இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
27 நிமிட வாசிப்பு

இலங்கையின் பின்காலனித்துவ அரசு – பகுதி 1

February 16, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: ஜயதேவ உயன்கொட

இலங்கையின் பின்காலனித்துவ அரசு (Post–Colonial State in Sri Lanka) எனும் பொருள் பற்றிய ஆய்வுக் கட்டுரையொன்றை ஜயதேவ உயன்கொட அவர்கள் எழுதினார். இக்கட்டுரை பேராசிரியர் நடராஜ சண்முகரத்தினம் அவர்களது அறிவுத்துறைப் பணிகளைப் பாராட்டும் வகையில் வெளியிடப்பட்ட எழுபதாண்டு நிறைவு வெளியீடான ‘The Political Economy of Environment and Development in a Globalized World: Exploring the Frontiers: Essays in Honour of Nadarajah Shanmugaratnam’ என்னும் கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்நூல் ‘Tapir Academic Press, Trondheim, Norway (2011)’ வெளியீடாகும். ஜயதேவ உயன்கொட அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் இங்கே தரப்பட்டுள்ளது.

இலங்கை பற்றிய அரசியல் விஞ்ஞானத் துறை ஆய்வுகளில் ‘அரசு’ என்ற விடயம் பற்றிப் பல கோணங்களில் ஆராயப்பட்டுள்ள போதும், பின்காலனித்துவ அரசு உருவாக்கம் என்னும் விடயம் ஆராயப்படவில்லை. 1960 ஆம் ஆண்டு முதல் அரசு பற்றிய ஆய்வுகள் அதனை இலங்கையின் இனப்பிரச்சினை என்பதன் ஊடாகவே பார்த்தன. வர்க்க உறவுகள், சமூக அடித்தளம் என்பனவற்றின் ஊடாகவும் இலங்கை அரசின் இயல்பை விளக்கும் முயற்சிகள் பயனுள்ள ஆக்கங்களுக்குக் காரணமாயின (உ.ம். சாஸ்திரி 1983, குணசிங்க 1996, உயன்கொட 1999, 2011). ஆயினும் காலனித்துவ அரசின் உருவாக்கம் என்ற வரலாறு பயனுள்ள முறையில் இன்றுவரை கட்டமைக்கப்படவில்லை.

இக்கட்டுரையில் நான் எடுத்துக் கூறவிருக்கும் விடயங்கள் வருமாறு: முதலாவதாக, பின்காலனித்துவ அரசின் உருவாக்கத்தின் பின்னணியாக அமைந்த இலங்கையில் பிரித்தானிய காலனி ஆட்சிக்கால வரலாற்றை விளக்கவுள்ளேன். இப்பின்னணியை விளக்கும்போது, பின்காலனித்துவ அரசுகளின் இயல்பை விளக்கும் கோட்பாடாகிய மிகைவிருத்தி அரசு யந்திரம் (Over–developed State Apparatus) என்னும் கருத்தை, இலங்கைச் சூழ்நிலையில் வைத்துப் பரிசீலிக்கவுள்ளேன். இக்கருத்து பின்காலனித்துவ அரசுகளின் உருவாக்கம் பற்றிய பிரத்தியேகச் சூழ்நிலைகள் பற்றிக் குறிப்பிடுவதால் எனது பரிசீலனை பயனுடையதாக இருக்கும் எனக் கருதுகிறேன். கட்டுரையின் அடுத்த பகுதி 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இலங்கையின் பின்காலனித்துவ அரசு உருவாக்கத்தில் வெளிப்பட்டுத் தெரிந்த இரு முக்கிய இயல்புகளை எடுத்துக்கூறுவதாக இருக்கும். இவ்விரு இயல்புகளாவன:

அ) இக்காலத்தில் லிபரல் ஜனநாயக முறையின் அடிப்படையான நிறுவனங்களும் நடைமுறைகளும் இலங்கையில் தடம் பதித்தன. அத்தோடு இந்நிறுவனங்களும் நடைமுறைகளும் ஒற்றையாட்சி யாப்பு மாதிரியை (Unitarist Constitutional Model) அடிப்படையாகக் கொண்டிருந்தன.

ஆ) அரசின் இறுதி இலக்கு இலங்கையில் சிங்களத் தேசியவாதத்தின் அரசியல் பண்பாட்டு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதே என்ற கருத்து வலுப்பெறுதலும், அரசின் இனத்துவ அடித்தளம் (சிங்களமாகக்) குறுக்கம் பெறுதலும் இக்காலத்தில் உறுதியாயின.

மூன்றாவது பகுதி தாராண்மைப் பண்பற்ற அரசாக இலங்கை அரசு மாறும் செயல்முறையை விளக்குகிறது.

நான்காம், ஐந்தாம் பகுதிகளிலும் நான் இதே கருத்தைத் தொடர்ந்து பரிசீலிப்பதோடு, 1970–1977 காலப்பகுதியில் ‘லிபரல் அரசு அல்லாததாக ஆக்கும்’ இச்செயல்முறை ‘லிபரலிசத்தைச் சகித்துக் கொள்ளாத அரசின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று’ என்பதையும் ஆராயவுள்ளேன். 

1980களில் இலங்கையில் பொருளாதாரத் தாராளமயமாக்கல் இடம்பெற்றது. இத்தாராளமயமாக்கல் சூழலில் இனக்குழும சிவில் யுத்தமும் நடைபெற்றது. இவ்விரு நிலைமைகளின் பின்னணியில் அரசு ‘யாப்புக்குட்பட்ட சர்வாதிகாரம்’ (Constitutional Authoritarianism) என்ற தன்மையுடையதாக மாறியதை ஆறாவது பகுதி ஆராய்கிறது.

