லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி - கட்டைவேலி
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
10 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் வடமராட்சி – கட்டைவேலி

November 24, 2025 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் வடமராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் பருத்தித்துறைக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரை கட்டைவேலிக் கோவிற்பற்றுத் தொடர்பாக லெயுசிக்காமின் நிலப்படம் தரும் தகவல்களை விளக்குகிறது.

கட்டைவேலிக் கோவிற்பற்றில் கரவெட்டி, அல்வாய், துன்னாலை, வல்லிபுரம் ஆகிய நான்கு துணைப்பிரிவுகள் இருப்பதை நிலப்படத்திலுள்ள விளக்கக் குறிப்பிலிருந்தும் நிலப்படத்திலிருந்தும் அறியமுடிகிறது (படம்-1). பருத்தித்துறையைப் போலவே இக்கோவிற்பற்றுக்குப் பெயர் கொடுத்த கட்டைவேலிக் கிராமத்தின் பெயரிலும் துணைப்பிரிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லைகள்

கட்டைவேலிக் கோவிற்பற்றின் வடக்கு எல்லையில் பாக்கு நீரிணையும்; கிழக்கில் பருத்தித்துறைக் கோவிற்பற்று, வங்காளக் குடாக் கடல் என்பனவும் உள்ளன. தெற்கில் தொண்டைமானாறு கடல்நீரேரியும் தென்மராட்சிப் பிரிவும்; மேற்கில் உடுப்பிட்டிக் கோவிற்பற்றும் எல்லைகளாக உள்ளன. 

கட்டைவேலிக் கோவிற்பற்று, பருத்தித்துறைக் கோவிற்பற்றை அதன் மேற்குப் பக்கத்தையும் தெற்குப் பக்கத்தையும் சூழ்ந்து ‘ட’ வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிற்பற்றுக்குள் மேற்கு எல்லையை அண்டி வடக்கில் அல்வாய்த் துணைப்பிரிவும் தெற்கே கரவெட்டித் துணைப் பிரிவும் உள்ளன. தெற்கு எல்லையோரமாக, கரவெட்டிக்குக் கிழக்கே துன்னாலையும் அதற்குக் கிழக்கில் வல்லிபுரம் துணைப்பிரிவும் காணப்படுகின்றன. நிலப்படத்தின்படி கட்டைவேலிக் கோவிற்பற்றின் துணைப் பிரிவுகளுள் அல்வாய், வல்லிபுரம் ஆகியவற்றுக்கு முறையே, பாக்கு நீரிணை, வங்காள விரிகுடா ஆகியவற்றை அண்டிய கடல் முகப்புகள் உள்ளன. கரவெட்டி, துன்னாலை ஆகிய துணைப் பிரிவுகள், அவற்றின் தெற்குப் பக்கத்தில் கடல் நீரேரி முகப்புகளைக் கொண்டுள்ளன (படம்-2).

ஒல்லாந்தர் காலத்துக் கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகள் தற்காலத்தில் இரண்டு பிரதேசச் செயலர் பிரிவுகளுக்குள் அடங்குகின்றன. மேற்படி கோவிற்பற்றுக்குள் அடங்கிய வடக்குக் கரையோரப் பகுதிகளும் வல்லிபுரப் பகுதியும் பருத்தித்துறைப் பிரதேசச் செயலர் பிரிவுடன் சேர்ந்துள்ளன. எஞ்சியவை கரவெட்டிப் பிரதேசச் செயலர் பிரிவுக்குள் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தவரை, அல்வாய்த் துணைப்பிரிவின் சில பகுதிகளும், வல்லிபுரம் துணைப்பிரிவும் அடங்கலாக, பழைய கோவிற்பற்றின் ஒரு பகுதி பருத்தித்துறைப் பிரதேசசபை எல்லைக்குள்ளும் எஞ்சிய பகுதி வடமராட்சி தென்மேற்குப் பிரதேசசபை எல்லைக்குள்ளும் அடங்குகின்றன.

வீதிகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி யாழ்ப்பாணத்திலிருந்து வல்லையூடாகப் பருத்தித்துறைக்குச் செல்லும் வீதி இந்தக் கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்கிறது. இது ஏறத்தாழ இன்றைய யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியின் தடத்திலேயே அமைந்துள்ளது. அதேவேளை வல்லையிலிருந்து சற்றுத் தொலைவில் மேற்படி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு வீதி கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள்ளேயே மீண்டும் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியுடன் இணைகிறது. இது வல்லையிலிருந்து உடுப்பிட்டியூடாகச் செல்லும் இன்றைய வீதியுடன் பொருந்துகிறது. கரவெட்டித் துணைப் பிரிவுக்குள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி நீரேரிக் கரைவரை செல்லும் ஒரு வீதியையும் நிலப்படம் காட்டுகிறது. துன்னாலைத் துணைப் பிரிவுக்குள் மேற்படி வீதியிலிருந்து தொடங்கி வடகிழக்குத் திசையில் சென்று பருத்தித்துறைக் கோவிற்பற்றுக்குள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியுடன் இணையும் இன்னொரு வீதியும் நிலப்படத்தில் உள்ளது. கடைசியாகக் குறிப்பிட்ட இரண்டு வீதிகளில் முதலாவதன் வடக்குப் பகுதி தற்காலத்தில் நெல்லியடியிலிருந்து கலிகைச் சந்தி வரை செல்லும் வீதியுடன் பொருந்துவதாகத் தெரிகிறது. இதன் தெற்குப் பகுதியும், இரண்டாவதாகக் குறிப்பிட்ட வீதியும் ஏறத்தாழ இன்றைய புலோலி – சாவகச்சேரி வீதியின் தடத்தில் உள்ளன. புலோலி – சாவகச்சேரி வீதியைப் பிற்காலத்தில் நேராக மேம்படுத்தி அமைத்ததாற்போலும், நிலப்படத்தில் மேற்படி வீதிகள் சந்திக்கும் இடம் தற்கால நிலைமையுடன் சரியாகப் பொருந்தவில்லை. இவற்றைவிட, பருத்தித்துறைக் கோவிற்பற்றுக்குள் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தொடங்கித் தெற்கு நோக்கிக் கடல்நீரேரி வரை செல்லும் இன்னொரு வீதியும் கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் துன்னாலை, வல்லிபுரம் ஆகிய துணைப்பிரிவுகளை ஊடறுத்துச் செல்வதை நிலப்படம் காட்டுகிறது. இது இன்றைய புலோலி – கொடிகாமம் வீதியின் ஒரு பகுதி.

தற்காலத்தில் இக்கோவிற்பற்றுப் பகுதியின் வடக்குக் கடற்கரையோரமாகச் செல்லும் யாழ்ப்பாணம் – புன்னாலை – பருத்தித்துறை வீதியைத் தவிர, யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பிரதேசங்களை இணைப்பனவும், இக்கோவிற்பற்றை ஊடறுத்துச் செல்வனவுமான வீதிகள் ஒல்லாந்தர் காலத்திலேயே இருந்துள்ளதை நிலப்படம் தெளிவாகக் காட்டுகிறது. 

கட்டடங்கள்

ஏனைய கோவிற்பற்றுகளுக்குள் இருப்பது போல ஒல்லாந்தரின் கிறித்தவத் தேவாலயத்தையும் அதோடிணைந்த தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் காணமுடிகிறது. அத்துடன், இந்தக் கோவிற்பற்றுக்குள் இரண்டு யானைப் பந்திகளும் ஓர் அம்பலமும் கரையோர மடம் ஒன்றும் உள்ளன. அம்பலமும் மடமும் வடமராட்சியைத் தனியாகக் காட்டும் லெயுசிக்காமின் தொகுப்பிலுள்ள நிலப்படத்தில் குறிக்கப்படவில்லை. ஆனால், அதே தொகுப்பிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் காட்டும் நிலப்படத்தில் உள்ளன. வடமராட்சியைக் குறிப்பாகக் காட்ட, பெரிய அளவுத்திட்டத்துக்கு அமைய வரையப்பட்ட, முதலில் குறிப்பிட்ட நிலப்படத்தில் மேற்படி அம்சங்கள் குறிக்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. பொதுவாகக் கூடுதல் விவரங்களைக் காட்டுவதற்காகவே பெரிய அளவுத்திட்ட நிலப்படங்கள் வரையப்படுவது வழக்கம். இங்கே குறைந்த அளவுத்திட்ட நிலப்படத்திலுள்ள அம்சங்கள் சிலவற்றைப் பெரிய அளவுத்திட்ட நிலப்படத்தில் காணமுடியவில்லை. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

போல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் கட்டைவேலித் தேவாலயத்தைப் பற்றி விவரமான குறிப்புகளைத் தரவில்லை. ஆனாலும், தேவாலயமும் தேவாலய இல்லமும் நல்ல செங்கற்களால் கட்டப்பட்டிருந்ததாகத் தகவல் தந்துள்ளார். அதேவேளை, இவற்றை அண்டி ஒரு கோடைகால இல்லம் இருந்ததாகவும் அதிலிருந்து சூழவுள்ள பகுதிகளின் அழகிய காட்சிகளைக் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.1 நூலிலுள்ள படத்தில் கட்டைவேலித் தேவாலயத்தினதும் இல்லத்தினதும் சுவர்கள் நிரந்தரமான கட்டடப் பொருட்களால் ஆனவைபோல் வரையப்பட்டிருந்தாலும், கூரைகள் ஓலையால் வேயப்பட்டவை போலவே உள்ளன.2 படம் கோடைகால இல்லத்தைப் பெயர் குறித்துக் காட்டவில்லை. லெயுசிக்காமின் நிலப்படத்திலும் மேற்படி இல்லம் இல்லை.

