1983 - 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
29 நிமிட வாசிப்பு

1983 – 1991: உச்சமடைந்த இனப்படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 2

March 4, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

குமுதினிப் படகுப் படுகொலைகள்

குமுதினிப் படகுப் படுகொலைகள், 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கிறது. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

‘குமுதினி’ 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத் தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை, முன்பகுதி, பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

குமுதினிப் படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. குறிகாட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப்படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோணக் கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகளும் இரும்புக் கம்பிகளும் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் ஆன, இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடுதண்டுப் பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது.

இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் மக்களை அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடுதண்டுப் பகுதியில் போட்டனர். இப்படிக் கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்குக் கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். கடற்படையினரின் கடுமையான தாக்குதலின் போது அலறியவர்கள், மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, ‘இறந்துவிட்டனர்’ எனக் கருதப்பட்ட பின்னர் கடலில் வீசப்பட்டனர். வலியில் அவலக்குரல் எழுப்பாமல், இறந்தவர்களைப் போல நடித்து உயிர் பிழைத்தவர்களும் உண்டு. பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் சர்வதேச மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது. 71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

தளபதி தாஸ் கொலை

டெலோ இயக்கத்திற்குள் தாஸிற்கும் பொபி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இயக்கத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டிய தேவை அதன் தலைவர் சிறீசபாரட்ணத்திற்கு ஏற்பட்டது. எனினும் பொபி மீது அவரின் பரிவு காணப்பட்டதாலும், தாஸ் தனது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை சிறீசபாரட்ணம் உணர்ந்ததாலும் தாஸைக் கொலை செய்ய எண்ணினார். பொபியை அனுப்பி தாஸை பேச்சுவார்த்தைக்கு என அழைத்தார். பேச்சுவார்த்தைக்கு என யாழ்ப்பாண வைத்தியசாலை தேர்ந்தெடுக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு மூன்றாம் மாதம் 11 ஆம் திகதி யாழ் வைத்தியசாலைக்கு மோகன் (முல்லைதீவு), காளி (பருத்தித்துறை), கிசான் (திருகோணமலை), பீட்டர் (வதிரி) ஆகிய மெய்ப்பாதுகாவலர்களுடன் வந்த தாஸ், மெய்ப்பாதுகாவலர்களுடன் சேர்த்து பொபி தலைமையில் காத்திருந்த சிறீசபாரட்ணம் குழுவினால் கொல்லப்பட்டார்.

பெங்களூர் பேச்சுகள் – 1986

1986 நவம்பர் நடுப்பகுதியில் தென்னாசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டுறவு (சார்க்) மாநாடு பெங்களூரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் போது இலங்கை, இந்திய அரசுத் தலைவர்களின் சந்திப்பு இடம்பெற இருந்தது. இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்பட்டதால், அரசுத் தலைவர்களின் சந்திப்போடு இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண எண்ணினார் ராஜீவ் காந்தி. இதன்படி 1986 நவம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் பெங்களூரில் நடைபெறவிருந்த சார்க் உச்சி மாநாட்டில் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்க ஜெயவர்த்தன நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்படி அவர் தயாரித்த திட்டமானது இனத்துவ, மத வேறுபாட்டின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தை மூன்று கூறுகளாகப் பிரிப்பது பற்றியதாக அமைந்திருந்தது.

அதாவது இத்திட்டத்தின்படி தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள் என்ற மூன்று இனத்தவர்களுக்குமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லைகள் மூன்று பிரதேசக் கூறுகளாக மாற்றி அமைக்கப்பட இருந்தன. இத்திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகள் கிழக்கிலிருந்து துண்டாடப்பட்டு ஊவா மாகாணத்துடன் இணைக்கப்படும். திருகோணமலை நகரமும் துறைமுகமும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கள் வாழும் பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு சிங்கள மாநிலமாக மாற்றப்படும். இச்சிங்கள மாநிலம் சிங்கள அரசு நிர்வாகிகளின் கீழ் செயற்படும். மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளும் இணைந்ததாக முஸ்லிம் பிரதேசம் உருவாக்கப்படும். திருகோணமலையில் தமிழர்கள் வாழும் பகுதிகளும் (திருகோணமலை நகரம், சிங்களக் குடியிருப்புகள், துறைமுகம் தவிர்ந்த பகுதிகள்) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைந்ததாக தமிழர் மாகாணம் உருவாக்கப்படும் என ஜெயவர்த்தன சிங்களவர்களுக்குச் சாதகமான திட்டத்தை உருவாக்கினார்.

இவ்வாறான ஒரு தீர்வுத் திட்டம் சார்ந்து பேச்சுகளை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பெங்களூருக்கு அழைக்கப்பட்ட போது, “தமிழர் தாயகம் என்பது ஒன்றுதான்; அதனைப் பிரிக்க முடியாது. ஜெயவர்த்தன அதனைப் பிரித்துக் கூறுபோட நான் அனுமதிக்கப் போவதில்லை” என்று தெரிவித்தார். இக்கருத்தைத் தொடர்ந்து பெங்களூர் பேச்சுகளும் தோல்வியில் முடிவடைந்தன.

