தமிழில்: த. சிவதாசன்
“நாங்கள் இன்னும் அதிகமாக ஏற்றுமதிகளைச் செய்ய வேண்டும்” – இச்சொல்லாடலை நாங்கள் பலதடவைகள் கேட்டுவிட்டோம். அரசியல்வாதிகள், பொருளாதார வல்லுநர்கள், பல்தகமை கொண்ட பலவகையான கருத்தாளர்கள் எனப் பலரிடமிருந்தும் பல தடவைகள் இதைக் கேட்டுவிட்டோம். இது அந்தளவுக்கு அப்பட்டமானதோர் உண்மையாயிருக்க, அதை ஏன் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டும்? இது எங்களுக்கு எப்போதே தெரியும். அப்படியிருந்தும் இது குறித்து நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்?
ஏற்றுமதி வர்த்தகம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு உயிர்நாடி போன்றது. அது வெளிநாட்டுச் செலாவணியைக் கொண்டுவருவதுடன் நின்றுவிடுவதல்ல. இலங்கைக்குள் பண்டங்களை விற்பனை செய்வதனால் ஈட்டும் வருமானம் போதாது; அதற்கு உள்ளார்ந்த போட்டிகளும் அதிகம். மாறாக ஏற்றுமதி வர்த்தகமோ கட்டற்ற சந்தையைத் தருகிறது. ஆனாலும் பண்டங்கள் அந்த ஏற்றுமதிச் சந்தையை அடைவதற்கு மேலும் பல காரியங்கள் அவசியமாகின்றன.

ஏற்றுமதி வர்த்தகம் பணத்தை விடவும் வேறுபல நன்மைகளையும் கொண்டுவருகிறது. சர்வதேசச் சந்தையில் போட்டியிடும் போது அவர்களது தரங்களைப் பேணுவதற்கு நாம் தள்ளப்படுகிறோம். புதுமைகளின் வரவுகளையும் புதிய வணிகச் சந்தைகளையும் நாம் எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் உருவாகிறது. எதிரிகளுக்கு இரையாகப் போவதற்கெனக் காத்திருக்கும் கிணற்றுத் தவளைகளாக நாம் எப்போதும் இருக்க முடியாது. எமது தாய்நாடாம் இலங்கைக்கு வந்து எமது சந்தையில் தமது பண்டங்களை விற்க முயலும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் நாம் போட்டியிட முடியும்.
சந்தை வர்த்தகம் என்று வரும்போது இதர மாகாணங்களைவிட வடமாகாணத்துக்கு ஒரு தனித்துவமுண்டு. அதுதான் புலம்பெயர் தமிழர். முதலீட்டாளர்கள், ஆலோசனையாளர், வாடிக்கையாளர், தொடர்பாளர்கள் எனப் பன்முகப் பலம் வாய்ந்த இச்சமூகம், ஏமாற்றம் தரும் வகையில், மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. அவர்களை நேரடியாக அணுகுவது மட்டுமல்ல, அவர்களது வலையமைப்புகள் மூலம் இலங்கையைப் பூர்விகமாகக் கொண்டிராத அவர்களது நண்பர்களையும், அவர்களது வியாபாரப் பங்காளிகளையும் அணுகுவது அவசியமானது. புலம்பெயர் தமிழர்கள் பல வெளிநாட்டுக்காரருடன் பலமானதும் உறுதியானதுமான உறவுகளை ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இது இலங்கையின் புலம்பெயர் வியாபார வட்டங்களையும் தாண்டிய மிகப் பெரியதொரு சந்தை. புலம்பெயர் சமூகத்தின் பலம் அவர்கள் எப்பண்டங்களை வாங்குகிறார்கள் என்பதில் மட்டும் தங்கியிருக்கவில்லை. அதையும் தாண்டி அப்பாலும் விரிந்த சந்தைகளையும் முதலீட்டாளர்களையும் சென்றடைவதே.
