கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடைப் பண்பாட்டசைவுகள்: சாறணும் புடவையும்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடைப் பண்பாட்டசைவுகள்: சாறணும் புடவையும்

July 10, 2026 | Ezhuna

கிழக்கிலங்கை இலங்கையில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசமாகும். இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களின் பண்பாட்டுக்கூறுகள் மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டுக்கூறுகளோடு பல விடயங்களில் ஒத்ததாகவும் வேறுப்பட்டும் காணப்படுவதோடு பிற முஸ்லிம் பிராந்திய கலாசாரகூறுகளிலிருந்தும் தனித்துவமாகக் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்கள் கிழக்கின் பூர்வ பண்பாட்டுக்கூறுகளினை தமது மத நம்பிக்கைக்கு ஏற்ப மதத்தின் அடிப்படைக்கூறுகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பண்பாட்டுக்கட்டமைப்பை தகவமைத்துக் கொண்டனர். இப்பண்பாட்டுப் மறுமலர்ச்சியின் கூறுகளினை கலந்துரையாடுவதாக ‘கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகள்’ என்ற இக்கட்டுரைத்தொடர் அமையும். இதன்படி, கிழக்கிலங்கை முஸ்லிம்களின் தாய்வழி குடிமரபு முறை, முஸ்லிம் குடிவழிமரபில் உள்ள மாற்றங்கள், கிழக்கிலங்கை முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள் அவற்றில் தற்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பாரம்பரிய பரிகார முறைகள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப அமைப்புகள், உணவுமுறைகள், ஆடை அணிகலன்களும் மரபுகள், வீடுகள் மற்றும் கட்டடக்கலை மரபுகள், பாரம்பரிய அனுஷ்டானங்கள், கலைகள் எனப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்தத் தொடர் பேசவுள்ளது.

அறிமுகம்

இலங்கைச் சோனகர் ஆடை அணிகலன் – 20ஆம் நூற்றாண்டு. மூலம்: en.wikipedia.org/wiki

ஆடை அணிகலன்கள் எப்போதும் பண்பாட்டு அடையாளாகவும் சமூக வேறுபாடு, மதப்பின்னணி ஆகியவற்றினை பிரதிபலிக்கும் குறியீடுகளாகவும் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பண்பாட்டசைவுகளில் அவர்களது ஆடைப்பண்பாடும் தனித்துவமானதொன்றாகும். இது இஸ்லாமிய நெறிகள், அரேபிய-பாரசீக முஸ்லிம் உலக வழக்குகள், தமிழர் பண்பாடு, தென்னிந்திய, மற்றும் ஐரோப்பியக் குடியேற்றத் தொடர்புகள் ஆகியவற்றின் தாக்கத்தையும் கொண்டுள்ளது. இக்கட்டுரை இந்த மரபை அதன் ஆரம்பகால வடிவங்கள் முதல் சமகாலம் வரை ஆய்வு செய்கிறது. ஆடைகளுடன் பிற அணிகள், ஆபரணங்கள், மருதாணி (மெஹந்தி) அலங்காரம், சிகை அலங்காரம் மற்றும் ஆடை நடைமுறைகள் ஆகியவை தொடர்பாக ஆராயப்படுகின்றன. கிழக்கு முஸ்லிம்களின் ஆடைப்பண்பாடு பக்தி, பாலினம், வர்க்கம் மற்றும் பிராந்திய அடையாளம் ஆகியவை தொடர்ந்தும் தன்னுள் பரிணமித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மாறும் குறியீட்டுப் புலம் (Semiotic Field) என்று குறிப்பிடலாம்.

சாறண் வகைகள்

‘குறியீட்டுப் புலம்’ என்பது அர்த்தம் செறிந்த குறியீடுகளின் வலையமைப்பாகும். ஆடையைப் பொறுத்தவரை, சாரம் அல்லது சல்வார் கமீஸ், புடவை அல்லது அபாயா, தங்கம் அல்லது வெள்ளி, தலை மூடப்பட்டிருப்பது அல்லது மூடப்படாமல் இருப்பது போன்ற ஒவ்வொரு தேர்வும், அதை அணிபவரைப் பற்றிய தகவலொன்றைக் கூறும் ஒரு குறியீடாகச் செயல்படுகிறது. கிழக்கு முஸ்லிம்களின் ஆடை என்பது உடலை மறைப்பது என்பதைத் தாண்டிய சமூக மற்றும் தார்மீகச் (Moral) செய்திகளால் குறியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, அலங்காரமற்ற ஒரு வெள்ளைச் சாரம் என்பது வெறும் மனிதன் எளிமையைப் பின்பற்றும் நோக்கத்தைக் குறிக்கிறது. ஒரு கருப்பு அபாயா, இஸ்லாமிய தூய்மைவாதக் கருத்தியலின் தாக்கத்தினையும், தொடர்பையும் குறிக்கிறது.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடை அணிகலன் பண்பாடு இஸ்லாமிய மார்க்கத்தின் செல்வாக்குடன் அராபிய, பாரசீக, வட-இந்திய வர்த்தகர்கள், சுதேச தமிழர்கள் மற்றும் பிற்காலத்தில் செல்வாக்குச் செலுத்திய காலனித்துவச் சக்திகளுக்கிடையிலான பல நூற்றாண்டுகாலத் தொடர்புகளைப் பிரதிபலிக்கும் ஒரு தனித்துவமான கலாசாரத் தொகுப்பாகக் காணப்படுகின்றது. ஆடைப்பண்பாடும் நிலையற்றதாகவும் காலாகாலம் பரிணாமமடைவதுமாகக் காணப்படுகின்றது. ஆடைகளோடு ஒப்பிடுகையில் ஆபரணங்களின் பரிணாமம் குறைந்தளவே நிகழ்ந்துள்ளது. குறிப்பாக தங்க நகைகள் செல்வம், அந்தஸ்து மற்றும் தாயாதிச் சொத்துகளின் நீடித்த அசையும் அடையாளங்களாகச் செயல்படுகின்றன. பொதுவாக இவையிரண்டும் வெளிப்படையாக அவதானிக்கக்கூடிய பண்பாட்டுக் கூறுகள் என்ற சிறப்புடன் தலைமுறை தலைமுறையாக சமூகத்தின் அடையாளங்களைச் சுமந்து வருகின்றன.

