ஆங்கில மூலம்: மலவராயன் வி. விஜயபாலன்
“விடுதலையே, உன் பெயரால் பறிக்கப்படும் சுதந்திரங்கள் தான் எத்தனையோ?”
– டானியல் ஜோர்ஜ்1
குடியுரிமைகளைப் பாதுகாப்பதென்ற போர்வையில், ஓர் அரச நிர்வாகம் கொண்டிருக்கும் பாரியளவிலான அதிகாரங்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓர் அரசு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதற்கும் அதன் மூலமாக நாட்டில் சர்வாதிகாரமும், சமூகரீதியான சுதந்திரத்தின் சீரழிவும் ஏற்படக் காரணமாகி விடுகின்றன. இது, ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் நாடுகள் உட்பட, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் நிலவி வருகின்ற ஓர் உண்மையாகும். பயங்கரவாதம் தொடர்பான சட்டம் என்பது நடைமுறையில், மக்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரத்தை ஒருங்கிணைப்பதற்குமாக, நிர்வாகத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் சேர்க்கப்படும் இன்னொரு ஆயுதமாக மாறி வருகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மீதான ஐ.நா.வின் கவலைகள்
இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) 1979 இல் ஒரு தற்காலிக நடவடிக்கையாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பின்னர் அது சட்டப் புத்தகத்தின் ஒரு நிரந்தரமான அம்சமாக மாறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளின் கண்டனங்களையும், காணாமற் போதல் தொடர்பாக அவை குறிப்பிட்ட பரிந்துரைகளையும் மீறி, அந்தக் கடுமையான அல்லது கொடூரமான சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருந்து வருகிறது. 1991 இல் ஐ.நா. சபையின் செயற்குழு, பயங்கரவாதத் தடைச் சட்டம் பாதுகாப்புப் படைகளுக்குப் பாரியளவிலான அதிகாரங்களை வழங்குவதாகவும் – அதன் காரணமாக அவர்களால் செய்யப்படக்கூடிய எந்தவொரு மனித உரிமை மீறல் நடவடிக்கைக்கும் கூட, எத்தகைய தண்டனைகளையும் கொண்டிராததாக அமைந்த ஒரு சட்டமாக அது இருப்பதால் – குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், அரசியல் உரிமைகள் என்பவை தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) விதிகளை மீறுவதாக அது உள்ளது என்றும், அவை தொடர்பான, அச்சட்டத்திலுள்ள, அதிகாரங்கள் ஒழிக்கப்பட வேண்டும் அல்லது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு ஒப்பானவையாக மாற்றப்பட வேண்டும் என்றும், காணாமல் போதல் தொடர்பான தனது அறிக்கையில் அது பரிந்துரைத்தது.²
வேறு பல ஐ.நா. அமைப்புகளும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கண்டித்ததோடு, அதனை ஒழிப்பதற்கு அல்லது திருத்துவதற்கு ஏற்ற பரிந்துரைகளை இலங்கைக்கு வழங்கியுள்ளன. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. செயற்குழு3 1998 இல், அவசரகால ஒழுங்குமுறைகள், கைதிகள் இழப்பீட்டுச் சட்டம், தடுப்புக்காவல் என்பவை தொடர்பான நடைமுறை விதிகள் போன்றன, ‘சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை’ கொண்டுள்ள விதிகளுக்கு ஏற்ப அமைவதை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றை (மேம்படுத்துவது தொடர்பாக) மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கையைக் கேட்டுக்கொண்டது. கைதிகள் இழப்பீட்டுச் சட்டமும் அவசரகால ஒழுங்குமுறைகளுமே தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை, கட்டாயக் காணாமல் போதல் போன்றவற்றுக்கு முக்கியமான காரணிகளாக உள்ளன என்ற அடிப்படையில், இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசு சாரா அமைப்புகள், தங்கள் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியதால், கட்டாய அல்லது தன்னிச்சையற்ற காணாமல் போதல்கள் மீதான ஐ.நா. செயற்குழு மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தியது. 199 இல், சட்டத்தின் உரிய நடைமுறை, கைதிகளை நடத்தும் விதம் என்பவை தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத் தரங்களுக்கு ஏற்ப கைதிகள் இழப்பீட்டுச் சட்டத்தையும் அவசரகால ஒழுங்குமுறைகளையும் கொண்டுவர வேண்டும் என்று அக்குழு பரிந்துரைத்தது. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழு, 2001 இல், கைதிகள் இழப்பீட்டுச் சட்டத்தின்4 கீழ், குடியுரிமை, அரசியல் உரிமை போன்ற உரிமைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்தும், தமிழர்கள் விஷயத்தில் அது பாரபட்சமாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவது குறித்தும் தனது கவலையைப் பதிவு செய்தது5.
போர் நிறுத்த ஒப்பந்தம்
போர் நிறுத்தத்திற்கு முன்னான பேச்சுவார்த்தைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கோரிக்கைகளில் முக்கியமான ஒன்றாக இருந்தது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) இல்லாமலாக்குதல் என்பதாகும். ஆனால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் எந்தவொரு திருத்தமும் செய்யப்படுவதை இலங்கை அரசாங்கம் மறுத்ததால், போர் நிறுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படாது என்ற அரசாங்கத்தின் உறுதிமொழியுடன் இரு தரப்புக்கும் இடையில் ஒரு சமரசம் எட்டப்பட்டது. அதன்படி அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2002 பெப்ரவரி 22 அன்று ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் பின்வருமாறு கூறுகிறது:
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேடுதல் நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெறாது என இரு தரப்பினரும் ஒப்புக்கொள்கின்றனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, நடைமுறையிலுள்ள சட்டத்தின் அடிப்படையிலான உரிய நடைமுறையின் கீழ் மட்டுமே கைதுகள் மேற்கொள்ளப்படும்6.”
இவ்வாறு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டபடி, போர் நிறுத்தத்திற்குப் பிறகு கைதுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், அந்தச் சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வந்ததுடன் எந்த நேரத்திலும் பயன்படுத்தப்படலாம் என்ற நிலை நிலவவே செய்தது. இதைக் கருத்தில் கொண்டு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு 2003 இல் பின்வரும் கருத்துகளைத் தெரிவித்தது:
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நடைமுறையில் இருப்பதும், அதன் பல விதிகள், இந்த உடன்படிக்கையுடன் (பிரிவுகள் 4, 9, 14 ஆகியவை)7 முரண்படுவதும் ஆணைக்குழுவுக்குக் கவலையளிக்கிறது. பெப்ரவரி 2002 இன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்தாமல், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட கைது, தடுப்புக்காவல், விசாரணைக்கான சாதாரண நடைமுறைகள் என்பவை பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் முடிவை குழு வரவேற்கிறது. ஆயினும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்து இருப்பதென்பது, பிடியாணையின்றி ஒருவரைக் கைது செய்யவும், தடுப்புக்காவலை அனுமதிக்கவும் வழிவகுக்கிறது என்பது குறித்து ஆணைக்குழு கவலை கொண்டுள்ளது…..8.”
