“6,00,000 பேரின் ஒரே நீர்மூலம் மாசடைகிறது. அரசின் கண்காணிப்பு இல்லை. பெண்கள் தினமும் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் நெருக்கடி ஒரு சூழல் பிரச்சினை மட்டுமல்ல — இது ஓர் அரசியல் கேள்வியும் கூட.”
காலை ஆறு மணி. கார்த்திகா என்ற நாற்பத்தி நான்கு வயதுப் பெண் தனது பிளாஸ்டிக் குடத்தைத் தூக்கிக்கொண்டு கதவைத் திறக்கிறார். வீட்டுக் கிணறு இருக்கிறது — ஆனால் அதில் தண்ணீர் எடுப்பதில்லை. “எண்ணெய் வாசனை வருகிறது. சில நேரம் உப்பாகவும் இருக்கிறது. குடிக்க முடியாது” என்கிறார் கார்த்திகா. யாழ்ப்பாணத்தின் நல்லூர் நகரில் வசிக்கும் அவர், குடிநீருக்காக தினமும் பணம் செலவழிக்கிறார். “அது மிகப்பெரிய நெருக்கடி” என்று ‘Mongabay’ ஊடகத்திடம் கூறினார் (2025).
இது யாழ்ப்பாணத்தின் ஒரு குடும்பத்தின் கதை மட்டுமல்ல. இலங்கையில் வேறு எந்த இடத்திலும் இல்லாத வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 6,00,000 மக்கள் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி வாழ்கிறார்கள். நதி இல்லை. பெரிய நீர்த்தேக்கம் இல்லை. மழைநீர் போதாது. இந்த ஒரே நீர்மூலம் இன்று மூன்று திசைகளிலிருந்தும் அழிவை நோக்கி நகர்கிறது.
முக்கிய தரவுகள் — ஒரு பார்வை
யாழ்ப்பாண மக்கள்தொகை: 6,00,000+ (IWMI, 2024)
நிலத்தடி நீரை மட்டுமே நம்புவோர்: 100% – ஆறுகள் & நீர்த்தேக்கங்கள் இல்லை
சுன்னாகம் நீர்மூலத்தை நம்பும் மக்கள்: 3,84,000 (NWS & DB)
எண்ணெய் மாசடைந்த கிணறுகள்: 73% – 150 கிணறுகளின் ஆய்வில் (Suntha, 2018)
சர்வதேச நிலை மீறல்: சில இடங்களில் எண்ணெய் அளவு 140 மடங்கு வரை
நைட்ரேட் WHO வரம்பு மீறல்: 14–28% கிணறுகளில் (PMC, 2014)
உப்புநீர் ஊடுருவலால் பாழான கிணறுகள்: 59% கடலோரப் பகுதிகளில் (2020 ஆய்வு)
நெல் வயல் கைவிடல்: 43% – நீர்மூலங்களின் தோல்வியால் (Sustainability, 2020)
நேரடியாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள்: 5,864+ – அவசர குடிநீர் தேவைப்பட்டோர்
2024 நிதிக் கோரிக்கை: 129 மில்லியன் ரூபாய் – கிடைத்தது வெறும் 8 மில்லியன் மட்டுமே
I. சுன்னாகம் நீர்மூலம் — ஒரு தலைமுறையின் நம்பிக்கை
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நான்கு முக்கிய நிலத்தடி நீர் அடுக்குகள் (Aquifers) உள்ளன: சுன்னாகம் (வலிகாமம் பகுதி), தென்மராட்சி, வடமராட்சி மற்றும் காரைதீவு. இவற்றில் சுன்னாகம் நீர்மூலம் மிகவும் பெரியது; மிகவும் தரமானது என்று ஒருகாலத்தில் கருதப்பட்டது. மயோசீன் கால சுண்ணாம்பு அடுக்கில் (Miocene Limestone Karst Terrain) அமைந்த இந்த நீர்மூலம் நூற்றாண்டுகளாக யாழ்ப்பாண மக்களுக்கு விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிற்சாலைகளுக்கும் உதவி வந்தது.