தமிழீழ விடுதலை இயக்கம் தடை செய்யப்படல்

தமிழீழ விடுதலை இயக்கம் (Tamil Eelam Liberation Organization; டெலோ, TELO) என்பது இலங்கைத் தமிழ் ஆயுத அமைப்பும் அரசியல் கட்சியும் ஆகும். இது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுதந்திரத் தமிழீழம் அமைக்கும் நோக்கோடு சிறீசபாரட்ணம், நடராஜா தங்கதுரை, குட்டிமணி ஆகியோரால் 1979 இல் நிறுவப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோர் 1983 கறுப்பு யூலைக் கலவரங்களின் போது வெலிக்கடைச் சிறையில் சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டார்கள். இவ்வமைப்பு 1986 வரை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடுகளை அடுத்து, இவ்வமைப்பின் தலைவர் சிறீசபாரட்ணம் உட்படப் பெருமளவு போராளிகள் புலிகளினால் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்த டெலோ தலைவர்கள் அதே பெயரில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து, நாடாளுமன்ற மற்றும் உள்ளூர் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொழும்பு புறக்கோட்டை குண்டு வெடிப்பு – 1987

1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடிப்பில் 110க்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த நடவடிக்கை ஈரோஸ் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. 1987 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரந்தலாவ கிராமத்தில் 28 சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர். 27 புத்த பிக்குகள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்ட இளம் புத்த பிக்கு ஒருவர் இராணுவத்தில் சேர்ந்து போரிட்டு, 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆனையிறவு யுத்தத்தில் உயிரிழந்தார். அவருக்கு ‘பரமவீர விபுசனய’ என்ற பட்டம் கொடுத்துக் கௌரவிக்கப்பட்டதுடன், ‘கசலக’ என்னும் இடத்தில் சிலை ஒன்றும் நிறுவப்பட்டது. நாமல்வத்த என்ற இடத்தில் சிங்கள மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பல சிங்களவர்கள் கொல்லப்பட்டனர்.

ஒப்பரேஷன் பூமாலை

1987 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தி ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ என்கிற பெயரில் அரசுப் படைகள் வடமாராட்சி மீது தாக்குதல்களைத் தொடங்கின. இத்தாக்குதலில் அரசுப் படைகள் வெற்றி பெற்றுக்கொண்டன. கிட்டத்தட்ட வடமாராட்சிப் பகுதிகள் அனைத்தும் அரசுப் படைகளின் கையில் வந்தன. முழு யாழ் குடாநாட்டையும் அரசுப் படைகள் பிடித்து விடுவர் என்னும் நிலையில் பயம்கொண்ட இந்திய அரசாங்கம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. வடபகுதியில் பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குகின்றோம் என்னும் அடிப்படையில், இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்கள், எரிபொருட்கள் ஏற்றிய 19 படகுகள், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் திகதி இலங்கையின் வடபகுதியை நோக்கி வந்தன. ஆனால் இப்படகுகள் இலங்கையின் கடற்பிராந்திய எல்லையில் வைத்து இலங்கை அரசின் உத்தரவுக்கு இணங்க இலங்கைக் கடற்படையால் திருப்பி அனுப்பப்பட்டன. இதை எதிர்பாராத இந்திய அரசு சினம் கொண்டு அடுத்த நடவடிக்கையைத் திட்டமிட்டது.

இதைத் தொடர்ந்து, பெங்களூர் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட ஐந்து இந்திய விமானங்கள், ‘மிராஜ் 2000’ என்ற நான்கு யுத்த விமானங்களின் பாதுகாப்புடன் இலங்கையின் ஆகாயப் பிராந்தியத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து, வடபகுதிக்குள் சுமார் 25 தொன் நிவாரணப் பொருட்களை ‘பரசூட்’ மூலம் போட்டன. 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆகாய நடவடிக்கை ‘ஒப்பரேஷன் பூமாலை’ எனப்பட்டது. ஒப்பரேஷன் லிபரேஷன் மூலம் உற்சாகமடைந்திருந்த இலங்கை அரசாங்கம் ஒப்பரேஷன் பூமாலை மூலம் மிகவும் அதிர்ச்சி அடைந்தது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் – 1987

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கும் தோல்வியைத் தந்தது. தமிழ் மக்களுக்கும் தோல்வியைத் தந்தது. இந்தியப் படைகள் தமிழ் மக்களினதும், சிங்கள மக்களினதும் கடுமையான எதிர்ப்பைப் பெற்று அவமானகரமாக வெளியேறியன. இது ஒரு வகையில் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கும் காரணமாகியது. ஏட்டிக்குப் போட்டியாக புலிகளை அழிக்க வேண்டும் என்ற வெறியில் யுத்தத்திற்குப் பக்கபலமாக நின்ற இந்தியா, தனக்குச் சார்பான வலுச் சமநிலையையும் சீனாவிற்குச் சார்பாகத் திருப்பிவிட்டிருக்கிறது. இன்று சீனாவின் செல்வாக்கினை எவ்வாறு முறியடிப்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றது. சீனாவினை அகற்றுதல் என்ற ஒற்றை இலக்கிற்காக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தும் கூட, தனது இலக்கில் ஒரு அங்குலம் கூட அதனால் முன்னேற முடியவில்லை. இந்தியாவின் அணுகுமுறையை நடைமுறைப்படுத்திய சிவசங்கர் மேனன், நாராயணன் போன்ற அதிகாரிகள் கூட தற்போதைய இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விமர்சிக்கின்றனர்.

