தமிழ்மொழி பேசும் மக்களின் வரலாற்றிற்கு அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களைக் கொண்ட அறிவியல் பாரம்பரியம் உண்டு. இன்றைய உலக மொழிகளைப் பேசும் மக்களுள் இந்தப் பெருமை அனைத்தும் கொண்ட மக்கள், தமிழ்க்குடும்ப மொழிகளைப் பேசும் மக்களைத் தவிர வேறு பலர் இல்லை என்பதே எனது தாழ்மையான அபிப்பிராயம்.
அறிவியல்பூர்வமான ஆதார அணுகுமுறை இல்லாத காலகட்டத்தில் நமது வரலாறு மட்டுமல்ல, உலகின் பல்வேறு மக்களின் வரலாறுகளும் புராணங்களாகவும், புனைகதைகளாகவுமே அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், நவீன மானிடவியல், மரபணுவியல், தொல்லியல், மொழியியல், கல்வெட்டியல், நாணயவியல், இலக்கியம் ஆகிய ஆய்வுக் கருவிகள் காட்டும் சான்றுகளைக் கொண்டு இந்த வரலாறுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, ஆதாரபூர்வமான வரலாறுகள் இன்று எழுதப்பட்டு வருகின்றன.
ஆனால், இன்றைய தமிழகத்திலோ உயர்கல்வி கற்ற சில கல்விமான்களையும், பேராசிரியர்களையும் தவிர, தம்மை அறிஞர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலர் புராதன காலத்தில் நமது புலவர்கள் மிகைப்பட எழுதி வைத்த புனைகதைகளையே (Fictional Poetic Exaggerations) நமது பண்டைய வரலாறாக இன்னமும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையான வரலாற்றை அறிந்த பல பேராசிரியர்களோ ‘நீண்ட காலமாக – தலைமுறை தலைமுறைகளாக – அறிவியலுக்கொவ்வாத கற்பனைக் கதைகளைப் பிடிவாதமாகப் பேசிக்கொண்டிருக்கும் இவர்களிடம் பேசிப் பிரயோசனமில்லை’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதற்காக விஞ்ஞான யுகமான இந்த இருபத்தொராம் நூற்றாண்டில், உலக அறிவியல் அரங்கில் என்றோ நிராகரிக்கப்பட்டுவிட்ட கருத்துகளை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்டிருக்கும் புனைகதைகளை நமது புராதன வரலாறாகக் கொள்வது நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
‘தமிழர்’ என்ற சொற்பதம் மொழியை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதமே தவிர, அவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் எனப் பொருள் கொள்வது தவறு. இற்றைக்கு 70,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறி வெவ்வேறு காலகட்டங்களில் தென் ஆசியாவை வந்தடைந்து – பின்னர் தமிழகத்தை வந்தடைந்த ஹோமோ சேப்பியன்ஸ் (Homo Sapiens) எனப்படும் நவீன மனிதர்களின் வம்சாவளியினரின் ஒரு பகுதியினர் பின்னர் ஒரு காலகட்டத்தில் தமிழ் மொழி பேசும் தமிழர்களானார்கள். இவர்களின் தமிழக வருகை இந்நூலில் மரபணுவியல் ஆதாரங்களுடன் விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஆபிரிக்காவிலிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரவிய ஹோமோ சேப்பியன்ஸ் மக்கள் பேசிய ‘ஆதி ஆபிரிக்க பேச்சு வழக்குகளிலிருந்தே’ இன்று உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளும் உருவாகின என்பது இன்றைய மொழியியல் ஆய்வுகள் காட்டும் முடிபு. இன்று உலகில் பேசப்படும் மொழிகளும், பேச்சு வழக்குகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பது மொழியியல் வல்லுநர்களால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் தமிழ் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழர்களைப் பற்றிய ஆரம்பகால வரலாறுகள் பெரும்பாலும் சங்ககால இலக்கியங்களை மட்டுமே முதன்மைச் சான்றாகக் கொண்டு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. சங்ககால இலக்கியங்கள் சமகாலத்தைய தமிழர் சமுதாயத்தைப் பற்றிய பல தரவுகளைத் தந்துள்ள போதிலும், அவை அக்காலத்தைய சமூக வாழ்க்கையின் பலதரப்பட்ட முகங்களையும் காட்டவில்லை என்பதே உண்மை.
உதாரணமாக – அன்றைய தமிழகத்தில் சமண மதம் பெற்றிருந்த செல்வாக்கினை கிறிஸ்துவுக்கு முற்பட்ட கல்வெட்டு ஆதாரங்கள் எடுத்தியம்புகின்றன. தமிழகத்தில் பௌத்த மதம் பரவியிருந்ததை காலத்திற்குக் காலம் நாடெங்கும் கண்டெடுக்கப்பட்டு வரும் புத்தர் சிலைகளும், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் காணப்படும் பௌத்த மதப் புதைப்படிவங்களும் எடுத்துரைக்கின்றன. ஆனால், இச்செய்திகள் சங்ககால இலக்கியங்களில் முக்கியப்படுத்திக் கூறப்படவில்லை.
அன்றைய தமிழக வணிகர்கள் கடல் கடந்து மேலை நாடுகளுக்கும், தூர கிழக்கு நாடுகளுக்கும் வர்த்தக முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றதை அந்நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஆதாரங்களும், தமிழ்ப் பிராமி எழுத்துகள் பதித்த கல் ஓடுகளும், அந்நாடுகளின் வர்த்தகர்களோடு செய்து கொண்ட வணிக ஒப்பந்தங்களும் இன்று நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகள் சங்க இலக்கியங்களில் பெரிதாக இடம்பெறவில்லை.
கடந்த இரு தசாப்தங்களாக தமிழகத்திலும், இலங்கையிலும் நடைபெற்றுவரும் அகழாய்வுகளில் கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து தமிழ் மக்கள் பயன்படுத்திய எழுத்து வடிவங்கள் முத்திரைகளிலும், மோதிரங்களிலும், நாணயங்களிலும், பானை ஓடுகளிலும், கல்வெட்டுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் சங்ககால அரசர்கள் வெளியிட்ட நாணயங்களையும் இன்று நாம் காண முடிகிறது. இவை பற்றிய தரவுகள் ஏதும் சங்க இலக்கியங்களில் இல்லை.
மேலும், காலத்திற்குக் காலம் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள், பிற நாடுகளுடனான தொடர்புகள், அறிவியல் முன்னேற்றங்கள் ஆகியவற்றின் தாக்கங்களினால் சமுதாய மாற்றங்கள் கட்டாயமாக இடம்பெற்ற வண்ணம் இருந்திருக்கும். ஆனால், சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்படும் வரலாற்று நூல்களில், பல நூற்றாண்டுகளாக (கி.மு. 500 – கி.பி. 300) தமிழர் சமூகம் ஒரே வகையான வாழ்க்கை நிலைகளில் இயங்கி வந்திருப்பதாகத் தரப்படும் செய்திகளை ஏற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.
