பல்துறை ஆளுமையாக விளங்கிய கவிஞர் கா.சி. ரெங்கநாதன் எனும் வீதிப்பாடலாசிரியர்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
37 நிமிட வாசிப்பு

பல்துறை ஆளுமையாக விளங்கிய கவிஞர் கா.சி. ரெங்கநாதன் எனும் வீதிப்பாடலாசிரியர்

October 31, 2025 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

மலையக வீதிப்பாடல்களைத் தந்த கலைஞர்கள் வரிசையில், கண்டி உக்குவளைத் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றிய காசி ரெங்கநாதன் அவர்களுக்குத் தனித்துவமான இடமுண்டு. இவர் பாடலாசிரியர், பாடகர், நாடக இயக்குநர், நாடக நடிகர் எனப் பல்துறை ஆளுமையுடன் கலைத்துறையில் முத்திரை பதித்துள்ளார். குறிப்பாக, நாடற்றவர்களாக்கப்பட்டமை தொடர்பில் உருக்கமான பல பாடல்களைத் தந்துள்ளார். மலையக வீதிப்பாடலாசிரியர்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்தவராகவும் அறியப்படுகின்றார். அவற்றில் பெரும்பாலானவை இன்னமும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற தகவலும் உள்ளது. யாழ் சத்தியாக்கிரகம் குறித்து இவர் எழுதிய பாட்டுப் புத்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை இவரது சமூக அரசியலைக் காட்டுகிறது. அதே வேளையில், முருகன் மீதும் பக்தியுணர்வோடு பல பாடல்களைப் பாடியுள்ளார்; அவற்றுள் ‘கந்தலீலை’ எனும் பாடல் நூல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானமை இவரது மொழி ஆளுமைக்குச் சான்றாகும். சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கிய கா.சி. ரெங்கநாதன், வீதிப்பாடல்கள் ஊடாக முழு மலையகத்தையும் வலம் வந்த கவி ஆளுமையாகத் திகழ்ந்தார். ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் காரணமாக, மீளவும் தாயகம் திரும்பியோர் பட்டியலில் இவர் உள்வாங்கப்பட்டார் எனவும் அறிய முடிகிறது.

பொதுவாக வீதிப்பாடலாசிரியர்கள், தங்கள் பாடல் தொகுப்பு நூல்களில் படைப்புரிமை தொடர்பான விடயத்தை வெளிப்படுத்துவதில் வித்தியாசமான அணுகுமுறைகளைப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், சிலர் பாடல்களின் உரிமை விடயத்தைக் கூட பாடல்களாகவே தொகுப்புகளில் இணைத்துள்ளனர். வீதிப்பாடல்கள் தொடர்பில் கா.சி. ரெங்கநாதனின் ஈடுபாட்டை அறிந்துகொள்ள, அவரது கிடைக்கப்பெற்ற பாடல் நூல்களின் உள்ளடக்கம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இவ்வாறு கவனம் செலுத்தும் போதே அவரது உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடுகளை அறியும் வாய்ப்புக்கிட்டும். குறிப்பாக, அவரது பாடல் தொகுப்புகளில் ‘நீங்கள் இந்தியாவா? இலங்கையா?’ என்ற தலைப்பில் வெளியான தொகுப்பு மிகுந்த அவதானத்திற்குரியதாக விளங்குகிறது.

கா.சி. ரெங்கநாதனின் ‘நீங்கள் இந்தியாவா? இலங்கையா?’ என்ற பாடல் தொகுப்பானது, பன்னிரண்டு பக்கங்களில் பதினொரு பாடல்களை உள்ளடக்கியுள்ளது. இது இரண்டாவது பாகமாகவே வெளிவந்துள்ளது. வழக்கமான ‘சிவமயம்’ என்ற தொடக்கத்திற்குப் பதிலாக ‘அன்புமயம்’ எனக் குறிப்பிடுவதன் மூலம் வாசகர்களிடையே ஒரு நேச உறவை ஏற்படுத்தும் இவரது அணுகுமுறை கவனத்திற்குரியது. மதுரையைப் பூர்விகமாகக் கொண்டிருந்த இவர், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் அழுத்தத்தால் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த காலகட்டத்தில் இத்தொகுப்பை வெளியிட்டார். இதன் கூட்டுப் பதிப்பாளராக கொழும்பு 12 இனைச் சேர்ந்த பொன். வீ. பொன்னையா குறிப்பிடப்பட்டுள்ளார். கண்டி நெசனல் பிரிண்டர்ஸில் அச்சிடப்பட்ட இந்த நூல், அன்றைய காலகட்டத்தில் முப்பது சதத்திற்கே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கவிஞர் கா.சி. ரெங்கநாதனது செயற்பாடுகள் அமைப்பார்ந்த தளங்களிலும் மிகுந்த கவனத்தைப் பெறுகின்றன. குறிப்பாக, கவிஞர் எஸ்.ஆர்.எம். பெரியாம்பிள்ளை தலைமையிலான மலைநாட்டுச் செந்தமிழ்க் கவிஞர் சங்கத்துடனான அவரது நெருங்கிய தொடர்பு நிலை அவதானத்திற்குரியதாகும். ரெங்கநாதனின் ‘தமிழ் மணிக்கீதம்’ பாடல் தொகுப்பு நூலுக்கு, அச்சங்கத்தின் தலைவர் என்ற வகையில் எஸ்.ஆர்.எம். பெரியாம்பிள்ளை அவர்கள் கட்டளைக் கலித்துறையில் தனது வாழ்த்துரையைப் பதிவுசெய்துள்ளார். இது ரெங்கநாதன் மலையகக் கலை இலக்கிய அமைப்புகளில் பெற்றிருந்த அங்கீகாரத்தை உறுதி செய்கிறது.

