கிராமிய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியைச் செயற்படுத்துவதில் கிராம அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் உள்ளூராட்சித் திணைக்களம் என்பன முக்கிய பங்காற்றுகின்றன. இந்த அமைப்புகள், மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில், பிரதேச, நகர மற்றும் மாநகர நிர்வாகங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைத்துவத்தின் வழியாகச் செயற்படுகின்றன. கிராமிய மட்டத்தில், கிராம அபிவிருத்திச் சங்கங்களும், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களும் செயலில் உள்ளன. இவை அடிமட்ட மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புகளாக உள்ளன. உள்ளூராட்சிச் சபைகள், அரசியல் உரிமையுடனான பங்கேற்பை வழங்கி வருகின்றன. இவ்வாறுள்ள கிராமிய அமைப்புகள், கிராமவாரியாக நடத்தப்படும் கட்டமைப்பு அபிவிருத்தி, மக்கள் கருத்துகளைச் செவிமடுத்தல், மக்களுடைய முன்னுரிமைகளைக் கவனத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்தல் மற்றும் மக்களுக்காக மக்கள் பணி செய்தல் போன்றவற்றைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைப்புகளும் சேவைகளும்
இவ்வகையில், வடக்கு மாகாணத்தில் 8,884 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் காணப்படும் நிலப்பரப்பில் 921 கிராம அலுவலர் பிரிவுகளும், 3,556 கிராமங்களும் காணப்படுகின்றன. உள்ளூராட்சி நிர்வாக அடிப்படையில் இரு மாநகர சபைகளும், 4 நகர சபைகளும், 28 பிரதேச சபைகளும், 71 பிரதேச சபை உப அலுவலகங்களும் செயற்படுகின்றன. இதேபோல கிழக்கு மாகாணத்தில் 9,996 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதியில் 1,078 கிராம அலுவலர் பிரிவுகளும், 2,447 கிராமங்களும் காணப்படுகின்றன. உள்ளூராட்சி நிர்வாக அடிப்படையில் 3 மாநகர சபைகளும், 5 நகர சபைகளும், 37 பிரதேச சபைகளும், 498 வட்டாரங்களும் காணப்படுகின்றன. அரச நிர்வாகத்தின் கிராமிய அலகாக கிராம அலுவலர் பிரிவுகள் காணப்படுகின்றன. பல கிராம அலுவலர் பிரிவுகளின் அடுத்தமட்ட அமைப்பாக கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராமங்களின் பிரதிநிதித்துவத்தை கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள் வெளிப்படுத்துகின்றன. பிரதேச மட்டத்தில் வரிகள் மூலம் வருமானத்தைத் திரட்டும் அதிகாரம் கொண்ட அமைப்புகளாக இவை காணப்படுகின்றன. பிரதேச சபைகள் தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் சந்தைகள், வியாபார வலயங்கள் என்பனவற்றை வாடகைக்கு விட்டு வரிகளை அறவிடுகின்றன. இவை வியாபார உரிமம், சேவைக் கட்டணங்கள், தண்டப்பணம், ஏனைய வருமானங்கள், நிலையான வைப்பு வருமானம், நன்கொடைகள், சந்தைக் கடைகளின் வருமானம், விடுதி வாடகைகள், வாடிவீடுகளின் வாடகை, குடியிருக்கும் வீடுகளின் வாடகை, பொழுதுபோக்கு வரிகள், முத்திரைக் கட்டணங்கள், நீதிமன்றத் தண்டப்பண வருமானம், வாகன மற்றும் கால்நடை உத்தரவுப் பத்திர வருமானங்கள், வியாபாரப் பலகைகளின் வருமானம், ஆதன வரி, சோலை வரி எனப் பல்வேறு நிதி மூலங்களிலிருந்து வருமானங்களைப் பெற்றுக்கொள்கின்றன.

