உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2
slide-1
slide-2
slide-3
Slide - 4
previous arrow
next arrow
Arts
14 நிமிட வாசிப்பு

உள்ளகச் சுயநிர்ணய உரிமை குறித்து மேற்கு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் பின்தொடரப்பட்ட கோட்பாட்டு அணுகுமுறைகள் – பகுதி 2

January 13, 2026 | Ezhuna

இலங்கையின் சட்டத்துறை அறிஞர்களும், அரசியல் விஞ்ஞானிகளும் இலங்கையின் அரசியல் யாப்புகள் பற்றிய அடிப்படைப் பிரச்சினைகள் (Core Issues) பற்றிய உயராய்வுகள் பலவற்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளனர். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்த மூன்று அரசியல் யாப்புகள் பற்றியும், இம்மூன்று அரசியல் யாப்புகளுக்கும் கொண்டுவரப்பட்ட யாப்புத் திருத்தங்கள் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புகள் பற்றியும் இவ் உயராய்வுகளில் விரிவாக அலசப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில் உள்ளடங்கிய பெறுமதிமிக்க கருத்துகளைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதே ‘அரசியல் யாப்புச் சிந்தனைகள்’ என்னும் இத்தொடரின் நோக்கமாகும். 

ஆங்கில மூலம்: கலன சேனரத்தின

ஐரோப்பாவின் 35 நாடுகள் ஒன்று கூடி 1975 ஆம் ஆண்டில் ஹெல்சிங்கி நகரில் ‘Helsinki Final Act’ எனப்படும் ஆவணத்தை இயற்றின. ஐரோப்பாவின் பாதுகாப்பும் கூட்டுறவும் பற்றிய (Conference on Security and Cooperation in Europe) அம்மாநாடு ‘CSCE’ என்ற சுருக்க எழுத்தால் அழைக்கப்படும். ‘CSCE’ இயற்றிய மேற்படி ஆவணம் ஐக்கிய நாடுகள் தாபனத்தின் சாசனத்தில் கூறப்பட்ட ‘Peoples’ என்ற சொல்லை உபயோகித்ததோடு, ‘Equal Rights and Determination of Peoples’ என்னும் தொடரைப் பயன்படுத்தி உள்ளகச் சுயநிர்ணயம் எல்லா மக்களுக்கும் (All Peoples) எல்லாச் சந்தர்ப்பங்களிலும் (Always) உரித்தான ஒன்று எனவும், மக்கள் வெளியகத் தலையீடுகள் இன்றித் தமது உள்ளக, வெளியக அரசியல் அந்தஸ்தைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை உடையவர்கள் என்றும், அம்மக்கள் தமது அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு வளர்ச்சியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் உரிமை உடையவர்கள் எனவும் குறிப்பிட்டது. ‘CSCE’ ஆவணத்தின் தத்துவம் ‘VIII’ இல் (PRINCIPLE VIII) பொதிந்துள்ள கருத்துகள் ஐ.நா. தாபனத்தின் ‘ICCPR’ சாசனத்தை எதிரொலிப்பனவாய் அமைந்தன. அதனைக் கலன சேனரத்தின அவர்கள் தனது நூலின் 131 ஆம் பக்கத்தில் மேற்கோளாகத் தந்துள்ளார்.

“By virtue of the principle of equal rights and self – determination of peoples, all peoples always have the right in full freedom, to determine, when and as they wish, their internal and external political status, without external interference, and to pursue as they wish the political, economic, social and cultural development (Helsinki Final Act – Principle VIII).”

ஐரோப்பிய நாடுகளாலும், நிறுவனங்களாலும் சமகாலத்தில் வெளியிடப்பட்ட ஆவணங்களில் ‘CSCE’ ஆவணம் ஐ.நா சாசனத்திற்கு மிக நெருங்கியதாக, உள்ளகச் சுயநிர்ணய உரிமையை ஐ.நா சாசனத்தின் மொழியையும் சொற்தொடர்களையும் (Language and Terminology) உபயோகித்து எடுத்துச் சொல்லுவதாக அமைந்தது எனப் பலரும் சுட்டிக்காட்டியதை கலன சேனரத்தின குறிப்பிடுகிறார். “The above paragraph has made the Helsinki final act one of the most celebrated documents in the scholarship on internal self determination. It was considered to be significantly expanding the scope of self determination. Cassese argued: It gives a definition of self determination that breaks new ground in international relations by embodying the idea that self determination means a permanent possibility for a people to choose a new social or political regime, to adapt the social or political structure to new demands (பக். 131 – 132).”

