ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட
கலாநிதி நியூட்டன் குணசிங்க 1946ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நாவலப்பிட்டியில் பிறந்தார். அவர் தமது இரண்டாம் நிலைக் கல்வியை கம்பளை விக்கிரமபாகு மத்திய கல்லூரியில் பெற்றுக்கொண்டார். 1963ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். அங்கு அவர் சமூகவியலை சிறப்புப் பாடமாகக் கற்று 1968ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்தார். பேராசிரியர் ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர, லக்சிறி ஜயசூரிய ஆகியோர் பேராதனையில் இவரது ஆசிரியர்களாக இருந்தனர். பட்டப்படிப்பினை முடித்ததும் உயர்கல்விக்கான தேசிய ஆணைக்குழு (NCHE) என்ற அமைப்பில் ஆய்வு உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். அப்போது அவ்வமைப்பின் தலைவராக இருந்தவர் பேராசிரியர் குணபால மலலசேகர ஆவார். நியூட்டன் குணசிங்க ஒருவருட காலம் வித்தியோதய பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் இருந்தார்.

1973ஆம் ஆண்டு அவர் அவுஸ்ரேலியாவின் மொனஷ் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். அதன் பின்னர் கலாநிதிப்பட்டப் படிப்புக்காக அவர் இங்கிலாந்து சென்றார். முதலில் அவர் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந்தார். அப்போது அங்கு சிறந்த புலமையாளர்களான மக்ஸ் குளுக்மன் (Max Gluckman) என்ற சமூக மானிடவியலாளரும், பீட்டர் வூல்ஸ்லி (Peter Worsley) என்ற சமூகவியலாளரும் முறையே சமூக மானிடவியல், சமூகவியல் ஆகிய துறைகளில் பேராசிரியர்களாகப் பணியாற்றினர். குணசிங்க மான்செஸ்டரில் இருந்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு 1979இல் கலாநிதிப் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பின்பட்டப்படிப்புத் துறையின் கருத்தரங்க அறையிலும், புலமையாளர்களின் சந்திப்பு மன்றுகளிலும், ஐரோப்பா, மூன்றாம் உலக நாடுகள், (போலந்து, ஹங்கேரி போன்ற) கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகிய பல்தேசத்து அறிஞர்களோடும் கலந்துரையாடும் அரிய வாய்ப்பை அவர் பெற்றார். அவர் அறிஞர் உலகில் முதற்தரமான புலமையாளர்களில் ஒருவர், சுவாரசியமாகவும் சிந்தனையைக் கிளறும் வகையிலும் உரையாடும் திறன் மிக்கவர் என்ற புகழைப் பெற்றார்.

பல்துறை அறிவுமிக்க புலமையாளரான கலாநிதி குணசிங்கவின் வாழ்வு குறுகிய காலமாயினும் அவரது பங்களிப்புக் காத்திரமானது. இலங்கையின் முதலாவது மார்க்சிஸ்ட் மானிடவியலாளர் என்ற பெருமை அவரையே சாரும். இலங்கையில் மார்க்சிய புலமை ஆய்வுகளை நெறிமுறைப்படி வழிநடத்திய முன்னோடி இவர் எனலாம். மார்க்சியத்தை உயர் தகைமையுடைய ஐரோப்பிய மார்க்சிய சமூகவியல், மானிடவியல் மரபுகளுடன் இணைத்த புத்தாக்க முன்னோடி அறிஞர்களுள் இவரும் ஒருவராவர். இருபது ஆண்டு கால இவரது புலமைவாழ்வும், பங்களிப்புகளும் ஈடு இணையற்றவை. இலங்கையில் ‘Agrarian Studies’ என்ற கல்வித்துறையை வளர்த்த முன்னோடியாக இவர் திகழ்ந்தார்.
இவரது கலாநிதிப் பட்ட ஆய்வேடு இலங்கையின் கண்டிய கிராமிய சமூகம் பற்றிய சிறப்பான ஆய்வாகும். அது ஆய்வு வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையான படைப்பு. கலாநிதி குணசிங்க குறிப்பிட்டதொரு அரசியல் நெறியில் நம்பிக்கை உடையவராய் இருந்தார். தமது அரசியல் நம்பிக்கையையும், புலமைத்துறைப் பயிற்சியையும் ஒன்றிணைத்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்த சமூக விஞ்ஞானியாக அவர் விளங்கினார்.
நியூட்டன் குணசிங்கவின் சிறப்பியல்புகளில் முக்கியமானது அவரது அரசியல் நம்பிக்கைகளை ஆக்கபூர்வமான முறையில் சமூக விஞ்ஞானப் புலமைத்துறை அக்கறைகளுடன் இணைத்தமையாகும். இளமையில் நாவலப்பிட்டியில் கல்வி கற்ற காலப்பகுதியில், 1960களின் தொடக்கத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளர்ச்சிவாத அரசியலால் கவரப்பட்டார். 1963இன் பின்னர் மாஓசேதுங் கொள்கைகளால் கவரப்பட்டு மார்க்சியத்தின் மாஓசேதுங் பிரிவு ஆதரவாளராகியமை அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாகும். பல்கலைக்கழகத்தில் அவர் ஒரு மாணவர் தலைவராகவும் பீக்கிங் பிரிவுக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாட்டாளராகவும் விளங்கினார். கம்யூனிஸ்ட் கட்சியின் பீக்கிங் பிரிவின் தலைவராக நா. சண்முகதாசன் விளங்கினார். 1960களின் நடுப்பகுதி எமது நாட்டின் பல்கலைக்கழகங்களின் வரலாற்றில் முக்கியமான காலப்பகுதியாகும். அக்காலத்தின் மாணவர்கள் தீவிரவாத அரசியலால் ஈர்க்கப்பட்டிருந்தனர். உக்கிரமான கோட்பாட்டு விவாதங்கள் அக்காலத்தில் இடதுசாரிகள் மத்தியில் இடம்பெற்றன. இவ்விவாதங்களால் இத்தலைமுறையினர் பாதிக்கப்பட்டனர். சீன-சோவியத் சர்ச்சை, ட்ரொட்ஸ்கியவாதிகளிடம் தோன்றிய புதிய கிளர்ச்சிவாதம், 1964இல் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான கூட்டணி உருவானமையும் அதன் பின்விளைவுகளும் 1960களின் பத்தாண்டுக் கால வரலாற்றை பாதித்த முக்கிய நிகழ்வுகளாகும். அக்காலத்தில் நியூட்டன் குணசிங்க ஒரு மாணவர் தலைவராகவும், நாவலப்பிட்டி–கண்டி வலயத்தின் தொழிற்சங்க செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.
