உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
13 நிமிட வாசிப்பு

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 1

January 5, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: கலாநிதி கலன சேனரத்தின

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக விளங்கும் கலாநிதி கலன சேனரத்தின ‘Internal Self-determination in International Law History, Theory and Practice’ என்னும் விடயப் பொருள் குறித்து ஆய்வு நூல் ஒன்றை 2021 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். இந்நூல் அறிமுகம், முடிவுரை ஆகியன உட்பட 9 அத்தியாயங்களைக் கொண்டது. 2014 ஆம் ஆண்டு ஹொங்கொங் பல்கலைக்கழகத்திற்கு கலன சேனரத்தின அவர்கள் ‘A Critical Exploration of Internal Self–determination under International Law, with Particular Reference to the Sri Lankan Conflict’ என்ற தலைப்பில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வேட்டை எழுதிச் சமர்ப்பித்தார். பேராசிரியர் ‘Chin Leng Lim’ அவர்களின் மேற்பார்வையில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வேட்டின் திருத்திய வடிவமே 2021 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பிரசுரமாக வெளிவந்தது. 

இந்த நூலின் 9 அத்தியாயங்களையும் உள்ளடக்கிய நூலின் அறிமுகம் மேலோட்டமான ஒரு பார்வையையே தமிழ் வாசகர்களுக்கு வழங்க முடியும். ஆகையால், இந்நூலாசிரியரின் பிரதான வாதங்களை உள்ளடக்கியதாய் அமைந்துள்ள 5 ஆவது அத்தியாயத்தின் கருத்துகளைத் தொகுத்துத் தரும் முறையில் இத்தமிழ்க் கட்டுரையை எழுதியுள்ளோம். ‘Western and Third World Approaches to Internal Self-determination’ (118-154) என்பது இந்த அத்தியாயத்தின் தலைப்பாகும். இதன் சுருக்கிய தழுவலாக்கமாக அமையும் இத்தமிழ்க் கட்டுரை மூல நூலினைப் படிப்பதற்கும் புரிந்து கொள்வதற்குமான திறவுகோலாக அமையும் என்பது எமது நம்பிக்கை. 

உள்ளகச் சுயநிர்ணய உரிமை, வெளியகச் சுயநிர்ணய உரிமை ஆகிய கருத்தாக்கங்கள் சர்வதேசச் சட்டம் (International Law) சார்ந்தவை. பொதுவாக சர்வதேசச் சட்டம் பற்றி இருவகையான கருத்துகள் உள்ளன. சர்வதேசச் சட்டம் உலகில் சமாதானத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பது ஒரு சாரார் கருத்து; அது காலனிய ஒடுக்குமுறையினதும் மேலாதிக்கத்தினதும் செயல்முறை ஊடாக உருவான ஒன்று என இவர்கள் விமர்சிப்பர். இன்னொரு சாரார் ஐரோப்பியச் சிந்தனை, உலகுக்கு வழங்கிய அரும்பெரும் கொடை என இதனைக் கருதுவர். எவ்வாறிருப்பினும், உள்ளகச் சுயநிர்ணயம் என்ற விடயம் பற்றிய சட்டம் முழுமையாக மேற்கில் இருந்து பெறப்பட்டதே என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். 

