நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
17 நிமிட வாசிப்பு

நூல் அறிமுகம்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் கல்வியின் ஒரு நூற்றாண்டு வரலாறு

January 22, 2026 | Ezhuna

1920களில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் கொழும்பு நகரில் ஓர் உயர்கல்வி நிறுவனம் தாபிக்கப்பட்டது. இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்தின் இளங்கலை/ விஞ்ஞானப் பட்டப்படிப்புக்கு வெளிவாரி பரீட்சார்த்திகளான இலங்கை மாணவர்களைத் தயார்ப்படுத்தும் கல்வி நிறுவனமாகச் செயற்பட்டது. 1942 இல் இக்கல்லூரி இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு தனித்து இயங்க ஆரம்பித்தது. காலப்போக்கில் நாட்டின் பிறபகுதிகளிலும் பல்கலைக்கழகங்கள் தாபிக்கப்பட்டன. இலங்கையில் பல்கலைக்கழக முறை (University System) ஒன்று உருவாகியது. இம்மாற்றங்கள் மேற்குறித்த மூன்று கற்கைத்துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தன. ‘இலங்கையின் வரலாறும், பொருளியலும், சமூகவியலும்’ என்ற இத்தொடரில் இக்கற்கைத்துறைகளின் வளர்ச்சி பற்றிய மதிப்பீடுகள், முக்கிய ஆய்வாளர்களின் நூல்களினதும், ஆய்வுக் கட்டுரைகளினதும் அறிமுகமும் விமர்சனமும், ஆய்வாளர்களின் கோட்பாட்டுப் பங்களிப்புகள் (Theoretical Contributions), அவர்களின் புலமைத்துறை வாழ்க்கை வரலாறு, மாணவர் பரம்பரைகளின் உருவாக்கம், அரசியல் – சமூக – பண்பாட்டு உயர்குழக்களின் (Elites) உருவாக்கம் என்பன குறித்த பகுப்பாய்வுகளாக அமையும் கட்டுரைகள் பதிவிடப்படும்

இலங்கைப் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்வியின் ஒரு நூற்றாண்டு வளர்ச்சியையும் வரலாற்றையும் எடுத்துக்கூறும் இரு நூல் தொகுப்புகளை வெளியிட்டது. இந்நூல் தொகுப்புகளின் தலைப்பு ஆங்கிலத்தில் வருமாறு: Beyond Boundaries: One Hundred Years of Humanities and Social Sciences in Sri Lankan Universities. ‘எல்லைகளுக்கு அப்பால்: இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மனிதப் பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி’ என மேற்படி நூல் தொகுதிகளின் தலைப்பை தமிழில் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். இத்தொகுதிகளில் முதலாவது தொகுதி மனிதப்பண்பியல் (Volume 1 – Humanities) பற்றியதாகும். இம்முதலாம் தொகுதியைப் பற்றிய நூல் அறிமுகமாக இத்தமிழ்க் கட்டுரை அமைந்துள்ளது. இத்தொகுதியில் எல்லாமாக 19 ஆய்வுக் கட்டுரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரைகள் இலங்கைப் பல்கலைக்கழக முறைமையின் கீழ் மனிதப் பண்பியல் (Humanities) என்னும் கல்விப்புலம் சார்ந்த கற்கைத் துறைகளின் வளர்ச்சியை ஆராய்வனவாக அமைந்துள்ளன. 

மனிதப் பண்பியல் (Humanities) வரைவிலக்கணம்

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பல்கலைக்கழகக் கல்விமுறையில் கலைப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என இரு பிரிவுகள் இருந்து வந்தன. பின்னர் கல்வித்துறைகளை மூன்றாக வகுத்து நோக்கும் மரபு தோன்றியது. இம்மரபுக்கமைய,

  1. மனிதப் பண்பியல் (Humanities)
  2. சமூக விஞ்ஞானங்கள் (Social Sciences)
  3. விஞ்ஞானம் (Science)

என்னும் மூன்று தனித்தனிக் கல்விப் புலங்கள் அடையாளம் காணப் பெற்றுள்ளன. இவற்றுள் மனிதப்பண்பியல் என்னும் கல்விப்புலம் எதனைக் குறிக்கின்றது என்பதனை முதலில் சுருக்கமாகக் கூறுவோம். இத்தொகுதியின் முதலாவது அத்தியாயத்தில் மனிதப் பண்பியல் என்பதை பேராசிரியர் பிரேமகுமார டி சில்வா பின்வருமாறு வரையறை செய்கிறார். அவரது கருத்துகளை எமது வார்த்தைகளில் கீழே தந்துள்ளோம். 

