வி.எஸ். கோவிந்தசாமி: நாடற்றவர்களுக்காக ஒலித்த உரிமைக்குரல் 
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
22 நிமிட வாசிப்பு

வி.எஸ். கோவிந்தசாமி: நாடற்றவர்களுக்காக ஒலித்த உரிமைக்குரல் 

February 24, 2026 | Ezhuna

இலங்கையின் மலையக நாட்டார் மரபு, அழகியலையும் வாழ்வியலையும் மட்டுமல்ல; எதிர்ப்புவாதச் சிந்தனைகளையும் வெளிப்படுத்துபவை. சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக மலையக மக்களிடையே தோன்றிய எதிர்ப்புணர்வுகள் பல்வேறு கலைவடிவங்களாகவும் உருமாறியுள்ளன. அவ்வகையில் சமூக அடையாளச் சிக்கல், உரிமை மறுப்பு, வரலாற்றுப் புறக்கணிப்பு, பொருளாதாரத் திண்டாட்டம் ஆகிய அனுபவங்களின் எதிரொலியாக, ‘மலையக வீதிப்பாடல்கள்’ உருவாகுவதைக் காண்கின்றோம். முச்சந்தி இலக்கிய வகையின் ஒரு முக்கியகூறாக விளங்கும் இப்பாடல்கள், எழுச்சிக் கோசங்களையும், அரசியற் சிந்தனைகளையும் முன்வைப்பவை. இப்பாடல்கள் சித்திரிக்கும் விடயப்பரப்புகளையும், அவற்றை இயற்றிய பாடலாசிரியர்களையும், அவர்களுக்குப் பின்னணியாக அமைந்த சூழ்நிலைகளையும் ஆவணப்படுத்தும் நோக்கம் கருதியதாக ‘மலையக வீதிப்பாடல்கள்: சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள்’ எனும் இத்தொடர் பரிணமிக்கும். தலைப்பில் அமைந்தது போலவே, அவ்வாறு எழுந்த பாடல்கள் ஏற்படுத்திய சமூக, அரசியல் எழுச்சித் தாக்கங்கள் தொடர்பிலும் இத்தொடரின் உள்ளடக்கம் விரிவுபெறும்.

 

தற்காலிக வதிவிட விசாவில் இலங்கை வந்த வி.எஸ். கோவிந்தசாமி தேவர், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் கொழும்பு பணிமனையில் கடமையாற்றி, எழுபதுகளில் தாயகம் திரும்பியுள்ளார். ஐம்பதுகள் முதல் நாடு திரும்பும் வரை பல பாடல் நூல்களை வெளியிட்டுள்ளார். ஏனையோரைப் போல் பிரஜாவுரிமை மறுப்பைப் பற்றிப் பாடியுள்ள இவர், தற்காலிக வதிவிட விசாவில் வந்த இந்தியத் தமிழர்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளைப் பற்றியும் எழுதியுள்ளார். வதிவிட விசாவில் வந்தவர்களின் பிரச்சினை பற்றி இவர் மட்டுமே எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது (பெ. முத்துலிங்கம், பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள், பக். 222).

வி.எஸ். கோவிந்தசாமி எட்டியாந்தோட்டையில் இருந்து மிகுந்த துடிப்போடு செயற்பட்ட கவிஞர். குரல்வளமும் கம்பீரத் தோற்றமும் இவருக்குக் கிடைத்த கொடைகளாகும். ‘தமிழ்மணி முரசு’ என்ற தலைப்பில் இவர் எழுதிய பாடல்கள் அரசியல் வயமானவை (சாரல் நாடன், மலையகம் வளர்த்த தமிழ், பக். 123).

வீதிப்பாடகர்கள் அன்று ஒரு சமூகப் பணியாகவே இந்தத் துறையில் இயங்கினார்கள். தங்களுடைய அறிவுக்கேற்றவாறு சமூக சிந்தனையாளர்களாக இருந்த காரணத்தால், இவர்கள் தொழிலாளர்களை எழுச்சி பெறச் செய்வதில் முழு ஆர்வம் கொண்டிருந்தார்கள். தொழிற்சங்கத் தலைவர்களை விட, இவர்கள் தொழிலாளர்களைத் தட்டியெழுப்பி வீறு கொண்டு செயல்படுவதற்குப் பிரசாரம் செய்பவர்களாக இருந்துள்ளனர் (மு. சிவலிங்கம், மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள், பக். 72).

நாற்பது, ஐம்பதுகளில் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வளவு தூரம் சுரண்டப்பட்டு வந்துள்ளனர் என்பதை வி.எஸ். கோவிந்தசாமியின் பாடல்கள் பதிவு செய்கின்றன (பேராசிரியர் செ. யோகராசா, ஈழத்து முச்சந்தி இலக்கியம், பக். 54).

