, கமுகம்பாளை, தாமரைப்பூ, வேப்பிலை போன்றவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்படும். கட்டாடியார் இக்கும்பத்தின் முன்னே வந்து உடுக்கையினைப் பலமாக அடிப்பார். அதன்போது தீராத நோயுள்ளவர்கள் கும்பத்தினைச் சுற்றி நிற்பார்கள். அவர்கள் மீது இந்த உடுக்கை பட்டால் அவர்களின் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பச்சைகட்டிச் சடங்கு
மட்டக்களப்பு ஆரையம்பதி கண்ணகி அம்மன் கோயிலில் வைகாசிச் சடங்கின் ஏழாம் நாள் நடைபெறுகின்ற சடங்கு பச்சைகட்டிச் சடங்கு எனப்படுகின்றது. இச் சடங்கின் போது அம்மனிற்கு நிவேதனமாகக் கனியாத காய்ப்பருவம் கொண்ட பழ வகைகளே படைக்கப்படுகின்றன. கண்ணகி கோவலனுடன் மதுரை வந்து சேர்ந்த நாள் தொடக்கம் அவர்களின் உணவிற்காக ஆயர் குலத்தவர்கள் பச்சை அரிசியும் பச்சைக் காய்கறிகளும் கொடுத்துக் காப்பாற்றியதை நினைவுகூரும் முகமாகவே இப் பச்சைகட்டிச் சடங்கு நடைபெறுகின்றது. பச்சைகட்டி என்ற சொல்லாடல் காரைதீவுக் கண்ணகியம்மன் ஆலயத்திலும் வழக்கில் உண்டு. அங்கு வைகாசிச் சடங்கு நாட்களில் தினமும் பகற்பூசையில் படைக்கப்படுகின்ற கறியமுதே பச்சைகட்டி என்று கூறப்படுகின்றது.

வைகாசிப் பொங்கல்
நேர்த்திக்கடனாக அம்மனிற்குக் கொடுக்கப்பட்ட நெல்லை ஆலயத்தில் பெண்கள் கூடி குற்றி அரிசியாக்குவர். இவ்வாறு குற்றிய அரிசியை அம்மனிற்காகப் பொங்கும் நிகழ்வு ‘விநாயகப்பானை வைத்தல்’ எனப்படும். ஆலய முன்றலில் அடுப்பு மூட்டி மூன்று பானைகளை அடுப்பிலே வைப்பர். பானையில் பால் பொங்கும் வேளையில் நடுவிலுள்ள பானைப்பாலை எடுத்துச் சென்று அம்மனுடைய மடையில் வைப்பர். பொங்கலிற்கான பாலினை மாட்டுப்பட்டி அதிகமாகவுள்ள கிராமங்களில் மக்கள் நேர்த்தியாகக் கொண்டுவந்து கொடுப்பர். விநாயகப்பானையில் பொங்கிய பாலானது, நேர்த்திக்காகப் பொங்கல் பொங்குகின்ற மக்கள் அனைவரிற்கும் பகிர்ந்து கொடுக்கப்படும். இறுதியில் ஒவ்வொருவரினது பொங்கல் பானையிலிருந்தும் மூன்று அகப்பைப் பொங்கல் அள்ளப்பட்டு அம்மனிற்குப் படைக்கப்படும். படைக்கப்பட்ட அப்பொங்கல் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும்.
திருக்குளிர்த்திச் சடங்கு
வைகாசி மாதப் பூரணையில் திருக்குளிர்த்தி ஆடுதல் இடம்பெறும். இதன்போது குளிர்த்தி ஏடு படிக்கப்படும். கண்ணகை அம்மனது மதுரையை எரித்த கோபமானது தம் பூசனைகளினால் தணிந்து குளிருமாறு அம்மனை வேண்டுதல் செய்து குளிர்த்திப் பாடல்களைப் பாடுவர்.7 அதன்போது கட்டாடியார் பெண் வேடம் தாங்கி வந்து கரைத்து வைத்த மஞ்சள் நீரினை வேப்பிலைகளால் தோய்த்து மக்களிற்குத் தெளிப்பார். இக் குளிர்த்தி நீர் உடலில் படும்போது நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
“காளி புடைசூழுங் காவிரிப் பூம்பட்டிணத்தில்
வாழ்வணிகர் தங்குலத்து மாதே குளிர்ந்தருள்வாய்”8
என்று வாழிப்பாடல் பாடப்பட்ட பின்னர் குளிர்த்திச் சடங்கு நிறைவுபெறும். அதன்பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் குளிர்த்திப் பானகம் வழங்கப்படும். அதன்பின்னர் கட்டாடியார் மூலஸ்தானத்தினுள்ளே தூண்டாமணி விளக்கினை எரியவிட்டுக் கதவினை மூடுவார். பின்னர் ஒவ்வொரு கதவாக அடைக்கப்படும்.
