வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் - பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
31 நிமிட வாசிப்பு

வடக்கு கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் அடையாளமும் புவியியல் சுயவிவரமும் – பகுதி 3

July 7, 2026 | Ezhuna

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பெரும்பாலும் வறண்ட மற்றும் அரை வறண்ட காலநிலைச் சூழலுக்குட்பட்ட பகுதிகளாகும். இப்பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் (River Basins) நீர் வளங்களின் முக்கிய ஆதாரங்களாக விளங்குகின்றன. இவை குடிநீர், வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, தொழில் மற்றும் சூழலியல் சமநிலைக்கான ஆதாரங்களாகவும் உள்ளன. முரண்பாடுகள், நிலவளப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், காடழிப்பு, கட்டுப்பாடற்ற மணல் அகழ்வு, நிலத்தடி நீரின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இவ்வாற்றுப் படுகைகளின் நீரியல் சமநிலையைப் பாதித்துள்ளன. எனவே, இவற்றின் தற்போதைய நிலையை அறிவியல் மற்றும் தரவுசார்ந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய திறம்பட்ட பயன்பாட்டிற்கான வழிமுறைகளை முன்வைப்பது கட்டாயமானதாகும். ‘வடக்கு – கிழக்குப் பிராந்தியங்களின் ஆற்றுப்படுகைகளின் நீர்வள இருப்பும் பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த மூலோபாயங்களும்’ எனும் இக்கட்டுரைத் தொடர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அனைத்து ஆற்றுப்படுகைகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஆய்வு செய்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நீர் வளத்தின் திறம்பட்ட பயன்பாட்டையும் சமநிலைப்படுத்தும் வழிமுறைகளை முன்வைக்கும். இது நிலைத்த வளர்ச்சிக்கான அறிவியல் மற்றும் கொள்கை அடிப்படையிலான வழிகாட்டி ஆவணமாகவும் அமையும்.

2.2 வட மாகாணத்தின் மாகாணத்துக்கு உள்ளான ஆற்றுப்படுகைகள் (Provincial River Basins of Northern Province)

மொத்தத்தில், வட மாகாணத்தில் 62 பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் விவசாய உற்பத்தி, நீர்வளப் பாதுகாப்பு, வெள்ள மற்றும் வறட்சி முகாமைத்துவம், நிலத்தடி நீர்வளப் பேணல் மற்றும் கிராமப்புறச் சமூகங்களின் பொருளாதார முன்னேற்றம் ஆகிய துறைகளில் இன்றியமையாத பங்கினை வகித்து வருகின்றன.

வட மாகாணத்தில் நீர்வள முகாமைத்துவம் மற்றும் விவசாய உற்பத்தியில் முக்கிய பங்காற்றும் ஒன்பது பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் மத்திய அரசின் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களில் ஐந்து முக்கிய நீர்த்தேக்கங்கள் அடங்கியுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக மொத்தம் 18,448 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று, பிராந்தியத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்கின்றன.

வட மாகாணத்தில் மாகாணத்துக்கு உள்ளான மொத்தம் 25 ஆறுகள் காணப்படுகின்றன. இவ்வாறுகள் அனைத்தும் நிலையான வருடாந்த நீரோட்டத்தைக் கொண்டவை அல்ல; மாறாக, பருவமழைக் காலங்களில் மட்டுமே நீரோட்டம் காணப்படும் நிலையற்ற அல்லது பருவகால (Non-perennial) ஆறுகளாக விளங்குகின்றன. இதனால் மழைநீர் சேமிப்பு, நீர்த்தேக்க முகாமைத்துவம் மற்றும் நிலத்தடி நீர் மீள்நிரப்பு ஆகியவை இப்பிராந்தியத்தின் நீர்வள முகாமைத்துவத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

இதனுடன், வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகப் பொறுப்பில் ஒன்பது பிரதான மற்றும் நடுத்தர அளவிலான பாசனத் திட்டங்கள் காணப்படுகின்றன. இத்திட்டங்களின் கீழ் மொத்தமாக 28,430 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிகள் வழங்கப்படுகின்றன. மேலும், இத்திட்டங்களின் நேரடிப் பயனாளர்களாக 28,459 விவசாயக் குடும்பங்கள் உள்ளன. இதன் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கப்படுகிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நீர்வள மேம்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த யாழ் நீரேரித் (Jaffna Lagoon) திட்டம், ஆனையிறவு நீரேரித் திட்டம், உப்பாறு நீரேரித் திட்டம் மற்றும் வடமராட்சி நீரேரித் திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இத்திட்டங்கள் அனைத்தும் வட மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உவர்நீர் ஊடுருவலைக் கட்டுப்படுத்தி நன்னீர் வளங்களைப் பாதுகாப்பதிலும், நிலத்தடி நீர்வளத்தைப் பேணுவதிலும் இத்திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வழுக்கையாறு வடிகால் (Drainage) திட்டம் வட மாகாணத்தின் முக்கியமான வடிகால் வசதித் திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 810 ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு திறம்பட வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வெள்ளப்பெருக்கு மற்றும் நீர்தேக்கத்தால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் குறைக்கப்பட்டு, விவசாய உற்பத்தி நிலைத்தன்மை மேம்படுத்தப்படுகிறது.

மேலும், வட மாகாணத்தில் தற்போது 54 உவர்நீர் தவிர்ப்பு (Salinity Exclusion) திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இத்திட்டங்கள் சுமார் 6,686 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களை கடலோர உவர்நீரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகள் நில வளத்தின் உற்பத்தித் திறனைப் பேணுவதுடன், நிலையான விவசாய வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகின்றன.

மேலும், வட மாகாணத்தில் 2,744 சிறிய பாசனத்திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இவை விவசாய அபிவிருத்தித் திணைக்களம் (Agrarian Development Department) மூலம் பராமரிக்கப்படுகின்றன. இத்திட்டங்கள் மூலம் 31,539 ஹெக்டேர் நிலத்திற்கு பாசன நீர் வழங்கப்படுகிறது. இதன் பயனாளர்களாக 50,000க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் உள்ளன.