“இலங்கையில் மனிதப்பண்பியல் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பற்றிய கற்கைகளை ‘கலைகள் குறித்த தாராண்மை நோக்கிலான கல்வி’ (Liberal Arts) என அழைக்கும் மரபு இருந்து வந்தது. ‘கலைப்பாடங்கள்’ என அழைக்கப்பட்ட இக்கற்கைகள் மனித சமூகத்தையும் மனித நடத்தையையும் (Human Society and Human Behaviour) ஆராய்வனவாக இருந்தன. சமூகத்தையும், மனித நடத்தையையும் ஆராயும் இத்துறைகள் பண்பாட்டையும், சமூக நிறுவனங்கள், சமூகக்கட்டுருக்கள் (Social Constructs) என்பவற்றையும் ஆராய்வனவாக அமைந்தன. மனிதப் பண்பியலும், சமூக விஞ்ஞானங்களும் விரிந்த விடயப்பரப்பைக் கொண்டனவாக இருந்து வந்தன. இவற்றுள் மனிதப்பண்பியல் (Humanities) மனிதம் பற்றியதாகவும் மனித வாழ்நிலை பற்றியதாகவும், சமூக விஞ்ஞானங்கள் மனித நடத்தை (Human Behaviour) பற்றியனவாயும் அமைந்தன (பக். 2)”

மனிதப் பண்பியலுக்கும், சமூக விஞ்ஞானங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு அவற்றின் ஆய்வு அணுகுமுறை சார்ந்தது என்றும் பிரேமகுமார டி சில்வா எடுத்துக்கூறியுள்ளார். 

சமூக விஞ்ஞானங்களில் விஞ்ஞான அணுகுமுறை (Scientific Approach) கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதப் பண்பியல் ஆய்வுகளில் பகுப்பாய்வு நோக்கும் (Analytical Approach) விமர்சனம் சார்ந்த நோக்கும் (Critical Approach) கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதப் பண்பியல் துறையில் சட்டம், வரலாறு, பண்டைய மொழிகளான இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம், பாளி என்பன பற்றிய கல்வி, நவீன மொழிகள் பற்றிய கல்வி, சமயம், நுண்கலைகள், அரங்கியல் கலைகள் என்பன அடங்குகின்றன. இத்துறைகள் விஞ்ஞான நோக்கிலான ஆய்வு முறைகள் ஊடாக அணுகப்படுவதில்லை. இத்துறைகளின் ஆய்வு மெய்யியல் (Philosophical) நோக்கில் அமைந்திருப்பதைக் காணலாம். சமூக விஞ்ஞானங்களில் உள்ளடக்கப்படும் புதிய கல்வித் துறைகளான  மானிடவியல் (Anthropology), தொல்லியல் (Archaeology), மக்கள் தொகையியல் (Demography), மொழியியல் (Linguistics), பொருளியல் (Economics), உளவியல் (Psychology) ஆகியன மனிதப்பண்பியல் துறைகள் போன்று அல்லாது இயற்கை விஞ்ஞானங்களில் கடைப்பிடிக்கப்படும் விஞ்ஞான ஆய்வு முறையைக் கடைப்பிடிப்பதைக் காணலாம். இக்காரணத்தால் ‘Arts’ என்றும் ‘Liberal Arts’ என்றும் அழைக்கப்பட்ட பாடங்கள் இன்று மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானங்கள் என்ற இருவேறு துறைகளாகப் பிரிந்துள்ளன. ஐரோப்பாவில் 15 ஆம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க, இலத்தீன் மொழி இலக்கியங்களையும், அவை சார்ந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும், கலைகளையும் கற்பதில் ஏற்பட்ட ஆர்வம் மனிதப் பண்பியல் (Humanities) கல்வியில் பெரும் மாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது. இதன்பின்னர் ஐரோப்பாவில் பிரஞ்சுப் புரட்சியும், கைத்தொழில் புரட்சியும் ஏற்படுத்திய அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் சமூக விஞ்ஞானங்களில் பெருவளர்ச்சிக்குக் காரணமாயின. மார்க்ஸ், எமில் தர்க்கீம், மக்ஸ் வெபர் ஆகியோர் சமூக விஞ்ஞானக் கல்வியை ஆழமும் அகலமும் உடையதாக விரிவாக்கினர். இயற்கை விஞ்ஞானங்களிற்கும் சமூக விஞ்ஞானங்களிற்கும் இடையிலான வேறுபாடுகள் அழுத்தம் பெற்றன. அத்தோடு மனிதப் பண்பியலுக்கும் சமூக விஞ்ஞானங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளும் அழுத்தம் பெற்றன.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சுருக்க வரலாறு

