1949 - 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
20 நிமிட வாசிப்பு

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 3

August 5, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

உதவி : ஜீவராசா டிலக்ஷனா

சிங்கள மொழியின் தோற்றம் – 1956

தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பதில் இரண்டாவது திட்டமாக மொழி விவகாரம் இலக்காக்கப்பட்டது. ஐ.நா அறிக்கை ஓர் இனத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்தக் கூடியவகையில் நிலத்தைப்பறித்தல், மொழியைப் புறக்கணித்தல், பொருளாதாரத்தைச் சிதைத்தல், கலாசாரத்தை அழித்தல் இன அழிப்பாகக் கொள்ளப்படும் என்று கூறுகின்றது. இலங்கையில் 1956 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்ட சிங்களம் அரசகரும மொழிச்சட்டம் ஒரே நேரத்தில் இன அழிப்பாகவும், அரச அதிகாரக் கட்டமைப்பைச் சிங்கள மயமாக்குவதாகவும் இருந்தது. இதனை தந்தை செல்வா 1949 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தானிய பிரஜாவுரிமைச் சட்டத்தின் போதே எதிர்வு கூறினார். “இன்று இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு நடப்பது நாளை மொழிப்பிரச்சினை வரும்போது ஈழத்தமிழர்களுக்கும் நடக்கும்” எனக் கூறினார். 

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேயே மொழிப்பிரச்சினை கிளப்பப்பட்டது. டொனமூர் யாப்பு நடைமுறையிலிருந்த காலப்பகுதியில் அரசகரும மொழியாக ஆங்கிலத்தின் இடத்திற்கு சுதேச மொழிகள் இருக்க வேண்டுமென்ற கோரிக்கை மேலெழுந்தது. 1944 ஆம் ஆண்டு அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிங்கள மொழி அரசகரும மொழியாக இருக்க வேண்டும் என்ற பிரேரணையைக் கொண்டு வந்தார். மட்டக்களப்புத் தொகுதியின் அரசாங்க சபை உறுப்பினராக இருந்த நல்லையா ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் பிரேரணைக்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். அத்திருத்தம் அரசாங்க சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் டொனமூர் காலம் முழுவதும் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்ற தீர்மானம் நடைமுறைக்கு வரவில்லை. 

1951 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த டி.எஸ். சேனநாயக்கா மரணமடைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் உபதலைவராக இருந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா கட்சியிலிருந்து வெளியேறினார். அவர் 1951 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார். அதன்போது கட்சியின் கொள்கைத்திட்டத்தில் ‘சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்கவேண்டும்’ என்றே கூறப்பட்டது. 

1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தமிழ்மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்துக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்தது. 1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலைத் தொடர்ந்து பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்கா பதவிவிலக, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமராகப் பதவியேற்றார். 1954 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது வரவேற்பு நிகழ்வில் நிதி அமைச்சரும் சபை முதல்வருமான ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பேசினார். அப்பேச்சில் தமிழ் மொழிபெயர்ப்புக்கூட இடம்பெறவில்லை. இதனை எதிர்க்கும் முகமாக பிரதமர் கொத்தலாவலை யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்ட போது தமிழரசுக்கட்சி கறுப்புக்கொடிப் போராட்டத்தை நடாத்தியது. யாழ் நகர மண்டப மேடையில் பிரதமர் ஏறியதும் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணியைச் சேர்ந்தவர்கள் மேடைக்கு அருகே சென்று கறுப்புக்கொடியைக் காட்டி “பிரதமரே திரும்பிப் போ” எனக்கோசம் எழுப்பினர். பொலிசார் குண்டாந்தடி நடாத்தி ஆர்ப்பாட்டத்தைக் கலைத்தனர். 

பிரதமர் கொத்தலாவலை கொக்குவிலில் நடந்த வரவேற்பு நிகழ்வில் கொக்குவில் இந்துக்கல்லூரியின் அதிபர் ஹண்டி பேரின்பநாயகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சிங்களம், தமிழ் இரண்டையும் அரசகரும மொழிகளாக்கும் வகையில் அரசியல் யாப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். பிரதமரின் இந்தக்கருத்துக்குத் தீவிர சிங்கள இனவாத அமைப்புகளான ‘திரி சிங்கள பெரமுனை’, தகநாயக்காவின் ‘பாஸா பெரமுனை’ என்பன கடும் எதிர்பைத் தெரிவித்தன. இதனால் பிரதமர் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே தான் தெரிவித்த கருத்தை மறுத்து மறுப்பறிக்கை வெளியிட்டார். 1954 ஆம் ஆண்டிலிருந்து ‘சிங்களம் மட்டும் அரச கரும மொழி’ என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. 