மறுபக்கத்தில் இந்தியாவின் அணுகுமுறை தமிழ் மக்களை பெருந்தேசியவாதத்தின் வாயில் கொண்டு போய்விட்டிருக்கின்றது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வடக்கு – கிழக்கு இணைப்பையோ, அதிகாரங்களையோ தமிழ் மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க இந்தியாவால் முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கொண்டு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கம் கூட இந்தியாவிற்குக் கைகொடுக்கவில்லை.

1977 ஆம் ஆண்டு 5/6 பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்த ஜே.ஆர். அரசாங்கம் அமெரிக்காவிற்கு இலங்கையின் கதவுகளை வரையறையின்றித் திறந்துவிட்டது. அமெரிக்கா தலைமையிலான அணிக்கும், சோவியத் யூனியன் தலைமையிலான அணிக்கும் இடையே உச்சக்கட்டப் பனிப்போர் நிலவிய காலகட்டம் அது. சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பைக் கண்டு அஞ்சிய அமெரிக்கா அவசரம் அவசரமாகப் பாகிஸ்தானுடன் இராணுவக் கூட்டு ஒப்பந்தத்தைச் செய்தது. சீனாவும் பாகிஸ்தானுக்கு இராணுவ உதவிகளை வழங்கியது. ஏற்கெனவே சீனப் படையெடுப்பால் பலத்த அடிவாங்கிய இந்தியா தனது புகழ்பெற்ற அணிசேராக் கொள்கையைக் கைவிட்டு சோவியத் யூனியனுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செய்திருந்தது.

அமெரிக்கா – பாகிஸ்தான் கூட்டு இந்தியாவிற்கு அச்சத்தைக் கொடுத்த நிலையில், தனது வாசற்படியான இலங்கையும் அமெரிக்காவிற்குக் கதவுகளைத் திறந்துவிட்டமை இந்தியாவிற்குப் பலத்த அச்சத்தை உருவாக்கியது. அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான ஜே.ஆர். ஜெயவர்த்தன தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியாவிற்கு எதிரான சக்திகளான அமெரிக்கா, பாகிஸ்தான், இஸ்ரேல், தென்னாபிரிக்கா, சீனா போன்றவற்றிடமிருந்து ஆயுத உதவிகளையும் இராணுவப் பயிற்சிகளையும் பெற்றார்.

அமெரிக்கா, இலங்கைக்கான தனது உதவிகளை இராணுவ, தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரேலுக்கூடாகவே வழங்கியது. கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தில் இதற்காக இஸ்ரேல் நலன்புரிப் பிரிவு திறக்கப்பட்டது. இஸ்ரேலின் உதவியுடன் இலங்கையின் கடற்படை நவீனமயமாக்கப்பட்டுக் கட்டியெழுப்பப்பட்டது. இஸ்ரேலின் உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவான ‘சின்பெற்’ தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தை நசுக்குவதற்கான போரியல் நுட்பங்களை விசேட அதிரடிப் படைக்கு வழங்கியது. அமெரிக்கா சிலாபத்தில் ‘அமெரிக்காவின் குரல்’ வானொலிச் சேவையை விரிவாக்கம் செய்தது. திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்களையும் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொள்ள முயற்சித்தது. அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கைக்கு அடிக்கடி வருகை தந்து ஆலோசனை நடத்தினர். இந்தப்போக்கு அமெரிக்காவுடன் இரகசிய இராணுவ ஒப்பந்தத்திற்கு இலங்கை செல்லுமா என்ற அச்சத்தையும் இந்தியாவிற்கு ஏற்படுத்தியது.

