தவறிப் போயிருந்த தடங்கள்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
9 நிமிட வாசிப்பு

தவறிப் போயிருந்த தடங்கள்

May 25, 2026 | Ezhuna

இன்றைய இருப்பில் இயங்கும் சமூக சக்திகள் தத்தமக்கான நலன்களின் நோக்கில் கடந்த காலத்தை மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்றன. மேலாதிக்கத் தமிழ்த் தேசியம், தலித்தியம், விடுதலைத் தேசியம் என்பவற்றின் கருத்தியல் தளங்களை அடிப்படையாக உடைய சமூக சக்திகள் இன்றைய இயக்கங்களாகச் செயற்படுகின்றன. எமக்கான நவீன வரலாற்றைக் கட்டமைத்த ஆளுமையாகிய ஆறுமுக நாவலர் குறித்து இவை ஒவ்வொன்றும் தமக்கே உரிய கண்ணோட்டத்தில் மறுவாசிப்பை மேற்கொள்கின்றன; இதன்வழியாக, கடந்தகாலச் சமூக சக்திகள் வழிவகுத்துவிட்டிருந்த இயங்குமுறை அமைந்த அடித்தளங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கின்றன. இதேபோன்ற பின்னணிக்குரிய ஏனைய சமூகங்களில் இயங்கிய ஆளுமைகளுடன் எமது இயங்கு தளத்துக்குரிய ஆளுமைகளை ஒப்பிடுவதன் வாயிலாக செய்யப்பட்டவற்றையும், செய்திருக்கத்தக்கன எவை என்பதையும் மதிப்பீடு செய்வது அவசியமானது. இவற்றின் பெறுபேறுகள் எமக்கான எதிர்கால மார்க்கத்தை வடிவமைப்பதற்கு மிகமிக முக்கியமானவை ஆகும். “சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்” எனும் இத்தொடரானது நாவலரின் பங்களிப்புக் குறித்த மதிப்பீட்டின் வழியாக சமகால இயங்குமுறையைக் கணிப்பிட்டு, சுயவிமரிசனங்களுடன் புதிய பாதையையும், அதற்குரிய சரியான மார்க்கத்தையும் கண்டடையும் நோக்கில் எழுதப்படுகிறது.

‘சமத்துவச் சமூகம் காணப் போராடுவோர் பார்வையில் ஆறுமுக நாவலர்’ எனும் இந்தத் தொடரின் மூன்றாவது பகுதி இங்கே பேசுபொருளாகி உள்ளது. இன்றைய எமது இருப்புக்குத் தடம் அமைத்துத் தந்த ஒரு பேராளுமையான ஆறுமுக நாவலர் எத்தகைய வகிபாகத்தை இது தொடர்பில் வகித்துள்ளார் என்பதைக் கண்டறிவது முதன்மைக் கரிசனை உடையது. இன்றைய சாதனைக்கும் பின்னடைவுகளுக்கும் முழுமையாக அவரே மூல காரணியாக மாட்டார் என்பதை அறிவோம்; அவரால் தொடங்கப்பட்ட சமூக – பண்பாட்டுச் செயல் முனைப்புகளில் எவையெல்லாம் தொடரப்படாமல் போனதன் நிமித்தம் இன்றைய தளம் எட்டப்பட்டது என்பதை இந்த மூன்றாம் பகுதியில் அலசுவோம். ஆன்மிக நாத்திக வெளிப்பாட்டுத்தளம், தீர்மானிக்கும் சக்தியாக இயற்கை வளத்தைச் சார்ந்த உற்பத்தி முறை, மாற்றத்தின் நேரியனும் புறநிலையும் என்ற மூன்று அத்தியாயங்கள் ஊடாகத் தவறவிட்ட இடங்கள் குறித்த தேடல் மேற்கொள்ளப்படுவது அவசியமாகி உள்ளது.

நாவலரின் சமகாலத்தவரான வள்ளலார் தில்லை நடராசர் மேல் பக்தி நாட்டத்துடன் தனது பணியைத் தொடங்கிய போதிலும் மிக விரைவாகவே மத நீக்க ஆன்மிகச் செயற்களமொன்றைத் தொடக்கி வைத்திருந்தார்; அதன் நீடிப்பாக அயோத்திதாசர் வாயிலாக நவீன தமிழ்ப் பௌத்தப் பீடம் ஒன்று செயலுருப்படுவது சாத்தியப்பட்டது. “மேன்மைக்கொள் சைவநீதி உலகெல்லாம் விளங்க வேண்டும்” என்ற குறிக்கோளின் உச்சத்தில் ஆரியச்சக்கரவர்த்தி வம்சாவளியூடாக யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய வெள்ளாளர் மேலாதிக்கம் இலங்கை பூராவையும் சிவ பூமியாகப் புனைவதைத் தொடர்ந்து முன்னெடுத்தது எதனைக் காட்டுகிறது? நாவலர் ஏற்படுத்தியிருந்த அடித்தளம் அத்தகைய உறுதியை உடையது என்று கருதலாமா?

