மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்ற பாடல்களைச் சிந்து என வரையறுப்பார்கள். முதலடியும் அடுத்த அடியும் சீரின் எண்ணிக்கையால் ஒத்து இருப்பின் அது சமநிலைச் சிந்து என அழைக்கப்படுகிறது. அடியும் சீரும் எண்ணிக்கையால் வேறுபட்டு இருப்பின் அதனை வியனிலைச் சிந்து என்கிறோம். சிந்து இலக்கியங்கள் காலங்களுக்கு ஏற்ப மாறுதல்களை கொண்டமைந்திருந்தன. பிற்காலத்தில் சிந்துப் பாடல்கள் கீர்த்தனைகளுக்குரிய அமைப்பையும் உள்வாங்கிக் கொண்டு மாற்றங்களோடு வெளிவந்தன. சிந்து இலக்கியம் 13 ஆம் நூற்றாண்டில் வெளிவரத் தொடங்குகிறது. 18 ஆம் நூற்றாண்டில் பல சிந்து இலக்கியங்கள் வெளிவருகின்றன. இந்நூற்றாண்டில் முதலாவதாக காவடிச் சிந்து நூல் முதன்முதலாக வெளியிடப்பட்டதன் ஊடாக முன்னோடிப் பாடலாசிரியராக அண்ணாமலை ரெட்டியார் கவனத்தைப் பெறுகிறார். காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, நொண்டிச் சிந்து, வரலாற்றுச் சிந்து, கொலைச் சிந்து, விபத்துச் சிந்து, நீதிச் சிந்து என்றவாறு பல பிரிவுகள் வெளிவருகின்றன. அவற்றுள் கொலைச் சிந்து என்பது முக்கிய கவனத்தைப் பெறுகிறது. அவ்வகையில் தமிழ்நாட்டில் பல்வேறு கொலைச் சிந்துப் பாடல்கள் வெளிவருகின்றன. அதன் தாக்கத்தோடு இலங்கை, மலையகத்திலும் பல்வேறு கொலைச் சிந்துப் பாடல்கள் வெளிவருகின்றன. பக்தியைப் பாடுவதையே நோக்காகக் கொண்ட நிலையில், சமூகப் பாதிப்பு நிலைகளையும் சிந்து வடிவில் இயற்றத் தொடங்கினார்கள். அவ்வாறு கொலைச் சிந்துகளைத் தந்தவர்களுள் ‘ஜில்’ என்ற பெயர் மிகுந்த கவனிப்பிற்குரியதாக விளங்குகிறது.

ஜில், தோட்டங்களில் நிலவிய மனித உரிமை, தொழிலுரிமை மீறல்கள் மீதான எதிர்ப்புணர்வை தன் பாடல்கள் மூலம் வெளிப்படுத்துவதில் அதீதமான ஈடுபாட்டைக் காட்டி வந்துள்ளதை அறிய முடிகிறது. சமகால நாட்டு நடப்பு தொடர்பிலான கவனமும், தனது மார்க்கம் தொடர்பிலான ஈடுபாட்டுடனும் இவர் பாடல்களைத் தந்துள்ளமை கவனத்திற்குரியதாகும். பொதுவாக மலையகத்தில் பல வீதிப் பாடலாசிரியர்கள் இருந்துள்ள போதிலும், பின்னாளில் வந்து ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்ற ஒரு வீதிப் பாடலாசிரியராகவும் இவரை அடையாளம் காண முடிகிறது. அவ்வாறே, இவர் வாழ்ந்து பாடல்கள் இயற்றிய காலத்தில், அப்பாடல்களை மக்கள் மத்தியில் பாடிக்காட்டுவதை கட்டாயப் பணியாகக் கொண்டு செயற்பட்டுள்ளார். இதன் வாயிலாக மக்கள் மத்தியிலும் ஜனரஞ்சகம் பெற்ற ஆளுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். பதுளை பஸ்தரிப்பு நிலையமே இவர் பாடல் பாடியுள்ள பிரதான தளமாகிறது. இத்தளத்திற்கு வந்து போகின்ற மக்களின் விருப்பத்திற்குரிய வெற்றிலையை விற்பனை செய்து கொண்டே, இப்பணியில் ஈடுபட்டதன் வாயிலாக மக்கள் மத்தியிலான இவரது நெருக்கமும் தொடர்பும் இவரது பாடல்கள் மீதான கவனத்தைப் பரப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். வாசனைத் திரவியங்களுடன் கூடிய வெற்றிலைக் கலவை ‘ஜில் வெற்றிலை’ என்றே அறியப்படுகிறது.

மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற இவர், வாசனை கலந்த வெற்றிலையை விற்பனை செய்ததன் ஊடாகவே இவரிலிருந்து ‘ஜில் வெற்றிலை’ என்ற காரணப் பெயர் உருவெடுத்துள்ளது. இவர் ‘ஜில் வெற்றிலை’ விற்பனை செய்யும் போது, தான் இயற்றிய பாடல்களில் பொதிந்துள்ள சுவாரஷ்யமிக்க வரிகளைப் பாடிய நிலையிலேயே விற்பனை செய்துள்ளார். ‘ஜில் சுல்தான்’ என அழைக்கப்பட்ட கே.கே.எஸ். முஹமது சுல்தான் 1905 ஆம் வருடம் பிறந்து 1979 வரை வாழ்ந்துள்ளதாக மு. நித்தியானந்தன் பதிவு செய்கிறார். அவ்வாறே சாரல் நாடன், லெனின் மதிவானம், வ. செல்வராஜா, குடந்தையூரான், கவிஞர் சாரணா கையூம், அ. லெட்சுமணன், பேராசிரியர் செ. யோகராசா, சு. தவச்செல்வன், மு. சிவலிங்கம், தெளிவத்தை ஜோசப், மானா மக்கீன் ஆகியோர் ஜில்லினுடைய பாடல்கள் பற்றிய பதிவுகளைச் செய்துள்ளனர். அவ்வகையான பதிவுகள் ஆய்வு எழுத்துகள், ஆவணப்படுத்தல் முயற்சிகள் போன்றவையாகவும் அமைந்துள்ளன.
தெளிவத்தை ஜோசப்பின் புனைவு எழுத்தினுள் ‘ஜில் சுல்தான்’ பின்வருமாறு அடையாளப்படுத்தப்படுகிறார். “இடுப்பளவில் தொங்கும் வெற்றிலைத் தட்டில் ஒரு சில்லறை கடையே இருக்கிறது. வெற்றிலைக் கடையை கழுத்தில் மாட்டி வைக்கும் கையகலக் கறுப்புப் பட்டியில் கலர் கலராய் வேலைப்பாடுகள் செய்து வைத்துள்ளார். இடையிடையே தொங்கும் ரஸக்குண்டுகளுடன் சர்க்கஸ் பபூன் மாதிரி தலையிலே குஞ்சம் வைத்த தொப்பி, கால்களுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நீள் சட்டை, கணுக்கால்களில் நாட்டியக்காரி போல் மணிச்சலங்கை தாளத்துடன் ஒலிக்கும். நாலைந்து வரிகளைக் கத்திப் பாடிக்கொண்டு, கால் சலங்கை ஒலி எழுப்ப குதிக்காலைத் தரையில் உதைத்து ஊன்றி பஸ்ஸை சுற்றி வரும் காட்சி, ஜோடித்த ஒரு சின்னத் தேர் போலிருக்கும்.”
தனது மார்க்கம் சார்ந்த பாடல்களையும் நிறையவே இயற்றியுள்ளார். மங்காத மாமறையின் 1400 ஆம் பூர்த்திப் பாடல், கல்முனைக்குடி கொடியேற்ற விழா, இஸ்லாமிய இளவல்கள் படும் பாடு, உலகம் நிறைந்த முஸ்லிம்களின் ஒழுக்கம் எனும் முரசு, சீதனம் ஒழியவே தீன் வழி முழங்கவே ஆகிய தொகுப்புகள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகளை வெளிப்படுத்தும் தொகுப்புகளாகும். பெருந்தோட்டங்களில் நிலவும் அடக்குமுறைகள், அடாவடித்தனங்கள் குறித்த அன்னாரின் தொடர் அவதானம், அவ்வாறான சம்பவங்களின் நியாயப்பாடுகளைப் பேசுபொருளாக்கிப் பாடல்களைப் புனைவதில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அடக்குமுறையில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீறு கொண்டு எழும் வகையில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தும் முனைப்பிலும் இப்பாடல்கள் தொழிலாளர்களின் மத்தியில் கவனத்தைப் பெற்றுவந்துள்ளன. மலையக வீதிப்பாடல்களுக்கே உரியவாறு, சினிமாப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பாடல்களின் மெட்டுகளில் பாடல்கள் புனையப்பட்டு மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இப்பாடல்களின் உள்ளடக்கம் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வைத் தூண்டுவதாகவும் அமைந்துள்ளது. அவ்வாறே தவறான முடிவுகளைத் தூண்டும் வகையிலும் அமைந்த பாடல்களும் கவனத்தைப் பெறுகின்றன.