“செய்யபுகழேந்தி கூத்தனார் கம்பன் சிவந்தகிரி

துய்யபடிகாசு இரட்டையரோவெனத் தோன்றியுளான்

மெய்த்தமிழ் தொண்டன் ஸ்ரீ ரெங்கநாதன் விரித்த தமிழ்

வையகமீது தமிழ்த்தாய்க்குச் சூட்டும் மணிமகுடம்”

கா.சி. ரெங்கநாதனின் படைப்புகளின் பின்னணியில் மலையகச் சமூக எண்ண ஓட்டங்கள் பிரதானமாக அமைந்திருந்தாலும், அவர் ‘சோதி முருகன் இல்லம் கா.சி. மாரியப்பா சகோதரர்கள்’ எனும் பெயரில் ஒரு தேசிய பக்திப் பாடல் இயக்கத்தை உருவாக்கி நடத்தியமை கவனத்திற்குரியதாகும். இந்த நிறுவன வலையமைப்பின் செயற்பாட்டாளர்களாக ரெங்கநாதனுடன் ஆர்.கே. இராமையா, எம்.ஜி. வேல்முருக தேவர், ஏ.எஸ்.டி. தங்கராசு செட்டியார் போன்றவர்கள் இணைந்திருந்தனர். இவர்கள் கண்டி, தொலஸ்பாகை, காவத்தை, நோர்வூட் என நாட்டின் பல்வேறு இடங்களைச் சேர்ந்திருந்தாலும், கலை, இலக்கியத்தின் ஊடாக ஓரணியாகத் தொழிற்பட்ட ஆரோக்கியமான வலையமைப்பு இவர்களிடையே காணப்பட்டது. “மலையகப் பிரதேச வாய்மொழிப் புலவர்கள் சமூக உணர்வுமிக்கவர்களாகக் காணப்படுவது விதந்துரைக்கப்பட வேண்டியதே. அன்றாட வாழ்க்கை முறை கற்பிக்கும் பாடங்கள், தொழிற்சங்கங்களின் செல்வாக்கு, தமிழகத் தொடர்பு, புலப்பெயர்வு, அனுபவச் சேமிப்பு முதலியன அதற்கு காரணங்களாகலாம்.” என்ற பேராசிரியர் செ. யோகராசா அவர்களின் கூற்றுக்கு அமைவாக, வீதிப்பாடலாசிரியரான கா.சி. ரெங்கநாதனின் வகிபங்கும் சிறப்பிற்குரியதாக விளங்குகிறது.

வீதிப்பாடலாசிரியர்கள் பொதுவாகத் தங்களுடைய புலமை, பெயர், ஆற்றல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்கியே பாடல்களை எழுதிப் பாடியுள்ளார்கள். ஆக்க உரிமை சார்ந்த முன்வைப்புகளும் இப்பாடல் தொகுப்பில் பாடலாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ‘புலவர் பாட்டு’ எனும் தலைப்பில் அமையப்பெற்றுள்ளது. நாட்டார் இசை மரபில் ஒன்றான காவடிச் சிந்து என்பது முருக பக்தர்களின் மிகுந்த விருப்பத்திற்குரிய இசை வடிவமாகத் திகழ்கிறது. முருக வழிபாட்டில் காவடியைச் சுமந்து ஆடும்போது பாடப்படும் பாடல்கள் இதில் அடங்குகின்றன. அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்தை தோற்றுவித்ததில் பெரும் பங்கு வகித்ததால், காவடிச் சிந்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்; இவரது ‘அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து’ இம்மரபில் முதலாவதாக வந்த சிற்றிலக்கியமாகும். சிந்து என்பது ஐந்து இசை உறுப்புகளால் ஆன யாப்பமைப்பைக் கொண்டது. இதில் எடுப்பு (பல்லவி) 01, தொடுப்பு (அநுபல்லவி) 01, உறுப்பு (சரணங்கள்) 03 என ஐந்து உறுப்புகள் உள்ளன. இத்தகைய அணுகுமுறையோடே அண்ணாமலை ரெட்டியாரால் பாடல்கள் எழுதப்பட்டன.

“வண்ண மயில்முருகேசன் – குற

வள்ளி பதம்பணி நேசன் – உரை

வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான் மற

வாதே சொல்வன் மாதே!

கோபுரத் துத்தங்கத் தூவி – தேவா

கோபுரத்துக்கப்பால் மேவி – கண்கள்

கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு

குலவும் புவி பலவும்

நூபுரத் துத்தொனி வெடிக்கும் – பத

நுண்ணிடை மாதகள் நடிக்கும் அங்கே

நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியே என

நோக்கும் படி தாக்கும்…”

அண்ணாமலைச் செட்டியார் தொடக்கி வைத்த காவடிச்சிந்து பாடல் மரபை அதன் வழிவந்தவர்கள் பின்பற்றிப் பாடல் புனைந்துள்ளார்கள். கா.சி. ரெங்கநாதனும் தன் வித்துவச் செருக்கையும் புலமைத்திருட்டு தொடர்பான கண்டனத்தையும் பாடுபொருளாக்கி, காவடிச்சிந்து மரபில் பாடியுள்ளார். எடுத்துக்காட்டாக,

“கம்பன் ஒளவை புகழேந்தி கவிகாளமேகம் ஒட்டக்

கூத்தன் வள்ளுவர் பாரதியார் கண்ட நாட்டுக்

கட்டுத்தறியும் கவிகட்டி

எட்டுத்திக்கும் விடுமென்பதை (நீர்)

கேட்டதில்லையா – கைவண்டி ஓட்டமில்லையா – நாட்டு

பாட்டைத் திருடித் திரிவதிலும்

ஓட்டைத் திருடு மேலென்று

டி.டி. சங்கரதாஸ் சுவாமி சொல்லி வைத்தார்.”