எட்டாம் நாள் சடங்கு
இச்சடங்கினைத் தெளிவுச்சடங்கு என்றும் கூறுவர். குளிர்த்திச் சடங்கு நிறைவடைந்து எட்டுநாட்களின் பின்னர் இச்சடங்கு இடம்பெறும். அன்றையநாள் கட்டாடியார் கோயிலுக்குச் சென்று தலையில் நீரை வார்த்து மாத்து உடுத்திப் பயபக்தியுடன் கதவைத் திறப்பார். குளிர்த்தியன்று ஏற்றிவைத்த விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் ஊர் உலகிற்கு நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையும் அணைந்து போனால் தீமை நடக்கும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது. பின்னர் கட்டாடியார் மூலஸ்தானத்திலே மடைவைத்துப் பூசை செய்வார். இதன்பின்னர் கோயிற் கதவு அடைக்கப்படும். இதன்போது அடைக்கப்படுகின்ற கதவு மீண்டும் அடுத்தவருடம் வைகாசிச் சடங்கின்போதே திறக்கப்படும்.
வைகாசிக் குளிர்த்திச் சடங்குடனும் கொம்பு விளையாட்டுடனும் தொடர்புடைய நிகழ்த்துகலைகள்
குரவை போடுதல்
இலங்கையில் கிராமங்கள் தோறும் இடம்பெறும் சமய விழாக்களிலும் மங்கல நிகழ்ச்சிகளான திருமண வீடுகளிலும் பூப்பு நீராட்டு வீடுகளிலும் குரவை போடுதல் இடம்பெறுகின்றது. இக்குரவை போடுதல், மனமகிழ்ச்சியை உண்டுபண்ணுதல் அல்லது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்துதல் என்னும் அடிப்படை நோக்குடனே நிகழ்த்தப்படுகின்றது. குரவையை மட்டக்களப்புப் பிரதேசத்தில் குலவை என்று குறிப்பிடுகின்றனர். இக்குரவை கண்ணகியம்மன் வழிபாட்டுடன் அதிகம் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. மட்டக்களப்பிலுள்ள முஸ்லிம் பெண்கள் கூட மங்கள நிகழ்ச்சிகளில் குரவை ஒலி செய்கின்றனர்.
நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டுப் பெண்கள் கண்ணகியம்மன் சடங்கு நடைபெறும் காலங்களில் குலவை போடுவார்கள். அம்மனின் சந்நிதியில் குலவை போடுதல் புனிதமான தொண்டு எனப் பக்தர்கள் கருதுவதோடு தமது குலவையை அம்மன் விரும்புகின்றாள் என்றும் அது அவளை மகிழ்விக்கும் என்றும் நம்புகின்றனர். கண்ணகி அம்மன் சடங்கின் ஐந்தாம் நாள் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடப்பதனைக் குறிக்கின்ற ‘கல்யாணப் படிப்பு’ நடைபெறும். இத் திருக்கல்யாண நிகழ்ச்சியன்று குலவை போடுதல் மிகவும் சிறப்பானதாகும். வைகாசிச் சடங்கின் எட்டாம் நாள் குளிர்த்திச் சடங்கு நடைபெறும் போதும் குலவை போடப்படுகின்றது. கண்ணகியம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய போர்த் தேங்காய் அடித்தல், கொம்பு முறித்தல், ஏடகம் (தேர்) ஊர்வலம் வருதல் ஆகிய சந்தர்ப்பங்களிலும் பெண்களது குரவை இடம்பெறுகின்றது. இந்நிகழ்ச்சிகளில் ஆண்களும் குலவை போடுவதைக் காரைதீவில் காணமுடிகின்றது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றிய குன்றக் கானக் குறமகளிர் குரவையாடியமை குறிப்பிடத்தக்கது. உடல் நலம் குன்றித் தம் பெண்மக்கள் இருக்குங்காலத்து, தாயார் அவர்களுடைய நோயின் கடுமையினைக் குறைக்குமாறு கண்ணகியம்மனை வேண்டி ‘மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு நின் கோயில் காத்து குரவையிட்டுச் செல்வேன்’ என்று நேர்த்திக்கடன் செய்வதிலிருந்து குரவையிடுதல் கண்ணகி வழிபாட்டுடன் எத்தகைய பிணைந்த நிகழ்ச்சியாயிற்று என்பதனை நாம் அறிந்து கொள்ளுதல் கூடும்.9
