உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

உரிமை மீறல்கள், சித்திரவதைக் குற்றங்கள் என்பவற்றுக்கான சர்வதேச சட்டவரம்பின் நியாயாதிக்கத்தில் நிலவும் சிக்கல்கள் – பகுதி 1

March 12, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார

ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளை மீறும் வகையில் செயற்படும்போது, அதற்கான முழுப் பொறுப்புகளும் அந்த அரசைச் சார்ந்தவையாகின்றன. ஆனால் அந்த அரசின் நிறுவனங்களால் இத்தகைய செயல்கள் செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களின் போது அதற்கான பொறுப்பு, பெரும்பாலும் ‘அரசுப் பொறுப்பு’ என்றே குறிப்பிடப்படுகின்றது. இருப்பினும், அரசுடன் இணைக்கப்பட்டுள்ள நீதித்துறைச் சட்டங்களின் அடிப்படையில், அத்தகைய குற்றங்களுக்கு அரசு பொறுப்பேற்கத்தான் வேண்டும் என்று உறுதிப்படுத்தும் எத்தகைய குறிப்புகளும் இல்லை. சிலர் இதை ஆங்கிலேயச் சித்திரவதைச் சட்டத்தின் அடிப்படையிலான ஓர் ஒப்பீட்டு அடிப்படையில் விவரிக்க முயற்சித்தாலும், ஏனையவர்கள் ஒப்பந்தச் சட்டத்தில் காணப்படும் ஒற்றுமைகளின் அடிப்படையில், குறிப்பாக ஒப்பந்த விதி மீறல் நடந்த இடங்களில், அதை அடிப்படையாகக் கொள்கின்றனர்.

ஆனால், சர்வதேச சட்ட ஆணைக்குழு, ஓர் இரட்டை அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. அது சில செயல்களைச் ‘சர்வதேச சட்டமீறல்கள் அல்லது அநியாயங்கள்’ என்றும், அடிமைத்தனம், இனப்படுகொலை, இனவெறி போன்ற பெரிய அளவிலான சர்வதேச ரீதியான கடப்பாடுகளை மீறுவதை ‘சர்வதேச குற்றங்கள்’1 என்றும் வகைப்படுத்தியுள்ளது. அதாவது, சர்வதேச கடப்பாடுகளை மீறுகின்ற தனது செயல்களுக்கு ஓர் அரசு பொறுப்பேற்க வேண்டியிருப்பது போலவே, சில சூழ்நிலைகளில் சர்வதேச சட்டக் கடப்பாடுகளை மீறும் செயல்களுக்காகத் தனிநபர்களையும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வைக்க முடியும். உலகளாவிய சட்ட அதிகார வரம்பின் அடிப்படையில், ஆழ் கடல்களில் செய்யப்படும் ஒரு கடற்கொள்ளையரின் கடற் கொள்ளை போன்ற ஒரு செயலை எந்தவொரு அரசும் செய்ய முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக அமைகிறது.

சர்வதேச சட்டமானது, இதுபோன்ற பல செயல்களைச் செய்வதற்கான அதிகார வரம்பைத் தனது கையில் எடுத்துக் கொள்வதற்கான அதிகாரத்தை ஓர் அரசுக்கு வழங்குவதன் மூலம், இன்னும் இவை போன்ற செயல்கள் பலவற்றைக் குற்றச் செயல்களாக மாற்றியுள்ளது. இவ்வாறு அரசுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தில் உள்ள தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது அந்த நிகழ்வுகளின் உலகளாவிய ரீதியிலான அதிகார வரம்பை, அந்தச் செயலைச் செய்த நபரின் தேசியத்தையோ அல்லது அது செய்யப்பட்ட இடத்தையோ சார்ந்ததாக அன்றி, ஏற்றுக்கொள்வது என்பதுதான். இந்த வகையில் உலகளாவிய சட்ட அதிகார வரம்பைப் பயன்படுத்துவது என்பது, ஒரு வகையான ‘ஏற்றுக்கொள்ளல்’ அல்லது ‘கட்டாயப்படுத்தல்’ என்ற போக்கை எடுக்க முடியும். ஓர் அரசு அதிகார வரம்பை வலியுறுத்த அனுமதிக்கப்பட்டால், அது அதன் அதிகார வரம்பை வலியுறுத்தவோ அல்லது வலியுறுத்தாமல் இருக்கவோ செய்யலாம். ஆனால் அதிகார வரம்பைக் கட்டாயமாக வலியுறுத்தும் விடயத்தில் அரசு அவ்வாறு செய்வதற்கான கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

