சோல்பரி அரசியலமைப்பு, நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியுடனேயே புசல்லாவை பிரதேசத்தையும் இணைத்து வைத்திருந்தது. பெருந்தோட்டப் பொறிமுறைக்காக புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்கள், கண்டியை பிரதானப்படுத்தியே நிலைகொள்கிறார்கள். கண்டிக்கு அண்மைய இடம், கண்டி மாவட்டத்திற்குட்பட்ட இடம், இந்திய வம்சாவளி தமிழர்களின் இருப்புக்குரிய இடம் ஆகிய பார்வைகளில் புசல்லாவை பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது.
சர்வஜன வாக்குரிமையை டொனமூர் அரசியலமைப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, சோல்பரி அரசியலமைப்பு புலம்பெயர்ந்து வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களின் அரசியலில் திருப்திகரமான மாற்றத்தை ஏற்படுத்தியது. 1947ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக வெற்றி கிடைத்தது. இவ்வெற்றி பெரும்பான்மையினத்தவர்களிடமும் பூர்வீக தமிழர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக உருவான சூழ்ச்சி நிலைகளால் இந்திய வம்சாவளி தமிழர்கள் பல்வேறு பாதிப்பு நிலைகளுக்கு உட்பட்டார்கள்.
1947ஆம் ஆண்டு தேர்தலில் நாவலப்பிட்டி தேர்தல் முடிவு முக்கிய கவனத்தைப் பெறுகிறது. ஜயத்திலக்க எனும் பெரும்பான்மையின வேட்பாளரை தோல்வியடையச் செய்து கே. இராஜலிங்கம் வெற்றி வாகை சூடுகிறார். கே. இராஜலிங்கத்தின் வசிப்பிடமான சங்குவாரி தோட்டமும் புசல்லாவைக்கு உட்பட்ட இடம் என்ற வகையில் முக்கிய அவதானத்தைப் பெறுகிறது.

சுதந்திரத்தை மையப்படுத்திய வகையில், வாக்குரிமைப் பறிப்பு, பிரஜாவுரிமைப் பறிப்பு, ஸ்ரீமா–சாஸ்திரி ஒப்பந்தம் என்றவாறு சட்டங்கள் வாயிலாக இந்திய வம்சாவளி தமிழர்களை பலமிழக்கச் செய்யும் முனைப்புகள் தொடர்கின்றன. அவ்வப்போது இனச் சுத்திகரிப்பு நோக்கம் கருதிய வன்முறைகள், தாக்குதல்கள், அபிவிருத்தித் திட்டங்கள் வாயிலான இனச் சுத்திகரிப்புகள், புதிய கிராமங்கள் உருவாக்கம் ஆகிய செயற்பாடுகள் இந்திய வம்சாவளி தமிழர்களின் சிதைவுகளுக்கு பெரிதும் துணைநின்றன.
நாவலப்பிட்டி – புசல்லாவை பிரதேசத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களை அரசியல் ரீதியாக சிதைக்கும் கைங்கரியத்தில், பிரதேச எல்லை நிர்ணயச் சட்டங்கள், எல்லைப் பிரிப்பு நடவடிக்கைகள், அரசியலமைப்பு மாற்ற நடவடிக்கைகள் போன்றவற்றோடு வன்முறைச் சம்பவங்களும் பெரிதும் துணைநின்றுள்ளன. சிறுபான்மையினத்தவர்கள் மீதான வன்முறையுடன் கூடிய தேசிய வேலைத்திட்டங்களுக்கு அப்பால், இப்பிரதேசத்திற்கென தனித்துவமாக கட்டவிழ்க்கப்பட்ட வன்முறைச் சம்பவங்களும் குறிப்பிடத்தக்கவையாகும்.
பாதுகாப்புத் தரப்பினரின் பாதுகாப்புடன் பெரும்பான்மையின மோசடிக்காரர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் மீது நடத்திய தாக்குதல்கள், விரட்டியடிப்புகள் போன்ற கசப்பான சம்பவங்கள் ஏராளம். தேசிய ரீதியில் நாட்டின் நிர்வாகத்தில் பங்கெடுத்த அரசியல் தலைவர்கள் காழ்ப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டமையும் கவனத்திற்குரியதாகும்.