தமிழகத்தில் சைவசித்தாந்தம் மேலெழுந்த பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பது நிலப்பிரபுத்துவத்தின் அதியுச்சத்தில் வெள்ளாளர்கள் திகழ்ந்த காலம். விஜயநகரப் பேரரசிடம் ஆட்சியுரிமை பறிகொடுக்கப்பட்ட போதிலும், பொருளுற்பத்தி முறையின் அடிப்படையாக உள்ள பெருநிலப்பரப்புகளைத் தமக்குரியதாகக் கொண்டிருந்த அந்தச் சமூக சக்தி, யாழ்ப்பாண இராச்சியத்தை ஆளுகைக்கு உட்படுத்திய போது தமக்கான ஆட்சியுரிமையை ‘மீட்டெடுக்க’ இயலுமாக இருந்தது. ஆயினும், ஓரிரு குடும்பங்களுக்கு உரித்துடையதாக இருந்த நிலப்பரப்பு அளவிலேயே நூற்றுக்கணக்கான வெள்ளாளர்கள் புதிய வாழ்வாதாரத்தைக் கட்டமைக்க ஏற்ற நிலக்கொள்ளளவு இங்கு இருந்தது.

தமக்கான ஆட்சியுரிமையை வெள்ளாளர்கள் விஜயநகரப் பேரரசிடம் இழந்த போது, கருத்தியல் தளத்தில் பிராமணர்களின் வேத – வேதாந்தத்திடம் ‘அடிமைப்பட்டுவிட்ட’ உணர்வுநிலைக்கும் ஆட்பட்டிருந்தனர். முன்னதாகப் பிராமணர்களுக்கு அதி புனித அந்தஸ்தைக் கொடுத்த போது, ஆட்சியுரிமையுடன் திகழ்ந்த வெள்ளாளர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த பிராமண நிலை பின்னர் மாறத் தொடங்கிய சூழலில் சைவசித்தாந்தம் அங்கே வடிவம் பெற்றிருந்தது. வேத – வேதாந்தத்தைக் காட்டிலும் அதியுச்சம் கொண்டதாக வெளிப்பட்ட அந்தச் சைவசித்தாந்தக் கருத்தியல் ஆயுதத்துடன் புதிய வாழ்வைத் தொடங்கிய யாழ்ப்பாண வெள்ளாளர்கள், நிலவுரிமையற்ற கோயில் தொண்டூழியக் குடும்பங்கள் எனும் மட்டுப்பாட்டுக்குள் பிராமணர்களை வருவித்திருந்தனர். மூன்று நூற்றாண்டுகள் வரையில் இருந்த ஆட்சியுரிமையை பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியக் காலனிய ஆட்சியிடம் பறிகொடுத்த போது, ‘மேன்மைக்கொள் சைவத்தை’ மனதளவில் இரகசியமாகப் பதுக்கி வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனிய எசமானர்கள் மனசாட்சி சுதந்திரத்தை வழங்கி, விரும்பிய மதத்தைப் பகிரங்கமாகப் பின்பற்றுவதற்கு அனுமதித்த பின்னர் சைவ மறுமலர்ச்சி தொடக்கம் பெற்றிருந்தது. அதேவேளை, ஆங்கிலம் கற்று ஐரோப்பிய ஆளும் தரப்பினருக்கும் கூலியுழைப்பாளர்களுக்கும் இடையில் தொடர்பாடல் பணியாற்றும் இடைத்தட்டு அதிகாரப்பிரிவு ஒன்று உருவாக்கப்படுவதிலும் ஆட்சியாளர்கள் கரிசனம் கொண்டிருந்தனர். சிங்களத் தரப்பில் அத்தகையோர் முற்றிலும் கிறிஸ்தவர்களாக இருந்தாக வேண்டும் என்பது கட்டாயமானதாக இருந்ததைப் போலத் தமிழில் கட்டாயப்படுத்தல் இல்லை; சேர். பொன் இராமநாதன் போன்றவர்கள் சைவர்களாக இருந்துக் கொண்டே உயர் பதவிகளை வகிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அந்தச் சுதந்திரத்தை விட இலகுவில் பதவியுயர்வுகளையும் தடையற்ற கல்வியையும் மேற்கொள்ள விரும்பியிருந்த பலர் கிறிஸ்தவத்தைத் தழுவியும் இருந்தனர்.