நியூட்டன் குணசிங்க அக்காலத்தில் தொழிலாளர் கல்வி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் பேராதனையில் புகழ்பெற்ற சமூகவியல் துறையின் மாணவராகவும் இருந்தார். இவ்வாறு, சமூகவியல் மாணவராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் இயங்கியமை இவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு எனலாம். ஒரே சமயத்தில் அவர் இரண்டு அறிவுத்துறைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். மார்க்சிசம் மற்றும் சமூகவியல் என்ற இரண்டிலும் அவர் ஆழமான பரிச்சயத்தைப் பெற்றார். மேற்குலக சமூகவியலை ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர போன்ற அறிவாளிகளிடம் கற்கும் வாய்ப்பைப் பெற்றார். இவ்வாய்ப்பு கலாநிதி குணசிங்கவின் அறிவுத்துறைப் பயணத்தில் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியது.
கார்ல் மார்க்ஸ், மக்ஸ் வெபர் என்ற இரு சிந்தனையாளர்களின் கருத்துகளையும் ஆழமாகக் கற்றிருந்த குணசிங்க, தம் உரையாடல்களில் அவற்றினை எளிமையாக வெளிப்படுத்திய விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. மான்செஸ்டர் பல்கலைக்கழகம், சசெக்ஸ் பல்கலைக்கழகம் என்ற இரு பல்கலைக்கழகங்களிலும் அவர் கல்வியிலும் ஆய்விலும் ஈடுபட்ட காலப்பகுதி அவர் புடம்போடப்பட்ட புலமையாளராக பிற்காலத்தில் மிளிர்வதற்கு உதவியது. மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் அவர் மக்ஸ் குளுக்மன் (Max Gluckman) என்னும் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரின் செல்வாக்கிற்கு உட்பட்டார். குணசிங்க இறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு இதுபற்றிக் குறிப்பிட்டிருந்தார். மக்ஸ் குளுக்மன் தென் ஆபிரிக்கா பற்றிய மானிடவியலில் ஆழங்கால்பட்டவர். ஆங்கில நாட்டின் பழமைவாதப் பல்கலைக்கழகங்களில் மார்க்சியம் அக்காலத்தில் நன்கு வேரூன்றியிருக்கவில்லை. ஆயினும் இங்கிலாந்துக்கு வெளியே மேற்கு ஐரோப்பாவிலும் பிற இடங்களிலும் நெறிமுறைப்படுத்தப்பட்ட மார்க்சிய ஆய்வுகள் இடம்பெற்றன. மோரிஸ் கொடலியர் (Maurice Godelier), சமிர் அமின், குந்தர் பிராங், எர்னெஸ்டோ லக்லோ (Ernesto Laclau) ஆகியோர் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் மார்க்சியப் புலமைத்துறையை செழுமைப்படுத்திய அறிவாளிகளாகத் திகழ்ந்தனர். குணசிங்க இங்கிலாந்தின் பழமைவாத சிந்தனைகளில் இருந்து விடுபட்டு இச்செழுமையான மார்க்சிய மரபின் மீது தம் கவனத்தைத் திருப்பினார். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் சசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கு மாறியபோது அவர் மானிடவியலாளர் என்பதோடு அரசியல் பொருளாதாரம் (Political Economy) என்ற பயில்நெறியையும் தழுவிய ஒருவரானார். பழமையான மானிடவியல் மரபில் இருந்து விடுபட்ட மானிடவியலாளர், அரசியல் பொருளாதாரவியலாளர் (Political Economist) என்ற இரு பரிமாணங்கள் அவரது புலமை ஆளுமையில் வெளிப்பட்டன.
சசெக்ஸ் பல்கலைக்கழகம்
குணசிங்கவின் அறிவியல் ஆக்கத்திறன் முறையாக வளர்ச்சி பெற்ற இடம் சசெக்ஸ் பல்கலைக்கழகமாகும். மான்செஸ்டரில் அக்காலத்தில் சமூகவியலாளர்களுக்கும் சமூக மானிடவியலாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. சமூக விஞ்ஞானத் துறையில் யாருக்குத் தலைமையிடம் வேண்டும் என்பதாக அப்போட்டி அமைந்தது. குணசிங்கவிற்கு மான்செஸ்டரின் புலமைச்சூழல் பிடிக்கவில்லை. அவரது புலமைத்துறை விருப்புகளுக்கு ஏற்ற இடம் சசெக்ஸ் பல்கலைக்கழகமே.
அங்கு சமூக விஞ்ஞானங்களின் சமூகக் கோட்பாடு (Social Theory), சமூக ஆராய்ச்சி (Social Research) ஆகியவற்றில் ஆக்கபூர்வமான பரிசோதனைகள் நிகழ்த்துவதற்கு வாய்ப்பு உள்ளது என அவர் கண்டுகொண்டார். சசெக்ஸில் அவருக்கு மூன்றாம் உலகில் இருந்து அங்கு வந்திருந்த கிளர்ச்சிவாதச் சிந்தனையுடைய மாணவர்கள் பலருடன் நட்பை வளர்த்துக்கொள்ள முடிந்தது. இங்கிலாந்தின் பல்கலைக்கழகங்கள் யாவற்றிலும் பார்க்க சசெக்ஸ் பல்கலைக்கழகம் அந்நாளில் கிளர்ச்சிவாத அறிவியலாளர்களின் சிந்தனைக் கூடம் என்ற வகையில் முதன்மை பெற்றிருந்தது. அங்கு அவர் தமது பின்பட்டப்படிப்பை ஸ்கார்லெட் எப்ஸ்டின் (Scarlett Epstein), டட்லி சியர்ஸ் (Dudley Seers), ரிச்சார்ட் ஜொல்லி (Richard Jolly) ஆகியோரின் வழிகாட்டலில் தொடர்ந்தார்.
சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் குணசிங்க ஆய்வு மாணவராக இருந்த காலத்திலேயே அவர் ‘கண்டியின் கிராமங்களில் உற்பத்தி உறவுகள்’ என்னும் விடயம் பற்றிய கலாநிதிப் பட்டப்படிப்பிற்கான ஆய்வை மேற்கொண்டார். குணசிங்கவை மிகவும் கவர்ந்த பேராசிரியர் மக்ஸ் குளுக்மன், அவரை தமது ஆபிரிக்கா பற்றிய ஆய்வுக்கு தமது மாணவனாக இணையும்படி வேண்டினார். குணசிங்கவிற்கு புகழ்பெற்ற ‘றோட்ஸ்-லிவிங்ஸ்டன்’ (Rhodes-Livingston) புலமைப்பரிசை வழங்கவும் தயாராக இருந்தார். ஆபிரிக்க மானிடவியல் ஆய்வுத்துறையில் மக்ஸ் குளுக்மனால் தமது கூர்ந்த மதிமிக்க மாணவரான குணசிங்கவை ஈர்க்க முடியவில்லை. இச்சந்தர்ப்பத்திலேயே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஈ.ஆர். லீச் (E.R. Leach) அவர்களை குணசிங்க சந்திக்கிறார். இச்சந்திப்பு அவர் இலங்கையின் மானிடவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது என்ற உறுதியான முடிவை எடுப்பதற்கு உதவியது. இலங்கையின் அனுராதபுர மாவட்டத்தின் புல் எலிய (Pul Eliya) என்ற கிராமத்தில் ஈ.ஆர். லீச் அவர்கள் 1960களில் தங்கியிருந்து ஆய்வொன்றை மேற்கொண்டார். அவர் புல் எலியவிற்குச் சென்று புதிய ஆய்வு ஒன்றை நிகழ்த்தும்படி குணசிங்கவிற்கு ஆலோசனை கூறினார். ஆயினும் குணசிங்க, தான் அனுபவ ரீதியாக அறிந்திருந்த கண்டியின் உடுநுவர கிராமப் பகுதியில் கள ஆய்வைச் செய்வதென்ற முடிவை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது மேற்கொண்டிருந்தார்.
நியூட்டன் குணசிங்கவின் கலாநிதிப் பட்ட ஆய்வேடு 1990ஆம் ஆண்டிலேயே நூலுருவம் பெற்றது. இலங்கைச் சமூகம் பற்றிய நெறிமுறை தவறாத மார்க்சிய ஆய்வினைத் தொடக்கிவைத்த ஆய்வு இது எனலாம். அதுவரை காலமும் இலங்கையின் மார்க்சிய ஆய்வுகள் எவையும் இலங்கைச் சமூகத்தை அதன் ஸ்தூல நிலையில் ஆய்வு (Concrete Study) செய்ய முயற்சிக்கவில்லை. இலங்கையின் மார்க்சியம் பழைய பாணியிலான மார்க்சியக் கோட்பாட்டாளர்களையே (Theoreticians) தோற்றுவித்திருந்தது. லேர்ஸ்கி (Lerski) ஒருமுறை குறிப்பிட்டது போன்று, அக்கோட்பாட்டாளர்கள் யாவரும் கண்டனத் துண்டுப் பிரசுரங்களை எழுதுவதில் முடிசூடா மன்னர்களாக இருந்தனர். அவர்களை மார்க்சியப் புலமையாளர்கள் எனக் கூற முடியாது. அக்காலத்தில் சமூகவியல் துறையில் லிபரல் மரபுப் புலமையாளர்கள் இருந்தனர். எம்.டி. ராகவன், ரால்ப் பீரிஸ், கணநாத் ஒபயசேகர ஆகியோர் இலங்கை பற்றிய ஆய்வுகளில் வித்தியாசமான மரபை உருவாக்கியிருந்தனர். இம்மரபை மார்க்சியத்திற்கு முந்திய புலமைமரபு என்று கூறலாம். கலாநிதி குணசிங்கவின் ஆய்வு இப்பின்புலத்தில் புலமைத்துவச் செயல்முறையில் (Academic Practice) புதியதொரு போக்கைத் தொடங்கிவைத்தது. மார்க்சியக் கோட்பாட்டை செறிவான கள ஆய்வு முறைகளுடன் முதன்முறையாக இணைத்தவர் என்ற பெருமை கலாநிதி நியூட்டன் குணசிங்க அவர்களுக்கே உரியது. இலங்கையின் கிராமிய சமூகத்தில் உற்பத்தி உறவுகள் (Production Relations), வர்க்க உருவாக்கம் (Class Formation) என்ற இரண்டையும் இணைத்து ஆய்வு நிகழ்த்திய முதலாவது புலமையாளர் என்ற சிறப்பும் கலாநிதி நியூட்டன் குணசிங்க அவர்களுக்கே உரியது எனலாம்.
1970களின் மார்க்சிய விவாதங்கள்
நியூட்டன் குணசிங்க அவர்கள் தமது கலாநிதிப் பட்ட ஆய்வில் முன்வைக்கும் கோட்பாடுகள் பற்றியும், அக்கோட்பாடுகள் எழுந்த அறிவியல் பின்புலம் பற்றியும் சில குறிப்புகளைக் கூறுதல் பொருத்தமுடையது. உலகம் முழுவதிலும் மார்க்சியர்களிடையே பெரும் விவாதங்கள் 1970களில் இடம்பெற்றன. இந்த விவாதங்களின் மையக்கருத்தாக மூன்றாம் உலகின் முதலாளித்துவ வளர்ச்சியின் இயல்பு யாது என்ற விடயம் அமைந்தது. இந்தப் பிரச்சினையை நவமார்க்சிஸ்டுகள் எனப்படுவோரின் வார்த்தைகளில் ‘சார்பு மண்டல முதலாளித்துவ உருவாக்கம்’ என்ற தொடரால் குறிப்பிடலாம்.
இந்த விடயம் குறித்த விவாதத்தின் தொடக்கத்தை 1960களின் பிற்பகுதியில் வெளியான குந்தர் பிராங் அவர்களின் எழுத்துகளில் காணலாம். குந்தர் பிராங் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிந்திய காலத்து மார்க்சியம் எனப்படும் சார்புக் கோட்பாட்டுப் பள்ளியைச் (Dependency School) சேர்ந்தவராவார். சார்புக் கோட்பாட்டாளர்கள் உலகம் எங்கும் ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உற்பத்தி முறையைப் புகுத்தியுள்ளது எனக் கூறினர். இவ்வாறு முதலாளித்துவம் புகுத்தப்பட்டமை குறைவிருத்தி, சமத்துவமற்ற பரிவர்த்தனை என்னும் இரு செயல்முறைகளால் ஆனது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எர்னெஸ்டோ லக்லோ (Ernesto Laclau) 1972 இல் இக்கருத்தை மறுத்துரைத்தார். பிராங் அவர்களும் பிறரும் முன்வைத்த ‘சார்புப் பொருளாதாரம்’ அல்லது சார்புநிலை (Dependency) என்ற கருதுகோள் அடிப்படையில் தவறானது என எர்னெஸ்டோ லக்லோ எடுத்துக்காட்டினார். பிராங் போன்றோர் முதலாளித்துவம் பற்றிய ஆய்வை உற்பத்தி என்ற நிலையில் (At the Level of Production) ஆய்வு செய்யாது, உற்பத்திப் பண்டங்களின் பரிவர்த்தனை அல்லது வர்த்தகச் சுழற்சி என்ற நிலையில் (At the Level of Exchange and Circulation) ஆய்வு செய்ய முயன்றனர் எனக் குறிப்பிட்டார்.