மேற்குறித்த சம்பவங்களால் உந்தப்பட்டவர்களாக, இப்பிரதேசத்தின் வீதிப்பாடலாசிரியர்கள் தங்கள் பாடல்களில் இக்கருத்துகளை பேசுபொருளாக்கியிருக்க வேண்டும். கிடைக்கப்பெற்ற பாடல் தொகுப்புகளின் அடிப்படையில், அப்பாடல்களின் உள்ளடக்கங்கள் மற்றும் வெளிப்படுத்துகைகள் தொடர்பில் பார்வைகளைச் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இலங்கை இந்தியன் காங்கிரஸ் செயற்பாட்டாளராக எம்.வீ. பழனியாண்டி
மகாத்மா காந்தி பிரித்தானியர்களின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தார். காந்தியின் போராட்ட நடவடிக்கைகளோடு நேருவின் இணைந்த செயற்பாடுகளும் கவனத்தைப் பெற்றிருந்தன. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளி தமிழர்களும் தாயக உணர்வோடு காந்தி மீதும் நேரு மீதும் ஆழ்ந்த அபிமானத்தை கொண்டிருந்தார்கள். காந்தியப் போராட்டம் இக்காலத்தில் முக்கிய அவதானத்தைப் பெற்றிருந்தது. இப்போராட்டத்தில் இணைந்த போராளிகள் பலர் சிறைவாசம் அனுபவித்தார்கள். காந்தியும் நேருவும் பல தடவைகள் சிறைக்கு சென்றார்கள். உலகின் கவனம் இவர்களின் பால் ஈர்க்கப்பட்டது.
1927ஆம் ஆண்டு இலங்கைக்கு காந்தி மேற்கொண்ட விஜயமும், அதன் பின்னர் நேருவின் விஜயங்களும் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பெரிதும் தாக்கத்தை செலுத்தின. ஜோர்ஜ் ஈ.டி. சில்வா தம்பதியினர் நேருவை வரவேற்பதில் ஆர்வம் காட்டியுள்ளார்கள். இந்திய அரசின் இலங்கைக்கான அதிகாரத்துவ முகவர் பதவியில் இருந்த கே.பி.எஸ். மேனனும் அவரது துணைவியான சரஸ்வதி அம்மையாரும் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் பாதிப்பு நிலைக்குறித்த அவதானத்தில் ஆர்வத்துடன் செயற்பட்டுள்ளார்கள். தொழில் உரிமைகள் பற்றி அவதானத்தை செலுத்தியது போலவே, பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. தோட்டப்பகுதிகளில் பாடசாலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முன்னெடுப்பும் கவனத்தைப் பெறுகிறது. அவ்வாறான முயற்சியின் விளைவாகவே புசல்லாவை சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தின் உருவாக்கமும் அமையப்பெறுகிறது.
நடேசய்யரின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கும் மேனனின் ஆதரவு தொடர்கிறது. பின்னாளில் இப்பிரதேசத்தில் இருந்து தொழிற்பட்ட கே. இராஜலிங்கத்தின் தொழிற்சங்க மற்றும் சமூகப் பணிகளுக்கும் முழுமையான ஆதரவை அவர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. காந்திய சிந்தனைகளால் கவரப்பட்ட கே. இராஜலிங்கம் “மலைநாட்டு காந்தி” என்ற அடைமொழியுடனே அழைக்கப்பட்டார்.
நேருவின் அவதானத்தில், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் நலனை நோக்கமாகக் கொண்டு அமைப்புகள் உருவாகத் தலைப்பட்டன. அவ்வாறு உருவான அமைப்புகளில் ஐ.எக்ஸ். பெரேராவினால் தோற்றுவிக்கப்பட்ட சிலோன் இந்திய சங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. ஐ.எக்ஸ். பெரேரா இந்திய வம்சாவளி மக்கள் சார்பான முதல் சட்டசபை பிரதிநிதி என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பதினாறு சங்கங்களின் கூட்டிணைவே இலங்கை இந்தியன் காங்கிரஸ் உருவெடுக்கக் காரணமாக அமைந்தது.