கூடுதலாக, யாழ்ப்பாணக் குடாநாட்டின் மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஒரு பகுதியின் கீழ் உள்ள சுண்ணாம்புப் பாறை அடுக்குகளுக்குள் அமைந்துள்ள நிலத்தடி நீர்த்தொட்டிகள் (Aquifers), வட மாகாணத்தின் நீர்வளச் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை குடிநீர் மற்றும் வேளாண்மைக்கான நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக உள்ளன.

சிறிய பாசன நீர்த்தேக்கங்களின் முழுமையான பயன்பாடு

இலங்கையின் பாரம்பரிய நீர்ப்பாசன நாகரிகத்தின் ஒரு சிறப்பான கூறாக சிறிய பாசன நீர்த்தேக்கங்கள் (Village Tanks) கருதப்படுகின்றன. பெரும்பாலும் வறண்ட மண்டலங்களில் அமைந்துள்ள இத்தேக்கங்கள் 10,000க்கும் மேற்பட்ட அளவில் நாட்டில் செயலில் உள்ளன என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் விவசாய சமூகங்களால் (Farmer Communities) நிர்வகிக்கப்படுகின்றன. 

சிறிய பாசன நீர்த்தேக்கங்களின் பலதரப்பட்ட பயன்கள்: பாசன நீர் வழங்கல், வீட்டு உபயோக நீர்த் தேவைகளுக்கான ஆதாரம், நிலத்தடிநீரை (Groundwater) மீள்நிரப்பும் (Recharge) செயல்பாடு. இவை அனைத்தும் இந்தத் திட்டங்களின் முக்கிய பண்புகளாகும். சமீபத்திய ஆய்வுகள், சிறிய பாசன நீர்த்தேக்கங்களை மேம்படுத்தியதன் மூலம் நிலத்தடி நீர் மட்டங்கள் நீண்ட காலம் உயர் நிலையில் பராமரிக்கப்படுவதைக் காட்டுகின்றன. இது நீர்வள நிர்வாகத்தில் சிறிய பாசன நீர்த்தேக்கங்களின் பங்கு மிக முக்கியமானதென்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும், சிறிய பாசன நீர்த்தேக்கங்களை ஒருங்கிணைக்கும் முன், அவற்றின் பாரம்பரியப் பங்களிப்புகள், தற்போதைய சமூக-பொருளாதாரச் சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆழமாக ஆய்வு செய்வது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளைச் சமாளிப்பதற்கு மிகவும் அவசியமானது.

இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தெளிவாக, அனைத்து மாகாண அளவிலான பாசனத் திட்டங்களும் மாகாண சபைகளின் கீழ் வரவேண்டும் என்று கூறுகிறது. எனினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும் சிறிய அளவிலான பாசனத் திட்டங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தால் (Department of Agrarian Development) பராமரிக்கப்படுகின்றன. இது நிர்வாகத்தில் உள்ள சவால்களை வெளிப்படுத்துகிறது.

வட மாகாணத்தில் காணப்படும் மாகாணத்துக்கு உள்ளான முக்கிய ஆற்றுப்படுகைகள்

ஆற்றுப்படுகை (River Basin) என்பது ஒரு குறிப்பிட்ட ஆறு அல்லது நீர்வழிப்பாதையை நோக்கி அனைத்து மேற்பரப்பு நீர்களும் வடிந்துசெல்லும் இயற்கை நீரியல் அலகாகும். உலகளாவிய ரீதியில் நீர்வளத் திட்டமிடலுக்கான அடிப்படை அலகாக ஆற்றுப்படுகைகள் கருதப்படுகின்றன. இலங்கையில் காணப்படும் முக்கிய நீர்வள அமைப்புகளில் வடக்கு மாகாணங்களின் ஆற்றுப்படுகைகள் தனித்துவமான முக்கியத்துவம் பெற்றுள்ளன.

வட மாகாணம் இலங்கையின் மிகவும் வறண்ட பிரதேசங்களில் ஒன்றாக இருந்தாலும், அதன் நீரியல் அமைப்பு பல ஆறுகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் கடலோர நீர்நிலைகளால் ஆதரிக்கப்படுகிறது. குறிப்பாக வன்னிப் பிரதேசம் (வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள்) பல ஆற்றுப்படுகைகளை (River Basins) கொண்டுள்ளது. இவ்வாற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் விவசாயம், குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரியல் பல்வகைமை மற்றும் காலநிலைத் தாங்குதிறன் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

வட மாகாணத்தில் மாகாணத்துக்கு உள்ளான மொத்தம் 25 ஆறுகள் காணப்படுகின்றன. அவற்றில் 12 முக்கிய மாகாணத்துக்கு உள்ளான ஆற்றுப்படுகைகள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த நீர்ப்பிடிப்புப் பரப்பளவு வட மாகாணத்தின் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க பகுதியை உள்ளடக்கியுள்ளது. இவை:

  1. கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் விவசாயத்திற்கு அடிப்படையானவை. 
  2. 2,000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களின் நீர்வழங்கல் அமைப்புடன் தொடர்புடையவை. 
  3. நிலத்தடி நீர் மீள்நிரப்பு, உயிரியல் பல்வகைமைப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத் தழுவலுக்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன.
இல.ஆற்றுப்படுகைமாவட்டம்
1கனகராயன் ஆறு (Kanakarayan Aru)வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு
2பறங்கி ஆறு (Parangi Aru)வவுனியா, மன்னார்
3பாலி ஆறு (Pali Aru)மன்னார்
4நாயாறு (Nay Aru)முல்லைத்தீவு
5பேராறு (Per Aru)முல்லைத்தீவு
6நெத்தலி ஆறு (Netheli Aru)முல்லைத்தீவு
7கோடலிக்கல்லு ஆறு (Kodalikkallu Aru)முல்லைத்தீவு
8தேராவில் ஆறு (Theravil Aru)கிளிநொச்சி – முல்லைத்தீவு
9பல்லவராயன்கட்டு ஆறு (Pallavarayankaddu Aru)கிளிநொச்சி
10அக்கராயன் ஆறு (Akkarayan Aru)கிளிநொச்சி
11பிரமந்தன் ஆறு (Piramenthal Aru)முல்லைத்தீவு
12மண்டக்கல் ஆறு (Mandekal Aru) மற்றும் சிறிய கடலோர வடிநிலைகள்மன்னார்

