1
ஆங்கிலேயக் காலனிய ஆட்சி நடைமுறைகளாலும் அவற்றினால் விளைந்த சமூக பொருளாதார மாற்றங்களாலும் நவீன அறிவியலின் பரவல் தமிழ்ச் சூழலில் வேகம்பெறத் தொடங்கியது. நவீன இயந்திரங்களின் வருகையும் வளர்ச்சியும் இந்தியாவின் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தின. சமுதாயத்தின் அடிக்கட்டுமானமும் மேற்கட்டுமான அம்சங்களும் அறிவியல் பயன்பாட்டை முதன்மையான உள்ளீடாகக் கொள்ளத் தொடங்கின. கல்வித் துறையில் அறிவியல் கற்கைகள் உள்வாங்கப்பட்டன. அவற்றுக்கான பாடநூலாக்க முயற்சிகள் இடம்பெற்றன. பாதிரிமார்கள் உள்ளடங்கலாக மேலைநாட்டவரும் உள்நாட்டவரும் அறிவியல் பாடநூலாக்க முயற்சிகளில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் மேலைநாட்டு நூல்களின் மொழிபெயர்ப்புகளாகவும் தழுவல்களாகவும் அமைந்த அறிவியல் நூல்கள், பின்னர் சுயமான பாடநூலாக்கங்கள், சொற்களஞ்சியங்கள், கலைச்சொல்லாக்க முயற்சிகள் என விரிவுபெற்றன. அறிவியல் செய்திகளுக்காகவே தனியான பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்பட்டன.
பாடநூலாக்கத் தேவைகளுக்கு அப்பால் வேறுபல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டும் அறிவியல் செய்திகள் தமிழில் எழுதப்பட்டன. அவற்றுள் சுதேசிய முன்னேற்றம் முதன்மையான ஒன்றாக விளங்கியுள்ளது. நவீன அறிவியலை அறிந்துகொள்வதும் அதன் பயனை நுகர்வதும் சுதேச முன்னேற்றத்துக்கு அவசியமானவை என்பதை அக்காலத் தேசபக்திச் செயற்பாட்டாளர்கள் உணர்ந்து செயற்பட்டுள்ளனர். அதேவேளை, காலனிய காலத்தில் அறிமுகம்பெற்ற நவீன இயந்திரங்கள், வணிக நடைமுறைகள் முதலானவை பாரம்பரிய தமிழ்ச் சூழலுக்கு அந்நியப்பட்டவையாக விளங்கின. அதனால், பாரம்பரியவழி சமகாலத்துடன் இயைந்து செயற்படமுடியாத நிலைமை தோன்றியுள்ளது. இந்நிலைமையால் சுதேசிய வணிகர்களும் தொழில் முயற்சியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் சாதாரண மக்களும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இச்சிக்கலைத் தீர்த்து சுதேசியரை வலுப்படுத்துவதற்காகவும் நவீன அறிவியல் சார்ந்த செய்திகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. மேற்படியான செயற்பாடுகளின் வழியே தமிழ், அறிவியல் தமிழாகப் பரிணமிக்கத் தொடங்கியது.
ஐரோப்பாவில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியும் இயந்திரமயமாதலும் போக்குவரத்து, தொடர்பாடல், மருத்துவம், பாதுகாப்பு, விவசாயம், பொருளாதாரம், பொழுதுபோக்கு என எல்லாத் துறைகளிலும் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தின. அவ்வளர்ச்சியின் பயன்களை எல்லாம் மேற்கின் ஆதிக்கச் சக்திகள் தம்வயப்படுத்திக் கொண்டன. அவற்றின் துணையுடனே மூன்றாம் உலக நாடுகளை மேற்கு நாடுகள் கைப்பற்றிக் கொண்டன. கைத்தொழில் புரட்சியின் முதற்கட்டமானது நூல் நூற்றல், துணி வகைகளை உற்பத்தி செய்தல் என்றளவில் நுகர்பொருள் உற்பத்திக் காலமாகவே இருந்துள்ளது. அக்காலத்தில் காலனிய நாடுகளின் மூலதனங்களைப் பெற்று, அவற்றைச் செய்பொருளாக்கும் முயற்சிகளை ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டன. இயந்திரமயமாதல் பெருகிய பொழுதிலேயே மேலைநாட்டு முதலாளித்துவ வர்க்கம் தம் உபரியை, காலனிய நாடுகளில் முதலீடு செய்து செய்பொருட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதனால் இந்தியா, இலங்கை முதலான காலனிய நாடுகள் வேகமாகத் தொழில்மயமாகின.