1931இல் ஜவஹர்லால் நேரு இலங்கைக்கு வந்திருந்த போது இக்கூட்டிணைவு பற்றிய கவனம் மேலோங்கியது. பின்னர் 1939ஆம் ஆண்டு இலங்கை இந்தியன் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. அது இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் தொழிற்சங்க சக்தியாக பரிணமித்தது. ஸ்தாபக உறுப்பினர்கள் என்ற வகையில் ஜி.ஆர். மோத்தா, பெரி சுந்தரம் ஆகிய ஆளுமைகளின் பங்கேற்பும் கவனத்தைப் பெறுகிறது. இதன் வளர்ச்சி நிலையிலேயே 1947இல் இடம்பெற்ற இலங்கையின் முதலாவது தேர்தலில் திருப்திகரமான முடிவு எட்டப்பட்டது.
1950இல் இவ்வமைப்பு “இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்” என மாற்றம் பெற்றது. இவ்வமைப்பின் தலைமைத்துவத்தை திரு. சௌமியமூர்த்தி தொண்டமான் பெற்றதையடுத்து, அது ஒரு குடும்பம் சார்ந்த அமைப்பாக ஆக்கிரமிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
காந்திய சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள் இவ்வமைப்பின் செயற்பாட்டாளர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். அவ்வாறானவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகவே எம்.வீ. பழனியாண்டி விளங்குகிறார். புசல்லாவை கந்தலா தோட்டத்தின் தோட்டத் தொழிலாளியான இவர், இலங்கை இந்தியன் காங்கிரசின் மாவட்டக் குழு உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. தன்னுள் எழுந்த சமூக உந்துதலோடு இவரது பாடல்கள் சமூக அசைவியக்கத்தைப் பாடி நிற்பதையும் அறியலாம்.

“இலங்கை வாழ் இந்தியத் தமிழர்க் குரிமை
இல்லையாம் இதனால் தொல்லையாம்
லங்கையை தாயக மென்று உழைத்தும் – இந்த
நாட்டினில் உரிமை வழங்கிட மறுப்பது
மாகுமா நீதி யாகுமா.
இலங்கையர் மயமென்ற சட்டமுமாச்சு
இந்தியர்களின் வோட்டுரிமை போச்சு
எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
இல்லையே இதனால் தொல்லையே
இந்தியரால் இந் நாடு செழித்ததும்
ஏனோ சலுகை வழங்கிட மறுப்பது
ஏற்குமா தெய்வம் பார்க்குமா.”
என்ற வரிகள் ஊடாக தனது சமூகத்தின் பாதிப்பு நிலைகுறித்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதையும் காணலாம். தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து, இந்த நாட்டின் செழுமையில் பங்காளிகளாகவும் பிரதானிகளாகவும் இருந்த நிலையிலும், சட்ட ஏற்பாடுகள் வாயிலாக அவர்களின் உரிமைகள் அகற்றப்பட்ட போக்குகள் குறித்த கண்டனங்களும் பதிவாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது. உரிமைகள் கேள்விக்குறியாகிய நிலைகள் தொடர்பான அவதானங்களில், கங்காணிகள் மீதான சாடல்களும் முன்வைக்கப்படுவதைக் காணலாம்.
“தோட்டத் தொழிலாளரெங்கள் துயரைக் கேளுங்கோ – நம்மை
கூட்டி வந்த கங்காணியின் சூழ்ச்சி பாருங்கோ
வெள்ளையர்க் குப்பந்தமாக விளங்கி நின்றாரே இவர்கள்
வேண்டும் தரகுப் பணத்தை முன் வாங்கிக் கொண்டாரே
கண்டி போகும் ரெயில் தனிலே ஏற்றி வந்தாரே – பல
கதைகள் பேசி தந்திரமாய் கூட்டி கூட்டி வந்தாரே
ஆசை வார்த்தை பேசி நம்மை அழைத்து வந்தாரே…”
எனத் தொடரும் பாடல் வரிகள் துரைத்தனத்திற்கு துணைபோகும் கங்காணிகளின் மனிதாபிமானமற்ற நடத்தைகள் மீதான சாடல்களாக அமைவதைக் காணலாம். அவ்வாறே பாரத நாட்டில் வாழ்ந்தவர்களை வீண் ஆசைகள் காட்டி அழைத்துவந்து ஏமாற்றியதை ரௌத்திரப் போக்கோடு எடுத்துரைக்கும் விதமும் கவனத்திற்குரியதாகும்.