உலகப் போரின் போது மனிதகுலத்திற்கு எதிரான கடுமையான குற்றங்களைக் கையாளும் ‘இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பதும் தண்டிப்பதும் தொடர்பான மாநாடு (1948)2, உலகளாவிய ரீதியிலான ஆயுதமேந்திய யுத்தம் ஒன்று இல்லாத நிலையிலும், ஓர் அரசின் எல்லைக்குள் செய்யப்படும் குற்றங்களுக்கு ‘உலகளாவிய சட்ட அதிகார வரம்பைக் (Universal Jurisdiction)’ கவனத்தில் கொள்கிறது. சர்வதேச சட்டத்தின் கீழ் செய்யப்படும் குற்றங்கள் தொடர்பான இந்த ‘உலகளாவிய சட்ட அதிகார வரம்பை’ ஏற்கவேண்டும் என்ற ஒரு கடப்பாட்டை அரசுகள் மீது இந்த மாநாடு விதிக்கவில்லை. ஆயினும், அத்தகைய செயல்கள் செய்யப்படும் பட்சத்தில், செய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள அரசின் அதிகாரம் பெற்ற ஒரு தீர்ப்பாயத்தால் அல்லது குற்றங்கள் மீதான அதிகார வரம்பைக் கொண்ட ஒரு சர்வதேச தண்டனைத் தீர்ப்பாயத்தால் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அதன் தேவையாக இருந்தது. அந்த வகையில் உலகளாவிய சட்ட அதிகார வரம்பைப் பாதுகாப்பாகப் பேணுவது அதன் நோக்கமாக இருந்தது என்று கருதலாம். அந்த வகையில், உலகளாவிய அதிகார வரம்பு வலியுறுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்த முன்னேற்றங்கள் பற்றிய கணக்கெடுப்புகள், சில சந்தர்ப்பங்களில் குற்றச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய ரீதியில் அனுமதிக்கப்பட்ட அதிகார வரம்பையும், ஏனையவை தொடர்பாக அவசியமான அல்லது கட்டாயமான அதிகார வரம்பையும் ஏற்றுக்கொள்வதற்கு, சர்வதேச சட்டம் (International law) அரசுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று காட்டுகின்றன.

சித்திரவதை நடைமுறைகள் போன்ற அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாகத் தீர்ப்பளிக்கும் உலகளாவிய அதிகார வரம்பை வலியுறுத்த வேண்டிய ஓர் அரசு, சர்வதேச சட்டத்தின் அடிப்படை முன்மாதிரியின் போட்டியிடும் கட்டாயங்களைச் சமரசம் செய்வதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கலாம். இது அரசுகளின் இறையாண்மை, சர்வதேசக் கடமை என்பவற்றின் அடிப்படையில், நாடுகள் கடைப்பிடிக்க வேண்டிய மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய விதிமுறைகளின் தன்மையைக் குறிக்கிறது. இந்தக் கடமைகள் ஒப்பந்தங்கள், வழக்கமான சட்டங்கள் அல்லது பொதுச் சட்டக் கொள்கைகள் போன்ற பிற அங்கீகரிக்கப்பட்ட சட்ட ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

பொது சர்வதேசச் சட்டத்தின் பார்வையில் அரசுகள், சட்ட ரீதியாக சமமாகக் கருதப்படுவதால், மற்றொரு இறையாண்மை கொண்ட அரசின் மீது உலகளாவிய அதிகார வரம்பை வலியுறுத்துவது என்பது, சர்வதேச சமூக உறுப்பினர்களால் வெறுப்புடன் பார்க்கப்படும். ஓர் அரசு குறிப்பிட்ட முன்கூட்டிய ஒப்புதல் இல்லாமலே, ஒரு பொதுவான சர்வதேச சட்டத்தை கடைப்பிடிக்கக் கடமைப்பட்டிருக்கலாம். ஆனால் அது, நீதித்துறை அல்லது தீர்ப்பளிக்கும் அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பது வேறுபட்டது. அதேவேளை, சர்வதேசக் குற்றவியல் சட்டத்துடன் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் வளர்ச்சி என்பவை, குறிப்பாக நியூரம்பேர்க், டோக்கியோ விசாரணைகளுக்குப் பிறகு, அரசுகளின் இறையாண்மை, சமத்துவம் என்ற பாரம்பரியக் கருத்துகளில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சர்வதேச சட்டத்தின் நடைமுறையில் உள்ள நேர்மறைக் கருத்துகளை அடிப்படையில் மாற்றின.

20 ஆம் நூற்றாண்டில் இயற்கைச் சட்டக் கருத்து மீண்டும் புத்துயிர் பெற்றதன் மூலம், மனித உரிமைகள் தனிநபர்களுக்கு அவர்களின் மனிதாபிமானத்தின் காரணமாகப் பெறப்படும் உலகளாவிய நோக்கமாகக் கருதப்பட்டன; தவிரவும், சித்திரவதை நடைமுறை, குறிப்பாக அரசுகளால் முறையாகச் செய்யப்படும் போது, இப்போது பொதுவாக நீதி மீறலாகவும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகவும் கருதப்படுகிறது. இது தொடர்பாக, வழக்கமான சர்வதேச சட்டத்தின் கீழ் அரசுகள் உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பைக் கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்ள முடியுமாக இருப்பினும், அத்தகைய அதிகார வரம்புகள் பயன்படுத்தப்படுவது மிகக் குறைவு.

இது தவிர, ஜெனீவா மாநாடு3, சித்திரவதைக்கு எதிரான மாநாடு (CAT)4 போன்ற ஒப்பந்த விதிகளாலும், உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதும் செயற்படுத்துவதும் வழங்கப்பட்டுள்ளது.