லங்கா சமசமாஜக்கட்சி ஆரம்பகாலம் தொடக்கமே ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதில் உறுதியாக நின்றது. 1954 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் கொழும்பு நகர மண்டபத்தில் ‘சிங்களமும் தமிழும்’ அரசகரும மொழி என்பதை வலியுறுத்தும் வகையில் ஒரு கூட்டத்தை நடாத்தியது. இக்கட்சியிலிருந்து விலகி புரட்சிகர லங்கா சமசமாஜக் கட்சியை உருவாக்கிய பிலிப் குணவர்த்தனா தலைமையிலான குழுவினர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

1955 ஆம் ஆண்டு சிங்களமும் தமிழும் அரசகரும மொழிகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் டாக்டர்.என்.எம். பெரேரா பாராளுமன்றத்தின் ஒரு பிரேரணையைக் கொண்டு வந்தாார். பண்டாரநாயக்கா அதனை எதிர்த்து “சிங்களமும் மட்டும் அரசகரும மொழியாக இருக்க வேண்டும்” என வாதிட்டார். இரண்டையும் அரசகரும மொழியாக்கினால் தவிர்க்க முடியாத வகையில் சிங்கள மொழி அருகிச் சுருங்கிவிடும் என்ற பயம் சிங்கள மக்கள் மத்தியில் இருப்பதாகக் குறிப்பிட்டார். 

அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் வகையில் சிங்கள மொழி ஆணைக்குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை டி.எஸ். சேனநாயக்கா காலத்திலேயே முன்வைத்தது. டி.எஸ். சேனநாயக்கா அதனை ஏற்கவில்லை. இதனால் உத்தியோகப் பற்றற்ற ஆணைக்குழுவை அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் 1954 இல் உருவாக்கியது. இவ் ஆணைக்குழு இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்டறிந்தது. முடிவில் 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி, இலங்கையின் 8 ஆவது சுதந்திர தினத்தின்போது தனது 124 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டது. அறிக்கையின் தலைப்பு ‘பௌத்தத்திற்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்பதே. 

கிறிஸ்தவர்களின் மதமாற்றம், சிங்கள மொழிக்குரிய இடம் அளிக்கப்படாமை, தமிழர்களின் செல்வாக்குப் போன்றவற்றை அறிக்கை குறிப்பிட்டது. ஆணைக்குழுவின் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பிரதமர் நீதியரசர் ‘ஆதர் விஜயவர்த்தனா’, அறிக்கையின் இறுதியில் ‘சிங்களம் மட்டும்’ அரசகரும மொழியாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

1955 ஆம் ஆண்டு டிசம்பரில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் வருடாந்த மாநாடு இடம்பெற்றது. அதில் ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “நான் பதவிக்கு வந்ததும் சிங்களம் மட்டும் அரசகரும மொழி சட்டத்தை நிறைவேற்றுவேன்” என பண்டாரநாயக்கா அறிவித்தார். இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி நிறைவேற்றிய மொழிக்கொள்கை இரண்டு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக இருக்கும்; தமிழ்மொழிக்கு நியாயமான அளவு உபயோக அந்தஸ்து வழங்கப்படும் என்பதே அவை இரண்டுமாகும். 

தமிழ்மொழியின் உபயோகம் தொடர்பாக பண்டாரநாயக்கா பின்வருமாறு விளக்கம் கொடுத்தார். “பாராளுமன்றத்தில் சிங்களமும் தமிழும் சம அந்தஸ்தைக் கொண்டவையாக இருக்கும். விவாதம், சட்டம் இயற்றுதல் என்பன இரு மொழிகளிலும் இடம்பெறும். ஆனால் அரச நிர்வாகம் சிங்கள மொழியில் மட்டுமே இடம்பெறும். நீதிமன்றங்கள் சிங்களத்திலும், தமிழ்மொழியிலும் கடமையாற்றலாம். கல்வி மொழியாக சிங்களவர்களுக்குச் சிங்கள மொழியும், தமிழர்களுக்குத் தமிழ்மொழியும் இருக்கும்.” இத்தீர்மானத்தை எதிர்த்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து தமிழர்கள் வெளியேறினார். 

1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறீலங்கா சுதந்திரக்கட்சியைப் போன்று ‘சிங்களம் மட்டும் அரசகரும மொழி’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகித்த தமிழர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்து வெளியேறினர். அவர்களில் ஒருவர்தான் தமிழரசுக் கட்சியின் தலைவராகவும் பட்டிருப்புத் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இராஜமாணிக்கம். இவர் தற்போது மட்டக்களப்புப் பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியனின் தாத்தா ஆவார். 

