மலையகக் கலைகளில் இராமநாடகம்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

மலையகக் கலைகளில் இராமநாடகம்

July 14, 2026 | Ezhuna

மலையகம் இலங்கையின் நடுப்பகுதியில் அமைந்த பகுதியாகும். இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களே மலையகத்தவராவர். இவர்கள் இந்நாட்டில் மத்திய மலைப்பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.¹ மலையக மக்கள் அதிகளவிலான தெய்வ நம்பிக்கை கொண்டோராகவும் இருந்தனர். இந்தியாவிலிருந்து வந்த ஆரம்ப காலத்தில் இம்மக்கள் பெரும்பாலும் படிப்பறிவு அற்றவர்களாய் இருந்தமையால் பாரியளவில் நாட்டாரியல் சார்ந்த மரபுகளின் மீது மாத்திரமே நம்பிக்கை கொண்டிருந்தனர். மலையகத்தாரில் அதிகமானோர் இந்துக்களாகக் காணப்பட்டனர். எனவே இவர்கள் இந்துச் சடங்கு சம்பிரதாயங்களில் அதிக கவனத்தைச் செலுத்தினர். இவர்களது நம்பிக்கைகளில் இந்தியக் கலை, பண்பாட்டு அம்சங்கள் பெரிதும் தாக்கம் செலுத்துவதைக் காணலாம். இவர்களின் வழிபாடுகள், கூத்துகள், நாடகங்கள், சடங்குகள், விழாக்கள், பண்டிகைகள் என்பன இந்திய மரபினை ஒட்டியும், நாட்டாரியல் சார்ந்தனவாகவுமே உள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த இந்தியத் தமிழர்கள், தம்மோடு தம் கலையம்சங்களையும் பண்பாட்டையும் சேர்த்தே கொண்டுவந்தனர். தாம் குடியேறிய மலையகப்பகுதிகளில் தென்னிந்திய மரபிலான வழிபாடுகளைப் பரப்பத் தொடங்கினர். அவ்வகையில் அமைந்த வழிபாடுகளாக, மாரியம்மன் வழிபாடு, பத்தினி வழிபாடு, முருகன் வழிபாடு, ஐயனார் வழிபாடு, காளி வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, கொத்தி வழிபாடு, காட்டேரி வழிபாடு, இராமர் வழிபாடு போன்ற வழிபாடுகளையும் பரப்பினர்.² மலையக மக்களின் வழிபாடுகளுள் இராமர் பஜனையும் குறிப்பிடத்தக்கது. மலையக மக்களின் இதிகாச, புராண ஈடுபாட்டினாலும் வாய்வழி மரபின் பயிற்சியாலும் இவ்வழிபாடு மலையகத்தில் நிலைபெற்ற வழிபாடாக அமைந்தது.

‘இராமர் பஜனை’ என்ற பெயரில் அழைக்கப்படும் இராமருக்கான வழிபாடானது இராமாயணம் எனும் இதிகாசக் கதையை மையமாகக் கொண்டு பாடப்படுகிறது. சீதையை இராவணன் இலங்கைக்கு கடத்தி வருவது முதல் அனுமன் சீதையை மீட்டு இராமரிடம் கொண்டு சேர்க்கும் வரையிலான கதையம்சம் இவ்வழிபாட்டுக்கான கதையாக அமைந்துள்ளது.

இராமர் பஜனையின் கதையம்சம்

இக்கதையானது இராமர்–சீதை திருமணத்துடன் ஆரம்பமாகின்றது. அயோத்தி நகரைச் சேர்ந்த மக்கள் ஒன்று கூடி இராமருக்கும் சீதைக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணத்தின் பின்பு கைகேயியினது சூழ்ச்சியால் இராமர் தன் மனைவியுடனும் சகோதரருடனும் வனவாசம் செல்கின்றார். அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும்போது சூர்ப்பனகைக்காக இராவணனால் சீதை கடத்தப்பட்டாள். இக்கதையம்சத்தின் தொடக்கத்திலிருந்தே இராமர் பஜனை தொடங்குகின்றது. இக்கதையின் ஒவ்வொரு முக்கியமான கதைக்கட்டங்களையும் மையமாக வைத்தே இராமர் பஜனை வழிபாட்டுப் பாடல்கள் பாடப்படுகின்றன.

சீதை இராவணனால் கடத்தப்பட்ட செய்தியறிந்த இராமர் வேதனையுற்று சீதையைத் தேடிச் சென்றார். இராமருக்கு சீதை மீண்டும் கிடைக்காவிடில் இவ்வுலகையே அழித்து விடுவதாகக் கூறிய இராமன் அனுமனிடத்தில் தஞ்சம் புகுந்தார். அவரிடம் சீதையை மீட்டுத் தரும்படி வேண்டினார். அனுமனும் சீதையைத் தேடிச் செல்கிறார். இலங்கையில் சீதை கடத்தி வைக்கப்பட்டதை அறிந்த அனுமன் சீதையுள்ள இடத்தை அடைந்து பல போராட்டங்களுக்கு மத்தியிலும் சீதையைக் காக்க முயல்கிறார். அவ்வேளையில், எந்தப் பெண்ணையும் தவறான கண்கொண்டு பார்த்திராத அனுமன் சீதையின் புனிதத்தை உணர்ந்து அவள் இருந்த இடத்தினை மலையோடு பெயர்த்துத் தூக்கிச் சென்றார். பிறகு இராமனிடம் சீதையைச் சேர்த்துவிடுகின்றார்.

இராவணனால் கடத்தப்பட்டு அனுமனால் மீட்கப்பட்ட சீதையின் புனிதம் பற்றி தவறாகப் பேசுகின்ற ஊர்மக்களுக்காக இராமன் சீதையை தீக்குளிக்குமாறு வேண்டுகிறார். சீதையின் கற்புக்கு அவதூறுகள் வரக்கூடாது என்பதற்காகவே இராமர் அவ்வாறு கூறி, அவளைப் பத்தினியாகக் காட்ட முயற்சி செய்கிறார். சீதையும் இராமரின் கூற்றுக்கேற்ப மறுப்பின்றி அவ்வாறே தீக்குளிக்கிறாள். இராமனின் வேண்டுகோளுக்கேற்ப தீக்குளித்த சீதைக்கு எவ்வித தீங்கும் ஏற்படவில்லை. அவள் நெருப்பினுள் சென்றபடியே வெளியே வந்தாள். இதற்குப் பின்னர் ஊர்மக்களும் இராமரும் சீதையின் புனிதத்தை உணர்ந்தனர். இதன்பின் தன் தவறை உணர்ந்த கைகேயி இராமரைக் காணக் காட்டிற்கு வந்து, இராமரை நாடாள அழைக்கின்றார். ஆனால் இராமர் தன் தந்தையிடம் சத்தியம் செய்ததாலும், அவரின் ஆணையும், கைகேயியின் விருப்பமும் அதுவே என்பதாலும் நாட்டிற்கு வர மறுக்கின்றார்.