இன்னோர் புறத்தில் பிரித்தானியாவின் ‘கினிமினி’ சேவை அமைப்பின் படை நிபுணர்களும் அதிரடிப்படைகளுக்கு விசேட பயிற்சிகளை வழங்கினர். பாகிஸ்தானின் விசேட படைப்பிரிவும் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கியது. ‘கருஞ்சிறுத்தைகள்’ என்ற அதிரடிப் படைப் பிரிவும் பாகிஸ்தான் ஆலோசனையில் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இந்திய நலன்களுக்கு விரோதமான சக்திகள் இலங்கையில் காலூன்றுவது தனது தேசிய பாதுகாப்பிற்கும், புவியியல் – கேந்திர நலன்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என இந்தியா கருதியது. இந்தியத் தலையீட்டிற்குப் பிரதான காரணம் இவைதான். 1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலை அழிவுகளும், அதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்புகளும் தலையிடுவதற்கான களச்சூழலை உருவாக்கின. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் கொடுப்பது எனத் தீர்மானித்தார். இதன் நோக்கம் தமிழர்களுக்கு தமிழீழத்தைப் பெற்றுக் கொடுப்பதல்ல. மாறாக ஜே.ஆரைப் பணியவைத்து இலங்கையை இந்தியாவின் செல்வாக்கின் கீழ் கொண்டு வருவதே! இலங்கையைப் பணியவைப்பதற்காக தமிழ்ப் பிராமணரான கோபாலசாமி பார்த்தசாரதி மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்திய உளவுப்பிரிவினூடாக தமிழ் இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு ஆயுதமும் பயிற்சியும் வழங்கப்பட்டன. முதலில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ், புளொட் இயக்கங்களுக்கும், பின்னர் புலிகளுக்கும் இவை வழங்கப்பட்டன. இந்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக உளவுப்பிரிவைச் சேர்ந்த ஆர்.என். ராவ், கிரிஸ்சக்சேனா, சங்கரன் நாயர் என்போரைக் கொண்ட குழுவையும் இந்திரா காந்தி உருவாக்கினார். இம்மூவரும் இந்திரா காந்தியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர்.

இந்திரா காந்தியின் முயற்சியினால் இலங்கைப் படைகளுக்கு எதிரான இயக்கங்களின் தாக்குதல்கள் அதிகரிக்கத் தொடங்கின. வல்வெட்டித்துறை நெடுங்காடு தாக்குதல், ஒட்டிசுட்டான் காவல் நிலையத் தாக்குதல், பொலிகண்டி தாக்குதல்கள், வெள்ளாங்குளத் தாக்குதல்கள், வல்வெட்டித்துறை காவல் நிலையத் தாக்குதல்கள், கரவெட்டி தாக்குதல் என ஒரு மாதத்திலேயே பல தாக்குதல்கள் இடம்பெற்றன. ஜே.ஆர். அரசாங்கம் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது.

இந்தத் தீவிரச் சூழ்நிலையில்தான் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 31 ஆம் திகதி இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்ப்பாதுகாவலர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் முன், பின் அனுபவமில்லாத ராஜீவ் காந்தி பதவிக்கு வந்தார். இந்திரா காந்தியின் மரண நிகழ்விற்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியாவிற்கு அடங்கிப் போவதற்கான சைகையை நேரடியாகவே ராஜீவ் காந்தியிடம் காட்டினார். இந்தியா எதிர்பார்த்ததும் இதுதான். இதன் பின்னர் இந்தியா விடுதலை இயக்கங்களை அடக்கத் தொடங்கியது. விடுதலை இயக்கங்களுக்கு அதிக விருப்பம் இல்லாத நிலையிலேயே திம்பு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்தது. இந்திய உளவுப்பிரிவைக் கொண்டு விடுதலை இயக்கங்களுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. தமது பேரம் பேசும் நிலையை உயர்த்துவதற்காக இலங்கை இராணுவம் பலவீனமாகும் வரை பேச்சுவார்த்தைக்குச் செல்வதை விடுதலை இயக்கங்கள் விரும்பியிருக்கவில்லை.

இந்தியாவின் இந்த அழுத்தங்களுக்கு முகம் கொடுப்பதற்காகவும், விடுதலைப் போராட்டத்தை ஐக்கியப்பட்ட நிலையில் முன்கொண்டு செல்வதற்காகவும் விடுதலை இயக்கங்களினால் ‘ஈழத்தேசிய விடுதலை முன்னணி’ என்ற அமைப்பு 1984 சித்திரையில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் என்பன இணைந்தன. பின்னர் புலிகளும் அதில் இணைந்து கொண்டனர். இம்முன்னணி, முதலில் இலங்கை அரசு அரசியல் தீர்வை முன்வைத்தால்தான் பேச்சுவார்த்தைக்குச் செல்வது எனத் தீர்மானித்தது. ஆனால் இந்திய உளவுப்பிரிவினர் “நிபந்தனைகள் விதித்தால், நீங்கள் இந்தியாவிலிருந்து துரத்தப்படுவீர்கள்” என அச்சுறுத்தியமையினாலேயே விடுதலை இயக்கங்கள் எந்தவித நிபந்தனையுமில்லாமல் பேசச் செல்வதற்கு இணங்கின. இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பேச்சுவார்த்தை முறிவடைந்ததை இந்தியா விரும்பவில்லை. இந்திய மத்தியஸ்தராக திம்புவில் கலந்து கொண்ட றொமேஸ் பண்டாரிக்கும் ரெலோவின் பிரதிநிதி சத்தியேந்திராவிற்குமிடையில் பலத்த வாக்குவாதமும் இடம்பெற்றது. இந்திய அரசாங்கத்திற்கு கோபம் தாங்கவில்லை. பாலசிங்கம், சத்தியேந்திரா, சந்திரகாசன் என்போருக்கு நாடுகடத்தும் உத்தரவு விடுக்கப்பட்டது. சத்தியேந்திரா அதற்கு முன்னரே பயணமாகியிருந்தார். பாலசிங்கமும் சந்திரகாசனும் நாடுகடத்தப்பட்டனர். தமிழ்நாடு இதனை எதிர்த்துக் கொந்தளித்தது. அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் இந்திய அரசு நாடுகடத்தலை வாபஸ் பெற்றது. எனினும் விடுதலை இயக்கங்கள் மீதான இந்திய உளவுப்பிரிவின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தன. விடுதலைப் புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்கள் அச்சுறுத்தல்களுக்குப் பணிந்தன.