உள்ளூர் அதிகார சபைகள் தமக்குக் கிடைக்கும் இவ்வருமான மூலங்களிலிருந்து கிடைக்கும் பல்வேறு வருவாய்களையும் தமது மக்களுக்கான சேவைகள் என்ற வகையில் மீள வழங்கி வருகின்றன. கிராமிய மட்டத்தில் காணப்படும் அவசியத் தேவைகளான உற்பத்தி விற்பனைச் சந்தைகள், மருந்தகங்கள், ஆயுர்வேத வைத்தியசாலைகள், சிறுகடைகள், கொள்கலன்கள், மயானங்கள் என்பன சேவை நோக்கு அடிப்படையில் பிரதேச நிர்வாகத்தினால் முகாமை செய்யப்படுகின்றன. நிறுவனச் சேவைகள் என்ற வகுதியின் கீழ் நூலகங்கள், படிப்பகங்கள், குளாய்வழி நீர்வழங்கல், குளாய்க் கிணறுகள், திறந்த கிணறுகள் என்பன நிர்வகிக்கப்படுகின்றன. வேலைவாய்ப்பு வழங்கும் மனிதவளச் சேவைகள் என்றவகையில், அட்டவணைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்ட ஆளணி, அட்டவணைப்படுத்தப்படாத ஆளணி என இரு பிரிவுகளின் கீழ் பணித்தொகுதிகள் சேர்க்கப்பட்டு, நகரக் கழிவு முகாமைத்துவம் உட்பட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தவகையில் மாவட்ட மட்டத்தில் காணப்படும் சேவை வழங்கலை ஆராயும் போது, வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் 96 சந்தைகளும், 4 சிகிச்சை மையங்களும், 13 மருந்தகங்களும், 37 ஆயுர்வேத வைத்தியசாலைகளும், 32 வாரச்சந்தைகளும், 1,514 விற்பனைக் கடைகளும், 14 கொள்கலன்களும், 260 சுடுகாடு – இடுகாடுகளும் இயங்கி வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 31 சந்தைகளும், 10 ஆயுர்வேத மருந்தகங்களும், 2 வாரச் சந்தைகளும் 3,377 விற்பனைக் கடைகளும், 5 கொள்கலன்களும், 90 சுடுகாடு – இடுகாடுகளும் காணப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 28 சந்தைகளும், 5 ஆயுர்வேத வைத்திய மருந்தகங்களும், 1 வாரச்சந்தையும், 4 கொள்கலன்களும், 104 சுடுகாடு – இடுகாடுகளும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. வவுனியா மாவட்டத்தில் 20 சந்தைகளும், 51 சிகிச்சை நிலையங்களும், 3 வாரச்சந்தைகளும், 449 விற்பனைக் கடைகளும், 4 கொள்கலன்களும், 80 இடுகாடுகள் – சுடுகாடுகளும், 10 நூலகங்களும் காணப்படுகின்றன. மன்னார் மாவட்டத்தில் 11 சந்தைகளும், 3 மருந்தகங்களும், 66 வாரச்சந்தைகளும், 368 விற்பனைக் கடைகளும், 14 கொள்கலன்களும், 36 சுடுகாடு – இடுகாடுகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனைவிட நிறுவனம்சார்ந்த சேவைகள் என்ற வகையில், நூலகங்களும் படிப்பகங்களும் தமது கல்விச்சேவை வழங்கலுக்காகப் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுச் சேவை வழங்கி வருகின்றன. கிராமிய மக்கள் தரிசிக்கும் முதல்நிலை மையமாக உள்ளூராட்சி அமைப்புகளின் நூலகங்களே செயற்பட்டு வருகின்றன. இந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மாநகர சபையின் கீழ் 6 நூலகங்களும், 3 நகரசபைகளின் கீழ் 4 நூலகங்களும், 13 பிரதேச சபைகளின் கீழ் 49 நூலகங்களும் சேவை வழங்கி வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகள் மூலம் 10 நூலகங்கள் பராமரிக்கப்படுகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 4 உள்ளூராட்சி சபைகள் மூலம், 13 நூலகங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையின் கீழ் 17 நூலகங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வவுனியா மாநகரசபையின் கீழ் ஒரு நூலகமும், ஏனைய 4 பிரதேச சபைகள் மூலம் 9 நூலகங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
உள்ளூராட்சி அமைப்புகளினால் செயற்படுத்தப்படும் மற்றொரு முக்கியமான சேவை வழங்கலாக நீர் விநியோகத்தைக் குறிப்பிட முடியும். இதன்கீழ், குழாய்கள் மூலம் நீர் விநியோகித்தல், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் பெற்று தண்ணீர் வண்டிகள் மூலம் விநியோகித்தல், திறந்த பொதுக் கிணறுகளை நிரந்தரமாக அமைத்து அதிலிருந்து மக்கள் நேரடியாக நீரைப்பெறல் ஆகிய 3 வகைகளில் நீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது. உள்ளூராட்சிச் சபைகள் வழங்கும் கழிவு முகாமைத்துவச் சேவைக்கு அடுத்ததாக இந் நீர்வழங்கல் சேவையே கேள்விமிக்க இரண்டாவது சேவையாக இம்மாகாணங்களில் காணப்படுகின்றது. நீர்வழங்கல் சேவைக்குப் பிரதான கடமைக்கூறைக் கொண்ட நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது நீர்வழங்கலில் அதிக பங்களிப்பை வழங்கினாலும் நீரின் விலையின் அடிப்படையில் உள்ளூராட்சி அமைப்புகளின் நீர்வழங்கல், மக்கள் விரும்பும் சேவையாக இருந்து வருகிறது. இந்தவகையில் யாழ்ப்பாண மாநகர சபையின் கீழ் 1,798 குழாய்வழி நீர்வழங்கல் மையங்களும், சாவகச்சேரி நகரசபையின் கீழ் 81 நீர்க்குழாய்களும், வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் கீழ் 5 குழாய்வழி நீர்வழங்கலும், வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் கீழ் 31 நீர்க்குழாய்களும், சாவகச்சேரி பிரதேச சபையின் கீழ் 145 நீர்க்குழாய்களும் நீர்விநியோகம் செய்துவருகின்றன. பிரதேச நிர்வாகத்தினால் இம்மாவட்டத்தில் 122 குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு நீர் வழங்கப்படுவதுடன், பொதுக்கிணறுகள் என்ற வகையில் 642 பொதுக்கிணறுகள் குடிநீர்த் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் தேவைப்படும் பகுதிகளில் 115 இடங்களில் நீர்க்கொள்கலன்கள் அமைக்கப்பட்டு அதிலிருந்து மக்கள் நீரைப் பெற்றுக்கொள்கின்றனர். 150 குழாய்க் கிணறுகளும், 387 பொதுக் கிணறுகளும் இம்மாவட்டத்தில் குடிநீர் வழங்கலுக்காக அமைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 79 நீர்க்குழாய்கள் மூலம் நீர் வழங்கப்படுவதுடன், 236 குழாய்க் கிணறுகளும் 482 திறந்த கிணறுகளும் அமைக்கப்பட்டு நீர் வழங்கலில் இணைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 2 இடங்களில் நீர்க்கொள்கலன்கள் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், 117 