பின்னர் பரதன் காட்டிற்கு வருதலும், இராமரை அழைத்தலும், இராமர் நாடு திரும்ப மறுத்தலும், பரதன் இராமனின் பாதணிகளை வைத்து ஆட்சி செய்தலும் எனக் கதை தொடர்கிறது. இறுதியாக, இராமர், சீதை, இலக்குவணன் என்போர் தமது பதினான்கு ஆண்டுகால வனவாசம் முடித்து நாடு திரும்பும் வரையிலான கதைகள் வருகின்றன.

மேற்குறித்த கதையே இராமர் நாடகத்தின் (பஜனையின்) மையக்கருத்தாகும். இக்கதையையே கருவியாகக் கொண்டு வழிபாட்டுச் சடங்குகளும் பாடல்களும் அமைகின்றன. இவ்வழிபாட்டுப் பாடல்களில் பதினான்கு ஆண்டுகளாக வனவாசம் மேற்கொண்ட இராமர், சீதை, இலக்குமணன் என்போரின் குணங்கள், அச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற சோதனைகள், சீதை மீதான குற்றச்சாட்டுகள், சீதையின் அவலநிலை, கைகேயியின் மனமாற்றம், பரதனின் சகோதரப் பாசம் போன்ற அனைத்து அம்சங்களும் வெளிப்படுத்தப்படுவதனைக் காணலாம்.

கம்பம் ஊன்றுதல்

கம்பம் ஊன்றுதலுக்காக தேக்குமரம் அல்லது கருப்பந் தேயிலைமரம், சில இடங்களில் மஞ்சள் நிற மூங்கில் என்பவற்றையும் பயன்படுத்துவதுண்டு. இம்மரங்களில் ஏதாவது ஒரு மரத்தில் விபூதி, சந்தனம், குங்குமம் தடவி பட்டுத்துணியைக் கட்டி கோயிலின் வாசலில் குழி தோண்டிப் புதைத்து வைப்பர். அம்மரத்தில் அன்று முதல் இராமரைக் குடியிருத்தி வைத்திருப்பதே இம்மக்களின் ஐதீகமாகும்.³

கம்பம் ஊன்றியது தொடக்கம் ஒவ்வொரு நாளும் இராமருக்கான வழிபாடு இடம்பெறும். ஆண்கள் ஒவ்வொருவரும் இராமரது வழிபாட்டுக்காக அதிகாலையில் எழுந்து, குளித்து தூய்மையாகக் கம்பம் ஏந்தி, வீடுகள்தோறும் சென்று இராமரைப் பூசிப்பர். இதன்போது, கம்பம் சுமந்து வரும் ஆண்களை வரவேற்று பூசிக்கத் தயாராகியுள்ள மக்கள் வீட்டுவாசல்களில் கோலமிட்டு வைத்திருப்பர். வீடுகள்தோறும் மாவிலையால் அலங்காரம் செய்திருப்பர். வீடுகளுக்குச் சுமந்து வரும் கம்பத்துக்கு எண்ணெய்யை ஊற்றி பத்தி பற்ற வைத்து சூடம் காட்டி வழிபடுவர். இராமரின் அடையாளமாக ஏந்திவரப்படும் கம்பத்தின் பாதங்களுக்கு மஞ்சள்நீர் ஊற்றி மலர்தூவி வழிபடுவர். கம்பத்தின் விளக்கிலுள்ள கருப்புநிற எண்ணெய்யை நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்வர். அனைத்து வீடுகளுக்கும் கம்பம் ஏந்திச் சென்று முடிந்ததும் கோயிலுக்குத் திரும்புவர். இவ்வாறே தமது ஊர்களில் மட்டுமின்றி ஏனைய ஊர்களுக்கும் சென்று வழிபடும் வழக்கமும் காணப்படுகின்றது.

கம்பம் சுமந்து வருதலின் நோக்கம்

இராமர் பஜனையின்போது ‘கம்பம்’ சுமந்து செல்வது குறிப்பிடத்தக்கது. பரதன் இராமனின் பாதணிகளை வைத்து ஆட்சி செய்ததாலேயே இராமர் பஜனை வழிபாட்டின் உருவம் (கம்பம்) பாதமாக அமைகின்றது. இது இராமரின் அடையாளமாக இவ்வழிபாட்டில் அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும், இராவணன் சீதையைக் கடத்திச் சென்றதும், சீதையின் நினைவால் வேதனையுற்ற இராமர் திருவிளக்கைக் (கம்பம்) கையிலேந்தி, தீமூட்டி சீதையை மீட்டுத் தருமாறு பஞ்சபாண்டவர்களிடம் வேண்டுகிறார். பஞ்சபாண்டவர்கள் அனுமனைத் தூதனுப்புமாறு கூறுகின்றனர். அதன்படி, அனுமனும் இராமனால் தூதனுப்பப்படுகிறான். சீதையைத் தேடிச் சென்ற அனுமன் திரும்பி வரும் வரையிலும் இராமர் மிகுந்த கவலையுடன் இருக்கின்றார். அவ்வாறு இராமர் விளக்கேந்திய சந்தர்ப்பமே இராமர் பஜனை வழிபாட்டில் கம்பம் ஏந்தி வருவதற்குக் காரணமாக அமைந்தது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட கதைப்பின்னணியே இராமர் பஜனை வழிபாட்டிற்கான அடிப்படை எனலாம். இதனை மையமாகக் கொண்டு, இந்தியக் கிராமத்து மக்கள் தங்களது வாழ்வில் தாம் முக்கியத்துவம் அளிக்கின்ற வழிபாடுகளில் ஒன்றாக இராமரை வழிபடும் வழிபாட்டையும் ஆரம்பித்து வைத்தனர். இந்தியாவில் அன்றுமுதல் இன்றுவரை ஆண்டுதோறும் இவ்வழிபாடு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், சீதையைக் கடத்தி வைத்திருந்த இடம் இலங்கையாகையாலும் இவ்வழிபாடு இங்கும் செல்வாக்குப் பெற்றதெனலாம். இவ்வழிபாடு மார்கழி மாதத்தில் வழிபடப்படுகின்றது. அதாவது மார்கழி மாதத்தில் மழையை வேண்டியும், நல்ல கணவனை வேண்டியும் பெண்கள் திருமாலை வேண்டி திருப்பாவை, திருவெம்பாவை போன்ற நோன்புகளை நோற்றனர். இம்மலையக மக்கள் திருமாலை இராமனின் அவதாரமாகவே கருதுகின்றனர். எனவே இக்குறிப்பிட்ட காலத்தில் திருமாலுடன் இணைத்து இராமனையும் வழிபட்டனர். இவர்கள் இவ்வழிபாட்டை முப்பது தினங்களாக மேற்கொள்கின்றனர்.