பாண்டிச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கா. ராஜன் அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல “ஒரு குறிப்பிட்ட முதன்மைச் சான்றினை மட்டும் முன்னிறுத்தி ஆய்வு மேற்கொள்ளும் போது அவ்வாய்வு ஒரு சமூகத்தின் பன்முகத் தன்மையினை வெளிப்படுத்தாது, முழுமை பெறாமல் போகிறது. இலக்கியம், கல்வெட்டு, நாணயம், அயல் நாட்டவர் குறிப்புகள், அகழாய்வுச் சான்றுகள் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி ஆய்வு செய்வதன் மூலமே ஓரளவு அன்றைய தமிழர் சமூகத்தை நாம் மீள் உருவாக்கம் செய்ய முடியும்”. பேராசிரியர் கூறும் இந்த முறையியல் கருத்தே (Methodology Concept) இந்நூல் உருவாக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இவற்றோடு நிலவியல், மானிடவியல், மரபணுவியல், மொழியியல் ஆதாரங்களையும் மேற்கொண்டே இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
தொல்பழங்காலத்தில் வாழ்ந்த மக்கள் மானிடப் படைப்பாற்றலின் முன்னோடிகள் ஆவர். அவர்கள் வாழ்ந்த காலத்தைய வசதிகளைக் கொண்டு, அவர்கள் உருவாக்கிய செய்பொருட்கள், உபயோகித்த கருவிகள், வரைந்த ஓவியங்கள் என்பவற்றின் வழியாக அவர்கள் மிக்க அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் இன்று அறிய முடிகிறது.
மனித வரலாற்றைப் பூமியின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாது. பூமியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் காலகட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் பொதிந்து கிடக்கின்றன. இவ்வடுக்குகளில் மனித முன்னோடிகளின் – மூதாதையர்களின் – எலும்புகளின் புதைப்படிவங்கள் (Fossil Bones) மண்ணில் புதைந்து கிடக்கின்றன.
மனித இனங்களின் படிநிலை வளர்ச்சியின் பல்வேறு காலகட்டங்களை அறிவதற்கு புதைப்படிவங்களினதும், அவை காணப்படும் மண்ணடுக்குகளினதும் காலக் கணிப்புகளை அறிவியல்பூர்வமாகக் கண்டறியக்கூடிய அறிவு நமக்கு வேண்டியிருக்கிறது. இந்தக் கணிப்புகளைக் கொண்டே மனித வரலாற்றின் பரிணாம வளர்ச்சி நிலைகளையும், வெவ்வேறு வளர்ச்சி நிலைகளின் காலகட்டங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது.
மனித இனங்களின் உடலமைப்பு பற்றிய ஆய்வுகள் மனித உடலின் பரிணாம வளர்ச்சியின் போது உடலமைப்பில் எவ்வகையான மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதைக் கண்டறியும் ஆய்வுகளாகும்; முக்கியமாக அவர்களின் மூளை வளர்ச்சி பற்றிய அறிவும், மூளை வளர்ச்சிக்கேற்ப எவ்வாறு அவர்களின் கபால ஓடுகளின் உருவங்கள் மாற்றமடைகின்றன என்பதன் கற்றலுமாகும். இது தொல்மானிடவியல் (Palaeoanthropology) எனப்படும் கற்கை நெறியாகும்.
அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களை ஆராய்ந்து, அவற்றின் காலம், அவற்றை உருவாக்கிய மனிதர்கள், அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்ட கருவிகளா அவை? என்ற கணிப்பீடு ஆகியவற்றில் ஆய்வுகளைச் செய்தல் தொல்லியல் கற்கையின் (Archaeology) முக்கிய பகுதிகள் ஆகும்.
தொல்லியல் நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைப் பற்றியும், அவர்களது வாழ்க்கை முறைகளையும், அவர்கள் வாழ்ந்த சூழலைப் பற்றியும் ஆராய்வதற்குப் பயன்படும் தலைசிறந்த நவீன கருவிகளில் ஒன்றாகும். ஆரம்ப நாட்களில் தொல்லியல் கண்டுபிடிப்புகள், இந்தியாவின் புராதன இலக்கியங்களோடு ஒப்பீடு செய்யப்பட்டு இலக்கியங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க உபயோகப்படுத்தப்பட்டன. ஆனால், தொல்லியல் கண்டுபிடிப்புகள் எல்லாச் சமயங்களிலும் இலக்கியங்கள் கூறும் சம்பவங்களோடு ஒத்துப்போவதில்லை. சில பண்டைய இலக்கியங்களின் மேதாவித்தனமான, அதிகாரத் தோரணையில் எழுதப்பட்டிருக்கும் (Tyranny of the Text) கூற்றுகளை ஏற்க மறுக்கும் பல தொல்லியலாளர்கள் இக்காலத்தில் பண்டைய இலக்கியங்களை பெரிதாகக் கவனத்தில் எடுப்பதில்லை.
நமது முன்னோர்கள் விட்டுச்சென்ற தொல்பொருட்களில் – அவர்கள் உபயோகித்த அன்றாடப் பாவனைப் பொருட்கள், கல்லாயுதங்கள், மட்பாண்டங்கள், குடியிருப்பு அடுக்குகள், கட்டடங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், எழுத்து வடிவங்கள் என்பன உள்ளடங்கும். இவற்றின் மூலம் பெறப்படும் அவர்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரிகம் பற்றிய தகவல்கள், அறிவியல் ரீதியான தொல்லியல் ஆய்வின் அடிப்படைத் தரவுகளாகும்.