வட மாகாணத்தின் ஆற்றுப்படுகைகள் வெறும் நீர்வள அமைப்புகள் மட்டுமல்ல; அவை வடக்கின் விவசாயம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, கிராமிய வாழ்வாதாரம் மற்றும் பிராந்தியப் பொருளாதார வளர்ச்சியின் அடித்தளமாக விளங்குகின்றன. குறிப்பாக கனகராயன் ஆறு, பறங்கி ஆறு மற்றும் நாயாறு போன்ற ஆற்றுப்படுகைகள் வட இலங்கையின் சமூக-பொருளாதார முன்னேற்றத்தில் மையப் பங்காற்றுகின்றன. இக்கட்டுரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் முக்கிய ஆற்றுப்படுகைகள், அவற்றின் நீரியல் பண்புகள், பொருளாதாரப் பங்களிப்புகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புகளை தொழில்நுட்ப நோக்கில் ஆராய்கின்றது. இவ்வாறான ஆற்றுப்படுகைகள் வட மாகாணத்தின் நீர்ப் பாதுகாப்புக்கும் எதிர்கால அபிவிருத்திக்கும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வளங்களாகும். இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியின் உணவுப் பாதுகாப்பு, நீர்ப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை இவை உறுதிப்படுத்துகின்றன. எனவே, எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் ‘ஆற்றுப்படுகை அடிப்படையிலான நீர்வள முகாமைத்துவம்’ என்ற கொள்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்படுவது காலத்தின் தேவையாகும்.

ஆற்றுப்படுகைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு முதலில் வடமாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஆற்றுப்படுகைகள் பற்றிய விவரங்களும் பின்பு கிழக்கு மாகாணத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளின் விவரங்களும் தொடர்ச்சியாகத் தரப்பட்டுள்ளன.

2.2.1 கனகராயன் ஆறு ஆற்றுப்படுகை

கனகராயன் ஆறு வட மாகாணத்தின் முக்கியமான உள்நாட்டு ஆற்றுப்படுகைகளில் ஒன்றாகும். இவ்வாறு வவுனியா மாவட்டத்தின் ஓமந்தைப் பிரதேசத்திற்கு அண்மையில் தோன்றி, வடக்கு நோக்கிப் பாய்ந்து வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் வழியாகச் செல்கிறது. இறுதியில் சுண்டிக்குளம் ஏரியுடன் இணைந்து அதன் நீர்வள அமைப்பை வளப்படுத்துகிறது.

கனகராயன் ஆற்றின் மொத்த நீளம் சுமார் 86 கிலோமீற்றராகக் காணப்படுகின்றது. இதன் ஆற்றுப்படுகைப் பரப்பளவு 900 சதுர கிலோமீற்றருக்கும் அதிகமாக விரிவடைந்துள்ளது. பருவமழைக் காலங்களில் கணிசமான நீரோட்டத்தைக் கொண்ட இவ்வாறு, வட மாகாணத்தின் மழைநீர்ச் சேகரிப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கனகராயன் ஆறு, வட மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றான இரணைமடு நீர்த்தேக்கத்திற்கான பிரதான நீர்வழங்கல் ஆறாக விளங்குகிறது. வடக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திக்கு இன்றியமையாத நீர்வள ஆதாரமாக இது செயல்படுவதால், இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்நிலைத்தன்மையைப் பேணுவதில் கனகராயன் ஆறு மிக முக்கிய பங்காற்றுகிறது.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நெற்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்குத் தேவையான பாசன நீரின் முதன்மை ஆதாரமாக இவ்வாறு திகழ்கின்றது. இதனால் கனகராயன் ஆறு, கிளிநொச்சி மாவட்ட விவசாயத்தின் ‘உயிர்நாடி’ எனப் பரவலாகக் கருதப்படுகிறது.

கனகராயன் ஆற்றுப்படுகை பல்வேறு இயற்கை வளங்களையும் உயிரியல் அமைப்புகளையும் தாங்கி நிற்கும் ஒரு முக்கிய சூழலியல் மண்டலமாகும். மழைக்காலங்களில் ஆற்றின் நீரோட்டம் நிலத்தடி நீர் மீள்நிரப்பை ஊக்குவிப்பதுடன், சுற்றியுள்ள ஈரநிலப் பகுதிகளின் நிலைத்தன்மையையும் பாதுகாக்கிறது. மேலும், இப்பகுதியில் காணப்படும் தாவர மற்றும் விலங்கு வளங்களின் வாழ்விடங்களைப் பேணுவதிலும் இவ்வாறு முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.

மொத்தத்தில், கனகராயன் ஆறு வட மாகாணத்தின் நீர்வள அபிவிருத்தி, பாசன முகாமைத்துவம், விவசாய உற்பத்தி, நிலத்தடி நீர் பேணல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை ஆகிய துறைகளில் முக்கிய பங்காற்றும் ஆற்றுப்படுகையாகும். குறிப்பாக இரணைமடு நீர்த்தேக்கத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயப் பொருளாதாரத்திற்கும் இவ்வாறு வழங்கும் பங்களிப்பு அளப்பரியது என்பதால், வட மாகாணத்தின் மிக முக்கியமான ஆற்றுப்படுகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

2.2.1.1 இரணைமடு நீர்த்தேக்கம்

2.2.1.1.1 அறிமுகம்

இது இலங்கையின் மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், பரப்பளவு மற்றும் கொள்ளளவின் அடிப்படையில் நாட்டின் ஏழாவது பெரிய நீர்த்தேக்கமாகவும் விளங்குகிறது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இந்நீர்த்தேக்கம், வட மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர்வள முகாமைத்துவத்தில் இன்றியமையாத பங்காற்றி வருகிறது.