தமிழர்கள் மார்கழி மாதத்தினைப் ‘பீடை’ அல்லது ‘பூடை’ காலம் என அழைக்கின்றனர். ஏனெனில் கடும்சோதனைகளும், பஞ்சமும், பனியும் நிறைந்த காலமே மார்கழி மாதம். இக்காலத்தில் இராமரை வழிபட்டால், தமது பிரச்சினைகள் தீர்ந்து நல்வழி பிறக்கும் என்பது மக்களின் ஐதீகமாக உள்ளது. இந்த அடிப்படையிலேயே இராமர் பஜனை ஆரம்பித்துள்ளது. ஆரம்ப காலங்களில் படிப்பறிவற்றிருந்த இம்மக்கள் இறைபக்தி ஒன்றையே நம்பி வாழ்ந்தனர். இவ்வடிப்படையிலேயே இராமர் பஜனை தோன்றியது. நாட்டாரியலிலும் புராணங்களிலும் இவர்களுக்கு இருந்த ஈடுபாடே இவ்வழிபாடு சிறக்க அடிகோலியதெனலாம். இன்றுவரையிலும் இவ்வழிபாடு மரபு மீறாமல் வழிபடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இராமர் வழிபாடு சிங்கப்பூர், நியூசிலாந்து, தாய்லாந்து, சுவீடன், பர்மா, மியன்மார் போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. ஆனால் மலையகத்தமிழரின் இராமர் வழிபாட்டிலிருந்து அது வேறுபடுகின்றது. இந்நாடுகளில் இராமர் வழிபாடு தனியே அல்லாமல் திருப்பாவை, திருவெம்பாவையுடன் இணைந்து வழிபடப்படும் வழிபாடாக உள்ளது.

இராமர் வழிபாட்டின் படிமுறைகள்

மார்கழி மாத வழிபாடு சிறப்பிடம் பெறுகின்றது. மார்கழி மாதத்தின் முதல் நாளன்று இராமர் ஆலயங்களில் ‘கம்பம் ஊன்றுதல்’ என்ற நிகழ்வு இடம்பெறும். மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களில் இராமருக்கென தனியான ஆலயங்கள் கிடையாது. அம்மன், முருகன் ஆலயங்களோடு இணைந்ததாகவே இராமர் வழிபாடும் அமைந்திருக்கும். இராமர் வழிபாட்டின் ஆரம்பப்படியாகவே ‘கம்பம் ஊன்றுதல்’ இடம்பெறும். இவ்வழிபாட்டின் முதல் நாளன்று இந்நிகழ்வு நடைபெறும்.

இவ்வாறு முப்பது நாட்களும் வழிபடப்பட்ட இராமர் வழிபாடானது தைத்திருநாளன்று முடிவடையும். இவ்வழிபாட்டின் போது இணைக்கப்படும் பாடல்கள் இராமாயணத்தை மையமாகக் கொண்டும், இராமாயணப் பாத்திரங்களின் குணாதிசயங்களை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருக்கும்.

இவ்வழிபாட்டில் பாடல்களே அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இதனாலேயே ‘பஜ கோவிந்தம்’ என்ற பெயராலும் இராமர் வழிபாடு அழைக்கப்படுவதுண்டு. இராமர் பஜனை இசையால் வயப்பட்ட சிறுவர்கள் குதூகலத்துடன் கம்பம் சுமந்து வருவோரின் பின்னால் “கோவிந்தா! கோவிந்தா!” என சத்தம் போட்டுக் கொண்டும், கையைத் தட்டிக் கொண்டும் ஓடி வருவர்.

இராமர் வழிபாடும் சடங்கும்

இராமர் வழிபாட்டின் முதல் அங்கமாக ‘கம்பம் ஊன்றுதல்’ இடம்பெறும். இது மார்கழி மாதம் முதல் நாளில் இடம்பெறும். கோயிலின் வாயிலில் கம்பம் ஊன்றிக் காப்புக் கட்டுவது வழமையாக உள்ளது. இராமரை வழிபட்டு முப்பது நாட்கள் கொலுவில் இருத்தும் நோக்கில் இவ்வாறு காப்புக் கட்டுவர். கம்பம் ஊன்றுதலின்போது தப்பு (பறை) இசைக்கப்படும். சங்கு முழங்கும். எல்லோரும் ‘கோவிந்தா’, ‘கோவிந்தா’ எனக் கோஷமிட்டு கம்பத்தை ஊன்றி திருவிளக்கை ஏற்றிவைப்பர். முப்பது நாட்களின் பின்பே கம்பம் மீண்டும் இறக்கப்பட்டு காப்பு அவிழ்க்கப்படும். இக்கம்பத்தினை ஊன்றுபவர் பூசாரியாகவோ, கோயில் தலைவராகவோ இருப்பார். கம்பம் ஊன்றும்போது இசைக்கப்படும் பாடல்களில் பின்வரும் பாடல் குறிப்பிடத்தக்கது.

“பாண்டு ரங்கவரே

 கோவிந்தனம் சங்கீதனம்

 கோவிந்தா… கோவிந்தா …”

“இத்தனை இராமருக்கு திருக்கம்பம் போதாதா

 சத்திய ரகுராமரே…”

முதல் சடங்கின்போது அரிசியை ஊறவைத்து இடித்து ‘துள்ளுமா’வை பிரசாதமாக வழங்குவர். இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இராமர் வீதிவலம் வருவது வழமையானதே. ஆண்கள் அதிகாலையில் குளித்து, தூய ஆடைகளை அணிந்து, தம் மனதில் இராமரை இருத்தி கம்பத்தை ஏந்திச் செல்வர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பூசை செய்வர். கம்பம் ஏந்திச் செல்லும்போது இராமரைப் போற்றும் பாடல்களைப் பாடிச் செல்வர்.

