குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
9 நிமிட வாசிப்பு

குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும்

June 18, 2025 | Ezhuna

இலங்கையைப் பொறுத்தமட்டில் குறிப்பாக வடமாகாணத்தில் குயர் மக்களுக்கான உரிமைக் குரல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காணமுடிகிறது. ‘வடபுல பண்பாட்டுத் தளத்தில் குயர் அரசியல்’ என்ற இத் தொடரானது, வடபுல மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள பிற்போக்கான கருத்தியல்கள் பால்நிலைச் சமத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைதல், குயர் மக்கள் இந்தச் சமூகத்தின் மத்தியில் வன்முறைகளையும் பாரபட்சங்களையும் எதிர்கொள்வதில் கலாசாரம் – சமயம் அல்லது மதக் கட்டமைப்புகளின் பங்கு, வடபுலத்தில் குயர் அரசியல், குயர் விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மற்றும் ஏனைய குயர் செயற்பாட்டாளர்களின் சமத்துவம் நோக்கிய முன்னெடுப்புகள், கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட  மையக்கருத்து வெளிப்பாட்டளர்கள் குயர் அரசியல் அல்லது அது சார்ந்த விடயங்களில் பேணும் மௌனிப்பு என்பன பற்றிப் பேசவிழைகின்றது.

இந்த உலகில் பிறந்த அனைவரும் மனிதர்களாக மதிக்கப்படுவதற்கும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கும் உரித்துடையவர்கள். ஆனாலும் குயர்மக்கள் அவ்வாறு வாழ்வதற்குப் பல போராட்டங்களைக் குயர் சமூகமும், செயற்பாட்டாளர்களும் முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது. இவர்கள் நாள்தோறும் அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவதூறுகளையும், துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

குயர் வெறுப்பு நேரடியாக மாத்திரமல்லாமல், ஊடகங்களின் வாயிலாகவும் வெறுப்புப் பேச்சாக வெளிப்படுத்தப்படுகின்றது. அண்மைக்காலங்களில் சமூக ஊடகங்களில் பாரியளவில் வெறுப்புப் பேச்சை அவதானிக்க முடிகிறது. வெகுசன ஊடகங்களில் ஓரளவு அறிக்கையிடல்களில் உணர்திறன்மிக்க அறிக்கையிடலை அவதானிக்கமுடியும். இயற்கையானது மற்றும் இயல்பானது எனச் சமூகம் நம்புகின்ற விடயங்களுக்கு, அப்பாற்பட்டு நடக்கும் விடயங்களை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் அவற்றை வெறுப்புடன் நோக்குவதை அவதானிக்க முடிகிறது.

தமிழ்ச்சூழலில் அண்மையில் குயர் மக்களுடைய சுயமரியாதை நடைபயணம் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. அது தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களிலும் இடம்பெற்றிருந்தன. பெரும்பாலான செய்திகளும் பின்னூட்டங்களும் குயர்வெறுப்பை வெளிப்படுத்துபவையாகவே அமைந்திருந்தன.

“மேலைத்தேய கலாசார நடடிவடிக்கைகள் எமது பிரதேசங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும்” என்ற வகையில் இணையவழி ஊடகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தச் சமூகத்தில் குயர் மக்களுடைய நீண்ட வரலாறுகளை இலக்கியங்களும் ஏனைய ஆதாரங்களும் தாங்கியிருக்கின்றபோது, இந்தச் சமூகத்தில் உள்ள பெரும்பாலானோர் இது மேலைத்தேயக் கருத்தியல் அல்லது பண்பாடு என மிக இலகுவாகக் கடந்துவிடுகின்றனர்.

குயர் மக்களுடைய பெற்றோர்களை விமர்சிக்கும் வகையிலான விமர்சனங்கள், மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் மற்றும் சித்திரிப்புகள் என்பவற்றை ஊடகங்களின் பின்னூட்டத்திலும் சமூக ஊடகங்களிலும் அவதானிக்க முடிந்தது. குயர் மக்களுடைய போராட்ட வடிவங்களும் கேலிக்குட்படுத்தப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. பால்நிலை சார்ந்த பிரச்சினைகளும் மிக முக்கியமானவையாகவே இருக்கின்றன. அதேவேளை குயர் மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் ஏராளம். அவை ஜனநாயக நாடொன்றில் பேசப்படவேண்டியவை.

திருநர்கள் மீதான சமூகத்தின் வெறுப்பு (Transphobia)

Transphobia என்பது திருநர்கள் மீதான சமூகத்தின் வெறுப்பு ஆகும். திருநர் என்பதனுள் திருநம்பிகள் மற்றும் திருநங்கைகள் என்போர் உள்ளடங்குவர். திருநர்கள் என்போர் பிறப்பால் ஆணாக அடையாளப்படுத்தப்பட்டுப், பின்னர் தம்மைப் பெண்ணாக உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களையும், பெண்ணாகப் பிறந்து பின்னர் தம்மை ஆணாக உணர்ந்து ஆணாக வாழ முற்படுவோர்களையும் குறிக்கும். இவர்கள் பல பெயர்களால் கேலியாக அழைக்கப்படுவதுடன் பெரும்பான்மைச் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.