மேற்படி கூற்றில் உள்ள முக்கிய கருத்துகளை கீழே தந்துள்ளோம். 

  • உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிய புலமைசார் உரையாடலுக்கு இதுவோர் மகத்தான பங்களிப்பு.
  • உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிய இந்த வரையறை அதன் நோக்கெல்லையை விரிவாக்கியுள்ளது. 
  • சர்வதேச உறவுகளில் உள்ளகச் சுயநிர்ணயம் பற்றிய இந்த வரையறை சிறுபான்மை மக்களுக்குப் புதிய சாத்தியப்பாடுகளைத் தேடுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துள்ளது. 
  • சிறுபான்மை மக்கள் தமது அரசியல், பொருளாதார, சமூக பண்பாட்டு தலைவிதியை தாமே தீர்மானித்துக் கொள்வதற்கான சமூக, அரசியல் கட்டமைப்புகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது. 

‘CSCE’ போன்ற ஆவணங்கள் ஐ.நா சாசனத்தில் (UN Charter) கூறப்பட்ட உரிமைகளைப் பற்றிய உணர்வெழுச்சி மிக்க விவாதங்களைத் தூண்டி உள்ளகச் சுயநிர்ணய உரிமை என்னும் விடயத்தை உயிர்ப்புடைய தத்துவமாக ஆக்கின என்பதே நாம் இவ்விடத்துக் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் ஆகும். ஆயினும் மேற்கு நாடுகள் உள்ளகச் சுயநிர்ணம் பற்றிப் பேசும் அதேசமயம், நாடுகளின் இறைமையையும் அவற்றின் புவியியல் பிரதேசம்சார் இறையாண்மையையும் (Sovereignty and Territorial Integrity) வலியுறுத்தி வந்தன. இது அரசுகளின் இறைமையை (State Sovereignty) உள்ளகச் சுயநிர்ணய உரிமையுடன் இணைத்துச் சமன் செய்யும் ஒரு முயற்சியாகவே அமைந்தது. குறிப்பாக ஐரோப்பா உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருவியை உபயோகித்து நாடுகளைத் துண்டங்களாக்குவதை (Fragmentation) விரும்பவில்லை என்பதே யதார்த்த நிலையாகும். 

‘CSCE’ ஆவணத்தில், அரசுகளின் பிரதேச ஒருமைப்பாடு (Territorial Integrity of States), உள்ளக விவகாரங்களில் தலையிடாமை (Non Intervention in Internal Affairs) ஆகிய சொற்தொடர்கள் இடம்பெறுவதைக் காணலாம். இச்சொற்தொடர்கள் அரசுகளின் இறைமை (Sovereignty of States) விட்டுக்கொடுக்க முடியாத விடயம் என்பதை அழுத்திக் கூறுவன என்பது கவனத்தில் இருத்த வேண்டியதாகும். நூலின் 127 முதல் 133 ஆம் பக்கம் வரை உள்ள பகுதியில் கலன சேனரத்தின முன்வைக்கும் சுவாரசியமான உரையாடல் மேற்கு நாடுகள் உள்ளகச் சுயநிர்ணய உரிமையை ஒரு தனித்துவம் மிக்க எண்ணக்கருவாக வடிவமைப்பதற்கு உதவியதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதனை அடுத்து, கலன சேனரத்தின அவர்கள் ‘உள்ளகச் சுயநிர்ணயமும் மூன்றாம் உலகும்’ (Internal Self Determination and The Third World) என்னும் விடயம் குறித்த விவாதத்திற்கு வாசகர்களை அழைத்துச் செல்கிறார் (பக். 133 – 144). 