என்பதோடு,

“செய்யா தீரப்பா – பாட்டைத் திருடாதீரப்பா – அப்பா

திருடாதீர்! திருடாதீர்! திருடாதீர்! திருடாதீரப்பா”

என எச்சரிக்கும் வரிகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். 

பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின் பின்னர் ஏற்பட்ட இந்தியத் தமிழர்களின் புலப்பெயர்வு, இலங்கையின் அரசியலில் பல்வேறு போக்குகளிற்கு வழிவகுத்ததுடன், பொருளாதார மற்றும் உற்பத்திப் பொறிமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியது. இலங்கையின் அரசியலமைப்பு நகர்வுகளில், டொனமூர் சீர்திருத்தம், சர்வஜன வாக்குரிமை மூலமாக இந்தியத் தமிழர்களையும் உள்வாங்கியது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருப்பமாகும். இலங்கைக்குப் புலம்பெயர்ந்து நூறு வருடங்களுக்குப் பின்னர், இச்சமூகத்தின் அடையாளம் ‘இந்தியரா? இலங்கையரா?’ என நிலவிய கேள்விக்கு, இலங்கையராக அங்கீகரிக்கப்படும் நிலையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் ஓரளவு திருப்திகரமான அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஆனால் சுதந்திர இலங்கை இந்தியத் தமிழர்களுக்குக் கற்பித்த பாடங்கள் மிகுந்த அபத்தமானவை; இதனால், இம்மக்கள் சுதேசி என்ற அடையாளத்தில் நிலைபெற வேண்டுமா, அல்லது விதேசி என்ற நிலைப்பாட்டில் அணுகப்பட வேண்டுமா என்ற சிக்கலான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து இருநூறு ஆண்டுகள் கடந்திருந்தும், இவ்வகை அடையாளப் பிரச்சினை தொடர்ந்து சர்ச்சையாகவே நிலவுகிறது. ‘இந்திய வம்சாவளித் தமிழர்களா?’ அல்லது ‘மலையகத் தமிழர்களா?’ என்ற வாத–பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டமை அவதானத்திற்குரியது. எதுவாயினும், ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்ற பெயரே சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு மாறாக தங்களை ‘மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பலரிடத்தில் வலுவாக வெளிப்படுகிறது. ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ மற்றும் ‘மலையகத் தமிழர்கள்’ என்ற இவ்விரு அடையாளங்களிலும் சாதக–பாதக அம்சங்கள் காணப்படுவதால், இவ்விடயம் சமூக இருப்பு, பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் ஆகிய கோணங்களில் ஆழ்ந்த கவனத்துடன் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும்.

கா.சி. ரெங்கநாதன் வாழ்ந்த காலகட்டத்திலும், இந்தியத் தமிழர்களின் அடையாளப்படுத்தல் மீதான சர்ச்சை நிலவிவந்தது. அந்தச் சிக்கலை மக்களிடையே தெளிவுபடுத்தும் முனைப்பிலேயே அவர் ‘நீங்கள் இந்தியாவா? இலங்கையா?’ என்ற கருத்தியலை எடுத்துச் சென்றார் என்பது கவனத்திற்குரியதாகும். இதே காலகட்டத்தில், தென்னகத்தில் ஐம்பதுகளின் தொடக்கத்தில் திராவிடக் கருத்து நிலைகள் வலுப்பெற்றன. திராவிடக் கொள்கையை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் முக்கிய ஊடகமாகத் திகழ்ந்த சினிமா, இதில் பெரும் பங்காற்றியது. குறிப்பாக, 1952 ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ திரைப்படத்தின் தாக்கம் மிக முக்கியமானதாகும். சமூக ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் எதிர்த்து, சமூக அணிதிரட்டலை ஏற்படுத்தும் முனைப்பை இத்திரைப்படமும், அதில் உள்ளடங்கிய திரைப்பாடல்களும் உருவாக்கின. இத்திரைப்படத்திற்கான வசனத்தை கருணாநிதி எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கவிஞர் கண்ணதாசனின் வரிகளில், ஆர். சுதர்சனத்தின் இசையமைப்பில், எம்.எஸ். இராஜேஸ்வரியின் குரலில் ஒலித்த “ஓ ரசிக்கும் சீமானே வா” எனும் பாடலின் மெட்டமைப்பைத் தழுவிய வகையில் இந்தியத் தமிழர்களின் இருப்புக் குறித்து, கா.சி. ரெங்கநாதன் எழுதிய பாடல்,

“நீங்க – இந்தியாவா லங்கையா எந்தவூர் பிரஜையா

எங்கிருந்து வாழப்போறிங்க – என்று

வந்திருக்கும் வாக்குரிமை மனுவை நிரப்புதற்கு

மறந்து விடாதீங்க…..”

என்பதோடு,

சந்ததிக்கு என்ற ஒரு சொந்த இடத்தைப் பிடிக்க

சங்கத்துடன் ஒத்துழையுங்க……”

என்றவாறு தொடர்கிறது. அவ்வாறே 1964 ஆம் வருடம் இடம்பெற்ற ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் பாதிப்புநிலையை எடுத்துரைக்கும் வகையிலான பாடலின் வரிகள் பின்வருமாறு அமைகிறது.

“அஞ்சேயகா லட்சம்பேர் அங்கிட்டு – மற்ற

மிஞ்சு மூன்று லட்சம்பேர் இங்கிட்டு – இது

அங்கு சென்றாலுமல்ல திங்கு நின்றாலுமிதில்

அச்சமென்ப தொன்று மில்லைங்க – என்றாலுமது

அத்துமீறி நடக்கும் சுத்தப்போக்கி ரித்தனத்தை 

கந்தன் செயல் என்று வையுங்கோ – எக்காலத்திலும்

ஒற்றுமை அவசியமுங்க நீங்க – இந்தியாவா…..”

