19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
24 நிமிட வாசிப்பு

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் வர்க்க இனத்துவ உணர்வு நிலை – பகுதி 1

April 8, 2026 | Ezhuna

இலங்கையின் அரசியல் 1900 – 1981: பன்முகநோக்கு‘  என்னும் இத்தொடர் 1900 முதல் 1981 வரையான காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய பன்முக நோக்கிலான கோட்பாட்டு ஆய்வுகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாக அமையும். ஆங்கிலத்தில் பருவ இதழ்களிலும் (Journals) அச்சு ஊடகங்களிலும் வெளியான ஆய்வுக் கட்டுரைகளை தழுவியும் சுருக்கியும் தமிழில் எழுதப்பட்டவையாக இக் கட்டுரைகள் அமையவுள்ளன. இலங்கையின் அரசியல் குறித்த பன்முக நோக்கில் (Multi Disciplinary Approach) அமையும் அரசியல் விமர்சனமும் ஆய்வும் என்ற வகையில் அரசியல் கோட்பாடு, சட்டக் கோட்பாடு என்னும் இரண்டையும் இணைப்பனவான உயராய்வுகள் பல ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், வரலாறு, அரசியல் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு (Biography of Political personalities) என்னும் துறைகள் சார்ந்த உயராய்வுகளும் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இவ் ஆய்வுகளை தமிழுக்கு இரவல் பெற்றுக் கொண்டு வருதலும் உள்ளீர்த்துத் தன்வயமாக்கிக் கொள்ளுதலும் இன்றைய அவசியத் தேவையாகும். சி. அரசரத்தினம், ஏ.ஜே. வில்சன், குமாரி ஜெயவர்த்தன, ஜயதேவ உயன்கொட, றெஜி சிறீவர்த்தன, நிறா விக்கிரமசிங்க, ஜயம்பதி விக்கிரமரட்ண, லக்ஷ்மன் மாரசிங்க, சுமணசிறி லியனகே ஆகிய புலமையாளர்களின் கட்டுரைகள் இத்தொடரில் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இப் பட்டியல் பூரணமானதன்று. இன்னும் பலரைச் சேர்க்க வேண்டியுள்ளது. அவ்வப்போது வேறு பலரும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். 30 மாதங்கள் வரை நீட்சி பெறவுள்ள இத் தொடரில் 30 கட்டுரைகள் வரை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

 

ஆங்கில மூலம்: குமாரி ஜயவர்த்தன

குமாரி ஜயவர்த்தன அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ‘Class and Ethnic Consciousness in Sri Lanka in the Late 19th and Early 20th Centuries’ என்னும் கட்டுரையின் தலைப்பை மேலே உள்ளவாறு தமிழில் தந்துள்ளோம். இக்கட்டுரையில் குமாரி ஜெயவர்த்தன அவர்கள் இலங்கையில் வர்க்க உணர்வு (Class Consciousness), இனத்துவ உணர்வு (Ethnic Consciousness) ஆகிய இரண்டினதும் தோற்றம், வளர்ச்சி பற்றி விரிவாக ஆராய்கிறார். இலங்கையின் முதலாளித்துவ வர்க்கம், நகரத்தொழிலாளி வர்க்கம், கிராமப்புற வர்க்கங்கள் ஆகிய சமூகப் பிரிவினர்களிடம் இவ்வுணர்வுகள் வளர்ச்சியுற்றதை எடுத்துக்காட்டுகிறார். தமது ஆய்விற்கு அடிப்படையான வரலாற்றுப் பின்புலத்தை அவர் முதலில் விளக்குகிறார். வர்க்க, இனத்துவ உணர்வுகள் இனவாதமாக மாற்றம் பெற்றதை அவர் அடுத்து விளக்குகிறார். குமாரி ஜயவர்த்தன அவர்களின் சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரையில் உள்ளடங்கியுள்ள கருத்துகளை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்குடன் இத்தமிழ்க் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் காலனி நாடான இலங்கை ஒரு முன்னேற்றமான ‘மாதிரிக் காலனி’ (Model Crown Colony) எனவும், பிரித்தானியாவின் ‘அரசரின்’ (Crown) ஆட்சியில் அக்காலனி ‘அமைதிப்பூங்கா’ ஆகவும், வளம் கொழிக்கும் தேசமாகவும் விளங்கியதாகவும் வரலாற்றாசிரியர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் தோட்ட முதலாளித்துவம் (Plantation Capitalism) செல்வச் செழிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இலங்கையில் கிளர்ச்சிகள், இராஜ துரோக நடவடிக்கைகள், வன்முறைக் கலகங்கள் என எதுவும் நிகழவில்லை என்றும் இவ்வரலாற்றாசிரியர்கள் அந்நிய ஆட்சியின் ‘நன்மைகளைப்’ (Benefits) புனைந்துரைக்கும் கருத்தாடல்களை முன்வைத்துள்ளனர். ஆனால், இலங்கையின் உண்மை நிலை வேறானது. 1815 இல் பிரித்தானியர் கண்டியைக் கைப்பற்றி முழு நாட்டையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். அவ்வாண்டு முதல் இலங்கையில் தொடர்ச்சியான எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்றன.

1817–18 காலத்தில் பிரித்தானியருக்கு எதிரான தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. 1848 இல் இலங்கையின் விவசாயிகள் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தார்கள். 1890கள் முதல் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் கிளர்ச்சி நடவடிக்கைகளும், வேலை நிறுத்தங்களும் நாட்டில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருந்தன. 1893 இல் கொழும்பு நகரின் அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினை நடத்தினர். 1906 இல் மாட்டு வண்டிக்காரர்கள் (Carters) வேலைநிறுத்தம் இடம்பெற்றது. 1923 இல் இலங்கையின் முதலாவது பொது வேலைநிறுத்தம் (General Strike) இடம்பெற்றது.

