1983 - 1991: உச்சமடைந்த இனப் படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
26 நிமிட வாசிப்பு

1983 – 1991: உச்சமடைந்த இனப் படுகொலைகளும் ஈழப்போரின் பிராந்தியப் பரிமாணமும் – பகுதி 1

February 18, 2026 | Ezhuna

1833 முதல் 1921 வரை நீடித்த ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றின் முதலாவது காலகட்டத்தில், தமிழர்கள் அரசியல்ரீதியில் ‘இலங்கையர்’ என்றும், பண்பாட்டுரீதியில் ‘தமிழர்’ என்றும் அடையாளம் கொண்டிருந்தனர். 1921 ஆகஸ்ட் 15 அன்று சேர்.பொன். அருணாசலம் தேசிய காங்கிரஸில் இருந்து விலகி தமிழர் மகாசபையைத் தொடங்கியதுடன், இரண்டாவது காலகட்டம் ஆரம்பமானது. இது 1949 டிசம்பரில் தந்தை செல்வா அகில இலங்கை தமிழரசுக் கட்சியைத் தொடங்கும் வரை நீடித்தது. 1949 முதல் 1968 வரை நீடித்த மூன்றாவது காலகட்டத்தில், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் என வரையறுக்கப்பட்டு, சமஷ்டிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 1968 இல் ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்துடன் தொடங்கி, 2009 இல் ஆயுதப்போர் முடிவடையும் வரை நீடித்த நான்காவது காலகட்டத்தில், தனிநாட்டுக் கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. ‘ஈழத்தமிழர் அரசியல் வரலாறு’ எனும் இத்தொடர், இந்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த முக்கிய நகர்வுகளைத் தொகுத்து வழங்குகிறது; அதன்மூலம், இன்னும் முழுமையடையாத ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றுக்கு ஓர் அடித்தளம் அமைக்க முயற்சிக்கின்றது

இக்காலகட்டம் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவழிப்போடு ஆரம்பமாகி 1991 ஆம் ஆண்டு இடம்பெற்ற ராஜீவ் காந்தி படுகொலையுடன் நிறைவடைகிறது. இக்காலகட்டத்தில் இலங்கை மட்டத்தில் இருந்த தமிழர்கள் பிரச்சினை பிராந்திய மட்டத்திற்குச் சென்றது. பனிப்போரின் தாக்கம் காரணமாக ஆயுதப்போராட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுத உதவிகளையும் ஆயுதப் பயிற்சிகளையும் பின்தள வசதிகளையும் செய்து கொடுத்தது. இலங்கையில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் அமெரிக்காவுடன் அதிகளவு நட்புக்கொண்டது. அமெரிக்காவின் ஆதிக்கம் இலங்கையில் வளர்வதற்கான களத்தையும் திறந்துவிட்டது. ஆயுத இயக்கங்களுக்கு இந்தியா உதவி செய்தமைக்கு இதுவே பிரதான காரணமாகும். தமிழ்நாட்டு மக்களின் அழுத்தமும் துணைக்காரணமாக அமைந்திருந்ததெனலாம்.

1983 இனக்கலவரம்

1983 யூலை 23 இரவு 11:30 மணியளவில், தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் நகருக்கு அருகில் உள்ள திருநெல்வேலியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத் தொடரணி மீது பதுங்கியிருந்து தாக்குதலை நடத்தினர். வாகனத் தொடரணியை வழிநடத்திச் சென்ற ஜீப்பின் அடியில் சாலையோரக் வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. இதன்போது குறைந்தது இரண்டு இராணுவத்தினர் காயமடைந்தனர். அதன் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த இராணுவத்தினர் தங்கள் சக வீரர்களுக்கு உதவக் கீழே இறங்கினர். அவர்கள் மீது பதுங்கியிருந்த போராளிகள் தானியங்கி ஆயுதங்கள், கைக்குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து நடந்த மோதலில், ஓர் அதிகாரியும் பன்னிரண்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்டதை புலிகளின் பிராந்தியத் தளபதி கிட்டு ஒப்புக்கொண்டார். விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சீலன் என்ற சாள்ஸ் அந்தோனியை இலங்கைப் படைகள் கொன்றதற்கும் அரசுப் படைகளால் தமிழ்ப் பள்ளிச் சிறுமிகள் கடத்தப்பட்டு வன்புணர்வு செய்யப்பட்டதற்கும் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் விவரிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலைத் தொடர்ந்து இனக்கலவரம் ஆரம்பமானது.

1983 யூலை 24 இரவு, தலைநகர் கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் தொடங்கியது. பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஏழு நாட்களாக, முக்கியமாக சிங்களக் கும்பல்கள் தமிழரைத் தாக்கினர். உயிருடன் எரித்தனர். படுகொலைகளைப் புரிந்தனர். உடைமைகளைக் கொள்ளையடித்தனர். இவ்வினப்படுகொலைகளின் விளைவாக இலங்கைத் தமிழர்கள் பலர் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். மேலும் ஏராளமான தமிழ் இளைஞர்கள் போராளிக் குழுக்களில் சேர்ந்தனர். இது கறுப்பு யூலை என இன்றும் நினைவுகூரப்படுகிறது. யூலை மாதம் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் ஈழத்தமிழரின் நினைவு மாதமாக உள்ளது. கனடா, சுவிட்சர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உட்பட பல உலக நாடுகளில் இது நினைவுகூரப்பட்டு வருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சரின் வருகை

இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி யூலை 28 அன்று ஜெயவர்த்தனாவை தொலைபேசியில் அழைத்துக் கலவரம் இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தை அவருக்குத் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சர் பி.வி. நரசிம்மராவை தனது சிறப்புத் தூதராக ஜெயவர்த்தனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஜெயவர்த்தனா அதனை ஏற்றுக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு நரசிம்ம ராவ் இலங்கைக்கு வந்தார். இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவ் உலங்குவானூர்தியில் கண்டிக்குச் செல்வதற்கு முன்னர் அரசுத்தலைவர் ஜனாதிபதி ஜெயவர்த்தனா, வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ். அமீது ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இனக்கலவர விளைவுகள்

யூலை 29 வெள்ளிக்கிழமை கொழும்பு அமைதியாக இருந்தது. நகரத்தில் உள்ள பல அகதி முகாம்களில் தஞ்சமடைந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களை தமிழ் மக்கள் பார்வையிட்டனர். காலை 10:30 மணியளவில் புறக்கோட்டைப் பகுதியில் இரண்டு சிங்கள இளைஞர்கள் சுடப்பட்டனர். அடம் அலி கட்டடத்தில் இந்த இளைஞர்கள் தமிழ்ப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கட்டடம் இராணுவம், கடற்படை மற்றும் காவல்துறையினரால் சூழப்பட்டது. அவர்கள் கட்டடத்தின் மீது துணை இயந்திரத் துப்பாக்கிகளினால் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஓர் உலங்குவானூர்தியும் கட்டடத்தின் மீது சுட்டது. பாதுகாப்புப் படையினர் கட்டடத்திற்குள் நுழைந்தபோது உள்ளே தமிழ்ப் புலிகள் எவரும் இருக்கவில்லை; ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், இராணுவம் தமிழ்ப் புலிகளுடன் போரில் ஈடுபட்டதாக கொழும்பில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

புலிகளை எதிர்த்துப் போரிடத் தயாராகக் கோடரிகள், செங்கல்கள், இரும்புக் கம்பிகள், கத்திகள் மற்றும் கற்கள் போன்ற ஆயுதங்களுடன் தெருக்களில் கும்பல்களாக சிங்கள மக்கள் கூடத் தொடங்கினர். வாகனங்களை நிறுத்தித் தமிழர்களைத் தேடினர். அவர்கள் கண்டறிந்த தமிழர்கள் தாக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டனர். கிருள வீதியில் ஒரு தமிழர் உயிருடன் எரிக்கப்பட்டார். அத்திடிய வீதியில் பதினொரு தமிழர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். இரண்டு தமிழர்களினதும் மூன்று முஸ்லிம்களினதும் சடலங்கள் இருந்த ஒரு வாகனத்தை அதே வீதியில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். 15 கலவரக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். யூலை 29 பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 1 திங்கள் காலை 5 மணிக்கு நீக்கப்பட்டது.

பதுளை, கண்டி, திருகோணமலை நகரங்கள் அன்று அமைதியாகக் காணப்பட்டன. நுவரெலியாவில் நள்ளிரவு முதல் வன்முறை பரவியது. தமிழருக்குச் சொந்தமான கணேசன் மற்றும் சிவலிங்கம் என்போரின் கடைகள் தாக்கப்பட்டுத் தீவைக்கப்பட்டன. இது சந்தைத் தெரு, லாசன் வீதி ஆகிய இடங்களுக்கும் பரவியது. கேகாலை மாவட்டத்தில் தெகியோவிட்ட முதல் தெரணியகல, அவிசாவளை வரை வன்முறை பரவியது. மாத்தறை மாவட்டத்தில் தெனியாய மற்றும் மொரவாக்க பிரதேசங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. சிலாபத்திலும் வன்முறைகள் இடம்பெற்றன.

இறப்பு எண்ணிக்கை 400 முதல் 3,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 150,000 பேர் வீடற்றவர்களாயினர். ஏறத்தாழ 8,000 வீடுகளும் 5,000 வணிக நிறுவனங்களும் அழிக்கப்பட்டன. இக்கலவரத்தின் போது ஏற்பட்ட மொத்தப் பொருளாதாரச் செலவு 300 மில்லியன் என மதிப்பிடப்பட்டது. பன்னாட்டு நீதித்துறை வல்லுநர்கள் ஆணையம் என்ற அரசுசார்பற்ற அமைப்பு 1983 டிசம்பரில் வெளியிட்ட அறிக்கையில் இப்படுகொலைகளை ஓர் இனப்படுகொலை என்று விவரித்தது.

