மகாத்மா காந்தி 1920 இல் இந்தியத் தேசிய இயக்கத்தை வழிநடத்திச் செல்லும் தலைவரானார். அனைவரையும் கவரும் ஆளுமையும், இறுக்கமான ஒழுக்கநெறியும், முழுமூச்சாக முன்னின்று இயக்கத்தை நடத்திச்செல்லும் ஆற்றலும் இந்தியாவில் மட்டுமல்ல வெளியேயும் அவருக்குப் பெருமதிப்பைக் கொடுத்தன. அயலில், ஆங்கிலேயர் ஆட்சியைத் தொல்லைகள் இல்லாது அனுபவித்துக்கொண்டிருந்த இலங்கையர் மீதும் அவருடைய எழுச்சியின் தாக்கம் ஏற்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குள், 1927 இல், யாழ்ப்பாண இளைஞர் அழைப்பை ஏற்று, மகாத்மா காந்தி யாழ்ப்பாணத்துக்கு வந்து இந்திய விடுதலை இயக்கத்தின் துடிப்பை உணரவைத்து, தேசியவாத உணர்ச்சி இளைஞர்களிடையே பொங்கி எழ உதவினார்.
தெற்கும் வடக்கும்
பிரித்தானியர் ஆண்ட இந்தியாவின் பெருந்திரள் மக்களும் (Masses) இலங்கை மக்களும் அந்நியர் ஆட்சியை ஒரே வகையாக அனுபவிக்கவில்லை. ஏகாதிபத்தியப் பொருளியல் கொள்கைகளின் விளைவாக இந்திய மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டன. பலமுறை பெரும்பஞ்சம் (Famine) ஏற்பட்டது. பல இலட்சக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். அடக்குமுறை நடவடிக்கைகள் பல தடவை இடம்பெற்றன. ஒரு முறை (ஜாலியன் வாலாபாக் படுகொலைகள் – 1919) நூற்றுக்கணக்கானோர் நீதிநியாயம் இன்றிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உரிமை கோரித் தேசியவாதச் செயற்பாட்டில் தீவிரத்தன்மையை வெளிப்படுத்தியோரைச் சிறையிலிட (பால கங்காதர திலகர் போன்றோரை) ஆங்கிலேய அரசு தயங்கவில்லை.
இலங்கையர் நிலை இதிலிருந்து வேறுபட்டது. பொதுப்படப் பார்க்கும்போது, பிரித்தானியாவின் அமைதி (Pax Britannica) உண்மையாக நிலவிய இடம் இலங்கை என்று கூறலாம். இதற்கு விதிவிலக்காக 1915 இல் ஏற்பட்ட பௌத்த – முஸ்லிம் கலவரமும் அது தொடர்பாக அரசு எடுத்த தேவைக்கு மேலான அடக்குமுறை நடவடிக்கையும் அமைகின்றன. பொதுவாக மக்களிடையே திருப்தியின்மை காணப்படவில்லை எனலாம். ஆங்கிலம் கற்ற மத்திய வகுப்பினர் தமக்கு மேலும் சில சலுகைகளைப் பெறக் கோரிக்கை விடுத்தனரே ஒழிய, ஆங்கிலேயர் ஆட்சி நீங்கவேண்டும் என்பதை விரும்பவில்லை.
இந்த நிலை யாழ்ப்பாணத்து மத்திய வகுப்பினரைப் பொறுத்தமட்டில் கூடுதலாகக் காணப்பட்டது என்றே தோன்றுகிறது. இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சி நிலைக்கும் என எண்ணினர். முன்னர் போர்த்துக்கேயருக்கும், ஒல்லாந்தருக்கும் இருந்தது போல், ஆங்கிலேயருக்கு அரசியல் வானில் பகைவர்கள் ஆசியாவில் இருக்கவில்லை. ஆகவே, ஆங்கிலேயர் ஆட்சி நீங்க வாய்ப்பு உண்டு என்று நினைக்கக் காரணம் இருக்கவில்லை.
