இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக - அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் - பகுதி 1
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
36 நிமிட வாசிப்பு

இலங்கையில் நடந்த சித்திரவதைகள்: உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சமூக – அரசியல் ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதம் – பகுதி 1

January 20, 2026 | Ezhuna

1978 ஆம் ஆண்டு அன்றைய ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஆட்சியாளர்களால் இயற்றப்பட்டு, நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக இருந்துவரும் ‘பயங்கரவாதத் தடைச்சட்டம்: இல – 48/1979’ தமிழ் வாசகர்களுக்கு ஒன்றும் புதுமையான ஒரு சட்டம் அல்ல. அது முதலில் ஒரு தற்காலிக தேவைக்கான சட்டமாகக் கொண்டுவரப்பட்டுப் பின்னர் நிரந்தரமான ஒரு சட்டமாக (1982) மாற்றப்பட்டது. பல்வேறு உலக நாடுகள் உட்பட உள்நாட்டு மக்களாலும் எதிர்க்கப்பட்டு வந்ததன் காரணமாக அவ்வப்போது சில திருத்தங்களுக்கான முயற்சிகள் நடந்தபோதும், அதற்குப் பதிலாக ஒரு திருத்தமாக 2022 இல் தயாரிக்கப்பட்ட ‘பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ என்ற ஒரு ‘சட்டவரைபு – 2023’ வெளியிடப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய, இன்னமும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டமே அரசாங்கத்தால் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ளது. அதை ஓர் அரசாங்கம் தனது  நடவடிக்கைகளுக்காகக் கைகளில் எடுக்கின்றதா, இல்லையா என்பதைப் பொறுத்தே அது அதிகமாகப் பேசப்படும் சூழல் உருவாகிறது. இப்போது அத்தகைய ஒரு நிலை நிலவவில்லை என்றாலும் கூட, இந்தச் சட்டம் பற்றிய, மக்களது ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு அது வழங்குகின்ற அதிகாரங்கள் பற்றிய உரையாடல் அவசியமானது. 

அந்த அடிப்படையில், இந்த ‘இலங்கை: பயங்கரவாதத் தடைச்சட்டம் – ஒரு விமர்சனரீதியான மதிப்பீடு’ என்றநூலிலுள்ள கட்டுரைகளை நமது ‘எழுநா’ வாசகர்களுக்காக அதே பெயரில் தொடராக இங்கு தமிழில் தருகிறோம். இந்த நூல், ‘மனித உரிமைகளுக்கும் அதன் வளர்ச்சிக்குமான மையத்’தைச் (Centre for Human Rights and Development – CHRD) சேர்ந்த, பேராசிரியர் பேற்றன் பஸ்தியாம்பிள்ளை, றோகண எதிரிசிங்க, என். கந்தசாமி ஆகிய அதன் அமைப்பாளர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட, நாட்டின் முக்கிய ஆளுமைகளால் எழுதப்பட்ட சட்டம் பற்றிய விமர்சனபூர்வமான பத்து ஆக்கங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். எழுநா வாசகர்களுக்கு, நமது ஏனைய நூல்கள் போலவே இதுவும் இன்னொரு முக்கிய நூலாக அமையும் என்று நம்புகிறோம்.

ஆங்கில மூலம்: பேராசிரியர் தயா சோமசுந்தரம்

இலங்கையில் ஏற்கனவே நிலவிவந்த சட்டங்கள், சமூகக் கட்டமைப்புகள், நிர்வாக வழிமுறைகள் என்பவற்றை வைத்துக்கொண்டே, அது ஒரு நிறுவன மயமாக்கப்பட்ட பலாத்கார அரச இயந்திரமாக மாற்றமடைந்தது இப்படித்தான் என்பதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லப்படக்கூடிய ஒரு சட்டம் தான் ‘பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்’.  இந்தச் சட்டமும் (PTA), அவசரகால விதிமுறைகளும் (ER) குற்றச்சாட்டுகளோ அல்லது விசாரணைகளோ இல்லாமல் ஒருவரை நீண்டகாலமாக தொடர்பு கொள்ளப்பட முடியாத தடுப்புக்காவலில் வைக்கவும், பாதுகாப்புப் படைகள் முழுக்கமுழுக்க தமது விருப்பப்படி, அவர்களை எந்தவொரு இடத்திலும்  எந்தவொரு  நிலைமைகளின் கீழும் வைத்துக் கையாளவும் அனுமதித்தன. மேலும், கைது செய்யப்பட்டவர்கள் மீதான சட்டபூர்வமான சித்திரவதையையும், காவலில் வைக்கப்பட்டிருக்கும் போது மரணங்கள் ஏற்படுவதையும், நீதி விசாரணை இல்லாமலே இறந்தவர்களது உடல்கள் அப்புறப்படுத்தப்படுவதையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமும்  அவசரகாலச் சட்டமும், சட்டபூர்வமாக அனுமதித்தன. இந்தச் சட்டங்கள், மனித உரிமை மீறல்களைச் செய்பவர்களுக்கு வழங்கிய தண்டனை விலக்கும், பாதுகாப்பும் அவர்களுக்குப் பெருமளவிலான ஊக்கத்தை அளித்தன. இது,  வன்முறையும், மிரட்டலும் இணைந்ததான ஓர் அரச பயங்கரவாதக் கலாசாரத்தை நிறுவுதல் என்ற நிலைக்கு வழிவகுத்தது.  இவ்வாறுதான் சித்திரவதை என்பது இலங்கையின் மோதலின் வழக்கமான அம்சமாக நிறுவனமயமாக்கப்பட்டது. பயங்கரவாதத்தின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சித்திரவதை முறைகளைப் பயன்படுத்துவது பரவலாக இருந்தது. பலர் சித்திரவதையிலிருந்து தப்பிப்பதில்லை, ஆனால் தப்பித்தவர்கள் பல்வேறு உடல் ரீதியான சிக்கல்கள், உளவியல் ரீதியான பாதிப்புகள், மனநல ரீதியான பின்விளைவுகள் என்பனவற்றுக்கு உள்ளாகுகின்றனர். மனநலச் சிக்கல்களில், ‘சோமற்றைசேஷன்’ (Somatization – உடல் சார்ந்த ஒருவகை மனநோய்), PTSD (அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தம்), மனச்சோர்வு, பதற்றம் ஆகியவை பொதுவானவை. மருத்துவச் சிகிச்சை, உளவியல் சிகிச்சை, பாரம்பரியக் குணப்படுத்தும் முறைகள், இளைப்பாறலுக்கான பயிற்சிகள் (Relaxation), வெளிப்பாட்டுச் சிகிச்சை, குடும்பச் சிகிச்சை என்பவற்றுடனான சமூக – பொருளாதார மறுவாழ்வு மூலம், இந்தத் தனிப்பட்ட சித்திரவதையில் இருந்து தப்பியவர்களுக்கு உதவ முடியும். ஆனால் தனிநபர்கள் மட்டுமன்றி, கைது செய்யப்பட்டவர்களது குடும்பங்களும் சமூகமும் கூடப் பாதிக்கப்படுகின்றன. கூட்டு மட்டத்தில், விழிப்புணர்வை உருவாக்குதல், சமூக மட்டத்தில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், கலாசார சடங்குகள், சமூக நீதி மற்றும் சமூக மேம்பாடு என்பவை மூலம் (இவ்வாறு பாதிப்புக்குள்ளான) சமூகங்களை வலுப்படுத்த முடியும். இருப்பினும், ஐ.நா.சபை மரபுகளைச் செயற்படுத்துவதன் மூலமும், சித்திரவதை நடைமுறைக்கு எதிரான தொழில்முறை, சமூக அணுகுமுறை போன்றவற்றை வளர்ப்பதன் மூலமும் சித்திரவதையைத் தடுப்பதே நீண்டகால நோக்கில் மிகவும் அதிக பயனுள்ளதாக இருக்கக்கூடியது.