யூலை 30 அன்று நுவரெலியா, கந்தப்பளை, காவ எலிய, மாத்தளை ஆகிய இடங்களில் வன்முறைகள் இடம்பெற்றன. நாட்டின் ஏனைய பகுதிகளில் அமைதி நிலவியது. வன்முறைகளைத் தூண்டியமைக்காக அதே நாள் இரவில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நவ சமசமாஜக் கட்சி ஆகிய மூன்று இடதுசாரிக் கட்சிகளுக்கு அரசு தடை விதித்தது. ஏனைய குழுக்களைச் சேர்ந்த சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராடுவதற்கும் தமிழ்ச் சமூகத்தைப் பாதுகாப்பதற்கும் ஆரம்பக் கட்டங்களிலிருந்தே முக்கிய எதிர் நடவடிக்கைகளை எடுத்ததாக அரசாங்கம் கூறி வந்தது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, தாக்குதல்கள் கவனமாக ஒழுங்கமைக்கப்பட்டன. தொடருந்துகள், கட்டடங்கள் மற்றும் பேருந்துகள் போன்றவை ஆரம்ப இலக்குகளாக இருந்தன. கொழும்பில் உள்ள வீடற்ற 20,000 தமிழர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்குவதற்கு பிரதமர் ரணசிங்க பிரேமதாசா ஒரு குழுவை அமைத்தார். இந்தத் தற்காலிகத் தங்குமிடங்கள் ஐந்து பள்ளிக்கூடக் கட்டடங்களும் ஒரு விமானத் தங்குமிடமும் ஆகும். அகதிகளின் எண்ணிக்கை சுமார் 50,000 ஆக அதிகரித்த பின்னர், அரசாங்கம் இந்தியாவின் உதவியுடன் தமிழர்களை வடக்கே கப்பல்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தது.

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலைகள்

1843 ஆம் ஆண்டு பிரித்தானியரால் சகல பாதுகாப்புகளுடனும் கட்டப்பட்டதே வெலிக்கடைச் சிறைச்சாலை ஆகும். ஜூலைக் கலவரத்தின் போது இந்தச் சிறைச்சாலைக்குள் வைத்தே தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் சிங்களச் சிறைக்கைதிகளினாலும் சிறைக்காவலர்களினாலும் கொல்லப்பட்டனர். வெலிக்கடைச் சிறைப் படுகொலையில் கொலை செய்யப்பட்ட முக்கிய தலைவர்களான குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கி இருந்த B3 என்னும் சிறைப் பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன.

இப்படுகொலை நிகழ்வு இரண்டு வெவ்வேறு நாட்களில் நடைபெற்றது. இரண்டும் கொழும்பில் அதியுயர் பாதுகாப்புச் சிறைச்சாலையான வெலிக்கடையில் இடம்பெற்றன. முதலாவது படுகொலை ஜூலை 25, 1983 அன்று இடம்பெற்றது. இதில் 35 தமிழ்க் கைதிகள் சக சிங்களக் கைதிகளினால் கத்தி, வாள் மற்றும் பொல்லுகளால் குத்திக் கொல்லப்பட்டனர். இரண்டாவது நிகழ்வு இரண்டு நாட்களின் பின்னர் ஜூலை 27 ஆம் திகதி இடம்பெற்றது. இதில் 18 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். மயில்வாகனம் எனும் பெயருடைய 15 வயது சிறுவன் தளபாடத்தின் பின்னால் ஒளிந்திருந்தான். அவனை சிறைக்காவலர் ஒருவர் இழுத்து வெட்டிக்கொலை செய்தார்.

வெலிக்கடைச் சிறைச்சாலையானது A, B, C, D என நான்கு குறுக்கு வடிவில் அமைக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்டது. இவற்றில் A3, B3, C3 மற்றும் D3 என்பன சிறைச்சாலையின் கீழ்ப் பகுதியில் உள்ளன. B3, C3 மற்றும் D3 இல் இருந்தவர்கள் அனைவரும் தமிழ் அரசியல் கைதிகளாவர். A3 இல் இருந்தவர்கள் அனைவரும் பயங்கரக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சிங்களக் கைதிகள். இப்படுகொலை நிகழ்வில் தப்பிப் பிழைத்தவர்களின் வாக்குமூலங்களின் படி, சிறைச்சாலை அதிகாரிகளே அறைக்கதவுகளின் திறப்புகளை சிங்களக் கைதிகளுக்குக் கொடுத்ததாகத் தெரிவித்தனர். ஆனால் சிறை அதிகாரிகள், சிங்களக் கைதிகள் தம்மிடமிருந்து திறப்புகளைக் களவெடுத்ததாகத் தெரிவித்தனர்.

வெலிக்கடைச் சிறையின் B3 பிரிவிலும் D3 பிரிவிலும் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் திகதி கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்கள்:

  1. தங்கத்துரை எனப்படும் நடராசா தங்கவேல்
  2. குட்டிமணி எனப்படும் செல்வராசா யோகச்சந்திரன்
  3. ஜெகன் எனப்படும் கணேசானந்தன் ஜெகநாதன்
  4. தேவன் எனப்படும் செல்லத்துரை சிவசுப்பிரமணியம்
  5. சிவபாதம் மாஸ்டர் எனப்படும் நவரத்தினம் சிவபாதம்
  6. செனட்டர் எனப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன் 
  7. அருமைநாயகம் எனப்படும் சின்னராஜா அல்லது செல்லத்துரை ஜெயரட்ணம் 
  8. அன்ரன் எனப்படும் சிவநாயகம் அன்பழகன் 
  9. ராசன் எனப்படும் அரிய புத்திரன் பாலசுப்ரமணியம் 
  10. சுரேஸ் மாஸ்டர் எனப்படும் காசிப்பிள்ளை சுரேஸ் குமார் 
  11. சின்னத்துரை அருந்தவராஜா 
  12. தேவன் அல்லது அரபாத் எனப்படும் தனபாலசிங்கம் தேவகுமார் 
  13. மயில்வாகனம் சின்னையா
  14. சித்திரவேல் சிவானந்த ராஜா 
  15. கணபதிப்பிள்ளை மயில்வாகனம் 
  16. தம்பு கந்தையா 
  17. சின்னப்பு உதயசீலன் 
  18. கணேஸ் அல்லது கணேஸ்வரன் எனப்படும் கதிர்வேற்பிள்ளை ஈஸ்வரநாதன் 
  19. கிருஸ்ணபிள்ளை நாகராஜா 
  20. கணேஸ் எனப்படும் கணபதி கணேசலிங்கம் 
  21. அம்பலம் சுதாகரன் 
  22. இராமலிங்கம் இராமச்சந்திரன் 
  23. பசுபதி மகேந்திரன் 
  24. கண்ணன் எனப்படும் காசிநாதன் தில்லைநாதன் 
  25. குலம் எனப்படும் செல்லப்பா குலராய சேகரம் 
  26. மோகன் எனப்படும் குமாரசாமி உதயகுமார் 
  27. ராஜன் எனப்படும் சுப்ரமணியம் சிவகுமார் 
  28. சாந்தன் எனப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் 
  29. வேலுப்பிள்ளை சந்திரகுமார் 
  30. அழகராச ராஜன் 
  31. அந்தோணிப்பிள்ளை உதயகுமார்
  32. அமுதன் அல்லது அவுடா எனப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம் 
  33. யோகன் எனப்படும் ராயயோகநாதன் 
  34. கொழும்பான் எனப்படும் கருப்பையா கிருஸ்ணகுமார் 
  35. ராஜன் கோதண்டபிள்ளை தவராயலிங்கம்

முப்பத்தைந்து பேர் கொல்லப்பட்டு ஒரு நாள் கழிந்து 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி, அடுத்த கொலைகள் நிறைவேறின. அன்று கொல்லப்பட்ட ஈழ விரும்பிகளின் பெயர்கள்:

  1. செல்லச்சாமி குமார் 
  2. கந்தசாமி சர்வேஸ்வரன் 
  3. மரியாம்பிள்ளை மரியநாயகம் 
  4. சிவபாதம் நீதிராஜா 
  5. ஞானமுத்து நவரத்தினசிங்கம் 
  6. கந்தையா ராஜேந்திரம் 
  7. தெய்வநாயகம் பாஸ்கரன் 
  8. பொன்னம்பலம் தேவகுமார் 
  9. பொன்னையா துரைராசா 
  10. முத்துக்குமார் சிறீகுமார் 
  11. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம் 
  12. குமாரசாமி கணேசலிங்கன் 
  13. டாக்டர் இராஜசுந்தரம் 
  14. செல்லப்பா இராஜரட்ணம்
  15. சோமசுந்தரம் மனோரஞ்சன் 
  16. ஆறுமுகன் சேயோன் 
  17. தாமோதரன் பிள்ளை ஜெயமுகுந்தன் 
  18. சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்

கொழும்பு புதிய மகசீன் சிறையில் இருந்த ஈழப்போராளிகள் யாருக்கும் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படவில்லை. வெலிக்கடைச் சிறையில் இரு நாட்கள் நடந்த கொலையில் இருந்து தப்பிய பத்தொன்பது ஈழப் போராளிகளின் பெயர்கள்:

  1. அந்தோணிப்பிள்ளை  
  2. மாணிக்கம் தாசன் 
  3. கணேசலிங்கன் 
  4. சிறீதரன் 
  5. டக்ளஸ் தேவானந்தா 
  6. தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் 
  7. சிவசுப்பிரமணியம் 
  8. ஞானசேகரம் எனப்படும் பரந்தன் ராஜன் 
  9. பாபுஜி 
  10. டேவிட் ஐயா எனப்படும் அ. டேவிட் 
  11. வண. குரு சின்னராஜா 
  12. கோவை மகேசன் 
  13. ஜெயகுலராஜா 
  14. மு. நித்தியானந்தன் 
  15. ஜெயதிலக ராஜா 
  16. டாக்டர் தர்மலிங்கம் 
  17. வண. பிதா சிங்கராயர் 
  18. யோகா எனப்படும் யோகராஜா 
  19. விவரம் தெரியாது

மட்டக்களப்புச் சிறைச்சாலைத் தகர்ப்பு

1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி இரவு மட்டக்களப்புச் சிறை போராளிகளால் உடைக்கப்பட்டு, அங்கு சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 50 பேர் மீட்கப்பட்டனர். இச்சிறை உடைப்பிற்கு சிறைக்குள் இருந்த ஈழப் போராளிகளும் முக்கியமாக உதவினர். குறிப்பிட்ட நேரத்தில் சிறையை உடைக்க வசதியாக உபகரணங்களை உள்ளே அனுப்பியது மட்டுமல்லாது, தப்பி வெளியே வந்த போராளிகளை உடனுக்குடன் படகுகளிலும் வாகனங்களிலும் குழுக்களாகப் பிரித்து அனுப்புவதில் போராளிகள் காட்டிய திறமை அளப்பரியது.

