1949 - 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
15 நிமிட வாசிப்பு

1949 – 1968: ஈழத்தமிழரின் தேசிய அரசியல் உருமாற்றமும் எதிர்ப்புப் போராட்டங்களும் – பகுதி 2

July 8, 2025 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

அல்லைத்திட்டம்

இத்திட்டமே திருகோணமலை மாவட்டத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது திட்டமிட்ட விவசாயக் குடியேற்றமாகும். இது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். மகாவலி ஆற்றை மறித்து வாய்க்கால் மூலம் திருப்பி அல்லைக் குளத்தை நிரப்பி அதனோடு சூழவுள்ள கிராமங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்து கொடுப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னரும் கூட இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1868 இல் வாய்க்கால் வெட்டப்பட்டு தாழ்நிலமாக இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு அல்லைக்குளம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1910 ஆம் ஆண்டு குளம் பலப்படுத்தப்பட்டதோடு வாய்க்கால்களும் பெரிதாக்கப்பட்டன. 1949 இலேயே இது மிகப்பெரிய விவசாயத் திட்டமாகப் புனரமைக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் 17,500 ஏக்கர் விவசாய நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் வயல் நிலமும், ஒரு ஏக்கர் மேட்டு நிலமும் என பகிர்ந்தளிக்கப்பட்டது. இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களில் 75% ஆன நிலங்கள்  சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. 25% ஆன நிலங்களே தமிழ், முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. காணி உரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட போது, சிங்கள மக்களிடமிருந்து, இலங்கையின் எல்லா மாவட்ட அரசாங்க அதிபர்களின் மூலமாகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. ஆனால் தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை, திருகோணமலை மாவட்டத்தில், அதுவும் மூதூர்ப் பகுதியில் இருப்பவர்களிடம் மட்டுமே விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

இப்பாரபட்சங்களை அன்றிருந்த தமிழ் பேசும் அரசியல் சக்திகள் தடுத்திருக்கலாம். அவர்கள் அது தொடர்பான முயற்சிகளில் எதிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. அன்றைய காலகட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலையிலும் மூதூரிலுமாக இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 1949 இல் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ். சிவபாலனும் மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த A.R.A.M. அபூபக்கரும் விளங்கினர். மக்கள் குடியேறத் தொடங்கிய 1953 ஆம் ஆண்டு காலப்பகுதியில் திருகோணமலைத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக  இராசவரோதயமும், மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக சுயேட்சையான M.E.H. முகமட் அலியும் விளங்கினர்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இதில் அக்கறையற்று இருந்தாலும் தமிழ்த் தேசியத்தையும் அதன் அடிப்படையிலமைந்த சமஷ்டிக் கோரிக்கையையும் முன்னெடுத்த அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி இதில் போதிய அக்கறை காட்டாதது தான் மிகவும் கவலைக்குரியது. இதன் பின்னர் 1959 இல் இருந்து மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக்கப்பட்டு 1977 வரை T. ஏகாம்பரம், அ. தங்கத்துரை போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தபோதும் குடியேற்றங்களைப் பொறுத்தவரை அவர்களின் செயற்பாடு போதியதாக இருக்கவில்லை. 1977 இல் மூதூர்த் தொகுதி மீளவும் ஒற்றை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதன் பகுதிகள் சேருவல தேர்தல் தொகுதியுடன் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் மூதூர்ப் பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கிருந்த உறுப்புரிமை இல்லாமல் செய்யப்பட்டது. காணி பெறுபவர்களுக்குரிய தகைமைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது விண்ணப்பதாரிகள் விவசாயிகளாகவும் திருமணம் புரிந்தவர்களாவும், விவசாயக் காணிகளைச் சொந்தமாகக் கொண்டிராதவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் நடைமுறையில் தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரை, இத் தகைமைகள் கடைப்பிடிக்கப்பட்டன. சிங்கள மக்களைப் பொறுத்தவரை இவை காற்றில் பறக்கவிடப்பட்டன. விவசாயமே தெரியாதவர்களும் நிலங்களைச் சொந்தமாக வைத்திருந்தவர்களும் தாராளமாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