தொழிலாளர் வேலை நிறுத்தங்களால் உருவாகிய அமைதியின்மை ஒருபுறம் இருக்க, இன, மத முரண்பாடுகள் காரணமான கலகங்களும் இக்காலத்தில் இடம்பெற்றன. பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான மதப்பகைமை காரணமாக 1883 இல் கத்தோலிக்கர்–பௌத்தர் கலகம் கொழும்பு நகரில் இடம்பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில் பௌத்த மறுமலர்ச்சி இயக்கம் எழுச்சிபெற்றது. இவ்வியக்கத்தின் எழுச்சியின் விளைவாக சிங்கள-பௌத்தர்கள் தாம் அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட சமூகக் குழுவாக இருப்பதாக உணர்ந்தனர். சிங்கள பௌத்தர்களின் உணர்வு நிலையில் (Consciousness) ஏற்பட்ட இம்மாற்றம் 1883 காலகட்ட கலகத்திற்குக் காரணமாயிற்று.

அதன் பின்னர் 1903 ஆம் ஆண்டு அனுராதபுரத்தின் பௌத்த சமய வழிபாட்டிடங்களிற்கு அண்மையில் இருந்த கிறிஸ்தவக் கோவில்களையும், அங்கிருந்த தவறணைகள், இறைச்சிக்கடைகள் என்பனவற்றையும் தாக்கி அழிப்பதான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இவை சிறுபான்மை மதப்பிரிவினர்களுக்கு எதிரான வன்முறைகளாகும். இவற்றின் தொடர்ச்சியாக 1915 இல் சிங்கள–முஸ்லிம் கலகம் (Sinhala–Muslim Riots of 1915) இடம்பெற்றது.

தமிழர்களுக்கு எதிரான பேரளவிலான வன்முறைகள் இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் ஆரம்பித்தன. 1958, 1977, 1981 ஆகிய ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான தீவிர வன்முறைகள் இடம்பெற்றன. 1982 இல் காலி நகரில் சிங்களவர்–முஸ்லிம் கலகம் இடம்பெற்றது.

இவ்வாறு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இலங்கையில் இடம்பெற்ற கிளர்ச்சிகள், கலகங்கள் என்பவற்றை விவரித்துக் கூறும் குமாரி ஜயவர்த்தன, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையான காலப்பகுதியின் வர்க்க உணர்வு நிலை (Class Consciousness), இனத்துவ உணர்வு நிலை (Ethnic Consciousness) என்ற இரு விடயங்களின் அரசியல், சமூக, பொருளாதார, சமய பின்புலத்தை தெளிவுபடுத்துகிறார்.

1980களில் இலங்கையில் சிங்கள–தமிழ் இனங்களிற்கிடையில் முரண்பாடுகள் தீவிரமடைந்ததன் காரணங்களை அறிவதற்குப் பின்வருவன பற்றி அறிந்து கொள்வது பயனுடையது.

  1. காலனிய இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பின் சில இயல்புகள்.
  2. அக்காலத்தில் தோற்றம் பெற்ற தேசியவாத சமய மறுமலர்ச்சி இயக்கத்தின் இயல்புகள்.
  3. தேசியவாத, சமய மறுமலர்ச்சி இயக்கத்தின் வர்க்கப் பின்புலம்.

19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டிலும் இலங்கையில் வர்த்தக முதலாளித்துவம் (Merchant Capitalism) வளர்ச்சியுற்றது. இம்முதலாளித்துவ வளர்ச்சியின் பயனாக புதிய வர்க்கங்கள் சில தோன்றியிருந்தன. நாட்டின் வர்க்க உறவுக் கட்டமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. இப்புதிய சமூக வர்க்கங்கள் சமய, பண்பாட்டு மறுமலர்ச்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தன. அதன் பயனாக தேசியவாதம் காலப்போக்கில் இனவாதமாக (Communalism) மாற்றமுற்று இனங்களிற்கிடையில் முரண்பாடுகளையும் முறுகல் நிலையையும் தோற்றுவித்தது. இன்று வரை இலங்கையில் நீடிக்கும் இனவாதப் பிரச்சினைகளை இத்தகைய வரலாற்றுப் பின்புலத்திலேயே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இலங்கையின் வரலாற்றைப் பற்றி எழுதியோர் சிலர் தேசியவாத எழுச்சியின் பயனாக ஏற்பட்ட நல்விளைவுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். குறிப்பாக பௌத்த மறுமலர்ச்சி இயக்கம், மதுவிலக்கு இயக்கம் என்பன வரலாற்றாசிரியர்களின் ஆய்வுகளில் முக்கியத்துவம் உடைய வரலாற்றுப் போக்குகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

தேசிய அடையாளம் குறித்து உருவாக்கப்பட்ட அடையாள உணர்வும் நாட்டுப்பற்றை வளர்த்தது. அரசியல் உணர்வு மக்கள் மத்தியில் வளர்ந்ததோடு, அந்நிய ஆட்சிக்கு மறைமுக வழிகளில் எதிர்ப்பைக் கிளப்பிய பல இயக்கங்கள் தோன்றின. நகரத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களுக்கு ஆதரவும் பெருகியது. இவை யாவும் காலனிய காலகட்டத்தின் நேர்மறையான வளர்ச்சிகள் என்பதில் ஐயமில்லை. ஆயினும், காலனிய காலகட்டத்தின் தேசியவாதம் தொடக்க நிலைத் தேசியவாதமாகவே அமைந்தது. அத்தேசியவாதம் முதிர்ச்சி பெற்ற தேசியப் போராட்ட இயக்கமாக வளரவில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து நாட்டிற்கு விடுதலைப் பெற்றுத்தருவதற்குச் சக்தியற்றதான அத்தேசியவாதம் சிங்கள இன மேலாண்மைவாதமாகவும், இனவாதமாகவும் சீரழிவுற்றது.