இலங்கை முஸ்லிம்கள், வரலாற்றுரீதியாக தீவின் கரையோரங்களிலும் நாட்டின் மத்திய பகுதியிலும் குடியேறிய இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றிய மற்றும் தழுவிக் கொண்ட சுதேச தமிழ், சிங்கள, அராபிய, பாரசீக, இந்திய, தூரகிழக்காசிய பூர்வீகங்களின் கலவையாக உள்ளனர். இந்தப் பண்பாட்டுத் திரட்சி தமிழ் மொழியைப் புழங்கு மொழியாகவும், அரபு மொழியை சமய மொழியாகவும் கொண்ட தனித்துவமானதொரு வாழ்வொழுங்கைப் படிப்படியாக உருவாக்கியது. அதேவேளை கிழக்கிலங்கை முஸ்லிம்கள் தங்களது இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் அவர்களின் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலையும் பிரதிபலிக்கும் புதியதொரு தனித்துவமான கலாசார அடையாளத்தை உருவாக்கினர். அவர்களின் ஆடை அணிகலன் மரபுகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட பண்பாட்டு நினைவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன: அராபியத் தாக்கங்கள் அடையாளத்தை வலியுறுத்துவதோடு, தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் அழகியல், ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்காரங்களைக் கட்டமைக்கின்றது. அதேவேளை காலனித்துவ சக்திகளின் தாக்கங்கள் புதிய மூலப்பொருட்கள் மற்றும் வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

கிழக்கிலங்கைச் சோனகர்களின் ஆடைப்பண்பாட்டை வடிவமைப்பதில் முதலாவது அம்சமாக அமைவது இஸ்லாமியப் போதனைகளாகும். இஸ்லாமிய வரையறைகளின்படி மறைக்கப்பட வேண்டிய உடலின் பாகங்கள் ‘அவ்ரத்’ என்றழைக்கப்படுகின்றன. இது ஆண்கள் தொப்புள் முதல் முழங்கால்கள் வரை மறைப்பதையும், பெண்கள் முகம், கைகளைத் தவிர முழு உடலையும் மறைப்பதையும் கட்டாயமாக வலியுறுத்துகின்றது. சில சிந்தனைப் பிரிவினர் முகம் மற்றும் கைகளையும் மறைத்துக் கொள்கின்றனர். வரலாற்று ரீதியாக இவ்வரையறைகளைப் பேணிய ஆடைகள் சேலை முதல் அபாயா வரை பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன. எனவே கிழக்கிலங்கை முஸ்லிம்களின் உடை என்பது கலாசார மரபுரிமையின் அம்சமாக மட்டுமன்றி மார்க்கப் பக்தியின் உணர்வுபூர்வமான உருவகமாகவும் உள்ளது. இது அன்றாடம் பயன்படுத்துகின்ற உடையை அறம், நவீனம், சமூகச்சார்பான பரந்த இஸ்லாமிய இலட்சியங்களுடன் இணைக்கிறது.

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடை அணிகலன் பண்பாடு வெறும் அலங்காரச் செயல்பாடாக அமையாமல் பண்பாட்டுப் பிரதிகளின் வெளிப்பாடாகவும் செயல்படுகின்றது. செல்வாக்கு, செல்வம், பரம்பரை, மார்க்கப்பற்று, பக்தி ஆகியவற்றின் மதிப்புகளைப் பிரதிபலிக்கின்றது. அதே நேரத்தில் உலகமயமாக்கல், புலப்பெயர்வுகள் மற்றும் சீர்திருத்தவாத இஸ்லாமிய இயக்கங்கள் மூலம் புதிய மாற்றங்களைப் பரிசோதனை செய்து வருகின்றது. இக்கட்டுரை ஆடை வடிவ மாற்றங்கள், அவற்றின் சௌகர்யம், பிற சமூகத்தவர்களின் கண்ணோட்டம், அரசியல் குறித்த விவாதங்களையும் தீர்ப்புகளையும் அதிகம் கலந்துரையாடாமல், அவர்களின் ஆடைப்பண்பாட்டு நினைவுகளின் தொகுப்பாகவே அமையும். ஏனெனில் வரலாறு நெடுகிலும் சமூகத்தின் உள்வீட்டுக் கலந்துரையாடல்களூடாகவே இவ்வாடை வடிவ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

இக்கட்டுரை வாய்மொழி வரலாறுகள், பிராந்திய உள்ளூர் வரலாறுகள், நிழற்படச் சேகரிப்புகள் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் மற்றும் தெற்காசிய முஸ்லிம் ஆடை மரபுகள் பற்றிய இரண்டாம் நிலைத் தரவுகளினூடாக அணுகப்படுகின்றது.

கிழக்கிலங்கை வட்டார வழக்கில் ஆடை என்பது: ‘உடுப்பு’, ‘உடுதுணி’, ‘பொடவை’ (புடைவை), ‘சீல’ (சீலை), ‘உடுமானம்’, ‘உடுபொடவ’, ‘உடுமணி’ எனச் சந்தர்ப்பத்திற்கு ஒப்ப பலவாறாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆடையற்ற நிலையான நிர்வாணம் என்பது: ‘உரியாணம்’, ‘வறகான்’, ‘வறான்’, ‘வெறும்மேல்’ என்றும் வட்டார வழக்கில் வழங்கப்படுகின்றது.