ஆனால் 2008ஆம் ஆண்டு அந்த நிலை மாறியது. இலங்கை மின்சார சபை (CEB) வட மாகாணத்தில் தேசிய மின்கட்டம் (National Grid) இல்லாத காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்ய சுன்னாகத்தில் ஒரு 36 மெகாவாட் டீசல் மின் நிலையத்தை நிறுவியது. இது அவசரத் தேவைக்கு ஏற்படுத்தப்பட்டது — ஆனால் இதன் கழிவு எண்ணெய் எங்கே போகும் என்பதை யாரும் சரியாகத் திட்டமிடவில்லை.

ஆய்வு காட்டியது இதுதான்: மின் நிலையத்திலிருந்து வெளியேறும் இயந்திர எண்ணெய்க் கழிவுகள் அருகிலுள்ள திறந்த நிலத்தில் கொட்டப்பட்டன. சரியான சுத்திகரிப்பு இல்லாமல் கொட்டப்பட்ட இந்த எண்ணெய் மண்ணிற்கு கீழே ஊர்ந்து நீர்மூலத்தை அடைந்தது. 2013ஆம் ஆண்டு, ஏழாலை, மல்லாகம், உடுவில் பகுதி மக்கள் தங்கள் கிணற்று நீரில் எண்ணெய் வாசனையை உணர்ந்தனர். கிணறுகளில் எண்ணெய்ப் படலம் மிதந்தது.
———————————-
“கிணற்றில் எண்ணெய் வாசனை வந்தபோது நாங்கள் பயந்தோம். இது என்ன, எங்கிருந்து வந்தது என்று யாரும் சொல்லவில்லை.”
———————————-
NWS & DB ஆய்வாளர் சரவணன் சுந்தா நடத்திய ஆராய்ச்சி (Open Water Journal, 2018) 150 கிணறுகளைப் பரிசோதித்தது. முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன: 109 கிணறுகளில் (73%) எண்ணெய் அளவு இலங்கைத் தரநிலையை (1.0 mg/l) மீறியிருந்தது. சில இடங்களில் சர்வதேச நிலையை 140 மடங்கு வரை மீறியிருந்தது. மாசுப் பரவல் மின் நிலையத்தை மையமாகக்கொண்டு 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தது — மேலும் வடக்குத் திசையில் நகர்ந்துகொண்டே இருந்தது.

Thulasitha & Premachandra (2016) ஆகியோரின் ஆய்வு இன்னொரு உண்மையைக் கண்டுபிடித்தது: 40 கிணறுகளில் 33 கிணறுகள் (82.5%) எண்ணெய்யைத் தாங்கும் அளவை மீறியிருந்தது. மின் நிலையத்திலிருந்து தூரம் அதிகரிக்க அதிகரிக்க மாசு குறைகிறது — ஆனால் எண்ணெய் கொட்டல் நிறுத்தப்பட்டாலும் மாசு நகர்வு தொடர்கிறது என்பதை ஆய்வு காட்டியது. IWMI இன் 2024ஆம் ஆண்டு ஆய்வு தெளிவாகக் கூறுகிறது: “இந்தச் சேதத்தை திரும்பப் பெறுவது மிகவும் கடினமானது, பல ஆண்டுகள் ஆகும்.”
II. பல திசைகளில் அழிவு
யாழ்ப்பாண நிலத்தடி நீரின் பிரச்சினை சுன்னாகம் எண்ணெய் மாசு ஒன்று மட்டுமல்ல. IWMI (2024) அடையாளப்படுத்துவது போல, வேறு வேறு ஆபத்துகள் ஒரே நேரத்தில் நிலத்தடி நீரை அச்சுறுத்துகின்றன.