ஆரம்ப நாட்களைப் போலல்லாது இன்றைய காலத் தொல்லியல் ஆதாரபூர்வமான அறிவியல் கற்கைநெறியாகும். செம்மையாக்கப்பட்ட நுட்பங்களுடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு முறைகள் (Sophisticated Methods of Excavation), அகழ்வில் கண்டெடுத்த கருவூலங்களின் ஆதாரக் கூறுகளை உய்த்துணரும் பொருட்டு உபயோகப்படுத்தப்படும் அறிவியல் தொழில்நுட்பங்கள் (Scientific Techniques) என்பன பலதரப்பட்ட தகவல்களைத் தருகின்றன: காலக்கணிப்பு, அன்றைய வெப்பதட்ப நிலை, சூழல் (Ecology), குடியேற்ற அமைப்புகள் (Settlement Patterns), மிருகங்கள், புராதன தாவரவியல் (Palaeobotany), அகழ்வில் கண்ட தாவர, பயிர் விதைகளின் பகுப்பாய்வு என்பன. இத்தகவல்கள் அன்றைய மனிதர்களின் குடியேற்ற அமைப்புகளின் முழுமையான பரிமாணத்தைத் தருகின்றன. இத்துடன் மரபணுவியல், உயிரியல்சார்-மானிடவியல், சமூக மானிடவியல், கல்வெட்டியல், தொல்லெழுத்தியல், நாணயவியல் ஆகிய சாதனங்களை இணைத்து – வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான உண்மையான, நம்பகத்தன்மையான ஆதாரபூர்வமான வரலாற்றை இன்று நம்மால் எழுத முடிகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்துக் கலையை மனிதன் கண்டுபிடிப்பதற்கு முற்பட்ட காலமாகும். எழுத்துக்கலை கண்டுபிடிக்கப்பட்டு களிமண் வில்லைகளிலும், கல்லிலும், மட்பாண்டங்களிலும், ஏடுகளிலும், உலோகத் தகடுகளிலும், இன்னோரன்ன பொருட்களிலும் மனிதன் தனது எண்ணங்களை எழுத்து வடிவில் பதிவு செய்த காலத்திலிருந்து வரலாற்றுக் காலம் ஆரம்பமாகிறது. மெசப்பொத்தேமியா (இன்றைய தென்மத்திய ஈராக்), எகிப்து, இலம் ஆகிய நாடுகளில் இற்றைக்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எழுத்துக் கலை உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. எனவே, அந்தக் காலகட்டத்திலிருந்து அந்த நாடுகளின் வரலாறு ஆரம்பமாகிறது. தென் ஆசியாவில் சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் அதே காலகட்டத்தில் – 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் – சிறிய வில்லைகளில் பதிவு செய்த எழுத்து வடிவங்கள் இன்றுவரை வாசிக்கப்படவில்லை. இன்று இந்தியாவில் கல்வெட்டியலாளர்களால் வாசிக்க முடிந்த பிராமி எழுத்து வடிவங்கள் கி.மு. 700–600ஆம் ஆண்டிற்குரிய தென்னிந்திய மட்பாண்டங்களில் காணப்படும் பிராமி எழுத்துகளாகும். ஆதலால், தென்னிந்திய வரலாற்றுக் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனக் கொள்ள வேண்டும். வாசிக்கப்படாத சிந்து வெளி எழுத்துகளுக்கும், வாசிக்க முடிந்த பிராமி எழுத்துகளுக்கும் இடைப்பட்ட காலம் வரலாற்று உதயகாலம் என அழைக்கப்படுகிறது.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் என மூன்று காலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. கற்காலம் மேலும் மூன்று பிரிவுகளாக பழைய கற்காலம், இடைக்கற்காலம், புதிய கற்காலம் எனப் பிரிவாகியிருக்கிறது. இக்காலப் பகுதி கல்லாயுதங்கள் ஆரம்பத்திலிருந்து சிறிது சிறிதாகத் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த காலங்களாகும். பொருளாதார ரீதியாக பழைய கற்காலம், இடைக்கற்காலம் இரண்டும் மக்கள் நாடோடிகளாகக் காடுகளில் அலைந்து உணவை வேட்டையாடியும், சேகரித்தும் (Hunter-Gatherer Way of Life) நாடோடி வாழ்க்கை நடத்திய காலங்களாகும். புதிய கற்காலம் மக்கள் ஓரிடத்தில் குடியேறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உணவை உற்பத்தி செய்த காலப்பகுதியாகும். தமிழகத்தில் இக்காலத்துடன் இணைந்தும், தொடர்ந்தும் வருவது இரும்புக்காலம். தமிழகத்தில் வெண்கலம் அறிமுகமாக முன்னரே இரும்புக்காலம் ஆரம்பமாகியிருக்கிறது.
இடைக்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம் ஆகிய மூன்று பண்பாட்டுக் காலங்கள் தமிழகத்தின் முந்தைய வரலாற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளுவதற்கு உறுதுணையாக இருக்கின்றன. இடைக்கற்காலத்திலும், சில சமயங்களில் அதற்கு முன்னரும் ஆரம்பமாகி, இடைக்கற்காலத்தில் பரவலாகப் பேணப்பட்டு, சில இடங்களில் புதிய கற்காலத்திலும் இரும்புக்காலத்திலும் உபயோகத்திலிருந்த நுண்கற்கருவிகள் மிக அதிகமாகத் தமிழகத்தில் காணப்படுகின்றன. இந்த நுண்கற்கருவிகளை உபயோகித்த மக்களே முதன்முதலாக தமிழகத்தில் மிகப் பரவலாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை இச்சான்றுகள் முறையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு தமிழக மக்களின் முற்கால வரலாறு கூறப்படவில்லை.
இற்றைக்கு 12,000–10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மெசப்பொத்தேமிய நாடுகளில் ஆரம்பமான நீர்ப்பாசன விவசாய நடவடிக்கைகளும் – அங்கிருந்து சிறிது சிறிதாக இந்திய உபகண்டத்துக்கும், இலங்கைக்குமான அதன் பரவலும் – மக்கள் சமுதாயத்தில் பொருளாதாரம், தொழில்நுட்பம், பரவலான குடியேற்றம் ஆகிய துறைகளில் சடுதியான மாற்றங்கள் ஏற்படக் காரணமாயின. வேட்டையாடி-உணவு-சேகரித்த காலங்களில் மிருகங்களும், தன்னிச்சையான தாவரங்களும் அடர்த்தியாகவிருந்த காட்டுப் பகுதிகளிலும், மலைச்சாரல்களிலும் வாழ்ந்திருந்த மக்கள் விவசாயம் அறிமுகமானதும் நீர்வளமும், செழிப்பான நிலவளமும் கொண்ட நிலப்பகுதிகளில் குடியேற ஆரம்பித்தார்கள். கதிரவனின் வெப்பத்தையும், மழையையும், காற்றையும், புயலையும் எதிர்கொள்ளக்கூடிய வதிவிடங்கள் தோற்றம் பெறலாயின. ஒரு காலத்தில் மக்களைக் கவர்ந்த வாழ்விடங்களான மலைகளும், குகைகளும், வனங்களும், காடுகளும் கவனிப்பாரற்ற தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கிடங்களாயின. விவசாயத்தின் வருகையைத் தொடர்ந்து சிற்றூர்களும், கிராமங்களும், நகரங்களும், தலைநகரங்களும் தோற்றம் பெற்றன. அதன் தொடர்ச்சியாக சமுதாயத்தில் தொழில் ரீதியான சமூகப் பிரிவுகள் உருவாயின.
தென்னாசியாவின் முதலாவது நகரமயமாக்கம் – முதலாவது நாகரிகம் – வெண்கலக் காலத்தில் (Bronze Age) வறண்ட நிலமான வடமேற்கு இந்தியாவின் (இன்றைய பாகிஸ்தான்) சிந்துவெளிப் பள்ளத்தாக்கில், சிந்து நதிக்கரை ஓரமாக நடைபெற்றது. ஆனால் சமகாலத்தில் இந்த நாகரிகம் இந்தியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியதற்கான ஆதாரங்கள் அருகியே காணப்படுகின்றன. ஆனாலும், அங்கே பரவியிருந்த அறிவியல் விவசாயம் இந்தியப் பெருநிலப்பரப்பில் இரு பாதைகளூடாக: 1. சிந்து வெளியிலிருந்து கிழக்கு நோக்கி சிந்து-கங்கை இடைவழியாக கங்கை நதிப் பிரதேசங்களுக்கும் – 2. தெற்கு நோக்கி குஜராத்-மகாராஷ்டிரப் பகுதிகளினூடாக முதிர்ந்த விவசாய அறிவுடன் தமிழகம் வரை குடிபெயர்ந்த மக்கள் வழியாகவும், தென்மேற்கு மலைச்சாரல் நிலங்கள் வழியாகவும், துங்கபத்ரா-கிருஷ்ணா-கோதாவரி-காவேரி வடிநிலங்களுக்கும், அங்கிருந்து வைகை-தண்பொருநை (தாமிரபரணி) ஆற்றுப்படுகை நிலங்களுக்கும், கடல் கடந்து இலங்கையின் நதிப்படுகை, ஏரிக்கரை நிலங்களுக்கும் பரவியது.