ஐக்கிய தேசியக் கட்சியின் இத்தீர்மானத்தை எதிர்த்து 1956 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தமிழ்ப்பிரதேசம் எங்கும் ஹர்த்தால் போராட்டம் தமிழரசுக்கட்சி தலைமையில் நடாத்தப்பட்டது. தமிழ்ப்பிரதேசத்தில் இடம்பெற்ற முதலாவது ஹர்த்தால் போராட்டம் இதுதான். போராட்டம் பெரு வெற்றியீட்டியது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாட்டுத் தீர்மானத்தைத் தொடர்ந்து சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரான பண்டாரநாயக்கா தான் ஆட்சிக்கு வந்ததால் 24 மணித்தியாலத்திற்குள் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என அறைகூவல் விடுத்தார். பிக்கு எக்ஸத் பெரமுனை உட்பட பல பௌத்த நிறுவனங்கள் பண்டாரநாயக்காவிற்கு ஆதரவளிக்க முற்பட்டன. 

1956 ஆம் ஆண்டு தேர்தலின் போது சிறீலங்கா சுதந்திரக்கட்சி, பிலிப் குணவர்த்தனா தலைமையிலான புரட்சிவாத சமசமாஜக்கட்சி, டபிள்யூ. தகநாயக்கா தலைமையிலான பாஸா பெரமுனை, சி.பி.டி. சில்வா தலைமையிலான குழு என்பன பண்டாரநாயக்கா தலைமையில் ‘மக்கள் ஐக்கிய முன்னணி’ என்ற கூட்டமைப்பை உருவாக்கிப் போட்டியிட்டன. பண்டாரநாயக்கா ‘பஞ்ச பல வேகய’ என அழைக்கப்படுகின்ற ஐம்பெரும் சக்திகளை அணிதிரட்டினார். சிங்கள ஆசிரியர்கள், சிங்களத் தொழிலாளர்கள், சிங்கள விவசாயிகள், சிங்கள ஆயுர்வேத வைத்தியர்கள், பௌத்த மதகுருமார்கள் என்போரே அவ் ஐம்பெரும் சக்திகளாவார். இடதுசாரிக் கட்சிகளுடன் போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. 

தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி பெரு வெற்றியீட்டியது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 8 ஆசனங்கள் மட்டுமே கிடைத்தன. எதிர்க்கட்சிப் பதவிகூட அதற்கு கிடைக்கவில்லை. சமசமாஜக் கட்சியின் தலைவரான என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்றார். மக்கள் ஐக்கிய முன்னணி 60 இடங்களில் போட்டியிட்டு, 51 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. பண்டாரநாயக்கா பிரதமராகப் பதவியேற்றார். தமிழரசுக் கட்சிக்கு முதன்முதலாக 10 ஆசனங்கள் கிடைத்தது. சிங்களப் பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்குச் சிதைந்ததைப்போல தமிழ்ப்பிரதேசத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குச் சிதைந்தது. இதன்பின்னர் தமிழ் காங்கிரஸ் கட்சியினால் மேலெழவே முடியவில்லை. 

பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தில், மகாதேசாதிபதி ஒலிவர் குணதிலக, புதிய அரசாங்கம் சிங்களம் மட்டும் சட்டத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கும் எனக் குறிப்பிட்டார். இதற்கேற்ப பிரதமர் பண்டாரநாயக்கா 1956 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாதத்தில் சட்ட வரைஞரை அழைத்து சிங்களம் மட்டும் அரசகரும மொழிச்சட்டத்தை தயாரிக்குமாறு கட்டளையிட்டார். அச்சட்டத்தில் தமிழ்மொழி உபயோகம் பற்றிய ஏற்பாடுகளையும் சேர்க்குமாறு குறிப்பிட்டார். 

தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்குவதை மக்கள் ஐக்கிய முன்னணியில் அங்கம் வகித்த பாஸா பெரமுனை கட்சியினர் விரும்பவில்லை. இக்கட்சியின் தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் எவ்.ஆர். ஜெயசூரியா தமிழ்மொழியின் உபயோக அந்தஸ்தை எதிர்த்துப் பாராளுமன்றப் படிகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தார். இறுதியில் தமிழ்மொழிக்கு உபயோக அந்தஸ்து வழங்கும் யோசனை கைவிடப்பட்டது. 1956 ஆம் ஆண்டு யூன் மாதம் 5 ஆம் திகதி சிங்களம் மட்டும் மசோதா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

1956 ஆனி 5 – தனிச்சிங்களச் சட்டமும் சத்தியாக்கிரகப் போராட்டமும்

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பண்டாரநாயக்கா அரசாங்கம் சிங்கள மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிப்படி, தனிச்சிங்களச் சட்டத்தை 1956 ஆனி 5 இல் பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்தது. இதன்போது தமிழரசுக் கட்சி தமிழ்பேசும் மக்களின் எதிர்ப்பைக்காட்ட பாராளுமன்ற வாசலில் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இரவோடு இரவாக பாராளுமன்றத்தைச் சுற்றி முள்வேலிகள் அமைக்கப்பட்டன. ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் சுற்றி நிறுத்தப்பட்டனர். பண்டாரநாயக்காவினால், சிங்கள இனவாதிகள் ‘எல்லாள – துட்டகைமுனு யுத்தம்’ என்ற கோசத்தோடு காலி முகத்திடலுக்குக் கொண்டுவரப்பட்டனர். அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகத்தின் நோக்கத்தை விளக்கி, சிங்களத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. 