1. நைட்ரேட் மற்றும் வேதியியல் மாசு — யாழ்ப்பாணக் குடாநாடு தீவிர விவசாயப் பகுதி. நைட்ரஜன் உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. சுண்ணாம்பு அடுக்கில் பெரிய குழிகள் இருப்பதால் (Karst Geology), உரங்கள் விரைவாக நிலத்தடி நீரை அடைகின்றன. PMC (2014) ஆய்வின்படி, 44 கிணறுகளில் 14 முதல் 28 சதவீதம் கிணறுகள் நைட்ரேட் அளவு WHO குடிநீர் தரநிலையை (10 mg/l) மீறுகின்றன. Jeyaruba & Thushyanthi ஆகியோரின் ஆய்வில் நைட்ரேட்-N 7.1 முதல் 15.3 mg/l வரை கண்டுபிடிக்கப்பட்டது — இது தரநிலையின் ஒன்றரை மடங்கு. 16 கிணறுகளில் சோதித்தபோது அனைத்திலும் கோலிஃபார்ம் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. குடிக்கவும் முடியாது, உழவுக்கும் உதவாது.
2. உப்புநீர் ஊடுருவல் (Saltwater Intrusion) — கடலோரக் கிணறுகளில் கடல் நீர் ஊடுருவுவது யாழ்ப்பாணத்தில் மிகவும் தீவிரமான பிரச்சினை. வடமராட்சி மற்றும் உப்பாறு கடலேரிகளை ஒட்டிய பத்துக் கிராமங்களில் நடத்திய ஆய்வு (Ceylon Journal of Science, 2019) ஒரு கொடுமையான உண்மையை வெளிப்படுத்தியது: செம்மணி, மட்டுவில், நாவற்குழி, இருபாலை, நீர்வேலி ஆகிய கிராமங்களில் 60%க்கும் அதிகமான கிணறுகளில் உப்பு அளவு தாங்க முடியாத நிலையில் இருக்கிறது. இருபாலையை மட்டுமே எடுத்தால் — 80%க்கும் அதிகமான கிணறுகள் EC மற்றும் உப்புத்தன்மையைத் தாங்கும் எல்லையை மீறியிருக்கின்றன.
Gopalakrishnan et al. (Sustainability, 2020) அவர்களின் ஆய்வு இன்னும் கொடுமையான தரவைத் தருகிறது: யாழ்ப்பாணக் குடாநாட்டில் 59% கடலோரக் கிணறுகள் விவசாயத்திற்கும் குடிப்பதற்கும் உதவாத நிலையில் இருக்கின்றன. 43% நெல்வயல்கள் நீர்மூலத் தோல்வியால் கைவிடப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பச்சை வயல்களாக இருந்த இடங்கள் இன்று வெறிச்சோடிக் கிடக்கின்றன.
3. அதிகப்படியான நீர் எடுப்பு (Over-extraction) — 28,000க்கும் அதிகமான ஆழமற்ற கிணறுகளும் அதிகரிக்கும் ஆழ்குழாய்க் கிணறுகளும் நிலத்தடி நீரை இழுக்கின்றன. நீர்மட்டம் (Water Table) குறைகிறது. இதனால் கடல் நீர் ஊடுருவல் இன்னும் அதிகமாகிறது. IWMI இன் கவலை: “நிரப்புவதை விட இழுப்பது அதிகம். மழை பெய்தாலும் நிலத்தடி நீரை நிரப்பும் வேகத்தை விட எடுக்கும் வேகம் அதிகமாக உள்ளது.”
4. கட்டுப்பாடற்ற மணல் மற்றும் சுண்ணாம்புச் சுரங்கம் — நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் இயற்கை மேல் அடுக்குகளை சுண்ணாம்புச் சுரங்கம் நீக்குகிறது. மழைநீர் நேரடியாக மண்ணில் இறங்காமல் ஓடிப்போகிறது. IWMI குறிப்பிடுகிறது: “Unregulated sand and limestone mining has removed crucial protective layers.”