2.2.1.1.2 வரலாற்றுப் பின்னணி

‘இரணைமடு’ என்ற பெயர், பண்டைய காலங்களில் கனகராயன் ஆற்றின் குறுக்கே அமைந்திருந்த இரண்டு தனித்தனி இயற்கை நீர்த்தேக்கங்கள் அல்லது ‘மடுக்கள்’ என்பதிலிருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது. ‘மடு’ என்பது நீர் தேங்கும் இடம் அல்லது நீர்த்தேக்கத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டு மடுக்கள் ஒன்றிணைந்த பகுதி என்பதால் ‘இரணைமடு’ என்ற பெயர் உருவானதாக உள்ளூர் மரபுவழித் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இரணைமடுப் பகுதி வெறும் நீர்த்தேக்கப் பிரதேசமாக மட்டுமல்லாமல், வட இலங்கையின் மிக முக்கியமான வரலாற்று மற்றும் தொல்லியல் மரபுரிமைப் பகுதிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. கனகராயன் ஆற்றின் படுகையை மையமாகக் கொண்டு உருவான இந்தப் பகுதி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித வாழ்வும் நாகரிக வளர்ச்சியும் நடைபெற்ற இடமாகக் கருதப்படுகிறது.

தொல்லியல் ஆய்வுகள் மற்றும் மேற்பரப்பு ஆய்வுகளின் மூலம், இரணைமடு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதக் குடியிருப்புகளின் சுவடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கற்கால மற்றும் ஆரம்ப இரும்புக்கால மக்களின் வாழ்க்கை முறையைச் சுட்டிக்காட்டும் மண்பாண்டத் துண்டுகள், இரும்புப் பயன்பாட்டுச் சான்றுகள், இடுகாடுகள் மற்றும் குடியிருப்பு எச்சங்கள் போன்றவை இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, கனகராயன் ஆற்றுப்படுகை வட இலங்கையில் பண்டைய நீர்ப்பாசன நாகரிகம் உருவாகிய முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம். அனுராதபுர இராச்சிய காலத்தில் வடபகுதியில் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர நீர்த்தேக்கங்களின் வலையமைப்புடன் இப்பகுதி தொடர்புபட்டிருந்ததாகக் கருதப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் பல பழமையான குளங்கள், நீர்வழங்கல் கட்டமைப்புகள் மற்றும் குடியிருப்பு எச்சங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

2.2.1.1.3 திட்டத்தின் தோற்றமும் திட்டமிடலும்

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வடக்கின் வறண்ட பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1885 ஆம் ஆண்டு கனடிய-பிரித்தானிய நிர்வாக அதிகாரியான சேர் ஹென்றி வார்ட் (Sir Henry Ward) மற்றும் அக்கால நிர்வாக அதிகாரிகள் இரணைமடுப் பகுதியில் பெரிய நீர்த்தேக்கமொன்றை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தனர். அதனைத் தொடர்ந்து, 1866 ஆம் ஆண்டு பிரித்தானிய நீர்ப்பாசனப் பொறியியலாளரும் தொல்பொருள் ஆர்வலருமான ஹென்றி பார்க்கர் (Henry Parker), இரணைமடு நீர்த்தேக்கத்திற்கான ஆரம்பகால தொழில்நுட்பத் திட்டத்தை உருவாக்கினார். அவரது திட்ட அறிக்கையில், இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழ் சுமார் 20,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும், திட்டம் பல ஆண்டுகள் வரைபட மற்றும் ஆய்வு நிலைகளிலேயே காணப்பட்டது. 1900 ஆம் ஆண்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் ஆர். பிரவுன் (R. Brown) இப்பகுதிக்குச் சென்று விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த உள்ளூர் மக்களின் உதவியுடன் இரணைமடுப் படுகைப் பிரதேசத்தை முழுமையாக ஆய்வு செய்து, நீர்த்தேக்கக் கட்டுமானத்திற்கான நடைமுறைத் திட்டங்களை உருவாக்கினார்.

2.2.1.1.4 கட்டுமான வரலாறு

இரணைமடு நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகளை முன்னெடுப்பதற்கு பெருமளவிலான தொழிலாளர் மற்றும் குடியேற்ற வசதிகள் தேவைப்பட்டன. இதற்காக முதலில் புதிய குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தற்போது கிளிநொச்சி நகரமாக வளர்ச்சியடைந்துள்ள பகுதிகளில் ஆரம்பகாலக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டன. 1902ஆம் ஆண்டில் முதன்முதலாக இரணைமடு நீர்த்தேக்கத்தின் கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு முன்பே இந்தப் பகுதி பண்டைய குடியேற்றங்களும் விவசாயச் சமூகங்களும் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிலப்பரப்பாக இருந்தது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில், அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 1920களில் அது படிப்படியாக விரிவாக்கப்பட்ட பின்னர், 1930களில் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத் திட்டங்களின் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்தும் மற்றும் வட மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்தும் விவசாயக் குடும்பங்கள் இங்கு குடியேற்றப்பட்டன. இதன் மூலம் இரணைமடு வட இலங்கையின் முக்கிய விவசாய உற்பத்தி மையமாக வளர்ச்சி பெற்றது. இப்போதுள்ள ஒரு இலட்சத்து அறுபது ஆயிரம் ஹெக்டேர் நீர்ப்பரப்பளவைப் பெற்றது. இந்தக் குளத்தில் இருந்தே கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் நெற்பயிரிடல் மேற்கொள்ளப்படுகிறது. வட மாகாண மக்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் இணைந்த ஒரு மகத்தான நீர்ப்பாசனச் சாதனையாக இரணைமடு உருவாகியது.