இலங்கையில் பல்கலைக்கழக முறைமை உருவான வரலாற்றை அறிந்து கொள்வது அம்முறைமையில் மனிதப்பண்பியல் துறைகள் எவ்வாறு வளர்ச்சியடைந்தன என்பதைப் புரிந்து கொள்வதற்று உதவும். 1921 இல் தாபிக்கப்பட்ட இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ‘கொலிஜ் ஹவுஸ்’ (College House) என அழைக்கப்படும் இடத்தில் இயங்கத் தொடங்கியது. ஆளுநர் W.H. மனிங் புதிய கல்லூரியின் தலைவராகச் செயற்பட்டார்.  இத்தற்காலிக ஏற்பாடு விரைவிலேயே முடிவுறுத்தப்பட்டது. பேராசிரியர் றொபர்ட் மார்ஸ் (Robert Marrs) பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபராக (Principal) நியமிக்கப்பட்டார். றொபர்ட் மார்ஸ் அவர்கள் அதிபர் பதவியில் 1939 வரை 19 ஆண்டுகள் பணியாற்றினார். 1939 இல் றொபர்ட் மார்ஸ் ஓய்வு பெற்ற போது அவரின் இடத்திற்கு சேர். ஐவர் ஜெனிங்ஸ் நியமிக்கப்பட்டார். ஜெனிங்ஸ் அவர்களிடம் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்கும் பொறுப்பை ஒப்படைத்தது. பல்கலைக்கழகக் கல்லூரியை இலங்கைப் பல்கலைக்கழகமாக மாற்றுவதே அப்பணியாகும். 

1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது உபவேந்தராக சேர். ஐவர் ஜெனிங்ஸ் நியமிக்கப்பட்டார். இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரியையும் இணைத்து உருவாக்கப்பட்ட இப்புதிய பல்கலைக்கழகத்தில், 

  1. கலை மற்றும் கீழைத்தேயக் கற்கைகள் பீடங்கள் (Faculties of Arts and Oriental Studies)
  2. விஞ்ஞானப் பீடம் (Faculty of Science)
  3. மருத்துவப் பீடம் (Faculty of Medicine) 

எனும் பீடங்கள் இயங்கத் தொடங்கின. இக்கட்டுரையில் நாம் கலை மற்றும் கீழைத்தேயக் கற்கைகள் என்னும் இரு பீடங்களினதும் கற்கைத்துறைகளின் வளர்ச்சியை எடுத்துக்கூறவுள்ளோம். 1942 முதல் 1951 வரையான பத்தாண்டுகள் கொழும்பில் இயங்கிவந்த கலை மற்றும் கீழைத்தேயக் கற்கைகள் பீடங்கள் (Faculty of Arts and Oriental Studies) இரண்டும் 1952 இல் முழுமையாகப் பேராதனைக்கு இடம் மாறின. 1952 முதல் கொழும்பு, பேராதனை என்னும் இரு வளாகங்கள் (Campuses) இயங்கி வந்தன. பேராதனையில் கலை மற்றும் கீழைத்தேயக் கற்கைகள் பீடங்கள் இயங்கிய காலம் கலை மற்றும் மனிதப் பண்பியல் கல்வியின் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது. எமது ஆய்வுக்குரிய நூற்தொகுப்பில் உள்ள மொத்தம் 19 அத்தியாயங்களில் 13 அத்தியாயங்களில் பின்வரும் மனிதப் பண்பியல் கற்கைத் துறைகளின் வளர்ச்சி விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அத்தியாயங்களின் தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. 