———————————-
“ஒரு பகுதியில் எண்ணெய் மாசு, மற்றொரு பகுதியில் உப்பு, மூன்றாவது பகுதியில் நைட்ரேட் — யாழ்ப்பாணம் ஒரே நேரத்தில் மூன்று நெருக்கடியைச் சந்திக்கிறது.” — IWMI, 2024
———————————-
♀I. தண்ணீர் தேடும் பெண் — நேரம் திருடப்படுகிறது
யாழ்ப்பாணத்தின் கிணற்று நீர் பயன்பாட்டுக்கு தகுதியற்றுப் போன சூழலில், பொதுக் குழாய்கள், விலை கொடுத்து வாங்கும் நீர் மற்றும் தொலைதூர இடங்கள் போன்ற மாற்று ஆதாரங்களையே மக்கள் நாடுகின்றனர். இந்த மூன்று வழிகளிலும் உழைப்பு யாருடையது? பெரும்பாலும் பெண்களுடையது.
UNESCO (2026) உலகளவிய தரவு காட்டுகிறது: தண்ணீர் சேகரிப்பின் சுமை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது விழுகிறது. இது ‘Time Poverty’ என்று அழைக்கப்படுகிறது — ‘நேர வறுமை’. தண்ணீருக்காக ஒவ்வொரு நாளும் இவர்கள் செலவிடும் காலமானது அவர்களின் வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் ஓய்வு நேரத்தைப் பறிக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 46,000 போர் விதவைகள் (Centre for Women’s Development, Jaffna) வாழ்கிறார்கள் — இவர்களுக்குத் தண்ணீர்ச் சுமையை பகிர்ந்துகொள்ள குடும்பத்தில் யாரும் இல்லை.
கார்த்திகா போன்ற பெண்கள் தண்ணீருக்காகப் பணம் செலவழிக்கிறார்கள். இது வருமானத்திலிருந்து பெரும் பகுதியை எடுக்கிறது. நல்லூர் போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் கூட இந்த நிலை உள்ளது. கிராமப்புறப் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.
III. உடல் நலம் — மறைக்கப்படும் அபாயங்கள்
மாசடைந்த நிலத்தடி நீரைக் குடிப்பதால் என்ன நடக்கிறது? மக்கள் நேரடியாக விளைவுகளை உணர்கிறார்கள் — ஆனால் நீர் மாசுக்கும் நோய்க்கும் இடையிலான தொடர்பை அரசு சரியாக ஆவணப்படுத்தவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடு.
நைட்ரேட் ஆபத்துகள்: அதிக நைட்ரேட் நீரால் ‘Blue Baby Syndrome’ (Methemoglobinemia) உண்டாகலாம் — குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போகும் நிலை. கர்ப்பிணிப் பெண்களுக்கு நைட்ரேட் மிகவும் ஆபத்தானது. நீண்டகாலமாக நைட்ரேட் நீரைக் குடிப்பவர்களுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படலாம் என்று WHO எச்சரிக்கிறது.
எண்ணெய் மாசு ஆபத்துகள்: நீரில் கரையும் கழிவு எண்ணெய் ‘Aromatic Hydrocarbons’ (BTEX) புற்றுநோயை உண்டாக்கலாம் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தோல் நோய், வாந்தி, தலைவலி போன்றவை குறுகிய கால விளைவுகளும் ஏற்படலாம். சுன்னாகம் பகுதி மக்களில் இந்த அறிகுறிகள் காணப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆவணங்கள் குறிப்பிடுகின்றன — ஆனால் தேசிய அளவில் ஆய்வு நடத்தப்படவில்லை.