அறிமுகம்

சித்திரவதை என்பது, ஆட்சிசெய்ய விரும்புபவர்களால் சமூகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழக்கமானதும் மிகக் கடுமையானதுமான ஒரு முறையாக நிறுவனமயமாக்கப் (Institutionalised) பட்டிருக்கிறது. குறிப்பாக, அதிகாரத்தின் மீதான தமது பிடி தளரத் தொடங்கி அதற்கான தமது பிற கட்டுப்பாட்டு முறைகள் தோல்வியடைவதாகத் தோன்றும் போது, அவர்களுக்கு இது அவசியமாகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு, சித்திரவதை என்பது தகவல்களைப் பெறுவதற்கும், ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறுவதற்கும் அல்லது எதிரியைத் தண்டிப்பதற்கும் வாய்ப்பான ஒரு காட்டுமிராண்டித்தனமான வழிமுறையாக மாறிவிட்டது. இது, எதிர்க்க முயற்சிப்பவர்களின் தனிப்பட்ட ஆளுமைகளை உடைப்பதையும், உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஒரு சமூகத்தைப் பயங்கரவாதத்தால் அடிபணியச் செய்யும் வகையில் கட்டாயப்படுத்துவதையும் உள்ளடக்கிய சமூக – அரசியல் முறையாகவும் வளர்ந்து வந்திருக்கிறது (Baykai, Schlar & Kapken, 2004). அல்பர்ட் காமுஸ் (1953) அரச பயங்கரவாதத்தின் நவீன வளர்ச்சியை அற்புதமாக இவ்வாறு வரைந்திருந்தார்:“மார்க்ஸின் தீர்க்கதரிசனக் கனவும் ஹெகல் அல்லது நீட்சேயின் மிகைப்படுத்தப்பட்ட கணிப்புகளும் நோக்கங்களும் கடவுளின் நகரம் தரைமட்டமாக்கப்பட்ட பிறகு, ஒரு பகுத்தறிவு கொண்ட அல்லது பகுத்தறிவற்ற அரசு என்பதாக இருந்தது. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அது பயங்கரவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்தது.”

பல தனிநபர்கள் சித்திரவதையிலிருந்து தப்பிக்கவில்லை, ஆனால் அவ்வாறு தப்பித்தவர்கள் உடைவுண்ட நிலையில் தான் விடுவிக்கப்பட்டனர்; அல்லது இறந்தபோது, அவர்களின் ஊனமுற்ற உடல்கள் மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பதற்காகவே வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டன. சித்திரவதை என்பது நிறுவனமயமாக்கப்பட்ட வன்முறையின் ஓர் அம்சமாக மாறியது. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), அவசரகாலச் சட்டவிதிகள் (ER) போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. அவை குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணைகள் இல்லாமல் நீண்டகாலமாகத் தொடர்பு கொள்ளப்படாமல் கைதிகள் தடுத்து வைக்கப்படுவதை எளிதாக்கின. தடுத்து வைக்கப்படும் இடங்கள், வைக்கப்படும் நிலைமைகள் என்பவை பாதுகாப்புப் படைகளின் விருப்பத்திற்கேற்றபடி அமையவும், நீதி விசாரணைகள் எதுவும் இல்லாமலே இறந்துபோன கைதிகளின் உடல்களை அப்புறப்படுத்தவும் இந்தச் சட்டங்கள் அனுமதித்தன. இவை நடைமுறையில் சித்திரவதையையும் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களது மரணத்தையும் சட்டபூர்வமாக்கின (சர்வதேச மனித உரிமைகள் ஆணையகம், 1986). அவசரகால விதிமுறைகளின் பிரிவு 60, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரிவு 18 ஆகியவை பாதுகாப்புப் படையினரது ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்த அனுமதித்தன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் ஆகிய இரண்டும், ஆயுதப் படையினரும், காவல்துறையினரும் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறுவதற்கான ஒரு முறையாக சித்திரவதை  பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்தனர். சந்தேக நபர்கள் பெரும்பாலும் சித்திரவதைச் செயன்முறையிலிருந்து தப்பிக்கக் கடுமையான வலியுடன், இவ்வாறு செய்யப்படும் போலி ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்திட்டனர். பெரும்பாலும் அவர்கள் ஒரு வேற்று1 மொழியில் (எழுதப்பட்டவை என்ன என்று தெரியாமலே) எழுதப்பட்ட வாக்குமூலங்களில் கையெழுத்திட வைக்கப்பட்டனர். இருப்பினும், நீதிமன்றங்கள் இப்போது இத்தகைய கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை ஏற்க மறுத்து வருகின்றன. சித்திரவதையை ஊக்குவிக்கும் மற்றொரு அம்சம், சித்திரவதை செய்பவர்களுக்கு (அரச படையினர்) வழங்கப்பட்டுள்ள  தண்டனை விலக்கு. இலங்கை, சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. மாநாட்டில் கையொப்பமிட்டிருந்தாலும், அதன் அரசியலமைப்பில் குறிப்பாக இது தடை செய்யப்பட்டிருந்தாலும், உண்மையில் இதுவரை யாரும் இதற்காகத் தண்டிக்கப்படவில்லை (UTHR-J, 1999). மாறாக, சித்திரவதை செய்பவர்களில் பலருக்குப் பதவி உயர்வோ அல்லது வேறுவிதமாக வெகுமதிகளோ அளிக்கப்படுவதுதான் நடந்து வந்துள்ளது. உண்மையில், இந்த விஷயத்தில் தலையிடுவதற்கான எத்தகைய அரசியல் ஈடுபாடுகளும் அரசாங்கத்திடம்  இருக்கவில்லை. ஏனென்றால் இதற்காக ஒரு சிலரைத் தண்டிக்கும்போது, அது படையினரின் சித்திரவதைக்கான மன உறுதியைப் பலவீனமாக்கிவிடும் என்று அரசு அஞ்சுகிறது. வெளிப்படையாக, சித்திரவதை நடக்கிறது என்ற உண்மை உயர் (மிக உயர்ந்த) பதவியில் உள்ளவர்களுக்குத் தெரிந்திருப்பதால் சித்திரவதைகளுக்கான ஓர் அதிகாரபூர்வமற்ற அனுமதி கிடைக்கிறது. இதன் காரணமாக, இச்செயலுக்கான உண்மையான பொறுப்பு மேல்மட்டத்திற்குச் செல்வதால், சித்திரவதையைச் செய்யும் சில கீழ்நிலை நபர்களைப் பலிக்கடாக்களாக்கித் தண்டிப்பதும் கடினமாகிறது. அரசு தனது பொறுப்பை ஒப்புக்கொள்ளத் தொடங்கியதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்ற பிரச்சினையை எதிர்கொள்கிறது. இறுதி ஆய்வில் இதற்கு, முழு அமைப்புமே பொறுப்பாக இருப்பது தெரிகிறது. சாதாரண பொதுமக்கள் கூட இது குறித்து ஒரு மேம்போக்கான பார்வையையே எடுக்கிறார்கள். தேசிய பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் சில சந்தர்ப்பங்களில், சித்திரவதை தேவைப்படலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சித்திரவதை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தான் என்று பலரும் நியாயப்படுத்துகிறார்கள். ஏனெனில் முதலில் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும். இதனால் அவர்கள் சித்திரவதையை தீவிரமாக எதிர்க்க மாட்டார்கள். சித்திரவதையைக் கடைப்பிடிக்கும் அரசு சாராத போராளிகளைப் பொறுத்தவரை (ஆனால் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அதே அளவில் இல்லை), சட்ட நிவாரணம் அல்லது தண்டனை பற்றிய கேள்வியே இல்லை. அத்துடன், அவர்கள் சர்வதேச மரபுகளின் வரம்பிற்குள் வருவதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள்  தமது சொந்தச் சட்ட அமைப்பை உருவாக்கினாலும், அரசியல் இயல்புடையதாகக் கருதப்படும் சில குற்றங்கள், அவற்றின் சட்டச் செயல்முறைக்கு வெளியே கருதப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படுவது சுவாரஸ்யமானது. தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது ஒரு மனித உரிமைகள் அமைப்பை உருவாக்கியுள்ள போதிலும், மனித உரிமைகளை வெளிப்படையாகத் துஷ்பிரயோகம் செய்வதை அது ஒருபோதும் கேள்வி கேட்பதில்லை. அவர்களின் அமைப்பில் முறையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவை இல்லாவிட்டாலும், அதே போன்ற நடைமுறைகள் செயற்படுவதாகத் தெரிகிறது. அதாவது, அரசும், அரசு சாரா நிறுவனங்களும் தங்கள் குடிமக்களைக் கட்டுப்படுத்த ஒரே மாதிரியான கட்டாய வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன. இவை இரண்டும் ஒன்றையொன்று பிரதிபலிக்கும் பிரதிபலிப்புகள்தான். குறிப்பாக சர்வதேச சமூக ஆதரவு இருந்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு அதிக உணர்திறன் கொண்ட ஓர் அமைப்பாக மாறினால், அத்தகைய மனித உரிமை மீறல்களை கேள்விக்குள்ளாக்குவதை அவர்களின் மனித உரிமைகள் அமைப்பு மூலம் தொடங்கிப் படிப்படியாகச் செயற்பட முடியும்.

