மலையக மக்களின் வாழ்வியலும் தாலாட்டுப் பாடல்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

மலையக மக்களின் வாழ்வியலும் தாலாட்டுப் பாடல்களும்

January 6, 2026 | Ezhuna

கப்டன் ஹென்றி பேர்ட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கோப்பிச் செய்கையோடு மலையக மக்களின் வாய்மொழிப் பாடல் வரலாறு ஆரம்பிக்கின்றது. சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலேயரின் பூரண கட்டுப்பாட்டில், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு, கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட்டு இம்மக்கள் வாழ்ந்தமையால், உலகில் உள்ள நாட்டுப்புறப் பாடல்களில் இருந்து இவர்களின் பாடல்கள் தனித்துவம் பெறுகின்றன. இத்தகைய இருள் சூழ்ந்த வாழ்வியலுக்குள் சிக்கிய மக்களின் வரலாறு, துன்பம், துயரம் ஆகியவற்றை இவர்களின் வாய்மொழிப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. இன்று, மலையக மக்களின் 200 வருடகாலப் பண்பாட்டைத் தீர்மானிக்கும் முக்கிய கூறுகளாகவும் இவை திகழ்கின்றன. அந்தவகையில், மலையக மக்களின் வரலாற்றையும் வாழ்வியலையும் அவர்களது வாய்மொழிப்பாடல்கள் வழியாகப் புரிந்துகொள்ளும் நோக்குடன் எழுதப்படுவதாக, ‘மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்கள் பேசும் வாழ்வியல்’ எனும் இத்தொடர் அமைகின்றது

நவீன சமூகங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. ஒரு பொதுவான பண்பாட்டுக் கட்டமைப்பிற்குள் வாழும் பல்வேறு குழுக்கள், அப்பண்பாட்டின் அனைத்துக் கூறுகளையும் அப்படியே ஏற்பதில்லை. மாறாக, தங்களின் தேவைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் ஏற்பச் சில பிரத்தியேகப் பண்புகளை வளர்த்தெடுத்துக் கொள்கின்றனர். இத்தகைய உருவாக்கமே, ஒரு பெரிய சமூகத்திற்குள் அக்குழுவைத் தனித்துவமான அடையாளத்துடன் வேறுபடுத்திக் காட்டுகிறது. இது மானிடவியல் ரீதியாகச் சமூகப் பரிணாமத்தின் ஒரு முக்கிய அடையாளமாகும். 

இத்தகைய பண்பாட்டுத்தளத்தில் உருவாகிய மலையகச் சமூகம், தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த தமிழ்ச் சமூகமாகும். இவர்கள் தமிழ்நாட்டில் பண்பாட்டுத் தளத்திலும் வாழ்வியல் முறையிலும் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சமூகமாகவே நீண்டகாலமாக இருந்து வந்துள்ளனர். பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்கள், தங்களது குடியேற்ற நாடுகளில் பொருளாதாரக் கட்டமைப்பை விரிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில், இலங்கைத் தீவிற்கு இவர்களை அழைத்து வந்து குடியமர்த்தினர். பெரும் பண்பாடாக நிலவிய தமிழர் பண்பாட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இச்சமூகம், தங்களுடைய புதிய வாழ்வியல் சூழலுக்கும் புதிய தொழில்முறைச் சார்புக்கும் ஏற்ப உருவாக்கிக்கொண்ட வாழ்வியல் முறையின் விளைவாகத் தோன்றியதே மலையகப் பண்பாடாகும்.