இவ்விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தவறிய தொழிற்சங்கத் தலைவர்களைச் சாடுவதையும் இவரது பாடல்கள் பாடுபொருளாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தின் படி செல்ல வேண்டும் என்று ஒருபுறம் வலியுறுத்துபவர்கள், செல்லக்கூடாது என மறுபுறம் வாதிடுபவர்கள் ஆகிய இரு கருத்துநிலைகளையும் கடுமையாக விமர்சிக்கும் போக்கினை இவரது பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. ‘நீங்கள் இந்தியாவா? இலங்கையா?’ என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘உரிமை எடுக்க வேண்டும்’, ‘தேவை அவசரமா’, ‘கையில் பணமிருந்தால்’ போன்ற பாடல்கள், இவ்வொப்பந்தத்தின் விளைவாக நம்மவர்கள் அடைந்த அவலநிலையை எடுத்துரைக்கின்றன. அதேபோன்று ‘அன்றும் இன்றும்’ எனும் பாடல், இந்தியத் தமிழர்களின் புலப்பெயர்வு வரலாற்றைச் சித்திரிக்கிறது. அப்புலப்பெயர்வு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியதற்குக் காரணமானவர்களில் கங்காணிமார்களுக்கும் முக்கிய பங்கு உண்டு என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக, அவர்களைச் சாடும் பின்வரும் பாடல் வரிகள் குறிப்பிடத்தக்கவை.

“ஒரு காசுக்கு மிளகா வாங்கி சுப்பன் கங்காணி!

ஒன்பது நாளைக் கரைக்கலாமின்ன முத்தன் கங்காணி!

வெத்தலை மண்டபம் தனுசுகோடி சுப்பன் கங்காணி!

விடியுமுன்னே போகலாமின்ன முத்தன் கங்காணி!

சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைச் சாடும் கருத்து நிலைகளையும் இவரின் பாடல்களில் அவதானிக்க முடிகிறது. பேதமையற்ற சமூகத்தின் தேவைப்பாட்டை பின்வரும் வரிகள் சுட்டிநிற்கின்றன.

“தாழ்ந்த உயர்ந்த குலமும்

தனியான ஒருவர் நலமும்

தீர்த்த உலகம் போலே 

அறியாமை போக்கி நாட்டில்

அறிவாற்றல் பெருக வேண்டும்

இருளான நிலையை மாற்றி

திருவான ஒளியை ஏற்றும்

பெரிதான எண்ணம் வேண்டும்”

பாரதியாரின் கவிதை வரிகளால் பாதிப்படைந்த கா.சி. ரெங்கநாதன், பாரதியின் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற பாடலைத் தழுவிய வகையில், ‘தூங்காதே தம்பி தூங்காதே’ எனும் பாடலின் மெட்டில் பாடலமைத்துள்ளார். இப்பாடலில் பாரதியின் சமத்துவக் கருத்துநிலைகளும் ஒளவையாரின் தார்மீக வலியுறுத்தல்களும் ஒருங்கே வெளிப்படுகின்றன. “எது சாதி அந்த உயர் சாதி – சாதி எது அந்த இழி சாதி, இங்கு இருப்பதே ஆண் பெண் இரு சாதி” என்ற வரிகள், சாதி வேறுபாடுகளை முறியடிக்கும் உறுதியான நோக்கத்தையும் மனித சமத்துவத்தின் அடிப்படை எண்ணத்தையும் வலியுறுத்துகின்றன. இதன் மூலம் பாடலாசிரியரின் சமூக விழிப்புணர்வு தெளிவாக வெளிப்படுகின்றது.

திராவிடக் கருத்தியலை பொதுமக்கள் மத்தியில் வேரூன்றச் செய்வதில் பேரறிஞர் அண்ணாவின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உருவாக்கத்திலும் அதன் இயக்கச் செயற்பாட்டிலும் அண்ணாதுரை முக்கிய பங்காற்றினார். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மக்களிடையே திருப்தியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அண்ணாதுரையின் ஆட்சியின் சிறப்பை உணர்ந்த கா.சி. ரெங்கநாதன், அதனைப் பாராட்டும் பாடலையும் இத்தொகுப்பில் இணைத்துள்ளார். பராசக்தி திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கா கா கா கா’ என்ற பாடல் பெரும் புகழைப் பெற்றது; இதன் வரிகளை உடுமலை நாராயணக் கவி எழுதியிருந்தார். இப்பாடல், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலின் அடிப்படைச் சிந்தனையை உட்சுமந்ததாக விளங்குகிறது. அப்பாடலின் மெட்டில், கா.சி ரெங்கநாதன் அவர்கள், 

“தீ மூ கா… தீ மூ கா… 

தீ மூ கா எங்கள் தென்னக சரித்திரத்தை 

சீர்தூக்கும் சங்கந்தானுங்க, 

சிந்தனை விருந்தளித்து நற்தமிழ்க் குயர்வு தரும்,

கழகத்தை தூற்றாதீங்க வாங்க தீ மூ கா…….”