போராளிகளைப் பொறுத்தவரை, சித்திரவதை என்பது அவர்களின் முழுச் சர்வாதிகார அமைப்பின் ஒரு பகுதி மட்டுமே. முரண்நகையாக, அவர்கள் தங்கள் சொந்தச் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எதிராக இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்; அவர்கள் தங்கள் நலன்களுக்கு எதிராகச் செயற்படுவதாகக் கருதுகிறார்கள். சித்திரவதைக்கு எதிரான மாநாட்டை, நாடுகள் அங்கீகரிப்பதைப் போலவே, ஜெனீவா அழைப்பின்2 கீழ் கண்ணிவெடிகளுக்குச் செய்யப்பட்டுள்ளதைப் போல, அரசு சாராதவர்கள் மாநாட்டின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தங்கள் விருப்பத்தை அறிவிக்கக்கூடிய ஒரு பொறிமுறையை உருவாக்குவது கவனத்துக்குரிய ஒன்றாக இருக்கலாம். இது அவர்களுக்குச் சில அங்கீகாரங்களை வழங்கும். இவை அரசுகளால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும் என்றபோதும், இது சர்வதேச சமூகத்தின் பார்வையில் அரசு சாராத தரப்பினரை, அவர்களின் உடன்படிக்கைக்குக்குள் கட்டுப்படுத்தும்.

இலங்கையில், தகவல்களைப் பெறுவதற்கு அல்லது மனக் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு மயக்க மருந்துகள் (Sedatives) அல்லது ‘பொது மயக்க மருந்துகள்’ (General Anesthetics) போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவது என்பது, சித்திரவதை செய்பவர்களுடன் இணைந்து செயற்படும் மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கியதாக இருக்கும். அவர்களால் தடுப்புக் காவலில் உள்ள, காயமடைந்த, அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவோ, அல்லது முதலுதவி அளிக்கவோ முடியும். இதனால் (கைதிகள் மீதான) சித்திரவதைச் செயல்முறைகளைத் தொடரப் போதுமான அளவுக்கு அவர்கள் குணமடைவார்கள்.

2002 ஆம் ஆண்டு முதல் நடந்த சமாதான நடவடிக்கைகளின் போது, இலங்கையின் சித்திரவதை தொடர்பான சட்டம், நாட்டு நிலைமை என்பவற்றில் தற்காலிக முன்னேற்றத்தைக் காட்டியிருந்தது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும், அதாவது அரசும் அதன் கூட்டணியான  துணை இராணுவக் குழுக்களும் தமிழ்த் தரப்பில் புலிகளது அமைப்பும், தமது அரசியற் கைதிகள் மீது சித்திரவதையை வழக்கமாகப் பயன்படுத்தி வந்த நிலை, குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருந்தது. இருப்பினும் இது சாதாரண குற்றவியல் சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. இலங்கை அரசைப் பொறுத்தவரை, குற்றவாளிகளாக இருந்தாலும் சரி, நிரபராதிகளாக இருந்தாலும் சரி, எல்லாக் கைதிகளும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வழக்கமான நடைமுறையாக இருந்தது (டோனி, 1998). இருப்பினும், உண்மையான எதிரிகளாகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ கருதப்படும் வழக்குகளில், சித்திரவதை தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டது. இந்தக் குறைப்புக்கான பாராட்டு, சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் இயங்கிவரும் மனித உரிமை அமைப்புகளுக்கும், நீண்டகாலமாக சித்திரவதைக்கு எதிராகப் பிரசாரம் செய்து வரும் தனிநபர்களுக்கும் சேர வேண்டும். அர்ப்பணிப்புள்ள மனித உரிமை ஆர்வலர்களின் உயிர்கள் உட்பட, இதற்காகக் கொடுக்கப்பட்ட விலை மிகவும் அதிகமாக உள்ளது. இத்தகைய செயற்பாட்டு மாற்றத்தைக் கொண்டுவர நீண்டகாலம் எடுக்கும் என்றாலும், அதைச் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இருப்பினும், 2006 ஆம் ஆண்டு யுத்தம் மீண்டும் ஆரம்பித்தவுடன், சிறுபான்மைச் சமூகத்திற்கு எதிராக சித்திரவதை மீண்டும் பயன்படுத்தப்படத் தொடங்கிவிடுகிறது. ஆனால், இந்த முறை அதில் ஒரு கவனத்துக்குரிய மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது, முந்தைய காலங்களில், அரசியல் அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீதான சித்திரவதை நடைமுறை பரவலாகவும், கண்மூடித்தனமாகவும் பயன்படுத்தப்பட்டது. சமீபத்திய மாற்றத்துக்குப் பிறகு, சித்திரவதை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் தீவிரமாகச் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது நீதிக்குப் புறம்பான கொலைக்கு முன்னோடியாக இருந்தவர்களாக இருந்தனர். 2006 முதல் ‘இலங்கை தேசபக்த சட்டம்’ என்று அழைக்கப்படும்  புதிய சட்டங்கள் ஏராளமாக இருந்தாலும், சித்திரவதை, நீதிக்குப் புறம்பாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. டிசம்பர் 2006 இன் அவசரகால (பயங்கரவாதத்தைத் தடுத்தல், தடை செய்தல், குறிப்பிட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான) ஒழுங்குமுறை, பாராளுமன்றத்தால் மாதந்தோறும் புதுப்பிக்கப்படும் அவசரகால விதிமுறைகள், சமீபத்திய காவற்துறை அதிகாரங்கள் என்பவை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவர் பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுவதில்லை அல்லது குற்றம் சாட்டப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டவர்களது தடுப்புக்காவல் பெரும்பாலும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நீடிக்கப்படும். நடைமுறையில், தற்போதைய அரசியல் – சட்ட அமைப்பு, சித்திரவதை தொடர்பாக எத்தகைய புகார்களையும் செய்ய முடியாத வகையில் செயற்படுகிறது. இது பாதிக்கப்பட்டவரை மிகவும் கடினமானதும் ஆபத்தானதானதுமான நிலைக்குத் தள்ளுகிறது.

