லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை உடுப்பிட்டிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது.
உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் உடுப்பிட்டி, கரணவாய் ஆகிய இரண்டு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1).

எல்லைகள்
உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும்; கிழக்கில் கட்டைவேலிக் கோவிற்பற்றும் உள்ளன. மேற்கிலும் தெற்கிலும் தொண்டைமானாறு கடல்நீரேரி உள்ளது.
உடுப்பிட்டிக் கோவிற்பற்றுக்குள், அதன் மேற்குப் பக்கத்தின் பெரும்பகுதி உடுப்பிட்டித் துணைப் பிரிவுக்குள் அடங்குகிறது. கரணவாய்த் துணைப்பிரிவு, உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் கிழக்குப் பக்கத்தில், கட்டைவேலிக் கோவிற்பற்றுடனான எல்லையை அண்டிக் காணப்படுகிறது. நிலப்படத்தின்படி உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளுள் உடுப்பிட்டித் துணைப்பிரிவுக்கு மூன்று பக்கங்களில் கடல் அல்லது கடல்நீரேரி முகப்புகள் உள்ளன. கரணவாய்த் துணைப்பிரிவுக்கு அதன் தெற்கு எல்லையில் மட்டும் கடல்நீரேரி முகப்புக் காணப்படுகிறது (படம்-2).

ஒல்லாந்தர் காலத்து உடுப்பிட்டிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகள் தற்காலத்தில் கரவெட்டி, பருத்தித்துறை ஆகிய இரண்டு பிரதேசச் செயலர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. உடுப்பிட்டிக் கோவிற்பற்றுக்குள் அடங்கியிருந்த வடக்குக் கரையோரப் பகுதிகள் சில இப்போது பருத்தித்துறைப் பிரதேச செயலர் பிரிவின் பகுதியாக உள்ளன. எஞ்சியவை கரவெட்டிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்குகின்றன. உள்ளூராட்சி நிர்வாகப் பிரிவுகளைப் பொறுத்தவரை, ஒல்லாந்தர்கால உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் பகுதிகள் தற்போதைய வல்வெட்டித்துறை நகரசபை, வடமராட்சித் தென்மேற்குப் பிரதேசசபை, பருத்தித்துறைப் பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சிச் சபைகளுக்குள் அடங்குகின்றன.
வீதிகள்
லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி இரண்டு வீதிகள் மட்டுமே உடுப்பிட்டிக் கோவிற்பற்றுக்குள் காணப்படுகின்றன. இக்கோவிற்பற்றின் தென்மேற்குக் கரையில் தொடங்கும் ஒரு வீதி வடகிழக்காகச் சென்று சற்றுத் தொலைவில் இரண்டாகப் பிரிந்து ஒன்று நெல்லியடி ஊடாகவும் மற்றது உடுப்பிட்டி ஊடாகவும் சென்று கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் நுழைகின்றன. இவ்விரு வீதிகளும் இன்றைய யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, உடுப்பிட்டி வீதி ஆகியவற்றின் தடங்களுடன் பொருந்துகின்றன. இவற்றைத் தவிர இக்கோவிற்பற்றுக்குள் வேறெந்த வீதியையும் நிலப்படம் காட்டவில்லை.
நிலப்படம் வரையப்பட்ட காலத்தில் உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் கரையோரங்களில் அமைந்திருந்த துறைகளையும் முக்கியமான குடியிருப்புகளையும் அணுகுவதற்கு நிலப்படத்தில் குறிக்கப்பட்டுள்ள வீதிகளிலிருந்து கிளை வீதிகள் இருந்திருக்கக்கூடும். குறிப்பாக, இன்றைய உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வீதித் தடத்தில் ஒரு வீதி இருந்திருக்க வாய்ப்புண்டு. அதேபோல, உடுப்பிட்டி வீதியிலிருந்து தொண்டைமானாற்றில் இருந்த துறையை அணுகுவதற்கும் வழி இருந்திருக்கக்கூடும். இவ்வாறான வீதிகள் நிலப்படத்தின் நோக்கத்துக்கு முக்கியம் இல்லாதவையாக இருந்ததால் இவற்றை நிலப்படத்தில் காட்டாமல் விட்டிருக்கலாம்.