  1. அ. டேவிற்
  2. இராமநாதன்
  3. வரதராஜப் பெருமாள்
  4. மகேஸ்வரராஜா
  5. எஸ். பேரின்பராஜா
  6. எஸ். சிவலிங்கம் 
  7. எஸ். சிறீஸ்கந்தராஜா
  8. எஸ். பிரேமாநந்தன் 
  9. எஸ். கோணேஸ்வரன்
  10. ஜி. பத்மநாதன்
  11. வி. சண்முகநாதசிவம்
  12.  வி. சுந்தரலிங்கம்
  13.  ரி. விஜயகுமார்
  14.  கே. தேவானந்தன்
  15. ரி. தட்சணாமூர்த்தி
  16. வி. மகேந்திரன்
  17. பி. பவானந்தன்
  18. எஸ். யோகராஜா
  19. ந. ஜெயக்கொடி
  20. ரி. மகேஸ்வரன்
  21. வி. சுப்பிரமணியன்
  22. மாணிக்கம் தாசன்
  23. சண்முகம் சந்திரபாலன்
  24. எஸ். கணேசலிங்கம்
  25. எஸ். சிறீதரன்
  26. ஞானசேகரம்
  27. அந்தோணிப்பிள்ளை (அழகிரி)
  28. அகஸ்டின் போல்
  29. சின்னராசா
  30. எஸ். ஜெயபிரகாசம்
  31. எஸ். இராஜாஜி
  32. மு. நித்தியானந்தன்
  33. ஜெயத்திலகராஜா
  34. ஜெயகுலராஜா
  35. தங்கமகேந்திரன்
  36. வாமதேவன்
  37. ஞானவேல்
  38. பரமதேவா
  39. ரி. மரியநாயகம்
  40. எஸ். நகுலேஸ்வரன்
  41. எஸ். மகேஸ்வரன்
  42. ரி. ஜெகதீசன்
  43. குகதாசன்
  44. கேந்திரன்
  45. பாலேந்திரா
  46. திருச்செல்வம்
  47. பகிரதன்
  48. மகேந்திரன்
  49. கென்றி
  50. வடிவேல்

பருத்தித்துறை குண்டுவெடிப்புச் சம்பவம்

பருத்தித்துறையில் உள்ள திக்கம் என்னும் இடத்தில் போராளிகளால் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஆறு பொலிஸ் கொமாண்டோக்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெற்றது. வடமராட்சியின் கல்விச் செல்வமான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஆய்வுக்கூடத்தையும் 7,500 புத்தகங்களைக் கொண்ட நூலகத்தையும் மூன்று பெரிய கட்டடங்களையும் படையினர் தீ வைத்து அழித்தனர். 18 அப்பாவி மக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தமிழ்ப் பயணிகள் மீதான தாக்குதல்

சுமார் 47 பயணிகளுடன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த வி.ஐ.பி. எக்ஸ்பிரஸ் என்னும் பஸ் 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை 2 மணிக்கு வவுனியாவை நெருங்கிக் கொண்டிருக்கையில் றம்பேவா என்னும் இடத்தில் ஆயுதம் தாங்கிய 6 இராணுவத்தினரால் மறிக்கப்பட்டது. பஸ்ஸுக்குள் ஏறிய இராணுவத்தினர் பயணிகள் தமிழர்கள் தான் என உறுதிப்படுத்திய பின்னர் பஸ்ஸை வவுனியா – மன்னார் வீதியில் உள்ள ஆறாவது மைல் போஸ்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு அனைத்துப் பயணிகளையும் கீழே இறக்கி வரிசையாக நிற்க வைத்துச் சுட்டதில் 15 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இரு இளம்பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

இந்திரா காந்தி படுகொலை

அயர்லாந்து நாட்டுத் தொலைக்காட்சிக்காக ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த பிரித்தானிய நடிகர் பீட்டர் உஸ்தொனோவுக்குப் பேட்டியளிப்பதற்காக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் திகதி காலை 09:20 மணிக்கு இந்திரா காந்தி புதுடில்லி சப்தர்ஜங் தெருவிலுள்ள அவரது வீட்டுத் தோட்டத்திலிருந்து அடுத்தமைந்துள்ள அக்பர் வீதியிலுள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த சிறுவாயிலை அவர் கடக்கும்போது அவ்வாயிலில் காத்திருந்த அவரது பாதுகாவலர்கள் சத்வந்த் சிங், பியாந்த் சிங் ஆகிய இருவரும் அவரைச் சுடத் தொடங்கினர். பியாந்த் சிங் இந்திரா காந்தியின் அடிவயிற்றில் மூன்றுமுறையும், கீழே விழுந்துவிட்ட இந்திரா காந்தியை சத்வந்த் சிங் இயந்திரத் துப்பாக்கியால் 30 முறையும் சுட்டனர். சுட்டபின் இருவரும் தமது ஆயுதங்களைக் கீழே எறிந்தனர். பியாந்த் சிங் “நான் செய்யவேண்டியதைச் செய்து விட்டேன். நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்து கொள்ளலாம்” எனக் கூறினார். அடுத்த ஆறு நிமிடங்களில் இந்திய – திபெத் எல்லைக் காவல்படையைச் சேர்ந்த தார்செம் சிங் ஜாம்வால், ராம் சரண் ஆகிய வீரர்கள் பியாந்த் சிங்கை சுட்டுக் கொன்றனர். சத்வந்த் சிங், இந்திரா காந்தியின் மற்றைய பாதுகாவலர்களால் பலத்த காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டார். 1989 இல் சத்வந்த் சிங்கும் உடன் குற்றவாளியான கெகர் சிங்கும் தூக்கிலிடப்பட்டனர்.