பயங்கரவாதச் சட்டம் – 2000
இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டவிதிகள், பல ஜனநாயக நாடுகளில் உள்ள பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை விட மிகவும் கடுமையானவை. பிரித்தானியாவில், 2001 இல் நியூயோர்க்கில் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பிறகு, தொழிலாளர் கட்சி (Labour Party) அரசாங்கம் நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அதிகாரங்களை வழங்குகின்ற தொடர்ச்சியான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பயங்கரவாதச் சட்டம் 2000’ உட்பட பிரிட்டனின் பயங்கரவாதச் சட்டங்கள், காவல்துறைக்கு மிகவும் பரந்தளவிலான கைது, தடுப்புக்காவல் என்பவற்றுக்கான அதிகாரங்களை வழங்குவதாக மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன (இந்தச் சட்டங்களில் உள்ள சில விதிகளில், குறிப்பாக கைது, தடுப்புக்காவல் என்பவை தொடர்பான விதிகள் மட்டுமே இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன).
இந்தப் ‘பயங்கரவாதச் சட்டம் – 2000’ என்ற சட்டத்தின் அடிப்படையில், பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்படும் எந்த ஒருவரையும், பிடியாணை எதுவுமின்றியே கைது செய்து, சந்தேகத்திற்கான எந்தக் காரணமும் அவருக்குத் தெரிவிக்கப்படாமலே, 48 மணி நேர தடுப்புக் காவலில் வைக்க முடியும்9. தடுப்புக்காவலை நீட்டிக்க எந்த விண்ணப்பமும் செய்யப்படாவிட்டால், 48 மணி நேரத்திற்குப் பிறகு அந்த நபர் விடுவிக்கப்பட வேண்டும்10. (சாதாரண சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட ஒருவரை 36 மணி நேரம் மட்டுமே காவலில் வைக்க முடியும்). ஆயினும் காவல்துறையினர் அவரை மேலும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான பிடியாணையைப் பிறப்பிக்குமாறு11, 48 மணி நேரத்திற்குள் ஒரு ‘நீதவான் நீதிமன்றத்தில்’ (Magistrate Court) விண்ணப்பிக்க முடியும். இந்த 48 மணி நேர காலம் முடிந்து, அதன் பின்னான ஆறு மணி நேரத்திற்குள்ளும் நீட்டிப்புக்கான விண்ணப்பம் செய்ய முடியும்12 என்ற போதிலும், 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பம் செய்வதற்கு நியாயமான முறையில் சாத்தியங்கள் இருந்திருக்கும் என்று நீதிமன்றம் கருதினால், நீட்டிப்புக்கான விண்ணப்பத்தை அது தள்ளுபடி செய்ய வேண்டும்13. நீட்டிப்பு ஏழு நாட்கள் வரை மட்டுமே வழங்கப்படலாம்14.
கைதோடு தொடர்புடைய ஆதாரங்களைப் பெறுவதற்கோ அல்லது தொடர்புடைய ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கோ அந்த நபரை மேலும் காவலில் வைப்பது அவசியம் என்று நம்புவதற்கு, நியாயமான காரணங்கள்15 உள்ளன என்றும், விசாரணை விடாமுயற்சியுடனும் விரைவாகவும் நடத்தப்படுகிறது என்றும் நீதிமன்றம் திருப்தி அடைந்தால்16 மட்டுமே, தடுப்புக்காவலை நீட்டிப்பதற்கான பிடியாணையை ஒரு நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியும். ‘தொடர்புடைய ஆதாரம்’17 என்பது, சட்டத்தின் கீழ் அந்த நபர் ஒரு குற்றத்தைச் செய்தது தொடர்பான ஆதாரம்; அல்லது அந்த நபர் ஒரு குற்றத்தைச் செய்துள்ளார் என்பதைக் குறிக்கும் ஆதாரம் அல்லது பயங்கரவாதச் செயல்களைச் செய்தல், அதற்கான தயாரிப்பு அல்லது தூண்டுதலில் ஈடுபட்டிருக்கிறார்18 என்ற (சந்தேக) அடிப்படையில் காவல்துறை, தடுப்புக் காவற் பிடியாணையை நீட்டிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரலாம். ஆனால், அந்த நீட்டிப்புக் காலம், கைது செய்யப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு மேற்படாமல்19 இருக்க வேண்டும்.
பயங்கரவாதச் சட்டத்தின்படி, கைது செய்யப்பட்ட நபருக்கு, தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்த தகவல்களை வழங்குவதற்காக, மற்றொரு நபரின் (நண்பர், உறவினர் அல்லது தெரிந்த நபர்) பெயரைக் குறிப்பிட உரிமை உண்டு20. கைது செய்யப்பட்ட நபர் ஒரு வழக்கறிஞரை அணுகுவதற்கும் உரிமை பெற்றவராவார். இந்த உரிமைகள் காவல்துறையால் தாமதப்படுத்தப்படலாம், ஆனால் அந்தத் தாமதம் 48 மணிநேரத்திற்கு மட்டுமே, அதுவும் நியாயமான காரணங்கள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இந்தக் காரணங்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபருக்கு தாமதத்திற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும், மேலும் அந்தக் காரணங்கள் பதிவு செய்யப்படவும் வேண்டும்.²⁶
‘பயங்கரவாத எதிர்ப்பும், குற்றமும் பாதுகாப்பும்’ சட்டம் – 2001 (‘Anti terrorism, Crime and Protection’ law – 2001)
நியூயோர்க்கில் நடந்த இரட்டைக்கோபுரத் தாக்குதல்களுக்குப் பிறகு, ‘பயங்கரவாத எதிர்ப்பும், குற்றமும் பாதுகாப்பும் சட்டம் 2001 ஐக்கிய இராச்சியத்தில் ஓர் அவசரகாலச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, 14 டிசம்பர் 2001 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம்,27 ஐக்கிய இராச்சியத்தின் மாநிலச் செயலாளர் ஒருவருக்கு, ‘பிரித்தானியர் அல்லாத ஒருவரை, ‘பயங்கரவாதி என்றும், அவர் பிரித்தானியாவில் தங்கி இருப்பது நாட்டின் தேசிய ரீதியான பாதுகாப்புக்கு28 ஆபத்தானது என்றும் தான் நியாயமாக நம்புவதாகவும் அறிவிக்கின்ற’ ஒரு சான்றிதழை வழங்குவதற்கான அதிகாரத்தை அளித்திருந்தது. சந்தேகிக்கப்படும் நபர் குடிவரவுச் சட்டம் 1971²⁹ இன் கீழ் நாடு கடத்தப்படலாம் அல்லது தடுப்புக் காவலில் வைக்கப்படலாம்.30 அவ்வாறு ‘சான்றளிக்கப்பட்ட’ ஒரு நபர், எந்தவொரு குற்றவியல் சட்ட அடிப்படையிலான குற்றத்திற்காகவும் குற்றம் சாட்டப்படாமலோ, அல்லது (ஒரு நீதிமன்றில் முன்நிலைப்படுத்தபபட்டு) விசாரிக்கப்படாமலோ, காலவரையின்றி தடுப்புக் காவலில் தடுத்து வைக்கவும் படலாம்.