இவர்களிடமிருந்து தோன்றிய இலக்கிய வடிவமாக மலையக நாட்டுப்புற இலக்கியம் திகழ்கிறது. இவ்வாய்மொழி இலக்கியங்களில் தென்னிந்திய வாழ்வியல் சார்ந்த மொழிக்கூறுகள் அதிகமாகக் காணப்பட்டாலும், இலங்கை வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அவை தனித்துவம் பெற்றுள்ளன. இத்தகைய வாய்மொழி இலக்கியங்களுள் தனிச்சிறப்பு பெற்று திகழ்வது தாலாட்டுப் பாடல்களாகும். தாலாட்டுப் பாடல்கள் தமிழ்ப் பண்பாட்டின் மையக் கூறுகளில் ஒன்றாகும். தாலாட்டுப் பாடல்கள் தாய்மை உணர்வின் வெளிப்பாடாகும். தாயின் நாவசைவில் ‘தாலாட்டு’ என்னும் நல்முத்து பிறக்கிறது. எனவேதான், தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு தாலாட்டுப் பாடலே என ‘தமிழண்ணல்’ அவர்கள் குறிப்பிடுகிறார். தாலாட்டுப் பாடல்கள் உலகின் பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகின்றன. உலகில் மனிதரிடத்தில் காணப்படும் காதலின் உச்சமான வடிவம் பிள்ளைப் பாசமே; அது வலிமையும் அழகும் நிறைந்ததாகும். இத்தகைய தாய்–சேய் உறவுப்பிணைப்பில் பிறந்த இயற்கைக் கலைதான் தாலாட்டு எனக் கூறலாம். “தாய் ஆழம் காண முடியாத அன்புக் கடல்; அக்கடலில் விளைந்த வலம்புரிச் சங்கு தாலாட்டு” என்று டாக்டர் ஆறு. அழகப்பன் கூறுகிறார். இத்தகைய தாலாட்டு மனிதகுலம் தொடங்கிய காலம் முதலே தொடர்ந்து வந்திருக்கிறது. உலகில் தாய்மையும் சேய்மையும் இருக்கும் வரை, பாசமும் பந்தமும் நிலவும் வரை, பாடலும் இசையும் உள்ளவரை, தாலாட்டுப் பாடலும் இருந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய தாலாட்டுப் பாடல்கள் தமிழ் மொழியில் சங்ககாலம் முதலே பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. தாலாட்டு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு பல இலக்கியங்களும் உருவாகியுள்ளன. தாய் தன் பெற்ற பிள்ளையைத் தொட்டிலிட்டு தாலாட்டும் வேளையில், அவளது உள்ளத்தில் தோன்றும் கற்பனைகளின் இயல்பான வெளிப்பாடாக தாலாட்டுப் பாடல்கள் அமைந்துள்ளன. அந்தக் கணத்தில், தாய் தன் மனதில் எழும் எண்ணங்களை முழுமையாகப் பாடலாகக் கொட்டி விடுகிறாள். தன் பிள்ளையின் எதிர்காலம், அவன் அல்லது அவளின் சிறப்புகள், வாழ வேண்டிய முறைகள் ஆகிய அனைத்தையும் தன் கற்பனையினூடாக வடிவமைத்து, தாலாட்டுப் பாடலின் மூலம் வழங்குகிறாள்.

“ஆராரோ ஆரிராரோ 

ஆராரோ ஆரிராரோ….

கண்ணே உறங்கைய்யா

கான மயில் உறங்கு

பொன்னே உறங்கையா

பூ மரத்து வண்டுறங்கு….

தூங்கையா என் கண்ணே

தூங்கா மணியே நீ உறங்கு

உறங்கையா கண்ணே

ஓட்டி விடு நித்திரையை”

“ஆராரோ ஆரிராரோ 

கண்ணே ஆராரோ ஆரிராரோ……..

வேலைக்குப் போகலன்னா சாமி

வெரட்டிடுவான் கங்காணி

தூங்கைய்யா… ஏ… சாமி

தூர மலை போக வேணும்

ஆராரோ ஆரிராரோ 

கண்ணே ஆராரோ ஆரிராரோ……”

வாழ்க்கையின் அனுபவக்கூறுகளாக வெளிப்படும் வாய்மொழிப் பாடல்கள் தனிமனித அவல மனோபாவத்துக்குப் பதிலாகக் கூட்டு வாழ்க்கையின் உறுதிப்பாட்டுக்கும், நம்பிக்கைக்கும் அடித்தளமாக அமைகின்றன.

பேராசிரியர் க. கைலாசபதி அவர்களின் பின்வரும் கூற்றுக் கவனிக்கத்தக்கது. 

“கிராமியப் பாடல்களை இயற்றியோர் மிகக் கடினமான வாழ்க்கையை நடத்தினர். அவர்கள் வருந்திச்செய்த வெறுப்பூட்டுகிற உழைப்புக்குக் கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில் மேலிருந்தோரால் ஈவிரக்கம் அற்ற முறையில் சுரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போ அற்றவராய் அல்லல் உற்றனர். இவ்வாறு இருந்தும் இம்மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வு வாதமோ துன்ப இயற்கைக் கோட்பாடோ எள்ளளவும் தலைகாட்டுவதில்லை. அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்தமாக நோக்கும் பொழுது இம்மக்களிடையே தமது நித்தியத்துவத்தைப் பற்றிய உணர்வும் இறுதியில் தமது எதிர்ச்சக்திகள் வெல்லப்படும் என்ற மன உறுதியும் ஆழமாகப் பதிந்திருக்கக் காணலாம்.”