இந்தியா தொழில்மயமாவதால் இங்கிலாந்தின் வணிகம் சரிவை எதிர்கொள்ளும் என்ற அச்சுறுத்தலை, இங்கிலாந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு குழுவினர் முன்வைத்த போதிலும் பெரும்பகுதியினர் இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் செலுத்தியுள்ளனர். காலனிய அரசும் இந்தியாவைத் தொழில்மயமாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால், ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஆதரவாகவும் சுதேசிய தொழில் முயற்சியாளர்களுக்கு எதிராகவும் காலனிய அரசு செயற்பட்டுள்ளது.
ஐரோப்பிய மையவாத நிலையிலிருந்து நவீன அறிவியல் சிந்தனைகள், கருவிகள் முதலானவை தமிழ்ச் சூழலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை நுகர்ந்தோர் வெவ்வேறு தளத்தில் நின்று அணுகியுள்ளனர். வி.வி. கிருஷ்ணா காலனிய அறிவியல் அறிஞர்களை வாயிற்காப்போர், அறிவியல் ஊழியர்கள், தேசிய அறிவியலாளர்கள் என மூன்று குழுவினராக வகைப்படுத்தியுள்ளார். “வாயிற்காப்போராக உள்ள அறிவியல் அறிஞர்கள் மையத்தைச் சார்ந்து நிற்பதை உறுதிப்படுத்தும் போக்கில் செயற்படுபவர்கள். அறிவியல் ஊழியர்கள் இட்ட கட்டளையைத் தலைமேல் வைத்துச் செயலாற்றுபவர்களாக அமைவார்கள். மாறாக, தேசிய அறிவியலாளர்களே தேசிய இயக்கத்தோடு சேர்ந்து தன் இயல்பாக அறிவியல் அமைப்புகளைப் படைக்க முற்படுவார்கள்” (மேற்கோள்: வெங்கடேஸ்வரன், த.வி., அறிவியல் தமிழ் செய்தித் தொடர்பியலின் சமூக வரலாறு, 2008: 14) என, கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார். பென்ஸன் என்பவர், ஏகாதிபத்திய பேரரசின் ஊழியர், ஆய்வாளர்கள், காலனிய அரசின் மைய நோக்கான வாணிபமும் அதைசார்ந்த வாணிப நோக்கும் கொண்டவர்கள் எனக் காலனிய அறிவியலாளர்களை வகைப்படுத்தியுள்ளார் (மேலது: 15).
அறிவியலாளர்கள் மட்டுமன்றி சமூகத்தில் வெவ்வேறு தளத்தில் இயங்கியவர்களும் தத்தம்நோக்கு நிலையில் நின்று நவீன அறிவியலை எதிர்கொண்டுள்ளனர். தேச விடுதலையில் தம்மைப் பிணைத்துக்கொண்டவர்களுள் பெரும் பகுதியினர், நவீன அறிவியலைச் சுதேசிய முன்னேற்றத்தின், ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஓர் அங்கமாகக் கொண்டுள்ளனர். பாரதியார், “கைத்தொழில் போற்று”, “கூடித்தொழில் செய்” என அறிவுரை வழங்கியமை அதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அவர் தன் பாடல்களிலும் கட்டுரைகளிலும் இயந்திர வளர்ச்சியைப் போற்றியுள்ளதுடன் இந்தியா இயந்திர வளர்ச்சியையும் அதன் பயன்களையும் பெறவேண்டும் என்ற தன் உள்ளார்ந்த விருப்பையும் வெளிப்படுத்தியுள்ளதைக் காணலாம்.
“ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
நடையும் பறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்…”
என மிகுந்த ஈடுபாட்டுடன் கைத்தொழில் வளர்ச்சியை ஆராதித்துள்ள பாரதி, “… கைத்தொழில்களின் விஷயத்தில் நாம் இப்போது காட்டி வரும் சோர்வும் அசிரத்தையும் மிகவும் அருவருப்புக்கு இடந்தருகின்றன…” (வருங்காலம்), “மேன்மை நிலைபெற வேண்டுமானால் கைத்தொழில்கள் பெருகும்படி செய்ய வேண்டும். சாத்தியமில்லை என்று சொல்லி ஏங்குவதில் பயனில்லை…” (புதிய உயிர்) என இந்தியா கைத்தொழிலில் வளர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அத்தகைய நோக்கினாலேயே தேசியக் கல்வி குறித்துக் குறிப்பிடும்போது எழுத்து, படிப்பு, கணக்கு, இலேசான சரித்திரப் பாடங்கள், மதப்படிப்பு என்பவற்றுடன் பூமி சாஸ்திரம், ராஜ்ய சாஸ்திரம், பொருள் நூல், சயன்ஸ் அல்லது பௌதிக சாஸ்திரம், கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி, வியாபாரம், சரீரப் பயிற்சி முதலானவற்றையும் கற்பிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.