கட்டடங்கள்
உடுப்பிட்டிக் கோவிற்பற்றிலும் கிறித்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். அத்துடன், தெளிவாகப் பெயர் குறித்த இரண்டு மடங்களும், கடலோர மடங்கள் இரண்டும் இக்கோவிற்பற்றில் காணப்படுகின்றன.
தேவாலயமும் தேவாலய இல்லமும்
போல்டேயஸ் பாதிரியாரின் நூலில் உடுப்பிட்டியில் இருந்த தேவாலயத்தைப் பற்றிய குறிப்புகள் இருந்தாலும், அதன் அமைப்பைப் பற்றிக் குறிப்பிடத்தக்க தகவல் எதுவும் இல்லை.1 அந்நூலில் உள்ள உடுப்பிட்டித் தேவாலயத்தைக் காட்டும் படத்தில் தேவாலயத்தினதும் தேவாலய இல்லத்தினதும் கட்டடங்கள் மண்ணாலான சுவர்களையும் ஓலையால் வேயப்பட்ட கூரைகளையும் கொண்டவையாகவே தோற்றமளிக்கின்றன 2 (படம்-3). ஏற்கெனவே, இக்கட்டுரைத் தொடரின் வேறிடங்களில் குறிப்பிட்டதுபோல் இப்படங்களை வரைந்தவர் கட்டடங்களை நேரிற் பார்க்கவில்லை. போல்டேயஸ் பாதிரியார் விளக்கிச் சொன்னதை வைத்தோ, நேரிற் பார்த்த ஒருவர் பருமட்டாக வரைந்த படங்களை வைத்தோ நூலிற் காணும் படங்களை வரைந்திருக்க வாய்ப்பு உண்டு. இந்த முறையில் கட்டடங்களிற் பயன்பட்ட கட்டடப் பொருட்களைப் பற்றி இலகுவாக விளக்கியிருக்கலாம். இதனால், உடுப்பிட்டித் தேவாலயமும் தேவாலய இல்லமும், படத்தில் உள்ளதுபோல் நிரந்தரமற்ற கட்டடப் பொருட்களால் ஆனவையாக இருந்திருத்தல் சாத்தியமே.

அதேவேளை, போல்டேயஸ் பாதிரியார் யாழ்ப்பாணத்தை விட்டுச் சென்ற பின்னரும் 130 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டுள்ளனர். அந்தக் காலப்பகுதியில் உடுப்பிட்டித் தேவாலயத்தை நிரந்தரமான கட்டடப் பொருட்களைக் கொண்டு மேம்படுத்தியிருக்கக்கூடிய வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.
இந்த ஒல்லாந்தத் தேவாலயம் உடுப்பிட்டித் துணைப் பிரிவில் தற்காலத்து உடுப்பிட்டி வீதியின் தெற்குப் பக்கத்தில் இருப்பதாக நிலப்படம் காட்டுகிறது. இந்த அமைவிடம் இன்றைய உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி ஆண்கள் பிரிவின் அமைவிடத்துடன் பொருந்திவருகிறது. 1847 ஆம் ஆண்டளவில் அமெரிக்க மிசன் குழுவினர் உடுப்பிட்டியில் தமது பணிகளைத் தொடங்கியபோது பழைய ஒல்லாந்தத் தேவாலயமும் அது இருந்த நிலமும் அவர்களின் தேவைக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் 1852 ஆம் ஆண்டில் தமது ஆண்கள் பாடசாலையை இவ்விடத்தில் நிறுவினர்.3
அக்காலத்தில் தேவாலயமும் ஆண்கள் பாடசாலையை அண்டியே இருந்திருக்கக்கூடும். தற்காலத்தில் தேவாலயம் (இப்போது தென்னிந்தியத் திருச்சபைத் தேவாலயம் என அழைக்கப்படுகிறது) உடுப்பிட்டி வீதிக்கு வடக்கே உடுப்பிட்டி அமெரிக்க மிசன் மகளிர் கல்லூரிக்கு அண்மையில் உள்ளது. ஒல்லாந்தர் காலத்துத் தேவாலயக் கட்டடம் பிற்காலத்தில் இடிக்கப்பட்டிருக்கக்கூடும். இப்போது அதன் எச்சங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மடம்
உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் காணப்படும் இரண்டு மடங்களும் உடுப்பிட்டித் துணைப் பிரிவுக்குள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளன. ஒன்று, இவ்வீதி வடமராட்சிக்குள் தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஒல்லாந்தர் காலத்தில் வலிகாமப் பிரிவுக்கும் வடமராட்சிக்கும் இடையில் பாலம் இருக்காததால், மழை காலங்களில் வள்ளங்களைப் பயன்படுத்தியே இடையிலுள்ள தொண்டைமானாறு கடல்நீரேரியைக் கடந்திருப்பர். இங்கே குறித்துள்ள மடம், வள்ளத்துக்காகக் காத்திருக்கும் பயணிகளின் தேவைக்காக அமைக்கப்பட்டிருக்கலாம். நிலப்படத்தில் இதற்கு ‘நீரீ மடம்’ (Nirey Maddam) எனப் பெயர் குறித்துள்ளனர். இப்பெயரின் பொருள் விளக்கம் குறித்தோ அப்பெயர்க் காரணம் குறித்தோ தெளிவில்லை.