ஏழாம் பகுதியில் 1994 இலும், 2002 இலும் ‘லிபரல் அரசை உருவாக்கும்’ (Liberalisation) முயற்சி மேற்கொள்ளப்பட்டதையும் அது தோல்வியுற்றதையும் கூறவுள்ளேன். முடிவுரையாக, பாராளுமன்ற ஜனநாயகத்துடன் சர்வாதிகாரத்தை இணைத்து ஒருங்குசேர வைத்திருக்கும் அரசியல் செயல்முறை இலங்கையில் நடைபெற்று, சர்வாதிகாரம் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்று ஒத்திசைந்து கொள்வதையும் எடுத்துக் கூறவுள்ளேன்.

இலங்கையின் பின்காலனித்துவ அரசு: சில ஆரம்பக் குறிப்புகள்

பின்காலனித்துவச் சமூகங்களில் நவீன அரசுகளை ஆரம்பித்து வைக்கும் பணியை காலனிய ஆட்சிதான் செய்தது. பின்காலனித்துவ அரசு இராணுவ வெற்றியின் மூலமும், இராணுவ–அலுவலர் ஆட்சி யந்திரத்தினை நிறுவுவதன் மூலமும் உருவாக்கப்பட்டது. பின்காலனித்துவச் சமூகங்கள் பலவற்றில் அச்சமூகங்களை அரசியல் ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் ஒன்றிணைக்கும் பணி காலனிய ஆட்சியினால் மேற்கொள்ளப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் போதுதான் நாடு அரசியல் நிர்வாக ஒருங்கிணைப்புக்குள் வந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் மத்தியப்படுத்தப்பட்ட அரசு ஒன்றுபட்ட இறைமையுடையதாக உருவானது. இராணுவ ஆக்கிரமிப்பு, நிர்வாகச் சீர்திருத்தம் என்ற இருவகை உத்திகளையும் பயன்படுத்தி பிரித்தானியர் இதனைச் சாதித்தனர். நாட்டின் பொருளாதாரம் இக்காலத்தில் உலகச் சந்தைப் பொருளாதாரத்துடன் ஒன்றிணைக்கப்பட்டது. இந்த ஒன்றிணைப்பு காலனிய மூலதனத்தின் (Colonial Capital) உள்வரவால் நிறைவேற்றப்பட்டது. காலனித்துவ அரசு உருவாக்கத்தின் முக்கிய இயல்பாக இப்பொருளாதார அம்சங்கள் அமைந்திருந்தன.

1970களில் இங்கிலாந்தில் குடிபுகுந்து வாழ்ந்தவரான பாகிஸ்தானிய சமூகவியலாளர் ஹம்சா அலவி (Hamza Alavi) பின்காலனித்துவ அரசு என்னும் விடயம் குறித்துக் கருத்து ஒன்றை முன்வைத்தார். பின்காலனித்துவ நாடுகள் அரசியல் சுதந்திரம் பெற்ற போது அவற்றின் அரசுகளின் கட்டமைப்பு முறையில் எந்த ஒரு அடிப்படை மாற்றமும் நிகழவில்லை என்றார் ஹம்சா அலவி. அதாவது அரசு யந்திரம் அப்படியே மாற்றமின்றி இருந்தது. முறிவு (Rupture) அல்லது தொடர்ச்சியின்மை ஒன்றைக் காண முடியவில்லை என்றார். மாற்றம் ஏதாவது நிகழ்ந்தது என்றால் அது ஆட்சியைப் பிடித்த சமூக வர்க்கங்கள் எவை? வர்க்க உறவுகளின் தன்மை என்ன? என்பனவே என்றும் அவர் கூறினார். காலனித்துவ ஆட்சியாளர் குழுவின் (Colonial Ruling Class) இடத்தில் உள்ளூர் சமூக வர்க்கங்களின் குழு அமர்ந்து கொண்டது. இருந்தபோதும் அரசு யந்திரம் (State Apparatus) மாறாமல் இருந்தவாறே தொடர்ந்து நிலைத்தது.

ஹம்சா அலவியின் விளக்கத்தின்படி இந்த அரசு யந்திரம் காலனி ஆட்சிக் காலத்தில் மிகை வளர்ச்சி பெற்றதாக (Over Developed) உருவாகியது. காலனித்துவச் சமூகம் வளர்ச்சியுறாத ஒன்றாக இருக்க, அதன் மீது திணிக்கப்பட்ட அரசு ஒப்பீட்டு நிலையில் இவ்வாறு மிகை வளர்ச்சி பெற்றிருந்ததென்றார். மிகை வளர்ச்சியுற்ற இந்த அரசு யந்திரம் பின்காலனித்துவ அரசுக் கட்டத்திலும் நீடித்து நிலைத்தது என்றும் அவர் கூறினார். காலனியின் பல்வேறு சமூக வர்க்கங்களைக் கட்டுப்படுத்தி அடக்கி வைத்திருப்பதற்கு மத்தியப்படுத்தப்பட்ட அரசு நிர்வாக யந்திரம் காலனி ஆட்சியாளர்களுக்குத் தேவைப்பட்டது. ஆதலால் வரிகளை அறவிடுதல், பொது நிர்வாகம், சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்தல், நிதி நிர்வாகம் ஆகிய அன்றாட நடைமுறை சார்ந்த விடயங்களோடு மக்களை அடக்கி வைப்பதற்கான அரச யந்திரமும் தேவைப்பட்டது. இதனால், காலனிய அரசு சிவில் சமூகத்தை விட ஒப்பீட்டு ரீதியில் மிகை வளர்ச்சி பெற்ற இராணுவ–அலுவலர் ஆட்சிக் கட்டமைப்பைக் கொண்டு விளங்கியது.

காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பல முன்னாள் காலனிகளின் அரசியல் மாற்றம் பற்றிய முக்கியமான பிரச்சினை ஒன்றுக்கு விடை தருவதாக அலவியின் காலனித்துவ அரசு, பின்காலனித்துவ அரசு ஆகிய கருத்துகள் விளங்கின. விடுதலை பெற்ற இந்த நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயக நிறுவனங்கள் ஏன் பலமற்றனவாக இருந்தன என்பதை அவர் விளக்க முயன்றார். இந்நாடுகளில் இராணுவ–அலுவலர் ஆட்சிக் குழுக்கள் குடிமக்கள் அதிகாரத்தைப் பறித்து இராணுவ ஆட்சி தோன்றுவதை விளக்க உதவியது. அதாவது சாதாரண சூழ்நிலைகளில் அரசு யந்திரம் சிவில் சமூகத்திற்குக் கட்டுப்பட்டதாய் இருக்கும். இந்நாடுகளில் அரசு யந்திரம் சிவில் சமூகத்தை விட மிகை வளர்ச்சியுற்றதாய், சமூகத்தின் மீது அளவுக்கு மீறிய அதிகாரம் செலுத்தக்கூடியதாக இருந்தது. பலம்மிக்க அரசு யந்திரம் ஆட்சியாளர் குழுக்களிடையே இருந்த உள்முரண்பாடுகளை மத்தியஸ்தம் செய்து தீர்வு செய்யும் நிலையிலும் இருந்தது.

பின்காலனித்துவ சமூகங்களின் சமூக வர்க்கங்களின் கூட்டு பலமற்றதாக இருந்தது. இதனால், இச்சமூக வர்க்கங்களின் கூட்டு, ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய போது அதனால் அரசு யந்திரத்தைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியவில்லை. ஒப்பீட்டளவில் சமூக வர்க்கங்கள் பலமற்றவையாக இருந்தன. இதனால், சிவில் ஆட்சியைப் பறித்து இராணுவம் ஆதிக்கம் பெற வழி ஏற்பட்டது.

பாகிஸ்தான், பங்களாதேசம் என்ற இரு நாடுகளும் பின்காலனிய அரசுகள் எதிர்நோக்கிய இந்தப் பிரச்சினையின் தென்னாசிய மாதிரிகளாக விளங்கின. இரு நாடுகளிலும் சிவில் சமூக ஆட்சியை நடத்துவதற்குச் செய்த முயற்சிகள் தொடர்ச்சியாகத் தடுக்கப்பட்டன. சிவில் சமூகத்தின் சமூக வர்க்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்த அரசியல் தலைவர்கள் அரசியல் முரண்பாடுகளைக் கொண்டவர்களாய், தமக்கிடையே சச்சரவுகளில் ஈடுபட்ட வேளையில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கையில் இராணுவ ஆட்சி ஏற்படவில்லை. இங்கு வித்தியாசமான நிலை ஏற்பட்டது. இந்த வித்தியாசத்தை அலவியின் எண்ணக்கருவின் உதவியுடன் இலங்கையின் பின்காலனிய அரசின் இயல்பை விளக்குவதன் மூலம் புரிந்துகொள்ளலாம். இந்தியாவிலும் இலங்கையை ஒத்த நிலையே காணப்பட்டது. இவ்விரு நாடுகளிலும் காலனித்துவம் விட்டுச்சென்ற அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி குடிமக்களின் பிரதிநிதித்துவத்தை உடைய அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. இலங்கையும் இந்தியாவும் ஜனநாயக பாராளுமன்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி சிவில் ஆட்சியை நிலைநிறுத்தின. பாகிஸ்தானிலும் பங்களாதேசத்திலும் சாத்தியமற்றதான அரசியல் மாற்றம் இவ்விரு நாடுகளிலும் சாத்தியமாயிற்று.

இலங்கையில் 1962 ஆம் ஆண்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டதென்பது உண்மையே. ஆனால், இம்முயற்சி இலகுவாக முறியடிக்கப்பட்டது. ஏனெனில் இலங்கையில் அரசு யந்திரத்தின் மீது சிவிலியன் கட்டுப்பாடு உறுதியானதாக இருந்தது. நாடு இராணுவ ஆட்சிக்குள் விழும் ஆபத்து இருக்கவில்லை.

இருப்பினும் இலங்கையின் நிலை இந்தியாவை விட சில அம்சங்களில் வேறுபட்டதாக இருந்தது. 1947, 1948 ஆம் ஆண்டுகளில் இந்தியா என்ற பின்காலனித்துவ அரசு உருவாகிக் கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் அங்கு கட்டுக்கடங்காத வன்முறை நிகழ்ந்தது. இந்தியாவை ‘பிரித்தல்’ என்ற அறுவை வைத்தியம் நடந்து கொண்டிருந்த பின்னணியில் இந்து – முஸ்லிம் வன்முறைக் கலவரங்கள் உச்சக்கட்டத்தை அடைந்தன. இந்தியாவிலிருந்து வேறுபட்ட நிலை இலங்கையில் இருந்தது. இலங்கையில் பின்காலனிய அரசு அமைதியான சூழலில் உருவாகியது. இங்கு வன்முறை 1970களில்தான் ஆரம்பித்தது. 1970களில் ஆரம்பித்த வன்முறை 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் ஆகிய மூன்று தேசங்களிலும் பின்காலனிய அரசு வன்முறையின் மத்தியில் தோன்றியது. இலங்கையில் பின்காலனிய அரசு தோன்றி வளர்ந்து முதிர்ச்சியைப் பெறும் வேளையில் வன்முறைகள் ஆரம்பித்தன. சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகள் கடந்த பின்னரே இவை நிகழ்ந்தன.

