இலங்கையின் பின்காலனித்துவ அரசு - பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
22 நிமிட வாசிப்பு

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 2

February 23, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட

இலங்கை அரசைத் தாராண்மையற்றதாக மாற்றுதல் (De–liberalisation of Sri Lankan State)

தலையிடாக் கொள்கையுடன் இணைந்த தாராண்மை வாதம் (Laissez–faire Liberalism) என்ற பண்பை இழந்து தலையிடும் அரசு (Interventionist State) என்ற இயல்புடையதாக இலங்கையின் அரசு 1956–1965 காலப்பகுதியில் உருமாற்றம் பெறலாயிற்று. இத்தலையிடும் அரசு, அரச முதலாளித்துவம் (State Capitalism), பாராளுமன்ற ஜனநாயகம் என்ற இரண்டினதும் சேர்க்கையாக அமைந்தது. மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) அரசாங்கத்தின் வரவுடன் அரசின் இப்பண்பு அழுத்தம் பெற்றது. ஆனால் இந்தப் பண்பு மாற்றம் முழுவடிவில் வெளிப்பட்ட காலம் 1960களின் முற்பகுதியாகும். அக்காலத்தில் முன்னாள் பிரதமரின் மனைவி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்தார். இலங்கையில் அரசு தலையிடும் அரசாக மாறிய வரலாறு அரசியல் அதிகாரத்தின் வர்க்க அடிப்படைகளில் ஏற்பட்ட மாற்றத்தோடு சம்பந்தமுடையது. மக்கள் ஐக்கிய முன்னணி 1956 இல் தேர்தல் கூட்டு முன்னணி ஒன்றை ஏற்படுத்தி தேர்தல் வெற்றியைப் பெற்றது. 1947 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி 1956 இல் மக்கள் ஐக்கிய முன்னணியினால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது. சமூகத்தளத்திலும் கருத்தியல் தளத்திலும் உருவாக்கப்பட்ட ஒற்றுமை மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றிக்குக் காரணமாயிற்று.

அ) அரச அதிகாரத்தின் சமூக அடித்தளத்தில் ஏற்பட்ட மாற்றம்,
ஆ) தலையிடா தாராண்மைவாதப் பொருளாதாரக் கொள்கை கைவிடப்படுதல்,

என்ற இரு அம்சங்கள் 1956 தேர்தல் வெற்றியின் வெளிப்பாடாக அமைந்தன.

1956 ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. அத்தோடு அரசு அதிகாரத்தின் சமூக அடிப்படைகளும் அக்காலத்தில் மாற்றம் பெற்றன. இவ்விடயத்தை இங்கு விளக்கிக் கூறுதல் அவசியம். 1956 வரை இலங்கையின் ஆளும் வர்க்கம் ஐக்கிய தேசியக் கட்சி என்ற கட்சிக்குள் ஒன்றுபட்டு இருந்தது. ஆதலால் மேலாதிக்கம் உடைய அதிகாரக்கூட்டின் (Power Block) நிறுவன அமைப்பாக இக்கட்சி விளங்கியது. ஆளும் குழுவில் மூன்று உட்பிரிவுகள் இருந்தன. நகரம் சார்ந்த முதலாளி வகுப்பு, உயர்தொழில்களில் இருந்த உத்தியோகத்தர் வகுப்பு, கிராமப்புறங்களை மையமாகக் கொண்டிருந்த நில உடைமையாளர் வகுப்பு என்பனவே இம்மூன்று பிரிவுகள். காலனியப் பொருளாதாரத் துறையினாலும் காலனிய ஆட்சியினாலும் நேரடியாக நன்மை பெற்றவர்களாக இம்மூன்று பிரிவினரும் இருந்தனர். 1956 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்திற்குப் போட்டியாக எழுந்த மக்கள் ஐக்கிய முன்னணி வித்தியாசமான சமூக வர்க்கங்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. நகரம் சார்ந்த உயர்தொழிலாளர் வகுப்பும் (Professional Class) வர்த்தக சமூகத்தின் இரண்டாம் படிநிலையில் இருந்தோரும் மக்கள் ஐக்கிய முன்னணிக்குத் தலைமை தாங்கினர். இம்முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியைப் போன்றல்லாது விரிந்த சமூகத் தளத்தை உள்ளடக்கியிருந்தது. அரசாங்க, தனியார் துறை உத்தியோகங்களில் உள்ளவர்கள் (சம்பளம் பெறும் வகுப்பு), நகரத் தொழிலாளர் வர்க்கம், சிங்களக் கிராமங்களில் வாழ்ந்த மத்தியதர வர்க்கமும் கீழ் மத்தியதர வர்க்கமும், புத்த சமயத் துறவிகளின் தலைமையில் திரண்ட கிராமப்புறப் புத்திஜீவி வர்க்கம் என்பனவற்றின் கூட்டாக மக்கள் ஐக்கிய முன்னணி விளங்கியது. பல்வேறு வகைப்பட்ட குழுக்களின் சேர்க்கையாக இக்கூட்டு இருந்தது. எனினும் தேசியவாதக் கருத்தியல் இக்குழுக்கள் யாவற்றையும் இணைப்பதாக இருந்தது.