இராமர் வழிபாடு காலையில் மட்டுமின்றி மாலையிலும் இடம்பெறுவதுண்டு. கம்பத்தை ஏந்திச் செல்லும் ஆண்கள் கூட்டம் கோயிலிலே தங்குவதுண்டு. இவர்கள் ஒவ்வொரு நாளும் கம்பத்தை மஞ்சள்நீரால் தூய்மைப்படுத்தி, மலர்மாலை சார்த்தி, திருவிளக்கிற்குத் திரியிட்டுக் கொளுத்தி வைப்பர். இராமரின் பாதங்களை தினமும் தரிசிப்பர். இராமர் பஜனை நாட்களில் பதினாறாவது நாள் (டிசம்பர் 31ஆம் திகதி) அன்று இரவு முழுவதும் ஆலயத்தை அலங்கரிப்பர். அடுத்த நாள் புதுவருடம் என்பதனால் குறிப்பிட்ட அந்நாளில் காலையில் விரதமும் மேற்கொள்வர். விரதத்தன்று பகல் கோயிலில் அன்னதானமும் செய்வர். விசேட பூசைகளும் இடம்பெறும். புதுவருடத்துக்கு முதல் நாள் இரவு பன்னிரண்டு மணிக்கு விசேட பூசைகள் செய்வதுண்டு. பஜனைப் பாடல்களைப் பாடி இரண்டு மணித்தியாலம் பூசை செய்வர்.

இராமர் பஜனைப் பாடி கம்பமேற்றி ஒவ்வொரு வீட்டுவாசலுக்கும் வரும் பக்தர்களை வரவேற்பதற்காகவே பெண்கள் தயாராக இருப்பர். கம்பத்திற்கு எண்ணெய் ஊற்றி, கம்பம் சுமப்பவரின் பாதங்களை மஞ்சள்நீரால் கழுவி, மலரிட்டு, ஆரத்தி, சாம்பிராணி காட்டுவர். கம்பத்துடன் இராமர், சீதை, அனுமன், இலக்குவணன் உள்ள படங்களையும் கையில் ஏந்தியபடி வருவர். கம்பம் வீடுதோறும் வரும்போது காணிக்கைகள் செலுத்தும் வழக்கத்துடன் ‘பிடி அரிசி’யையும் கொடுக்கும் வழமை காணப்படுகிறது. இவ்வீட்டு வழிபாடு பல நாள் தொடரும்.

இராமர் வழிபாட்டில் ‘துளசி எடுக்கும் சடங்கு’ சிறப்பானதாகும். இது இராமாயணக் கதையில் ஓர் அங்கமான ‘இராமரின் காட்டு ஆட்சி’யை நினைவுகூறுவதாக அமைந்துள்ளது. இதன்போது, தைப்பொங்கலின் முதல் நாள் (போகிப் பொங்கல் அன்று) இராம பக்தர்கள் அனைவரும் இணைந்து பாடலைப் பாடிக்கொண்டு அருகிலுள்ள காடுகளுக்குச் சென்று துளசி பறித்து வருவர். பின்பு தாம் கொண்டுவந்த துளசியை மாலை கட்டி கம்பத்திற்கும், இராமர் படத்திற்கும், சிலைக்கும் சார்த்தி வழிபடுவர். இராமனுக்கு துளசி எடுக்கக் காட்டுக்குச் செல்லும்போது,

“பஜமனை பஜமனை பஜமனையாம்

வெங்கா துளசி ஜானகியாம் ..”6

என்று பாடிச் செல்வர். இது இராமருக்கு துளசி மீதுள்ள ஆசையைக் காட்டுவதாக உள்ளது.

இராமர் பஜனையின் இறுதிநாள் தைப்பொங்கல் தினமாகும். சூரியப் பொங்கல் படையலுடன் அன்றைய இராமர் ஊர்வலம் இடம்பெறும். அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் இராமர் பவனி வருவார். தேரிற்கு முன்பு கம்பம் ஏந்தி, ஆண்கள் பாடல்களைப் பாடிக்கொண்டு செல்வர். தொடர்ந்து வழமையான இராமருக்கான பூசைகள் இடம்பெறும். இராமர் ஊர்வலத்தில் செல்லும் இராமாயணப் பாத்திரங்களை நினைவுகூறும் வகையில் வேடங்களைத் தரித்தபடி ஆண்கள் சிலர் ஆடியும் பாடியும் செல்வர். தேரும் கம்பமும் கோயிலை அடைந்தவுடன் அன்றைய நாள் இரவு ‘காப்பு அவிழ்த்தல்’ எனப்படும் கொடியிலிருந்த இராமரைக் கட்டவிழ்க்கும் சடங்கு இடம்பெறும்.

இராமர் பஜனையில் இராமர் புகழைப் பாடுவதே நோக்காகக் கொண்டவர்கள் ஏனைய பாத்திரங்களைப் பற்றிப் புகழாது விட்டுவிட்டனர். ஏனையோரை இகழவும் இல்லை. இதனை அநேகமான பஜனைப் பாடல்களில் காணலாம். உதாரணமாக, பின்வரும் பாடல்களில் அதனைக் காணலாம்.

“மார்கழி மாதம் திருநாளாம் 

நம் ரகுபதி ராமனுக்கே…’’

“தசரதன் மகனே தேவியின் தலைவா 

ஹரி ராமனே வருக ….”

“குங்குமச் சிலையே கோவிலில் தெய்வம் 

ஹரி ராமனே வருக”

“நாமம் அணிந்தோம் நாங்கள் அணிந்தோம் 

நல்ல மார்கழி மாதத்திலே

அடிபணிந்தோம் நாங்கள் அடிபணிந்தோம்

அந்த ஸ்ரீராமன் காலடியில்…”

இராமர் பஜனையும் பாடல்களும்

இராமர் பஜனைப் பாடல்கள் அனைத்தும் நாட்டாரியல் சார்ந்தவையாகும். அவை பாடப்படும் மெட்டுகளும் கிராமிய வயப்பட்டதாகும். இராமர் வழிபாட்டின் தொன்மையையும் இராமாயணப் பாத்திரங்களின் இயல்புகளையும் இப்பாடல்களின் வழி காணலாம். பாடல்களின் ஆரம்ப அடிகளை ஒருவர் பாட, அதைக் கேட்டு தொடர்ச்சியாக ஏனையர் பாடும் மரபும் காணப்படுகிறது. இராமர் பஜனைப் பாடல்களில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளும் கிராமிய இசைக்கேற்ப அமைந்த இசைக்கருவிகளேயாகும். இவற்றுள் மிருதங்கம், கைத்தாளம், சங்கு, ஜால்ரா, சேகண்டி, குழல் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

கிராமிய வழிபாட்டில் சடங்குகள் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றனவோ, அதேபோல பாடல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இராமர் பஜனைப் பாடல்கள் முக்கியத்துவம் பெறக் காரணமுண்டு. ஏனெனில் எந்தவொரு விடயத்தையும் கதைகளாகக் கேட்பதை விட இசையாகப் பாடும்போது அது எம்மை இசைய வைக்கிறது. அதுபோலவே இராமர் பஜனையிலும் இலகுவான பாடல்களும் இனிமையான குரல்களும் எம்மை ஈர்க்கச் செய்கின்றன.