குழாய்க் கிணறுகளும், 161 திறந்த கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 1,140 குழாய்க் கிணறுகளும், 471 பொதுக் கிணறுகளும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்புகளின் கீழ் நீர் வழங்கலுக்காக அமைக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் மற்றுமொரு பிரதான சேவையாக வீதி விளக்குகள் பொருத்தும் சேவையைக் குறிப்பிட முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பிரதான பாதைகள், சந்திகள், திருப்பங்கள், பொதுவான கட்டடங்கள் என்பவற்றுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டு, அவைகளுக்குரிய பணம் பிரதேச வருமானத்திலிருந்து மின்சார சபைக்குச் செலுத்தப்படுகிறது. வீதி விளக்குத் தொழில்நுட்பத்தில் ‘சோலார்’ சக்தியை அடிப்படையாகக்கொண்ட விளக்குகளைப் பொருத்துவதை பல பகுதிகளில் பரிசீலித்திருந்தாலும், சில பொறுப்பற்ற பயனர்களால் இவை களவாடப்படுவதால், தற்போது பல வீதி விளக்குகள் மின்சார சபையின் நேரடி வயரிங் மூலம் இணைக்கப்பட்டே செயற்படுகின்றன. இவ்விளக்குகளைப் பொறுத்தவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் 33,328 வீதி விளக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5,357 வீதி விளக்குகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6,300 வீதி விளக்குகளும், மன்னார் மாவட்டத்தில் 8,636 வீதி விளக்குகளும், வவுனியா மாவட்டத்தில் 37,017 வீதி விளக்குகளும், பிரதேச சபைகள் மூலம் பொருத்தப்பட்டுள்ளன.
இத்துடன் இணைந்த வகையில், உள்ளூராட்சி அமைப்புகளினால் கிராம மட்டங்களில் நிறுவப்பட்டுள்ள சனசமூக நிலையங்கள் பல்வேறு சிறிய வேலைகளை கிராம மட்டத்தில் செய்துவருகின்றன. இவ்வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 968 சனசமூக நிலையங்களும், மன்னார் மாவட்டத்தில் 76 சனசமூக நிலையங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 144 சனசமூக நிலையங்களும், வவுனியா மாவட்டத்தில் 254 சனசமூக நிலையங்களுமாக 1,549 சனசமூக நிலையங்கள் உள்ளூராட்சிச் சபைகளின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி அமைப்புகளும் சேவைகளும்
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி அமைப்புகளினால் வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆராயும்போது, திருகோணமலையில் 109 வாராந்தச் சந்தைகளும், மட்டக்களப்பில் 34 வாராந்தச் சந்தைகளும், அம்பாறையில் 138 வாராந்தச் சந்தைகளும் நிர்வகிக்கப்படுகின்றன. திருமலையில் 12, மட்டக்களப்பில் 3, அம்பாறையில் 10 என மொத்தம் 25 ஆயுர்வேத வைத்தியசாலைகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. நிறுவன சேவைகள் என்றவகையில் திருகோணமலையில் 11 முன்பள்ளிகளும், மட்டக்களப்பில் 55 முன்பள்ளிகளும், அம்பாறையில் 111 முன்பள்ளிகளுமாக 177 முன்பள்ளிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளூர் அதிகார