கந்தளாய்த் திட்டம்

இத்திட்டம் 1950 ஆம் ஆண்டு கந்தளாய்க் குளத்தினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். இத்திட்டத்தின் கீழ் 24,750 ஏக்கர் காணி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் 14,360 ஏக்கர் நெற் செய்கைக்காகவும், 10,420 ஏக்கர் கரும்புச் செய்கைக்காகவும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 80% ஆன காணிகள் சிங்கள மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதேவேளை 20% ஆன காணிகளே தமிழ், முஸ்லிம் மக்களுக்கெனப் பகிர்ந்தளிக்கப்பட்டன. அல்லைத் திட்டத்தினைப் போலவே ஒரு குடும்பத்திற்கு 4 ஏக்கர் நெற்செய்கை நிலமும், 3 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது.

கந்தளாய்ப் பிரதேச சபையும், கந்தளாய்ப் பிரதேச செயலர் பிரிவும் இக்குடியேற்றப் பிரதேசத்தை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. கந்தளாய்ப் பிரதேச சபை எல்லைக்குள் வசிக்கும் 22,737 வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையோர் சிங்களவர்களாகவே உள்ளனர். இப்பிரதேச சபை 397.30 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டது. இன்று திருகோணமலை மாவட்ட சிங்கள மக்களுக்குத் தலைமை தாங்கும் பிரதேசமாக கந்தளாய்ப் பிரதேசமே உள்ளது.

பதவியாத் திட்டம்

திருகோணமலை மாவட்டத்தின் வட பகுதியை சிங்களமயமாக்குவதற்காக இத்திட்டம் 1954 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு  தொடக்கம் மக்கள் குடியேறத் தொடங்கினர். அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள பதவியாக் குளத்தினை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டது. பதவியாக்குளம் அனுராதபுர மாவட்டத்தில் இருந்தபோதும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளுக்கு நீர் பாய்ச்சுவதை நோக்கமாகக் கொண்டு இக்குளம் உருவாக்கப்பட்டது. 

இக்குடியேற்றத்திற்காக 2400 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் திட்டக்காணி முழுவதும் தமிழர்களுக்கே வழங்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் 1958 கலவரத்தினைத் தொடர்ந்து தென்னமரவாடியை அண்டியுள்ள பகுதிகளில் வசித்திருந்த தமிழர்கள் பலாத்காரமாக அகற்றப்பட்டு அவ்விடங்களில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். தற்போது இப்பகுதி 100% சிங்கள மக்களைக் கொண்ட பகுதியாகவே உள்ளது. இவர்களுக்காக பதவி சிறீபுர என்னும் பெயரில் ஒரு பிரதேச சபையும், சிங்களப் பிரதேச செயலர் பிரிவும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பிரதேச சபையின் வாக்காளர் எண்ணிக்கை 7,023 என்ற அளவுக்கு மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றங்களுக்கு அரசியல் உறுதிப்பாட்டை கொடுக்கவேண்டும் என்பதற்காகப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இப்பிரதேச சபை 217.70 சதுர மைல் விஸ்தீரணத்தைக் கொண்டதாகும். பதவிக்குளம் என்ற பாரம்பரியத் தமிழ்ப் பிரதேசமே பின்னர் பதவியா என மாற்றப்பட்டது.

மொறவெவ திட்டம்

முதலிக்குளம் என்ற தமிழ்ப் பிரதேசமே பின்னர் மொறவெவ என்ற சிங்களப் பெயராக மாற்றப்பட்டது. இத்திட்டம் 1959 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

வருடம்  தமிழர்   %முஸ்லிம்கள்%சிங்களவர்%
182715,66381.8   3,245      16.9    2501.3
188114,394   64.8   5,746      25.9    9354.2
189117,117   66.4   6,426      25.9    1,109      4.3
190117,06960.0   8,258      29.0    1,203      4.2
191117,233   57.9   9,714      32.6    1,138      3.8
192118,586   54.5   12,846     37.7    1,501      4.4
194633,769   44.5   23,219     30.6    11,606     15.3
195337,517   44.7   28,616     34.1    15,296     18.2
196354,050   39.1   42,560     30.8    40,950     29.6
197171,749   38.1   59,924     31.8    54,744     29.1
198193,510   36.4   74,40329.0    86,341     33.6