இராமர் பஜனைப் பாடல்கள் பல்வேறு கருக்களைக் கொண்டமைந்துள்ளன. அவை,

  • இராமர் வழிபாட்டின் முக்கியத்துவம்
  • காப்புப்பாடல்
  • இராமாயணத்துடனான தொடர்பு
  • இராமாயணப் பாத்திரங்களின் பெருமையும் புகழும்
  • சீதைக்கு நேர்ந்த கொடுமைகள்
  • இராம அவதாரங்கள்
  • இராமர் பஜனை வழிபாட்டுச் சடங்குப் பாடல்கள்
  • இராமர் – சீதைக்கிடையிலான காதல் உணர்வு
  • இராமரை வழிபடுவதால் பெறும் பயன்கள்

இராமர் பஜனையில் காப்புப்பாடல்களாக விநாயகர், முருகன், சிவன் முதலியோரை விழித்துப் பாடிய பின் இராமர் பாடல்கள் ஆரம்பமாகும். இந்தக் காப்புப் பாடல்கள் முதல் நாளும் இறுதி நாளிலுமே பாடப்படுகின்றன. இராமர் துதிப்பாடல்களுக்கு எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

“நம பார்வதி பதியே

அரகர மகாதேவா 

பாண்டு ரங்கவரே 

கோவிந்தனம் சங்கிதனம் 

கோவிந்தா கோவிந்தா

ஜே! ஜே! ராமர் சிங்கார ராமா

மண்ணுலகில் பிறந்த மௌனராமா!

ஜே! ஜே! ராமா ……..

சீதையை மணம் முடித்த 

சிங்கார ராமா 

தேசமெலா சுத்தி வரும்

ஒய்யார ராமா!

ஜே! ஜே! ராமா…

சங்குச் சக்கரம் கைபிடித்த 

கோபால ராமா 

நையாளனே சீத்தாராமா

சிங்கார ராமா 

ஜே! ஜே! ராமா….”

இராமர் பஜனைப் பாடல்களில் உயிர்நாடியாக விளங்குவது இப்பாடல்களில் வரும் இராமாயணக் காட்சிகளே. இராமருக்கும் சீதைக்குமிடையிலான காதல் உறவு, சீதைக்கு நேர்ந்த கொடுமைகள், இராமர் மீதான பக்தி, இராமரிடம் அருள் வேண்டல், இராமரை வழிபடுவதால் பெறும் பயன்கள், இராமரது அரவணைப்பு, இராம அவதாரங்கள், இராமரை வழியனுப்பும் பாடல்கள் என்பன குறிப்பிடத்தக்கன.

இராமரும் சீதையும் பார்த்துக்கொள்ளலும் காதல் கொள்ளலும் தொடர்பாக கம்பர் காட்டிய “அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்ற வரிகளின் பொருளை இராமர் பஜனைப் பாடல்களிலும் காட்ட முற்படுவதைப் பின்வரும் பாடலடிகள் விளக்குகின்றன.

“கல்யாண ராமருக்கும் கண்ணான ஜானகிக்கும் 

அன்பு வந்த நேரமல்லவோ…….”

இராமர் பஜனையில் இராமாயணப் பாத்திரங்களின் பெருமையும் புகழும் பேசப்படுகின்றது. இராமர், சீதை, இராவணன், அனுமன், இலக்குவணன் போன்ற பாத்திரங்களைப் பற்றியே இராமர் பஜனைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. ஆரம்பத்தில் இராமன்–சீதை புகழ்பாடும் பாடல்கள் இராமாயணத்தில் போலவே இங்கும் பாடப்படுகின்றன. இராமரின் குணநலன்கள், அருள் உள்ளம், சீதை மீதான காதல், வீரச் செயல்கள், அவரது தோற்றம் என்பன சிறப்பாக வர்ணிக்கப்படுகின்றன. உதாரணமாக, பின்வரும் பாடலில் வாலியை வதைத்தமையும் துரியோதனனை அழித்தமையும் இராம அவதாரச் சிறப்பும் எடுத்துரைக்கப்படுவதைக் காணலாம்.

“அயோத்தி மாநகரில் அவதாரம் செய்யவா

அடியார்கள் தன்னைக் காக்கவா 

அறங் கேசவா அடியார்கள் 

தன்னைக் காக்கவா! – 2

அந்தணர் இராவணன் தங்கையர் 

நாட்டினை பங்கம் படைத்தவர் 

வாலியை வதக்கி நின்ற சுப்பிரமணிய 

தாக்கினி வானவர் மேலதாக்கினி 

பரந்தாக்கினி வானவர் மேலதாக்கினி – 2

மூடன் கும்பகர்ண முடித்தாயென தாக்கினி 

மூனாம் பரத்தப் போக்கினி பரந்தாக்கினி 

மூனாம் பரந்தப் போக்கினி!..

அந்தணன் இராவணன் ….

பதினெட்டாம் போர்க்களத்தில் 

பாவி துரியோதனன் பாவி துரியோதனன் 

ஆதியைக் காப்போம் ஐயா!

அறங்கேசவா ஆதியைக் காப்போம் ஐயா!

அயோத்தி மாநகரில்….”

மேலும் இராமன் பற்றிப் பேசுமிடத்து அவனது குணச்சிறப்பு பற்றியே சுட்டப்படுகின்றது. சத்தியம் தவறாதவனாகவும், தனது குலப்பெருமையைக் காக்கக் காட்டிற்குச் செல்லும் ஆணையைக்கூட ஏற்றுக்கொண்டவனாகவும், இலட்சியமே சத்தியமானவனாகவும் இராமரின் இயல்புகள் எடுத்துக் கூறப்படுகின்றன. பின்வரும் பஜனைப் பாடல்கள் இவ்வியல்புகளை வெளிப்படுத்துகின்றன.