ஐம்பதுகளில் இந்திய வம்சாவளி மக்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பில் தனது பாடல்கள் ஊடாகத் தெளிவான விளக்கத்தைப் பதிவு செய்துள்ள ஆளுமையாக வி.எஸ். கோவிந்தசாமி விளங்குகிறார். தொழிற்சங்கச் செயற்பாட்டாளராகத் தொழிற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான அறிவும் இவருக்கு இருந்தது. பாதிக்கப்படுபவர்கள் தொடர்பான கரிசனையுணர்வும் இரக்க உணர்வும், அந்நிலைமை தொடர்பான எதிர்ப்புணர்வும் இவரில் பொதிந்திருந்தமையினாலே இவரால் வீச்சுமிக்க பாடல்களைப் புனைய முடிந்துள்ளது. அப்பாடல்கள் வரலாற்றையும், வரலாற்றுச் சம்பவங்களையும், பாதிப்புச் சூழ்நிலைகளையும் சித்தரிப்பதோடு, அப்பாதிப்பு நிலைகளில் இருந்து மீண்டெழுவதற்கான வழிமுறைகள் பற்றிய எத்தனிப்புகளையும் உட்சுமந்துள்ளதை அறிய முடிகிறது. சமூகம் ஒன்றின் எழுச்சிக்கான கோசங்களை விதைத்ததன் விளைவாகவே காலம் கடந்தும் வி.எஸ். கோவிந்தசாமி பேசப்படுகிறார். வி.எஸ். கோவிந்தசாமி எத்தகைய எண்ணங்களைப் பாடல்கள் ஊடாக விதைத்துச் சென்றார் என்பது பற்றிய தேடலுக்கு அவரது பாடல்களை உற்று நோக்க வேண்டியது அவசியமாகிறது.

வி.எஸ். கோவிந்தசாமி வெளியிட்ட நூல்களில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களைக் கொண்டு அவதானிக்கின்ற போது, ‘மக்கள் குரலெனும் தமிழ் மணிமுரசு’ என்ற சிற்றிலக்கியமே முதலாவதாக இனங்காணப்பட்டுள்ளமையை அறிய முடிகிறது. 13.04.1956 இல் பிரசுரம் பெற்ற இந்நூலை பி.எஸ். பாண்டியத்தேவர் பதிப்பித்துள்ளார். இந்நூலின் விநியோக நடவடிக்கைகள் நொம்பர் 73, ஹவ்லொக் ரோடு, கொழும்பு 5 என்ற முகவரியில் இருந்து இயங்கிய பாண்டியன் புக்ஸ்டாலில் இருந்து இருபத்தைந்து சதத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. பதினைந்து பக்கங்களுடன் வெளிவந்த இந்த நூலில் நான்கு தொடர் பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ‘தமிழ் மணி முரசு – முதலாம் பாகம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள பாடல் நான்கு வரிகளாக அமைக்கப்பட்டு, பதினாறு அடிகளைக் கொண்டதாக அமைகிறது. பொதுவாக வீதிப்பாடல்கள் ஏற்கனவே பாடப்பட்ட பாடல்களின் மெட்டில், அப்பாடல்களின் வரிகளுக்கு ஒத்த வகையிலேயே அமைவதுண்டு. மாறாக, இத்தொகுப்பில் அமைந்த பாடல்கள் நீண்ட வரிகளுடன் புனையப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம்.

“தோட்டத்து மக்களே பாட்டையும் படிக்கிறேன்

போட்டியும் பெருசாச்சு

தொல்லையுந் துயரமும் வர வர இலங்கையில்

சட்டமும் விரிவாச்சு

நாட்டுக்குச் சுதந்திரங் கொடுத்திட்ட வெள்ளையர்

கூட்டியும் வந்தாங்க

நன்னகரிந்திய நாட்டுத்தரகர் பலர்

காட்டியுந் தந்தாங்க”

எனத் தொடங்கும் பாடல் மிகுந்த அவதானத்தைப் பெறுகிறது. பிரித்தானியக் காலனித்துவக் காலத்தில், வறுமையின் நிர்ப்பந்தத்தால் தென்னிந்தியாவில் இருந்து தமிழர்கள் புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்து வருவதிலும் பலர் ஆர்வம் செலுத்தியிருந்தனர். தரகுப் பணத்தைப் பெற்றுக்கொள்வதையே நோக்கமாகக் கொண்டு, இதனை ஒரு தொழிலாகக் கருதி அவர்கள் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தனர். இத்துறையில் ஈடுபட்ட கங்காணிகள், முகவர்கள் போன்றோர் தரகுக்கூலியைப் பெற்று வந்தனர். ஆள்கட்டும் நடவடிக்கையில் அதீத வருமானத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டனர். கடல் மார்க்கமாக அழைத்து வருகின்ற போது, போக்குவரத்து முறைமையில் எதுவித உத்தரவாதமற்ற தன்மையே காணப்பட்டது. அவ்வாறே, மன்னார் தொடக்கம் கண்டி வரை தரைவழிப் பாதைகளும் பாதுகாப்புத் தொடர்பாக எவ்வித உத்தரவாதமும் அற்ற நிலையில் இருந்தன. கால்நடையாக மேற்கொண்ட அந்தப் பயணம், பல அலைச்சல்களையும் ஆபத்தான சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாக அமைந்தது. அதனை எடுத்துச் சொல்லும் வகையில் வி.எஸ். கோவிந்தசாமி பின்வருமாறு பாடலைத் தொடர்ந்துள்ளார்.