நெசவு மற்றும் தையல் பண்பாடு

சோனக வியாபாரி – 18ஆம் நூற்றாண்டின் பிற்கூறு. மூலம்: ImagesofCeylon

கிழக்கிலங்கை முஸ்லிம்களின் ஆடைப்பண்பாட்டில் நெசவு பிரதானமான விடயமாகும். ஆரம்பகாலம் தொட்டே முஸ்லிம்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வரலாற்றுக் காலம் தொட்டே இது நிகழ்ந்து வருகின்றது. அதேவேளை, பேருவளையைச் சேர்ந்த பெரிய முதலி மரைக்காயர் குடும்பம் அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக கண்டிய அரசவைக்கு ஜரிகைகளை இறக்குமதி செய்து கொடுத்து வந்தமை பற்றிய அலக்ஸான்டர் ஜோன்ஸ்டனின் குறிப்புகளைப் பற்றி றவூப் ஸெயின் குறிப்பிட்டுள்ளார் (2012). மேலும், முஸ்லிம் வர்த்தகர்கள் மூலமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நெசவுத் தொழிலாளர்களைக் கொண்டு வந்தமை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. அதேபோல், கிழக்கிலங்கையின் மருதமுனை, காத்தான்குடிப் பிரதேசங்களிலும் இந்நெசவுப் பாரம்பரியம் நீடித்து வருகின்றது.

மாட்டு வண்டிலில் வியாபாரம் செய்யும் சோனகர் – 19ஆம் நூற்றாண்டின் முற்கூறு. மூலம்: Vintge Postcards of Ceylon.

கிழக்கில் தையல் தொழில் பல முஸ்லிம் பெண்களின் குடிசைத் தொழிலாக உள்ள அதேவேளை தொழில்முறைத் தையல் கலைஞர்களாக பல முஸ்லிம் ஆண்களும் தொழில் செய்து வருகின்றனர். அதேபோன்று துணி, தைத்த ஆடை வர்த்தகத்திலும் முஸ்லிம் வர்த்தகர்கள் ஆரம்பகாலம் முதல் ஈடுபட்டு வருகின்றனர்.  

ஆண்கள் உடை

கிழக்கிலங்கை முஸ்லிம் ஆண்களின் ஆடையைப் பொறுத்தவரை, ஆரம்பகாலத்தில் இருந்தே கீழாடையாக கைத்தறியால் நெசவு செய்யப்பட்ட சாரத்தையும், மேலாடையாக கைகளற்ற சட்டையையும் பயன்படுத்தியுள்ளனர். தலையில் தொப்பி அணிவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். வெளியில் செல்லும் போது வயதானவர்கள் சால்வை அணிவதும், வேலைகள் செய்யும் போது தலைப்பா கட்டுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இலங்கைச் சோனகர் ஒருவரின் ஆடை அமைப்பு. மூலம்: colombotelegraph

அதேவேளை, மேலைத்தேயக் கல்வி நிலையங்களில் படித்தவர்கள் சாரத்துடன் சட்டை, கோட் அணிந்தனர். 1960களுக்குப் பின்னர் முஸ்லிம் ஆண்கள் அலுவலகப் பணிகளுக்குச் செல்வது அதிகரிக்கத் தொடங்கியதும், நீளக்காற்சட்டை அணிவதும், நீளக்கைச் சட்டையின் பயன்பாடும் அதிகரிக்கத் தொடங்கியது. இது பின்னர் கௌரவமான ஆடையாகக் கருதப்பட்டதால், மணமகனின் கூறை ஆடையாகக் கோட் அணிவது பிரபல்யமடையத் தொடங்கிற்று.

இதுதான் ஆடை என்ற கட்டாயம் முஸ்லிம்களிடத்தில் இருந்ததில்லை. எனினும், அவர்கள் இஸ்லாமிய வரையறைகளுக்குள் அவற்றைப் பேணிக்கொண்டனர். மார்க்கக்கல்வி கற்றவர்களும் உபன்யாசகர்களும் மத்தியகிழக்குப் பாணியிலான தோப்பா, குப்பா, தலைப்பாகை, தொப்பி, சால்வை என்பவற்றையும் வடஇந்தியப் பாணியிலான ஜுப்பாக்களையும் அணிந்து வந்துள்ளனர்.

சாரம், சாறண், சாரங், சரம்

சாறண் என்பது ஆண்கள் இடுப்பைச் சுற்றி அணியும் ஆடையாகும். இது பக்கவாட்டில் மூட்டப்பட்ட (சேர்த்துத் தைக்கப்பட்ட) குழாய் வடிவுடைய ஆடையாகும். கடந்த தசாப்தம் வரை இலங்கை முஸ்லிம்களின் பிரதான ஆடைகளிலொன்றாகச் சாரம் காணப்பட்டு வந்துள்ளது. தற்காலத்திலும் இது பயன்பாட்டில் இருந்தாலும், இளைய தலைமுறையிடையே பொது நிகழ்வுகளில் சாரம் உடுப்பது குறைவடைந்து வருகின்றது.

இது கிழக்கிலங்கை வழக்கில் ‘சாறண்’, ‘சாறம்’ என்று அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் ‘கைலி’, ‘லுங்கி’ என்றும் அழைக்கப்படுகின்றது. லுங்கி என்பது ‘Lungye’ என்ற வங்காள மொழியூடாக அறிமுகமான பர்மிய மொழிச்சொல்லாகும். கைலி என்ற சொல் ‘கில்லாத்’ என்ற உருது மொழிச் சொல்லில் இருந்து வந்துள்ளது. இச்சொல்லின் மூலம் மலாய் மொழியாகும். தூரகிழக்காசிய பண்டைய வர்த்தகப்பாதையூடாக இச்சொல் இங்கு புழக்கத்திற்கு வந்துள்ளது. கடல் மார்க்க வர்த்தகத்தினூடாக மலாய் மொழிச் சொல்லும், தரைமார்க்கமாக சாரம், லுங்கி ஆகிய சொற்களும் புழங்கு தமிழில் கலந்துள்ளன.