இக்கட்டுரையில் இத்தேசியவாதத்தின் எதிர்மறைப் பண்புகள் சில சுட்டிக்காட்டப்படவுள்ளன. குறிப்பாக பின்வரும் மூன்று விடயங்கள் குறித்து விளக்கிக் கூறப்படும்.

  1. 19ஆம் நூற்றாண்டில் இலங்கையில் உருவாக்கம் பெற்ற சிங்கள வர்த்தக முதலாளித்துவம், முதலீடுகளைச் சில துறைகளில் மட்டுமே குவித்திருந்தது. இலங்கையின் சிறுபான்மை இனத்தவர்களின் வர்த்தக முயற்சிகளை சிங்கள முதலாளித்துவ வர்க்கம் விரோத உணர்வுடன் பார்த்தது. அத்தோடு அது அந்நிய வர்த்தக முதலீடுகளுக்கு அனுசரணையாகவும், கீழ்ப்பட்டதாயும் செயற்பட்டது.
  2. சிங்கள முதலாளி வர்க்கமும், குட்டி பூர்ஷ்வா வர்க்கமும் சிங்கள – பௌத்த அடையாளத்துடன் தம்மை இணைத்துக் கொண்டன. அவை பௌத்த சமய மறுமலர்ச்சியிலும் பண்பட்டு மறுமலர்ச்சியிலும் தீவிர ஈடுபாட்டுடன் பங்கேற்றன.
  3. இந்த மறுமலர்ச்சிக் கருத்தியல் (Revivalist Ideology) இனவாத உள்ளடக்கத்தைப் பெற்றது. 

மேலே குறிப்பிட்ட போக்குகளைப் பற்றிய புரிதலுக்கு, 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் உருவாக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட பொருளாதாரம் பற்றி முக்கிய சில தகவல்களைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.

டச்சு காலனியவாதிகளால் இலங்கையில் வர்த்தகவாத நடைமுறைகள் (Mercantilist Practices) தொடங்கப்பட்டன. வர்த்தகவாதம் தனியுரிமைகளை உருவாக்குவது. டச்சு காலத்தில் வர்த்தகத் தனியுரிமைகள் ஏற்றுமதியிலும் இறக்குமதியிலும் ஏற்படுத்தப்பட்டன. இவ்விதமான வர்த்தகவாத தனியுரிமை நடவடிக்கைகள் (Mercantilist and Monopolistic Practices) பிரித்தானிய ஆட்சியில் 1830 வரை தொடரப்பட்டன. வர்த்தகவாதத்தின் இந்த நடவடிக்கைகள் தனியார் முயற்சிகளுக்கு பல மட்டுப்பாடுகளை விதித்த போதும், காலனிய பொருளாதாரத்தின் சில சிறு சிறு வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக சுதேச முயற்சியாளர்கள் இலாபம் ஈட்டவும், மூலதனத்தைத் திரட்டவும் (Accumulation) வாய்ப்புகள் கிடைத்தன. இவை:

  • ஒப்பந்த வேலைகளைச் செய்தல்.
  • நெல்வரியை அறவிடுவோராகத் (Paddy Tax Collectors) தொழிற்படுதல்.
  • கப்பல்களில் ஏற்றி இறக்குவோர் (Shippers).
  • சாராயக் குத்தகையாளர்கள் (Arrack Renters).

மேற்குறித்த வகை வர்த்தக தொழில் முயற்சிகளில் ஈடுபட்ட உள்ளூர் முயற்சியாளர்கள் பலர் மூலதனத்தைத் திரட்டி வைத்திருப்பவர்களாக மாறியிருந்தனர். இந்தப் பின்னணியில் இலங்கையில் 1830களில் தோட்டப் பொருளாதாரம் (Plantation Economy) உருவாக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தோட்டப் பொருளாதார முறை வர்த்தக முதலாளிகள் வகுப்புக்கு (Class of Merchant Capitalists) மிகக் குறுகிய காலத்தில் பெரும் செல்வத்தை இலாபம் மூலம் ஈட்டுவதற்கான வர்த்தக வாய்ப்பைத் திறந்துவிட்டது.

சாராயக் குத்தகையாளர்கள் தோட்டப் பகுதிகளில் குடியேற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு சாராயத்தை விற்பனை செய்ய ஆரம்பித்தனர். அதேபோன்று கொழும்பை மையமாகக் கொண்டு உருவான நகரத் தொழிலாளர்களுக்கும் சாராயத்தை விற்பனை செய்தனர். சாராயத்தின் உற்பத்தியும் அதன் மொத்த, சில்லறை விநியோகமும் விற்பனையும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது; அது தவறணைகளை ஏலத்தில் விற்பனை செய்தது. இந்த ஏல விற்பனையின் போது போட்டி போட்டு தவறணைகளின் குத்தகையைப் பெற்ற சாராயக் குத்தகையாளர்கள், அரசாங்கம் ஏலத்தில் வழங்கிய சாராயக் குத்தகையில் தனியுரிமையைப் (Monopoly Rights) பெற்றனர். அதாவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்தக்காரர் தவிர்ந்த பிறர் எவரும் சாராயத்தை விற்பனை செய்ய முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இச்சூழ்நிலையில் தவறணையை ஒப்பந்தத்திற்குப் பெற்றவர்களுக்கு கள்ளையும், வடிக்கப்படும் சாராயத்தையும் விற்கும் நிலைக்குச் சாராய உற்பத்தியாளர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். விரைவிலேயே சாராயக் குத்தகையாளர்களின் கூட்டான ‘கார்ட்டல்கள்’ (Cartels) உருவாகின. இவ்விதமாக சாராயம் வடித்தல் முதல் அதன் மொத்த, சில்லறை விற்பனை ஈறான சங்கிலித் தொடரை இணைத்த பெரும் முதலாளிகளான சாராயக் குத்தகையாளர்கள் தோன்றினர். இச்சுதேச முதலாளிகளின் கட்டுப்பாட்டில் சாராய உற்பத்தித் தொழில் (Arrack Industry) என்று அழைக்கக்கூடிய தொழில் முயற்சித்துறை உருவானது. அரசாங்கத்திற்கும் குத்தகைப்பணம் மூலம் பெரும் வருமானம் கிடைத்தது.