இக்கூற்று நிதர்சனமாக மலையக நாட்டுப்புறப் பாடல்களுக்குப் பொருத்தமாக அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“முருங்க மரம் வெட்டி

முனி மரத்தில் தொட்டி கட்டி

முதலாளி பெத்த கண்ணே

ஆட்டுங்கம்மா தாதி மாரே”

“பாலும் அடுப்பிலே தான்

பாலகனும் தொட்டிலிலே – நான்

பால ஆத்துவேனா…

பாலகன அமத்துவேனா”

என்ற பாடல் வரிகள் மக்களின் அன்றாட வாழ்வியல் கோலத்தைக் காட்டுகிறது. தமிழகப் பண்பாட்டுப் பரப்பில் தாலாட்டுப் பாடல்கள் பொதுவாகப் பாடப்பட்டாலும், மேற்குறிப்பிட்ட தாலாட்டுப் பாடல்கள் மலையக வாழ்வியல் முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொண்டிருப்பதை இங்கு நாம் கூர்மையாக அவதானிக்கலாம். மலையக வாழ்வியல் கோலம் தந்த இந்த நாட்டுப்புற இலக்கியங்கள் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டதற்கு இவ்வரிகள் சிறந்த உதாரணமாகும்.

தாலாட்டுப் பாடல்கள் பொதுவாகக் குழந்தைச் செல்வத்தின் பெருமையையும் சிறப்பையும் தாய்மார்கள் பெருமையோடு பாடுவதாக அமைந்துள்ளன. ஆனால் மலையகத் தாய்மார்களின் வாழ்வியல் முறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இத்தாலாட்டுப் பாடல்கள் வேறுவிதமான தன்மையைப் பெறுகின்றன. மலையகச் சமூகத்தில் ஆண் – பெண் இருபாலரும் உரிய நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தேயிலைத் தோட்டமே அவர்களின் முழுமையான வாழ்க்கைத் தளமாக அமைகிறது. முருங்கை மரம், வேப்பமரம், சவுக்கு மரம் நிறைந்த காடுகளே அவர்களின் வாழ்வியல் சூழலாக இருக்கின்றன. இத்தகைய சூழலுக்கேற்பவே மலையகத் தாய்மார்களின் தாலாட்டுப் பாடல்களும் வடிவமெடுக்கின்றன. எனவே குழந்தைகளைத் தூங்க வைக்கும் வேளையில், தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள், வேதனைகள் ஆகியவற்றை அவர்கள் பாடல்களாகப் பாடுகின்றனர்.

பெண் ஒருத்திக்குக் குழந்தை இல்லை என்றால், அவளைப் பெண்ணாக மதிக்காத மனப்பான்மை தமிழர் பண்பாட்டில் இன்றளவும் ஒரு பெரும் சமூகத் தொல்லையாக இருந்து வருவதாகும். இத்தகைய சூழலில், ஒரு பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொண்டால் அவள் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. அதனாலேயே பெரும்பாலான தாலாட்டுப் பாடல்கள், பிள்ளை பெற்ற சிறப்பையும், தாய்மையையும் பெருமையுடன் எடுத்துக்காட்டுகின்றன.

“ஆராரோ ஆரிராரோ 

ஆராரோ ஆரிராரோ கண்ணே…

காணிக்கை கொண்டு செல்லமே

கண்டி கதிர்காமம் போனோமய்யா

வழியா வழி நடந்து செல்லமே

வரத்துக்கே போனோமய்யா….”

“மால தந்தா வாடுமுன்னு

மலர் கொடுத்தா உதிருமுன்னு

பூ கொடுத்தா வாடுமுன்னு

பிள்ளை தந்தார் தாலாட்ட”

“மலடி மலடி என்று

மானிடர்கள் ஏசுகிறா…

மலட்டுக் குலமதையே நீ

மறப்பிக்க வந்தனையோ”

“பத்து வருசமா..