நாடு கடத்தல்களைப் பொறுத்தவரை, ஐரோப்பிய மனித உரிமைகளுக்கான நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அரசுகள் அவ்வாறு செய்ய முடியாது என்று தடை விதித்தது. அதாவது ஒரு நபரை, அவர் சித்திரவதையை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நாட்டிற்கோ, அல்லது அவர் அங்கிருந்து அனுப்பப்படக்கூடிய, அத்தகைய (செயல்களைச் செய்யக்கூடிய) அபாயம் உள்ள ஒரு நாட்டிற்கோ31, நாடு கடத்துதல் செய்யமுடியாது. சர்வதேச பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட, இங்கிலாந்தில் உள்ள சில வெளிநாட்டுக் குடிமக்களைக் கையாள்வதற்காக இந்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் கூறியது. போதுமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த நபர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது என்றும், அவர்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தாலும், சித்திரவதையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் அவர்களைத் தாய்நாட்டிற்கு நாடு கடத்த முடியாது என்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடு இருந்தது. இத்தகைய சூழ்நிலைகளில், அந்த நபர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இல்லாத வரை அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் நாடு அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகும் வரை அவர்களைக் காவலில் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று இங்கிலாந்து அரசாங்கம் வாதிட்டது.
ஆனால், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களுக்கான ஐரோப்பிய உடன்படிக்கையின்படி, ஒரு நபர் குற்றம் இழைத்திருக்கலாம் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில்32, அவரைத் தகுதியான சட்ட அதிகாரத்தின் முன் நிறுத்தும் நோக்கத்திற்காக சட்டபூர்வமான தடுப்புக்காவல் மேற்கொள்ளப்பட்டாலோ, அல்லது நாடு கடத்துதல் அல்லது ஒப்படைத்தலுக்கான நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் ஒரு நபரை, சட்டபூர்வமாகக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்தாலோ அன்றி, ஒரு நபரின் சுதந்திரம் பறிக்கப்பட முடியாது. பயங்கரவாத எதிர்ப்பு, குற்றம் மற்றும் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள தடுப்புக்காவல் அதிகாரங்கள், வழக்குத் தொடரும் நோக்கத்தில் ஒரு ‘குற்றவியல் குற்றம்’ குறித்த நியாயமான சந்தேகத்தின் அடிப்படையிலோ வெளியேற்றும் அல்லது நாடு கடத்தும்33 நோக்கத்தில் ஒரு நபரைத் தடுப்புக்காவலில் வைப்பதன் அடிப்படையிலோ அமையவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் வாதிட்டுள்ளன.
ஐரோப்பிய உடன்படிக்கையுடனான இந்த முரண்பாட்டைச் சமாளிக்கும் பொருட்டு, சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலைகளில் தனிநபர்களைத் தடுப்புக்காவலில் வைப்பது, உடன்படிக்கையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தின் கடமைகளுடன் முரண்படுவதால், அந்த அளவிற்கு உடன்படிக்கையின் கீழ் உள்ள தனது கடமைகளிலிருந்து விலகுவதாக ஐக்கிய இராச்சியம் கூறியது. மாநிலச் செயலாளர், மனித உரிமைகள் சட்டம் 199834 இன் கீழ் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் மாநாட்டின்35, பிரிவு 15(1) வழங்கிய விலக்குரிமையைப் பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த உத்தரவு, 11 செப்டம்பர் 2001 அன்று நியூயோர்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களையும், அந்தத் தாக்குதல்களை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அங்கீகரித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும்36 குறிப்பிட்டது. அந்த உத்தரவு மேலும் பின்வருமாறு கூறியது.
“சர்வதேச பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களால் ஐக்கிய இராச்சியத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக, சர்வதேச பயங்கரவாதச் செயல்களைச் செய்தல், தயாரித்தல் அல்லது தூண்டுவதில் சம்பந்தப்படுபவர்கள் என்றும், அவ்வாறு சம்பந்தப்பட்ட அமைப்புகள் அல்லது குழுக்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் என்றும், அல்லது அத்தகைய அமைப்புகள் அல்லது குழுக்களின் உறுப்பினர்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் என்றும் சந்தேகிக்கப்படும் வெளிநாட்டினர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ளனர்; அத்துடன் அவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளனர். இதன் விளைவாக, மாநாட்டின் பிரிவு 15(1) இன் பொருளின்படி, ஐக்கிய இராச்சியத்தில் ஒரு ‘பொது அவசரகால நிலை’ (Public Emergency) நிலவுகிறது.”
ஐரோப்பிய மாநாடு கூறுகிறது: போர் அல்லது தேசத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பிற பொதுவான அவசரகால நிலை நிலவும் காலங்களில் மட்டுமே, சூழ்நிலையின் அவசியங்கள் காரணமாக அவசியமாகத் தேவைப்படும் அளவுக்கு, மாநாட்டின் கீழ் உள்ள கடமைகளிலிருந்து விலகுவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் எடுக்கமுடியும் என்றபோதும் அவர்களது அத்தகைய நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தின்37 கீழ் உள்ள பிற கடமைகளுக்கு முரணாக இருக்கக்கூடாது.
பிரபுக்கள் சபையின் முடிவு
‘பயங்கரவாத எதிர்ப்பும், குற்றமும் பாதுகாப்பும்’ சட்டத்தின் கீழ் உள்ள தடுப்புக் காவல் அதிகாரங்கள் நீதிமன்றங்களில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டன. டிசம்பர் 2004 இல், பிரபுக்கள் சபையானது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சூழ்நிலையின் அவசியங்களின் காரணமாகக் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன என்று, பகுத்தறிவின் அடிப்படையில் கருத முடியாது என்ற காரணத்தால், கூறப்பட்ட ‘விலகலுக்கான’ ஆணை, மகாநாட்டினால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் அந்த மாநாடு இவ்வாறு கூறுகிறது: “இந்த மாநாட்டில் கூறப்பட்டுள்ள உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றின் அனுபவம், பாலினம், இனம், நிறம், மொழி, மதம், அரசியல் அல்லது பிற தேசிய அல்லது சமூக தோற்றம், தேசிய சிறுபான்மையினருடன் தொடர்பு, சொத்து, பிறப்பு அல்லது பிற நிலை போன்ற எந்தவொரு அடிப்படையிலும் பாகுபாடு இல்லாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.38” இந்த அடிப்படையில், அதே சூழ்நிலையில் வேறு நபர்களும் இருக்கின்ற ஒரு நிலையில், இந்த வேறுபட்ட நடத்தைக்கு புறநிலையாக வேறு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் நிலையில், விசாரணைகள் எதுவுமின்றி வெளிநாட்டினரை மட்டும் தடுத்து வைப்பது தவறு என்று பிரபுக்கள் சபை கருதியது. விலக்கு ஆணை செல்லாது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு, குற்றம் மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2001 இன் கீழ் உள்ள தடுப்புக் காவல் அதிகாரங்கள் மகாநாட்டின் உரிமைகளுடன் பொருந்தாதவை என்றும் பிரபுக்கள் தீர்ப்பளித்தனர்39.