சித்திரவதையின் சிக்கல்களை வெளிப்படையான சொற்களில் பல விதிகளால் நிவர்த்தி செய்யும் ஜெனீவா மாநாடு 1949, அதன் விதிகளின் கடுமையான மீறல்கள் தொடர்பாக உலகளாவிய அதிகார வரம்பை ஏற்பதற்கான வெளிப்படையான கடமையை அரசுகள் மீது விதிக்கிறது. இதேபோல், CAT உம் சில விதிகள் மூலமாக, சித்திரவதைச் செயல்கள் தொடர்பான உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை அங்கீகரித்துள்ளது.

சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான கையாளல் அல்லது தண்டனைக்கு எதிரான மாநாடு (CAT) என்பது ஒரு சமீபத்திய சர்வதேச ஒப்பந்தமாகும். இது, சித்திரவதைச் செயல்களைச் செய்தவர்கள் குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையிலான உலகளாவிய அதிகார வரம்பை அரசுகள் மீது விதிக்கிறது என்பதை அங்கீகரிக்கிறது. மேலும், உள்நாட்டுக் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் சித்திரவதைக்கு எதிரான முழுமையான தடையை விதிப்பதற்காக, தமது சொந்தக் குற்றவியல் நீதி அமைப்பிற்குள் சித்திரவதை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட எவர் மீதும் வழக்குத் தொடுப்பதன் மூலமோ, அல்லது குற்றவாளியை அந்த நபர் செய்த சித்திரவதைச் செயலுக்காக குற்றவியல் அதிகார வரம்பைக் கொண்ட ஒரு வெளிநாட்டிற்கு நாடு கடத்துவதன் மூலமோ, நடவடிக்கை எடுப்பதன் மூலமோ, சர்வதேசக் குற்றவியல் அமுலாக்க முயற்சிகளில் தங்கள் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்குவதற்கு அரசுகள் கடமைப்பட்டுள்ளன. எனவே, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்களிலும் கூட சித்திரவதைக்கு எதிரான உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை CAT அங்கீகரித்து நிறுவியுள்ளது எனலாம். இதனால் சித்திரவதை செய்பவர்கள் விசாரணைகள், வழக்குத் தொடருதல், தண்டனை என்பவற்றிலிருந்து தப்பி பாதுகாப்பான புகலிடத்தை அனுபவிக்க முடியாது.

உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை CAT அங்கீகரித்திருந்தபோதும், ஒரு சில வழக்குகளில் மட்டுமே உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, CAT விதிகளின் பின்னணியில் வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக, இன்னொரு நாட்டில் அத்தகைய அதிகார வரம்பைப் பெற வேண்டிய அவசியம் ஏற்படும் போது, நமது நீதிமன்றம் உலகளாவிய சிவில் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதற்கான ஒரு வலுவான வாதத்தை முன்வைக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

சித்திரவதைப் பிரச்சினைக்கு நீதித்துறையின் தரப்பில் இத்தகைய புதுமையான, துடிப்பான அணுகுமுறையானது, உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான விதிமுறைகள், தரநிலைகள் என்பவற்றுக்கு இணங்குவதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு பொருத்தமான அமைப்பை உருவாக்குவதன் மூலம் சட்டத்திற்கு உயிரையும் இரத்தத்தையும் ஊட்டுவதாகவும் அமையும்.

சித்திரவதை தொடர்பாக, இதுபோன்ற உலகளாவிய சிவில் அதிகார வரம்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதற்கான சட்டபூர்வத்தன்மை, சர்வதேச சட்டத்தின் கீழ் சித்திரவதைக் குற்றத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் தடை காரணமாக மேலும் வலுவாக நியாயப்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகிறது.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் சர்வதேச தீர்ப்பாயத்தில் நடந்த, வழக்கறிஞர் அன்டோ ஃபுருண்ட்ரிஜா வழக்கில் சித்திரவதைக்கு எதிரான தடை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்பாயம் இவ்வாறு கூறியது:

“சித்திரவதைக்கு எதிரான தடை, அது பாதுகாக்கும் மதிப்புகளின் முக்கியத்துவத்தின் காரணமாக, ‘ஒரு ‘அடிப்படையான நெறிமுறை’ (Peremptory Norm) ஆகப் பரிணமித்துள்ளது. அதாவது, ‘ஒப்பந்தச் சட்டம்’, ‘சாதாரண’ வழக்கு விதிகள் என்பவற்றை விட சர்வதேச படிநிலையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு விதிமுறை இது. இந்த ‘உயர்ந்த நிலையின்’ மிகவும் குறிப்பிடத்தக்க விளைவு என்னவென்றால், சம்பந்தப்பட்ட பிரச்சினையோடு தொடர்பான கொள்கையை, சர்வதேச ஒப்பந்தங்களோ அல்லது உள்ளூர் அல்லது சிறப்பு பழக்கவழக்கங்களோ அல்லது அதே ‘நெறிமுறை’யுடன் வழங்கப்படாத எந்தப் பொதுவான வழக்கிலுள்ள விதிகள் மூலமாகவோ அரசுகளால் அதை ஒதுக்கிவிட முடியாது என்பதுதான்.”