பாலனில்லா வாசலிலே

கை விளக்குக்கொண்டு

கலித்தீர்க்க வந்தாயோ”

என்ற வரிகள் ஒரு பெண்ணுக்குக் குழந்தை எந்த அளவு முக்கியம் என்பதைக் காட்டுகின்றன. அதையே பெரும் பேறாகக் கருதும் வாழ்க்கைமுறையைக் கொண்ட சமுதாயமாக தமிழர் சமுதாயம் இருப்பதால் ஒவ்வொரு பெண்ணின் உயர் கனவாக இருப்பது குழந்தைச் செல்வமாகும். இன்றுவரை திருமணமான பெண்கள், குழந்தை உரிய நேரத்தில் கிடைக்காவிட்டால் கோயில் கோயிலாக ஏறி நேர்த்தி வைப்பதும், நேர்த்திக் கடன் செய்வதும் நாம் காண்கின்ற காட்சிகளாக இருக்கின்றன. எனவேதான் குழந்தைச் செல்வம் என்பது பெண்களுக்கு மிகவும் உயர்வானதாக மதிக்கப்படுகின்ற ஒரு பண்பாட்டில் தாலாட்டுப் பாடல்கள் மிகவும் முக்கியத்துவம் உடையதாகப் போற்றப்படுகின்றன. 

தாலாட்டுப் பாடல்களின் இன்னொரு சிறப்பு, உறவு முறைகளைத் தன் பிள்ளைக்கு எடுத்துக்கூறி, அவர்களுடைய சிறப்புகளைக் கூறித் தாலாட்டுகின்ற பண்பு. இது இன்றும் காணப்படுகிறது. தாய் மாமன், அத்தை, சித்தப்பா, பெரியப்பா, பாட்டிமார்கள், தாத்தாமார்களின் வரலாறுகளை தாலாட்டுப் பாடல்களில் எடுத்துக்காட்டிப் பாடுகின்ற முறை இப்பாடல்களில் காணப்படுகின்ற இன்னொரு சிறப்பு அம்சமாகும்.

“மாமன் அடிச்சாரோ…

மல்லிகைப்பூச் செண்டாலே…

அத்தை அடிச்சாளோ

அரளிப்பூச் செண்டாலே…

அடிச்சாரைச் சொல்லிவிடு

ஆக்கினைகள் வந்துவிடும்…”

“அத்த மக வாசலுக்கு

நித்தம் நீ போகாத…

குத்தம் கொறைகள்..

அவர் கூறுவார்… நித்தமுமே”

“செக்கச் செவந்தவரோ ஓ மாமன்

சீமைக்கே அதிபதியோ

அழகு செவந்தாரின் அதிபதியோ

அருமை மருமகனோ…”

“ஆனை விக்கும் ஓ மாமன்

சேனைக்கெல்லாம் சின்னத்தொர

சின்னண்ணன் வந்தாரோ உனக்கு

சின்னச் சட்ட கொடுத்தாரோ…”

“சாதிக்கா காய்க்கும்

உன் தாய் மாமன் வாசலிலே

தங்கக் கொட பிடிச்சி

ஓ தாய் மாமன் தாதியரை

முன்ன விட்டு..

தாதிக்கே தந்த பணம்.. 

ரெண்டு தங்க மடம் கட்டலாமே”

உறவுகளைப் பேணவும், நற்பண்புகளை வளர்க்கவும் உதவும் பண்பாட்டைத் தாலாட்டுப் பாடல்கள் மூலமாகவே எமது முன்னோர்கள் பிள்ளைகளுக்குப் பரிமாறியுள்ளனர். மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை உறவுகளோடு இணங்கி வாழ வேண்டிய நெறிமுறைகளை இப்பாடல்கள் மிகச்சிறப்பாகப் பிரதிபலிக்கின்றன. எனவே நாட்டார் பாடல்கள் பல்வேறு பண்புகளை உடையவையாகத் திகழ்ந்தாலும், அவற்றில் உறவுகளையும் பெரியோர்களையும் மதிக்கும் பண்பாட்டை பிள்ளைகளுக்கு வழங்கும் தன்மையைத் தெளிவாக அறிய முடிகிறது.

இத்தகைய நாட்டார் பாடல்கள் மலையகப் பண்பாட்டுக்குள் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதற்குப் பின்வரும் பாடல்களை உதாரணமாகக் கொள்ளலாம். 

“கண்ணே நவமணியே!

கற்பூரப் பெட்டகமே…

சின்ன விழி மூடி என்

செல்லமே… நீ உறங்கு..”