நடேசய்யரும் சுதேச முன்னேற்றம் என்பதை இலக்காகக் கொண்டே அறிவியல் தமிழ் நூலாக்க முயற்சிகளிலும் பத்திரிகை வெளியீடுகளிலும் ஈடுபட்டுள்ளார். “தமிழ்மொழியில் சகல சாஸ்திரங்களும் வெளிவருவதால் தமிழ் பாஷை விருத்தியாவதுடன் தமிழ்மக்களும் முன்னேற்றமடைவர் என்ற பூரண நம்பிக்கை ஏற்பட்ட காரணம் பற்றித் தமிழில் ‘கணக்குப் பதிவு நூல்’, ‘இன்ஷியூரன்ஸ்’, ‘ஆயில் என்ஜின்கள்’, ‘வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகமும்’ என்ற பல புஸ்தகங்களும் எழுதி வெளியிடலானேன்” (தேசபக்தன், 03.09.1924) என அவரே அதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிலும் அதன் ஒரு கூறாகிய தென்னிந்தியப் பகுதிகளிலும் வளர்ச்சிபெற்றுவந்த தொழில்மயமாதலையும் சுதேசியரின் முதலீட்டு முயற்சிகளையும் கருத்தில்கொள்ளும் போது, நடேசய்யரின் மேற்படி நூலாக்க முயற்சிகள் அக்காலத் தேவையின் பிரதிபலிப்புகளாக அமைந்துள்ளமையைக் கண்டுகொள்ளலாம். “1893 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சென்னை வங்கியில் செட்டியார்களும் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். 1907 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் வங்கியும் 1929 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செட்டிநாடு வங்கியும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களுக்குரியனவாகும். இவை தவிர ஆயுள் காப்பீட்டுத் தொழிலும் அவர்கள் மூலதனம் செய்துள்ளனர். பிரிமியர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் செட்டியார்களுடையதாகும்” (மேற்கோள்: காளிமுத்து, ஏ.கே., தமிழகத்தில் காலனியமும் வேளாண்குடிகளும், 2020: 166). சுதேசியரின் இம்முயற்சிகளின் விளைவாகவும் அத்தகைய முயற்சிகளுக்கு வலுவூட்டும் வகையிலும் நடேசய்யர் மேற்படி நூல்களை எழுதியுள்ளார்.
வியாபாரம், கைத்தொழில், விவசாயம் முதலிய விடயங்களுக்காகவே வர்த்தகமித்ரன் பத்திரிகையை ஆரம்பித்த நடேசய்யர், சமூக அரசியல் பொருளாதாரத் தளத்தில் நின்றும் அறிவியல்நிலை நின்றும் அவை குறித்த செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இந்தியா கைத்தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டியதன் தேவை, தேச பாஷையில் தொழிற் கல்வி அமைய வேண்டியதன் அவசியம் ஆகிவற்றை வர்த்தகமித்ரனில் தொடர்ந்தும் அவர் வலியுறுத்தி வந்துள்ளதைக் காணமுடிகிறது. சான்றாக, பின்வருவனவற்றை எடுத்துக்காட்டலாம்:
“தொழிற்படிப்பு, சாஸ்திரப்படிப்பு முதலியவற்றில் கவர்ன்மெண்டார் அதிகக் கவனத்தைச் செலுத்த வேண்டும். மேற்படி தொழில்களை தேச பாஷையில் கற்பிக்க வேண்டுவது எல்லாவற்றிலும் முக்கியமானது” (வர்த்தகமித்ரன் – 09.01.1916).
“கைத்தொழில் செய்வதிலும் தேசாபிமானம் வேண்டும். கையிலிருக்கும் பொருளை அதிக வட்டிக்கு விட்டுப் பணம் சம்பாதிப்பதும், நிலத்தில் யாதொரு சீர்திருத்தமும் செய்யாது அதிகக் குத்தகைக்கு விட்டு குடியானவனைக் கடனுக்குள்ளாக்குவதும் விவகாரங்களில் வீணே தமது காலத்தைக் கழிப்பதும் எவ்வாறு நமது நாட்டை முன்னேற்றம் அடையச் செய்யும்? மிராசுதாரர்கள் தங்கள் நிலத்தில் உழவுத் தொழிலில் வேண்டிய சீர்திருத்தங்களை நூதன முறைப்படிச் செய்து விளைவை வரவர விருத்தி செய்வது தான் உண்மையான தேசாபிமானம். அதுபோலவே புதிய தொழிலை ஏற்படுத்துவதும் ஏற்படுத்தியோரை ஆதரிப்பதும் மற்றவர்கள் காட்டக்கூடிய தேசாபிமானம். ஆகவே, நம்மவர்களுள் ஒற்றுமை வேண்டுவது அவசியம்… தொழில்படிப்புகள் பயனைக் கொடுக்க வேண்டியதென்றால், அப்படிப்பை தேசபாஷையில் கற்பிக்க வேண்டியது அவசியம்” (வர்த்தகமித்ரன் – 09.12.1915).