இந்நிலையில் புலிகள் தனித்துவிடப்பட்டனர். ஏனைய இயக்கங்களினால் தமக்கு அச்சுறுத்தல்கள் வரும் எனக் கருதி தாயகத்தில் புலிகள் இயக்கம் ஆயுதத் தாக்குதலை நடத்தி ரெலோ இயக்கத்தைத் தடைசெய்தது. தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இனையும் தடை செய்தது. புளொட் இயக்கம் தானாக ஒதுங்கிக் கொண்டது. ஈரோஸ் இயக்கத்தின் பெரும்பகுதி புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்படச் சம்மதித்தது. ஏனையவர்கள் ஒதுங்கிக் கொண்டனர். விடுதலைப் போராட்டத்தை நடத்தும் பொறுப்பைப் புலிகள் இயக்கம் தனித்துக் கையிலெடுத்தது.

இந்தச் சூழ்நிலை இந்திய அரசிற்கு மிகப் பெரும் தலைவலியாகியது. எல்லா விடயங்களையும் புலிகளுடன் மட்டும் கையாள வேண்டியிருந்தது. புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பது இலகுவானதாக இருக்கவில்லை. அவர்களைப் பணியவைக்காமல், அடங்குவதற்குத் தயாராக இருந்த சிறீலங்கா அரசினைக் கையாள முடியவில்லை. இந்நிலையில் 1986 நவம்பரில் பெங்களூரில் சார்க் உச்சிமாநாட்டின் போது புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் சிறீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவிற்குமிடையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த இந்திய அரசு முயற்சித்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன இதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றினை முன்வைக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். கிழக்கு மாகாணத்தை மூன்று துண்டுகளாகப் பிரிக்கும் திட்டத்தை ஜே.ஆர். முன்வைத்தார். தாயகத்தைக் கூறுபோடும் திட்டத்தை பிரபாகரன் ஏற்க மறுத்தார். இந்தியாவின் முயற்சி தோல்வியடைந்தது. பெங்களூருக்குப் பிரபாகரனை அழைத்துச் சென்ற போதும் இந்திய முயற்சி கைகூடவில்லை.

புலிகள் மீதான இந்தியாவின் கோபம் உச்சத்திற்குச் சென்றது. புலிகளைப் பணியவைப்பதற்காக அவர்களின் தொலைத்தொடர்புக் கருவிகள் அனைத்தையும் பறித்தது. இதனை எதிர்த்து பிரபாகரன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். தமிழகம் கொந்தளித்தது. இறுதியில் தொலைத்தொடர்புக் கருவிகளை பிரபாகரனின் காலடியில் வைத்த பின்னரே பிரபாகரன் உண்ணாவிரதத்தை நிறுத்தினார்.

இதன்பின்னர் இந்தியாவில் தங்கி நிற்பது போராட்டத்திற்கு இடைஞ்சலைக் கொடுக்கும் எனக் கருதி பிரபாகரன் தாயகம் திரும்பினார். இது புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியாவின் செயல்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது. மறுபக்கத்தில் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புலிகள் இயக்கத்தை அழிக்கும் வகையில் சிறீலங்கா அரசு ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற பெயரில் வடமராட்சித் தாக்குதலை நடத்தியது. தன்னுடைய பிடி நழுவிப்போகும் என்பதற்காக இந்தியா இத்தாக்குதலை விரும்பவில்லை.

சிறீலங்கா அரசினைப் பணியவைப்பதற்காக ‘உணவு’ இராஜதந்திரத்தை இந்தியா கையிலெடுத்தது. உணவுப் பொருட்களைக் கப்பல் மூலம் வடபகுதிக்கு அனுப்ப முயற்சிக்க, சிறீலங்கா கடற்படை கடலில் அதனைத் தடுத்தது. இந்தியா, விமானம் மூலம் உணவுப் பொட்டலங்களை யாழ்ப்பாணத்தில் போட்டது. இதன் மூலம் தெளிவான சைகை சிறீலங்கா அரசிற்குக் காட்டப்பட்டது. ‘இந்தியப் படையெடுப்பைச் சந்திக்க வேண்டி வரும்’ என்பதே அச்சைகை. ஜே.ஆர். உடனடியாகவே பணிந்தார்.