கெடுபிடி யுத்த காலம்

கெடுபிடி யுத்த காலத்தில் (Cold War Period) உள்ளகச் சுயநிர்ணயம், வெளியகச் சுயநிர்ணயம் என்பன எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டன என்பதைக் கலன சேனரத்தின அடுத்து விளக்கிக் கூறுகிறார். சோஷலிச நாடுகள் அக்காலத்தில் சுயநிர்ணயம் என்றால் அது வெளியகச் சுயநிர்ணயத்தைத்தான் குறிப்பிடுகிறது என்று கூறின. அந்நிய நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாய், காலனிய, இனவாத (Racist) அரசுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலைக்காகப் போராடும் மக்கள் வெளியகச் (External) சுயநிர்ணய உரிமையைப் பெறுவதே சுயநிர்ணயம் ஆகும்; உள்ளகச் சுயநிர்ணயம் என ஒன்று கிடையாது என்றும் இந்நாடுகள் கூறலாயின. இதற்கு மாறாக மேற்கு நாடுகள் அக்காலத்தில் மனித உரிமைகளையும், அரசியல் விடுதலையையும் பற்றிப் பேசின. அதனால், அவை உள்ளகச் சுயநிர்ணயம் (Internal Self–determination) அவசியமானது எனக் கூறின. உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்து ஜனநாயகம், மனித உரிமைகள் (Human Rights) என்ற இலட்சியங்களுடன் தொடர்புடைய கருத்தாகும். மேற்கு நாடுகளும், சோஷலிச நாடுகளும் இவ்வாறு முரண்பட்ட நோக்குடையனவாய் இருந்த கெடுபிடி யுத்த காலத்தில் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் சுயநிர்ணயம் என்றால் அது வெளியகச் சுயநிர்ணயம்தான் என்ற கருத்துடையனவாக இருந்தன. 

இன்று கெடுபிடி யுத்தகாலம் முடிவுக்கு வந்துவிட்டது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவும் விடுதலை பெற்றுவிட்டன. இன்று மூன்றாம் உலக நாடுகள் உள்ளகச் சுயநிர்ணயம் என்று ஒன்று கிடையாது என்று கூறினால் அதன் நடைமுறை அர்த்தம் யாது? நாட்டின் பெரும்பான்மை மக்கள்தான் ஆட்சி செய்யும் உரிமை உடையவர்கள்; சுதந்திரம் பெற்ற நாட்டிற்குள் உள்ளடங்கியுள்ள சிறுபான்மை இனங்களிற்கு உள்ளகச் சுயநிர்ணயம் என்பதைக் கோரும் உரிமை கிடையாது என்பதே இதன் அர்த்தம் ஆகும். இதற்கு மாறாக உள்ளகச் சுயநிர்ணயத்தை ஆதரிப்போர் நாடுகளின் உள்ளக அரசுக் கட்டமைப்பு (Internal Structure of States) முக்கியமானது என்று கூறுகின்றனர்.

உள்ளக அரசுக்கட்டமைப்பைப் பற்றிப் பேசும் போது அதனோடு இணைந்ததான பின்வரும் விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. 

  1. மனித உரிமைகளையும் சிறுபான்மையினர் உரிமைகளையும் (Minority Rights) மதித்தல்.
  2. பிரதிநிதித்துவ அரசாங்கம் (Representative Government).
  3. சட்டத்தின் ஆட்சிக்கு (Rule of Law) மதிப்பளித்தல்.

வேறு வார்த்தையில் கூறுவதானால் ஒரு தேசம் வெளியகச் சுயநிர்ணய உரிமையைக் கோருவதன் முன்நிபந்தனையாக உள்ளகச் சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரித்தல் வேண்டும். கலன சேனரத்தின அவர்கள் மேற்கண்டவாறாக மேற்கு நாடுகளதும், மூன்றாம் உலக நாடுகளதும் உள்ளகச் சுயநிர்ணய உரிமை பற்றிய அணுகுமுறைகளை வேறுபடுத்திக் காட்டுகிறார்.

மேற்குலகும் உள்ளகச் சுயநிர்ணயமும் (Internal Self-determination and the West)