லக்லோ சுட்டிக்காட்டிய இந்த விடயம் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி முறைகள் பற்றிய விவாதத்தை (Modes of Production Debate) தொடக்கிவைத்தது. இவ்விவாதம் உயிர்ப்புடையதும் பயனுடையதுமானதாக அமைந்தது. உற்பத்தி முறைமைகள் பற்றிய விவாதம் பொருளியல், வரலாறு, அரசியல் விஞ்ஞானம், சமூகவியல், மானிடவியல் ஆகிய ஒன்றோடொன்று தொடர்புடைய சமூக விஞ்ஞானத் துறைகளின் (Social Science) ஆய்வுகளுக்கு வழிசமைத்தது.
கலாநிதி குணசிங்கவின் கலாநிதிப் பட்ட ஆய்வும், அவர் எழுதிய இலங்கையின் விவசாயச் சமூக உறவுகள் (Agrarian Relations) பற்றிய ஆய்வுக் கட்டுரைகளும் மேற்குறித்த உற்பத்தி முறைமைகள் பற்றிய ஆய்வுக்கு ஒரு முக்கிய பங்களிப்பாகும். கலாநிதி குணசிங்க சார்பு மண்டல முதலாளித்துவம் (Peripheral Capitalism) என்ற கருதுகோளை தம் ஆய்வுகளில் முன்வைத்தார். இக்கருதுகோளின் படி இலங்கையில் சார்பு மண்டல முதலாளித்துவம்:
அ. மூலதனத்தின் மேலாண்மையின் கீழ் செயற்படுகிறது.
ஆ. அது முதலாளித்துவத்திற்கு முந்திய முறைமைகளை மறு உற்பத்தி செய்கிறது.
என எடுத்துக்காட்டினார். குடியான் விவசாயத்தின் பழமையான உற்பத்தி முறைமைகள், சார்பு மண்டல முதலாளித்துவத்தின் கீழ் மீள் உயிர்ப்புச் செய்யப்படுகின்றன என்ற அவரது கருத்தை விளக்குவதற்கு இது உதவுகிறது (ஆங்கிலத்தில் ‘The Re-activation of Archaic Production Relations in Peasant Agriculture under the Conditions of Peripheral Capitalism’ என்ற தொடரால் அவர் இக்கருத்தை விளக்கிக் கூறினார்). சமூக மாற்றம் குறித்த மார்க்சிய சமூகவியலிற்கும் கலாநிதி குணசிங்கவின் விளக்கம் மிக முக்கியமான ஒரு பங்களிப்பாகும்.
கிராம்சியும் அல்தூசரும்
கலாநிதி குணசிங்க சமூக அரசியல் கோட்பாடு (Social and Political Theory) என்ற விடயம் பற்றிய செவ்வியல் கோட்பாடு (Classical Theory), நவீன கோட்பாடு என்ற இரண்டிலும் முறையான படிப்பும் பரிச்சயமும் உடையவரான சமூக விஞ்ஞானியாக இருந்தார். அவர் கோட்பாடு பற்றி மிகுந்த அக்கறை செலுத்தினார். சமூகம் பற்றிய அரைகுறையான புரிதல் கூட வெற்றுத் தொடர்கள், சொற்கள் மூலம் அடையப்படக் கூடியதல்ல எனவும், அது முழுமையான அறிவுக் கோட்பாடுகள் வழங்கக்கூடிய பகுப்பாய்வுக் கருவிகளின் (Analytical Tools) துணையுடன் மட்டுமே சாத்தியமாகும் எனவும் அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். இலங்கையில் அவர் தம் காலத்து இளம் சமூகவியலாளர்களில் இருந்து வேறுபட்ட இயல்பு உடையவராகக் காணப்பட்டார்.
மார்க்சிய சமூகக் கோட்பாட்டில் உள்ள இடைவெளிகளை பிற அறிவுத்துறை மரபுகளில் இருந்து பெறக்கூடியன மூலம் இட்டு நிரப்பும் தேவை உள்ளதென்பதை அவர் தமது மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறுவார். அவர் தமது கோட்பாட்டு அனுமானங்களை மேலும் வளப்படுத்திக் கொள்வதற்காக மார்க்சியவாதிகள், மோரிஸ் கொடலியர், வெபர், டர்க்கீம், பரெட்டோ (Pareto), லூயி துமோன் (Louis Dumont), உம்பெர்டோ எக்கோ (Umberto Eco) ஆகிய சிந்தனையாளர்களின் ஆக்கங்களை ஆழ்ந்து கற்றார். பிராங்கன்பெர்க் என்பவரின் விஞ்ஞானக் கற்பனை நாவல்களைக் கூட அவர் படிப்பதுண்டு.
கண்டியின் சமூக உருவாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக அவர் கள ஆய்வை நிகழ்த்திய போது மார்க்சிய சமூகக் கோட்பாட்டில் உள்ள இடைவெளிகள், குறைகள் என்பனவற்றை அவர் அவதானித்தார். அதன் பின்னர் அவர் இருபதாம் நூற்றாண்டின் மார்க்சிய சிந்தனையாளரான அந்தோனியோ கிராம்சியை கவனமாக வாசிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு விவசாய வர்க்கக் கூட்டு (Agrarian Block) என்ற கருத்தாக்கம், கண்டியின் சமூக உருவாக்கத்தில் பல்வேறு சிக்கலான கூறுகளின் இயைபாக்கம் பற்றிப் புரிந்துகொள்வதற்கு உதவுவதாக இருப்பதைக் கண்டார்.