  1. செவ்வியல் மொழிகள் (இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம், பாளி) – அத்தியாயம் 5
  2. சிங்கள மொழியும் இலக்கியமும் – அத்தியாயம் 6
  3. தமிழ் மொழியும் இலக்கியமும் – அத்தியாயம் 7
  4. ஆங்கிலக் கற்கைகள் (English Studies) – அத்தியாயம் 8
  5. மொழிகள் கற்கைகள் (Language Studies) – அத்தியாயம் 9
  6. ஆங்கில மொழியைக் கற்பித்தல் (English Language Teaching) – அத்தியாயம் 10
  7. மொழியியல் (Linguistics) – அத்தியாயம் 11
  8. பௌத்தமும் பாளி மொழியும் (Buddhist Studies Pali Language) – அத்தியாயம் 12
  9. நாகரிகங்களின் கற்கை (Civilisation Studies) (இந்து நாகரிகம், இஸ்லாமிய நாகரிகம், கிறிஸ்தவ நாகரிகம்) – அத்தியாயம் 13
  10. நுண்கலைகள் (Fine Arts) – அத்தியாயம் 14
  11. வரலாறு – அத்தியாயம் 15
  12. சட்டம் (Legal Education) – அத்தியாயம் 16
  13. மெய்யியலும் உளவியலும் (Philosophy and Psychology) – அத்தியாயம் 17

‘பல்கலைக்கழக நூலகங்கள் – ஒரு நூற்றாண்டு வளர்ச்சி’ எனும் கட்டுரை இலங்கைப் பல்கலைக்கழக நூலகங்களின் வளர்ச்சியை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது. 

மேலே குறிப்பிட்ட கற்கைத் துறைகள் ஒவ்வொன்றினதும் வளர்ச்சியையும் வரலாற்றையும் அத்துறைகளைச் சேர்ந்த முதுநிலைப் பேராசிரியர்கள் எழுதியுள்ளனர். ஒவ்வொரு கட்டுரையும் உணர்வெழுச்சியூட்டும் ஆய்வுகளாக அமைந்துள்ளன. நூலின் முதல் நான்கு அத்தியாயங்களும் இறுதி அத்தியாயமும் மனிதப் பண்பியல் துறைகளின் பொது வரலாற்றை பகுப்பாய்வு முறையில் விளக்குவனவாக அமைந்துள்ளன. 

மனிதப் பண்பியல் கல்வியின் பொற்காலம்

1952 இல் கலைப்பீடமும், கீழைத்தேயக் கற்கைகள் (Oriental Studies) பீடமும் பேராதனைக்கு மாற்றப்பட்டன என்பதை மேலே குறிப்பிட்டுள்ளோம். பேராதனையில் 1952 இற்குப் பிந்திய காலத்தில் சிங்களம், தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் கல்வியில் பெருமாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டன. ஆங்கில மொழித்துறையும் மேற்கத்தையச் செவ்வியலும் (Western Classics), வரலாறு, சட்டம், மெய்யியலும் உளவியலும் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பேராதனையின் பொற்காலத்தில் ஏற்பட்டது. மனிதப் பண்பியல் துறைகளில் கல்வி கற்ற பலர் பேராசிரியர்களாகவும், நிர்வாகத்துறை உயர் அதிகாரிகளாகவும், இராஜதந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும், ஊடகவியலாளர்களாகவும் அறிவுலகில் பிரகாசித்தார்கள்.