உள்ளகச் சுயநிர்ணயமும் மூன்றாம் உலகும்

மூன்றாம் உலக நாடுகளுக்குள் ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகி வரும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும், சமூகக் குழுக்களுக்கும் உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கம் ஏதாவது வகையில் நம்பிக்கை தரும் ஒரு தத்துவ உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதா? சர்வதேசச் சட்ட நிபுணர்கள் இக்கருத்தாக்கம் பற்றிக் கூறுவதென்ன? என்பன இவ்விடத்தில் நாம் கேட்க வேண்டிய வினாக்களாக உள்ளன. உண்மையில் கலன சேனரத்தின இந்த வினாக்களுக்கான விடை தரும் முறையிலேயே ‘உள்ளகச் சுயநிர்ணயமும் மூன்றாம் உலகும்’ (Internal Self Determination and The Third World) என்னும் பகுதியிலும், அதனை அடுத்து வரும் ‘உள்ளகச் சுயநிர்ணயத்திற்கு ஆதரவு கொடுத்தல்’ (Supporting Internal Self Determination) என்ற பகுதியிலும் தம் வாதங்களை முன்வைக்கிறார். அவரது பகுப்பாய்வை உற்றுநோக்கும் போது பின்வரும் வினாக்களிற்கான விளக்கங்களும், மேலதிக தேடலுக்கான தரவுகளும் கிடைக்கும். 

  1. முரண்பாடுகள் முற்றிய சூழமைவுகளில் (Conflict Situations) சிக்கியிருக்கும் சிறுபான்மைத் தேசிய இனக்குழுக்களுக்கும், சமூகக்குழுக்களுக்கும் உள்ளகச் சுயநிர்ணயம் பொருத்தமுடைய கருத்தாக்கமா? அதன் பொருத்தப்பாடு (Relevance) என்ன? அல்லது அது பொருத்தமற்ற ஒரு கருத்தாக்கமா?
  2. தமது நாடுகளின் பிரதேச எல்லைகளுக்குள் (Territorial Limits) உச்ச அளவிலான சுயாட்சியைக் (Greater Autonomy) கோரிப் போராடி வரும் மக்களுக்கு (Peoples) உள்ளகச் சுயநிர்ணயம் ஏதாவது வகையில் உதவக்கூடியதா?
  3. உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கத்தின் வரலாறும், அதுசார்ந்த கோட்பாடுகளும் எமக்கு ஏதாவது பயனுடைய பாடங்களைச் சொல்லித் தருகின்றனவா? உள்ளகச் சுயநிர்ணயத்தை நடைமுறைப்படுத்திய அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடங்கள் எவை?

மேற்படி வினாக்களுடன் ஆரம்பிக்கும் நுண்வாசிப்பு இந்நூல் பற்றிய ஒரு நடுநிலையான விமர்சன மதிப்பீட்டை நாம் செய்து கொள்ள உதவும் என நம்புகிறோம்.

காலனியம் விட்டுச் சென்றவை

மூன்றாம் உலக நாடுகள் வெளியகச் சுயநிர்ணயம் (External Self – Determination) என்ற கருத்தாக்கத்தில் கூடிய நம்பிக்கையை தெரிவித்ததை இக்கட்டுரையின் முற்பகுதியில் எடுத்துக் கூறியுள்ளோம். காலனிய அடிமை நாடுகளாக இருந்த மூன்றாம் உலக நாடுகள் இவ்விதம் சிந்தித்தது இயல்பானதே எனவும் இது ஒரு ‘Colonial Legacy’ எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். காலனியம் மூன்றாம் உலக மக்களுக்கு அரசியல், பொருளாதார விடுதலையை மறுத்தது. இக்காரணத்தினால் அந்நாடுகளுக்குச் சுதந்திரம் என்பது காலனியத்திற்கு எதிரான வெளியகச் சுயநிர்ணயத்தைக் கோரும் போராட்டமாகவே இருந்திருக்க முடியும். அரசியல் விடுதலை என்பது அந்நிய அரசாங்கம் ஒன்றின் அதிகாரத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெறுவதையே குறிக்கின்றது (Political freedom referred to the complete and absolute independence from the control of any foreign government).