இப்பணிவைப் பயன்படுத்தி விடுதலை இயக்கங்களை விடுத்து தானே சிறீலங்கா அரசுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய அரசு தயாரானது. எப்படியாவது ஒப்பந்தம் செய்து இந்திய நலன்களுக்கு எதிரான சக்திகளை இலங்கையிலிருந்து கலைப்பதே அதன் நோக்கம். இலங்கை – இந்திய ஒப்பந்த வரைவு தயாரிக்கப்பட்டது. இதற்குப் புலிகளைச் சம்மதிக்க வைப்பது தான் இந்தியாவிற்கு இருந்த மிகப் பெரிய சவால். ஒப்பந்தம் பற்றி எதுவும் கூறாமலே ராஜீவ் காந்தி தீர்வுத்திட்டம் பற்றிப் பிரபாகரனுடன் பேச விரும்புகின்றார் எனக் கூறப்பட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து புதுடில்லிக்கு பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 23 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அசோக் விடுதியில் பிரபாகரனும் அவரது குழுவினரும் சிறைவைக்கப்பட்டனர். அவரது வெளித்தொடர்பு உட்பட தொலைபேசித் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் டிக்சிற் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கான நகலை பிரபாகரன் முன் வைத்தார். ஒப்பந்த நகல் ஒற்றையாட்சிக்குட்பட்ட தீர்வை சிபாரிசு செய்தது. வடக்கு – கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்படவில்லை. மாகாண சபையின் அதிகாரங்கள், செயற்பாடுகள் பற்றி தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கவில்லை. ஆயுதக் களைவு ஏற்பாடுகள் ஏற்றதாக இருக்கவில்லை. இதனால் “தமிழ் மக்களின் அபிலாசைகளைத் தீர்க்க முடியாத இந்த ஒப்பந்தத்தை ஏற்க முடியாது” எனப் பிரபாகரன் கூறினார்.

“ஏற்காவிட்டால் உங்களை இங்கு தடுப்புக்காவலில் வைப்போம்” என டிக்சிற் மிரட்டினார். “விரும்பினால் தடுப்புக்காவலில் வையுங்கள்; நாங்கள் ஏற்க மாட்டோம்” எனக் கூறினார் பிரபாகரன். கோபம் கொப்பளிக்க டிக்சிற் தனது சுங்கானைப் பிரபாகரனுக்கு காட்டியவாறு “இந்தச் சுங்கானை நான் பற்றவைத்துப் புகைத்து முடிப்பதற்குள் இந்தியப் படைகள் உங்கள் படைகளைத் துவம்சம் செய்துவிடும்” என்றார். பிரபாகரன் ஏளனச் சிரிப்புடன் “முடிந்ததைச் செய்து பாருங்கள்” என்றார். கொதிப்படைந்த டிக்சிற் “மிஸ்டர் பிரபாகரன், இத்துடன் நான்காவது தடவையாக இந்தியாவை ஏமாற்றியுள்ளீர்கள்” என்றார். அதற்குப் பிரபாகரன் “அப்படியானால் நான்கு தடவைகள் இந்தியாவிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றியிருக்கிறேன்” என்றார். டிக்சிற் ஆத்திரத்துடன் எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

இந்தியப் படைகள் அவமானத்துடன் இலங்கையை விட்டு வெளியேறிய போது கவிஞர் காசி ஆனந்தன் “டிக்சிற் சுங்கானில் இன்னமும் புகைத்து முடிக்கவில்லை” என நக்கலாகக் கூறியிருந்தார்.

பிரபாகரனை மிரட்டிப் பணியவைக்க முடியாது என அறிந்த இந்திய வெளிவிவகார அதிகாரிகளான எம்.கே. நாராயணன், சகாதேவ் பூரி போன்றவர்கள் மென்மையான முறையைக் கையாள முயற்சித்தனர். அதற்கும் பிரபாகரன் இடம் கொடுக்கவில்லை. அடுத்த முயற்சியாக எம்.ஜி.ஆர். மூலம் பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக அவரை அழைத்து வந்தனர். பிரபாகரன் மிக விரிவாக ஒப்பந்தக் குறைபாடுகளை எம்.ஜி.ஆருக்கு விளக்கினார். எம்.ஜி.ஆர். அதனை ஏற்றுக்கொண்டு “உங்கள் நிலைப்பாட்டில் நீங்கள் உறுதியாக இருங்கள்; நான் உங்களோடு இருப்பேன்” எனக் கூறிவிட்டுச் சென்றார்.

இறுதியில் ஒப்பந்தத் தினத்திற்கு முதல்நாள் ஆடி 28 ஆம் திகதி நள்ளிரவு ராஜீவ் காந்தியைச் சந்திக்க பிரபாகரனை அழைத்துச் சென்றனர். ராஜீவிடம் ஒப்பந்தக் குறைபாடுகளை விவரமாக முன்வைக்கும் படி பாலசிங்கத்தை வேண்டினார் பிரபாகரன். இது பற்றி பாலசிங்கம் பின்வருமாறு கூறுகின்றார்:

“முதலில் இலங்கையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்புப் பற்றி மிகச் சுருக்கமான கண்டன ஆய்வை முன்வைத்தேன். மிகவும் இறுக்கமான, நெகிழ்த்த முடியாத விதிகளைக் கொண்ட அரசியல் யாப்பு பெரும்பான்மையினரின் நலன்களைப் பேணும் வகையில் வரையறுக்கப்பட்டிருக்கிறது. இந்த அரசியல் யாப்பின் கீழ், மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் மத்தியில் அர்த்தபூர்வமான முறையில் அதிகாரப் பகிர்வைச் செய்வது இயலாத காரியம் என விளக்கினேன்.”