“சித்திரவதைக்கு எதிரான தடையின் நியாயமான தன்மை, சர்வதேச சமூகத்தின் மிக அடிப்படையான வாழ்க்கைத் தரங்களில் ஒன்றாக இந்தத் தடை மாறிவிட்டது என்ற கருத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. கூடவே, இந்தத் தடை ஒரு தடுப்பு விளைவை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தச் சித்திரவதைத் தடை என்பது, சர்வதேச சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள் மீதும், அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் தனிநபர்கள் மீதும், ஒரு முழுமையான, அதில் இருந்து யாரும் விலகக்கூடாது என்ற அதிகாரத்தைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.”5

இன்றைய உலகில் அடிப்படை மனித உரிமைகள் பெருமளவில் மீறப்பட்டுவரும் ஒரு நிலையில் இது மிகவும் முக்கியமான ஒரு தீர்ப்பாகும்.

வெளிநாட்டில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக இத்தகைய உலகளாவிய சிவில் அதிகார வரம்பு கிடைப்பதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளியைத் தண்டிப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். இது, குற்றவியல் ரீதியான சட்ட நடவடிக்கைகளை நாடுவதன் மூலம் போதுமான இழப்பீடுகளை எதிர்பார்க்க முடியாத, சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.

சித்திரவதைக் குற்றங்கள், போர்க்குற்றங்கள், வெளிநாடுகளில் செய்யப்படும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றுக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்குப் பல அரசுகள் இப்போது அதிகாரம் பெற்றிருந்தாலும், மிகச் சில அரசுகள் மட்டுமே இத்தகைய உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பைப் பயன்படுத்தியுள்ளன. உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பைப் பயன்படுத்துவது ‘ஒகஸ்டோ பினோசே’ (Augusto Pinochet) போன்ற சில வழக்குகளுக்கும், முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் ருவண்டா போன்ற நாடுகளில் எழுந்த சூழ்நிலைகளுக்கும் பிறகு, மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளுக்கும் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

CAT ஆல் வரையறுக்கப்பட்ட பெரும்பாலான சித்திரவதைச் செயல்கள், நடைமுறையில் ஒவ்வொரு சட்ட அமைப்பின் கீழும் ஏதோ ஒரு வகையான சிவில் குற்றத்தை உருவாக்கும் என்பதால், உள்நாட்டு நீதிமன்றங்களில் உலகளாவிய அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் வெளிநாட்டில் சித்திரவதைச் செயலைச் செய்த ஒருவருக்கு எதிராக சித்திரவதை நடவடிக்கையை வெற்றிகரமாகத் தொடரவிடாமல் தடுப்பது எது என்ற கேள்வியை ஆராய வேண்டும்.

வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பான குற்றவியல் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதை, ஓர் அரசின் மன்றத்திற்கு வெளியே சித்திரவதைச் செயல்களைச் செய்தவர்களுக்கு எதிராக சிவில் தீர்வுகளைத் தேடும் நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட சிவில் நடவடிக்கைகளுக்கு நீட்டிக்க முடியுமா என்ற கேள்வி, இன்றைய உலகில் நடைபெறும் அடிப்படை மனித உரிமைகள் பாரிய அளவில் மீறப்படுவதைக் கருத்தில் கொண்டு ஆராயப்பட வேண்டும். ஒரு வெளிநாட்டு நிலத்தில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக அரசுகளால் ஏற்றுக்கொள்ளப்படும் உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பைப் போலல்லாமல், வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பான உலகளாவிய சிவில் அதிகார வரம்பைப் பற்றிய கேள்வி ஒப்பீட்டளவில் ஆராயப்படாமல் உள்ளது. தவிரவும், அது சர்வதேச சமூகத்திடமிருந்து உரிய கவனத்தைப் பெறவும் இல்லை.

சிவில் நடவடிக்கை மூலமாக, வெளிநாட்டில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பான சித்திரவதைக்கு நிவாரணம் தேடுவது, வெளிநாட்டில் செய்யப்படும் சித்திரவதை தொடர்பான குற்றவியல் வழக்குத் தொடர்வதன் மூலமாகக் கிடைக்காத சில நன்மைகளைத் தருகின்றது.

சித்திரவதை நடைமுறை, வழக்கமான சர்வதேச சட்டத்தின் கீழ் மாநிலங்கள் உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வெளிப்படையான விதிமுறைக்கும் மனிதகுலத்திற்கும் எதிரான குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்த மீறல்களுக்கு எதிரான சட்ட அமுலாக்கம் முக்கியமாக அவர்களின் உள்நாட்டு நீதிமன்றங்களில் வன்முறைக்குக் காரணமானவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான அரசின் விருப்பத்தைப் பொறுத்ததே. மேலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சூழ்நிலைகளைச் சமாளிக்க தற்காலிக சர்வதேச குற்றவியல் அதிகார வரம்பை நிறுவுவதுடன் அவை தம்மை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளன. சர்வதேச சட்டம் தொடர்ந்து அரச அடிப்படையிலானதாக இருந்து கொண்டிருக்கும் வரை, அடிப்படை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அடிப்படை மனித உரிமைகளை உள்நாட்டில் அமுல்படுத்துவது ஒரு கடினமான பணியாக மாறும்.