புதிய உலகை உருவாக்குதல்

தத்தம் நாடுகளின் விடுதலைக்காகப் போராடிய மூன்றாம் உலக நாடுகள் தாம் கூட்டாகப் புதியதொரு உலகத்தைச் சிருஷ்டிக்கும் செயல்திட்டத்தின் (A Project of World Making) பங்காளிகளாக இருப்பதையும் உணர்ந்தன. அந்நாடுகளின் அரசியல் தலைவர்கள் இவ்வாறான இலட்சிய நோக்கை விடுதலைப் போராட்டத்தின் ஊடாக வழங்கினர். 

மூன்றாம் உலக நாடுகள் புதிய உலக ஒழுங்குக்கான அரசியல் பொருளாதார சட்ட நிறுவனங்களை (The Political Economic and Juridical Institutions) உருவாக்க ஆரம்பித்தன. இந்த நிறுவனக் கட்டமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளை ஆக்கிரமிப்பு ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிடும் என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டது. இக்காரணங்களால், மூன்றாம் உலக நாடுகள் வெளியகச் சுயநிர்ணயம் (External Self Determination) அத்தியாவசியமான தேவை என்பதை உணர்ந்தன. இப்பின்னணியில்தான் 1960 ஆம் ஆண்டு ஐ.நா. தாபனம் ‘காலனிய நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்குவதற்கான பிரகடனத்தை’ (1960 Declaration on the Granting of Independence to Colonial Countries and Peoples) வெளியிட்டது. இப்பிரகடனம் மூன்றாம் உலக நாடுகளின் அபிலாசைகளையும், அந்நாடுகளின் சுதந்திர தாகத்தையும், காலனியத்தின் முடிவை விரைவில் அடைய வேண்டும் என்ற வேட்கையையும், உறுதியையும் வெளிப்படுத்தியது. குறிப்பிட்ட சில பகுதிகளில் மக்கள் அரசியல், பொருளாதார நிலைகளிலும், சமூக வளர்ச்சியிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களாய் இருக்கிறார்கள் என்றும், அதனால், அவர்கள் சுதந்திரத்தைப் பெறுவதற்குரிய பக்குவத்தை இன்னும் அடையவில்லை என்றும் சாக்குப்போக்குகளைக் கூறி அப்பகுதி மக்களின் சுதந்திரத்தைத் தாமதம் செய்வதைக் கண்டிப்பதாக இப்பிரகடனம் அமைந்தது. ஆகையால், 1960 பிரகடனம் ஐ.நா. தாபனத்தின் உறுப்பு நாடுகளாக அக்காலத்தில் விளங்கிய மூன்றாம் உலக நாடுகளின் பிரதிநிதிகளின் சிந்தையில் உருவான பிரகடனம் ஆகும் (A Brainchild of the Third World Membership at the UN). இப்பிரகடனம் ஒரு சிக்கலற்ற தெளிவான செய்தியைத்தான் கூறியது எனலாம். சுயநிர்ணயம் எமது உரிமை. நாட்டின் புவியியல் எல்லைக்குள் வாழும் அனைத்து மக்களும் (The Entire Population) இச்சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கும் உரித்துடைய மக்கள் (Peoples) ஆவர். காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெறுதல் இவ்வனைத்து மக்களினதும் வேட்கையாகும். 

1960களில் சுயநிர்ணயம் என்ற கருத்தாக்கம் மேலே குறிப்பிட்ட கருத்தியல் வடிவத்தைப் பெற்றமை ஒரு முக்கியமான திருப்பப் புள்ளியாகும். இந்தப் புள்ளியில் இருந்து அடுத்த விபரீதமான விளக்கம் என்ற புள்ளிக்கு நகர்ந்தமை தர்க்கரீதியான செயல்முறையாக ஆகியது. உதாரணமாக இந்தியா ‘ICCPR’ இனை ஏற்றுக்கொண்ட போது பின்வரும் கருத்தை முன்வைத்தது. ‘வெளியகச் சுயநிர்ணய உரிமையை காலனியத்தில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா போன்ற நாடுகளுக்குப் பிரயோகிக்க முடியாது. அவை இறைமையுள்ள சுதந்திர அரசுகள் (Sovereign Independent States). அவ்வரசுகளுக்கு உட்பட்ட எந்தச் சமூகமோ, மக்களோ வெளியகச் சுயநிர்ணயத்தைக் கோர முடியாது.’ 