கட்டாயப்படுத்தப்பட்ட பழைய காலனித்துவ நிர்ப்பந்தத்தில் வெளியே கிறிஸ்தவராகக் காட்டிக்கொண்டே மனதளவில் சிவனை வழிபடும் நிலை இருந்தது. இந்து சமயப்பிரகாரம் ஜேசுநாதரையும் ஒரு பரிவாரத் தெய்வமாக வழிபாடாற்ற இயலும். மதச் சுதந்திரத்தை வெளிப்படுத்தியவாறு நவீன வாழ்வுக்குரியது கிறிஸ்தவமே எனப் பாதிரிகள் பரப்புரை செய்த போது, பைபிள் முன்வைக்கும் கடவுள் கோட்பாட்டை விடவும் சைவசித்தாந்தம் மேலானது என்ற தர்க்கத்தை நாவலரால் முன்வைக்க இயலுமாக இருந்தது.

1. எல்லாம் எப்பவோ முடிந்தது

சைவ சித்தாந்த நெறி சார்ந்த தூய சைவர்கள் என மிகச் சிலரே வாழும் போது, மிகப் பலர் இந்துமதப் பன்மைத்துவ வாழ்வியலை மேற்கொள்ளும் சுதந்திரமும் இருந்தது. மேலாதிக்க உச்சமாகத் திகழ்ந்த சைவ சித்தாந்தம் கோட்பாட்டு ரீதியாகக் கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுக்க உதவுவதாக அமைந்ததேயன்றி, வாழ்வியல் நிதர்சனத்தில் காலனித்துவ அடிமை மனப்பாங்கை நீக்குவதற்கு வழிசமைப்பதாக இருக்கவில்லை. உண்மையில் நிலப்பிரபுத்துவ மேலாதிக்கம் நிலவிய கி.பி. 8-13 ஆம் நூற்றாண்டுகளில் பிராமணர்களுக்கு நில தானங்கள் வழங்கியதோடு, அவர்களது வேத – வேதாந்தம் மிகப் புனிதமான ஆன்மிக உச்சம் கொண்டது என்று தாமும் பேசுகிறவர்களாக வெள்ளாளர்கள் இருந்தனர். அந்த ஆளுமை பறிபோன பின்னர், ஆன்மிகத் தளத்தில் அதியுயர் கடவுள் தன்மைக்குரிய பதியை வெளிப்படுத்தியவாறு அதன் பல்வேறு மூர்த்தங்களுக்குப் பணிந்தொழுகும் மனப்பக்குவத்தை வகிக்க வேண்டிய வரலாற்று நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இத்தகைய மனக்கட்டமைவு பின்னர் முகம் கொண்ட காலனித்துவ வாழ்வியலுக்குக் கைகொடுத்து உதவுவதாக அமைந்தது. காலனித்துவ மேலாதிக்கத்துக்கு முழு விசுவாசமாக அடிபணிந்தவாறு இயங்கும் அதேவேளை, ஆன்மிகத் தளத்தில் பதிக்குரிய மேலாதிக்கம் தம்மிடமும் குடிகொண்டிருப்பதான ஓர்மத்தை அவர்களால் வளர்க்க முடிகிறது. காலனியத்தால் மோசமாகச் சுரண்டப்படுகின்ற உழைக்கும் மக்கள் மீது தமது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதில் கைதேர்ந்த வாழ்வியல் குணாம்சத்தை யாழ்ப்பாணத்தின் ஆளும் சமூக சக்தி வருவித்துக் கொண்டது. இத்தகைய இரண்டக நிலையை ஆறுமுக நாவலரின் எழுத்தொழுங்கிலும் காண இயலும்.

