லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி - கச்சாய்
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
11 நிமிட வாசிப்பு

லெயுசிக்காமின் நிலப்படத் தொகுப்பில் தென்மராட்சி – கச்சாய்

July 2, 2026 | Ezhuna

இலங்கையில், குடியேற்றவாத காலத்திலிருந்துதான் நிலப்படங்களும் வரைபடங்களும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்தவை இலகுவாகக் கிடைக்கின்றன. எழுத்துமூல ஆவணங்கள், புழங்கு பொருட்கள், ஓவியங்கள், தொல்லியற் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இவற்றைப்போன்ற இன்னோரன்ன பழைய நிலப்படங்கள், வரைபடங்கள் வரலாற்றுத் தகவல்கள் என்பனவும் இங்கு பொதிந்துள்ளன. குறிப்பாக யாழ்ப்பாணப் பிரதேசத்தைச் சேர்ந்த நிலப்படங்களும் வரைபடங்களும் இவற்றுள் அடங்கும். எனினும், யாழ்ப்பாணப் பிரதேசத்தின் வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இவற்றைப் பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. வரலாற்றுத் தகவல்களை வழங்குவதில் குடியேற்றவாதக் கால நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகவும், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுத் தகவல்களை நிலப்படங்கள் வரைபடங்களிலிருந்து விளக்குவதாகவும், நிலப்படங்களினதும் வரைபடங்களினதும் தகவல் உள்ளடக்கங்கள் குறித்து ஆராய்வதாகவும் ‘யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடியேற்றவாதக் காலத்து வரலாற்றுத் தகவல் மூலங்களாக நிலப்படங்களும் வரைபடங்களும்’ என்ற இத்தொடர் அமையவுள்ளது.

லெயுசிக்காமின் தென்மராட்சிப் பிரிவைக் காட்டும் நிலப்படத்தில் உள்ள வரணிக் கோவிற்பற்றுத் தொடர்பாகக் காணப்படும் தகவல்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளையும் சென்ற கட்டுரையில் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் அதே பிரிவில் உள்ள கச்சாய்க் கோவிற்பற்றுத் தொடர்பாகக் குறித்த நிலப்படத்திலுள்ள தகவல்களைப் பார்க்கலாம். 

நிலப்படத்தின்படி கச்சாய்க் கோவிற்பற்றில் கச்சாய், பாலாவி, கெற்பெலி, உசன், சாண்டான்போக்கட்டி, கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, அல்லாரை ஆகிய எட்டுத் துணைப் பிரிவுகள் உள்ளன (படம்-1).

படம் 1: லெயுசிக்காமின் தென்மராட்சியைக் காட்டும் நிலப்படத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கச்சாய்க் கோவிற்பற்றுப் பகுதி.

எல்லைகள்

லெயுசிக்காமின் நிலப்படத்தின்படி கச்சாய்க் கோவிற்பற்றின் வடக்கில் வரணிக் கோவிற்பற்றும்; மேற்கில் வரணி, சாவகச்சேரி ஆகிய கோவிற்பற்றுகளும்; கிழக்கில் எழுதுமட்டுவாழும்; தெற்கில் கடல்நீரேரியும் எல்லைகளாக உள்ளன (படம்-2). கோவிற்பற்றின் வடக்கு எல்லையை அண்டிக் கொடிகாமம் துணைப் பிரிவு உள்ளது. அதற்கு நேர்தெற்கில் சாண்டான்போக்கட்டி துணைப்பிரிவு அமைந்துள்ளது. சாண்டான்போக்கட்டிக்குக் கிழக்கே வரணிக் கோவிற்பற்றின் கிழக்கு எல்லையோரமாக உசன் துணைப்பிரிவு காணப்படுகிறது. கடல்நீரேரியுடனான எல்லையை அண்டி மேற்கிலிருந்து கிழக்காக அல்லாரை, கச்சாய், பாலாவி, கெற்பெலி ஆகிய நான்கு துணைப் பிரிவுகள் வரிசையாக அமைந்துள்ளன. வெள்ளாம்போக்கட்டித் துணைப்பிரிவு அல்லாரைக்கும் கச்சாய்க்கும் இடையே நாற்புறமும் அவற்றால் சூழப்பட்டபடி இருக்கின்றது.