எனப் பாடல் புனைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்ணாதுரையின் வழிகாட்டலைப் பின்பற்றியவராக எம்.ஜி.ஆர் குறிப்பிடப்படுகிறார். திராவிடக் கொள்கையை மக்களிடையே பரப்புவதில் சினிமா ஒரு முக்கியமான கருவியாக விளங்கியது. அந்தக் கொள்கை நிலைகள் திரைக்காவியங்களாக உருவானபோது, அவற்றில் பிரதான கதாபாத்திரங்களாக நடித்துத் திராவிட இயக்கத்தின் எண்ணங்களை மக்கள் மனங்களில் வேரூன்றச் செய்ததில் எம்.ஜி.ஆருக்கு தனிச்சிறப்பான இடம் உண்டு. 1936 ஆம் ஆண்டு ‘சதிலீலாவதி’ திரைப்படத்தின் மூலம் தொடங்கிய அவரது நடிப்புப் பயணம், 1968 ஆம் ஆண்டில் வெளிவந்த 100 ஆவது படமான ‘ஒளிவிளக்கு’ வரை நீடித்தது. எம்.ஜி.ஆரின் முதல் படம் முதல் நூறாவது படம் வரை உள்ள அனைத்துத் திரைப்படங்களையும் இணைத்துப் பாடல் வடிவில் கூறும் மரபு, அவரை நேசித்த மற்றும் அவரின் நடிப்பில் ஆர்வங்கொண்ட அனைத்துச் சமூகத்தினரிடையிலும் காணப்பட்டது. அந்தப் பங்கேற்பில் கா.சி. ரெங்கநாதனின் முயற்சியும் குறிப்பிடத்தக்கதாகும். அவர் எம்.ஜி.ஆரின் இந்தப் பட்டியலைத் தொடங்குவதற்கு முன், அவரைப் பற்றிய வாழ்த்துச் சொற்களைப் புனைந்திருப்பது கவனிக்கத்தக்கது. மேலும், 1967 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மீது எம்.ஆர். ராதா துப்பாக்கிப் பிரயோகம் செய்த நிகழ்வும் இப்பாடலில் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்தச் சம்பவத்தின் தாக்கத்தையும் எம்.ஜி.ஆரின் மீள்வாழ்வையும் வலியுறுத்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது. அது,

“சூட்டுக்குத் தப்பித்தமிழ் நாட்டுக்கு சேவை செய்யும் 

செயல்வீரத் தியாகி வள்ளல் எம்.ஜி.ஆரை…” 

எனத் தொடங்கி,

“பாட்டாளி மக்கள் முதல் பாவலர் நாவலர் வரை

பாராட்டும் தங்கம் எம்.ஜி.ஆரென்னும் சிங்கம் – நம்மை 

படைத்தவனுக்கும் நீதி பகிர்ந்தளிக்கும் அண்ணாவின்

பண்பு கொண்டவர் – மக்களின் அன்புகண்டவர்….”

என்றவாறு தொடர்கிறது.

எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளையைப் போலவே முருக பக்தரான கா.சி. ரெங்கநாதனும் முருகனைப் பற்றிய பல பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். பெரியாம்பிள்ளையின் தலைமையிலான இயக்கச் செயற்பாட்டில் அவரும் இணைந்து செயற்பட்டிருந்ததை அறிய முடிகிறது. அந்தக் காலத்தின் வீதிப்பாடலாசிரியர்கள் இடையே பரஸ்பர நட்பையும் ஒத்துழைப்பையும் அடிப்படையாகக் கொண்ட வலையமைப்பு உருவாகியிருந்தது; அந்த வலையமைப்பின் முன்னணிச் செயற்பாட்டாளராக கா.சி. ரெங்கநாதனையும் அடையாளப்படுத்தலாம். அவர் தன்னை ‘கே.எஸ்.ஆர்.’ என்ற பெயராலும் குறிப்பிடுகிறார். முருகன் மீதான அவருடைய ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்தும் வகையில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் ‘முச்சோத்திரப் பதம்’, ‘பறவைக் காவடிப் பாமாலை’, ‘அரோகரா மணிமாலை’, ‘தெய்வானை வள்ளி சண்டை’, ‘கணபதி கந்தன் திருவிளையாடல்’, ‘வேங்கை வேலன்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் ‘மாரியம்மன் கும்மி’, ‘முன்னேஸ்வர மகிமை’, ‘வற்றாப்பளைக் கண்ணகி’, ‘பத்திரகாளி பக்தி பதம்’, ‘இராம பஜனாமிர்தம்’ ஆகியன ஆன்மீக உணர்வோடு வெளிவந்த நூல்களாகும். அதேபோல், ‘மலைநாட்டுக் காந்தி’ என அழைக்கப்பட்ட கே. இராஜலிங்கம் அவர்களின் மறைவு மற்றும் ஜவஹர்லால் நேருவின் மறைவு குறித்தும் பாடல் தொகுதிகளை ரெங்கநாதன் வெளியிட்டுள்ளார். தமிழ்மொழியின் மீதான உணர்ச்சிபூர்வமான பற்றும் பல பாடல்களில் வெளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தன்னுள் பல்துறை ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதில் வீதிப்பாடலாசிரியர்கள் முக்கிய அக்கறை செலுத்தி வந்துள்ளனர். வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் ஆளுமைகளாக தங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். தாம் அறிந்த அறிவுத் துறைகளை மக்களுக்கும் சமூகத்துக்கும் எளிமையான வடிவில் எடுத்துச் சொல்லுவதில் அவர்கள் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்கது. சமகாலப் பிரச்சினைகள் குறித்த அவர்களின் தொடர் ஆர்வமும் தேடலும், அடுத்தடுத்த படைப்புகளுக்கான தளமாக அமைந்துள்ளது. அவர்களது பாடல் நூல்களில் இடம்பெறும் “எமது அடுத்த பதிப்பு – நாட்டில் நடந்த உருக்கமான சில சம்பவங்களைத் தழுவி வருகிறது. பார்க்க, படிக்கத் தவறாதீர்கள.” என்ற வாசகம், அவர்களின் சமூகப் புலனையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல், ரெங்கநாதனின் ‘புது நவமணி குடும்ப வழிகாட்டி’ பாடல் தொகுப்பு நூல், அவரை ஒரு குடும்ப நல ஆலோசகராக அடையாளப்படுத்துகிறது. “எல்லோர்க்கும் நடுநிலை வகிக்கும் எளிய நடை! அரிய கருத்துக் கோவை!” என்ற வாசகத்துடன் வெளிவந்த இந்நூல், வாசகர்களிடையே எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

“சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா – என்ன கட்டுன மனுசன் செய்கையை நெனைச்சா கண்ணுக்கே தூக்கமில்ல” எனத் தொடங்கும் பாடலில், கடன் சுமை, தேவையான பொருட்களை வாங்க முடியாத துன்பம், பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை, அவர்களால் தாயின் பேச்சு செவிமடுக்கப்படாத நிலைமை போன்ற காரணங்களால் வாடும் பெண்ணின் மனநிலை வெளிப்படுத்தப்படுகின்கிறது. “அப்பன் வீட்டில செல்லமாயிருந்தேன் அன்றொரு காலமது – இந்த ஆளுக்கு வந்து வாழ்க்கப்பட்டேன், என் அந்துசம் கொறைஞ்சுது; மகன் சுப்ரமணியன் தலையெடுத்தான், அப்பான் சேட்டையும் படுத்தது, நாங்கள் சீரோடு வாழ குடும்ப வழிகாட்டி வச்சது – கே.எஸ்.ஆர். கீதமது” என முன்னுரையாக அமைந்த வரிகள் பாடலின் உணர்வையும் நோக்கத்தையும் தெளிவாகச் சுட்டுகின்றன. “அரிமருகா எனையாளும் குமரவடி வேலா” என்ற பாடலின் மெட்டில் அமைந்துள்ள இருநூற்று அறுபத்து நான்கு வரிகள், குடும்ப முரண்பாடுகளின் சூழலில், எவ்வாறு சண்டைகளிலிருந்து விலகி அமைதியாக வாழலாம் என்பதற்கான வழிகாட்டலாக அமைகின்றன. இப்பாடல், ஒவையாரின் ‘மூதுரை’, ‘கொன்றைவேந்தன்’ ஆகியவற்றின் பாடல் மரபை ஒத்ததாக அமைந்துள்ளது. அதேபோல், “மணப்பாரை மாடு கட்டி” என்ற பாடலின் மெட்டில் இயற்றப்பட்ட “அலங்கார உலகமடா, அவனியே பொய் சாலமடா” என்ற பாடலும் குடும்ப நலனை வலியுறுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதே தொகுப்பில், முருகன் மீது ஆழ்ந்த பக்தியுணர்வுடன் பாடப்பட்ட பாடல்களும் இணைக்கப்பட்டுள்ளன.

மலையக மக்களின் வருகையுடன் குயின்ஸ்பெரி நவநாதர் சித்தரின் மகிமையும் அவதானத்தைப் பெறுகின்றது. மலையக மக்களின் முருக வழிபாடு, பெண் தெய்வ வழிபாடு, மற்றும் ஆன்மிகத் தேடலில் நவநாத சித்தர் மீதான கவனம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. அவர்மீது ஆழ்ந்த பக்தியுணர்வுடன் ரெங்கநாதன் பாடல் இயற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது; அந்தப் பாடல் ‘குடும்ப வழிகாட்டி’ தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. இல்லற வாழ்வில் ஆன்மிக உணர்வும் வழிபாடும் இணைந்திருப்பது அவசியம் என்பதை கவிஞரின் அணுகுமுறை வலியுறுத்துகிறது. குடும்பத்தில் அமைதி நிலைபெற ஆன்மிக ஈடுபாடு தேவையானது என்பதைப் பாடல் உணர்த்துகிறது. மேலும், ஆன்மிக ஈடுபாட்டில் குருவானரின் வழிப்படுத்தல் எவ்வளவு முக்கியமானது என்பதையும் இப்பாடல் எடுத்துரைக்கிறது. ரெங்கநாதன் அவர்களால் நவநாதர் சித்தர் எவ்வாறு உள்ளார்ந்த மதிப்புடன் போற்றப்பட்டார் என்பதற்கு, ரெங்கநாதனின் பின்வரும் பாடல் வரிகள் உறுதியான எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

“குஞ்சிப்பொறியென்ற தோட்டத்தோரம் நடுக்காட்டினிலே

குங்கிலிய மரத்தடி – மகிமை கொண்ட 

குருவே தொழுதோம் உம்மடி.

காலமொரரூப அவதாரமாக வந்து மக்கள் 

கவலை தவிர்க்கும் நாதரே – கண்கண்ட எங்கள்

காருண்ய சீலர் போதரே

கட்டிடபீடங்கள் உமக்கிஸ்டமில்லை யென்று ஒரு

கானகம் தன்னிலமர்ந்தே – கல்லுக்குகையில்

ஞானம் பொதிந்துமலர்ந்தே”

ரெங்கநாதனின் பாடல் தொகுப்புகளில் ‘நவரசம் ததும்பும் சமரச முரசு’ முக்கிய இடத்தைப் பெறுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்ற ‘ஒரு சொல் வீச்சு’ என்ற பாடல், கா.சி. ரெங்கநாதனின் புலமைத்துவத்தையும், அவரின் தனித்துவமான கவிதைச் சொற்றிறனையும் வெளிப்படுத்துகிறது. தன் பாடல் இயற்றும் திறனை வாசகர்களிடம் நம்பிக்கையுடன் ஒப்புவிக்கும் நோக்கில் இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல, மீசையை முறுக்கும் கை விரலைப் போல, உடலை முழுதும் காட்டும் சல்லாடியைப் போல, வீட்டு வேலை அறியாத காட்டுப் பெண்ணைப் போல – தன் பாடலின் சிறப்பு அமையும் என்கிறார். மேலும், புருஷனுக்கு அடங்காத பெண்ணைப் போல, மனைவிக்கு துரோகம் செய்கிற கணவரைப் போல, பேச்சிலேயே காலம் தள்ளும் சொந்தங்களைப் போல, சாடை பேசி சண்டையிடும் தப்பிலிகளைப் போல, பெண் வாசனைக்கு அடிமையான மாப்பிள்ளையைப் போல, அறிவைக் கெடுக்கும் போதைப்பொருளைப் போல, தெருக்களில் சஞ்சரிக்கும் தறுதலைகளைப் போல, சண்டையிடும் முண்டர்களைப் போல – தன்னுடைய பாடல்கள் இத்தனை இரசனைகளையும் தரவல்லதாக அமைகிறது என்கிறார். இவ் உபாயங்கள் அறிவின் தெளிவிற்கான கருத்து நிலைகளாக அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்