பிரித்தானியாவின் காலனியாக இருந்த காலத்திலும், அதன் பின்னர் பின்காலனித்துவ அரசாக மாறிய போதும் இலங்கையின் வரலாற்றுப் பாதை அதன் போக்கில் விசேட சிறப்பியல்புகள் சிலவற்றைக் கொண்டிருந்தது. 1848 ஆம் ஆண்டில் பிரித்தானியருக்கு எதிரான கலகம் நடந்தது. அதுதான் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இறுதிக் கலகம். இதன் பின்னர் இலங்கைச் சமூகம் மீது பிரித்தானிய அரசு முழுமையான மேலாதிக்கத்தைச் செலுத்தியது. மக்கள் எழுச்சியாக அமையும் எதிர்ப்புக் கலகங்கள் எவையும் இலங்கையில் இதன் பின்னர் இடம்பெறவில்லை. 1948 இல் இலங்கை சுதந்திரம் பெறும்வரை 100 ஆண்டுகள் இங்கு சமூகத்தில் ஒப்பீட்டளவில் அமைதி நிலவியது. இதனால், இலங்கையில் பிரித்தானிய ஆட்சி சர்வாதிகாரத் தன்மை குறைந்ததாய் இருந்தது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது இந்த வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது.

பிரித்தானியக் காலனிய ஆட்சியாளர்களுக்கும் அவர்களது உள்ளூர்க் கூட்டாளிகளுக்கும் எதிரான ஆயுதம் தாங்கிய எதிர்ப்புப் போராட்டம் இந்தியாவில் தொடர்ச்சியாக 1940 வரை நடைபெற்றது. குறிப்பாக விவசாய வர்க்கம் இப்போராட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தது. இதனால், இந்தியாவின் காலனிய அரசு கொடுமைத்தனமான இராணுவச் சர்வாதிகார அரசாக விளங்கியது. ஐரோப்பாவில் லிபரல் அரசுகளின் தோற்றத்திற்கு முற்பட்ட கால வல்லாட்சி அரசுகளின் மாதிரியில் பிரித்தானியாவின் இந்தியக் காலனிய அரசு விளங்கியது. இலங்கையின் காலனிய அரசு இத்தகைய வல்லாட்சி அரசாக இருக்கவில்லை.

இலங்கையில் பிரித்தானிய ஆட்சியின்போது 1830களிலும் 1840களிலும் பொருளாதார மாற்றங்கள் நிகழ்ந்தன. அக்காலத்திலேயே தாராண்மைப் பொருளியல் முறை அறிமுகமாயிற்று. முதலாளித்துவ வளர்ச்சியில் அரச மூலதனத்தை விட தனியார் மூலதனமே பிரதான பங்கைப் பெற்றது. காலனிய அரசு தனது வழமைக்கு மாறாக மக்கள் நலன் பற்றிக் கரிசனை கொள்ளும் அரசாகவும் இருந்தது. இலங்கையின் காலனிய ஆட்சி பற்றி எழுதிய வரலாற்றாசிரியர்கள் இதைக் கவனிக்கத் தவறினர் என்றே கூறலாம். ஆனால், இலங்கையில் காலனிய அரசின் வன்முறை அம்சம் 1848க்குப் பிற்பட்ட காலத்தில் காணப்படவில்லை.

இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி இயக்கம் தோன்றிய போதுதான் இராணுவத்தைப் பலம் கொண்டதாக மாற்றியது. இலங்கையின் இராணுவம் ‘சடங்காச்சாரமான அல்லது அலங்காரமான’ படையணியாகவே இருந்து வந்தது. 1971 இல் கிளர்ச்சி ஏற்பட்ட போது இத்தகைய இராணுவமே கிளர்ச்சியை அடக்கும் பணியை நிறைவேற்றியது. அதன் பின்னர் தமிழ் இளைஞர் கிளர்ச்சி பத்து ஆண்டுகள் கழித்து வலுவடைந்தபோது இராணுவம் விரிவுபடுத்தப்பட்டுப் பலப்படுத்தப்பட்டது.

இலங்கையில் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகச் சிவில் நிர்வாக அதிகார வர்க்கம் செயற்பட்டு வந்தது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலப்பகுதியில் ஆளும் உயர்குழுக்களிடையே போட்டியும் முரண்பாடுகளும் எல்லை மீறிப் போனாலும், இராணுவம் தலையிட்டு மத்தியஸ்தம் செய்வதும் தன் அதிகாரத்தைக் காட்டுவதுமான நிலை இலங்கையில் உருவாகவில்லை. பாராளுமன்றம் என்ற எல்லைக்குள் இப்போட்டியும் முரண்பாடும் வெளிச் சக்தியான இராணுவத்தின் தலையீடு இன்றித் தீர்வு செய்யப்பட்டன. பாராளுமன்ற நடைமுறைகள், தேர்தல்கள் என்ற போட்டி விதிமுறைகளுக்கு இணங்கிப் போகும் தன்மை இலங்கையில் நிலவியது.

1956 ஆம் ஆண்டில் அரசியல் அதிகாரம் புதிய சமூகக் கூட்டொன்றிற்குக் கைமாறியது. இம்மாற்றம் வன்முறை இல்லாமல் செய்வதற்கான அரசின் தகைமை பற்றிய பரிசோதனைக்கு ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. அரசு உருவாக்கம் என்பது சமூக வர்க்கங்களிடையிலும், இனக்குழுமங்களுக்கிடையிலும் ஏற்படும் அரசியல் போராட்டங்களின் விளைவாக அமையும். உண்மையில் இந்த அரசியல் போராட்டங்கள் நடைபெறும் களமாகவும் அரசு விளங்குகிறது. இந்த அரசியல் போராட்டங்களின் பயன்களை ஸ்தூல வடிவில் நிறுவனங்களூடாக வெளிப்படுத்தும் களமாகவும் அரசு விளங்குகிறது.