‘மேற்குலகு’ (West) என்ற சொல் இங்கே மேற்கு நாட்டு அரசுகள், நிறுவனங்கள் என்பனவற்றையும் மேற்கு நாடுகளின் சர்வதேசச் சட்ட நிபுணர்களையும் குறிக்கும் சொல்லாகும். இன்று மேற்கு நாட்டு அரசுகளும், மேற்கு நாட்டு நிறுவனங்களும் உள்ளகச் சுயநிர்ணயத்திற்கு ஆதரவாகப் பேசுகின்றன. அந்நாடுகளின் சர்வதேசச் சட்ட நிபுணர்கள் உள்ளகச் சுயநிர்ணயத்திற்காக வாதாடுகிறார்கள். இக்காரணத்தால், உள்ளகச் சுயநிர்ணயம் மேற்கு நாட்டுக் கருத்தாக்கம் என்று கூறுவது ஏற்புடையதே எனக் கலன சேனரத்தின குறிப்பிடுகிறார். ஆனாலும், உள்ளகச் சுயநிர்ணயம் என்பதை மேற்குலகு பல்வேறு கோணங்களில் விளக்கிப் புரிந்து கொள்கிறது. இப் பல்வேறுபட்ட விளக்கங்களில் சில, மூன்றாம் உலகிற்கும் ஏற்புடையதாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிடுகிறார். மேற்குலகின் உள்ளகச் சுயநிர்ணயத்தைப் புரிந்து கொள்வதில் மூன்று பொதுக்கூறுகள் (Three Broad Features) கவனிப்புக்கு உரியன. அவையாவன,

  1. உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிப் பன்முகப்பட்ட பார்வைகள் (Plurality of Views) உள்ளன.
  2. மேற்குலகின் சுயநிர்ணயம் பற்றிய விளக்கம் சிறுபான்மையினருக்கு (Minorities) சாதகமானது; நன்மை பயப்பது. மேற்குலகு உள்ளூர்மட்டச் சுயாட்சியை (Local Self Governance) ஆதரிக்கிறது.
  3. ஆயினும் மேற்குலகு நாடுகளின் இறைமையையும் (Sovereignty), புவிசார் ஒருமைப்பாட்டையும் (Territorial Integrity) மதிக்கின்றது. தேசங்கள் சிதைவுறுவதை மேற்குலகு ஏற்பதில்லை. 

இம்மூன்று விடயங்களையும் அடுத்துச் சுருக்கமாகப் பார்ப்போம். 

1. பன்முகப் பார்வைகள்

சர்வதேசச் சட்ட அறிஞர்களால் எழுதப்பட்ட ஆரம்பகால நூல்களில் உள்ளகச் சுயநிர்ணயம் என்பது பல்வேறு கோணங்களில் நோக்கப்பட்டுள்ளது. 

அ. சிலர் மக்களின் விருப்பப்படி அவர்களால் ஓர் அரசாங்கத்தைத் தெரிவு செய்யும் உரிமையை உள்ளகச் சுயநிர்ணயம் என்றனர். 

ஆ. இன்னும் சிலர் ஒரு தேசத்தின் அரசாங்கம், அத்தேசத்தின் எல்லைக்குள் வாழ்ந்துவரும் இனத்துவ, இன அல்லது சமயச் சிறுபான்மையினர் (Ethnic, Racial or Religious Minorities) மீது ஒடுக்குமுறையை நடத்தக்கூடாது என்பதையே உள்ளகச் சுயநிர்ணயம் குறிப்பதாகக் கருதுகிறார்கள்.

இ. வேறுசிலர் ஒரு தேசத்தின் சிறுபான்மை இனங்களுக்கு தமக்கென ஓர் அரசியல் யாப்பை (Constitution) வரைந்து கொள்ளும் உரிமை இருக்கிறது. அத்தேசத்தின் அரசுக்குள் ஒரு சுயாதீனமான அரசை (Autonomous State) நிறுவிக்கொள்ளும் உரிமை அவற்றுக்கு உள்ளது என்பதாக விளக்கம் கூறுகின்றனர். 

மேற்கண்டவாறு வேறுபடும் பன்முகப் பார்வைகள் ஊடே பிரதானமான உள்ளடக்கமாக ஜனநாயகம் என்ற தத்துவம் காணப்படுகிறது (The core content has been Democracy). வெவ்வேறு சர்வதேசச் சட்ட நிபுணர்கள் ஜனநாயகம் என்ற பொது இலட்சியத்தின் வெவ்வேறு உபகூறுகளுக்கு வெவ்வேறு விதமான விளக்கம் கூறி அதன் பல பரிமாணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். 