நிலப்படத்திலுள்ள அல்லாரை, வெள்ளாம்போக்கட்டி, கச்சாய், பாலாவி ஆகிய துணைப் பிரிவுகளின் எல்லைகளும் அமைவிடங்களும் அதே பெயர்களைக் கொண்ட இன்றைய கிராம அலுவலர் பிரிவுகளுடன் பெருமளவுக்குப் பொருந்துகின்றன. கெற்பெலித் துணைப் பிரிவுக்குள் இன்று கெற்பெலி, விடத்தற்பழை ஆகிய இரண்டு கிராம அலுவலர் பிரிவுகளின் பகுதிகள் உள்ளன. நிலப்படத்தில் கெற்பெலித் துணைப் பிரிவின் கிழக்கு எல்லைக்கும் தென்மராட்சியின் கிழக்கிற்கும் இடையில் எழுதுமட்டுவாழ் கோவிற்பற்றின் ஒரு பகுதி உள்ளது. ஆனால், இன்றைய கெற்பெலி, விடத்தற்பழை ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் கிழக்கே தென்மராட்சிப் பிரிவின் எல்லைவரை செல்கின்றன. உசன் துணைப் பிரிவினதும் இன்றைய உசன் கிராம அலுவலர் பிரிவினதும் அமைவிடங்கள் பொருந்தினாலும் அவற்றின் வடிவங்களில் மாறுபாடுகள் காணப்படுகின்றன. நிலப்படத்திலுள்ள துணைப் பிரிவொன்றுக்கு வழங்கும் சாண்டான்போக்கட்டி என்ற பெயரில் இன்று நிர்வாகப் பிரிவு எதுவும் இல்லை. இன்றைய கொடிகாமம் தெற்குக் கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள பகுதிகள் முன்னர் சாண்டான்போக்கட்டித் துணைப் பிரிவுக்குள் அடங்கி இருந்திருக்கக்கூடும். முன்னைய கொடிகாமம் துணைப் பிரிவுக்குள்ளேயே இன்றைய கொடிகாமம் வடக்கு, கொடிகாமம் மத்தி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் அடங்குகின்றன எனலாம். 

படம் 2: லெயுசிக்காமின் தென்மராட்சியைக் காட்டும் நிலப்படத்தைத் தழுவி வரையப்பட்ட கச்சாய்க் கோவிற்பற்றின் படம்.

ஒல்லாந்தர்காலக் கச்சாய்க் கோவிற்பற்றுக்குள் அடங்கிய பகுதிகள் இன்றைய சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குள் அடங்குகின்றன. அதேவேளை, உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் இப்பகுதிகள் சாவகச்சேரி பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ளன.