“பரந்த நிறைவேற்று அதிகாரங்களையுடைய ஜனாதிபதியை அரச அதிபராகக் கொண்ட ஓர் இறுக்கமான ஒற்றையாட்சி அரசை சிறீலங்காவின் அரசியல் யாப்பு உருவாக்கம் செய்துள்ளது. இந்த அரசியலமைப்பில் அரச நிர்வாக அதிகாரங்கள் அனைத்துமே மத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றன. இப்படியான ஒற்றையாட்சி யாப்பை இந்திய – இலங்கை ஒப்பந்தம் நிபந்தனையின்றி முழுமையாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, நியாயபூர்வமாக அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் அரசியல் கட்டமைப்பில் அடிப்படை மாற்றம் செய்வது சாத்தியமற்றது எனச் சுட்டிக்காட்டினேன்.”

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபையின் அதிகாரங்களும், செயற்பாடுகளும், நிர்வாகத் துறைகளும் தெளிவான முறையில் வரையறுக்கப்படவில்லை. ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளின் அடிப்படையில் இந்த மாகாண சபையை மேலும் திருத்தியமைத்து மேம்பாடு செய்யலாமென ஒப்பந்தத்தில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ‘டிசம்பர் 19’ தீர்வு யோசனைகளில் பல குறைபாடுகள் உள்ளதெனச் சுட்டிக்காட்டி எமது இயக்கம் ஏற்கனவே அதனை நிராகரித்துள்ளது என்பதையும் பாரதப் பிரதமருக்கு எடுத்துரைத்தேன்.”

“தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தமட்டில் தமிழரின் நில உரிமை மிகவும் முக்கியமானது. இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பில் பெரும்பான்மையான தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸ்லிம் மக்களும் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலம் அவர்களது சொந்த நிலம்; அவர்களது பாரம்பரியத் தாயக நிலம். இந்தத் தாயக நிலத்தைப் பிரிக்கும் எந்தத் திட்டத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதையும் ராஜீவ் காந்தியிடம் எடுத்துரைத்தேன்.”

“வடக்கு – கிழக்கு மாகாணங்கள் தனித்துவமான நிர்வாகப் பிரதேசமாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டிருப்பது ஓர் ஆக்கபூர்வமான சாதனை. ஆயினும், இந்த இணைப்புத் தற்காலிகமானது. இதன் நிரந்தர இணைப்பு பொதுசனக் கருத்துக் கணிப்புக்கு (வாக்கெடுப்புக்கு) விடப்பட்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அந்த வாக்கெடுப்பில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இணைப்பை எதிர்த்து வாக்களித்தால், வடக்கு – கிழக்கு நிரந்தரமாகப் பிளவுபடுவதுடன் தமிழர் தாயகம் காலப்போக்கில் சிதைந்துவிடும் என விளக்கினேன்.”

“பொறுமையுடன் மௌனமாக எனது கருத்துகளைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் அவ்வப்போது குறிப்புகளை எடுத்தார்.”

“மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரப் பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப்பட்டது; அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் விளக்கினேன். மேலும், வடக்கு – கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிடும் அதிகாரம் இலங்கையின் அரச அதிபர் ஜெயவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிங்கள இனவாதி; தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நாம் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.”

“இறுதியாக, இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென விதிப்பது அநீதியானது. எத்தனையோ ஆண்டுகளாக இரத்தம் சிந்திப் போராடி, உயிர்களைத் தியாகம் செய்து பெற்ற ஆயுதங்களை நான்கு நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு ஒப்பந்தம் வற்புறுத்துகிறது. தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்பாகவும், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தகுந்த உத்தரவாதங்கள் பெறுவதற்கு முன்னதாகவும், எமது மக்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ்வகையிலும் நியாயமாகாது என்றார் பிரபாகரன்.”

“அதற்கு ராஜீவ் காந்தி, மாகாண சபைத் திட்டம் தற்காலிகமானது; அதன் குறைபாடுகளைப் பின்னர் நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படாது; அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்று கூறினார்.”

“ஆனால், இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலன்களைப் பேணவில்லை; மாறாக, தமிழ் மக்களின் நலன்களைப் பாதிக்கின்றது. ஆகவே, இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறினார் பிரபாகரன். அவரின் உறுதியைப் புரிந்துகொண்ட ராஜீவ் காந்தி, ஒப்பந்தத்தை ஏற்க வேண்டாம்; ஆனால் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருங்கள் எனக் கேட்டார்.”