கண்டி மாவட்டத்தின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரான கே. இராஜலிங்கம் பற்றிய புகழ்மொழிகளை தனது பாடல்களின் ஊடாக வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை.
“பாரத அன்னை ஈன்றெடுத்த நம் வீரசிங்கமையா
நேர்மையாக நம்மைக் கொண்டு செலுத்திடும்
ராஜலிங்கமையா”
அவ்வாறே காந்தி மீதான பிடிப்புணர்வோடும் சொற்களை இணைத்துச் சிறப்பிப்பதையும் அறிய முடிகிறது. பல இடங்களில் காந்தியும், காந்திய சிந்தனையும் பாடலாசிரியரால் சிறப்பிக்கப்படுவதை அறிய முடிகிறது.
“கால மெல்லாம் தன் வாழ்வை நாட்டுக்காக
விடுதலைக்கே கழித்த எம்மான் வேதம் வாழ்க
ஞாலமதில் நாமறிந்த மனிதருக்குள்ளே
நாயகமாய் விளங்கி நின்றேன் நாமம் வாழ்க
சத்தியமாம் மந்திரத்தை நாளும் ஓதி
சாந்த மென்னும் சக்தியுடன் வாழ்ந்து காட்டி
அஹிம்சை என்னும் ஆயுதத்தால் உலகை வென்று
அண்ணலின் நாமம் வாழ்க துதி செய்வோமே.”
அவ்வாறே சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் சேனாநாயக்கா மீதான பற்றுதலையும் அவரின் இறப்பின் பின்னர் பாடலாக வெளிப்படுத்தியுள்ளார்.
“அந்தோ மறைந்தாரே லங்கை ஆண்ட நிர்வாகியுமே
தேசப் பிதா சேனாநாயக்கா செய்தவ மிதுதானோ
அந்தோ லங்கை வாழ் மக்களை துயரில் ஆழ்த்தியே மறைந்தாரே
எங்கும் சோகமே கொண்டு மக்களும்…..”
“தொகையாறா” என்பது பாட்டின் இடையே அல்லது காட்சியொன்றின் இடையே வசனமாக முன்வைக்கப்படுவதைக் குறிக்கும். அவ்வணுகுமுறையானது பாடுபொருள் அல்லது காட்சியமைப்பின் முக்கியத்துவங்களை சிறப்பித்து எடுத்துரைப்பதற்கான முறையாகக் கொள்ளப்படுகிறது. பாடுபொருளில் முனைப்பான விடயப்பரப்பை வெளிப்படுத்தும் நுட்பமாகவும் அது அமைகிறது. இவ்வணுகுமுறையை பாடலாசிரியர் எம்.வீ. பழனியாண்டி மிக இலாவகமாக பல இடங்களில் பிரயோகித்துள்ளதை அறிய முடிகிறது. மேற்குறித்த அணுகுமுறைகள் அக்காலத்தில் காணப்பட்ட இசைநாடகங்களில், இடையிடையே முனைப்பாக முன்வைக்க வேண்டிய கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் பிரயோகிக்கப்பட்டிருந்தமையையும் அறியலாம். அவ்வாறு இவரது பாடல்களில் வெளிப்படுத்தப்பட்ட “தொகையாறா” வரிகளில் பின்வருவன குறிப்பிடத்தக்கவைகளாகும்.
“இலங்கை வாழ் இந்திய மக்களின் துயர்தனை போக்கிட
இரவு பகல் உழைக்கும் தீரன்
இன்னல் பல நேர்ந்தும் தன் வாழ்வை அர்ப்பணித்து
உரிமைப் போர் நடத்தும் வீரன்”
என மலைநாட்டு காந்தி என்ற சிறப்பிற்குரிய கே. இராஜலிங்கம் மீதான புகழ்மொழி தொகையறாவாக அமைகின்றது.