வீதிகள்

சாவகச்சேரியிலிருந்து வரும் வீதி, சாவகச்சேரி, கச்சாய் ஆகிய கோவிற்பற்றுகளுக்கு இடையிலான எல்லையூடாகக் கச்சாய்க் கோவிற்பற்றுத் தேவாலயத்தை அடைகிறது. இது ஏறத்தாழ இன்றைய சாவகச்சேரி – கச்சாய் வீதித் தடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து மூன்று வீதிகள் செல்வதை நிலப்படத்தில் காண முடிகிறது. ஒரு வீதி தெற்கு நோக்கி கெற்பெலிக் கரையோரத்திலுள்ள அயில் துறை என்னும் இடம்வரை சென்று முடிகிறது. இது இன்றைய புலோலி – கொடிகாமம் – கச்சாய் வீதியின் தெற்கு முனையை அண்டிய பகுதியோடு பொருந்துகிறது. இன்னொரு வீதி நீரேரிக் கரைக்குச் சமாந்தரமாகச் சென்று எழுதுமட்டுவாழ் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. இது தற்காலத்து கச்சாய் – பச்சிலைப்பள்ளி வீதியின் ஒரு பகுதியோடு பொருந்துகிறது. தேவாலயத்திலிருந்து மேற்குத் திசை நோக்கிச் செல்லும் இன்னொரு வீதி எழுதுமட்டுவாழ் கோவிற்பற்றுக்குள் நுழைகிறது. தற்காலத்து வீதி எதுவும் மேற்படி வீதியுடன் பொருந்துவதாகத் தெரியவில்லை. சாவகச்சேரியிலிருந்து வரணிக் கோவிற்பற்றினூடாக வரும் ஒரு வீதி கொடிகாமம் துணைப்பிரிவை மேற்கு – கிழக்காக ஊடறுத்து எழுதுமட்டுவாழ் கோவிற்பற்றுக்குள் செல்கிறது. இதை, கொடிகாமத்தை அண்டிய பகுதியில் இன்றைய கண்டி வீதியுடன் பொருத்திப் பார்க்க முடிகிறது.

கட்டடங்கள்

வழமை போல, கச்சாய்க் கோவிற்பற்றிலும் கிறித்தவ தேவாலயத்தையும் தேவாலய இல்லத்தையும் நிலப்படத்தில் முக்கியத்துவம் கொடுத்துக் குறித்துள்ளனர். இவற்றைத் தவிர யானைப்பந்தி ஒன்றையும் மூன்று கரையோர மடங்களையும் நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. 

தேவாலயமும் தேவாலய இல்லமும்

கச்சாய்த் தேவாலயமும் அதோடிணைந்த இல்லமும் மண்ணாலான சுவர்களையும் ஓலையால் வேயப்பட்ட கூரைகளையும் கொண்டவை என போல்டேயஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.1 இதைத் தவிர, மேற்படி கட்டடங்கள் தொடர்பாக வேறு விவரங்கள் எதையும் அவர் தரவில்லை. அவரது நூலிலுள்ள படமும் இவ்விரு கட்டடங்களையும் நூலில் விவரித்தவாறே ஓலைக் கூரையுடன் கூடிய மண் கட்டடங்களாகவே காட்டுகிறது2 (படம்-3). ஏற்கெனவே இக்கட்டுரைத் தொடரின் வேறிடங்களில் குறிப்பிட்டது போல் மேலுள்ள தகவல்கள் 1665 ஆம் ஆண்டுக்கு முற்பட்டவை. இதற்குப் பின்னும் 130 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டுள்ளனர். அந்தக் காலப் பகுதியில் இத்தேவாலயத்தையும் இல்லத்தையும் நிரந்தரக் கட்டடங்களாக மேம்படுத்தினரா என்பது தெரியவில்லை.

லெயுசிக்காமின் நிலப்படம் தேவாலயத்தையும் இல்லத்தையும் கச்சாய்க் கோவிற்பற்றின் பாலாவித் துணைப்பிரிவுக்குள் காட்டுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும்பாலான கோவிற்பற்றுத் தேவாலயங்கள் அக்கோவிற்பற்றின் பெயர் கொண்ட துணைப்பிரிவுகளிலேயே அமைந்துள்ளன. ஆனால், இங்கே அது வேறு துணைப்பிரிவில் அமைந்துள்ளது. நிலப்படம், தேவாலயத்தையும் அதோடிணைந்த இல்லத்தையும் நான்கு வீதிகள் சந்திக்கும் இடத்தில் குறித்துக் காட்டுகிறது. நிலப்படத்தின்படி இக்கட்டடங்களின் அமைவிடம் இன்றைய சாவகச்சேரி – கச்சாய் வீதியை அண்டியே அமைந்திருந்தது என்பது தெளிவாகவே உள்ளது. 

 படம் 3: போல்டேயஸ் பாதிரியாரின் நூலில் உள்ள கச்சாய்த் தேவாலயத்தினதும் தேவாலய இல்லத்தினதும் படம்.