உள்ளகச் சுயநிர்ணயம் என்பதன் பல்பரிமாணங்கள் அண்மைக்காலத்தில் சர்வதேச நீதிமன்றத்தின் (International Court of Justice – ICT) முன்னால் முன்வைக்கப்பட்ட வாதங்களின் போது வெளிப்பட்டன. உதாரணமாக கொசோவோ (Kosovo) மக்களின் பிரிந்து செல்லும் உரிமைக்காக அல்பேனியா வாதாடியது. “1989 ஆம் ஆண்டு சேர்பியா (Serbia) ஒருதலைப்பட்சமாக அல்பேனிய கொசோவோ மக்களின் சுயாட்சியை இரத்துச் செய்தது. அதன்பின் கொசோவோ மக்களின் சுயநிர்ணய உரிமையை அது மறுத்து வருகிறது” எனக் கூறியது. நெதர்லாந்து, அல்பேனியாவின் கொசோவோ மக்கள் வாழிடத்தில் அரசாங்கம் இல்லாத நிலை (Absence of Government) இருப்பதைச் சுட்டிக்காட்டி அது உள்ளகச் சுயநிர்ணய உரிமையின் மீறலாகும் (Violation of the Right to Internal Self-determination) எனக் குறிப்பிட்டது. கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தை (UDI) விமர்சித்த சைப்பிரஸ் நாடு ஒரு தேசத்தின் எல்லைக்குள் வாழும் மக்களுக்கு, அத்தேசத்தின் அரசின் நியாயாதிக்க எல்லைக்குள் தமக்கென ஓர் அரசை நிறுவும் சுயநிர்ணய உரிமை உள்ளது எனக் கூறியது. அல்பேனியா கொசோவோ மக்களின் சுயாட்சி உரிமையை வலியுறுத்தியதையும், மற்ற நாடுகளின் வாதங்கள் ஜனநாயக அரசாங்கத்தை அமைக்கும் உரிமைக்கு அழுத்தங்கொடுப்பனவாய் அமைந்ததையும் இந்த உதாரணம் எடுத்துக்காட்டுகிறது. 

ஜேர்மனி, பின்லாந்து, கனடா போன்ற மேற்கு நாடுகளும் கொசோவோ விடயத்தில் தனிப்பட்ட, வேறுபட்ட கருத்துகளை அப்போது தெரிவித்தன எனக் கலன சேனரத்தின கூறுகிறார் (பக். 123-125). மேற்கு நாடுகள் உள்ளகச் சுயநிர்ணய உரிமையை வெவ்வேறு முறையில் விளக்கிப் பொருள் கொள்கின்றன; மேற்கு நாட்டு அணுகுமுறைகளின் ஆரோக்கியமான அம்சங்களில் இது ஒன்றாகும் (பக். 126) எனவும் அவர் குறிப்பிடுகிறார். ‘ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் சிறுபான்மைக் குழுக்களுக்கு (Minority Groups)’ சுயநிர்ணய உரிமை இருப்பதாக எந்தவொரு மேற்கு நாடும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார் (பக். 126). 

ஐரோப்பாவில் உள்ளகச் சுயநிர்ணயம் வலியுறுத்தப்படுதல்

உள்ளகச் சுயாட்சி (Local Self-governance) என்ற கருத்தை வலியுறுத்துவதில் ஐரோப்பிய அரசுகள் முன்முயற்சி எடுத்தன. 1985 ஆம் ஆண்டில் ‘கவுன்சில் ஒவ் யுரோப்’ (Council of Europe) அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒன்று கூடி ‘உள்ளகச் சுயாட்சி பற்றிய ஐரோப்பியச் சாசனத்தை (European Charter of Self-governance) வெளியிட்டன. இச்சாசனம் உள்ளகச் சுயாட்சிக்கான சட்டரீதியான கடப்பாட்டை வலியுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அச் சட்டக்கடப்பாட்டை ஏற்று அங்கீகரித்தன. இச் சட்டக்கடப்பாட்டை ஏற்றுக்கொண்டதன் விளைவாக ஐரோப்பாவின் உறுப்புநாடுகள் அனைத்திலும் உள்ளூர் அதிகார சபைகளும் நிறுவனங்களும் விரிந்த அளவிலான சுயாட்சியுடையனவாயும் (A Wide Degree of Autonomy), தம்மிடம் பொறுப்பளிக்கப்பட்ட விடயங்களை நிறைவு செய்வதற்கான வளங்களை (Resources) உடையனவாயும் இருத்தல் வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டது. 