இலங்கையில் கீழைத்தேயக் கற்கைகள் அறிமுகமாதல்

‘Oriental Studies’ என அழைக்கப்பட்ட ‘கீழைத்தேயக் கற்கைகள்’, ‘கீழைத்தேயம்’ (Orient) பற்றிய மேலைத்தேசத்தவர்களின் பார்வையிலான அறிவு என்ற முறையிலேயே உருவாக்கம் பெற்ற கற்கைத்துறையாகும். எட்வார்ட் செய்த் (Edward Said) என்ற அறிஞர் கீழைத்தேயக் கற்கைகள் என்பதை கீழைத்தேயவியல் (Orientalism) என்னும் கருத்தாக்கம் மூலம் விளக்கினார். கிழக்குலகை மேற்குலகம் அடிமைப்படுத்தி ஆட்சி செய்வதற்கான அறிவைப் (Knowledge) பெற்றுக்கொள்வதே இக்கற்கைகளின் நோக்கம்; கிழக்குலகு பற்றிய அறிவு ஆதிக்கத்திற்கான கருவியாகப் பயன்பட்டது. கிழக்குலகு (Orient) பரந்துபட்ட புவியியல் பரப்பைக் கொண்ட ஒரு நிலப்பகுதி. இந் நிலப்பரப்பில் எண்ணிறந்த இனத்துவக் குழுமங்கள் (Ethnic Communities) வாழ்ந்து வந்தன. பல சமய மரபுகளும், பண்பாடுகளும் இந்நிலப் பகுதியில் காணப்பட்டன. இங்கு வாழ்ந்த மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தார்கள். மேற்குலகு கீழைத்தேசத்தில் அரசியல் பொருளாதார ஆக்கிரமிப்பை மேற்கொண்ட போது, தனது தேவைக்காக உருவாக்கிக்கொண்ட அறிவுத் தொகுதியே கீழைத்தேயக் கற்கைகள் என்ற வடிவத்தில் உருவாக்கம் பெற்றிருந்தது. 

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிலும், பின்னர் 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட போதும் இலங்கையர்களான பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் கீழைத்தேயக் கற்கைகள் என்பதை சுதேசிய மக்களின் நோக்கில் வரையறை செய்து கொண்டார்கள். சிங்களம், தமிழ், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும், பௌத்தம், இந்து, இஸ்லாமியப் பண்பாடுகளையும் கற்பதை தமது அடையாளத்தைப் பற்றிய சுய கண்டுப்பிடிப்பாகவும் (Self – Discovery), சுய அடையாள வரையறை செய்தலாகவும் (Self – Definition) கருதிச் செயற்பட்டார்கள் என அமரகீர்த்தி லியனகே நான்காவது அத்தியாயத்தில் விளக்கிக் கூறுகின்றார் (பக். 35). புதிய பல்கலைக்கழகத்தின் கீழைத்தேயக் கற்கைத் துறைகளுக்குரிய தொலைநோக்கை (Vision) வடிவமைப்பதில் பாளி மொழி அறிஞரான G.P. மலலசேகரவின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிடும் அமரகீர்த்தி லியனகே அவர்கள் புதிய பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தரான ஐவர் ஜெனிங்ஸ் அவர்களும் மேற்குலகினதும், கிழக்குலகினதும் பண்பாட்டு மரபுகளை இணைக்கும் செழுமையான கல்வி மரபை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை வழங்கினார் என்றும் குறிப்பிடுகின்றார். புதிய பல்கலைக்கழகத்தில் கீழைத்தேயக் கற்கைகளோடு சமாந்தரமாக மேலைத்தேய வரலாறு, இங்கிலாந்தின் வரலாறு, பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் (British Empire) வரலாறு, மேலைத்தேய மெய்யியல், செவ்விலக்கியம் (Western Classics), ஆங்கில இலக்கியம் ஆகிய துறைகளின் கல்வியும் கற்பிக்கப்பட்டது. மனிதப் பண்பியல் கல்வி பல்கலைக்கழக நிலையில் செழித்தோங்குவதற்கான அத்திபாரம் இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பில் ‘கொலிஜ் கவுஸ்’ (College House) இல்லத்தில் செயற்பட்ட காலத்திலேயே இடப்பட்டது. 

புதிய பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஐந்து மொழிகளுக்கான தனித்தனித் துறைகள் உருவாக்கப்பட்டன.