இந்திரா காந்தி சுடப்பட்டு 10 மணி நேரங்கள் கழித்துத்தான் தூர்தர்ஷன் மாலைச் செய்தியில் அவர் இறந்த செய்தி அறிவிக்கப்பட்டது. உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளையும் மீறி இந்திரா காந்தியின் செயலாளர் ஆர்.கே. தவான் பாதுகாப்பு நடவடிக்கையாக கொலையாளிகள் உட்பட்ட பிற சீக்கியக் காவலர்களை கடமையிலிருந்து நீக்கிவிடுமாறு உத்தரவிட்டார்.

கென்ட், டெலர் பண்ணைச் சம்பவம்

கே.சி. நித்தியானந்தா, கந்தசாமி, ரவீந்திரன் போன்றவர்களால் கென்ட், டெலர் பண்ணை அமைக்கப்பட்டது. இதனை தமிழ் அகதிகள் புனர்வாழ்வு கழகம் அமைத்துக் கொடுத்தது. இதன் ஆரம்பத் தலைவராக கே.சி. நித்தியானந்தா இருந்தார். இந்த அமைப்பில் உமாமகேஸ்வரன், தயாபரசிங்கம், பரராஜசேகரன் ஆகியவர்கள் முன்னின்று உழைத்தவர்களாவர். இங்கு ஏராளமான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர். விவசாயத் திட்டம் இங்கு பெரும் வெற்றியைத் தந்தது. இந்தப் பண்ணைகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தன. 1984 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் இந்தப் பண்ணைகள் பறிமுதல் செய்யப்பட்டு இங்கே பழைய சிங்களக் குற்றவாளிகளும் மறியல் கைதிகளும் ஆயுதபாணிகளாகக் குடியேற்றப்பட்டனர். இது சிங்கள அரசினால் திட்டமிடப்பட்ட ஒரு செயலாகும். ஆயுதபாணிகளாகக் குடியேற்றப்பட்ட கிரிமினல்களை தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பயன்படுத்தவே இலங்கை அரசு திட்டமிட்டிருந்தது.

நூற்றுக்கும் மேற்பட்ட இந்தச் சிங்களக் குற்றவாளிகள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி கொல்லப்பட்டனர். இதேபோல் தமிழ் மீனவர்களுக்கு எதிராக கொக்கிளாய், நாயாறு பகுதிகளில் ஆயுதபாணிகளாக இலங்கை அரசாங்கத்தால் குடியேற்றப்பட்ட சிங்களக் காடையர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே தினத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன.

ஒதியமலைப் படுகொலைகள் (Othiyamalai Massacre)

இலங்கையின் வடக்கு மாகாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற கிராமத்தில் இலங்கைத் தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் இப்படுகொலைகள் இடம்பெற்றன. 1984 டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதவியா இராணுவ முகாமிலிருந்து நெடுங்கேணிக்கு 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 27 ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ஆண்களைத் தம்முடன் கூட்டிச் சென்றனர். ஆனாலும் இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை.

சர்வதேச மன்னிப்பு அவையின் அறிக்கையில் நிகழ்வை நேரில் கண்ட சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1984 டிசம்பர் 1 சனிக்கிழமை நள்ளிரவில் 30 இற்கும் 40 இற்கும் இடைப்பட்ட இராணுவத்தினர் கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள மலைக்காடு கோவிலில் தங்கியிருந்தனர். டிசம்பர் 2 அதிகாலை குடிமனைகளுக்குள் புகுந்து ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்களையும் அவர்களது கண்களையும் கைகளையும் கட்டி இழுத்துச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள் அங்கிருந்த சனசமூக நிலையக் கட்டடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 27 பேர் அங்கேயே சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஐவர் (50 வயதானவர்கள்) 25 ஸ்ரீ 6511 என்ற இலக்கத்தகடு கொண்ட உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இவர்கள் ஐவரும் பின்னர் வீடு திரும்பவில்லை. இவர்களில் இருவரது எரிந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதே நாளில் இராணுவத்தினரின் இன்னும் ஒரு குழு செம்மலை என்ற தமிழ்க் கிராமம் ஒன்றுக்குச் சென்றது. ஆனால் அவர்கள் அங்கு வரும் முன்னரே கிராமத்தவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி முல்லைத்தீவுக்குச் சென்றுவிட்டனர்.

வல்வெட்டித்துறைச் சம்பவம் – 1985

1985 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அரச படையால் வல்வெட்டித்துறை சுற்றிவளைக்கப்பட்டு சோதனை இடப்பட்ட போது, விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பத்து இராணுவத்தினரும் ஓர் இராணுவ மேஜரும் கொல்லப்பட்டதுடன் சிலர் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து 10 ஆம் திகதி வடமராட்சிப் பகுதியில் இராணுவத்தின் அராஜகம் தலைவிரித்தாடியது. சுமார் ஏழு தமிழர்கள் கரவெட்டிப் பகுதியில் கொல்லப்பட்டனர். பருத்தித்துறைப் பகுதியில் இருவர் கொல்லப்பட்டனர்.