பல்வேறுபட்ட, ஒன்றோடு ஒன்று சம்பந்தமற்ற சமூகத் தளங்களில் இருந்து வந்த இக்குழுக்கள் யாவும் ஒன்றிணைந்த இரண்டாம் நிலை அதிகாரக் கூட்டாகச் செயற்படக் காரணமான சமூகப் பின்னணி யாது? என்ற கேள்வி எழுகிறது. சிங்கள முதலாளி வர்க்கம், கிராமப்புற விவசாயிகளான நடுத்தர வர்க்கம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள், சிங்கள மொழியில் கல்வி கற்ற புத்திஜீவி வகுப்பு, பௌத்த பிக்குகள் ஆகிய பல்வகைக் குழுக்களை இணைத்த பொது இயல்பு யாது? அரசு அதிகாரத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருதல், அரசு தமக்கு அணுகத்தக்கதாக இருத்தல் என்ற இலக்குகளை வைத்தே இவை ஒற்றுமைப்படுத்தப்பட்டன. அரசியல் ரீதியில் தாம் ஒன்றுபடுதல் வேண்டும் என்பதை இவை உணர்ந்தன. இக்குழுக்கள் யாவற்றினதும் ஒருமித்த குறிக்கோள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே ஆகும். இந்தச் செயல்திட்டத்திற்கு ஆதரவு திரட்டுவதற்காகப் பிரசாரம் செய்யவும், மக்களை அணிதிரட்டவும், தம் திட்டத்தை நியாயப்படுத்தவும் இக்குழுக்களின் கூட்டிற்கு ஒரு கருத்தியல் தேவையாயிற்று. சிங்களத் தேசியவாதம் என்ற கருத்தியல் இதற்குப் பயன்பட்டது. இச்சமூகக் குழுக்களின் திட்டமான அரசு அதிகாரத்தைப் பெறுவதற்கும், சமூகத்தின் ஏனைய பகுதிகளுடன் இக்குழுக்களைப் பிணைப்பதற்கும் அக்கருத்தியல் உதவியது. 

மக்கள் ஐக்கிய முன்னணிக் கூட்டின் சிங்களத் தேசியவாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியவாதத்திலிருந்து வேறுபட்டதாக இருந்ததென்பதும் கவனிக்கத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியவாதம் இலங்கையின் முதன்மை நிலையில் உள்ள உயர் குழாத்தின் தேசியவாதமாகும். அந்தத் தேசியவாதம் ‘மேலிருந்து வரும் தேசியவாதம்’ ஆகும். இவ்வுயர் குழாத்தினர் வெகுஜனங்களை அணிதிரட்டுவதற்கு தேசியவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்களத் தேசியவாதம், இனவாதம் என்பனவும் தேவைப்பட்டன. 1947–1958 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் பொதுக் கொள்கை வகுப்புச் செயல்முறையில் இனவாதம் கலப்புற்றது. இருந்தபோதும் இலங்கை அரசின் லிபரல் ஜனநாயக அடிப்படைகள் இக்காலத்தில் மாற்றப்படவில்லை. மக்கள் ஐக்கிய முன்னணியின் சிங்களத் தேசியவாதம் கீழிருந்து கிளம்பிய தேசியவாதம் ஆகும். சுதந்திர இலங்கையின் அரசைக் கைப்பற்ற வேண்டும் என்ற வீறுடன் அத்தேசியவாதம் கிளர்ந்து எழுந்தது. 1956 இல் ஆட்சியைப் பிடித்த மக்கள் ஐக்கிய முன்னணிக் கூட்டு, இலங்கையின் பொதுக் கொள்கை வகுப்புச் செயல்முறையில் மேலும் இனவாதத்தைக் கலந்தது. அத்தோடு அதுவரை ஐக்கிய தேசியக் கட்சி பேணிவந்த தாராண்மைவாத லிபரல் அரசு முறையிலிருந்து விலகியும் சென்றது. இவ்விலகல் குறிப்பாக பொருளாதாரக் கொள்கையில் வெளிப்பட்டது. அரசாங்கம் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அரசின் தலையீடு என்பதை ஒரு தெரிவாகக் கொண்டது. இலங்கையில் தேசியமயமாக்கல் கொள்கையை மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தொடக்கி வைத்தது. இதன் மூலம் ‘அரச முதலாளித்துவம்’ (State Capitalism) என்று பின்னர் அடையாளப்படுத்தப்பட்ட முறையை இது புகுத்தியது. துறைமுகம், போக்குவரத்து, வங்கித்துறை, காப்புறுதி ஆகிய துறைகளில் தேசியமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அரசு நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்கமைக்கும், நெறிப்படுத்தும் பொறுப்பை ஏற்றது. அத்தோடு அரசு ஒரு முயற்சியாளன் என்ற வகிபாகத்தையும் ஏற்றது. இக்கொள்கை மக்களின் பரவலான ஆதரவையும் பெற்றுக்கொண்டது. பழமைவாத அதிகாரக்கூட்டு 1956 இல் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பயனாக அரசின் வர்க்க அடித்தளம் மாற்றம் பெற்றது. இதன் விளைவாக காலனித்துவக் காலத்தின் சுதந்திர சந்தை முதலாளித்துவத்தின் இடத்தை அரச முதலாளித்துவம் பிடித்துக் கொள்ளும் வரலாற்றுத் தேவை எழுந்தது. சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையில் முதன்முதலான மக்கள்வாத அரசு (Populist Regime) என்ற தன்மையுடைய ஆட்சியைப் புகுத்தியதும் மக்கள் முன்னணி அரசாங்கமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