இந்தியாவின் இந்த வாதத்தில் அரசுகளின் இறைமையும், புவியியல் பிரதேசம்சார் இறையாண்மையும் (Sovereignty and Territorial Integrity of States) என்ற கருத்து தூக்கலாக முன்நிற்பதைக் காணலாம். சனத்தொகையில் மிகப்பெரிய தேசமான சீனாவும் சுயநிர்ணயம் என்பதை இக்குறுகிய அர்த்தத்திலேயே விளக்கிக் கூறிவந்தது. கோசோவின் விடுதலைப் பிரகடனத்தை சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. சர்வதேச நீதிமன்றத்திற்கு அனுப்பிய அறிக்கை ஒன்றில் இப்பிரகடனத்தை கடுமையான வார்த்தைகளை உபயோகித்து சீனா கண்டித்தது. உலகம் முழுமையாகக் காலனியத்தில் இருந்து விடுதலை பெற்ற பின்பும் சுயநிர்ணயம் (Self Determination) என்ற மரபுவழிப்பட்ட கருத்தில் துளியளவு மாற்றமும் ஏற்படவில்லை என்பதே சீனாவின் நிலைப்பாடாகும். கலன சேனரத்தின சீனாவின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு விளக்கிக் கூறுகிறார்.

“Self determination is one thing and one thing alone: The right to independence from colonial and foreign domination. There cannot be, in China’s view, anything called internal self determination in international law (பக். 136).”

இக்கூற்றின் பொருள்: “சுயநிர்ணயம் என்றால் அதற்கு ஒரே ஒரு அர்த்தம்தான் உள்ளது. காலனிய ஆதிக்கத்தில் இருந்தும் அந்நிய ஆதிக்கத்தில் இருந்தும் விடுதலை பெறும் உரிமையைத்தான் அது குறிக்கிறது. சீனாவின் கருத்துப்படி உள்ளகச் சுயநிர்ணயம் எனப்படும் விடயத்தில் சர்வதேசச் சட்டத்தில் துளியளவும் இடம்  கிடையாது.” 

ஓர் அரசின் எல்லைக்குள் உப அரசுகளை உடைய மக்கள் குழுக்கள் (Sub – State Groups) இருப்பதோ அவை சுயநிர்ணய உரிமையைக் கோருவதே சீனாவின் நோக்கில் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

ஜனநாயகமும் உள்ளகச் சுயநிர்ணய உரிமையும்

மூன்றாம் உலகம் வெளியகச் சுயநிர்ணய உரிமையை ஆதரித்து வந்தது. இதனை ஆதரித்து வந்தமைக்கான வலுவான காரணங்கள் இருந்தன. மூன்றாம் உலக நாடுகள் வெளியகச் சுயநிர்ணயத்தை ஆதரித்த அதேவேளை உள்ளகச் சுயநிர்ணயம் என்பதைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. மேற்குலகால் ஆதரிக்கப்பட்ட உள்ளகச் சுயநிர்ணயம் மூன்றாம் உலகால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டதற்கும் வலுவான காரணங்கள் இருந்தன.