இலங்கையின் சுதேச முதலாளித்துவத்தின் எழுச்சியின் முதலாவது கட்டம் மேற்குறித்த சாராயக் குத்தகையாளர்களின் தோற்றத்துடன் ஆரம்பமானது. பெரும் செல்வத்தை சாராயக் குத்தகை மூலம் ஈட்டிய குத்தகையாளர்கள் பல்வேறு துறைகளில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள்: 1. கோப்பித் தோட்டங்கள், 2. காரியச் சுரங்கத் தொழில், 3. தென்னந் தோட்டங்கள், 4. நகரச் சொத்துகள் (Urban Property) ஆகியவற்றில் முதலிட்டனர்.

இச்சாராயக் குத்தகையாளர்களின் பிள்ளைகளான அடுத்த தலைமுறையினர் ஆங்கிலக் கல்வியைக் கற்று மருத்துவம், சட்டம், அரசாங்க உத்தியோகம் ஆகிய துறைகளில் பணியாற்றும் தொழில்முறை வல்லுநர்களாக (Professionals) வாழ்க்கையில் உயர்ச்சி பெற்றனர். ஆங்கிலக் கல்விக்காகக் குத்தகையாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்தோர் வெளிநாட்டிற்கும் சென்று கல்வி கற்றுத் திரும்பினர். இவ்வாறாக இலங்கையில் தொழில்முறை வல்லுநர் அடுக்கு (A Stratum of ‘Professionals’) உருவாகியது.

புதுப்பணக்காரர்களான (New Rich) குத்தகையாளர்களுக்கு ஆங்கிலம் கற்ற இந்த உயரடுக்குத் தலைமுறை முன்னர் இல்லாத சமூக அந்தஸ்தையும் (Social Status) தேடிக்கொடுத்தது. இப்புதுப்பணக்கார முதலாளிகள் வகுப்பு மரபுவழிப்பட்ட நிலவுடைமையாளர் வகுப்பிற்கு (Traditional Land Owning Class) போட்டியாளர்களாகவும் மாறினர். இப்புதுப் பணக்காரர்களிடம் நிதிப்பலம் இருந்தது; சமூக அந்தஸ்தும் வந்து சேர்ந்தது; பிற்சந்ததியினர் மருத்துவம், சட்டம், அரசாங்க உத்தியோகம் என்ற துறைகளில் முன்னேறியதாலும் புதுப்பணக்காரர் வகுப்புக்கு மரியாதையும் மதிப்பும் கிடைத்தது.

மேற்கூறிய வளர்ச்சிகளின் பயனாக இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதிய வர்க்கங்கள் சில தோற்றம் பெற்று சமூக, அரசியல், பண்பாட்டு துறைகளில் முன்னிலைக்கு வந்தன. காலனிய இலங்கையின் வர்க்கக் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக பின்வரும் மூன்று வர்க்கங்கள் செல்வாக்கு மிக்கவையாக விளங்கின.

  1. முதலாளி வர்க்கம் (The Bourgeoisie Class)
  2. குட்டி முதலாளி வர்க்கம் (Petty Bourgeoisie)
  3. உழைப்பாளர் வர்க்கம் (Working Class)

இம்மூன்று வர்க்கங்களின் இயல்புகளை அடுத்து நோக்குவோம்.

1. முதலாளி வர்க்கம்:

முதலாளி வர்க்கத்தினுள் இரண்டு பிரிவுகள் இருந்தன.

அ) டச்சு காலத்திலும் பிரித்தானியர் காலத்திலும் ‘முதலியார்கள்’ என்னும் சுதேசிகளான கிராமத் தலைமைக்காரர்களுக்கு காணிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன. சிங்கள முதலியார்கள் ‘கொவிகம’ சாதியினராகவும், தமிழ் முதலியார்கள் வேளாளர் சாதியினராகவும் விளங்கினர். இவர்கள் ‘முதலியார்கள்’ என்ற உத்தியோகப் பதவிகளை வகித்தனர். அக்காலத்தில் பல வர்த்தக வாய்ப்புகள் ஏற்பட்டன. எனினும் இம்முதலியார் வகுப்பு வர்த்தக முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டவில்லை. விதிவிலக்காகச் சில முதலியார்கள் பெரும் தோட்டங்களில் (Plantations) முதலிட்டனர். இவ்வகுப்பினரின் வாழ்க்கைப் பாங்கிலும், நடை, உடை, பாவனைகளிலும் நிலப்பிரபுத்துவ வகுப்பின் (Feudal Landlords) பண்புகள் வெளிப்பட்டன. இவ்வகுப்பினர் பிரித்தானியருக்கு விசுவாசம் உடையவர்களாக இருந்தனர். கரைநாட்டு கொவிகம முதலியார்கள் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியுள்ளனர். பிரித்தானிய அரசு கண்டியின் நிலப்பிரபுக்களுக்கு பட்டம், பதவிகள் போன்ற சலுகைகள் சிலவற்றை வழங்கியது. கண்டியின் நிலமானிய உடைமையாளர் வகுப்பு அப்பகுதிகளின் குடியான் விவசாயிகளை (Peasant) தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது.