1960–1964 ஆண்டுகள் மிக முக்கியமான காலப்பகுதி. இக்காலத்தில்தான் இலங்கை அரசை தாராளமயமற்றதாக மாற்றும் செயல்முறை இடம்பெற்றது. 1960 யூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது. காலம் சென்ற பிரதமரின் விதவை மனைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராகப் பதவியேற்றார். மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டு இக்காலத்தில் பிளவுபட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமிழ்த் தேசியவாத சமஷ்டிக் கட்சியுடன் இணைந்து கொள்ள எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1960 இல் நடைபெற்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி 1956 இன் மக்கள் ஐக்கிய முன்னணியின் கொள்கைகளை அர்ப்பணிப்புடனும் தீவிரத்துடனும் நடைமுறைப்படுத்தியது மிகுந்த ஆச்சரியத்தைத் தருவதாகும். புதிய அரசாங்கம் மக்கள்வாத அரசு, அரச முதலாளித்துவம் என்ற பண்புகளை வெளிப்படுத்தியது. 

மக்கள் ஐக்கிய முன்னணி தீவிர தேசியவாதக் கருத்தியலைக் கொண்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வர்க்கப் பின்னணியும், கருத்தியல் பின்னணியும் அவ்வாறான தீவிர தேசியவாதத்திற்கான உள்ளாற்றலைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் 1960 யூலை தேர்தலின் பின் சென்ற பாதை அதன் வர்க்க இயல்புக்கு மாறுபட்டதாய், ஆச்சரியத்தைத் தருவதாய் இருந்தது. சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான கட்சி தொடக்கத்தில் மத்திய-வலதுசாரி (Centre-right) அரசியல் அமைப்பு என்ற தோற்றத்தையே அளித்தது. ஆனால் அக்கட்சி அதிகாரத்திற்கு வந்த பின்னர் அரச முதலாளித்துவ, சிங்களத் தேசியவாத நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தியது. தனியார் துறையின் பிரதான தொழில்கள் பலவற்றை தேசியமயமாக்கவும், பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தவும் இவ்வரசாங்கம் முன்வந்தது. சமய நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்த பாடசாலைகளை அரசாங்கம் தேசியமயமாக்கியது. தொழிலாளர் வர்க்கத்தின் தீவிரவாத அழுத்தம் அதிகரித்தபோது, தொழிலாளர் வர்க்க எதிர்ப்பியக்கத்தை நடத்திய இடதுசாரிக் கட்சிகளுடன் அரசாங்கம் 1963 ஆம் ஆண்டில் கூட்டணியை ஏற்படுத்தியது (அமரசிங்க, 1998). இவ்வாறு இடதுசாரிகளுடன் கூட்டணியை உருவாக்கிக் கொண்டதனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் மத்திய–இடதுசாரி (Centre-left) என்ற நிலைக்கு இடம் மாறியது எனலாம். இப்புதிய கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் தாக்கங்களை ஏற்படுத்தியது. பத்திரிகைகளைத் தேசியமயமாக்கும் முயற்சியை மேற்கொண்ட போது அரசாங்கம் 1964 ஆம் ஆண்டில் தோல்வியைத் தழுவியது. 1965 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தோற்கடிக்கப்பட்டது. ஆட்சியைக் கைவிட்டுச் செல்வதற்கு முன்னரே இக்கட்சி இலங்கையின் அரசின் இயல்பில் அடிப்படை மாற்றம் ஒன்றை ஏற்படுத்திவிட்டது. இலங்கை அரசை அபிவிருத்தி அரசுவாதம் (Developmentalist Statism) என்ற பாதைக்கு இது கொண்டு வந்து சேர்த்திருந்தது.