சித்திரவதையின் உட்தர்க்கம்

ஒரு தனிநபரின் உள்ளார்ந்த எதிர்ப்பு, கருத்தியல் அர்ப்பணிப்பு, அடையாளம், சுயமரியாதை அவரது ஆளுமை அனைத்தும், அவரது உடல், உள ரீதியான வலிகளால் ஏற்படும் நியாயமான கலவையால் திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்படுகின்றன (Baykai, Schlar & Kapken, 2004). இப்போதெல்லாம் போரில் ஒருதரப்பு அடிபணியும் வரை, எந்தவொரு தரப்பும் மற்றொன்றை நேரடியாக அழிப்பதில்லை. இது மனதளவிலான ஓர் உளவியல் போராக மாறி வருகிறது. பயமூட்டுதல் மூலமும் திகிலூட்டுவதன் மூலமும் உளவியல் ரீதியாக மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது, வற்புறுத்துதல், வலியுறுத்தல், பிரசாரம் என்பவை மூலம் செய்வதைவிட, எளிதானதாகவும் நேரடியானதாகவும் தோன்றுகிறது. அவை நுட்பமாக இருப்பதால், நீண்டகாலத்திற்கு மிகவும் பயனுள்ளவையாக இருக்கும். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த வன்முறையற்ற முறைகள் உண்மையில் வேலை செய்கின்றன என்பதை நம்புவதில்லை. அல்லது அதற்கான போதுமான பொறுமையைக் கொண்டிருப்பதில்லை. சித்திரவதையைத் தடுக்க வேண்டுமானால், நீண்டகாலத்திற்கு நிறுவனங்களையும், அரசாங்கங்களையும் நம்ப வைப்பதன் மூலம் மட்டுமே அதைச் சாத்தியமாக்க முடியும். ஆனால், சித்திரவதை நேரம், பணம், பணியாளர்கள் என்று நிர்வாகத்திற்கு அவை மிகவும் அதிக முதலீட்டைக் கோருகின்ற ஒரு வழிமுறை என்பதால், அது வருமானத்துடன் பொருந்தி வருவதும் இல்லை. சித்திரவதை என்பது இராணுவ இயந்திரத்தின் ஒரு பாரிய விலையுயர்ந்த பகுதியாகும். தவிரவும், உயிர் பிழைத்தவர்களை மிக அரிதாகவே, முழுமையாக இணங்க வைக்க முடிகிறது. அவர்கள் மனநலச் சிகிச்சை மீட்புக்கு ஏற்றவகையில் தமது ஆளுமையின் மையத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். சமூகமாக அடிபணியாது மிக்க உறுதியோடு எதிர்வினையாற்றுவது, இது போன்ற வேறுபல எதிர்ப்புகள் எல்லாவற்றையும் விட, (அதிகாரத் தரப்பிற்கு) மிகவும் தீங்கு விளைவிப்பவை மனித உரிமை அமைப்புகளால் சர்வதேச அளவில் செய்யப்படும் எதிர்ப்புப் பிரசாரங்கள் தான்.

சித்திரவதை முறைகளின் பரிணாம வளர்ச்சியில் பெரும்பாலும் ஒரு வரலாற்று வடிவத்தை அடையாளம் காண முடியும். உடல் ரீதியான அடிகள், எலும்பு முறிவுகள், இரத்தப்போக்கு, வடுக்கள் போன்ற கடுமையான உடல் காயங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும் பிற முரட்டுத்தனமான முறைகள் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது பொதுவாக காவல்துறையின் மிருகத்தனத்திலிருந்து உருவாகிறது. ஆனால் மிகவும் முறையான  அரசியல் நோக்கத்துடன் இது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு எதிராகக் குறிவைக்கப்படுகிறது. காலப்போக்கில், முறைகள் மிகவும் நுட்பமானதாகவும் மிகப் பொருத்தமானவையாகவும் மாறுகின்றன, வலி மிகவும் வேதனையானதுதான், ஆனால் அறிவியல் ரீதியாக எந்தவிதமான குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வடுக்களையும் அது விட்டு வைப்பதில்லை. சித்திரவதைச் சிந்தனைப் பள்ளிகள், நிபுணத்துவம், நுணுக்கமான தேர்ந்த கருவிகள், செயலாற்றும் திறமைகள், செயல்நுட்பங்கள் என்பவை உலகளாவிய நிகழ்வுகளாக மாறிவிட்டன. உதாரணமாக, இந்த நுட்பங்களின் தரவளர்ச்சி முதலில் இலங்கைப் பாதுகாப்புப் படைகளிடமும், பின்னர் இந்திய இராணுவத்திடமும், மிகவும் கவலைக்குரிய விதத்தில் பல்வேறு உள்ளூர்ப் போராளிகளிடமும் காணப்பட்டது. தற்போதைய முறைகள் மனித உரிமைகள் அமைப்புகளின் சித்திரவதைக்கான கணக்கெடுப்புகளுக்கு மிகவும் குறைந்தபட்ச ஆதாரங்களை மட்டுமே தரக்கூடிடிய அளவுக்கு மாறியுள்ளதால், அவற்றால் சொற்பமான விடயங்களே ஆவணப்படுத்தப்படுகின்றன. உள்ளூரில் பயன்படுத்தப்படும் ஒரு வினோதமான முறை ‘தர்மச்சக்கரம்’ என்று அழைக்கப்படுகிறது; அல்லது ஈரானில் உள்ள ‘Parrot Perch’ அல்லது ‘Jujuy Kebab’ (வறுத்த கோழி). அங்கு பாதிக்கப்பட்டவரின் மணிக்கட்டுகள் ஒன்றாகக் கட்டப்பட்டு, பின்னர் ஒரு வளைந்த நிலையில் அவர் தொங்கவிடப்படுகின்றார். இதனால் முழங்கைகளுக்கு முன்னால் உள்ள வளைந்த முழங்கால்களின் வளைவு வழியாக ஒரு கம்பம் செல்ல முடியும் (படம் 1 இனைப் பார்க்கவும். ஒரு கைதியால் வரையப்பட்ட படம் இது). இது விரைவாக ஒரு சக்கரம் போலச் சுற்றப்படுகையில் உடலில் கடுமையான வேதனை ஏற்படும் என்றாலும், அதற்காகக் காணக்கூடிய அடையாளங்களாக கைகளில் உள்ள சிராய்ப்புகள் மட்டுமே இருக்கும் (பெர்னாண்டோ, 2001).

படம் – 1: தர்மச்சக்கரம்

இது பெரும்பாலும் (கைதிக்கு) மனக்குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த நபரின் மனோரீதியான எதிர்ப்பைக் குறைக்கிறது. இதனால் இந்தச் செயன்முறைக்கு உள்ளாகுபவர்கள் அடிபணிந்து போவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த வகையான சித்திரவதைக்கு ‘தர்மச்சக்கரம்’ என்ற பௌத்த மத ஆன்மிகச் சொல்லை முரண்பாடாகப் பயன்படுத்துவது, உளவியல் ரீதியான ஒருவகை வெளிப்பாடாக அமைகிறது (குணசேகர, 2001).