ஆ) முதலாளி வர்க்கத்தின் இன்னொரு பிரிவு வர்த்தகம், ஊக வாணிபம் (Speculation) என்பனவற்றில் ஈடுபட்டவர்களாகவும், சட்டம், மருத்துவம் போன்ற தொழில்முறை நிபுணத்துவத் துறைகளில் ஈடுபட்டவர்களாகவும் இருந்தனர். இவர்கள் புத்தாக்கமான புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டினர். நாட்டின் தூரப்பகுதிகளுக்குச் சென்று வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் பெருந்தொகையான இலாபத்தை ஈட்டும் திறமை இவ்வகுப்பினரிடம் இருந்தது. குறிப்பாக 1830ற்குப் பிற்பட்ட காலத்தின் சாராயத் தவறணைக் குத்தகை வியாபாரத்தில் இவ்வகுப்பினர் ஈடுபட்டனர். தமது சாராயக் குத்தகை வியாபாரத்தில் ஈட்டிய செல்வத்தை கோப்பி, காரியச் சுரங்க அகழ்வு, தெங்குப் பொருள் உற்பத்தி என்பனவற்றில் முதலிட்டனர்.

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் இவர்களால் முதலீடு செய்ய முடியவில்லை. இவ்வகுப்பினரால் கைத்தொழில் உற்பத்தித் துறையில் ஈடுபடவும் முடியவில்லை. இக்காரணங்களால் இச்சுதேச முதலாளி வர்க்கம் ஒரு பலவீனமான முதலாளி வர்க்கமாகவே இருந்தது. இவ்வகுப்பினர் பிரித்தானியரின் வாழ்க்கை முறையையும், சமூக மதிப்பீடுகளையும் (Social Values) ஏற்றுக்கொண்டவர்களாகவும், பிரித்தானியர் ஆட்சி இலங்கையில் நீடிக்க வேண்டும் என்ற கருத்து உடையவர்களாகவும் இருந்தனர். இவ்வகுப்பினரை ‘தேசிய முதலாளிகள் வகுப்பு’ என்று கூற முடியாது.

2. குட்டி முதலாளி வர்க்கம்:

குட்டி முதலாளி வர்க்கத்திலும் இரு பிரிவுகள் இருந்தன.

அ) சிறிய நில உடைமையாளர்கள், கைவினைத்தொழில்களைச் செய்பவர்களான பொற்கொல்லர், தச்சர், செம்பு, வெண்கலப் பொருட்களை உற்பத்தி செய்வோர், சிறு வர்த்தகர்கள், கிராமப்புறம் சார்ந்து சிறு உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவோர் எனக் கூறத்தக்கவர்கள் இப்பிரிவில் அடங்குவர். சாதி, மதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து எல்லாச் சமூகக் குழுக்களிடையும் இப்பிரிவு குட்டி முதலாளிகள் காணப்பட்டனர். இப்பிரிவினர் தமது தாய் மொழியான சிங்களத்தில் (அல்லது தமிழில்) கல்வி கற்றவர்களாகவும், உள்ளூர் சமய வழிபாட்டு நெறிகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். இப்பிரிவினர் கிராம ஊராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக, ஈடுபாட்டுடன் செயற்படுபவர்களாகவும், அற ஒழுக்கம், பண்பாட்டு முன்னேற்றம் போன்றவற்றில் நாட்டம் உடையவர்களாகவும் இருந்தனர்.

ஆ) குட்டி முதலாளித்துவ வகுப்பின் இன்னொரு பிரிவில் நகரம் சார்ந்த எழுதுவினைஞர்கள், நடுத்தர நிர்வாகப் பதவிகளை வகிப்போர், சிறுகடை முதலாளிகள், ஆசிரியர்கள் என்போரும், பெருந்தோட்ட பொருளாதார முறையினாலும் அரச சேவைத்துறைகளாலும் உருவாக்கப்பட்ட சேவைத் துறைகளில் ஈடுபட்டு உழைப்போரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். குட்டி முதலாளி வர்க்கத்தின் அறிவாளிகள் வகுப்பு (Petty Bourgeois Intelligentsia) குறிப்பாக நகரம் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்பிரிவினர் பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களில் அக்கறை கொண்டு உழைத்தனர். சமூக சீர்திருத்த இயக்கங்களுக்கு தமது ஆதரவை வழங்கினர். இப்பிரிவினரும் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய பல்வேறு சமூகங்களிலும் காணப்பட்டனர்.

3. உழைப்பாளர் வர்க்கம்:

அ) பெருந்தோட்டத் துறைத் தொழிலாளர்கள் தோட்டங்களில் பணியாற்றிய பெரும் உழைப்பாளர் பிரிவாகும். இவர்களது தொழில் உறவுகள் முதலாளித்துவத்துக்கு முந்திய தன்மையை (Pre–Capitalist Nature) உடையனவாக இருந்தன. துறைமுகம், புகையிரதச் சேவை, வீதியமைப்பு வேலைகள் ஆகிய பொதுப் பயன்பாட்டு சேவைத் துறைகளில் (Public Utilities) சிங்களவர், தமிழர், மலையாளிகள் என்போர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்பட்டனர். இவை போன்ற வேறுபல சேவைகளை வழங்கும் தொழிலாளர்கள் கொழும்பு நகரிலும், தோட்டப்பகுதிகளைச் சார்ந்தும் உழைப்போராகக் காணப்பட்டனர். 1893 ஆம் ஆண்டு தொழிலாளர்களின் முதலாவது வேலை நிறுத்தம் இடம்பெற்றது. தொழிலாளர் வகுப்பிடம் எதிர்ப்புணர்வும், அமைதியின்மையும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் காணப்பட்டது. ஆயினும் நகரத் தொழிலாளர் வகுப்பை வலுவான வர்க்க உணர்வு (Strong Class Consciousness) பெற்ற வகுப்பாகக் கூற முடியாது. இப்பிரிவினரிடம் குட்டி முதலாளித்துவ கருத்தியலின் செல்வாக்கு மிகுதியாகக் காணப்பட்டது.