யானைப்பந்தி

கச்சாய்க் கோவிற்பற்றுக்குள்ளும் நிலப்படம் ஒரு யானைப் பந்தியைக் குறித்துக் காட்டுகிறது. இது உசன் துணைப்பிரிவுக்குள் அமைந்துள்ளது. நிலப்படத்தில் கச்சாய்த் தேவாலயச் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழுக்குச் செல்லும் வீதிக்கு அருகே இதைக் குறித்துள்ளனர். இந்த வீதியைத் தற்கால வீதி எதனுடனும் பொருத்திப் பார்க்க முடியவில்லை என ஏற்கெனவே குறிப்பிட்டோம். அதனால், இந்தத் தகவலை வைத்து யானைப் பந்தியின் அமைவிடத்தைக் கண்டறிவது கடினம்.  

யானைப்பந்திக்குத் தெற்கே அதற்குச் சற்றுத் தொலைவில் கெற்பெலித் துணைப்பிரிவுக்குள் குஞ்சிப் பணிக்கன் துரவு, புதுப் பணிக்கன் துரவு என்னும் இரண்டு துரவுகளை நிலப்படத்தில் காணமுடிகிறது. பணிக்கன் என்பதற்கு யானைப்பாகன் என்ற பொருளும் உண்டு. “குஞ்சிப் பணிக்கன்” என்பது “கும்கிப் பணிக்கன்” என்பதன் திரிபாக இருக்கலாம். “கும்கி” என்பது காட்டு யானைகளைப் பிடிப்பதற்குப் பழக்கப்படுத்திய யானைகளைக் குறிக்கும். இவ்வாறான யானைகளைப் பழக்குபவர்களைக் கும்கிப் பணிக்கன் என அழைத்திருக்கலாம். எனவே, இந்தத் துரவுப் பெயர்கள் மேற்படி யானைப் பந்தியில் பணியாற்றும் பாகர்களுடன் தொடர்புடையவையாக இருக்கக்கூடும்.

துறைகளும் மடங்களும்

கச்சாய்க் கோவிற்பற்றின் தெற்குக் கரையோரமாக நான்கு துறைகளை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. “பழைய கச்சாய்த் துறை” என்னும் துறை பாலாவித் துணைப் பிரிவில் கச்சாயுடனான எல்லைக்கு அருகில் காணப்படுகின்றது. ஏனைய மூன்று துறைகளும் கெற்பெலித் துணைப்பிரிவுக்குள் உள்ளன. இவை அயில் துறை, குருனடித் துறை, வெயிலடித் துறை என்பன. இவை அனைத்துக்கும் அருகே வழக்கம் போலவே மடம் போன்ற குறியீடுகள் உள்ளன. பல இடங்களில் துறைகளுக்கு அருகே இவ்வாறான மடங்கள் இருப்பது குறித்தும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் ஏற்கெனவே விளக்கினோம்.