“சட்டி சோறு கறி தட்டப்பாரை இரை

எட்டு நாள் உணவாச்சி

சமர்த்தன் கருப்பனுக்கும் தாட்டுப் புழுவனுக்கும்

நோட்டுகள் பணமாச்சி

கட்டுமரந் தோணி வள்ளமும் ஏற்றிடக்

கலங்கியும் அழுதாச்சி

காத்தன் கருப்பனுக்கும் கடலுப்புழுவனுக்கும்

கையிலே பணமாச்சி

கருத்தை மாட்டு வண்டி முடக்கு ரோட்டு வழி

கானகம் கடந்தாச்சி

கானகங் குகை மலை வனங்கள் பல கடந்து

கண்டியும் வந்தாச்சி”

அதன் தொடர்ச்சி நிலையில், உழைப்பை அப்பணிக்கு அர்ப்பணித்த இம்மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகளையும் சட்டரீதியிலான சிக்கல் நிலைகளையும் இப்பாடல் ஊடாக எடுத்துரைப்பதை அவதானிக்கலாம். இந்திய வம்சாவளி மக்கள், இலங்கைக்கான புலப்பெயர்வில் அனுபவித்த இன்னல்கள் ஏராளம். உழைப்புச் சுரண்டல் கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும், தொழிலாளர்கள் மனமுவந்து ஆற்றிய அர்ப்பணிப்பே இலங்கையின் பெருந்தோட்டக் கட்டமைப்பு வளர்ச்சி பெறுவதற்கு முதன்மையான காரணியாக அமைந்தது. அவ்வாறு தங்களை வதைத்து உழைப்பில் ஈடுபட்ட போதிலும், மாற்றாந்தாய் மனப்பாங்குடனே இம்மக்கள் அணுகப்பட்டமை குறித்த ஆதங்கம் இப்பாடலாசிரியரில் பொதிந்திருப்பதை அவதானிக்கலாம். உரிமைகள் தொடர்பாகவும், தமிழ்மொழி அமுலாக்கம் தொடர்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எதிர்க்கப்படும் நிலைமை பற்றியும் தனது பாடல் ஊடாக வலியுறுத்தியுள்ளமையை பின்வரும் அடிகள் மூலம் அவதானிக்கலாம்.

“அரசாங்க சபையிலே பிரஜா உரிமைச் சட்டம்

அம்பலப் பேச்சாச்சி

அழகு தமிழ்மொழிக்கு சரிசமம் கொடுத்திட

அதுக்கொரு எதிர்ப்பாச்சி….”

குறித்த நாள் ஒன்றில் தோட்டங்களில் தொழிலாளர்கள் படும் அவஸ்தைகளை எடுத்துரைக்கும் முனைப்போடு வி.எஸ். கோவிந்தசாமி அவர்கள் ‘தொழிலாளர் படுந்துயரம்’ எனும் தலைப்பில் தலா நான்கு வரிகளில் நாற்பத்தெட்டு அடிகளுடன் ஒரு பாடலை அமைத்திருக்கின்றார்.

“ஆறுமணியாகு முன்னே

அடிச்சிடுவாந் தப்பு

அரண்டரண்டு எழுந்திருப்பார்

தொழிலாள மக்கள்…”

எனத் தொடர்ந்து கணக்கப்பிள்ளை மற்றும் கங்காணிகளின் அடக்குமுறை தரும் துயரங்களையும் இப்பாடல் துல்லியமாகப் பதிவு செய்கிறது. கொழுந்து பறிக்கும் களத்தில் ஏற்படும் இன்னல்கள், அட்டைக் கடிகளின் அவஸ்தை ஆகியவற்றுடன், அதிகாலையிலேயே வீட்டுப் பொறுப்புகளையும் பிள்ளைகளைப் பராமரிக்கும் கடமைகளையும் சுமந்து கொண்டு தொழில்களம் நோக்கி விரையும் தொழிலாளர்களின் வாழ்வியலையும் இப்பாடலின் உள்ளடக்கம் பிரதிபலிக்கிறது குறிப்பாக அட்டைக் கடி தரும் வேதனை பாடலில் பின்வருமாறு உள்ளடக்கப்பட்டுள்ளது.

“குடித்து திரம் ருசிகண்ட

ராம அட்டைக்கூட்டம்

கோபமுடனப்பிடவே

குழறி மனவாட்டம்

நெழி நெழிஞ்சி முளம்போடும்

அட்டைக்கடி வேதனை

நெஞ்சைவிட்டு மாறாமல்

வஞ்சியிளங் கோதை…” 

அவ்வாறே செடியாக்கப்பட்டுள்ள தேயிலை மரத்தில் கொழுந்து கொய்வதற்கான நெறிமுறைகள் பற்றிய விளக்கத்தை விவரிக்கும் முறையும் சிறப்பாக அமைகிறது. தேயிலைச் செடியில், மட்டக்கம்பின் பிரயோகத்துடன் ‘வங்கியிலை’யைப் பறிப்பதற்கு வாதுகளைப் பொருத்தமான அணுகுமுறையுடன் ஒடித்தல் வேண்டும் என்ற நெறிமுறையை வலியுறுத்துவதாகப் பாடல் அமைகிறது. தொடர்ந்து முதல் இலைகளுள்ள ‘முடிச்சிவாதை’ அப்புறப்படுத்த வேண்டியதுடன், பக்கவாதுகளையும் நீக்க வேண்டும் எனக் குறிப்பிடுவது, தேயிலை மரத்தைப் பராமரிக்கும் நுட்பம் தொடர்பான கவனத்தை ஏற்படுத்துகிறது. உரிமைகள் சார்ந்த மீறல்களைச் சாடும் பாடலாசிரியர், நம்பிக்கை தரும் வரிகளை இணைக்கவும் தவறவில்லை.