கந்தராஜா, கணேசமூர்த்தி என்கிற இருவர் இராணுவம் சுட்டதில் உயிராபத்தான நிலையை அடைந்தனர். வல்வெட்டித்துறை, பொலிகண்டி, உடுப்பிட்டி பகுதிகளில் நாற்பத்தி இரண்டிற்கும் மேற்பட்ட பொதுமக்களை இராணுவம் கொன்றொழித்தது. 14 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட இருபத்தைந்து இளைஞர்களை படையினர் கைது செய்து, கைகளைக் கட்டி, சனசமூக நிலையம் ஒன்றுக்குள் விட்டுப் பூட்டிய நிலையில் உள்ளே கைக்குண்டு வீசிக் கொலை செய்தனர். மேலும் பன்னிரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது கைகளும் பின்னே கட்டப்பட்ட நிலையில் வரிசையாக நிறுத்தப்பட்டு இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பதினேழுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. பல பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அனுராதபுரப் படுகொலை – 1985 

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அனுராதபுரம் பஸ் நிலைய நகரப் பகுதிக்குள் விக்டர் தலைமையில் புகுந்த விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஆண்கள், பெண்கள், புத்த பிக்குகள் உட்பட 138க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 1985 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இளைஞர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பழிக்குப் பழி வாங்கவே இந்த அனுராதபுரம் படுகொலை நடந்தது.

திம்பு பேச்சுவார்த்தை – 1985

பூட்டான் தலைநகரான திம்புவில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுகள் இரண்டு சுற்றுகளாக அமைந்தன. முதலாவது சுற்றுப் பேச்சு 1985 ஜூலை 8 ஆம் நாள் தொடங்கி ஆறு நாட்கள் நடைபெற்று ஜூலை 13 ஆம் திகதியில் முடிவுற்றது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கு அரசு அதிபர் ஜெயவர்த்தனாவின் சகோதரரும் வழக்கறிஞருமான திரு. ஹெக்டர் ஜெயவர்த்தனா தலைமை வகித்தார். ஏனைய பிரதிநிதிகள் சட்டத்தரணிகளாகவும் அரச நிர்வாகிகளாகவும் அமைந்தனர்.

ஸ்ரீலங்கா அரசின் பேச்சுக் குழுவில் அமைச்சர் மட்டத்திலான அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கவில்லை என்பதால் விடுதலைப் புலிகள் இயக்கமும் ஈழத்தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய அமைப்புகளும் தமது மூத்த உறுப்பினர்களை மட்டும் திம்பு பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தனர். இதன்படி முதலாவது சுற்றுப் பேச்சில் விடுதலைப் புலிகள் சார்பில் லோரன்ஸ் திலகர் மற்றும் சிவகுமாரன் (அன்ரன்) ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னரான இரண்டாவது சுற்றுப் பேச்சில் யோகரெத்தினம் யோகியும் அவர்களுடன் கலந்து கொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப். சார்பில் வரதராஜப் பெருமாளும் கேதீஸ்வரன் லோகநாதனும் கலந்துகொண்டனர். ரெலோ அமைப்பின் சார்பில் முதல் சுற்றுப் பேச்சில் சாள்ஸ் மற்றும் பொபி கலந்து கொண்டனர். இரண்டாவது சுற்றுப் பேச்சில் இவர்களுடன் நடேசன் சத்தியேந்திரா பங்கேற்றார்.

ஈரோஸ் அமைப்பின் சார்பில் மூத்த நிறுவன உறுப்பினர்களான இளையதம்பி இரத்தினசபாபதியும் சங்கர் ராஜியும் பங்கேற்றனர். சித்தார்த்தனும் வாசுதேவனும் புளொட் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். எல்லோரிலும் இருந்து மாறுபட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியை அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

பேச்சுகளின் நிகழ்ச்சி நிரலைத் தயாரித்தல், விவாதத்தை முன்னெடுத்தல், தீர்மானங்களை எடுத்தல் போன்ற விடயங்களில் தமிழ் விடுதலை அமைப்புகளின் முக்கிய கூட்டணியான ஈழத் தேசிய விடுதலை முன்னணி முக்கிய பங்கு வகித்தது.

ஈழத் தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களும் பேச்சுகளில் கலந்து கொள்ளும் அவர்களது பிரதிநிதிகளும் தொடர்புகொண்டு கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் திம்புக்கும் சென்னைக்கும் இடையில் ஒரு நேரடித் தொலைத்தொடர்பு வசதியை சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் இந்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு விவகாரத்தில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பை அன்ரன் பாலசிங்கம் மேற்கொண்டார்.

பூட்டான் அரசாங்கத்தின் ஆதரவுடன் பேச்சுகள் நடைபெற்றன. பூட்டான் வெளியுறவு அமைச்சர் லியன் போ சேரிங் அதிகாரபூர்வமாக பேச்சுகளை ஆரம்பித்து வைத்தார். இந்தியா மத்தியஸ்தம் வகித்தது. திரு. சந்திரசேகரன் உட்பட இந்திய உயரதிகாரிகள் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். அவர்கள் பேச்சுகளில் பங்குபற்றவில்லை. சமாதானப் பேச்சுகள் ஆரம்பமான சில நேரங்களுக்குள் அது ஒரு சொற்போராக வடிவம் எடுத்தது. தமிழ்ப் போராளி அமைப்புகளின் சட்ட ரீதியான தகுதி கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அரச பிரதிநிதிகள் இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என வாதிட்டனர். திம்பு பேச்சுகள் மூலம் ஏற்பட்ட ஓர் ஆக்கபூர்வமான விளைவு என்றால் அது தமிழர் தரப்பின் ஒருமைப்பாடே ஆகும்.