அப்பிரசுரங்களை விநியோகிக்கச் சென்ற தொண்டர்கள் காடையர்களால் தாக்கப்பட்டனர். தாக்குதலையும் பொருட்படுத்தாது தமிழரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் காலி முகத்திடலின் தென்பகுதியிலிருந்து பாராளுமன்றத்தை நோக்கி நடந்தனர்.

சிறிது தூரம் செல்வதற்கிடையில் சிங்கக்கொடி தாங்கிய காடையர் கூட்டம் அவர்கள் மீது பாய்ந்து தடிகளாலும், கைகளாலும், கால்களாலும் தாக்குதலை நடாத்தினர். கு. வன்னியசிங்கத்தின் சட்டை கிழிக்கப்பட்டுத் தாக்கப்பட, அவர் மூக்கிலிருந்து இரத்தம் வடிந்தது. ஈ.எம்.வி. நாகநாதனும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தாக்கிய தடி முறிவடைந்ததனால் இரும்பு மனிதன் எனப் பெயர்பெற்றார். செல்வநாயகத்துக்கு முன்னால் அவரது இரு மகன்களும் தாக்கப்பட்டனர். தொண்டர் நா. செல்லையாவின் காது கடித்துக் கிழிக்கப்பட்டது. திடீரென்று பெருமழை பெய்ய காடையர் கூட்டம் கலைந்து ஓடியது.

இக்கட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பிலிருந்து வந்த தொண்டர்களும் கலந்துகொண்டனர். சத்தியாக்கிரகிகள் தொடர்ந்து அவர்களையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது ஒரு கட்டத்தில் பொலிஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த, சத்தியாக்கிரகிகள் அனைவரும் புற்தரையில் அமர்ந்து போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் காடையர் கூட்டம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து சத்தியாக்கிரகிகளைச் சுற்றி வளைத்து, பொலிஸார் பார்த்துக்கொண்டிருக்கக் கூடியதாகவே அவர்களை நோக்கி கற்களை வீசியது. இக்கல்வீச்சினால் வி.என். நவரத்தினம் காயமுற்று ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அமிர்தலிங்கமும் கல்வீச்சுக்கு உள்ளாகினார். அவரின் நெற்றி பிளக்கப்பட்டது. இதன்போது தலைவர்களைவிட சத்தியாக்கிரகிகளும் பலர் காயமுற்றனர்.

பகல் 1 மணிக்கு தலைவர்கள் ஆலோசனை செய்து சத்தியாக்கிரகத்தை நிறுத்தி சத்தியாக்கிரகிகளை திருப்பி அனுப்பினார்கள். இத்தினத்தில் காலி முகத்திடலில் மாத்திரமல்ல, கொழும்பில் பல இடங்களிலும்கூட தமிழ் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.

அம்பாறைக் கலவரம்

காலி முகத்திடல் சத்தியாக்கிரகத் தாக்குதலைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கொழும்புக்கு வெளியிலும் பரவியது. அம்பாறை சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் தமிழர்கள் திட்டமிட்டுத் தாக்கப்பட்டனர். கல்லோயா அபிவிருத்திச் சபையின் கீழ் பணியாற்றிய தமிழ் ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் மோசமாகத் தாக்கப்பட்டனர். இதனால் கோபமுற்ற தழிழ் மக்கள் துறைநீலாவணையில், படையினரின் ஜீப் வண்டியைத் தாக்கி எரியூட்டினர். இவ்வனர்த்தங்கள் நடைபெற்றதன் பின்னரே அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து, ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்வந்தது.

திருகோணமலை யாத்திரை

1956 யூன் 15 இல் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி இதனை எதிர்த்துத் திருகோணமலை யாத்திரையை ஒழுங்கு செய்தது. ஊர்காவற்துறை, பருத்தித்துறை, மன்னார், திருக்கோவில் என்பவற்றிலிருந்து தலைவர்களும் தொண்டர்களும் கால்நடையாகத் திருகோணமலையை நோக்கிப் பயணம் செய்தனர். பண்டாரநாயக்கா அரசாங்கம் முதலில் இதனைத் தடைசெய்யப் போவதாக அறிவித்தாலும் பின்னர் பணிந்து பாதுகாப்புக் கொடுத்தது. “திருமலைக்குச் செல்லுவோம், சிறுமை அடிமை வெல்லுவோம்” என்ற பண்டிதர் இளமுருகனாரின் பாடலை இசைத்தபடி யாத்திரை சென்றனர். பத்து நாட்கள் நடந்து ஆவணி 16 ஆம் திகதி திருகோணமலையை அடைந்தனர். 

தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாடு

1956 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16, 17, 18 ஆம் திகதிகளில் திருகோணமலை மாநாட்டில் வன்னியசிங்கமே மீண்டும் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது நான்கு அம்சக் கோரிக்கையைத் தீர்மானமாக எடுத்தனர்.

  1. தமிழ்பேசும் மக்கள் வாழும் இடங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதோ மொழிவாரிச் சமஸ்டி அரசுகளை உருவாக்குதல். 
  2. தமிழ்மொழியையும் ஆட்சி மொழியாக்கி, சிங்களமொழிக்குச் சமமான நிலையில் அதனை வைத்தல்.
  3. தற்போதைய குடியுரிமைச் சட்டங்கள் நீக்கப்பட்டு, இலங்கையில் வாழும் அனைவருக்கும் குறுகிய வதிவிடக் காலத்தைத் தகுதியாகக்கொண்டு குடியுரிமை வழங்குதல்.
  4. பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை உடன் நிறுத்துதல்.

முஸ்லீம் உறுப்பினர்களின் வேண்டுகோளின் பின்னர் ஒரு சுயாட்சித் தமிழரசு என்ற கட்சியின் நோக்கத்தை மாற்றி, சுயாட்சித் தமிழரசும் சுயாட்சி முஸ்லீம் அரசும் எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது. இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, அரசிற்கு 1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரையான கால எல்லை அவகாசமாகக் கொடுக்கப்பட்டது.

கோடீஸ்வரன் வழக்கு

1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிராக அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தைச் சேர்ந்த கேகாலை கச்சேரியில் பணிபுரிந்த செ. கோடீஸ்வரன் கேகாலை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு கொடுத்தது. அக்கட்சியைச் சேர்ந்த மு. திருச்செல்வம் வழக்காளி சார்பில் ஆஜரானார். கேகாலை மாவட்ட நீதிபதி ஒ.எஸ்.டி கிரெஸ்டர், “தனிச்சிங்களச் சட்டம் அரசியல் யாப்பின் 29 ஆவது பிரிவிற்கு முரணாகவுள்ளதால் செல்லாது” எனத் தீர்ப்பளித்தார். சிங்கள மொழித் தேர்ச்சியின்மையைக் காரணம்காட்டி அரச ஊழியரை தண்டிக்க முடியாதென்றும் கூறினார். இத்தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றம் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடுக்கும் உரிமை இல்லை எனக்கூறி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.

அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பிரித்தானியாவின் உயர் நீதிமன்றமான கோமறைக் கழகத்திற்கு மேன்முறையீடு செய்தது. தமிழரசுக் கட்சி இக்காலத்தில் (1965-1970) ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தது. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகப் பதவி ஏற்றிருந்தார். “அரசாங்கம் மாவட்ட சபை தரப்போகின்றது. வழக்கை வாபஸ் பெறுங்கள்” எனத் தமிழரசுக் கட்சியும், திருச்செல்வமும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தை நிர்ப்பந்தித்தனர். மு. திருச்செல்வம் ஒருபடி மேலே சென்று, வழக்கைத் தொடர்ந்து கொண்டு சென்றால் எமது சட்ட ஆலோசனைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என எச்சரித்தார். எனினும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் இவ்வச்சுறுத்தலுக்குப் பணியாது ச. இரங்கநாதன், சேர்டிங்கிள் புட் Q.C இன் தலைமையில் மூத்த சட்டத்தரணிகள் க. சர்வானந்தா, எம்.ஏ.டி. வில்லியம், மாணிக்க வாசகர் அண்டவூட், குரோசட் தம்பையா ஆகியோரின் வழிகாட்டலுடன், லூசியன் சிறில் பெரேரா வழக்கைக் கொண்டு நடாத்தினார்.

கோமறைக்கழகத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது ஆங்கிலச் சட்டமேதை சேர்டிங்கிள் புட் Q.C எதுவிதக் கட்டணங்களும் பெறாது தமிழர்களுக்காக வாதாடினார். கோமறைக்கழகம், “அரச ஊழியர் அரசாங்கத்திற்கு எதிராக வழக்காட முடியாது” என்ற இலங்கை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது. தனிச்சிங்களச் சட்டத்தின் செல்லுபடியாகாத தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும்படி இலங்கை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு புதிய யாப்பு வந்ததும் கோமறைக் கழகத்திற்கு அதிகாரம் இல்லாததினால் இவ்வழக்கு கைவிடப்பட்டது.

சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம்

அரசு, மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துகளுக்குப் பதிலாக சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தைப் பிரயோகிக்கும் சட்டத்தை 1957 ஜனவரியில் கொண்டு வந்தது. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதனை எதிர்த்து சட்ட மறுப்புப் போராட்டத்தை 1957 ஜனவரி 19 இல் ஆரம்பித்தது. 

யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார் என்பவற்றில் போராட்டம் நடைபெற்றது. முதலில் ஒருநாள் சட்டமறுப்பாக தமிழ் எழுத்துகளைப் பொறித்து வாகனங்கள் செல்லவிடப்பட்டன. பின்னர் இரண்டாம் கட்டமாக நிரந்தரமாகவே தமிழ் எழுத்தினைப் பொறித்தனர். 

3 ஆவது கட்டமாக எல்லா மோட்டார் வண்டிச் சொந்தக்காரர்களையும் தமிழ் எழுத்தை பொறிக்கும்படி வேண்டிக் கொள்ளப்பட்டது. தமிழ் எழுத்துப் பொறித்த தகடுகளை தொண்டர்கள் தாங்களே மாட்டிக்கொண்டனர். இப்போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

தியாகி நடராசன் கொலை (1957 பெப்ரவரி 4)

சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை துக்கதினமாகக் கொண்டாடும்படியும் கடைகளை அடைத்துக் கறுப்புக் கொடிகளைப் பறக்கவிடும்படியும் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி கோரிக்கை விட்டது. தமிழரசு வாலிப முன்னணி இதில் தீவிரமாகச் செயற்பட்டது. பெண் தொண்டர்கள் திருமதி. கோமதி வன்னியசிங்கம் தலைமையில் திறக்கப்பட்ட கடைகளின் முன்னால் சத்தியாக்கிரகம் செய்தனர். காரைநகரில் திருமதி. நாகம்மா வேலுப்பிள்ளை தலைமையில் பஸ் வண்டிகளின் முன் படுத்து சத்தியாக்கிரகம் செய்தனர். திருகோணமலையில் சிங்களவரின் ஆதிக்கத்திலிருந்த மரக்கறிக் கடைக்கருகில் உள்ள கம்பத்தில் கறுப்புக்கொடி கட்ட நடராசன் என்ற இளைஞன் ஏறியபோது, மறைந்து நின்ற சிங்களவர் ஒருவர் துப்பாக்கியால் சுட இளைஞன் வீழ்ந்து இறந்தார்.

அமைச்சர்கள் வருகையும், கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டமும், பகிஸ்கரிப்பும்

தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அரசாங்க அமைச்சர்கள் வடக்கு –  கிழக்கிற்குச் செல்லத் தயாராகினர். உதவி அமைச்சர் எம்.பி.டி. சொய்ஸா யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் வருடாந்த மாநாட்டுக்கு வர ஆயத்தமானார். தனிச்சிங்களக் கொள்கையை தமிழ் மக்களுக்கு விளக்கப்போவதாகவும் அறிக்கை விட்டார். அவர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வந்திறங்கிய போது அவருடைய மோட்டார் வண்டியை நகரவிடாது தொண்டர்கள் அவரது வண்டியின் முன் படுத்துக்கொண்டனர். பொலிஸார் தொண்டர்களை தாக்கியும் தூக்கியும் அப்புறப்படுத்தினர். மாநாடு நடைபெறவிருந்த நகர மண்டபமானது உதவி அமைச்சரின் வரவை எதிர்க்கும் மக்களால் நிரப்பப்பட்டு காணப்பட்டது. மாநாட்டில் அமைச்சர் பேசமாட்டார் என உறுதியளித்த பின்னரே மக்கள் விலகிக்கொண்டனர்.

அமைச்சர் நண்பகல் புகை வண்டியிலேயே கொழும்பு திரும்பினார். கிழக்கு மாகாணம் சென்ற கல்வி அமைச்சர் தகநாயக்கவுக்கும் பலத்த எதிர்ப்புக் கிடைத்தது. மருதமுனையில் அவரின் காருக்கு செருப்பு வீசப்பட்டது. மந்திரியின் கார் வந்தபோதும் கறுப்புக்கொடி காட்டப்பட்டது. நிதி அமைச்சர் ஸ்டான்லி டீ செய்ஸா உட்பட ஆறு அமைச்சர்கள் மன்னாருக்கு சென்றபோது அங்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957 யூலை 26)

முன்னர் தீர்மானித்தது போலவே 1957 ஓகஸ்ட் 20 அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி போராட்டத்துக்காக ஆயத்தமாகியது. தமிழ்பேசும் மக்களின் பலத்த எதிர்ப்பைக் கண்ட பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சியுடன சமரசத்துக்கு வர முயற்சி செய்தார். பல இரவுகள் இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் 1957 யூலை 26 ஆம் திகதி நள்ளிரவு பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

1957 ஓகஸ்ட் 20 ஆம் திகதி சத்தியாக்கிரகத்தைத் தடுக்கும் முகமாகவே ஒப்பந்தம் செய்ய பண்டாரநாயக்கா இணங்கினார். தமிழ்மொழியை இலங்கையின் சிறுபான்மையோரின் மொழியாக அங்கீகரிப்பது என்றும், சிங்களம் அரசகரும மொழி என்பதைப் பாதிக்காத வகையில் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ்மொழி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசுவோரல்லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படுமென்றும், பிரதேச சபைகளினை உருவாக்கி அதற்கு அதிகாரம் வழங்கப்படுமென்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

