உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
14 நிமிட வாசிப்பு

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 3

January 27, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின

மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் அரசியல் சுயநிர்ணயமும் சுதந்திரமும் (Political Self – Determination and Independence) மட்டும் காலனியத்தில் இருந்து விடுதலையை வழங்க மாட்டாது என்பதை விரைவில் உணர்ந்தன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அரசியல் விடுதலையைப் பெற்ற போதும் மேற்கு நாடுகளின் அரசியல், பொருளாதார, சட்ட ஒழுங்கமைப்புகளுக்குக் கட்டுப்பட்டனவாக இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் விரைவிலேயே உணர்ந்து கொண்டன. இது பற்றிய விழிப்புணர்வு அந்நாடுகளை பொருளாதாரச் சுயநிர்ணயம் (Economic Self – Determination) பற்றிச் சிந்திக்க வைத்தன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் முறைமைக்குள் (UN System) பொருளாதாரச் சுயநிர்ணயம் பற்றிய உரையாடல் முதன்மை பெற்றது. புதிய உலகப் பொருளாதார ஒழுங்கு (A New International Economic Order) என்னும் கருத்து முன்வைக்கப்பட்டது. ஆங்கிலத்தில் இது ‘NIEO’ என்ற சுருக்கப் பெயரால் குறிப்பிடப்பட்டது. 

முன்னாள் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை பெற்ற மூன்றாம் உலக நாடுகள் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டன. அப்பொருளாதாரச் சவால்களுக்கு உள்ளகச் சுயநிர்ணயம் என்ற தத்துவத்தில் எவ்வித வழிகாட்டல்களும் இருக்கவில்லை. அது ஜனநாயக ஆளுகை (Democratic Governance) பற்றியே பேசுவதாக இருந்தது. அரசியல் சுதந்திரம் பொருளற்ற ஒன்றாக ஆகியிருப்பதையும், பூகோளப் பொருளாதார ஒழுங்கினால் (Global Economic Order) தமது நாடுகளின் பொருளாதாரச் சுயநிர்ணயம் பறிக்கப்படுவதையும் அந்நாடுகள் உணர்ந்தன. உள்நாட்டில் ஒன்றிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாத நிலையும், சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆகியவற்றின் பிடிக்குள் தமது நாடுகள் சிக்கியிருப்பதையும் அந்நாடுகள் உணர்ந்தன. இத்தகைய பின்னணியில் மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளுக்கு தமக்குரியதான சுதந்திரப் பொருளாதாரக் கட்டமைப்பை உள்நாட்டில் ஏற்படுத்தும் சுதந்திரம் பெயரளவில் இருந்தபோதும், நடைமுறையில் பூகோளப் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுச் செயற்பட முடியாத நிலையே இருந்தது. சில எழுத்தாளர்கள் ‘பொருளாதார உறவுகளை புவியியல், இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி (Geography, Natural Resources and Economic Development) ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. இவ்விடயத்தில் சுயநிர்ணயம் (Self – Determination) என்பது பொருத்தமற்ற கருத்தாக்கம்’ என்று கூறினர். ஜனநாயக அரசுகள், பெரியனவாகவோ, சிறியனவாகவோ இருக்கலாம். அவை பூகோளப் பொருளாதார ஒழுங்கின் கீழ் இயங்குவதால் அவற்றுக்குச் சுயாதீனம் கிடையாது என்றும் கூறுகின்றனர். 

உள்ளகச் சுயநிர்ணய உரிமை பொருளாதாரப் பரிமாணத்தைக் கவனத்தில் கொள்ளாததாலும், அது அரசியல் பரிமாணத்திற்கு மட்டுமே அழுத்தம் கொடுப்பதாலும் நடைமுறையில் பயன் அற்ற கருத்தாக்கமாக உள்ளது. 

மூன்றாம் உலகம் உள்ளகச் சுயநிர்ணய உரிமையைக் கைவிட்டு விட்டதா?

ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் நிகழும் ஆக்கிரமிப்புகள், பூகோளப் பொருளாதார ஒழுங்கின் கட்டுப்பாடுகள் என்பன உள்ளகச் சுயநிர்ணயம் நடைமுறையில் பொருத்தப்பாடற்ற ஒரு தத்துவம் என்பதை உணர்த்தியுள்ளன என மேலே விளக்கிக் கூறினோம். அவ்வாறாயின் மூன்றாம் உலகம் உள்ளகச் சுயநிர்ணயத்தை (Internal Self- Determination) முற்றாக நிராகரித்து விட்டதா? என்ற வினா எழுகிறது. மூன்றாம் உலகத்தில் உள்ளகச் சுயநிர்ணயம் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் உயிர்ப்புடைய கருத்தாக்கமாகவே இருந்து வருகிறது. மூன்றாம் உலக நாடுகளும், மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் தலைமைகளும், அந்நாடுகளின் நிறுவனங்களும் உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிய உரையாடல்களை முன்னெடுத்து வந்துள்ளன. 

மூன்றாம் உலக நாடுகள் தொடக்கத்தில் அரசியல் விடுதலையைக் (வெளியகச் சுயநிர்ணயத்தை) கோரி அதனைப் பெற்றுக்கொண்ட போது வெளியகச் சுயநிர்ணயம், உள்ளகச் சுயநிர்ணயம் என்ற இரண்டினதும் கலவையான பொதுப்பட்ட சுயநிர்ணயத்தைப் (Self – Determination) பெற்றுக்கொண்டன. அந்நிய நாடொன்றின் காலனி என்ற நிலையில் இருந்து விடுதலை பெறுதல், உள்ளக விவகாரங்களில் சுதந்திரமாகச் செயற்படும் அதிகாரத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. அது சுதந்திரத்தின் எல்லைக்குள் வாழும் மக்களின் விடுதலையைக் குறிப்பதாக இருந்தது. ஆகையால், வெளியகச் சுயநிர்ணயத்தை உள்ளகச் சுயநிர்ணயத்தில் இருந்து பிரித்து நோக்குவதை மூன்றாம் உலகத் தலைவர்கள் செயற்கையான பிரிப்பு என்றும், உள்ளகச் சுயநிர்ணயம் பொருத்தமற்றது எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றும் கூறினர். 

பாண்டுங் மாநாடு 

1955 இல் ஆசிய – ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் இந்தோனேசியாவின் பாண்டுங் (Bandung) நகரில் ஒன்றுகூடி மாநாடு ஒன்றை நடத்தினர். இது ‘பாண்டுங் மாநாடு’ என அழைக்கப்பட்டது. இந்த மாநாடு காலனியத்தில் இருந்து விடுதலை பெற்ற ஆசிய – ஆபிரிக்க நாடுகளுக்கு இறைமையுள்ள அரசு என்ற அந்தஸ்து (Sovereign Statehood) வழங்கிய நன்மைகளையும், அந்த அந்தஸ்தினால் சர்வதேசச் சட்டத்தின் கீழ் கிடைக்கும் பாதுகாப்புகளையும் முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டம் ஒன்றை வரைந்து கொள்ளும் சந்தர்ப்பமாக அமைந்தது. இம்மாநாட்டின் முடிவில் வெளியிடப்பட்ட இறுதியான பிரகடனத்தில் ஐ.நா சாசனத்தில் (UN Charter) உறுதி செய்யப்பட்ட மக்களுக்கும் தேசியங்களுக்கும் உரியதான சுயநிர்ணயத்தை (Self – Determination of Peoples and Nations) ஏற்று அங்கீகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளுக்குள் இன ஒதுக்கலும் (Racial Segregation) இன அடிப்படையிலான பாரபட்சம் காட்டுதலும் அரச கட்டமைப்பின் அடிப்படையாக அமைந்திருப்பதோடு, மக்களிற்கு இடையிலான உறவுகளைத் தீர்மானிப்பதாக அமைவதையும் இப்பிரகடனம் சுட்டிக்காட்டியது. மூன்றாம் உலகில் தொடரும் இனவாதக் கொள்கைகள் (Racial Policies) காலனியம் விட்டுச் சென்ற இனவாதத்தின் தொடர்ச்சியே என இப்பிரகடனம் குறிப்பிட்டது. சுயநிர்ணயம் என்பது மனித உரிமைகள், சமத்துவம், பாரபட்சம் காட்டாதிருத்தல் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். இவை மூன்றும் தான் உள்ளக ஒழுங்கின் பரிமாணம் எனக் குறிப்பிடப்பட்டது. 