காவடியாட்டம்
ஆலயங்களின் உற்சவங்களின் போது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டாகக் காவடியாட்டம் இடம்பெறுகின்றது. இவ் ஆட்டத்தின் போது தாளக்கட்டிற்கமையப் பாடல்கள் பாடப்படுகின்றன. முருகன், பிள்ளையார், மாரியம்மன், கண்ணகியம்மன் போன்ற தெய்வங்களைப் பற்றியதாக இப்பாடல்கள் காணப்படும். இது முழுமையாகத் தன்னைச் சமயச் சடங்குகளிலிருந்து விடுவித்துக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டிலே இடம்பெறும் பாற்காவடி, பன்னீர்க்காவடி, பூப்புக்காவடி, ஆனந்தக்காவடி, சக்கரக்காவடி, சந்தனக்காவடி, முட்காவடி போன்ற பல்வகையான காவடி ஆட்டங்களுள் பாற்காவடியும் முட்காவடியுமே இலங்கையில் கண்ணகி வழிபாட்டுடன் நிகழ்த்தப்படுகின்றன.
கரகாட்டம்
கண்ணகி கோயில்களில் இடம்பெறும் கலையாடல்களுள் கரகாட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய பதினொரு வகையான ஆடல்களுள் ஒன்றான குடக்கூத்திலிருந்தே இன்றைய கரகாட்டம் தோன்றியிருக்க வேண்டும் என்று ஒருசாரார் கருதுகின்றனர்.
மட்டக்களப்பில் செட்டிபாளையம் கண்ணகியம்மன் கோயிலில் கரகாட்டத்தின் போது பாடப்படுகின்ற பாடல்கள் மாரியம்மன், முருகன், கண்ணகி போன்ற தெய்வங்களை வேண்டிப் பாடப்படுகின்றன. இதன்போது ஒரு சிறுமி கண்ணகி போன்று வேடமிட்டுக்கொண்டு நிற்பாள். இச்சிறுமியைச் சுற்றியே கரகாட்டம் ஆடப்படும். இது ஏடக ஊர்வலத்தின் போது ஏடகத்தின் முன்னர் ஆடப்படுகின்றது.
பள்ளுக்கு வளைதல்
கிழக்கிலங்கையில் தம்பிலுவில் கண்ணகியம்மன் ஆலயத்தில் மட்டுமே கொம்பு விளையாட்டின் போதும் வைகாசிச் சடங்கின் போதும் பள்ளுக்கு வளைதல் இடம்பெறுகின்றது. கொம்பு விளையாட்டின் போது, போர்த்தேங்காய் உடைப்பதற்கு முன்னர் வட சேரியினரும் தென் சேரியினரும் இணைந்து ஆடுகின்ற நிகழ்வே பள்ளுக்கு வளைதல் ஆகும். காய்ந்த தென்னம் ஓலைகளை ஒன்றாகக் கயிற்றினால் சேர்த்துக் கட்டி அதற்குத் தீ மூட்டிப் பின்னர் அது எரிகின்றபோது அதனைச் சுற்றி இரண்டு கைகளையும் தட்டியவண்ணம் கண்ணகி அம்மனிற்குரிய பள்ளுப் பாடல்களைப் பாடி ஆடுவர்.
வெற்றி பெற்ற கொம்பு ஊரைச் சுற்றி வலம் செல்வதற்கு முன்னரும் பள்ளுக்கு வளைதல் இடம்பெறும். கண்ணகியம்மன் ஊருக்குள் வலம் செல்ல முன்னர் தீய விடயங்கள் அனைத்தையும் இத்தீயில் எரிய வைப்பதற்காகவே தீ மூட்டப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். கண்ணகி மதுரை நகரினை எரித்த சிலப்பதிகாரக் கதையினை இது நினைவுபடுத்துகின்றது.