மத்திய வகுப்பினருடைய மனநிறைவுக்கு (Complacency) ஒரு காரணம் சமூகத்தில் அவர்களுடைய எழுச்சியின் தன்மை. இந்த மத்திய வகுப்பு ஆங்கிலேயர் ஆட்சியில் புதிதாக எழுந்த வர்க்கம். ஐரோப்பியர் வருகைக்குமுன் ஆண்ட மன்னர்களுக்குப் பணி செய்த உயர் வர்க்கத்தினர் மறைந்துவிட்டனர். கடைசியாகக் கண்டி அரசில் அதிகாரம் செலுத்திய உயர் வர்க்கத்தினரும் வலு இழந்திருந்தனர். இவர்களுடைய இடத்தில் 19 ஆம் நூற்றாண்டில் ஒரு புதிய வகுப்பினர் தோன்றுவதைக் காணலாம். இவர்கள் ஆங்கிலம் கற்று அரச சேவையில் வேலை பெற்றவர்கள், புதிதாகத் தேவைப்பட்ட போக்குவரத்து வசதிகள் தொடர்பாகச் சேவை செய்தோர், தென்னந்தோட்டம் மற்றும் கோப்பித்தோட்டம் ஆகியவற்றை வைத்து உழைத்தவர்கள், சுரங்கவேலை மூலம் செல்வம் பெற்றவர்கள் (Graphite Mining) ஆகியோராவர். ஆங்கிலேயர் ஆட்சி இவர்களுக்குப் புதிய அந்தஸ்தையும் முன்பு இல்லாத செல்வத்தையும் பெற உதவியது. இதற்காக இவர்கள் ஆங்கிலேய அரசுக்கு விசுவாசமாக இருந்தனர்.
இந்த வகுப்பின் எழுச்சி பற்றி பல அறிஞர்கள் ஆய்வு செய்து எழுதியிருக்கிறார்கள். குறிப்பாக மைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) மற்றும் குமாரி ஜயவர்த்தன (Kumari Jayawardena, Nobodies to Somebodies: The Rise of the Colonial Bourgeoisie in Sri Lanka) ஆகியோர் சிறப்பான ஆய்வுகளைச் செய்துள்ளனர். இவை பெரும்பாலும் சிங்கள சமூகத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற குடும்பங்களைப் பற்றிக் கூறுகின்றன. கொழும்பில் குடியேறி முக்கியத்துவம் பெற்ற குமாரசுவாமி முதலியார் குடும்பம் போன்ற சில தமிழர் குடும்பங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டாலும், குமாரி ஜயவர்த்தன செய்த ஆய்வை ஒத்த வகையில் தமிழ்ப் பிரமுகர் குடும்பங்கள் பற்றி இன்னும் எழுதப்படவில்லை எனலாம்.

ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியபோது உருவாகத் தொடங்கிய ஆங்கிலம் கற்ற தமிழர் மத்திய வகுப்பு கொழும்பில் வசித்த தமிழருடன் எழுந்தது எனலாம். இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியைப் பொறுப்பேற்றபோது (1796), கொழும்பில் இரு முக்கிய தமிழர் சமூகங்கள் (Communities) இருந்தன. ஒன்று, நீண்டகாலமாக அங்கு வசித்த செட்டிகள் சமூகம். இவர்கள் பின்னர் கொழும்புச் செட்டிகள் என்ற பெயரைப் பெறுகின்றனர். மற்றது, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து வர்த்தகத்திலும் வேறும் வணிகச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டவர்கள்.
ஆங்கிலேயர் கொழும்பில் நிர்வாகத்தைத் தொடங்கியபோது ஒல்லாந்தர் வழிவந்த பணிமக்களை வேலைக்கு அமர்த்தினர். தமிழ் மொழிபெயர்ப்பாளராகத் தேவைப்பட்டோர் செட்டிகள் சமூகத்தில் இருந்து பெறப்பட்டனர். இதனால், உயர் ஆங்கிலேய நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ள இவர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாகத் தங்களுக்குத் தேவைப்பட்ட சிங்களம் மற்றும் தமிழ் மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஓர் ஆங்கிலப் பாடசாலையைக் கொழும்பில் நிறுவியது.
இப்பாடசாலை ஊடாகவே ஆங்கிலத்தைக் கற்று, முதலாவது யாழ்ப்பாண இளைஞர்கள் அரச வேலை பெற்று மத்திய வகுப்பினராக உயர்வதைக் காணலாம். இவ்வாறு உயர்ந்த முதலாவது குடும்பம் குமாரசுவாமி குடும்பமாகும். இதுவரை இவர்களைப் பற்றி எழுதப்பட்ட நூல்களுள் மிகவும் விரிவானது பொன்னம்பலம் இராமநாதனுடைய வாழ்க்கை பற்றி எம். வைத்திலிங்கம் எழுதிய நூலாகும் (M. Vythilingam, The Life of Sir Ponnambalam Ramanathan).