கச்சாயில் மிகவும் பழமை வாய்ந்த துறைமுகம் இருந்ததாகக் கருதப்படுகிறது. கிறித்துவுக்குப் பிற்பட்ட தொடக்க நூற்றாண்டுகளிலேயே கச்சாய்த் துறைமுகத்திற்கு இலங்கையில் வன்னிப் பகுதியுடனும் இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா முதலிய பகுதிகளுடனும் அவற்றுக்கும் அப்பால் யாவா, உரோம் முதலிய நாடுகளுடனும் கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளும் வணிக நடவடிக்கைகளும் இடம்பெற்றதாகச் சொல்லப்படுகிறது. இவற்றுக்குச் சான்றாக இப்பகுதியில் உரோம நாணயங்கள் உள்ளிட்ட பல நாணயங்களும் மட்பாண்ட ஓடுகள் முதலிய தொல்பொருட்களும் கிடைத்துள்ளன.3 யாழ்ப்பாண இராச்சியக் காலத்தில் வன்னியிலிருந்து யானைகளைக் கச்சாய்த் துறைமுகத்தினூடாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குக் கொண்டுவந்ததாகச் சொல்லப்படுகின்றது. அவசர காலத்தில் யாழ்ப்பாண அரசுக்கு உதவியாகத் தென்னிந்தியாவில் இருந்துவந்த படைகள் இத்துறைமுகத்தைப் பயன்படுத்தியதாகவும் கருத்து உண்டு.4 லெயுசிக்காமின் நிலப்படத்தில் பழைய கச்சாய்த்துறை என்று குறிப்பிட்டிருப்பது இந்தத் துறையாக இருக்க வாய்ப்புண்டு. இவ்விடம் இப்போது ஒரு மீன்பிடித் துறையாக உள்ளது. இத்துறையை அண்டிய பகுதியில் சதுரவடிவான பழைய கிணறு ஒன்று காணப்படுவதாகவும் கலங்கரைவிளக்கம், வாடிவீடு, பிற கட்டடங்கள் முன்பு இருந்து பின்னர் அழிந்துவிட்டதாகவும் தெரிகிறது.5 இவை குடியேற்றவாதக் காலத்துக்கு உரியவையாக இருக்கலாம்.

குளங்கள்

கச்சாய்க் கோவிற்பற்றுக்குள் 48 குளங்களை நிலப்படம் குறித்துக் காட்டுகிறது. அல்லாரைத் துணைப் பிரிவுக்குள் அடம்பன், பாண்டியன் குளம், அடம்பன், வேலன் துரவு, சோனன் துரவு ஆகிய ஐந்து நீர்நிலைகள் உள்ளன. வெள்ளான்போக்கட்டித் துணைப் பிரிவுக்குள் இரண்டு குளங்களை மட்டுமே நிலப்படம் காட்டுகிறது. இவையும் குளம், துரவு ஆகிய பொதுப் பெயர்களாலேயே குறிக்கப்பட்டுள்ளன. கச்சாய்த் துணைப் பிரிவுக்குள் ஏழு குளங்களை நிலப்படம் காட்டுகின்றபோதும் தவசிக் குளம் என்ற ஒரு குளம் மட்டுமே சிறப்புப் பெயரால் குறிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஆறையும் பொதுப் பெயர்களாலேயே குறித்துள்ளனர். கொடிகாமம் துணைப் பிரிவில் நிலப்படம் காட்டும் எட்டு நீர்நிலைகளுள் முதலியா குளம், வேவில் குளம், வேவில் குளம், வேவில் குளம், தவசிக் குளம், தவசியா துரவு ஆகியவற்றுடன் குளம் என்னும் பொதுப் பெயரால் குறிக்கப்பட்ட இரண்டு நீர்நிலைகளும் உள்ளன. இங்கே மூன்று முறை வேவில் குளம் என்ற பெயர் உள்ளது. இது தவறாகக் குறிக்கப்பட்டதா அல்லது மூன்று குளங்களுக்கு ஒரே பெயர் புழங்கியதா என்பது தெரியவில்லை.

சாண்டான்போக்கட்டி என்னும் துணைப்பிரிவில் வெட்டுக் குளம் என்னும் குளமும் நான்கு துரவுகள், ஒரு கேணி, ஒரு குளம் என்பனவுமாக மொத்தம் ஏழு நீர்நிலைகளைக் காண முடிகிறது. உசன் துணைப் பிரிவுக்குள் ஐந்து குளங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று வெட்டுக் குளம். இன்னொரு பெயரை வாசிக்க முடியவில்லை. ஏனைய மூன்றில் இரண்டு குளங்களும் ஒரு கேணியும் உள்ளன. பாலாவித் துணைப் பிரிவில் அடங்கும் ஐந்து நீர்நிலைகளுமே பொதுப் பெயராலேயே குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு குளங்கள்; ஒன்று கேணி. கெற்பெலியில் பாடுக் கேணி, மடக்கல் துரவு, குஞ்சுப் பணிக்கன் துரவு, தச்சன் துரவு, புதுப் பணிக்கன் துரவு, வெட்டுத் துரவு, வெட்டுத் துரவு ஆகிய ஏழு நீர்நிலைகளுடன் குளம் என்ற பொதுப் பெயருடன் கூடிய ஒரு குளமும் பெயர் குறிக்காத ஒரு குளமும் காணப்படுகின்றன. இங்கும் வெட்டுத்துரவு என்ற பெயரில் இரண்டு குளங்கள் அருகருகே உள்ளன.