நிலப்படத்தில் தேவாலயமும் இல்லமும் தற்காலத்தில் கலிகைச் சந்தி என அழைக்கப்படும் சந்தியை அண்டி அதன் தென்மேற்கு மூலைப் பகுதியில் குறிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியர் காலத்தில் மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்தவர்களே 1821 ஆம் ஆண்டில் தொடங்கிக் கட்டைவேலியில் கிறிஸ்தவ மதப்பணியாற்றினர்.3 அக்காலத்தில் அவர்கள் கட்டைவேலியில் சிதிலமடைந்த நிலையில் இருந்த ஒல்லாந்தரின் தேவாலயக் கட்டடத்தையே பயன்படுத்தியதாகத் தெரிகிறது. பிற்காலத்தில், இந்தத் தேவாலயக் கட்டடத்தையும் அது இருந்த நிலத்தையும் அரசாங்கம் மெதடிஸ்த திருச்சபைக்கு வழங்கியது.4 அத்தேவாலயக் கட்டடத்தில் அவர்கள் உடனடியாகத் திருத்த வேலைகள் எதையும் செய்ததாகத் தெரியவில்லை. 1870 ஆம் ஆண்டில் பழைய தேவாலயத்தை மெதடிஸ்த மிசன் நடத்திவந்த பாடசாலைக்குரிய சிற்றாலயமாக மாற்றி அமைத்தனர்.5 அவர்களால் நிறுவப்பட்டு இன்றும் அப்பகுதியில் இயங்கும் தூய திரித்துவ மெதடிஸ்த தேவாலயமும், புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையும் நிலப்படத்தில், ஏறத்தாழத் தேவாலயத்தைக் குறித்துள்ள பகுதியிலேயே இருக்கின்றன. 

யானைப்பந்திகள்

கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் உள்ள இரண்டு யானைப் பந்திகளுள் ஒன்று அல்வாய்த் துணைப் பிரிவுக்குள் அதன் வடகிழக்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. மற்றது, கரவெட்டித் துணைப் பிரிவுக்குள் அப்பிரிவின் மேற்கு எல்லைக்கு அருகில் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. நிலப்படத்தில் இதன் அமைவிடத்தைப் பார்க்கும்போது இந்த யானைப்பந்தி கரணவாய்ப் பகுதியில் இருந்திருக்கக்கூடும். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், இந்தப் பந்திகள் ஏற்றுமதிக்கான யானைகளையோ அரசாங்கத்தின் பிற தேவைகளுக்கான யானைகளையோ வைத்துப் பராமரிக்கும் இடங்கள் என்பதில் ஐயமில்லை. 

போல்டேயசின் நூலில் உள்ள கட்டைவேலித் தேவாலயத்தைக் காட்டும் படத்தில் குடை பிடித்தபடி ஒருவர் யானையின் மேல் அமர்ந்திருப்பதையும், ஈட்டி அல்லது அங்குசத்தைத் தாங்கியபடி முன்னே இருவரும் பின்னால் ஒருவரும் நடந்து செல்வதையும், காணமுடிகிறது. இந்தக் காட்சியிலிருந்து யானைமீது செல்பவர் ஓர் அரசாங்க அதிகாரி என்பதையும் கூடச் செல்பவர்கள் வேலைக்காரர்களும் யானைப் பாகர்களும் என்பதையும் புரிந்துகொள்ளலாம். இது உண்மையான ஒரு நிகழ்வாக இருக்கத் தேவையில்லை. தேவாலயத்தைக் காட்டுவதற்காக வரையப்பட்ட இப்படத்தின் இடைவெளிகளை நிரப்புவதற்காக இக்காட்சியைச் சேர்த்திருக்கக்கூடும். ஆனாலும், அக்காலத்தில், அதிகாரிகள் தமது கண்காணிப்பு வேலைகளுக்கு அல்லது போக்குவரத்துக்கு யானைகளைப் பயன்படுத்தியதை இப்படம் காட்டுவதாகக் கொள்ளமுடியும். இந்த யானைகளையும் நிலப்படம் காட்டும் யானைப் பந்திகளிலேயே வைத்துப் பராமரித்திருப்பர்.