கி.மு. நான்காம் ஆயிரத்தாண்டின் பிற்பகுதியில் அறிமுகமான இரும்பின் தொழில்நுட்ப வருகையானது நீர்ப்பாசன விவசாயத்தின் மிகைப்பெருக்க வளர்ச்சிக்கு அடிகோலி, தென்னாசியாவின் இரண்டாவது நகரமயமாக்கத்திற்கு வழிவகுத்தது. தொடர்ந்து மக்கள் குழுக்கள், இனப்பிரிவுகள், மதங்கள், கிராமங்கள், நகரங்கள், பட்டினங்கள், அரசுகள், பேரரசுகள், எழுத்துகள், இலக்கியங்கள், நாணயங்கள், வர்த்தகங்கள் என்பன உருவாகி வரலாற்றுக்காலம் ஆரம்பமானது.
சிந்துவெளி அல்லது ஹரப்பா நாகரிகம் பண்டைய உலகில் மிக விரிந்த பரப்பளவில் அமைந்திருந்தது. தெற்கு ஆசியாவின் வடமேற்குப் பகுதியில் பத்து லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது. இந்த நாகரிகம் அதன் சொந்த மண்ணின் பண்பாடுகளிலிருந்து பொ.யு.மு. எட்டாயிரம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து உருவாகி வந்திருக்கிறது. கி.மு. 2600 இலிருந்து 1900 ஆண்டுவரை முதிர்ந்த நகர நாகரிகக் கட்டம் என்ற உயர் நிலையையும், கி.மு. 1900 இலிருந்து 1400 வரையுமான காலத்தில் சரிவையும், இறுதியில் மறைவையும் சந்தித்தது. இந்த நாகரிகம் அதன் இறுதிக் கட்டத்தில் தெற்கே தைமபாத் வரை – அதாவது வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் திராவிட மொழி பேசும் பகுதியை ஒட்டிய, மேற்குக் கோதாவரிப் பள்ளத்தாக்கு வரை பரவியிருந்தது. வடமொழியில் மரபாகக் கூறப்படும் பஞ்ச திராவிட நாடுகளில் ஆந்திரம், கர்நாடகம், தமிழகம் ஆகியவற்றோடு குஜராத்தும் மகாராஷ்டிரமும் அடங்கியிருந்தன.

சிந்துவெளி நாகரிகம் திராவிடத் தகைமைக்கு உரியது என்பதை எடுத்துக்காட்ட தொல்லியல், மரபணுவியல் சான்றுகளைத் தவிர கணிசமான அளவு மொழியியல் சான்றுகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானவை:
- சிந்துப் பகுதியில் இன்றுவரை பேசப்படும் திராவிட மொழியான பிராகுயி.
- ரிக் வேதத்தில் இடம்பெறும் திராவிட மொழிச் சொற்கள்.
- இந்திய ஆரிய மொழிகளில் திராவிட மொழித் தாக்கம் அடிநிலையில் இருப்பதைக் காட்டுவதாக ரிக் வேதத்தில் இருக்கும் (ட, ண போன்ற) வளைநா ஒலிகள்.
- பிராகிருத மொழிகளில் இடம்பெற்ற பெரிய மாறுதல்கள் அம்மொழிகளை இந்திய-ஐரோப்பிய குடும்ப மொழிகளிலிருந்து வேறுபடுத்தி, திராவிட மொழிகளுக்கு நெருக்கமாகக் கொண்டு சென்றமை.
ஆரிய மொழி பேசும் மக்கள் தென்னாசியாவிற்கு ஏறத்தாழ பொ.யு.மு. 1800க்குப் பின்னரே – அதாவது சிந்துவெளி நாகரிகம் முதிர்ச்சி அடைந்த கட்டம் சரிந்து குலைந்த பின்னரே அங்கே குடிபெயர்ந்து வந்திருக்கிறார்கள். சிந்துவெளி நாகரிகத்தின் ஆதிக்குடிகளின் பெருந்தொகையான மக்களோடு ஒப்பிடும்போது அங்கே குடியேறிய ஆரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்திருக்கும். ஆனால் ஆரியர்கள் உயர்ந்த மேலாதிக்கம் பெறுவதற்கு அவர்களுடைய மேலான படைக் கருவிகளும், குதிரை வண்டிகள் மூலம் எளிதாக இடம்பெயர்தலும் காரணிகளாக அமைந்தன. அச்சமயம் சிந்துவெளி நாகரிக அரசமைப்பு மைய அதிகாரமோ தலைமையோ இல்லாமல் சிறுசிறு சமூகங்களாகச் சிதறிப்போய் இருந்தது. காலகதியில் ஆரியம் பயன்பாட்டு மொழியாக நிலைகொண்டதற்கான காரணம் பெருவாரியான உள்நாட்டு மக்கள் மேலாதிக்கம் பெற்ற அந்த மொழிக்குத் தாவியதாகும். அது ரிக் வேத காலத்திற்கு முன்னரே (ஏறக்குறைய கி.மு. 1500–1300) ஒரு கலப்புச் சமூகமும் பண்பாடும் உருவாகும் நிலைக்குக் கொண்டு சென்றது.
பெரும்பாலான சிந்துவெளி மக்கள் தங்கள் வாழ்விடங்களிலேயே தங்கிவிட்டனர். ஆயினும் பழந்தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்திருப்பது போல – இன்றைய மரபணுவியல் சான்றுகள் எடுத்துக்காட்டுவது போல – திராவிட மொழிகளைப் பேசிய முன்னோடி மக்களில் பலர் கங்கை-யமுனை ஆற்றிடை நிலப் பகுதிகளிலிருந்தும், குஜராத்-மகாராஷ்டிரப் பகுதிகளிலிருந்தும் முதிர்ந்த விவசாய அறிவுடன் தெற்கு நோக்கிக் குடிபெயர்ந்தார்கள். அவர்கள் தென்னிந்தியாவிலிருந்த புதிய கற்காலத்தின் இறுதிக்கட்டத்து உள்நாட்டு மக்களைவிட மேலாதிக்கம் பெற்று, காலப்போக்கில் பெருங்கற்கால, இரும்புக்கால நாகரிகங்கள் ஏற்படவும், ஆந்திரத்திலும் தக்காணத்திலும் அடுத்தடுத்து அரசுகள் அமையவும், தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர் அரசுகள் அமைவதற்கான கருச் சமூகமாகவும் அமைந்தனர்.