மக்கள் ஐக்கிய முன்னணிக் (MEP) கூட்டும் அதன் பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியமை இலங்கையில் ஜனநாயக விரோத–லிபரல் விரோத போக்குகளை ஊக்குவித்த போதிலும், ஜனநாயக நிறுவனக் கட்டமைப்பு இலங்கையில் நிலை பெறுவதற்கு இவற்றின் ஆட்சி உதவியது என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும். மக்கள் ஐக்கிய முன்னணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பதிலாக ஜனநாயக மாற்று வழியை முன்வைத்தன.

முதன்மையான அதிகாரக் கூட்டு (ஐ.தே.க), அதற்கு மாற்றான இரண்டாவது அதிகாரக்கூட்டு என்பன அரசியல் அரங்கிற்கு வந்தன. இதனால், பாராளுமன்ற அரசியலில் இருவேறு எதிரெதிர் போட்டிக் கூட்டுகள் நிறுவனமயப்படுத்தப்பட்டன. இந்தப் போக்கு நன்மையளித்தது. அரசாங்க இயந்திரத்தில் சிவிலியன் கட்டுப்பாடு (Civilian Control) இதனால் உறுதிசெய்யப்பட்டது. சர்வாதிகாரத் தலையீடுகள் ஏற்படாமல் இது தடுத்து நிறுத்தியது. மக்கள் ஐக்கிய முன்னணியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தமது ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி அரசுவாதம் என்பதைப் புகுத்தின என மேலே குறிப்பிட்டோம். சுதந்திரத்திற்குப் பிந்திய இலங்கையின் முக்கிய கொள்கைத் திருப்பமும், நின்று நிலைக்கும் கண்டுபிடிப்பும் என்று அபிவிருத்தி அரசுவாதத்தைக் குறிப்பிடலாம். 1956 இல் பதவிக்கு வந்த அரசாங்கம் சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்தை தீவிரமாக ஆதரித்தது. இருந்த போதும் அந்த அரசாங்கத்தினால் கூட அபிவிருத்தி அரசுவாதம் என்ற பாதையில் இருந்து விலகிச் செல்ல முடியவில்லை. கொள்கை வகுப்புக்கான ஒரு பொது வரைசட்டகமாக இது விளங்கியது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கிராமப்புற விவசாயத்தில் தாராண்மைப் பொருளியலைப் புகுத்தியது. இதேபோன்று ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகத்தையும் தாராண்மை பொருளியல் கொள்கைகளின்படி நிர்வகித்தது. இருந்த போதும் இவை யாவும் அரச முதலாளித்துவம் என்ற சட்டகத்திற்குள்ளேயே செயற்படுத்தப்பட்டன.

1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணிக் கூட்டரசாங்கம்

1950களிலும், 1960களிலும் இலங்கையின் பின்காலனித்துவ அரச உருவாக்கம் இரு தெளிவான குண இயல்புகளை வெளிப்படுத்தியது என்பதை மேலே விவரித்தோம். அவையாவன: 1. அரசின் அடிப்படையாக இனக்குழுமப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism) அமைதல்; 2. தாராண்மை மறுப்பு அரசு என்ற குண இயல்பு வெளிப்படல். 1970–1975 காலப்பகுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து ஏற்படுத்திய ஐக்கிய முன்னணி ஆட்சியில் தாராண்மை மறுப்புப் போக்கு மேலும் அதிகரித்தும் வெளிப்பட்டும் தெரிந்தது.

இவ்விடத்தில் ஆங்கிலத்தில் ‘டி லிபரலைசேசன்’ என்றும் ‘இல்லிபரலைசேசன்’ என்றும் குறிப்பிட்டுள்ள இருவேறு எண்ணக்கருக்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்குதல் அவசியம்.

1. ‘டி லிபரலைசேசன்’ (De-liberalization) என்பது தமிழில் தாராண்மையற்றதாக்குதல் எனப்படுகிறது. இதன் பொருள் தாராண்மைவாத முதலாளித்துவத்திற்குப் (Laissez–faire Capitalism) பதிலாக அரச முதலாளித்துவத்தைப் புகுத்துதலைக் குறிப்பிடும். இங்கே மாற்றம் பிரதானமாக பொருளாதாரத்தில் அரசின் நேரடித் தலையீட்டை அதிகரிப்பதாக அமைகின்றது.

2. ‘இல் லிபரலைசேசன்’ (Ill-liberalization) என்பது லிபரல் ஜனநாயகம் என்ற கொள்கையைக் கைவிடுதலைக் குறிப்பிடும். இது அரசியல் துறையில் நிகழும் போக்காகும். 