ஜபார் ஜில் பாடிய பாடல்களில் அவருக்கு ஓர் அடையாளத்தைத் தந்த பாடலாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
“தண்டுகலா தோட்டத்தில
திண்டு முண்டு கணக்கப்பிள்ளை
துண்டு துண்டா வெட்டிடாருங்க யாரோ தாங்க
கண்ட துண்டமாக போச்சிங்க
கழுத்து முண்டம் கைலாசம் சேர்ந்திருச்சிங்க…”
இப்பாடல் மலையக அரை வாய்மொழிப் பாடல் வரிசையில் அனைவரின் கவனத்தையும் பெற்றதாக விளங்குகிறது. பொதுவாக மலையகப் பெருந்தோட்ட வரலாற்றில் கணக்கப்பிள்ளை எனும் பதவி நிலை இரண்டும் கெட்ட நிலையில் உள்ளது. தனது சேவைக்காலம் வரையில் நிர்வாகத்திற்குச் சார்பான வகையில் தொழிற்படுவதையே இவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்படுவார்கள். தோட்டங்களில் ஆதிக்க சக்திகளாக விளங்கும் ‘துரைமார்’ வர்க்கத்தினர், தங்களது சமூக அந்தஸ்திற்குள் கணக்கப்பிள்ளைமார்களை ஒருபோதும் இணைத்துக்கொள்வதில்லை. அதேவேளை, கணக்கப்பிள்ளைமார்களும் அவர்களுக்குக் கீழ் பணியாற்றும் உத்தியோகத்தர்களும், தங்களைத் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து பிரித்தே அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய சமூக இடைவெளி, அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒருவிதமான சமூகத் தனிமைப்படுத்தலையும் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. மேலிடத்துக் கட்டளைகளைத் தொழிலாளர்களிடம் நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் இருக்கும் இவர்கள், இரு தரப்பிற்கும் இடையில் சிக்கிய ஒருவித ‘நெருக்கடிக்குள்ளான’ தரப்பினராகவே விளங்குகின்றனர்.
தோட்டங்களில் காணப்படும் பிரிவுகளின் தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முழுப் பொறுப்பும் கே.பி. என அழைக்கப்படும் கணக்கப்பிள்ளையின் பொறுப்பைச் சார்ந்ததாகவே அமையும். தோட்டம் ஒன்றில் பெரிய துரை பேரரசராகவும், டிவிசனுக்குப் பொறுப்பான கணக்கப்பிள்ளை சிற்றரசராகவும் விளங்குவார்கள். டிவிசன் ஒன்றில் சகலதும் கணக்கப்பிள்ளையின் ஆளுகைக்குட்பட்டதாகவே அமைந்திருக்கும். டிவிசனைப் பொறுத்த வரையில் பேரரசர் நிலையிலேயே கணக்கப்பிள்ளைமாரின் வகிபங்கு அமைந்திருக்கும். தொழிலாளர்களைப் பிழிந்து எடுக்கும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கும். தொழிலாளர்களிடத்தே அதிகமாக உழைப்பைப் பெற்று, அதனால் தன் நலன் சார்ந்த விடயங்களையும் பெற்றுக்கொள்பவர்களாக கணக்கப்பிள்ளைமார்கள் விளங்குகிறார்கள். தொழிலாளர்களைப் பிழிந்து எடுப்பதிலும், இலஞ்சங்களைப் பெற்றுக்கொள்வதிலும், பெண் தொழிலாளர்களைப் பாலியல் ரீதியில் வதைப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இக்கணக்கப்பிள்ளைமார்கள் விளங்கியுள்ளனர். அவ்வாறான கணக்கப்பிள்ளைகளின் அடையாளமாகவே தண்டுகலா தோட்டத்து வையாபுரி கணக்கப்பிள்ளை விளங்கினார்.