Trans என்பது திருநர்களையும் Phobia என்பது ஒருவருக்குப் பயத்தை அல்லது வெறுப்பை ஏற்படுத்துவது எனவும் பொருள்கொள்ளப்படுகின்றது. இந்த வார்த்தை ‘போபோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. அதாவது Phobia என்பது வழக்கமாக ஏற்படும் பயத்தை அல்லது வெறுப்பைவிட வித்தியாசமானது. பலநேரங்களில் அவை மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும். இதன்படி Transphobia என்பது திருநர்கள் மீதான சமூகத்தின் வெறுப்பை வெளிப்படுத்துகின்றது.

திருநர்கள் மீதான சமூகத்தின் வெறுப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது என்று பார்த்தோமானால், ஓர் ஆண் பெண்ணாக உணரும் போது, அல்லது பெண் ஆணாக உணரும் போது சமூகம் அதனை ஏற்றுக்கொள்வது என்பது சிக்கலான நிலைப்பாடாகும். முதலில் அவர்களுடைய குடும்பத்தினர் அதை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துத்தான் திருநர்களின் எதிர்கால வாழ்க்கைநிலை எப்படி இருக்கப்போகின்றது என்பது தீர்மானிக்கப்படுகிறது. குடும்பத்தினர் புறக்கணிக்கும் போதும், திருநர்கள் வீட்டைவிட்டுவெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும்போதும், திருநர்கள் சமூகத்தில் பல்வேறு சவால்களைச் சந்திக்கின்றனர். குறிப்பாகச் சமூகத்தில் உள்ள திருநர்களை நடாத்தும் விதம், திருநர்களை குடும்பத்தில் இருந்து ஓரங்கட்டுவதுடன், அவர்களைத் தவறான முடிவுக்கும் இட்டுச்செல்கின்றது. திருநங்கையாக அல்லது திருநம்பியாக ஒருவர்  அடையாளப்படுத்தப்பட்டால், குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, சமூகம் என்ன சொல்லுமோ? என்ற பயத்தினால் ஒதுக்கிவைத்தல், வீட்டிலிருந்து துரத்துதல் போன்ற செயற்பாடுகளைச் செய்கின்றனர். இதனால் அவர்கள் முற்றாக மனமுடைந்து போகின்றனர். சமூகத்தில் திருநர்கள் தெருவோரத்தில்தான் நிறுத்தப்படுகின்றார்கள். திருநங்கைகளைப் பாலியல் தொழிலாளிகளாகப் பார்ப்பதாலும், அவர்கள் பாலியல் அத்துமீறலை எதிர்கொள்கிறார்கள்.

திருநர்கள் ஏன் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படவேண்டும்? திருநர்களை இச்சமூகம் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறது. பண்பாட்டுரீதியாகத் திருநர்கள் பொதுநீரோட்டத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்படுகின்றனர். வேலைக்குச் செல்லும் இடங்களிலும் பொதுச் சேவைகளைப் பெறச் செல்லும் இடங்களிலும், இவர்களை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கின்றனர். வாடகைக்கு வீடு தேடுவதில், வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதில், கல்வியைப் பெறுவதில், பொதுச்சேவைகளைப் பெறுவதில் என அனைத்து விடயங்களிலும் திருநர்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதற்குத் திருநர் வெறுப்பு அடிப்படையாகக் கணப்படுகின்றது.

திருநர்கள் பாலியல் கொடுமைகளைச் சந்திப்பதற்கும் குயர் வெறுப்பே அடிப்படையாக அமைகின்றது. பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்களில் பாகுபாடும், துன்புறுத்தலும் இருப்பதால் பாதியிலேயே படிப்பை நிறுத்தவேண்டிய சூழலுக்குள்ளும் திருநர்கள் தள்ளப்படுகின்றனர். பாடசாலையில் படிக்கும்போது, அந்த வளரிளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களால் தன்னைத்தானே வெறுத்து வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. தன்னுடலைத் தானே வெறுத்து வாழ்வதுதான் உலகத்திலேயே கொடுமையான விடயம் ஆகும். பல்வேறு சவால்களுக்குள் வாழும் திருநர்களுக்கு, சமூகத்தின் வெறுப்பு மேலும் சவாலாக அமைகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை குயர்மக்கள் தொடர்பாகச் சேவையாற்றும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இருக்கின்றபோதிலும் இவர்கள் தொடர்பான விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. சமூக அளவில் பால்நிலை அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பாரபட்சத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும். இதன்மூலம் திருநர்கள் என்போர் சமூகத்தில் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடமாடமுடியும். அத்துடன் பல்வேறு துறைகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தவும் முடியும்.