நடேசய்யர் சுதேச முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொண்ட மேற்படி செயற்பாடுகள், அறிவியல் தமிழின் வளர்ச்சிக்கும் பங்களிப்பு நல்கியுள்ளன. மேற்கின் அறிவாக அறிமுகமாகி, புழக்கத்துக்கு வந்த நடைமுறைகளையும் சிந்தனைகளையும் சுதேசியரிடம் கையளிக்கும் அறிவுப்பரிமாற்ற முயற்சியாக அவற்றைக் கொள்ளலாம். அம்முயற்சி தமிழ்மொழியின் வளத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
2
ஆயில் எஞ்ஜின்கள் நூல், 1916 ஆம் ஆண்டு தஞ்சாவூர் கலியாணசுந்தரம் பவர் பிரஸ்ஸினால் வெளியிடப்பட்டுள்ளது. விளம்பரப் பகுதிகள் நீங்கலாக 190 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூலின் பிரதியொன்று ஒரு ரூபாய் எட்டு சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நூலின் உள்ளடக்கமும் எடுத்துரைப்பு முறையும் புதிதாக இயந்திரம் வாங்குபவர்களுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி வருபவர்களுக்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளன. அவ்வகையில் இயந்திரப் பாவனைக்கான ஒரு வழிகாட்டி நூலாக, ஆயில் என்ஜின்கள் நூலை அடையாளப்படுத்தலாம்.

நூலிலுள்ள விளம்பரங்களை அவதானிக்கும்போது, நூல் வெளிவந்த காலகட்டத்தில் இயந்திர விற்பனை தமிழ் நாட்டில் இலாபகரமான தொழிலாக வளர்ந்து வந்துள்ளது என்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. இயந்திர விற்பனையில் ஈடுபட்ட டி. ராஜு அண்டு கோ (D. Raju & Co.), பெஸ்டு அண்டு கோ, டி.எஸ். சாஸ்திரி அண்டு கம்பெனி, ரிச்சர்ட்ஸன் அண்ட் குரூடாஸ், ஸன் கம்பெனி, டி.எல். சாஸ்திரி அண்டு கோ, மார்ஷல் ஸன்ஸ் அண்டு கோ, மாஸ்ஸி அண்டு கோ முதலான நிறுவனங்களின் விளம்பரங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ராஜு அண்டு கோ நிறுவனமானது 1878 இல் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுள் பல சென்னையையும் பம்பாயையும் தளமாகக் கொண்டு இயங்கியுள்ளன. மார்ஷல் ஸன்ஸ் அண்டு கோ நிறுவனம் இங்கிலாந்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களையும் அவற்றின் விளம்பரங்களையும் தமிழ்நாட்டில் இயந்திரப் பயன்பாட்டின் ஏற்பட்டுவந்த பெருக்கத்துக்குச் சான்றுகளாகக் கொள்ளலாம்.

நடேசய்யருக்கு முன்னரே இயந்திரப் பாவனை தொடர்பான நூலொன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கா. மீனாட்சிசுந்தரம் தரும் தகவலின்படி, ரெடரன் லூயிஸ் எழுதிய, ‘The Steam and the Steam Engine’ என்னும் நூல் 1868 ஆம் ஆண்டு தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது (ஐரோப்பியர் தமிழ்ப்பணி, 2003: 422). இம்மொழிபெயர்ப்பு முயற்சியும் தமிழ்நாட்டில் இயந்திரப் பாவனையில் ஏற்பட்ட வளர்ச்சிக்குச் சான்றாக அமைகிறது.
நடேசய்யர் தன் முன்னுரையில் ஆயில் என்ஜின்கள் நூலாக்கத்துக்கான நோக்கத்தை, “என்ஜின் வாங்கும் விஷயத்திலும் என்ஜினை ஓட்டும் விஷயத்திலும் நம்மவர்கள் இன்னமும் பயிற்சி பெறவில்லை என்பது யாவரும் அறிந்தது. யாதொரு தொழிலும் தெரியாதவர்கள் இப்பொழுது என்ஜின் டிரைவர்களாய் வந்து நல்ல என்ஜின்களைக் கெடுத்து விடுவதால் கஷ்டங்களும் நஷ்டங்களும் ஏற்படுவது பரிதாபிக்கத்தக்கதாய் இருக்கிறது. இவ்வித சிரமங்களை யுத்தேசித்தே இச்சிறு புஸ்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சூழலில் புதிய இயந்திரங்களின் பாவனை அறிமுகமாகி, வளர்ச்சியடைகின்ற போது மேற்படி பிரச்சினைகள் எழுவது இயல்பானதாகும். அப்பிரச்சினைகளைத் தவிர்ப்பதை நோக்காகக் கொண்டே எண்ணெய் இயந்திரங்கள் பற்றிய விரிவான அறிமுகத்தைத் தமிழில் வழங்க முயற்சித்துள்ளார், நடேசய்யர்.