அந்தவகையில், மத்திய மாகாணத்தைச் சேர்ந்த ஹட்டன் பகுதி வெல்லவா தண்டுகலாவத்தை கே.பி. வையாபுரி கணக்கப்பிள்ளையின் கொலைச் சிந்து எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட பாடல் நூல் முக்கிய கவனத்தைப் பெறுகிறது. அத்தொகுப்பு, நிர். 152, ஏ. லோவர் வீதி, பதுளை எனும் முகவரியில் இருந்து கே.கே.எஸ். ஜில் அவர்களின் பெயரிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ரூபாய் 25 சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ள இப்பாடல் தொகுப்பு பண்டாரவளை ஐடியல் அச்சகத்தில் அச்சு வடிவம் பெற்றுள்ளது. இத்தொகுப்பு முழுமையாகக் கிடைக்கப்பெறாத நிலையிலும், அத்தொகுப்பில் உள்ளடங்கியிருந்த “தண்டுகலா தோட்டத்தில திண்டு முண்டு கணக்கப்புள்ள..” என்ற பாடல் கொண்டிருக்கின்ற உள்ளடக்கம் பல செய்திகளை எடுத்துரைப்பதை அறியமுடிகிறது. கொலை ஒன்றை கொண்டாட்டமாகப் பார்க்கின்ற போக்கும், அவ்வாறு பார்க்கத் தூண்டுகின்ற எத்தனிப்பும் பாடலாசிரியரின் உள்ளத்தில் உட்பொதிந்திருப்பதை அறிய முடிகிறது. இப்பாடல் தொழிலாளர்களிடத்தே எதிர்ப்புணர்வையும், தோட்ட நிர்வாகத் தரப்பினரிடத்தே பய உணர்வையும் ஏற்படுத்தியுள்ளமையையும் அறிய முடிகிறது.

மேற்குறித்த பாடல் தொகுப்பு நூலில் உள்ளடங்கியுள்ள கே.கே.எஸ். ஜில்லின் வரிகளை மானா மக்கீன் வெளியிட்டுள்ள ‘பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில்’ எனும் தொகுப்பு நூலின் ஊடாகத் தரிசிக்க முடிகிறது. அவ் உரை பின்வருமாறு அமைகிறது. “அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! நீங்கள் நன்கு உணர்ந்து பாருங்கள். நம்மை பாட்டன், பூட்டன், கங்காணிக் கூட்டம் கூட்டி வந்தார்கள். அவர்கள் இன்று தேயிலைத் தூருக்கும், றப்பருக்கும் உரமாகிவிட்டார்கள். ஆகையினால் தாங்கள் தயவு செய்து பாட்டாளிகளுடன் ஒத்து வாழ வேண்டியது கடமை. கங்காணியாய் இருந்தாலும் சரி, கணக்கப்பிள்ளை கே.பியாய் இருந்தாலும் சரி, பாட்டாளி மக்கள் தொழிலாளியாய் இருந்தாலும் சரி, எல்லோரும் மனிதர்கள்தான்.”

இப்பாடலின் மூலம், முதலாளித்துவப் பொறிமுறைக்கு தொழிலாளர்களைப் பலியாக்கும் கங்காணிகள், கணக்கப்பிள்ளைகளின் வகிபங்கை அறிய முடிகிறது. வர்க்கம் சார்ந்த பாடலாசிரியரின் உள்ளக்கிடக்கையை அறிய முடிகிறது. தொழிலாளர் நலன் சார்ந்து சமதர்மத்தைப் போதிக்கும் ஜில்லினுடைய போக்கினை அறிய முடிகிறது. “மனிதன் என்றால், ஜாதி என்றால், ஆண் – பெண் ஜாதி இரண்டு. தன்னுயிரைப் போல மண்ணுயிரை நினைத்து வாழ வேண்டும்.” என்ற ஜில்லின் வலியுறுத்தல் வரிகளும் கவனத்தைப் பெறுகின்றன.
மேலும், கணக்கப்பிள்ளை கொலை தொடர்பாக அவர் கூறிய “துரைக்குப் பந்தம் பிடித்து வேணுமெண்டு பொய் சாட்சி சொன்னதிலே அவர் உயிர் இழந்துவிட்டார் (வையாபுரி கணக்கப்பிள்ளை). அது விசயம் எல்லோரும் அறிந்ததே. இருக்கக்கூடிய கணக்கப்பிள்ளை, நண்பர்கள், மக்களுடன் ஒற்றுமையாக வாழ நான் கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்.” என்ற வரிகளும் முக்கியமுடையன.