“இன்னாட்டின் விடுதலைக்காக தன் வாழ்நாளை
அர்ப்பணம் செய்த தீரன்
என்னாளும் மக்களின் நன்மைக்கே உழைத்துமே
இன்னாளில் மறைந்த தியாகன்”
என டி.எஸ்.சேனாநாயக்கா மறைவின் எதிரொலி தொகையறாவாக அமைகின்றது.
“ஆண்டு பலகாலம் லங்கை நாட்டையே சத மென்று
வாழ்ந்து வரும் நம்மிந்தியர்க்கு
வேண்டிடும் உரிமையைக் கொடுத்திட மனமில்லா
வெட்கமற்ற சர்கார் எதற்கு”
என்பதோடு,
“பாரெங்கும் புகழவே லங்கையை யாள்கிறோம்
பாரெங்கும் கர்வமெதற்கு
சீரோங்க லங்கையை செய்திட்ட இந்தியரை
வேறாக நினைப்பதெதற்கு”
எனவும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வு நடவடிக்கைகளை பாடலாசிரியர் தொகையறாவில் சாடுவதையும் அவதானிக்கலாம்.
ஒவ்வொரு பாடலாசிரியர்களும் தம்மால் இயற்றப்பட்ட பாடல்களுக்கான உரிமையை உரத்துச் சொல்வதில் கைதேர்ந்தவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். அவ்வகையில் எம்.வீ. பழனியாண்டி அவர்களும்,
“அகிலம் புகழும் தமிழ் கவிஞர் பாரதியின் அழியா வேதமையா – இதை
மகிழ்ந்து பாடிடும் செந்தமிழ் தேசிகன் பழனியின் கீதமையா”
எனவும்,
“எங்கிலுமே பந்தத்தினால் காலம் போகுது இதை
யியற்றுந் தாசன் பழனித் தமிழ் எங்கும் முழங்குது”
எனவும்,
“தென்னிலங்கை யாளும் சர்க்கார்
செய்திடும் சூட்சியெல்லாம்
தேசமெல்லாம் அம்பல மாச்சுதையா – பாடும்
சீலன் தமிழ் கீதமையா”
எனவும் தனது பாடல்களின் நிறைவில் குறிப்பிடுவதை அறியலாம்.
பாரதத்தின் விடுதலைக் கோசத்தில் பாரதியின் வகிபங்கு அளப்பரியது. பாரதியின் கவிதைகள் பாடலுக்குரிய ஓசை நயத்துடன் அமைந்தமை பற்றிப் பலரும் எடுத்துரைப்பார்கள். பாரதி மீதான தாக்கமும் ஈடுபாடும் இப்பாடலாசிரியரில் வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்கலாம்.
“தமிழ னென்றுமே சொல்லுவீர் – நாளும்
தலை குனியாதே யென்றார் பாரதி
அடிமைச் சிறுமையச்சம் யாவும் அழிய சொல்
அனலைக்குழைத் தெறிந்தாரே
திடங் கொண்டு போராட வாழ்வு தனில் நமக்கு
செம்மை வழி புகன்றாரே”
இந்திய விடுதலை வேட்கையின் தாரக மந்திரமான “வந்தே மாதரம்” என்ற முழக்கம் மலையகத் தமிழ் மக்களின் அரசியல் விழிப்புணர்விலும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதனைப் பாடலாசிரியர் எம்.வீ. பழனியாண்டி தனது “தொழிலாளர் கீதம்” பாடல் நூலில் பதிவு செய்துள்ளார். 1952ஆம் ஆண்டு கொழும்பு நவஜீவன் அச்சியந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்ட இந்நூலில், “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கத்தோடு “ஜெய் லங்கா” என்பதையும் அவர் இணைத்துக் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது. இந்நூலில் தனது முகவரியைத் “டெல்டா சவுத், புசல்லாவை” எனக் குறிப்பிட்டுள்ள பழனியாண்டி, தான் சார்ந்த “இலங்கை இந்தியன் காங்கிரஸ் – ஜில்லா கமிட்டி, கம்பளை” என்ற தொழிற்சங்க அமைப்பையும் பதிவு செய்துள்ளார். மேலும், மலையகத் தலைவர்களில் ஒருவரான கே. இராஜலிங்கத்தை முதன்மைப்படுத்தி, அவரின் புகைப்படத்தை நூலில் இணைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தான் சார்ந்த சமூகத்தின் உந்துதலாலும், சுயமரியாதை மற்றும் உரிமைப் போராட்ட வேட்கையாலும் ஈர்க்கப்பட்டு இயற்றப்பட்ட இப்பாடல்கள் வாயிலாக, பாடலாசிரியர் எம்.வீ. பழனியாண்டி காலங்களைக் கடந்தும் இன்றும் வரலாற்றில் கவனத்தைப் பெறுகிறார்.
வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளையின் பாடல்கள்
புசல்லாவை மண்ணில் இருந்து அறுபதுகளில் முழங்கிய குரலாக வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளை விளங்கியுள்ளார். பொதுவாக இவரைப் பற்றிய பதிவுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. பெ. முத்துலிங்கம் தொகுத்த “பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள்” தொகுப்பு நூலிலும் இவரது பாடல்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
பல வீதிப்பாடலாசிரியர்கள் இயக்க ரீதியிலோ அல்லது அமைப்பு ரீதியிலோ பாடல் நூல்களை வெளியிட்டுள்ளதை அறிகிறோம். அதற்கு மாறாக, சுயாதீனமாகவும் பாடல் நூல்களை வெளியிட்டவர்களும் உள்ளார்கள். அவ்வாறே வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளையின் ஈடுபாடும் அவதானத்தைப் பெறுகிறது. “பாட்டாளியின் குரல் அல்லது கண்ணீர்” எனும் தலைப்பிலான அவரது பாடல் நூல் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இத்தொகுப்புக்கு முன்னர் அவர் வேறு தொகுப்புகளை வெளியிட்டுள்ளாரா, இத்தொகுப்பின் இறுதியில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைவாக இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளாரா என்பவை பற்றிய தகவல்கள் கிடைப்பதற்கரிதாகவே காணப்படுகின்றன. இவரது குடும்பம் மற்றும் வாழிடம் தொடர்பான தரவுகளும் கிடைக்கப்பெறாத நிலையில், பாடலாசிரியர் பற்றிய மேலதிக விவரங்களைப் பெற முடியவில்லை.
மேற்குறித்த பாடல் நூலின் முகப்பில் “ஆசிரியரும் வெளியிடுபவரும்” என்றே பாடலாசிரியரின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. இத்தொகுப்பின் வாயிலாக மற்றுமொரு பதிப்பகம் பற்றிய தகவலை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. அந்த அச்சகம் குறித்த வெளிப்பாடே வித்தியாசமாக அமைந்துள்ளது. பொதுவாக “அச்சகம்” என்ற பிரயோகமே பயன்படுத்தப்படுவது வழக்கமாகும். மாறாக, இங்கு “அமுத்தகம்” என வித்தியாசமான மொழிப் பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.
தமிழக சினிமாவில் ஐம்பதுகளில் பிரசித்தமான பாடலாக “மணப்பாறை மாடுகட்டி மாயாவரம் ஏரு பூட்டி” என்ற பாடல் விளங்கியது. இப்பாடல் “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்படம் வெளியான நாள் முதல் இன்று வரையில் செல்வாக்கு பெற்றதாகவே விளங்குகிறது. அப்பாடல் வெளிப்படுத்தும் கருத்துநிலை, இயல்பான மொழிநடை, இசை போன்ற காரணங்களால் காலத்தையும் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்பாடல் வீதிப்பாடலாசிரியர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இதனைத் தழுவியும் பல பாடல்கள் வீதிப்பாடலாசிரியர்களால் பாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாடலைத் தழுவிய வகையில் இவ்வீதிப்பாடலாசிரியரும் தனது பாடலை வழங்கியுள்ளார்.