உள்ளகச் சுயாட்சி பற்றிய ஐரோப்பியச் சாசனம் போன்று வேறு பல நிறுவனங்களும் சட்ட வலுவுடைய பிரகடனங்களை வெளியிட்டன எனவும், ‘லுண்ட் சிபாரிசுகள்’ (Lund Recommendations) அத்தகைய ஒரு பிரகடனம் எனவும் கலன சேனரத்தின குறிப்பிடுகிறார். உள்ளகச் சுயாட்சியை சிறுபான்மைக் குழுக்களுக்கு வழங்குவதன் மூலம் உள்ளகச் சுயநிர்ணயத்தை அச்சிறுபான்மைக் குழுக்கள் அனுபவிக்கலாம், நடைமுறையில் செயற்படுத்தலாம். உள்ளகச் சுயாட்சி சிறுபான்மைக் குழுக்களுக்கு மத்திய அரசாங்க மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் அரசியல் பங்கேற்பை உறுதி செய்தது. அத்தோடு புவியியல் நிலத்தொடர்புள்ள (Territorial), புவியியல் நிலத்தொடர்பற்ற (Non–territorial) என்ற இருவகை ஒழுங்கமைப்புகளையும் ஏற்படுத்தி சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாக்கலாம் என்றும் குறிப்பிட்டது. 128 ஆம் பக்கத்தில் கலன சேனரத்தின ‘லுண்ட் சிபார்சுகள்’ பிரகடனத்தில் இருந்து நீண்ட ஒரு பந்தியை மேற்கோள் காட்டியுள்ளார். அப்பகுதியினை விரிவாக இவ்விடத்தில் பதிவிடுதல் சாத்தியமற்றது. சுருக்கமாகக் கூறுவதாயின் லுண்ட் சிபாரிசுகளின் படி உள்ளகச் சுயாட்சி என்பது உள்ளகச் சுயநிர்ணயம் என்பதற்குச் சமமானது என்பது இப்பந்தியில் கூறப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நிறுவனங்கள் உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தை வலியுறுத்துவதில் ஒருபோதும் தயக்கம் காட்டியதில்லை. தேசிய சிறுபான்மையினருக்கான உயர் ஆணையாளர் (High Commissioner on National Minorities – HCNM) பதவியை வகித்தவர்கள் உள்ளகச் சுயநிர்ணயத்தின் முக்கியத்துவம் பற்றிக் கூறிவந்துள்ளனர். ‘HCNM’ பதவியை வகித்த முன்னாள் உயர் ஆணையாளரான ‘மக்ஸ்வல் டெர் ஸ்ரோல்’ (Maxval Der Stoel) அவர்களின் கூற்றொன்றை கலன சேனரத்தின 129 ஆம் பக்கத்தில் மேற்கோளாகத் தந்துள்ளார். இம்மேற்கோளில் ‘மக்ஸ்வல் டெர் ஸ்ரோல்’ அழுத்திக்கூறிய முக்கியமான கருத்து கவனிப்புக்குரியது. ‘வெளியகச் சுயநிர்ணயம் என்பதை தனிநாடாகப் பிரிந்து செல்லும் உரிமை என அர்த்தப்படுத்த முடியாது. சிறுபான்மை இனங்களுக்குப் பிரிந்து தனிநாடாக ஆகும் உரிமை உள்ளது என்பதை நடைமுறைப்படுத்தினால், அதன் விளைவுகள் ஆபத்தானவையாக அமைந்துவிடும். இன்று ஐக்கிய நாடுகள் (United Nations) தாபனத்திற்குள் உள்ளடங்கும் நாடுகளின் எண்ணிக்கை 2000 ஆக உயர்ந்துவிடும். ஐரோப்பாவை மட்டும் எடுத்துப் பார்த்தால் ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை இன்று இருப்பதை விட மூன்று மடங்கு உயர்ந்துவிடும். உலகத்தை இவ்வாறு கூறுபோட்டு இரத்தக் களரியை உண்டாக்குவது ஆபத்தானது. ஆகையால், உள்ளகச் சுயநிர்ணயத்தை (Internal Self-determination) ஏற்று நடைமுறைப்படுத்துவதே அவசியமாகச் செய்யப்பட வேண்டிய பணியாகும்’ என அவர் குறிப்பிட்டார். உள்ளகச் சுயநிர்ணய உரிமையை ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் செயற்படுத்த வேண்டும். அதனால், எழும் மோதல்கள் ஒப்பீட்டளவில் மிகமிகக் குறைவு. உள்ளகச் சுயநிர்ணயம் ஒற்றைப்படையான நடைமுறை அன்று. அது பலவிதமான எண்ணற்ற தெரிவுகளையும் சாத்தியப்பாடுகளையும் (A Great Variety of Possibilities) வழங்குகிறது.