தெருவில் ஒரு சோனகச் சிறுவன் – 1913. மூலம்: Postcardman

ஆரம்பகாலத்தில் இலங்கையில் ஆண்கள் அணிந்த தைக்கப்படாத வேட்டியைப் போன்றல்லாது இது மூட்டப்பட்டிருப்பதோடு, பல்வேறு வண்ணங்களிலும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருப்பதானது, தைத்துப் பயன்படுத்த மிக எளியதாகவும், அன்றாடப் பயன்பாட்டிற்குச் சௌகர்யமாகவும் காணப்படுகின்றது. சகல தொழில் செய்வோரிடையேயும் இவ்வாடை பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு தொன்றுதொட்டுப் புழங்கியும் வருகின்றது. இலங்கையின் தமிழ், சிங்கள மற்றும் ஏனைய சமூகங்களிலும் சாறண் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், இலங்கைத் தமிழர்கள் பட்டு வேட்டியைப் பிரதான நிகழ்வுகளிலும், பண்டிகைகளின் போதும் அணிவர். முஸ்லிம் ஆண்கள் பட்டு அணிவதைத் தவிர்த்து வந்துள்ளனர்.

தமிழரின் வேட்டி

அன்றாடம் அணியும் சாரங்களில் கட்டங்கள் அல்லது கோடுகள் காணப்படும். விசேட தினங்கள், திருமணம், வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை போன்றவற்றிற்கு வெள்ளைச் சாரங்களை அணிவார்கள். பள்ளிவாசல் தொழுகையில் அலங்காரங்கள் கவனத்தைத் திருப்பும் என்பதாலும், எளிமையான ஆடை என்பதாலும், தூய்மையைக் குறிப்பதாலும் வெள்ளை ஆடைகள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதேவேளை இது கௌரவத்தினதும், அந்தஸ்தினதும் அடையாளமாகவும் கருதப்பட்டு வந்துள்ளது. முதலாளிமார், உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அணியும் ஆடையாகவும் வெள்ளைச் சாரம் காணப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் பல்வேறு வகையான சாறண்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. முஸ்லிம் ஆண்கள் பட்டு ஆடைகள் அணிவதை ஹராமாகக் கருதுவதால், பட்டுத் தவிர்ந்த பருத்திச் சாறண்களையே பயன்படுத்தி வந்துள்ளனர்.

அக்காலத்தில் புழக்கத்திலிருந்த சாறண் வகைகள்

  1. சந்திரப்பாடி – தென்னிந்தியாவின் சந்திரபாடிப் பகுதியில் நெசவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டவை.
  2. மருதமுனைச் சாறண் – கிழக்கிலங்கையின் மருதமுனைப் பகுதியில் உற்பத்தி செய்யப்படுபவை. இவை வெள்ளை தவிர்ந்த ஏனைய அடர்நிறங்களைக் கொண்டமைவதோடு, கைத்தறி நெசவிலேயே அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் அலங்காரங்கள் பெரும்பாலும் நிறநூல்களின் சேர்க்கைகளால் ஆன நீளவாட்டில் அமைந்த கோடுகளாகக் காணப்படுகின்றன.
  3. அருமண மூட்டுச் சாறண் – அருமணம்¹ என்பது பர்மாப் பகுதிக்கான பழைய தமிழ்ப் பெயர். ‘லுங்கி’ என்ற வார்த்தையும் பர்மிய மொழியில் சாறணைக் குறிக்கப் பயன்படுகின்றது. அருமண மூட்டுச் சாறண் பர்மியச் சாறணாக இருக்கக்கூடும். கிழக்கிலங்கை–பர்மா இடையேயான தொடர்புகளுக்கு எடுத்துக்காட்டாக ‘விறுமாண்டவர்’ என்ற ஆன்மீக ஞானியின் அடக்கஸ்தலம் நிந்தவூரில் காணப்படுகின்றமையைக் குறிப்பிடலாம்.
  4. பழையகாட் சாரம் – இது பழகாட் என்று டச்சுக்காரர் காலத்தில் அழைக்கப்பட்ட பழவேற்காடு பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு, ஒல்லாந்தர் காலத்திலிருந்து அறிமுகமான சாறணாகும்.
  5. பனாரஸ் பட்டு – இது இந்திய வாரணாசியில் உற்பத்தி செய்யப்படும் தங்கநிற இழை வேலைப்பாடுகள் கொண்ட கரைகளையுடைய சாறணாகும்.

இவை தவிர அசில்பட்டுச் சாறண், மோகினிப்பட்டு, பூவரசம்பட்டு, குட்டாப்பட்டுச் சாறண் (மாப்பிள்ளைமார் அணியும் சாறண்), வெண்பட்டுச்சாரம், பட்டறை அடுக்குச்சாரம், போனகரிச்சாறண் என்று பலவகைச் சாறண்கள் புழக்கத்தில் இருந்துள்ளன.

சாறண் வகைகள்

பிற்காலத்தில் இந்தோனேசிய சாறண், வங்காளச் சாறண், தாய்லாந்துச் சாறண் என்பனவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. தற்காலத்தில் பெற்றிக் சாறண்கள், மருதமுனைக் கைத்தறி நெசவுச் சாறண்கள், இயந்திர நெசவுச் சாறண்கள் என்பவை பெரிதும் புழக்கத்தில் காணப்படுகின்றன. கிழக்கிலங்கை ஆடைப்பண்பாட்டில் மருதமுனைச் சாறண்களுக்கு தனியிடமுண்டு. நெசவோடு தொடர்புடைய பல்வேறு கர்ணபரம்பரைக் கதைகளும் இங்கு நிலவுகின்றன. மருதமுனைச் சாறண்களுக்கு கிழக்கிற்கு வெளியேயும், வெளிநாடுகளிலும், உல்லாசப் பயணிகளிடமும் கேள்விகள் காணப்படுகின்றன. தற்காலத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட மருதமுனைச் சாறண்களும் இளைஞர்கள் மத்தியில் விரும்பி அணியப்படுகின்றன.

சாறண்களை உடுப்பதில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. வயல் வேலை, மீன்பிடிப் பணிகளில் ஈடுபடுவோர் சாறணை மடித்துக் கட்டுவர். இதனை ‘சாரப்பத்தை’ என்று அழைப்பர். மரமேறும் போதும், நீச்சலின் போதும் சாறணைக் கோவணம் போல் கட்டிக் கொள்வார்கள்.