அம்பலம்

அம்பலம் என்பது பயணிகள் இளைப்பாறிச் செல்வதற்கான ஒரு சிறிய கட்டடம் என ஏற்கெனவே குறிப்பிட்டோம். கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் காணப்படும் அம்பலம், நிலப்படத்தில் உள்ளபடி யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்றைய நெல்லியடிச் சந்திப் பகுதியில் இருந்ததாகத் தெரிகிறது. முக்கியமான நகரங்களை இணைக்கும் இந்த வீதியில் பயணம் செய்பவர்களின் தேவைக்காகவே இந்த அம்பலம் அமைக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்விடத்தில் அம்பலம் அமைந்தது அவ்விடத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வளர்ச்சிக்கான உள்ளாற்றலையும் காட்டுகிறது எனலாம். இதனாலேயே அண்மைக் காலத்தில் இப்பகுதி ஒரு முக்கியமான நகரப் பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.

மடம்

அல்வாய்த் துணைப்பிரிவின் வடக்குக் கடற்கரையோரத்தில் ஒரு மடம் உள்ளது. நிலப்படத்தில் மடம் எனப் பெயர் குறித்திராவிட்டாலும், குறியீட்டின் அடிப்படையில் இது ஒரு மடம் எனக் கொள்ளலாம். ஒரு சிறிய கட்டடத்தையும் அருகில் ஒரு மரத்தையும் கொண்ட குறியீட்டுக்கு அருகில் ‘இன்பசிட்டி’ எனப் பெயர் குறித்துள்ளனர். எனவே, இது இன்பசிட்டிக் கடற்கரை ஓரமாக அமைந்த ஒரு மடம் ஆகும். பெரும்பாலும் இது மீனவர்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட மடமாக இருக்கக்கூடும். தற்காலத்தில் ஒரு முக்கியமான மீன்பிடிக் கிராமமாக விளங்கும் இன்பசிட்டி, ஒல்லாந்தர் காலத்திலேயே குறிப்பிடத்தக்க ஒரு மீன்பிடித் துறையாக இருந்ததை இது காட்டுகிறது எனலாம்.

குளங்கள்

கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் 26 குளங்களைக் குறித்துக் காட்டியுள்ளனர். இவற்றுள் சிதம்பரன் குளம், ஆலடிக் குளம், வேலன் குளம், சக்கோட்டைக் குளம், தாழ்வளைக் குளம், மருதடிக் குளம், நீர்வள்ளை, துறைக்கோனென் குளம், நீர்வள்ளைக் குளம், புதுக்குளம், மாயக்கைக் குளம் என்னும் பெயர் கொண்ட 11 குளங்கள் அல்வாய்த் துணைப்பிரிவுக்குள் உள்ளன.  அத்துளுக் குளம், நோகோவில் குளம், உளில் குளம், ஆலங்கேணி, வெட்டுக்குளம், சண்டில் குளம், வேரக்கள்ளிக் குளம், சோனப்புக் கிராய், ஐயன் குளம் ஆகிய ஒன்பது குளங்கள் கரவெட்டித் துணைப்பிரிவுக்குள்ளும்; கொடிகட்டுக் குளம், மிங்குவில் குளம், நுணுவில் குளம் ஆகிய மூன்று குளங்களும் துரவு என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்படும் ஒரு நீர்நிலையும் துன்னாலைத் துணைப்பிரிவுக்குள்ளும் உள்ளன. மாக்கிராயன் குளம் எனப் பெயர் குறித்த ஒரு குளமும், குளம், துரவு எனப் பொதுப் பெயரால் குறிக்கப்பட்டுள்ள இரண்டு நீர்நிலைகளும் வல்லிபுரம் துணைப்பிரிவுக்குள் காணப்படுகின்றன.

ஒல்லாந்தர்காலக் கட்டைவேலிக் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிக்குள் தற்காலத்தில் 50க்கு மேற்பட்ட குளங்கள் காணப்படுகின்றன.6 இப்பகுதியிலிருந்த பெரும்பாலான குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது. லெயுசிக்காமின் நிலப்படத்திலுள்ள குளங்களின் பெயர்களுடன் தற்காலப் பதிவுகளிலுள்ள குளப் பெயர்களை ஒப்பிடும்போது மாயக்கைக் குளம், அத்துலுக் குளம், சண்டில் குளம், வேரக்கழிக் குளம், ஐயன் குளம், நுணுவில் குளம், மாக்கிராயன் குளம், கொடிகட்டுக் குளம் ஆகிய பெயர்கள் ஒல்லாந்தர் காலத்திலிருந்து இன்றுவரை மாற்றமின்றித் தொடர்வதை அறியமுடிகின்றது. 

குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 332.
  2. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 357.
  3. மெதடிஸ்த திரு அவை இலங்கை, இருநூற்றாண்டு நிறைவு நினைவு மலர் 1814 – 2014 (இலங்கை: மெதடிஸ்த திரு அவை, 2014), 13. 
  4. A History of the Methodist Church in Ceylon (Colombo: The Wesley Press), 99.
  5. A History of the Methodist Church in Ceylon, 201.
  6. தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்