மூன்றாம் உலகத் தலைவர்கள் எழுதிய நூல்கள்

மூன்றாம் உலகத் தலைவர்களால் எழுதப்பட்ட நூல்களில் குவாமே நிக்குறுமா (Kwame Nkrumah), ஜவகர்லால் நேரு ஆகிய இருவராலும் எழுதப்பட்ட நூல்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. குவாமே நிக்குறுமா எழுதிய ‘Towards Colonial Freedom: Africa in the Struggle against World Imperialism (1962) என்னும் நூல் முக்கியமானது. ஏகாதிபத்திய நாடுகளின் கீழ் இருந்த நாடுகள் சிலவற்றை ‘நம்பிக்கைப் பொறுப்பு’ (Trusteeship) என்ற பெயரில் திரும்பவும் ஏகாதிபத்திய நாடுகளிடம் கையளிப்பதை நிக்குறுமா இந்நூலில் வன்மையாகக் கண்டித்தார். பாண்டுங் மாநாட்டில் காலனியத்தின் அடக்குமுறைக்கு உட்பட்ட தேசங்களின் பிரகடனத்தை வரைவதில் நிக்குறுமா முக்கிய பங்களிப்பை நல்கினார். 

“மக்கள் தம்மைத் தாமே ஆட்சி செய்பவர்களாக இருத்தல் வேண்டும் என்பதை நாம் விழைகிறோம். காலனிகளின் மக்கள் தமது அரசாங்கத்தைத் தாமே தெரிவு செய்ய வேண்டும். அத்தெரிவில் ஒரு அந்நிய சக்தி தலையிடக்கூடாது. நீண்ட பயங்கர இரவு முடிவுக்கு வந்துவிட்டது. தொழிற்சங்க உரிமைகளுக்காகப் போராடவும், கூட்டுறவுச் சங்கங்களை மக்கள் அமைத்துக் கொள்ளவும் சுதந்திரம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். பத்திரிகைச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டம் நடத்தவும், வேலைநிறுத்தம் செய்யவும், மக்களின் கல்வி விருத்திக்குத் தேவையான நூல்களை அச்சிட்டு வெளியிடவும், அவற்றைப் படிக்கவும் உள்ள உரிமை ஆகியவற்றை மக்கள் நடைமுறையில் அனுபவிக்கும் போதுதான் மக்கள் பெற்றுக்கொண்ட சுதந்திரம் பொருளுடையதாகும்.” (நிக்குறுமாவின் 1962 நூல், பக். 44-45)

நிக்குறுமா ‘நம்பிக்கைப் பொறுப்பு நாடுகள்’ என்ற போர்வையில் காலனியம் தொடரப்படுவதை மேற்கண்டவாறு கண்டித்தார் என்றே கருதலாம். 

இந்தியா பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் நேரு காலனியத்தில் இருந்து பூரண அரசியல் விடுதலையைக் கோரினார். அவர் ‘டொமினியன் அந்தஸ்து’ (Dominion Status) என்பதைச் ‘சுதந்திரம்’ (Independence) என்பதில் இருந்து வேறுபடுத்திக் காட்டினார். டொமினியன் அந்தஸ்து என்பது இந்தியாவை பழைய கட்டமைப்புகளுடன் (Old Structures) வெளியே தெரிவதும், கட்புலனாகாததுமான கட்டுகளால் பிரித்தானியப் பொருளாதார முறையுடன் பிணைத்து வைப்பது. இதற்கு மாறாகச் சுதந்திரம் என்பது எமக்கு எமது தேவைகளுக்கு ஏற்ப புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் சுதந்திரத்தைத் தரக்கூடியது’ என ‘An Autobiography’ (1981) எனும் தமது நூலில் விளக்கிக் கூறினார் (பக். 146). இந்தியா தனக்குத் தேவையான ஜனநாயக – அரசியல் யாப்பு அரசாங்கத்தை (Democratic and Constitutional Government) அமைப்பதே சுதந்திரம் என்பதாக நேருவின் விளக்கம் அமைந்தது. இந்தியாவின் சுதந்திரம் என்பது உலகில் இருந்து இந்தியா தனிமைப்பட்டுப் போவதைக் குறிக்கவில்லை என்றும், இந்தியா வெளியகச் சுயநிர்ணய உரிமையின் மூலம் உள்ளக அரசியலுக்குத் தேவையான வெளியக நிலைமைகளை (External Conditions for Domestic Politics) உருவாக்க விரும்பியது என்றும் சுட்டிக்காட்டினார். நேருவின் நூல் வெளியகச் சுயநிர்ணயம், உள்ளகச் சுயநிர்ணயம் என்ற இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதைச் சுட்டிக்காட்டியது. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பொதுவாக சுயநிர்ணயம் என்ற கருத்தில் ஒருமித்த கருத்துடையனவாய் உள்ளன. உள்ளகச் சுயநிர்ணயம் என்பதை அவை நிராகரிக்கவில்லை. வெளியகச் சுயநிர்ணயத்தை அந்நாடுகள் வரையறை செய்துள்ளன என்று கூறலாம். 

