மிகிந்தலை நகரில் இருந்து வடக்கு நோக்கி வவுனியாவுக்குச் செல்லும் வீதியில் 9 கி.மீ தூரத்தில் ரம்பேவ சந்தி அமைந்துள்ளது. இச்சந்தியின் கிழக்குப் பக்கத்தில் சுமார் 9 கி.மீ தூரத்தில் கள்ளஞ்சிய என்னுமிடம் காணப்படுகிறது. இங்கு உள்ள நீராவிய என்னுமிடத்தில் பண்டைய கால சுவடுகள் காணப்படுகின்றன.
இங்கு நீளமான, ஒடுங்கிய வடிவில் அமைந்துள்ள கள்ளஞ்சிய குளத்தின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பாறைகளும், கற்குகைகளும் காணப்படுகின்றன. 1891 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட எச்.சி.பி. பெல் இங்கு காட்டுப் பற்றைகளின் மத்தியில் பண்டைய ஆலய இடிபாடுகளைக் கண்டார். இங்குள்ள மலைப் பாறையின் அருகில் மூன்று கற்குகைகள் இருந்ததாகவும், ஒரு கற்குகையின் அருகில் உள்ள பாறையில் பெரிய அளவில் கற்சுனை ஒன்று இருந்ததாகவும், இதன் அருகில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்.சி.பி. பெல் அவர்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் பின்வருமாறு, “Nirawiya, A cluster of rocks at the head of the long Kalanchiya tank. The site of an ancient temple, now thickly overgrown with Huphorbia and scrub. Under boulders are three cave dwellings, one hollowed with special care. Adjoining the caves is a large pokuna. Upon flat rock is a short inscription of four lines in bad order, a grant to the Priesthood by “Naka Maha Raja.”
இக்கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் பிற்கால பிராமிக்குரிய எழுத்துகளாகும். எனவே இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்ட காலம் பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டாகும். நான்கு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டின் முதலாவது வரி 5 அடி 3 அங்குல நீளத்திலும், இரண்டாவது வரி 4 அடி நீளத்திலும், மூன்றாவது வரி 3 அடி நீளத்திலும், நான்காவது வரி 2 அடி நீளத்திலும் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டில் காணப்படும் எழுத்துகள் 3½ அங்குலம் முதல் 7½ அங்குலம் வரையான அளவில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் பின்வருமாறு,
- சித்தம் மயிஹிணியி நகவெஹி
- வவிய தகபதி போஜக ப[தி]
- நாகமஹாரஜ தினி
- பிக்கு சகட தினி

இதன் பொருள் ஆங்கிலத்தில் “Success! The water revenue and the overlord’s revenue of the tank of Nakava in Mayihina, King Naga donated to the community of bhikkus” என்பதாகும். தமிழில் இது “மயிஹின என்னுமிடத்தில் உள்ள நகவ என்னும் குளத்தின் நீர் மூலம் கிடைக்கும் வருவாயையும், குளத்தின் உரிமையாளரின் வருவாயையும் மன்னன் நாகன் பிக்குகள் சமூகத்திற்கு தானமாக வழங்கினான்” எனப் பொருள்படுகிறது.
கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘மன்னன் நாகன்’ மகாலக்க நாகன் என பெல் தெரிவித்துள்ளார். மகாலக்க நாகன் முதலாம் கஜபாகு மன்னனின் பின்பு அநுராதபுரத்தில் முடிசூடி ஆட்சி செய்தவனாவான். இவன் கஜபாகு மன்னனின் வயோதிப மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பொ.ஆ. 136 முதல் 143 வரையான 7 ஆண்டுகள் மட்டுமே இலங்கையின் மன்னனாக ஆட்சி புரிந்தான்.
நாக கல்லு என்னுமிடத்தில் உள்ள நாகவிய சேதியம் பற்றிய கல்கிரிகந்த கல்வெட்டு
வவுனியாவில் இருந்து ஹொரவபொத்தானைக்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ள கெப்பிட்டிகொல்லாவை சந்தியில் இருந்து மேலும் 3 கி.மீ தூரம் சென்றால் அய்யதிகே சந்தியை அடையலாம். இச்சந்தியில் இருந்து வடக்குப் பக்கமாகச் செல்லும் வீதியில் மேலும் 3½ கி.மீ தூரம் சென்றதும் மலைப்பாறைகள் நிறைந்த ஒரு காட்டை அடையலாம். இவ்விடமே கல்கிரிகந்த எனும் மலைப்பகுதியாகும்.
இம்மலைப் பகுதியில் உள்ள பாறை ஒன்றின் மேற்பரப்பில் பிற்கால பிராமி எழுத்துகளில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை எட்வர்ட் முல்லர் முதன்முதலாகக் கண்டார். இது பற்றி 1883 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Ancient Inscriptions in Ceylon’ எனும் நூலில் பதிவு செய்தார். இந்நூலில் இக்கல்வெட்டு பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனவும், பாதிய எனும் மன்னனின் பெயர் இதில் காணப்படுவதாகவும், இக்கல்வெட்டில் சில வயல் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டமை பற்றிய செய்தி பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இக்கல்வெட்டு அப்போது படியெடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.
1890 ஆம் ஆண்டு எச்.சி.பி. பெல் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டிருந்த மலைப்பாறைப் பகுதியை ஆராய்ந்து, இங்குள்ள கற்குகைகளில் இரண்டு சிறிய கல்வெட்டுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்கிருந்த பாறைக் கல்வெட்டை நன்கு ஆராய்ந்தபோது இதன் அரைவாசிப்பகுதி சிதைந்து காணப்படுவதாகவும், இவ்வாறு சிதைந்துள்ள கல்வெட்டின் மத்திய பகுதி புதையல் திருடர்களாலேயே தீவைத்துச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாறையில் இக்கல்வெட்டு காணப்படும் பகுதி 13 அடி 10 அங்குல நீளம் கொண்டதாகும். எழுத்துகள் 2 முதல் 7 அங்குல அகலம் கொண்டவையாகும். மூன்று வரிகளில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் விபரங்கள் பின்வருமாறு,
- சித்த பாதிய ரஜஹ [தின மணிகர்கலக- விகர] ஹி செட குபர பஹனவிய
- துர குபரே க இடம் [எவ கெடஹி நாகல அவ படய நாக] வியய செட குபர க அசின்வடக
- கெடஹி செட கரி க [மணிகரவியஹி] செட குபர க புன- வருவதகே [செட குபர க]
இதன் பொருள் “நாகல (நாக கல்லு) என்னுமிடத்தில் உள்ள நாகவிய எனும் சேதியத்திற்கும், மணிகரகல்ல என்னுமிடத்தில் உள்ள மடாலயத்திற்கும் பாதிய எனும் மன்னனால் வயல் நிலங்கள் மானியமாக வழங்கப்பட்டன” என்பதாகும்.