பயங்கரவாதத் தடைச் சட்டம் – 2005 (ஐக்கிய இராச்சியம்)
பிரபுக்கள் சபையின் இந்த முடிவைத் தொடர்ந்து, ‘பயங்கரவாத எதிர்ப்பும், குற்றமும் பாதுகாப்பும்’ சட்டத்தில் உள்ள தடுப்புக்காவல் விதிகளை மாற்றுவதற்காக, ஐக்கிய இராச்சிய அரசாங்கம் மார்ச் 2005 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது. ஒரு நபர் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிக்க நியாயமான காரணங்கள் இருந்தால், பொதுமக்களைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க இத்தகைய சட்டம் அவசியம் என்று கருதினால், அந்த நபருக்கு எதிராகக் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்க இந்தச் சட்டம் மாநிலச் செயலாளருக்கு அதிகாரம் அளிக்கிறது.40 கட்டுப்பாட்டு உத்தரவானது, ஒரு நபரின் வேலை, தொடர்பு, வசிப்பிடம் ஆகியவை உள்ளிட்ட பல வழிகளில் அவரைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் குறிப்பிட்ட இடங்களுக்குள் நுழைவதைத் தடையும் செய்யலாம். வீட்டுக் காவலுக்கு இணையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம்.41 இந்த விதிகள் பிரிட்டிஷ் குடிமக்கள், வெளிநாட்டினர் என்ற இருதரப்பினருக்கும் பொருந்தும்.
இத்தகைய கட்டுப்பாட்டு உத்தரவுகள் 12 மாதங்களுக்குச் செல்லுபடியாகும்42. ஆயினும் ஒன்றோ அல்லது அதற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களிலோ இவை புதுப்பிக்கவும் படலாம்43. ஒரு கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன், மாநிலச் செயலாளர் உயர் நீதிமன்றத்திடம்44 விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். மாநிலச் செயலாளர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி ஓர் உத்தரவைப் பிறப்பித்தால், அவர் உடனடியாக அந்த விஷயத்தை நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.45 பிந்தைய நிலையில், நீதிமன்றத்தின் பரிசீலனை அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் தொடங்க வேண்டும்46. செயலாளரின் முடிவு வெளிப்படையாகக் குறைபாடுடையதாக இருந்தால், நீதிமன்றம் அனுமதியை வழங்க மறுக்க வேண்டும்47; அல்லது ஏற்கனவே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால்48 அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்49. மாநில அரச செயலாளரின் விண்ணப்பத்தின் பேரிலும் நீதிமன்றம் கட்டுப்பாட்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.50 ஒரு கட்டுப்பாட்டு உத்தரவுக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு 48 மணி நேரம் காவலில் வைக்கப்படலாம் என்று இந்தச் சட்டம் வழங்குகிறது51. இந்த 48 மணி நேரக் காலத்தை நீதிமன்றம் மேலும் இன்னொரு 48 மணி நேரத்திற்கு நீட்டிக்கலாம்.52 அந்த நபர் கட்டுப்பாட்டு உத்தரவுக்குக் கட்டுப்பட்டவராக ஆகிவிட்டால் அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுக்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தால் அவர் விடுவிக்கப்பட வேண்டும்.53
பயங்கரவாத மசோதா
ஒக்ரோபர் 2005 இல், பிரிட்டிஷ் அரசாங்கம் பாராளுமன்றத்தில் பயங்கரவாத மசோதாவை அறிமுகப்படுத்தியது. இது ஜூலை 7 அன்று லண்டனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வந்தது. முன்மொழியப்பட்ட சட்டத்தின் மூலம், பயங்கரவாத சந்தேக நபர்களைக் குற்றச்சாட்டு ஏதுமின்றி 90 நாட்கள் வரை காவலில் வைப்பதற்கான காவல்துறையினருக்கான அனுமதியை அரசாங்கம் கோரியது. பொதுச்சபை (House of Commons) இந்தக் குறிப்பிட்ட முன்மொழிவை, நவம்பர் 9 அன்று நடந்த வாக்கெடுப்பில் 291 வாக்குகள் ஆதரவுடனும் 322 வாக்குகள் எதிர்ப்புடனும் நிராகரித்ததுடன், காவலில் வைக்கும் காலவரம்பை தற்போதைய 14 நாட்களில் இருந்து 28 நாட்களாக நீடிப்பதை ஆதரித்தது. பிரதமர் டோனி பிளேயரின் வலுவான பிரசாரத்தையும் மீறி, தடுப்புக் காவல் காலத்தை 90 நாட்களாக நீடிக்கும் முன்மொழிவுக்கு எதிராக 49 தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். ‘பொதுச்சபை, மற்றும் பிரபுக்கள் சபைகளின் உறுப்பினர்களைக் கொண்ட, மனித உரிமைகள் தொடர்பான கூட்டுக் குழுவினரிடம், இந்த 28 நாட்களுக்கு நீடிப்பது என்பது அரசாங்கத்திற்கு ஒரு சட்டச் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய சாத்தியத்தை உண்டாக்குவதுடன், அதற்கும் மேலாக, குற்றச்சாட்டுக்கு முந்தைய நீண்டகாலக் காவலுக்குப் பிறகு பெறப்பட்ட வாக்குமூலங்களை விசாரணையின் போது ஏற்றுக்கொள்ள முடியாத நிலையையும் ஏற்படுத்தக்கூடும்5 என்ற கருத்து நிலவியது.
தடுப்புக்காவல் காலத்தை நீடிப்பதற்கு சர்வதேச மன்னிப்பு சபை தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. தவிரவும், தற்போதுள்ள 14 நாட்கள்55 என்பது, குற்றச்சாட்டு ஏதுமின்றி ஒருவரைத் தடுத்து வைப்பதற்கு ஏற்கெனவே மிக நீண்ட காலமாகும் என்றும், இது ஒரு நபர் மீது சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் உடனடியாகத் தெரிந்துகொள்ளும் உரிமையை மீறுகிறது என்றும் அது கருதுகிறது. தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்சாட்டு ஏதுமின்றி காவல்துறை காவலில் வைப்பதற்கான விதிகள், சாதாரண சட்டத்தின் கீழ் உள்ளதை விட ஏற்கெனவே கணிசமாகக் கடுமையானவையாக உள்ளன என்று அந்த மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. சாதாரண சட்டத்தின்படி, கொலை போன்ற ஒரு கடுமையான குற்றத்தில் சந்தேகிக்கப்படும் ஒருவரைக் கூட, குற்றச்சாட்டு ஏதுமின்றி நான்கு நாட்களுக்கு மட்டுமே தடுத்து வைக்க முடியும். முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு விதிகளின் கீழ், அத்தகைய நபர் ஏழு மடங்குக்கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்படும் நிலமை ஏற்படலாம்.