“குலம் காத்த ராமரே 

குலம் காத்த ராமரே

அருவில் உருவமான ராமரே 

ஹரி ராமரே 

அருவில் உருவமான ராமரே

இலட்சியமே சத்தியமாய் 

சேவை செய்யவே 

ஹரி ராமரே 

நீ வரம் தா!

உன்னைக் காணவே 

நீ வரம் தா!”

இராமரின் புகழ் பேசப்படுவதைப் போலவே, சீதையினது பெருமையும் கூறப்படுகின்றது. இராமனின் வாழ்வுக்கு வளம் சேர்ப்பவளாக சீதை குறிப்பிடப்படுகின்றாள்.

“மண்ணெல்லாம் பொன்னாகும் ராமர் அருளாலே 

 வாழ்வெல்லாம் வாழ்வாகும் 

 சீதை அருளாலே 

 ஜன்னல் பின்னல் இடையோடு 

 இங்கு வந்தாளே!

 செய்த பாவம் போதுமே

 ஜென்மக் கடன் தீருமே!…”

சீதைக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய விடயங்களும் இராமாயணத்தில் போலவே பஜனைப் பாடல்களிலும் விவரிக்கப்படுகின்றன. மாயமானைக் கண்டு மயங்கியதால் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள் என்ற செய்தி பின்வரும் பஜனைப் பாடலடிகளால் எடுத்துரைக்கப்படுகின்றது. 

“….இராவணன் சீதையை வைத்தீரோ!

 எங்கள் அனுமானை தூது அனுப்பினாரோ”

என சீதை இராவணனிடம் சிக்குண்ட செய்தி கூறப்பட்டுள்ளது. 

“மானைப் பிடித்துத் தாருங்கள் மன்னவா

மானைப் பிடித்துத் தாருங்கள் 

அந்த மானும் வேணாம் பெண்ணே 

வேற மான் பிடித்துத் தாரேன்

அந்த மானும் இல்லாவிட்டால் 

என்னுயிரை இழந்துவிடுவேன்….”7 

என்ற பாடலடிகள் சீதையின் பிடிவாதக் குணம் பற்றி விவரிக்கின்றன.

சீதை இராவணனால் மட்டுமல்ல, இராமனது கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டாள். இராவணன் செய்த கொடுமையால் இராமரிடத்தில் சீதைக்குக் கொடுமைகள் ஏற்பட்டன. சீதை இராவணனிடமிருந்து மீண்டு வந்தபோதும், ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, தன்னைத் தூயவளாக நிரூபிக்கும் வகையில் இராமரின் ஆணைக்குட்பட்டு தீக்குளித்தாள். இது சீதைக்கு நேர்ந்த பெருங்கொடுமை. இராமரால் சீதைக்கு ஏற்பட்ட கொடுமையைக் காட்டுவதாக பின்வரும் பாடல் அமைகிறது.

“ஊரார் சொல்லிய பழிச்சொல்லு 

அன்னை ஜானகி குதித்தாள்

தீ நடுவில் 

ராமர் விதித்தான் விதியென்று 

ஜானகி குதித்தாள் 

தீ நடுவில்…..”8

இராமாயணத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றுதான் அனுமன் என்ற பாத்திரம். இராமசரிதத்தை திசை திருப்பியவனும் இவனே தான். இவனைப் பற்றியும் புகழ்பாடும் பாடல்கள் இராமர் பஜனையில் இடம்பெறுகின்றன.

“இராமர் கதையை எழுந்து வரும் 

கோவில் மன்றத்தில் ஆவலோடு 

அனுமன் வந்தான் பக்தர் கூட்டத்தில் 

பெயரைக் கேட்டதும் அனுமன் 

துள்ளிக்குதிக்கின்றான்

தன்னை மறந்தவன் 

கதையை எண்ணி அழுகின்றான் 

ஊரும் அழுதது அனுமன் 

கண்ணும் கசிந்தது 

தன்னை மறந்தவன் கதையை 

எண்ணி அழுகின்றான்

இராமர் கதையை 

மிதிலை நகரம் கன்னிமாடம் 

அன்னை ஜானகி அண்ணனோடும் 

தம்பியோடும் ஜானகி பயணம்!

கதையைக் கேட்டதும்

அனுமன் துள்ளிக்குதிக்கின்றான் 

தன்னை மறந்தவன் 

கதையை எண்ணி அழுகின்றான் 

இராமர் கதையை”9

இப்பாடல்கள் மூலம் இராமனிடத்து அனுமன் கொண்ட பக்தியும் மரியாதையும் புலப்படுவதோடு இராமர் காட்டிற்குச் செல்லும் கதையைக் கேட்டு துயருற்ற அனுமனின் மனநிலையும் புலப்படுகிறது. இராம பஜனைப் பாடல்களில் இராம பக்தியுடன் சேர்ந்து அனுமனின் பக்தியும் வெளிப்பட்டு நிற்பதோடு, அனுமனை வழிபடவும் அதுவே வழிவகுகின்றது.

இராம பஜனைப் பாடல்கள் இராமரோடு இணைந்த அனுமன் வழிபாட்டையும் பிரதிபலிப்பதாக உள்ளது. பின்வரும் பாடலடிகள் இதனை விளக்குகின்றன.

“பத்துப்படி ஏறி வந்தேன்

ஆஞ்சனேயனே!

வெற்றிதர வேண்டுமய்யா ஆஞ்சனேயனே! 

நித்தம் உன்னைப் பாடுகின்றோம் 

ஆஞ்சனேயனே!

வெற்றிதர வேண்டுமய்யா ஆஞ்சனேயனே!

பக்தியுடன் பாடுகின்றோம் 

ஆஞ்சனேயனே! 

வெற்றிதர வேண்டுமய்யா ஆஞ்சனேயனே!”

இராமாயணப் பாத்திரங்களுள் அளவுக்கதிகமான புகழ் இராமர் மீதும் சீதை மீதுமே பாடப்படுகின்றன. பெரிதும் இவர்களது காதல் உறவை பற்றிப் பேசும்போதே அவர்களைப் பற்றிய புகழும் பேசப்படுகின்றது. இராமர் பஜனை வழிபாட்டிலும் இராமர் –  சீதைக்கிடையிலான காதல் உறவையும், திருமண உறவையும் சித்தரிக்கும் பாடல்கள் காணப்படுகின்றன.