இந்த நூற்றாண்டில், 2004–2005இல் ஆதிச்சநல்லூரில் தியாக சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளிலும், கொடுமணல், பொருந்தல் பகுதிகளில் கா. ராஜன் மேற்கொண்ட அகழாய்வுகளிலும், கீழடியில் 2015இல் இருந்து முதலில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலும், தொடர்ந்து தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வுகளிலும் பெறப்பட்ட பொருட்களும், பெறுமதி மிக்க கருவூலப் பொருட்களும் கதிரியக்க-கரிம ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டன. இத்தொல்பொருட்களின் ஆரம்பகாலம் பொ.ஆ.மு. 700–600ஆம் ஆண்டுக் காலம் எனக் கணிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த அகழ்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில், மேற்கூறப்பட்ட ஒவ்வொரு தொல்லியல் தலமும் அவற்றின் பெயரால் – ‘ஆதிச்சநல்லூரின் மண்மூடிய மகத்தான நாகரிகம்’ என்றும், ‘கொடுமணலின் தொன்மையான தமிழர் நாகரிகம்’ எனவும், ‘வைகை நதிக்கரையின் சங்ககால நகர நாகரிகம்’ என்றும் பத்திரிகைகளிலும், புத்தகங்களிலும் பாராட்டப்பெற்று வருகின்றன.
பல சமயங்களில் ‘நகரமயமாக்கம்’, ‘நாகரிகம்’ என்ற சொற்பதங்கள் நம்மவர்களால் மிகத் தளர்வாக (Loosely) உபயோகப்படுத்தப்பட்டு வருகிறதையும் காண்கிறோம். ஒரு தொல்லியல் தலத்தை, அங்கே கண்டுபிடிக்கப்படும் பொருட்களின் அடிப்படையில் பெறப்படும் தகவல்களைக் கொண்டு, இது ஒரு ‘மக்கள் குடியேற்றம்’ மட்டும்தானா, அல்லது இது ஒரு ‘நகரமா?’, அல்லது இதை ஒரு ‘நாகரிகம்’ என அழைக்கலாமா? என்றெல்லாம் கணிப்பிடுவதற்கு தொல்லியலாளர்கள் சில விதிமுறைகளை வகுத்திருக்கிறார்கள்.
1950ஆம் ஆண்டில் இலண்டன் பல்கலைக்கழக தொல்லியல்துறைத் தலைவரான பேராசிரியர் கோர்டன் சைல்ட் (Gordon Childe) ஒரு தொல்லியல் மையத்தை ‘நகரமயமாக்கம்’ என அழைப்பதற்கு சில விதிமுறைகளை முன்வைத்திருந்தார் (Childe 1950: 3–17).
- நிரந்தரமான மக்கள் குடியேற்றங்கள்
- பொருளாதாரத் தக்கவைப்பு – விவசாயத்தின் வருட-வட்டத்தை ஒழுங்கமைத்தல்
- மேலதிக உணவை மையப்படுத்தல்
- நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஒரு அதிகார வர்க்கத்தின் இருப்பு
- நாடெங்கும் ஒரு தொடர்பு வலைப்பின்னல் அமைத்தல்
- தொலைதூர வர்த்தகம்
- நிரந்தரக் குடியிருப்புகளுக்கேற்ற சமூக அமைப்பு
பெரும்பாலான தொல்லியலாளர்களால் நீண்டகாலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த இவ்விதிமுறைகளை 1990இல் பிரித்தானிய தொல்லியலாளர் ரேமண்ட் ஆல்சின் மறுபரிசீலனை செய்திருந்தார். மேற்கூறியவற்றுடன், நகரமயமாக்கலுக்கான மற்றைய முக்கிய அம்சங்களாக அவர் கணிப்பிட்டவை (Allchin 1995: 57):
- பெரிய அளவிலான மக்கள் குடியிருப்பு
- உள் திட்டமிடல் – திட்டமிட்ட நகர அமைப்பு
- பொதுமக்களுக்கான கட்டட அமைப்பு (கட்டடக் கலை)
- படிநிலையான சமூக அமைப்பு
- நகரைச் சூழ்ந்த அரண்
- மக்கள் வாசிக்கத் தெரிந்த எழுத்துப் பதிவு
- துறை பிரித்த கைத்தொழில் வளர்ச்சி
- தொலைதூர வர்த்தகம்
- பெருகி வரும் சனத்தொகையை நிர்வகிக்கக்கூடிய நடவடிக்கைகள்
கடந்த ஒரு நூற்றாண்டாக இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் சிந்துச் சமவெளி அகழ்வுகளின் போது மொகஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட 96 முதிர்ச்சியடைந்த நகரமயமாக்கப்பட்ட தலங்களும், அதைத் தவிர 200க்கும் மேற்பட்ட மக்கள் குடியேற்றங்களும் இனம் காணப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் இணைத்து ‘சிந்துவெளி நாகரிகம்’ (Indus Civilization) என்ற ஒரு பெயரினாலேயே இந்த நாகரிகம் உலகெங்கிலும் அறியப்படுகிறது. நாமும் எமது தொல்லியல் தலங்களை ‘பொருநை நதிக்கரை நாகரிகம்’, ‘தாமிரபரணி நாகரிகம்’, ‘கீழடி நாகரிகம்’ என தனித்தனிக் கூறுகளாக அழைக்காமல், ‘தொல்தமிழர் நாகரிகம்’ என்றோ, அல்லது ‘பண்டைத் தமிழர் நாகரிகம்’ என்றோ அழைப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


சிந்துவெளி நாகரிகம் சுமார் கி.மு. 1400ஆம் ஆண்டளவில் முடிவிற்கு வந்திருக்கிறது. இன்று கிடைக்கும் அகழ்வு ஆதாரங்களின்படி கீழடிப் பண்பாடு ஆரம்பமாகின்ற காலம் கி.மு. 600. ‘இந்த எண்ணூறு ஆண்டுக்கால இடைவெளியில் சிந்து நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் இந்தியாவின் தென்னகத்தை வந்தடையவில்லை’ என்ற சில ஆய்வாளர்களின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கீழடியில் காணப்பட்ட சுட்ட செங்கற்களும், கழிவுநீர்க் கால்வாய்களும், அறைகளின் அமைப்பும், சிந்து மொழிக் குறிகள் பதித்த செம்பியன் கண்டியூர்க் கற்கோடரியும் சிந்துவெளி நாகரிகத்தின் எச்சங்களாகக் காணப்படுகின்றன. இனிவருங்காலங்களில் மேற்கொள்ளப்படும் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்படும் தொல்பொருட்களும், அவற்றின் காலக்கணிப்புகளும் இந்த இடைவெளியை கட்டாயமாக நிறைவு செய்யும் என நம்புகிறேன்.
இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்பது தென்னிந்திய திராவிட மக்களிடையே பரவியிருந்த பெருங்கற்கால புதையல் பண்பாட்டுடன் தொடர்புடைய அம்சங்கள்தாம். கர்நாடகத்தில் இப்பெருங்கற்காலப் பண்பாட்டின் ஆரம்ப காலம் கி.மு. 1500ஆம் ஆண்டு என சமீபகாலங்களில் கதிரியக்கக் கரிம ஆய்வுகளால் கணிக்கப்பட்டிருக்கிறது – அதாவது, சிந்து சமவெளி நாகரிகம் முற்றாக மறைந்து போவதற்கு சற்று முற்பட்ட காலம். கர்நாடகத்திலிருந்து இப்பண்பாடு ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.