கொலைகள் சமூகப் பின்னணியில் இடம்பெறுகின்றன. கொலைகள் தொடர்பான காரணங்களை ஆராயும் வகையில் கொலைச் சிந்துகள் அமைகின்றன. ‘மலைக் காட்டு மகாராஜா குரலோசை’, ‘பரிதாப கீதம்’ ஆகிய தலைப்பிலான தொகுப்பு நூல்கள் மலையகத்தில் ஆங்காங்கே இடம்பெற்ற படுகொலைகள் பற்றிய தரவுகளை உட்சுமந்துள்ளன. கணக்கப்பிள்ளைகளான மூக்கன், வேலாயுதம், ராமலிங்கம் ஆகியோருக்கு தொழிலாளர்களான கந்தன், செல்லையா, வெங்கடாசலம் ஆகியோரினால் வழங்கப்பட்ட தண்டனைகள் குறித்த பதிவாகவும் இவரால் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவ்வாறே 1966 இல் நுவரெலியா மாசா தோட்டத்தில் பணியாற்றிய வேலுத்தேவர் கணக்கப்பிள்ளையை கொலை செய்தமை தொடர்பிலும் எழுதப்பட்ட பாடல்கள் தொகுப்பாகியுள்ளன. 19க்கு மேற்பட்ட சிந்து நூல்கள் ஜில் சுல்தானினால் வெளியிடப்பட்டுள்ளதாக மானா மக்கீன் குறிப்பிடுகிறார்.
“வாசமுள்ள ஜில்லு
வாயில் போட்டு மெல்லு
வாங்கிப் பார்த்து சொல்லு” எனப் பாடிக்கொண்டே ஜில் வெற்றிலை வியாபாரமும்,
“பாவலன் ஜில் சுல்தான் பாட்டு
இதை வாங்கி மனதில் ஊட்டு” எனப் பாடிக்கொண்டே பாடல் நூல்களையும் விற்பனை செய்யும் வழக்கத்தை ஜில் சுல்தான் கொண்டிருந்தார். பொதுவாக அக்கால வீதிப்பாடலாசிரியர்களின் கவனத்தை “மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி” என்ற பாடல் பெற்றுள்ளது. இப்பாடல் மெட்டில் பல பாடலாசிரியர்கள் பாடல்களைத் தந்துள்ளார்கள். அவ்வாறே சுல்தானும் அப்பாடல் மெட்டில் பாடல் ஒன்றைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அச்சியா வருசத்தில அரிசிப் பஞ்ச காலத்திலே
பச்சமுள்ள கங்காணியும் – சின்னத்தம்பி
படகிலையே கூட்டி வந்தான நல்லதம்பி…..”
இந்திய வம்சாவளி மக்களின் வரவு தொடக்கம் அவர்களின் உழைப்பின் நிலை தொடர்பாகவும் பேசுவதாக இது அமைகிறது. உரிமைகள் தொடர்பான பாதிப்பு நிலையை வலியுறுத்தும் கவனிப்பும் குறிப்பிடத்தக்கது.
“இந்தியாவில் பெண்ணைக்கட்டி
இலங்கை வந்து மண்ணை வெட்டி
கண்ட பலன் ஒண்ணுமில்லை – சின்னத்தம்பி
நம்ம காக்க வில்லை மலங்காடு – நல்லத்தம்பி”
“பண்டு தொட்டு பல காலமா பாட்டனோடும் முப்பாட்டனும்
கூட்டமாக வாழ்ந்திருந்தோம் சின்னத்தம்பி
நமக்கு ஓட்டுரிமை இல்லைதானே – நல்லதம்பி”
தொழிலாளர் உரிமைக்காகச் சங்கத்தில் சேருவதே பெரும் சவாலாக இருந்த காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தன. தொழிலாளர்களை கொலை செய்யும் அளவுக்கு அதிகாரத் தரப்பினரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நாவலப்பிட்டி லெட்சுமி தோட்டத்தில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவத்தை ஜில் சுல்தான் பாடல் ஊடாக விவரணப்படுத்துகிறார்.