ஆ) கிராமப்புறக் குடியான் விவசாய சமூகமும் (Peasantry), விவசாயத் தொழிலாளர்களும் கிராமப்புறம் சார்ந்த நெல் விவசாயத்திலும் ஏனைய பயிர்களின் உற்பத்தியிலும் ஈடுபட்டு வந்தனர். விவசாயப் பொருளாதாரம் தேக்க நிலையில் பின்னடைவு உடையதாகக் காணப்பட்டது. இந்நிலையில் சிற்றுடைமைக் குடியான் விவசாயிகள் ஏழ்மையில் வாழ்பவர்களாகக் காணப்பட்டனர்.

காலனிய சமூகத்தின் வர்க்கக் கட்டமைப்பின் முக்கிய கூறுகள் சிலவற்றை மேலே குறிப்பிட்டோம். அடுத்ததாக சிங்கள வர்த்தக முதலாளித்துவத்திற்கும் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களிற்கும் இடையிலான உறவுகள் பற்றி குமாரி ஜயவர்த்தன அவர்கள் கூறியிருப்பவற்றை நோக்குவோம்.

சிங்கள வர்த்தக மூலதனமும் சிறுபான்மையினரும்

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய அரசியல் இயக்கத்தின் கருத்தியல் உள்ளடக்கத்தை (Ideological Content) புரிந்து கொள்வதற்கு அவ்வியக்கத்திற்கு தூண்டுவிசையாக இருந்த சிங்கள வணிக முதலாளி வர்க்கத்தின் இயல்புகளை அறிந்துகொள்ளுதல் வேண்டும். சிங்கள வணிக முதலாளித்துவத்தின் வர்த்தக மூலதனம் (Merchant Capital) இலங்கையின் சிறுபான்மையினத்தினர்களுடன் முரண்பாடுகளை உருவாக்கியது.

பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கையின் வணிக முதலாளித்துவம் தலைமை தாங்கி வழிநடத்த முன்வரவில்லை. அம்முதலாளி வர்க்கத்தின் வர்த்தக நலன்கள் பிரித்தானியாவின் முதலாளித்துவ நலன்களுக்கு உதவியாளர்கள் போன்ற நிலையில் செயற்பட்டன. உள்ளூர் முதலாளி வகுப்பு, பிரித்தானிய வர்த்தகக் கம்பனிகளுடன் தமது பிணைப்புகளை வலுப்படுத்தி நன்மைகளைப் பெற்றுக்கொண்டதோடு, பிரித்தானியக் காலனிய அதிகார வகுப்பிடமிருந்தும் (Colonial Bureaucracy) சலுகைகளையும் நன்மைகளையும் பெற்றுக்கொண்டது.

ஜேம்ஸ் பீரிஸ் (James Pieris) காலனிய இலங்கையின் மிதவாத அரசியல் தலைவர்; அவர் சீர்திருத்தவாத அரசியலை முன்னெடுத்தார். ஜேம்ஸ் பீரிஸின் தந்தை முன்னணி வகித்த சாராயக் குத்தகை வியாபாரிகளில் ஒருவர். 1905 ஆம் ஆண்டு ‘சிலோன் நாஷனல் ரிவியூ’ என்ற இதழில் ஜேம்ஸ் பீரிஸ் எழுதிய கட்டுரையொன்றில் வரும் பின்வரும் கூற்று கவனிப்புக்குரியது:

“இலங்கைக்கு மூலதனத்தை கொண்டுவந்து சேர்த்த பெருமை பிரித்தானிய தோட்ட முதலாளிகளுக்கு (British Planters) உரியது. அவர்கள் செல்வம் சேர்க்கும் வழியை எமக்குக் காட்டித் தந்தனர். இலங்கையின் தோட்ட முதலாளிகளின் நலன்களும் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகளின் நலன்களும் ஒன்றே; வேறல்ல” (Ceylon National Review, February 1988).

பிரித்தானிய முதலாளி வர்க்கத்துடன் இணங்கிச் செயற்பட்ட இலங்கையின் சுதேசிய முதலாளி வர்க்கத்திற்குள் உள்முரண்பாடுகள் இருந்தன. புதுப்பணக்காரர்களான (New Rich) வர்த்தக முதலாளிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சில அரசியல் சீர்திருத்தங்கள் வேண்டும் எனக் கோரினர். மத்தியத்தர வகுப்பினருக்கு வாக்குரிமை வழங்க வேண்டும், அரசியல் பிரதிநிதித்துவம் (Political Representation) வேண்டும், சுதேசிகளுக்கும் சம வாய்ப்புகள் (Equal Opportunity) வேண்டும் என்பன அவர்களின் கோரிக்கைகளாகும்.

இவர்கள் முன்வைத்த மட்டுப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை பழைய பணக்காரர்களான (Old Rich) முதலியார் குழுவினர் எதிர்த்தனர். முதலியார் குழு பேரளவு நிலங்களின் உடைமையாளர்களாகவும், தோட்ட முதலாளிகளாகவும் இருந்தனர். இப்பிரிவினர் பிரித்தானியர் ஆட்சிக்கு உளப்பூர்வமான முழு ஆதரவை வழங்கினர். அரசியல் சீர்திருத்தங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்தினால் என்ன ஆகுமோ எனப் பிரித்தானிய ஆட்சியாளர்கள் கருதியது போல் முதலியார் குழுவினரும் சீர்திருத்தங்களின் விளைவுகள் குறித்து அச்சம் கொண்டிருந்தனர்.