உப்புநீரின் விளைவுகள்: அதிக உப்பு நீரைக் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படலாம். விவசாயத்தில் உப்பு நீரைப் பயன்படுத்தினால் மண் வளம் குறையும், பயிர் வளர்ச்சி தடைப்படும். இதனால் உணவுப் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது.
♀II. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் — மறைக்கப்பட்ட பலி
கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஆறு மாதத்திற்குக் கீழான குழந்தைகளுக்கும் நைட்ரேட் மாசடைந்த நீர் மிக அதிகமாக ஆபத்தானது. WHO தெளிவாகக் கூறுகிறது: 10 mg/l க்கும் அதிகமான நைட்ரேட் நீர் இவர்களுக்கு மிக ஆபத்தானது. ஆனால் யாழ்ப்பாணத்தில் கர்ப்பிணிப் பெண்கள் பலர் இந்த நீரைக் குடிக்கிறார்கள் — மாற்று வழி இல்லாமல்.
பங்களாதேஷ் போன்ற கடலோர நாடுகளில் உப்புநீர் ஊடுருவல் பெண்களுக்கு பிரசவச் சிக்கல்கள், மாதவிடாய்ப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதை ஆய்வுகள் (PMC, 2024) காட்டுகின்றன. யாழ்ப்பாணத்திலும் இதே நிலை இருக்கலாம் — ஆனால் ஆவணங்கள் இல்லை. ஏனென்றால் யாரும் ஆய்வு செய்யவில்லை.
இந்தத் தண்ணீர் நெருக்கடியானது பாலூட்டும் தாய்மார்கள் மத்தியிலும் கவலைக்குரிய வினாக்களைத் தோற்றுவிக்கிறது. தாய் அருந்தும் தண்ணீர் குழந்தைகளுக்கு ஆதாரமாக அமையும் நிலையில், அத்தண்ணீர் மாசடைவது அக்குழந்தைகளுக்கும் நேரடியான பாதிப்புகளைக் கொண்டுவரும். இந்தத் தொடர்ச்சியான ஆபத்தை யாழ்ப்பாண மகப்பேறு மருத்துவத் தரவுகள் ஆவணப்படுத்தவில்லை என்பது கடுமையான இடைவெளி.
IV. சட்டம் என்ன சொல்கிறது? அரசு என்ன செய்கிறது?
யாழ்ப்பாண நிலத்தடி நீர் நெருக்கடியைச் சட்டக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது பல கேள்விகள் எழுகின்றன.
National Environmental Act (NEA) பிரிவு 23A: இச்சட்டம் நிறுவனங்கள் நச்சுக் கழிவுகளை நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்கிறது. CEBஇன் மின்நிலையம் ஆண்டுக்கணக்கில் இந்த விதியை மீறியது. யார் பொறுப்புக்கூறினார்கள்? யாரும் இல்லை. NEAஇன் Central Environment Authority (CEA) அமலாக்கத்தில் எந்த நடவடிக்கையும் பொதுவில் அறியப்படவில்லை.
EIA கடமை — பின்பற்றப்பட்டதா? 2008இல் மின் நிலையம் நிறுவும்போது சூழல் தாக்க மதிப்பீடு (EIA) செய்யப்பட்டதா என்பது முக்கிய கேள்வி. NEA பிரிவு 23Zஇன் கீழ் குறிப்பிட்ட திட்டங்களுக்கு EIA கட்டாயமானது. ஆனால் போர்க் காலத்தில் வடக்கில் இந்தச் சட்ட நடைமுறைகள் எவ்வளவு பின்பற்றப்பட்டன என்பது கேள்விக்குரியது.
‘Bulankulama’ வழக்கின் பாடம்: ‘Bulankulama & Others v. Secretary, Ministry of Industrial Development (2000)’ வழக்கில் இலங்கை உச்சநீதிமன்றம் EIAஇன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. “நம்பகமான சூழல் தகவல் இல்லாமல் மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது” என்று தீர்ப்புக் கூறியது. இந்தக் கோட்பாடு சுன்னாகம் வழக்கிற்கும் பொருந்தும் — ஆனால் யாரும் நீதிமன்றம் சென்றதாகத் தெரியவில்லை.