1962 ஆம் ஆண்டு தொடக்கமே மக்கள் குடியேறத் தொடங்கினர். திருகோணமலையிலுள்ள பிரித்தானியக் கடற்படைத்தளத்தில் வேலை செய்தவர்கள், தளம் மூடப்பட்டதால் வேலை இழந்தபோது, அவர்கள் விவசாயம் செய்வதற்கென்றே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 4040 ஏக்கர் காணிகள் பங்கிடப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் காணிகள் பங்கிடுவதற்கான காணிக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தமிழரசுக் கட்சித் தலைவரில் ஒருவரான வன்னியசிங்கம் நேரடியாகவே அதில் பங்கேற்றிருந்தார். காணிகள் பங்கிடப்படும் போது 55% காணிகள் தமிழ், முஸ்லிம் மக்களுக்கும், 45% காணிகள் சிங்கள மக்களுக்கும் என ஒதுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நேரடியாகச் சமூகமளித்தும் கூட மூன்று இனங்களுக்கும் சமமாகவோ அல்லது குறைந்தபட்சம் திருகோணமலை மாவட்ட இன விகிதாசாரப்படியோ காணிகள் பங்கிடப்படாதது கவலைக்குரியது. 

ஆனால் மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் பங்கிடப்பட்ட போது 75% வீடுகள் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. 25% வீடுகள் மட்டுமே தமிழ், முஸ்லிம் மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. வீடுகள் கொடுக்கப்படாததால் திருகோணமலையில் இருந்த தமிழ், முஸ்லிம் மக்கள் உடனடியாகக் குடியேறவில்லை. சிங்கள மக்கள் மட்டுமே குடியேறினர். தொடர்ந்து வந்த இனக் கலவரங்களினால் தமிழ், முஸ்லிம் மக்கள் குடியேறத் தயக்கம் காட்டவே, நாளடைவில் குடியிருக்காத நிலங்கள் இரத்துச் செய்யப்பட்டு அவ் இடங்களிலும் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு விமானப் படையினருக்கான விவசாயப் பண்ணை அங்கு உருவாக்கப்பட்ட போது, அதனைச் சாட்டாக வைத்தும் பல சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். விமானப் படையினரின் பண்ணை சிங்களக் குடியேற்றத்தை மேலும் பலப்படுத்தியதால் எஞ்சியிருந்த ஒரு சில தமிழ்க் குடும்பங்கள் கூட பின்னர் வெளியேறின. 

இக்குடியேற்றத்தினை மையமாக வைத்தே மொரவேல சிங்களப் பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இது 322 சதுர மைல் விஸ்தீரணத்தை உள்ளடக்கியுள்ளது. தமிழர்கள் எவரும் இப்பிரதேசத்தில் இல்லை. 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் 38.08% வாக்காளர்களே வாக்களித்திருந்தனர். மொத்தமாக 2,200 வாக்குகளே அளிக்கப்பட்டன. மக்கள் மிகக் குறைவாக இருந்தபோதும், குடியேற்றத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதேச சபை உருவாக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது. பிரதேச சபையில் மொத்தம் 9 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். அவர்கள் அனைவரும் சிங்களவர்களேயாவர்.

மகாதிவுல்வெவ திட்டம்

பெரியவிளான் குளம் என்னும் தமிழ்ப் பிரதேசமே இத்திட்டம் கொண்டுவரப்பட்ட பின் மகாதிவுல்வெவ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இத்திட்டம் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 1981 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் குடியேற்றம் நடைபெற்றது. இத்திட்டத்தின் மூலம் 1200 ஏக்கர் காணி பங்கிடப்பட்டது. இதில் 65% சிங்கள மக்களுக்கும் 35% தமிழ், முஸ்லிம் மக்களுக்கும் எனப் பங்கிடப்பட்டது. இவ்வாறு பங்கிடப்படும் போது ஒரு குடும்பத்திற்கு 2 ஏக்கர் வயல் நிலமும், ½ ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப்பட்டது. 