குற்றச்சாட்டுக்கு முந்திய நீண்ட கால தடுப்புக்காவல், கைதிகள் ஒப்புதல் வாக்குமூலங்கள் போன்ற தன்னிச்சையற்ற வாக்குமூலங்களை அளிக்க வழிவகுக்கும் தவறான நடைமுறைகளுக்கான ஒரு சூழலை வழங்குகிறது என்பதைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது. மேலும், முன்மொழியப்பட்ட இந்த நீடிப்பு, மக்கள் மீது குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரும் நோக்கமோ அல்லது யதார்த்தமான வாய்ப்போ இல்லாமல் அவர்களைத் தடுத்து வைப்பது உள்ளிட்ட பிற தவறான நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் என்றும், இது பெயரளவில் மட்டுமே வேறுபட்டு, நடைமுறையில் ஒரு தடுப்புக்காவலுக்கு ஒப்பாக அமையும் என்றும் அது கவலை தெரிவிக்கிறது.56
பிரித்தானிய அரசாங்கம் தற்போது, இந்தச் சட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக, முஸ்லிம் சமூகம் உட்பட பல தரப்பினருடன் விரிவான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது.
நீதிமன்றத் தலையீடும் கலந்தாலோசனையும்
ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதச் சட்டம், ஒரு கொடுங்கோன்மைத் தனமானது என்று மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐக்கிய இராச்சியத்தின் சட்டங்கள், கைது மற்றும் தடுப்புக்காவல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக, நீதித்துறை மேற்பார்வை போன்ற பாதுகாப்புகளை வழங்குகின்றன. சட்டங்களின் சில பிரிவுகள் சர்வதேசச் சட்டத்திற்கு முரணானவை என்று அறிவிப்பதன் மூலம், நீதித்துறை பாதுகாப்பை வழங்கியுள்ளது; இதன்மூலம், அத்தகைய பிரிவுகளைத் திரும்பப் பெறவோ, அல்லது திருத்தவோ நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தியுள்ளது. வெளிப்படையாகவே கொடுங்கோன்மையானதாகவும், குடிமை உரிமைகளைப் பாதிக்கும் வகையிலும் உள்ள பிரிவுகளை நிராகரிப்பதன் மூலமும் நிர்வாகத்தால் தன்னை ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதைச் சட்டமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. விரிவான கலந்தாலோசனையும், அத்தகைய கலந்தாலோசனைக்கு அனுமதிக்கப்பட்ட நேரமும் நன்மை பயக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் தீவிரப் பிரசாரத்தைத் தொடர்ந்து, ‘பயங்கரவாதத்தைப் போற்றுதல்’ என்பதாக இழித்துரைக்கப்பட்ட இந்த ‘முன்மொழிவுச் சட்டத்தில்’ உள்ள குற்றத்தின் வரையறைகள் குறைக்கப்படும் என்று தோன்றுகிறது57.
துரதிர்ஷ்டவசமாக, நேர்மறையான இந்த அம்சங்கள் இலங்கையில் மிகவும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டவையாகவே தெரிகின்றன. கூடவே, அரசியலமைப்பின் கீழ், தனது விரிவான அதிகாரங்களைக் கொண்டுள்ள நிர்வாகம், நடைமுறையில் தடுத்து நிறுத்த முடியாததாக உள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2000 மற்றும் இது போன்ற இன்னபிற சட்டங்களின் கீழ் உள்ள பாதுகாப்புகளும் நீதித்துறை மேற்பார்வையும் கிடைக்கப் போவதில்லை. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரைப் பிடியாணையின்றிக் கைது செய்து 72 மணி நேரம் காவலில் வைக்கலாம். ஆனால், இந்த 72 மணித்தியால58 காலத்திற்குள், பாதுகாப்பு அமைச்சருக்கு, ஒருவரைக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்து, அந்த நபரை மூன்று மாதங்கள் காவலில் தொடர்ந்து வைப்பதற்கு அனுமதிக்கும் அதிகாரம் உண்டு. அதைவிட, அவரால் அத்தகைய உத்தரவை 18 மாதங்கள் வரை நீடிக்கவும் முடியும்59. அமைச்சரின் காவலில் வைப்பதற்கான உத்தரவு இறுதியானது. அதை எந்த நீதிமன்றத்திலோ அல்லது தீர்ப்பாயத்திலோ எந்த வகையிலும் கேள்விக்குட்படுத்த முடியாது60. ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமலேயே 18 மாதங்கள் வரை காவலில் வைத்திருக்க முடியும். உண்மையில், பல தமிழர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்களும், அதன்பிறகு அவசரகால விதிமுறைகளின் கீழ் பல மாதங்கள் அல்லது ஆண்டுகளும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சாதாரண சட்டமான குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1979 இன் படி, காவல்துறையினர் ஒருவரைப் பிடியாணையின்றி கைது செய்தால், அவர் 24 மணி நேரத்திற்குள்61 ஒரு நீதித்துறை நீதிபதி முன் முன்நிலைப்படுத்தப்பட வேண்டும். காவல் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள், பிடியாணையின்றி செய்யப்படும் அனைத்துக் கைதுகளையும் நீதித்துறை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்62 என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) ஓர் அவசர மசோதாவாக அறிவிக்கப்பட்டு, எந்தவொரு பொது விவாதமும் இல்லாமலே பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது. எந்தவொரு நீதிமன்றமும், எந்தவொரு காரணத்திற்காகவும் இத்தகைய ஒரு சட்டத்தின் செல்லுபடியாகும் தன்மையை விசாரிக்கவோ, தீர்ப்பளிக்கவோ அல்லது எந்த வகையிலும் கேள்விக்குட்படுத்தவோ முடியாது என்று சொல்கிறது அரசியலமைப்பு63. அரசியலமைப்புக்கு முரணான ஒரு சட்டம் கூட, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை காரணமாகப் பாராளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அது சட்டமாக இயற்றப்படலாம் என்றும் அந்த அரசியலமைப்பு சொல்கிறது64.