  1. சிங்களம்
  2. பாளி
  3. சமஸ்கிருதம்
  4. தமிழ்
  5. அராபியம்

சிங்கள மொழி இலக்கியக் கல்விக்கான தனித்துறை 1944 இல் உருவாக்கப்பட்டது. தமிழ்த்துறைக்குப் பேராசிரியர் சுவாமி விபுலாநந்தர் 1943 இல் நியமிக்கப்பட்டார். அராபிய மொழிக்கு 1945 இல் தனித்துறை அமைக்கப்பட்டது. பாகிஸ்தனைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் கல்வி கற்று அங்கு கலாநிதிப் பட்டம் பெற்றவருமான எஸ்.ஏ. இமாம் பேராசிரியராக அராபிய மொழித்துறையில் நியமனம் பெற்றார். பேராசிரியர் மலலசேகர (பாளி), O.H.de.A. விஜயசேகர (சமஸ்கிருதம்), D.E. ஹெட்டியாராய்ச்சி (சிங்களம்) ஆகியோர் மொழித்துறைகளின் தலைவர்களாகப் பணியாற்றினர். தமிழ்த்துறையில் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம் ஆகியோரும் கடமையாற்றினர். அராபிய மொழித்துறையில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள முடியவில்லை. 1960 இல் தமிழ்மொழி மூலம் கல்வி கற்ற மாணவர்கள் வருகையுடன் இத்துறையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. இஸ்லாமிய நாகரிகத்தையும் கற்கத் தொடங்கினர். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனித் துறைகள் அமைக்கப்பட்டதால், முன்னர் கீழைத்தேயக் கற்கைகள் என்ற ஓர் அலகினுள் உள்ளடக்கப்பட்டிருந்த மொழித்துறைகள் தனித்தனித் துறைகளாக வளர்ச்சி பெறும் வாய்ப்புக் கிட்டியது. 

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி அமைக்கப்பட்டதன் பின்னர் பாளி, சமஸ்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளின் கல்வியில் பட்டம் பெற்ற கல்வியாளர்கள் பலர் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவும், சிவில் சேவை உத்தியோகத்தர்களாகவும் உயர்ச்சி பெற்று பல்கலைக்கழகக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர். கீழைத்தேயக் கற்கைகள் (Oriental Studies) துறையில் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர்களுக்கு சிவில் சேவைப் பரீட்சையில் தோற்றுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. L. பியசேன இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கீழைத்தேயக் கற்கைகள் துறையில் கற்ற பின்னர் சிவில் சேவையில் இணைந்து இறைவரித் திணைக்களத்தில் (Income Tax Department) பணியாற்றினார். இவர் பின்னர் அத்திணைக்களத்தின் ஆணையாளராகப் (Income Tax Commissioner) பதவி வகித்தார். இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் கற்று இந்தோ – ஆரியன் மொழிக் கல்வியில் 1933 இல் முதற்தரச் சித்தியைப் பெற்ற M.J. பெரேரா, சிவில் சேவைப் பரீட்சையில் தோற்றிச் சித்தியெய்தி சிவில் சேவை உத்தியோகத்தராகக் கடமையாற்றினார். 1952 இல் இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக (Director General of Broadcasting Corporation) நியமனம் பெற்றார். பல்கலைக்கழகக் கல்லூரி கீழைத்தேயக் கற்கைகள் துறையில் கல்வி கற்றுச் சிவில் சேவையில் இணைந்து சிறப்புடன் பிரகாசித்தவர்களாக W.J. பெர்ணான்டோ, ஹேமசிறி பிரேமவர்த்தன, ஆனந்த குருகே, றிட்ஜ்வே திலகரத்தின ஆகியோரையும் குறிப்பிடலாம். பல்கலைக்கழகக் கல்லூரியில் 1933 இல் சேர்ந்து கீழைத்தேயக் கற்கைகள் துறையில் கல்வி கற்ற எதிரிவீர சரத்சந்திர சிவில் சேவைப் பரீட்சையில் சித்தி எய்தினார். ஆயினும், அவர் அப்பதவியை ஏற்கவில்லை. அவர் இந்தியாவின் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கே மெய்யியலையும் இசையையும் கற்றார். அக்காலத்தில் இவர் இலண்டன் பல்கலைக்கழக வெளிவாரி மாணவராகப் பயின்று மெய்யியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பாளி மொழித்துறை விரிவுரையாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். 1949 இல் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இணைந்து மேற்கத்தைய மெய்யியல் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். 1956 ஆம் ஆண்டின் பின்னர் மீண்டும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட இவர் சிங்கள மொழித்துறை முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் இலங்கையின் சிங்கள அரங்கத் துறையின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையை வழங்கினார். பாளி, சமஸ்கிருதம், சிங்களம் ஆகிய பாடங்களைக் கற்று உயர்ச்சி பெற்ற அறிவாளி என்ற முறையில் எதிரிவீர சரத்சந்திர அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இங்கே பதிவு செய்யப்பட்டுள்ளன. சிங்கள மொழி, சிங்கள இலக்கியமும் கலைகளும், பௌத்த சமயப் பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்கு இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி பெரும் பங்களிப்பு வழங்கியது என்பதை விளக்கிக்கூறவே மேலே குறித்த ஆளுமைகள் பற்றிய விவரங்களை இங்கே குறிப்பிட்டோம். 