குறிப்பாக விவசாயம், கூட்டுறவு, குடியேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில், மீன்பிடி சமூகசேவை, மின்சாரம், நெடுஞ்சாலைகள் தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. மேலும் இரண்டு பிரதேச சபைகள் இணைந்து செயற்படுவதற்கும் இடமளிக்கப்படும் எனக் கூறப்பட்டது. குடியேற்றங்கள் தொடர்பான அதிகாரங்கள் பிரதேச சபையிடம் இருக்கும் எனவும் கூறப்பட்டது.

தமிழரசுக் கட்சி சிறப்பு மாநாடு – மட்டக்களப்பு (1957 யூலை 27, 28)

திருமலைத் தீர்மானத்தின் போராட்டம் தொடர்பான இறுதிப் பிரகடனத்தை விடுப்பதற்காக மட்டக்களப்பில் 1957 யூலை 27, 28 திகதிகளில் சிறப்பு மாநாடு கூட்டப்பட்டது. மாநாடு ஆரம்பிப்பதற்கு முதல்நாள் இரவு ஒப்பந்தம் கைச்சாத்தானதால் போராட்டப் பிரகடனத்துக்கான மாநாடு, ஒப்பந்தத்தை பரிசீலிக்கும் மாநாடாக மாறியது. 

ஒப்பந்தம் தொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்றபோதும் ஒப்பந்தத்தை ஏற்பதென ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்வரும் காரணங்களுக்காக ஒப்பந்தத்தை ஏற்பதென முடிவு எடுக்கப்பட்டது.

  1. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்ற சிங்களக் குடியேற்றம் ஒப்பந்தத்தினால் உடனடியாக நிறுத்தப்படும்.
  2. தேசிய சிறுபான்மையோரின் மொழியாக ‘தமிழ்’ உத்தியோக அங்கீகாரம் பெறும்.
  3. தமிழே வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாக மொழியாக இருக்கும்.
  4. நாட்டின் எப்பாகத்திலும் தமிழ் மக்கள் தம் கருமங்களை அரசாங்கத்தோடு தமிழில் ஆற்றவும், தம் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழியில் கல்வியூட்டி தமிழ்ப் பண்பாட்டில் வளர்க்கவும் உள்ள உரிமை பாதுகாக்கப்படும்.
  5. பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெருமளவு பிரதேச சுயாட்சி மக்களுக்கு வழங்கப்படும்.

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட பின்னரும், இணைப்பாட்சிக்கு உட்பட்ட மொழிவாரிச் சுயாட்சித் தமிழ் அரசு அல்லது அரசுகளை நிறுவுவது, நாடு முழுவதிலும் சிங்களம் மற்றும் தமிழுக்கு சமமான அந்தஸ்தை வழங்குவது, அனைவருக்கும் குடியுரிமையை உறுதி செய்வது போன்ற கோரிக்கைகளை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியது. இது இடைக்கால தீர்வேயொழிய இறுதித் தீர்வு அல்ல எனவும் கூறப்பட்டது. ஐக்கியதேசியக் கட்சி ஒப்பந்தத்தைக் காரசாரமாக எதிர்த்தது. ‘முதல் அடி’ என்ற தலையங்கத்தில் துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அதில் “பண்டாரநாயக்கா வடக்கு – கிழக்கைத் தமிழர்களுக்கு விற்றுவிட்டார்” எனப் பிரசாரம் செய்யப்பட்டது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை செல்லும் போது இம்புல் கொடையில் அரச சக்திகளினால் அவ் யாத்திரை முறியடிக்கப்பட்டது. எஸ்.டி. பண்டாரநாயக்காவே இதில் முன்னணி வகித்தார். ஒப்பந்தத்தை அமுலாக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலிருந்தது (எட்டு மாதங்களாக). 

மறுபக்கத்தில் சிங்கள ஸ்ரீ பதித்த இலக்கத் தகடுகள் உள்ள பஸ்களை அரசாங்கம் வடக்கு – கிழக்குக்கு அனுப்ப முயற்சி செய்த வேளை அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை மீளவும் ஆரம்பித்தது. வடக்கு – கிழக்கில் உள்ள பஸ் வண்டிகளில் உள்ள இலக்கத் தகடுகள் தொண்டர்களால் தமிழ் ‘ஸ்ரீ’யாக மாற்றப்பட்டது. முதல் இலக்கத் தகட்டை மாற்றும் போராட்டத்தை செல்வநாயகம் தானே ஆரம்பித்து வைத்தார். இதனை எதிர்க்கும் வகையில் சிங்களத் தீவிரவாதிகள் தென்னிலங்கையில் தமிழ்ப்பெயர்களை தார்பூசி அழித்தனர்.