“கல்யாண ராமருக்கும் கண்ணான ஜானகிக்கும் 

அன்பு வந்த நேரமல்லவோ 

வைதேகி மாலையிட்டு 

வைபோக வாழ்வும் பெற்று 

தேடி வந்த ராமர் அல்லவோ

அந்த ராமருக்கும் சீதைக்கும் 

மயில்வாகனம்

அந்த வானவில்லில் ஒரு வண்ணம் 

ஜெயராமா 

எம்மை நாடி வந்து காத்தருள்வாய் 

ஹரி ராமா….

கல்யாண ராமருக்கும்

அந்த அயோத்தி மாளிகையை 

ஆண்ட ராமா …” 

சீதை இராமனிடம் மானைப் பிடித்துத் தருமாறு கேட்கும் பாடல்கள், இராமர் மானைப் பிடிக்கச் சென்ற பாடல்கள், சீதையைக் காணாது இராமர் துடித்த பாடல்கள், அனுமனைத் தூதனுப்பிய பாடல்கள், சீதை இராமனை எண்ணி இராவணனிடம் போராடிய பாடல்கள் என எல்லாப் பாடல்களும் இராமர், சீதைக்கான காதல் உறவைச் சுட்டி நிற்கின்றன.10

கிருஷ்ண அவதாரங்களுள் இராம அவதாரமும் ஒன்று. இவ்வவதாரம் பற்றி பஜனைப் பாடல்கள் விவரிக்கின்றன. அவை கண்ணன், மாயவன், கோவிந்தன், கேசவன் என்ற பெயர்களில் அமைந்துள்ளன. உதாரணமாக, பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

“அயோத்தி மாநகரில் அவதாரம் செய்யவா…”

“கண்ணா வாடா கண்ணா வாடா 

கனி பெரம்போடே

என் கருணை மீது 

நீ வருவாய் எங்கள் ராமரே!

கூவி அழைக்கின்றானே 

ஜெயராமரே 

எந்தன் கடைக்குரலும் கேட்கலையோ

ஹரி ராமரே!

கண்ணா வாடா …

ஆபத்து வேளையில் ஹரி ராமரே

என்னை ஆதரிக்க வேண்டுமய்யா 

ஜெயராமரே”

இராமாயணக் கதையில் எல்லாப் பகுதிகளிலும் கூறப்படும் செய்தி இராமர் பஜனையில் இடம்பெறுவதில்லை. இராமன், சீதை, அனுமன் என்ற பாத்திரங்களுடன் தொடர்புடைய சரிதையே பெரிதும் இடம்பெறுகின்றது.¹¹

இராவணனுடன் இடம்பெற்ற யுத்தம், படுகளத்தை இராவணன் கண்டது, இராவணன் தேர் ஏறுதல், இராவணன் அபசகுனங்களைச் சந்தித்தல், ஸ்ரீராமர் தேர் ஏறுதல், மகோதரன் வதை, இராவணன் யுத்தம், மண்டோதரி புலம்பல், சீதாதேவிக்கு அனுமன் சுபசேதி கூறல், சீதாதேவி அனுமனை உபசரித்தல், சீதாதேவி அக்கினியில் குதித்து எழுந்தது, ஸ்ரீராமர் சீதாதேவியை அங்கீகரித்தல், மக்களையும் மருமகளையும் சக்கரவர்த்தி புகழ்தல், ஸ்ரீராமர் வரவை அனுமன் பரதனுக்குக் கூறல், பரதர் ஸ்ரீராமரைப் பணிதல், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் போன்ற பல முக்கியமான இராமாயணக் கதையம்சங்கள் இராமர் பஜனையில் எங்கும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இராமர் கதையின் சிறப்பம்சங்களை மட்டுமே இந்தப் பஜனைப் பாடல்களில் சித்தரித்துள்ளனர். குறிப்பிட்ட கால எல்லையில் நடத்தப்பட வேண்டிய நாடகம் ஆகையால் இப்பகுதிகள் பற்றிய விரிவான செய்திகளைத் தவிர்த்திருக்கலாம். வாய்மொழி மரபில் வளர்ந்த கதையாகையால் இசையால் சில விடயங்கள் அருகியும் மருவியும் போயிருக்கலாம்.

இராமர் பஜனை வழிபாட்டில் இசை

இராமர் பஜனையில் கிராமிய இசைக்கருவிகளே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் பறை, மிருதங்கம், சல்லாரி, கைத்தாளம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும். புருஷோத்தமனைப் பாட புல்லாங்குழலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தப் பஜனையில் பாடப்படும் பாடல்கள் மிகவும் உருக்கமானவை. இராமர் பாடல்கள் ஒவ்வொரு நாளும் பாடப்படுகின்றன.

பஜனையின் இறுதிநாளன்றும் (முப்பதாம் நாள்), கம்பம் ஊரை வலம் வரும்போதும் பாடப்படுகின்ற ‘வழியனுப்பும்’ பாடல்கள் மிகவும் அருமையானவை. உதாரணமாக இப்பாடல்களைக் கொள்ளலாம்.

“போறாரே பொன்னான சீதையவள் 

கையாலே கோர்த்துக்கொண்டு சீதையவள்

போறாரே ராமர் போறாரே ..”12

கோயிலுக்குள் சென்ற ராமரை மறுநாள் மீண்டும் வரும்படி அழைத்துப் பாடும் பாடல்களும் உள்ளன. அவை,

“ராமா ராமா ராமா என்று 

பாடுவதற்கே தினம் பாடுவதற்கே

இனி காத்திருப்போம் 

மார்கழி மாதம் வரைக்கும் 

போய் வா போய் வா என்று 

கூறுவதற்கே இப்போ கூறுவதற்கே

மனம் துடிக்கின்றதே 

ராமா மனம் துடிக்கின்றதே 

போய் வா ராமா போய் வா ராமா..” 

இராமர் பஜனைப் பாடல்களுக்கு உயிரோட்டம் கொடுப்பதாக நாட்டார் இசை அமைகின்றது. அதற்கேற்பவே பேச்சோசைச் சொற்களும் சொல்லாடல்களும் அமைந்துள்ளன. உதாரணமாக, “எப்ப வருவாரோ”, “வெத்தலையில மாலை கட்டுங்க”, “போறாரே…” போன்ற பாடல்களைக் காட்டலாம். அணிச்சிறப்பினை அச்சொட்டாகவே இப்பாடல்களில் காணலாம். உவமை, உருவகம், தன்மையணி, சிலேடை போன்றன இப்பாடல்களில் அதிகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. பாடலின் மெட்டுத் தொடக்கம் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் வரையில் எல்லாம் நாட்டுப்புறக் கலைகளைப் பின்பற்றியே அமைந்துள்ளன.