நெசவுக் கைத்தொழில் பயிற்சி, வியாபாரக் கல்வியில் டிப்ளோமா ஆகியவற்றை நிறைவுசெய்துள்ள நடேசய்யர், இயந்திரங்கள் பற்றிய அறிவை வரன்முறையாகப் பெற்றுக்கொண்டவர் இல்லை. காலத்தின் தேவை உணர்ந்து தன் ஆர்வத்தினால் இயந்திரங்கள் பற்றிய செய்திகளைத் திரட்டி, தமிழில் வழங்கும் செயற்பாட்டினையே அவர் மேற்கொண்டுள்ளார். அதனை, “பல வருஷம் என்ஜின் வேலைகளில் அனுபவம் பெற்ற ஒரு என்ஜினீரின் உதவியைக் கொண்டு எழுதப்பட்டது” என நூலின் முன் பக்கத்திலும் “இப்புஸ்தகத்தின் சாரமானது பலவருஷம் என்ஜின் வேலைகளில் அனுபவம் பெற்ற ஒரு என்ஜினீரினால் எழுதப்பட்ட ஆங்கிலக் குறிப்புகளினின்றும் வேறு பல என்ஜின் புத்தகங்களினின்றும் என்ஜின் உபயோகப்படுத்தி வரும் பலருடைய அனுபவங்களினின்றும் எடுத்து தமிழில் எழுதப்பட்டிருக்கிறது” என முன்னுரையிலும் நடேசய்யர் பதிவு செய்துள்ளார்.
இந்நூலானது என்ஜின்கள், குதிரை ஓட்டம், எண்ணெய், ஆயில் என்ஜின் எவ்வாறு வேலை செய்கிறது, என்ஜின் உறுப்புகளும் அவற்றின் உபயோகங்களும், என்ஜின்களைப் பூட்டுதல், என்ஜின் ஓட்டுவது, என்ஜின்களுக்கு ஏற்படக்கூடிய பழுதும் அவற்றைப் போக்கும் வழிகளும், என்ஜின்களை வைத்து நடத்துவதைப் பற்றிய சில பொது விதிகள், டீஸல் என்ஜின்கள், செமிடீஸல் என்ஜின்கள், செமிடீஸல் என்ஜின்கள் (தொடர்ச்சி) எனப் பன்னிரு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ளடங்கும் செய்திகள் எளிமையான தமிழில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கப் படங்களும் தரப்பட்டுள்ளன.

என்ஜின்கள் என்ற இயலில் என்ஜின்கள் பற்றிய பொது அறிமுகமும் எண்ணெய் என்ஜின், நீராவி என்ஜின், காஸ் என்ஜின், உஷ்ணக் காற்று என்ஜின், சன் மோட்டார் ஆகியவற்றின் அடிப்படைகளும் அவற்றின் சாதக-பாதகங்களும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. என்ஜின்களை வாங்குபவர் தத்தம் தேவைக்கு ஏற்ப எவ்வகை என்ஜின்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்பதை எளிமையான உதாரணங்கள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார், நடேசய்யர். சான்றாக, “மின்சார சக்தியை உண்டுபண்ணக்கூடிய யந்திரங்களுக்கு வேண்டுவதுபோல் ஒரே நிதானமாய் சக்தி வேண்டிய தொழில்களுக்கு ஸ்டீம் என்ஜின்களே மேலானவை. அடிக்கடி வேலையின் சக்தி மாறக்கூடியதாய் இருந்தாலும் சரி, வீணாகக்கூடிய நீராவியை உபயோகப்படுத்துவதற்கு சமயம் ஏற்பட்டாலும் சரி நீராவி யந்திரத்தையே வாங்க வேண்டும். ஆனால், அடிக்கடி வேலையை நிறுத்திச் செய்ய வேண்டிய தொழிற்சாலைகளில் ஸ்டீம் என்ஜின்கள் பிரயோஜனப்படாது” என நீராவி என்ஜினை எதற்குப் பயன்படுத்தலாம் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலைச் சுட்டிக்காட்டலாம்.
இயந்திரங்கள் செய்யக்கூடிய அளவைக் குறிப்பிட ‘குதிரை ஓட்டம்’ என்ற தொடர் கையாளப்படுவதன் பின்புலத்தை வரலாற்று அடிப்படையில் விளக்கியுள்ள நடேசய்யர், நாமீனல் ஹார்ஸ் பவர், எபக்டிவ் ஹார்ஸ் பவர், இண்டிகேட்டெட் ஹார்ஸ் பவர், பிரேக் ஹார்ஸ் பவர் ஆகியவற்றின் அடிப்படைகளைச் சுருக்கமாக எடுத்துரைத்து, இயந்திரமொன்றை வாங்கும்போது பிரேக் ஹார்ஸ் பவரைக் கருத்தில் கொள்ள வேண்டியதன் தேவையை விவரித்துள்ளார்.