சித்திரவதைக் குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அடிப்படை மனித உரிமைகளை மீறுவது என்பவை தொடர்பான சில பிற குற்றங்கள் தொடர்பாக அதிகார வரம்பை உறுதிப்படுத்துவதற்கு அரசின் மீது வெளிப்படையான கடப்பாடு சுமத்தப்பட்டிருந்தாலும், 19616 இல் அடால்ஃப் ஐச்மேன் மற்றும் 19837 இல் ஜான் டாம்ஜான்ஜ்க் ஆகியோரை வழக்குத் தொடர்ந்தது போன்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான வழக்குகளில் மட்டுமே உலகளாவிய அதிகார வரம்பின் வலியுறுத்தல் காணப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ‘பினோசே வழக்கு’8 ஒரு சமீபத்திய உதாரணத்தை வழங்குகிறது.

எனவே, வெளிநாட்டில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக சித்திரவதைக்கு உள்ளானவருக்கு, உள்நாட்டு நீதிமன்றத்தில் (சித்திரவதைக்கான) சிவில் தீர்வைப் பெறுவதற்கான உரிமை என்பது குற்றவியல் தீர்வுக்கு ஒரு முக்கியமான குறைநிரப்பியாகவும் துணையாகவும் இருக்கும் என்பதுடன், குற்றவியல் தீர்வுகளை விடவும் பல நன்மைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள், அரசில் வழக்குத் தொடர்வதான சிவில் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு வேண்டிய நிதியோ பிற நிறுவன வளங்களோ (சித்திரவதை காரணமாக) உதவிக்கு இல்லாததால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால், நாட்டின் உள்விவகாரங்களில் தேவையற்ற தலையீடு செய்ததாகக் குற்றம் சாட்டப்படக்கூடும் என்பதால், மற்றொரு பிரதேசத்தில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக விசாரணைகள், வழக்குத் தொடர்தல்கள் என்பவை தொடர்பாக அரசுகளுக்கு அதிக ஊக்கமும் ஆர்வமும் இல்லை. மேலே கூறப்பட்ட உதாரணத்தின் சூழ்நிலைகளில், ஸ்பெயின் நீதிபதி பால்ட்சர் கார்சா, ஸ்பெயின் அரசாங்கத்திடமிருந்தும் அதன் வழக்குத் தொடரும் அதிகாரிகளிடமிருந்தும் கடுமையான அதிருப்தியையும் எதிர்ப்பையும் பெற்றார்.

உலகளாவிய சிவில் நடவடிக்கைகளை நடத்துவதில் உள்ளார்ந்த சிக்கல்களை பாதிக்கப்பட்டவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கலாம். முதலாவதாக, சிவில் அதிகார வரம்பை உறுதிப்படுத்திய நீதித்துறை அமைப்புக்கு அணுக முடியாத இடத்தில் சித்திரவதைச் செயல் நடந்திருக்கும். சித்திரவதைச் செயலை நிறுவுவதற்கான சான்றுகள் உடனடியாகவும் எளிதாகவும் கிடைக்காமல் போகலாம். சித்திரவதைச் செயல் பல குற்றவாளிகளை உள்ளடக்கியிருந்தால், இந்தச் செயலின் துயரமான தன்மையை நிறுவுவதற்கு தடயவியல் சான்றுகள் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். சாட்சிகளைப் பொறுத்தவரை, அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கலாம்; மேலும் அவர்கள் மற்ற நாடுகளில் சிதறிக்கிடக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் அவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுவார்கள்; மேலும் அவர்கள் அச்சமடைந்து, அதிர்ச்சியடைந்து சாட்சிகளாகத் தாமாக முன்வந்து சேரலாம்.

சாட்சிகள் நீதித்துறை பயன்படுத்தும் மொழியில் சாட்சியமளித்தால் மொழிப் பிரச்சினைகளும் ஏற்படும். விளக்கத்தில் சிக்கல்கள் இருக்கும். ஆனால் இந்தத் தடையை சிரமத்துடன் கடக்க முடியும்; ஆனால் அது உண்மையில் மிகவும் கடினமானது.

ஒவ்வொரு அரசுக்கும் அதன் சொந்தச் சட்டங்கள் இருப்பதால் பிற அதிகார வரம்புச் சிக்கல்கள் இருக்கலாம். தவிரவும், பொருந்தக்கூடிய சர்வதேச சட்டம் தெளிவாக இல்லாமல் இருக்கலாம். இந்தத் தடையைக் கூட தீர்க்க முடியும். ஆனால் உலகளாவிய சிவில் அதிகார வரம்பு என்ற அனுமானம் சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்பதை ஊக்கப்படுத்தக் கூடாது.

சிவில் தீர்வுகள் தொடர்பான உலகளாவிய அதிகார வரம்பை வலியுறுத்துவதில் கொண்டிருக்கும் நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்கள், சர்வதேசச் சட்டத்தை மொத்தமாகவும் பெரிய அளவிலும் மீறுகின்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அது வழங்குகின்ற பெரிய நன்மைகளால் ஆரோக்கியமாக விடயங்கள் அதில் அதிகமாக உள்ளன.