வைத்திலிங்கம் கொடுத்துள்ள தரவின்படி, 1796 இல் ஆங்கிலேயர் நிர்வாகம் கொழும்பில் தொடங்கியபோது, அங்கு ஏதோ தொழில் செய்துகொண்டிருந்த யாழ்ப்பாணத்தவர் ஒருவர் தன் 13 வயதுத் தம்பியைக் கொழும்புக்கு வரவழைத்து, அரசாங்கம் நிறுவிய பிரத்தியேகப் பாடசாலையில் ஆங்கிலம் கற்க வைத்தார். இப்பையன் பெயர் ஆறுமுகம்பிள்ளை (சில தரவுகளில் ஆறுமுகநாத பிள்ளை எனவும் கொடுக்கப்பட்டுள்ளது) குமாரசுவாமி. ஆங்கிலத்தை நன்கு கற்று ஆங்கில அதிகாரிகளை மிகவும் கவர்ந்த குமாரசுவாமி, 1805 இல் தற்காலிக அரச மொழிபெயர்ப்பாளராகப் பதவி பெற்று, 1810 இல், தனது 26 ஆவது வயதில், ஆங்கிலேய ஆளுநருக்குத் தலைமைத் தமிழ் மொழிபெயர்ப்பாளரும் முதலியாரும் என்ற உயர்ந்த பதவியைப் பெற்றார். அத்துடன் நில்லாது, 1833 இல் முதலாவது சட்டசபை நிறுவப்பட்டபோது, அதில் முதலாவது உத்தியோகப்பற்றற்ற தமிழ் உறுப்பினராக (First Tamil Unofficial Member) ஆளுநரால் நியமிக்கப்பட்டார்.
குமாரசுவாமியின் சகோதரியின் மகன், அருணாசலம் பொன்னம்பலம், 7 வயதுச் சிறுவனாய் இருக்கும்போது, மானிப்பாயில் இருந்து கொழும்புக்கு அனுப்பப்பட்டார். இவர் குமாரசுவாமி வீட்டில் இருந்து, ஆங்கிலப் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று, அரசாங்கத்தில் பதவிபெற்றது மட்டுமன்றி, குறிப்பிடத்தக்க செல்வத்தைச் சேகரித்து, குமாரசுவாமியின் மகளை மணம் முடித்தார். இவருக்கும் முதலியார்ப் பட்டம் கிடைத்தது.
குமாரசுவாமி முதலியாருடைய மகன் சேர் முத்து குமாரசுவாமி. இவர் மகன் ஆனந்த குமாரசுவாமி. பொன்னம்பல முதலியாருடைய பிள்ளைகள் குமாரசுவாமி, இராமநாதன், அருணாசலம் ஆகிய பிரமுகர்கள் ஆவர்.
குமாரசுவாமி முதலியார் மற்றும் பொன்னம்பல முதலியார் ஆகியோருடைய கதை ஆங்கிலம் கற்று மத்திய வகுப்புக்குள் புகுந்த பல யாழ்ப்பாண இளைஞர்களுக்கும் பொருந்தும் பொதுவான (Typical) கதையாகும். கொழும்புக்குச் சென்று ஆங்கிலம் கற்று அல்லது யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்றபின் கொழும்பில் வேலை பெற்று, ‘உத்தியோகத்தராய்’ வாழ்க்கை நடத்திய யாழ்ப்பாணத்தவரை உள்ளடக்கிய மத்திய வகுப்பு ஒன்று தலைநகரில் உருவாகியது. முதல் சென்றவர்களும் பின்னர் தங்கள் திறமையால் உயர்ந்தோரும் ஆங்கிலேய அதிகாரிகளுடன் (சிலர் ஆளுநருடன் கூட) நெருங்கிப் பழகிச் செல்வாக்கைப் பெற்றனர். மூத்த குடும்பங்கள் அரசியல் செல்வாக்கையும் பெற்றன.
இதனால், பின்னர் யாழ்ப்பாண அரசியல் விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் செல்வாக்குக் கொழும்பில் இருந்த தமிழர் மத்திய வகுப்புக்குக் கிடைத்தது. இந்த நிலை 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நீடித்தது. இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலில் முக்கியமான அரசியல் வளர்ச்சிகள் ஏற்பட்டபோது சிங்கள அரசியல் தலைவர்களுடன் தமிழர் பக்கத்து அரசியல் தலைவர்களுக்குப் பிரச்சினை எழுந்தவேளை, அது தமிழர் தொடர்பான பிரச்சினையாக அல்லாது மத்திய வகுப்பினர் பிரச்சினையாகவே இருந்தது. இதனைப் பின்னர் நோக்கலாம்.