சமூகத்தின் கவலைகள்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ்ச் சமூகத்திற்குப் பல கவலைகள் உள்ளன. மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினராலும் மீறல்கள் செய்யப்படுகின்றன என்பதுடன், போர் நிறுத்த ஒப்பந்தமும் இத்தகைய அத்துமீறல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர் லட்சுமன் கதிர்காமர் படுகொலையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் சுற்றிவளைப்பு, தேடுதல் ஆகிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு கொழும்பு போன்ற நகரங்களில், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பலர் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் சிலர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டும் உள்ளனர். சில சமயங்களில், அவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அல்லது வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்கான அனுமதியின்றி பல நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகின்றனர். அதேவேளை, பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின்65 கீழ் மேலும் சுமார் 40 பேர் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளாகவே உள்ளனர் என்றபோதும் அவர்களின் வழக்குகள் இன்னும் நிலுவையிலேயே உள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் உதவியுடன், வடக்கு – கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பாதுகாப்புப் படையினரால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால், மிகச் சில வழக்குகளில் மட்டுமே குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் யாரேனும் தண்டிக்கப்பட்டுள்ளார்களா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. சர்வதேச சமூகங்களின் கவலைகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தபோதிலும், திட்டமிட்ட சித்திரவதைக்கான இயந்திர அமைப்பு இன்னமும் அப்படியே உள்ளது. மட்டுமல்லாமல், அரசியல் ஆதரவின் காரணமாக குற்றவாளிகள் தொடர்ந்தும் தண்டனைகளிலிருந்து தப்பித்து வருவதாகத் தெரிகிறது. சித்திரவதை என்பது காவல்துறையினரால் விசாரணையின் ஒரு முறையாக வழக்கமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அது திட்டமிட்ட மற்றும் பரவலான ஒன்றாக நிலவுகிறது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (SLHRC) தெரிவித்துள்ளது. கைதிகளின் நிலைமைகளைக் கண்காணிக்க, மனித உரிமைகள் அமைப்புகள் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்புக்காவல் மையங்களை அணுகுவது என்பது சித்திரவதையைத் தடுப்பதற்கான முயற்சியில் முக்கியமானது. ஆனால் பொலிஸ்மா அதிபர் (IGP), இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திடீர் வருகைகளை எதிர்த்து வருகிறார். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 106 காவல்துறையைச் சார்ந்த உறுப்பினர்களை வேலை இடைநீக்கம் செய்ததற்காக, காவல்துறையின் ஆணைக்குழுவையும் கூட இவர் விமர்சித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில், ஜனவரி 1988 முதல் டிசம்பர் 1995 வரை நடந்த 37,662 காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான புகார்களை நான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் விசாரித்து, 21,115 வழக்குகளில் காணாமல் போனதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தன. காணாமல் போதலுக்குப் பொறுப்பான பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களை அந்த ஆணையங்கள் பதிவு செய்திருந்த போதிலும்66, இந்த வழக்குகளில் மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கின்றனர். மேலும் சிலர் பதவி உயர்வு கூடப் பெற்றுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் ஆலோசகர் இயன் மார்ட்டின் (Ian Martin), பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள வழக்குகளை முழுமையாக மீளாய்வு செய்யவும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் பரிந்துரைத்தார். மேலும், கடந்தகால அநீதிகளைச் சரி செய்வதற்கான ஒரு தெளிவானதும் விரிவானதுமான கொள்கையே, எதிர்கால மீறல்களைச் செயற்திறனுடன் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆயினும், இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களின் அளவோடு ஒப்பிடுகையில், அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையுமே எத்தகைய முக்கியத்துவமும் அற்றவையாகவே உள்ளன. இது தண்டனைகளற்ற ஒரு நிலமையைத் தூண்டுவதாக இருந்தது மட்டுமன்றி, மேலும் பல சட்டமீறல்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இலங்கையில் உள்ள மனித உரிமை நிறுவனங்களுக்கு, மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பாதுகாப்பையும் போதுமான பரிகாரத்தையும் வழங்குவதற்குத் தேவையான அதிகாரம் இல்லை. குற்றவாளிகளைத் தண்டிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை. இலங்கை மனித உரிமைகளுக்கான கமிஷனும் (SLHRC) பலவீனமாக உள்ளது. அதனை வலுப்படுத்தவும், அதற்கு நம்பகத்தன்மையையும் செயல்திறன் மிக்க அதிகாரங்களை வழங்கவும் வேண்டுமென்றால், மனித உரிமைப் பேரவைக்கான சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும். இவற்றில் போதுமான நிதி ஒதுக்கீடு, நிதிக் கையாள்கைக்கான சுதந்திரம், அதன் முடிவுகளை அமுல்படுத்துவதற்கான அதிகாரங்கள் என்பவையும் அடங்கும். ஆணைக்குழுவில் உள்ள ஊழியர்களிடையே ஏற்படும் உட்கட்சிச் சண்டைகளால் அவர்களது பணிகள் பாதிக்கப்படுவதாகவும், சில அதிகாரிகளுக்கு இத்தகைய ஒரு முக்கிய நிறுவனத்திற்குத் தேவையான அர்ப்பணிப்பும் நேர்மையும் முற்றிலும் இல்லை என்ற தகவல்களும் தமிழ்த்தகவல் மையம் (Tamil Information Centre) என்ற அமைப்புக்குக் கிடைத்துள்ளது. ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் தகுதி குறித்தும் கூட பல சந்தேகங்கள் நிலவுகின்றன. அவர்களது நேர்மையையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவது தொடர்பான அதிக கண்காணிப்பும் தேவைப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள்
2002 இல் காலாவதியான அவசரகால நிலை, இலங்கையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. கொலைகள், வன்முறை மற்றும் நிச்சயமற்ற தன்மை நிலவும் தற்போதைய சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழக்கூடும். இச்சூழ்நிலையில், அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக ரத்து செய்வதே நீண்டகால நோக்கமாக இருக்க வேண்டும். அதே சமயம், சட்டத்தைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ நீண்ட காலமாக மனித உரிமை ஆர்வலராக இருந்து வருகிறார், மேலும் மனித உரிமைகளுக்குத் தனது மரியாதையையும் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதியிடம் இந்தப் பிரச்சினையை எடுத்துரைத்து, சித்திரவதைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கோருவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையலாம். இதன் மூலம், அச்சட்டம் சர்வதேசத் தரங்களுக்கு இணையாகக் கொண்டுவரப்பட முடியும். அதே நேரத்தில், சித்திரவதை உட்பட மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை வழங்காமை, வழக்குத் தொடருதல், தண்டனை வழங்குதல் போன்றவை தொடர்பான பிற பிரச்சினைகளையும் இந்த அமைப்புகள் எடுத்துரைக்கலாம். பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பரிந்துரைகள் கீழே தரப்படுகின்றன (இவற்றில் பலவற்றை சர்வதேச மனித உரிமைகள் சங்கம் சர்வதேச நீதிமன்றம், இலங்கையின் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் ஏற்கனவே முன்வைத்துள்ளன):
1. சட்டத்தின் பிரிவு 7(1) இன் கீழ், கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அதன் பிரிவு 9 இன் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாவிட்டால், 72 மணி நேரத்திற்குள், ஒரு நீதிபதி முன் அவர் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டபடி, ஓர் அமைச்சர் 72 மணி நேரத்திற்குள் தடுப்புக்காவல் ஆணையைப் பிறப்பித்தால், அந்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. காவல்துறையினரால் நீதிமன்றில் அத்தகைய ஒரு விண்ணப்பம் செய்யப்பட்டால், கைது செய்யப்பட்ட நபரை, அவரது விசாரணை முடியும் வரை நீதிபதி காவலில் வைக்க வேண்டும் என்று பிரிவு 7(1) குறிப்பிடுவதால், அது நீதிமன்றத்தின் விருப்புரிமையை மீறுகிறது. கைது செய்யப்பட்ட நபர் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்குவதற்காக பிரிவு 7 திருத்தப்பட வேண்டும். காவல்துறையினர் விசாரணைக்காக அந்த நபரை மேலும் காவலில் வைக்க விரும்பினால், அவர்கள் நீதிமன்றங்களில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் குற்றச்சாட்டு இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு மேலதிக தடுப்புக் காவலும், ஆறு நாட்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை நிராகரிக்கும் விருப்புரிமை நீதிமன்றத்திற்கு இருக்க வேண்டும், மேலும் வழங்கப்படும் எந்தவொரு கால நீடிப்பும், அதன் நியாயத்தன்மை மற்றும் விசாரணை முறையாக நடத்தப்பட்டதா என்பதைப் பொறுத்து அமைய வேண்டும்.