சித்திரவதை நடந்த நாட்டின் நீதிமன்றங்கள், வேறு எந்த நாடுகளிலும் அரசியல் மேலோட்டங்கள் மற்றும் சார்புகளிலிருந்து விடுபட்டு பாரபட்சமற்ற முறையில் நீதியை வழங்கும் நிலையில் இல்லாததால், உலகளாவிய அதிகார வரம்பின் இத்தகைய வலியுறுத்தல் முழுமையான சுதந்திரத்தையும் புறநிலைத்தன்மையையும் உறுதி செய்யும்.

அடிப்படை மனித உரிமைகள் மீறல் அதிகரித்து வருவதை எதிர்கொண்டு, சர்வதேச சமூகம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுபவர்களை சர்வதேச மட்டத்தில் நீதிக்கு முன் நிறுத்தியிருந்தால், ருவாண்டா மற்றும் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் தண்டனை வழங்கும் நோக்கத்துடன் வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பான சிவில் அதிகார வரம்பை உலகளாவிய முறையில் வலியுறுத்துவதற்கு எதிராக எந்த நியாயமான காரணத்தையும் முன்வைக்க முடியாது. ருவாண்டா மற்றும் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்குவதற்குப் பின்னால் உள்ள அடிப்படைக் காரணம் சர்வதேச மட்டத்தில் வன்முறையை வெறுப்பதாக இருந்தால், உலகளாவிய அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் சித்திரவதை செய்வதற்கான சிவில் தீர்வுகளை மறுப்பதற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.

மனித உரிமைகளுக்கான ஆட்சிகள் தமது உள்ளார்ந்த சுதந்திரத்தை விட பலவீனமான தார்மீகக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டவை. அவை, மனித உரிமை மீறல்கள் போன்ற ஒரு நெறிமுறை நிலவுகின்ற ஒரு வெளிநாட்டுச் சூழலில், பழிவாங்கல் அல்லது அது போன்ற வேறு எந்தத் தீவிர நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் அளவுக்கான நேரடியான தாக்கத்தை மற்றொரு நாட்டின் மீது மிக அரிதாகவே ஏற்படுத்துகின்றன.

சில நாடுகளுக்கு, அந்நிய நாடுகளின் பிரதேசங்களில் செய்யப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலகளாவிய அதிகார வரம்பை வலியுறுத்தும் உரிமையும் அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, அத்தகைய கூற்று அந்த நாட்டின் சட்டமா அதிபர் போன்ற நீதி நிர்வாகத்தில் மிக உயர்ந்த மட்ட அதிகாரிகளின் ஒப்புதலைப் பொறுத்ததாகவே அமைகிறது.

போர்க்குற்றவாளிகள் மீதான விசாரணைக்கான ஆணையத்தின் நடைமுறையின்படி, மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக குற்றவாளிகளை விசாரிக்கத் தொடங்குவதும் வழக்குத் தொடுப்பதும் சட்டமா அதிபரால் மட்டுமே மேற்கொள்ளப்படக்கூடிய சூழ்நிலைக்கு கனடா ஓர் உதாரணமாக விளங்குகிறது. எனவே, அடிப்படை மனித உரிமைகள் மீறலுக்காக குற்றவியல் வழக்குத் தொடுப்பது சித்திரவதைக்கு ஆளானவருக்கு ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அதன் வெளிநாட்டு நிலங்களில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பான சிவில் நடவடிக்கைகள் மீதான சிவில் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வது, அதன் ஒப்பந்தக் கடமைகள், ATCA9, TVPA10 வடிவிலான உள்நாட்டுச் சட்டங்களைக் குறிப்பிடுவதன் மூலம் நியாயப்படுத்தப்படலாம். ஆனால் CAT ஒப்பந்தக் கடமைக்கு உடன்பட்டிருக்காத, ATCA, TVPA போன்ற உள்நாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் வேறு எந்த நாடாவது வெளிநாட்டில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக சிவில் அதிகார வரம்பை ஏற்க முடியுமா?

வெளிநாட்டுக் குற்றவாளியின் கையால் சித்திரவதை செய்யப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற சித்திரவதை தொடர்பான நடவடிக்கைகள் கிடைப்பது மிகுந்த நன்மை பயக்கும். அடிப்படை மனித உரிமை விதிமுறைகளை மீறும் செயல்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்த ஒரு பயனுள்ள நிறுவன வழிமுறை இல்லாத நிலையில் இது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

ஓர் ஒப்பந்தம் இல்லாவிட்டாலும், அல்லது CAT வடிவத்தில் உள்நாட்டு சட்டத்தை இயற்ற முடியாவிட்டாலும் கூட, ஒரு நாடு வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய சிவில் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. சித்திரவதைக்கு எதிரான தடை என்பது சர்வதேச பொதுச் சட்டத்தின் கீழ் நீதித்துறை மற்றும் வேலைத்தலச் சூழல் என்பவை சார்ந்த ஒரு கடப்பாடாகும்.