கொழும்பு (சிவயோகன், 1993), வவுனியா (டோனி, 1998), மன்னார் (Association for Health and Counselling, 1989), யாழ்ப்பாணம் (மயூரேசன் & சிதம்பரநாதன், 2000), இலண்டன் (Peel, Mahtani, Hinshelwood & Forest, 2000) ஆகிய இடங்களில் நடந்த சித்திரவதைகளிலிருந்து தப்பியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து பெறப்பட்ட, இலங்கையில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான சித்திரவதை முறைகளின் மாதிரிகளை அட்டவணை – 1 காட்டுகிறது.

அட்டவணை – 1:

Physical Types of Torture in Sri Lanka

Colombo
N=69
Jaffna
N=21
Vavuniya
N=160
London
N=184
Torture typesNo%No%No%No%
Beating, kicking, striking with objects21(100)+
Trunk, limbs69(100)+
Head38(55)+
Genitalia8(12)+
Binding with rope67(97)4(19.5)+26
Suspension  from a bar36(52)20(95)+
Burning by lighted cigarette or hot objects8(12)16(76)+
Falanga – beating under the soles of the feet with rods18(26)+
Dry submarine – head covered with shopping bag tied round neck – petrol or chili powder introduced onto bag16(23)+
Wet submarine – submersion of head in water – often polluted water6(9)
Asphyxiation12(57)
Telefono – striking the victim’s ears12(17)+
Application of electricity8(12)3(14)+3
Forced to eat paper, burnt human flesh2(3)
Sexual assault2(3)+38(21)
Rape+11(5)
Pricking under nails with needles, extraction of nails4(6)5(23)+
Objects (wires, bottles) inserted into anus, vagina++

மேலுள்ள அட்டவணைக்கான விளக்கங்கள்:

கொழும்பு – Dr. சிவயோகன் (1993) அவர்களால் நடத்தப்பட்ட குடும்ப மறுவாழ்வு மையத்தின் (FRC) அகதி முகாமில் தங்கியிருந்த 69 பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய ஆய்வு.

யாழ்ப்பாணம் – சித்திரவதையில் இருந்து தப்பிய 21 பேர் பற்றிய, பல்கலைக்கழக III MBBS சமூக மருத்துவ ஆராய்ச்சிக்காக ஏ.பி. மயூரேசன், டி. சிதம்பரநாதன் (2000) ஆகியோரால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி. சிவஞானசுந்தரம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு, அவரது மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை. 

வவுனியா – டொக்டர் அன்னா டோனி (1996) மற்றும் அவரது மருத்துவ மாணவர்கள் குழு, 1988 ஆம் ஆண்டு வவுனியாவில் 160 முன்னாள் கைதிகளை ‘Association for Health and Counselling’ (சாந்தியம்) என்ற அமைப்பு மூலம் மதிப்பீடு செய்தது. அதன்படி, இராணுவ முகாம்களில், முக்கியமாகப் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அனைவரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

மன்னார் – அன்னா டோனி 1989 ஆம் ஆண்டு, மன்னார் மாவட்டத்தில் அதே ‘Association for Health and Counselling’  (சாந்தியம்) அமைப்பின் மூலம் செய்த ஆய்வில், 173 முன்னாள் கைதிகளைப் பற்றி ஆய்வு செய்ய அருட்தந்தை எஸ். டாமியன் முன்னதைப் போன்ற ஒரு மருத்துவ மாணவர் குழுவை வழிநடத்தினார். அவர்கள் எந்தச் சித்திரவதையின் வகைகளையோ அல்லது மருத்துவச் சிக்கல்களையோ பதிவு செய்யவில்லை.

இலண்டன் – இலண்டனில் உள்ள சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களின் பராமரிப்புக்கான மருத்துவ அறக்கட்டளையைச் சேர்ந்த எம். பீல், ஏ. மஹ்தானி, ஜி. ஹின்ஷெல்வுட் மற்றும் டி. ஃபாரஸ்ட் (2000) ஆகியோர் அறக்கட்டளைக்குப் பரிந்துரைக்கப்பட்ட 184 தமிழ் ஆண்கள் குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கைக்காக அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்தில் கவனம் செலுத்தினர். அதனால் அவர்கள் மற்ற வகையான சித்திரவதைகள் அல்லது பின்விளைவுகள் குறித்து குறிப்பாக அறிக்கை செய்யவில்லை.

உடல் ரீதியான சித்திரவதை முறைகள் காரணமாக, தலை, முதுகு, உள்ளங்கால்கள், கைகளில் ஏற்படும் மேற்பரப்புக் காயங்கள், குணப்படுத்தும் போது ஏற்படும் காயங்கள், நார்த்தன்மை கொண்ட தோல்கள், தசை, எலும்புக்கூடு போன்றவற்றின் வலிகளும் உடலியல் அறிகுறிகளும் மிகவும் பொதுவானவை. அதே போல் தலைவலி, தசைப் பதற்றம், மூச்சுத் திணறல், மார்பு வலி, முதுகு வலி போன்றவை மனநலம் சார்ந்த இயல்புடையவை. நேபாளத்தில் சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் பற்றிய ஆய்வில் (Ommerman and Others, 2001), அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தப் பாதிப்புக்கு (PTSD) (74%) அடுத்தபடியாக தொடர்ச்சியான உடல் சார்ந்த வலி போன்ற கோளாறுகள் (56%) என்பவை மிகவும் பொதுவான மனநலக் கோளாறுகளாகக் காணப்பட்டன. இலங்கையில் சித்திரவதையில் இருந்து தப்பியவர்களில் காணப்படும் பொதுவான உடல் பிரச்சினைகளும் உடலியல் புகார்களும் முறையே அட்டவணைகள் 2 & 3  என்பவற்றில் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை – 2: சித்திரவதைக்கு ஆளானவர்களில் உடல் ரீதியான சிக்கல்கள். 

Physical Problems in Torture Survivors

Colombo
N=69
Vavuniya
N=160
Common physical problemsNo%No%
Skin disease (scabies and ring worm)3089(56)
Arthralgia – Shoulder38(55)
Lower back32(46)
Other joints33(48)
Visual problems18(26)89(56)
Dental problems18(26)66(41)
Impaired hearing4(6)55(34)
Swollen, Painful soles & Heels8(12)11(7)
Coughing blood6(4)
Vomiting blood4(3)
Malunited fractures2(3)21(24)

சித்திரவதையின் உடல் ரீதியான முறைகள் உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன.

சித்திரவதையால் ஏற்படும் கடுமையானதும் நாட்பட்டதுமான வலி, உடலின் தோற்றத்தை சிதைக்க வழிவகுக்கும். பலர் தங்கள் மனதை, உடலிலிருந்து பிரிப்பதன் மூலம் உயிர்வாழக் கற்றுக்கொள்கிறார்கள். ஆழமாகவும் வேகமாகவும் மூச்சுவிடல் (Hyperventilation) ஒரு பயனுள்ள வழி ஆகும். இது இரத்தத்தின் காரத்தன்மையிலும் கல்சியத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இது விலகலை எளிதாக்குகிறது அல்லது மயக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த அல்கலோசிஸ் (Alcalosis), ஹைபோகால்சீமியா (Hypocalcemia) நிலைகள் பல உடல் அறிகுறிகளையும் அசாதாரண உணர்வுகளையும் ஏற்படுத்தும்.