பள்ளுக்கு வளைவதில் ஆண்கள் மட்டுமே ஆடுவர். ஏனையோர் பார்வையாளர்களாக இருப்பர். பள்ளுக்கு வளைகின்ற போது ஆலயக் கற்பூரகனாரினால் கண்ணகியம்மன் பள்ளுப் பாடல் இராக தாளத்துடன் பாடப்படுகின்றது. இவ்வாறு பாடப்படுகின்ற போது உடுக்கை, சவணிக்கை, சல்லரி போன்ற வாத்தியங்கள் வாசிக்கப்படும். இவ்வாத்தியங்களை வாசிப்போரும் தத்தமது வாத்தியத்தினை இசைத்தவாறு வட்டமாக ஆடுவர்.
வசந்தன் கூத்து
வசந்தன் கூத்து நாட்டார் கலை வடிவங்களுள் காணப்படுகின்ற ஓர் ஆடற்கலை வடிவமாகும். கிழக்கிலங்கையின் பல பாகங்களிலும் செழிப்பாக வளர்ந்து வந்த நாட்டார் கலைகளுள் வசந்தன் கூத்தும் ஒன்றாகும். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புபட்ட பக்தி கலந்த நிகழ்த்துகலையாக இக்கூத்து காணப்படுகின்றது. இதனை எட்டுப் பேர், பன்னிரண்டு பேராகச் சேர்ந்து ஆடுவார்கள். ஆடும்போது ஒவ்வொருவரும் கைகளில் சிறு கோல்களைப் பிடித்து அவற்றை ஒன்றோடொன்று தட்டி ஆடுவர். இதனால் இவ்வசந்தனாட்டம் ஒரு விதத்தில் கோலாட்டத்தை ஒத்திருக்கும் என்று சதாசிவ ஐயர் கூறுகின்றார்.10
வசந்தன் கூத்து தமிழர்களால் ‘வசந்தகாலம்’ என்று கூறப்படுகின்ற, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற மாதங்களிலே சிறப்பாக இடம்பெறுவதால் கால அடிப்படையில் வசந்தன் எனப் பெயர் பெறுவதாயிற்று. வசந்த காலத்திற்குரிய ஆடலோடு கூடிய பாடலாதலின் ‘வசந்தன் கவி’ ஆயிற்று. இது காலத்தினால் பெற்ற பெயராகும்.11 “கோலாட்டத்தைப் பெரும்பாலும் கிராமங்களில் நடக்கும் வசந்தகால விளையாட்டு என்றே கூறலாம்” எனக் கலைக்களஞ்சியம் விளக்கம் தருகின்றது.12 வசந்தம் என்பதற்கு இன்பம் என்ற பொருளுமுண்டு. சுவாமி விபுலானந்தர் வசந்த காலத்திற்குரித்தானபடியால் இவை வசந்தன் எனப் பெயர் பெற்றன என்கின்றார்.13
மட்டக்களப்பில் மார்கழி மழையை எதிர்பார்த்தே விதைப்புகள் நிகழும். பங்குனி மாதத்தில் அறுவடை நடைபெறும். சித்திரையில் வீடுகளில் நெல்லும் பொருளும் நிறைந்து கிடக்கும். இக்காலமே அவர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய காலமாக, வசந்த காலமாக இருக்கும். இக்காலங்களிலேயே இப்பிரதேசத்தில் வசந்தன் ஆட்டம், பறைமேளக் கூத்து, மகிடிக் கூத்து ஆகியன இடம்பெறும். ‘மக்கள் வயல் வேலைகள் முடிந்த பின் நிறைந்த இன்பத்தினால் ஆடும் ஓர் இனிய கூத்து’ என்று வீ.சி. கந்தையா கூறுவதும் மனங்கொள்ளத்தக்கது.14
வசந்தன் பாடல்களில் பள்ளர்களே முக்கிய இடம் பெறுகின்றனர். இது தமிழில் உள்ள பள்ளு இலக்கிய வடிவத்தினை ஒத்திருப்பினும், முழுமையான பள்ளு என இதனைக் கொள்ள முடியாதுள்ளது. எனினும் பள்ளின் மூலக்கூறுகளை இங்கு காணமுடிகின்றது.
பல வகையான ஆடல்களும் பாடல்களும் கொண்டு காணப்படுகின்ற இவ்வசந்தன் கூத்தில் கண்ணகி வழிபாட்டினைச் சார்ந்தனவாக, ‘அம்மன் பள்ளு’, ‘மாதவி நடனம்’, ‘கூவாய் குயிலே வசந்தன்’ முதலியன காணப்படுகின்றன. இவற்றில் காணப்படும் கண்ணகி வழிபாடு, சிலப்பதிகாரத்திற்கு மாறான ஒன்றாகத் தோன்றுகின்றது. கண்ணகியின் பிறப்பு தெய்வீக முறையிலே இப்பாடல்களில் காட்டப்பட்டுள்ளது.