இவ்வாறான தாராண்மை மறுப்பு அரசியல் கொள்கை பொருளாதாரத் தாராண்மை நீக்கத்தோடு சேர்ந்து நிகழலாம். அது இல்லாமல் தனித்துவமாகச் செயற்படுத்தப்படவும் முடியும். 1947–1956 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரச முதலாளித்துவத்தைப் புகுத்தி பொருளாதாரத் துறையில் தாராண்மை வாதத்தை நீக்கும் பணியைத் தொடக்கி வைத்தது. இருப்பினும் அவ்வரசாங்கம் இலங்கையின் பின்காலனித்துவ அரசின் லிபரல் ஜனநாயக குண இயல்பை மாற்ற முனையவில்லை. 1956–1960 காலத்தில் மக்கள் ஐக்கிய முன்னணிக் கூட்டரசாங்கம் அரச முதலாளித்துவத்தின் வரைசட்டகத்தைப் பலவீனப்படுத்தும் செயல்களில் இறங்கவில்லை. 1970 இன் ஐக்கிய முன்னணி அரசு வித்தியாசமாகச் செயற்பட்டது. அது அரசின் ஜனநாயக அடித்தளத்தை பலவீனப்படுத்துவதில் வெற்றிகண்டது; இனக்குழுமப் பெரும்பான்மைவாத அரசு ஒன்றைத் தாபித்தது. தாபித்தது மட்டுமன்றி அதனை அரசியல் யாப்பு நிலையிலும், அரசியல் தளத்திலும் அசைக்க முடியாத முறையில் வேரூன்ற வைத்தது. இவை யாவற்றுக்கும் மேலாக சர்வாதிகாரம் இலங்கையின் ஜனநாயக முறையின் பிரிக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது. 1975–1977 காலத்தில் ஐக்கிய முன்னணிக் கூட்டு சிதறத் தொடங்கியது. இலங்கையின் வரலாற்றில் பின்காலனித்துவ அரசின் முதலாவது கட்டம் இத்தோடு முடிவுக்கு வந்தது. இலங்கையின் பின்காலனித்துவ அரசு தாராண்மை மறுப்பு அரசாக மாறியது.

தாராண்மை மறுப்பு அரசு ஒன்றை உருவாக்கும் பணியை ஐக்கிய முன்னணி அரசாங்கம் சாதித்தது எவ்வாறு? 1970–1975 காலத்தின் ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்த வர்க்கங்கள் எவை? அவற்றின் கருத்தியல் என்ன? என்பவற்றையும் பரிசீலிப்பதன் மூலமே நாம் இதற்கான விடையைத் தெரிந்துகொள்ளலாம். 1970 இன் ஐக்கிய முன்னணி ஒரு சமூகக் கூட்டணி (A Social Coalition) ஆகும். அது ஒரு பல்வர்க்கக் கூட்டணி; மிகப் பலம் வாய்ந்த கூட்டணி.

அ. சிங்கள முதலாளித்துவத்தின் இரண்டாம் படிநிலையைச் சேர்ந்த முதலாளி வர்க்கம்
ஆ. நகரத் தொழிலாளர் வர்க்கம்
இ. கிராமப்புற விவசாயக் குடியான் வர்க்கம்
ஈ. இடைத்தர சமூக வர்க்கங்கள்

என்பன இக்கூட்டணியில் இணைந்தன. இக்கூட்டணி 1956 இன் மக்கள் ஐக்கிய முன்னணிக் கூட்டணியை விடப் பலம் வாய்ந்தது. 1963 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இடதுசாரிக் கட்சிகளும் அமைத்த கூட்டணியை விடவும் பலமானது. 1970 யூலை மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை பெற்றது. இவ்வாறு ஆளும் கட்சி/ கட்சிகளின் கூட்டணி ஒன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றமை பாராளுமன்ற வரலாற்றில் இலங்கையில் முதல் தடவையாக இடம்பெற்றது இத்தருணத்திலேயே ஆகும். இப்பாராளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி ‘மக்களின் ஆணை’ ஒன்றையும் பெற்றுக்கொண்டது. இருந்துவரும் அரசியல் யாப்பை நீக்கிப் புதியதொரு அரசியல் யாப்பைக் கொண்டுவருவதற்கான ஆணையாக இம்மக்களின் ஆணை இருந்தது. இது முந்திய எந்த அரசாங்கத்திற்கும் வழங்கப்படாத ஆணையாகும். இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்தும் அதிகாரம் ஓர் ஆளும் கட்சிக்கு வழங்கப்பட்டதென்றால் அது சாதாரணமான ஒரு விடயம் அன்று. இது ஒரு தலைசிறந்த வாய்ப்பு. எதிர்காலத்தில் அரசு எப்படி இருக்க வேண்டும், சமூகம்–அரசு உறவுகள் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும், அரசு அதிகாரம் வெவ்வேறு சமூகக் குழுக்களிடம் எவ்வாறு பங்கிடப்பட்டிருக்க வேண்டும், பல்வேறு இனக்குழுமங்களிடையே அதிகாரம் எவ்வாறு பங்கிடப்பட்டிருக்க வேண்டும் ஆகிய முக்கிய விடயங்களை எல்லாம் தீர்மானிக்கும் அதிகாரத்தை இது வழங்கியது. வரலாற்றில் முன் எப்பொழுதும் எந்த அரசுக்கும் வழங்கப்படாத பெரிய அதிகாரம் இதுவாகும்.