“வானிடிந்து விழுந்தாலும்

நாம் பிரளமாட்டோம்

மலை நகர்ந்து வந்தாலும்

நிலைகலங்கமாட்டோம்

நாடற்ற பிரஜையெனப்

பட்டமது சூடி

நக்கலுடன் நையாண்டி

கெட்டிடவேவோடி

மார்தட்டிக் கூறுகிறார்

தொழிலாள மக்கள்

மானாபிமானமுள்ள

மலைநாட்டு மக்கள்”

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பயில்நிலைக் கூத்துகளில் காமன்கூத்து முக்கிய இடத்தைப் பெறுகிறது. அதன் தாக்கம் இம்மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகிறது. காமன் கூத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும் போது, அது சுட்டிக்காட்டும் பல்வேறு அம்சங்கள் இம்மக்களின் வாழ்வியலில் பின்பற்றப்படும் நடைமுறைகளுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளதை அவதானிக்கலாம். காமன் கூத்தில் காணப்படும் பாடல்களைத் தழுவிய வகையிலும் இவர் தனது பாடல்களை அமைத்திருப்பதைக் காண முடிகிறது. காமன்கூத்தின் வாதப்பாடல்களில் ‘எரிந்த கட்சி’, ‘எரியாத கட்சி’ப் பாடல்கள் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்.

“மண்டலமெல்லாம் நடுங்க

தொண்டை கிழியக் கத்திடும்

மகாசூர வித்துவானே அய்யா அய்யா

மங்கள மிகுந்தகுண சங்கர நுதழ் விழியாள்

மன்மதவேல் மடிந்ததும் பொய்யா பொய்யா”

இவ்வாறான மெட்டை நேரடியாகத் தனது பாடல்களில் பிரயோகப்படுத்தும் முனைப்பையும் வி.எஸ். கோவிந்தசாமி அவர்களில் அறியலாம்.

“மாறு கொண்ட கங்காணி

கணக்கப்பிள்ளை அய்யா

மணிக் கணக்கைப் பார்த்ததுவும்

விரட்டுவதும் பொய்யோ”     

“கள்ளுக்கும் சாராயப்

போத்தலுக்கும் அய்யோ

காவடிகள் தோளேந்தி

ஆடுவதும் பொய்யோ”

பொதுவாக வீதிப்பாடல்கள் ஆண் – பெண்களிடையே ஏற்படும் பரஸ்பரப் புரிதலைப் பற்றி பேசுவது குறைவாக இருப்பதை அவதானிக்கலாம். இந்த அம்சத்தைப் பாடல்களாகப் புனைவதில், வி.எஸ். கோவிந்தசாமி மிகுந்த இலாவகத்துடனும் கலைநயத்துடனும் செயல்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ‘இருவர் உள்ளம் படும் பாடு’ எனும் பாடலில் அத்தன்மையை நன்கு உணர முடிகிறது.

“மன்னாருக்குக் கோச்சியேற

மனமுஞ் சரியில்லை – எனது

மனதுக் குகந்த பெண்ணே உன்னையும்

மறக்க முடியலை

வாழப்பிறந்த பொண்ணே – என்னை

மதிமயக்கிய கண்ணே”

பாடலின் கட்டமைப்பில் ‘துடுக்கு’ என உபதலைப்பிட்டு பின்வரும் அடிகளைத் தந்துள்ளார். இப்பாடல் நேரடியாகவே காமன் கூத்துப் பாடலைத் தழுவிய வரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘துடுக்கு’ என்பது குறும்புத்தனம், கிண்டலாகப் பேசுதல், பயமின்மை, சுறுசுறுப்பு ஆகிய கருத்துநிலைகளைச் சுட்டுகின்றது.

“அன்னப் பசுங்கிளியே

அழகுமணி ரத்தினமே

பொன்னே உனைமறந்து

என்னுயிரும் வாழாதடி

பூமரத்துச்சிட்டே – அத்தர்

புனுகு சாந்துப் பொட்டே”

‘மகுடம்’ என உப தலைப்பிட்ட பாடல் வதிவிட விசாவில் இலங்கை வந்தவர்களின் தனித்துவப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுகின்றது. தனது காதலிக்கு அன்போடு எடுத்துரைப்பது போன்றதொரு பாணியில், இப்பிரிவினர் இலங்கையிலும் இந்தியாவிலும் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் வாழ்வியல் நெருக்கடிகளையும் விளக்குவதே இப்பாடலின் முக்கிய நோக்கமாகும்.

“டில்லி ஒப்பந்தம் அமுல் ஆச்சு

டி.ஆர்,பியும் முடிஞ்சி போச்சு

தொல்லைமேலுந் தொல்லை ஆச்சு

தொடர்ந்திருந்தால் மானம் போச்சு

தொட்டனடி குயிலே – தாலி

கட்டினனடி மயிலே”

மேலும் தொடரும் வரிகள், வதிவிட வீசாவில் இலங்கை வந்தவர்களின் பிரச்சினையை மிகுந்த அழுத்தமாக முன்வைப்பதை அறியமுடிகிறது. அவ்வாறான வரிகளுக்குப் பின்வரும் வரிகள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

“வரப்போகும் பத்தாம் தேதி

பைனல் விஸா முடியுதடி……

எடுத்த விஸா முடிஞ்சு போச்சடி

இரண்டு மாதம் பிந்திப் போச்சடி

மறுத்துப் பேச மார்க்கமில்லடி

மகனுங் கவனம் பார்த்துக்கொள்ளடி…..