ஆண்களின் பிற ஆடைகளான ஜுப்பா, தோப்பா, தலைப்பாகை, சால்வைகள் போன்றவை தொடர்பில் பின்னர் பார்க்கலாம்.

சாறண் தொடர்பான நாட்டுக்கவி ஒன்று:

“சாறணைக்கட்டிச்

சண்டித்தனம் காட்டுறாயோ

பயப்புட மாட்டன் – ஒண்ட

பல்லொடப்பன் வந்தாயெண்டால்”

பெண்கள் உடை

சம்மாந்துறையில் கிணற்றில் நீரள்ளும் முஸ்லிம் பெண்கள் (நிறமூட்டப்பட்டது) – 1957. மூலம்: The Times of Ceylon Press

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை, புடவையே பெண்களின் முதன்மையான ஆடையாக இருந்தது. கிழக்கு முஸ்லிம் பெண்கள் அதைச் சோனகர்களின் தனித்துவமான பாணியில் அணிகின்றனர்: புடவை இடுப்பில் செருகப்பட்டு, முன்புறம் பல நேர்த்தியான மடிப்புகள் உருவாக்கப்பட்டு, முந்தானை மார்பின் குறுக்காகவும், பொது இடங்களில் தலைக்கு மேலாக இழுத்துத் தலையையும் முகத்தையும் மறைக்கும் வகையிலும் அணியப்படும். முழு முழங்கையையும் மறைக்கும் நீளமான மேற்சட்டையை அணிவதோடு, இடை வெளிப்படாமல் இருப்பதற்காக முந்தானையைச் சுற்றியும் கட்டுவார்கள். மத்தியகிழக்குப் பாணியிலான அபாயா தோன்றுவதற்கு வெகுமுன்பே இஸ்லாமிய ஹிஜாப் கடமைகளைப் புடவை பூர்த்தி செய்தது.

இலங்கையின் கடந்த தசாப்தங்களின் உள்நாட்டுப் போர் முஸ்லிம்களின் ஆடைப்பண்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரியமாக விவசாயம், வர்த்தகம் போன்றவற்றில் அதிக நாட்டம் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தினர் வடக்குக் கிழக்கு யுத்த நிலப்பரப்புகளில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உண்டான போது மத்தியகிழக்கிற்குப் பணியாளர்களாக புலம்பெயரத் தொடங்கினர்.

பின்னர் வீட்டுப்பணிப்பெண்களாகப் பணியாற்ற பெண்கள் புலம்பெயர்ந்தனர். இவர்கள் அந்தந்த நாடுகளின் கலாசார ஆடைகளை இசைவாக்கிக் கொண்டதோடு அவற்றையே இலங்கையிலும் பயன்படுத்தத் தொடங்கினர். இது பாரம்பரியமான புடவை, தாவணியை விட சௌகர்யமாகவும், ஒரு தனித்துவ அடையாளத்தைப் பிரதிபலிப்பதுமாகக் காணப்பட்டது.

1980களில் இருந்து, வளைகுடா-திரும்பிய புலம்பெயர்ந்தோர் தளர்வான, முழு நீளக் கருப்பு அபாயாவையும் சதுர ஹிஜாப் தலையாடையையும் அறிமுகப்படுத்தினர்; இவை நகர்ப்புற இளம் பெண்கள் மத்தியில் புடவைக்கு மாற்றீடாக அமைந்தன. ஆயினும், திருமணங்கள் மற்றும் முக்கிய கொண்டாட்டங்களுக்கு, பொன் ஜரிகை விளிம்புகளுடன் கூடிய பட்டுப் புடவை – பெரும்பாலும் அடர் சிவப்பு, பச்சை அல்லது மெஜந்தா வண்ணங்களில் – மணமகளின் கூறையாகக் காணப்பட்டு வந்துள்ளது. இதுவும் பிற்காலத்தில் வடஇந்திய, பாகிஸ்தானிய பாணியிலான காக்ரா சோழி, லெஹெங்கா போன்ற வகையறாக்களாகப் பரிணமித்துவிட்டது.

புடவை, கம்பாயம், சோமன் 

புடவை என்பது 6–8 யார் அளவுள்ள நீளமான, உடலைச் சுற்றி மறைக்கும் படி அணியப்படும் ஓர் ஆடையாகும். இது தைக்கப்படாத முழு நீளச் செவ்வக வடிவானது. இதன் அகலம் 1 யார் அல்லது 1.25 யார் அளவாகக் காணப்படும். புடவை என்பது துணியைக் குறிக்கப் பயன்படும் தமிழ்ச் சொல்லாகும். கிழக்கிலங்கை வழக்கில் ‘பொடவ’ என்று அழைப்பர். வடக்கில் முஸ்லிம் பெண்கள் சேலையை ‘சீல’ என்றும் அழைப்பதுண்டு.

An illustration depicting a view of Cambay. Credit: Forbes, James; Hooker, William Jackson, Public domain, via Wikimedia Commons.

புடவைகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் கம்பாயங்களே ஆடைகளாகப் பயன்பட்டுள்ளன. கம்பாயங்கள் புடவையைப் போன்றவை ஆயினும் தடிப்பமான துணியாலானவை. Cambay அல்லது Khambhat என்று அழைக்கப்படும் இந்தியாவின் குஜராத்தின் புகழ்பெற்ற வணிகத் துறைமுக நகரிலிருந்து பெறப்பட்டதால் இத்துணி வகை கம்பாயம் என்றே அழைக்கப்பட்டுள்ளது.

இவை தடிப்பமான கைத்தறி நெசவு செய்யப்பட்ட பருத்தித் துணிகளாகும். இவற்றின் அச்சு வண்ண அலங்காரங்களும், கட்டங்கள் கொண்ட அலங்காரங்களும் பிரபல்யமானவை. இத்தோடு இவை மலிவானவையாகவும் காணப்பட்டுள்ளன.