1950களின் நடுப்பகுதியில் இலங்கையின் பின்காலனித்துவ அரசின் வர்க்க உறவுப் பின்னணி மாறியது. இம்மாற்றம் வர்க்கம், இனக்குழுமம் என்ற இரண்டு விடயங்கள் அதிகாரம் என்ற தளத்தில் இடைவினை புரிந்ததன் விளைவே என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 1956 இல் ஆட்சி மாற்றம் ஒன்று நிகழ்ந்தது. இது ஐ.தே.கட்சி (UNP) என்ற கட்சியிலிருந்து அரசியல் அதிகாரம் மஹஜன எக்சத் பெரமுன (MEP) என்ற கட்சிக்கு மாறியதை மட்டும் குறிக்கவில்லை. குறிப்பிட்ட வகை வர்க்க உறவுகளைக் கொண்ட அதிகாரக் கூட்டு (Power Block) உருவானதையும், இதில் இணைந்த வர்க்கங்கள் பொதுவான கருத்தியலைக் கொண்டிருந்ததையும் காணலாம்.

1956 இன் ஆட்சி மாற்றத்தை அரசின் வர்க்க அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம் என்று கூறலாம். இந்த மார்க்சிய சமூகவியல் விளக்கம் பொருத்தமானதாக உள்ளது. அரசியல் அதிகாரத்தின் மாற்றம் சிங்கள சமூகத்தில் இடைத்தர சமூக வர்க்கங்களின் புதிய கூட்டொன்று உருவானதன் மூலம் ஏற்பட்டது. இந்த இடைத்தர சமூக வர்க்கங்கள் (Intermediate Social Classes) இலங்கையில் சிங்கள மொழி பேசும் மக்களுக்கு அரசியல் சுதந்திரம் அர்த்தமுள்ளதாகவும், பொருத்தமுடையதாகவும் மாற்றப்பட வேண்டும் என்ற தொலைநோக்கை முன்வைத்துக் கருத்தியல் மட்டத்தில் பிரசாரத்தைச் செய்து அரசியலில் மக்களை அணிதிரட்டின. ஜனநாயக உரிமைகள் பரவலாக்கப்பட்டதன் விளைவாகவே இந்த அணிதிரட்டல் சாத்தியமாயிற்று எனலாம். சர்வசன வாக்குரிமை, இடதுசாரி இயக்கம் ஆகியனவற்றின் தாக்கம் அரசியல் தளத்தை விரிவடையச் செய்து அரசியல் அபிலாசைகளைக் கிளர்ந்தெழச் செய்தன.

1950களின் முற்பகுதியில் வர்க்க முரண்பாடுகள் பல நிலைகளில் வெளிப்பட்டதைக் காணலாம். ஆட்சியில் பிடியை வைத்திருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இணைந்திருந்த குழுக்களிடையே வர்க்க முரண்பாடுகள் தோன்றின. 1952 இல் இக்கட்சியில் பிளவு ஏற்பட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) என்ற கட்சி தோன்றியது. பிரிந்துபோன இக்கட்சியின் தோற்றம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்த ஒரு வர்க்கத்தின் உள்முரண்பாட்டின் விளைவாகும்.

இக்காலத்தில் கைத்தொழில் துறையில் அரசு – தனியார் துறை மூலதனம் – உழைப்பாளர் என்ற முத்தரப்பு முரண்பாடுகள் வலுப்பெற்றன. இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் அரசு – தொழிலாளர் வர்க்க முரண்பாடுகள், மூலதனம் – தொழிலாளர் வர்க்க முரண்பாடுகள் என்ற நிலைகளில் தலைமைத்துவத்தை வழங்கிப் போராட்டப் பாதையில் சென்றன.

இந்த அரசியல் கொந்தளிப்புகளின் மத்தியில் இன்னொரு விடயமும் மேலெழுந்தது. சிங்கள சமூகத்தின் இடைத்தர சமூக வர்க்கங்கள் அரசியல் அதிகாரத்தை வேண்டி நின்றன. அவற்றின் போராட்டம் ஆளும் ஐ.தே.கட்சிக்கு எதிரானதாகவும், ஆளும் உயர்குழுக்களுக்கு எதிரானதாகவும் அமைந்தது (றிஜின்ஸ், 1960). இடைத்தர வர்க்கங்களால் ஆன சமூகக் கூட்டணியாக அமையும் இந்த ஆட்சியை சில ஆய்வாளர்கள் ‘இடைத்தர ஆட்சி’ (Intermediate Regime) என்று குறிப்பிட்டனர் (சாஸ்திரி, 1983). இது ஹங்கேரிய மார்க்சியவாதியான மைக்கேல் கலெக்கி (Michal Kalecki) என்பவரால் கூறப்பட்ட கருத்தாகும்.

1956 இல் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP) புதிய வர்க்கக் கூட்டுறவின் பயனாக அமைந்தது. அத்தோடு பின்காலனித்துவ இலங்கையில் அரசு அதிகாரத்தின் சமூக அடித்தளம் விரிவாக்கம் பெற்றது. இந்த இரு அம்சங்களையும் ‘இடைத்தர ஆட்சி’ என்ற எண்ணக்கரு உள்ளடக்குவதாய் உள்ளது.