1999 ஆம் ஆண்டில், ‘HCNM’ உள்ளகச் சுயநிர்ணய உரிமை வழங்கும் பலவிதமான சாத்தியப்பாடுகள் குறித்து ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டது. உள்ளகச் சுயநிர்ணயம் சிறுபான்மையினங்களுக்குப் பலவித நடைமுறைகளைத் தெரிந்துகொள்ளும் சாத்தியப்பாடுகளைக் கொண்ட ஓர் எண்ணக்கருவாகும் எனவும் அது குறிப்பிட்டது.

2011 ஆம் ஆண்டு ‘HCNM’ பதவியை வகித்த ‘Knut Vollebaek’ அவர்கள் உள்ளகச் சுயநிர்ணயத்தின் தேவையை அழுத்திக் கூறியதோடு, சிறுபான்மையின நலன்களைப் பாதுகாப்பதற்கான பலவகை மாதிரிகள் (Various Models) உள்ளகச் சுயநிர்ணயம் என்ற எண்ணக்கருவில் உள்ளடங்கியுள்ளதெனக் குறிப்பிட்டார். அவருக்குப் பின்னர் இப்பதவியில் இருந்தவர்கள் யாவரும் தொடர்ச்சியாக உள்ளகச் சுயநிர்ணயத்தை அழுத்திக் கூறிவந்தனர்.

உள்ளகச் சுயநிர்ணயம் என்பதை ஒரு ‘கருவிப் பெட்டி’ (Tool Box) என உருவகப்படுத்தலாம். இந்தக் கருவிப்பெட்டிக்குள் சிறுபான்மையினரின் நலன்களைப் பாதுகாக்கும் தீர்வு மாதிரிகள் பல உள்ளன. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு (Context) ஏற்ற பொருத்தமான மாதிரியைத் தேர்ந்து பிரச்சினைகளைத் தீர்வு செய்யலாம். குறிப்பாக கல்வி, பண்பாடு தொடர்பான தேவைகளையும் உரிமைகளையும் பேணுதல், தேசிய சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாத்தல், இனத்துவ, பண்பாட்டு, மொழி, சமய அடையாளங்களைச் சமூகங்கள் தேர்ந்துகொள்ளக் கூடிய நல்ல மாதிரிகள் போன்றன இந்தக் கருவிப்பெட்டியில் உள்ளன. இது உள்ளகச் சுயநிர்ணயத்திற்கான கருவிப்பெட்டியின் சாதகமான அம்சம் ஆகும். ஆனால், சிறுபான்மையினருக்குப் பாதகமான பக்கம் ஒன்றும் அதில் உள்ளது. இக்கருவிப் பெட்டியிலிருந்து தாம் விரும்பியதைத் தேர்ந்து கொள்வதற்கு சிறுபான்மையினருக்கு உரிமை உள்ளது என்பதை இது அங்கீகரிக்கவில்லை. அதாவது, மேற்கு நாடுகளால் பேசப்படும் உள்ளகச் சுயநிர்ணயம் ஓர் உரிமை என்பது வலியுறுத்தப்படவில்லை.

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்