2.2.1.1.5 வளர்ச்சி மற்றும் கொள்ளளவு அதிகரிப்பு

1920 ஆம் ஆண்டில் சுமார் 19 இலட்சத்து 4 ஆயிரம் ரூபாய் செலவில் இரணைமடு நீர்த்தேக்கத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவுபெற்றன. அக்காலத்தில் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 44,000 ஏக்கர் அடியாகவும், அதிகபட்ச நீர்மட்ட ஆழம் 22 அடியாகவும் காணப்பட்டது. 1954 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 82,000 ஏக்கர் அடியாக உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக நீர்மட்ட ஆழம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்புப் பணிகள் 1977 ஆம் ஆண்டில் நிறைவடைந்தன. இதன்போது நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 106,500 ஏக்கர் அடியாக உயர்த்தப்பட்டதுடன், நீர்மட்ட ஆழம் 34 அடியாக அதிகரிக்கப்பட்டது. தற்போதுள்ள வான்கதவுகள் (Spill Gates) மற்றும் அணை அமைப்புகள் பெரும்பாலும் இந்தக் காலகட்டத்திலேயே நிறுவப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் நிறைவுபெற்ற அண்மைய மேம்பாட்டின் மூலம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 131 MCM இலிருந்து 148 MCM ஆக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 17 மில்லியன் கன மீட்டர் கூடுதல் நீரைச் சேமிக்கும் வசதி உருவாக்கப்பட்டது. நான்கு முக்கிய கட்டங்களில் இடம்பெற்ற கொள்ளளவு அதிகரிப்பின் வரலாற்று விவரங்கள் சாராம்சமாக கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது

ஆண்டுமுழு நீர்மட்டம்கொள்ளளவு MCMகொள்ளளவு Ac.ft
1920–1921 (ஆரம்பம்)26 அடி4939,725
1951–195230 அடி8871,342
1954–195632 அடி10181,882
1975–197734 அடி131106,203
2015–201836 அடி148119,985

2.2.1.1.6 இரணைமடுக் குளத்தின் தொழில்நுட்ப மற்றும் பாசன முக்கியத்துவம்

இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீரேந்துப் பரப்பளவு சுமார் 227 சதுர மைல்கள் ஆகும். இந்நீர்த்தேக்கம் பிரதானமாக கனகராயன் ஆற்றில் இருந்து நீரைப் பெறுகிறது. நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியின் உச்ச நீளம் சுமார் 9 கிலோமீற்றராகவும், பிரதான அணையின் நீளம் சுமார் 2 கிலோமீற்றராகவும் அமைந்துள்ளது. இந்நீர்த்தேக்கத்தின் மூலம் சுமார் 20,882 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிகள் வழங்கப்படுகின்றன. குளத்தின் முக்கிய விவரங்கள் கீழே உள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

இடதுகரை, வலதுகரை என இரு வாய்க்கால்களைக் கொண்ட இரணைமடுவின் இடதுகரையில் ஊட்டக்குளமான கிளிநொச்சிக்குளம் உள்ளது. இதிலிருந்துதான் கிளிநொச்சி நகருக்கான குடிநீர் வழங்கல் முன்னர் நடைபெற்றது. இப்பொழுது மீளவும் குடிநீர் வழங்கலுக்கான ஏற்பாடு நடக்கின்றது. வலதுகரையில் ஊரியான்குளம் அதன் ஊட்டக்குளமாக உள்ளது. மொத்தம் 32.5 மைல்கள் நீள வாய்க்கால்கள் மூலம் இரணைமடு கிளிநொச்சியை வளப்படுத்துகின்றது. 

இரணைமடு மூலமே கிளிநொச்சியில் பெருமளவில் குடியேற்றங்கள் நடந்தன. திருவையாறு மேட்டுநீர் ஏற்றுப்பாசனத் திட்டத்தின் மூலம் 1004 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன; இதற்கான ஏற்றுப்பாசன பம்பி இடது கரையில் அமைந்துள்ளது. ஆனால் 1990 உடன் இது செயலிழந்தது. 

இரணைமடு இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து நீர் வருகிறது. ஆனால் இந்தக் குளத்தின் பாசனநீர் மற்றும் பயன்பாட்டு நீர் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்கிறது. 

இந்த நீர்த்தேக்கத்தின் தென்பகுதியில் உள்ள அம்பகாமம் என்ற காட்டுப் பிரதேசத்தில்தான் விடுதலைப்புலிகளின் முதலாவது பயிற்சி முகாம் 1975 ஆண்டுக் காலப்பகுதியில் இருந்துள்ளது. வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை இராணுவத்தின் பெருஞ்சமரான ஜெயசிக்குறு நடவடிக்கையில் இந்தக் குளம் மட்டுமே படையினரால் கைப்பற்றப்படாமல் இருந்தது. இந்தக் குளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அணைக்கட்டின் வழியாகவே கிழக்கு வன்னிக்கும் மேற்கு வன்னிக்குமான பயணங்களும் தொடர்பும் நடந்தன. 

2002இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் அவருடைய துணைவி அடேல் பாலசிங்கமும் அரசாங்கத்தின் உடனான பேச்சுவார்த்தைகளுக்கு, இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் மாலைதீவு வந்து, அங்கிருந்து கடல் விமானம் மூலம் வந்து இந்த நீர்த்தேக்கத்தில்தான் இறங்கினர். பாலசிங்கம் தம்பதிகளை விடுதலைப்புலிகளின் தலைவரும் அவருடைய மனைவி மதிவதனியும் புலிகளின் தளபதிகளும் பொறுப்பாளர்களும் வரவேற்றனர். 