Water Resources Board Act — செயலற்ற நிலை: Water Resources Board Act நிலத்தடி நீரை ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பை கோட்பாட்டளவில் உருவாக்குகிறது. ஆனால் IWMI (2024) வலியுறுத்துகிறது: “Over-extraction for agriculture and daily consumption, coupled with minimal regulatory oversight, has allowed unsustainable practices to flourish.” ஒழுங்குமுறைக் கட்டமைப்பு இருக்கிறது — அமலாக்கம் இல்லை.
அரச நிதி ஒதுக்கீட்டில் வடக்கு-கிழக்கிற்கான ஏற்றத்தாழ்வை ‘Mongabay’ (2025) இன் தரவு வெளிப்படுத்துகிறது: யாழ்ப்பாண மாவட்டப் பேரிடர் மேலாண்மைப் பிரிவு 2024இல் 129 மில்லியன் ரூபாய் கோரியது — கிடைத்தது வெறும் 8 மில்லியன். 2025இல் 325 மில்லியன் கோரியது — இன்னும் கிடைக்கவில்லை. மருதங்கேணிப் பிரிவில் கடலோர அரிப்பு நடக்கும்போது “செய்யக்கூடியது மணல் மூட்டையை வைப்பது மட்டுமே” என்று அப்பிரிவின் உதவி இயக்குநர் சூரியராஜா ‘Mongabay’ ஊடகத்திடம் கூறினார்.
———————————-
“பொருளாதார வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுத்தது சூழல் பாதுகாப்பை பின்னுக்குத் தள்ளியது.” — வட மாகாண தலைமைச் செயலர் இளங்கோவன், IWMI கூட்டம், அக்டோபர் 2024
———————————-
V. தீர்வுகள் — நம்பிக்கையும் சவால்களும்
அக்டோபர் 2024இல் IWMI ஒரு முக்கியமான நடவடிக்கை எடுத்தது. வட மாகாண தலைமைச் செயலர், பல்கலைக்கழகம், நீர்ப்பாசனத் திணைக்களம், NWS & DB, Water Resources Board, விவசாயத் திணைக்களம் ஆகியவற்றைக் கூட்டி ஒரு பங்குதாரர் கூட்டம் (Stakeholder Forum) நடத்தியது. நிலத்தடி நீர் ஆளுமையில் உள்ளூர்க் குரல்களைச் சேர்க்க ‘Multi-stakeholder Platform’ உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இது நல்ல தொடக்கம்.
NWS & DB, இரணைமடுத் தேக்கத்திலிருந்து (கிளிநொச்சி) யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு குழாய் இணைப்பைத் திட்டமிட்டுள்ளது. ADB மற்றும் French Development Agency நிதியுடன் மொத்தம் 18,329 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் வட மாகாண நீர் மற்றும் சுகாதார திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 3,00,000 பேருக்கு குழாய் நீரைக் கொண்டுசேர்க்கும் திட்டம் இது. ஆனால் இன்னும் முழுமை பெறவில்லை.
IWMI பரிந்துரைக்கும் தீர்வுகள்: (1) மழைநீர் சேகரிப்பை மேம்படுத்தல், (2) நீர் மட்டத்தைக் கண்காணிக்கும் ‘Wells’ நிறுவல், (3) உரப் பயன்பாட்டு விதிமுறையைக் கட்டாயமாக்கல், (4) தொண்டைமானாறு, அரியாலை தடுப்பணைகளைச் (Salt Water Barrages) சரி செய்தல், (5) யாழ்ப்பாண மக்களை நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் பயிற்றுவித்தல்.
♀III. சட்டமும் கொள்கையும் —பெண்களுக்காகச் செய்வதென்ன?