இத்திட்டமிட்ட விவசாயக் குடியேற்றங்களை மையமாக வைத்தே 1977 இல் சேருவில தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டது. இத்தேர்தல் தொகுதி வந்த பின்னரே சிங்களப் பிரதிநிதி ஒருவர் பாராளுமன்றத்திற்கு முதன் முதலாகத் தெரிவு செய்யப்பட்டார். 1977 இற்கு முன்னர் பாராளுமன்றத்தில் சிங்களப் பிரதிநிதித்துவம் என்பது திருகோணமலை மாவட்டத்திலிருந்து இருக்கவில்லை. தமிழ்ப் பிரதிநிதிகளும், முஸ்லிம் பிரதிநிதிகளும் மட்டும் இருந்தனர்.  1960 இற்கு முன்னர் திருகோணமலை, மூதூர் எனும் இரு தொகுதிகள் மட்டுமே இருந்தன. திருகோணமலைத் தொகுதியிலிருந்து ஒரு தமிழரும் மூதூர்த் தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்பட்டனர். 1960 ஆம் ஆண்டு தொடக்கம் மூதூர்த் தொகுதி இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டதால் அத்தொகுதியிலிருந்து ஒரு தமிழர், ஒரு முஸ்லிம் என இருவர் தெரிவு செய்யப்பட்டனர். இதனால் மொத்தமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழரும் ஒரு முஸ்லிமும் தெரிவு செய்யப்படும் நிலை இருந்தது. 1977 வரை இந்நிலை தொடர்ந்திருந்தது. 1977 இல் சேருவில தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒவ்வொரு இனத்திலுமிருந்து தலா ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இம்மாவட்டத்தில் ஏறத்தாழ மூன்று இனங்களும் சமமாக இருப்பதனால், தேர்தல் முறைமையின் பண்புக்கு ஏற்ப, இனங்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கை மாற்றமடைந்து வருகின்றது. ‘போனஸ்’ ஆசனம் முதலாவது வரும் கட்சிக்கு வழங்கப்படுவதால் ஓர் இனத்திற்கு இரண்டு ஆசனங்களும் ஏனைய இனங்களுக்கு ஒவ்வோர் ஆசனமும் கிடைக்கின்றன.

நீர் நிலங்கள் 96 சதுர மைல்களைப் பிடித்துள்ள திருகோணமலை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 2630 சதுர மைல்களாகும். இதில் திருகோணமலைத் தேர்தல் தொகுதி 461.30 சதுர மைல்களையும், மூதூர்த் தேர்தல் தொகுதி 570.70 சதுர மைல்களையும், சேருவில தேர்தல் தொகுதி 1598.80 சதுர மைல்களையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றில் திருகோணமலைத் தேர்தல் தொகுதியில் தமிழரும், மூதூர்த் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களும், சேருவில தேர்தல் தொகுதியில் சிங்களவரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 

காடுகளைப் பொறுத்தவரை கூட திருகோணமலை மாவட்டக் காடுகளின் அடர்த்தியான விஸ்தீரணம் 870 ஹெக்டயர் ஆகும். சாதாரண காடுகள் 16,310 ஹெக்டயரில் அமைந்துள்ளன. சேருவில தேர்தல் தொகுதியில் மட்டும் 9510 ஹெக்டயர் காடுகள் உள்ளன. பெரிய பிரதான குளங்கள் அனைத்தும் சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. சிறிய பிரதான நீர்ப்பாசனக் குளங்களிலும் பெரும்பாலானவை சேருவில தேர்தல் தொகுதியிலேயே உள்ளன. இத்தொகுதி மூதூரின் தென் எல்லையிலிருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு எல்லைவரை பரந்துள்ளது. 