இந்த நீர்த்தேக்கத்தின் மேற்கே கிளிநொச்சி நகர் உள்ளது. முன்பு, கிழக்கே விடுதலைப்புலிகளின் விமான நிலையம் இருந்தது. இப்பொழுது இந்த விமான நிலையத்தைப் படையினர் தமது கட்டுப்பாட்டில் எடுத்துப் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்கள். போர் முடிந்த பிறகு இந்த நீர்த்தேக்கத்திற்கு இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபக்க்ஷ விஜயம் செய்திருந்தார். நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள படைத்துறைத் தலைமையகத்தில் இலங்கையின் மந்திரிசபைக் கூட்டத்தை நடத்தினார். இலங்கையின் வரலாற்றில் வடக்கில் நடத்தப்பட்ட முதலாவது மந்திரிசபைக் கூட்டம் இதுவாகும். 

2.2.1.1.7 இரணைமடுவைச் சூழ்ந்துள்ள நிறுவனங்கள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி

இரணைமடு நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் தற்போது இலங்கை இராணுவத்தின் கிளிநொச்சி மாவட்ட படைத்துறைத் தலைமையகம் அமைந்துள்ளது. அதற்கு அருகாமையில் செஞ்சோலை சிறுவர் இல்லமும் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்தின் போர்க்கால வரலாற்றுடன் தொடர்புடைய இவ்விடம், கடந்த காலத்தில் பல்வேறு சமூக மற்றும் மனிதாபிமானச் செயற்பாடுகளின் மையமாக விளங்கியதுடன், தற்போது சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரணைமடு நீர்த்தேக்கத்தின் மேற்குப் பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடமும் பொறியியல் பீடமும் அமைந்துள்ளன. உள்நாட்டு ஆயுத மோதலால் சேதமடைந்திருந்த கட்டடங்கள் மீளப் புனரமைக்கப்பட்டதோடு, புதிய கல்வி மற்றும் ஆய்வு வசதிகளும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்புனரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு சர்வதேச உதவிகளுடன் இந்திய அரசும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. இவ்விரு பீடங்களும் வட மாகாணத்தின் விவசாய, தொழில்நுட்ப மற்றும் மனித வள மேம்பாட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

2.2.1.1.8 2018 ஆம் ஆண்டில் நிறைவுபெற்ற மேம்படுத்தல் திட்டத்தின் நோக்கங்கள்

இந்தத் திட்டம் வெறும் அணைக்கட்டு உயர்த்தும் பணியாக இல்லாமல், வட மாகாணத்தின் நீண்டகாலத் தேவைகள் மற்றும் நீர்வளப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடனும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சுகாதாரமான குடிநீர்த் தேவைக்குமாகவும் வடிவமைக்கப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கி இத்திட்டத்திற்காக கீழ்வரும் முக்கிய நோக்கங்கள்/ குறிக்கோள்களைக் கருத்தில் கொண்டு சுமார் ரூ. 2,000 மில்லியன் நிதி உதவி அளித்தது:

  1. கிளிநொச்சி விவசாயிகளுக்கான பாசனநீர்ப் பாதுகாப்பை மேம்படுத்துதல்.
  2. வறட்சிக் காலங்களில் நீர்ப்பற்றாக்குறையைக் குறைத்தல்.
  3. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிக்கான குடிநீர் வழங்கல் திட்டங்களுக்கு ஆதரவளித்தல்.
  4. காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நீரியல் அபாயங்களை எதிர்கொள்ளுதல்.
  5. வட மாகாணத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல்.

2015–2018 காலப்பகுதியில் பின்வரும் பொறியியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டன:

  1. அணைக்கட்டின் உயரம் 34 அடியிலிருந்து 36 அடியாக உயர்த்தப்பட்டது. 1.75 கிலோமீற்றர் நீளமுள்ள பிரதான அணைக்கட்டு பலப்படுத்தப்பட்டது
  2. பழைய வெள்ளவாய்கள் (Spillway) புனரமைக்கப்பட்டன.
  3. புதிய சக்திவாய்ந்த வெள்ள வெளியேற்ற அமைப்புகள் நிறுவப்பட்டன. இருந்த 11 ‘Radial Gates’ உடன் மேலும் 3 புதிய கதவுகள் சேர்க்கப்பட்டன. கதவுகள் மின்சார இயக்க முறைமைக்கு மாற்றப்பட்டன.
  4. அணையின் மேற்பகுதி மற்றும் நீர்முகப்புப் பகுதிகள் கற்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் பலப்படுத்தப்பட்டன.
  5. திருவையாறு ‘Lift Irrigation’ திட்டம் சூரிய ஆற்றல் மூலம் இயங்கும் முறையில் மறுசீரமைக்கப்பட்டது.

1976 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டம், 1986 ஆம் ஆண்டு வரை செயற்பாட்டில் இருந்து சுமார் 1,409 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் 533 குடும்பங்களுக்கும் பயனளித்தது. எனினும், பின்னர் ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றும் நிலப் பயன்பாட்டு மாற்றங்களின் காரணமாக, இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த விவசாய நிலப்பரப்பும் விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளன. 

மேலும், சுமார் 408 மில்லியன் ரூபா செலவில் திருவையாறு பிரதேசத்திற்கான ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் மீளப் புனரமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக, சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் நவீன நீரேற்ற அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலை விவசாய நீர்ப்பாசனத்தில் பயன்படுத்தும் முன்னோடி முயற்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுக்கு மேல் அதிகமாக ‘International Fund for Agricultural Development’ சர்வதேச விவசாய அபிவிருத்திக்கான நிதியத்தின் (IFAD) நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய கால்வாய் மறுசீரமைப்புப் பணிகளுக்காக சுமார் ரூ. 3,200 மில்லியன் நிதியுதவி வழங்கியது. இந்த 3,250 மில்லியன் ரூபா பெறுமதியான இலகுக் கடன் உதவியின் கீழ், பாசன வாய்க்கால்கள், விவசாய அணுகல் வீதிகள், நெற்களஞ்சியங்கள், விவசாயக் கிணறுகள் மற்றும் தொடர்புடைய உட்கட்டமைப்புகள் மீளப் புனரமைக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம்:

  1. சுமார் 9,000 விவசாயக் குடும்பங்கள் நேரடியாகப் பயனடைந்தன.
  2. 21,000 ஏக்கர நெல்வயல்கள் உறுதியான பாசன வசதி பெற்றன.
  3. கிளிநொச்சி மாவட்ட மக்களில் சுமார் 40% பேரின் வாழ்வாதாரத்திற்கு இது ஆதரவாக அமைந்தது.
  4. இருபோகப் பயிர்ச்செய்கைக்கான நீர்வசதி மேம்பட்டது.