லூயி அல்தூசர், கிராம்சி என்ற இரு சிந்தனையாளர்களின் கருத்துகளும் குணசிங்க மீது பெரும் தாக்கத்தைச் செலுத்தின. அல்தூசர் உத்தியோகபூர்வ மார்க்சியம் எனப்படும் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சியம் மீது அதிருப்தி கொண்டிருந்த கிளர்ச்சியாளர் ஆவார். அவர் பிரான்சின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் இருந்தவர். 1968ஆம் ஆண்டின் மாணவர் கிளர்ச்சியின் பின்னர் பிரான்சில் மார்க்சிய கோட்பாட்டு அலை ஒன்று எழுந்தது. அவ்வேளை அல்தூசர் பாரிஸ் நகரின் ‘Ecole Normale’ இல் தத்துவத் துறையின் பேராசிரியராக இருந்தார்.

அல்தூசரின் ‘மூலதனத்தை வாசித்தல்’ (Reading Capital) என்ற நூல் நியூட்டன் குணசிங்கவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்நூலின் முதலாவது அத்தியாயத்தின் தொடக்கப் பந்தியில் உள்ளவற்றை மனப்பாடமாகவே ஞாபகத்தில் வைத்திருந்த குணசிங்க முக்கியமான தொடர்களை மேற்கோள் காட்டுவதை அவரது நண்பர்கள் நினைவு கூர்வதுண்டு. உரையாடல்களின் போது அல்தூசரின் அழகிய உரைநடையில் அமைந்த முக்கியமான தொடர்களுக்கு தமது அழுத்தத்தைக் கொடுத்து விளக்கம் கூறுவார்.
நியூட்டன் குணசிங்கவும் அவரது தலைமுறையினரும் அல்தூசரின் நூலால் (‘மூலதனத்தை வாசித்தல்’) கவரப்பட்டு மார்க்ஸின் பெரும்படைப்பான ‘மூலதனம்’ நூலைத் திரும்பத் திரும்ப வாசித்தார்கள். இளைய அறிவாளிகளான நியூட்டன் குணசிங்க போன்றவர்கள் புதிய விமர்சனப் பொருள்கோடலியல் (Critical Hermeneutics) நோக்கில் ‘மூலதனம்’ நூலை மீள்வாசிப்பு செய்தனர்.
கலாநிதி குணசிங்க தம்மை அல்தூசரின் வழிவரும் அமைப்பியல் மார்க்சிஸ்ட் (Structural Marxist) எனக் கூறிக்கொள்வதுண்டு. குணசிங்கவின் அமைப்பியல் மானிடவியலில் அல்தூசரின் தாக்கம் வெளிப்பட்டது.
அல்தூசரின் இரு எண்ணக்கருக்கள்
சமூக உருவாக்கம், அரசு, கருத்தியல் போன்றவை பற்றிய ஆய்வில் நியூட்டன் குணசிங்க அல்தூசரின் அறிவாராய்ச்சியில் முறிவு (Epistemological Rupture), முரண்பாடுகளின் மேல்நிர்ணயம் (Over-determination of Contradictions) என்ற இரண்டு எண்ணக்கருக்களைப் பயன்படுத்தியுள்ளார். இவ்விரு எண்ணக்கருக்களோடு, கிராம்சியின் மேலாண்மை (Hegemony) என்ற எண்ணக்கருவையும் பயன்படுத்தியுள்ளார்.
அல்தூசரின் கோட்பாட்டு வரைசட்டத்தை மிகச்சிறப்பான முறையில் 1980களின் முற்பகுதியில் அவர் ஒரு கட்டுரையில் பயன்படுத்தியிருந்தார். இது ஒரு சிறிய கட்டுரை ஆயினும் நியூட்டன் குணசிங்க இனத்துவமும் கருத்தியலும் (Ethnicity and Ideology) பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையை இக்கட்டுரையில் வெளியிட்டிருந்தார். 1983 வன்முறைகள் நாட்டில் குழப்பமானதும், கொந்தளிப்பானதுமான நிலையை ஏற்படுத்தியிருந்தது. சிங்களவர்களிடமும் தமிழர்களிடமும் இனத்துவ உணர்வு மேலோங்கியிருந்தது. இந்த நெருக்கடியான சூழலில் சில சமூக விஞ்ஞானிகள் சில கோஷங்களைக் கோட்பாடு எனவும், சில நபர்களைக் குற்றம் சாட்டி அரசியல் பழிவாங்குதலுக்கு ஆளாக்குவதை சமூக அக்கறை எனவும் காட்டும் முறையில் மக்களைத் தவறாக வழிநடத்தும் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். இவை உண்மையான கோட்பாட்டு உருவாக்கத்திற்கு எதிரானவை. அடிப்படைவாதச் சிந்தனையின் வெளிப்பாடுகள் இவை.
கலாநிதி குணசிங்க அவர்களால் இனத்துவமும் கருத்தியலும் பற்றிப் பயனுள்ள கருத்துகளை எடுத்துக் கூற முடிந்தது. ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையில், அரசியல் கட்டமைப்புகளில் (Political Structure) இனத்துவம் எவ்விதம் மேல்நிர்ணயம் (Overdetermination) செய்கிறது என்பதை அவர் எடுத்துக் காட்டினார். தேசியவாதக் கருத்தியலின் மேல்நிர்ணயப் பிடிக்குள் சிக்கியிருந்த சிங்களச் சமூகத்தின் நிலையை அல்தூசரின் முரண்பாடுகளில் மேல்நிர்ணயம் என்ற எண்ணக்கருவின் துணையுடன் விளக்கிக் கூறினார். சுதந்திரத்திற்குப் பிற்பட்ட கால இலங்கை அரசியலை நியூட்டன் குணசிங்க தெளிவாக விளக்கிக் கூறினார்.