எண்ணெய் இயந்திரங்கள் பற்றிய நூலாகையால், எண்ணெய் வகைகள் பற்றியும் அவை உற்பத்தி செய்யப்படும் முறை பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ள நடேசய்யர், எண்ணெய் மூலம் இயந்திரங்கள் இயங்குமாற்றை நன்கு விளக்கியுரைத்துள்ளார்.
எண்ணெய் இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது, அதன் உறுப்புகள், உறுப்புகளின் செயற்பாடுகள் முதலானவை தனித்தனியே விரிவாக விளக்கப்பட்டுள்ளதுடன் இயந்திர உறுப்புகள் வரைபடத்தின் மூலமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றைத் தொடர்ந்து, புதிதாக இயந்திரமொன்றை வாங்குபவர் இயந்திரம் அடைக்கப்பட்டுவரும் பெட்டியிலிருந்து எவ்வாறு வெளியில் எடுப்பது முதல் இயந்திரப் பாகங்களை எவ்வாறு பொருத்துவது, இயந்திரத்தை வைப்பதற்குப் பொருத்தமான இடத்தையும் இயந்திரத்துக்கான அடித்தளத்தையும் எப்படித் தயார்படுத்த வேண்டும் என்பது வரை தெளிவுபடுத்தி, இயந்திரத்தைப் பொருத்தும் முறையைப் படிமுறையாக விவரித்துள்ளார், நடேசய்யர். அதன் பின்னர் இயந்திரத்தை இயக்கும் முறையை எளிமையாக எடுத்துரைத்துள்ளார்.
இயந்திரங்களைப் பயன்படுத்துகின்ற போது எதிர்கொள்ளும் மிகமுக்கியமான சவால், இயந்திரங்களுக்கு ஏற்படும் பழுதுகளைக் கண்டறிதலும் அவற்றைத் திருத்திக்கொள்ளுதலுமாகும். நடேசய்யர் இயந்திரமொன்றுக்குப் பொதுவாக ஏற்படக்கூடிய பழுதுகளையும் அவற்றைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகளையும் தனியான இயலில் விவரித்துள்ளார். உதாரணமாக, இயந்திரமொன்று இயங்காமல் நின்றுவிடுவதற்கு என்ஜின் வேப்பரைசரில் சரியானபடி சூடு ஏறாமலிருத்தல், எண்ணெய்க் குழாய் அழுக்கடைந்திருத்தல், எண்ணெய் தெளிக்கும் துவாரங்கள் அடைபட்டிருத்தல், கரி வந்தடைவதால் பிளஞ்சர் பிடித்துக்கொள்ளுதல், பம்பு வால்வுகள் ஒழுகுதல், கம்பிரஷன் குறைவாய் இருத்தல், ஸ்கியூ கியர் சரியானபடி அமைக்கப்படாதிருத்தல், வால்வு இணைப்புகள் ஒழுகுதல், லூபிரிக்கேஷன் குறைதல், கவர்னர் பல்சக்கரம் சரியாயிராதிருத்தல், இக்நீஷன் டியூப் சரியாயிராதிருத்தல், எக்ஸாஸ்ட் பெட்டி அல்லது பைப்பில் அழுக்கு அல்லது தண்ணீர் தங்கி இருத்தல் முதலானவை காரணமாக இருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டியுள்ள நடேசய்யர், அப்பழுதுகள் ஒவ்வொன்றையும் சரிசெய்யும் முறையைத் தெளிவுபடுத்தியுள்ளார். இயந்திரத்தின் வேகம் குறைந்தால், “சிலிண்டர் உஷ்ணப்பட்டால் குளிர வைக்கவும், வால்வுகளில் கெடுதி ஏற்பட்டால் துடைத்துப் புதுப்பிக்கவும், லோட் அதிகமானால் குறைக்கவும் பேரிங்குகள் உஷ்ணமானால் எண்ணெய் விடவும் பேரிங்குகளின் ஆணி கடிசாய் இருந்தால் சிறிது தளர்த்தி வைக்கவும் வால்வுகள் சரிவர வேலை செய்யும்படியாகத் திருத்தவும் லோட் குறைந்தால் வேப்பரைசரை விளக்குக் கொண்டு உஷ்ணப்படுத்தவும்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
இயந்திரங்களைப் பாவிப்போர் அவற்றைச் சரிவரப் பராமரிப்பதற்கான வழிகாட்டுதல் குறிப்புகளையும் இந்நூலில் நடேசய்யர் வழங்கியுள்ளார். இயந்திரத்தை இயக்க ஆரம்பித்தல், இயக்குதல், இயந்திரத்தை நிறுத்துதல் முதலானவை தொடர்பான அடிப்படையான செய்திகள் அப்பகுதியில் விளங்கப்படுத்தப்பட்டுள்ளதுடன் இயந்திரமொன்று சீராக இயங்குவதற்குப் பின்பற்றவேண்டிய நெறிமுறைகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