இப்பின்புலத்தில் பார்க்கும்போது இந்தியர் காட்டிய முன்மாதிரியைப் பின்பற்ற இலங்கை மத்திய வகுப்பினர் தயாராக இருக்கவில்லை எனலாம். இவர்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் நல்வாழ்க்கை இருந்தது. இவர்கள் அடைந்திருந்த நிலைக்கு ஆங்கிலேயர் ஆட்சியே வழிவகுத்திருந்தது. எதற்காக இவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்ப்பார்கள்?
மத்திய வகுப்பினர் பிரித்தானியப் பேரரசுக்கு விசுவாசமாக இருந்தவர்கள். இலங்கைக்கு கூடுதலான அரசியல் உரிமைகள் வேண்டும் எனக் கோரிய பொன்னம்பலம் அருணாசலம், தனது குறிக்கோள் “பிரித்தானியப் பேரரசில் இணைந்த ஒரு பாகமாக இலங்கை பொறுப்பாட்சியைப் பெறுவது” (“Realization of Responsible Government in Ceylon as an Integral Part of the British Empire”) என்று தெளிவாகக் கூறினார். பொன்னம்பலம் இராமநாதன் சட்ட சபையில் பரமேஸ்வராக் கல்லூரி தொடர்பாகப் பேசும்போது, ஆங்கிலேய மன்னனுக்கு விசுவாசமாக இருப்பது ஒரு கட்டாயக் கடமையாகக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், இயக்குநர் சபை உறுப்பினர் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்:
“I am glad to say that there is not a single school or college in Ceylon which objects to loyalty to the king. In the draft Ordinance relating to Parameshwara College it is laid down as a stern duty to be observed by students, teachers and the Board of Directors… We hope to make them (the boys of Parameshwara College) real assets to us and to the British Empire.”
சிங்கள – பௌத்த இயக்கத்தைத் தீவிரமாக நடத்திய அநகாரிக தர்மபால ஆங்கிலேயர் ஆட்சி நீங்கவேண்டும் என்று கூறியதில்லை. “என் கட்டுரைகளில் அதிகாரிகளை விமர்சித்துள்ளேன் என்பது உண்மைதான், ஆனாலும் பிரித்தானிய மன்னனுக்கு நான் செலுத்தும் விசுவாசம் பாறை போல் அசையாதது” (“True I criticize in my articles the officials but my loyalty to the British Throne is as solid as rock”) என்பது அவர் கூற்று.
இப்பின்புலத்தில், இந்தியாவின் தேசியவாதிகளைப் பின்பற்றி இலங்கை மத்திய வகுப்பினர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இயக்கம் நடத்துவதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. எனினும், வெளி உலகில், இந்தியாவில் மட்டுமல்லாது பல இடங்களில், தேசியவாதிகள் எழுச்சிபெற்று உரிமைப் போராட்டங்களில் இறங்கிய செய்திகள் இலங்கை இளைஞர்களைக் கவர்ந்தன.
இலட்சியவாதி இளைஞர்கள்
காந்தியின் கூக்குரல் மத்திய வகுப்பினர் காதில் விழவில்லை. இளைஞர்களுக்கு அது கேட்டது. இவர்கள் தெற்கிலும் வடக்கிலும் இருந்தார்கள். இந்தியத் தேசியவாதிகள் இடையறாது ஒலிக்க வைத்த ‘ஸ்வராஜ்’ (சுயாட்சி) இலங்கையிலும் ஒலிக்கத் தொடங்கியது. அதிக தாமதமின்றி, 1915 இல் ஒரு 24 வயது இளைஞன், அலெக்ஸாண்டர் ஏக்கநாயக்க குணஸிங்ஹ (1891-1967) என்பவவன், இளம் ஆர்வலர் சிலருடன் கூடி, ‘Young Lanka League’ என்ற அரசியல் கழகத்தை அமைத்தான். இக்கழகத்தை அமைத்தோருள் E.A.P. விஜேரத்ன (பிற்காலத்தில் அமைச்சராக இருந்தவர்), விக்ரர் கொறயா (காந்தி இலங்கைக்கு வந்தபோது சிலாபத்தில் இவர் வீட்டில் தங்கியிருந்தார்), A.P. தம்பையா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குணஸிங்ஹவுடன் ஓர் இளம் ஆர்வலராகத் தொண்டு புரிந்த ஒருவர் ஜேம்ஸ் தேவதாசன் ரத்னம் (James T. Rutnam 1905-1988). இவருடைய வாழ்க்கையின் பிற்பாகத்தில் இவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதால், குணஸிங்ஹ பற்றியும் ‘Young Lanka League’ பற்றியும் ஓர் உறுப்பினர் வாயிலாக அறியமுடிந்தது.