அட்டவணை – 3:

Somatic Complaints in Torture Victims

Colombo
N=69
Vavuniya
N=160
Mannar
N=173
ComplaintsNo%No%No%
Headache466788(55)59(34)
Aches and Pains26(38)103(54)
Abdominal pain223220(23)34(20)
Chest pain18(26)103(64)129(72)
Dyspnoea2(3)115(66)
Excessive sweating74(40)107(62)
Numbness or Tingling sensation96(55)
Fainting and Giddiness12(17)15(9)120(69)
Palpitation138(80)
Physical inability25(15)
Tiredness16(23)139(86)
Loss of appetite2232110(69)94(54)
Loss of weight812126(79)

இலங்கையில் சித்திரவதைக்கான உளவியல் முறைகளில், தனிமைச் சிறை, சிறிய சுகாதாரமற்றதும் நெரிசலானதுமான இடங்களில் நீண்டகாலத்திற்கு அடைத்து வைத்தல், மற்றவர்களுடன், குறிப்பாக உறவினர்களுடன்3 தொடர்பு கொள்வதை, செய்தித்தாள்கள், வானொலி போன்றவற்றுக்கான வசதி ஆகியவற்றைத் தடுத்தல் (Incommunicado), தூக்கமின்மை, உணவுப் பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை, உடற்பயிற்சி இல்லாமை, தொடர்ச்சியாக ஒளியில் அல்லது இருளுக்குள் வைத்திருத்தல் என்று சுற்றுச்சூழலால் ஏற்படும் தூண்டுதல்களைக் குறைக்க இவ்வாறும், பிற வேறு வகைகளிலாலான புலன் இழப்புகளை ஏற்படுத்துதல் என்பவையும் அடங்கும். 

RCT அறிக்கையின்படி, “இழப்பின் போது பாதிக்கப்பட்டவர் அறிவாற்றல் தொந்தரவுகள், நேரம் மற்றும் இடத்தில் திசை திருப்பல், கவனம் செலுத்துவதில் சிரமம், நினைவாற்றல் குறைபாடு, பலவீனம், சோர்வு, ஊட்டச்சத்துக் குறைபாடு என்பவற்றுடன், தொற்றுநோய்கள், சில சந்தர்ப்பங்களில் மாயத்தோற்றங்களைக் காண்பது போன்ற மருட்சி நிலையுடன் கூடிய மனநோய் போன்றவற்றின் எதிர்வினைகளால் பாதிக்கப்படுதல், இவ்வாறு நீண்டகாலம் இருப்பதால் வரும் அடையாளங்காணல் பலவீனப்படுதல், உறுதியற்ற உணர்நிலை ஆகியவற்றைக் கொண்டவராக இருக்கலாம் (Ortman et al, 1987). உளவியல் நுட்பங்கள் பாதிக்கப்பட்டவர்களை கடுமையான அவமானங்களை அனுபவிக்க வைக்கின்றன. இது அவர்களின் கண்ணியத்தையும் அடையாளத்தையும் முற்றிலுமாக அழிக்கும்படி கட்டாயப்படுத்துகிறது (Ortman et al, 1987).” 

உளவியல் நுட்பங்களின் விளைவுகள் நீண்டகாலம் நீடிக்கக் கூடியவை. இலங்கையில் உளவியல் ரீதியான சித்திரவதை முறைகள் சில அட்டவணை 4 இல் காட்டப்பட்டுள்ளன.

அட்டவணை – 4:

Psychological Types of Torture in Sri Lanka

Colombo 
N=69
Jaffna
N=21
Vavuniya
N=160
Torture typesNo.%No.%
Verbal abuse21(100)+
Humiliation+
Blindfolding58(84)13(62)
Threat of more torture21(100)
Threat of death20(95)
Forced to witness torture of others46(67)19(90)+
Forced to witness killing of others8(12)+
Incommunicado+
Poor hygiene18(86)+
Sleep Deprivation16(76)+

இந்த முறைகள் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம், கண்ணியம் என்பவற்றின் மீதான ஆழமான தாக்குதல்களைக் குறிக்கின்றன. தவிரவும் குற்ற உணர்வு, பயம், சுயமரியாதை இழப்பு என்பவற்றுடன் தன்னைத் தானே பழிவாங்கும் இயல்பு ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. சித்திரவதை, சிறைவாசத்தின் போது பாதிக்கப்பட்டவரின் ஆக்கிரமிப்புகள் என்பவை தேவைக்கேற்ப உள்நோக்கித் திரும்புகின்றன. மேலும் உணர்ச்சிகள் போதுமான அளவு வெளிப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் இல்லாமலாகிறது. காலப்போக்கில், நிகழ்வுகள் ஓரளவு அடக்கப்படலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர் ஆளுமையின் தொடர்ச்சித்தன்மை உணர்வை இழந்துவிடுகிறார். சில அனுபவங்கள் ஆழ்ந்த அவமானங்களாக நினைவில் வைக்கப்படுகின்றன. சில அனுபவங்கள், பின்வருமாறு உளவியல் ரீதியாக முற்றிலுமாக உடைக்கலாம்:

திரு. என். என்பவர் 24 வயதுடைய ஒரு புத்திசாலி, அவர் தனது உயர்தரப் படிப்பை முடித்திருந்தார். தென்மராட்சியில் உள்ள தனது சொந்த ஊரிலிருந்து கடல் வழியாக இடம்பெயர்ந்தபோது அவர் கடற்படையிரால் பிடித்துச் செல்லப்பட்டார். அடுத்த ஆறு வருடங்களாக அவரது தாயார் அருகிலுள்ள அனைத்து இராணுவ, கடற்படை முகாம்களிலும் அவரைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் அவரைப் பற்றி எதுவும் தெரியாது என்று மறுத்துவந்தனர். பின்னர் அவர் நாட்டில் உள்ள அனைத்துச் சிறை முகாம்களுக்கும் சென்று தேடியதோடு, ஐ.சி.ஆர்.சி, மனித உரிமைகள் ஆணையம் முதலான பல அமைப்புகளுக்கும் சென்று புகார் அளித்தார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உண்மையில், அவரும் ஐ.சி.ஆர்.சி.யும் களுத்துறை சிறைச்சாலைகளுக்குச் சென்றிருந்த போதும் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, இந்த நாட்டில் காணாமல் போனவர்களின் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தாலும், தாய் தனது தேடலைக் கைவிட மறுத்துவிட்டார். விடுவிக்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் சந்தித்து, தனது மகனின் படத்தைக் காட்டி, அவர்கள் அவரைப் பார்த்தார்களா என்று விசாரிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இறுதியாக, வவுனியாவில், சமீபத்தில் களுத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு கைதி அந்தப் படத்தை அடையாளம் கண்டார். வவுனியாவில் உள்ள ஒரு மனித உரிமைகள் அமைப்பின் உதவியுடன், தாய் களுத்துறைச் சிறைக்குச் சென்றார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தனது மகன் அங்கு இருப்பதை அவரால் உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது. ஆயினும் சிறை அதிகாரிகள் அவரை விடுவிக்க மறுத்துவிட்டனர். அவர் பொலன்னறுவையில் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்ட ஓர் ஆபத்தான பயங்கரவாதி என்று அவர்கள் கூறினர். அவர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர். மனித உரிமைகள் அமைப்பினரின் மிகுந்த முயற்சிக்குப் பிறகு, (அரச தரப்பு) அவரை முதலில் கொழும்பிலும், பின்னர் பொலன்னறுவையிலும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, நீதிபதி, ‘என்’ இன் மனநிலையைக் கவனித்து, ஒரு நிபுணரிடம் மருத்துவ அறிக்கையைக் கேட்டிருந்தார். மருத்துவ அறிக்கையில், ‘என்’ சித்திரவதை காரணமாக மனநிலை பிறழ்ந்துள்ளார் என்று கண்டறியப்பட்டது. பின்னர் அவர் ரூ. 50,000 இழப்பீட்டுடன் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், விடுதலை உத்தரவுகளை வழங்க அரசு மறுத்துவிட்டது. விடுதலை உத்தரவுகளைப் பெற அந்த அமைப்பு மீண்டும் நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வழக்கை விசாரிக்கவோ, சித்திரவதை செய்தவர்களைக் கண்டுபிடிக்கவோ அல்லது ஏதாவது வகையில் தண்டிக்கவோ எந்த உத்தரவும் வழங்கப்படவில்லை. ஆயினும் அந்த அமைப்பு மீண்டும் நீதிமன்றத்துக்குச் சென்று அவரை விடுவித்தது. அவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, கிட்டத்தட்ட ஒரு குழந்தையைப் போல மிகவும் தயங்கினார். தாய் அவருக்கு உணவளித்து, ஒரு குழந்தையைப் போலக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர் அவளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; அவரால் பேச முடியவில்லை; அவரது நாக்கில் ஒரு பிளவு இருந்தது. அநேகமாக சித்திரவதை (மின்சாரம்?) காரணமாக அது ஏற்பட்டு இருக்கலாம். அவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்பட்டது. அவரது உடல் முழுவதும் பல வடுக்கள் இருந்தன. மனிதர்கள் எல்லோரிடமிருந்தும் அவரது தொடர்புகள் சுருங்கி, அவர்களிடமிருந்து ஒதுங்கியவராக, அவர் ஓர் உணர்வுமற்ற வெறும் உயிர் மட்டுமுள்ள உடல் போலவே இருந்தார். படிப்படியான மறுவாழ்வு, சிகிச்சை என்பவற்றால் அவர் ஓரளவு சுயநினைவுகளை மீண்டும் பெற்றுள்ளதுடன், தானே சாப்பிடவும், குடிக்கவும், பேசவும், தாயை அடையாளம் காணவும் ஆரம்பித்துள்ளார்.