அதேபோன்று சோமன்களும் கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்களால் அணியப்பட்டுள்ளன. இவை விலை அதிகமானவை. இவையும் பருத்தியால் ஆனவையாயினும் கரைகளில் பட்டு அலங்காரங்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் கொசுவம் வைப்பதற்காக இடுப்பில் தளர்வான ஒரு துணிப்பகுதி காணப்படும். சோமன்கள் 9–12 யார் நீளமான ஆடைகள் என்பதால் ஆரம்பகாலப் பெண்கள் இவற்றை அணியும்போது உள்சட்டை அணியாமலேயே அணிந்துள்ளனர்.

பாரம்பரியப் புடவையுடன் கிழக்கிலங்கைப் பெண்கள். மூலம்: தேசிய சுவடிக்கூடம்

ஆரம்பகாலத்தில் கிழக்கிலங்கை முஸ்லிம் பெண்கள் ஐந்து வயதிலிருந்தே சேலை உடுத்தத் தொடங்குவார்கள். இது தாவணி எனப்படும். பாவாடை, சட்டை உடுத்தி அதன்மீது சேலை போன்ற சிறிய துணியினால் ஒரு சுற்றுச் சுற்றி உடுப்பது. இவ்வாடை வீட்டு ஆடையாகவும் பேணப்பட்டு வந்துள்ளது.

நான்கு வயதிற்கு முன் ஒரு வகையான சட்டை போடுவார்கள். 19ஆம் நூற்றாண்டின் கடைசிவரை பெண்கள் மேற்சட்டை அணியும் வழக்கம் இருக்கவில்லை. தடித்த சோமன்களை உடுத்து உடல் முழுவதையும் மூடக்கூடிய ஆடைகளை அணிவர்; தலையை மறைத்து முக்காடு போடுவார்கள். அது ஒரு பூரண உடையாகவே இருக்கும். பாவாடை அணியும் வழக்கமும் ஆரம்பத்தில் காணப்படவில்லை. பெண்கள் பாதணி அணியும் வழக்கமும் இருக்கவில்லை. பெண்கள் கைத்தறியில் நெசவு செய்யப்பட்ட சேலைகள், சோமன்கள் ஆகியவற்றை அணிந்தார்கள். வெள்ளைச் சேலை, பச்சை வடச்சீலை (இது சிவப்பு நிறமானது) போன்றவை பிரபல்யமானவை.

இளம்பெண்கள் கம்பாயம், றவிக்கை போன்ற ஆடைகளை விரும்பி அணிந்தனர். இவற்றில் பழவேற்காடு (பழகாட்) துணிகள், கம்பாயம் என்பவை அதிகமாகப் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் உடலைக் காட்டும் மெல்லிய ஆடைகளை அணிவதில் தயக்கம் காட்டினர். இரு மேற்சட்டைகளுக்கு இரு துண்டுச் சீலைகளைச் சேர்த்துத் தைத்து அணிபவர்களும் இருந்தனர். அதனை ‘போறம் போட்ட சட்டை’ என்று அழைக்கின்றனர் என ஏ.ஆர்.எம். சலீம் குறிப்பிடுகின்றார். அதேபோன்று பாவாடை, உள்ளாடை, பிரா (மார்புக் கச்சை), கிமோனா, சல்வார், சட்டை, அபாயா, ஜீன்ஸ், கட்டைப் பாவாடை, மெக்ஸி, நைற்றி (இரவு ஆடை), ரைட்ஸ் (இறுக்க உடை) முதலியவற்றை அக்கால மக்கள் அறிந்திருக்கவில்லை. பிற்காலத்தில் சட்டை, பாவாடை, உள்பாவாடை உள்ளிட்ட பல ஆடைகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. ஆயினும் மார்க்கட்டு, மார்க்கச்சை எனப்படும் சீலையை மார்பில் கட்டி அணிந்துள்ளதாக முதியவர்களின் செய்திகளில் இருந்து அறிய முடிகின்றது.

ஆரம்பகாலத்தில் அணியப்பட்ட புடவை வகைகள் சிலவற்றைக் கீழுள்ள பட்டியலில் காணலாம். 

1. ஏழடுக்குச் சோமன்2. பட்டறை அடுக்குச் சோமன்3. அரையடுக்குச் சோமன்
4. முக்கடுக்குச் சோமன் (முக்காலடுக்குச் சோமன்)5. எள்ளு வண்ணச் சோமன்6. மாட வண்ணச் சோமன்
7. கடுகு வண்ணச் சோமன்8. பால் வண்ணச்சோமன் (பால் சோமன்)9. வெண் பட்டுச் சோமன் (பட்டுச்சோமன்)
10. மருத மூட்டுச் சோமன் (மருதமுனைச் சோமன்)11. அருமணமூட்டுச் சோமன்12. மஞ்சள் பட்டுச் சோமன்
13. மகிழம்பூப்பட்டு14. நார்ப்பட்டுச் சோமன்15. அத்திராசிச் சேலை
16. சுத்த வெள்ளைப் புடவை17. சந்திரபடிச் சோமன்18. காரைக்கால் சோமன்
19. தோம்புச் சேலை20. கருக்குப்புணி21. மூங்கில் பட்டு
22. மோகினிப் பட்டு – மங்கிலிப்பட்டு23. கல்கத்தாப் பட்டு24. பஞ்ச வர்ணப் பட்டு
25. வெள்ளைச்சேலை26. பச்சவடச்சேலை27. தோம்புப்புடவை
28. தறுப்பால்புடவை29. டிங்கிரிப்புடவை30. வெள்ளமுறிச் சேலை
31. காரிக்கன் சேலை (கைம்பெண்கள், வயதானவர்கள் உடுத்துவது)32. கோப்பிக்கொட்டைச் சீத்தை33. வாப்புண்ணாச்சீத்தை
34. சட்டின்சீத்தை35. சல்லாச்சீலை36. பட்டயசாரி
37. காஞ்சிபுரம்பட்டு38. காசுமீரப்பட்டு39. ஒயில்

இவற்றில் மருதமுனைச் சோமன் என்பது பெரும்பாலும் கைத்தறி நெசவு செய்யப்பட்ட சிவப்பு நிறமுடைய தடித்த சேலையாகும். பால்முட்டுச் சோமன் என்பது வெள்ளை, சிவப்பு நிறமுடையது. அருமணமூட்டுச் சோமன் சிவப்பு உட்பட பல வண்ணங்களிலும் காணப்பட்டது. காரக்கால் சோமன் சிவப்பு நிறமானது. இந்நிறத்தைப் பச்சவடம் என்றும் அழைப்பர். எள்ளுவண்ணச் சோமன் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும். மோகினிப்பட்டு என்பதை மங்கிலிப்பட்டு என்றும் சொல்வார்கள். இவை விலையுயர்ந்தவையாக இருப்பதோடு மிகவும் மென்மையானவையாகக் காணப்படும். இதனை வசதியானவர்கள் மட்டுமே பாவிப்பர்.