இவ்விடத்தில் இரண்டு விடயங்களை நாம் குறிப்பிடுதல் தகும். முதலாவது, சுதந்திரத்திற்குப் பிந்திய பத்தாண்டுக் காலப்பகுதியில், இலங்கையில் அரச அதிகாரத்தின் சமூக அடித்தளம் விரிவாக்கம் பெற்றது. இந்த விரிவாக்கம் வன்முறை இல்லாமல் செய்யப்பட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. இது குறிப்பிடத்தக்க விசேட இயல்பு. இரண்டாவதாக, இரண்டு வெவ்வேறு அதிகாரக் கூட்டுகள் இக்கட்டத்தில் உருவாகி அருகருகே இருந்து செயற்படத் தொடங்கின. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அதிகாரக் கூட்டு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அதிகாரக் கூட்டு என்பவற்றையே இங்கு குறிப்பிடுகின்றோம். இந்த அம்சம் முதலாவதான வன்முறையற்ற வகையில் அரசியல் அதிகாரத்தின் அடித்தளம் மாறியதன் விளைவு என்றும் கூறலாம். இந்த இரு அதிகாரக் கூட்டுகள் அரசை மாறி மாறி நிர்வகித்தன. அரசின் வர்க்க அடித்தளத்தில் இவ்விரு கூட்டுகளும் தத்தம் பங்கைப் பெற்றன. பிற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் அனுபவத்திலிருந்து இலங்கை வேறுபடுவதை மேற்கூறிய இரண்டு விடயங்களின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ளலாம். பிற தேசங்களில் அரசின் சமூக அடித்தளத்தின் விரிவாக்கம் என்ற மாற்றமும், ஆளும் குழுக்களிடையிலான போட்டியும் வன்முறை மிக்கதாய் அமைந்தன. இக்கட்டுரையில் இவ்விடயம் பற்றி மேலும் விரிவாகப் பின்னர் குறிப்பிடுவோம்.

இனவாத அரசு: அதன் தொடக்கம்

இலங்கை 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னருள்ள 20 ஆண்டுக் காலத்தின் பின்காலனித்துவக் கட்டத்தின் சிறப்பு இயல்புகளில் ஒன்று, இலங்கை அரசு பாராளுமன்ற ஜனநாயக நிறுவன அமைப்புகளை வலுப்படுத்திய அரசு உருவாக்கமாக வளர்ச்சி பெற்றதாகும். பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் முறையின் மாதிரியில் அமைந்த லிபரல் ஜனநாயக அரசாக இலங்கை விளங்கியது (றிஜின்ஸ், 1960; வில்சன், 1974; யூப், 1978).

இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் பெரும் வேலைநிறுத்தங்களை இக்காலத்தில் நடத்தின. இவற்றை விட மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகள் இக்காலத்தில் இலங்கை சமூகத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிய பிளவுகளை எடுத்துக்காட்டுவனவாக இருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அரிசி மானியத்தை வெட்டும் கொள்கைத் தீர்மானத்தை எடுத்தபோது இடதுசாரிக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஹர்த்தால் ஒன்றை நடத்தின. இது முதலாவது முக்கிய நிகழ்வு. 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் தமிழ்களுக்கு எதிரான வன்முறைக் கலகம் வெடித்தது. இது இரண்டாவது நிகழ்வு. மூன்றாவதாக, 1959 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமர் எஸ்.டபிள்யு. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டார். பண்டாரநாயக்கவின் வீட்டிற்குச் சென்ற புத்த பிக்கு ஒருவர் அவரை அங்கு வைத்துச் சுட்டுக் கொன்றார்.

1956 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்கவின் தலைமையில் ஆட்சிக்கு வந்த குழுவின் உட்பூசல்களை இத்துயரச் சம்பவம் வெளித்தெரிய வைத்தது. பிரதமரின் படுகொலை அரசியல் நெருக்கடி ஒன்றை உருவாக்கவில்லை. இதுவொரு நிலைகுலைப்பு நிகழ்வு ஆயினும் இலங்கை அரசு இந்த அரசியல் பிரச்சினையிலிருந்து தன்னை வெகு விரைவாக மீட்டுக் கொண்டது.

பாகிஸ்தானிலும் 1951 ஆம் ஆண்டு பிரதமர் லியாகத் அலி கான் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது. அங்கு அதனை அடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் இலங்கையின் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டனவாய் இருந்தன. பாகிஸ்தானின் தந்தையான முஹம்மது அலி ஜின்னாவின் இறப்பு ஆளும் குழுக்களிடையே ஏற்கனவே பிளவுகளையும் அரசியல் நெருக்கடியையும் தோற்றுவித்திருந்தது. அப்பின்னணியில் இராணுவமும் சிவில் அதிகார வர்க்கமும் ஒன்றிணைந்து புதியதோர் அதிகாரக் கூட்டை உருவாக்கிக் கொண்டன. இந்த அதிகாரக் கூட்டு (Power Block) தன்னை ஒரு மாற்று ஆளும் குழுவாக இனங்காட்டியது. 1958 ஆம் ஆண்டில் இந்த இராணுவ–சிவில் அதிகாரிகள் குழு சிவில் ஆட்சியை ஒழித்துவிட்டு சதிப்புரட்சி ஒன்றின் மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

1950களின் பிற்பகுதியில் இலங்கையின் நிலை பாகிஸ்தானின் நிலையை விட மாறுபட்டதாக இருந்தது. இலங்கை ஜனநாயக நாடாக விளங்கியது. பலமுள்ள இரு கட்சிகளைக் கொண்ட அரசியல் கட்சிமுறை, தனது இருப்பை நிலைநிறுத்திய இடதுசாரி இயக்கம், பலம் வாய்ந்த தொழிற்சங்க இயக்கம் என்பன இலங்கையின் ஜனநாயக நிறுவன முறையின் அடித்தளமாக விளங்கின. வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இலங்கையின் சிவில் சமூகம் (Civil Society) பலம் வாய்ந்ததாக இருந்தது.

சுதந்திரத்திற்குப் பிந்திய பத்தாண்டுக் கால வளர்ச்சிகளை இன்னொரு விதமாகவும் விளக்க முடியும். அரசு இனவாதக் கலப்புடையதாகி இனவாத அரசாக மாறியது (சண்முகரத்தினம், 1993) அல்லது இனக்குழுமப் பெரும்பான்மைவாதம் (Ethnic Majoritarianism) தலைதூக்கியது என்று கூறலாம்.

இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னர் இலங்கையின் புதிய அரசு ‘தேசிய’ தன்மையுடையதா என்று விவாதித்தனர். இலங்கை சுதந்திரம் பெற்ற சமயத்தில் அதிகாரத்தைப் பிடித்த ஆளும் குழுக்களிடையே தீவிரமானதும் அடிப்படையானதுமான சமூகப் பிளவுகள் இருக்கவில்லை. இலங்கையின் முதலாளி வர்க்கத்திற்கும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கும் இடையே முரண்பாடுகள் பெரிய அளவில் இருக்கவில்லை. அவை அரசியலில் ஒன்றிணைந்து செயற்பட்டன. 1952 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டமை ஆளும் உயர்குழாத்தின் மத்தியில் ஏற்பட்ட பிளவு என்று கூறலாம். இப்பிளவின் பின்னர் புதிய கட்சி ஒன்றினை பண்டாரநாயக்க தலைமையில் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அமைத்தனர்.

சுதந்திரம் அடைந்த சந்தர்ப்பத்தில் இலங்கையின் உயர்குழாம் இனக்குழும அடிப்படையில் பிளவுபட்டிருந்தது. சுதந்திரத்திற்கு முன்பே இன முரண்பாடுகளும் போட்டியும் தோன்றிவிட்டன. காலனித்துவ ஆட்சியின் போது தேர்தல் அரசியல் போட்டி என்ற பின்னணியில் இன முரண்பாடுகள் வெளிப்பட்டன. அக்காலத்திலேயே சர்வசன வாக்குரிமையின் அடிப்படையிலான அரைகுறை ஜனநாயகம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது (றஸ்ஸல், 1971; விக்கிரமசிங்க, 1995).

சுதந்திரத்தின் பின்னர் இனக்குழும அரசியல் தீவிரம் பெற்றது. புதிய தேசத்தின் ‘தேசியம்’ (Nation) மற்றும் அதன் அரசு என்ற இரண்டினதும் அரசியல், சட்ட இயல்பு பற்றிய பிரச்சினைகளை இனக்குழும அரசியல் தீவிர சர்ச்சைக்குள்ளாக்கியது. பின்காலனித்துவ அரசு லிபரல் ஜனநாயக அரசாக இருக்க வேண்டும்; அது பிரித்தானிய பாராளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் யாப்பு மரபுகளில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதில் இலங்கையின் எல்லா உயர்குழுக்களிடையிலும் ஒருமித்த கருத்து இருந்தது. இருப்பினும் பிரஜா உரிமை, வாக்குரிமை என்ற விடயங்களிலும், இலங்கை ஒற்றையாட்சி மாதிரியில் அமைய வேண்டுமா? அல்லது சமஸ்டி மாதிரியில் அமைய வேண்டுமா? என்பதிலும் தீவிர கருத்து மாறுபாடுகள் தோன்றின.

இம்மூன்று விடயங்களிலும் சிங்கள அரசியல் உயர்குழாம் சிங்களத் தேசியவாத நிலைப்பாட்டை எடுத்தது. 1948 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் பிரஜா உரிமை, வாக்குரிமை ஆகிய விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றச் சட்டங்கள் இயற்றப்பட்டன. இச்சட்டங்கள் சிங்களத் தேசியவாத உயர்குழாமின் கொள்கைகளையும் நோக்கத்தையும் வெளிப்படுத்துவனவாய் அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் இலங்கையின் ஆளும் வகுப்பு என்ற தகுதியைப் பெற்றுக்கொண்ட சிங்களத் தலைமை, இனக்குழுமப் பெரும்பான்மைவாதத்தை (Ethnic Majoritarianism) அடிப்படையாகக் கொண்ட அரசு ஒன்றை நிறுவும் பணியில் முனைப்புடன் செயற்பட்டது.

1956 இல் பதவிக்கு வந்த அரசாங்கம் இலங்கை அரசின் இனக்குழுமப் பெரும்பான்மைவாதப் பார்வையை மேலும் அதிகரிக்கச் செய்தது. அவ்வரசாங்கம் சிங்கள மொழியை அரசகரும மொழியாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அரச அதிகாரத்தில் பிறருக்குப் பங்கில்லை; தாமே முழு அதிகாரத்தையும் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்களத் தலைமையிடம் காணப்பட்டது. தமிழ்த் தலைமை அரசு அதிகாரத்தில் தாமும் சம பங்காளிகளாக இருக்க வேண்டும்; சிங்களத் தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்களாய் இருக்கக்கூடாது என்று கருதினர். இவ்வாறு அரச அதிகாரத்தில் பங்கு என்ற விடயமே பிற்காலத்தில் சிங்கள – தமிழ் முரண்பாட்டிற்குக் காரணமாக அமைந்தது.

தமிழ் அரசியல் உயர்குழாம் சமஷ்டித் திட்டத்தை முன்வைத்தது. இதன் மூலம் தாம் ஆட்சி அதிகாரம் உடையவர்களாகலாம் என்றும், அரசு அதிகாரத்தில் சம பங்காளிகளாகலாம் என்றும் தமிழ் உயர்குழாம் கருதியது. அரசு அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்ற பின்னணி யாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வசன வாக்குரிமை, தேர்தல் அரசியல், பாராளுமன்ற ஜனநாயக முறை, சமூகநல அரசு ஆகியன நிலைபெற்ற சூழலில் அரசியல்வாதிகள் தமது ஆதரவாளர்களுக்குச் சலுகைகளை வழங்கும் புரவலர்களாயினர். இவ்வாறான புரவலர் அரசியல் (Patronage Politics) சூழ்நிலையிலேயே அரசு அதிகாரத்திற்கான போட்டி தீவிரம் பெற்றது.

இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் உள்ள காலப்பகுதியின் அரசியல் வரலாற்றினை எடுத்துநோக்கும் போது, இலங்கையின் அரசியல் போராட்டங்களிலும் அரசியல் விவாதங்களிலும் அரசின் கட்டமைப்பும் அதன் இயல்பும் என்னும் விடயமே பிரதான பிரச்சினையாக இருந்தது. இந்த விவாதம் பின்வரும் இரு முக்கிய அம்சங்களைப் பற்றியதாக இருந்தது.