சர்வதேசக் சட்ட கட்டமைப்பில் பெண்களுக்கான நீர் உரிமை தெளிவாக இருக்கிறது. CEDAW Article 14(2)(h) கிராமப்புறப் பெண்களுக்கு ‘சுத்தமான குடிநீர் அணுகல்’ என்பதை ஓர் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. SDG 6 (சுத்தமான நீர் மற்றும் சுகாதாரம்) மற்றும் SDG 5 (பாலினச் சமத்துவம்) இணைந்து இயங்க வேண்டும் என்று ‘UN’ கோருகிறது.
ஆனால் இலங்கை நடைமுறையில் இந்த இரண்டும் பின்தங்கியிருக்கின்றன என்று ‘UNDP’ (2023) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ‘Policy Implications of the Gender, Inclusion and Climate Change Nexus’ என்ற ஆய்வு — இலங்கையின் நீர்க் கொள்கைகள் பாலினக் கண்ணோட்டத்தோடு உருவாக்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறது. யாழ்ப்பாண நீர் ஆளுமைக் குழுக்களில், பிரதேச செயலகக் கூட்டங்களில் பெண்கள் பங்கேற்பு எவ்வளவு? அது பற்றிய தரவு இல்லை.
GGGIஇன் 2024 Gender and Social Action Plan for Sri Lanka NAP (2025-2034) ஒரு முக்கியமான அடியை எடுத்து வைக்கிறது. ஆனால் அது “Gender and social inclusion was not incorporated into the first iteration of Sri Lanka’s National Adaptation Plan (NAP) 2016-2025” என்று நேர்மையாக ஒப்புக்கொள்கிறது. அதாவது, இலங்கையின் கடந்த பத்து ஆண்டுகளின் காலநிலைத் திட்டங்களில் பெண்கள் கண்ணுக்கே தெரியவில்லை.
IWMIஇன் ‘2024 Multi-stakeholder Platform’ இல் பெண்கள் எத்தனை பேர் பங்குபற்றினார்கள் என்பதற்கான ஆவணம் இல்லை. நீர் நிர்வாகத்தில் பெண்களின் குரல் சேர்க்கப்படும் போது மட்டுமே அவர்களுக்கான தீர்வுகள் உண்மையாக வேரூன்றும். ‘Local voices into decision-making’ என்று சொல்லும்போது, அந்த உள்ளூர்க் குரல்களில் பெண்கள் குரல் சேரவேண்டும் — இல்லையென்றால் பாதிக் குரல் மட்டுமே.
VI. நிறைவு — தாகம் மட்டுமல்ல, நீதியும்
யாழ்ப்பாண நிலத்தடி நீர் நெருக்கடி ஒரு தொழில்நுட்பச் சிக்கல் மட்டுமல்ல என்பது இப்போது தெளிவாகிறது. இது அடுக்கடுக்கான தோல்விகளின் கூட்டு விளைவு:
CEBஇன் 36 மெகாவாட் மின்நிலையம் கழிவைக் கொட்டியது — யாரும் பொறுப்பேற்கவில்லை. நைட்ரேட் அளவு WHOஇன் தரத்தை மீறுகிறது — அதற்கான கண்காணிப்பு போதுமானதல்ல. உப்புநீர் ஊடுருவுகிறது — அணைகள் பராமரிக்கப்படவில்லை. NEA இருக்கிறது — அமலாக்கம் இல்லை. EIA கோட்பாடு இருக்கிறது — வடக்கில் பின்பற்றப்படவில்லை. நிதிக் கோரிக்கை வருகிறது — ஒதுக்கீடு வருவதில்லை.
இந்த நெருக்கடியின் முன்வரிசையில் பாதிக்கப்படுவோர் யார்? கார்த்திகா போன்ற பெண்கள். தண்ணீர் வாங்கப் பணம் செலவழிக்கும் பெண்கள். குழந்தைகளுக்காக மாசடைந்த நீரைக் குடிக்க வேண்டும் என்று தவிக்கும் தாய்மார்கள். போர் விதவைகள் — தினமும் தனியாக தண்ணீர் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.