சிங்கள அரச பேச்சுக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா மாவட்ட அபிவிருத்தி சபை என்ற ஒரு தீர்வுத் திட்ட யோசனையை முன்வைத்தார். சமாதானப் பேச்சு மூலம் தமிழரின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் எதுவும் ஜெயவர்த்தனா அரசுக்கு இருக்கவில்லை. இருப்பினும் தமிழருக்கு ஒரு நிலையான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ்த் தரப்பினர் கூறினர். தமிழ்த் தரப்பால் ஏகமனதாக முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் பின்வருமாறு:

  1. தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்.
  2. தமிழ் மக்களுக்கு இனம் காணக்கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்.
  3. தமிழர் தேசத்திற்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்.
  4. சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமையும் மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளல்.

முதல் சுற்றுப் பேச்சு முடிவடைந்த நாள் அன்று (July 13) தமிழ்ப்பிரதிநிதிகள் கூட்டாக விடுத்த திம்பு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டதாவது: “இந்த மூலக்கோட்பாடுகளை பேணிப் பாதுகாப்பதற்காக வெவ்வேறு நாடுகள் வெவ்வேறான அரசாட்சி முறைகளை வடிவமைத்துள்ளன. எமது மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதால் நாம் சுதந்திரமான தமிழரசுக் கோரிக்கையை முன்வைத்து அதற்காகப் போராடி வந்துள்ளோம். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக ஸ்ரீலங்கா அரச பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் முற்றாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆதலால் நாம் அவற்றை நிராகரித்துள்ளோம். எனினும் சமாதானத்தில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதால், நாம் முன்மொழிந்த மூலக்கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தீர்வுத் திட்டத்தை ஸ்ரீலங்கா அரசு முன்வைக்குமானால் அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம்.”

1985 ஆகஸ்ட் 12 ஆம் நாள் இரண்டாவது சுற்றுப் பேச்சு திம்புவில் ஆரம்பமானது. அரச பேச்சுக் குழுவின் தலைவர் ஹெக்டர் ஜெயவர்த்தனா தான் ஏற்கனவே தயாரித்துக் கொண்டு வந்த அறிக்கையை வாசித்தபோது, குடியுரிமைக் கோரிக்கைகளைத் தவிர்ந்த ஏனைய மூன்று கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என நிராகரித்தார். குடியுரிமை சம்பந்தப்பட்ட கோட்பாட்டை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும் என்றார்.

இருதரப்பு பேச்சுக் குழுக்களும் தங்களது நிலைப்பாட்டில் விட்டுக்கொடுக்காத கடும் போக்கைக் கடைப்பிடித்ததன் காரணமாக முரண்பாடு ஏற்படலாயிற்று. இதன்போது இந்திய வெளியுறவுச் செயலர் ரொமேஸ் பண்டாரி, தமிழ்ப் தரப்பின் விட்டுக்கொடுக்காத கடும்போக்கே முரண்பாட்டிற்குக் காரணம் எனக் கூற, கோபமடைந்த நடேசன் சத்தியேந்திரா காரசாரமான வார்த்தைகளால் பண்டாரியை அவமானப்படுத்தி அடக்கிவைத்தார்.

இவ்வேளையில் 1985 ஆகஸ்ட் 16 ஆம் திகதி வவுனியா நகரில் சிங்கள ஆயுதப் படைகள் நிகழ்த்திய வெறியாட்டத்தில் பெருந்தொகையான அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் தமிழரின் கடைகள், சொத்துகள் என்பனவும் தீ மூட்டி எரிக்கப்பட்டன. ஆகஸ்ட் 17 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள தமிழ்க் கிராமம் மீதும் இதே கொடூரம் இடம்பெற்றது. இதனை அறிந்த தமிழ்த் தரப்பு திம்பு பேச்சுகளைப் புறக்கணித்தது.

திம்பு பேச்சுகள் தோல்வியில் முடிவடைந்ததற்கான காரணங்கள்:

  1. மிகவும் நுட்பமாகக் கையாள வேண்டிய ஒரு சிக்கலான இராஜதந்திர முயற்சியை முன்னெடுக்கும் சாதுரியமும் சாணக்கியமும் இந்தியாவின் தூதுவராகச் செயற்பட்ட ரொமேஸ் பண்டாரியிடம் இருக்கவில்லை.
  2. ‘றோ’ புலனாய்வு அதிகாரிகளின் நெருக்குவார மிரட்டல் அணுகுமுறைகள்.
  3. ஸ்ரீலங்கா அரசின் பேச்சுக் குழுவின் தலைவராகப் பணிபுரிந்த ஹெக்டர் ஜெயவர்த்தனாவின் நெகிழ்வற்ற கடும்போக்கு.

தொடரும். 



About the Author

சி. அ. யோதிலிங்கம்

சி. அ. யோதிலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தினையும் இலங்கைச் சட்டக்கல்லூரியில் சட்டமாணிப் பட்டத்தினையும் பெற்றவராவார்.

‘இலங்கையின் அரசியல் யாப்புகள்’, ‘இலங்கையின் இனகுழும அரசியல்’, ‘சமாதான முன்னெடுப்பின் அரசியல் சவால்கள்’, ‘இலங்கையின் இனப்பிரச்சினையும் அரசியல் தீர்வு யோசனைகளும்’, ‘இலங்கையில் இனப்பிரச்சினையின் வரலாறு’, ‘அரசறிவியல் ஓர் அறிமுகம்’, ‘ஒப்பியல் அரசாங்கம்’ போன்ற பல நூல்களை எழுதியுள்ள யோதிலிங்கம் பல ஆய்வுக்கட்டுரைகளைப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்