உள்ளகச் சுயநிர்ணய உரிமை என்ற கருத்து தொடக்கத்தில் இருந்தே ஜனநாயகம் என்ற கருத்துடன் நெருங்கிய பிணைப்பை உடையதாக இருந்தது. ஜனநாயகம் மக்களின் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்வது. உதாரணமாக மக்களிற்கு வாக்குரிமையை வழங்கல், தேர்தல்களை நடத்துதல், பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பன மக்களின் சுதந்திரங்களை விரிவாக்கம் செய்வன. ஆகையால், உள்ளகச் சுயநிர்ணய உரிமை அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரானது என்ற வகையில் வெளியகச் சுயநிர்ணயத்தோடு தொடர்புடையது. உள்ளகச் சுயநிர்ணயத்தின் இலக்குகளை அடைவதற்கு அந்நியர் ஆட்சி தடையாக அமையும் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆயினும், உள்ளகச் சுயநிர்ணயம் என்ற கருத்துக்கு இன்னொரு பக்கமும் இருந்தது. காலனியத்தின் ஆதிக்கத்தில் இருந்து மூன்றாம் உலக நாடுகள் விடுதலை பெற்ற பின்னரும், உள்ளகச் சுயநிர்ணய உரிமை மறுக்கப்படுவதாகக் காரணம் காட்டி அந்நிய நாடுகள் தலையீடு செய்யலாம் என்ற ஆபத்து இருப்பதை மூன்றாம் உலகம் உணர்ந்தது. உள்ளகச் சுயநிர்ணய உரிமையும், ஜனநாயகமும் பிணைவுற்று இருப்பதால் ‘ஜனநாயகத்திற்கு ஆதரவான தலையீடு’ (Pro Democratic Intervention) என்னும் ஆபத்து இருப்பதை மூன்றாம் உலக நாடுகள் உணர்ந்தன. ‘ஜனநாயக விரோத அரசு’ (Non – Democratic State) என்ற குற்றச்சாட்டு எந்தவொரு அரசு மீதும் முன்வைக்கப்படலாம்; அந்தக் குற்றச்சாட்டைக் கூறிக்கொண்டு ஒருதலைப்பட்சமாக இராணுவ ஆக்கிரமிப்பை நடத்தலாம். கிரனடா (1983), பனாமா (1929), ஹெய்ட்டி (1994), சியராலியோன் (1997) ஆகிய நாடுகளில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் அமெரிக்கா ஆக்கிரமிப்புகளை நடத்தியது. மேற்படி நிகழ்வுகள் நடந்தபோது இது பற்றிய விவாதம் ஐ.நா. அரங்கில் இடம்பெற்றது. 

ஜனநாயகத்தையும் உள்ளகச் சுயநிர்ணயத்தையும் தொடர்புபடுத்துவதில் உள்ள சிக்கல்கள் உற்றுநோக்கத்தக்கன. கெடுபிடி யுத்த காலத்தில், ஐ.நா. தாபனம் கண்மூடிக் கொண்டிருக்கிறது என்று கூறிக்கொண்டு வல்லரசுகள் தமது படைகளை மூன்றாம் உலகின் அரசுகளுக்கு எதிராக, அவற்றின் அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்கு உபயோகித்தன. பிறநாடுகள் மீது தலையீடு செய்தல் என்பது மேற்குலகின் தலையீடு என்று மட்டும் குறுக்கிப் பார்க்க முடியாது. சிறிய நாடுகள் (Small States), பலம் குறைந்த நாடுகள் (Weak States) என்பன மேற்குலகிலும் உள்ளன. மேற்குலகிலும், மூன்றாம் உலகிலும் அந்நியத் தலையீடும் அதற்குக் காரணமாக ஜனநாயகத்தை முன்னிறுத்துவதும் பொதுவான பிரச்சினைகளாக உள்ளன. 

தொடரும்.



About the Author

கந்தையா சண்முகலிங்கம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றிய ஓய்வுநிலை அரச பணியாளர். கல்வி அமைச்சின் செயலாளராக விளங்கிய சண்முகலிங்கம் அவர்கள் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமாவார். இவர் மொழிபெயர்த்த ‘இலங்கையில் முதலாளித்துவத்தின் தோற்றம்’ என்ற நூல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பரிசை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

'நவீன அரசியல் சிந்தனை', 'கருத்தியல் எனும் பனிமூட்டம்', 'இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்' ஆகியவை இவரின் ஏனைய நூல்களாகும்.

அண்மைய பதிவுகள்
எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்
தொடர்கள்