“ஆயிரத்தித் தொள்ளாயிரத்தி ஐம்பத்தொன்பதாம் ஆண்டினிலே
ஆனதொரு பத்தாம் மாதம் அவனிதனில் நடந்த கொலை
இருபத்தி மூணாம் தேதி இது நடந்த கொலை சேதி
பார் புகழும் நாவலப்பிட்டி பக்கத்திலே சோளங்கந்த
சீரோங்கும் லெட்சுமி தோட்டம் சிறந்த தொழிலாளர்களாம்
சேர்ந்தாராம் சங்கம் இலங்கைத் தொழிலாளர் சங்கம்
லெட்சுமி தோட்டத்திலே நேயர்களும் சேர்ந்ததிலே”
மலையகத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை அடையாளப்படுத்தும் முனைப்பில், மேற்குறித்தவாறான விவரண அம்சத்துடன் சம்பவங்களை விவரிக்கின்ற போக்கினை இவரது பாடல்களில் அவதானிக்கலாம். எடுத்துக்காட்டாக தொழிலாளியான செல்லையாவின் கொலை, உடபுசல்லாவ கொம்பாடி, பொன்னையா ஆகியோரது கொலைகள், நுவரெலியா, கந்தப்பொலை, ஹைபொரஸ்ட் ஆகிய தோட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்களையும் பாடல்களாக வெளிப்படுத்தியுள்ளார். இவற்றில் நடந்த கொலையைக் கண்டிக்கும் போக்கும், இவ்வாறான கொலைகள் இனியும் ஏற்படக்கூடாது என்ற உள்ளுணர்வும் பொதிந்திருக்கும் பாங்கினையும் அறியலாம்.
மார்க்கம் சார்ந்த பாடல்களை கிழக்கு மாகாணத்தைத் தளமாகக் கொண்டே ஜில் சுல்தான் எழுதியுள்ளதை அறிய முடிகிறது. கொலைச் சிந்து தொடர்பான பாடல்களில் பெரும்பாலும் மலையகத் தோட்டப்புறங்களில் நிலவிய சம்பவங்களையே பதிவாக்கியுள்ளார். ஒரு சில பாடல்கள் கிழக்கு மாகாணத் தளத்திலிருந்தும் எழுதப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த களங்களில் இடம்பெற்ற கொலைகளை மாத்திரமன்றி, பண்பாட்டுக்கு புறம்பான நடத்தைகளால் ஏற்பட்ட கொலைகள் பற்றியும் பாடியுள்ளார். அவ்வாறான பாடல்களை உட்சுமந்த பின்வரும் பாடல் நூல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம்: கூத்தாயி படுகொலை (1963), கன்னிக் கொலை கேசு (1958), குறிஞ்சிப் பூ உம்மா படுகொலைச் சிந்து. 1962 இல் இலங்கை வடபகுதியில் இடம்பெற்ற ‘கோகிலாம்பாள் கொலை’ சம்பவத்தையும் இவர் பாடத் தவறவில்லை. அவ்வாறே மட்டக்களப்பில் 1967 ஆம் வருடம் கண்ணகி அம்பாள் தனது மருமகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவத்தையும் பாடியுள்ளார். இலங்கையின் சகல பிரதேசங்களிலும் இடம்பெற்ற கொலைகளின் பின்னணியை அறிவதில் ஜில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடு குறிப்பிடத்தக்கது.

அறுபதுகளுக்குப் பின்னர், இலங்கை மலையகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாக்கம் உண்டாகிறது. திரைப்படங்கள் இத்திராவிடக் கருத்துகளைக் காவிச் சென்றதில் பெரிதும் துணை நின்றன. அறிஞர் அண்ணா மீதான ஈடுபாடு மலையகத்தவர்களிடையே பெரிதும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அண்ணாவின் கருத்துகளை ஆதரித்த குழுமத்தினர் மலையகக் கலை இலக்கியச் செல்நெறியிலும் அதனைப் பிரயோகிக்க முற்பட்டனர். இந்நிலைமை மலையக நாடகத்துறையின் வளர்ச்சியிலும் செல்வாக்கைப் பெற்றது. அண்ணாவின் மறைவு குறித்து பல வீதிப் பாடலாசிரியர்கள் பாடல்கள் பாடியுள்ளனர். அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் தொகையினர் தொடர்பான கவனம் இன்று வரையிலும் பெரிதாகப் பேசப்படுகிறது. ஜில் சுல்தான், அண்ணாவின் மறைவையொட்டி “இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களுள் ஒருவராம் அறிஞர் அண்ணா” என்ற துயர் சிந்தை எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிந்துப் பாடல் வடிவம் எளிய சந்தம் கொண்ட இசைப்பாடல் வடிவமாகத் திகழ்கிறது. இவ்வடிவில் புலம்பல் சிந்து என்ற பிரிவும் உள்ளது. துன்பம், பிரிவு, இழப்பு, மனக்குறைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லும் பாடல்கள் புலம்பல் சிந்துக்குள் வைத்துப் பார்க்கப்படுகிறது. இழப்புகளை நினைத்து வருந்துதல், இறைவனிடம் முறையிடுதல் போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். ஜில்லினுடைய பாடல்கள் பல புலம்பல் சிந்துக்குரிய மரபோடு இயற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.