இப்பண்பாட்டின் முக்கியமான அம்சங்கள்: குடியிருப்புகள், வேளாண்மை விவசாயம், நெற்பயிரீடு, மட்பாண்டம் வனையும் சில்லு, கறுப்பு-சிவப்பு மட்பாண்டம், மட்பாண்ட கீறல் எழுத்துகள் என்பன. இந்த அம்சங்கள் பெருங்கற் புதையல்களோடும், தாழிப் புதையல்களோடும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. இந்தப் பெருங்கற் பண்பாட்டு அம்சங்கள் சிந்துவெளிப் பண்பாட்டு அம்சங்களுடன் இணைந்து தென்னகத்திற்குப் பரவிவந்த பண்பாட்டுக் கூறுகள் என்பதில் ஐயப்பாடு இல்லை.
உதாரணத்திற்கு தமிழ் மக்களின் புராதன வாழ்வியல்-பண்பாட்டின் சின்னமான கறுப்பு-சிவப்பு மட்பாண்டத்தை எடுத்துக் கொள்வோம். 1944ஆம் ஆண்டில் ஹரப்பா அகழ்வுகளை மேற்பார்வையிட்ட பிரித்தானிய தொல்லியல் மேதை சேர் மோட்டிமர் வீலரின் கூற்று இது:
“The pottery is distinctive in shape and fabric and is characteristically Black inside and Black or more often Black and Red outside, with the Black confined to the upper part of the vessel, resulting from inverted firing” (Wheeler, 1947)
“தனித்துவமான உருவத்தையும் இழைமானத்தையும் கொண்ட இந்த மட்பாண்டம் தனித்தன்மையாக உட்பக்கம் கறுப்பாகவும், வெளிப்புறம் கறுப்பாகவோ அல்லது அதிகபட்சம் கறுப்பும் சிவப்பும் கலந்தோ உள்ளதோடு, மட்பாண்டத்தின் கழுத்துப் பக்கத்தில் கறுப்பு நிறமாகவும் காணப்படும். இது சூளையில் பாத்திரத்தை தலைகீழாகப் புரட்டிச் சுடவைப்பதால் ஏற்படும் நிற மாற்றங்களாகும்.”
இவ்வகையான மட்பாண்டம் சிந்து நதிக்கரை நகரங்களிலிருந்து கி.மு. 4400 ஆண்டுக் காலத்தில், இந்தோ-ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட வடஇந்திய மக்களிடையே பரவி, தொடர்ந்து மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் வழியாக தமிழகமெங்கும் பரவி, பின்னர் இலங்கை முழுவதிலும் பரந்து, அன்றைய பெருங்கற் புதையல்களோடும், தாழிப்புதையல்களோடும், இறந்தோருடன் புதைக்கப்படும் பொருட்களைக் கொண்ட துணைப்புதையல்களாகக் காணப்படுகின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இந்த வகையான மட்பாண்டத்தை வனைந்து சூளையிடும் தொழில்நுட்பம் மறைந்து போயிற்று.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இந்திய நாகரிகத்தின் கர்த்தாக்கள் இந்தோ-ஆரியர்களே என்றொரு கருத்தை பிரித்தானிய வரலாற்றாசிரியர்களும், வட இந்திய வரலாற்றாசிரியர்களும் கூறிவந்தார்கள். அது மட்டுமல்ல, தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்பன சமஸ்கிருத மொழியிலிருந்தே பிறந்தன என்பதை தென்னிந்தியப் பிராமண சமஸ்கிருதப் பண்டிதர்கள் வலியுறுத்தி வந்தார்கள்.
‘இந்திய நாகரிகத்தின் கர்த்தாக்கள் இந்தோ-ஆரியர்கள்தான்’ என்ற அன்றைய பிரித்தானிய வரலாற்றாசிரியர்களின் முடிவு காலாவதியாகிவிட்ட ஒரு கருத்து. இந்திய நிலம் மூன்று முக்கியமான புவியியற் கூறுகளை உள்ளடக்கிய ஓர் உபகண்டம். மேற்கே சிந்துவெளி, வடகிழக்கே கங்கைச் சமவெளி, தெற்கே தீபகற்ப இந்தியா. இந்த மூன்று பிராந்தியங்களும் பண்பாடு, அரசியல், தொல்லியல் ஆகிய துறைகளில் தனித்துவமான பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. இந்த உபகண்டத்தில் அமைந்துள்ள விந்திய மலைதான் பண்பாட்டு ரீதியில் இந்தியாவை மூன்று பிராந்தியங்களாக ஆக்கியிருக்கிறது.
வட இந்திய இலக்கியங்கள் இப் பிராந்தியங்களை ‘ஆரியவர்த்த’, ‘தக்ஷிணபாத’, ‘திராவிட தேச’ எனக் குறிப்பிடுகின்றன. திராவிடர்களது சிந்துவெளி நாகரிகத்தை சுவீகரித்துக் கொண்ட ஆரியர் அதன் பண்பாட்டு அம்சங்களை அபகரித்து, தமது கலாசார அம்சங்களுடன் இணைத்து, கங்கைச் சமவெளியில் நாகரிகம் படைத்தவர்களாக எழுச்சி பெற்று, இதை ‘தூய ஆரியர்களது நாகரிகம்’ என வட இந்தியா முழுவதும் பரப்புவதற்கு வழியமைத்தது இப்பகுதியின் புவியியற் கூறுதான். வட இந்தியா முழுவதும் ஆரியமயமாக்கும் திட்டம் வெற்றி பெற்றிருந்த போதிலும், தென்னிந்தியாவில் அதன் பரவலை ஓரளவு தடுத்தது விந்திய மலைதான். பிற்காலத்தில் கர்நாடகம், ஆந்திர தேசம் என்பன வட இந்திய ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தாலும், தமிழகம் இதனால் பெரிதாகப் பாதிக்கப்படவில்லை.
உலக வரலாற்றில் ஒரு நாட்டின் அல்லது பிராந்தியத்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது விவசாயத்தின் வருகைதான். தமிழகத்தில் அதன் நாகரிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவை: விவசாயத்தின் வருகை, இரும்புக்காலம், பெருங்கற் பண்பாடு, பெருங்கடல் வர்த்தகம் என்ற நான்கு பெரும் காரணிகள் தாம்.
பெருங்கற்காலப் பண்பாடு தமிழகத்தை நாகரிக வளர்ச்சி கொண்ட பிரதேசமாக ஆக்குவதில் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. மிகக் குறுகிய காலத்தில் – ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகளில் – தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாகரிக முதிர்ச்சிக்கு வழிவகுத்தது பெருங்கற்காலத்தில் காணப்பட்ட பண்பாட்டு வளர்ச்சியே எனலாம். தமிழகத்தில் இந்த விவசாயப் புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர்கள் இப்பெருங்கற்கால மக்களாகிய திராவிடரே ஆவர். இக்காலத்தில் பிரதான உலோகப் பொருளாக இரும்பு பயன்படுத்தப்பட்டதனால் இது ‘இரும்புக் காலம்’ எனவும் அழைக்கப்படுகிறது. இதன் பண்பாட்டு வளர்ச்சியை இக்காலத்திற்குரிய பலவகையான இரும்பாயுதங்கள், மட்பாண்டங்கள், மட்பாண்டங்களில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள், பலவகையான மணிவகைகள், அலங்காரப் பொருட்கள், ஓவியங்கள் ஆகியன எடுத்துக் காட்டுகின்றன.