வடமாகாண ஏற்றுமதியாளர் சம்மேளனம் (The Chamber of Northern Exporters – CNE) யாழ்ப்பாணத்தைத் தளமாகக்கொண்ட பல ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டு. ஏற்றுமதி வர்த்தகத்தில் பல சாதனைகளையும் புரிந்திருக்கிறது. விவசாயம், மீன்பிடி, உணவு மற்றும் பானங்கள், கைவினைப்பொருட்கள், ஆயுர்வேதம், தகவற்தொழில்நுட்பம் மற்றும் இதர உற்பத்திப் பண்டங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் பலதரப்பட்ட நிறுவனங்கள் இச்சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றன. மரக்கறி வகைகளைக் கொண்ட 40 அடி கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகங்களை நாடி கிரமமாக வடக்கிலிருந்து புறப்படுகின்றன. இருப்பினும் இவற்றில் வெகு சில கொள்கலன்களே துறைமுகங்களைச் சென்றடைகின்றன. இலங்கையின் இதர பாகங்களில் இயங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அதே சவால்களே வடக்கின் நிறுவனங்களுக்கும்: தளபாடங்கள் (Logistics), பண்டசாலைகள் (Warehousing), காவுதல் (Shipping), பொதி செய்தல் (Packaging), நிதியாண்மை (Financing) ஆகியன. வினைத்திறனற்ற, திருத்தவே முடியாத அரச அதிகாரத்துவத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவதில் இலங்கையின் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பங்காளிகளும் எதிர்கொள்ளும் சவால்களையே வடக்கு ஏற்றுமதியாளரும் எதிர்கொள்கிறார்கள். ஆனாலும் தளபாடங்கள் முதல் நிதியாண்மை வரை வடக்கு ஏற்றுமதியாளருக்கு கிடைத்த பெருநன்மை, இச்சவால்களைத் தனியாக எதிர்கொள்ளாது சம்மேளனத்தின் மூலமாக அணுகுவது. இதன் மூலம் மாகாண ரீதியிலும், மத்திய ரீதியிலும் சம்மேளனம் ஏற்றுமதியாளர்களின் சார்பில் வக்காலத்தாக இருந்து சாதகமான முடிவுகளைப் பெற்றுக்கொடுக்கிறது.

அது மட்டுமல்லாது, இளைய தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்குவது முதல் பெண் தலைமைத்துவ நிறுவனங்களுக்கு உதவிகளைச் செய்தல் எனப் பல வழிகளிலும் சம்மேளனம் செயற்பட்டு வருகிறது. வடக்கில் மட்டுமல்லாது நாடு தழுவிய ரீதியில் இந்த இளைய மற்றும் பெண்கள் சமூகங்களிடம் விருத்தி செய்யப்படாத திறன்கள் பொதிந்து கிடக்கின்றன. 2025 இன் இரண்டாம் காலாண்டில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்களின்படி, விண்ணப்பித்தும் வேலை கிடைக்காத 15 – 24 வயது வரையிலானவர்களில் 26.2% ஆனோர் பெண்களும் 17.5% ஆனோர் ஆண்களுமெனத் தெரிய வருகிறது.

“நாங்கள் வடக்கு மாகாண ஏற்றுமதியாளர்களிடையே போட்டி போடவில்லை, மாறாக உலக ஏற்றுமதியாளர்களுடன் தான் போட்டி போடுகிறோம்” என்பதற்கான வெளிப்பாடே இந்தச் சம்மேளனம். வடக்கு மாகாணத்திலுள்ள தமது போட்டியாளர்களுக்கே உதவி செய்வதன் மூலம், சகலரையும் பலமுள்ளவர்களாக ஆக்கும் செயற்பாடு இது. நாம் அனைவரும் பலமுள்ளவர்களாக மாறும் போது, வட மாகாணத்தையே ஒரு தரமானதும், திறமையானதும், ஆளுமையுள்ளதும், சிறப்புமிக்கதும், உலகச் சந்தைகள் தேடிவரும் ஒரு தரச்சின்னமுமாகவும் (Brand) மாற்றிக்கொள்ள முடியும்.
‘யாழ்ப்பாணம்’ என்ற அந்தச் சின்னம் கோவில்களையும், ஐஸ்கிறீம் கடைகளையும், டச்சுக்கோட்டையையும் தாண்டிய ஒன்றாக மிளிர வேண்டும். துர்ப்பாக்கியமாக, யாழ்ப்பாணத்துக்கு வெளியே, வட மாகாணம் குறிப்பிடத்தக்க தரச்சின்னங்கள் எதையும் கொண்டிருக்கவில்லை.
வட மாகாணத்தின் நேரடி ஏற்றுமதிகளை மட்டுமே சம்மேளனம் ஊக்குவிக்கிறது. இனப்போருக்கு முன்னர் விவசாயத்திலும், மீன்பிடியிலுமே வடக்கு ஆளுமை கொண்டிருந்தது. இனப்போருக்கு முன்னர், மீன்பிடித் துறையில், இலங்கையின் அதி பெரிய ஆளுமையாக வடக்கு மாகாணமே இருந்தது. இப்போது, போர் முடிந்து 16 வருடங்களாகியும் வடக்கின் மீன்பிடித் தொழில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறது. போருக்கு முன்னர் கொடிகட்டிப் பறந்த பிரபல ஆடையுற்பத்திச்சாலை, இரசாயனத் தொழிற்சாலை, படகு கட்டும் தொழில் போன்றவற்றை இப்போது காண்பது அரிது.