“ஏறாத மலையேறி – நான்

கால் கடுக்க அலைஞ்சலஞ்சி

கண்ட சுகம் ஒண்ணுமில்ல – இங்கே

கஸ்டம் தொடருதம்மா…”

“கொழுந்து நிதம் கிள்ளி என்

விரலொடிஞ்சே போனாலும்

கேப்பாரும் யாருமில்லையம்மா

காப்பாரும் யாருமில்லை…”

“வீடு வாசல் மெழுகிக் கூட்டி

விறகு ஒடிக்கப் போனாலும்

வேலை நிறைய உண்டு 

சின்ன விழி மூடிக் கண்ணுறங்கு”

“உன்னையக் குளிப்பாட்டி பின்னர்

ஒழுங்காத் தலைதுவட்டி – நான்

இட்டேண்டா தொட்டிலில் ஏ…

இனிய நீயும் கண்ணுறங்கு…”

“புத்திக் கெட்ட உங்கொப்பனையும் நீ

புத்தி சொல்லித் திருத்த வேணும்

இப்பவே தூங்கியெழு என்

இளைய மகாராணி நீ”

“கூட எடுத்ததில்ல நாங்க

கொல்லிமலை பார்த்ததில்லை

கூட எடுக்கலாச்சி நாங்க

கொழுந்து மல பாக்கலாச்சு

கொழுந்து குறையுதுன்னு

பொறப்பேறு போட்டாங்க

அருவா எடுத்ததில்ல

அட மழையும் பார்த்ததில்ல

அரும்பு கொறஞ்சதுன்னு

அரைப்பேறு போட்டாங்க”

“பாலும் அடுப்பிலே

பாலகனும் தொட்டிலிலே

பாலகனப் பெத்தெடுத்த

பாண்டியரும் முள்ளுக் குத்த

வேலைக்குப் பிந்திறேன்னு

விரட்டிடுவார் கங்காணி….

தூங்குடா என் மகனே

என் துயரைப் பாடி வாறேன்..”

“அடியளந்து வீடு கட்டும் நம்ம

ஆண்ட மனை அங்கிருக்க

பஞ்சம் பிழைப்பதற்கு

பாற்கடலைத் தாண்டி வந்தோம்

கொஞ்சம் பொழச்சி நம்ம

பட்டணம் போய்ச் சேரலையே

கடல் தாண்டி இங்க வந்தோம்

காலம் சீரழிஞ்சி நம்ம

காணி போய்ச் சேரலையே..”

புதிய தாலாட்டுப் பாடல்களில், அவர்கள் இந்நாட்டிற்குப் பஞ்சம் பிழைக்க வந்த அனுபவங்கள் அதிக முக்கியத்துவம் பெறத் தொடங்கின. பாசம் மிகுந்த உணர்வோடு, தன் பிள்ளையைத் தாலாட்டும் வேளையில், தாய்மார்கள் தங்களின் பசுமை நினைவுகளையும், அனுபவித்த துயரங்களையும் பகிர்ந்துகொள்ள, தாலாட்டுப் பாடல்கள் ஒரு வடிகாலாக அமைந்துவிடுகின்றன.

தாலாட்டுப் பாடல்கள் உலகில் பல்வேறு மொழிகளிலும், பல்வேறு வடிவங்களிலும் காணப்பட்டாலும், மலையகச் சமூகத்தில் அவை தனித்துவம் பெறுகின்றன. இதற்குக் காரணம், இம்மக்கள் தங்களின் வேதனைகளையும் கடின உழைப்பையும் சோகமாக மட்டும் பதிவு செய்யாமல், வருங்காலத்தின் மீதான நம்பிக்கையூட்டும் உணர்வுகளாகவும் இப்பாடல்களில் வெளிப்படுத்துவதே ஆகும்.