1970 இன் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. அரசாங்கக் கூட்டணியில் சேராத பிறர் இந்த ஆடம்பரம் மிக்க சடங்குகளில் வெறும் பார்வையாளர்களாக நின்று 1970–1972 காலத்தின் அரசியல் யாப்பு உருவாக்க செயல்முறையின் அரசியல் இலக்கையும் அதன் தீய விளைவுகளையும் அவதானிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். இலங்கை என்ற பெயர் ‘சிறீலங்கா’ என்றும் ‘சோசலிச ஜனநாயகக் குடியரசு’ என்றும் மாற்றம் செய்யப்பட்டது. இப்பெயர் மாற்றம் ஒரு கருத்தியல் திட்டத்தின் வெளிப்படுத்தலாக இருந்தது. ஒற்றையாட்சி முறையில் அமைந்த மத்தியப்படுத்தப்பட்ட அரசை அதன் தாராண்மை மறுப்பு இயல்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதாய் நிலைபெறச் செய்தது. இந்த ஜனநாயக விரோத நடைமுறையின் முக்கிய அம்சங்களாவன:

அ) தமிழ்ச் சிறுபான்மை இனத்திற்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிப்பதற்கான வழியாக அமைந்த பிரதேச சுயாட்சிக் கோரிக்கையை முற்றாகப் புறக்கணித்து அரசின் ஒற்றையாட்சி இயல்பை மேலும் வலுப்படுத்தல்.
ஆ) ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மைப் பலம் கொண்டிருந்த கீழ் சபைக்கு கட்டுப்பாடில்லா சட்ட ஆக்க அதிகாரத்தை வழங்கியதோடு, மேற் சபையான ‘செனட்’ சபையையும் இல்லாது ஒழித்தல்.
இ) சட்டசபையினதும், மந்திரிசபையினதும் அதிகாரங்களை எல்லைமீறாது வைத்திருக்கக்கூடிய ‘கட்டுப்பாடுகளும் சமநிலைகளும்’ (Checks and Balances) என்னும் பொறிமுறையை நீக்குதல்.
ஈ) சோல்பரி அரசியல் யாப்பின்படி நீதித்துறைக்கு இருந்த மட்டுப்படுத்தப்பட்ட ‘நீதி மீளாய்வு’ (Judicial Review) அதிகாரத்தையும் இல்லாது ஒழித்தல்.
உ) நிர்வாகத்துறையின் ஆணைக்குக் கீழ்ப்பட்டதாக நீதித்துறையைத் தரம் தாழ்த்தல்.
ஊ) பொதுச் சேவையை மந்திரிசபையின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தமை.
எ) புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தபின் நடைமுறைக்கு வந்தது என்ற போலிக் காரணத்தைக் காட்டி, அரசாங்கத்திற்கு ஐந்து வருடங்கள் மட்டுமே பதவியில் இருக்கும் உரிமையை ஏழு ஆண்டுகளாக நீடித்தமை.