சர்வதேச சமூகத்தில், உலகளாவிய அக்கறை கொண்ட விஷயங்களில் அரசுகளுக்கும் உலகளாவிய அதிகார வரம்பு உள்ளது என்பது தெளிவாகிறது. அடிப்படை மனித உரிமை விதிமுறைகளை மீறுவது மற்றொரு அரசால் செய்யப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் சர்வதேச சட்டத்தின் கீழ் ஒவ்வொரு அரசுக்கும் ஆர்வமும் கடப்பாடும் உள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த நோக்கத்தைக் கருத்தில் கொண்டு மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் சித்திரவதை போன்ற அடிப்படை மனித உரிமை விதிமுறைகளை மீறுவது தொடர்பாக உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்ள அரசுகள் கடமைப்பட்டுள்ளன.

எனவே, அடிப்படை மனித உரிமைகளின் கொடூரமான மீறல் தொடர்பாக உலகளாவிய அதிகார வரம்பின் கூற்றுகளை நியாயப்படுத்தும் சர்வதேச சட்டத்தின் கொள்கைகள், குறிப்பாகச் சித்திரவதை போன்றவை தொடர்பான அடிப்படை மனித உரிமைகள் தொடர்ந்தும் முறையாக மீறப்படும் சூழ்நிலையில், உலகளாவிய சிவில் அதிகார வரம்பைப் பயன்படுத்தும் அவசியத்தின் தேவையை வலுப்படுத்தவும் அதை உறுதிப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இங்கே வாதிடப்படுவது என்னவென்றால், உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பின் சூழலில் முன்வைக்கப்படும் வாதம் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய சிவில் அதிகார வரம்பின் சூழலிலும் பயன்படுத்தப்படலாம் என்பதுதான். மனித உரிமை மீறல்களின் தீவிரத்தன்மை மற்றும் அவற்றின் அளவைக் கருத்தில் கொண்டு, அவை குற்றவியல் அதிகார வரம்பை மீறியதாக வலியுறுத்துவதை நியாயப்படுத்த முடியும். சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்படும் சித்திரவதை, ஓர் அடிப்படை மனித உரிமைகோரலுக்கான நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது என்பதற்கு எந்தவிதமான காரணங்களும் இல்லை.

சித்திரவதை அல்லது அடிமைத்தனம் போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்கள் சர்வதேச சிவில் சட்டத்தால் தவறாகக் கருதப்படவில்லை என்ற காரணம், வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய அதிகார வரம்பை வலியுறுத்துவதிலிருந்து அரசுகளைத் தடுப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது. சித்திரவதையைத் தடுப்பதுதான் சர்வதேச சமூகத்தின் தேவையாக இருந்தால், அத்துடன் அது குறிப்பாக இந்த விஷயத்தைக் கையாளும் பலதரப்பு சர்வதேச மற்றும் பிராந்தியக் கருவிகள் மற்றும் மரபுகளை ஏற்றுக்கொள்ள வழிவகுத்திருந்தால், சித்திரவதையின் உண்மைகள் தொடர்பாக உலகளாவிய சிவில் அதிகார வரம்பை வலியுறுத்துவதற்கு இதுவே போதுமான நியாயமாகும்.

சர்வதேச ஒப்பந்தம் மற்றும் சட்டத்தை செயற்படுத்தும் சட்டம் என்பவை இல்லாத நிலையில் சர்வதேச விதிமுறைகளைக் குறிப்பிடுவதன் மூலம் உலகளாவிய சிவில் அதிகார வரம்பை வலியுறுத்துவது குறித்த கேள்வி அரசுகளுக்குச் சிக்கலாக இருந்தால், குறைந்தபட்சம் CAT இன் சூழலில் உலகளாவிய சிவில் அதிகார வரம்பை வலியுறுத்துவதன் சாத்தியக்கூறுகள் பற்றிய சில பரிசீலனை தேவை.

CAT இன் விதிகளை ஆராயும்போது அது தெளிவாகிறது: வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய குற்றவியல் அதிகார வரம்பை அரசுகள் ஏற்க அனுமதித்தாலும், சித்திரவதைச் செயல்கள் தொடர்பாக உலகளாவிய சிவில் அதிகார வரம்பை ஏற்றுக்கொள்வதற்காக அரசுகள் மீது அத்தகைய வெளிப்படையான கடமையை அது விதிக்கவில்லை. CAT இன் பிரிவு 14 மட்டுமே சிவில் அதிகார வரம்பிற்கு ஏற்பாடு செய்யும் ஒரே பிரிவு.

CAT இன் பிரிவு 14 இன் படி, சித்திரவதைச் செயலால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதையும், நியாயமான மற்றும் போதுமான இழப்பீட்டிற்கான நடைமுறைப்படுத்தக்கூடிய உரிமையைப் பெறுவதையும் உறுதி செய்ய மட்டுமே அரசு தரப்புத் தேவைப்படுகின்றது. இதில் முடிந்தவரை முழு மறுவாழ்வுக்கான வழிமுறைகள் மற்றும் ஒரு பயனுள்ள சிவில் தீர்வை வழங்குவது போன்ற குறிக்கோள்களும் உள்ளடங்குகின்றன. CAT அல்லது ICCPR இல், ஒரு நீதிமன்றம் அதன் சொந்த அரசின்கீழ் நடந்த சித்திரவதைச் செயல்களை மட்டுமே கருத்தில் கொள்ள முடியும் என்று பரிந்துரைக்கும் அம்சங்கள் எதுவும் இல்லை.