தனிமனிதர்களின் தன்பாலின மாற்றங்களை உணரும்போது, சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஏனைய அமைப்புகள் மூலமாகவும் மக்களுக்குத் தம்மைப் பற்றிய புரிதல்களைக் கொண்டுவருவதன் மூலம், திருநர்கள் மீதுள்ள சமூகத்தின் வெறுப்புக் குறைக்கப்பட்டு அவர்களும் சகமனிதர்களாக வாழ்வதற்கான நிலைமை ஏற்படலாம். ஆகவே இலங்கையிலும் சரி ஏனைய நாடுகளிலும் சரி திருநர்கள் மீதான சமூக வெறுப்பை இல்லாதொழித்து அவர்களின் உணர்வுகளையும் மதித்து எல்லோரும் ஒன்றிணைந்து சிறந்ததொரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.

தன்பாலீர்ப்பு வெறுப்பு (Homophobia)

தன்பாலீர்ப்பு என்பது சமூகத்தால் கலாசாரச் சீர்கேடாகப் பார்க்கப்படுகிறது. தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான நடத்தைகள், நகைச்சுவைகள், உணர்வுகளை மதிக்காது காயப்படுத்துதல், பாரபட்சம் காட்டுதல் மற்றும் பெரும்பான்மையினரின் விருப்பமின்மை என்பவற்றைத் தன்பாலீர்ப்பு வெறுப்பு எனலாம். தன்பாலீர்ப்பு இயற்கையானதல்ல என்ற வாதம் இவர்கள் கையில் எடுக்கும் ஆயுதமாக இருக்கிறது. இவர்கள் தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வழிகளிலும் தமது வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். சமூகத்தில் இடம்பெறும் தன்பாலீர்ப்பாளர்களுக்கு எதிரான பல்வேறுபட்ட வன்முறைகளுக்கும் பாரபட்சங்களுக்கும் இது அடிப்படையாக இருக்கிறது.

இருபாலீர்ப்பு வெறுப்பு (Biphobia)

இருபாலீர்ப்பு வெறுப்பு எதிர்ப்பாலீர்பாளர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் குயர்மக்களிடம் இருந்தும் ஏற்படமுடியும். எனவே இருபாலீர்ப்பாளர்கள் அதிகம் எதிர்ப்பையும் வெறுப்பையும் எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.

குயர் வெறுப்பு (Queerphobia)

குயர் வெறுப்பும் குயர் சமூகத்தின் மீதான ஓரங்கட்டல்களும், குயர் மக்களை மனஉளைச்சல் மற்றும் உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. அதுமட்டுமல்லாமல் இவர்கள் குடும்பத்தினராலும் உறவுகளாலும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற காரணிகள் மற்றும் பாதிப்புகள் குயர் சமூகத்தைத் தடம்மாற வைக்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது. குயர் சமூகத்தினரில் சிலரின் தவறான செயற்பாடுகள், குயர் மக்களைச் சமூகமயப்படுத்தும் செயற்பாடுகளில், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கின்றன.

மனப்பாங்கு சார்ந்த வெறுப்பு, மொழி சார்ந்த வெறுப்பு, செயல் சார்ந்த வெறுப்பு, கட்டமைப்பு சார்ந்த வெறுப்பு, சமூகம் சார்ந்த வெறுப்பு, பண்பாடு சார்ந்த வெறுப்பு, மறைமுக வெறுப்பு எனப் பல்வேறு விடயங்கள் சார்ந்து குயர் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

குயர் மக்கள் பற்றிய அறிவும் புரிதலும் இன்மையை, குயர்வெறுப்பிற்கான முக்கிய காரணமாகச் சொல்ல முடியும். இருந்தாலும்கூட, பாரம்பரியம் மற்றும் மத நம்பிக்கைகள், சமூக அழுத்தம் என்பன மக்களுடைய நடத்தையிலும் குயர்வெறுப்பிலும் முக்கிய பங்காற்றுகின்றன. ஊடகங்களின் குயர்மக்கள் பற்றிய தவறான பிரதிநிதித்துவப்படுத்தலும், மீள்வருவார்ப்புகளை உருவாக்குதலும் குயர் வெறுப்பிற்கான காரணிகளாகும். அதுமட்டுமல்லாமல் பால்நிலை மற்றும் பாலியல் கல்வி இன்மை, சரியான சட்டப் பாதுகாப்பு இன்மை போன்ற இன்னும் பல விடயங்களும் குயர்வெறுப்பைத் தூண்டுவனவாக இருக்கின்றன.



About the Author

அனுதர்சி கபிலன்

அனுதர்சி கபிலன் அவர்கள் தனது இளமாணிப் பட்டத்தைத் திருகோணமலை வளாகம், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் இதழியலில் “டிப்ளோமா“ பட்டத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைகள் துறையில் விரிவுரையாளராகப் பணிப்புரியும் அனுதர்சி முதுமாணிப் பட்டப்படிப்பைக் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாளி வளாகத்தில் வெகுஜன ஊடகவியலில் தொடர்கின்றார்.

'இலங்கை அரசியல் அரசியல்வாதிகள்' என்ற தலைப்பில் 2015 இல் அவரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நேர்காணல்கள் 2017 இல் நூல்வடிவில் வெளியிடப்பட்டது.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்