“கல்லு மலை புல்லை வெட்டி கருத்தை ரோட்டு பாலம்
கட்டி புல்லு மலை நிலம் திருத்தி சின்ன பொண்ணு
இலங்கையை பூலோக சுவர்க்க மாக்கினோம் சின்ன பொண்ணு”
கவிஞர் மருதகாசியின் எழுத்துருவாக்கத்தில் உருவான இப்பாடல் கே.வி. மகாதேவனின் இசையில், திருச்சி லோகநாதனின் குரலில் முதன்முதலாக ஒலிக்கக் கேட்டோம். அதனைத் தொடர்ந்து செல்வாக்குப் பெற்ற இப்பாடல் உழைக்கும் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்டது.
“நெஞ்சை விட்டு மாறாமல் வஞ்சி இளம் கோதை
வங்கி இலைதான் எடுத்து வாதொடிச்சி நாளும் வம்பு
தட்டை கம்பு எடுத்து மட்டம் பிடிப்பாளாம்
முத்த இலைதான் அகற்றி முடிச்சி வாதை போக்கி
பக்க வாதை அக்கணமே பக்குவமாய் நீக்கி பக்குவமா…..”
எனத் தேயிலையை பெண்கள் கையாளும் விதம் பற்றி விதந்துரைக்க முற்படும் பாடலாசிரியரின் வரிகளும் அவதானத்தைப் பெறுகின்றன. அவ்வாறே அதிகாலையில் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் வேதனை மற்றும் அவஸ்தை நிலைமைகளையும் பாடுபொருளாக முன்வைக்கின்றமையும் அவதானத்திற்குரியதாகும்.
“அடிச்சிருவான் பிரட்டு தப்பு அவசரமாய் எழும்பனும்
ஆக்கி வைத்த பழைய கஞ்சியை அருந்தனும்
மசண்டை நேரம் வெளுக்கும் முன்னே பிரட்டுக்களம் போகனும்
மலைப்பு சஞ்சலம் மனதில் எண்ணாமல் போய் நிக்கனும்”
“தொனதொனத்த கங்காணியால் தொல்லை பட்டு சாகனும்
முத்த இலைய பொறுக்கி மூணு தரம் நிறுக்கனும்
முழு பேரு போடனமுனா மூட்டை தூக்கி சாகனும்”
தோட்டங்களில் ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் இன்று வரையிலும் தொழிலாளர்கள் சிரமங்களையே எதிர்நோக்குகிறார்கள். காரியாலயக் கட்டமைப்புகளும் பிரட்டுக் கட்டமைப்புகளும் தொழிலாளர்களை அடிமைகளாகக் கருதும் மனப்பாங்குடனேயே அணுகுகின்றன. காரியாலயத்தின் உட்புறத்திற்குள் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படாமலேயே பெருந்தோட்டப் பொறிமுறை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஜன்னலுக்கு வெளியே நின்று மாத்திரமே பெரிய கிளாக்கர் மற்றும் துரைமார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டிய நிலை காணப்படுகிறது. குறிப்பிட்ட ஓர் ஆவணத்தை பெற்றுக்கொள்வதற்கே குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது காரியாலயத்திற்கு சமூகமளிக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து காலத்தைக் கடத்துகின்ற போக்கும் அவதானத்திற்குரியதாகும். அவ்விடயங்களை முன்நிறுத்திய வகையில் “சூத்திரப்பயலே” எனும் பாடல் மெட்டில் பாடுபொருள் தொடர்கிறது.
இலங்கையில் இந்திய வம்சாவளி தமிழர்களின் “இருப்பு” சார்ந்த இன்னல் நிலைகள் இவரது பாடல்களில் முனைப்புப் பெறுகின்றன. மேலும், பிரஜா உரிமை தொடர்பில் உரத்த குரலாகவும் அவரது பாடல்களின் உள்ளடக்கம் விளங்குகின்றது.