தீர்வு ஒன்று மட்டுமல்ல. குழாய் இணைப்பு அவசியம் — ஆனால் அதுவே போதாது. NEA அமலாக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும். CEB போன்ற நிறுவனங்கள் சூழல் சேதத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும். நீர் ஆளுமைத் திட்டங்களில் வடக்கு பெண்கள் — குறிப்பாக போர் விதவைகள் — பங்கேற்புக் கட்டாயமாக்கப்பட வேண்டும். CEDAW, SDG 5, SDG 6 ஆகியவை கட்டாய நடைமுறைக் கடமைகளாக மாறவேண்டும்.
யாழ்ப்பாணத்தில் தண்ணீர் வரும் நாள் வரும் — ஆனால் அது யாரால், யாருக்காக, யாரோடு திட்டமிடப்படும் என்பதே அரசியல் கேள்வி. குழாய் வந்தால் மட்டும் போதாது. நீதி வேண்டும். நீதியுடன் நீர் வந்தால் மட்டுமே தாகம் தீரும்.
ஆதார மூலங்கள்
1. Suntha, S. (2018). ‘Oil spills contamination of Ground water in Chunnakam Aquifer, Jaffna, Sri Lanka.’ Open Water Journal, Vol. 5, Iss. 2, Article 3. BYU ScholarsArchive. doi: scholarsarchive.byu.edu/openwater/vol5/iss2/3
2. Thulasitha, W. & Premachandra, N.P. (2016). ‘Study of Oil Contamination in Chunnakam Area due to the Wastage from Power Station.’ University of Wayamba Repository. erepo.lib.uwu.ac.lk
3. IWMI (2024). ‘Jaffna’s groundwater crisis requires a collaborative pathway to sustainable water management.’ International Water Management Institute, October–November 2024. iwmi.org
4. Mikunthan, T. et al. (2014). ‘Assessment of nitrate-N contamination in the Chunnakam aquifer system, Jaffna Peninsula, Sri Lanka.’ PMC4059853. PubMed Central.
5. Uthayashangar, S. & Nanthakumaran, A. (2019). ‘Status of the saltwater intrusion in Jaffna, Sri Lanka.’ Ceylon Journal of Science, 48(3). doi: 10.4038/cjs.v48i3.7647
6. Gopalakrishnan, T., Kumar, L. & Mikunthan, T. (2020). ‘Assessment of spatial and temporal trend of groundwater salinity in Jaffna Peninsula and its link to Paddy land abandonment.’ Sustainability, 12(9), 3681. MDPI.
7. Sahana David Menon (2025). ‘Sri Lanka communities left gasping for climate mitigation support.’ Mongabay, March 19, 2025. news.mongabay.com
8. UNDP (2023). ‘Policy Implications of the Gender, Inclusion and Climate Change Nexus: Experiences from Sri Lanka.’ UN iLibrary. un-ilibrary.org
9. GGGI (2024). ‘Development of the Gender and Social Action Plan for Sri Lanka.’ GGGI, Ministry of Environment, Climate Change Secretariat. March 2024, Colombo. gggi.org
10. Bulankulama & Others v. Secretary, Ministry of Industrial Development & Others (2000). Supreme Court of Sri Lanka, S.C. Application No. 884/99. இலங்கை சுற்றுச்சூழல் சட்ட வழக்கு.
11. IWMI Water Data Portal (2024). Jaffna Water Quality Mapping. waterdata.iwmi.org
12. DBS Jeyaraj (2013). ‘Jaffna-Kilinochchi Water Supply and Sanitation Project.’ dbsjeyaraj.com — ADB/French Development Agency திட்ட விவரங்கள்.