இந்தப் பழமைவாத சிங்கள முதலாளி வகுப்பு இலங்கையின் மேலாதிக்கம் பெற்றிருந்த ‘கொவிகம’ சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். சீர்திருத்தவாதப் புதிய பணக்கார முதலாளி வகுப்பில் கொவிகம சாதியினரோடு வேறு பல சாதியினரும் இருந்தனர். அச்சாதிகளுள் கராவ (Karava) சாதி முதலாளிகள் முன்னணியில் இருந்தனர். இச்சாதிக் குழுக்களிடையே, குறிப்பாக கொவிகம சாதிக்கும் கராவ சாதிக்கும் இடையே சாதிச் சர்ச்சைகள், கண்டனப் போர்கள் இடம்பெற்றன.

இத்தகைய சாதிச் சர்ச்சைகள் நிலப்பிரபுகளுக்கும் எழுச்சி பெறும் வர்த்தக வகுப்புக்கும் (Merchant Class) இடையிலான முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் என்றே கூறலாம். இக்காலத்தின் சாதிச் சர்ச்சைகளுக்கு சில வரலாற்றாசிரியர்கள் தவறான முறையில் விளக்கம் கொடுத்தனர்; இலங்கையின் புதிய வர்த்தகத் துறையின் தோற்றத்தை ‘கராவ சாதியின் எழுச்சி’ (Rise of the Karava) எனத் தவறாக விளக்கம் கொடுத்தனர்.

எமது இக்கட்டுரையில் சிங்கள வர்த்தக மூலதனத்திற்கும் (Sinhala Merchant) இலங்கையில் வர்த்தக முயற்சிகளில் தொழிற்பட்ட அந்நிய வர்த்தகர்களுக்கும், சிறுபான்மை இன வர்த்தகர்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆராயப்படவுள்ளன. சிங்கள வர்த்தகர்களும், சிங்கள சமூகத்தின் சில பிரிவினரும், சிங்களவர் அல்லாத வர்த்தகர்கள் (Non–Sinhala Traders) மீது வெளிப்படுத்திய வெறுப்புணர்வையும் பகைமையையும் பற்றி நாம் விவரித்துக் கூறி, இனவாதக் கருத்தியல் (Communalist Ideology) உருவாக்கம் பெற்றதை விளக்கவுள்ளோம். இந்திய வர்த்தக சமூகத்திற்கும் இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களின் வர்த்தகர்களுக்கும் எதிரானதாக இந்த இனவாதக் கருத்தியல் அமைந்தது. சிங்களக் குட்டி முதலாளித்துவ வகுப்பும் இக்கருத்தியலின் செல்வாக்கிற்கு உட்பட்டது.

சிங்கள வர்த்தக மூலதனத்தின் விரிவாக்கம் தடைப்படுதலும் சிங்களவர் எதிர்கொண்ட பொருளாதாரப் பின்னடைவுகளும்

காலனிய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில், இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களை விடப் பின்தங்கியவர்களாக இருக்கின்றோம் என்று சிங்களவர் உணர்ந்தனர். இதற்கான காரணங்கள் இருந்தன.

முதலாவதாக, தோட்டப் பொருளாதாரம் பிரித்தானிய முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரித்தானிய முதலாளிகளின் முதலீடுகளான பெருந்தோட்டங்களை ‘ஏஜன்சி ஹவுசஸ்’ (Agency Houses) என்னும் கம்பனிகள் நிர்வகித்தன. பிரித்தானிய முதலீட்டாளர்களின் வங்கிகள் பெருந்தோட்டங்களுக்குக் கடன் வழங்கின. இவ்விதமாக இலங்கைப் பொருளாதாரத்தின் முக்கிய துறையான பெருந்தோட்டப் பொருளாதாரம் பிரித்தானியர் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கொள்கைப் போக்கினால் சுதேச கைத்தொழில் முதலீடுகளுக்கு வங்கிகளால் கடன் வழங்கப்படவில்லை. வரிவிதிப்பும் கட்டுப்பாடுகளும் பிரித்தானிய மூலதனத்திற்குச் சார்புடையனவாக அமைந்தன.

இரண்டாவது, முக்கிய பொருளாதாரத் துறையாக ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகமும், மொத்த விற்பனை வர்த்தகமும் (Wholesale Trade) இருந்தது. இத்துறையை இந்திய வர்த்தக முதலாளிகள் (Indian Merchants) ஆக்கிரமித்திருந்தனர். ஏற்றுமதி–இறக்குமதியையும், மொத்த விற்பனை வர்த்தகத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய வர்த்தக முதலாளிகள், இந்தியா, ஆபிரிக்கா, தூர கிழக்கு நாடுகள் என்பனவற்றோடு தொடர்புடைய ‘வர்த்தகத் துறை இளவரசர்கள்’ (Merchant Princes) என்ற நிலையில் இருந்தனர்.

இலங்கையின் வர்த்தகத் துறையைத் தம் பிடிக்குள் வைத்திருந்த இவர்களுக்கு மேலே குறிப்பிடப்பட்ட இந்தியா, ஆபிரிக்கா, தூர கிழக்கு ஆகிய பகுதிகளிலும் வர்த்தக முதலீடுகள் இருந்தன. அவர்களுக்குச் சொந்தமாக பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்கள் இருந்தன. இந்தியா, மாலைதீவு அருகேயுள்ள வேறு தீவுகள் ஆகியவற்றின் வர்த்தகத்தில் இந்தியர்களின் கப்பல்கள் ஈடுபட்டன.