“பிரஜா உரிமைச் சட்டம் அரசாங்க சபையிலே
பிரபல்ய மாகியே போச்சே – அந்தப்
பேச்சாகவே எங்குமாச்சே – மனப்
பீதி உண்டாக்கி விட்டாச்சே – தரம்
பிரித்துப் பிரித்துப் பேசி வெறுத்து இந்தியர்களைத்
துரத்தியோட்டத் திட்டமாச்சே – பிற
அந்நிய நாட்டுச் சனங்களென்று – நம்மை
எண்ணிக்கொண்டோர் இந்த ஊரார் – பல
இன்னல் இடைஞ்சலும் தாரார் – சூட்சி
என்னென்னமோ செய்து வாரார் – நாட்டில்
அண்டவிடாமலே ஒண்டவந்த – குடி
யாகமதித்துமே வாரார்”
ஏனைய பாடலாசிரியர்களைப் போல இவர் தன்னுடைய பாடல்களில் தன் பெயர் அடையாளத்தைப் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீதிப்பாடல்களில் “படுகொலைச் சிந்து” மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தமை தொடர்பில் அறிவோம். வீ.ஆர்.எம். முருகையாப்பிள்ளையும் “தாயின் ஒப்பாரி” எனும் தலைப்பில் சரசு என்ற பெண்மணியின் இறப்பு தொடர்பில் பாடல் இயற்றியுள்ளார். மதுப்பாவனையால் ஏற்படும் சீரழிவுகளை அவர் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளதும் கவனத்திற்குரியது. இந்நிலையில், இப்பாடலில் தனது குடிகாரக் கணவனின் கையால் கொலை செய்யப்பட்ட பெண்ணை மையப்படுத்தி இரங்கற்பாவை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“இண்டமுள்ள கல்கோட்டை சரசு நம்ப இனம்
பெருத்த நன்னாடு நீ இண்ட ஒதிக்கிவச்சி இந்த
தோட்டத்தில் இனத்தார் தள்ளி வச்சி இந்த இடி
விழுவான் கையாலே ஆத்தா நீ இறக்கவே நீதியுண்டா”
“பொங்க நல்ல மாத்தையிலே சரசு உனக்கு பொங்க
பானை போகயிலே பூனை குறுக்கலாய்ச்சி புதுப் பானை
முன்னேயாச்சி இது பொல்லா சகுன மென்று நான்
போகாதே என்று சொன்னேன்”
“பொங்க பானை வருமென்று பிள்ளை பூரிப்பாய் இருக்குமடி
போக வேணுமென்றார் அந்த பொல்லா
சகுனமா நான் பெற்ற மகளே சரசு நீ பூலோக
மறந்து போனாயாத்தா”
நாட்டார் பாடல்களின் தாக்கமும், ஏனைய பாடலாசிரியர்கள் பாடிய பாடல்களின் தாக்கமும் இப்பாடலாசிரியரிடம் செல்வாக்குச் செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம். சுயநலத்தை கருதாத நிலையில், தான் சார்ந்த சமூகத்தின் நலனில் அக்கறை கொண்ட உந்துதலே இவ்வாறான பாடல்கள் தோன்றுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. இவ்வாறான உள்ளுணர்வுகள் சமூகத்தைச் செதுக்குவதற்கும் எழுச்சி எண்ணங்கள் தோன்றுவதற்கும் பெரிதும் துணைநின்றுள்ளன. தான் வாழ்ந்த காலத்தில் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற இவரது மன உந்துதல் மதிக்கப்பட வேண்டியதாகும். அவ்வுணர்வின் பெறுமதியே இவ்வகைப் பாடலாசிரியர்களை காலம் கடந்தும் மீட்டிப் பார்ப்பதற்கான அவகாசத்தை வழங்கியுள்ளது எனலாம்.
உசாத்துணை நூல்கள்
1. யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
2. முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
3. சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.
4. பழனியாண்டி, எம்.வீ. (1952). தொழிலாளர் கீதம். கொழும்பு நவஜீவன் அச்சகம்.
5. முருகையாப்பிள்ளை, வீ.ஆர்.எம். (1967). பாட்டாளியின் குரல் அல்லது கண்ணீர். சரவணா அமுத்தகம், நாவலப்பிட்டி.