இரண்டாவது மடம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் பருத்தித்துறைப் பக்கமாக முதல் மடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வீதிக்கு வடக்குப் பக்கத்தில் காணப்படுகிறது. இதற்கு ‘வல்லியா மடம்’ (Wallea Maddam) எனப் பெயர் கொடுத்துள்ளனர். இப்பெயர் மடம் அமைந்திருக்கும் ‘வல்லை’ என்னும் இடப்பெயரின் திரிபா, அல்லது ‘வல்லியன்’, ‘வல்லியர்’ போன்ற ஆட் பெயர்களின் அடியாக வல்லியா மடம் என்ற பெயர் ஏற்பட்டு, அதுவே ‘வல்லை’ என்ற இடப்பெயருக்கும் காரணமானதா என்பது ஆய்வுக்கு உரியது. வல்லை என்பதற்குத் தமிழில் காடு என்பது பொருள். இதை அடியொற்றியே வல்லை என்னும் இடப்பெயர் ஏற்பட்டது என்ற கருத்து உண்டு.4 இது சரியானால், வல்லை என்னும் இடப்பெயரின் திரிபாக ‘வல்லியா மடம்’ என்பதைக் கொள்வதே பொருத்தமாக இருக்கும். வழமையாக வீதியோர மடங்களுடன் தொடர்புடைய சிறிய கட்டடம், குளம் அல்லது கேணி, மரங்கள் ஆகியவற்றை இவ்விடத்தில் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. ஆகவே, இது, மேற்குறிப்பிட்ட வீதியில் பயணம் செய்பவர்கள் இளைப்பாறிச் செல்வதற்கான ஒரு மடம் என்றே தோன்றுகிறது.
இவற்றுடன், தொண்டைமானாறு முகத்துவாரத்தை அண்டி, தொண்டைமானாறு கடல் நீரேரியை நோக்கியபடி கரையோரத்தில் அமைந்த ஒரு மடமும், வடக்குக் கடற்கரையோரமாக வல்வெட்டித்துறை (Walli Vettie Toere) எனப் பெயர் குறித்த ஒரு மடமும் உடுப்பிட்டிக் கோவிற்பற்றில் உள்ளன. இரண்டாவது குறிப்பிட்ட மடம் வல்வெட்டித்துறை இறங்குதுறையைச் சேர்ந்த மடம் என்பது தெளிவு. இவ்விரண்டும் துறைகளை அண்டி மீன்பிடித் தொழிலுக்கும் கடற்போக்குவரத்துத் தொடர்பான தேவைகளுக்கும் பயன்பட்ட மடங்கள் என்பதில் ஐயமில்லை.