காஞ்சிபுரம் பட்டுச் சேலையானது நான்கு இழைகள் கொண்டு நெய்யப்படுவதால் வலிமையானதாகக் காணப்படுகின்றது. இதில் முழுக்கமுழுக்க மல்பெரி பட்டினால் தயாரிக்கப்படுவதாலும், இதன் வெள்ளிச் சரிகையில் தங்க முலாம் போடப்படுவதாலும், காஞ்சிப்பட்டு மற்ற பட்டுப் புடவைகளைவிட விலை உயர்ந்ததாக இருக்கிறது. முறிப் புடைவைகள் என்றால் வெள்ளை நிறத்தைக் குறிக்கும் தடித்த தன்மையுடையவை. கோவில் மார்க் குறி, அப்புள் மார்க் குறி, லாடமார்க் குறி போன்ற சிவப்பு நிறமுடைய கனமான புடைவைகளையும் பெண்கள் பாவிப்பர். சிவப்பு நிறப் புடவைகளை பச்சை வெட்டு, பச்சவடம் என்றும் அழைப்பர். பச்சை நிறத்தை வெல்லக்கூடிய கரும் சிவப்பு நிறமுடையதாக இருப்பதால் பச்சவெட்டு, பச்சவடம் எனப் பெயர் பெற்றிருக்கலாம். எள்ளு வண்ணம், மாட வண்ணம் என்ற பெயர்களிலும் அக்காலத்தில் சேலைகள் பாவனையில் இருந்துள்ளன. இந்த வண்ணங்களில் சாரங்களும் மாப்பிள்ளைமார்களால் பாவிக்கப்பட்டு வந்துள்ளன. குடாப்பட்டு, நார்ப்பட்டு, சேலம் பட்டு என்பனவற்றில் சாரங்களும் சால்வைகளும் மாப்பிள்ளைமார்களால் பாவிக்கப்பட்டன.

சேலைகளின் பாவனை பற்றிப் பல நாட்டார் கவிகளும் கிழக்கிலங்கையில் புழக்கத்தில் உள்ளன.

கொச்சிப் பழத்தை 

குறுக்கால அறுத்தது போல்

பச்சவட சோமனுக்கு 

பழுதுவந்த மாயமென்ன?

கொச்சிப் பழத்தை 

குறுக்கால வெட்டினது போல்

பச்சவட சீலை உன் 

பால்முலைக்கு ஏற்றதுகா.

நானுடுத்துப் போட்ட 

நங்குசிங்குப் பட்ட

நாயுடுத்துப் போகுதிண்டு 

நான் திரும்பிப் பாத்தேனா

மச்சி மனது மெத்த

மதிப்பான பால்சோமன்

அச்சிக்கி வாங்கிவாறன் – இனிக்

கவலையென்ன வேறுனக்கு

கடலழகி மடலழகி

காசுமீரப் பட்டழகி

வாழை மடலழகி – புள்ள

வாழாம ஏனிரிக்காய்

அச்சிப் பெருநாளைக்கி 

அத்திராசிச் சேலைக்கி

சாயமூட்டி பாய்வித்து – நான்

சட்டியில சேத்தகாசி கொஞ்சம்

படுவாங்கரையில 

பத்தேக்கர் செஞ்சிரிக்கி

சோமன் பட்டு சேலை வாங்க – எண்ட

சொந்தமகள் செய்னம்புக்கு

பட்டுப் பொடவையில

பொட்டுப் பொற குத்தினாப் போல்

சித்தரிசிப் பல்லழகி – இப்ப நீ

சிரிச்சதொண்டும் போதுமகா

மாமிட பொட்டகத்தில்

மகிழம்பூப்பட்டெடுத்து

கொலைச்சி மடிச்சுடுக்க – நான்

கொழந்த முதல் காத்திருந்தேன்

பாரம்பரியப் புடவையுடன் கிழக்கிலங்கைப் பெண்கள். மூலம்: தேசிய சுவடிக்கூடம்

முஸ்லிம் பெண்கள் புடவை உடுத்தும் போது இரண்டு முறைகளில் உடுத்துவார்கள்.

  1. முன் முந்தானை – முன்முந்தாணி. இடுப்பைச் சுற்றிக் கட்டப்பட்ட புடவையின் முந்தானைப்பகுதி முன்பக்கமாக மார்புப்பகுதியை மறைத்து, பின்னர் முதுகையும் தலையையும் மறைத்து, முந்தானை நுனி மீண்டும் முன்பக்கம் வரும்படி உடுத்துவது.
  2. பின்முந்தானை – இதை ‘தடுக்கு மடித்து உடுத்தல்’ என்றும் வழங்குவர். இவ்வாறு புடவை உடுத்துபவர்கள் புடவையின் இரு பக்கமும் ஒரே மாதிரியான அலங்காரங்கள் காணப்படும் புடவைகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஏனெனில் புடவை உடுத்துவதற்காக சேலை இடுப்பில் சுற்றப்பட்டு வலது பக்கம் சொருகப்பட்டு, பின்னர் எதிர்த்திசையில் புடவை திருப்பப்பட்டு முந்தானை மார்பை மறைத்து தலையை மூடக் கொண்டு செல்லப்படும்.
  3. மடிப்புகளுடன் புடவை உடுத்தும் எதிர் உடுத்து முறையும் இளம்பெண்களால் உடுத்தப்பட்டு வந்துள்ளது.