குணசிங்க பன்முக ஆளுமை மிக்க புலமையாளர் ஆவார். சமயக் கருத்தியல், சமூகக் கட்டமைப்புகள், அரசு என்ற மூன்று விடயங்களில் அவர் தமது கவனத்தைச் செலுத்தினார். அவரது முதுகலைமாணி ஆய்வு அவுஸ்ரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது. அது பௌத்தத்தின் சமூகவியல் பற்றியது. பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து சமயம் ஆகிய சமயங்கள் பற்றியும் அவருக்கு நல்ல அறிவு இருந்தது. அவர் சமயம் பற்றிய குறிப்பிடத்தக்க ஆய்வுகள் எதனையும் வெளியிடாத போதும், சமயம் தொடர்பான ஆய்வுத்திட்டம் ஒன்றைச் செயற்படுத்தத் திட்டமிட்டிருந்தார். பௌத்தம், கிறிஸ்தவம் என்ற சமயங்களின் சமூக அறிவியல் வரலாறு (Social and Intellectual History) என்ற விடயம் பற்றி அவர் ஆராயத் திட்டமிட்டிருந்தார். அவரது மரணத்தினால் இத்திட்டம் நிறைவேறவில்லை. இந்த ஆய்வினை புரூஸ் கப்பெரர் (Bruce Kapferer) என்ற அவரது மான்செஸ்டர் காலத்து நண்பருடன் இணைந்து நிறைவேற்றுவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. புரூஸ் கப்பெரர் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் பேராசிரியரானார். இந்த ஆய்வில் கிறிஸ்தவம் பற்றிய பகுதியை நியூட்டன் குணசிங்க எழுதுவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. மத்தியகால கிறிஸ்தவ இறையியல் பற்றி எழுதுவதற்கான நிறையத் தகவல்களை நியூட்டன் குணசிங்க சேர்த்து வைத்திருந்தார். அதனை எழுதுவதற்கு முன்பே அவர் காலமானார்.
இலங்கை, தாய்லாந்து, பர்மா ஆகிய நாடுகளின் பௌத்த சமயத்தின் வரலாறு பற்றி மீளாய்வு ஒன்றைச் செய்தபோது சமயக் கருத்தியல் (Religious Ideology), சமூகக் கட்டமைப்பு (Social Structure) என்ற இரண்டு விடயங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நியூட்டன் சிந்தித்தார். முதலில் கருத்தியல் சில சந்தர்ப்பங்களில் மேல்நிர்ணயம் செய்கின்றது என்ற கருத்தைக் கொண்டிருந்த நியூட்டன் குணசிங்க இறுதியில் சமூகக் கட்டமைப்புகளே கருத்தியல் மாற்றங்களை நிர்ணயம் செய்வதாக முடிவுசெய்தார். அதற்கமைய வரைசட்டத்தைத் திருத்திக் கொண்டார்.
மேற்குறித்தவாறு, சமூகக் கட்டமைப்புகளே இறுதியிலும் இறுதியான நிர்ணய சக்தியென்ற நியூட்டன் குணசிங்கவின் முடிவை வெறுமனே மார்க்ஸின் கருத்தை மீண்டும் கூறுவதாகக் கருத முடியாது. சமூக வர்க்கங்கள், கருத்தியல், அரசு என்ற மூன்று விடயங்களும் இலங்கையின் முதலாளித்துவத்திற்கு முந்திய உற்பத்தி முறையிலும், முதலாளித்துவ உற்பத்தி முறை புகுந்தபின் உள்ள நிலையிலும் எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தன என்பதை அவர் ஆழமாக ஆய்வு செய்தார்.
அல்தூசரால் கவரப்பட்டிருந்த குணசிங்க பின்னர் மக்ஸ் குளுக்மன் (Max Gluckman), லூயி துமோன் (Louis Dumont) என்போர் ஊடாக மார்க்ஸிடம் திரும்பி வந்தார். அல்தூசரின் பொருள்கோடலியல் முறை சமூகக் கட்டமைப்புகளின் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதாக நியூட்டன் குணசிங்க உணர்ந்திருக்க வேண்டும். சமூகக் கட்டமைப்புகள் நீண்ட காலத்தில் வரலாற்றுப் போக்கில் முதன்மை இடத்தைப் பெறுகின்றன என்ற முடிவை அவர் செய்தார்.
இவ்விடயத்தில் கிராம்சியைப் போன்று நியூட்டன் குணசிங்கவும், கருத்தியல் வெவ்வேறு உற்பத்தி முறைகளின் கீழ் தன்னைத் தகவமைத்து மாற்றிக்கொண்டு நிலைத்திருப்பதை அவதானித்தார். இத்தகைய ஆற்றல் கருத்தியலுக்கு எப்படிச் சாத்தியமாயிற்று என்ற கேள்வியை நியூட்டன் குணசிங்க முன்வைத்தார். கருத்தியல்கள் சுயமாகத் தாமே மாறுகின்றனவா அல்லது அவை சமூகக் கட்டமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவால் மாறுகின்றனவா என்ற வினாவை அவர் எழுப்பி விடைகாண முயன்றார்.
சிங்கள பௌத்த மரபில் அதிகாரமிக்க பௌத்த சமயக் கருத்துக்கு மாறுபட்ட கருத்தைக் கூறும் எதிர்ப்பாளர்கள் (Heretics) எவ்வாறு நோக்கப்பட்டனர் என்ற விடயத்தைப் பற்றி குணசிங்க விளக்கம் கூறுவதுண்டு. புனிதமானது (Sacred), புனிதம் கெட்டது (Profane) என்பன வெறுமனே இறையியல் சார்ந்த வினாக்கள் அல்ல; சமூகத்தில் மேலோர், கீழோர் என்ற சமூக உறவுகளின் அடுக்கமைவின் வெளிப்பாடுகளாகும் என்றும் அவர் தமக்கே உரிய பாணியில் உரையாடல்களின் போது நண்பர்களுக்கு எடுத்துக் கூறுவதுண்டு.
அவர் காலமானதற்கு முன்பான ஆறுமாத கால எல்லையில் எழுதிய இரண்டு நூல் மதிப்புரைக் கட்டுரைகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அவற்றுள் ஒன்று கணநாத் ஒபயசேகரவின் ‘A Meditation on Conscience’ என்ற கட்டுரை பற்றியது. மற்றது புரூஸ் கப்பெரரின் அண்மைய வெளியீடாக வந்திருந்த ‘Legends of People – Myths of State’ என்ற நூல் பற்றியது. இவ்விரு ஆக்கங்கள் குறித்த அவரது விமர்சனம் கருத்தியலின் உருவாக்கத்தில் சமூக உறவுகளின் முதன்மையான வகிபாகத்தை அழுத்திக் கூறும் முறையில் அமைந்தன. வர்க்கங்கள், சமூகக் குழுக்கள் என்பனவும் அதிகார வரன்முறைப்படி அமைந்த சமூக உறவுக் கட்டமைப்பும் கருத்தியல் உருவாக்கத்தை நிர்ணயம் செய்வதை அம்மதிப்புரைகளில் அவர் எடுத்துக் காட்டினார்.