பல்கலைக்கழக முறைமையில் தமிழும் தமிழ் இலக்கியமும்

கிங்ஸ்பெரி அடிகள் என்பவரே இலங்கைப் பல்கலைக்கழக் கல்லூரியில் நியமனம் பெற்ற முதலாவது தமிழ் விரிவுரையாளர் ஆவர். பின்னர் 1936 ஆம் ஆண்டில் கலாநிதி. க. கணபதிப்பிள்ளை தமிழ்த்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1943 இல் சுவாமி விபுலாநந்தர் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கிங்ஸ்பெரி அடிகள் அறிவும் ஆற்றலும் மிக்கவர். அவர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தாம் முடிவுகளை எடுக்கும் சக்தி (Decision Making Power) அற்றவராக இருந்தமையை உணர்ந்திருத்தல் வேண்டும். இக்காரணத்தால் அவரால் தமிழ்த்துறைக் கல்வியின் வளர்ச்சிக்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. அக்காலத் தமிழ் மாணவர்கள் தமிழைப் பயில்வதில் நாட்டம் அற்றவர்களாய் வரலாறு, கணிதம், விஞ்ஞானம், சட்டம், மேற்கத்தையச் செவ்வியல் இலக்கியம் (Western Classics) ஆகிய பாடங்களையே விருப்பத்தேர்வாகத் தெரிந்து கொண்டனர் என ஊகிக்க முடிகிறது. 1942 இல் இலங்கைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே தமிழ்த்துறை தனித்துவம் மிக்க துறையாக வளர்ச்சி பெறத் தொடங்கியது எனலாம். 1942க்குப் பின்னர் உள்ள காலத்தில் விபுலாநந்தர், க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன், ஆ. சதாசிவம் ஆகியோர் தமிழ்த்துறையில் பணியாற்றத் தொடங்கினர். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் புலமையாளர்கள் பின்வரும் துறைகளில் ஆய்வுகளைச் செய்து தமிழை வளப்படுத்தினர். 

  1. தமிழ் மொழியும், மொழியியலும்
  2. பண்டைய தமிழ் இலக்கியமும் மத்திய காலத் தமிழ் இலக்கியமும்
  3. நவீன தமிழ் இலக்கியம்
  4. இலக்கிய வரலாறு
  5. இலங்கைத் தமிழ் இலக்கியமும் தமிழ்ச் சமுதாயமும்
  6. தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு
  7. வரலாறும் கல்வெட்டியலும்
  8. பண்பாடு

பல்கலைக்கழக முறைமையில் தமிழ்த்துறையின் பங்களிப்பைப் பற்றி விவரிக்கும் அமரகீர்த்தி லியனகே பேராசிரியர் சி. தில்லைநாதன், கலாநிதி எம்.ஏ. நுஃமான் ஆகிய இருவரும் 1992 ஆம் ஆண்டில் எழுதிய பின்வரும் இரு கட்டுரைகளை மேற்கோள் காட்டியுள்ளார். இக்கட்டுரைகள் ‘More Open than Usual’ (1992) என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. 

  1. சி. தில்லைநாதன்: Some Aspects of University’s Contribution to Tamil Studies in Sri Lanka.
  2. எம்.ஏ. நுஃமான்: The University of Peradeniya and the Development of Tamil Literary Criticism in Sri Lanka.

மனிதப்பண்பியல் கல்வி பல்கலைக்கழக முறைமையின் கீழ் வளர்ச்சி பெற்ற ஒரு நூற்றாண்டு வரலாற்றைக் கூறும் இத்தொகுப்பு நூலில் தமிழ்த்துறை பற்றி ‘Tamil: Towards Truth, Goodness and Beauty’ என்ற தலைப்பில் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாஸ், பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் ஆகிய இருவரும் இணைந்து எழுதிய ஆய்வுக் கட்டுரையும் சேர்க்கப்பட்டுள்ளது. 



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்