சபைகளால் நடாத்தப்பட்டு வருகின்றன. நூலகங்கள் என்ற அடிப்படையில், திருகோணமலையில் 41 நூலகங்களும், மட்டக்களப்பில் 82 நூலகங்களும், அம்பாறையில் 52 நூலகங்களும் இயங்கி வருகின்றன. சிறுவர் பொழுதுபோக்குப் பூங்காக்கள் என்றவகையில், திருகோணமலையில் 37 சிறுவர் பூங்காக்களும், மட்டக்களப்பில் 54 சிறுவர் பூங்காக்களும், அம்பாறையில் 41 சிறுவர் பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது விளையாட்டு மைதானம் என்றவகையில், திருமலையில் 93 விளையாட்டுத் திடல்களும், மட்டக்களப்பில் 85 விளையாட்டுத் திடல்களும், அம்பாறையில் 106 விளையாட்டுத் திடல்களும் உள்ளூராட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இடுகாடுகள் – சுடுகாடுகள் என்றவகையில், திருகோணமலையில் 193 இடுகாடுகள் – சுடுகாடுகளும், மட்டக்களப்பில் 178 இடுகாடுகள் – சுடுகாடுகளும், அம்பாறையில் 243 இடுகாடுகள் – சுடுகாடுகளும் என மொத்தமாக 614 இடுகாடுகள் – சுடுகாடுகள் பிரதேச சபைகளால் அபிவிருத்தி செய்யப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல பொதுக்கிணறுகள் மற்றும் குளிக்கும் இடங்கள் ஆகிய வசதி வழங்கல்கள் பற்றி ஆராயும் போது, திருகோணமலை மாவட்டத்தில் 379, மட்டக்களப்பு மாவட்டத்தில் 450, அம்பாறை மாவட்டத்தில் 257 என்ற எண்ணிக்கையில் மொத்தமாக 1,086 பொதுக்கிணறுகள், குளிக்கும் இடங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. உள்ளூராட்சி நிர்வாகம் பல கிராமங்களில் சனசமூக நிலையக் கட்டடங்களை நிறுவி வழங்கியுள்ளது. இதன்படி, திருகோணமலையில் 16, மட்டக்களப்பில் 36, அம்பாறையில் 33 என மொத்தமாக 85 சனசமூக நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுக் கிராமியத் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கழிவு முகாமைத்துவ நிலையங்கள் என்றவகையில் வடமாகாணத்தில் ஓரிரு நிலையங்கள் செயற்படுகின்றன. மிகுதியுள்ள இடங்களில் சேகரிக்கப்படும் கழிவுகள் இன்றும் பாரம்பரிய முறையில் திறந்தவெளிகளிலேயே நிரப்பீடு செய்யப்படுகின்றன. எனினும், வடக்குடன் ஒப்பிடுகையில் கிழக்கில் இவ்விடயத்தில் திருப்திகரமான நிலை காணப்படுகிறது. திருகோணமலையில் 3, மட்டக்களப்பில் 2, அம்பாறை 1 என ஆறு நிலையங்களில் திண்மக்கழிவு முகாமை செய்யப்பட்டு மீள்சுழற்சிக்குக் கொண்டுவரப்படுகின்றது. உக்காத கழிவுகளை மீள்பாவனைக்கும், உக்கும் கழிவுகளை மீள்சுழற்சிக்கும் கொண்டுவருவதன் மூலம் சூழல்நேயச் செயற்பாட்டைக் கொண்டுவருவதுடன், மனித மலக்கழிவுகளை கடலுக்குள் கலக்கச் செய்யும் பொறிமுறையும் கடைப்பிடிக்கப்படுகின்றது. இவ்விரு மாகாணங்களிலும், நெருக்கமான குடியிருப்புகளில், மலக்கழிவுகள் குடிநீர்க் கிணறுகளில் கலந்து மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. சனச்செறிவு கொண்ட நகரங்கள், சனங்களால் மேலும் நிரப்பப்பட்டு வரும்நிலையில், நீர் மாசடைதல் நிலை மோசமடைந்தே வருகின்றது.