காலனியம் ஏற்படுத்திய பொருளுற்பத்தி உறவு என்ற கட்டமைப்பில், அவர்களது அரசியல் மேலாதிக்கத்துக்குப் பணிந்து செயற்பட்ட போதிலும், காலனித்துவத்துக்குரிய பண்பாட்டு ஆதிக்கத்தை நிராகரித்துச் சைவ சித்தாந்தத்தைப் பரப்புரை செய்தவரான நாவலர், அந்தப் பண்பாட்டுப் பாதுகாப்பின் பேரால் சாதியாசாரங்கள் மாற்றம் பெறாமல் நீடிக்க வேண்டும் என வற்புறுத்துகிறவராகவும் இருந்தார். உத்தியோக ரீதியில் வெள்ளையர் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டாலும், ஆன்மிகத் தளத்தில் தமக்கான மேலாதிக்க உணர்வை சாதிய ஒடுக்குமுறைக்கு ஆட்படும் உழைப்பாளர்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கு அமைவானதாக இந்தச் சாதியாசார நீடிப்புக் கருத்தியல் பயன்படலாயிற்று. முன்னர் இருந்து வந்த வாழ்முறையை ஒடுக்கப்பட்ட மற்றும் இடைச் சாதிகள் பின்பற்ற வேண்டும் என நாவலர் வலியுறுத்துகிறபோது, முன்னைப் பெருமைகளை மறந்து கிறிஸ்தவ மரபுப் பிரகாரம் புலாலுண்டு நாகரிகக் குடிப்பழக்கத்திற்கு ஆட்படும் வெள்ளாளக் கனவான்களைக் கண்டிப்பதையே நாவலர் முதன்மையானதாகக் கொண்டிருந்தார் என்பது கவனிப்புக்குரியது. அரசியல் அதிகாரம் தம்மை விட்டு நீங்கிவிட்ட பின்னரும், சமூக, பொருளாதார, பண்பாட்டு மேலாதிக்கத்தை எமது ஆதிக்க சாதி கைவசப்படுத்தியிருந்த பாங்கு கவனிப்புக்குரியது.

இன்றைய வரலாற்றுச் செல்நெறி மாற்றத்துடன் இதனை ஒப்புநோக்க இயலும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியத் திணை தனது முதல் நிலையை இழந்திருந்தது. அதனிடத்தைக் கையேற்ற ஐக்கிய அமெரிக்கா, எழுபதுகளின் ஆரம்பத்தில் பெற்றோ–டொலர் செயலொழுங்கு வாயிலாக அதீத மூலதனத்தைச் சேகரித்திருந்தது. சாம்ராச்சியங்கள் ஒவ்வொன்றும் அதியுச்சத்தில் இருந்த போது வீழ்த்த முடியாத பெரும் பூதம் போல் இருந்தனவாயினும், வீழ்ந்து காணாமல் போயின. ஐக்கிய அமெரிக்கத் தலைமையை ஐரோப்பா இன்று தூக்கியெறிவது என்பது அதன் வீழ்ச்சியை அறிந்துவிட்ட காரணத்தினாலேயே. இருப்பினும் தனது தள்ளாட்டத்தை ஏற்க இயலாமல், ஐக்கிய அமெரிக்கா எடுத்துவைக்கும் அகலக்கால் முயற்சி ஒவ்வொன்றும் அதனை அதலபாதாளத்துக்கு இட்டுச் செல்வதாயே உள்ளது. பெற்றோல் விநியோகம் உட்பட உலக வர்த்தகத்துக்கு உரியதாக ஏற்கப்பட்டிருந்த டொலர் மேலாதிக்க ஏகபோகத்தைத் தொடர்ந்து பேண இயலாத நெருக்கடியை சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தது. சீன யுவான், ரஷ்ய ரூபிள், இந்திய ரூபாய் போன்றன புழக்கத்தில் வந்துவிட்டதோடு, பிரிக்ஸ் தனக்கான பொது நாணயத்தை நடைமுறைப்படுத்தும் எத்தனங்களும் பேசுபொருளாகி இருந்தன.

உலக ஒழுங்கு மாற்றமடைந்து பலமுனைச் செயலொழுங்குகள் வந்துவிட்டதனை ஏற்க இயலாமல் ஈரான் மீது யுத்தத்தைத் தொடுத்த ஐக்கிய அமெரிக்கா, இன்றைய உலகின் தீர்மானகரமான சக்தியாக ஏகாதிபத்தியம் இல்லை என்பதனை தனது தோல்வியின் வாயிலாக உணர்த்தியுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சக்தி இன்னமும் பண்பாட்டு மேலாதிக்கத்தைத் தக்க வைத்திருப்பதைப் போல, முற்றிலும் சரிந்து பாதாளத்தை நோக்கிச் செல்லும் நிலையிலும் ஐக்கிய அமெரிக்கா தனது மேலாதிக்க உணர்வைப் பலவீனமான குரலிலாயினும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. ஆங்கில மொழிச் செல்வாக்கு, ஊடகத்துறை மேலாதிக்கம் என்பன அதன் மீளெழுச்சி இனியும் சாத்தியம் என்னும் பகற்கனவில் மிதக்க வைத்துள்ளன.

கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் தமிழகம் நான்கு திணைகளிடையே சமத்துவ ஊடாட்டத்துடன் இயங்கிய போது தனக்கான உலக நோக்காக ஆசீவகத்தை வெளிப்படுத்தியது. ஒவ்வொரு இயக்கங்களுக்குமான செல்நெறி அதன் தொடக்கத்திலேயே தீர்மானிக்கப்பட்டுவிடும் என்பது ஆசீவகத்தின் ஓர் அடிப்படை. அதன் ஒழுங்கமைவில் முடிவு வந்தமைவது நியதி என அது கூறும். ஒன்றின் தொடக்கத்தில் எந்த அம்சங்கள் அதன் இயக்கத்தை நிர்ணயிக்கின்றன என்பதைத் தெளிவுறக் கண்டறிந்தால் அதன் முடிவை முன்னுணர இயலும். வந்தடையும் முடிவு, அந்த வகையில் ‘எப்போ முடிந்த ஒன்று’. இதனை யாழ்ப்பாணத்தின் சித்தரான யோகர் சுவாமியின் ஓர் ஆப்தவாக்கியமாக அறிவோம். பெருங்கோயில்களை நிராகரித்த சித்தர் மரபுக்கும் யாழ்ப்பாணத்தில் வலுவான ஆதரவுத்தளம் இருந்தது என்பது கவனிப்புக்குரியது. உலக மேலாதிக்கங்கள் மட்டுமல்ல, எம்மிடையே மேலாதிக்கம் பெற்றிருப்பவையும் வீழ்ந்து மடியும்; இரண்டாயிரத்து நூறு வருடங்கள் முன் பாரியளவான பண்பாட்டு விருத்தியுடன் சமத்துவக் கருத்தியல் செல்வத்தையும் வெளிப்படுத்திய தமிழியல் தொடர்ந்தும் இழிநிலையில் இருக்கப் போவதில்லை.

2. சைவசித்தாந்த வேதாந்தக் களங்கள்

சிவபூமியென சைவசித்தாந்திகள் இலங்கையை அடையாளப்படுத்த முனைவது போல சைவநெறி இங்கே பரவலாக உள்ளதா? கந்தபுராணக் கலாசாரம் உடையதென மதிப்பிடப்படும் யாழ்ப்பாணத்தில் இன்றும் கூட சைவ மேலாதிக்கத்துக்கு அப்பாலான நாட்டார் வழிபாட்டு முறைகள் தொடரவே செய்கின்றன. காத்தவராயன் கலாசாரமும் யாழ்ப்பாணத்துக்குரியதாக இருந்தது என்ற ஆய்வுகளும் வெளிப்படக் காணப்படுகின்றன. அதேபோல் மட்டக்களப்பில் மகாபாரதக் கலாசாரம் செல்வாக்குடையதாக இருந்தது என்ற ஆய்வுகளும் வெளிப்படக் காணப்படுகின்றன. அந்த மட்டக்களப்பின் மகத்தான ஆளுமையாக வெளிப்பட்ட விபுலானந்த அடிகள் சைவசித்தாந்தத்தை அன்றி வேதாந்தத்தை முன்னிலைப்படுத்தினார் எனும் உண்மை எதனை உணர்த்துகிறது?

இலங்கையின் வடக்கு சைவசித்தாந்தம், கிழக்கு வேதாந்தம் என்ற நெறிகளுக்கு உரியன; இந்தியாவில் வடக்கு வேதாந்தம் என்றும் தெற்கு சைவசித்தாந்தம் என்றும் இயங்கியுள்ளன. நாவலர் காலத்தில் இந்தக் களங்கள் எவ்வகையில் அமைந்திருந்தன? அன்றைய அந்த இயக்கங்கள் இன்று எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றன?



About the Author

நடேசன் இரவீந்திரன்

இரவீந்திரன் அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி கலைப்பட்டதாரி. பேராதனைப் பல்கலைக்கழகத்திலேயே முதுகலைமாணிப்பட்டத்தினையும் ‘திருக்குறளின் கல்விச்சிந்தனை' எனும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் மலையகத்தின் சிறிபாத கல்வியியற் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளதுடன் 1995இல் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியிலும் பணியாற்றியுள்ளார்.

இரவீந்திரன் 18இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் ‘பாரதியின் மெய்ஞ்ஞானம்’, ‘இலங்கையின் சாதியமும் அவற்றிக்கெதிரான போராட்டங்களும்’, ‘பின்நவீனத்துவமும் அழகியலும்’, ‘கலாச்சாரம் எதிர் கலாச்சாரம் புதிய கலாச்சாரம்’, ‘இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும்’, ‘சாதியமும் சமூக மாற்றங்களும்’, ‘இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்’, ‘சாதி தேசம் பண்பாடு’ என்பன குறிப்பிடத்தக்கவை.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்