தென்னாபிரிக்காவின் அரசியல் யாப்பு

தென்னாபிரிக்கக் குடியரசின் 1996 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் அத்தியாயம் 14 இன் பிரிவு 235, சுயநிர்ணயம் என்ற உரிமையில் உள்ளகப் பரிமாணமும் (Internal Dimension) உள்ளடங்கியிருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதன் மூலம் அரசியல் யாப்புச் சட்டத்தில் உள்ளகச் சுயநிர்ணயத்தைப் பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவின் 1993 தற்காலிக அரசியல் யாப்பிலும் உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிய இத்தகைய அங்கீகாரம் (Recognition) இருந்தது. தென்னாபிரிக்க அரசியல் யாப்பின் (1996) பிரிவு 235 கீழே தரப்பட்டுள்ளது. 

“The right of South African people as a whole to self – determination as manifested in this constitution, does not preclude, within the frame-work of this right, recognition of the notion of the right of self determination of any community sharing a common cultural and language heritage, within a territorial entity in the republic or any other way, determined by national legislation.”

மேற்கண்டவாறு தென்னாபிரிக்கக் குடியரசின் அரசியல் யாப்பு தென்னாபிரிக்க மக்களுக்கு தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும், உள்ளூர் மட்டத்திலும் தமது அரசியல் அந்தஸ்தைத் (Political Status at the National, Provincial and Local Levels of Governance) தீர்மானிக்கும் உரிமையை ஏற்று அங்கீகரித்துள்ளதைக் காணலாம். இது ‘ICCPR’ பிரிவு 1 இல் குறிப்பிட்ட மக்களின் சுயநிர்ணய உரிமை வரையறைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாகும். கமறூன், எகிப்து, ஈரான் ஆகிய நாடுகளின் உதாரணங்களையும் எடுத்துக்காட்டும் கலன சேனரத்தின மூன்றாம் உலக நாடுகள் உள்ளகச் சுயநிர்ணயம் என்பதை முற்றாக நிராகரிக்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு கூறுவது, மூன்றாம் உலக நாடுகள் உள்ளகச் சுயநிர்ணய உரிமையை நடைமுறையில் செயற்படுத்தும் முன்மாதிரியான நாடுகளாக உள்ளன என்று பொருள் கொள்வதாகாது. உண்மையில் மூன்றாம் உலகின் பின்காலனித்துவ அரசுகள் (Post Colonial States) தத்தம் நாடுகளுக்குள்ளே வாழும் சிறுபான்மையின மக்களின் உள்ளகச் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பதற்குத் தவறி உள்ளன. இந்நாடுகளில் பல இராணுவ சர்வாதிகார நாடுகளாகவும் சிறுபான்மைக் குழுக்களை கொடூரமான முறையில் நசுக்குவனவாகவும் உள்ளன. பல மூன்றாம் உலக அரசுகள் தம் நாடுகளுக்குள் வாழும் மக்களுக்கு ‘உள்ளகச் சுயநிர்ணய உரிமை’ என ஓர் உரிமை இருப்பதாக ஏற்பதைப் பகிரங்கமாக மறுத்து வருகின்றன. மூன்றாம் உலக அரசுகளில் சில தமது முன்னாள் எஜமானர்களான காலனித்துவவாதிகளைப் போன்றே தமது நாட்டிற்குள் வாழும் மக்கள் பிரிவினர் பலரை புராதன மக்கள் (Primitive People), முன்னேறாத மக்கள் எனக் கருதுகின்றன. 

உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கத்தை கொள்கையளவில் நிராகரிக்காத பல மூன்றாம் உலக நாடுகள் கூட நடைமுறையில் உள்ளகச் சுயநிர்ணய உரிமையைச் செயற்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றன. ஆயினும் பொதுவாக மூன்றாம் உலக நாடுகள் சுயநிர்ணயம் என்றால் அது வெளியகச் சுயநிர்ணய உரிமை மட்டுமே, காலனியத்தில் இருந்து விடுதலை பெறுதல் மட்டுமே என்ற பழைய விளக்கத்தைக் கைவிட்டு வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ளன. மூன்றாம் உலகிற்குள் இயங்கும் மனித உரிமை அமைப்புகள் உள்ளகச் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவம் குறித்து குரல் கொடுத்து வருகின்றன. பல மூன்றாம் உலக நாடுகள் உள்ளகச் சுயநிர்ணயம் என்பதை ஏற்றுக்கொள்வதோடு அரசின் இறையாண்மையையும், தேச ஒருமைப்பாட்டையும் (State Sovereignty and Territorial Integrity) வலியுறுத்தி வருகின்றன என்பதே யதார்த்தமான நிலையாகும். 

தொகுப்புரை

இக்கட்டுரையின் மூன்று பகுதிகளிலும் கூறப்பட்டவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம். 

1. மேற்கு நாடுகள் ஆரம்பம் முதலே உள்ளகச் சுயநிர்ணய உரிமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தன. 

அ) மனித உரிமைகளையும் சிறுபான்மையினர் உரிமைகளையும் மதித்தல்.

ஆ) பிரதிநிதித்துவ அரசாங்கம்.

இ) சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல்.

ஈ) உள்ளூர் மட்ட சுயாட்சி (Local Self Governance)

ஆகிய கருத்தாக்கங்கள் உள்ளகச் சுயநிர்ணய உரிமையின் கூறுகளாக அமைந்தன. மூன்றாம் உலகின் சிறுபான்மை இனங்களுக்குச் சாதகமான தத்துவமாக உள்ளகச் சுயநிர்ணய உரிமை மேற்கு நாட்டு நிறுவனங்களாலும் சட்ட நிபுணர்களாலும் விளக்கப்பட்டது. 

2. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் விடுதலைக்குப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் அந்நிய நாடுகளின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுதலான வெளியகச் சுயநிர்ணய உரிமைக்கே முதன்மையளித்தன. 

3. மூன்றாம் உலக நாடுகள் அரசியல் விடுதலையைப் பெற்ற பின்னர் உள்ளகச் சுயநிர்ணய உரிமை இல்லாதவிடத்து வெளியகச் சுயநிர்ணய உரிமையால் நடைமுறைப்பயன் இல்லை என்பதைப் படிப்படியாக உணர்ந்தன. மூன்றாம் உலகின் அரசியல் தலைவர்கள் பலர் வெளியகச் சுயநிர்ணய உரிமையும், உள்ளகச் சுயநிர்ணய உரிமையும் ஒன்றோடொன்று பிணைப்புற்றவை என்பதை உணர்ந்தனர். 

4. இக்கட்டுரை பின்வரும் வினாக்களுக்கான விடையைத் தரும் பகுப்பாய்வாக அமைந்துள்ளது.

அ) முரண்பாடுகள் முற்றிய சூழமைவுகளில் (Conflict Situations) சிக்கியுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் சமூகக் குழுக்களுக்கும் உள்ளகச் சுயநிர்ணய உரிமை பொருத்தப்பாடு (Relevance) உடைய கருத்தாக்கமா?

ஆ) தமது நாடுகளின் பிரதேச எல்லைகளுக்குள் (Territorial Limits) உச்ச அளவிலான சுயாட்சியைக் (Greater Autonomy) கோரிப் போராடி வரும் மக்களுக்கு (Peoples) உள்ளகச் சுயநிர்ணயம் ஏதாவது வகையில் உதவக் கூடியதா? 

இ) உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கத்தின் வரலாறும், அது சார்ந்த கோட்பாடுகளும் எமக்கு ஏதாவது பயனுடைய பாடங்களைச் சொல்லித் தருகின்றனவா? உள்ளகச் சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்திய அனுபவங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் எவை? 

இலங்கையின் ஒற்றையாட்சி அமைப்பினைத் திருத்தம் செய்து உள்ளகச் சுயாட்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அதிகாரப் பகிர்வு மூலம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வரும் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் அரசியல் – சட்டத் தத்துவமாகவும் கோட்பாடாகவும் உள்ளகச் சுயநிர்ணயம் அமைந்துள்ளது. இக்கோட்பாடு பற்றிய ஆழமான புரிதலை வழங்கும் நூலாக கலன சேனரத்தின அவர்கள் எழுதிய ‘Internal Self – Determination in International Law – History Theory and Practice’ என்னும் நூல் அமைந்துள்ளது. 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்