ஒரு நாட்டின் அரசியல் யாப்பு அரசின் நிறுவனக் கட்டமைப்பின் வரைசட்டகம் என்பது மட்டுமன்றி அதனை யாத்தவர்கள் தமக்குள் பொதுப்பட இணங்கிக்கொண்ட கருத்தியலின் வெளிப்பாடாகவும் அமைவது. அவ்வாறாயின் 1972 அரசியல் யாப்பினை வரைந்தவர்களின் அரசியல் கருத்தியலின் முக்கிய அம்சங்கள் எவை? முதலாவதாக அது ஒரு சிங்களத் தேசியவாத அரசியல் யாப்பு ஆகும். பின்காலனித்துவ கட்டத்தில் சிங்களத் தேசியவாதம் வகுத்துக்கொண்ட இறுதி இலக்குகள் எவையோ அவை யாவற்றையும் ஒருங்கே வெளிப்படுத்துவதாக இந்த அரசியல் யாப்பு அமைந்தது. சிங்களத் தேசியவாதம் மேற்கு நாட்டுக் காலனித்துவம், சிறுபான்மை இனக்குழுமங்கள், சிறுபான்மைச் சமயங்கள் என்பனவற்றிற்கு எதிரான கருத்தியலாக இருந்தது. 1972 அரசியல் யாப்பு, ‘யாப்பியல் ஒருமைவாதம்’ (Constitutional Monism) என்ற சிந்தனையின்படி உருவாக்கப்பட்டது. இந்தச் சிந்தனையைச் சிங்கள தேசியவாதிகளும், சோசலிஸ்டுகளும் ஒரே விதமான தீவிர ஆர்வத்துடன் ஆதரித்தனர். அவர்கள் ஒற்றையாட்சி முறையிலானதும் தீவிர மத்தியப்படுத்தலைக் கொண்டதுமான அரசியல் யாப்பை உருவாக்கினர். இந்த அரசியல் யாப்பு மக்கள்வாத யாப்புவாதம் (Populist Constitutionalism) என்னும் கருத்தியலின் வெளிப்பாடு ஆகும். ‘குடியரசு’ என்னும் கருத்தின் வேர்களை இந்த மக்கள்வாத யாப்புவாதம் என்ற கருத்தியலில் தேட முடியும். சிங்களத் தேசியவாதிகளும், சோசலிஸ்டுகளும் குடியரசு என்னும் கருத்தியலினைக் கொண்டவர்கள். மக்கள்வாத யாப்புவாதம் என்ற கருத்தியல் இரண்டு கோட்பாட்டு நியாயங்களை உள்ளடக்கியதாக இருந்தது.

1. ‘இறைமையுடைய சட்டசபை’ என்னும் நியாயம் முதலாவது விடயம். இதன்படி மக்களின் இறைமைக்குச் செயல்வடிவம் கொடுப்பது இறைமையுடைய சட்டசபையாகும். அது ஒரு சபையை மட்டும் கொண்டிருக்க வேண்டும். வேறு நிறுவனங்களோ அல்லது கட்டுப்பாடுகளும் சமநிலைகளும் என்ற நடைமுறை சார்ந்த தடைகளோ சட்டசபையின் இறைமையைக் கட்டுப்படுத்தக் கூடாது. ஆளும் கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவர்களே சட்டசபையைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் என்பன போன்ற கருத்துகள் இதில் உள்ளடங்கியிருந்தன.

2. அரசு ஒரு கருவி: இதனை அரசியல் யாப்பை வரைந்தோர் கொண்டிருந்த கருத்தியல் இலக்கை அடைவதற்கான கருவியாக உபயோகிக்கலாம். 1972 இல் அரசியல் யாப்பின் இலக்காக அன்று கருதப்பட்டது சோசலிசம் ஆகும்.

சோஷலிசத்தைப் பாராளுமன்றப் பாதையூடாக அடைதல் இலக்காகக் கொள்ளப்பட்டது. இதனை அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான கருவிவாத நோக்கு என்று கூறலாம். அரசியல் யாப்பு உருவாக்கம் பற்றிய கருவிவாதம் நிலையான நியமங்களை இலக்குகளாகக் கொண்டிருந்தது. விடுதலை, சமத்துவம், நீதி, பன்மைத்துவம் ஆகிய நியமங்களே கருவிவாதத்தின் இலக்குகளாக இருந்து வந்தன. இதற்கு மாறாக 1972 இன் குடியரசு அரசியல் யாப்பு பல விடயங்களில் குடியரசு என்ற குணவியல்பிற்கு மாறுபட்டதாக இருந்தது. குடியரசு பன்மைத்துவ அரசியல் சமூகத்தைக் குறிக்கவில்லை; அதன் பிரஜைகள் நியாயமான அடிப்படை உரிமைகளுக்கு உரித்துடையவர்களாகவும் இருக்கவில்லை. இதனைவிட, குடியரசு என்ற அரசு மாதிரியின் கீழ் பிரஜைகள் செயல் ஊக்கமுள்ள பிரஜைகளாகப் பங்கேற்க வேண்டும். 1972 இன் குடியரசில் இந்த அம்சம் இருக்கவில்லை. பிரஜைகள் ஆளும் கூட்டணியின் கட்சிகளுக்குள்ளும், கூட்டணிக்குள்ளும், கூட்டணியுடன் இணைந்துள்ள வேறு ‘மக்கள்’ அமைப்புகளிலும் மட்டும் செயல் ஊக்கமுள்ள பிரஜைகளாகப் பங்கு கொள்ள முடியும் எனக் கருதப்பட்டது. குடியரசு அரசியல் கோட்பாட்டுக்கு ஐக்கிய முன்னணி அரசு செய்த பங்களிப்பு என்று இந்த விடயத்தைத் தவிர வேறு எதனையும் குறிப்பிட முடியாது.