“மாகாண சபைத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவது சாத்தியமற்றது. அந்த இடைக்காலத்தில் இடைக்கால அரசை உருவாக்கலாம். அதில் உங்கள் இயக்கம் பிரதான பாத்திரத்தை வகிக்கலாம். இந்த விடயத்தில் உங்களுடன் இரகசிய உடன்பாடு செய்யவும் தயாராக இருக்கிறேன் என்றும் கூறினார் ராஜீவ் காந்தி.”

இடைக்கால நிர்வாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது. சகல தமிழ் இயக்கங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என ராஜீவ் வேண்டினார். பிரபாகரன் அதனை ஏற்கவில்லை. இறுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈரோஸ் அமைப்பிற்கும் குறைந்த அளவில் பிரதிநிதித்துவம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசாங்கம் புதிய காவல் நிலையங்களைத் திறக்கக்கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக்கொண்டார். ராஜீவ் அதற்கும் இணக்கம் தெரிவித்தார்.

ஆயுதக் கையளிப்புத் தொடர்பாக, “அனைத்து ஆயுதங்களையும் நீங்கள் கையளிக்கத் தேவையில்லை. உங்களது படையணியையும் கலைக்கத் தேவையில்லை. நல்லெண்ணச் சைகையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும்” என்று ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். அருகில் இருந்த பண்ருட்டி இராமச்சந்திரன், “இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட பழுதடைந்த ஆயுதங்களைக் கையளித்தால் போதும்” என்றார். அதற்குப் பிரபாகரன், “இந்தியாவிடமிருந்து பெற்ற ஆயுதங்கள் எல்லாம் பழுதடைந்தவையே தான்” எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.

அதிகாலை இரண்டு மணிக்கு ராஜீவ் காந்தியுடனான சந்திப்பு முடிந்தது. சந்திப்பு முடியும் தறுவாயில், “பிரதமர் கூறிய வாக்குறுதிகளை எழுத்து வடிவில் பதிவு செய்து, இரு தலைவர்களும் கைச்சாத்திட்டால் என்ன?” என பாலசிங்கம் பண்ருட்டி இராமச்சந்திரனிடம் கேட்டார். அதற்கு ராஜீவ் காந்தி, “நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. வாக்குறுதிகளை நான் கட்டாயம் நிறைவேற்றுவேன். இது எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டும்” என்றார். பிரபாகரனை உடனடியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு ஒழுங்கு செய்வதாகவும் ராஜீவ் காந்தி உறுதியளித்தார்.

சந்திப்பு முடிவடையும் போது அதிகாலை 02 மணி ஆகியிருந்தது. ராஜீவ் காந்தி உற்சாகத்துடனேயே இருந்தார். அடுத்த நாள் அதிகாலை 09 மணிக்கு புதுடில்லியிலிருந்து அவர் கொழும்பு செல்ல வேண்டியிருந்தது. பிற்பகல் 03 மணிக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட ஏற்பாடாகியிருந்தது. விடுதிக்குத் திரும்பிய பின், “இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் நிறைவேறப்போவதில்லை; இதெல்லாம் அரசியல் ஏமாற்று வித்தை” எனப் பிரபாகரன் கூறினார். அடுத்த நாள், 1987 ஆம் ஆண்டு ஆடி 29 ஆம் திகதி, கொழும்பில் வைத்து இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

இலங்கை அரசு சார்பில் ஜே.ஆர். ஜெயவர்த்தனவும், இந்திய அரசு சார்பில் ராஜீவ் காந்தியும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பிரதமர் ரணசிங்க பிரேமதாச ஒப்பந்தத்தை எதிர்த்தார். கொழும்பில் போராட்டங்களும் இடம்பெற்றன. ஒப்பந்தம் நிறைவடைந்து படையினரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடற்படைச் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியின் பின்பகுதியால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். உடனடியாகச் செயற்பட்ட பாதுகாவலர்கள் அவரைப் பாதுகாப்பாக புதுடில்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கை இன முரண்பாட்டில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்களும் சிங்களவர்களுமே; அவ்விரு தரப்பினரின் தலைவர்களே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தியா அதனை மீறி தானே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இதன் மூலம் தமிழர்களின் அரசியல் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டது எனப் பலர் கருதினர். எனினும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் விடயத்திலும் இந்தியா முறையாகச் செயற்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

ஒப்பந்தத்தின் முக்கிய பிரிவுகளுக்கு அப்பால், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய நலன்கள் தொடர்பான விடயங்கள், இணைப்புக் கடிதங்கள் மூலம் சேர்க்கப்பட்டன. இந்தியாவிற்கு எதிரான சக்திகளுக்கு இலங்கைத் தீவில் இடமளிக்கப்படமாட்டாது என உத்தரவாதமும் வழங்கப்பட்டது. இருந்தபோதிலும், இவ்விலக்கிலும் இந்தியா எதிர்பார்த்தளவு வெற்றி பெறவில்லை என மதிப்பிடப்பட்டது. மொத்தத்தில், இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்திய இராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவாலாகவும், பலர் கணிப்பில் ஒரு முக்கிய தோல்வியாகவும் அமைந்தது.

தொடரும். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்