எமிக்கிரேஸன் சட்டத்திலும்

இமிக்கிரேஸன் திட்டத்திலும்

எத்தனையோ பாமரர்களை

இக்கதிக்குள்ளாக்கி வைத்த

திதுவும் சரிதானோ – மனு

நீதிமுறையிதுதானா”

இப்பாடல் காமன் கூத்துப் பாடலின் மெட்டிலேயே முழுமையாக எழுதப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகள் முழுவதும் பரவித் தொழில் புரிந்தார்கள் என்பதை எடுத்துரைக்கும் பின்வரும் பாடலின் உள்ளடக்கமும் அவதானத்திற்குரியதாகும்.

“காவிக் கருங்குயிலே

காமரச மாமயிலே

கடலோரப் பாதை வழி

காலிக் கோச்சி மாத்தறையாம்

களுத்துறை அளுத்காமம் திரு

கோணமலை யாழ்ப்பாணம்

கண்டிக்கோச்சியும் இஞ்சின் மாறுது

காங்கேசன்துறை ரயிலும் ஓடுது

பண்டாரவளை பதுளைக்கேகுது

பார்த்துச் சனங்கள் குதித்து ஏறுது

இந்திய வம்சாவளி மக்கள் எதிர்கொண்ட அவலங்களை நையாண்டி கலந்த மொழியில் விவரித்த வி.எஸ். கோவிந்தசாமியின் தனித்துவமான கலைத்திறன், இப்பாடல்கள் மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றுவதற்குப் பெருமளவு துணைபுரிந்தன எனலாம்.

சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள், அவலங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மக்களுக்கு எழுச்சியின் தெளிவையும் அவசியத்தையும் சிந்தனை ரீதியில் ஏற்படுத்தும் முனைப்புடன் பாடப்படும் பாடல்கள் சமூக எழுச்சிப் பாடல்களாக அமைகின்றன. இவை, சமூகம் ஒன்றிற்குள் நிலவும் நெருக்கடி நிலைகளிலிருந்து மீண்டெழுவதற்கான உந்துதல்களை வழங்கும் கருத்துகளை உட்சுமக்கின்றன. தொழில் உரிமை சார்ந்த பாதிப்புகள், அரசியல் சார்ந்த பாதிப்புகள், இருப்பு மற்றும் பாதுகாப்புச் சார்ந்த பாதிப்புகள் என்பவற்றை வலியுறுத்தும் நோக்கத்துடன் இப்பாடல்கள் அமைக்கப்படுகின்றன.

பொருளாதாரச் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் என்ற வகையில், மலையக மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மலையக வீதிப்பாடல்கள் எழுச்சிபூர்வமாக எழுதப்பட்டுள்ளன. எழுச்சிப்பாடல்களுக்கே உரிய எளிமையான சொற்களின் கோர்வையில், உணர்ச்சிபூர்வமான இசையுடன் கலந்து மக்களின் மனதைக் கவர்ந்துள்ளன.

வி.எஸ். கோவிந்தசாமி தான் இயற்றிய பாடல்களை, ஏனைய வீதிப்பாடகர்கள் போல் சந்திகளில் பாடாது, விழா மேடைகளிலேயே பாடியுள்ளார். இலங்கை இந்தியன் காங்கிரஸில் தொண்டமான், அசீஸ் ஆகியோரிடையே ஏற்பட்ட பிளவு, இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமைந்தது. அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இரு தலைவர்களைச் சார்ந்து தங்களது ஆதரவை வழங்கினர். மலையக மக்களைப் பொறுத்தவரையில், இப்பிளவு பல்வேறு சமூக மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது.

இவ்வுள்ளக முரண்பாடு, மாற்றுச் சிந்தனையோடு ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் இயக்கத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது எனலாம். பொதுவாக ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் ஊடாக அல்லது அவ்வமைப்பின் செயற்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் பல வீதிப்பாடல்கள் அமையப்பெற்றுள்ளன. அவ்வமைப்பைச் சார்ந்தவர் என்ற வகையில், வி.எஸ். கோவிந்தசாமி அவர்களுக்கு இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் மேடைகளே களங்களாக அமைந்துள்ளன.

1950 வரை இந்திய வம்சாவளித் தமிழர்களின் ஏக அமைப்பாக விளங்கியது ‘இலங்கை இந்திய காங்கிரஸ்’. 1950 ஆம் ஆண்டு மாத்தளையில் நடைபெற்ற மாநாட்டிலேயே அது ‘இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. இந்தியாவின் அனுசரணையுடன் பல சமூகத் தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய இவ்வமைப்பு, காலப்போக்கில் ‘மலைநாட்டுக் காந்தி’ கே. இராஜலிங்கம் போன்றோர் ஓரங்கட்டப்பட்ட சூழலில், சௌமியமூர்த்தி தொண்டமானின் குடும்ப ஆதிக்கம் நிறைந்த அமைப்பாகப் பரிணமித்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்த ஏ. அசீஸ் போன்றோரின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கில் சௌமியமூர்த்தி தொண்டமானின் அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஏ. அசீஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து வெளியேற்றப்பட்டார். சௌமியமூர்த்தி தொண்டமானுடன் பொருளாதார ரீதியாகவும் போட்டியிடும் வல்லமை ஏ. அசீஸுக்கு இருந்ததனால் ‘இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்’ எனும் தொழிற்சங்கம் உருவெடுத்தது. சௌமியமூர்த்தி தொண்டமானின் சுயநலம் கலந்த செயற்பாடுகளில் அதிருப்தியடைந்திருந்த அங்கத்தவர்கள் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் அங்கத்துவம் பெற்றனர். தொண்டமானியத்தை ஆதரிப்பவர்களிடையே, ஓரளவு முற்போக்கானவர்களாக அஸீஸ்வாதிகள் திகழ்ந்தனர்.