திருகோணமலையில் 4, மட்டக்களப்பில் 12, அம்பாறையில் 13 என மொத்தமாக 29 சேதனப் பசளை உற்பத்தி நிலையங்கள் உள்ளூராட்சி நிறுவனங்களால் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், வருடாந்தம் 559 மெற்றிக்தொன் திண்மக்கழிவு அகற்றப்படுகின்றது. திருகோணமலையில் 48, மட்டக்களப்பில் 90, அம்பாறையில் 118 என மொத்தமாக 256 பொதுப் பயன்பாட்டு மலசலகூடங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
பொதுவசதிகள் சேவைகள் வழங்கல் என்பதன்கீழ், அம்பாறையில் 66, திருகோணமலையில் 47, மட்டக்களப்பில் 32 என 145 நீண்டகால நோய்ப்பராமரிப்புச் சிகிச்சை நிலையங்கள் சேவை வழங்கி வருகின்றன. நீர்வழங்கல் சேவையின்கீழ், அம்பாறையில் 34, திருகோணமலையில் 29, மட்டக்களப்பில் 44 என்றவகையில் மொத்தமாக 112 பௌசர்கள் மூலம் நடமாடும் நீர்வழங்கல் சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேவைகளுக்காக பல கட்டடங்களும் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அம்பாறையில் 131 சமுதாயக் கட்டடங்களும், 8 தொழிற்பயிற்சி மையங்களும், திருகோணமலையில் 181 சமுதாயக் கட்டடங்களும், 2 தொழிற்பயிற்சி மையங்களும், மட்டக்களப்பில் 8 சமுதாயக் கட்டடங்களும், 3 தொழிற்பயிற்சி மையங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில், நீர்வழங்கலுக்காக கிராமிய நீர்வழங்கல் திட்டங்களும் உள்ளூர் அதிகார சபைகளினால் முகாமை செய்யப்பட்டு வருகின்றன. திருகோணமலை மாவட்டத்தில் 15 கிராமிய நீர்வழங்கல் திட்டங்களின் கீழ், 1,330 மில்லியன் மீற்றர் கியூப் நீர் வருடாந்தம் வழங்கப்படுவதுடன், 6,881 நீர் இணைப்புகள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 நீர்வழங்கும் திட்டங்களின் கீழ், 1,143 மில்லியன் மீற்றர் கியூப் நீர் வருடாந்தம் விநியோகிக்கப்படுவதுடன், 2,879 நீரிணைப்புகள் பாவனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் 15 நீர் வழங்கல் திட்டங்கள் மூலம், 7,350 இணைப்புகளினால், 7,430 மில்லியன் மீற்றர் கியூப் நீர் வருடாந்தம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்தவகையில், வரி வருமானத்தை அறவிட்டு கிராமியத் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரங்களைக்கொண்ட அமைப்புகள் தமது பரப்பினுள் இன்னமும் முறையான சேவைகளை வழங்குவதில்லை என்ற அபிப்பிராயம் கிராம மட்டத்தில் தொடர்கிறது. வரி வருமானத்தை உயர்த்தும் திட்டங்களில் உள்ளூர் அதிகார சபைகள் காட்டும் அக்கறையானது மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. காலத்துக்குக்காலம் சேமித்து வைக்கப்பட்ட நிதி முதலீட்டிலிருந்து சேவைகளை விஸ்தரிப்பதிலேயே தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். மக்களிடம் எதிர்ப்பைப் பெறாது மீண்டும் பதவியைக் கைப்பற்றும் தந்திரோபாயமாக இதனைக் கருதுகின்றனர். இதனால் பெருமளவு உள்ளூர் அதிகார சபைகள் வளங்கள் குறைந்த நிலையில் உருவாக்கப்பட்டுள்ள சொத்துகளைக்கூட நிர்வகிக்கப் பணமில்லாது காணப்படுகின்றன. உள்ளூர் அரசு என்ற நிலையில் தமக்கிருக்கும் செயற்படு பரப்பில், இயலுமான வழிகளை இனங்கண்டு, வரிவருமானத்தை அதிகரிப்புச் செய்ய வாய்ப்புகள் அதிகமுள்ளன. குறிப்பாக, ஆதன வரிகளுக்கான வரி அறவீட்டை மீளச் சீரமைத்தல், வசதிகளை மேம்படுத்தல், உருவாக்கப்படும் சொத்துகளின் பயன்பாட்டாளர்களிடமிருந்து அதிக வரி வசூலித்தல், புதிய வருமான மூலங்களைக் கண்டறிந்து செயற்படுத்தல், வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணுதல் ஆகிய செயற்பாடுகள் மூலம் வருமானத்தை உயர்த்திக்கொள்ள முடியும். இவையே வருமானம் உயர்த்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும்.