‘இப்படியும் நடக்குதாம்!’ என்ற தலைப்பில் அமைந்த பாடல் வரிகள் தோட்டத்தில் இடம்பெறும் உரிமை மீறல் செயற்பாடுகளைச் சுட்டிக்காட்டி, அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான கோசங்களை ஏற்படுத்துவதாக அமையப் பெறுகிறது. வேலிகளே பயிரை மேய்கின்ற போக்குகள் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. அவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான கருத்துகளும் முன்மொழியப்படுகின்றது. கா.சி. ரெங்கநாதனின் பாடல்கள், சமூகத்தில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த சாடலையும் சித்திரிக்கின்றன. அத்துடன், அவர் சமூகத் தலைமைகளின் பொறுப்பற்ற தன்மையை நாசூக்காகச் சுட்டிக்காட்டுவதுடன், இப்பாடல்கள் ஊடாக அவர்களை எச்சரிக்கும் போக்கையும் வெளிப்படுத்துகிறார். குறிப்பாக, ‘சிங்காரக் கும்மி’ எனும் தலைப்பில் அமைந்த பாடலில் தனது எண்ணக் கோசங்களை இலாவகமாக எடுத்துச் செல்கிறார். அவ்வாறே கோலாட்டம் போன்ற மலையக மக்களின் மக்கள் கலைகள் ஊடாகத் தனது கருத்துகளைப் பதியச் செய்வதில் அவர் ஆர்வம் காட்டுகிறார். கும்மிப் பாடல்களைத் தழுவிய பாடல்களையும் இவர் இயற்றியுள்ளது மனங்கொள்ளத்தக்கதாகும்.

கா.சி. ரெங்கநாதனின் ‘தமிழ் மணிக்கீதம்’ 1963 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காலகட்டமானது, இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்ற அடையாளப்படுத்தல் வலுவிழந்து மலையகம் என்ற கருத்தியல் வீரியம் பெறத் தொடங்கிய பின்னணியைக் கொண்டது. இந்த நூலில் ஐந்து பாடல்கள் உள்ளடங்கியுள்ளன. சமூகத் தலைவர்களை ஆராதிக்கும் எண்ணத்தில் மூன்று பாடல்கள் கவனத்தைப் பெறுகின்றன. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் மீதான மரியாதையின் நிமித்தமாக அவரது பிரிவுத் துயரைப் பதிவு செய்யும் நோக்கம் கருதி ஒரு பாடல் புனையப்பட்டுள்ளது. தாயகம் என்ற வகையில் இந்தியா மீதான நேசத்தையும் ஆசிய அரசியல் பற்றிய புரிதலையும் ரெங்கநாதனில் உணர முடிகிறது. 

“மண்டலம் அறிந்த மாக்மோஹன் வகுத்த எல்லையே

மறுத்து சீனர் கொடுக்கிறார் மகாகொடிய தொல்லையே

என்றிருந்தும் ஏற்கும் நமது இந்தியாவின் சொல்லையே

என்றிட்டாலும் நீங்கள் இந்த நேரமிங்கு இல்லையே” 

இப்பாடல் புதுவர்ண இசையில் ஏக தாளத்துடன் அமைந்துள்ளதாக பாடலாசிரியரின் குறிப்பு இடப்பட்டுள்ளது. மலையக மக்களின் வரலாற்றோடு தொடர்புபட்ட தொண்டைமானின் பங்கேற்புப் பற்றிய பாடலொன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. 

மலைநாட்டுக் காந்தி கே. இராஜலிங்கம் அவர்களின் மறைவு குறித்து ஏற்கனவே இவரால் ஒரு பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இத்தொகுப்பிலும் அவரது மறைவு குறித்த நீண்ட பாடலொன்று எழுதப்பட்டுள்ளது. ‘ஆசிரிய ரிரங்கற்பா’ எனும் தலைப்பில் அமைந்த பாடலின் வரிகள், கே. இராஜலிங்கம் மீது கொண்டுள்ள பக்திக்குரிய பாச நிலையை வெளிப்படுத்தி நிற்கிறது. எடுத்துக்காட்டாக,

“தோட்டத் தொழிலாளர் தலைவர்களில் ஒரு தலைவர்

தேடவும் கிடைக்காத தங்கம் நிகர் தலைவர்

நாட்டமுடன் தொழிலாளர் நலம் தன்னையே கருதி

நன்மை பல செய்திட்ட துணைத்தலைவர்….”