பெரும்பாலான சித்திரவதையின் விளைவுகள், அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தத்தின் இயல்புகள், நோய்க்குறிகள் என்பவை தீவிரமான மனநோயால் பாதிக்கப்பட்ட நோயின் அறிகுறிகளை ஒத்தவை. நோயாளி சித்திரவதையை, மீண்டும் மீண்டும் தனது மனதுக்குள் ஊடுருவும் படங்களாகவோ அல்லது கனவுகளாகவோ அனுபவிப்பதாக  உணர்வது அவற்றின் முக்கிய அம்சமாகும்.

சித்திரவதையிலிருந்து விடுவிக்கப்பட்ட சில உயிர் பிழைத்தவர்கள், தூங்கப்போக அஞ்சுகிறார்கள். ஏனெனில் இது சித்திரவதைச் செயன்முறையை மீண்டும் அனுபவிக்க வழிவகுக்கும் என அவர்கள் உணருகிறார்கள். எனவே அவர்கள் தங்கள் தூக்கத்தை எதிர்த்துப் போராடுவார்கள். அவர்கள் தூங்கும்போது வரும் கனவுகளால், அலறிக்கொண்டே எழுந்திருப்பார்கள். இது வீட்டிலுள்ள மற்றவர்களை எழுப்பும். பின்வரும் வழக்கு வரலாறு (சோமசுந்தரம், 1998) இந்த அம்சங்களில் பலவற்றை விளக்குகிறது:

21 வயதான திரு. எஸ்.ஆர்., ஒரு பல்கலைக்கழக மாணவன். தொடர்ச்சியான கடுமையான தலைவலி, தலைச்சுற்றல், கவனம் செலுத்த இயலாமை, தசைக்கூட்டு வலி போன்ற புகார்களுடன் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தார். மனநிலை சம்பந்தமான பரிசோதனையில், அவர் மிகுந்த பதற்றமாகவும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவராகவும் இருப்பது கண்டறியப்பட்டது. திருகோணமலை, பூசா ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு பொலிஸ், இராணுவ, கடற்படை முகாம்களில் மொத்தம் எட்டு மாதங்களுக்கும் மேலாக அவர் இரண்டு முறை தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் நன்றாகச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். இதில், ஏராளமான பிற கைதிகளுடன் சிறிய அறைகளில் கூட்டமாக அடைக்கப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டது, மயக்கமடையுமளவுக்கு சப்பாத்து, இரும்பு, ‘பெல்ற்’, தடி என்பவற்றால் தாக்கப்பட்டும் மற்றும் மரக்கட்டைகள், முடிச்சுப் போடப்பட்ட கம்பிகள், துப்பாக்கிகள் என்பவற்றால் தலை, முகம், விரல் மூட்டுகள், தோள்கள், இடுப்பு, முழங்கால்களில் எஸ்-லோன் குழாய்களால் உதைக்கப்பட்டும் மயக்கமடைந்திருந்தார். தலைகீழாக நீண்ட நேரம் அமர்ந்த நிலையில் தொங்கவிடப்பட்டிருந்தார்: அவருக்கு உணவோ தண்ணீரோ வழங்கப்படாமல் வாட்டியதோடு, இரத்தக் கறை படிந்த துணிகளையும் மிளகாயையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்தனர்; அத்துடன், தனது சொந்தச் சிறுநீரையே நக்குமாறும் அவர் வற்புறுத்தப்பட்டார். இந்தச் சித்திரவதைகளின் விளைவாக அவருக்கு அடிக்கடி உதடுகளில் இரத்தம் கசிந்து முகம் வீங்கி இருந்தது. அல்லது இரண்டு கால்களும் வீங்கி வலியுடன் நடக்க முடியாமல் போனது. மற்றையக் கைதிகளால் இழுத்துச் செல்லப்பட வேண்டியிருந்தது. விடுதலையான பிறகு அவர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார், ஆனால் அவருக்குப் படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருந்தது. திரும்பத் திரும்ப நடந்த சித்திரவதை அனுபவங்களினால் ஏற்பட்ட பீதி உணர்வுகள் ஊடுருவும் படங்களாக மீண்டும் மீண்டும் வருவது (வாய் வறட்சி, வியர்வை, திகில், படபடப்பு, தலைச்சுற்றல் – அவர் தனது அனுபவங்களை விவரிக்கும் போது பெரும்பாலும் சுயநினைவை இழந்தார்) அடிக்கடி நிகழ்ந்தது. இந்தப் படங்களும் மற்றும் நினைவுகளும் குறிப்பாக அவரது முந்தைய அனுபவங்களை ஒத்த அல்லது அவற்றை நினைவூட்டும் காட்சிகளாக அமைந்தன. உதாரணமாக, பல்கலைக்கழகத்தில் உள்ள முள்வேலி, மின்விசிறியை இணைக்கும் வெள்ளை மின் கம்பி, சில உணவுகள் (பாண் அல்லது பருப்பு) போன்றவை; பிற்பகல் 2 மணி போன்ற நேரங்களில் அவர்களுக்கு வழக்கமாக பூசாவில் உணவு வழங்கப்படுதல், விடியற்காலையில் அவர்கள் (கை, கால்) கழுவுவதற்காக வெளியே அழைத்துச் செல்லப்படுதல், அவர் கைது செய்யப்பட்ட ஆண்டுவிழாவில் சுற்றி வளைப்பு, சோதனைச் சாவடிகள், சண்டை, பதற்றம், துப்பாக்கிச் சூடு அல்லது ஷெல் தாக்குதல் போன்ற இராணுவ நடவடிக்கைகள் போன்ற காட்சிகள்.