பண்டங்களுக்கு மதிப்புக்கூட்டல் (Value Addition) என்பது வடக்கில் இப்போது மிகவும் குறைவு. இப்பண்டங்கள் தெற்கிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கே மேற்கொள்ளப்படும் மதிப்புக்கூட்டல் மூலம் பெறப்படும் ஏற்றுமதி இலாபங்கள் தெற்கிலேயே மீள்முதலீடு செய்யப்படுகின்றன. இதை மாற்றுவதே சம்மேளனத்தின் குறிக்கோள்: வடக்கின் பண்டங்களுக்கு இங்கேயே மதிப்புக்கூட்டல் செய்து, நேரடியாக ஏற்றுமதி செய்து அதனால் கிடைக்கும் முழு இலாபத்தையும் வடக்கே பகிர்ந்து கொள்வது.
வடக்கில் இம்முயற்சிகளுக்கான நம்பிக்கை தெரிகிறது. ஆனால் நம்பிக்கை மட்டுமே சோறு போடாது. பலாலி விமான நிலையத்தின் ஓடு பாதையை விஸ்தரிப்பது பற்றிப் பேசப்படுகிறது. இதன் மூலம் மத்திய கிழக்கிற்கும் தூர கிழக்கிற்கும் நேரடிப் பறப்புகளை மேற்கொள்ள முடியும். இது சாத்தியமானால் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு உடன் மரக்கறி, கடலுணவு மற்றும் பெறுமதி வாய்ந்த விவசாய உற்பத்திகளை நாமே நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் திறக்கும். அது மட்டுமல்லாது உல்லாசப் பயணிகளும் பிரபல நிறுவனங்களின் நிர்வாகிகளும் கண்டங்கள் தாண்டி, யாழ்ப்பாணத்திற்கு நேரடி வருகைகளை மேற்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உருவாகலாம். காங்கேசந்துறை, பரந்தன், மாங்குளம் போன்ற வடக்கின் முக்கிய நகரங்களில் வர்த்தக வலயங்களை உருவாக்குவது பற்றி நாம் ஏற்கெனவே அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம்.
இதுவரை அத்திவாரக் கற்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் செயற்பாடுகள் மும்முரமாகத் தென்பட்டன. அதன் பிறகு அங்கு எவரையுமே காண முடியவில்லை. அவர்களது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமானால் வடக்கின் தொழிற்சாலைகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பாரிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். வட மாகாணத்திற்கு கிடைக்கும் இச்சந்தர்ப்பங்களினால் தேசிய பொருளாதாரம் வளம் பெறும்.
மத்திய வங்கியின் தரவுகளின் படி, இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) 4.5% வட மாகாணத்தின் பங்காக இருக்கிறது. 2030 இல் இது 10% ஆக வளர வேண்டுமென்பது எதிர்பார்ப்பு. 5 வருடங்களில் 4.5% இலிருந்து 10% இற்கு வளர்வது மிகவும் கடினமான காரியம். இது மொத்த வளர்ச்சியின் 17% பங்கு. தற்போது வட மாகாணம் அனுபவித்து வரும் வர்த்தகமும் நுகர்வும் இதைச் சாதிக்கப் போதுமானவையாக இருக்காது. உற்பத்தியும் நேரடி ஏற்றுமதியுமே இந்த எதிர்பார்ப்பைச் சாதனையாக்க முடியும்.
வட மாகாண ஏற்றுமதி சம்மேளனத்தின் (CNE) யாழ்ப்பாண அலுவலகம் மாசி – 2025 இல் நிறுவப்பட்டது. இது இன்னமும் அங்கத்தவர் சேர்ப்பிலும் சேவை விஸ்தரிப்பு முயற்சிகளிலும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வடமாகாணத்தை ஒரு வெற்றிகரமான ஏற்றுமதி மாகாணமாக மாற்றுவதே இச்சம்மேளனத்தின் குறிக்கோள். போருக்கு முன்னான பொருளாதார உச்சத்தை எட்டுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்தின் முக்கிய பங்காளியாக இருக்க வேண்டுமென்பதே சம்மேளனத்தின் கனவு.
சம்மேளனத்துடன் (CNE) தொடர்புகளை ஏற்படுத்த விரும்புபவர்கள் பின்வரும் வழிகளைக் கையாளலாம்:
மின்னஞ்சல்: info@cne.lk
இணையத்தளம்: www.cne.lk
அலுவலக விலாசம்: Chamber of Northern Exporters, 1st Floor, National Housing Development Authority Building, Jaffna, Sri Lanka.
(இக்கட்டுரை மார்கழி 23, 2025 லங்காபிஸினஸ் ஒன்லைன் இணையத்தளத்தில் ஆங்கிலத்தில் வெளிவந்தது)
நன்றி: மறுமொழி