தற்போதைய நிலையில் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் பெரும்பாலும் நெற்பயிர்ச் செய்கையை மையப்படுத்திய அமைப்பாகவே இயங்கி வருகிறது. பல தலைமுறைகளாக நெற்செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குறைந்த நீர்ப் பயன்பாட்டில் அதிக பொருளாதார இலாபம் தரக்கூடிய மாற்றுப் பயிர்ச்செய்கைகளுக்கு மாறுவதில் இன்னும் தயக்கத்துடன் காணப்படுகின்றனர்.

பயறு, கௌபி, உளுந்து, சோளம், நிலக்கடலை போன்ற உப உணவுப் பயிர்கள் குறைந்தளவு நீரில் பயிரிடக்கூடியவையாக இருந்தாலும், அவற்றைப் பரவலாக அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் இன்னும் முழுமையான வெற்றியைப் பெறவில்லை. இதன் காரணமாக இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர்வளம் பெரும்பாலும் நெற்பயிர்ச் செய்கைக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீர் முகாமைத்துவ நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு சராசரியாக 3.5 ஏக்கர் அடி நீர் போதுமானதாகக் கருதப்படுகிறது. எனினும், சில சந்தர்ப்பங்களில் 8 முதல் 10 ஏக்கர் அடி வரை நீர் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதனால் நீர்ப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான நவீன நீர் முகாமைத்துவ நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

2.2.1.1.9 சமூக மற்றும் பிராந்தியச் சமநிலை தொடர்பான சவால்கள்

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் சுமார் 7,000 விவசாயக் குடும்பங்கள் பயனடைவதாகப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டினாலும், விவசாய நிலங்களின் உரிமைப் பகிர்வு சமமற்றதாக உள்ளதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, குறைந்த எண்ணிக்கையிலான சில விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வைத்திருப்பதன் மூலம் திட்டத்தின் பலன்களில் குறிப்பிடத்தக்க பங்கினைப் பெறுகின்றனர். எனவே, நீர் வளங்களின் சமானமான பயன்பாடு மற்றும் நிலையான பயனீட்டை உறுதிப்படுத்தும் கொள்கைகள் அவசியமாகின்றன.

மறுபுறம், இரணைமடுவின் மேற்குப் பகுதியில், குறிப்பாக ஏ–9 பிரதான வீதியின் மேற்கே அமைந்துள்ள பல கிராமங்களின் மக்கள் தங்களது விவசாய நடவடிக்கைகளுக்காக புதிய ஏற்று நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், இவ்விடங்களுக்கான விரிவான தொழில்நுட்பத் திட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் நடவடிக்கைகள் இதுவரை முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.

2.2.1.1.10 குடிநீர் விநியோகமும் குடிநீர் வழங்கலில் இரணைமடுவின் பங்கும்

வட மாகாணத்தின் நீர்வள அபிவிருத்தியில் இரணைமடு நீர்த்தேக்கம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த குடிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில், இரணைமடு நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்ட குடிநீர் வழங்கல் திட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் முன்மொழியப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் கிளிநொச்சி–யாழ்ப்பாணம் ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டமாக முன்வைக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் இரணைமடு அபிவிருத்தித் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இத்திட்டம் தொடர்பாக, இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளிடையே பாசன நீரின் எதிர்கால கிடைப்புத் தன்மை குறித்து பல்வேறு அச்சங்களும் சந்தேகங்களும் எழுந்தன. அதேவேளை அரசியல், சமூக மற்றும் பிராந்தியக் கருத்து வேறுபாடுகளும் திட்டத்தின் முன்னேற்றத்தைப் பாதித்தன. இதன் விளைவாக கிளிநொச்சி–யாழ்ப்பாணம் குடிநீர் வழங்கல் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படாமல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கிளிநொச்சி குடிநீர் வழங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து நீர் பெறப்பட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் பின்னர் கிளிநொச்சி நகரத்திற்கும் அதனை அண்மித்த சில கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பரந்தன் மற்றும் பூநகரிப் பிரதேசங்களுக்கான குடிநீர் விநியோக வசதிகளும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் இன்னமும் குடிநீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரணைமடு நீர்த்தேக்கத்தை அண்மித்த சாந்தபுரம் உள்ளிட்ட சில கிராமங்களில், வருடத்தின் பெரும்பாலான காலப்பகுதிகளில் பாதுகாப்பான குடிநீரைப் பெறுவதில் சிரமங்கள் நிலவுகின்றன.

அதேபோன்று கிளிநொச்சியின் மேற்குப் பகுதிகள், பூநகரி, கண்டாவளை மற்றும் பளை பிரதேசங்களிலுள்ள பல கிராமங்களும் குடிநீர் விநியோக வசதிகளில் குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றன. இரணைமடு நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்ட குடிநீர்த் திட்டங்கள் சில பகுதிகளுக்குப் பயனளித்த போதிலும், நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உள்ள பல குடியிருப்புகளும் இன்னும் முழுமையான குடிநீர் வசதிகளை எதிர்பார்த்து வருகின்றன.

2.2.1.1.11 இரணைமடுவும் கிளிநொச்சியின் பொருளாதார வளர்ச்சியும்

கிளிநொச்சி மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் இரணைமடு நீர்த்தேக்கம் மையப் பங்கு வகிக்கிறது. நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி அதன் கீழ் பரந்தளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட காலங்களில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார நன்மைகளைப் பெற்றன.