1) இலங்கை மக்கள் தாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுடையதாகச் செய்ய வேண்டுமாயின் எத்தகைய அரசைக் கட்டி வளர்க்க வேண்டும்?
2) தமிழ்ச் சிறுபான்மை இனக்குழுமத்தின் பிரதேச சுயாட்சி என்ற கோரிக்கைக்கிணங்க இலங்கையின் பாராளுமன்ற ஜனநாயக முறையானது மீள் வரையறை செய்யப்பட வேண்டுமா?

இந்த விவாதம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இருவேறு அரசியல் நோக்கு முறைகள் பற்றியதாக இருந்தது. ஓர் அரசியல் நோக்கு அரசியல் யாப்பு ஒருமைவாதம் (Constitutional Monism) என்ற வகையினது. இதற்கு மாறாக அரசியல் யாப்புப் பன்மைவாதம் (Constitutional Pluralism) என்ற அரசியல் நோக்கு முன்வைக்கப்பட்டது.

ஒருமைவாதச் சிந்தனை, இலங்கை ஒற்றையாட்சி நாடாகவும், மத்தியப்படுத்தப்பட்ட அதிகாரத்தை உடையதாகவும், பிரித்தானியப் பாராளுமன்ற முறையினைத் தழுவியதாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்துகளை முன்வைத்தது. இதற்கு மாறாக பன்மைவாதச் சிந்தனை சுதந்திர இலங்கை சமஷ்டி அரசாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. இச்சமஷ்டி அரசில் சிறுபான்மை இனங்கள் அரசு அதிகாரத்திலும் அரசியலிலும் சம பங்கினைப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியது.

ஒருமைவாதிகள் காலனித்துவ ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற அரசில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கட்டமைப்பு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை. அரசியல் கட்டமைப்பை மாற்றுதல் (Restructuring of the State) என்பதைக் குறிக்கோளாகக் கொண்டவர்கள் அரசியல் யாப்பு ஒருமைவாதத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தனர்.

மேற்குறித்தவாறாக அரசியல் யாப்புத் திருத்தம் ஆரம்பம் முதலே பல சிக்கல்களை எதிர்நோக்கியது. யாப்புத் திருத்தம் என்ற வாதம் ஒரு சிறுபான்மை இனக்குழுமத்தால் முன்வைக்கப்பட்டது. இதற்கான ஆதரவு தமிழ் மக்களிடமிருந்து கிடைத்தது. ஆனால் பெரும்பான்மைச் சிங்களச் சமூகம் யாப்புத் திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் பன்மைத்துவப் பண்புடையதாக அரசை மாற்றியமைப்பதற்கு விரும்பாததோடு, அவ்வாறான மாற்றம் ஆபத்தானது என்ற அச்சத்தையும் வெளியிட்டனர். இவ்வாறு கருதியதால் யாப்புத் திருத்த யோசனை பெரும் எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. யாப்புத் திருத்தம் சிறுபான்மை இனத்தின் அரசியல் திட்டமாக அடையாளப்படுத்தப்பட்டது.

சமஷ்டி அரசியல் முறை, அடிப்படையில் ஜனநாயகத் தன்மை உடையதாயினும், சிங்கள சமூகத்தின் அரசியல் அங்கீகாரம் அதற்குக் கிடைக்கவில்லை. இதனால் 1950கள் தொடக்கம் இலங்கையில் அரசுச் சீர்திருத்தம் பற்றிய செயல் திட்டம் இரண்டு இனங்கள் இரு துருவங்களாகப் பிரிந்து நின்று வாதிடுவதற்கும் ஒன்றையொன்று விலக்குவதற்கும் வழிவகுத்தது. இந்தப் பிணக்கு இலங்கையின் ஜனநாயகச் செயல்முறையின் பகுதியாக மாறியது. ‘Devotta’ கூறியிருப்பது போல் இனக்குழும மோதல் அரசியல் தோன்றியது. தேர்தல் ஜனநாயக நடைமுறையானது இனக்குழுமங்களை இரு கூறுகளாகப் பிரித்து வைப்பதாக அமைந்தது. இலங்கையின் பின்காலனித்துவ அரசின் போக்கை இது நிர்ணயிப்பதாக அமைந்ததோடு, அரசைப் பன்மைத்துவம் உடையதாக மாற்றும் செயல்திட்டம் நடைமுறைச் சாத்தியமற்றதாக ஆகியது.

இதுவரை கூறியவற்றைச் சுருக்கமாக எடுத்துரைப்போம். சுதந்திரத்தின் பிந்திய முதல் பத்தாண்டு காலத்தில் இலங்கையின் பின்காலனித்துவ அரசு இரு இயல்புகளைக் கொண்டதாக இருந்தது. முதலாவதாக, அது ஒற்றையாட்சி மாதிரியில் ஜனநாயக நிறுவனங்களைக் கட்டமைத்து வந்தது. இரண்டாவதாக, இலங்கையின் பின்காலனித்துவ அரசின் ஆதார அடித்தளம் சிங்களப் பெரும்பான்மை இனம் என்பதாகச் சுருங்கியது. சிங்களத் தேசியவாதத்தின் அரசியல் பண்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான கருவிதான் அரசு என்ற சிந்தனை வேரூன்றியது. இப்பின்னணியில் இலங்கை அரசின் லிபரல் ஜனநாயகப் பண்புகளை இல்லாதொழிக்கும் செயல்திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தாராளமயமற்ற அரசாக மாற்றும் (De-liberalisation) செயல்திட்டம் என்று கூறலாம். 

தொடரும். 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்