2. கைது செய்யப்பட்ட நபருக்கு, கைதுக்கான காரணங்களைத் தாமதமின்றித் தெரிவிக்கவும், காவலில் உள்ள நபரால் பரிந்துரைக்கப்பட்ட உறவினர் அல்லது மற்றொரு நபருக்குத் தகவல்களை வழங்கவும் காவல்துறையைக் கட்டாயப்படுத்தும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நபருக்கும், கைதுக்கான காரணங்கள், காவலில் வைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் காவல்துறை எடுக்க உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் ஆகியவை தெரிவிக்கப்பட வேண்டும்.
அ. கைது செய்யப்பட்டவர் எவரும் தாமதமின்றி ஒரு சட்டப் பிரதிநிதியை அணுகும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆ. சட்டப் பிரிவு 9(1) இன் கீழ், ‘அமைச்சர் மூன்று மாதங்களுக்குக் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்கலாம். பின்னர் இது 18 மாதங்கள் வரை நீடிக்கப்படலாம்’ என்ற இந்தப் பிரிவு திருத்தப்பட வேண்டும். மற்றும் விசாரணையின் போது காவலில் வைக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். அதன்படி, அமைச்சரின் உத்தரவு இறுதியானது என்று கூறும் பிரிவு 10, ரத்து செய்யப்பட வேண்டும்.
இ. சட்டப் பிரிவு 6(1) இன் கீழ் பிடியாணையின்றி எந்தவொரு இடத்திலும் நுழைந்து சோதனையிடும் அதிகாரம் பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான காரணங்களுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
அ. பிரிவு 11 இன் கீழ் 18 மாதங்கள் வரை வசிப்பிடம், வேலைவாய்ப்பு, பயணம் மற்றும் சங்கங்கள் என்பவை மீதான கட்டுப்பாட்டு உத்தரவுகள் மிகவும் விரிவானவை. அவை திருத்தப்பட வேண்டும் அல்லது ரத்துச் செய்யப்பட வேண்டும். கட்டுப்பாட்டு உத்தரவுகள் மீது நீதித்துறை மேற்பார்வைக்கு எந்த விதியும் இல்லை. சட்டப்படி, கட்டுப்பாடுகளின் தேவைக்கான சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றங்கள் தங்கள் அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும். தடுப்புக்காவலைப் போலவே, கட்டுப்பாட்டு உத்தரவுகளும் மிகக் குறுகிய காலத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
ஆ. பிரிவு 7(3) இன்படி, ஒரு புலனாய்வு பொலிஸ் அதிகாரிக்கு, காவலில் உள்ள ஒரு நபரை அணுகுவதற்கும், விசாரணைக்காக நியாயமான நேரங்களில் அவரை எந்தவொரு இடத்திற்கும் அழைத்துச் செல்வதற்கும், விசாரணைக்காக இடம் விட்டு இடம் என்று வெவ்வேறு இடத்திற்கு அழைத்துச் செல்வதற்கும் உரிமை உண்டு. இந்தப் பிரிவு (கைதிக்கு) எந்தப் பாதுகாப்புகளையும் வழங்கவில்லை என்பது மட்டுமன்றி கிட்டத்தட்ட சித்திரவதை செய்வதற்கான உரிமையையும் வழங்குகிறது. விசாரணைக்கு முன்னர் தடுப்புக்காவலில் உள்ளவருக்கு அவரது உரிமைகள் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் போது தடுப்புக்காவலில் உள்ளவருக்காக வாதாடும் ஒரு வழக்கறிஞர் உடன் இருக்க வேண்டும் என்றும் இந்தப் பிரிவு திருத்தப்பட வேண்டும். தடுப்புக்காவலில் உள்ளவர்களை எந்த இடத்திற்கும், ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கும் அழைத்துச் செல்லும் வரம்பற்ற அதிகாரம் நீக்கப்பட வேண்டும்.
இ. பிரிவு 7, பிணை வழங்குவதற்கான விருப்புரிமையை நீதிமன்றங்களிடமிருந்து பறிக்கிறது. இது திருத்தப்பட்டு, நீதிமன்றங்கள் பிணை வழங்க அனுமதிக்கப்பட வேண்டும்.
ஈ. பிரிவுகள் 16, 17 என்பவை குற்றவாளிகள், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில் வழங்கப்படும் வாக்குமூலங்களை, ஆதாரபூர்வமான சான்றுகளாக ஏற்றுக்கொள்ளச் செய்கின்றன. பிரிவு 16, வாக்குமூலங்கள் தொடர்பற்றவை என்பதை நிரூபிக்கும் நிரூபணச் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீதே சுமத்துகிறது. இந்தப் பிரிவுகள், சாட்சியச் சட்டத்தின் 24 – 26 ஆம் பிரிவுகளை (காவல்துறையிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை ஆதாரபூர்வமான சான்றுகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை) செல்லாததாக்குகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும்பாலான வழக்குகளில், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் ஒரே சான்று வாக்குமூலம் மட்டுமே என்பது கவனிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலங்களைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளச் செய்யும் விதிகள் இருப்பதால், வாக்குமூலங்களைப் பெறுவதற்காக பரவலான சித்திரவதைகளுக்கு அவை வழிவகுத்துள்ளன. இந்த இரண்டு பிரிவுகளும், சாட்சியத்தின் இயல்பான விதிகளுக்குப் பொருந்தும் வகையில் திருத்தப்பட வேண்டும். குற்றமின்மையை நிரூபிக்கும் சுமையை குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தும் சட்டப் பிரிவு 16 உம் திருத்தப்பட வேண்டும்.
உ. சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஏதேனும் உத்தரவின்படியோ அல்லது வழிகாட்டுதலின் படியோ அல்லது அதன் தொடர்ச்சியாக நடப்பது என்று கருதப்படும் வகையிலோ, (இப்படித்தான் இருக்கும் என்ற) நன்நம்பிக்கையுடன் செய்யப்பட்ட ஒரு செயலுக்காக அலுவலர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என்று பிரிவு 26 கூறுகிறது. ஆயினும், எந்தவோர் அதிகாரியின் எந்தவொரு செயலும், அதற்குரிய சட்டத்தாலேயே அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இந்தப் பிரிவு சட்டத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்.