மேலே நாம் குறிப்பிட்ட அரசியல் யாப்புக் கோட்பாடு எங்கிருந்து வந்தது? இதன் மூலங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். முதலாவது பெரும்பான்மைவாத சிங்களத் தேசியவாதம். இரண்டாவது மார்க்சிய இடதுசாரிப் பிரிவினரின் சிந்தனை. சிங்களத் தேசியவாதமும், மார்க்சிய இடதுசாரிகளும் குறிப்பிட்டதொரு வகையான யாப்புக் கருத்தியலை (Constitutional Ideology) வளர்த்திருந்தனர். இவர்கள் இரு சாராரின் கருத்துகளின்படி இலங்கையின் சுதந்திரம் பூரண இறைமையுடையதான சுதந்திரமாக இருக்கவில்லை. இலங்கைக்குப் பூரண இறைமை கிடைக்கவில்லை என்ற இந்த விமர்சனம் பிரித்தானிய அரசியல் யாப்புக்கும் இலங்கையின் அரசியல் யாப்புக்கும் இடையிலான தொடர்பின் மீது கவனம் குவிப்பதாக இருந்தது. இலங்கையின் அரசியல் யாப்பில் பிரித்தானிய முடிக்கும், பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கும், ‘பிரிவி கவுன்சில்’ (Privy Council) நீதித்துறை நிறுவனத்திற்கும் உள்ள மேலாண்மையையும் தொடர்பையும் இவர்கள் சுட்டிக்காட்டினர். இத்தொடர்பு இலங்கையின் சுதந்திரத்தையும் பூரண இறைமையையும் மறுப்பதாகும் என்றும், பழைய காலனித்துவ உறவுகளை நவகாலனியச் சட்டகத்திற்குள் புதுப்பிப்பதற்கு இடம் அளிக்கின்றது என்றும் குறிப்பிட்டனர். இந்த விமர்சனம் பூரண இறைமையை இலங்கைக்கு வழங்குவதற்கான மாற்று வழியாக இலங்கையை ஒரு குடியரசாகப் பிரகடனம் செய்தல் என்பதை முன்வைத்தது. இக்கருத்தை உடையோர் ஒரு குடியரசு அரசியல் யாப்பு மட்டுமே இலங்கையின் இறைமையையும் சுதந்திரத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று கருதினர். இதனால் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசுடன் உள்ள யாப்பு முறையிலான பிணைப்புகளை (Constitutional Links) அறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர்.

நாம் மேலே சுருக்கமாகக் குறிப்பிட்ட அரசியல் யாப்புக் கருவிவாதம் (Constitutional Instrumentalism) என்னும் எண்ணக்கரு பற்றிய விடயத்தை மீண்டும் பரிசீலிப்போம். அரசியல் யாப்பைப் பற்றிய கருவிவாத நோக்கு, ஒரு நாட்டின் அரசியல் சமூகத்தின் கட்டமைப்பு பற்றிய கொள்கைகளை அடைவதற்கான கருவியாக அரசியல் யாப்பைக் கருதுகிறது. இக்குறிப்பிட்ட நோக்குமுறையில், அதாவது அரசியல் யாப்பு அரசியல் நோக்கங்களை அடைவதற்கான கருவி என்ற விடயத்தில், இலங்கையின் சிங்களத் தேசியவாதிகளும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த இடதுசாரிகளும் கருத்தொற்றுமையுடையவர்களாக இருந்தனர். அவர்கள் இரு சாராரும் இலங்கையின் அரசியல் யாப்பையும் அரசியல் ஒழுங்கையும் மறுசீரமைப்பதில் ஒரே விதமான நோக்குமுறையைக் கொண்டிருந்தனர்.

அரசையும் அதன் நிறுவனங்களையும் உபயோகித்து பெரும்பான்மைவாத அரசியல் மேலாண்மையை நிறைவேற்றுவதற்கு அரசியல் யாப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்த சிங்களத் தேசியவாதிகள் முயன்றனர். இடதுசாரிக் கட்சிகள் அரசையும் அரச நிறுவனங்களையும் உபயோகித்து தாம் கற்பனை செய்த சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கு விரும்பினர். இவ்விரு சாராரின் நோக்குமுறைகளின் இணைப்பினால் உருவான சிந்தனை, இலங்கையின் அரசியல் யாப்பு ஒருமைவாதத்தை வேரூன்றச் செய்தது. இது ஒரு துரதிர்ஷ்டமான நிலையாகும். 1972 அரசியல் யாப்பு விட்டுச் சென்ற இந்த அரசியல் யாப்பு ஒருமைவாதத்திலிருந்து இலங்கை தன்னை மீட்டுக்கொள்வதற்கான முயற்சியில் இன்றுவரை வெற்றி பெறவில்லை.

தொடரும். 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்