பருநிலை சமூகக் கோட்பாடு (Macro – Social Theory)
தென்னாசியப் பிராந்தியச் சமூகம் முழுமையையும் தழுவிய பருநிலைச் சமூகக் கோட்பாடு ஒன்றினைக் கட்டமைப்பதற்கு கலாநிதி நியூட்டன் குணசிங்க, காலமாவதற்கு முன்னுள்ள அவரது வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் முயற்சி செய்து கொண்டிருந்தார். 1988 அக்டோபர் மாதத்தில் அவரது மரணம் சம்பவித்தது. அவ்வாண்டு ஜூன் மாதம் அவர் ‘Notes towards Sub–continental Social Structural Perspective on South Asia’ (உபகண்ட சமூகக் கட்டமைப்பு நோக்கிலான தென்னாசியா பற்றிய பார்வை – சில குறிப்புகள்) என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டார். தென்னாசிய முழுமையையும் புரிந்து கொள்வதற்கான சமூகக் கோட்பாடு (Social Theory) ஒன்று இதுவரை உருவாகவில்லை. இனிமேல்தான் அது உருவாக்கம் பெறும் என்பதை உணர்ந்திருந்த அவர், அக்கோட்பாட்டிற்கான முறையியல் பார்வையை (Methodological Perspective) நிறுவுவதற்கு முன்வந்தார். இது நியூட்டன் குணசிங்க அவர்களின் சிக்கலான கோட்பாட்டு முன்மொழிவு. இதனை விளக்குவதற்கு அவரின் மேற்குறித்த கட்டுரையில் இருந்து மேற்கோள் ஒன்றைத் தருகிறேன்.
“தென்னாசிய சமூக உருவாக்கங்களில் அமைப்பியல் வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் காணப்படுவதை அடையாளம் காண்பதே இக்குறிப்புகளை நான் எழுதுவதன் நோக்கமாகும். ஆனால் இந்த அமைப்பியல் வேறுபாடுகளையும் ஒற்றுமைகளையும் தேசிய அரசுகள் (Nation States) என்ற புவியியல் பிரதேச (Territory) எல்லைக்குள் நின்று பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஏனெனில் 20ஆம் நூற்றாண்டில், 1950களின் பிற்பகுதியில் தான் தென்னாசிய சமூகங்கள் தெளிவான தேசிய அரசுகள் என்ற வரையறையைப் பெற்றுக்கொண்டன. லூயி துமோன் தென்னாசியப் பிராந்தியம் முழுமையையும் உள்ளடக்கிய சமூகச் செயல்முறைகளை விளக்கக்கூடிய கோட்பாடு ஒன்றை முன்வைத்தார். அவரின் அந்த முழுமை நோக்கிய முயற்சியில் இருந்து நாம் மேற்செல்ல வேண்டும். அந்த வழிகளில் கட்டமைக்கப்படும் பருநிலைக் கோட்பாட்டில் (Macro–theory) தென்னாசியாவில் வெவ்வேறு இனத்துவக் குழுமங்களின் (Ethnic Segmentations) சமூகச் செயல்முறைகளை விளக்கக்கூடிய பொருத்தமான உப கோட்பாடுகளையும் (Sub–theories) இணைக்க வேண்டும். சிங்களவர், தமிழர், வங்காளிகள், குஜராத்திகள் போன்ற இனத்துவக் குழுமங்களின் பொருத்தமுடைய உப கோட்பாடுகளும் இப்பருநிலைக் கோட்பாட்டுடன் இணைவு பெறும். தென்னாசிய சமூக உருவாக்கங்களின் அமைப்பியல் பொதுமைக் கூறுகளை அடையாளம் காட்ட நான் முனைகிறேன். இப்பொதுமைக் கூறுகள் வெவ்வேறு வடிவங்களில் பல இடங்களிலும் முரண்பாடான வடிவிலும் இயைபாக்கம் பெற்றிருப்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.”
மேற்குறித்த உபகண்ட சமூகக் கோட்பாட்டை நியூட்டன் குணசிங்க முன்மொழிந்த அரசியல் பின்னணியை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் இனக்குழுமப் பிரச்சினையும் நெருக்கடியும், இலங்கை ஒரு தேசம் என்ற வகையில் தனிமைப்படுத்தலுக்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளும் நிலையை ஏற்படுத்தியிருந்தன. சிங்களத் தேசியவாதக் கருத்துருவாக்கிகள் எமது சமூகத்தின் சிக்கலான அமைப்புகளை மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களுள் ஒன்றான ‘சிங்கள பௌத்த கிராமம்’ (Sinhala Buddhist Village) என்பதன் மூலம் விளக்க முனைந்தனர். இலங்கைத்தீவுக்கு வெளியே இருந்துவரும் அனைத்தையும் இவர்கள் அந்நியமானவை எனப் புறந்தள்ளினர். எமது சமூகத் தீங்குகள் அனைத்திற்கும் தீர்வாகவும், எல்லா நோய்களுக்குமான ஒரேயொரு மருந்தாகவும் தனிமைப்படுத்திக் கொள்ளும் தேசியவாதத்தை (Isolationist Nationalism) முன்மொழிந்தனர். கலாநிதி நியூட்டன் குணசிங்க இத்தனிமைப்படுத்திக் கொள்ளும் தேசியவாதத்திற்கு மறுப்பாக தென்னாசிய உபகண்டம் முழுமைக்குமான பருநிலைச் சமூகக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்தினார். அவரது அறிவுரை, “நீங்கள் தென்னாசியாவை முழுமையாகப் புரிந்து கொள்ளாத வரை, இலங்கையைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாது’ (You will never understand Sri Lanka, until you understand South Asia as a totality) என்பதாக அமைந்தது. அவரது கட்டுரையின் சாரமான கருத்தாக இவ்வறிவுரை அமைந்தது. கலாநிதி நியூட்டன் குணசிங்க அறிவியல் சர்வதேசத்தை (Intellectual Internationalism) பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1980களில் கலாநிதி நியூட்டன் குணசிங்க இலங்கையில் சமூக விஞ்ஞான ஆராய்ச்சிக்குச் செய்த பங்களிப்பைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுதல் வேண்டும். 1980ஆம் ஆண்டு முதல் நியூட்டன் குணசிங்க இலங்கைச் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் பிரதான ஆய்வாளராகவும், அச்சங்கத்தின் செயலாளராகவும் இருந்தார். இலங்கையின் கிராமிய விவசாயக் கட்டமைப்பு (Agrarian Structure) பற்றிய முக்கியமான ஆய்வுத் திட்டத்தின் நெறிப்படுத்துநராக அவர் கடமையாற்றினார். இந்த ஆய்வுத் திட்டத்தின் பெறுபேறாக ‘மூலதனமும் குடியான் உற்பத்தியும்’ (Capital and Peasant Production) என்னும் நூல் வெளியாயிற்று. இந்நூலை அவர் சார்ள்ஸ் அபயசேகரவுடன் இணைந்து பதிப்பித்தார். இக்காலத்தில் இனத்துவத்தின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பொன்றும் சமூக விஞ்ஞானிகள் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இந்நூலிற்கு ‘Facets of Ethnicity’ எனப் பெயரிடப்பட்டிருந்தது.