ஆரம்பகால பஜனைப் பாடல்களில் நாட்டாரியல் மெட்டுகளே பயன்படுத்தப்பட்டன. ஆனால் தற்காலப் பாடல்கள் இம்மரபிலிருந்து மாறுபட்டுள்ளன. மாறாக சினிமாப் பாடல் மெட்டுகளும் மேலைத்தேயப் பாணியிலான பாடல்களின் தாக்கமும் இப்பாடல்களில் காணப்படுகின்றன. பஜனை வழிபாட்டில் பல நவீன விடயங்களையும் காணலாம். இன்று பாடப்படும் பாடல்கள் பொழுதுபோக்கிற்காகப் பாடப்படுகின்றன. பஜனை பாடும்போது அணியும் ஆடை அலங்காரங்களும் வேறுபட்டுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இராமர் வழிபாட்டின் பலன்கள்

இராமரை வழிபடுவதால் மக்கள் பிள்ளைப்பேறு, தொழில்நலம், குடும்ப ஒற்றுமை, கல்வி விருத்தி, தீராத நோய்கள் தீரும் போன்ற நற்பலன்களையும் பெறலாமெனக் கருதுகின்றனர்.

“கண்ணனென்னும் ராமர் பேரைச் 

சொல்லச் சொல்ல 

கல்லும் முள்ளும் 

மெல்ல மெல்ல 

அல்லும் பகலும் ராமர் 

உன்னைத் தேடித் தேடி 

எங்கள் ஆண்டவனே 

வருக வேணும் 

ராமா கோவிந்தா 

கண்ணனென்னும்…..”

இலங்கையில் இராமர் வழிபாடு இந்திய வம்சாவழி மக்கள் மலையகத்தில் வந்து குடியேறிய காலம் தொடக்கம் வழிபடப்படுகின்ற வழிபாடாகும். இவ்வழிபாடு இலங்கையின் ஏனைய பிரதேசங்களை விட மலையகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.¹³

மலையக மக்கள் ஆரம்ப காலங்களில் வாய்வழி மரபுகளையே பின்பற்றி வந்தனர். படிப்பறிவில் குறைந்த மக்கள் பாடல்கள் வாயிலாகவே தம் கலை, கலாசாரங்களைப் பரப்பி வந்தனர். வழிபாடுகளிலும் அவ்வாறே. இயல்பாகவே இதிகாச புராணங்களின் ஈடுபாடுடைய அவர்கள் இதிகாச புராணப் பாத்திரங்களைப் பெரிதும் போற்றினர். அவ்வகையில் இராமாயணத்தில் அவர்களுக்கு இருந்த ஈடுபாடும், இராமரிடத்து அவர்கள் கொண்டிருந்த பக்தியுமே இவ்வழிபாடு சிறக்க வழிவகுத்ததெனலாம்.¹⁴

ஒட்டுமொத்தமாக நோக்குமிடத்து மலையகக் கூத்து (நாடக) மரபுகளில் காமன்கூத்து, அர்ச்சுனன் தபசு, பொன்னர் – சங்கர் வழிபாட்டினை அடுத்து நின்று நிலைக்கும் வழிபாடாக ‘இராமர் பஜனை வழிபாடு’ அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடிக்குறிப்புகள்

1. அருணாசலம், க. (1994) மலையகத் தமிழ் இலக்கியம், தமிழ்மன்றம். பக். 17–18.

2. சோதிமலர் ரவீந்திரன் (1995) காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும், கண்டி: சன்பிரிண்ஸ்.

3. சோதிமலர் ரவீந்திரன் (2012) இலங்கையின் மலையகத்தில் ஆகம நெறிசாராத வழிபாடுகள், கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வேடு. பக். 377–381.

4. சதீஸ்வரன், சி. (2014) புளியாவத்தை அம்மன் கோயில் கதை (தொகுப்பு), ஹட்டன்: விவேக அறநெறி அறிவக வெளியீடு. ப. 82.

5. தகவல் – நேரில் பெற்றது – நாகலிங்கம், வி., டயகம தோட்டம், டயகம.

6. தகவல் – கோவிந்தசாமி, க., புளியாவத்தை தோட்டம்.

7. தகவல் – இலட்சுமி, மா., பொகவந்தலாவ, லொயினொன் பிரிவு, பொகவந்தலாவ.

8. தகவல் – கோவிந்தசாமி, க., புளியாவத்தை தோட்டம், புளியாவத்தை.

9. தகவல்: மேலது.

10. சோதிமலர் ரவீந்திரன், மு.கு. ஆய்வேடு, பக். 380–381.

11. அருணாச்சலக் கவிராயர் (2011) இராமன் நாடக கீர்த்தனை, சென்னை: பாரதி நிலையம்.

12. தகவல் – தங்கமா, சி., பொகவந்தலாவ தோட்டம்.

13. சோதிமலர் ரவீந்திரன் (1998) காமன்கூத்து, தமிழ் விசேட துறை பட்டப்படிப்பிற்கான ஆய்வேடு.

14. தகவல்: விக்னேஸ்வரி, ஜீ., நக்கல்ஸ், முருகலை தோட்டம்.



About the Author

கலாநிதி சோதிமலர் ரவீந்திரன்

கலாநிதி (திருமதி) சோதிமலர் ரவீந்திரன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் (தரம் I) பணியாற்றி வருகிறார். அத்துறையின் தலைவராகப் (2018-2020) பணியாற்றியுள்ள அவர், பல்கலைக்கழத்தில் பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே இளங்கலைமாணி, முதுதத்துவமாணி, கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள அவர், நாட்டார் வழக்காற்றியல், பண்பாட்டு வரலாறு, இலங்கைத் தமிழ் இலக்கியம் முதலான துறைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். அத்துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைத் தேசிய மற்றும் சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்துள்ளதுடன் ஆய்விதழ்களிலும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்தும் எழுதி வருகிறார். ‘காமன் கூத்தும் மலையகப் பாரம்பரியமும்’ (2004) என்ற நூலினை வெளியிட்டுள்ளதுடன் ‘இலங்கையின் மலையகத்தில் ஆகமநெறி சாராத வழிபாடுகள்’ என்ற தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
பதிவுகள்