குளங்கள்
உடுப்பிட்டிக் கோவிற்பற்றுக்குள் 13 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. இவற்றுள் சம்பனோட்டிக் குளம், நிக்கொளுக் குளம், தலவைக் குளம், கொளவாளிக் குளம், கொம்பனைத் தூக்கிக் குளம், பண்டாகைக் குளம், கோயிலடிக் குளம், தீருவில் குளம், வேவில் குளம் ஆகிய ஒன்பது குளங்களை உடுப்பிட்டித் துணைப் பிரிவுக்குள் நிலப்படம் பெயர் குறித்துக் காட்டுகிறது. இவற்றைவிட ஒரு கேணியையும், மடம் ஒன்றுக்கு அருகில் ஒரு குளத்தையும் பெயர் குறிப்பிடாமல் குறித்துள்ளனர். நவுண்டில் குளம் எனப் பெயர் குறித்த ஒரு குளமும் பெயர் குறிக்கப்படாத ஒரு துரவும் கரணவாய்த் துணைப் பிரிவுக்குள் உள்ளன.
தற்காலத்தில் இப்பகுதியில் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் 19 குளங்கள் உள்ளன.5 வல்வெட்டித்துறை நகரசபையின் கீழும் சில குளங்கள் காணப்படுகின்றன. நிலப்படத்திலுள்ள குளப் பெயர்களைத் தற்காலப் பதிவுகளில் உள்ளவற்றுடன் ஒப்புநோக்கும் போது, தீருவில் குளம் என்னும் பெயர் இன்றுவரை தொடர்ந்து புழக்கத்தில் உள்ளதைக் காணமுடிகிறது. அதேவேளை, தற்காலத்தில் குளவாளிக் குளம், நெற்கொளுக் குளம் என அழைக்கப்படும் குளங்களையே ஒல்லாந்தர்கால நிலப்படத்தில் முறையே கொளவாளிக் குளம் (Colowalie Coelam), நிக்கொளுக் குளம் (Nicoloe Coelam) எனக் குறித்துள்ளனர் எனலாம். வடமராட்சியைத் தனியே காட்டும் லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள நிலப்படத்தில் கிறித்தவத் தேவாலயத்துக்கு அருகில் குறித்துள்ள குளத்துக்குப் பெயர் தரப்படவில்லை. ஆனால், அதே தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் காட்டும் நிலப்படம் இதற்குக் கோயிலடிக் குளம் எனப் பெயர் கொடுத்துள்ளது. அக்காலத்தில், இந்துக் கோயில்களுக்கு அனுமதி இல்லை. மக்கள் கிறித்தவத் தேவாலயங்களையும் கோயில் என்றே அழைத்தனர். இக்குளம் கிறித்தவக் கோயிலுக்கு அருகில் இருப்பதால் அதற்குக் கோயிலடிக் குளம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கும் என ஊகிக்கலாம்.
பிற அம்சங்கள்
உடுப்பிட்டிக் கோவிற்பற்றின் வடக்குக் கடற்கரையை அண்டி மலைகள் என்ற பெயரில் இரண்டு இடங்களில் இயற்கை அம்சங்கள் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்று தொண்டைமானாறு முகத்துவாரத்துக்கு அருகில் அதற்குக் கிழக்குப் பக்கத்திலும், மற்றது அதிலிருந்து கிழக்குக்கு நோக்கிச் சற்றுத் தொலைவிலும் உள்ளன. முதலாவதற்குப் ‘பெரியமலை’ என்றும் மற்றதற்குச் ‘சிறுமலை’ என்றும் பெயர் குறித்துள்ளனர். இவ்வாறே, வலிகாமப் பிரிவிலும் ‘கீரிமலை’ குறித்துக் காட்டப்பட்டுள்ளதைப் பற்றி ஏற்கெனவே முன்னைய கட்டுரையொன்றில் பார்த்தோம். உண்மையில் இவை மலைகள் அல்ல. ஒப்பீட்டளவில் உயரமான மேட்டுப் பகுதிகள் எனலாம்.
குறிப்புகள்
- Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 332.
- Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 359.
- கி. நடராசா, உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி வரலாற்றுச் சுருக்கம், 150 ஆவது ஆண்டு நிறைவுச் சிறப்பு மலர் 1852 – 2002 (உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரி, 2002), B1.
- “Vallai, Vallan, Vellan”, Know the Etymology: 103, Place Name of the Day, TamilNet 18 Sept 2017 https://www.tamilnet.com/art.html?artid=26408&catid=98
- தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.