இச்சேருவில தேர்தல் தொகுதியில் ஐந்து பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கோமரங்கடவல, சேருவில, மொறவெவ, பதவி சிறீபுர, கந்தளாய் என்பன அவையாகும். இவ்வாறு திருகோணமலை மாவட்டத்தின் பெரும் பகுதியைக் கோறையாக்கிக் கைப்பற்றினாலும், திருகோணமலை மாவட்டத்தின் தலைநகர் திருகோணமலையாக இருப்பது பேரினவாதிகளுக்குப் பெரிய சங்கடமாகியுள்ளது. குடியேற்றங்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்துவதற்கு மாவட்டத்தின் தலைநகரை தங்களின் கைக்குள் வைத்திருப்பது அவசியம் என உணர்கின்றனர். இதனாலேயே அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள திருகோணமலை நகருக்குள் ஊடுருவிக் குடியேறும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நகரை நோக்கிய ஊடுருவல் குடியேற்றங்கள், வியாபாரக் குடியேற்றம், மீனவர் குடியேற்றம், கைத்தொழில் குடியேற்றம் என்ற வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சேருவில தேர்தல் தொகுதிப் பிரதேச சபைகள்

  பிரதேச சபைகள்நிலப்பரப்பு
கோமரங்கடவல    285 ச.மைல்
சேருவில279 ச.மைல்
ஈச்சிலம் பத்தை      98 ச.மைல்
மொறவெவ   322 ச.மைல்
பதவி சிறீபுர217.70 ச.மைல்
கந்தளாய்397.30 ச.மைல்
இனம்ஆண்டுதொகைவீதம்
தமிழர்190117,06960.0%
2012122,08032.3%
முஸ்லிம் 19018,25829.0%
2012152,84540.0%
சிங்களவர்19011,2034.2%
2012101,9917.0%

திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு – 1951 ஏப்ரல் 13, 14, 15

தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டின் பிரதான தீர்மானங்கள்:

• தமிழ் பேசும் மக்கள் ஒரு தனியான தேசிய இனம். அவர்கள் சிங்களவர்களுடன் சமஷ்டி அமைப்பில் இணைய விரும்புகின்றனர்.

• சோல்பரி அரசியல் திட்டம் தமிழ் பேசும் மக்களை அடிமையாக்குவதற்கு ஏதுவான திட்டம்  என்பதால் மாநாடு அதனைக் கண்டிக்கின்றது. 

• தற்போதைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் பேசும் மக்கள் சந்திக்கும் அவமதிப்பையும் குடியுரிமைச் சட்டங்களின் கீழ் அவர்கள் படும் அவமானங்கள் பற்றியும் குறிப்பெடுத்துக்கொள்கிறது.

• தற்போதைய அரசியல் அமைப்பின் கீழும், தற்போதைய அரசாங்கத்தின் கீழும், தமிழ் மொழியும், கலாசாரமும் எதிர்நோக்கியிருக்கும் பேராபத்தை இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது. 

மாநாட்டில் தந்தை செல்வா ஒருவரே தலைமைப் பதவியில் தொடர்ந்திருப்பது உகந்ததல்ல எனக்கூறிய போதும் தொடக்க காலம் என்பதால் தலைவராக இருக்கும்படி வற்புறுத்தப்பட்டது. தயக்கத்தின் பின் தந்தை செல்வா ஏற்றுக்கொண்டார். தலைமையுரையில் தந்தை செல்வா, “கிழக்கு மாகாணம் ஆபத்தான நிலைக்குச் செல்கின்றது. இதைத் தடுக்க கிழக்கு மக்கள் எழுச்சியுற வேண்டும். ஏனைய தமிழ் மக்கள், அவர்களுடன் சேர வேண்டும்” எனக் கூறினார். 

பிரதமர் டி. எஸ். சேனநாயக்கவின் யாழ் வருகையும், பகிஷ்கரிக்கும் பிரச்சாரமும்

1951 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் பிரதமர் டி.எஸ். சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். இவர்தான் சிங்களக் குடியேற்றங்களை தமிழர் தாயகத்தில் உருவாக்கினார். மலையக மக்களின் பிரஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்தார். தேசியக் கொடியில் தமிழ் மக்களினை இலங்கை இறைமைக்கு வெளியே தள்ளினார். இத்தகையவரின் வருகையைப் பகிஷ்கரிக்குமாறு தமிழரசுக் கட்சி பிரச்சாரம் செய்தது. 