புடவை உடுத்தும் முறைகள் கிழக்கிந்தியப் பெங்காலிப் பாணியிலான முறை என்று ஆய்வாளர் ஆஸிப் ஹுஸைன் (2011) குறிப்பிடுகின்றார். இந்தியச் சேலை உடுத்தும் முறைகளில் விகச்சா, சகச்சா என்ற இரு முறைகள் காணப்படுவதாகவும், இவற்றில் இரண்டு கால்களுக்கும் நடுவாக சேலையைக் கொண்டு செல்லாது இடுப்பைச் சுற்றி மட்டுமே கட்டப்படும் விகச்சா முறையிலான பாணியினையே இலங்கைப் பெண்களும் கடைப்பிடிப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

புடவையின் தலையை மூடும் பகுதி முகதலை அல்லது மோதலை எனப்படும். இதில் அலங்காரங்கள் செறிவாகக் காணப்படும். இதனை தலையை மூடப் பயன்படுத்தும்போது அது முக்காடு என்று அழைக்கப்படுகின்றது. இந்த முந்தானை நுனியில் காசு, நாணயங்களை முடிந்து முடிச்சுப் போடும் வழக்கமும் கிழக்கிலங்கைப் பெண்களிடம் காணப்பட்டுள்ளது. அதேபோல சேலையின் இடுப்பு மடிப்பை பைபோன்று அமைத்துக் கொள்வதை பறி என்றும் அழைப்பர். இதற்குள்ளும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பர்.

புடவைகள் தனி நிறப் புடவைகளாகவும், அலங்காரங்களுடைய புடவைகளாகவும் காணப்பட்டுள்ளன. அலங்காரங்களில் விலங்குகள் இடம்பெறுவது பொதுவாகத் தவிர்க்கப்பட்டிருக்கும். புள்ளிகள், கோடுகள், பூக்கள், மாங்காய், வழுதிலங்காய், பிறை, கிளிச்சொண்டு, மயிலிறகு, இலை, ஓரிதழ், ஈரிதழ், மூவிதழ், நாலிதழ், ஐவிதழ் பூக்கள், கொடியலங்காரம், அச்சுப்பூக்கள், வட்டங்கள் போன்றவை பெரும்பாலும் காணப்படும். இவை தனிநபர் விருப்பங்களுக்கேற்ப தேர்வு செய்யப்படுவதுண்டு. எள்ளுவண்ணச் சோமனில் எள்ளு நிறத்தில் சிறிய புள்ளிகள் அலங்காரங்களாகக் காணப்படும். கடுகு வண்ணச் சோமனில் எள்ளு வண்ணச் சோமனை விட மிகச்சிறிய புள்ளிகள் கொண்ட அலங்காரங்கள் பரவலாகக் காணப்படும். சந்திரப்பாடிச் சோமனில் பிறை அலங்காரங்கள் காணப்படும். மஞ்சள்பட்டுச் சோமன், வெண்பட்டுச் சோமன் என்பவை தனிநீளங்களில் காணப்படும் நீளமான புடவைகளாகும். முக்கடுக்குச் சோமன் என்பது மூன்று அடுக்கு அலங்காரங்களைக் கொண்டது. இது பொதுவாக மணப்பெண்களுக்குக் கூறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மூங்கில்பட்டுப் புடவையில் மூங்கில் அலங்காரங்கள் காணப்படுவதோடு, பஞ்ச வர்ணப்பட்டுப் புடவையில் மூன்று வெவ்வேறு வர்ண அலங்காரங்கள் காணப்படும்.

தற்காலத்தில் தொண்ணூறுகளுக்குப் பிறகு பிறந்தவர்களில் பெருமளவானோர் சல்வார் கமீஸ், அபாயா போன்ற தைத்த ஆடைகளையே பிரதானமாக வெளியரங்க ஆடையாகப் பயன்படுத்தி வருகின்றனர். இவை தொடர்பாகப் பின்னர் பார்க்கலாம்.

அடிக்குறிப்பு 

1. இராகவையங்கார், ரா., தமிழர் வரலாறு 1, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை (1941).

உசாத்துணை மூலங்கள்

1. காதிர், எம்.எச்.ஏ., கல்முனை வரலாறு (2000)

2. சலீம், ஏ.ஆர்.எம்., அக்கரைப்பற்று வரலாறு (1990)

3. சலீம், ஏ.ஆர்.எம்., அக்கரைப்பற்று வரலாறு (1997)

4. றவூப் ஸெயின்., இலங்கை முஸ்லிம்களின் வரலாறு (2012)

5. அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்

6. ஏறாவூர் வரலாறு (2005), ஏறாவூர் வரலாற்று ஆய்வு மையம் 

7. சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் (2019), சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம்

8. https://www.postcardman.net/asia/69391-sri-lanka-a-street-arab-young-boy-publ-plate-co.html

9. Asif Hussain, Sarandip – An ethnological study of the muslims of Sri Lanka (2011), Neptune Publication



About the Author

எம். ஐ. எம். சாக்கீர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையைச் சேர்ந்த முஹம்மட் சாக்கீர் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானமாணி (சிறப்பு) பட்டம் பெற்றவர் தற்போது மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணிபுரிகிறார்.

வரலாறு, பண்பாட்டு ஆய்வு, நாட்டாரியல், ஆவணப்படுத்தல் போன்ற துறைகளில் தீவிரமாக இயங்கி வருபவர். இவரது 21வது வயதில் 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார், சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் வரலாற்று ஆவணப்படம் போன்றவற்றிற்கு வசனம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் இன்கிலாப் சஞ்சிகை மீளுருவாக்க குழுவின் முன்னோடியான செயற்பாட்டாளரான இவர் 2019 இல் வெளியான சம்மாந்துறை வரலாறும் வாழ்வியலும் எனும் நூலின் பதிப்பாசிரியர்களிலொருவரும் கட்டுரையாசிரியருமாவார். இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, கலை, பண்பாடு, முதலான கருபொருள்களில் கட்டுரைகள் பல எழுதியுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்