சட்டரீதியான இறுக்கநிலை காணப்பட்ட போதிலும், தோட்டங்களுக்குச் சென்று தொழிற்சங்கங்களை அமைக்கும் பணியில் அசீஸ் துணிவுடன் செயற்பட்டார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. வழக்கில் வெற்றி பெற்ற நிலையில், தொழிலாளர்கள் மத்தியில் தற்துணிவான தலைவராகப் புகழப்பட்டார். இவரது பங்கேற்பில் இலங்கை ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நலன் சார்ந்த தீர்வுகளைப் பெற்றுத் தந்தது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி சார்பான அரசியலுக்குத் துணைபோகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அதற்கு எதிரான தீர்மானத்துடன், அசீஸ் தரப்பினர் இலங்கைச் சுதந்திரக் கட்சி சார்பு நிலையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவ்வமைப்பின் முக்கியச் செயற்பாட்டாளர் என்ற உணர்வுடன், ‘வாழ்க தொழிலாளர்! வளர்க அவர்தம் இயக்கம்!! ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ்’ எனும் மகுட வாசகத்துடன் 1964 ஆம் ஆண்டு வி.எஸ். கோவிந்தசாமி அவர்கள் தனது பாடல்களை வெளியிட்டார். அவை தொழிலாளர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றன. சமகாலத்திலும் அச்சிற்றிலக்கியம் தொடர்பான கவனம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“சக்திமிகும் மகா சங்கமடி – ஜன

நாயகப் பண்புள்ள காங்கிரஸே!

பக்குவமாகக் கொடியேற்றி – எங்கும்

பாட்டொளி வீசிப் பறக்குதடி”

பஞ்சப்படி பதினேழரை ரூபாய் கோரிக்கை, இருபத்து மூன்று ராத்தலுக்குப் பேர் வேண்டும் என்ற கோரிக்கை, மேலதிக ராத்தல்களுக்குத் தலா ஒன்பது சதக் கோரிக்கை, ஆறு மணித்தியாலம் மாத்திரமே வேலை என்ற கோரிக்கை, பால் வேறுபாடின்றி சமசம்பளக் கோரிக்கை, மே தினத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை, லீவு போனஸ் தொடர்பான கோரிக்கை என்பன அனைத்தும் அசீஸ் தலைமையிலான ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸின் முனைப்புமிக்க கோரிக்கைகளாக அமைந்தன. அக்கோரிக்கைகளில் பெற்ற வெற்றி, தொழிலாளர்களின் மத்தியில் இவ்வமைப்பு மிகுந்த செல்வாக்கைப் பெறுவதற்கு ஏதுவாக அமைந்தது எனலாம். அதையொட்டிய, “சந்தாக் கொடுத்திடத் தூண்டுங்கடி – சங்கம் வலுப்பெற வேண்டுமடி” என்ற வி.எஸ். கோவிந்தசாமி அவர்களின் அறைகூவலும் கவனத்தைப் பெறுகிறது. 

பொதுவாக மலையக வீதிப்பாடலாசிரியர்கள் கதிர்காமக் கந்தனை, கந்தனின் சிறப்பைப் பாடியவர்களாகவே இருக்கின்றனர். வருடந்தோறும் கதிர்காமத் தலயாத்திரையை கட்டாய நிகழ்வாகக் கொண்டு செயற்படுத்தியுள்ளனர். அவர்களுடைய பாடல்களில் தனித்து முருகனையும், கதிர்காமத் தளத்தையும் பாடியிருப்பதை அறிய முடிகிறது. அவ்வாறு அமைந்த சிற்றிலக்கியங்களில் தழுவல் தன்மைகள் நிறையவே காணப்படுகின்றன. அவ்வாறான பக்தி இலக்கியங்கள் அப்பாடலாசிரியர்களால் தொடர்ந்து தொகுக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். ஏற்கனவே படைக்கப்பட்ட முருகன் பாடல்களை எஸ்.ஆர்.எஸ். பெரியாம்பிள்ளை தனது தொகுப்புகளில் இணைத்திருப்பதும் தெளிவாகிறது. அவ்வாறே எஸ்.எம். இராஜப்பா, மாரியம்மன் பற்றி ஏற்கனவே தொகுக்கப்பட்ட பாடல்களை தனது தொகுப்பிலும் உள்ளடக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த வீதிப்பாடல் ஆளுமைகள் தங்களை ஆன்மிகம் சார்ந்த ஆளுமையாளர்களாகவே அடையாளப்படுத்துகின்றனர். மாறாக, வி.எஸ். கோவிந்தசாமி தன்னை ஓர் சமூகவாதியாகவே முன்னிலைப்படுத்துகிறார். இருந்த போதிலும், அவரில் பொதிந்துள்ள ஆன்மிகத் தெளிவுக்கான ஆதாரமாக 1979 இல் வெளிவந்த ‘ஸ்ரீ கதிர்காமச் சேத்திர வரலாறுகளடங்கிய கதிரைமலைச் சிந்து’ என்ற சிற்றிலக்கிய நூல் அமைகிறது. இந்த நூலில் அமைந்துள்ள பாடல்கள் மெட்டுத் தழுவல்களாக இருந்த போதிலும், பாடலாசிரியரால் இயல்பான மொழிநடையில் உருவாக்கப்பட்டதாக அமைகின்றன. ஹிக்கொட, உந்துகொட எனும் முகவரியில் இருந்து கா. பெரியசாமி பிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தின் பதிப்பு முயற்சிகள் படைப்பாளர்களுக்கும் வாய்ப்பினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