“உருவில் லாத மாய மாகியே – நுதல்விழிதனில்
ஒருபொறி கவிழ்ந் துறக்க மானதே
விருத ராசர்கள் புகழ்தென் பாண்டியன் – வீற்றிருக்கின்ற
வேளை அன்னதில் மாங்கனி யானதே”15
இறைவனின் நெற்றிக்கண் பொறியொன்று மாங்கனியாகி, அம்மாங்கனியே பின்னர் கண்ணகியாக மாற்றம் பெற்றது என்று அம்மன் பள்ளு வசந்தனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கதையானது, கண்ணகி வழக்குரையின் கதையினை ஒத்துக் காணப்படுகின்றது.
கொம்பு விளையாட்டின் பின்னர் வெற்றி பெற்ற சேரியினரின் கொம்பு, கொம்புத்தட்டில் வைக்கப்பட்டு ஏடகத்தில் ஊர்வலமாகக் கொண்டுவரப்படும். இதன்போது முக்கியமான இடங்களில் (கொம்புச்சந்தி) கொம்புத்தட்டை வைத்து விட்டு ஆறு அல்லது எட்டு அல்லது பன்னிரண்டு பேர் ஒன்றாகக் கூடி வசந்தன் கூத்தினை ஆடுவர். இவற்றின் அடிப்படையில் தொகுத்து நோக்குகின்ற போது முக்கியமான மூன்று சந்தர்ப்பங்களின் போது இவ்வசந்தன் கூத்து ஆடப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
- வயல் வேலைகள் முடிந்து ஓய்வான நேரங்களில் ஆடுதல்.
- கண்ணகியம்மன் கோயில் குளிர்த்திச் சடங்கின் போது கோயிலின் முன்பாக ஆடுதல்.
- கொம்பு முறித்துத் தேரில் கொம்பினை ஊர்வலமாகக் கொண்டு வரும்போது சந்திகளில் நின்று ஆடுதல்.
இதிலிருந்து மக்களின் தொழிலுடனும் வழிபாட்டுடனும் வசந்தன் கூத்து தொடர்புபடுவதனைக் காணமுடிகின்றது. வசந்தன் கூத்தினை சிங்கள மக்களிடையே நிலவும் கோலம் என்ற கலையுடன் சி. மௌனகுரு தொடர்புபடுத்துகின்றார்.16 இ. பாலசுந்தரம் இதனை சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கோலாட்டமான லீஹெலியுடன் ஒப்பிடுகின்றார்.17
கோவலன் கூத்து
ஈழத்தில் பிராந்திய வேறுபாடுகளுடன் கூடிய சிலப்பதிகாரப் புத்தாக்கப் பிரதிகளும் சிலப்பதிகாரத்தின் கதைக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் பலவும் தமிழ், சிங்கள மக்களிடையே தோன்றி நிலைபெற்றுள்ளன. அவ்வாறு ஈழத்தின் வன்னிப் பிரதேசத்தில் சிலப்பதிகாரக் கதைமரபானது கூத்து வடிவமாகப் பயில்நிலையில் இருந்து வருகின்றது. வன்னிப் பிரதேசத்தில் நெடுங்காலந்தொட்டு சிலம்பு கூறல் என்னும் கண்ணகி வரலாற்றைப் படிப்பதோடு, அதே சரிதத்தைக் கூத்தாகவும் ஆடத் தொடங்கியிருக்கின்றார்கள். இக்கூத்து அவர்களின் ஒரு நேர்த்திக்கடனாகவே கண்ணகியம்மனிற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. பண்டைக்காலம் தொடக்கம் முள்ளியவளை, தண்ணீரூற்று, வற்றாப்பளை, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல், மணற்குடியிருப்பு, சிலாவத்தை, அளம்பில், செம்மலை, குமிழமுனை போன்ற இடங்களில் கோவலன் கூத்து ஆடப்பட்டு வருகின்றது. இவற்றையெல்லாம் விட முல்லைத்தீவுப் பிரதேசத்தில் ஆடப்பட்டு வந்த கோவலன் கூத்து ஒரு தனிப்பாணியில் அமைந்துள்ளது. இப்பகுதியிலுள்ள அருவி வெட்டுப் பாடல்கள், பள்ளுப் பாடல்கள், சிலம்பு கூறல் பாடல் மெட்டுகள் போன்றவை இந்தக் கூத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் கூத்தின் ஆட்டமுறைகளும் மற்றைய கூத்துகளை விட வேறுபட்டவையாக இருக்கின்றன.18