இது போன்ற தூண்டுதல்கள், நிகழ்வுகள் அல்லது நினைவூட்டல்களைத் தவிர்க்க அவர் தீவிரமாக முயன்றார். ஆனால் அவரது எதிர்க்கும் அனைத்து முயற்சிகளையும் மீறி, இந்த நினைவுகளும் படங்களும் மீண்டும் மீண்டும் ஊடுருவி கடுமையான உணர்ச்சி எழுச்சியை (முக்கியமாகப் பதற்றம்) ஏற்படுத்துகின்றன. அவர் அடிக்கடி குழம்பும் தூக்கத்துக்கு உள்ளாவதும், இரவில் பயங்கரமான பயத்துடன் எழுந்து அலறுவதும், வீட்டில் உள்ள அனைவரையும் எழுப்புவதும் நிகழ்ந்தன. ஆழ்ந்த, வேதனையான துக்கம், தனிமை உணர்வு, உணர்வற்ற அல்லது செயலிழந்த நிலை, எதிர்காலத்தில் நம்பிக்கை இழத்தல், தான் இறுதி நிலையை அடைந்துவிட்டதாக நினைத்துத் தற்கொலை எண்ணங்களுக்கு வருதல் போன்றவற்றால் நீண்டகாலமாக மனச்சோர்வடைந்திருந்தார். பயம், பாதுகாப்பின்மை உணர்வு என்பவை எப்போதும் அவரைச் சுற்றி இருந்தன. சிறிய விஷயத்திற்கும் கோபப்படும் போக்கு; சில சமயங்களில் மிகவும் வன்முறையாக மாறுதல், பொருட்களை உடைத்தல். மற்றப் பல்கலைக்கழக மாணவர்களுடன் பழகுவது அல்லது தனது சொந்தக் குடும்பத்துடன் கூடக் கலப்பது என்பவற்றில் அவர் சிரமங்களை எதிர்கொண்டார். ஆனால் இவையெல்லாவற்றுக்கும் மாறாக அவர் ஒரு வலுவான சமூக சேவை உணர்வை வளர்த்துக் கொண்டிருந்தார், மற்றவர்களுக்கு உதவவும் சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கவும் விரும்பினார். அவர் மூன்று முறை இரத்ததானம் செய்தார். நேரம், சிகிச்சை மற்றும் ஆலோசனை என்பவற்றின் மூலம் படிப்படியாகக் குணமடைந்தார். ஆனால் அவரது முந்தைய கைது அல்லது அனுபவத்தை ஒத்த நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் ஏற்படும் போது அவரது அறிகுறிகள் மோசமடைந்து, அவரது நிலை பழைய பதற்றம் மற்றும் மனச்சோர்வுக்குத் திரும்பி, பழைய நினைவுகள், சித்திரவதை என்பன இராக்காலப் பயங்கரங்களின் காட்சிகளுடன் மீண்டும் மீண்டும் வருகின்றன.

சித்திரவதைக்குப் பிறகு அதிர்ச்சிக்குப் பின்னான மன அழுத்தப் பாதிப்பு என்பது (PTSD) பொதுவானது. ஒருவேளை இந்தப் பாதிப்பு 80% பேருக்குக் கண்டறியக்கூடியதாக இருக்கலாம் (டோனி, 1998). மன அழுத்தத்துக்குப் பின்னான உடல்ரீதியான வலிகள் (Somatization), பதற்றம், மனச்சோர்வு போன்ற இணை நோய்கள் பொதுவானவை. ஆனால் இதற்கு மேலாக, பலர் ஆளுமை அழிவு, உலகத்தின் மீதான ஆழ்ந்த சந்தேகம், அவநம்பிக்கை, கடுமையான சமூக ஒதுக்கம், பலவீனமான சமூக நடவடிக்கைகள் ஆகியவற்றின் அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். கடுமையான பயம், சித்திரவதையை மீண்டும் அனுபவிக்கத் தூண்டும் எந்தவொரு தூண்டுதல்களையும் தவிர்ப்பது, கனவுகள், இரவுக்கான பயங்கரங்களால் தூக்கக் கலக்கம், நினைவாற்றல் குறைபாடு ஆகியவை அடிக்கடி ஏற்படும் அறிகுறிகளாகும். இலங்கையில் சித்திரவதையில் இருந்து தப்பியவர்களில் காணப்படும் அறிகுறிகள் அட்டவணை 5 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை – 5:

Psychological Signs & Symptoms Following Torture

Colombo
N=69
Jaffna
N=21
Vavuniya
N=160
Mannar
N=173
London
N=184
Signs and symptomsNo.%No.%No.%No.%No.%
Recurrent intrusive memories21(100)128(80)63(36)
Intensification of symptoms by symbolic association with trauma19108(68)
Memory impairment6(9)14125(78)
Poor concentration+16(78)87(50)
Extreme fear63(91)106(66)76(44)
Low Self – esteem92(59)
Sleep disturbance243512(57)73(42)+
Frequent dreams1975(43)
Nightmares12(17)15(71)91(56)81(47)+
Extreme mistrust & Suspiciousness80(50)12(6)
Irritability & Aggressiveness32(46)1374(40)38(22)+
Change in ideology28(16)
Suicidal thoughts5(24)61(38)18(10)
Suicidal attempts2(10)1(6)8(5)
Social withdrawal+7(33)61(38)33(19)
Crying48(30)
Sadness18139(87)+
Sexual dysfunction+(50)40(25)11(6)

Psychiatric Sequelae in Torture Survivors

Colombo
N=69
Jaffna
N=21
Vavuniya
N=160
Mannar
N= 173
Psychiatric DisorderNo.%No.%No.%No.%
Depression466716(76)(69)14(8)
Anxiety314512(57)(66)89(51)
Post-traumatic stress disorder (PTSD)18(85)137(86)1810
Phobia (Blood, Security forces, etc.)4614++

தொடரும். 



About the Author

எஸ்.கே. விக்னேஸ்வரன்

எஸ்.கே. விக்னேஸ்வரன், எழுபதுகளின் பிற்கூறுகளில் சிறுகதை எழுத்தாளராக ஈழத்தின் எழுத்துத்துறைக்குள் அறிமுகமானவர். வடமராட்சியிலுள்ள அம்பன் கிராமத்தைச் சேர்ந்த இவர், சிறுகதைகள், கவிதைகள் எழுதுவதுடன் மட்டுமன்றி, இலக்கியம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதிலும், ஆங்கிலத்தில் வரும் முக்கியமான எழுத்துகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதிலும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் இயங்கி வருபவர். தொண்ணூறுகளில் கொழும்பிலிருந்து வெளியான ‘சரிநிகர்’ வாரப்பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், பின்னர் கனடாவில் வெளியான ‘தீபம்’ வாரப்பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டு வந்தவர். சரிநிகரில் தொடராக வெளிவந்த அவரது மொழிபெயர்ப்பு நூலான ‘குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற பெற்றோருக்கான வழிகாட்டிநூல் இன்றுவரை பல பதிப்புகளைக் கண்டுள்ளது. இப்போது தாய்வீடு இதழில் அவரது ‘பதின்ம வயதினருக்கும் உங்களுக்கும் இடையே’ என்ற இன்னொரு மொழிபெயர்ப்பு நூல் தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சரிநிகரில் வெளிவந்து பாதியில் நின்றுபோன மொழிபெயர்ப்பு நூலான, ‘தலைமறைவு வாழ்க்கை’ என்ற, மறைந்த மதிப்புக்குரிய றெஜி சிறிவர்த்தன அவர்களது நூல், அண்மையில் வெளியாகியுள்ளது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் (MBA) பட்டம்பெற்ற இவர் இப்போது கனடாவில் வசித்து வருகிறார்

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்