உணவு உற்பத்தி மட்டுமன்றி, தமிழகத் துறைமுகங்களினூடே நடைபெற்ற வெளிநாட்டு வணிகமும் தமிழகத்தை நாகரிக முதிர்ச்சிக்கு இட்டுச் சென்றது. கிறிஸ்துவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே – கி.மு. 1000ஆம் ஆண்டளவில் – தமிழகத் துறைமுகங்கள் பீனீசியர்களுடனும், மத்திய கிழக்கு நாடுகளுடனும் வணிக நடவடிக்கைகளில் இணைந்திருந்தன. இன்னும் பலஸ்தீனம், மத்தியதரைப் பிரதேசம், ஆபிரிக்கா, தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றினிடையே நடைபெற்ற வர்த்தகத்தின் மையப் பிரதேசமாக தமிழகம் விளங்கியது. வணிக நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்நாடுகளுக்கிடையே பண்பாட்டுப் பரிமாறல்கள் நிகழ்ந்தன. இதன் காரணமாக விவசாயச் சமூகமாக இருந்த ஆரம்பகாலத் தமிழகச் சமூகம், வணிகச் சிறப்பால் பிற நாடுகளின் பண்பாட்டுப் பரிமாறல்களுக்கு உள்ளாகி உன்னதமானதொரு நாகரிக நிலையை அடைந்தது. மானிடவியல் பேராசிரியர் கிளாரன்ஸ் மலோனி போன்ற ஆய்வாளர்கள் “தமிழகத்தின் நாகரிக வளர்ச்சி தெற்கே பாண்டிய நாட்டில் ஆரம்பமாகி, வடக்கு நோக்கிப் பரவியது” எனக் கூறுகிறார்கள். இவ்வாறு ஏற்பட்ட வளர்ச்சியில் தென்பாண்டி நாட்டின் இரும்புத் தொழிலும், தமிழகத்தின் கடல்வழித் தொடர்புகளும் காத்திரமான பங்கை அளித்தன.
தமிழகம் நாகரிகமடைந்து சங்கம் அமைத்து இலக்கிய இலக்கணங்களை உருவாக்கிய காலப்பகுதியில் தமிழகத்திற்கு வடக்கில் அமைந்திருந்த ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம் ஆகியவற்றில் சமகாலத்தில் இத்தகைய நாகரிக வளர்ச்சி நடைபெற்றதா என்ற கேள்வி எழுகிறது. பிற்காலத்தில் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிச் சொற்களில் சமஸ்கிருதப் பதங்கள் புகுந்து கொண்ட போதிலும், சமகாலத்தில் இப்பிராந்தியங்களில் நாகரிக வளர்ச்சிக்கான தடயங்கள் ஏதும் காணப்படாதமை இப்பிராந்தியங்களினூடாக வடஇந்தியாவிலிருந்து தென்னகத்திற்கு நாகரிகம் வரவில்லை என்பதைத் தெளிவாக்கி, பேராசிரியர் மலோனியின் கருத்திற்கு வலுச் சேர்க்கிறது.
சமீபகாலங்களில், “நாங்கள் திராவிடர்கள் எனக் கூறுவது தவறு, நாங்கள் தமிழர்கள். பண்டைய தமிழ் இலக்கியங்கள் எதுவும் எங்களைத் திராவிடர் எனக் குறிப்பிடவில்லை, தமிழர்கள் என்றே குறிப்பிட்டு வந்திருக்கின்றன. எனவே, ‘திராவிடர்’ என எங்களை அழைக்க வேண்டிய அவசியமில்லை” என ஒரு சாரார் கூறிவருகிறார்கள்.
இதற்கு, சரியான விளக்கம் தரவேண்டியது நமது கடமை. பதினெட்டாம் நூற்றாண்டிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்திலும் சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்ற கருதுகோள் ஐரோப்பிய, தெற்காசிய அறிஞர்களிடையே பரப்பப்பட்டிருந்தது. 1820களில் ‘தெலுங்கு மொழியின் இலக்கணம்’ (Grammar of the Teloogu Language) என்ற நூலை எழுதிய அலெக்ஸாந்தர் காம்பெல் என்ற ஆங்கிலேயர், தெலுங்கு மொழியின் இலக்கணம் தமிழ் மொழி இலக்கணத்துடன் ஒத்திருப்பதை எடுத்துக் காட்டியிருந்தார். 1850களில் ரிக் வேத நூலைப் பதிப்பித்த மாக்ஸ் முல்லர் தென்னிந்திய மொழிகள் வட இந்திய இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து வேறானவை என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனாலும், 1856ஆம் ஆண்டில் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages) என்ற நூலை வெளியிட்ட ரொபேர்ட் கால்டுவெல் பாதிரியார் (Robert Caldwell) தென்னிந்திய மொழிகளின் இலக்கண அமைப்பை தனித்தனியாக ஆராய்ந்து, அவற்றின் ஒற்றுமையை எடுத்துக்காட்டி, அவை எவ்வாறு வடஇந்திய இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் இலக்கண அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன என்பதை விளக்கி – ஒரு மொழியின் உயிர் அதன் இலக்கணமே தவிர வெளியில் தோற்றம் தரும் சொற்களல்ல (சொற் பதங்களை ஒரு மொழி இன்னொரு மொழியிலிருந்து கடன் வாங்கலாம்) என்பதை எடுத்துக்கூறி – இத்தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிகள்’ என்ற பெயரை வழங்கினார். பின் நாட்களில் வட இந்தியாவிலும் கோலாமி, நய்க்கி, கட்பா, பார்ஜி, பெங்கோ, மண்டா ஆகிய ‘திராவிட மொழிகள்’ கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
அவரது வரலாற்றுப் புகழ்மிக்க இந்த ஆய்வு ‘திராவிட மொழிக் குடும்பம் உலகின் தொன்மையானதொரு மொழிக் குடும்பம்’ என்பதை உலக அரங்கில் பேரிகையிட்டு முழங்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறிஞர் உலகம் அவரது முடிவுகளை ஏற்றது. உலகின் முக்கியமான மொழிக் குடும்பங்களில் திராவிட மொழிக் குடும்பமும் ஒன்று என்பது நிறுவப்பட்டது. கடந்த ஒன்றரை நூற்றாண்டுகளாக உலக அரங்கில் நிறுவப்பட்டு ஆயிரக்கணக்கான கற்கை நூல்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பதம் இது.