இந்த நாட்டிலும் நீதித்துறை, வெளிநாடுகளில் செய்யப்படும் சித்திரவதைகள் தொடர்பாக முறையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக, சந்தர்ப்பம் தேவைப்படும் போதெல்லாம் சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு துடிப்பான மற்றும் வலுவான அணுகுமுறையை வெளிப்படுத்த முடியும்.

கட்டுரையாசிரியர் பற்றிய குறிப்பு:

நீதியரசர் கலாநிதி சந்திரதாச நாணயக்கார ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஆவார். மேலும் நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகளை மீறியதற்காக CMC உறுப்பினர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு மற்றும் மேல் மாகாண முதலமைச்சருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற பல விசாரணை ஆணைக்குழுக்களுக்குத்  தலைமை தாங்கிப் பங்கேற்றுள்ளார்.

அடிக்குறிப்புகள்:

  1. சர்வதேச சட்ட ஆணையத்தின் ஆண்டு மலர் (1976) தொகுதி ii, பகுதி 2 (N/CM 4 SERA/ 1976) இணைப்பு (கட்:2) அத்தியாயம் III B: அரச பொறுப்புக் குறித்த வரைவுக் கட்டுரைகள்: கட்டுரை 9. சர்வதேச சட்டத்தின் கீழ் கைதிகளைக் கையாளல்: Nigel Rodley  பார்க்கவும்: The Treatment of Prisoners under International Law. Clarendon Press Oxford,1987.
  2. இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுப்பது மற்றும் தண்டிப்பது தொடர்பான மாநாடு (1948), எடுத்துக்காட்டாக, பொதுமக்களை நடத்துவது தொடர்பான மாநாடு IV இன் பிரிவு 147 பின்வருவனவற்றை வழங்குகிறது: முந்தைய கட்டுரையுடன் தொடர்புடைய கடுமையான மீறல்கள் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றை உள்ளடக்கியவை; இந்த மாநாட்டால் பாதுகாக்கப்பட்ட நபர்கள் அல்லது சொத்துகளுக்கு எதிராகச் செய்யப்பட்டால், வேண்டுமென்றே கொலை செய்தல், சித்திரவதை செய்தல் அல்லது மனிதாபிமானமற்ற முறையில் நடத்துதல் உயிரியல் பரிசோதனைகள் உட்பட வேண்டுமென்றே பெரும் துன்பம், அல்லது உடல் அல்லது ஆரோக்கியத்திற்குக் கடுமையான காயம், பாதுகாக்கப்பட்ட நபரைச் சட்டவிரோதமாக நாடுகடத்தல் அல்லது இடமாற்றம் செய்தல் அல்லது சட்டவிரோதமாகச் சிறையில் அடைத்தல், பாதுகாக்கப்பட்ட நபரை விரோத சக்தியின் படையில் பணியாற்றக் கட்டாயப்படுத்துதல், அல்லது இந்த மாநாட்டால் பரிந்துரைக்கப்பட்ட நியாயமான மற்றும் நீதிமன்ற விசாரணையின் உரிமைகளை ஒரு பாதுகாக்கப்பட்ட நபரிடமிருந்து பறித்தல், பணயக்கைதிகள் மற்றும் இராணுவத் தேவையால் நியாயப்படுத்தப்படாத மற்றும் எடுத்துச் செல்லப்படாத சொத்துகளை விரிவாக அழித்தல் மற்றும் கையகப்படுத்துதல்.
  3. ஜெனீவா உடன்படிக்கை 1 பிரிவு 49, ஜெனீவா உடன்படிக்கை I, பிரிவு 50, ஜெனீவா உடன்படிக்கை III பிரிவு 129, ஜெனீவா உடன்படிக்கை IV, பிரிவு 146. நிகல் ரோட்லி குறிப்பு 1 ஐப் பார்க்கவும்.
  4. சித்திரவதை மற்றும் பிற கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சை அல்லது தண்டனைக்கு எதிரான சர்வதேச மாநாடு. இலங்கை இந்தச் சர்வதேச மாநாட்டை ஜனவரி 3, 1994 அன்று ஏற்றுக்கொண்டது.
  5. வழக்கறிஞர் vs ஆட்டோ ஃபுருங்கிசிஜா வழக்கு எண். IT-95-17/T, 10 டிசம்பர் 1998, முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயம் வழியாக.
  6. AG of Israel v Eichman (1961) 361 LR5
  7. Demjanjuh v Petrovsk (1985) 776 F 2d 571
  8. Regina v Bartle and the Commissioner of Police for the Metropolis and other expand Pinochet 38 ILM (581) (1999)
  9. Alien Tort Claims Act
  10. Torture Victim Protection Act


About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்