நிதி மூலதனத்தையும் நிதி வளங்களையும் பெறுவதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை. இக்காரணங்களால் இந்திய வர்த்தக முதலாளிகள் இலங்கை வர்த்தகத்தில் தனியுரிமையைப் பெற்றிருந்தனர். இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகம் (External Trade) இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியர்கள் அரிசி, சீனி, மா, மண்ணெண்ணை போன்ற பல பொருட்களின் இறக்குமதியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் உள்ளூர் உற்பத்திகளையும் வெளிநாடுகளுக்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்தனர்.

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கையின் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகமும், மொத்த விற்பனை வர்த்தகமும் ஏழு ‘போறா’ முன்னணிக் கம்பனிகளின் (Seven Leading Borah Firms) கட்டுப்பாட்டில் இருந்தன. இக்கம்பனிகள் ‘பேறா’ குடும்பங்களின் கம்பனிகளாகும் (Family Firms) அவையாவன: 

  1. கரீம்ஜி ஜவர்ஜி
  2. A.T. நூர்பாய்
  3. E.G. ஆதம் அலி
  4. H.M. மூசாஜி
  5. A.H.S. ஜீவுன்ஜி
  6. ஹெப்துலபோய் அப்துல் அலி
  7. A.G. ஜீவுன்ஜீ

இவர்களைத் தவிர சில ‘மெமென்’ (Memon) வர்த்தகர்களும் (உதாரணம்: யானு ஹசுன்), P.N. கப்பாடியா, R. பெஸ்ரொன்ஜீ, J. ரஸ்ரொன்ஜீ போன்ற பார்சி (Parsi) வர்த்தகர்களும் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் முதலீடுகளைச் செய்து வர்த்தகம் செய்து வந்தனர். இந்திய வர்த்தகர்களில் பலர் பெருந்தோட்டங்களின் (Plantations) உடைமையாளர்களாகவும் இருந்தனர்.

செல்வச் சீமான்களான இவ்வர்த்தகர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தனர். பிரித்தானிய அறக்கொடைகளுக்கும் வாரி வழங்கிய வள்ளல்களாகத் திகழ்ந்த இவ்வர்த்தகர்கள், பிரித்தானியாவிற்கு அரசியல் விசுவாசம் (Political Loyalty) உடையவர்களாக விளங்கினர். நிதி (Finance), கப்பல் போக்குவரத்து (Shipping) என்பனவற்றின் பிராந்திய வர்த்தக உறவுகளை (Regional Trading Connections) கொண்டிருந்த இவ்வர்த்தகர்கள், சிக்கலான உறவுகளையுடையதும், பெரும் செல்வத்தை ஈட்டித் தருவதுமான வர்த்தக சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கியிருந்தனர்.

இந்த வர்த்தகத்தில் நுழைந்து கொள்வதற்கு பிரித்தானிய மூலதனத்திற்கு (British Capital) தேவையோ நாட்டமோ இருக்கவில்லை. இந்திய வர்த்தகர்கள் ஏற்றுமதி–இறக்குமதி, மொத்த விற்பனை என்பனவற்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடியால், எழுச்சி பெற்றுவரும் சுதேச முதலாளித்துவம் தனது முதலீடுகளையும் வர்த்தக நலன்களையும் ஒப்பீட்டளவில் முக்கியத்துவம் குறைந்த சில துறைகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சுதேசிய முதலாளிகள் பின்வரும் மூன்று துறைகளில் ஈடுபட்டனர். 

  1. பெருந் தோட்டங்கள் (Plantations)
  2. காரிய சுரங்க அகழ்வுத் தொழில் (Graphite Mining)
  3. சாராய வர்த்தகம் (Liquor Trade)

சாராய வர்த்தகத்தில் முதன்மை பெற்றிருந்த ‘கராவ’ சாதி வர்த்தகக் குடும்பங்கள் புதுப்பணக்காரர் (New Rich) குடும்பங்களாக விளங்கின. இவை ஒன்றோடொன்று திருமண உறவுகளாலும் வர்த்தக உறவுகளாலும் பிணைக்கப்பட்டிருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் முக்கிய சாராய வர்த்தகக் குடும்பங்களாக டிசொய்சா, டிமெல், பீரிஸ், அமரசூரிய, டயஸ் என்பன விளங்கின. இக்குடும்ப முதலாளிகள் தமது முதலீடுகளை காரியச் சுரங்க அகழ்வு, பெருந்தோட்டங்கள் ஆகியவற்றிற்கும் விரிவாக்கினர்.

சாராய வர்த்தகத்தால் முன்னிலைக்கு வந்த ‘கொவிகம’ குடும்பங்களாக சேனநாயக்க குடும்பம், கொத்தலாவல குடும்பம், ஆட்டிக்கல குடும்பம் என்பன முன்னணியில் திகழ்ந்தன. இம்மூன்று குடும்பங்களும் காரியச் சுரங்க அகழ்வு மூலம் செல்வத்தைத் திரட்டி, பின்னர் பெருந்தோட்டங்களில் தமது முதலீட்டை விரிவாக்கின. வர்த்தகத்தையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

இறக்குமதி வர்த்தகத்திலும் (Local Retail Trade) சிங்கள வர்த்தகர்கள் ஈடுபட்டனர். இச்சிங்கள வர்த்தகர்களின் குடும்பங்களில் N.S. பெர்ணான்டோ, D.D. பெட்ரிஸ், H. டொன் கறோலிஸ், W.E. பஸ்ரியன் என்பன குறிப்பிடத்தக்கவை. இவ்வர்த்தகர்களால் இந்தியப் பெருமூலதன வர்த்தகர்களுடன் போட்டியிட்டு முன்னேற முடியவில்லை. இவர்களால் இறக்குமதியிலும் சில்லறை வர்த்தகத்திலும் மட்டுமே ஈடுபட முடிந்தது.

இவ்வாறாக சிங்கள வர்த்தக முதலாளி வர்க்கத்தால் ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை.

தொடரும். 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்