இயந்திரத்தின் உறுப்புகளையும் அவற்றை இயக்குவதையும் இயக்குகின்ற போது ஏற்படுகின்ற பழுதுகளையும் அப்பழுதுகளைச் சரிசெய்யும் முறைகளையும் விளக்கிய பின்னர், டீசல் இயந்திரங்கள், அரை டீசல் இயந்திரங்கள் ஆகியன குறித்து விரிவான செய்திகளைத் திரட்டித் தந்துள்ளார், நடேசய்யர். டீசல் இயந்திரங்களினதும் அரை டீசல் இயந்திரங்களினதும் அடிப்படைச் செய்திகள், அவற்றின் உறுப்புகள், அவற்றை இயக்கும் முறை முதலானவை வரைபடங்களுடன் விளங்கப்படுத்தப்பட்டு, அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பிரதான அரை டீசல் இயந்திர வகைகள் பற்றிய செய்திகள் விரிவாகத் தரப்பட்டுள்ளன. அப்பகுதியில் பிளாக்ஸ்டோன் இயந்திரம், பேட்ஸ் இயந்திரங்கள், காம்பல் இயந்திரம், கிராஸ்லீ இயந்திரம், ரஸட்ன் பிராக்டர் இயந்திரம், ஹரான்ஸ்பீ இயந்திரம், வில்சன் எண்ணெய் இயந்திரங்கள், இம்பீரியல் இயந்திரங்கள், விக்டோரியா இயந்திரம், ஆல்லன் இயந்திரம், ராப்ஸன் இயந்திரம், பெட்டர் இயந்திரம், கார்ட்னர் இயந்திரங்கள், ரோபீ இயந்திரங்கள், கிளேட்டன் குரூட் எண்ணெய் இயந்திரம் முதலான இயந்திர வகைகள் (அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களின் அடிப்படையிலான பெயர்கள்) பற்றிய அடிப்படையான செய்திகளும் அவற்றின் சாதக பாதகங்களும் தொகுத்துக் கூறப்பட்டுள்ளதுடன் பெரும்பாலான இயந்திரங்களின் அமைப்பும் உறுப்புகளும் வரைபடங்களுடன் விளக்கப்பட்டுள்ளன.
நூலின் தலைப்பும் அத்தியாயங்களும் அத்தியாயத்தின் உட்தலைப்புகளும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயரிடப்பட்டுள்ளன. முதலில் தமிழில் பெயரிட்டு அதற்குக் கீழ் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்காலத்தில் தமிழில் எழுதும்போது ஆங்கிலத்திலும் தலைப்பிடும் வழமை நிலவியுள்ளது. அது குறித்துப் பாரதி ஓரிடத்தில், “அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு வியாசத்துக்கும் தமிழ் மகுடத்துக்கு மேலே இங்கிலீஷ் மகுடமொன்று சூட்டியிருக்கிறது. ‘ருஷியாவின் நிலைமை’ – The Situation in Russia, ‘தாய்ப்பாஷையின் மூலமாகக் கல்வி பயிற்றல்’ – The Vernaculars as Media of Instruction ஆஹா! நான் மாற்றி எழுதுகிறேன், தமிழை முதலாவது போட்டு, இங்கிலீஷை பின்னே போட்டேன். அந்தப் பத்திரிகைகளில் அப்படியில்லை. இங்கிலீஷை முதலில் போட்டு தமிழைக் கீழே போட்டிருக்கிறது… காகிதப் பஞ்சமான காலம் என்ன அநாவசியம் பார்த்தீர்களா?” (தமிழ்நாட்டின் விழிப்பு – பத்திரிகைகளின் நிலைமை) எனத் தன் விசனத்தைத் தெரிவித்துள்ளார். நடேசய்யர் பிற அறிவுத்துறை விடயமாகையால் அதற்கானத் தலைப்புகளை ஆங்கிலத்திலும் வழங்கியுள்ளார் எனலாம். ஆனால், அவர் பாரதி சுட்டிக்காட்டும் பத்திரிகையாசிரியரைப் போல தமிழைக் கீழே இறக்கவில்லை. என்றாலும் வர்த்தகமித்ரன் பத்திரிகையில் ஆங்கிலத் தலைப்பை முதலிலிட்டு, தமிழ்த் தலைப்பைக் கீழே இடும் முறையைப் பின்பற்றியுள்ளார்.