“லெட்சுமி தோட்டத்திலே வச்சகுறி தவறாமல்
பச்சி ஒன்னு பறந்திருச்சே ஆண்டவா….
அந்தப் படுபாவி செய்த கொலை தாண்டவா
அழுகாத ஜனங்கலெல்லாம்
அழுதழுது கண்ணீர் விட்டு
அலைமோதித் துடிக்கிறாரே ஆண்டவா
அந்த லெட்சுமி தோட்டத்திலே
நடந்த கொலை தாண்டவா….”
அண்மையில் ‘பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில்’ எனும் தலைப்பில் மானா மக்கீன் ஒரு தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். இந்நூல் பாடலாசிரியர் ஜில் அவர்களினுடைய நினைவுகளை மீட்டுவதற்கும், அவரது பாடல்களின் இரசனைக் குறிப்புகளை அசைவோட்டமாகக் காட்சிப்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். பாடலாசிரியர் ஜில் பல பெயர்களில் படைப்புகளை வெளியிட்டுள்ளார்: அருப்புக்கோட்டையான், ஜில்தாசன், மதியழகன் ஜில், கே.கே.எஸ். ஜில், கே.கே.எஸ். முஹமது சுல்தான். பொதுவாக தனது வீதிப்பாடல் தொகுப்பு நூல்களில் தன்னை கே.கே.எஸ். ஜில் எனவே அடையாளப்படுத்தியுள்ளார். மக்கள் மத்தியில் ஜபார் ஜில் சுல்த்தான் என்ற பெயரும் பிபல்யம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத் தகவலை மலையக நாட்டார் பாடல்களை ஆவணப்படுத்தும் பணியில் திருபதிகரமான பங்களிப்பை செய்து வந்த அமரர் பசறையூர் வேலாயுதமும் வலியுறுத்தியமை ஞாபகத்துக்கு வருகிறது. இவ் விடயம் தொடர்பான பதிவினை 2011ம் வருடம் இடம்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு ஆய்வரங்கமும் பதிவு செய்தமை கவனத்திற்குரியதாகும். ஜில்லின் படைப்புகள் வெளிவந்த பதிப்பகங்கள் தொடர்பாகவும் அறிய முடிகிறது: பதுளை ராஜன் அச்சகம், மாடர்ன் அச்சகம், சரஸ்வதி காந்தி அச்சகம், பண்டாரவளை ரஞ்சித் அச்சகம், இராகலை மணிலா, நாவலப்பிட்டி சரவணா, மட்டக்களப்பு ராஜன். இத்தொகுப்பு நூலை வெளியிட்ட களத்தில் ஜில் சுல்தான் அவர்களுடைய மகனையும் மகளையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மகன் ஊடான தொலைபேசித் தொடர்பில் ‘ஜில்’ பற்றிய நினைவுகளைச் சிலாகித்துக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
கடந்த வருடம் கண்டியில் இடம்பெற்ற “மானா மக்கீனின்” முயற்சியில் இடம்பெற்ற “பதுளை துங்கிந்த சாரலில் ஒரு ஜில்” எனும் தொகுப்பு நூல் வெளியிட்டுக்களம் ஜில் சுல்த்தான் பற்றிய அவதானிப்பில் மிக முக்கிய நிகழ்வாக அமைந்தது எனலாம். ஜில் சுல்த்தான் பற்றிய முழுநாள் கருத்தரங்கமாக அன்றைய நிகழ்வு முக்கியத்தைப் பெறுகிறது. ஊடகத்துறை பிரமுகர்கள், இலக்கிய ஆளுமைகள், இலக்கிய ஆர்வலர்கள், ஜில் அவர்களுடைய மகன், மகள் உட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் என கண்டியில் திரண்டிருந்தார்கள். இந் நிகழ்வில் அன்று வெளியிட்டு வைக்கப்பட்ட “பதுளை துங்கிந்த சாரலில் ஒரு ஜில்” தொகுப்பு நூல் வருகைத்தந்தவர்களுக்கு இலவசமாகவே வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந் நூல் வெளியீட்டு பணிக்கு எம்.எஸ்.அப்துல் லத்தீப், ஏ.எப்.பெரோஸ், எம்.எச்.