நெற்பயிர்ச் செய்கை தொடர்பான களையெடுத்தல், அறுவடை, போக்குவரத்து, சேமிப்பு, அரிசி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் வருமான வாய்ப்புகளையும் உருவாக்கின. மேலும் அறுவடைக்குப் பின்னர் வயல்களில் மீதமிருக்கும் நெற்கதிர்களைச் சேகரித்து வாழ்வாதாரம் மேற்கொண்ட குடும்பங்களும் கணிசமான அளவில் இருந்தன.

எனினும், கடந்த சில தசாப்தங்களில் இயந்திரமயமாக்கல் அதிகரித்ததன் விளைவாக பாரம்பரிய விவசாயத் தொழிலாளர் தேவை குறைந்துள்ளது. இதனால் முன்னர் விவசாய நடவடிக்கைகளின் மூலம் பல தரப்பினருக்கும் கிடைத்த பொருளாதார நன்மைகள் தற்போது குறுகிய வட்டாரங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

2.2.1.1.12 மீன் வளங்கள் மற்றும் மாற்றுப் பயன்பாடுகள்

இரணைமடு நீர்த்தேக்கம் விவசாயத்திற்கான நீராதாரமாக மட்டுமன்றி, உள்நாட்டு நன்னீர் மீன்பிடித் தொழிலுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலின் மூலம் வாழ்வாதாரம் பெற்று வருகின்றன.

எனினும், நீர்த்தேக்க அபிவிருத்தித் திட்டங்களில் மீன்வளத் துறையின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் போதியளவு கவனத்தில் கொள்ளப்படவில்லை என்ற கருத்து மீனவர் சமூகத்தினரிடையே காணப்படுகிறது. எனவே எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களில் விவசாயம், மீன்வளம், சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பல்நோக்கு அணுகுமுறை அவசியமாகிறது.

 2.2.1.1.13 யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கல் திட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் யாழ்ப்பாண நகரப் பகுதிகள் நீண்டகாலமாக நிலத்தடி நீரின் உவர்மயமாதல் மற்றும் குடிநீர்ப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வாக இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் சுமார் 23 பில்லியன் (2,300 கோடி) இலங்கை ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. திட்டத்தின் முக்கிய நோக்கம் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை அதிகரித்தல், அணைக்கட்டினை உயர்த்துதல் மற்றும் கூடுதல் நீரைச் சேமித்தல் என்பதாகும்.

திட்ட ஆவணங்களின்படி, கொள்ளளவு அதிகரிப்பின் மூலம் சேமிக்கப்படும் கூடுதல் நீரில் குறைந்தளவு பகுதியே யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்காகப் பயன்படுத்தப்படவிருந்தது. இதேவேளை விவசாயத்திற்கான பாசன நீரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் திட்டமிடப்பட்டது.

2.2.1.1.14 ஒருங்கிணைந்த நீர்வள முகாமைத்துவத்தின் அவசியம்

நவீன நீர்வள முகாமைத்துவக் கொள்கைகளின்படி, குடிநீர், விவசாயம், தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்கிடையில் சமநிலையான நீர்ப் பகிர்வு அவசியமாகும். தேசிய நீர்வள முகாமைத்துவத்தின் அடிப்படை நோக்கமும் இதுவே ஆகும்.

இரணைமடு போன்ற பாரிய நீர்த்தேக்கங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு, முதலில் அவற்றின் கொள்ளளவை மேம்படுத்தி, நீர்ச் சேமிப்புத் திறனை உயர்த்தி, பின்னர் பல்துறைப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் அணுகுமுறை தேவைப்படுகிறது. இதன் மூலம் விவசாய உற்பத்தி, குடிநீர்ப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் முன்னெடுக்க முடியும்.

இரணைமடு நீர்த்தேக்கம் வட மாகாணத்தின் விவசாய வளர்ச்சி, குடிநீர்ப் பாதுகாப்பு, மீன்வள மேம்பாடு மற்றும் பிராந்திய பொருளாதார முன்னேற்றம் ஆகிய அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. எதிர்காலத்தில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் நீர்வளத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், அறிவியல் அடிப்படையிலான நீர்வள முகாமைத்துவம், நீர்த்தேக்கக் கொள்ளளவு விரிவாக்கம் மற்றும் பங்குதாரர்களின் ஒருமித்த ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகாலத் திட்டமிடல் அவசியமாகிறது. இதன் மூலம் வட மாகாணத்தின் நிலையான நீர்வள அபிவிருத்திக்கும் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதியான அடித்தளத்தை உருவாக்க முடியும்.

தொடரும். 



About the Author

சுப்ரமணியம் சிவகுமார்

கலாநிதி. சுப்ரமணியம் சிவகுமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் (BSc Eng.) பட்டமும், இந்தியத் தொழில்நுட்பக்கழகம் ரூர்க்கியில் (IIT Roorkee) நீர்வள மேம்பாட்டுத்துறையில் முதுகலைப் (MSc) பட்டமும், மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் (PhD) பட்டமும் பெற்றவர். பின்னர் நோர்வேயின் உயிரியல் - அறிவியல் பல்கலைக்கழகத்திலும் (NMBU, Ås), வடகிழக்கு நோர்வே பல்கலைக்கழகத்திலும் (Bodø) பிந்தைய முனைவர் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றினார். நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளராகவும், நீர்ப்பாசனப் பொறியாளராகவும் 28 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பல்கலைக்கழகங்களில் மூத்த விரிவுரையாளராகச் செயற்பட்டார். விவசாய அமைச்சகத்தில் திட்டமிடல் பணிப்பாளராகவும், வடமாகாண அவசர மீளமைப்புத் திட்டத்தின் திட்டப்பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

பல்வேறு சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் விருந்தினர் விரிவுரைகளையும், முக்கிய உரைகளையும் (Keynote Speeches) நிகழ்த்தியுள்ள இவர், குறியீட்டு அறிவியல் இதழ்களில் 45க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளதோடு, இதுவரை 7 நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், 18 சர்வதேச மாநாடுகளில் ஆய்வுக் கட்டுரைகளை வாசித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்