எனவும்,

“காலம் முழுதும் கதர்க்கொடி   தாங்கி

கடமை செய்த மகாபிர   சங்கி

வாழ வேண்டியவர் இன்னும்   ஓங்கி

மாளலாமோ நம்மை விட்டு   நீங்கி

உண்மை உழைப்பால் உயர்ந்   தவராகி

உலகத் தொழிலாளர்   சபைஏகி

நன்மை பல செய்த   நிருவாகி

இராஜலிங்க மேயொரு   தியாகி”

எனவும் ‘பாலும் பழமும்’ பாடல் மெட்டில் கே. இராஜலிங்கத்தின் நினைவுகளை பாடலாசிரியர் மீட்டுகிறார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் கைங்கரியத்தை தொழில் முனைவோரும், இலங்கையின் அரசியல் நகர்வுகளும் காலங்காலமாக நிறைவேற்றி வந்துள்ளன. இதன் விளைவாக, மலையக மக்களது இருப்பு, தொழிற்துறை, வாய்ப்புகள், உரிமை சார்ந்த கோசங்கள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகின. பெருந்தோட்டத் தொழிற்துறையின் முதலீடுகளாக அமைந்த தொழிலாளர்களுக்கு உளவியல் ரீதியாகப் பல்வேறு அழுத்தங்கள் திட்டமிட்டு வழங்கப்பட்டன. இந்த அழுத்தங்களின் விளைவாக அவர்களாகவே ஒதுங்கிக்கொள்ளும் வகையிலான அணுகுமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், பெருந்தோட்டத்துறைப் பொறிமுறை வலுவிழந்து வருகிறது. இதன் பின்னணியிலிருந்த நுண் அரசியலை வெளிப்படுத்தும் நோக்கிலும், தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்தும் கடப்பாட்டிலும் அமைந்த பாடலாக ‘ஹல்லோ…..யார் பேசுறது? தொழிலாளி பேசுகிறேன்’ எனும் பாடல், ‘சாஞ்சா சாயிற பக்கமே’ என்ற பாடல் மெட்டில் உருவாக்கப்பட்டு, இந்த நிலைமைகளைச் சாடுகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் இப்பாடலும் மலையகச் சமூகத்தில் முக்கியமான பேசுபொருளாக அமைகிறது.

வீதிப்பாடல் தொகுப்பு நூல்களில் இடம்பெறும் விளம்பரங்கள், அக்காலகட்டத்தில் தமிழர்களது வர்த்தக நடவடிக்கைகளின் வகிபங்கை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழ்கின்றன. அந்த வகையில், தமிழர்கள் பெருவாரியாகவும் தனித்துவத்தோடும் வாழ்ந்த இடங்கள் திட்டமிட்ட வகையில் சிதைவுக்குள்ளாகியிருக்கும் நிலையை அறியவும் இந்தத் தொகுப்புகள் வாய்ப்பாக அமைகின்றன. குறிப்பாக, கலகா, வம்புருகாமம், பட்டிகாமம், உப்புராசி, புசல்லா, சங்குவாரி ஆகிய இடங்கள் இத்தொகுப்புகளின் ஊடாகத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சமகாலத்தில் இந்த இடங்கள் வேறு பெயர்களாக மருவிய நிலையில், அவற்றில் இருந்த தமிழ் அடையாளம் கேள்விக்குறியாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

மலையக வீதிப்பாடல்கள், மக்களின் ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதோடு, மண் சார்ந்த ஏக்க நிலைகளையும், பாரபட்சமிக்க சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வலியுறுத்துகின்றன. சூழல், உறவுகள், உழைப்பு மீதான பிடிப்பு நிலைகள் தகர்க்கப்படும் வகையிலான ஏற்பாடுகள், யுத்த தாக்குதலை விடப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை இந்தப் பாடல்கள் உணர்த்துகின்றன. பிரயோகிக்கப்பட்ட உளவியல் ரீதியான தாக்குதல்கள் பல மனக் குறைகளுக்குக் காரணமாகிவிட்டன. அந்த வடுக்களின் வேதனைக் குரல்களாகவே வீதிப்பாடல்களின் உள்ளடக்கம் அமைகிறது. இந்த இலக்கிய வடிவத்தை வலிமைப்படுத்துவதில், தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவராகவும், இம்மண்ணின் கலைஞராகவும், சமூகப் போராளியாகவும் கா.சி. ரெங்கநாதனின் வகிபங்கு மிக முக்கியத்துவத்துடன் உணரப்படுகிறது. அவர் விட்டுச் சென்ற தடங்களைத் தேடி ஆவணப்படுத்துவது காலத்தின் தேவையாகும். அவ்வாறு ஆவணப்படுத்துவதன் மூலமே, அவர் போதித்து நிற்கும் விடயங்களைச் சமூக நகர்விற்காகப் பயன்படுத்த முடியும். அதுவே, சமூகம் எனும் பிரயத்தனத்தோடு வாழ்ந்து மறைந்த அச்சமூகவாதிக்கு நாம் ஆற்றுகின்ற நன்றி கலந்த கருமமாக அமையும்.

உசாத்துணை நூல்கள்

  1. யோகராசா. செ,  (2023) ஈழத்து முச்சந்தி இலக்கியம், மகுடம் பப்ளிகேசன்.
  2. வடிவேலன். பெ, (2025) தமிழ் இலக்கியத்தில் கதிர்காம முருகன் – மலையகத்தில் கவிஞர் அருட்கவி எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை பாடிய சிற்றிலக்கியத் தொகுப்பு, இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம்.
  3. நடேசய்யர். கோ, (1946) கதிர்காமம், பி.என்.கே பிரஸ்
  4. ரெங்கநாதன். கா (கீலக வருடம்) நீங்கள் இந்தியாவா? இலங்கையா?, சோதி முருகன் இல்லம்.
  5. ரெங்கநாதன். கா ( ) நவரசம் ததும்பும் சமரச முரசு, சோதி முருகன் இல்லம்.
  6. ரெங்கநாதன். கா. (1963) தமிழ் மணிக் கீதம், மலையகச் செந்தமிழ்க் கவிஞர் சங்கம்.
  7. ரெங்கநாதன். கா. (1959) புது நவமணி குடும்ப வழிகாட்டி, சோதி முருகன் இல்லம்.
  8. முத்துலிங்கம். பெ, (2012) பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், கயல் கவின் புக்ஸ்.
  9. அண்ணாமலை. ரெ, ( ) காவடிச்சிந்து, ஜீவா புத்தகாலயம் (மின்நூல்),


About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்