இயந்திரங்கள் தொடர்புடைய செய்திகளைத் தமிழ்ச் சமூகத்திற்குக் கையளிக்க முனைந்துள்ள நடேசய்யர், அவை பற்றிய செய்திகளை முழுமையாகத் தமிழில் வழங்க வேண்டும் என்பதிலோ இயந்திரங்கள் தொடர்பான கலைச்சொற்களை உருவாக்க வேண்டும் என்பதிலோ அக்கறை செலுத்தவில்லை. புதிய தகவல்களை, இயந்திரப் பாவனை குறித்த செய்திகளைக் கொண்டு சேர்ப்பதே அவரின் முதன்மை நோக்காக விளங்கியுள்ளது. அதனால் இயந்திரங்கள், இயந்திரப் பாகங்கள், இயந்திரத்தின் இயக்கம் முதலானவை தொடர்பான ஆங்கிலச் சொற்களை அவ்வாறே ஒலிபெயர்ப்பில் தந்துள்ளதுடன் சில இடங்களில் புழக்கத்துக்கு வந்த கலைச்சொற்களையும் சில இடங்களில் அக்கலைச் சொல்லுக்குப் பதிலாக ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்பையும் வழங்கியுள்ளார். சான்றாக, நீராவி இயந்திரம், எண்ணெய் இயந்திரம் முதலானவற்றைச் சில இடங்களில் பயன்படுத்தியுள்ள அவர், காஸ் என்ஜின், ஆயில் என்ஜின் என்ற சொற்களையே பெரிதும் கையாண்டுள்ளார். சில சந்தர்ப்பங்களில் தொடரொன்றின் ஒரு பகுதியைத் தமிழ்ப்படுத்தியும் மிகுதிப் பகுதியை ஒலிபெயர்த்தும் வழங்கியுள்ளார். உதாரணமாக, ஆட்டோ சைக்கில் அல்லது நான்கு சுற்று என்ஜின் (Otto Cycle or Four Cycle Engine) எனப் பயன்படுத்தியுள்ளமையைக் குறிப்பிடலாம். இந்நூலில் மட்டுமன்றி கணக்குப் பதிவு முதலான அவருடைய ஏனைய நூல்களிலும் இப்போக்கினை அவதானிக்க முடிகிறது. ஆகவே, தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகி புழக்கத்திலிருந்த புதிய அறிவுத்துறையைத் தமிழ் மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்த்து தேச முன்னேற்றத்துக்குப் பங்களிப்பு நல்க முனைந்த நடேசய்யர், மொழிக் கையாள்கையின் போது தமிழை வளப்படுத்தும் – தமிழை அறிவியல் தமிழாக வளர்த்தெடுக்கும் பணியில் பிரக்ஞைபூர்வமாக ஈடுபடவில்லை எனலாம். பிறதுறைச் செய்திகளைத் தமிழில் வழங்குதால் தமிழ்மொழி விருத்தியடையும் என்ற உணர்வு அவரிடமிருந்தாலும், நூலாக்கங்களில் மொழிநிலைபட்ட நோக்கிற்கு அதிக அழுத்தம் கொடுக்கவில்லை. இருப்பினும் பிறதுறை செய்திகளைத் தமிழில் வெளிப்படுத்த அவர் முன்னெடுத்த செயற்பாடுகள், அறிவியல் தமிழுக்கான பங்களிப்பாகவும் விரிவுபெற்றுள்ளன.
கணக்குப் பதிவு, கணக்குப் பரிசோதனை, காப்புறுதி, வங்கி முறை, வங்கி நிர்வாகம், வியாபாரப் பயிற்சி, விளம்பர விளக்கம், எண்ணெய் இயந்திரம் முதலானவை தொடர்புடைய நடேசய்யரின் நூல்கள், பிற அறிவுத்துறைசார் செய்திகளைத் தமிழில் வழங்கியுள்ளன. சில நூல்கள் அத்துறைசார் முன்னோடி முயற்சிகளாக விளங்குகின்றன. அதிலும் அவை காலத்தின் தேவை உணர்ந்து முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளாக அமைந்துள்ளன. அவ்வகையில் அறிவியல் தமிழாக்க வரலாற்றில் நடேசய்யரின் பங்களிப்புகளும் தனித்து அடையாளப்படுத்த வேண்டியவைகளாக விளங்குகின்றன. ஆனால், அவருடைய நூல்கள் யாவும் கிடைக்கப்பெறாமையாலும், அவர் இலங்கைக்கு வந்த பின்னர் சமூக அரசியல் விடயங்களுக்கே அதிக முதன்மை கொடுத்தமையாலும் அறிவியல் தமிழுக்கு அவர் ஆற்றிய தொண்டு கவனம் பெறவில்லை. அதனால், அறிவியல் தமிழாக்க வரலாற்றில் அவரின் முக்கியத்துவம் உணரப்படவோ அடையாளப்படுத்தப்படவோ இல்லை. இந்நிலை அறிவியல் தமிழாக்க வரலாற்றை மீள்வரைபுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை வேண்டிநிற்கிறது.