“இந்த மொழிக் குடும்பத்திற்கு ‘திராவிட’ மொழிக்குடும்பம் என்ற பெயரை ஏன் தெரிவு செய்தேன்?” என்பதற்கு கால்டுவெல் பாதிரியார் தனது நூலின் முன்னுரையிலேயே விளக்கமளிக்கிறார். “‘திராவிட’ என்பது ஒரு சமஸ்கிருத மொழிப் பதம். மனுஸ்மிருதி, நாட்டியசாஸ்திரம், மகாபாரதம் ஆகிய சமஸ்கிருத நூல்களில் ‘திராவிட’ என்ற பதம் தமிழ்மொழி பேசும் மக்களையும்; குமாரிலபட்டரின் தந்திரவர்த்திகா என்னும் நூலில் ‘திராவிட’ என்பது தமிழ் மொழியையும் குறிப்பிட உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தென்னிந்திய மொழிக் குடும்பத்திற்கு ஆங்கிலத்தில் ‘Dravidian’ என்ற பெயரைக் கொடுப்பதனால், தமிழ் மொழியை ‘Tamilian’ என அழைக்கலாம்” எனப் பதிவு செய்திருக்கிறார் கால்டுவெல் (Caldwell, R. 1956 ed.: 6).
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளையும், அவைகளின் குடும்ப மொழிகளையும் மொத்தமாக ‘திராவிட மொழிகள்’ என அழைப்பதில் தவறேதும் இல்லை. அவ்வாறே இம்மக்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் நாட்டை ‘திராவிட நாடு’ எனவும் அழைக்கலாம். ஆனால், ‘திராவிட இனம்’ என ஓர் இனம் கிடையாது. இது ஒரு மொழிக்குடும்பத்தைக் குறிக்கும் பெயரே தவிர ஓர் இனத்தைக் (Ethnicity/ Race) குறிக்கும் பெயரல்ல.
இந்தியாவில் இந்தோ-ஆரிய மொழிகள் பேசப்படுவதற்கு முன்னரே திராவிட மொழிகள் பேச்சு வழக்கில் இருந்து வந்தன என்ற கருத்தை எவ்வாறு மொழியியல் ஆதாரங்களோடு கால்டுவெல் பாதிரியார் முன்வைத்திருந்தாரோ – அதே போன்று உலக அரங்கில் பரந்த அளவில் திராவிட மக்களின் தொன்மையையும் நாகரிகத்தையும் பறைசாற்றியவர்களில் பிரித்தானிய தொல்லியலாளர்களான சேர் ஜோன் மார்ஷல் (Sir John Marshall), சேர் மோட்டிமர் வீலர் (Sir Mortimer Wheeler) ஆகிய இருவரும் முக்கியமானவர்களாவர்.
இக்காலத்தில் நமது முன்னோர்கள் விட்டுச் சென்ற பாவனைப் பொருட்களினதும், பெறுமதியான கருவூலப் பொருட்களினதும், அவர்களின் எலும்புகளினதும், மண்ணில் புதைந்த புதைப்படிவங்களின் வயதையும் கதிரியக்கத் திகதிகள் மூலம் கண்டறிய முடிகிறது. இவற்றில் மிகச் சரியான, திடமான திகதியைத் தருவது கதிரியக்கக் கரிமப் பகுப்பாய்வுத் திகதி (C-14 Radiocarbon Dating). இது இற்றைக்கு முன் 40,000 ஆண்டுக் காலம் வரையில்தான் சரியான திகதியைத் தரும். இதற்கு அடுத்தபடியாக வெப்பஒளிக்கதிர் திகதிக் கணிப்பு (Thermoluminescence Dating) அமைகிறது. 40,000 ஆண்டுகளுக்கு மேலே 60,000 ஆண்டுகள் வரை இவை தரும் காலக் கணிப்புகள் சுமாராக 5,000 முதல் 10,000 ஆண்டுகள் வரை வேறுபடும். அதற்கு மேலே போய்விட்டால் இக்கணிப்புகள் பயனற்றவை. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு மேலே போய்விட்டால் பொட்டாசியம்-40 (K-40) அல்லது யூரேனியம்-238 (U-238) காலக் கணிப்பு மேற்கொள்ளப்படும். இக்கணிப்புகள் மூலம் முறையே இற்றைக்கு முன் 1250 மில்லியன், 4000 மில்லியன் ஆண்டுகள் வரை கணிப்பிடலாம்.
முந்தைய வரலாற்றாசிரியர்கள் காலக்கணிப்பு செய்யும்போது கிறிஸ்தாப்த காலத்தை ஒரு மையமாகக் கொண்டு கிறிஸ்துவுக்கு முன் (கி.மு.), கிறிஸ்துவுக்குப் பின் (கி.பி.) எனக் காலக் கணிப்பு செய்தார்கள். கி.மு. முதலாம் ஆண்டைத் தொடர்வது கி.பி. முதலாம் ஆண்டு. இக்காலத்தில் யேசு கிறிஸ்து பிறந்தது கி.மு. 6க்கும் கி.மு. 4க்கும் இடையே எனக் கணிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் அல்லாத பல வரலாற்றாசிரியர்களுக்கு உலக வரலாற்றை யேசுக் கிறிஸ்துவுடன் சம்பந்தப்படுத்தி, அதற்கு ஒரு சமய முலாம் பூசிக் கூறுவது உடன்பாடாக இல்லை. இதன் காரணமாக உலகில் பல நாடுகளில் பலர் தங்களது சொந்த ஆண்டுக்கணக்குகளை வைத்திருக்கிறார்கள். உதாரணமாக: தமிழர்கள் ‘திருவள்ளுவர் ஆண்டுக்’ கணக்கு வைத்திருக்கிறார்கள். தமிழர்களின் புத்தாண்டு தைப்பொங்கலுடன் ஆரம்பமாகிறது. சீன மக்கள் தனியான ஆண்டுக் கணக்கு வைத்திருக்கிறார்கள். சீன மக்களின் புத்தாண்டு மாசி மாதம் (பெப்ரவரி) 4ஆம் திகதி ஆரம்பமாகிறது.
இன்று நாம் உபயோகிக்கும் நாட்காட்டி (Calendar) உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நாட்காட்டி ஆகும். இது ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரையும் தொடரும் காலப் பகுதிகளையும், இனிமேல் தொடரப்போகும் காலங்களையும் இக்காலத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் ‘Common Era’ (பொது யுகம்) என அழைக்க ஆரம்பித்தார்கள்.
காலண்டர் ஆரம்பிப்பதற்கு முற்பட்ட காலத்தை ‘Before Common Era’ (BCE) என்றும், காலண்டர் ஆரம்பித்து இன்றுவரை தொடரும் காலத்தை ‘Common Era’ (CE) என்றும் ஆங்கிலத்தில் அழைக்க ஆரம்பித்தார்கள். தமிழில் ‘Common Era’ என்பதை ‘பொது யுகம்’ என அழைக்கலாம். இன்றுவரை தொடரும் ‘பொது யுகம்’ ஆரம்பிக்கும் முன் உள்ள காலத்தை – பொது யுகத்திற்கு முன் (பொ.யு.மு.) என்றும் – பொது யுக ஆண்டுகளை ‘பொ.யு.’ என்றும் குறிப்பிடலாம். இந்த முறையே இந்நூலில் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
முடிந்த அளவில் அறிவியல் அடிப்படையில், தொல்லியல் அடிப்படையில், மரபணுவியல் அடிப்படையில், மொழியியல் அடிப்படையில் நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டே இது எழுதப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமாக வளர்ந்து வரும் இன்றைய தலைமுறைத் தமிழ் உலகம் இதை வரவேற்கும் என நம்புகிறேன்.