இக்கிராமங்களில் பரம்பரையாக வரும் அண்ணாவிமார் கூத்தைப் பழக்கி, அவ்வூர் கண்ணகியம்மன் கோயிலில் ஆடுவது வழக்கம். புதுக்குடியிருப்பில் த. பொன்னம்பலம் அண்ணாவியார் 1926ஆம் ஆண்டளவில் கோவலன் கூத்தைப் பழக்கி மேடையேற்றியதாக வாய்வழித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூத்தில் நடித்த பலர் பிற்காலத்தில் அண்ணாவிமாராக இருந்துள்ளனர்.19
கோவலன் கூத்து முற்றிலும் ஆண்கள் பங்குபற்றும் கூத்தாகும். இது நேர்த்திக்காக ஆடப்பட்டதால் பெண்களைச் சேர்த்து ஆடுவது தவிர்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் கூத்தைப் பழக ஆரம்பிக்கும் போதும் கும்பம் வைத்துக் கற்பூரம் கொழுத்தி, தேவாரத்துடன் ஆரம்பிப்பது மரபு. வேளாண்மையின் அறுவடை முடிந்த பின்னரே கோவலன் கூத்தாடும் காலம் ஆரம்பமாகும்.
வன்னிப் பிரதேசத்தின் பிரதானமான சீவனோபாயமாக அமைவது விவசாயமே. தமது விவசாய நடவடிக்கைகளிற்கு இயற்கையையே நம்பியிருக்கின்றனர். வெப்பமும் வெப்பத்தினால் வருகின்ற நோய்களும் கண்ணகியின் சீற்றத்தினாலேயே ஏற்படுகின்றன என்று இவர்கள் நம்புகின்றனர். அம்மனின் சீற்றத்தைத் தணிவித்தால் மழை பெய்து நாடு வளம் பெற்று, மக்கள் நோய் நொடியின்றி இன்பமாக வாழலாம் என்பது இவர்களின் நம்பிக்கை. இதனால் அம்மனின் சீற்றத்தைத் தணிவிக்க நேர்த்தி வைக்கின்றனர். நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டே கோவலன் கூத்து இங்கு இடம்பெறுகின்றது.
அடிக்குறிப்புகள்
1. Gananath Obeyesekere, (1994), The Cult of the Goddess Pattini, London, University of Chicago, p.556.
2. சா., ஆறுமுகம் (1994), செட்டிபாளையம் அருள்மிகு கண்ணகியம்மன் ஆலயமும் குருக்கள்மடமும், ஆலய நிருவாகம், மட்டக்களப்பு, பக்.17.
3. கண., ஆறுமுகம் (பதிப்பாசிரியர்), (2008), கண்ணகை அம்மன் பத்ததியும் பாடல்களும், சண் அச்சகம், மட்டக்களப்பு, பக்.7.
4. மேலது, பக்.13.
5. க., தங்கேஸ்வரி (2008), கிழக்கிலங்கை வழிபாட்டுப் பாரம்பரியங்கள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக்.171.
6. க., தங்கேஸ்வரி, மு.கு.நூ. பக்.174-175.
7. வி.சீ., கந்தையா (1964), மட்டக்களப்புத் தமிழகம், ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், பக்.168.
8. மேலது, பக்.141.
9. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.193.
10. சதாசிவ ஐயர், வசந்தன் கவித்திரட்டு, முன்னுரை.
11. சுவாமி விபுலானந்தர் (1953), வசந்தன் கவி, ஸ்ரீலங்கா, பக்.22.
12. கலைக்களஞ்சியம், தொகுதி-4, பக்.37.
13. சுவாமி விபுலானந்தர், மு.கு.நூ, பக்.21.
14. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.200.
15. வி.சீ., கந்தையா, மு.கு.நூ, பக்.200.
16. சி., மௌனகுரு (2005), நாடகம்-அரங்கியல் பழையதும் புதியதும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு, பக்.67.
17. மேலது, பக்.67.
18. அருணா செல்லத்துரை (2000), வன்னிப்பிராந்தியக் கூத்துக்கள் பாரம்பரியத் தேடல், அருணா வெளியீட்டகம், கொழும்பு, பக்.47.
19. மேலது, பக்.39.