இந்தியத் தேசியவாதிகளின் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை வடக்கில் ஏற்படுத்தின. இந்தியர்களுடன் சேர்ந்து, தம்மை அவர்களுடன் அடையாளம் காண்பது யாழ்ப்பாணத்தவருக்கு இலகுவாக இருந்திருக்கும். அத்துடன், தமிழ்நாட்டில் இருந்து வெளிவந்த சஞ்சிகைகளும் பாரதியாருடைய தேசிய பாடல்களும் இளைஞர்கள் உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ‘Hindu Organ’ செய்தித்தாளில் 1927 நவம்பர் 28 இல் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில், காந்தியின் வருகைக்கு முன்னரே பல ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் அவருடைய பெயர் வீடுகளில் நன்கு அறியப்பட்ட பெயர் எனக் கூறப்பட்டுள்ளது (“For the last one decade the name of Mahatmaji has been a household word in Jaffna”).
மாணவர் காங்கிரஸ்
இப்பின்புலத்தில், யாழ்ப்பாணத்தின் அரசியல்சார்ந்த விவகாரங்கள் பற்றிய வரலாற்றில் 1920களின் தொடக்க ஆண்டுகளிலே சில முக்கியமான வளர்ச்சிகளைக் காணலாம். கல்லூரி மாணவர்கள் அரசியல் விவகாரங்களில் அக்கறைகொள்ளத் தொடங்கியமை இவற்றுள் முதன்மையானது. இம்மாணவர்களுள் யாழ்ப்பாணக் கல்லூரியில் படித்தவர்கள் பெரும் ஆர்வத்துடன் செயற்பட்டனர் என அறியமுடிகின்றது. யாழ்ப்பாண மாணவர்களின் அரசியல் இயக்கங்கள் பற்றி ஆய்வுசெய்து பயனுள்ள கட்டுரைகளை எழுதிய ஓர் அறிஞர் சாந்தசீலன் (சீலன்) கதிர்காமர் ஆவர். யாழ்ப்பாணத்தில் 1920களிலும், 1930களிலும், அனைத்து இலங்கையர் தேசியவாத இயக்கம் ஒன்றை நடத்த இளைஞர்கள் எடுத்த முயற்சி பற்றி அறிய இவர் எழுதியவை முக்கியமானவை. எனினும், இப்பொருள் பற்றி மேலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள இடமுண்டு.
ஆங்கிலேய மிஷனரிமாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இல்லாது, அமெரிக்கர் செல்வாக்கில் வளர்ந்த யாழ்ப்பாணக் கல்லூரி தாராண்மைக் கருத்துகள் முளைத்து எழ உகந்த இடமாக இருந்தது. இது பற்றிக் கதிர்காமர் விரிவாக எழுதியுள்ளார்: மாணவர்களுடைய இலக்கியக் கழகங்களில் விவாதத்துக்கு 1920களில் எடுக்கப்பட்ட தலைப்புகள் ‘அயர்லாந்துக்கு சுயாட்சி கொடுக்கவேண்டும்’, ‘பிரதேசப்பிரதிநிதித்துவம் இனப் பிரதிநிதித்துவத்தை விடச் சிறந்தது’, ‘இலங்கைக்குச் சுயாட்சி வழங்கவேண்டும்’ போன்றவை ஆகும். “1920களில் யாழ்ப்பாணத்து இளைஞர் மீது இந்தியாவில் நடைபெற்ற இயக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது” என அக்காலத்தில் மாணவராய் இருந்த ஹண்டி பேரின்பநாயகம் கூறியதாகக் கதிர்காமர் மேற்கோள் காட்டியுள்ளார்.