வி.எஸ். கோவிந்தசாமியின் ‘கதிரைமலைச் சிந்து’ இந்திய வம்சாவளித் தமிழர்கள் எவ்வகையில் கதிர்காமத் தளத்தை அணுகினார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றது. கதிர்காமத்துடன் தொடர்புபடும் கருத்துநிலைகள் மற்றும் மெட்டுத் தழுவல்களை அடிப்படையாகக் கொண்டு, ‘இலட்சிய முழக்கம்’ தொகுப்பில் வி.எஸ். கோவிந்தசாமி பாடல்களை உள்ளடக்கியுள்ளார். அத்தொகுப்பில் இடம்பெறும் ‘வெற்றியுண்டு தாயே’ என்ற மெட்டில் உருவாக்கப்பட்ட பாடல், தன் அமைப்புச் சார்ந்த புகழ்மொழிகளை குறத்தியாய் வரும் ஒருத்தி எடுத்துச் சொல்லும் பாணியில் அமைந்துள்ளது.

“தோட்டத் தொழிலாளர் வாழ்க்கை முன்னேறிடத் – தொடர்ந்துழைப்பது ஜாத் தோக் கா – நம்” எனத் தொடங்கும் பாடலும், “நாட்டுக்கு நல்லவரே” என்ற பாடல் மெட்டில் அமைந்த “துள்ளி எழுந்திரடா” எனும் பாடலும், “பாதை தெரியுது பார் – இலட்சியப் பாதை தெரியுது பார்” என்ற பாடலும், “குள்ளநரிச் சேட்டை”, “வாழ வழி தேடிக்க!” ஆகிய பாடல்களும் உழைக்கும் மக்களிடையே நம்பிக்கையையும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைப்பதாக அமைகின்றன.

வி.எஸ். கோவிந்தசாமி ஒரு முக்கிய ஆளுமையாக அடையாளப்படுத்தப்படும் அதேவேளையில், அவருடன் இணைந்து செயல்பட்ட மற்றொரு ஆளுமையாக ஏ.எம். ராமையா தேவர் விளங்குகிறார். இருவரும் இணைந்து 1955 ஆம் ஆண்டு ‘உழைப்பாளி மக்களின் பிரஜாவுரிமைக் குரல்’ எனும் தொகுப்பில் பாடல்களை உள்ளடக்கியுள்ளனர். “ஓட்டுரிமை இல்லையென்று சொல்ல வேணாங்க – நாங்கள் ஓடிவிட்டால் லங்கையெல்லாம் காடாய்ப் போகுங்க” எனும் தைரியமிக்க வரிகளோடு ஒரு பாடல் நிறைவடைகிறது. இப்பாடலில் மலையக மக்களின் உரிமை சார்ந்த பாதிப்பு நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் “டம்மேரியா, பசறை, ஹேப்டன், ஹைபோரஸ்ட் துரைமார்களின் விபரீதப் போக்கு” எனும் தலைப்பில், குறிப்பிட்ட ஒரு தோட்டத்தின் சம்பவங்களை எடுத்துரைக்கும் ஒரு பகுதியும் உள்ளதை அவதானிக்கலாம்.

“கோவிந்தசாமி தமிழ் – கேட்டு மகிழ்ந்திருப்பீர்”

“இலங்கும் நெல்லைப் பூமி – தமிழ் முழங்குங் கோவிந்தசாமி”

“சீரும் சிறப்புடன் பாடிய கோவிந்த – சாமி தமிழ் நிதம் பாடுங்கடி”

“நாடற்றோர் பிரச்சனை தீரப் போகுது – நற்றமிழ் கோவிந்த சாமி சொல் லோங்குது”

எனத் தனது பாடல்களில் தன்னை வி.எஸ். கோவிந்தசாமி அடையாளப்படுத்துகிறார். 

ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரசின் இயக்கச் செயற்பாட்டாளர், அசீஸ் தலைமையின் விசுவாசி, தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட மனிதாபிமானி, சமூகப் பாதிப்புகளை எதிர்க்க துணிந்த போராளி என்ற வகையில் மலையக மக்களின் அசைவியக்கத்தில் முக்கிய ஆளுமையாக வி.எஸ். கோவிந்தசாமி அவர்களை அடையாளம் காண முடிகிறது. அவரது சாதி ரீதியான அடையாளம் விமர்சனத்திற்குட்பட்டதாயிருந்தாலும், இத்துறையில் அவ்வடையாளத்தை முற்றிலும் தவிர்த்து அவரை அணுக முடியாத நிலையும் காணப்படுகிறது. மேலும், இவரை ஏ.எம். ராமையா என்ற ஆளுமையுடனும் இணைத்து நோக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கிடைக்கப்பெற்ற வீதிப்பாடல்களை ஆராயும் போது, இவரது சிந்தனையோட்டமும் உள்ளுணர்வும் தெளிவாக வெளிப்படுகின்றன. இத்துறையில் மேலும் சில நூல்களை இவர் வழங்கியிருக்கக் கூடும் என்ற சாத்தியமும் உள்ளது. குறிப்பாக ‘சுந்தரி ஒப்பாரி’ எனும் அவரது நூல் தொடர்பான கவனமும் இன்று எழுகிறது. அந்த நூல் கிடைக்கும் பட்சத்தில், அவரது காலத்தில் நிலவிய இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வியல் மற்றும் ஒடுக்குமுறை குறித்து மேலும் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும் என்பது திண்ணமாகும்.

1947 ஆம் ஆண்டு முதல் இந்திய வம்சாவளித் தமிழர்களின் தொழிற்சங்கங்கள் ஊடான அரசியல் எழுச்சிகள், இந்நாட்டின் பெரும்பான்மை இனச் சமூகத் தலைவர்களுக்கு பீதியை ஏற்படுத்தின. இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த தொகுதிகளில், அந்தத் தொகுதிகளின் வெற்றியை அவர்களது பிரதிநிதிகளே தீர்மானித்தனர். இந்திய வம்சாவளித் தமிழர்கள் சிறுபான்மையாக வாழ்ந்த தொகுதிகளில் கூட, வேட்பாளர்களின் இன அடையாளத்தைப் பாராமல், கொள்கை அடிப்படையில், பெரும்பான்மை இன இடதுசாரிகளை பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தனர். 

இந்நிலை, சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த வலதுசாரிக் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதன் போக்கிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களின் வாக்குரிமைப் பறிப்பு, பிரஜாவுரிமைப் பறிப்பு, ஸ்ரீமா–சாஸ்திரி ஒப்பந்தம் முதலான நடவடிக்கைகள் தீவிரம் பெற்றன. இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இடதுசாரிகளும் அவற்றைக் கண்டுகொள்ளாத நிலை காணப்பட்டது; அது அவர்களுள் உட்பொதிந்திருந்த சிங்கள–பௌத்த மேலாதிக்கத்தின் வெளிப்படையான வெளிப்பாடாகக் கொள்ளத்தக்கது.

இந்நிலையில், இந்திய வம்சாவளி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நாவலர் ஏ. இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய ஆதரவு மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய அரசியல் களச்சூழலே வீதிப் பாடலாசிரியர்களின் படைப்பூக்கத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. இந்த இயக்க ரீதியான செயல்பாடுகளை ஒரு கூர்மையான அவதானிப்பாளராகவும், தீவிர பங்கேற்பாளராகவும் வி.எஸ். கோவிந்தசாமி முன்னெடுத்தமை, மலையக இலக்கியப் பரப்பில் காத்திரமான பங்களிப்பாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை நூல்கள்

  1. யோகராசா, செ. (2023). ஈழத்து முச்சந்தி இலக்கியம். மகுடம் பப்ளிகேசன்.
  2. காதர், பீ.ஏ. (2023). இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (மூன்றாம் பதிப்பு). சமூக இயல் பதிப்பகம்.
  3. முத்துலிங்கம், பெ. (2012). பரதேசம் போன தமிழர்களின் பரிதாபப் பாடல்கள். கயல் கவின் புக்ஸ்.
  4. சாரல் நாடன். (1997). மலையகம் வளர்த்த தமிழ். துரவி வெளியீட்டகம்.
  5. மாத்தளை ரோகிணி. (1993). உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள். குறிஞ்சி வெளியீடு.
  6. லிங்கம், பி.எம். (1995). மனிதருள் மாணிக்கம் அஸீஸ். அஸீஸ் மன்றம்.
  7. சிவலிங்கம், மு. (2007). மலையகத் தமிழர் நாட்டுப்புறப் பாடல்கள். குறிஞ்சித் தமிழ் இலக்கிய மன்றம்.


About the Author

அருணாசலம் லெட்சுமணன்

‘ம.மா - கொத் - உனுக்கொட்டுவ தமிழ் வித்தியாலயத்தின்’ அதிபரான அருணாசலம் லெட்சுமணன், 'நிகர்' சமூக - கலை - இலக்கிய அரங்கத்தின் பிரதம அமைப்பாளருமாவார். தேசிய, பன்னாட்டு ஆய்வரங்குகளில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்து வருகிறார். 2023இல் மலேசியாவில் இடம்பெற்ற பதினோராவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஓர் ஆய்வுக்கட்டுரையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய, பன்னாட்டு இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். பயண இலக்கியங்கள், சமூக, கலை, இலக்கிய, கல்வித்துறைச் செயற்பாடுகளில் ஆர்வம் மிக்கவர். இவர் ஒரு கவிஞருமாவார். சிறுவர் பாடல்கள், சிறுவர் இலக்கியம் தொடர்பான விமர்சனங்கள், ஆய்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். சிறுவர் கதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்