தற்காலப் பதிவுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது கச்சாய்க் கோவிற்பற்றுக்குள் லெயுசிக்காமின் நிலப்படம் காட்டும் குளங்களின் பெயர்களுள் மிகக் குறைவான பெயர்களே இன்றும் புழக்கத்தில் உள்ளதைக் காணமுடிகிறது.6 கொடிகாமம் துணைப்பிரிவில் உள்ள வேவில் குளம், தவசிக்குளம் ஆகிய இரு குளங்கள் தமது பெயர்களை இன்றுவரை தக்கவைத்துள்ளன. நிலப்படத்தில் அடம்பன் என்ற பெயருடன் இரண்டு குளங்களைக் குறித்துள்ளனர். தற்காலப் பதிவுகளில் காணப்படும் அடம்பிக் குளம் என்ற பெயர் மேற்படி இரண்டு குளங்களில் ஒன்றைக் குறிப்பதாக இருக்கக்கூடும். இதேபோல, கெற்பெலித் துணைப்பிரிவில் இருப்பதாக நிலப்படம் காட்டும் தச்சன் துரவு என்னும் நீர்நிலையும் தற்காலத்து தச்சன் தாழ் குளமும் ஒன்றா என்பதும் ஆய்வுக்குரியது.

அடிக்குறிப்புகள்

  1. Phillipus Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, trans. Pieter Brohier, The Ceylon Historical Journal, vol. VIII nos. 1-4 (July 1958-April 1959), 330.
  2. Baldaeus, “A True and Exact Description of the Great Island of Ceylon”, 336.
  3. வன்னியசிங்கம் கபிலன், “கச்சாய் வரலாறும் பண்பாடும்” (கொழும்பு: குமரன் புத்தக இல்லம், 2018), 26.
  4. கபிலன், “கச்சாய் வரலாறும் பண்பாடும்,” 27.
  5. கபிலன், “கச்சாய் வரலாறும் பண்பாடும்,” 26.
  6. தகவல்: விவசாய அபிவிருத்தித் திணைக்களம்.


About the Author

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன்

இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கச் சூழல் துறையில் விஞ்ஞான இளநிலைப் பட்டத்தையும் (B.Sc. (BE)) பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலையில் விஞ்ஞான முதுநிலைப் பட்டத்தையும் (M.SC. (Arch)) பெற்றார். அத்துடன் இலங்கைக் கட்டடக்கலைஞர் சங்கம் (AIA (SL)), பிரித்தானியக் கட்டடக் கலைஞர்களின் அரச சங்கம் (RIBA) ஆகியவற்றில் பட்டயம் பெற்ற உறுப்பினராவார்.

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கிய காலத்திலிருந்து அதன் முதற் பயனராகப் பங்களிப்புச் செய்து வருகின்றார். தமிழ் விக்கிப்பீடியாவில் 4500இற்கும் மேற்பட்ட கட்டுரைகளைத் தொடங்கியுள்ளதுடன், மேலும் பல ஆயிரம் கட்டுரைகளின் விரிவாக்கத்திலும் பங்களிப்புச் செய்துள்ளார்.

தமிழ் விக்கிப்பீடியாவில் இவரது பங்களிப்புக்காக கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2015 ஆம் ஆண்டின் வாழ்நாள் சாதனையாளருக்கான இயல்விருது பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழ் வழங்கும் நம்பிக்கை விருதுகளில் 2016 ஆம் ஆண்டுக்கான சிறந்த 10 மனிதர்களுள் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு விருதை பெற்றுள்ளார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்