எம். நஸீர் ஆகியோர் நிதி உதவி வழங்கியதாக மானா மக்கீனின் கூற்று கவனத்திற்குரியதாகும். பாடலாசிரியர் ஜில் பற்றிய கவனத்தை ஏற்படுத்தும் வகையில் மானா மக்கீன் அவர்களது பணி மிகுந்த முக்கியததுவத்தை பெறுவதாக அமைகிறது. அவ்வகையில் வீதிப்பாடலாசிரியர் ஜில்லினுடைய படைப்புகள் குறித்த அவதானத்தை செலுத்தியவர்களின் கருத்து நிலைகளை அறிய முற்படுபவர்களுக்கான வழிகாட்டியாக இத் தொகுப்பு அமையப்பெறுகிறது. சிறு சிறு பதிவுகள் என்ற போதிலும் அவ் ஆளுமைகளின் ஆழமிக்க எழுத்துக்களை ஊடுருவுவதற்குகான வழிகாட்டியாகவும் இத் தொகுப்பை நூலை பார்க்கலாம். இத்தகைய முயற்சி குறித்து இத்துறை ஆர்வலர்களிடம் மானா மக்கீன் முக்கிய கவனத்தை பெறுபவராக விளங்குகிறார்.
‘ஜில் சுல்தான்’ தான் வாழ்ந்த சூழலில் பெற்ற அனுபவங்களைப் பாடலாக முன்வைப்பதில் கைதேர்ந்தவராக விளங்கியுள்ளார். பாடல் இயற்றும் பணி, பாடல்களைத் தொகுப்பாக்கும் பணி, செவ்வை பார்க்கும் செயற்பாடு, முதலீட்டாளர், பதிப்பாளர், விநியோகஸ்தர் என்றவாறு இவரின் ஆளுமைப் பண்பு விரிந்து சென்றுள்ளது. அவ்வாறே சம்பவங்கள் இடம்பெற்ற தளங்களுக்கு நேரில் சென்று தகவல்களை அறிந்து கொள்கின்ற இலாவகம், உள்ளதை உள்ளவாறே எடுத்துச் சொல்லும் பக்குவம், பொருளாதார நடைமுறையைச் சரியாக அணுகும் புலமை என்பதெல்லாம் இவரின் ஆளுமைக் கூறுகளாக விளங்குகின்றன. ஜில் சுல்தான், அநீதியைக் கண்டு வெகுண்டெழும் மனப்பாங்கும், தற்துணிவோடும் எதிர்ப்புணர்வோடும் முன்னகரும் நுட்பமும் கொண்டவர். அவர் ஒரு வலிமையான ஆளுமையாகவும், அதேவேளை ஆழமான மனிதாபிமான உணர்வாளராகவும் போற்றப்பட வேண்டியவராகத் திகழ்கிறார்.

ஜில் சுல்தானின் பாடல்கள் சிலதே கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு இவரது தொகுப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அப்படைப்புகள் மீள்பதிப்பு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். மலையக எதிர்ப்பிலக்கிய முயற்சியில் ஜில் சுல்தானுக்கு எப்போதும் நிலையான இடமுண்டு. மலையக வீதிப்பாடலாசிரியர்களின் பாடல்களின் தொகுப்பாக வெளிவந்த ‘பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்’ தொகுப்பு நூலில் இவரது பாடல்கள் உள்வாங்கப்படாமை அதன் முழுமையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனலாம்.
உசாத்துணை நூல்கள்
- யோகராசா. செ, (2023) ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
- வடிவேலன். பெ, (2025) தமிழ் இலக்கியத்தில் கதிர்காம முருகன் – மலையகத்தில் கவிஞர் அருட்கவி எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை பாடிய சிற்றிலக்கியத் தொகுப்பு. இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.
- முத்துலிங்கம். பெ, (2012) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
- சாரல் நாடன், (1997) மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.
- மாத்தளை ரோகிணி, (1993) உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள். குறிஞ்சி வெளியீடு.
- மானா மக்கீன், (2025) பதுளை துங்ஹிந்த சாரலில் ஒரு ஜில். பூங்காவனம் இலக்கிய வட்டம்.
- சிவலிங்கம். மு, (2007) மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம்.