1958 ஏப்ரல் 8 இல் பிக்கு எக்ஸத் பெரமுனவின் சார்பில், பண்டாரநாயக்காவின் வீட்டுக்கு முன் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு பௌத்தப் பிக்குகள் சத்தியாக்கிரகம் இருத்தனர். சுகாதார மந்திரி விமலா விஜயவர்தன இதற்கு நேரடி ஆதரவு வழங்கினார். பண்டாரநாயக்கா அவர்களின் முன்னாலேயே ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அன்றைய தினமே பாராளுமன்றத்திலும் அதனை அறிவித்தார். சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் மீண்டும் தமிழ்ப் பிரதேசத்தில் ஓடுமென்றும், அவற்றை மாற்ற முற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் மலைநாட்டில் சிங்களத் தீவிரவாதிகள் தமிழ் எழுத்துகளைத் தார்பூசி அழித்ததை தமிழ்த் தொழிலாளர்கள் எதிர்த்தனர். இப்போராட்டத்தின் போது பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பொகவந்தலாவையைச் சேர்ந்த பிரான்சிஸ், ஐயாவு என்ற இரு தொழிலாளர்கள் மரணமடைந்தனர். கொலையுண்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் 1958 ஏப்ரல் 05 சனிக்கிழமை வடக்கு – கிழக்கு எங்கும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. செனற் சபைக்கு தமிழரசுக் கட்சியின் சார்பில் ஜி. நல்லையா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.

1958 ஏப்ரல் 10 இல் சிங்கள ‘ஸ்ரீ’ பொறித்த பஸ் வண்டிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஓடத் தொடங்கும் போது தொண்டர்கள் தமிழ் ‘ஸ்ரீ’யை மாற்றும் முயற்சியைத் தொடர்ந்தனர். பொலிஸாருக்கு அறிவித்தபின் யாழ் பஸ் நிலையத்தில் ஜி. நல்லையா, சிறிதரன், அமிர்தலிங்கம் ஆகியோர் தமிழ் ‘ஸ்ரீ’யை எழுதியபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பண்டாரநாயக்காவின் தேசியமயக் கொள்கை

பண்டாரநாயக்கா தனியார் நிறுவனங்கள் பலவற்றைத் தேசிய மயமாக்கினார். பஸ் போக்குவரத்து, காப்புறுதி, பொற்றோலியம் என்பன தேசியமயமாக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி அவற்றினை ஆதரித்தது. அதேவேளை நெற்காணிச் சட்டம், பாடசாலைகள் தேசியமயம், அந்நியப் படைத்தளங்கள் தேசியமயம் என்பவற்றை எதிர்த்தது. தேசியமயம் என்ற பெயரில் சிங்களமயமாக்கல் இடம்பெற்றமையே எதிர்ப்பிற்கான காரணமாகும்.

தமிழரசுக் கட்சியின் 6 ஆவது மாநில மாநாடு

1958 ஆம் ஆண்டு மே மாதம் 23, 24, 25 ஆம் திகதிகளில் ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டு தொண்டர்கள் கைது, சிங்களவரின் தமிழ் அழிப்பு இயக்கம் வளர்ச்சியடைதல், பலாத்காரச் சம்பவங்கள் வளர்ச்சி போன்ற கொந்தளிப்பு நிலையிலேயே மாநாடு கூட்டப்பட்டது. இராசவரோதயம் மாநாட்டின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். இவ்வேளையில் மட்டக்களப்பிலிருந்து மாநாட்டுக்கு வந்த பிரதிநிதிகள் பொலநறுவையில் தாக்கப்பட்டனர். மட்டக்களப்பில் இருந்து வந்த புகைவண்டியும், சதியினால் தடம்புரளச் செய்யப்பட்டது. இதனால் ஒரு தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தரும் பொது தமிழ் மகன் ஒருவரும் மரணமடைந்தனர். போராட்டத்தை 1958 ஓகஸ்ட் 20 இல் மீண்டும் ஆரம்பிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இராசவரோதயம், செல்வநாயகம், வன்னியசிங்கம், செ. இராசதுரை, அமிர்தலிங்கம் என்போர் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்புப் பற்றிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழரசுக் கட்சி பங்குபற்றுவதில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

1958 இனக்கலவரம்

வவுனியா மாநாடு முடிகின்ற தறுவாயில் நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வடக்கு – கிழக்குக்கு வெளியே இருந்த தமிழர்கள் பாதுகாப்போடு தமிழ்ப் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர். தமிழ்ப் பிரதேசங்களில் இருந்த சிங்களவர்களும் ஆத்திரமடைந்த மக்களால் தாக்கப்பட்டனர். அரசு காலம் கடந்து அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்து இராணுவத்தை சேவைக்கு அழைத்துக் கலவரத்தை நிறுத்தியது.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்