கலாநிதி நியூட்டன் குணசிங்க காலமாவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை பற்றிய இனவரைவியல் ஆய்வு ஒன்றின் பதிப்பு வேலையை நிறைவு செய்திருந்தார். இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் அவரது நண்பர்களான புலமையாளர்கள் பலரின் கூட்டு முயற்சியாக இது அமைந்தது. அக்கட்டுரைத் தொகுப்பு நூலில் அவர் எழுதிய முன்னுரை இலங்கையின் இனவரைவியல் எழுத்துகள் தொடர்பான மிகவும் முக்கியமான மீளாய்வாகும்.
ஆய்வாளர், புலமையாளர், பல்கலைக்கழக ஆசிரியர் ஆகிய நிலையில் அவர் வழங்கிய புலமைத்துவப் பங்களிப்பு ஒருபுறம் இருக்க, அவர் தொழிற்சங்க நடவடிக்கை, வெகுசனக் கல்வி, மனித உரிமைகள் ஆகிய செயற்பாடுகள் ஊடாக ஆற்றிய பங்களிப்பும் பெறுமதி மிக்கவை. கண்டி தொழிலாளர், விவசாயிகள் நிறுவனம் (Workers and Peasants Institute, Kandy) என்ற கல்விப் பணிக்கான அமைப்பை நிறுவி வெகுசனக் கல்வியைப் பரப்பினார். சமூக–அரசியல் விடயங்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக தொழிலாளர்–விவசாயிகள் வர்க்கத் தொண்டர்களுக்கு இந்நிறுவனம் ஊடாகக் கல்வி வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் நடத்தினார். தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அந்தோனியோ கிராம்சி பற்றிய தொடர் சொற்பொழிவு ஒன்றை இவர் நிகழ்த்தினார். சிங்கள மொழியில் கல்வி கற்ற புத்திஜீவிகளுக்கு கிராம்சி என்ற மார்க்சிய சிந்தனையாளரை முதன்முதலாக அறிமுகம் செய்து வைத்த இவரது உரை பின்னர் சிறுநூலாக வெளியிடப்பட்டது. மார்க்சியத் தத்துவத்தில் அவருக்கு இருந்த புலமையும், சிங்கள மொழியில் அவருக்கிருந்த அறிவும் சிக்கலான கோட்பாடுகளையும் மிக எளிமையாக விளக்கிக் கூறுவதற்கு அவருக்கு உதவின.
குணசிங்கவின் தொழிற்சங்க நடவடிக்கைத் தளமாக கண்டிப் பிராந்தியம் விளங்கியது. அவர் அப்பகுதியிலேயே அரசியல் செயற்பாட்டாளராக இயங்கினார். இலங்கைப் பொதுச் சேவை சங்கம் (Lanka General Service Union) என்ற தோட்டத்துறை தொழிற்சங்கத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் அவர் பதவி வகித்தார். மனித உரிமைகள் நடவடிக்கையில் அவருக்கு நீண்டகாலப் பங்களிப்பு இருந்தது. 1979இல் ‘இனங்களுக்கிடையிலான நீதிக்கும் – சமத்துவத்திற்குமான இயக்கம்’ (The Movement for Inter–racial Justice and Equality) என்ற அமைப்புத் தோற்றுவிக்கப்பட்ட போது நியூட்டன் குணசிங்க அவ்வமைப்பின் ஆரம்ப நிறுவன உறுப்பினராக இருந்தார். இவ்வமைப்பு இனத்துவ அமைதி, மனித உரிமைகள் என்ற இரண்டு விடயங்களில் அர்ப்பணிப்போடு செயற்பட்டது.
நியூட்டன் குணசிங்க அன்பும் பண்பும் நிறைந்தவர், தாராள உள்ளம் படைத்தவர். அவரது நகைச்சுவை உணர்வும், மணிக்கணக்காக நட்புரிமையுடன் அறிவார்ந்த விடயங்களை உரையாடும் திறமையும் வியந்து போற்றப்பட்டது.
1977க்குப் பிந்திய இலங்கையில் (திறந்த பொருளாதாரக் கொள்கைப் பின்புலத்தில்) தனது திறமைகளைப் பயன்படுத்தி பணம் திரட்டும் புலமையாளராக அவர் இருக்கவில்லை. அவர் மனிதநேயம் மிக்கவர்; இலட்சிய நோக்குடையவர். அமைதி, ஜனநாயகம், சோசலிசம் என்பன இந்நாட்டில் மலர வேண்டும் என அவர் உழைத்தார். எமது சமூகம் அழிவின் விளிம்பிற்கே சென்று விட்டதைக் கண்டு அவர் உளம் வருந்தினார். எமது சமூகத்தைச் சூழ்ந்து வந்த சமூக–அரசியல் பேரழிவை நியூட்டன் குணசிங்க, எம்மில் பலர் கண்டுணர்வதற்கு முன்பே தெளிவாக உணர்ந்திருந்தார். பேரழிவுகளினதும் அவலங்களினதும் வேதனையை முழுமையாக அனுபவிக்காமலேயே நல்ல சாவு அவருக்குக் கிட்டியது. மனிதாபிமானப் பண்புகள் நிறைந்த ஆய்வறிவாளன் என்ற கௌரவமுடைய கலாநிதி நியூட்டன் குணசிங்க விட்டுச் சென்ற வெற்றிடம் நிரப்பப்படப் போவதில்லை.
‘Newton Gunasinghe – A Tribute to a Scholar’ என்னும் தலைப்பிலான இக்கட்டுரை, நியூடன் குணசிங்க அவர்கள் காலமானபோது அவருக்கு அஞ்சலி செலுத்தும் முறையில் Lanka Guardian (November 15, 1988) இதழில் பிரசுரமானது. பின்னர் இக்கட்டுரை சசங்க பெரேரா அவர்கள் தொகுத்துப் பதிப்பித்த ‘Newton Gunasinghe: Selected Essays’ (SSA, 1996; 2011) எனும் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு நூலின் முன்னுரையாக அமைந்தது.