ஓர் இளைஞர் கழகத்தை அமைப்பதற்கு யாழ்ப்பாணக் கல்லூரி உயர்வகுப்பு மாணவர் சிலர் கூடி 1922 இல் ‘Servants of Lanka Society’ என்ற ஒரு கழகத்தை ஆடம்பரம் எதுவும் இன்றி அமைதியாகத் தொடங்கினர். அனைத்து இலங்கையர் தேசியவாத உணர்வுடன் யாழ்ப்பாணத்தில் இக்கழகம் தொடக்கப்பட்டது என்பது வரலாற்று முக்கியத்துவம் உடையது. இக்கழகத்தைத் தொடக்கியவர்கள் பின்னர் வேறும் இளைஞர்களைக் கூட்டி 1924 இல் ‘Students’ Congress’ என்ற பெரிய கழகத்தை அமைத்து, அரசியல் செயற்பாடுகளில் முழுமூச்சாக ஈடுபட்டுக் காந்தியை யாழ்ப்பாணத்துக்கு அழைத்தனர்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்குபற்றிய இளைஞர்கள் பெயர்களைத் தனது நூல்களில் சீலன் கதிர்காமர் கொடுத்துள்ளார். இளைஞர் வலிமையில் நம்பிக்கை கொண்டு, முதிய தலைவர்களின் கொள்கைகளிலும் செயல்களிலும் ஏமாற்றம் கண்டு, அரசியல் மாற்றத்துக்காக ஓர் இளைஞர் கழகத்தை அமைக்க வேண்டும் என்று முழுமூச்சாக உழைத்தவர் சரவணமுத்து ஹண்டி பேரின்பநாயகம் (1899-1977) ஆவர். அவர் எடுத்த முயற்சியின் விளைவாக 1924 நவம்பர் 1 இல் யாழ்ப்பாண நகரில் (YMCA கட்டடத்தில்) ஏறக்குறைய 30 இளைஞர்கள் கூடி ‘Students’ Congress Jaffna’ என்ற அரசியல் கழகத்தை நிறுவினர்.
கழகத்தின் இணைச் செயலாளர்களாக முருகேசு பாலசுந்தரம் (1903-1965), எஸ். துரை ராஜ சிங்கம் (1904-1995) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். யாழ்ப்பாணக் கல்லூரி ஆசிரியர் ஜே.வி. செல்லையா தலைவரானார்.
யாழ்ப்பாணத்தில் ‘Students’ Congress’ அமைக்கப்பட்டமை ஒரு தனித்துவமான சிறப்பு வரலாற்று நிகழ்வு. யாழ்ப்பாண வரலாற்றில் அக்கறைகொண்ட பலர் இதை விளங்கிக்கொள்வதில்லை. இந்தியத் தேசியவாத இயக்கத்தால் கவரப்பட்டு, நாடு சுயாட்சி பெறவேண்டும் என்பதில் முழு நம்பிக்கை வைத்து, நடைமுறையில் தேசியப் பண்பாடு எனத் தாம் நம்பியதைத் தழுவி, மத்திய வகுப்பினருடைய வழிகாட்டலைப் புறக்கணித்து மிகுந்த ஆர்வத்துடன் இக்கழகத்தினர் செயற்பட்டனர். வேறெந்த அரசியல் கழகமும் இவர்களுடைய குறிக்கோள்களை முன்வைத்துச் செயற்படவில்லை.
இலங்கையர் தேசியவாதத்தை முழுமையாகவும் நேர்மையுடனும் கடைப்பிடித்த ஒரேயொரு அரசியல் இயக்கம் யாழ்ப்பாணத்து மாணவர் காங்கிரஸ். ‘Ceylon National Congress’ இலங்கையர் தேசியவாதக் கோட்பாட்டை முன்வைப்பதாகக் கூறியபோதிலும், அதில் செயலாற்றிய மத்திய வகுப்பினர் முழுமனதாகவும் நேர்மையுடனும் அக்கோட்பாட்டில் நம்பிக்கை வைத்திருந்ததாகத் தெரியவில்லை. ஏ.ஈ. குணஸிங்ஹ ‘ஸ்வராஜ்’ எனக் குரல் எழுப்பிச் சிங்கள, தமிழ் இளைஞர்களை ஒன்று கூட்டியபோதிலும், சில ஆண்டுகளின் பின் இந்தியத் தொழிலாளர்களுக்கு எதிரான இயக்கத்தில் முன்னிலைப் பங்குகொண்டு, அனைத்து இலங்கையர் தேசியவாதத்தைக் கைவிட்டார்.
யாழ்ப்பாணத்து இலட்சியவாதி மாணவர்களுடைய இயக்கம் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பே இருக்கவில்லை. இதனைப் பின்னர் பார்க்கலாம்.