இத்தகைய பாடல்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகின்றன. அன்றாட வாழ்க்கை, தொழில், காதல், துக்கம், கொண்டாட்டம் என மனித வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் இவை பிரதிபலிப்பதனால், இத்தகைய நாட்டார் பாடல்கள் மக்களின் உள்ளங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்து வருகின்றன. ஒரு நாடு அல்லது ஓர் இனம் எத்தகைய சவால்களையும் போராட்டங்களையும் சந்தித்தாலும், அவர்களின் சமூக விடுதலை மக்களின் கைகளில் நிலைத்திருக்கக் காரணமாக இருப்பது, இவ்வாய்மொழி இலக்கியங்களில் பேசப்படும் மக்களின் வாழ்வியல் அனுபவங்களே ஆகும். இவையனைத்திற்கும் அடித்தளமாக இருப்பது, அந்த மக்களிடையே காணப்படும் உறுதியான, நிலையான, மாற்றமடைய முடியாத வாழ்வியல் சார்ந்த இலக்கிய வடிவங்களே ஆகும். அத்தகைய இலக்கியங்களே ஒரு சமூகத்தின் இருப்புக்கும் எழுச்சிக்கும் அச்சாணியாக அமைந்து விடுகின்றன. எனவே, மக்களின் வாழ்வியலைப் பேசக்கூடிய நாட்டுப்புற இலக்கியங்கள் எந்த மொழியில் ஆழமாகவும் செம்மையாகவும் பதியப்பட்டு உள்ளனவோ, அந்த மொழி அந்த இனத்தின் ஆணிவேராகவும் அடையாளமாகவும் அமைந்துவிடுகிறது என்பதே நாட்டார் இலக்கியங்களை ஆராய்ந்த அறிஞர்களின் பொது முடிவாகக் காணப்படுகிறது.

ஒப்புநோக்கும் போது, மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட பின்னரும், தமிழர்களாகவே வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும், இலங்கையில் வாழ்ந்த ஏனைய தமிழ்ச் சமூகங்களிலிருந்து அவர்கள் அன்னியப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாகவே நீண்டகாலம் வாழ்ந்தனர். இவர்கள் ஏனைய சமூகத்தவரோடும், வளர்ந்து வந்த நவீனத்துவத் தொடர்பாடல்களோடும் எந்தவிதமான தொடர்புமின்றித் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கையில் வாழ்ந்த ஏனைய மக்களுடன் இவர்கள் எவ்விதத் தொடர்பும் இன்றிக் காணப்பட்டதனால், இலங்கைத் தீவுக்குள் இன்னொரு தீவில் சிறை வைக்கப்பட்டவர்களைப் போலவே அவர்கள் வாழ்ந்தனர் என்று பி.ஏ. காதர் குறிப்பிடுகிறார். இத்தகைய சூழ்நிலையிலேயே மலையக வாய்மொழிப் பாடல்கள் தனித்துவமும் ஆழமும் பெற்றவையாகவும், ஏனைய சமூகப் பண்பாடுகளிலிருந்து மாறுபட்ட தன்மை கொண்டவையாகவும் உருவெடுத்தன. இதேபோல, தாலாட்டுப் பாடல்களும் ஏனைய சமூகங்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்ட சூழலில் தோற்றம் பெற்ற, தனித்துவமான மலையக வாழ்வியலை வெளிப்படுத்தும் முக்கியமான அம்சமாக அமைந்துள்ளன என்பதை மேற்குறிப்பிடப்பட்ட மலையகத் தாலாட்டுப் பாடல்கள் எங்களுக்கு தெளிவுபடுத்துகின்றன.

சான்றாதாரங்கள்:

  1. வேலுப்பிள்ளை, சி.வி. (1983). மலைநாட்டு மக்கள் பாடல்கள். சென்னை: கலைஞன் பதிப்பகம்.
  2. சாரல் நாடன். (1993). மலையக வாய்மொழி இலக்கியம். சென்னை: சவுத் ஏசியன் புக்ஸ்.
  3. சிவலிங்கம், மு. (2007). மலையக தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். சென்னை: டெக்னோ பிரிண்ட்.
  4. காதர், பி.ஏ. (2023). இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம். லண்டன்: சமூக இயல் பதிப்பகம்.
  5. சக்திவேல், சு. ( ). நாட்டுப்புற இயல் ஆய்வு. சென்னை: மணிவாசகர் பதிப்பகம்.
  6. பக்தவத்சல பாரதி. (1990). பண்பாட்டு மானிடவியல். சென்னை: கலைச்சுடர்.


About the Author

வேலாயுதம் இராமர்

வேலாயுதம் இராமர், கொ.புனித அந்தோனியார் ஆண்கள் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். கவிஞர், நாடகம், திரைப்பட நடிகர், மலையக நாட்டார் இலக்கிய செயற்பாட்டாளர் என பல்துறைசார்ந்து செயற்படுவதோடு மலையக கூத்து தொடர்பாகவும் செயற்பட்டு வருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்