1952 பொதுத்தேர்தல் 

இத்தேர்தலில் வடக்கு – கிழக்கில் ஏழு தொகுதிகளில் தமிழரசுக் கட்சி போட்டியிட்டது. திருமலையில் இராசவரோதயமும், கோப்பாயில் வன்னியசிங்கமும் மட்டும் வெற்றி பெற்றனர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், காங்கேசன்துறைத் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நடேசனிடம் தோல்வியடைந்தார். மொத்தம் 45,531 வாக்குகள் கட்சிக்குக் கிடைத்தது. மட்டக்களப்புத் தொகுதியில் கட்சி அனுதாபியான ஆர்.பி. கதிர்காமர் வெற்றி பெற்றாராயினும் அடுத்த நாளே, தந்தி மூலம், ஐக்கிய தேசியக் கட்சியில் சேந்தார். கல்குடாவில் சிவஞானம் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

1953, தை மாதம், பொங்கல் தினத்தன்று தமிழரசு வாலிப முன்னணி உருவாக்கப்பட்டு  அமிர்தலிங்கம் அதன் முதலாவது தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். தமிழரசுக் கட்சியின் 2 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தமிழரசு வாலிப முன்னணி ‘சங்கிலி’ நாடகத்தை அங்கு மேடையேற்றியது.

1953, ஆகஸ்ட் 12, ஹர்த்தால் 

அரிசியின் விலையை அரசாங்கம் 25 சதத்திலிருந்து 75 சதத்திற்கு உயர்த்தியதை எதிர்த்து இடதுசாரிகள் ஹர்த்தாலை ஒழுங்கு செய்தனர். வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி பெற தமிழரசுக் கட்சி உதவியது. இதனால் டட்லி சேனநாயக்க பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தமையைத் தொடர்ந்து, சேர்.ஜோன். கொத்தலாவல பிரதமரானார். ஹர்த்தால் போராட்டத்தில் லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழரசுக் கட்சியும் மட்டுமே பங்குபற்றின என சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் லெஸ்லி குணவர்த்தன கூறினார். சிறீலங்கா சுதந்திரக்கட்சியினர், தாம் எதிர்ப்பில்லையாயினும், இலங்கை மக்கள் அத்தகைய ஒரு போராட்டத்தை நடாத்துவதற்கு தயாரான கட்டத்தை அடைந்துவிட்டார்கள் என்று தாம் நம்பவில்லை எனக் கூறினர்.

கொத்தலாவலக்கு கறுப்புக் கொடி (1954)

1954 நடுப்பகுதியில் எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்தார். இதன்போது இடம்பெற்ற நிதி மந்திரி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நன்றி தெரிவிப்பு உரையானது சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மட்டுமே நடைபெற்றது. தமிழ் மொழிபெயர்ப்புத் தானும் இருக்கவில்லை. இதன் பின்னர் கொத்தலாவல யாழ் வருகைதந்த போது தமிழரசுக் கட்சி அவர் வருகையைப் பகிஷ்கரித்தது.

தமிழைப் புறக்கணித்தமை, இந்திய வம்சாவளியினரை நாடு கடத்தும் ஒப்பந்த முயற்சிகளை மேற்கொண்டமை, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கியமை, திரிசிங்கள, ஜாதிக பெரமுனவை ஆதரித்தமை என்பவற்றைக் கண்டித்துப் பகிஷ்கரிப்புப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. தமிழரசு வாலிப முன்னணி கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்க முயன்றது. 