சில குறிப்புகள்:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐக்கிய இராச்சியத்தின் (United States) சட்டங்களது முழுமையான வடிவங்களை கீழ்வரும் வலைத்தள முகவரிகளில் காணக் கிடைக்கலாம்:
- Office of Public Sector Information (Formerly Her Majesty’s Stationery Office): www.opsi.gov.uk
- Full text of the Sri Lankan Prevention of Terrorism Act (Tamil Nation): www.tamilnation.org/srilankalaws
- UK government notes on laws and proposed legislation (UK Home Office): http://security.homeoffice.gov.uk/counter-terrorism-strategy/legislation/
- Briefings on UK terrorist legislation and human rights:
- Liberty: www.liberty-human-rights.org.uk/press
- Justice: www.justice.org.uk/inthenews
- Amnesty International: http://web.amnesty.org/library/Index
- Statewatch: www.statewatch.org/
அடிக்குறிப்புகள்
1. நூல்: ‘The Perpetual Pessimist’ (1963) p.58
2. ‘கட்டாய அல்லது சுயவிருப்பின்றி காணாமல் ஆக்கப்படுதல்’ தொடர்பான ஐக்கிய நாடுகள் செயற்குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட பயணம் குறித்த அறிக்கை: Session; E/CN.4/1992/18/Add. 1 (7-17 October 1991), 48 ஆவது மனித உரிமைக் கமிஷன்.
3. சித்திரவதைக்கு எதிரான குழுவின் இறுதிக் கருத்துகள்: இலங்கை 19 மே 1998: A/53/44, paras. 243-257
4. கட்டாய அல்லது சுயவிருப்பற்ற காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான செயற்குழு உறுப்பினர் ஒருவரின் இலங்கைப் பயணம் குறித்த அறிக்கை (25-29 அக்டோபர் 1999), மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 56 ஆவது அமர்வு, 21 December 1999; E/CN.4/2000/64/Add.
5. இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழுவின் முடிவுரையின் (சங்கத்தின் 9 ஆவது பிரிவின் கீழ், உறுப்பு நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின் பரிசீலனை), ஐம்பத்தொன்பதாவது அமர்வு, 30 July – 17 Aug 2001 – 14/09/2001; A/56/18, பிரிவுகள் 321-342
6. பிரிவு: 2.12
7. இங்கு குறிப்பிடப்படும் உடன்படிக்கை என்பது, பொதுவான அவசரகால நிலைகளில் உள்ள கடமைகள் தொடர்பாக எழும் சர்வதேச உடன்படிக்கை (சரத்து 4), தன்னிச்சையான குடிசார் அரசியல் உரிமைகள் (ICCPR), சட்டவிரோத கைது, தடுப்புக்காவல் (சரத்து 9), குற்றவியல் நடவடிக்கைகள் (சரத்து 8) என்பவற்றுடன் தொடர்பானதாகும்.
8. இலங்கை மனித உரிமைகள் குழுவின் அவதானங்களின் முடிவுகள், 1 December 2003; CCPR/CO/79/LKA
9. Section 41 (1)-(3)
10. Section 41(3)
11. Paragraph 29(1) under Part Ill of Schedule 8
12. Paragraph 30(1) (b) under Part III of Schedule 8
13. Paragraph 30(2) under Part Ill of Schedule 8
14. Paragraph 29(3) under Part Ill of Schedule 8
15. Paragraph 32(1) (a) under Part III of Schedule 8
16. Paragraph 32(1) (b) under Part Ill of Schedule 8
17. Paragraph 32 (2) (அ) அட்டவணை 8 இன் பகுதி III இன் கீழ் – பிரிவு 40(1) (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளின் கீழான குற்றங்கள். இந்தக் குற்றங்கள் பின்வருமாறு: தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினராக இருத்தல் அல்லது உறுப்பினராக இருப்பதாகக் கூறுதல் [பிரிவு 11]; தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவளிக்குமாறு அழைத்தல் அல்லது ஆதரவளிப்பதற்காகக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் [பிரிவு 12]; பயங்கரவாத நோக்கத்திற்காகப் பணம் அல்லது சொத்தை வழங்குதல் அல்லது வழங்குமாறு அழைத்தல் அல்லது பெறுதல் [பிரிவு 15]; பயங்கரவாத நோக்கத்திற்காகப் பணம் அல்லது சொத்தைப் பயன்படுத்துதல் [பிரிவு 16]; பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பணம் அல்லது சொத்தைக் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் [பிரிவு 17]; பயங்கரவாத நோக்கங்களுக்காகப் பண மோசடி செய்தல் [பிரிவு 18]; துப்பாக்கிகள், வெடி பொருட்கள் அல்லது இரசாயன, உயிரியல் அல்லது அணு ஆயுதங்களைத் தயாரித்தல் அல்லது பயன்படுத்துவதில் பயிற்சி அளிக்க, பெற அல்லது மற்றவருக்குப் பயிற்சி அளிக்க அழைத்தல் [பிரிவு 54]; பயங்கரவாதச் செயல்களைச் செய்வதில் சம்பந்தப்பட்ட ஓர் அமைப்பின் செயல்பாடுகளை எந்த மட்டத்திலும் இயக்குதல் [பிரிவு 56]; மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு வெளியே, ஐக்கிய இராச்சியத்தில் செய்யப்பட்டிருந்தால் பிரிவுகள் 15-18 இன் கீழ் ஒரு குற்றமாக அமைந்திருக்கும் எதையும் செய்வது [பிரிவு 63].
18. Paragraph 32(2) (b) under Part III of Schedule 8
19. Paragraph 36 under Part III of Schedule 8
20. Paragraph 6 under Part 1 of Schedule 8
21. Paragraph 7 under Part 1 of Schedule 8
22. Paragraph 8(1) under Part 1 of Schedule 8
23. Paragraph 8(2) under Part 1 of Schedule 8
24. Paragraph 8(3) under Part 1 of Schedule 8
25. Paragraph 8(4) & (5) under Part I of Schedule 8
26. Paragraph & (7) under Part 1 of Schedule 8
27. Section 21 (1) (b); ‘பயங்கரவாதி’ என்பது ஒரு சர்வதேச பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு நபர் என வரையறுக்கப்பட்டுள்ளது [பிரிவு 21(2)]. சர்வதேச பயங்கரவாதச் செயல்களில் அக்கறை கொண்டவர் அல்லது அதில் உறுப்பினராக இருப்பவர் [பிரிவு 21(2)].
28. Section 21(1) (a)
29. Section 22
30. Section 23
31. Chahal V. United Kingdom – European Court of Human Rights Strasbourg, 15 November 1996 [70/1995/576/662]
32. Article 5(1) (c)
33. Article 5(1) (f)
34. Under Section 14(1) of the Human Rights Act 1998; the order came into force on 13 November 2004.
35. Human Rights Act 1998 (Designated Derogation) Order 201
36. Security Council Resolutions 1368 of 2001 and 1373 of 2001
37. Article 15(1)
38. Article 14
39. A (FC) & Others (FC) (Appellants) V. Secretary of State for the Home Department (Respondent), 16 December 2004,204, UKHL 56 on appeal from [2002] EWCA Civ 1502
40. Section 2(1)