யாழ் நகர மண்டபத்தில் வரவேற்புக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த வேளையில்  பிரதமர் மேடையில் ஏறியதும் அமிர்தலிங்கம் தலைமையில் 200 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னரே ஏற்பாடு செய்தபடி, சட்டைப் பைகளில் இருந்த கறுப்புக் கொடிகளைக் காட்டி ‘பிரதமரே திரும்பிப் போ!’ எனக் கோசமிட்டனர். பார்வையாளர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். பொலிஸ் குண்டாந்தடிப் பிரயோகம் செய்தமையினால் இளைஞர்கள், பொதுமக்கள் பலர் தாக்கப்பட்டனர். இதுவே இரத்தம் சிந்திய முதல் போராட்டமாகும். முதற் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் இதுவே. சேர்.ஜோன். கொத்தலாவல கொக்குவிலில் நடந்த வரவேற்பில், ஹண்டி பேரின்பநாயகம் விடுத்த வேண்டுகோளின் பேரில் சிங்களம், தமிழ் இரண்டையும் அரச கரும மொழியாக்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றப்படும் எனக் குறிப்பிட்டார். ஆனால் கொழும்பு திரும்பியதும் அடுத்த நாளே எதிர்ப்பு ஏற்பட்டதால், அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். 1954 இல் கொழும்பு நகர மண்டபத்தில் நடந்த லங்கா சமசமாஜக் கட்சியின் மொழிச் சமத்துவக் கூட்டம் பிலிப் குணவர்த்தன குழுவினரால் குழப்பப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு

1955 ஏப்ரல் 16,17 ஆம் திகதிகளில் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மூன்றாவது தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் தலைவராக வன்னிய சிங்கமும், செயலாளராக செல்வநாயகமும் தெரிவு செய்யப்பட்டனர். 1955 ஆம் ஆண்டு என்.எம். பெரேரா மொழிச் சமத்துவத்தை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க உட்பட பலர் இதனை நிராகரித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி மாநாடு

1956 பெப்ரவரி 18 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி தனது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கரும மொழி என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இதனால் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்த தமிழ் அமைச்சர்கள், தமிழ்த் துணை அமைச்சர்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறினர். இத்தீர்மானத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சி தமிழ்ப் பிரதேசமெங்கும் 1956 பெப்ரவரி 20 திகதி ஹர்த்தால் அனுஷ்டித்தது. 

தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்க முயற்சி

தமிழரசுக் கட்சியின் செயற்குழு, தமிழ் அமைப்புகளை இணைத்து ஐக்கிய முன்னணி அமைக்கும் முடிவை எடுத்தது. ஏனைய குழுக்களுடனும், தனிநபர்களுடனும் பேசுவதற்கு கட்சி சார்பில் கு. வன்னியசிங்கம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அமிர்தலிங்கம், இராசவரோதயம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தமிழாசிரியர் சங்கத்துடன், நீதியரசர் நாகலிங்கம் போன்றோரும் இதற்கான முயற்சியைச் செய்தனர். ஆனால் அம்முயற்சி வெற்றிபெறவில்லை. 

1956 பொதுத் தேர்தல்

1956 ஏப்ரல் 5, 7, 10 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அகில இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்க் காங்கிரஸ் இரண்டும் போட்டியிட்டன. அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு – கிழக்கு முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி 10 தொகுதிகளில் வெற்றியும் பெற்றது. 1952 ஆம் ஆண்டு தேர்தலில், 45,331 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் 1,42,036 வாக்குகளைப் பெற்றது. வடக்கு – கிழக்கில், தமிழ் – முஸ்லிம் வாக்குகளையும் பெற்றிருந்தது. இதனூடாக வடக்கு – கிழக்கு மக்கள் தமது ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். தேர்தலின் பின்னர் பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி முதன்முதலாக ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்த்தி ஆட்சியை அமைத்தது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி 8 ஆசனங்களை மட்டும் பெற்று படுதோல்வியடைந்தது. எதிர்க்கட்சி ஸ்தானத்தையும் இழந்தது. சமசமாஜக் கட்சியின் தலைவர் என்.எம். பெரேரா எதிர்க்கட்சித் தலைவரானார். இதற்குத் தமிழரசுக் கட்சியும் ஆதரவளித்தது.



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்